Everything posted by ரசோதரன்
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
இங்கு, அமெரிக்காவில், அப்படி நான் காணவில்லை. நான் இருக்கும் சிறு நகரத்தில் கொரிய இன மக்களே பெரும்பான்மை. மொத்தமாகப் பார்த்தால் அவர்களே முன்னால் வருகின்றனர். அதன் பின்னர் வெள்ளையின அமெரிக்கர்களும், சீனர்கள், இந்தியர்கள் என்று வரிசை போகின்றது. உள்ளூர் பாடசாலை மட்டத்தில் மொத்தப் பெறுபேறுகள் ஏறத்தாழ இந்த வரிசையிலேயே இருக்கின்றது. கொரிய மக்களின் உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் முன்னால் எவராலும், சீனர்கள் உட்பட, நிற்க முடியாது. உலகில் உள்ள சமூகங்களின், இனங்களின் சராசரி IQ என்றொரு தரவு இருக்கின்றது. ஆனால், அதையும் மீறி, அமையும் சந்தர்ப்பங்களும், சூழலும், தொடர் முயற்சி மற்றும் பயிற்சிகள் இந்தக் கல்வி அமைப்பிலும், பரீட்சை முடிவுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே என் அனுபவம்.
-
தோற்கும் விளையாட்டு
காலநிலையை சொல்கிறீர்கள் என்றால், நீங்கள் சொல்வது சரியே. அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களை விட இலங்கையின் காலநிலை வருடம் முழுவதும் சிறந்தது. லாஸ் வேகாஸ் பற்றி சொல்கிறீர்கள் என்றால், அதன் இன்னொரு பெயரே Sin City. பெயரிலேயே எல்லாம் அடங்கிவிட்டது......😀
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
பல்கலைக்கழக முதல் வருடத்தில் இப்படித் தான் நான் நினைத்திருந்தேன். முதல் வருடமும் அப்படியே அமைந்தது. தமிழ் மாணவர்கள், முக்கியமாக யாழ் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள், பரீட்சைகளில் கோலோச்சினர். பின்னர், மற்றவர்களும் பாடங்களை விளங்கி, ஒழுங்காக படிக்க ஆரம்பித்தனர். நாங்கள் பழகவும் ஆரம்பித்தோம். எவரும் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று அடுத்தடுத்த வருடங்களில் தெரிய வந்தது. வெவ்வேறு சமூகத்திலிருந்து வந்தவர்களும் மிக நன்றாக செய்தனர். நுவரெலியாவில் இருந்து அடிப்படைப் புள்ளிகளுடன் வந்த ஒரு பெரும்பான்மை இன மாணவன் முதலாவதாக வந்த நிகழ்வும் நடந்தது. எங்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம்.
-
தோற்கும் விளையாட்டு
கோடை நாட்களில் நடுராத்திரியிலும் அதே அனல் காற்று அங்கே வீசும். குளிர் காலங்களில் அளவில்லா குளிர். அந்தக் கொடுமையில் உள்ளேயே இருந்து, கொண்டு வந்த காசு எல்லாவற்றையும் அங்கிருக்கும் மேசை விளையாட்டுகளிலோ அல்லது இயந்திரங்களில் இழந்து விட்டு வீடு திரும்ப வேண்டியது தான். முன்னர் பொதுவாக பார்க்கிங் இலவசம். உணவும் மிக மலிவு. ஆனால் இப்போது அங்கே பெரும்பாலான இடங்களில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்துவிட்டனர். ஒவ்வொரு வியாழன் இரவும் அங்கு போய், ஞாயிறு இரவு திரும்பி வருபவர்களும் உண்டு. எம்மக்களில், எனக்குத் தெரிந்த வரை, அப்படியானவர்கள் எவரும் இல்லை.
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
நீண்ட நாட்களின் முன்னர் ஒரு மரதன் வீரர் தாங்கள் ஒரு போதும் முழுத் தூரத்தையும் பயிற்சியில் ஓடுவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஒரு ஞாபகம். நான் இங்கு இருக்கும் இடம் வருடத்தில் பல மாதங்கள் வெக்கையானது. பல வருடங்கள் சிறிவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்துள்ளேன். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு தடவை பிள்ளைகளுக்கு சிறிய இடைவேளைகள் விட்டு, அவர்கள் ஏதாவது நீராகாரம் எடுக்கின்றார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்திருந்தனர். வெப்பநிலை ஒரு அளவிற்கு மேல் போனால், அந்த அளவு மறந்து விட்டது, பயிற்சியை அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருந்தனர்.
-
தோற்கும் விளையாட்டு
தோற்கும் விளையாட்டு ------------------------------------ விளையாட்டு வீரர்கள் என்றாலே ஆஸ்திரேலியர்கள் தான் அதன் வரைவிலக்கணம். ஒரு சாதாரண ஆஸ்திரேலியரே எந்த விளையாட்டையும் நன்றாக விளையாடுவார், அப்படியே அதிகமாக கோபப்பட்டு போட்டி போடுவார். இவர்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக விளையாடுவது கூட வெளியில் நின்று பார்க்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் மல்லுக்கட்டி நிற்பது போலவே தெரியும். சில வருடங்களின் முன் சிட்னி நகர் பகுதியில் தனியாகவோ அல்லது பலவீனமாகவோ அகப்படும் இந்தியர்களை சில ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இது சில காலம் தொடர்ந்து அங்கு நடந்தது. இந்திய நண்பன் ஒருவனின் மனைவியின் தம்பிக்கு சிட்னியில் ஒரேயொரு குத்து ஓங்கி விழுந்தது. தம்பி மதுரை மருத்துவமனையில் பல நாட்கள் படுத்திருந்து, பின்னர் எழும்பி நடமாடினார். குத்துச் சண்டையும் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமா என்று வியக்க வைத்தது. சிட்னியுடன் எனக்கு சில தொடர்புகள் இருப்பது தெரிந்திருந்த அதே நண்பன் ஆஸ்திரேலியாவிற்கு போகும் மற்றும் அங்கு குடியேறும் வழிவகைகளை என்னிடம் விசாரித்தான். மதுரைக்கார நண்பன் அங்கு போய் பழிக்கு பழி வாங்கப் போகிறார் போல என்ற அனுமானத்தில் இருந்த எனக்கு, 'இல்லை, மாமாவை (நண்பனின் அக்காவின் கணவர்) அங்கு அனுப்பலாம் என்று இருக்கின்றேன்' என்று பதில் வந்தது. ஆஸ்திரேலியர்கள் விளையாட்டுகளில் ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடனும், ஆவேசத்துடனும் இருக்கின்றார்கள் என்பது முதலில் புரியவில்லை. ஒரு விடயம் புரியாவிட்டால், அந்த விடயத்திற்கான காரணம் மரபணு அல்லது தலைவிதி அல்லது நெற்றியில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்ற வசனம் போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள். இவை மூன்றும் தக்காளிச்சாறு போல, எங்கும் ஊற்றலாம், எதனுடனும் தொடலாம். ஆஸ்திரேலியர்களின் மரபிலேயே கடும் போட்டி இருக்கின்றது என்றார்கள். விளையாட்டுகளில் பணம் கட்டுவது, பந்தயம் பிடிப்பது இன்று மிக வேகமாக எல்லா நாடுகளிலும் பரவி வருகின்றது. இது இன்று அமெரிக்காவில் மட்டும் பல பில்லியன் டாலர்கள் அளவிலான ஒரு வியாபாரம். கனடாவிற்கு என்று தனி வழி இல்லை, அமெரிக்காவின் வழியே அதன் வழியும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் மீதான சூதாட்டம் வெட்ட வெட்ட முளைக்கும் அசுரனின் தலை போல அழிக்கப்பட முடியாமல் இன்னும் இன்னும் வளர்கின்றது. குதிரைப் பந்தயம் ஆரம்பமான நாட்களிலிருந்து, 1810 ம் ஆண்டு, இன்று வரை உலகிலேயே விளையாட்டுகளின் மேல் தலைக்கு அதிக பணம் பந்தயம் வைப்பவர்கள் யார் தெரியுமா? ஆஸ்திரேலியர்களே. சீன இன மக்களின் சூதாட்டத்தின் மீதான நாட்டம் வேறு வகையானது, பாரதத்தில் தர்மர் உருட்டிய தாயக்கட்டை வகை அது. ஒரு விளையாட்டின் மேல் இருக்கும் விருப்பத்தில் அல்லது ஒரு அணியினது அல்லது ஒரு வீரரின் ரசிகராக இதுவரை நாளும் விளையாட்டுகளை பார்த்து வந்த பார்வை இன்று இந்தப் பந்தயங்களால் வெகுவாக மாறிவிட்டது. எண்களே இன்று முக்கியம். களத்தில் ஆடும் அணியை விட, என்னுடைய கணக்கு, என்னுடைய பந்தயம் வெல்கிறதா என்பதிலேயே பலரினதும் கவனம் இருக்கின்றது. பந்தயங்களின் உலக தலைநகரான லாஸ் வேகாஸ் பற்றிச் சொல்லும் போது, லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை என்பார்கள். பந்தயம் கட்டுபவர்களே என்றும் இறுதியில் தோற்று நிற்பார்கள் என்கின்றனர். ஒரு தனிமனிதன் தோற்றுப் போனால், அம்மனிதனுக்கு அடுத்த அடுத்த தடவைகள் ஆவேசம் கொஞ்சம் அதிகமாக வருவது இயற்கைதானே. ஆஸ்திரேலியர்களுக்கும் அதுவே.
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
'சவட்டு வெடி' பற்றியும் ஜெயமோகன் ஒரு தடவை எழுதியிருக்கின்றார். யானைகள் வாழும் இடங்களையொட்டிய இடங்களில் விவசாயம் செய்பவர்கள், தமிழ்நாட்டில் என்று நினைக்கின்றேன், இந்த சவட்டு வெடிகளை பயன்படுத்துகின்றனர். சவட்டு வெடி என்பது உருண்டையான நாட்டு வெடி குண்டை உணவுப் பண்டங்களால், உதாரணம்: கடலை முட்டாய், மூடி தோட்டங்களில் போட்டு வைப்பது. இவற்றை யானைகள் உண்ணும் போது, அவை யானைகளில் வாய்க்குள் வெடித்துவிடும். அதன் பின் அந்த யானைகள் உணவோ நீரோ இன்றி சில நாட்களில் இறந்து போய்விடும். ஒரு யானை சவட்டு வெடித் தாக்குதலின் பின் சில நாட்களாக தண்ணீரில் நின்று இறந்த செய்தியும் ஒரு தடவை செய்திகளில் பெரிதாக பேசப்பட்டது.
-
வெறுப்பு!
அருமையான கவிதை...........👍👍 ஊர்ச் சந்தியில் ஒரு அரசமரம் நின்றது. நான் பிறப்பதற்கு முன் இருந்தே அது அங்கே இருந்தது. பின்னர் எங்களுடன் சேர்ந்து எல்லா குண்டு வீச்சுகளையும், ஷெல் அடிகளையும் அது தாங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டு வந்தது. நான்கு வருடங்களின் முன் அங்கு போயிருந்த பொழுது, சந்தியில் ஒரு புதிய இள அரசமரம் இப்பொழுது நிற்கின்றது. புதிய மரம் நிற்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியே என்றாலும், மறு பக்கம் எப்பொழுது இரவோடிரவாக அவர்கள் ஒரு சிலையை வைத்து விடுவார்களோ என்றும் தோன்றியது.....போன பழைய மரம் போனதாக இருக்க, வெறும் சந்தி இருந்தாலும் பரவாயில்லையோ என்று தோன்றுகின்றது இந்தக் கவிதையை வாசித்த பின்.
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
ஜெயமோகனின் இந்தக் கட்டுரைக்கு திரையுலகச் சார்ந்த பலர் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். 'கேரளத்து பொறுக்கிகள்' என்று அவர் பொதுமைப்படுத்தியிருப்பதை பலர் கண்டித்திருக்கின்றனர். அவர் சொல்ல வந்த விடயம் இதைப் போன்ற சில சொற் பிரயோகங்களால் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. பொதுவாகவே அவர் மீது ஒரு வகை ஒவ்வாமை பலருக்கு இருக்கின்றது. தானாகவே இப்படியும் இடைக்கிடை போய் மாட்டிக்கொள்வார். ஆனாலும், சிம்பு நடித்த, இவர் கதை வசனம் எழுதிய 'வெந்து தணிந்தது காடு' ஒரு சிறந்த படம் என்று விடாமல் அவர் தளத்தில் விளம்பரம் செய்து கொண்டிந்தவர், இந்த மலையாள திரைப்படத்தை 'பொறுக்கிகளின் படம்' என்று மிகக் கடுமையாக விமர்சிப்பது கொஞ்சம் முரணே. இரண்டையும் ஒன்றாக விமர்சித்திருக்கலாம்.
-
இந்த ஏழு நாட்கள்
😀😀.... அவசரமாக ஒன்று வேண்டும் என்றால், போட்டோஷாப்பில் ஒன்றை செய்து வெளியில் விடுவம்......... புகழின் உச்சியில் என்றவுடன் ஒரு சம்பவம் ஞாபகம் வருகின்றது. இங்கு வீட்டில் ஒரு பப்பாசி மரம் நிற்கின்றது. நல்ல உயரம், நிறையக் காய்கள். ஒரு நாள் என் மகன் அதைப் பார்த்து, ஏன் இந்த வாழை மரம் இப்படி காய்த்திருக்கின்றது என்று கேட்டார். அவர் பெரிய படிப்புகள் படித்தவர். பெரும்பாலும் அன்றாடம் எழுதிக் கொள்வேன். வேலை நேரத்தில் தான் அதிகமாக எழுதுவது...........
-
இந்த ஏழு நாட்கள்
இதே சந்தேகம் தான் எனக்கும், நீங்கள் எல்லாம் எனக்கு முன்னரேயே மிகவும் பழக்கமான ஆட்கள் போல என்று.......😀 இல்லை தமிழ் சிறி, நான் இங்கு முன்னர் வரவில்லை. நண்பர்களுடன் சில வாட்ஸ்அப் குழுமங்கள் தவிர வேறு எந்த சமூக ஊடகங்களிலும், முகப்புத்தகம் உட்பட, நான் இல்லை. ஈழப்பிரியனை ஒரு தடவை சந்தித்திருக்கின்றேன். நீர்வேலியான் என்னுடைய நீண்டகால நண்பன்.
-
இந்த ஏழு நாட்கள்
நன்றி கவிஞர். நான் கவிதை என்று ஏதாவது எழுதினால், அது பெரும்பாலும் ஒரு விளக்கக் குறைவாகவே முடிகின்றது. நாலு நாட்களின் பின், நான் எழுதியதை திரும்பிப் பார்க்கும் எனக்கே அப்படித்தான் தெரிகின்றது......🤣🤣 சின்ன சின்ன கதைகளும், கட்டுரைகளும் சரியாக வரும் போல.
-
இந்த ஏழு நாட்கள்
👍👍..... 'ஆரோக்கிய நிகேதனம்' என்பது வங்காள எழுத்தாளரான தாரசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் எழுதப்பட்ட ஒரு பெரும் நாவல். இதில் மூன்று தலைமுறைகளாக மருத்துவம் செய்யும் ஒரு குடும்பத்திலிருக்கும் ஒருவர் மையப் பாத்திரமாக வருகின்றார். இந் நாவல் இந்திய இலக்கியத்தில் மிகச் சிறந்த ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது. தாகூர் அவர்களுக்கு பின்னர் தாரசங்கர் பந்த்யோபாத்யாய இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காக முன் மொழியப்பட்டு, பரிசீலனையிலும் இருந்தார். ஒரு பெரும் படைப்பாளி.
-
இந்த ஏழு நாட்கள்
இந்த ஏழு நாட்கள் ----------------------------- ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டாய் என்று கள நிர்வாகம் ஒரு பதக்கம் கொடுத்திருக்கின்றார்கள். வெறும் ஏழே ஏழு நாட்கள் தான் ஆகியிருக்கின்றதா? ஏதோ ஒரு யுகம் இங்கே உருண்டு பிரண்டு கிடந்தது போல மனம் நினைக்கின்றது. பல வருடங்களாக தினமும் பார்க்கும் 50 தளங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது, போன வாரம் வரை. அப்படியே முகப்பிற்கு வந்து, பிடித்ததை வாசித்து விட்டு போய்க் கொண்டிருந்தேன். உறுப்பினராக உள்ளே வந்து பார்த்தால்.........பெரும் பிரமாண்டம்.....👏👏 நல்ல ஒரு கட்டமைப்பும், வசதிகளும் உள்ள ஒரு தளம். கணினி மென்பொருள் துறையில் நீண்ட கால அனுபவம் உண்டு. நான்கு பக்கம் உள்ள ஒரு இணைய தளத்தை உருவாக்கி, அதை வெளியில் விட்டாலே, ஓராயிரம் பிரச்சனைகள் பின்னால் வரும். ஆனால் யாழ் களம் 'வேற லெவல்', தொழில் நுட்பத்திலும்......👍👍 பங்களிக்கும் பலரும் பெரும் விருட்சங்களாக இருக்கின்றனர். என் அப்பாச்சி வீட்டில் நின்ற இரண்டு பெரிய புளிய மரங்கள் போல. எவ்வளவு காலமாக, எவ்வளவை பங்களித்திருக்கின்றனர். இன்னும் அதே ஆர்வத்துடன் இருக்கின்றனர்......👍👍 எனக்கும் இன்றிருக்கும் ஆர்வம் என்றும் இருக்க வேண்டும் என்று......வேற யாரை கேட்பது......மேலே இருப்பவரை தான் கேட்கின்றேன். அவர் சிலதை கொடுப்பார். வேறு சிலதை கேட்காத மாதிரி இருந்து விடுவார்.....😀🤣 மிக்க நன்றி கள உறவுகளே....🙏
-
ஆரோக்கிய நிகேதனம்
100 வயது மட்டும் வாழ்ந்தோம் என்றால், 33 வருடங்கள் அரசாங்கம் Social Security கொடுக்க வேண்டும். நான் ஒரு ஆள் தனியாகவே அமெரிக்காவை வங்குரோத்து ஆக்கி விடுவன் போல கிடக்குதே....... 🤣 ஊரில் என்றால், முழுச் சீனி தான். மறு பேச்சு கேட்கவே மாட்டார்கள் தான். 'தவிட்டுப் பாண்' என்று ஒன்றை ஊரில் அந்த நாட்களில் சொல்வார்கள். அதை நான் பார்த்தது இல்லை. இங்கு வந்த பின்னர் தான் அது என்னவென்று தெரிய வந்தது. நிறைய ஆட்களுக்கு தவிட்டுப் பாண் அன்று அங்கே தேவைப்பட்டிருக்கும்.
-
ஆரோக்கிய நிகேதனம்
சூட்டிற்கு குளிரும், குளிருக்கு சூடும் என்று நீங்கள் சொல்லியிருப்பது நல்ல பொருத்தமே... இருக்கிற வருத்தங்களுக்கு, இனிமேல் புதிதாக ஒன்றும் வராமலிருக்க என்று இரண்டு வகைக் குளிசைகள் சந்தையில் கிடைக்குது. குளிசை செய்து விற்கிறவர்கள் இங்கு பென்னாம் பெரிய பணக்காரர்கள்....... ஊரில் இருந்த நாட்களில் ஒரு நண்பன் அடிக்கடி உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டமின் சி எடுத்துக்கொண்டு வருவான். வாயில் ஒன்றை அடிக்கடி போட்டுக் கொள்வான். புளிப்பாக இருக்குது, நல்லாக இருக்குது என்றும் சொல்வான். இது என்ன வருத்தமடா என்று அப்ப நாங்கள் யோசித்திருக்கின்றோம்.....😀
-
ஆரோக்கிய நிகேதனம்
ஆரோக்கிய நிகேதனம் -------------------------------------- இன்று இலவசமாக வழங்கப்படும் ஆலோசனைகளில் அதிகமாக முதலாவதாக முன்னுக்கு நிற்பது ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டல்களே. அதற்குப் பின்னால் மகிழ்ச்சியுடன் வாழ்வது, வெற்றியுடன் வாழ்வது, அன்புடன் வாழ்வது, அறத்துடன் வாழ்வது, அமைதியுடன் வாழ்வது, தமிழுடன் வாழ்வது இப்படியான இலவச ஆலோசனைகளின் வரிசை அசோகவனத்தில் அனுமார் வால் நீண்டது போல நீண்டு வாசிப்பவர்களை பதறவைக்கும். சமூக ஊடகங்களினூடாக இவை வழங்கப்படும் போது, ஒரு லைக்கை வாசிக்காமலேயே போட்டுவிட்டுத் தப்பிவிடும் வசதி இருக்கின்றது. நேரில் வழங்கப்படும் போதும் தான் திக்குமுக்காட வேண்டியிருக்கின்றது. இங்கு ஒருவரின் வீட்டிற்கு போக வேண்டியிருந்தது. இருபது வருடங்களுக்கு மேலாக இங்கு இருக்கின்றோம், இப்பத்தான் எங்களின் வீட்டிற்கு வருகிறீர்கள் என்று குறைபட்டுக்கொண்டே, டீயா, கோப்பியா என்று கேட்டனர். இரண்டில் ஏதோ ஒன்றைச் சொல்லவேண்டும் என்ற நினைப்பில், டீ என்று சொல்லிவிட்டேன். நாங்கள் டீ காப்பி குடிப்பதில்லை, அவை உடம்பிற்கு நல்லதில்லை, ஆனால் வீட்டிற்கு வருபவர்களுக்கு போட்டுக் கொடுப்போம் என்றபடியே அவர் உள்ளே போனார். ஸ்மால் சைஸ் உடுப்புக்குள் அதைவிட ஸ்மால் சைஸில் அவர் இருந்தார். திரும்பி வந்தார். பிளாக்கா, மில்க்கா என்று கேட்டார். இரண்டில் ஒன்று மீண்டும். மில்க் என்றேன். நாங்கள் ஸ்கிம் மில்க் மட்டும் தான், ஃபுல் மில்க்கில் கொலஸ்ட்ரோல். ஹார்ட்டை அட்டாக் பண்ணி விடும் என்றார். அவர் பெரிய படிப்பாளி, இலக்கண சுத்தமாகவே எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்தார். திரும்பவும் வந்தார். எத்தனை ஸ்பூன் சுகர் என்று நின்றார். அவரையே பார்த்தேன், அவர் இரண்டு எண்கள் சொன்னால் அதில் ஒன்றைத் தெரிவு செய்வதற்காக. அவரும் அப்படியே நின்றார், அதனால் நான் மூன்று என்று ஒரு எண்ணை சொல்லிவைத்தேன். நோ நோ, மூன்று அதிகம், சுகர் தான் தி வேர்ஸ்ட் என்றார். அப்ப இரண்டு என்று நான் இழுக்க, அவர் இரண்டும் அதிகம், ஒன்று போடுகின்றேன் என்று மீண்டும் உள்ளே போய்விட்டார். ஒரு பெரிய குவளையில் ஸ்கிம் மில்க், ஒரு ஸ்பூன் சுகர், தேயிலைச்சாயம் கலந்து என் முன்னால் இருந்தது. கிளம்பும் போது, அடிக்கடி அவர் வீட்டுக்கு வரவேண்டும் என்ற அன்புக்கட்டளை ஒன்றையும் போட்டார். இன்னும் ஒரு இருபது வருடங்கள் கழித்து இருவரும் உயிரோடிருந்தால், என் வீட்டில் டீ போட்டு, கையில் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு மீண்டும் போவதாக உள்ளேன்.
-
இலை என்றால் உதிரும்
பெருமான் என்று புத்த பெருமானையே சொல்லியிருந்தேன்.......... இலைகளை அள்ளுவது மிகவும் சுலபம். அதுவும் அந்த இழுத்து அள்ளும் இயந்திரம் இருந்தால் இது ஒரு வேலையே இல்லை. இதுவே உடலுக்கும் ஒரு பயிற்சி ஆகட்டும் என்று குப்பை வாரி போல ஒன்றை தூக்கினால், அப்படியே சில நேரங்களில் அதிக வேலையாகி விடும்.....😀 அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் எவர் வெளியே வருவார்கள், இரண்டு கதை கதைப்போம் என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். அப்படியே நேரம் ஓடிவிடும்.
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள், சுடுகலன்கள் எடுத்துச் செல்ல முடியாத ஒரு நடுநிலையான பகுதி இருக்கின்றது. இரு தரப்பும் ஆயுதங்கள் இன்றி அங்கே போய் தங்க முடியும். ஒரு இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் என்று நினைக்கின்றேன். அந்தப் பகுதியில் நித்திரையில் இருந்த இந்திய வீரர்களை சீனா வீரர்கள் பேஸ்பால் துடுப்பாட்ட மட்டைகள் போன்ற ஒன்றில் ஆணிகளைப் பதித்து அவற்றால் தாக்கி கொன்றுவிட்டனர். பல இந்திய வீரர்கள் இதில் இறந்தனர். இந்தியா என்ன பதிலடி கொடுத்தது? ஒன்றுமில்லை. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை ஒன்று மட்டுமே நடந்தது. இந்தியாவின் ஜனநாயகம் எங்களூர் கோவில் திருவிழாவில் விற்கும் இழுக்கும் முட்டாசி போன்றது. அப்படியே இழுத்து இழுத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். எதையும் நேரத்திற்கு செய்ய மாட்டார்கள், செய்யவும் முடியாது.
-
இலை என்றால் உதிரும்
இலையுதிர் காலம் எங்கும் உள்ளது தான். நாட்டுக்கு நாடு இது எந்த மாதங்கள் என்பதில் தான் ஒரு மாறுதல் இருக்கும். கொட்டோ கொட்டென்று கொட்டும், அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான். கொட்டுவதும், பின்னர் துளிர்ப்பதுமாக மரங்கள் இருக்கும். உயிர்களும் போவதும், பின்னர் புதியன வருவதுமாக தெருக்களும் இருக்கின்றன. ** இலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்று தினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும் விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன என்றாலும் என் வீட்டில் அதிகம் என்றே தோன்றியது அயல் வீட்டு சருகுகளும் என் வாசலிலேயே ஒதுங்குவது போன்றும் இருந்தது நின்று கூட்டியால் நின்று நின்று கூட்டி அள்ளி அள்ளி குவிக்க அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக தெருவெல்லாம் சருகாக கிடக்க என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது 'அப்பாடா, முடிந்தது' என்று அண்ணாந்து வானம் பார்த்து நிற்க மெல்லிய காற்று ஒன்று முகம் வருடிச் சென்றது காற்று வந்து கொண்டேயிருந்தது இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன பொழுது சாய மனமும் சாய இனி இன்னொரு நாள் கூட்டி அள்ளுவோம் என்று சலிப்புடன் அன்று முடிந்தது கனவில் ஒருவர் வந்தார் அரைக்கண் மூடி நீண்ட காது தொங்க இருந்தார் இதுவரை இலையே விழாத பெருமரம் ஒன்றிலிருந்து ஒரு இலை எடுத்து வா என்றார் எடுத்து வந்தால் என் மரத்திலிருந்து இலை விழாமல் இனிமேல் பார்க்கின்றேன் என்றார் நீங்கள் ஓடித் தப்பி விட்டு அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்கின்றீர்கள், பெருமானே.
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
எம்மவர்கள் முகம் பார்த்து புன்னகைக்காமல், ஒருவரை முறைப்பது போன்று பார்ப்பதை நான் வேறு பல நாடுகளிலும் பார்த்திருக்கின்றேன். இந்தியர்களும், பல ஆசிய நாட்டவர்களும் கூட இங்கும் தினமும் அப்படி நடந்து கொள்கின்றனர். நேற்றும் இங்கு நடைபாதையில் கொஞ்சம் வயதான ஒரு தம்பதியினரை பார்த்தேன். இந்தியர்கள் போன்றிருந்தனர், இந்த இடத்திற்கு புதியவர்கள். 'ஹலோ...' என்று சொல்லி புன்னகைத்தேன். அவர்கள் முகங்களை திருப்பிக்கொண்டு போய்விட்டனர். என்ன ஆனாலும், நாங்கள் ஹலோ என்று சொல்லி புன்னகைக்க வேண்டுமாம். அது எங்களுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லதாம்............. என்ன, 'இப்படியே எந்த நேரமும் எல்லாரையும் பார்த்து ஈ என்று சிரித்தால் உங்களை பைத்தியம் என்று நினைக்க போயினம்' என்ற ஒரு குறிப்பு பக்கத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கும்.......🤣🤣
-
எச்சரிக்கை
😀😀.... சிரிப்புடன் தொடங்கும் காலை. வெள்ளி என்றாலே ஒரு சந்தோசம் தான்.
-
எச்சரிக்கை
இதை நீங்கள் முதலே எனக்கு சொல்லியிருக்க வேண்டும். நான் ஒரு அளவோடு நின்றிருப்பேன்.............🤣🤣 @Justin பதியும் பல கருத்துகளையும், விளக்கங்களையும் வாசித்திருக்கின்றேன். மிக அதிகமாக வாசிப்பவர் என்றே நினைத்திருந்தேன், அது சரிதான்.....👍👍
-
எச்சரிக்கை
நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். என் கண்ணுக்கு தெரிந்த உருவங்களை வைத்தே நான் அப்படி வகை பிரித்திருந்தேன். இதை தெளிவுபடுத்த சரியான ஒரு ஆள் இருக்கின்றார். என் நண்பன் தான். மிக நீண்ட நாட்களின் முன் இங்கு மிருக வைத்தியதுறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். நூறு நூறு வெள்ளெலிகளாக நண்பனும், நண்பனின் பேராசிரியரும் வாங்குவார்கள். ஏதோ செய்வார்கள். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. அப்பவே நண்பனுக்கும், அவனின் பேராசிரியருக்கும் தகராறாகி, அவன் வேறு எங்கோ போய் விட்டான். இப்ப எங்கிருக்கின்றான் என்று தெரியவில்லை. அவனுக்கு நியூ யோர்க் தோதான இடமாக இருக்கும் போல............. 😀😀
-
எச்சரிக்கை
இங்கு வாசலில் நிற்பாட்டி இருக்கும் கார் மற்றும் வாகனங்களுக்குள்ளும் எலிகள் இரவில் ஏறி, முன் பக்கம் இருக்கும் இயந்திர பகுதிக்குள் பதுங்கிவிடும். குளிர்காலங்களில் எலிக்கு மிகவும் பிடித்த இடம் இதுவென்று சொல்கின்றனர், வாகனங்களின் இயந்திரப் பகுதி. அப்படியே ஏன் சும்மா இங்கே இருக்கின்றோம் என்று, அங்கே போய் வரும் இயந்திரத்தின் வயர்களையும் குழாய்களையும் கடித்தும் விடும். பல நண்பர்களுக்கு இது நடந்திருக்கின்றது. எலி என்றால் rat , சுண்டெலி அல்லது மூஞ்சூறு என்றால் mouse, பெருச்சாளி என்றால் opossum என்று தான் நினைத்திருந்தேன்.