Jump to content

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1085
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. இங்கு கூட்டு என்பது சாப்பாட்டுக்கு சேர்க்கும் கறி கூட்டு அல்ல, இங்கு கூட்டு என்பது கையூட்டுக்கு சேர்க்கும் மக்கள் கூட்டு அல்ல இங்கு கூட்டு என்பது ஒன்றாக ஒரு குடையின் கீழ் நின்று ஒரு தனித்துவமான கொள்கைக்கு இணைவது என்றாலும் உங்கள் கருத்தை ஒரு சிரிப்புக்காக எடுத்துக் கொள்கிறேன்! , வாழ்த்துகிறேன் !! எல்லோருக்கும் நன்றிகள்
  2. "ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்டங்களை எதிர்கொண்டவர் . அவளது சுருக்கம் விழுந்த முகமும் வெள்ளை முடியும் எண்ணற்ற அனுபவங்களையும் கதைகளையும் அவள் இதயத்திற்குள் சுமந்து கொண்டு இருக்கின்றன. கண்மணிக்கு இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாக இயற்கையோடு ஒரு தனிப் பிணைப்பு என்றும் இருந்தது. அவள் தன் ஓய்வு நாட்களை தோட்டத்தைப் பராமரிப்பதிலும், செடிகளையும் பூக்களையும் கனிவான கவனத்துடன் வளர்ப்பதிலும் ஆர்வமாக இருந்தாள். அவளுக்குப் பிடித்த தாவரங்கள் ஆழமான வேர்களைக் கொண்டவை, அவை செழிக்கத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டறிய மண்ணுக்கு அடியில் நீண்டிருந்தன, ஈரம் தேடும் வேர்களாக. இலங்கையில், வடக்கு கிழக்கில் அன்று நிலவிய ஒரு போர் சூழ்நிலை மற்றும் அடக்குமுறைகளில் கண்மணி தன் கணவரை இழந்தார். அதனால் மிகவும் பயந்துபோன கண்மணி, தன் மூன்று இளம் பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு படிப்பிற்காகவும் மற்றும் பாதுகாப்புக்காகவும் அனுப்பிவிட்டார். தான் தனித்துப்போவேன் என்று அவள் சிந்திக்கும் நிலையில் அப்ப கண்மணி இருக்கவில்லை. அவள் எண்ணம் செயல் இரண்டும் பிள்ளைகள், பிள்ளைகள், பிள்ளைகள், அது மட்டுமே! வருடங்கள் செல்ல செல்ல, கண்மணி தன் சொந்த வாழ்க்கைக்கும் தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டார். ஈரத்தைத் தேடும் வேர்களைப் போலவே அவளும் வாழ்வு மலர.. வாசணை துளிர.. வேதனை மறைய..சந்தோஷங்கள் நிறைந்த நேரத்தை தேடும் ஏக்கம் இருப்பதை அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் அருகில் இல்லாதது இப்ப பெரும் குறையாகவே அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் எத்தனைப் பணம் அனுப்பினாலும், வசதிகளை அமைத்து கொடுத்தாலும், அவள் எதையோ இழந்து தவிப்பது தெரிந்தது. ஈரத்தைத் தேடும் வேர்களைப் போல, நேரடியான பாசம், அன்பு ... என்ற ஈரங்களை தேடி மனம் அலைந்து கொண்டே இருந்ததை அவள் உணர்ந்தாள். ஒரு கோடை நாளில், கண்மணி தனது தோட்டத்தில் அமர்ந்திருந்த போது, ஒரு இளம் மரக்கன்று வறண்ட மண்ணின் மத்தியில் வளர போராடுவதைக் கண்டாள். அது பலவீனமாகவும் வாடிப்போகக் கூடியதாகவும் தோன்றியது, அதனால் உயிர்வாழத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் அந்த மரக்கன்று பிடிவாதமாக அதன் வேர்களை தரையில் ஆழமாக நீட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டாள். அந்த மரக்கன்றின் உறுதி கண்மணிக்கு ஒரு தெம்பை கொடுத்தது. கடினமான அல்லது சவாலான வாழ்க்கை அனுபவங்களை வெற்றிகரமாக மாற்றியமைக்கும் மரக்கன்றுகளின் செயல்முறையால் [மீள்தன்மையால்] ஈர்க்கப்பட்ட கண்மணி , தானும் அப்படியான ஒரு கண்டுபிடிப்புக்கான பயணத்தைத் தொடங்க முடிவு செய்தார். வேர்கள் தண்ணீரைத் தேடுவதைப் போல, அவளும் தனக்கான நேரடி ஆதாரங்களைக் கண்டு பிடிக்க ஏங்கினாள். கையில் ஒரு கைத்தடியை [வாக்கிங் ஸ்டிக்கை] எடுத்துக் கொண்டு கொண்டு, தன் ஆர்வத்தாலும், அசையாத உள்ளத்தாலும் வழிநடத்தப்பட்ட அவள், போரினால் கடுமையாக பாதிக்கப்படட, திருகோணமலையின் ஒரு எல்லைக்கிராமமான முல்லைத்தீவு சென்றாள். அவள் கிராமத்தின் பழக்கமான எல்லைகளைத் தாண்டிச் சென்றபோது, கண்மணி பல்வேறு சவால்களையும் தடைகளையும் பாதுகாப்பு படையிடம் மற்றும் புலனாய்வு அலுவலர்களிடம் எதிர்கொண்டார். வாழ்க்கை அடிக்கடி அளிக்கும் கஷ்டங்களையும் சோதனைகளையும் அவள் அறிவாள். எனவே தன் ஒவ்வொரு அடியிலும், கண்மணி உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் வலுவாக தன்னை திடப்படுத்திக் கொண்டார். தனது பயணத்தில், கண்மணி, பெற்றோர் இல்லாத பிள்ளைகளையும், கணவன் இல்லாத ஒற்றைத் தாய்களையும், கை அல்லது கால் இழந்த ஆண்களையும் கண்டார். என்றாலும் அந்த வேதனையிலும், இழப்பிலும் கஷ்டத்திலும் கூட அவர்களின் அன்பை, ஆதரவான பேச்சை பார்த்து , கேட்டு அதிசயப் பட்டாள். அங்கு ஈரத்தை கண்டாள்! அது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்ததுடன், தன் தேடல் வெற்றி அடைந்ததை உணர்ந்தாள். எதை தேடினாலோ அது அங்கு கிடைத்தது. அவள் இதயம் அந்த ஈரத்தில் நனைத்தது! தன்னிடம் உள்ள பணம், வசதிகளை முதலீடாக அமைத்து, கண்மணி அங்கே ஒரு அநாதை இல்லம் அமைத்து, அவர்களுக்கு சேவை செய்ய முடிவு எடுத்தாள். அவளை சுற்றி குழந்தைகள் முதல் வயதானவர்கள் இருந்தனர். அவள் தேடிய நேரடிப் பாசம், அன்பு, துணை என்ற ஈரங்கள் அவளை நனைத்து மகிழ்வைக் கொட்டிக்கொண்டே இருந்தன! ஈரப்பதத்தைத் தேடும் வேர்கள் தங்கள் சுற்றுப்புறங்களுக்குத் தகவமைத்துக் கொள்வது போல, அதாவது, புற மாற்றங்களுக்கேற்ப ஒர் உயிரி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல் போல, ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் அனுபவங்களை மாற்றியமைத்து கற்றுக் கொள்ளவதுடன், ஏற்படும் சவால்களைத் எதிர்த்து, வாழ்வு மலர தேவையான ஆதாரங்களைக் தேடிக் கண்டறியவேண்டும் என்ற தன் அனுபவத்தை மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக கண்மணி பாட்டி தனது எண்பதாவது அகவையிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறாள். ஈரம் தேடும் வேர்களைப் போலவே, அவள் தன் சொந்த ஆவியையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் தொடர்ந்து வளர்த்து, வாழ்க்கைத் தோட்டத்தில் அழகாக மலர்ந்துகொண்டு இருக்கிறாள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. "கார் கூந்தல் சரிந்து விழ" "கார் கூந்தல் சரிந்து விழுந்து காற்றோடு அது அலை பாய காதணி குலுங்கி இசை அமைத்து கார்த்திகை அதற்கு ஒளி வழங்க காகொடி தரும் நஞ்சை விடவும் காமப் பால் நெஞ்சில் வடிய காசனம் செய்யும் விழிகள் திறந்து காகோதரம் போல் நெளிந்து வந்தாள் !" "காசினி மேலே அன்னநடை போட்டு கால் கொலுசு தாளம் போட காஞ்சனி உடலில் தொய்யில் எழுதி காருண்யம் காட்ட என்னை அழைத்து காதல் தெளித்து ஈரம் ஆக்கி கானல் உள்ளத்தை சோலை ஆக்கி கார் மேகமாய் அன்பு பொழிந்து காலம் அறிந்து காரிகை வந்தாள் !" "காதோரம் மெதுவாய் செய்தி கூறி காங்கேயம் காளையாக வலு ஏற்றி காட்டுத் தீயாக ஆசை பரப்பி காவல் உடைத்து என்னைத் தழுவி காவணம் முழுதும் மலரால் அலங்கரித்த காமன் விழாவிற்கு என்னை அழைத்து காலை மாலை முழுவதும் கொஞ்சி காவற் கடவுளாய் நம்பி வந்தாள் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] காகொடி - A thorny poisonous tree [Strychnine tree], எட்டிமரம் [காஞ்சிகை], ஒரு விஷ மரமாகும். காசனம் - Killing,slaying; கொலை காகோதரம் - snake, பாம்பு காசினி - world, Earth, உலகம், பூமி காஞ்சனி - colour of gold, பொன்னிறம் தொய்யில் - மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு காருண்யம் - mercy, compassion, கருணை காரிகை - woman, பெண் காவணம் - open hall, pandal, மண்டபம், பந்தல்
  4. இல்லை மகளே என் மூத்த மகளின் பிள்ளைகளின் பெயர் இங்கு இணைக்கிறேன். மகளே தேர்ந்து எடுத்தது மகள் - ஜெயா [ அம்மம்மாவின் பெயரின் சுருக்கம் / ஜெயக்குமாரி] மகன் [இருவர்] - கலை மற்றவர் இசை
  5. "நம் பெற்றோர்களின் கதை" ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.......... என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது.......... அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான். மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்தி ருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது. அதற்கு அவன்_ இல்லை இப்பொது வயதாகி விட்டது_ எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,........ மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச் செல் அதில் ஒரு வீடு கட்டிக் கொள் என்றது...... அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கி னான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது. வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்....... மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான். மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது.......... அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது. ஆனால் அவன் வரவே யில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்........ . அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது. இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது. அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.......... அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான். இந்த சுகத்துக்கு தான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது....... இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரிய வனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான்
  6. "ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்" "ஒவ் வொரு வளைவு நெளிவும் ஒளிவு மறைவற்ற உன் பேச்சும் ஒழுங்கான உடையும் அதன் பளபளப்பும் ஒய்யாரமான நடையும் அழகின் அழகே" "தூங்கையிலே உன் சிந்தனை கொண்டு தூய்மையான காதலை உனக்கு சொல்ல தூரிகை கொண்டு உன்னை வரைந்து தூது அனுப்புகிறேன் கனவில் தினம்" "உச்சங் கொண்டையும் கரும் விழிகளும் உகவைதரும் உன் உடல் வனப்பும் உள்ளம் கவரும் உன் புன்னகையும் உரிமை கொண்டு என்னை அழைக்கிறது" "புயலாய் மோகம் மழையாய் காதல் புரண்டு ஓடும் வெள்ளமாய் ஆசை புரியாத உணர்வு கண்களில் ஏக்கம் புதுமை பெண்ணின் புன்னகை காண" "உன் இயற்கை நறுமணம் உவகைதந்து உன்மேல் பல்லவி பாட வைக்க உன் முணு முணுப்பில் பரவசமடைந்து உன்னை அணைத்து என்னை இழக்கிறேன்" "ஓவியமாக வந்தாய் கவிதை தந்தாய் ஓசை இன்றி என்னில் கலந்தாய் ஓரமாய் இழுத்து முத்தம் தந்தாய் ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 28 ஆப்கானித்தானில் [Afghanistan] இருந்து கங்கை ஆறு வரை பரவி இருந்த பண்டைய சிந்து சம வெளி நாகரிகம் பெரும்பாலும் ஒரு தாந்திர முறை [தாந்திரீகம் / Tantra] பண்பாட்டையே கொண்டிருந்தார்கள். "ஹரப்பா" [Harappa] என்ற சொல்லை ஹர+அப்பா என நாம் பிரிக்கலாம். இங்கு ஹர என்பது சிவா என்பதையும் அப்பா என்பது தந்தையையும் குறிக்கிறது. ஹரப்பா நகரம் சிவாவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இடமாக கருதலாம். இந்த சிவாவை இந்தியாவின் பண்பாட்டின் தந்தை என குறிப்பிடலாம். ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால் கையாளப்படுகிறது. ஒன்று தொல் பொருட்கள் (கல்வெட்டுகள், மனிதமிச்சங்கள்) மற்றொன்று இலக்கியம். சிந்து - சரஸ்வதி நாகரிகத்தின் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒன்று முகத்தில் கொம்புகள் கொண்டு, விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் பசுபதி வடிவம். இந்த தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு ஆகும். சிவனை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலும் நம்மிடம் இருந்துள்ளது என்பது இதனால் அறியப்படுகிறது. ஆரியர் அல்லாதவர்களின் [ஆஸ்ட்ராலாய்ட், மங்கோலியன், திராவிடர் / Austrics, Mongolians, and Dravidians] ஆன்மீக அணுகுமுறை பொதுவாக தாந்திர முறையாகும். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும். ஆகவே ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் இருந்து மாறு பட்டது. தாந்திர வழிபாட்டு முறையின் வேர்களை அறிய வேண்டுமெனில், நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க வேண்டும். சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் இரண்டு முக்கிய மானவை. ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்து இருக்க, அவரை சுற்றி மிருகங்கள் நிற்பது போல் வரையப்பட்டிருக்கும் சிற்பம். சிந்து வெளி மக்கள் யோகாவை அறிந்து இருந்தார்கள் என்பதற்கும் தாந்திரீக வழிபாட்டு முறைகளை பின்பற்றினார்கள் என்பதற்கும் இந்த முத்திரையை ஒரு சான்றாக எடுத்து காட்டுகிறார்கள். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிற்பம். மேலும் இந்த சிற்பம், காணிக்கை, படையல் மூலம் புகை படிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்தது என வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. முன்னோர்களின் நினைவாக நடுகல் தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி, இறந்தவர்களின் நினைவாக நடுகல் [memorial stone / Hero Stones] வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள். லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண் குறியைக் குறிப்பதாகவும், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங் காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. தாந்திரீகம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முன்னவர்கள் பின் பற்றிய வழிமுறை எனவும் கூறலாம். தாந்திர முறை, தியானம், யோகா இவைகளின் ஒன்று சேர்த்தலை விட, மேல் அதிகமானது. யோகா உடலையும் மனதையும் தனித்தனியே பிரிக்க முற்படுவது. தாந்திர முறையின் படி, போட்டி, போராட்டம் வாழ்வின் சாரம். எல்லா விதமான தடைகளுக்கும் எதிராக போராடி, குறை பாடான, நிறைவுறாததில் இருந்து பூரணமாக்க, முழு நிறைவாக்க முயலும் முயற்சி, பிரயத்தனமே தாந்திர முறையின் உண்மையான மெய்பொருள் ஆகும். ஏறத்தாழ 4,500-5,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி மக்கள் நாகரிகத்தின் உச்சியில் இருந்தார்கள். அவர்கள் தாந்திர முறையை மனதையும் உடலையும் ஒருங்கிணைப்பதற்கு அப்போதே பாவித்தார்கள். தாந்திர முறையில் உடம்பு, மனது, உணர்வு மூன்றையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் சக்தியை, ஆன்மீக பரவச நிலையை அடைய பயன்படுத்துவதாகும். காணாத கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு [penance] பதிலாக, நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும் பொழுது நமது கவனச்சிதறல் குறைக்கப்படுகிறது. அந்தக் கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப்பாகவும், கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது. இதுதான் தாந்திர முறையின் தொடக்கம். அதாவது மனதும் உடலும் ஒன்றுபட்டு இயங்குவதே தாந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும் தனித் தனியே பிரிக்க முற்படுவதுதான் மற்ற வழி பாட்டு முறைகள் ஆகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சம வெளியில் பிறந்த தாந்திரா முறை பற்றி அல்லது தாந்திரீகம் பற்றி இன்று பலர் தவறான கருத்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் அது எல்லாம் பாலியல் [sex] பற்றியது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் தாய்வழிபாடு சமூக மரபிலிருந்து தொடங்கிய இந்த தாந்திரீகம் மற்றைய சமய வழிகள் போலல்லாது, மனித வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வு அடையும் நிலையினை போதிப்பது. ஆகவே தாந்திரீகத்தில் காமமும் ஒரு பகுதி ஆனால் காமம்தான் தாந்திரீகம் இல்லை. நடை முறையில் சாதாரண பாலுறவைத் தாண்டி அதைவிட கூடுதலாக உள்ளது. நீங்கள் இதை காம சூத்திரத்துடன் குழப்ப வேண்டாம். அது [காமசூத்ரா / Kama Sutra] பாலியல் உறவு நிலைகள் பற்றிய ஒரு வழிகாட்டி மாத்திரமே. தாந்திரா உண்மையில் அதில் ஈடுபடும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்கிறது. அதாவது தாந்தி ரீகத்தின் நோக்கம் [குறிக்கோள்], ஆத்மீக விழிப்புணர்வு நிலையினை [spiritual awakening] அல்லது சுய விடுதலையை அடைவதாகும். தாந்திரா மனித உடலில் ஏற்படக்கூடிய அடிப்படை உந்தலை, பாலியல் ஆற்றலை [sexual energy] பாவித்து, ஆன்மீக விழிப்புணர்வு நிலையை மேம்படுத்துதல் ஆகும். தாந்திரா ஒரு மதம் அல்ல. ஆனால் பண்டைய ஆன்மீக நம்பிக்கைகளின் தொகுப்பு ஆகும். ஏனென்றால், தாந்திரா, அதன் இயற்கை தன்மையால், மதங்களை மாதிரி, கொள்கைகளை நம்பிக்கொண்டு நம்பிக்கை அடிப்படையில் கற்பனை செய்யும் ஒன்று அல்ல. மதங்கள் மாதிரி எந்த ஆண்டவன் கட்டளையையும் அல்லது கடுமையான விதி முறைகள் ஒன்றையும் [commandments or strict rules] தாந்திர பின்பற்ற வில்லை. மேலும் நீங்கள் இங்கு கடினமான வழிபாடு அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது ஒரு பணிகளில் ஈடுபடத்தேவை இல்லை. தாந்திராவில் ஒவ்வொருவரும் தனக்கு சரியெனபடும் ஒரு பாதையை தெரிந்து எடுக்கலாம். தாந்திரா குருவிடம் இருந்து மாணவனுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குருவும் தனக்கெனெ ஒரு தனித்தன்மை வாய்ந்த அணுகு முறையை [unique approach] வைத்திருக்கிறார்கள். மேலும் மதங்களுடன் ஒப்பிடும் போது, இதில் முக்கிய வேறுபாடு பாலியலில் ஆகும். மத போதகர்களின் அறிவுறுத்தலின் படி பாலியல் ஒரு புனிதம் அற்ற ஒன்று ஆகும். ஆனால், தாந்திரா, இதற்கு மாறாக இதை புனிதமானது [sacred] என நம்புகிறது. அந்த அடிப்படையில் மனித உடலின் ஒரு அத்தியாவசிய தேவையான உடலுறவு மூலமும் இறைவனை அடையும் வழியினையும் காட்டுகிறது. தாந்திரீகத்தின் படி ஆணும் பெண்ணும் ஒரே வெளிப்பாட்டின் விம்பங்கள் போன்றவர்கள், பிரபஞ்ச ஆற்றலில் ஆண் தன்மையினை சிவம் என்றும் பெண்தன்மையினை சக்தி என்றும் அழைப்பர். இது ஒழுங்கமைக்கப்பட்ட மதங்கள் மாதிரி ஒரு ஒப்புயர்வற்ற ஒன்றை [supreme beings] அல்லது முழுமுதல் கடவுள் ஒருவரை வழிபடுவது அல்ல. மாறாக எம்முள் இருக்கும் இயற்கையான அடிப்படை உந்தலை மதிப்பளித்து, உயர்ந்த நோக்கத்தினை அடைவதற்கு அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்வது ஆகும். அதனுடன் சண்டை பிடிக்காமல் ஒத்துப்போய் அதனை வைத்தே அதை வெல்லும் சூட்சுமத்தினை சொல்லிக் கொடுக்கிறது. அதாவது, எமது தெய்வீக இயல்பை [divine qualities] எம்மில் வளர்ப்பதற்கு நாம் சிவ, சத்தியை வசதியான சின்னங்களாக இங்கு பாவித்து கொள்கிறோம். பக்குவமற்றவர்களுக்கு [To the crude] இது ஒரு ஆபாசம் [பாலின்பம் / pornographic], ஒருதலைச் சார்பு உடையவர்களுக்கு [to the bias] இது ஒரு கொச்சையான [அநாகரீகமான] முற்காலத்திய மக்களின் பழக்கவழக்கம் [vulgar habits] ஆகும். இந்து [சைவ, சாக்த] ஆலயங்களில் வெறுக்கத்தக்க, அருவருப்பான சிற்பங்களை [objectionable sculptures] கோபுரத்திலும் சுவரிலும் கண்டு நாம் அடிக்கடி இது ஏன் என அதிசயப் படுகிறோம். இது இந்த தாந்திரீக மரபினால் ஏற்பட்டவையாக இருக்கலாம்? மனிதனின் இயற்கையான ஆற்றலான காமத்தை அறிவதும் அறிவதன் மூலம் கடந்து செல்வதுமே மானுட உண்மையின் உச்ச நிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அதன் பிரதிபலிப்பே இந்த கலவி [Mithuna / Maithuna /‘(male / female) couple’] சிலைகள் போலும். ஆரியர் வந்த காலத்தில் வட இந்தியாவிற் குடியிருந்தவர் பெரும் பாலும் திரவிடரே. ஆரியர்கள், பழங்குடி மக்களை கீழோர், தம்மை விடத் தாழ்ந்தவர் என் கருதினர். உதாரணமாக இராமாயண கதையில் இவர்களை குரங்கு என்றும் அரக்கன் [demons] என்றும் குறிக்கப்படுகிறது. [Photographed in 1904,... pictures 4 & 5 ... this image of a gigantic lingam, hints at the district’s Shaivite past. Back in the fourth century AD, the area between Baramulla and Waziristan (now in Pakistan) was a heartland of lingam worship. Several ancient lingams still line the Jhelum river.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 29 தொடரும்
  8. "மதமும் மரணமும்" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப் படக்கூடிய நாளை, அல் குர்ஆன் "இறுதித் தீர்ப்பு நாள்" [a day of judgment] என்று, ஆபிரகாமிய சமயங்களான கிறிஸ்தவம் போலவே அறிமுகப் படுத்துகின்றது, அந்த நாளில் இறந்த உயர்கள் எல்லாவற்றிற்கும் மனிதனின் இவ்வுலக வாழ்க்கை தான் அவனுக்கு சுவர்க்கமா? நரகமா? என்பதைத் தீர்மானிக்கும் என்கிறது இஸ்லாம். அது மறுபிறப்பு என்பதை முற்றாக மறுக்கிறது. குர்ஆன் அல்லது இஸ்லாத்தின் திருமறையின் முக்கியமான கோட்பாடு [மையமான கொள்கை] "இறுதித்தீர்ப்பு நாள்". அன்று உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, எல்லா மக்களும் எல்லா ஜின்களும் [jinn / genie: spiritual creatures mentioned in the Qur'an] இறப்பில் இருந்து உயிரோடெழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். ஜின்கள்: என்பது நாம் வாழும் பூமியில் நமது பார்வைக்கு புலப்படாத ஒரு உயிரினம். அது நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதாவது ஜின் என்பது இஸ்லாமிய வழக்கில் சிறு தெய்வ உரு அல்லது கூளி [பேய்; தீய ஆவி] ஆகும். ஜின் என்ற அரபு பதத்திற்கு – மறைவானது – என்று பொருள். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிற்கு அந்தப் பெயர் வந்தது. மனிதன் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் படைக்கப்பட்டுள்ளனர். "சுட்ட மண் பாண்டங்களைப் போல (தட்டினால்) சப்தம் உண்டாகும், களி மண்ணில் இருந்து (அல்லாஹ்வாகிய) அவன் மனிதனைப் படைத்தான். அதற்கு முன்னரே (சூடான) நெருப்புக் கொழுந்தில் இருந்து ஜின்களைப் படைத்தான்." (அல்குர்ஆன் 55:14-15, 15:26,27) என்கிறது இஸ்லாம். மேலும் 51:56 وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏  "இன்னும், ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. [அல் குர்ஆன் 51:56] என்கிறது. இது இவ்விரு இனத்தையும் படைத்திருப்பதின் அடிப்படை நோக்கத்தை விளக்குகிறது. அதாவது, படைப்பின் முதல் நோக்கம் வணங்கி வழிபடுவதே, மற்ற பிற நோக்கங்கள் யாவும், அவ் வணக்கத்தையே தொடர்ந்து இவ் உலகில் செயல் ஆற்றப் பட வேண்டும் என்பதாகும். இறுதி தீர்ப்பு நாள் வரை, புதைகுழியில் இறந்த, காலஞ் சென்ற ஆன்மா அல்லது உயிர்கள் தமது உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கின்றன. எப்படியாயினும், அங்கு அவர்கள், காத்திருக்கும் காலத்திலேயே, தமக்கு அளிக்கப்படக் கூடிய தீர்ப்பை அல்லது தமது விதியை முன்கூட்டியே உணர்கிறார்கள். அதாவது நரகத்திற்கு போகிறவர்கள் அங்கு, புதைகுழியில் அவதிப்படுகிறார்கள். சொர்க்கத்திற்கு போகிறவர்கள் அங்கு அமைதியாய் இருக்கிறார்கள். சொர்க்கத்திற்கு நரகத்தின் மேலால் செல்லும் ஒரு ஒடுங்கிய பாலத்தினூடாக இறுதி தீர்ப்பு நாள் அன்று செல்வது போல நாம் விவரிக்கலாம். தமது தீய செயல்களின் சுமையினால், பாலத்தில் இருந்து விழுந்தவர்கள், அந்த நரகத்தில் எல்லாக் காலத்துக்கும் அங்கேயே இருப்பார்கள். என்றாலும் குர்ஆன் இரு விதிவிலக்குகளை கூறுகிறது. உதாரணமாக, போரில் மரிப்பவர்கள் உடனே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்ற பொதுவான இஸ்லாமிய நம்பிக்கையை கீழ்கண்ட குர்‍ஆன் வசனம் -3:169. "அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நிச்சயமாக எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; (அவனால்) உணவளிக்கப்படுகின்றனர்." என சாட்சி பகிர்கிறது. மேலும், 2:159. "நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமை உடையவர்களும் சபிக்கிறார்கள்" என்றும் கூறுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த மறுவுலக நம்பிக்கையைப் போதிக்கும் போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஒரு வாதத்தை முன் வைத்தது விளக்கியது. உதாரணமாக, "இல்லாமையிலிருந்து வெளிவந்து, இப்போது ஒரு பொருளாகக் காட்சியளிக்கின்றாயா? அப்படிப்பட்ட உன்னை மரணிக்கச் செய்து, மீண்டும் உனக்கு உயிர் கொடுத்து எழுப்புவது எனக்குச் சிரமமா?" என்று அல்குர்ஆன் 76:1 யிலும், "பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்." என்று அல்குர்ஆன் 41:39. யிலும் வாதிடுகிறது. மறுவுலக நம்பிக்கை என்று இஸ்லாம் சொல்லுவது இப்ப நாம் வாழும் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு இன்னொரு உலகம் உருவாகும். அது தான் மறு உலகமாகும். அங்கு, இவ்வுலகில் தோன்றிய முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர் வரை அனைவரும் எழுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவர். அந்த விசாரணை இரு வகையில் அமைந்திருக்கும். முதலாவதாக, மனிதன் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவங்களையும், இரண்டாவதாக, மனிதன், தனது சக மனிதனுக்கு எதிராகவும் இதர பிராணிகளுக்கு எதிராகவும் செய்த பாவங்களையும் முன்னிறுத்தி இந்த விசாரணை நடைபெறும். மனிதன் இறைவன் இட்ட கட்டளைப்படி நடந்திருந்தால், சக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நன்மை செய்திருந்தால் கட்டாயம் அவனுக்குச் சுவனம் [சொர்க்கம் /Paradise] என்று உறுதிப்படுத்துகிறது. அது மட்டும் அல்ல, அவன் இந்த உலகில் செய்த நல்ல செய்கைகளுக்கு பரிசாக அங்கு உணவு, உடை, அழகிய மனைவிகள் என அனைத்து வசதிகளையும் அந்தச் சுவனத்தில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான் என்று திடமாக அறிவிக்கிறது. ஆனால், மாறாக இறைவனின் கட்டளையை மதிக்காமல் நடந்து இருந்தால், அவனுக்கு நரகம் தண்டனையாக அளிக்கப்படும். அதில் என்றென்றும் நிலைத் திருப்பான். அங்கு அவனுக்கு அழிவோ அல்லது மரணமோ கிடையாது. காலம் காலமாக அந்த நரகத் தீயில் வெந்து பொசுங்கிக் கொண்டிருப்பான் என்று பயமுறுத்துகிறது. அத்துடன் மறுமையில் கிடைக்கும் தண்டனையைத் தான் மக்களிடத்தில் இஸ்லாம் மாறி மாறி எடுத்துக் கூறுகின்றது. இன்னின்ன பாவத்திற்கு, குற்றத்திற்கு இன்னின்ன தண்டனை என்று குற்ற அட்டவணையை வகைப்படுத்தி அதற்குரிய தண்டனையை பார்வைக்கு விட்டுள்ளது. ஆகவே அதில் ஏற்படும் பயம் குற்றங்கள் குறைவாக நடப்பதற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறது. மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப் போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் என்று திட்டவட்டமாக சொன்னாலும், அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே அவ்வற்றை அறிந்து உறுதிப்படுத்த முடியும், ஆனால், இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் எள்ளளவும் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக் குறியாகவே மனிதனுக்கு இன்று வரை தக்க வைத்து விட்டது. கூடு விட்டு கூடு பாய்தல் மற்றும் மறு பிறவி எடுத்து மீண்டும் இறந்த ஆன்மா இவ்வுலகத்திற்கு வருதல் போன்றவற்றை இந்து மதம் போதித்தாலும் அல்லது அதன் புராணங்களில் கூறி இருந்தாலும், அப்படி வந்த ஆன்மா உறுதியாக, சாட்சியாக, சந்தேகம் அற்று தன் அனுபவத்தை விபரித்ததாக நான் அறியேன்? இதற்கு ஒரு ஆறுதலாக, மரணத்திற்கு பின் வாழக்கை என்பதை நிறுவிப்பது போல, மரண நிலையில் உள்ள நினைவுகள் அல்லது "அருகில் மரண அனுபவங்கள்" அல்லது "மரண விளிம்பு அனுபவம்" (NDE-Near Death Experience), எடுத்து இயம்புகின்றன. இந்த நினைவுகள் பொதுவாக — இறந்தது போல ஒரு உணர்வு, ஒருவரின் "ஆன்மா" உடலை விட்டு வெளியேறியது போல ஒரு உணர்வு, ஒரு பிரகாசமான ஒளியை நோக்கிய ஒரு பயணம் போல ஒரு உணர்வு மற்றும் அன்பும் பேரின்பமும் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றொரு யதார்த்தத்திற்கு புறப்படுதல் போல ஒரு உணர்வுகளாக இருந்தன. அது மட்டும் அல்ல பலர் ஒரு நீண்ட நடைபாதையை பார்த்ததாகவும் அதன் முடிவில் பிரகாசமான ஒளி தெரிந்தது போல ஒரு உணர்வு கொண்டதாக கூறி உள்ளார்கள், [ such as — a sense of being dead, a feeling that one's "soul" has left the body, a voyage toward a bright light, and a departure to another reality where love and bliss are all-encompassing. Many people on their deathbeds report seeing a long corridor with a brilliant light at the end of it]. இது சொர்க்கமாக இருக்கலாமா ? கட்டாயம் இல்லை. இவர்கள் உண்மையில் தாம் நம்பிய சொர்க்கம், நரகத்தின் கொள்கையின் அடிப்படையில் தமது நினைவுகளை வர்ணிக்கிறார்கள். பிளேட்டோ, சாக்ரடீஸ் [Plato, Socrates] போன்ற பண்டைய கிரேக்க ஞானிகள் கூட மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்கள் பற்றி கூறிச் சென்றுள்ளார்கள். உதாரணமாக, தத்துவவாதி பிளேட்டோ தன் குடியரசு (Republic) என்ற நூலில், 'ஏர்; என்பவரின் ஒரு புராணக் கதை ஒன்றை பதிவிட்டுள்ளார் [he recorded the “Myth of Er” in the 4th century BC] 'ஏர்' என்ற போர்வீரன் போர்க்களத்தில் இறந்து பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது இறுதி சடங்கில் விழித்தார் என்றும், ஆன்மாவின் அழியாத தன்மையைப் பற்றியும் மற்றும் மரணத்திற்குப் பிறகு அதன் நிலையை பற்றியும் அனைவருக்கும் அவரால் சொல்ல முடிந்ததாக பதிந்துள்ளார். இந்த உலகில், நாம் வாழும் பொழுது நாம் கையாண்ட எங்கள் நடவடிக்கைகள் அல்லது தேர்வுகள் மற்றும் எம் தன்மை அல்லது இயல்புகள் [our choices and the character we develop while alive], கட்டாயம் மரணத்திற்குப் பிறகு அதன் விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தன் அனுபவத்தை அந்த போர்வீரன் கூறியதாக அதில் குறிப்பிட்டு உள்ளார். என்றாலும் இன்று இவை விஞ்ஞான ரீதியாக, உதாரணமாக, உயிரியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, நரம்பியல் மற்றும் வேதியியல் ரீதியாக [biologically, psychologically, neurologically and chemically [lack of oxygen, excess of carbon dioxide]] இன்று விளங்கப்படுத்தப் பட்டுள்ளன. அத்துடன் மரணம் தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம் - நரகம் என்பது கிடையாது என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் [Stephen Hawking] திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது என்பது இவரின் வாதம். மூளையும ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ, அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை என்பது இவரின் முடிந்த முடிவாகும். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. "திண்ணைக் காற்று" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] "திண்ணைக் காற்று புயலாய் வீசுது கண்ணைத் திறந்து மின்னலாய் ஒளிருது மண்ணைக் காப்பாற்ற இடியாய் முழங்குது ஒன்றாய் இணைய எனோ மறுக்குது?" "தேர்தல் வருகுது மனத்தைக் குழப்புது தேசம் இருந்தும் பிரிந்து நிற்குது தேய்வு இல்லா ஒற்றுமை இல்லாமல் தேசியம் பற்றி மேடையில் கத்துது?" "ஆவதும் உன்னாலே அழிவதும் உன்னாலே ஆற அமர்ந்து ஆழமாய் சிந்திக்காயோ ஆக்கம் கொண்ட கொள்கை வகுத்து ஆசை துறந்து அர்ப்பணிப்பு செய்யாயோ?" "உறவை மறவாதே உண்மையைத் துறக்காதே உலகம் உனதாகும் உள்ளம் திறந்தால் உடம்பு ஆற திண்ணையில் இருப்பவனே உயிரோடடம் உள்ள கருத்துக்களை பகிராயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. எல்லோருக்கும் நன்றிகள் எனது அடுத்த அலசல் "மதமும் மரணமும்" [இஸ்லாம்]
  11. "மதமும் மரணமும்" [கிறிஸ்தவம்] மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை கொடுத்துள்ளது. மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு - பகல், காலை - மாலை, இன்று - நாளை இது போன்று 'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் இந்த 'மறுமை' என்பதாகும். பொதுவாக, இவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், அவன் இறைவனால் வழங்கப்பட்ட நற்போதனைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து கொண்டால், அவனுக்கு வெகுமதியாக சொர்க்கமோ, அப்படி இல்லாது, தனது உடல் மற்றும் மனோ [மனதில் எழும்] இச்சையை பின்பற்றி கெடுதியின் பக்கம் செல்வானாயின், அதற்கு தண்டனையாக நரகமோ, இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில், அதாவது மறுமையில் இறைவனால் வழங்கப்படும் என்பதே சமயங்களின் கோட்பாடாகும். இதன் மூலம் மக்களிடம், பொறுப்புணர்வு, நேர்மை, நற்பண்பு, உளத்தூய்மை, பொறுமை, மனநிறைவு போன்றவற்றை ஏற்படுத்த சமயம் முயல்கிறது. உதாரணமாக, தன் செயல்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் எனும் உணர்வினால் உலகச் செயற்பாடுகள் அனைத்தையும் பொறுப்புணர்வுடன் நேர்மையாக நிறைவேற்றவும், நன்னடத்தையை மேற்கொள்ளவும் இது தூண்டுகிறது எனலாம். அவ்வாறே அனைத்துச் சிரமங்களையும் இழப்புகளையும் தாங்கிக்கொள்ளும் பொறுமையையும் நிலைகுலையாத பண்பையும் இந்த நம்பிக்கை ஏற்படுத்துகிறது. மரணமும் சமயமும் இயற்கையாகவே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. நாம் இறந்த பின் ஏதாவது ஒன்று எமக்காக காத்திருக்கிறது என்றால், அண்டம் முழுவதையும் படைத்துக் காக்கும், எல்லாச் சக்திகளும் பொருந்திய, உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும், இயற்கை முறைக்குள் அடங்காத, ஒருவர், அதாவது சமயம் போதிக்கும் கடவுள் மாதிரியான ஒருவர் [supernatural being like a god] அதில் ஈடுபடவேண்டும். ஆகவே நாம் சமய விரிவுரையை / பாடத்தை [religious texts] கவனமாக, முழுமையாக, மரணத்தை பற்றிய, மனிதனின் நம்பிக்கை தகவல்களை அறிய கட்டாயம் அலச வேண்டும். 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் ஒருவித இயற்கை வழிபாட்டையே பின்பற்றின போதிலும், அதன் பின் பெருங் கற்காலத்தில் [மெகாலிதிக் காலம் / megalithic period] தாய் தெய்வ வழிபாட்டுடன், கல்லில் கடவுளுக்கு புற உருவங் கொடுத்து, இறந்தவர்களின் மற்றும் மூதையார்கள் வழிபாட்டு மரபுகளுக்கு அதி முக்கியம் கொடுத்த போதிலும் [attached great importance to the cult of the dead and ancestors], மெகாலிதிக் கற்காலத்துக்கு பின்னான சங்க காலத்தில், சேயோன், மாயோன், கொற்றவை, ஐயனார் போன்ற குலமரபு தெய்வங்கள் [tribal gods] இருந்த போதிலும், அதன் பின் சிவாவை முழுமுதற் கடவுளாக ஏற்ற சைவர்களாக, பக்தி காலம் வரை தொடர்ந்தார்கள். அதன் பின் உலக செல்வாக்கினாலும் மற்றும் வலுக்கட்டாயமான மத மாற்றங்களாலும் சில தமிழர்கள் இஸ்லாமிய, கிருஸ்துவ மதங்களுக்கு மாறினார்கள். இப்பொழுது 80% இற்கு கூடியவர்கள் இன்னும் சைவத்திலும் 20% யிலும் குறைவானவர்கள் மற்ற மதங்களிலும் பொதுவாக காணப்படுகிறார்கள். உலகளாவிய ரீதியில், உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சங்க காலத்தின் இறுதி பகுதியில் அல்லது அதற்குப் பின் சைவ, வைஷ்ணவ சமயங்களும் பிராமண இந்து சமயத்துக்குள் உள்வாங்கப்பட்டது. அதனால் சைவ சமயம் இந்து மதத்திற்குள் ஒரு பிரிவாக அல்லது ஒரு கலப்பாக காணப்படுகிறது. ஆகவே இன்று பல சமயங்களின் வாக்கியங்கள் அல்லது கருத்துக்கள் [பாடங்கள் / texts] எம்மிடையில் இருக்கின்றன. அங்கு காணப்படும் அனைத்து கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக் கொண்டாலும், அவை எல்லாம் மரணத்தைப் பற்றி ஒரே மாதிரி சொல்ல வில்லை. மரணத்தைப்பற்றி பல அபிப்பிராயம் அங்கு நிலவுகிறது. மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. ஆகவே எப்படி எங்களுக்கு தெரியும், எந்த நூல், எம்மை சரியாக, முறையாக அறிவுபூர்வமாக வழிகாட்டும் என்று ? கிறிஸ்தவ மதம் மறுபிறப்பு என்று குறிப்பாகச் சொல்லா விட்டாலும், ஒருவரின் கடவுள் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கையின்மை என்பவற்றை பொறுத்தும், அவரின் இவ்வுலக நடத்தையை பொருத்தும், அவரின் மறுமை சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்பது தீர்மானிக்கப்படும் என உறுதிபடச் சொல்கிறது. அதாவது கிருஸ்துவர்கள் ஒரு மறுமை இருக்கிறது என்பதை நம்புகிறார்கள். உடம்பு இறந்து அது எரிக்கப்பட்டாலும் அல்லது புதைக்கப்பட்டாலும், தங்களது தனித் தன்மை வாய்ந்த ஆன்மா [unique soul / உயிர்] தொடர்ந்து வாழ்கிறது என்றும், அது கடவுளினால் புது வாழ்விற்கு உயிரோடு எழுப்பப்படுவர் [raised] எனவும் நம்புகின்றனர். சிலுவையில் அறையப்பட்டு [crucifixion] மூன்று நாட்களின் பின், இயேசு இறப்பில் இருந்து எழும்பியவர் என்ற நம்பிக்கை அல்லது புராணம், எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. அதாவது இயேசுவின் போதனையை பின்பற்றுவதுடன் அவரை இறைவனாகவும் இரட்சகராகவும் [their Lord and Saviour] ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்த புதிய உயிர்த்தெழுதல் [resurrection] தமக்கும் காத்திருக்கிறது என்று நம்புகிறார்கள். இயேசு அவளை நோக்கி: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" என்று யோவான் 11:25-26 இலும், "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்" என்று யோவான் 3:16 இலும் கூறப்பட்டுள்ளது. தேவனை நம்புகிறவன் எவனோ, கர்த்தரிடத்தில் விசுவாசம் காட்டுபவன் எவனோ, தேவகுமரான ஏசுவை தனது ரச்சகனாக ஏற்றுக்கொண்டவன் எவனோ, அவனுக்கே பரோலோகம் ராஜ்யம் கிடைக்கும் மற்றவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளப்படுவார்கள் என்றும் பைபிள் பயமுறுத்துகிறது. எனவே, பல கிறிஸ்தவர்கள் தாம் இறந்த பிறகு, ஆண்டவனுக்கு முன்னால் தாம் இருத்தப் பட்டு, அங்கே வாழ்நாளில் அவர்கள் செய்த அல்லது செய்யத் தவறிய செயல்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறார்கள். இந்தப் பயம் தான் ஒரு ஒழுங்கு முறையில் அவர்களை வழிபாட்டில் ஈடுபட வைக்கிறது மற்றும் அவர்களை ஒரு கட்டுப் பாட்டிலும் வைக்க உதவுகிறது. சில கிறிஸ்தவர்கள், தாம் இறக்கும் போது தீர்ப்பு வழங்குதல் நடக்கும் என்றும், மேலும் சிலர், காலத்தின் முடிவில் ஒரு தீர்ப்பு நாள் [Day of Judgement] இருக்கும் என்றும், அங்கு எல்லோருக்கும் ஒரே நேரத்தில் தீர்ப்பு வழங்குதல் நடக்கும் என்றும் நம்புகிறார்கள். கடவுள் மனிதர்களுக்கு சுதந்திரமான விருப்பத்தை அளித்துள்ளதால், கடவுளை நிராகரிக்க அங்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பு உண்டு என்றாலும், தந்திர உபாயமாக [உத்தியாக] புகுத்தப்பட்ட நரகத்தின் [Hell] மேல் உள்ள பயத்தின் காரணமாக, அதை தடுக்கிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு ஆத்மாவைப் புனிதப்படுத்தும் இடம் ஒன்று [Purgatory] மேலே உள்ளதாக நம்புகிறார்கள். பரலோகத்திற்கு போகும் இறந்தவர்கள், தாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு சுத்திகரிப்பு தேவைப்பட்டால், முதலில் அங்கு செல்லவேண்டும் என்று நம்புகிறார்கள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "பெண் மனம்" "பெண் மனம் நிலாவரை கிணறோ கண் ஜாலத்தால் மயக்கும் மந்திரவாதியோ மண்ணின் பெருமையின் கலங்கரை விளக்கோ பண்பாட்டின் கலைவடிவம் இவளின் நாட்டியமோ?" "ஆடவள் உள்ளம் ஆடவனின் தடாகமோ அடக்கம் நிறைந்த அழகு மடந்தையோ அடங்கா மனிதனையும் அன்பில் அடக்குவாளோ திடம்பட காதல் கொடுப்பதே பெண்மனமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. "ஆசை கடந்த கூட்டு வேண்டும்!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] "கைகளை கோர்த்து நாடகம் போடாதே கைத்தாளம் போட்டு மேடை ஏறாதே கைவசம் பதவியை இறுக்கி பிடிக்க கைமாறு செய்யும் ஊழல் கொண்டு கைவண்ணம் காட்டிடும் ஒற்றுமை வேண்டாம்?" "ஆறு கைகள் ஆராய்ந்து பிடித்து ஆற அமர தெளிவாக முடிவெடுத்து ஆழமான உறவை கொள்கையில் ஏற்படுத்தி ஆக்கமான முடிவில் ஒன்றாக செயற்பட்டு ஆசை கடந்த கூட்டு வேண்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 04 சைவ நாயன்மார்களில் / சித்தர்களில் திருமூலர் ஒரு முக்கியமானவர். இவர் இயற்றிய திருமந்திரம் 3027 பாடல்களைக் கொண்டுள்ளது. இதுவே சைவ சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று இவர் தனது திருமந்திரம் 2104 இல் கூறுகிறார். "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே" [திருமந்திரம் 2104] படைக்கப் பட்ட அனைத்து உயிர்களும் ஒரே தன்மையை உடையன என்றும் இவை அனைத்துக்கும் ஒருவனே இறைவன் என்றும் சமரசம் காணுகிறார். இது சைவ சித்தாந்தத்தின் மையக் கருத்தாக அமைகின்றது. அது மட்டும் அல்ல, சைவ சித்தாந்த நெறியின் தாரக மந்திரமாகச் திருமந்திரம் 2962 "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர் உல குக்குயி ராவது" என்று கூறுகிறது. அதாவது உலக இயக்கத்துக்கு பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உண்டு என்பதை அறிந்தீர். அந்த ஆண்டவன் உலகத்தை உயிர் போன்று இருந்து இயக்குவதையும் அறிந்தீர் என்கிறது. வேறு எந்த சமயத்திலும் இப்படி பொதுவாக சமரசமாக கூறியது உண்டா? இதனால் சைவம் எந்த வேறு பாடும் காட்டாமல் மக்களை இணைத்தது. இதை, இந்த தத்துவத்தை எந்த முற்போக்கு சிந்தனையாளனும் / பகுத்தறிவாளனும் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்வான். மேலும் அன்பே கடவுள் என திருமந்திரம் போதிக்கிறது. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயின் (Lev Nikolayevich Tolstoy) பிரபலமான வாசகம். நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் சிரிப்பு தெரியும். அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது. அந்த அன்பின் மகத்துவத்தினை திருமூலர் ’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதொரு மறிகிலார்’’ என்று எவரும் இலகுவாக விளங்கக் கூடியதாக கூறுகிறார். அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்றும் அன்பும், சிவமாகிய இறை நிலையம் பிரிக்கவே முடியாதது என்றும், அன்புதான் சிவம் என ஆணித்தரமாக கூறுகிறார் திருமூலர். ஆகவே "அன்பே சிவம்", அதாவது அன்பு தான் கடவுள் என்பது, திருமூலர் விவரித்தவாறு, சைவ சமயத்தின் மையக் கருவாக உள்ளது. அது மட்டும் அல்ல, 'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது. அத்துடன் உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே [அநாதியாகவே, ஆதி அற்று] இருப்பவை என்றும் சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது. மேலும் சுவாமி தாயுமானவர் "கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி, எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே", அதாவது மறப்பும் நினைப்புமாகிய கங்குல் பகலற்று எல்லா இடத்திலும் நின்திருவடிக் காட்சியே கண்டு கொண்டிருப்பர்; அத்தகையோர் யாவருங் கண்ட நன்னெறி யொன்றேயாம் என்றும், சுவாமி சுந்தரர் "அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்" என்றும், சுவாமி மாணிக்கவாசகர் "அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி" என்றும் கூறியதையும் நோக்குக. சைவ சமயம் உண்மை ஒன்று என்றும், பாதைகள் பல என்றும் ஏற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு மதத்தின் உள்நோக்கமும் மனிதனை மீண்டும் கடவுளுடன் இணைப்பது என்பதால், ஒரு உண்மையான சைவன் எவரினதும் நம்பிக்கையிலோ அல்லது மத நடை முறையிலோ தலையிடுவதில்லை. கடவுளை அடைய எந்த ஒரு பிரத்தியேக வழிமுறையும் இல்லை என அது நம்புகிறது. எல்லா மக்களும் ஆறுதல், சமாதானம் மற்றும் விடுதலை காணும் முழுமுதற் பொருள் ஒன்றே என்கிறது. எனவே சைவன் எல்லா மத மரபுகளையும் எல்லா மதத்தவரையும் மதிக்கிறான். அது எல்லா சைவனுடனும் எல்லா அந்நியனுடனும் இணங்குகிறது. ஒவ்வொருவரும் அவர் அவர் வழியில் கடவுளை உணரலாம் என்பதால், எம் வழியே ஒரே வழி என்றோ அதுவே சிறந்த வழி என்றோ அது ஆலோசனை கூறவில்லை. ஆகவே கட்டாய மத மாற்றத்தை அது எதிர்க்கிறது. போர்துக்கேயர் இலங்கை இந்தியாவில் செய்த கட்டாய மத மாற்றம் அல்லது இன்னும் சில குழுவினர் இன்றும் செய்யும் இப்படியான செயல்கள் போன்றவற்றை அது கடைப்பிடிக்க வில்லை. அப்படி செய்யுமாறு ஆலோசனையும் கூறவில்லை. பரவலாக உலகம் முழுவதும் கிட்டத் தட்ட 250 மில்லியன் மக்கள் சைவ சமயத்தை பின்பற்றுகிறார்கள் என்றாலும், இதன் பாரம்பரிய தளங்கள் இந்தியாவிலேயே, குறிப்பாக தென் இந்தியாவிலேயே உள்ளன. வரலாற்று சான்றுகள் சிவா அல்லது சிவலிங்க வழிபாடு கி மு 2500 ஆண்டு நாகரிகமான சிந்து சம வெளியில் அல்லது அதற்கு முற் பட்ட காலத்தில் இருந்து தொடர்வதாக சாட்சி பகிர்கின்றன. அண்மைக் காலங்களில், சுமேரிய இலக்கியங்களில், ஆழமான மொழியியல் ஆராய்ச்சி செய்த, மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன் [Malaysian professor, Dr. K. Loganathan], சுமேரு மொழி பழந் தமிழ் என்றும், சுமேரியன் ஆலயங்களில் சைவ ஆகம மரபு சார்ந்த காட்சிகள் அல்லது நிகழ்வுகள் நடப்பில் இருந்துள்ளன என்றும் பல சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளார். எனவே, இந்த சான்றுகள் அல்லது கண்டு பிடிப்புகள், எம் சைவ-தமிழ் [திராவிட] பாரம்பரியத்தை, பாபிலோனிய மற்றும் பண்டைய மத்திய கிழக்கு பண்பாட்டுடன் சமகாலத்துக் குரியதாக அல்லது அதற்கு முன்னோடியாக எடுத்துக் காட்டுகிறது. ஆகவே, எம் பண்டைய பாரம்பரியத்தையிட்டு நாம் பெருமை படுவதுடன், உலகம் முழுவதும் பரந்து வாழும் அறிஞர்களுக்கு, குறிப்பாக இலங்கை அல்லது தென் இந்தியா திராவிட அறிஞர்களுக்கு, இவ்வாறான ஆய்வில் மேலும் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது வருங்கால சைவ சந்ததிக்கு உற்சாகமளிப்பதாக இருக்கும். உலக வரலாற்றில் எம்முடைய சரியான பங்கை அல்லது அந்தஸ்த்தை நிலை நாட்ட, சுமேரு - திராவிட ஆய்வு முக்கியமாகும். மேலும் புனிதமான, பெருமைக்குரிய எம் தாய் மொழியில் நாம் பிரார்த்தனை அல்லது வழிபாடு செய்தல் எமது பிறப்புரிமையும் ஆகும். இந்த அறப்போர் பிராமணருக்கு எதிரானது அல்ல, ஆனால் பிராமணியத்துக்கு மட்டுமே எதிரானது என்பதை தெளிவாக்குவோம். பிரித்தானிய [பிரிட்டிஷ்] ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மகாத்மா காந்தி போராடி வெற்றி கொண்டவாறு, மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அமைப்பிற்கு எதிராக நெல்சன் மண்டேலா போராடி வெற்றி கொண்டவாறு, சமஸ்கிருதம், அந்நிய பண்பாடு மற்றும் பிராமணியம் திணித்த சாதி, நிற வேறுபாடுகளுக்கும் எதிராக 1500 - 1300 ஆண்டுகளுக்கு முன் எமது நாயன்மார்கள் அப்பரும் சுந்தரரும் மற்றும் எமது மற்ற சைவ நாயன்மார்களும் தமது அறப்போரை ஆரம்பித்தார்கள். அது இன்னும், இன்றும் தொடர்கிறது. நீண்டகால பக்தி மரபும், உலகளாவிய சைவ கோட்பாடான ஒன்றே குலம் என்ற மனித சமத்துவத்தையும், அன்பே கடவுள் என்ற சைவ வாழ்வையும் நாம் இன்னும் தொடர்ந்து பாதுகாத்து வருவதும், வரலாற்றில் மிகவும் எம்முடன் சம்பந்தப்பட்டவை ஆகும். இது இயற்கைக்கு எதிராக எதையும் செயலாற்ற எமக்கு ஆலோசனை கூறவில்லை. சில மதம், சிறுவர்களை துறவிகள் ஆக்க வலியுறுத்தி மக்களை கட்டாயப் படுத்துகிறது. வேறு சில இசை, பாட்டு, நடனம் மற்றும் பிற நுண்கலைகளை, சரீர அல்லது உடல் இன்பத்தை அவை தூண்டுகிறது என்று தடுக்கிறது. அதே போல, இன்னும் சில, காட்டுக்கு போதல், குகையில் வாழ்தல், நிர்வாணமாய் இருத்தல், சொந்த பந்தங்களை வெறுத்து ஒதுக்குதல் போன்றவைகளை பெரிய உன்னத தவம் என்கிறது. ஆனால் சைவம் அப்படியான எதையும் ஆதரித்து பரிந்துரைக்கவில்லை. இது மிகவும் பரந்த கொள்கையடையது, எளிமையானது மற்றும் இது எந்த உலக இயற்கைக்கும் எதிரானதும் அல்ல. என்னினும் நாம் தமிழரின் வரலாற்றை, அவனின் தோற்றுவாயை சரியாக அறிவோமாயின் இந்த பெருமை பெற்ற தமிழரின் சமயத்தையும் அதனின் தோற்றுவாயையும் கூட நாம் முழுமையாக, விரிவாக அறியலாம் என கருதுகிறேன். ஆகவே அதை முதற்கண் சுருக்கமாக அடுத்த பகுதியில் தருகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 05 தொடரும் "An analysis of history of Tamil religion" - PART: 04 Among the Tamil saints / Saiva mystic (சித்தர்siddhars- "perfected ones"] Thirumoolar a great Saivite saint, Thirumoolar's treatise, Thirumanthiram is a collection of 3027 hymns. This is the Basic for the Saiva Siddhanta Philosophy. Thirumoolar has written in his thirumanthiram 2104- "ஒன்றே குலம் ஒருவனே தேவன் / There is only one Human Sect and there is only one God" ie "one caste and one God only" or oneness of God and oneness of all creeds in the whole world and again in thirumanthiram 2962- "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது / One the God for worlds all, One is He, the life of worlds all " & by this he united all Tamilians without caste discrimination. Any rationalist will accept it without any hesitation. Further, The concept of the Divine as Love or Love as God is clearly stated, In the following thirumanthiram: Here, Thirumular states that: "only the ignorant will think that love and Sivan are two different things; only few really understand that Sivan is nothing but love; once everyone understands that Sivan is nothing but love, everyone will become saintly." Hence, "அன்பே சிவம்" “Anbe Sivam” - “Love itself is God Siva” is the central theme of Saivism as elaborated in Thirumular’s THIRUMANTHIRAM. Further St. Thayumanavar says: The path proclaimed by all saints who have had the true vision, is the same everywhere "கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி, எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே." and St. Sundarar says: I am the servant of those devotees even of other lands, who have reached the feet of God. "அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்" and St. MANIVACAKAR says: "By means of the creator’s grace, one sees the Lord and is freed from sorrow. "அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி". Saivites wholeheartedly respect and encourage all who believe in god. They honour the fact that truth is one, paths are many. Since the inner intent of all religions is to bind man back to god, Shaivite seek not to interfere with anyone's faith or practice. They believe that there is no exclusive path, no one way for all. Shaivites profoundly know that god Shiva is the same supreme being in whole people of all faiths, who find solace, peace, and liberation. Shaivites respect all religious traditions and the people within them. It says 'Let is have concord with our own people and concord with people who are strangers to us.' It believe that every one of us can realize god in their own way, then we also have to accept that our way to god can not be the only way or the best way. Hence, It is not right to force one beliefs on another. It did not encourage or support any activities of forced conversion like, portuguese in India & Srilanka or some religious group still doing. Saivism is a living and popular faith followed by more than 250 million people around the world today but its traditional bases are in India, particularly in South India. But historical fact shows that Siva & linga worship goes back to the period of Indus civilization 2500 B.C and even beyond. Dr. K. Loganathan more recently, through careful linguistic research of Sumerian literature has noted a close affinity so that not only Sumerian the proto - Tamil language but also the repertoire of Saiva Agamic traditions then in vogue in the Sumerian Temples. This important discovery makes our Saiva - Tamil [Dravidian] heritage almost contemporaneous or forerunners to the Babylonian and other ancient cultures in ancient Middle East, considered the cradle of human civilization. Let us all be proud of our ancient heritage and we appeal to scholars everywhere, particularly the Srilankan tamils and South Indians to continue their research into these areas which will be a source of encouragement to Saiva posterity, the world over. To recover our rightful place in world history Sumero - Dravidian studies is a must. Our freedom to pray in our sacred mother tongue is our birthright. Let us make it crystal clear that our crusade is not against our Brahmin friends but it is against Brahmanism - just as our Saints Appar and Sambanthar fought against the imposition of Sanskrit and the caste system; just as Mahatma Gandhi fought and won against British Imperialism and just as Nelson Mandela fought and won against the Apartheid system in South Africa. Our Saiva Saints initiated the1500 -1300 year old crusade against Sanskrit and foreign culture as well as against the degrading system of caste, colour and creed imposed by Brahminism, a crusade that is still going on even today . What is historically relevant is that the long standing Tamil Bhakti tradition, and maintaining our Saiva universal concepts of human equality (onre kulam) and God is love. It does not advise us to practice anything against nature. Some religions insisted and compelled people to become monks, even from the childhood. Some others, decried music, dance and other fine arts as well, saying that would tend to induce and stimulate carnal or physical pleasure and sexual passions. Going to forest, living in caves, keeping nude, hating and avoiding one’s near and dear relatives etc, were taught to be great noble austerities by some other religions and philosophies. But Saiva religion does not advocate such crude modes of self modifications. We cannot find any such teachings in Saiva religion and philosophy. It is very liberal, simple and does not go against nature. However, If we know the origin of Tamils or where they come from?, Then, We can also know the origin, and development of Siddhanta Philosophy or the origin & history of Tamil religion. Hence we are giving brief analysis of history of Tamils in next chapter. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 05 Will follow
  15. பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024] [அன்பும் மகிழ்வும் நிறைந்த ஒரு அற்புதமான இன்ப ஆண்டாக மலர நிலனுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்! ] "நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன் நான் யாரென்று உணரும் நாளிது! நட்சத்திரம் ஒளிர்ந்து உன்னை வரவேற்க நம்பிக்கை கொண்டு வளர்வாய் என்றும்!" "இங்கிலாந்து மண்ணில் மகிழ்ச்சியாய் உதித்தவனே இதயம் மகிழ பாலர்பாடசாலை போறவனே இனிய சிரிப்பும் தளிர்நடையும் கொண்டவனே இடையூறுகளைத் தாண்டி உலகை வெல்வாயே!" "நாலாவது ஆண்டு தொடங்கும் இன்று இதயத்தை தொட்டு மகிழ்ச்சி நடனமாடுமே! ஆசீர்வாதங்கள் காற்றில் குளிர்ந்து பொழிந்து ஒவ்வொரு விடியலையும் உனக்கு வழிநடத்துமே!" "அச்சம் தவிர்த்து துணிந்து நின்று அழகு வார்த்தைகள் நாவில் தவழ அன்பு ஒன்றால் உலகை ஆள அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!" "ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி ஆக்கமான செயலில் ஈடு பட்டு ஆலமரம் போல் நிழல் கொடுத்து ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!" "இளமைக் கல்வி மனதில் நிற்கும் இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து இதயம் சேர வாழ வேண்டும்!" "பதினொன்று அக்டோபர் பிறந்த அழகனே பகலோன் போல உலகில் ஒளிர்ந்து பகைவர்கள் அற்று கவலைகள் அற்று பல்லாண்டு நிலன் வாழ வாழ்த்துகிறேன்!" தாத்தா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
  16. "திருந்தாத மனிதர்கள்" அது ஒரு காடை ஒட்டிய குக்கிராமம். அந்தக் குக்கிராமத்தில், வயல் வெளிகளுக்கு இடையில் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு சிறு கடையும், ஒரு சிறுவர் பாடசாலையும் ஒரு சிறு ஆலயமும் இருந்தன. உயர் வகுப்புக்கு கொஞ்சம் தள்ளித் தான் போகவேண்டும். அந்த ஆலயத்திற்கு பக்கத்திலும், வயலுக்கு, குளத்தில் இருந்து போகும் வாய்க்காலை ஒட்டியும், அந்த கிராமத்தில் கொஞ்சம் வசதியான ஒரு கல் வீடு இருந்தது. அங்கு மூன்று மகனுடனும், மூன்று மகளுடனும், ஒரு தலைமை குமாஸ்தா வாழ்ந்து வந்தார். அவருக்கு, அந்த கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்கு, ஓரளவு படித்தவரும், ஓரளவு செல்வந்தவரும் ஆவார். அவரின் குடும்பத்தில் முதலாவது பிள்ளை ஆண், அதன் பிறகு ஒரு பெண், அடுத்து இரு ஆணும் இரு பெண்ணும் இருந்தனர். அவரின் பிள்ளைகளுக்குள் மூத்த மகள் கொஞ்சம் எல்லோருடனும் கலகலப்பாக பேசக்கூடியவர் , படிப்பிலும் கொஞ்சம் திறமை சாலி, அத்துடன், அந்த கிராமத்தில், விறல் விட்டு எண்ணக்கூடிய அழகிகளில், அவரும் ஒருவர். மற்றும் துடிதுடிப்பானவர் என்பதால், பாடசாலை விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்வார். அத்துடன், கிராமத்து ஆலயத்தில், தேவாரம் படிப்பதில் இருந்து, ஆலய தொண்டு வேலைகளில், மிகவும் அக்கறையாக செயல் படுபவர். ஒரு கதாநாயகி இல்லாமல் ஒரு கதையே இல்லை என்பார்கள். இந்த கிராமத்து கதாநாயகி யார் என்று எவரையும், குறிப்பாக இளம் ஆண், பெண், இரு பாலாரிடம் கேட்டால், எல்லோர் கையும் சுட்டிக்காட்டுவது இவளைத்தான்! இவளுக்கு இப்ப பதினாறு முடிந்து, பதினேழு நடக்கிறது. உயர்வகுப்பிற்காக இரண்டு மூன்று மைல் தள்ளி இருக்கும் சிறு நகரத்தின் மையத்தில் இருக்கும் பாடசாலைக்குத் போகவேண்டும். எல்லாம் இன்று வெளிவரும் சாதாரண வகுப்பு பெறுபேரில் தங்கி இருக்கிறது. அவள் வீட்டில் எல்லோரும் ஆளை ஆளை பார்த்துக்கொண்டும், எதோ முணுமுணுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். இன்று அவளின் அப்பா தலைமைக் குமாஸ்தா வேலைக்கு போகவில்லை. மணி எட்டு ஆகிற்று. பத்து மணிக்கு முதல், பாடசாலைக்கு போகவேண்டும். ஒரே பரபரப்பு. தலைமைக் குமாஸ்தா, வாயில் சுருட்டுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருக்கிறார். அவளின் தாய், தன்னை கொஞ்சம் அலங்கரிப்பதில் ஒரு கண்ணாக இருக்கிறார். மூத்தவன் படிப்பை கோட்டை விட்டுவிட்டான் என்று தாய்க்கு ஒரே கவலை, ஆனால் இன்று அந்த வடு நீங்கும் என்ற ஒரே பூரிப்பு அவளுக்கு ஆனால் அங்கு எங்கள் கதாநாயகியை காணவே இல்லை. அவள் அந்த ஆலயத்தில் அமைதியாக எதோ தேவாரம் படித்து, தன் தோட்டத்தில் பறித்து வந்த மல்லிகை, ரோசா, மற்றும் பல விதமான மலர்களை கடவுள் சிலைக்கு முன் படைத்து, எதோ பூசை ஒன்று தானே செய்து கொண்டு இருக்கிறாள். அது இப்போதைக்கு முடிந்த பாடு இல்லை, நாலு ஐந்து விதமான எண்ணெய்கள் விட்ட சிறு தீப விளக்குகள் கொண்டு எண்ணற்ற பூசைகள். தங்கை வந்து அக்கா காணும் என்று சொல்லும் மட்டும் அது முடிந்த பாடில்லை. ஒருவாறு முடித்துக் கொண்டு கதாநாயகி, போலீஸ் திணைக்கள தலைமைக் குமாஸ்தா அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு, அம்மா தங்கையுடன், குறுக்கு வழியான, வயல் வரம்பால் பாடசாலை சென்றாள். நான் இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். இந்த கிராமத்துக்கு நல்லிணக்க கிராமம் என்ற விசித்திரமான பெயரும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் திருத்த முடியாததாகக் கருதப்பட்ட மக்கள் ஒரு சிலரும் அங்கு வாழ்ந்தாலும், அந்த ஒவ்வொருவரும் எதோ ஒன்றில் கட்டுப்படுத்த முடியாத நாட்டம் கொண்டு இருந்தாலும், அவர்களையும் அணைத்து அந்த கிராமம் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, அவர்களை ஒதுக்கிவிடாமல் வாழ்ந்து கொண்டு இருந்தது தான் அதற்கு காரணம். அப்படியானவர்களில் முதன்மையாக இருந்தவன், அந்த கிராமத்து தலைவனின் மகன். இவன் பொய் சொல்வதில் மட்டும் அல்ல, நன்றாக நடிக்கவும் தெரிந்தவன். அழகிய பெண்களிடம் எப்படியும் நண்பனாகி, நம்பவைத்து, உறுதிவழங்கி, தன் வலையில் வீழ்த்தி, தன் காம பசியை தீர்ப்பதில் வல்லவன். இவனால் தன் பதவிக்கும், தனக்கும் அவமானம் என்று, உயர் வகுப்பில் மூன்று தரமும் பரீட்சையில் கோட்டை விட்டதும், மத்திய கிழக்கில் வேலைக்கு அனுப்பி விட்டார். என்றாலும் மத்திய கிழக்கின் கட்டுப்பாடு அவனுக்கு ஒத்துவராததால், எதோ பல பொய்கள் சொல்லி, மீண்டும் கிராமத்துக்கு நேற்று வந்துவிட்டான். அவனுக்கு இன்று வெளிவரும் சாதாரண வகுப்பு பெறுபேறு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. தலைவனின் மகன், பழைய மாணவன் இரண்டும் காணும், அங்கு தானும் போய், நல்ல பெறுபேறு பெற்றவர்களை வாழ்த்தவும், மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், மற்றும் அதை சாட்டாக வைத்து, தன் கைவந்த கலையை நாசுக்காக மீண்டும் தொடங்கவும் ஏதுவாக இருந்தது. அவன் கண் இம்முறை எங்கள் கதாநாயகி மேலேயே! அவளின் பெயர் 'திலோத்தமை' கூட கவர்ச்சியானதே. திலம் என்றால் எள் . எள் அளவும் குறையாத அழகை பெற்றவள் என்பதால் இப்பெயர் வந்தது என்று எண்ணுகிறேன். ஆனால் அவனின் பெயர் ஆண்ட்ரூஸ். நேரம் ஒன்பது அரை. இன்னும் அரை மணித்தியாலம் இருக்கு. ஆண்ட்ரூஸ் ஒரு ஓரத்தில் நின்று, ஒரு நல்ல பையனாக பெற்றோர்களை வரவேற்று வரவேற்று எதோ எதோ கதைத்துக்கொண்டு இருக்கிறான். ஆனால் அவன் கண் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறது. அப்பொழுதுதான் திலோத்தமை தன் பெற்றோர், தங்கையுடன் பாடசாலை வாசலுக்கு வந்தாள். ஆண்ட்ரூஸ் கண்கள் மட்டும் அல்ல, மற்றவர்களின் கண்களும் வாசலை நோக்கின! ஒயிலாக முல்லைக் கொடிபோல் திலோத்தமை வாசலில் நின்றாள். இரு குறுவாள்கள் கொண்ட கண்களையும் , நேர் பாதியில் நேர்த்தியாய் வகுந்த இரு மாங்கனித் துண்டுகளை இரு கன்னங்களாகவும். நெற்றியில் கற்றையாய் விழுந்து புரளும் கரும்கூந்தலையும் கொண்ட அவள் முகம் யாரையும் அங்கு பார்க்கும் நிலையில் இல்லை. அவள் கண் மேடையில் இருந்த மணிக்கூட்டை மட்டுமே பார்த்தது. மனதில் இன்னும் முடியாத பூசையின் வசனங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. அவள் அழகு, வாய் மூட மறந்து நிற்கும் பலரின் நரம்புகளையும் மீட்டிக் கொண்டிருந்தது. அதை அவள் பொருட்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவள் அழகை முழுமையாய் பார்த்தவர் ஒருவர் கூட இல்லை என்றே சொல்லலாம். நெற்றியைப் பார்த்தவர் அங்கேயே நிற்கிறார். நீண்ட கைவிரல் நகத்தைப் பார்த்தவர் அதையே பார்க்கிறார். இதைவிட மேலான ஒன்றைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் யாருக்குமே இல்லை. என்றாலும் ஆண்ட்ரூஸ் கண்கள் மாறுபட்டவையாக இருந்தன. வீதியில் நடந்து செல்லும் கணிகையின் கண்களைப் போல் அலைகிற காற்று திலோத்தமையின் மேனியை தழுவிக் கிடந்த தாவணியை கொஞ்சம் கலைக்கிறது. ஆண்ட்ரூஸ்க்கு இந்த வகையில் கொஞ்சம் அதிர்ஷ்டம்தான். நெஞ்சில் காமத்தீயுடன், வெளியே முகத்தில் அப்பாவியாக இருக்கும் அவனுக்கு அந்தப் பொழுதே ஆசை தீர தழுவிக் கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றினாலும், அவன் அதை வெளியே காட்டாமல் சமாளித்தபடி அங்கே நின்றான். என்றாலும் அவன் வாய் முணுமுணுக்க தவறவில்லை. "ஆடை மறைவில் ஆசைகள் பிறக்க மேடை மார்பில் கண்கள் மேயுதே! கயல் விழியில் இமைகள் ஆட கைகள் இரண்டும் அணைக்க துடிக்குதே!" "நீல வானம் முகிலில் புதைய கரும் கூந்தலில் நானும் புதைக்கிறேனே! காதல் ஊடல்கள் தனிமை தேட கனவு கூடல்கள் இடையை தேடுதே!" திலோத்தமை அந்த பாடசாலையிலேயே அதிகூடிய திறமை சித்தியை பெற்றாள். அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவளுக்கும் அவளின் பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சந்தர்ப்பத்தை நாசுக்காக பாவித்து ஆண்ட்ரூஸும் அங்கு போய் அவளுக்கு வாழ்த்து கூறியதுடன், தனது சிறப்பு பரிசாக பூச்செண்டும் கொடுத்தான். ஆனால் அவள் அதை வாங்க தயங்கினாள். என்றாலும் பெற்றோர் வாங்கு பிள்ளை என்று கூற அவள் அதை அவனிடம் இருந்து வாங்கினாள். அந்த சாட்டில் அவன் கை, அவளின் கையை, தெரிந்தும் தெரியாமலோ கொஞ்சம் வருடியது. ' என் தந்தையார் கண்ணகி. சீதை.... இப்படியான சரித்திர கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார் அவற்றை வாசித்து, நானும் என்னை அவர்களைப் போல் எண்ணிய பட்டிக்காடு' என்று அடிக்கடி தன் தோழிகளிடம் கூறும் அவள், அவனுடைய வலிமை பொருந்திய திருக்கரங்களால் வருடி, பட்டும் படாமலும் தொட்ட தொடுகை , அவளின் இதயம் களிப்பின் எல்லையை இழந்து உரைக்க இயலா கவிதையாகி விட்டது! அவள் பிரேமை சிறகை விரித்து கடல் மேல் பறக்கும் பறவையானது! சமாத்தியமான அவன் தன் வலையில் மான் விழுகிறது என்பதை எளிதாக உணர்ந்துகொண்டான். சிலநாட்கள் கழித்து, திலோத்தமை ஒரு வார இறுதியில் வயல் வெளியால் நடந்து போகும் பொழுது, இதற்கென்றே காத்து இருந்த ஆண்ட்ரூஸ், தற்செயலாக சந்தித்தது போல ஹலோ என்றான். அவனைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாத அவளும் தன் புன்சிரிப்பால் அவனை வரவேற்றாள். அது போதும் அவனுக்கு. அங்கு அந்த நேரம் யாரும் இல்லை. குளத்துக்கு அருகில் இருந்த மரநிழலை காட்டி, அதன் அருகில் சிறு பொழுது அமர்ந்து கதைக்கலாமே என்றான். அங்கு காணப்பட்ட சிறிய மலரை, தாமதமின்றி பறித்து, அவளுக்கு கொடுத்து, அதை முடியில் சூட சொன்னான். இல்லையேல், அது வளைந்து, புழுதியில் விழுந்து வீணாகிவிடும் என்று தமாஷாக கதைத்தான். அது அவளுக்கும் பிடித்தது. தேனிகள் தங்கள் குழுவின் இசையை அங்கே ஒலிபரப்பிக்கொண்டு இருந்தன. அந்த சூழலை பயன்படுத்தி, மெல்லிய குரலில் ' உன் வதனம் காணா விட்டால், என் இதயத்துக்கு ஓய்வோ நிம்மதியோ இல்லை' என கொஞ்சம் நெருக்கமாக கதையை தொடங்கினான். அதை அவள் சம்மதித்து போல, தன் கால் விரலால் நிலத்தில் எதோ சித்திரம் வரைந்தாள். அவளின் அலங்கார ஆடையும் கழுத்து சுற்றி வைடூரிய சங்கிலியும், அவளின் கால் விறல் கீறலுடன் சேர்ந்து ஆடின. அவள் தன்னை அறியாமலே நாளை தங்கையுடன் விறகு பொறுக்க போகிறேன் என பட்டும் படாமலும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகரத் தொடங்கினாள். அவள் அவன் முகத்தை, அதன் வதனத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை; அவன் குரலை செவி மடுக்கவில்லை; குளத்தின் முன்னால் உள்ள சாலையில் அவனின் மென்மையான காலடிகள் மட்டும் அவள் செவியில் விழுந்து, அவனும் போகிறான் என்று உணர்த்தியது. அடுத்தநாள் விறகு பொறுக்க தங்கையுடன் போன அவள், தங்கையை வேறுபக்கமாகவும் தான் வேறுபக்கமாகவும் என தன்னை தனிமை படுத்துக்கொண்டாள். அவளின் எண்ணம் எல்லாம் ஆண்ட்ரூஸ் வருவான் என்ற எண்ணம் தான். முறுக்கிய மீசையும், திமிறிய தோள்களும் அவனின் கூரிய கண்களும் தான் இப்ப அவள் நினைவில். அவள் விறகு பொறுக்காமல், பக்கத்தில் இருந்த பத்தைகளில் பல்வகை மலர்களும் பூத்துக் கிடப்பதை காண்கிறாள். அதன் வாசனை திலோத்தமையை கவர்ந்திழுக்க, அந்தப் பூக்கள் ‘என்னைக் கிள்ளி உன் கூந்தலில் சூடிக்கொள்ளேன்' என்று சொல்லுவது போல ஒரு சத்தம் அவளுக்கு கேட்டது. அவள் தன்னையறியாமல் கண்ணை மூடினாள். அந்த பூக்கள் தன் கூந்தலில் வந்து இணைவதை உணர்ந்து, திடுக்கிட்டு கண்ணை திறந்தாள். ஆண்ட்ரூஸ் அவள் கூந்தலில் அலங்காரம் செய்துகொண்டு இருந்தான், ஆடவன் ஒருவன் தன் கையை தீண்டிவிட்டான் என்று விருப்பமோ, விருப்பம் இல்லையோ இவன் என் கணவன் என்று பட்டிக்காடாய் முடிவு எடுத்த அவளுக்கு, இப்ப அவன் அருகில் நெருங்கி நிற்பது, இன்னும் நம்பிக்கையை கொடுத்தது. அவள் தன்னையறியாமலே அவன் மார்பில் சாய்ந்தாள். கை படாத ரோசாவாக இருந்த அவள், ஒவ்வொரு இதழாக அவன் முழுமையாக சரியாய் நுகர்ந்து அனுபவிப்பதை அவள் பொறுப்படுத்தவில்லை. அவன் தனக்கே சொந்தம் என்று, அவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் விட்டுக்கொடுத்தாள். அவளும் ஆரத்தழுவி ஆனந்தமாய் மகிழ்ந்தாள். தங்கையின் 'அக்கா, எங்கே?'' என்ற குரல் கேட்க, அவள் தன்னை சரிபடுத்திக்கொண்டு, எதோ அங்கும் இங்கும் விழுந்து இருந்த சுள்ளிகளை பொறுக்கிக்கொண்டு தங்கையுடன், வேண்டா வெறுப்பாக புறப்பட்டாள். ஆனால் அதன் பின் ஆண்ட்ரூஸ், திலோத்தமையை சந்திக்கவில்லை. அவன் மலர் தாவும் வண்டுதானே. தேனை குடித்தபின் வேறு மலர் தேடி எங்கேயோ போய்விட்டான். ஆனால் திலோத்தமைபாடு திரிசங்கு நிலை ஆகிவிட்டது. அவனை நம்பி, தன்னை இழந்து, கன்னி பெண்ணாகவும் இல்லாமல் மனைவி என்ற நிலையும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் நிலையானாள். காதலித்துப்பார் உன்னைச்சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்பார்கள். ஆனால் அவள் உண்மையில் உணர்வுபூர்வமாக காதலித்தாள், ஆனால் தோன்றியது இருள் வட்டம் தான்! அது அவளின் காதலின் தவறா அல்லது அவள் மீது கொண்ட காதலின் தவறா? இப்ப அவள் தனிமையை உணர்கிறாள், அந்த வஞ்சித்த ஞாபகம் மனதில் வருவதால். செடிகளின் அசைவின் ஒலியில் கலவரமடைகிறாள், தன் வயிற்றை தடவி பார்க்கிறாள். நீல வானம். ஓடும் முகிலை தேடிப்பிடித்து முகத்தை மூடுவது போல, அவனை எப்படியும் தேடிப்பிடித்து, தன் வயிறு, தன்னை காட்டிக்கொடுக்கும் முன், அவனுடன் சேரவேண்டும் என்று துடித்தாள். "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!" என்ற பாடல் அடிகள் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. 'என்னை உன் இன்பத்தால் அந்தம் இல்லாமல் ஆக்கி விட்டாய். நிறைவேற்றி அதை முழுமையாக, உலகம் தெரிய முடிக்கமுன்பு வெறுமை தந்து ஓடி மறைந்துவிட்டாய். இதயத்தை புத்துயிரால் புனர் ஜென்மம் தந்த நீ, அதன் எதிரொளியாய் உன் வாரிசு வளருவதை நீ அறியாயோ' அவள் வாய் வெளியே கதறி சொல்லமுடியாமல் தவித்தது. நாட்கள் போக, அவளின் போக்கை / நிலையை உணர்ந்த பெற்றோர், அவளை விசாரித்து, பின் ஆண்ட்ரூஸ் பற்றி முழுமையாக அறிந்து, அவன் சரி இல்லாதவன் என எடுத்துக்கூறி, அவளை கருக்கலைப்பு செய்ய தூண்டினார்கள். அவர்களுக்கு அதை மூடிமறைக்க வேறுவழி தெரியவில்லை. ஆனால் இவள் எனோ அதை மறுத்துவிட்டாள். இவன் இனி என் கணவன் என பட்டிக்காட்டாய் முடிவெடுத்தாள். இவனை, இவன் உள்ளத்தை தன்னால், தன் உண்மையான அன்பால், தன் இளமை அழகால், கவர்ச்சியால், திருத்த முடியுமென வாதாடினாள். செய்வதறியாத தந்தை இவளையும் கூட்டிக்கொண்டு, ஆண்ட்ரூஷின் பெற்றோரிடம் சென்றார். ஆண்ட்ரூஷின் பெற்றோர்கள் நவீன சோபா ஒன்றில் அமர்ந்து இருந்தனர். சிவத்த பொட்டுடன், சால்வை தோளில் இருக்க மஞ்சள் மேல் சட்டையுடனும், பருத்தி வேட்டியுடனும் , திலோத்தமையுடன் சென்ற திலோத்தமையின் தந்தை, நடந்தவற்றை எடுத்துக் கூறினார். அவர்கள் இருந்து கதைக்கும் படி கூறியும், அவர் இருக்கவில்லை. அவரின் கோபம், ஏக்கம் முகத்தில் பிரதிபலித்தது. ஆண்ட்ரூஷின் பெற்றோர்கள் தங்களுக்குள் கதைத்தபின், ஆண்ட்ரூஷின் குழப்படிகளை மூடி மறைக்காமல், இப்ப யயந்தி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று சொல்லி, தாங்கள் எப்படியும் இருவரையும் ஒன்றாக சேர்ப்பதாகவும், திலோத்தமையை ஏற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினர். அதன் பின் ஆண்ட்ரூஷின் பெற்றோர்களின் ஆலேசனையும் வற்புறுத்தலும், அவளின் அழுகையும் வேண்டுகோளும் சேர, கடுமையான சட்டங்கள் அல்லது கட்டுப்பாடுகளை ஆண்ட்ரூஸ் திலோத்தமைக்கு ஏற்படுத்தி, அதற்கு அவள் சம்மதித்ததும் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் நடந்தது. மேலும் இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் ஆண்ட்ரூஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வைப் பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் அவர்களின் கிராமத்திற்கு வெளியே இருந்ததால், அது, அந்த செய்திகள் அவர்களின் கிராம சமூகத்துக்குள் பரவவும் இல்லை. அதுமட்டும் இல்லை, திருமணத்திற்கு முன்பு அவன் போட்ட கட்டுப்பாடும் மற்றும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் அவள் இருந்ததும் ஓரளவு பிரச்சனைகள் இல்லாமல் குடும்பம் நகர உதவியது. மற்றும் படி அவன் இன்னும் திருந்தாத மனிதனாகவே இருந்தான்! ஆனால், ஆண்ட்ரூஸ், திலோத்தமை குடும்பம் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்ததும், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினான் . இது அவனுக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு இலகுவாக வழிவகுத்தது. அதுமட்டும் அல்ல வெளிநாட்டில் காணப்படும் தாராளமான சுதந்திரமும், திருமணம் செய்யாமலே ஒன்றாக இணைந்து வாழக்கூடிய சூழ்நிலையும், அவன் அந்த நாட்டு மொழியை விரைவாக கற்று தேர்ச்சி பெற்றதும், அவனின் பேச்சு திறனும், அழகான பொய்களும் அவனுக்கு சாதகமாகப் அமைந்தது. அவன் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், திலோத்தமை விடாமல் அவனை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக இன்றும் தொடர்கிறது. "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. "கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள் [The Truth About Christmas!]" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், தொலைவில் உள்ளது. கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் குறிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாக தெரியவில்லை. என்றாலும் கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால், அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை. மேலும் கிறிஸ்மஸ் மரத்தின் [Christmas tree] தோற்றம் பற்றி அல்லது கிருஸ்மஸ் தாத்தா [Santa Claus] பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? நீங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] உங்கள் காலுறைகளைத் [stockings] தொங்க விடுங்கள் என உங்க பெற்றோர்கள் உங்களிடம் கூறி இருக்கலாம்? அடுத்த நாள் நீங்க எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மட்டும் அல்ல நீங்கள் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தையும் பார்த்திருப்பீர்கள். அதன் கீழ் மேலும் பல வர்ண உறையால் சுற்றப்பட்ட பெரிய பரிசு பொருட்களை கண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் கிருஸ்மஸ் தாத்தா இரவில் புகைபோக்கி [chimney] வழியே கீழே வந்து பரிசு தந்தார் என கூறி இருப்பார்கள். நீங்கள் என்றாவது இதைப்பற்றி சிந்தித்து கேள்வி கேட்டீர்களா? நாங்கள் பொதுவாக பழக்க வழக்கங்கள் நிறைந்த உலகில் தான் பிறந்தோம், வாழ்கிறோம். நாங்கள் அவைகளை பொதுவாக சிறுவயதில் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நாம் வளர்ந்த பின்பும், உதாரணமாக மிகச் சிலரே, ஏன், எதற்காக பரம்பரையாக வந்த பழக்கவழக்கங்களை, நாம் பின்பற்றுகிறோம் என்பதை அல்லது ஏன் நம்புகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உண்மையில் அலசுகிறார்கள் அல்லது அறிய முற்படுகிறார்கள். இது எமது சமுதாயத்தின் குறைபாடு என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக நான் பாடசாலையில் பயிலும் பொழுது, எமக்கு சூரிய கிரகணம் சந்திர கிரகணம் பற்றி விளங்கப்படுத்திய ஆசிரியை, அதே கிரகணத்துக்கு விரதம் இருப்பதை கண்டுள்ளேன்? ஏனென்றால், இயல்பாக, அது சரி அல்லது தவறாக இருந்தாலும், நாம், நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன். உண்மையில் கிறிஸ்மஸ் இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுகிறதா ? அவர் டிசம்பர் 25 இல் பிறந்தாரா?, நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்வி இது. பைபிளின் வேதவசனங்கள் இயேசு பிறந்தார் என்ற உண்மையையும் மற்றும் அவருடைய பிறப்பு தீர்க்கதரிசனத்தையும் எவ்வாறு நிறைவேற்றியது என்பதையும் எடுத்து கூறுகிறது. ஆனால் அவர் பிறந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லை. அங்கு அது அமைதியாக உள்ளது. ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சத்துர்னாலியா [சடுர்நலியா / சதுர்னாலியா] எனும் பண்டிகை இத்தாலி முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு குளிர்கால கொண்டாட்டமாகும். இந்த பண்டிகையை [Bacchanalia or Saturnalia] ரோமனியர்கள், கிருஸ்துக்கு [இயேசுக்கு] முன் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே டிசம்பர் 17-25 க்கு இடையில் கொண்டாடினார்கள் என்பது வரலாறு. இந்த காலகட்டத்தில், ரோமானிய நீதிமன்றங்கள் மூடப்பட்டன, வார இறுதி கொண்டாட்டத்தின் போது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அல்லது மக்களை காயப்படுத்தியதற்காக யாரும் தண்டிக்கப் படக்கூடாது என்று ரோமானிய சட்டம் கட்டளையிட்டது. அப்பொழுது களியாட்டங்களும் கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டன. அப்போது பரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவர்களுக்கு பொம்மைகளும் வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது வர்த்தக நடவடிக்கைகள் பின்தள்ளப் பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அனுமதியளிக்கப் பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன. 4 ஆம் நூற்றாண்டில், இந்த சதுர்னாலியா என்ற திருவிழாவை அங்கீகரித்து, சதுர்னாலியா பண்டிகையின் இறுதி நாளான டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்த நாள் என்று அறிவித்து, அதன் மூலம் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிபெற்றனர் என வரலாறு சான்றுபகிர்கிறது. இன்னும் ஒரு குளிர்காலக் கொண்டாட்டமான யூல் பண்டிகையை [Yule Feast] ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி தொடக்கம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இதனால் இங்கும் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் இலகுவாக இருந்தது. என்றாலும் வடக்கு ஐரோப்பா கடைசியாகத் தான் கிறிஸ்தவத்துக்கு மாறியது. ஸ்கென்டினேவிய மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற சொல் கி.பி. 900 முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்ற பொருள் உள்ள சொல்லாகவே பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவின் திருப்பலி (வழிபாடு) [Christ's mass] என்பதன் சுருக்கம் ஆகும். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் , கிறிஸ்துவர்களுக்கு உரியது என்றால், ஏன், மற்ற மதத்தவர்களும் அதை கொண்டாடுகிறார்கள்? உங்களுக்கு அதற்கு விடை தெரியுமா ? ஏன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் பொழுது, பரிசு பொருட்களை தமது குடும்பத்துடன், உறவினருடன் மற்றும் நண்பர்களுடன் பரிமாற்றுகிறார்கள் ? மூன்று ஞானிகளும் [wise men] குழந்தை இயேசுக்கு பரிசுகளை வழங்கினார்கள் என்பதாலா ? நாம் இவைகளைப்பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். கிறிஸ்து [இயேசு], மாரி காலத்தில் கட்டாயம் பிறக்கவில்லை என்பதை மிக இலகுவாக நாம் பரிசுத்த வேதாகமம் லூக்கா அதிகாரம் 2 மூலம் அறிந்து கொள்ளலாம். [Luke 2 / The Birth of Jesus]. உதாரணமாக, அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். மேலும் பைபிளும் தன் சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] மூலமும் மற்றும் எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] மூலமும் இதை உறுதிப் படுத்துகிறது. [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.] ஆகவே, இவ்வற்றில் இருந்து நாம் அறிவது, இயேசு பிறக்கும் பொழுது, மேய்ப்பர்கள் இன்னும் தங்கள் மந்தைகளை வீட்டிற்கு கொண்டு வரவில்லை, எனவே, நாம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று இலகுவாக ஊகிக்கலாம். எனவே கட்டாயம் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை. உங்களுக்கு இந்த உண்மை ஒருவேளை மனவருத்தத்தை தரலாம், என்றாலும் நாம் இதை ஏற்கத்தான் வேண்டும். ஆனால் டிசம்பர் 25 என்று தீர்மானித்தது ஐரோப்பாவில் இலகுவாக பரப்பவும், மற்றும் உலகரீதியாக எல்லோரும் கொண்டாடவும், ஏனென்றால், ஆண்டு முடிவிற்கு ஒரு கிழமைக்கு முன்னால் வருவதால், புது வருட கொண்டாட்டத்துடன் இது கலந்து விடுவதால், மத பேதம் இன்றி கொண்டாடும் ஒரு வாய்ப்பை தானாகவே அது ஏற்படுத்திக்கொண்டது எனலாம். கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சமான 'கிறிஸ்மஸ் மரம்' [Christmas tree] ஒரு பிற்சேர்க்கையே. கிறிஸ்து [இயேசு] பிறப்பதற்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்பே, பண்டிகை காலத்தில், இன்று பைன் [தேவதாருமரம்], தளிர் [ பார்வைக்கு நேர்த்தியாய் உள்ள, ஊசி இலை மர வகைகள்] மற்றும் ஃபிர் [கனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை] மரங்களால் [pine, spruce, and fir trees] அலங்கரிப்பது போல, அன்று பண்டைய கால மக்கள் பசுமையான மர கொப்புகளை [evergreen boughs] தமது கதவு மற்றும் ஜன்னல்களில் சூனியக்காரிகள், பேய்கள், தீய சக்திகள் மற்றும் நோய்களை விரட்ட [keep away witches, ghosts, evil spirits, and illness], குளிர் காலத்தில் தொங்கவிட்டார்கள். அவையின் தொடர்ச்சியாகவே பிற்காலத்தில் கிறிஸ்மஸ் மரம் ஆரம்பித்து இருக்கலாம் என நம்பப் படுகிறது. ஏசுநாதரின் உயிர்ப்பின் அடையாளமாக பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரத்தை பார்க்கப் பட்டதாகவும், பின் கிறிஸ்மஸ் மரத்தை 1500 ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து [இயேசு] பிறப்பு விழாவில் பயன்படுத்தினார் என்றும் அறிகிறோம். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகையின் மற்ற ஒரு முக்கிய அம்சம் சாண்டா கிளாஸ் என்ற கிருஸ்மஸ் தாத்தா ஆகும். இது ஒரு முழுக்க முழுக்க கற்பனை கதாப்பாத்திரமே. நம்ம ஊர் அம்புலி மாமா கதை போன்றது இதுவாகும். துருக்கியின் மீரா நகரில் பிறந்த நிக்கோலஸ் [Saint Nicholas of Myra] என்ற பாதிரியார் வாரி வழங்கும் குணம் படைத்தவர். ஏழைகளுக்கு உதவுவார். குழந்தைகளுக்கு ரகசியமாக பரிசு தருவார். பிற்காலத்தில், நிக்கோலஸ் என்பவரே சாண்டாகிளாஸ் [Santa Claus] என மாற்றப்பட்டார் என வரலாறு கூறுகிறது. கிறிஸ்மஸை கடைபிடியுங்கள் என்றோ அல்லது அப்படியான ஒன்றை ஏசுநாதரின் சீடர்கள் [apostles] கடைப்பிடித்தார்கள் என்றோ பைபிள் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும், கிறிஸ்மஸ் மரம் போன்ற ஒன்றைப்பற்றி சொல்லி இருப்பது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. உதாரணமாக எரேமியா 10:2-6 [Jeremiah 10:2-6,] இல், புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று தொடங்கி .. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; கைவினைஞர் அதை தனது உளி கொண்டு வடிவமைக்கிறார். பின் வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். ... அவைகள் [பனையைப்போல] நெட்டையாய் நிற்கிறது என்று கூறி .. அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யாது, அதேநேரத்தில், , நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று முடிக்கிறது. ஆனால் சிலர் இதை பிழையாக வாசித்து, கிறிஸ்மஸ் மரம் அலங்காரமாக வைப்பதால் ஒரு தீங்கும் இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள், ஆனால் அப்படி இங்கு உண்மையில் சொல்லப்படவில்லை? இங்கு சொல்லப்பட்டது , முன்னைய பழக்க வழக்கமான மரத்தை அலங்கரித்து வீட்டில் வைப்பதால் ஒரு பயனும் இல்லை என்றே ஆகும் . இந்த வசனத்திற்கு அடுத்ததாக, அது " கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது" என்று முடிக்கிறது இதுவே, நான் அறிந்த அளவில், கிறிஸ்மஸ் பற்றிய ஒரு உண்மை வரலாறு! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. "விழித்தெழு தமிழா!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தல் முன்னிட்டு] [ஏப்ரல் 2004 பொதுத் தேர்தலில், தமிழர் கூட்டணி, ஓரு அணியில் ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியாக) வடக்கு மற்றும் கிழக்கில் 22 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது இன்று இது ஒரு தூர கனவாகி, சென்ற 2019 அது 11 ஆக, அரைவாசியாக மாறியதை எனோ இன்னும் அவர்கள் உணரவில்லை? அப்படி என்றால் இந்த 14 நவம்பர் 2024 இல் ??] "உறக்கம் என்பது விழிகள் காணட்டும் உள்ளம் என்றுமே விழித்தே இருக்கட்டும் உயிரற்ற அரசியல் தலைமை ஒழியட்டும் உயர்ந்த ஒற்றுமை நாட்டி உழைக்கட்டும்!" "அடுப்படியிலே அடைந்து கிடந்தது போதும் அழகு வடிவமே வெளியே வாராயோ அன்பு பொழியும் ஆணும் வருவான் அடிமைத்தளை உடைத்த ஒற்றுமை வீரனாய்!" "பெண் இன்றி சமுதாயம் இல்லை ஆண் ஒன்றானால் தாழ்வு இல்லை மண்ணில் நாம் உரிமையுடன் வாழ கண்ணியம் காக்கும் ஒற்றுமைக்கு அழை!" "உந்தன் குரலும் உந்தன் செயல்களும் உனக்கு பெருமை நாளை உணரடி உறங்கிக் கிடைக்கும் ஆண்கள் விழிக்கட்டும் உயர்ந்து ஒங்க தமிழன் எழுச்சிகொள்ளட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.