Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. இந்தின் இளம்பிறை -------------------------------- ஒரு உறவினர்களின் திருமண விழா மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு இடத்தில் நடந்தது. இப்பொழுது சில பிள்ளைகள் வேறு தேசம் ஒன்று போய், அங்கு விழா வைப்பதையே விரும்புகின்றனர். திருமண விழா முடிந்து அடுத்த நாளும் நான் அந்த விழா நடந்த இடத்திற்கு போயிருந்தேன். அன்று அந்த இடம் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆதலால், நான் அந்த இடத்தை இரண்டு படங்கள் எடுத்தேன், இன்று நானாவது எடுப்போமே என்று. நேற்று ஒரு சோடி செருப்பு அங்கே காணாமல் போயுள்ளது, அதைக் கண்டால் எடுத்து வரவும் என்ற தகவலையும் கையோடு வைத்திருந்தேன். கடலோர மணல் மேல் போட்டிருந்த மேடை இன்னமும் அங்கேயே இருந்தது. ஆனால் கடற்கரை வெள்ளை மணல் திட்டு திட்டாக மேடையெங்கும் ஏறி ஒழுங்கில்லாமல் பரவிக்கிடந்தது. மேடை மேலே கட்டியிருந்த முக்கால்வாசி அலங்காரத் துணிகள் விழுந்து அங்கங்கே குவியலாகக் கிடந்தன. இன்னும் விழாமல் இருந்தவை இனிமேல் விழுவதற்காக கடல் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிரேக்கச் சிலையில் இருந்து அதன் கடைசி உடுபுடவையும் காற்றில் பறக்கத் தயாராக இருப்பது போல. நான் படமெடுக்கும் போது இரண்டு உல்லாசப் பயணிகள் அந்த மேடையின் ஓரத்தில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர். இதற்கு முந்தைய நாள், திருமண நாளன்று, மேடையில் இவர்கள் இருவரும் இருந்து அருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் உள்ளே புரோகிதர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இந்த இரு பயணிகளின் இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். புரோகிதர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இப்பொழுது மெக்ஸிக்கோவில் வசிப்பதாகவும் அங்கே சொல்லியிருந்தனர். புரோகிதர் ஒரு கையில் தேங்காயையும், இன்னொரு கையில் கல் ஒன்றையும் கொடுத்து, அந்தத் தேங்காயை சரியாக அவர் சைகை செய்யும் நேரத்தில் என்னை உடைக்கச் சொன்னார். தேங்காயை சரி வட்டப் பாதிகளாக உடைக்க வேண்டும் என்ற அழுத்தம் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் போன்ற தவிர்க்க முடியாத ஒன்றாக இரண்டு மூன்று நாட்களாக என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. புரோகிதர் கொடுத்த கல்லுக்கு நிகரான கல்லை நான் ஊரில் மயிலியதனைப் பக்கம் இருக்கும் மண்டபக்கிடங்கு பகுதியில் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். எல்லாப் பக்கமும் கூரான, எங்கே பிடிப்பது எங்கே அடிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மக்கல் அது. மயிலியதனைக்கும், மெக்ஸிக்கோவிற்கும் 'ம' வரிசையில் ஆரம்பிக்கின்றன என்ற ஒற்றுமையுடன், கல்லிலும் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. புழுக்கொடியலுக்கு தோதான சில்லுச் சில்லாக தேங்காய் சிதறப் போவது திண்ணம் என்று தெரிந்தது. முக்கிய பார்வையாளரான என் துணைவி மற்றும் இதர பார்வையாளர்களுக்கு மண்டபக்கிடங்கு கல் தான் என் கையில் இருக்கும் ஆயுதம் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. நடப்பவை நடந்த பின் முழுப்பழியையும் சுமக்க வேண்டியது தான். இயேசு பிறப்பதற்கு முன், அவர் பிறந்த தேசத்தில், ஆடுகள் மீது மனிதர்களின் பாவங்களும் பழிகளும் ஏற்றப்பட்டு, அவை பாலைவனத்திற்குள் துரத்தி விடப்பட்டன என்று சொல்கின்றனர். பின்னர் எல்லோருடைய பாவங்களையும் ஏற்க பாலன் இறங்கி மனிதனாக வந்தார். இன்று சனத்தொகை எக்கச்சக்கமாக எகிறி ஏறி விட்டதால், தேவபாலன் தனியாக எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் திக்குமுக்காடிப் போய் நிற்கின்றார். இந்த தேங்காய் உடைப்பதில் ஏதும் பிழை, பாவம் வந்தால் நானே தான் சுமக்கவேண்டும் ஓங்கி அடிக்கின்ற அந்தக் கணத்தில் தேங்காய் முழுதாக கையை விட்டுப் பறந்தது. அன்று புரோகிதரின் இடுப்பு எலும்பு தப்பியது ஒன்பதாவது அதிசயம். மயிரிழையில் தப்பினார். புரோகிதர் என்ன நடந்தது என்று கூட்டிப் பெருக்கி உணர்வதற்குள், நான் தேங்காயை பாய்ந்தெடுத்து சில்லுச் சில்லாக குத்தி தட்டில் போட்டுவிட்டேன். மிக அருமையாக தேங்காயை உடைத்ததற்காக எல்லோரையும் கை தட்டுமாறு புரோகிதர் சொன்னார். மறுபேச்சில்லாமல் கூட்டமும் தட்டியது, ஐயர் சொல்லிவிட்டாரே. எல்லாம் முடிந்த பின், தனியாக இருந்த புரோகிதரிடம் மெதுவாகக் கேட்டேன். 'குஜராத்தில் கல்யாண வீட்டில் தேங்காயை கல்லால் தான் குத்துவீர்களா?' 'குஜராத்தா, அது எங்கேயிருக்கின்றது?' 'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?' 'மெக்ஸிகன்.' இங்கு ஏற்கனவே பல அர்த்தங்கள் ஏற்றப்பட்டு விட்ட ஒரு கனமான சொல் இது. அந்தச் சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்களை மீறி புதிதாக எதையும் சிந்திக்க முடியவில்லை. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூகநீதிச் சட்டம் தமிழ்நாட்டில் இருப்பது தெரியும். ஆனால் பழைய அர்ச்சகர்கள் கோயில் நடையைப் பூட்டுவதும், நீதிமன்றம் மீண்டும் திறப்பதும் என்று, அங்கே அதுவே இன்னும் ஒரு இழுபறியில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இது இன்னுமொரு பரிமாணம். 'அப்ப இந்த மந்திரங்கள், சுவாஹா, ராதா, கிருஷ்ணா, பிரபஞ்சம்,....' 'நான் சில காலம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கூட்டத்தில் இருந்தேன்.' 'அ.....' 'இந்த மாதிரி சிலவற்றை அங்கே கேட்டிருக்கின்றேன். இப்ப எல்லாம் ஃபோனிலும் இருக்குது தானே. அப்படியே பார்த்து வாசிக்க வேண்டியது தான்.' 'ம்.....' அப்படியே தொலைந்து போனதாகச் சொன்ன சோடிச் செருப்பை தேடத் தொடங்கினேன்.
  2. அடுத்த தடவை நீங்கள் இந்தப் பக்கம் வரும் போது, நானும் நீங்களும் அந்தப் புகையிரத நிலையத்திற்கு போகிறோம், ஜேக்கப்பை தேடிப் பிடிக்கிறோம், மிகுதிக் கதையைக் கேட்கிறோம்.......😀😀 ஜேக்கப்பும் அந்தப் பெண்ணும் வீதிகளில் வாழ்பவர்கள் (போன்று தெரிந்தார்கள்). ஹோம்லெஸ் ஆக, துணைகளுடன் வாழ்பவர்களிற்கிடையேயும் சண்டை சச்சரவுகள் மிகச் சாதாரணமாகவே அடிக்கடி வரும். பல தடவைகள் தெருவில் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கிடையேயும் அன்று ஏதோ ஒரு பிணக்கு ஆகியிருக்கவேண்டும். இவை எல்லாமே ஒரு அனுமானம் தான். ஜேக்கப் எங்கேயும் போயிருக்கமாட்டார். அன்றே பிந்திய இரவிலோஅல்லது அடுத்த நாளோ அந்தப் பெண்ணைத் தேடிப் போயிருப்பார். வாழ்க்கை சொல்லிக் கொடுத்த பாடம் இது....🤣🤣
  3. இங்கு வீட்டை விட்டு வீதிகளில் வாழ்வோரின் எண்ணிக்கை கோவிட் தொற்றுக் காலத்தின் பின் பல மடங்காகிவிட்டது. நீங்களும் இதைப் பார்த்திருப்பீர்கள். தினமும் அவர்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றோம். 'ஆதி அறிவு' தொடராது.......😀 நாங்கள் என்ன செய்தாலும், எங்கே செய்தாலும், வீட்டிற்கு அது எப்படியோ தெரிந்து விடுகின்றது. இந்த அறிவு/திறமை பெண்களுக்கு மனிதன் தோன்றிய ஆதி நாட்களில் இருந்தே இருக்கின்றது போல..... 😀
  4. மிக்க நன்றி இணையவன்.
  5. 😀... அதில் வந்து இறங்கிய இருவரை ஏற்றிக் கொண்டு நான் வீடு வந்து விட்டேன். ஆனால், கண்டிப்பாக, ஜேக்கப் அதில் ஏறியிருக்கமாட்டார். அப்படியெல்லாம் விட்டிட்டு ஓடிப் போகும் துணிவு ஜேக்கப்புகளுக்கும், எங்களுக்கும் கிடையாது........... 🤣
  6. ஆதி அறிவு ------------------- இப்பொழுது வரப்போகும் புகைவண்டி மூன்றாவது தடத்தில் வந்து கொண்டிருக்கின்றது. முதலாவது மேடையில் நிற்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பக்கம் போகவும் என்ற அறிவிப்பு தலைக்கு மேலேயிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கு முதலாவது தடம், இரண்டாவது தடம், மூன்றாவது தடம், முழு நிலையத்திற்கும் சேர்த்து நான் ஒருவனே முதலாவது மேடையில் நின்று கொண்டிருந்தேன். மனிதர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல், இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு இயந்திரம் செய்யும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். சுற்றிவர மெல்லிய இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென ஒருவர் முன்னால் தோன்றி, எனக்கு ஏதாவது சில்லறைகள் கொடு என்று கேட்கக்கூடும். கேட்பதைக் கொடுத்தால், தோன்றியது போலவே மறைந்தும் விடுவார்கள். ஆனால் ஒரு டாலர் கூட கையிலோ, பையிலோ இல்லை. கடன் மட்டைகள், காசு மட்டைகள் செல்லாத இடம் இது. வந்து கேட்பவர் என் வங்குரோத்து நிலை கண்டு கோபப்படவும் கூடும். இந்த நிலையில் 'நோ இங்கிலீஸ்' என்று சொல்வது தான் உசிதம். முழுதும் துறந்து தெருக்களில் வாழும் இந்த மனிதர்களிடம் மொழிப்பற்று, தீவிரம் இருக்க சாத்தியமில்லை. இங்கு எவரும் எவரையும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக அடித்ததாகவோ அல்லது சுட்டதாகவோ நான் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. மூன்றாம் மேடைக்குப் போக முன், முதலாம் மேடையின் பின்புறம் பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னும் ஒரு அறிவிப்பு மேலிருந்து என் மீது இறங்கியது. தனி ஒரு மனிதனுக்காக அரசு இயந்திரம் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. அறிவிக்கும் குரல் இருமி, கம்மி, புகைவண்டி நிற்கப் போகும் அடுத்த அடுத்த தரிப்பிடங்களைச் சொன்னது. உலகில் செயற்கை நுண்ணறிவு இன்னமும் இருமத் தொடங்கவில்லை, ஆதலால் இந்த இடத்தில் இன்னும் ஒரு சாதாரண மனிதனும் என்னுடன் இருக்கின்றார் என்ற அந்த நினைப்பே ஆறுதலாக இருந்தது. இன்னும் ஒருவர் அவசரமாக வந்தார். வீடு வேண்டாம் என்று வீதியில் வாழ்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் இலகு. இவர்கள் ஒரு வீட்டுச் சாமான்களை தங்களுடன் எப்போதும் சுமந்து கொண்டு திரிவார்கள். சுமக்கும் தள்ளு வண்டி கூட அருகில் இருக்கும் பெரிய கடைகளில் ஒன்றினுடையதாக இருக்கும். வந்தவர் கடகடவென்று என்னைத் தாண்டி, உயர்த்தியில் ஏறி, அவசர அவசரமாக உயர்த்தியின் கதவை மூடி, மேம்பாலத்தில் ஓடி நடந்து, மறுபக்க உயர்த்தியால் இறங்கி, மூன்றாவது மேடையில் உயர்த்தியின் பின்பக்கம் ஒளித்து நின்றார். புகைப்பதைத் தவிர, செயல்கள் என்று இவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. பல புகைத்தல்கள் இங்கே சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டும் உள்ளது. ஒளித்து நின்று புகைக்க வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு இல்லை. இலங்கையில் 28 கோடி ரூபாய்கள் பெறுமதியான ஆணிகளை ஒரு பாலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்றுள்ளனர் என்ற சமீபத்திய செய்தி நினைவில் மின்னி மறைந்தது. பார்த்துக் கொண்டே இருக்க, நீளம் பாய்தலுக்கு ஓடி வருபவர் போன்று ஒரு பெண்மணி ஓடி வந்தார். நின்றார். 'ஜேக்கப், உன்னை எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். (தடை செய்யப்பட்ட வார்த்தை). (தடை செய்யப்பட்ட வார்த்தை). நீ அந்த உயர்த்தியின் பின்னால் ஒளிந்து நிற்கின்றாய். (இரண்டு தடை செய்யப்பட்ட வசனங்கள்). ஜேக்கப் வெளியில் வரவேயில்லை. புகைவண்டி வந்து கொண்டிருந்தது. ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை. வாழ்க்கை வீடோ வீதியோ, ஜேக்கப்பிற்கும் இது என்றும் விளங்கப் போவதில்லை.
  7. சினிமாவில் போதைப்பொருள் கடத்துவார்கள். ஆனால், போதைப்பொருள் கடத்தி சினிமா எடுப்பது இது தான் முதல் தடவை என்று எங்கோ ஒரு பகிடி இருந்தது.
  8. அன்பின் நிர்வாகத்தினருக்கு, ரசோ என்னும் என் பெயரை ரசோதரன் என்று மாற்ற முடியுமா? ரசோ என்னும் பெயர் தமிழாகத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தனர். அதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். மிக்க நன்றிகள்.
  9. அருமையான படங்களும், செய்திகளும்......👍👍 நீங்கள் சொல்லியிருப்பது வல்வை வளைவு இல்லை. அது வல்லை வளைவு என்றே நினைக்கின்றேன். வல்லைச் சந்தியும், வல்வைச் சந்தியும் வேறு வேறு. வல்வையில் உதயசூரியன் கடற்கரைக்கு போகும் வழியில், தலைவரின் வீட்டிற்கு அருகாமையில், ஒரு வளைவு கடற்கரையை நோக்கி இருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.