-
Posts
1085 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"உடற்பயிற்சி..." / தன்முனைக் கவிதை "உடற்பயிற்சி மிகினும் குறையினும் உடம்பு பாதிக்குமே! உள்ளம் சீராகி தெளிவுபெறுவதும் உண்மை நன்மையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?" / பகுதி:01 முதலில் இந்து [ஹிந்து / Hindu] ௭ன்ற சொல்லின் மூலத்தையும் பொருளையும் பார்ப்போம். ஹிந்து / Hindu என்ற சொல் பிழையாக விளங்கப் பட்டு, பிழையாக பாவிக்கப் படுகிறது. பலருக்கு இதன் மூலம் அல்லது தோற்றுவாய் தெரியாது. இன்று இந்தியாவில் இந்து, இந்துத்துவா [இந்துத்துவம் / Hindutva] என்ற பதம் வகுப்புவாத சாயலில் பாவிக்கப் படுகிறது. மற்றவர்களுக்கு இது ஒரு மத அமைப்பை குறிக்கிறது. இந்து என்ற இந்த சொல்லின் மூலம் சமஸ்கிருதத்திலோ அல்லது எந்த இந்தியா மொழியிலியோ காணப்பட வில்லை. ஆனால், உண்மையில் இந்து, இந்தியா இரண்டு சொற்களும் அந்நிய மூலத்தை கொண்டுள்ளது தெரிய வருகிறது. அது மட்டும் அல்ல "இந்து" ஒரு மதத்தை குறிக்கும் சொல்லே இல்லை. இது எந்த ஒரு பண்டைய வேதத்திலும் [Ancient Vedic Scriptures] கூட குறிக்கப் படவும் இல்லை . இந்து [Hindu] எனும் சொற்பதம் முதலில் பாரசீகரால் ['பெர்ஷியன்'/ Persians] சிந்து [Sindu] நதியை குறிப்பதற்கு பாவிக்கப் பட்டது. அவர்களால்,"S" என்ற சொல் சரியாக உச்சரிக்க முடியாமல், "S" க்கு பதிலாக "H" ஆக உச்சரிக்கப் பட்டு அது "இந்து" ["Hindu "] வாக மாறியது என்கிறார்கள் மொழி அறிவியல் வல்லுநர்கள். பாரசீகர்களின் ஆப்பு வடிவ கல்வெட்டும் மற்றும் புனித அவெத்தா [ஜெந்த் அவெஸ்தா / Zend Avesta] வும், "இந்து" என்ற சொல் புவியியல் பெயர் என்றே குறிப்பிடுகிறது, இது ஒரு மதம் சார்ந்த சொல் என்று அது குறிப்பிட வில்லை. கி.மு. 546 ல், ஆசியாவில் ஆழமாக காலுன்றி இருந்த பாரசீக சாம்ராஜ்யம் [பேரரசு] இந்தியா உப கண்ட த்தின் எல்லை வரை நீடிக்கப் பட்டது. மற்றும் பாரசீக மன்னன் டரியஸ் [Darious 1] இன் படையிலும் இந்தியர்கள் பணி யாற்றினார்கள். இந்த மக்களை பாரசீகர்கள் இந்து ["Hindus"] என குறிப் பிட்டதாக வரலாறு கூறுகிறது. அதே போல வேறு சில ஆதாரங்கள் மூலம் கிரேக்கர்கள் இலகுவாக உச்சரிக்கும் பொருட்டு, பேரரசர் அலெக்சாந்தர் [Alexander the Great] சிந்து நதியை இந்து நதி என "S" ஐ தவிர்த்து இந்து [Indus] நதி என குறிப்பிட்ட தாகவும் அறிகிறோம். கி மு 325 இல் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் படை எடுத்த போது, அவருடைய மாசிடோனிய [Macedonian forces] படையினர் இந்து நதிக்கு கிழக்கே உள்ள பிரதேசத்தை, இதனால், இந்தியா என அழைத்தனர். அதற்கு முன்பு, வேத கால பெயர் பாரத் [பாரத/Bharat] ஆகும். ஆகவே, இந்து என்ற மூல [வேர்] சொல், சிந்து என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப் பட்ட ஒன்றே. சிந்து ஒரு பண்டைய நதியின் பெயர். அவ்வளவு தான். மற்றும் படி ஒன்றும் இல்லை. என்றாலும் வேறு ஒரு பார்வையில், இந்து [Hindu] என்ற சொல்லிற்கு வேறு சில பொருளும் உண்டு. உதாரணமாக, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள், ஆரிய சமூகத்தை அவமானப்படுத்தும் பொருட்டு, தரக்குறை வாக அவர்களை குறிக்க இந்த சொல்லை பாவித்தார்கள். 'பெர்ஷியன்' மொழியில் இதற்கு அர்த்தம் என்ன வென்றால், அடிமை [slaves], திருடன் [thief], வழிப்பறிக்காரன் [dacoit], வழிப் போக்கர்களைக் கொள்ளையடிக்க மறைவில் ஒளிந்து தாக்குபவர் [waylayer] ஆகும். மற்றும் வேறு சில கீழ்ப்படிந்த வேலைக்காரன் (obedient servant), கருத்த நிறம் (black colour), கருப்பு (black). என இகழ்கிறது. [a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964,and another dictionary, Urdu-Feroze-ul-Laghat (Part One, p. 615)] உலகில் வாழ்பவர்களுக்கு உருவ வழிபாடு தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்து வருகின்றது. தாம் உருவ வழிபாடு செய்வதில்லை என்று சொல்லிக் கொள்ளு பவர்களும் புறா வடிவிலும், புனிதநூல் வடிவிலும், பிறை வடிவிலும், ஒரு குறித்த கட்டிடத்தின் வடிவிலும் இறைவனை எண்ணுவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது. ஆக, உருவ வழிபாடு மிக அத்தியாவசிய மான, நமது புலன்களை ஒரு முகப்படுத்தி, இறை வனிடம் கொண்டு செல்லும் அம்சமாகவே இருக்கின்றது. உதாரணமாக, அல்வார் நகரத்திற்கு ஒரு முறை சுவாமி விவேகானந்தர் மங்கள் சிங்கை சந்திக்க அவரின் அரண் மனைக்கு சென்றார். அப்பொழுது மங்கள் சிங் ஏளனமாக சிரித்துக் கொண்டு விவேகானந்தரிடம் கூறினார்: "நீங்கள் வழி பாடும் விக்கிரகம் [உருவச்சிலை] ஒன்றும் பெரிதாக இல்லை, அவை வெறும் களி மண், கல், அல்லது உலோகம் மாத்திரமே? நான் நினைக்கிறன், ஆகவே, உங்கள் உருவ வழிபாடு அர்த்தமற்றது என்று?". விவேகானந்தர் அங்கு ஒரு உருவப்படம் [ஓவியம்] சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார். விவேகானந்தர் அந்த ஓவியத்திற்கு கிட்ட போய், அதை சுவரில் இருந்து கீழே எடுக்கும் படி அரமனை தீவானிடம் கேட்டார் . அந்த ஓவியம் மங்கள் சிங்கின் இறந்து போன தந்தை யாருடையது. தீவான் அதை கீழே எடுத்ததும் , அந்த ஓவியத்தின் மேல் துப்பும் படி விவேகானந்தர் கூறினார். இதை கேட்ட அரசன் சீற்றம் கொண்டு: "எந்த தைரியத்துடன், என் தந்தையின் மேல் துப்பும் படி நீ கேட்பாய்" என்று ஆவேசமாக கேட்டார். ஆனால் அமைதியாக, சிரித்த படி, விவேகானந்தர் பதில் அளித்தார்: "உங்கள் தந்தை எங்கே? இது ஒரு வெறும் ஓவியமே? - ஒரு துண்டு காகிதமே, உங்கள் தந்தை இல்லையே?". அரசனின் முன்னைய உருவ சிலை பற்றிய கருத்துக்கு ஒரு விளக்கமாக விவேகானந்தரின் பதில் அமைந்து இருந்தது. எனவே, அரசன், குழப்பத் துடனும் பேச முடியாமலும் அப்படியே இருந்து விட்டார். விவேகானந்தர் அப்பொழுது அரசனிடம் :" மகாராஜா அவர்களே, இது உங்கள் தந்தையின் ஒரு ஓவியம், ஆனால், நீங்கள் அதை பார்க்கும் பொழுது , இது உங்கள் தந்தையை நினைவூட்டு கிறது. இங்கு இந்த ஓவியம் ஒரு சின்னமாகும். அப்படியே, ஒரு இந்து அல்லது சைவ பக்தர் உருவச் சிலையை வழிபடும் பொழுது, அந்த சின்னம் அவர்களுக்கு அவர்களின் அன்பு தெய்வத்தை நினை வூட்டுவதுடன், அவர்கள் அந்த தெய்வம் உருவச் சிலையில் இருப்பதாக உணர்கிறார்கள்." என்று விளக்கினார். இதனாலேயே ஆலயங்கள் நிறுவப்பட்டு ள்ளன . அவை பண்பாடு, கலைகள், வேதாகமம், வேதாந்தம், இலக்கியம், மொழி என்பவற்றை எல்லாம் வளர்க்கும் உன்னத நிலையங் களாகவும் விளங்கி வருகின்றன. எப்படி, கட்டிட கலைக்கு இளங்கலை அறிவியல் (பொறியியல்) (BSc.Eng), மருத்துவத்திற்கு மருத்துவத்துறையின் இளநிலைப் பட்டமான எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு (M.B.B.S),கலைகளுக்கு இளநிலைப் பட்டமான நுண்கலை பட்டப்படிப்பு (B.A,fine arts) என்று ஒவ்வொரு அறிவியல் பாடங்கள் இருக்கின்றதோ அது போலவே, திருக்கோவில் வழிபாட்டுக்கு என்று ஒரு அறிவியல் உள்ளது. அதுவே ‘ஆகமம்’ ஆகும். சைவ மதம் ஆகம நெறியிலான செயற்பாடுகளை உடைய சமயம். இங்கு ஆகமத்தின்’ வேர்ச் சொற்கள் ‘‘தொன்று தொட்டு வந்தது’’ என்பதாகும். ஆகமம் என்பதற்கு மெய்யுணர்ந்தோர் கூற்று - என்றும் பொருள் உள்ளது; வேதச் சடங் குகளும், ஆகமச் சடங்குகளும் ஒன்றுக் கொன்று போட் டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோ டொன்று இணைந்து விட்ட நிலையில், அவை வேறு பட்டவை என்பது இன்று மறந்துவிட்டது. சடங்குகளைப் பொருத்த வரை வேதச் (வைதீக) சடங்குகள் அக்கினிச் [தீ] சடங்குகள் . ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண்டாக்கி அக்கினி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருள்கள் தெய்வங் களுக்குச் செல்வதாக இங்கு கருதப் படுகிறது. ஆகம வழி பாட்டில், அக்கினிக்கு வேலை இல்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டுப் பொருள்களைப் படைத் துக் காட்டி விட்டு எடுத்து விடலாம். மேலும் வழிபடுபவன் தான் படைத்த பொருள்களைத் தானே உண்ணலாம், பயன் படுத்தலாம், ஆகம வழிபாட்டில் பெரும் பங்கு வகிப்பது, வழிபடும் கடவுளின் பெயர் களைச் சொல்லி நான் வணங்கு கிறேன் என்று சொல்வது தான். வேதச் சடங்கு என்பது பொருள்களை நெருப் பில் போட்டு கடவுள்களுக்கு அனுப்பு வது; ஆகவே, ஆகம வழிபாடு உப சாரமே - அதாவது நீராட்டி, அலங் கரித்து, புனித உணவு படைத்தலே யாகும் - விருந்தின ராக வந்த ஒரு மனிதனுக்குச் செய்வது போல. அது மட்டும் அல்ல, ஆகம வழிபாட்டில் மந்திர சடங்கு களுக்கு இடம் இல்லை. பிற்காலத் தில் வைதீக - ஆகம நெறிகளுக்கு இடைப் பட்ட ஒரு வழிமுறை உருவாக்கி யாகங்களில் உயிருள்ள ஆடு, மாடு களுக்குப் பதிலாக மாவால் செய்த ‘பிஷ்டபசுக்கள்’ [பிஷ்டம் -- மா] பயன்படுத்தப்பட லாயின. சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப் [Dr.Pope] "சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்தி ற்கு முற்பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறியுள்ளார். தமிழர்களின் படிப் படியான சிந்தனையின் வளர்ச்சியால் மட்டுமே சைவ சித்தாந்தம் உருவானதாக எமக்கு தோன்றுகிறது. ஆகம கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட இந்த சமய நெறி, அதன் கட்டமைப்பாலும் அதன் சிந்தனை யாலும், நான்கு வேதங்களின் சிந்தனை களாலும் அதன் நடைமுறைகளாலும் கட்டமைக்கப் பட்ட சமய நெறியில் இருந்து இயல்பாகவே முற்றிலும் வேறு பட்டது. ஆகவே இந்த இரண்டும் கட்டாயம் ஒரே தேசிய இனத்திற்கு உரியது என கருத முடியாது. பிந்தியது ஆரியருக்கு உரித்தேனின், முந்தியது திராவிட குழுவினருக்கு உரியது ஆகும். திராவிட குழுக்களிலும் தமிழரே, வேத காலத்திற்கு முன்னமே நாகரிகம் அடைந்தவர்கள் ஆவார்கள். ஆகவே தமிழரே சைவ ஆகமத்தை ஏற்படுத்தியவர்கள் என்பது சரியான காரணத்துடன் எடுத்த அநுமானம் ஆகும். எனவே, சைவ சித்தாந்தம் தமிழருடையதே என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் இது காட்டுகிறது . எடுத்ததற்க் கெல்லாம் "சைவமும் தமிழும். சைவமும் தமிழும்" என்று நம்மவர்கள் கூறுவதும் இதனால் போலும். ஆகவே பண்டைய தமிழ் இலக்கியம், பெருந்திரளானவை சைவ சித்தாந்தத்தை அடிப்படை யாக கொண்டவையாக இருக்கலாம் என யாரும் எதிர்பார்க்கலாம். ஆனால் இது ஏமாற்றத்தையே கொடுக்கிறது. தமிழரின் இந்த வரலாற்று காலத்தில் அல்லது சங்க இலக்கிய காலத்தில், பண்டைய தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த கற்றறிவாளர்கள், தத்துவ மற்றும் மத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத தமிழை தேர்ந்தெடுக்க வில்லை. கி பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே , தமிழ் நாட்டில் அன்று நிலவிய சமூக எழுச்சி மற்றும் மத கொந்தளிப்பு காரணமாக, மெய்கண்ட தேவர் என்பவர், முன்னைய அனைத்து மரபுகளை யும் தாண்டி, சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த சாத்திரத்தை தமிழில் தந்தார். அதற்கு முன், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் ஆகிய இரு சிறு படைப்புகளை தவிர மற்ற எல்லா தத்துவ மற்றும் சமய நூல்கள் சமஸ்கிரத மொழியிலேயே எழுதப்பட்டன. அன்று இப்படி சமஸ்கிரதத்தில் எழுதுவது ஒரு நாகரிகமாக தமிழர் மத்தியில் இருந்தது. இவை களுடன்,இன்னும் ஒரு இலக்கியம் பக்தி பாடல்களை கொண்டவையாக, ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து வரத்தொடங்கின. இதில் பத்தாவது திருமுறையான திருமூலரின் திருமந்திரம் சிறப்பு கவனத்திற்கு உரியது ஆகும். இது மிக உயர்ந்த கருத்துக்களும், மறை பொருட்களும் கொண்ட, ஒரு சைவ ஆகமம் நூல் என்றும் போற்றப்படுகிறது. இங்கு தான், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது என்று கருதப் படுகின்றது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்று முழங்கிய திரு மூலர், முதல் முதலில் தனது செய்யுள் வரி-1421 யில், சைவ சித்தாந்தம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார். "கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம், முற்பத ஞான முறை முறை நண்ணியே, சொற்பத மேவித் துரிசற்று மேலான,தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே." என்று அந்த திரு மந்திரம் கூறுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:02 தொடரும்.
-
குறள்மொழி இன்பம் / ★யாம்◆ வேண்டும்◆ கௌவை★ / குறள் 1150 "வம்பு பேசும் என் ஊரே வசனம் அறிந்து அளவாய் பேசு வண்டுகள் மொய்க்கும் மலர் நானல்ல வசவி ஆக என்னை நினைக்காதே!" "வட்டம் போட்டு குந்தி இருந்து வஞ்சம் இன்றி கதை பரப்பி வதுகை ஆக என்னை மாற்ற வரிந்து கட்டிய அலருக்கு நன்றி!" "வயல் வெளியில் என்னை சந்திக்க வனப்பு மிக்க என் காதலன் வருவான் என்னை துணை ஆக்க வருந்த வேண்டாம் வாழ்த்துங்கள் அப்பொழுது!" "வளமான வாழ்வு எமக்கு அமைய வரைவு கொள்ளலே நலம் என்று வங்கணத்தி எமக்கு ஆதரவு தர வழி காட்டிய பழிச்சொல் வாழ்க!" "வரைவின் மகளிர் நான் அல்ல வருணன் அருள் எமக்கு உண்டு வந்தனம் கூறி தம்பதியாய் போவோம் வயிறு ஆற சாப்பிட்டு போங்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] வசவி - தேவதாசி வதுகை - மனைவி வரைவின் மகளிர் - பொது மகளிர் வரைவு - திருமணம் வங்கணத்தி - உற்ற தோழி
-
"அவளும் அப்படியா?" ஒரு காலத்தில் தமிழ் சமூகத்துடன் செழித்தோங்கிய நகரமான திருகோணமலையின் வளைந்த தெருக்களில் நீண்ட நிழல்களை வீசியபடி சூரியன் வானத்தில் தாழ்ந்தது. இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தளமும் ஆகும். மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில் [40,41], மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார் என்றும் அவை: கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை- விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கட்டாயமாக கோணேஸ்வரமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அப்படியான சிவ ஆலயம் ஒன்று அங்கு செல்வாக்குடன் இருந்தது எனறால், அதைச் சுற்றி பெருமளவு சைவத் தமிழர்கள் கட்டாயம் அன்றே அங்கு இருந்திருப்பார்கள். அப்படியான திருகோணமலையில், இன்று பல தசாப்த கால மோதல்கள் நிலத்திலும் அதன் மக்களிலும் வடுக்களை ஏற்படுத்தியது. தரணி குடும்பத்திற்கு, தமிழ் சமூகத்தில் உள்ள பலரைப் போலவே, அமைதியான திருகோணமலை பற்றிய அவர்களின் நினைவுகள் கசப்பானவை, ஏனெனில் நகரம் ஒரு காலத்தில் அவர்களுடையதாக இருந்தது - 1827 இல் 82% மக்கள் தமிழர்களாக இருந்தனர். ஆனால் 1946 வாக்கில், அந்த எண்ணிக்கை 44.5% ஆகக் குறைந்தது. இன்று அது வெறும் 32% அல்லது அதிலும் குறைவாக ஆக இருக்கிறது, 1827ல் வெறும் 1.3% ஆக இருந்த சிங்கள மக்கள் தொகை இப்போது கிட்டத்தட்ட 27% ஆக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை வீதங்கள் வேகமாக மாறிக் கொண்டிருந்தன, தமிழர்கள் ஒரு காலத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் இன்று பெரும்பான்மையாக இல்லை. தூரத்தில் உள்ள கடலைப் பார்த்துக் கொண்டு தோட்டத்தில் நின்றாள் தரணி. அவளது தாத்தா கந்தையா தாழ்வாரத்தில் அமர்ந்து, மறுநாள் வேலைக்காக மீன்பிடி வலைகளை திருத்திக் கொண்டிருந்தார். அவளது அப்பா சுரேஷ், தன் அப்பா போலவே அவரது கண் முன்னே நிலம் பறிப்படுவதையும் கட்டாய குடியேற்றம் நடைபெறுவதையும் அதன் தாக்கங்களையும் நேராக அனுபவித்தவர். "திருகோணமலை முன்பு போல் இல்லை," அவர் முணுமுணுத்தார், அவரது கைகள் தந்தைக்கு உதவி செய்து கொண்டு சுறுசுறுப்பாக இருந்தாலும், அவரது மனம் பின்னோக்கிச் சென்றது. "1827 இல் 16.9% மட்டுமே இருந்த முஸ்லிம்கள், இப்போது 41.9% ஆகப் பெரிய குழுவாக உள்ளனர். ஆனால், நாங்கள் தேய்ந்து தேய்ந்து கொண்டு போகிறோம். விரைவில், சிங்களவர்களும் எங்களை விட அதிகமாகி விடுவார்கள். பல்வேறு அரச அதிகாரிகளால் பொய்யான காரணங்களுடன் திணிக்கப்படும் அரச ஆதரவுடனான கட்டாயக் குடியேற்றங்களை, அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்களும் தமிழ் மக்களுடன் ஒன்று சேர்ந்து தமது பாரம்பரியமான தமிழ் பேசும் நிலத்தை காப்பாற்றத் தவறியது ஏன் ?" என சிந்தித்தான். தரணி இதற்கு முன் பலமுறை தமிழரின் இருப்பைப்பற்றி கேட்டிருந்தாள். தந்தையின் குரலில் சோகமும் கோபமும் கலந்திருந்தது. இந்த இனக்குழுக்களின் எண்கள் அவருக்கு வெறும் புள்ளிவிவரங்களை விட அதிகமாக இருந்தன - அவை இழப்பு, இடம்பெயர்வு மற்றும் இந்த பண்டைய நிலத்தில் அவர்களின் அடையாளத்தை மெதுவாக அழிக்கும் சின்னங்களாக இருந்தன. "நாம் அருகருகே வாழ முடியாதா?" தரணி மீண்டும் வேறுவிதமாக மாற்றிக் கேட்டாள், அவள் குரல் மென்மையாக இருந்தாலும் ஆர்வத்தால் நிறைந்தது. "காணிகளை கட்டாயமாக பறித்தலை, கட்டாய குடியேற்றங்களை நிறுத்தி, அனைவரையும் எல்லா சமயத்தையும் சமமாக மதித்து, தொல்பொருள் ஆய்வுகள் முறையாக கையாண்டால், கல்வி, வேலை வாய்ப்புகளை திறமையின் அடிப்படையில் உள்வங்கினால், கட்டாயம் நிலைமை மாறக்கூடும். இனவாத அரசும் இனவாதம் பேசும் மத குருமார்களே இவை எல்லாவற்றுக்கும் காரணம். ஆனால் சாதாரண மக்கள், யாராக இருந்தாலும் நல்லவர்களே!, " அவளின் தாத்தாவின் குரல் பதில் கொடுத்தது. சுரேஷ் முகத்தைச் சுளித்துக்கொண்டு வேலையிலிருந்து நிமிர்ந்து பார்த்தான். "நீ இளம்பெண் தரணி உனக்கு இப்ப தான் 16 வயது. உனக்குப் புரியவில்லை. மோசமானதை நீ பார்க்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவரையொருவர் தாக்கிய காலங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். அதை நீ எளிதில் மறந்துவிடாதே." என்றார் அவளின் அப்பா. தரணி அமைதியாக இருந்தாள், ஆனால் அவள் இதயம் நிலைபெறவில்லை. தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தெருக்களில் ஒன்றாக விளையாடுவதை அவள் பார்த்துள்ளாள். நிச்சயமாக, எல்லோரும் கடந்த கால வெறுப்பை சுமக்கவில்லை. என்றாலும் அவர்களால் புதிதாக ஆரம்பிக்க நம்பிக்கை வரவில்லை? அந்த தருணத்தில், காலடிச் சத்தம் கேட்டு, அது தரணியின் எண்ணங்களில் குறுக்கிட்டன. சமீபத்தில் அவளின் அயலில் குடியேறிய சிங்கள இளம் பெண் சந்துனி [sanduni] அவர்கள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவள் ஒரு கூடை காய்கறிகளை சுமந்துகொண்டு 'பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத் தொடிக் கை மகடூஉ' என யானையின் துதிக்கை போலத் தொங்கும் சடையினை பின்னிப் பின்புறம் தொங்க விட்டுக்கொண்டு, அது காற்றில் அசைந்து ஆட அவள் ஒரு சிறு புன்னகையுடன் நடந்து வந்தாள். "ஹலோ" என்று சந்துனி தமிழில் "என் அம்மா உங்கள் குடும்பத்திற்காக இதை அனுப்பினார்." என்று பேச, உச்சரிப்பு கொஞ்சம் வேறுபட்டு இருந்தாலும், அதை விளங்கிக் கொண்ட தரணி ஆச்சரியமாக கண் சிமிட்டினாள். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. உள்நாட்டுப் போருக்குப் பின்னர், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சில சிங்களக் குடும்பங்கள் அரசினால் குடியேற்றப்பட்டிருந்ததால், இரு தரப்பிலும் ஒரு நீடித்த சந்தேகம் ஒருவருக்கொருவர் இருந்தது. தரணி பதில் சொல்வதற்குள் அவள் அம்மா மீனா வாசலில் தோன்றினாள். அவள் ஏப்ரனில் [உடுப்பு அழுக்காகாமல் முன்புறம் கட்டும் துணியில் / apron] கைகளைத் துடைத்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்தாள். “நன்றி” என்று தமிழில் சொல்லி கூடையை அவளிடம் இருந்து வாங்கினாள். ஆனால் சந்துனி கிளம்பத் திரும்பியவுடன் மீனா கூடையை சமையல் அறை மேசையில் வைத்தாள், ஆனால் அதை அப்படியே விட்டு விட்டாள். தரணியால் தாயின் பதற்றத்தை உணர முடிந்தது. தன் புருவங்கள் சுருங்கி."ஏன் அம்மா ஏற்கவில்லை?" என்று கேட்டாள். தரணி திரும்பி பார்த்தாள், எல்லோருமே - தாத்தா, அம்மம்மா, அப்பா, அம்மா - கையை முகவாயில் அல்லது கன்னத்தில் வைத்தபடி எதோ யோசனையில் இருந்தனர். மற்ற மூவரும் அமைதியில் இருக்க, மீனா பெருமூச்சு விட்டாள். "இது காய்கறிகளைப் பற்றியது அல்ல. அவர்கள் சிங்களவர்கள், தரணி. அவர்களின் இதயங்களில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. இவ்வளவு நடந்த பிறகும், நாம் அவர்களை நம்பலாமா?" என்று கேட்டாள். "இன்று எம் அயலுக்கே குடிபெயர்ந்து விட்டார்கள், கட்டாயம் ஒரு புத்தர் வருவார், பின் விகாரை வரும், அதன் பின் ... ? அது தான் எம் பயமும் ஏக்கமும், மற்றும் படி தனிப்பட்ட சந்துனி அல்லது மரக்கறி அல்ல" என்று விளக்கம் கொடுத்தாள். "ஆனால், அம்மா, சந்துனி போரில் பங்கேற்கவில்லை. அவள் என் வயது," தரணி நியாயப்படுத்தினாள். "அவள் அன்பாக இருக்க முயற்சிக்கிறாள் என்றே எனக்குத் தோன்றுகிறது, இப்ப புது கொள்கையுடன் புது ஜனாதிபதி, மாற்றத்திற்கான பொதுத் தேர்தலும் வருகிறது. இளைஞர்களில் மாற்றம் ஓரளவு தெரிகிறது." என்றாள். சுரேஷ் சிணுங்கினான், அவன் குரல் கடுமையாக இருந்தது. "அது அவ்வளவு எளிதல்ல. சுற்றிப் பாருங்கள். தமிழர்களாகிய நாம் இங்கு, எங்கள் சொந்த நிலத்தில் பெரும்பான்மையாக இருந்தோம். இப்போது, நாம் சுருங்கி வருகிறோம். சிங்களவர்கள் கைப்பற்றுகிறார்கள், மேலும் சில காய்கறிகள் அதை மாற்றும் என்று நினைக்கிறீர்களா?" தன் அப்பா வலியிலும் பயத்திலும் பேசுவது தரணிக்குத் தெரிந்தது. அம்மம்மா தாத்தா இருவரும் கூட அப்படியே குந்தில் இருந்தனர். திருகோணமலையில் தமிழ் சமூகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, இடம்பெயர்ந்து, பலவீனப்படுத்தப்பட்டது. தமிழ் சனத்தொகை குறையும் எண்கள் ஒரு வேதனையான கதையைச் சொன்னது - ஒரு காலத்தில் தமிழ் நிலம் அவர்களின் கைகளில் இருந்து மெதுவாக நழுவியது. ஆனால், கடந்த காலம் கனமானதாக இருந்தாலும், எதிர்காலம் வேறுவிதமாக இருக்குமா என்று ஆழ்மனதில் தரணி யோசித்தாள். அன்று மாலை தரணி வெளியே ஒரு படிக்கட்டில் அமர்ந்ததும் சந்துனியை மீண்டும் பார்த்தாள். அந்த நேரத்தில், அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற இளம் இளைஞன், இளைஞிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கே தமிழ் மற்றும் சிங்கள குழந்தைகள் இருவரும் சிரித்துக் கொண்டே ஓடினர், அவர்களின் கவலையற்ற முகம் தங்கள் பெற்றோரை வருத்தும் வரலாற்றை மறந்துவிட்டன. அவர்களைப் பார்த்ததும் தரணிக்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஒரு வேளை சந்துனி தன் மக்களுக்கு எதிராகப் போராடியவர்களைப் போல் "அதே மாதிரி" இல்லை. அது "அவளும் அப்படியா?" என்று கேட்டால், ஒரு வேளை அவள் வித்தியாசமாக இருந்திருக்கலாம்? கடந்த கால சுமைகளிலிருந்து விடுபட்டு, ஒன்றாக வாழ்வதற்கான ஒரு புதிய வழியை உருவாக்க விரும்பிய ஒரு இளம் பெண் போல் இருந்தது. மறுநாள் காலை, தன் உள்ளுணர்வைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்த தரணி, மேசையில் கை வைக்காமல் கிடந்த காய்கறிக் கூடையை எடுத்தாள். அவள் இதயம் நரம்புகளால் துடிக்க, பக்கத்து வீட்டு சந்துனியின் வீட்டிற்கு நடந்தாள். சந்துனி கதவைத் தட்டியதும் அவளைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள். தரணி சிரித்துக் கொண்டே கூடையை நீட்டினாள். "காய்கறிகளுக்கு நன்றி. நாம் ஒன்றாக இதை ஏதாவது கறியாக சமைக்கலாம் என்று நினைத்தேன்?" என்றாள். ஒரு கணம், சந்துனியின் முகம் பிரகாசித்தது, அவள் கண்கள் அன்பின் சூட்டில் பிரகாசித்தன. "நான் அதை விரும்புகிறேன்!" என்று அவளை கட்டிப்பிடித்து வீட்டுக்குள் அன்பாக அழைத்தாள். அறைக்குள் தையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சந்துனியின் தாயும், கணணியுடன் இருந்த அவளின் அண்ணாவும் வெளியே வந்து தரணியை வரவேற்றனர். இது சாதாரண சிங்கள மக்களின் இயல்பு, அரசியல் காட்டுவதை விட வேறுபாடாக இருப்பதைக் அவள் கண்டாள். அவளின் தாத்தாவின் அன்றைய குரல் அவள் இதயத்தில் ஒலித்தது. தரணி வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது, அவள் தோள்களில் இருந்து எடை தூக்கப்பட்டதை உணர்ந்தாள். "அவளும் அப்படியா?" என்ற கேள்விக்கு விடையும் கண்டாள். அவளுடைய தாத்தாவும் அம்மம்மாவும் அப்பாவும் அம்மாவும் கடந்த காலத்தில் பல சிக்கல்களை கண்டவர்கள். கடுமையாக அனுபவித்தவர்கள், ஆனால் எதிர்காலம் எங்காவது தொடங்கியே ஆகவேண்டும் என்று அவளுக்குத் தெரியும். ஒருவேளை இது போன்ற நம்பிக்கையின் சிறிய செயல்களுடன் அது தொடங்கலாம் என முணுமுணுத்துக்கொண்டு வீடு போனாள். அன்று மாலை, தரணியின் தந்தையும் தாத்தாவும் மீன்பிடித்துவிட்டு திரும்பியபோது, மீண்டும் இருவரிடமும் பேசினாள். "அப்பா, நம்மால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால், ஒருவேளை, சந்துனி போன்றவர்களுக்கும் வேறு ஏதாவது தேவைப்படலாம். சுதந்திரத்துக்கு முன்பு நாம் தமிழர்களும் சிங்களவர்களும் இங்கு ஒன்றாக வாழ்ந்தோம். ஒருவேளை மீண்டும் முடியும்." என்று கூறினாள். முகம் கலங்கியிருந்தாலும் சுரேஷின் கண்கள் மென்மையாகிவிட்டன. "மன்னிப்பது எளிதல்ல, தரணி." இன்னும் இறுதி போரின் மனித உரிமை மீறல்கள் ஏற்கப்படவும் இல்லை, மன்னிப்பு கேட்கவும் இல்லை, வலிந்து காணாமல் போனோருக்கு எந்த நீதியும் வழங்கப்படவில்லை, இன்னும் காணி பறிப்பு தொடர்கிறது. இதற்கு மேல் என்னத்தை சொல்ல ?" தன் மகளை உற்றுப்பார்த்து கேட்டார். "எனக்குத் தெரியும், அப்பா," அவள் பதிலளித்தாள், "ஆனால் நாம் மாற்றத்தை சிறு துளியாக காணும் பொழுது, அதை பெரிய துளியாக்க முயன்றால் அதில் தவறு இல்லைதானே" என்றாள் ஆனால் சுரேஷ் பதில் சொல்லவில்லை, ஆனால் தன் வார்த்தைகள் அப்பாவுக்குள் ஏதோ ஆழத்தை தொட்டது என்று தரணியால் சொல்ல முடிந்தது. போரின் காயங்கள் எளிதில் ஆறாது, அது அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் திருகோணமலை போன்ற பண்டைய நகரத்தில், ஏன் அது முதலில் ஆரம்பிக்கக் கூடாது என்று அவள் தனக்குள் யோசித்தாள். அன்று இரவு உறக்கம் கலைந்தபோது, சந்துனி வந்ததில் இருந்து தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருந்த கேள்வியை தரணி நினைத்துப் பார்த்தாள்: "அவளும் அப்படியா?" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 35 முடிவுரை [ தொடர்கிறது] 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப் படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப் படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்" [Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் மூதாதையர் வழி L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி, 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள்.இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது. அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன, இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம். இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது. இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன. இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு பிறந்தது. மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது. அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம் அளவிலேயே காணப்படுகிறது. இது இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர், அங்கு ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கை துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி, அல்லது கொலைசெய்து, அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் விந்திய மலைத் தொடரின் தெற்கில் வாழ்ந்த இந்த முந்திய திராவிட குழு, முதனிலைத் திராவிடர் குழுவின் பேச்சை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது. ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது. அதே போல, சிந்து நதியும் தார் பாலைவனமும் மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது. அரக்கன் மலைத் தொடர்கள் இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நீண்ட காலத் தனிமை, நாளடைவில், தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம். ஒவ்வொரு மனித குழுவினதும் வரலாறு அவர்கள் எங்காவது ஓரிடத்தில் இருந்து ஒரு கால கட்டத்தில் வந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. அத்துடன் ஒவ்வொரு இனமும் தமக்கே உரித்தான தனித்துவமானஅடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. கலை, கலாச்சாரம், பண்பாடு இவை யாவற்றிற்கும் மேலாக மொழி என்பது ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஆனால் சிலவேளை ஒரு இன குழு தாம் சேர்ந்த மற்றும் ஒரு மேலாதிக்க மக்கள் குழு ஒன்றின் மொழியை பேச முயலலாம். அது கால போக்கில் தமது மொழியை மறக்க ஏதுவாகலாம். அப்படி அவர்கள் வேற்று மொழியை பேசினாலும், இன்னும் தாம் ஒரு தனி இனம் என்றே நம்புகிறார்கள். இதனால் இப்ப உலகில் 10,500 இனக்குழுக்கள் இருப்பினும் ஆக 6700 மொழிகள் மாத்திரமே உண்டு. ஒவ்வொரு முறையும் ஒரு மனித கூட்டம் இடம் பெயரும் போது, அங்கு முன்னமே வாழ்ந்து கொண்டு இருக்கின்ற குடிமக்களுடன் திருமணம் செய்து கொள்வதும் அதே நேரத்தில் அவைகளுக்கு இடையில் முரண்பாடு நிகழ்வதும் வழமை என வரலாறு காட்டுகிறது. இதனால் வெற்றி கொண்டவர்கள் சண்டையால் மேலாதிக்கம் கொள்வதும் பின் நாளடைவில் பெருபாலான வேளைகளில் ஒற்றுமையாகி ஒன்றாவதும் உண்டு. இதனால் படிப்படியாக பழங்குடியினரும் புது குடியினரும் ஒரு குடியினராக மாறுகின்றனர். இப்படித்தான் மரபுக் காட்டி எம் இருபதும்[M 20] எம் நூற்றி முப்பதும்[M 130] ஒன்றாகி இன்றைய திராவிட இனம் தோன்றியது எனலாம். ஆஃப்ரிக்காவில் இருந்து ஆசியாவிற்கும் பின் ஐரோப்பாவிற்குமான இடம் பெயர்வு பல தடவை நடந்தன. மேலும் அவர்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியேயும் வெளியே இருந்து ஆஃப்ரிக்காவிற்கும் அலைந்தனர். இப்படி நூற்றாண்டுகளுக்கும், ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக பலதரப் பட்ட மக்கள் கூட்டம் அங்கும் இங்கும்மாக அலைந்தனர். இன்று ஐரோப்பாவில் வாழும் மக்களும், இன்று ஆஃப்ரிக்காவில் வாழும் மக்களும் ஒரே மாதிரியான மரபணுக்களின் தொகுப்பை வைத்திருக்கமாட்டார்கள். அத்துடன் இருவருமே முந்தைய அல்லது மூல மனிதர்களும் அல்ல. மேலும் இன்று ஆஃப்ரிக்காவில் வாழும் மக்கள் முந்தைய அல்லது மூல மனித குடும்பத்தின் மரபணுக்களின் தொகுப்பை வைத்திருக்க மாட்டார்கள். மக்கள் கூட்டம் மாற்றம் அடைவது போல, மரபணுக்களும் மாற்றம் அடைகின்றன. ஒவ்வொரு தனிப்பட்டவரின் மரபணுக்கள் தனித்துவமானவை. எந்த இரு தனிப்படவர்களின் டிஎன்ஏ வரிசை, அவர்களின் மூதாதையார் உலகின் எந்த ஒரு பகுதியில் இருந்து வந்திருந்தாலும், கிட்டத்தட்ட 99.6 வீதம் ஒரே மாதிரியானவை. இரு தனிப்பட்டவர்களின் தனித்துவமான குறிப்பிட்ட அந்த வித்தியாசங்களில் 10 வீதம் தெரிந்தாலே அவர்கள் எந்த இன க்குழுவை சேர்ந்தவர்கள் என நாம் இன்று கணித்து சொல்ல முடியும். திராவிடன் என்றால் என்ன? இது ஒரு பண்பாடா?, மொழியியல் குடும்பமா? அல்லது ஒரு இனமா? இது எங்கு தோன்றியது? பிறைச் சந்திரன் வடிவில் அமைந்த வளமான நிலத்திலா[Fertile Crescent]? அல்லது தென் இந்தியாவிலா? எப்பொழுது தோன்றியது? 30,000 ஆண்டுகளுக்கு முன்பா, 10,000 ஆண்டுகளுக்கு முன்பா அல்லது 4,000 ஆண்டுகளுக்கு முன்பா? இன்னும் திராவிடர்களின் தோற்றுவாய் ஒரு குழுப்பமான, சிக்கலான ஒன்றாகவே வரலாற்றாசிரியர்களுக்கு இருக்கிறது. இந்தியாவின் பழமையான குடிகளின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என சில அறிஞர்கள் நம்புகிறார்கள். சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் சில அறிஞர்கள் திராவிடர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக இந்தியாவிற்கு வந்தவர்கள் என வாதாடுகின்றனர். பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்தில் இன்று பெருமளவில் புழங்கி வரும் பராஹவி மொழி (பிரஹுயி / Brahui language ] ஒரு திராவிட மொழி என்பதை கவனத்தில் கொள்க. மேலும் கிறிஸ்துவுக்கு முன்பே, தென் இந்தியா திராவிடர்கள் தமக்கு என ஒரு தனித்துவமான பண்பாட்டையும் நாகரிகத்தையும் கொண்டு இருந்ததுடன், அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த அரசையும் கொண்டிருந்தார்கள். சில திராவிட அரசர்கள் செல்வாக்கு மிக்க வெற்றிகரமான வர்த்தகத்தை முதலில் மேற்கு ஆசியாவுடனும் எகிப்துடனும் பின் கிரேக்கம், ரோமனுடனும் வைத்திருந்தார்கள். இப்படி வர்த்தகம் வைத்திருந்தவர்கள் குறிப்பாக,சேர, சோழ, பாண்டிய என்னும் தமிழ் மூவேந்தர்கள் மற்றும் பல்லவ பேரரசுகள் [கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள்], தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள், கலிங்கர் [கலிங்க நாடு. தற்போதைய ஆந்திராவின் வடபகுதியையும், ஒரிசாவின் தென்பகுதியையும் கொண்ட நாடு.], மகாராஷ்டிரா [மராட்டி, இவர்கள் கருநாடகத்தையும் ஆந்திராவையும் உள்ளடக்கி மகாராட்டிரத்தையும் ஆட்சி செய்தனர்.] ஆகும். தமிழ் மன்னன் பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக் காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஆரம்பகால தமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது. அதன் பின்னரே அது மேற்கே எகிப்துக்கும், ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது. இந்தோ ஆரியன் இந்தியாவிற்கு வருவதற்கு முன், திராவிட மொழி இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டதுடன் அதன் ஆதிக்கம் தெற்கிலும் வடக்கிலும் அதிகாரம் செலுத்தியது என கருதுவதற்கு நல்ல ஆதாரங்கள் உண்டு. திராவிட பண்பாடும் முதனிலைத் திராவிட மொழியும் பிறைச் சந்திரன் வடிவில் அமைந்த வளமான நிலத்தின் கிழக்கு பகுதியில் தோன்றியது என்பது எமக்கு கிடைக்கும் சுமேரிய இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன. ஆகவே இது திராவிடரின் ஆரம்ப நாடாக இருக்கலாம் எனவும், திராவிட மொழி அங்கு 10,000 ஆண்டுகளுக்கு முன் பேசியிருக்கலாம் எனவும் விவாதிக்கப்படுகிறது . இந்த கருதுகோள் திராவிடர்கள், ஆரியர்கள் போலவே வெளியில் இருந்து ஆனால் ஆரியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரவேசித்தவர்கள் என சுட்டிக் காட்டுவதுடன், தென் இந்தியா திராவிடர்களின் ஆரம்ப இடம் என்பதை கேள்விக் குறியாக்கிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில், மத்திய ஆசியாவில் இருந்து பின்னர் இந்தியா குடியேறியவர்கள் எப்படி திராவிட மொழியை பின்பற்றினார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மனிதனின் குடியேற்றம் மிகவும் பழமையானது. அவன் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே எல்லா கண்டங்களிலும் வாழத் தொடங்கிவிட்டான். மனிதன் வெவ்வேறு இடங்களில் விலகி வெவ்வேறு சூழ் நிலையில் தனிமை படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நீண்ட காலம் வாழ்ந்தது அவனுக்கு இன அம்சங்களை கொடுத்தது. நான் இந்த தொகுப்பை எல்லாம் சிறந்த அறிஞர்களுக்கும் ஒரு வேண்டு கோளுடன் நிறைவு செய்கின்றேன்.அதாவது இந்த உயர் நோக்கமுள்ள ஆய்வில் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் மகிமையை, பெருஞ்சிறப்பை, புகழை சான்றுகளுடன் ஒருமித்த கருத்துடன் உலகத்திற்கு வெளி கொண்டு வரும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று
-
குறளோடு கவிபாடு / "குறள் 613" "பரந்த இதயத்தில் முயற்சியின் வலுவில் உறுதியான அலையாக சக்தி பிறக்குமே! உலகிற்கு உதவ கொடுக்கும் கையை உன்னத பெருமையாக உலகம் போற்றுமே வசதி செல்வம் மகத்துவம் அல்லவே!" "உழைப்பில் இதயங்கள் என்றும் ஒளிருமே மற்றவர்களையும் உயர்த்த உயரமாக நிற்குமே! அடுத்தவரின் வலியை துடைக்க முயலுமே ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அழுத்தத்திலும் உதவிடும் மகிழ்வே உயர் பண்பாகுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கொரு புதமை" தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருந்தது ஒற்றுமையின்மையே! அதை உணராமல், இன்னும் தொடர்ந்த ஒற்றுமை அற்ற தமிழ் தலைமைக்கு இது ஒரு பாடமாகட்டும்!! ஆனால் இனியாவது திருந்துவார்களா ?? இன்று சமதர்ம சமுதாயம் மலர்வதற்கும் மக்களின் ஒருங்கிணைப்பும் மனங்களின் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவைகள். நாடு நன்னாடாகவும் வளத்தில் பொன்னாடாகவும் திகழ்வதற்கு முழுமுதற்காரணமாக விளங்குபவர்கள் அந்நாட்டு மக்களே ஆவர் இதைத் தான் ஔவையார் "நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்றாள். மலைநாட்டவர், கடல்பகுதியினர், மருதநிலத்தவர், காடுகளில் வாழ்வோர் என்று நான்கு நிலப்பகுதிளில் வாழ்ந்த இனமக்கள் தொழிலால் வேறுபட்டாலும் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்ததாக சங்க இலக்கியம் காட்டுகிறது என்பதை இனியாவது உணர்வார்களா ?? "நாடன் என்கோ? ஊரன் என்கோ? பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ? யாங்ஙனம் மொழிகோ, ஓங்குவாட் கோதையை" [ மலை நாட்டவன் மற்ற மூன்று நிலத்திற்குக் கூட தலைவனாகி பெருமை பெறுகிறான் என்பது இதன் பொருள்] பிற்காலத்தில் பாரதியின் வரிகளில் நம் நாட்டின் இன வழி ஒருமைப்பாட்டை உணர்கிறோம். "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கொரு புதமை" நன்றி
-
அந்தாதிக் கவிதை / “தன்மானம்” "தன்மானம் தழைக்க தற்சார்பு ஓங்கும் ஓங்கிய எண்ணம் மனதில் பதியும் பதிந்த பெருமிதம் துணிவு தரும் தருவது எதையும் தெரிந்து எடுப்போம் எடுத்த கொள்கையில் திடமாய் நிற்போம்!" "நிற்கும் ஒன்றில் வளர்ச்சி இருக்கும் இருக்கும் ஒன்றை பேசுதல் சிறக்கும் சிறக்கும் கருத்து எதிலும் உதவும் உதவும் வாய்ப்புக்கள் தூக்கி ஏற்றிடும் ஏற்றிடும் ஏணியாய் நிற்பதே தன்மானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? *தலைவர்* : நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.! *மக்கள்* : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..? *தலைவர்* : உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை... *மக்கள்* : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..? *தலைவர்* : ஆம்.. *மக்கள்* : நீங்கள் தான் எங்கள் தலைவர். ( தேர்ந்தெடுக்கப்பட்டதின் பிறகு...) மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்.. சிரிக்க மட்டும் ...
-
"விழிகளின் வித்தை" "கீழ் உதடை மெல்லக் கடித்து குறும் சிரிப்பை அள்ளி வீசினாளே! கண் இரண்டும் கொஞ்சம் கூராக்கி காமம் பூசிய அம்பு எய்தினாளே!" "வில் வித்தை தெரிந்து இருந்தும் 'விழிகளின் வித்தை'யில் நான் விழுந்தேனே! கள்ளியை நம்பி உதவிகள் செய்து அள்ளி வீசினேன் காதல் மட்டுமே!" இலங்கையின் நிருவாக, நீதித்துறைத் தலைநகரமும், மக்கள் தொகை அடிப்படையில் இலங்கையின் மிகப் பெரிய நகரமுமான கொழும்பின் பரபரப்பான இதயத்தில், கரையோரக் காற்று இடைவிடாது முட்டி மோதும் கோல் பேஸ் (Galle face) என்று அழைக்கும் காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைந்து உள்ள கொள்ளுப்பிட்டி என்ற வசதியான இடத்தில் அருணி என்ற ஒரு இளம் பெண், ஆடம்பர பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் வசித்துவந்தாள். அவள் புகழ்பெற்ற கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலைப் பட்டதாரியாகும். காலிமுகத்திடலில் இந்திய சமுத்திரத்தின் பக்கமாக மாலை சூரிய அஸ்தமனத்தை கண்கொள்ளாமல் பார்ப்பதற்காகவும் மற்றும் கற்று வாங்கவும் பின்னேரம் பலர் அங்கு கூடுவது வழமை. உடல் அப்பியாசத்துக்காக ஓடுவது, உடற் பயிற்சி செய்வது, காதலர்கள் ஒன்று கூடுவது, மாலையில் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ ஒன்றுகூடுவது, பட்டம் பறக்கவிட்டு, பற்பல விளையாட்டுக்களை விளையாடி, உண்டு, களித்துச் செல்லும் இடம் அதுவாகும். பக்கத்தில் மிக ஆடம்பரமான கோல் பேஸ் ஹோட்டலும் உண்டு. அப்படியான எல்லா வசதிகளும் படைத்த அந்த சூழலில் தான் அவள் தங்கி தன் படிப்பை தொடர்ந்தாள். அருணி, எல்லோராலும் விரும்பத்தக்க உடுக்கை இடையோடு மணல்கடிகாரம் (ஹவர் கிளாஸ்) போல அழகான வடிவம் கொண்டிருந்ததுடன், அவளது தோள்களில் பட்டும் படாமலும் சுருண்டு விழும் கருங்கல் முடியும் மற்றும் கடலின் ஆழம் போல மின்னும் கண்களும், அவள் பாதையைக் கடக்கும் எவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. எல்லோருக்கும் பெரிதாக தெரியாத விடயம் காலிமுகத்திடலை 1803 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலேயர்கள் ஆட்சியின் பொழுது மயானமாகப் பயன்படுத்தத்தியது என்பது, அது பின் 1830 களில் ஒன்றரை மைல் தூரத்துக்கு குதிரையோட்டப் போட்டி நடத்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. அப்போது இதனை கொள்ளுப்பிட்டி குதிரைப் பந்தயத் திடல் Colpetty Race Course என பெயர் பெற்றிருந்தது. இங்கு தான் அருணி பெரும்பாலும் தன் தோற்றத்தையும் கவர்ச்சியையும் 'விழிகளின் வித்தை' யையும் பயன்படுத்தி அவளது சக்திக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ, சிலரை வீழ்த்தி அங்கே புதைத்தாள், சிலரை பயன்படுத்தி செல்வக் குதிரையில் பயணித்தாள். "விடம் என அயில் என அடுவன நடுவன மிளிர்வன சுழல் விழி வித்தைக்குப் பகர் ஒப்புச் சற்று இ(ல்)லை – என்று பேசும் விரகுடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டு உயிர் தட்டுப்பட்டு – உழன்று வாடும்" [திருப்புகழ் 1015] நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற விழிகளின் (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத் தக்க தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய காதலுடன் பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால், அவளிடம் தம்மை இழந்தவர்களோ பலர். அருணியின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க .. பாலில் விழுந்த வண்டு போல கண்கள் துள்ள .. கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க... புருவம் வில்லைப் போல் வளைந்திருக்க ... அந்த அருணியின் கவர்ச்சிக்கு பின்னால் ஒரு கத்தி போன்ற கூர்மையான ஒரு மனம் இருந்தது பலருக்குத் தெரியாது. அது தான் அவளின் அனுகூலமாக இருந்தது. "புடைகொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் இடை கண்டிலம்; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம்; விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்ல மெல்ல மடம் மங்கையராய் என் மனத்தவர் ஆயினாரே." [சீதையின் உருவெளிப்பாடு கண்ட இராவணன் கூறுதல் / 3307] பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும் அல்குலையும், இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை; நஞ்சை அருந்திய கண்களையுடைய இவள் மெதுவாக ஒரு அழகிய இளம் பெண்ணாய் இவள் என் நெஞ்சுக்குள் இடம் பெற்றுக் கொண்டாள் என்று சொல்லாத ஆண்களும் இல்லை. கல்விக் கட்டணம் மற்றும் பகுதி நேர வேலைகளுக்குப் போராடும் தனது சக மாணவர்களைப் போலல்லாமல், அருணி டிசைனர் உடைகளில் வாழ்க்கையை நகர்த்தினாள், மிகவும் விலையுயர்ந்த உணவகங்களுக்கு அடிக்கடி சென்றாள், மேலும் அவளது வயதிற்கு எட்டாதது போல் தோன்றிய ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கினாள். அவளுடைய ரகசியம்? அருணி ஒரு தலைசிறந்த சூழ்ச்சியாளள் என்பதே, செல்வந்தர்களை, சந்தேகத்திற்கு இடமில்லாத இளைஞர்களை நேரடி சந்திப்புகள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் வேட்டையாடினாள். கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும் வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்." [சிலப்பதிகாரம்] உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் உயிர்களை கொல்லுகிறாய் . மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுகிறது பார், இப்படித்தான் யாரோ ஒருவன் அவள் பிடியில் அகப்பட்டு தன்னை இழந்து அவள் இடையை வருடி புலம்பியிருப்பான். ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு பழகிய வார்த்தைகளே! இன்ஸ்டாகிராம் [படவரி / Instagram] மற்றும் ஃபேஸ்புக் [முகநூல் / Facebook] மூலம், தனது கனவு வாழ்க்கையை தொடர்ந்து வாழ, தன்னைப் பற்றி ஒரு மாயையான வெளிப்பாடை படங்களுடன் சித்தரித்தாள். அவள் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சரியாக அமையும் பொழுது, நிதி நெருக்கடிகள், மருத்துவ அவசரநிலைகள் மற்றும் குடும்ப துயரங்கள் பற்றிய கதைகளை திறமையாக வடிவமைத்து, இதன் மூலம் அனுதாபத்தையும், அதை விட முக்கியமாக பணத்தையும் கைக்கொள்ளுவதில் திறமையாக இருந்தாள். அவளுடைய அழகு மற்றும் வசீகரத்தால் கவரப்பட்ட இளைஞர்களிடம் இருந்து பணம், நகைகள், சமீபத்திய கேஜெட்டுகள் [gadgets] என பரிசுகளை பெற்றாள். அருணியின் உத்தி மிக எளிமையானது. ஒரு காதல் தொடர்பை உருவாக்கி, அதன் மூலம் அவனை தன் வலையில் முழுதாக வீழ்த்தி, கறக்கக் கூடியதை கறந்து பின் மெல்ல எதாவது காரணம் ஏற்படுத்தி, சந்தேகம் வராமல் விலகிவிடுவாள். அவசர கொழும்பு நகரில் அருணியின் சுரண்டல்கள் கவனிக்கப்படாமல் போயின. அது அவளுக்கு உறுதுணையாக இருந்து ஆடம்பரமாக வாழ தடை ஒன்றும் இல்லாமல் இருந்தது. ஆனால் எப்போதும் தனது மர்மமான வாழ்வை பராமரிக்க கவனமாக இருந்தாள். ஒரு நாள், அருணி தனது முழு நீள கண்ணாடியின் முன் நின்று, தனது ஒப்பனைக்கு இறுதித் தொடுதல்களை கவனமாகப் பயன்படுத்தினாள். அவளது பிரதிபலிப்பு அவளைப் பார்த்து புன்னகைத்தது, பரிபூரணத்தின் பார்வை. தன் அழகால் எந்த மனிதனையும் தன் காலில் விழ வைக்க முடியும் என்று அவள் அறிந்திருந்தாள். ஆனால் அருணியிடம் வெறும் தோற்றம் மட்டும் இல்லை—அவளுக்கு மக்களைப் படிக்கும் திறன், அவர்கள் விரும்புவதைப் புரிந்துகொள்வது மற்றும் அதைவிட முக்கியமாக, அவர்களை எதாவது பரிசுகள் அவளுக்குக் அடிக்கடி கொடுக்க செய்யும் திறன் எல்லாவற்றையும் தாராளமாக கொண்டிருந்தாள். மதிப்புமிக்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலைப் பட்டதாரியாக இருந்தது, அவளது இந்த வாழ்க்கையை மறைக்க எதுவாகவும் இருந்தது. அவளை பார்ப்பவர்கள், அவளை ஒரு புத்திசாலி, நம்பிக்கைக்குரிய எதிர்காலத்துடன் உந்தப்பட்ட இளம் பெண் இப்படித்தான் எடை போட்டார்கள், ஆனால் திரைக்குப் பின்னால், அருணி ஒரு வித்தியாசமான சாம்ராஜ்யத்தை - ஏமாற்றும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினாள். அவளுடைய உண்மையான செல்வம் கடின உழைப்பு அல்லது குடும்ப அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல, ஆனால் அவள் திறமையாக கவர்ந்திழுத்த மற்றும் கையாளப்பட்ட இளைஞர்களின் பைகளில் இருந்து வந்தது தான்! அருணியின் இந்த ஆட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே, பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தொடங்கியது. செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பணக்கார சட்டக்கல்லூரி மாணவன், லலித் உடன் அவளின் முதல் தொடர்பு ஏற்பட்டது. அவள் அவனை ஒரு பல்கலைக்கழக நிகழ்வில் சந்தித்தாள், லலித்தின் விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் ஆடம்பர கார், அருணியை அவனை தேர்ந்தெடுத்து அணுக்கவைத்தது. அங்கு அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் ரசித்தன. அதை கச்சிதமாக சரியாக கையாண்டாள். அவர்களின் "உறவு" தொடங்கிய சில வாரங்களில், அருணி தனது நிதி நெருக்கடிகளை பட்டும் படாமலும் குறிப்பிட்டாள். தெற்கில் ஒரு கிராமத்தில் உள்ள தனது குடும்பம் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது தவிக்கிறது என்றும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும் லலித் இடம் கூறினாள். தனது காதலை நிரூபிக்க ஆசைப்பட்ட லலித், உடனடியாக உதவ முன்வந்தான். முதலில், இது சிறிய தொகையாக இருந்தது - கல்வியை ஈடுகட்ட போதுமானது. ஆனால் விரைவில், அருணி மேலும் பலவற்றைக் கேட்கத் தொடங்கினாள். புதிய புத்தகங்கள், ஒரு மடிக்கணினி மற்றும் இறுதியில், "தனது குடும்ப வீட்டை கடனில் இருந்து காப்பாற்றவென ஒரு பெரிய தொகையையும் பெற்றாள். காதலால் கட்டுண்ட லலித், அவள் கேட்டதை எல்லாம் கொடுத்தான். அவள் அவனை பொருளாதார ரீதியாக வடிகட்டியதும், அருணி மெதுவாக தன்னை, சில காரணங்களை கவலையாக கண்ணீருடன் கூறி அவனிடம் இருந்து விலக்கிக்கொண்டாள். என்ன நடந்தது என்பதை லலித் உணர்ந்து கொள்வதற்குள், அருணி தனது அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தாள். அவளுடைய அடுத்த பலி இன்னும் எளிதாக இருந்தது. சஞ்சய், ஒரு தொழில்நுட்ப தொழிலதிபர். சமூக ஊடகங்கள் மூலம் அவளை ஆன்லைனில் கண்டுபிடித்தான். அருணி தனது இன்ஸ்டாகிராமைக் கச்சிதமாகத் தொகுக்கக் கற்றுக்கொண்டாள் — உயர்தர சிற்றுண்டிச்சாலைகளில், மடிக்கணினியைத் திறந்து வைத்துக் கொண்டு படிப்பது, சூரிய அஸ்தமனத்தில் கடற்கரையோரம் நடப்பது போன்ற தனது படங்களை கச்சிதமாக பதித்து, தனது உண்மையான கஷ்டமான வாழ்வை மறைத்து, ஆடம்பரமான நேர்த்தியான ஒரு பொய்யான வாழ்க்கையை அவள் சித்தரித்தாள், அதன் மூலம் சஞ்சய் போன்ற ஆண்களை அவள் கவர்ந்தாள். அவர்களின் ஆன்லைன் உரையாடல்கள் விரைவாக உல்லாசமாக மாறியது, அருணி அவனது புத்திசாலித்தனத்தையும் வெற்றியையும் பாராட்டினாள். சஞ்சய், தனது மேல் உள்ள அவளது கவனத்தால் மகிழ்ச்சியடைந்து, அவளுக்கு பரிசுகளை வழங்கத் தொடங்கினான். விலையுயர்ந்த நகைகள், வடிவமைப்பாளர் கைப்பைகள் மற்றும் ஒரு ஆடம்பர கைக்கடிகாரம் என அவை தொடர்ந்தன. ஒரு நாள், அவள் தன் குடும்பத்தை ஆதரிப்பதற்கும், அவளுடைய கல்விக்கு பணம் செலுத்துவதற்கும் எப்படி கடினமாக உழைக்கிறாள் என்பது பற்றி சில பொய்க் கதைகளை அவனின் மார்பில் சாய்ந்து, அவனின் இருகைகளையும் பிடித்தபடி சொன்னாள். சஞ்சய், அவளின் பளபளக்கும் உடலின் கவர்ச்சியில் தன்னை முழுமையாக இழந்தவன், அவள் தான் தனது வருங்கால துணைவி என்ற நம்பிக்கையில், சிறிதும் யோசிக்காமல் அவளுடைய கணக்கில் பணத்தை மாற்றினான். இப்படி மெல்ல மெல்ல ஒரு நம்பிக்கையில் மூன்று மில்லியன் ரூபாய் கொடுத்துவிட்டான். ஆனால் ஏதோ தவறு நடப்பதாக சஞ்சய் உணர்ந்ததற்குள், அவள் தனது அடுத்த இரையான வேறொருவனை தேர்ந்தெடுத்து அவனை கைவிட்டுவிட்டாள். ஒரு நாள், அருணி கணினித் திரையில், தனது இன்ஸ்டாகிராம் செய்திகளின் வேறு பகுதிகளைக் காண நகர்த்தல் [ஸ்க்ரோல் / scroll] செய்து கொண்டிருந்த போது, சமீபத்தில் கொழும்புக்கு குடிபெயர்ந்த யாழ்ப்பாண தமிழ் மருத்துவர் டாக்டர் சுரேன் என்பவரிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. சுரேன் சாதாரண இளைஞன் அல்ல. ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவ வாழ்க்கை மற்றும் ஆழ்ந்த ஒழுக்க உணர்வுடன், அவன் யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தனது சொந்த ஊரின் கஷ்டங்களிலிருந்து தனது நிலையை கல்வியினால் உயர்த்திய ஒருவன். அவள் முன்பு சந்தித்த, லலித் மற்றும் சஞ்சய் போன்ற ஆண்களைப் போலல்லாமல், சுரேன் மேலோட்டமானவற்றால் ஈர்க்கப்படவில்லை. அவன் சிந்தனையுடனும், ஆராய்ந்து முடிவு எடுக்கும் திறனுடனும், எச்சரிக்கையுடனும் இருந்தான், ஆனால் அருணி எப்படியும் அவனை வெல்ல வேண்டும், கவரவேண்டும் என் உறுதியாக இருந்தாள். சுரேன் போன்ற ஒரு மனிதனை அவளால் வெல்ல முடிந்தால், அவளுடைய வெற்றிகள் முழுமையடையும் என திட்டம் போட்டாள். சமூக ஊடகமூடான ஆரம்ப அரட்டைகள் சாதாரணமாக இருந்தன. சுரேன் தனது பணியைப் பற்றியும், சுகாதாரத் துறையில் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற தன் நம்பிக்கையையும் பகிர்ந்தான். அதே நேரத்தில் அருணி சமூக நீதியில் ஆர்வமுள்ள இரக்கமுள்ள, பண்பட்ட இளம் பெண்ணாக நடித்தாள். அவனின் கவனத்தை தன்பால் இழுக்க, தான் தெற்கில் பிறந்தாலும், யாழ் நூலக எரிப்பு, கருத்த ஜூலை, முப்பது ஆண்டு போராட்டம், 2009 இறுதிப்போர் அழிவுகள் என்பதில் தானும் கவலைப்படுவதாக, நீதியை வெளிப்படையாக அறிய ஆவலாக இருப்பதாக பதில் அளித்தாள். அருணி, யாருக்கும் பொய் சொல்லி ஏதாவது செய்ய அல்லது நம்பும்படி வற்புறுத்தும் கலையில் [Art of Con] நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தாள். அவள் டாக்டர் சுரேனைச் சந்திக்கும் இந்த தருணத்தில், அவள் சொகுசாக வாழ்ந்ததுடன் தனக்குத் தேவையான பணமும் பொருளும் தன் "விழிகளின் வித்தை" மூலம் ஏற்கனவே ஓரளவு சேர்த்துவிட்டாள். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு இடம் பெயர்ந்திருந்த இளம் வைத்தியரான சுரேன், அருணியின் கடந்த காலத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தன்னார்வத் தொண்டு செய்யும் ஒரு தொண்டு நிகழ்வில் அவர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்தனர். எப்போதும் மக்களைப் படிக்கும் அருணி, சுரேனின் கருணையையும் அவனது சமூகப் பொறுப்புணர்வையும் விரைவாக உணர்ந்தாள். அவளுடைய அடுத்த திட்டத்திற்கு அவன் சரியானவன் என்று உணர்ந்து தனது சீட்டாட்டத்தை கவனமாக விளையாடத் தொடங்கினாள். இந்த முறை தன்னை ஒரு கடின உழைப்பாளியாக சித்தரித்து, ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பும் பெண்ணாக தன்னைக் காட்டினாள். ஆனால் நிதிச் சுமைகளால் அதைத் தொடருவது தடையாக உள்ளதாக எடுத்துக் கூறினாள். அவளின் கண் பார்வையிலும், அழகிலும் நடத்தையிலும் கவரப்பட்ட சுரேன் அவளிடம் தன்னை அறியாமலே ஈர்க்கப்பட்டான். அவனுக்கு அவள் அந்தக்கணம் உண்மையானவளாகத் தோன்றினாள், அவர்கள் தொடர்ந்து பேச ஆரம்பித்தனர், காபி மற்றும் இரவு உணவுக்காக மேசையில் மற்றவர்களுடன் சேர்ந்து கூடினர். இருவரும் அருகில் அருகில் அமர்ந்தனர். அருணி முதலில் எதையும் கேட்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள், சுரேனை தன்னில் ஆழமாக நேசிக்கக் கூடியவாறு பேச்சிலும் செயலிலும் நடந்துகொண்டாள். அவள் தனது போலியான கஷ்டங்களை நுட்பமாக அவன் மனதில் விதைக்கும் போது அன்பான, ஆதரவான காதலியாக மிக நெருக்கமாக நடித்தாள். சுரேனும் அத்தனையும் உண்மையென நம்பினான். அவள் கூட இம்முறை, அவனின் கல்வித் திறனையும், மதிப்பையும் பெருமையையும் மற்றும் செல்வச்செழிப்பையும் அறிந்து, மற்றும் ஏமாற்றும் வித்தையை தொடர்ந்து செய்வதில் ஏற்படும் தடைகளை உணர்ந்து, தனது இறுதி "விழிகளின் வித்தை" யாக்கி அவனைத் நிரந்தரமாக திருமணம் செய்யும் எண்ணமும் அவளுக்கு ஒரு மூலையில் இருந்தது. காலப்போக்கில், அவள் கவனமாக நம்பிக்கையின் விதைகளை சுரேனிடம் விதைத்தாள், என்றாலும், அவளின் முன்னைய பழக்கத்தை முற்றாக துறந்துவிடவில்லை. ஒரு மாலை, காலி முக ஹோட்டலில் இரவு உணவிற்குப் பிறகு, நிலா ஒளியில், மங்கலான இருட்டில் கடற்கரையில் இருவரும் கையை பற்றிக்கொண்டு உலாவும் பொழுது, அருணி தயக்கத்துடன் தன் குடும்ப விடயத்தை எடுத்துரைத்தாள். தன் பெற்றோர் எவ்வாறு கடனில் உள்ளனர் என்பதையும், தன் தாய் நோயுற்று இருப்பதையும், கல்விக் கட்டணம் மற்றும் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அவள் எப்படிப் போராடுகிறாள் என்பதையும் அவள் சுரேனிடம் கூறினாள். அவள் மேல் உள்ள காதலாலும், அழகு கவர்ச்சியாலும் நம்பிக்கையாலும் உடனடியாக உதவ முன்வந்தான். சிறிது நேரம், அருணி மீண்டும் ஒருமுறை வெற்றியடைந்துவிட்டதாக எண்ணினாள். என்றாலும் அவன் மனதில் ஒரு ஐயப்பாடும் மின்னலெனத் தோன்றியது. அது எப்படி இவள் ஆடம்பர விலை உயர்ந்த டிசைன் அலங்காரங்களும் உடைகளும் அணிவதுடன், ஆடம்பர ஹோட்டலிலும் இருக்கிறாள் என்பதில் அவனுக்கு ஒரு கேள்வி மனதில் பிறந்தது. எனவே அவன் அவளை முதலில் சோதிக்க விரும்பினான். ஒரு டாக்டராக அவன் இருந்ததால், அவன் அவளது நோயுற்ற தாயை நேரடியாக பார்க்கவும், மற்றும் அவளின் குடும்ப நிலையை மறைமுகமாக சரிபார்க்கவும் அவன் நினைத்தான். அருணி உடனடியாக எதோ சாக்குப்போக்குகளை சொல்லி கடத்தினாள். அது சுரேனின் சந்தேகத்தை மேலும் கூட்டியது. ஆனால் அதை அவன் வெளியே காட்டவில்லை. ஆனால் விரைவில், சுரேன் அவளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். அருணி தனது திட்டங்கள் இம்முறை இழுபட்டுக்கொண்டு போவதையிட்டு தனக்குள் ஒரு பயமும் கவலையும் அடைந்தாள். சுரேனை தனது வலையில் இறுதி சுறாவாக நினைத்ததில் ஒரு தடுமாற்றம் கண்டாள். அவன் முன்போல் இல்லாமல் கொஞ்சம் தள்ளி பழகுவதும், இதுவரை அவள் வைத்த கோரிக்கைகள் அப்படியே கிடங்கில் இருப்பதும் அவளுக்கு ஒரு தெளிவில்லாமல் இருந்தது. அதனால் அவள் மீண்டும் தன் வலைக்கு இறை தேட ஆரம்பித்தாள், அதனால் அவள் அடிக்கடி சுரேனை சந்திப்பது குறையத் தொடங்கியது. அவளின் சந்திப்புகள் குறைந்து போவதைக் கண்ட சுரேன், அவளிடம் ஏன் சந்திக்கவில்லை, எங்கே இருந்தாள் என்று கேட்டபோது, அவளுடைய பதில்களில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டது. அவன் ஒரு மருத்துவ நிபுணன் ஆச்சுதே, அவனுக்கு எதோ ஒரு பித்தலாட்டம் நடைபெறுகிறது என்று புரிந்துவிட்டது. அவன் தனது நண்பர்கள் சிலருடன் பேசத் தொடங்கினான், அவர்களில் ஒருவன் தான் கொழும்பில் ஒரு பெண் பணக்கார இளைஞர்களை ஏமாற்றுவதாக ஒரு வதந்தியைக் கேட்டதாக கூறினான். என்றாலும் சுரேன் முதலில் அதை தான் காதலித்த அருணியாக இருக்கும் என்று நம்பவில்லை. ஒரு நாள், அருணி சுரேனை சந்தித்த பொழுது, அவள் தனது கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாததால், தான் பகுதி நேர வேலைக்குப் போவதாகவும், அதுதான் சந்திக்க முடியவில்லை என அழாக்குறையாக கூறி, திருப்பவும் உதவி கேட்டாள். ஆனால் அவனோ அவளுக்குப் பணத்தைக் மீண்டும் கொடுக்கவில்லை, ஆனால் தானே நேரடியாகச் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த முன்வந்தான். அருணிக்கு என்ன செய்வதென்றே தடுமாறினாள். அப்போதுதான் சுரேனின் சந்தேகம் உறுதியானது. அவன் மீண்டும் தனது கடந்தகால அறிமுகமானவர்களில் சிலரை அணுகி அவளைப்பற்றி விசாரித்தான். அருணி தனக்கு முன் பல ஆண்களை இதேபோன்ற கஷ்டங்கள் மற்றும் நிதித் தேவைகளுடன் அணுகியுள்ளார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு முறையும், அவள் அவர்களை "விழிகளின் வித்தை" மூலம் காதல் அடிமையாக்கி, பணம் கறப்பதை அறிந்தான். ஒரு நாள் மாலை, சுரேன் அருணியை ஒரு தனியார் உணவகத்தில் இரவு உணவிற்கு அழைத்தான், அங்கு அவன் அவளிடம் பேசுவதற்கு முக்கியமான விடயம் இருப்பதாக கூறினான். அருணி, தான் அவனைத் தன் விரலில் மாட்டிக் கொண்டதாக நம்பி, ஒருவேளை விலையுயர்ந்த பரிசைக் கூட எதிர்பார்த்து அவள் வந்தாள். ஆனால் அதற்குப் பதிலாக, சுரேன் அவளுக்கு ஆதாரங்கள் நிறைந்த வங்கி பரிமாற்றங்கள், பிற ஆண்களிடமிருந்து வந்த செய்திகள் மற்றும் அவர்களுடன் அவள் உரையாடிய ஸ்கிரீன்ஷாட்கள் [திரைப்பிடிப்பு / Screenshot] அடங்கிய அத்தாட்சிகளை வழங்கினான். "என்னை நன்றாக விளையாடினாய், அருணி," என்று சுரேன் சொன்னான், அவன் குரல் அமைதியாக இருந்தாலும் ஏமாற்றம் நிறைந்தது. "ஆனால் நல்ல காலம் நான் கவனமாக இருந்துவிட்டேன்" அவள் தடுமாற்றத்துடன், "எனக்கு வேறு வழியில்லாததால் இதைச் செய்தேன். என் குடும்பம் ..." என்று இழுத்தாள். "நிறுத்து," சுரேன் குறுக்கிட்டு, அவனது குரல் கடுமையாக இருந்தது. "என்னுடன் நேர்மையாக இருக்க நான் உனக்கு பல வாய்ப்பைக் கொடுத்தேன், நான் உன்னை நம்ப விரும்பினேன், ஆனால் இப்போது நான் பார்ப்பது என் கருணையைப் பயன்படுத்திக் கொண்ட ஒருவரைத் தான்." அவன் கடுமையாக சொன்னான். முதல்முறையாக அருணிக்கு என்ன பேசுவதுவென வார்த்தைகள் புரியாமல் தவித்தாள். கவனமாகக் கட்டமைக்கப்பட்ட அவளது வஞ்சக வாழ்க்கை அவள் முன் நொறுங்கியது. "விழிகளின் வித்தை" க்கு இனி அங்கு இடம் இல்லை. அருணியை, தன் செயலின் விளைவுகளைத் தனியே எதிர்கொள்ள விட்டுவிட்டு, நடந்தான். "வாழ்க்கை என்பதே ஒரு வித்தை தான் அதிலும் "விழிகளின் வித்தை" இன்னும் ஒரு ரகம்! அதில் சிக்குவது என்பதும் சிறையாவது என்பதும் உன் புத்தியிலும் நடத்தையிலும் தான் உள்ளது!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வாராயோ வான்மதியே" "வாராயோ வான்மதியே கண்டாயோ என்னவளை தீராத காதலில் வருந்துவது தெரியாதோ? தாராயோ நிம்மதி உன்னிடம் கேட்கிறேனே மாறாத அன்பில் இன்னும் அலைகிறேனே ஆறாத காயங்களின் வலியில் தவிக்கிறேனே பாராயோ என்னைக் கருணை காட்டாயோ?" "வெண்ணிலாவின் ஒளியிலே அவளைத் தேடுகிறேனே கண்கள் இரண்டும் சோர்வு அடைகிறதே மண்ணின் வாழ்வை முடிக்கும் முன்பே பெண்ணே மன்னித்து என்னை அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்?" / பகுதி: 02 இன்று மக்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனையில் ஒன்று தற்கொலை ஆகும். உதாரணமாக 2016 ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் [World Health Organization] அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 800,000 பேர் உலகில் தற்கொலை செய்கிறார்கள். இது உலகெங்கும் ஏற்பட்ட மொத்த மரணத்தின் 10 வது முக்கிய காரணியாக உள்ளது. இது சுமார் 0.5-1.4% உலக மக்கள் தற்கொலை மூலம் இறக்கிறார்கள் என்றும் வருடத்திற்கு 100,000 நபர்களுக்கு 12 பேர் என்ற வீதத்தில் இருப்பதாகவும் எடுத்து காட்டுகிறது. குழப்பமான இந்த தற்கொலை பிரச்சனைக்கு நாம் ஏதாவது ஒரு பொது "காரணம்" கண்டுபிடித்தால், நாம் ஒரு சிகிச்சையை அதற்கு திட்டமிடலாம் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால் தற்கொலை மரபணு [“suicide gene”] என்று ஒன்றையும் ஆய்வுகள் கண்டுபிடிக்கவில்லை. தற்கொலையானது பல காரணிகளின் ஒரு சிக்கலான எதிர் விளைவு என்பதால் [a complex interaction among many factors], அதை ஒரு மரபணு குறியீட்டிக்கு குறைக்க முடியாது என்பது இன்றைய அறிஞர்களின் வாதம் ஆகும். தமிழர்களின் தாயகத்தை உள்ளடக்கிய இந்தியாவை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோம் என்றால், இந்தியாவின் பல பகுதிகளிலும் தற்கொலை என்பது ஒரு கடுமையான பிரச்சனையாக இருப்பதுடன், இது பெரும்பாலும் பொருளாதார நெருக்கடி, நோய், சமூக அழுத்தங்கள் குடும்ப பிரச்சினைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் தவறான நடத்துதல் [economic distress, illness, social pressures family problems, and ill-treatment by other family members] ஆகியவற்றால் ஏற்படுகிறது என அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. தேசிய குற்ற ஆவண பணியகம் [National Crime Records Bureau] வெளியிட்ட இந்தியாவில் தற்செயலான மரணங்கள் மற்றும் தற்கொலைகள் 2012 ["Accidental Deaths and Suicides in India 2012"] என்ற அறிக்கையின் பிரகாரம், இந்தியா முழுவதும் ஆண்டு 2012 இல் 1,35,445 பேரும் ஆண்டு 2010 இல் 1,35,585 பேரும் தற்கொலை செய்துள்ளார்கள் என்றும், அதில் தமிழ் நாடு 16,927 பேருடன் முதல் இடத்தை பிடித்துள்ளதும் தெரியவருகிறது. மேலும் அங்கு சிலர் தற்கொலை செயலை அல்லது பயமுறுத்தலை, தீக்குளித்தல் அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளால் , அரசாங்கத்தின் அல்லது பொது மக்களின் கவனத்தை ஈர்த்து தனிப்பட்ட அல்லது சமூக காரணங்களை நிறைவேற்ற தமது விரக்தியின் இறுதி செயலாக ஈடுபடுகிறார்கள் எனவும் அறிகிறோம். இப்படியான செயல்கள் பண்டைய காலத்திலும் இந்தியாவில் நடைபெற்றதை வரலாறும் புராணங்களும் கூறுகின்றன.இதில் தமிழ் நாடு முதல் இடத்தில் இருக்கிறதாம். மருத்துவ ஆய்விற்கான இந்திய சபை மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சு [the Indian Council for Medical Research and the Ministry of Health and Family Welfare] தயாரித்துள்ள அறிக்கைகளும் 15-39 இடைப்பட்ட வயதினரின் தற்கொலையில் தென் இந்திய முதல் இடத்தில் இருப்பதை உறுதி செய்கிறது. உதாரணமாக இந்த வயதினரின் தற்கொலையில் தமிழ் நாடு முதல் இடத்திலும் கேரளம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. கடுமையான சமூக நெறிகள் ஒரு படித்த, முற்போக்கான இளைஞர்களின் அபிலாஷைகளுடன் மோதுவதும், இளைஞர்களின் உயர்ந்த அபிலாசைகளினால் ஏற்படும் மன அழுத்தமும் [rigid social norms clashing with the aspirations of an educated and progressive youth, as well as the greater experience of stress related to the higher aspirations of youth] முக்கிய பொதுவான காரணமாகிறது. பொதுவாக தெற்கு மாநிலங்கள் வட மாநிலங்களை விட அதிகமான கல்வியறிவு பெற்றவை, கல்வி அறிவு அவர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கின்றன, எதிர்பார்ப்பு கூடும் பொழுது ஏமாற்றமும் அதிகரிக்கின்றன. எனவே தற்கொலையும் அதிகரிக்கின்றன எனலாம். மற்றது பண்பாட்டு வித்தியாசம் ஆகும். உதரணமாக வட மாநிலத்தார் ஆப்கானியர்கள், மொகலாயர்கள், பிரித்தானியர்கள் [Afghans, Mughals, the British] போன்றவர்களுடன் பல போர்களில் ஈடுபட்டதால், அவர்களின் போக்கில் அதிக ஆக்கிரமிப்பு அல்லது தீவிரம் தெரிகிறது. அதே நேரத்தில் தென் மாநிலத்தார் இப்படி ஒன்றிலும் பெரிதாக ஈடுபடவில்லை. மேலும் சொல்லும் திறமையை அல்லது உணர்ச்சி வெளிப் பாட்டை பார்த்தாலும் வட மாநிலத்தார் தென் மாநிலத்தார்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளனர். எனவே, தென்னிந்திய மக்கள் தங்கள் உணர்ச்சிகளை தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்திருக்கும் ஒரு போக்கு கொண்டுள்ளனர் எனலாம். ஆகவே அவர்களுக்குள்ளேயே கோபம் மற்றும் ஏமாற்றம் மிகவும் அதிகமாக அதிகரித்து போகும் பொழுது, தம்மை இழக்கிறார்கள். எனவே தென் மாநிலங்களில் தற்கொலை ஏன் அதிகரித்திருக்கிறது என்பதற்கான ஒரு கோட்பாட்டு ரீதியான [theoretical explanations] வாதத்தை இங்கு காண்கிறோம். பதிவாளர் பொது அலுவலகத்தின் [Registrar General's office] புள்ளிவிபரங்களின்படி, சுதந்திரம் (1948) அடைந்த காலத்தில் இலங்கையில் தற்கொலை விகிதம் 100,000 மக்களுக்கு 9 ஆகும். அதன் பின் 1970 களில் இது 100,000 க்கு 19 ஆக உயர்ந்தது.1980 களின் மத்தியில், அது மேலும் உயர்ந்து 100,000 க்கு 33 ஆக அடைந்தது. இலங்கையின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தற்கொலை வீதம் 100,000 க்கு 15 என முன்னையதை விட குறைந்து இருப்பதை காட்டுகிறது. சில வேறு அறிக்கை 100,000 க்கு 20 எனவும் சொல்லுகிறது. எது எப்படியாயினும் தற்கொலை வீதம் உலக சராசரி வீதத்தை விட அதிகமாகவே இன்னும் இருக்கிறது. வறுமை மற்றும் இழப்புக்களே [Poverty and deprivation] முக்கிய காரணமாகும். வவுனியா, யாழ்ப்பாணம் ஆகியவை மிக உயர்ந்த விகிதத்தில் உள்ள பகுதிகளாக இங்கு காணப்படுகின்றன. இவைகள் தமிழர் தயக்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது. இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் (~1948) ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் தமிழர்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். என்றாலும் சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்ற கல்வி தரப்படுத்தல் சட்டங்களை 1970 இல் கொண்டு வந்தார்கள்.அரசு நிறைவேற்றிய இந்த முறை தமிழ் மாணவர்களுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியது.அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளையும் பாதித்தது.அவர்களிடையே சடுதியாக ஏமாற்றங்கள் அதிகரிக்க தொடங்கின. எனவே எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் 1970 இற்கு பின் அதிகரிக்க தற்கொலையும் அதிகரித்தன எனலாம். என்றாலும் அவர்களின் வெறுப்பு மற்றும் விரக்தி 1980 இல் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக வெடிக்க, அவர்களின் கவனம் போராட்டம் ஒன்றில் ஒற்றுமையாக திசை திரும்பின, எனவே அவர்கள் தமது மனஅழுத்தங்களுக்கு ஒரு வடிகால் அமைத்து விட்டனர். ஆகவே கட்டாயம் தற்கொலை வீதம் இனி குறையும் என யாரும் எதிர்பார்க்கலாம், அதைத்தான் மேற்கூறிய புள்ளி விபரமும் அத்தாட்சி படுத்துகிறது. ஆனால், யுத்தத்தின் பின் தமிழ் மக்கள் மீண்டும் முன்னைய நிலையையே அல்லது அதைவிட கேவலமான குறைந்த நிலையையே அடைந்தனர், பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, அது மட்டும் இல்லை, சில விடயங்களில் முனையத்தை விட பின்தள்ளியே போய்விட்டார்கள். எனவே மீண்டும் தற்கொலை வீதம் கூடும் என்பது வெள்ளிடைமலை. அதைத்தான் புள்ளிவிபரமும் காட்டுகிறது. 2009 மே மாதம் 30 வருடகால யுத்தம் முடிவிற்கு வந்தது, சமாதானம் திரும்பி விட்டதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்கொலை விகிதம் அதன் பின் உயர்ந்து விட்டதையே காண்கிறோம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் பேராசிரியர் ஒருவர் [Professor of Psychiatry at Jaffna University] சேகரித்த புள்ளிவிபரங்கள் படி, ஈழ யுத்தம் நான்காவதின் தொடக்கத்தில், அதாவது 2005 இல், யாழ்ப்பாணத்தில், தற்கொலை விகிதம் 100,000 மக்களுக்கு 23 ஆகும். ஆனால் 2006 ல், யுத்தம் தீவிரமடைந்தபோது, அது 20 க்குக் குறைவாகக் குறைந்தது. 2007 மற்றும் 2008 ல், போர் மேலும் மேலும் முன்னேறும் பொழுது, விகிதம் இன்னும் சரிந்து சரிந்து போனது. 2009 இல், போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, தமிழ் சமூகம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தபோது, தற்கொலை விகிதம் கிட்டத்தட்ட 100,000 மக்களுக்கு 15 எனக் குறைந்து காணப்பட்டது. ஆனால் போருக்குப் பிறகு, தற்கொலை விகிதம் திடீர் என அதிகரித்து, 2011 இல் 25 யையும் கடந்தது, சமாதானம் எங்கே என்ற ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. இது 2012 ல் 25 ஐ விட சற்று குறைந்தது, எனினும் 2013 ஆம் ஆண்டில் அது மீண்டும் 2011 இன் நிலைக்கு வந்துவிட்டது, கவலைக்குரிய விடயமாகும். 2002-2004 சமாதான முன்னெடுப்புகளின் போதும் - இராணுவ நடவடிக்கை நிலவிய அந்த காலத்திலும் - தற்கொலை விகிதம், முன்னைய காலத்தை விட அதிகரித்தமை குறிப்பிடத் தக்கது. போரின் போது, பலவிதமான துயரங்கள் மற்றும் அழுத்தங்களின் தாக்கத்தை, அங்கு அன்று நிலவிய ஒரு வலுவான சமூக ஆதரவு அமைப்பு முழுமையாக எந்த கெடுபிடியும் இல்லாமல் இயங்கி அவர்களின் துன்பத்தை தனித்ததுவே இதற்கு முக்கிய கரணம் என ஒரு பத்திரிகைக்கு பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார் [Explaining the phenomenon, Professor told that during the war, frustrations were better managed because there was a strong social support system cushioning the impact of various kinds of traumas and stresses].மேலும் இலங்கை இராணுவ முற்றுகையின் பொழுது, பொதுமக்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒன்றுகூடினர். ஆனால் போருக்குப் பின், சமூக ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவு [social cohesion and social support systems] அமைப்புகள் மெல்ல மெல்ல தேயத் தொடங்கின, எனவே குடும்பங்களும் உடைந்து சிதறத் தொடங்கியதும் தற்கொலை இன்று மீண்டும் அதிகரித்ததிற்கு ஒரு காரணம் எனலாம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அலையாடும் அழகு" "அலையாடும் அழகு குமரியின் வனப்பே விலையற்ற அவளின் கவர்ச்சிச் சிரிப்பே! உலை வைக்கும் மங்கையின் கண்ணே அலை எடுத்து எவரையும் மயக்குமே!" "சேலைத் தாவணியில் மனதைக் கவருதே மாலை அணிந்த அணங்கின் வடிவமே! சோலை நடுவில் எழில் பொழியுதே கலை மகளின் அன்புத் தோற்றமே!" "தலை முடி தோளை வருடவே சிலை போல அழகாய் நிற்கிறாளே! வாலைப் பருவம் தாண்டிய தருணியே தலைவனைக் காண ஏக்கம் எனோ?" "நிலை தடுமாற்றம் தரும் தையலே குலைந்து வீழ்த்தும் அணங்கும் நீயோ! ஓலை மடலில் எழுதும் கவிதையோ வலையில் சிக்கா மானும் நீயோ!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 34 முடிவுரை [ தொடர்கிறது] எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரபணுக்கள் வந்தன என்பது எமக்குத் தெரியாது. அதே போல இவர்களின் வழித்தோன்றல்கள் யார் என்பதும் சரியாகத் தெரியாது. இன்று வரை இந்த பண்டைய சுமேரியர்களின் டிஎன்ஏ யை பரிசோதனை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையும் இருக்கவில்லை. என்றாலும் அண்மையில் பண்டைய சுமேரிய நாகரிகத்தின் தலை நகரமான ஊரில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 4500 ஆண்டை சேர்ந்த ஒரு முழுமையான எலும்புக் கூடு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாந்தவியல், தொல்லியல் பற்றிய அருங் காட்சியகத்தில் [Penn Museum] 2014 ம் ஆண்டு திரும்ப கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பொதுவாக தொல் பொருள் ஆய்வாளர்கள் நிலத்தில் தான் அகழ்வின் போது இப்படியான வற்றைக் கண்டு பிடிப்பார்கள். ஆனால் இதுவோ, அருங்காட்சியகத்தின் சேமிப்பு அறையில் கடந்த 85 வருடமாக சவப்பெட்டி போன்ற பெட்டி ஒன்றில் பாதுகாத்து வைத்திருந்த இந்த எலும்புக் கூட்டை கண்டுபிடித்து உள்ளார்கள். இது 1929–30 ஆண்டில் பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர் லியோனாட் வூல்லேயால் [Sir Leonard Woolley] கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ஆச்சிரியம் தரக்கூடிய விடயம் என்ன வென்றால், இதின் கெடாத பல்லில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய போதுமான மென்மையான திசு அதிகமாக இருக்கலாம் என்பதே. அப்படி இருந்து பரிசோதனை செய்யும் பட்சத்தில், இந்த முதலாவது நகர நாகரிக குடி மக்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் சமகால வழித்தோன்றல்கள் யார் என்பதை விரைவில் வெளிப்படுத்தலாம்? சுமேரியர்களின் இடம்பெயர்வு ஒரு மர்மமான சொல்லப்படாத கதையாகவே இருக்கிறது. எனவே டிஎன்ஏ பரிசோதனை ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம். மேலும் நான் ஒரு தகவலை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன். நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், யூப்ரடிஸ் டைகிரிஸ் ஆறுகளை அண்டியும், இறுதியாக சிந்து நதி கரையிலும் அமைந்த முன்னைய நாகரிகத்தை அமைத்தவர்கள் அனைவருமே கருத்த தோல் மனித அடையாளத்தைக் கொண்டவர்கள். இது தற்செயலாக அமைந்து இருக்க முடியாது. மேலும் இந்தியாவிற்கு இருதரம் 1288 இலும் 1293 இலும் பயணித்த இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ பாண்டிநாட்டிற்கு வந்த போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. இவர் அங்கு வாழ்ந்த தமிழரைப் பற்றி குறிக்கும் போது “மிகவும் மதிப்புடனும், கருப்பு நிறம் அற்ற மற்றவர்களை விட, தான் நன்றாக வாழ்வதாக கருதும் கருத்த மனிதன் இங்கு இருக்கிறான். நான் இந்த உண்மையை கூறவிடுங்கள். இந்த மக்கள் தமது கடவுளை, விக்கிரகங்களை கருப்பாக சித்தரிக்கிறார்கள். பிசாசுகளை பனி போன்ற வெள்ளையில் சித்தரிக்கிறார்கள். அவர்கள் கடவுளும் எல்லா ஞானிளும் கருப்பு என்றும் கெட்ட தேவதைகள் எல்லாம் வெள்ளை என்கிறார்கள். அதனால்த் தான் நான் விவரித்த வாறு வர்ணிகிறார்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார். டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆஃப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்குத் தெரியும். ஆகவே ஆஃப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆஃப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும். முன்னைய ஆஃப்பிரிக்க மக்களின் ஆதி இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால், மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள். அது மட்டும் அல்ல, ஆஃப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது. மனித இனம் பல கட்டங்களாக ஆஃப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுடவியலாளர்கள் நம்புகிறார்கள். ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன் ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆஃப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா மத்திய கிழக்கு, ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அது மட்டும் அல்ல இந்த காலத்திலேயே அவன் தீ உண்டாக்கக் கற்றுக்கொண்டான் என்பார்கள் அறிஞர்கள். இன்றும் உலக மக்களின் பண்பாடுகளோடு பங்குகொள்ளாமல் தனித்து வாழும் சில தொல்குடி மக்கள் சிலர் தீக்கடைக் கோல் எனப்படும் மரக்குச்சியால் உரசியோ தேய்த்தோ, அதை தீ உண்டாக்க பயன்படுத்துகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முற் பட்ட தமிழில் இவற்றை ஞெலிகோல் என்றும் கூறிவந்தனர். அதியமான் நெடுமான் அஞ்சி, வீட்டு இறைப்பில் செருகப் பட்ட, தீக்கடை கோல் போல், தன் ஆற்றல் வெளியே தோன்றாது ஒடுங்கி இருப்பான்; என்று புறநானுறு 315 "இல்லி றைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்றாது இருக்கவும் வல்லன்;" என்று கூறுகிறது. மனிதக் கூர்ப்பில், கொரில்லா மற்றும் லூசி என்று பிரபலமாக அறியப்படும் ஆசுத்திராலோபித்தேக்கசு அஃபெரென்சிசு [Australopitheus Afarensis] க்குப் பிறகே ஹோமோ எரக்டஸ் என்னும் இந்த மாந்த இனத்தின் மூதாதையர் உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர்கள். இந்த ஆதிவாசிகளே முதன் முதலாக சமைத்து உண்டவர்கள். இதே சமயத்தில் தான் நம் மூதாதையர்கள் தாங்கள் உடல் உரோமத்தை இழக்க ஆரம்பித்திருக்க வேண்டும். அதன் பின், நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால் [Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், ஹோமோசேப்பியன்ஸ் [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன் இரண்டாவது அலையாக ஆஃப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது, ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் தற்போதைய மனிதர்களை விட நியான்டர்தால் மனிதர்கள், புத்திசாலிகளாக இல்லாததால் அழிந்து போயினர் என ஆய்வு ஒன்று கூறுகிறது. சேப்பியன் (Sapien) என்பதற்கு அறிவு என்பது பொருள். ஹோமோ என்பதன் பொருள் மனிதன் என்பதாகும். இதனால், மதிமனிதன் அல்லது அறிவு மனிதன் (Homo sapien) என இவனை அழைக்கின்றனர். இவன், அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர்களை வெற்றி கொண்டான் என்கின்றனர். இந்த கருதுகோளின் படி, இன்றைய நவீன மனிதன் இந்த ஹோமோ சேப்பியன்ஸின் சந்ததி ஆகும். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தான். இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் எப்படி பல கிலோ மீட்டர் கடல் பகுதியைத் தாண்டி தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் வந்திருக்க முடியும் என நீங்கள் ஆச்சிரியப் படலாம்? ஆனால், அந்த பழங்காலத்தில் கண்டங்கள் எல்லாம் இணைந்து இருந்தன, அவை பனியுகம் (Ice age) அல்லது "பனிப்படல யுக (Glacial Age) த்தின் பிறகே பிரிந்தன. 18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளியும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன. பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல் மட்டம் தணிந்திருந்தது. அப்போது உலகத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் தணிந்து, உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப்படுகிறது! ஆகவே அவர்கள் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இருக்கலாம். ஆஃப்பிரிக்காவில் இருந்து பரந்த உலகிற்கான இந்த இடம் பெயர்வு பெரும்பாலும் 60,000-70,000 ஆண்டுகளிற்கு முன்பு நடைபெற்று இருக்கலாம். இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள் [beachcombers] விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்தார்கள். அதன் பிறகு, கொஞ்சம் காலம் கடந்து, இரண்டாவது குழு ஆஃப்பிரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்கு, தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். உலகின் ஒவ்வொரு மூலையையும் மனித இனம் ஒரு நாள் நிரப்ப இந்த இடம்பெயர்வே வழி வகுத்தது. அந்த தொடக்க துணிகர இடம் பெயர்வு காலத்தில், வேட்டை மற்றும் உணவு சேகரிப்பதுமே அவர்களின் அன்றாட வாழ்க்கையாக இன்னும் இருந்தது. இந்த மனிதர்கள் சில நூறு தனிப்பட்டவர்களை கொண்ட சிறு சமுகமாக, அனேகமாக வாழ்ந்தார்கள். சமூகப் பிணைப்புகள் அங்கு அவர்களுக்கு இடையில் உண்டாகி, அது இந்த சிறிய மக்கள் கூட்டங்கள் தங்களுக்கு இடையில் உணவு வளங்களை பகிரவும் ஒன்றாக இணைந்து வேட்டையாடவும் உதவின. இந்த பிணைப்பு மலர்ந்து, இன்று நாம் அறிந்த சமூகம் மற்றும் கலாச்சாரம் போன்ற ஒன்று அவர்களுக்கு இடையில் தோன்ற மொழி வளர்ச்சி உதவியது. இந்த மனிதன் தன் இனத்தவர்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த அவன் எழுப்பிய ஒலிக்குறிப்புகள் உதவின. அதுதான், நாளடைவில் மொழியாக உருமலர்ச்சி பெற்றது எனலாம். கி மு 14,000 - 9500 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. நாடோடிகளாக வேட்டையாடி உணவு சேர்ப்பதில் இருந்து அவர்கள் வாழ்வு மற்றம் அடைந்தது. இந்த கால கட்டத்தில் மழை வீழ்ச்சி உச்ச நிலையை அடைந்து சஹாரா, வட ஆஃப்பிரிக்கா போன்ற பகுதிகள் பசுமையா மாறின. இந்நிலையில், வேளாண்மை அங்கு பிறந்தது; காட்டுப் பயிர்களாக இருந்த சில தானியங்களை, தன் இருப்பிடத்திற்கு வீட்டுப் பயிர்களாக வளர்க்கத் தெரிந்து கொண்டான். அவன் முதலில் பயிரிட்ட தானியம் கோதுமை என்கின்றனர். நைல் நதி, மற்றும் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த மெசொப்பொத்தேமியாவின் டைகிரிஸ் யூப்ரதீஸ் நதிகளை உள்ளடக்கிய இளம் பிறை வடிவம் [Fertile Crescent lands] கொண்ட செழுமையான பகுதியில் முதல் விவசாயி பிறந்தான் என நம்பப்படுகிறது. முதலில், உணவு தேடியாக இருந்த அவன் நாளடைவில் உணவு உற்பத்தியாளனாகவும் மாறினான். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 35 தொடரும்
-
"வண்ணங் கொண்ட வெண்ணிலவே" "வண்ணங் கொண்ட வெண்ணிலவே வாராயோ கண்கள் இரண்டும் காணத் துடிக்குதே! மண்ணின் வாசனை உடையில் தெரியுதே பண்பின் இருப்பிடமே வாழ்த்தி வணங்குகிறேன்!" "அன்ன நடையில் மனத்தைக் கவர்ந்தவளே சின்ன இடையில் கலக்கம் தந்தவளே! என்னை மறந்து உலகம் துறந்து உன்னை அடைய விரும்பியது எனோ?" "ஏராளம் பூவையரை நான் முகர்ந்தாலும் ஏமாற்றம் இல்லா நடத்தை கொண்டவளே! ஏற்றவள் எனக்கு நீயென நான் ஏதேதோ எண்ணி ஏங்குவது ஏன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்?" / பகுதி: 01 அண்மையில் நான், The Sunday Observer / 17 மார்ச், 2019 என்ற இலங்கை பத்திரிகையை வாசிக்கும் பொழுது என்னை அதிரவைத்த செய்தி, "வடக்கு கிழக்கு பெண்களை, கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது - 150 இற்கு மேற்பட்டோர் 2018 இல் மட்டும் இறந்துள்ளார்கள்" / "Debt drives women to suicide in North and East - Over 150 debt related deaths in 2018 alone " என்ற அறிக்கையே, அதில் முற்போக்கு விவசாயிகள் காங்கிரஷின் [Progressive Peasants’ Congress (PPC)] அறிக்கையின் படி, குறைந்தது 170 பேர் இலங்கை முழுவதும் பரவலாக தற்கொலை செய்து இருப்பதாகவும், அதில் கூடுதலான தற்கொலைகள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பகுதியில், அதாவது தமிழர் பகுதியில், நடந்துள்ளதாகவும் எடுத்து காட்டுகிறது. ஏன் தமிழர்கள் கூடுதலாக தற்கொலை செய்கிறார்கள்? என்ற என் கவலையின் தேடுதலே இந்த கட்டுரையாகும். முதலில் நாம் தற்கொலை என்றால் என்ன என்று பார்ப்போம். நீங்களே உங்கள் சொந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை தற்கொலை எனலாம். இது அநேகமாக மக்கள் தமது வலி அல்லது துன்பத்தில் [pain or suffering] இருந்து தப்பிக்க வேறு மாற்று வழிகள், அந்த கணத்தில் தெரியாத நிலையில், சடுதியாக கடைபிடிக்கும் ஒரு வழி என்றும் கூறலாம். ஆனால் எல்லோரும் அப்படி என்று நாம் அறுதியாக கட்டாயம் கூறமுடியாது. தற்கொலை மூலம் இறந்த மக்கள் பொதுவாக நம்பிக்கையற்ற தன்மை, விரக்தி மற்றும் உதவியின்மை [feelings of hopelessness, despair, and helplessness] போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. மற்றது, தற்கொலையை ஒருவரின் ஒரு தார்மீக பலவீனம் அல்லது அவரின் ஒரு ஒழுக்க குறைபாடு [a moral weakness or a character flaw] என்றும் கூறமுடியாது. ஒருவர் தன்னுயிரை தானே மாய்துகொள்வதையும் கொலை என்று அர்த்தம் தொனிக்க தற்கொலை என்றே நாம் இன்று கூறுகிறோம். அது போலவே, The Oxford English Dictionary முதல் முதல் suicide என்ற சொல்லை 1651 இல் சேர்த்து கொண்டாலும், அந்த சொல்லை மிகவும் வெறுப்புடன் பொதுவாக பார்க்கப்பட்டு, பலர் தமது அகராதியில் அதை போடாமல் சொல்லகராதியில்[vocabulary] மட்டும் விட்டுவிட்டு, அதற்கு பதிலாக “self-murder”, “self-killing”, and “self-slaughter” என்ற வார்த்தைகளை, அன்று பாவித்தனர். ஏன், 2450 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க நாட்டின் தத்துவஞானி சோக்கிரட்டீஸ் (Socrates) கூட "மனிதன் என்பவன் கடவுளின் உடைமைகளில் ஒன்று, எனவே ஒரு மனிதன் தன்னை கொல்ல முடியாது" / "a man, who is one of the god’s possessions, should not kill himself " என்று வாதாடுகிறார். என்றாலும் பிளாட்டோ [Plato] மற்றும் அரிஸ்டோட்டல் [Aristotle] தற்கொலை சில சூழ்நிலைகளில் ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எமது திருவள்ளுவரும் "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்"[969]. என உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள், அதாவது தற்கொலை செய்வார்கள், என்று அதற்கு ஒரு பெருமையே சேர்க்கிறார். அது மட்டும் அல்ல , தமிழரின் அன்றைய கலாச்சாரத்தில் வடக்கிருத்தல் என்று போற்றப்படும் ஒரு செயலையும் காண்கிறோம். வடக்கிருத்தல் பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த ஒரு பழக்க வழக்கமாகும். ஊருக்கு வெளியே ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணா நோன்பிருந்து தமது உயிரை சில காரணங்களுக்காக துறப்பர். இப்படி இறந்தோருக்கு அன்று நடுகல் இட்டு, அவரின் மன உறுதியை பெருமைப் படுத்தும் முகமாக, அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்து வழிபடுவதும் உண்டு. உதாரணமாக, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு புறநானூறு 66 , "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ! சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே." களிப்புநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ! கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ? என்று தற்கொலைக்கு ஒரு புகழாரம் சூட்டுகிறது. அதேபோல இன்றும் தன்னுயிரை தான் ஈயும் சான்றாண்மை தற்கொடையாம் என்று தற்கொலையை தற்கொடை என்று சில சந்தர்ப்பங்களில் புகழ் பாடுவதையும் தமிழர் கலாச்சாரத்தில் நாம் காணுகிறோம். இவைகளை இளம் பருவத்தினர் தொலைக்காட்சியிலோ, திரை அரங்கிலோ அல்லது பத்திரிகை அல்லது புத்தக வாயிலாகவோ பார்த்து இருப்பார்கள், உளவியல் எச்சரிப்பது இவையும் அவர்களின் தற்கொலைக்கு ஒரு தூண்டுதலாகவும் அமையலாம் என்று. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும், அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும் கூறும், அவளின் புகழ் பாடும் நாட்டுப்புறக் கதை, தமிழரின் மத்தியில் சர்வசாதாரணமாக புழங்குவதுடன், அவளுக்கு கோயில் அமைத்து சிறு தெய்வமாக திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் வழிபடுவதையும் காண்கிறோம். அது மட்டும் அல்ல தமிழர்களுடன் தொடர்புடைய மாயன்கள் தற்கொலைக்கு என, ‘இக்ஸ்டாப்’ (Ixtab) என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தவுடன் தற்கொலையை தப்பானதாக மாயன்கள் கருதவில்லை. எனினும் நான் முழுக்க முழுக்க இவையையே தமிழர்களை கூடுதலாக தற்கொலைக்கு தூண்டும் காரணம் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு இது ஒரு தென்பை, வலிமையை, பயமின்மையை கட்டாயம் கொடுத்து இருக்கும். தற்கொலை என்பது திடீரென, ஒருவர் எடுக்கும் சாவுக்குரிய அபாயகரமான முடிவு அல்லது ஒரு செயல் என்றும் மற்றும் தூண்டுதலின் பங்கே இப்படியான சோகமான விடயங்களில் முக்கியமான ஒன்று என்றும் [The role of impulsiveness is one of the saddest things about suicide] அடிக்கடி விவரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், தங்களைக் கொல்ல முயற்சிக்கும் பெரும்பாலான மக்கள் அவ்வாறு செய்ய முதலே திட்டமிடுகின்றனர் என்றும் மனக்கிளர்ச்சி அல்லது உந்துதலே என்று வரையறுக்கப் படுபவை கூட, அவர்கள் முயற்சி செய்வதற்கு முன்பு அப்படியான எண்ணம் அவர்களிடம் இருந்ததாகவும் ஒரு 2007 ஆண்டு ஆஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது. ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு செயல் வடிவத்தை , வலிமையை அதிகமாக உந்துதல்களே கொடுத்து இருக்க வாய்ப்பு அதிகம். இவை ஒரு வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான காரணம். ஏனேன்றால் மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது , தமிழர் சமுதாயம் ஒரு கொள்கைக்காக , நோக்கத்திற்காக தம் உயிரை விட்டவர்களுக்கு நடுகல் வைத்து வணங்கியதையும், அவர்களை சிறு தெய்வமாக்கியதும் மற்ற சமூகங்களில் காண்பது அரிது. அது மட்டும் அல்ல, அந்த பண்பாட்டிற்கு, குறிப்பாக ஈழத்தில் 1980 க்கு பிறகு மீண்டும் உயிர் கொடுத்து இன்று அந்த கலாச்சாரம் மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது வேறு எங்கும் காண்பது அரிது. எனவே இவைகள் கட்டாயம் தமிழர் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தற்கொலை - தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? என்பதை புள்ளிவிபரங்கள் மற்றும் அதற்கான இன்றைய காரணங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம். உலக தற்கொலைத் தடுப்பு சங்கமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதியை சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அறிவித்து உள்ளது. நாமும் எம்மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணத்தை ஓரளவாவது புரிந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லாம், சிறிது நேரம் ஒதுக்கி, தற்கொலை எண்ணமுடைய ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முயலுவோம் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா" "ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா ஒளியில் மிளிர்ந்து அழகைக் காட்டி ஒலி எழுப்பும் வண்டைப் பார்த்து ஒய்யாரி கேட்குது நீ யார் ?" "துள்ளி பாயும் காட்டு மான் துணையுடன் மறைவில் ஒளிந்து இருந்து துரத்தி வந்த புலியைப் பார்த்து துணிந்து கேட்குது நீ யார் ?" "வாமச் சொரூப கோழிக் குஞ்சு வாட்டம் கொண்டு நிழலில் பதுங்கி வானத்தில் வட்டமிடும் கழுகைப் பார்த்து வாக்குவாதம் செய்யுது நீ யார் ?" "மாணவி ஒருவள் கண்ணீர் வடிய மாதா வாக்கிய குருவை நொந்து மாழை மடபெண் வெட்கத்தை விட்டு மாசுபடுத்தியவனைக் கேட்குது நீ யார் ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] வாமச் சொரூப - அழகு மேனி மாழை மட பெண் - இளமையும், மடமையும் உள்ள பெண்
-
"மர்ம காடு"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in கதைக் களம்
எல்லோருக்கும் நன்றி -
"கரை சேர்த்த கல்வி" "அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு" - [குறள் 841] அறிவு இல்லாத நிலையே இல்லாமையிலும் இல்லாமை. மற்றபடி வேறு பல இல்லாமையை பொருட்டாக உலகம் கருதாது. ஆகவே அந்த அறிவு , அந்த கல்வி தான் எல்லாத்தையும் இழந்த முல்லைமலரை கரை சேர்த்தது மட்டுமல்ல, அவளை வாடிய நொந்த மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக, ஒரு விடிவெள்ளியாக மாற்றியது! அவளின் கதைதான் "கரை சேர்த்த கல்வி"!! போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கிராமத்தில், முல்லைமலர் என்ற தமிழ்க் குடும்பம் ஒரு காலத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தது. பரம்பரை பரம்பரையாக உழவர்கள் மண்ணை உழுது வந்த அவர்களது பூர்வீக நிலம் அவர்களின் இருப்பின் இதயமாக இருந்தது. ஆனால் இலங்கையின் உள்நாட்டுப் போர் அவர்களைச் சூழ்ந்தபோது எல்லாம் எதிர்பார்க்காதவாறு மாறிவிட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் குடும்பங்களுக்கு போரின் இறுதி ஆண்டுகள் குறிப்பாக மிக கொடூரமானவை. அதில் இருந்து முல்லைமலரின் குடும்பமும் விதிவிலக்கல்ல. அது மட்டும் அல்ல, ஆயுதப் படைகளுக்கும் கிளர்ச்சிப் போராளிகளுக்கும் இடையில் சிக்கி, அதனால், அவர்கள் தங்கள் வீடு அழிக்கப்பட்டதையும், அவர்களின் நிலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையும் அல்லது காணாமல் போனதையும் உதவியற்றவர்களாகப் அன்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சொத்து, அன்புக்குரியவர்கள் மற்றும் அவர்கள் ஒரு காலத்தில் அறிந்த வாழ்க்கை உட்பட எல்லாவற்றையும் இழந்தனர். தப்பிச் செல்வதைத் தவிர அவர்களுக்கு அந்த நேரம் வேறு வழிதெரியவில்லை, அவர்கள் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தமிழர்களுடன் சேர்ந்து தாமும் தெற்கே ஒரு ஆபத்தான பயணத்தில் சென்று இறுதியில் வவுனியாவை அடைந்து அங்கு அவர்கள் தஞ்சம் அடைந்தனர். வவுனியா பயணம் ஒரு பெரும் பயணமாகவே இருந்தது. தொடர்ச்சியான சோதனைச் சாவடிகள், இராணுவத் துன்புறுத்தல் மற்றும் பசி ஆகியவை அவர்களின் தன்னம்பிக்கைக்கும் மற்றும் உயிர்வாழ்வதற்கான விருப்பத்தையும் சோதித்தன. ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு தடைகளிலும் அவர்கள் ஒரு இன முரண்பாடான நாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே இலங்கை நாட்டின் பழங்குடியாக இருந்தும், இன்று தமிழர் என்ற கடுமையான யதார்த்தத்தை எதிர்கொண்டனர். ஒரு காலத்தில் செழித்துக் கொண்டிருந்த சமூகம் இப்போது பாதுகாப்பிற்காக பிச்சைக்காரர்களாக மாறிவிட்டது போல அவளுக்கு தெரிந்தது. வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் மூலம் தமிழ்க் குடும்பங்களின் பல காணிகள், ஏதோதோ காரணங்கள் கூறி கைப்பற்றப்பட்டன, அவை இப்போதைக்கு திரும்பி வரும் என்ற நம்பிக்கையை அவள் இழந்து இருந்தாள். நெரிசலான சூழ்நிலைகள், உணவுப் பற்றாக்குறை மற்றும் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் அகதிகள் முகாம்களில், குடிசைகளில் வாழ்க்கை பொதுவாக எல்லோருக்கும் கடினமாக இருந்தது. இந்த இறுதிப்போரில் அழிவுகளுக்கு மத்தியில், போரில் கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்த முல்லைமலரின் தாய், ஒரு கனவில் என்றும் ஒட்டிக்கொண்டார்: தனது இளைய மகள் முல்லைமலர் இந்த துன்பத்தை தாண்டி எழுவாள். கல்விதான் ஒரே வழி என்று அவள் திடமாக நம்பினாள். அவள் முல்லைத்தீவில் ஒரு ஆரம்ப பாடசாலை ஆசிரியரும் கூட. அவளின் அந்த பாடசாலை குண்டு மழையால் இடிமுழக்கத்துடன் இடித்து உடைத்தெறிந்த பொழுது, அவள் கண் முன்னாலேயே பல அந்த பாடசாலை மாணவ மாணவிகளும் உடல் சிதறி சாவை அழுகைக் குரலுடன் சந்தித்த அந்த சம்பவம் இன்னும் அவள் கண்ணில் அப்படியே இருந்தது. முல்லைமலரைப் பள்ளிக்கு அனுப்ப தன்னால் முடிந்த வேலைகளைச் செய்தும் மற்றும் அருகில் இருந்த ஆரம்ப பாடசாலையில் தற்காலிக ஆசிரியர் பொறுப்பை பெற்றும் கடுமையாக நீண்ட நேரம் உழைத்தாள். முல்லைமலரின் கல்வியை அவள் தனிப்பட்ட வெற்றியாக மட்டும் பார்க்கவில்லை, மாறாக தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு வழியாக. முல்லைமலர் தனது கல்வியை நீதிக்காகப் போராடவும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கவும், தங்கள் மக்களுக்கு கண்ணியத்தை மீட்டெடுக்கவும் உதவ வேண்டும் என்பது தான் அவளது கனவாக இருந்தது. "கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்" - [குறள் 393] கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். அதை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு இருக்கும் முல்லைமலரின் தாய் தன் மீது சுமத்திய பொறுப்பு சுமையாக இருந்தாலும், தன் அசைக்க முடியாத நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, தன் மகளை எப்படியும் படிப்பிற்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். முல்லைமலரும் அதை உணர்ந்து, படிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டாள். அவள் தினமும் பள்ளிக்கு இரண்டு மைல்கள் நடந்தாள், அடிக்கடி வெறும் வயிற்றில். ஆனாலும், அவளது மனம் படிப்பில் கூர்மையாக இருந்தது, அவளது உறுதிப்பாடு தளரவில்லை. விரக்தியால் சூழப்பட்ட அகதி முகாம்களின் கடுமையான சூழ்நிலையில், முல்லைமலர் தனது புத்தகங்களில் ஆறுதல் கண்டாள். முள்வேலி மற்றும் இராணுவ ரோந்துகளுக்கு அப்பாற்பட்ட ஒரு எதிர்காலத்தை அவள் விரும்பினாள். "கல்வி கரையில, கற்பவர் நாள் சில மெல்ல நினைப்பின் பிணிபல- தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப் பால் உண் குருகில் தெரிந்து." [நாலடியார்: 135] நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும் என்பதை முல்லைமலர் என்றும் மறக்கவில்லை. "வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்" என்கிறான் மகாகவி . கல்வி மூலமே உயர்வு காணமுடியும் என்பதை அழுத்த மாக சொன்னான் பாரதி. இதையும் நன்றாக உணர்ந்த முல்லைமலர், இடைவிடாத முயற்சியால் அவள் தனது தேர்வில் சிறந்து விளங்கினாள். அவளது வெற்றி ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க உதவித்தொகையைப் பெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட பின்னணியில் இருந்தும் அவள் ஒரு அரிய சாதனையை கல்வியில் படைத்தாள். அதனால் அம்மாவின் மகிழ்ச்சி எல்லையற்றது என்றாலும் அவள் முல்லைமலருக்கு முன்னால் இருக்கும் பொறுப்புகளை மீண்டும் நினைவுபடுத்தினாள். "மலர்," அவளது பாசமான, செல்லப்பெயரைப் பயன்படுத்தி அவளுடைய அம்மா கூறினார், "இந்த உயர் படிப்பு உனக்கோ எங்களுக்கோ மட்டுமல்ல. இது நிலம், வீடு, குடும்பம் இழந்த அனைவருக்கும் பயன்படவேண்டும். உங்களுக்காக மட்டுமல்ல, முடியாதவர்கள் அனைவருக்காகவும் நீங்கள் எழ வேண்டும். உங்கள் கல்வியின் மூலம், எங்கள் மக்களுக்கு நீதி கிடைக்க நீங்கள் உதவுவீர்கள். நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கையைத் தருவீர்கள்." என்று அறிவுரை வழங்கினார். "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே!" "வாழி கல்வி செல்வம் எய்தி மனம் மகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே!" சிறப்பான கல்வி மூலம் ஞானம் பெற்று, செல்வத்தை தருகிற ; மன மகிழ்ச்சி தருகிற, பிணக்கமின்றி ஒருவரை ஒருவர் கூடி வாழவைக்கிற கல்வி மூலம் மக்கள் அனைவரும் சமம் என்ற சிந்தனை மேலோங்கி நாங்கள் வாழ்வோம் என்கிறான் பாரதி . ஆனால் மலரின் தாயோ ஒரு படி மேலே போய்விட்டாள்! முல்லைமலர் சட்டம் படிக்க பல்கலைக் கழகத்தில் நுழையும் போது, தனக்காக அல்ல, தன் சமூகத்திற்காக கல்வியில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு நோக்கம் இல்லை என்பதைத் தன்னுடன் எடுத்துச் சென்றாள். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நிலத்தை மீட்பதற்காகவும், அவர்களை நீண்டகாலமாக ஒதுக்கிவைத்திருந்த அமைப்பில் சமத்துவத்திற்காகவும் போராடும் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற உறுதியுடன், தன்னை ஆர்வத்துடன் படிப்பில் ஈடுபடுத்திக் கொண்டாள். ஆனால் பல்கலைக்கழக வாழ்க்கை எதிர்பாராத தொடர்புகளையும் கொண்டு வந்தது. ஒரு நாள் முல்லைமலர் தன்னைப் போலவே, அங்கு போரினால் இடம்பெயர்ந்த மூத்த தமிழ் மாணவரான ஆரூரானை தற்செயலாக நூலகத்தில் சந்தித்தாள். அவன் புத்திசாலியாகவும், இரக்கமுள்ளவனாகவும், மக்களின் நலனில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தான். தமிழ் சமூகத்தின் எதிர்காலம், அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் மற்றும் தமிழர்கள் தங்கள் மானத்தையும் மண்ணையும் மீட்டெடுக்கும் ஒரு சமூகத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பற்றி இருவரும் அதன் பின் பல மணி நேரம், பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக விவாதித்தனர். அதேவேளையில், அவர்களின் சந்திப்புக்கள், அவர்களுக்கிடையில் ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்தி, அது நாளடைவில் காதலாக பரிணமித்தது. ஆரூரனும்அவளுடைய அன்பை, வலியை புரிந்துகொண்டு, அவளது கனவுகளைப் பகிர்ந்து கொண்டான், அவர்களின் வாழ்க்கையின் குழப்பங்களுக்கு மத்தியில் அவனின் துணை அவளுக்கு அமைதியை அளித்தான். ஆனால் பரீட்சைகள் நெருங்க நெருங்க அவளது படிப்பும் தீவிரமடைந்தது, அதேநேரம் தாயின் எதிர்பார்ப்புகளின் கனம் அவளை அழுத்தியதால், முல்லைமலர் தன்னால் எந்த கவனச்சிதறலையும் படிப்பில் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கவனமாகவும் இருந்தாள். அவளுடைய மக்களின் தேவை மிகவும் அவசரமானது. அதனால் கூடுதலாக படிப்பில் அக்கறை செலுத்தியதால், ஆரூரனுடனான அவளின் தொடர்புகள் குறைந்தன. "மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு" மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு. அந்த சிறப்பை கொடுப்பது சிறப்பு சித்தியடைதலால் ஏற்படும் மதிப்பே என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது. ஒரு நாள் மாலை, வவுனியாவில் உள்ள அவர்களது சிறிய அறையில், முல்லைமலர் தனது தாயிடம் தனது இதயத்தில் ஏற்பட்ட மோதலைப் பற்றி வெளிப்டையாகப் பேசினாள். "அம்மா," அவள் மெதுவாக தயக்கத்துடன் ஆரம்பித்தாள், "நான் பல்கலைக்கழகத்தில் ஒருவனை சந்தித்தேன். அவன் பெயர் ஆரூரன், எங்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதுடன் நாம் இருவரும் நெருக்கமாகியும் விட்டோம். அவனும் என்னை மாதிரியே எங்கள் மக்களின் போராட்டத்தைப் புரிந்துகொண்டு, நான் செய்ய முயற்சிப்பதை ஆதரிக்கிறான் என்றாலும், எனக்கு ஒரு பயமும் இருக்கு..." என்றாள். மகளின் முகபாவத்தில் தெரிந்த அவளின் அவாவையும் விருப்பத்தையும் தெரிந்து கொண்ட அவளின் அம்மா அவளைப் உற்றுப் பார்த்தாள். "எதற்கு பயப்படுகிறாய், மலர்?" “உங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் நான் என் மனதில் அளித்த வாக்குறுதியிலிருந்து, அந்த எங்கள் இலக்கிலிருந்து, காதல் ஒருவேளை என்னைத் திசைதிருப்பும் என்று நான் எனோ பயப்படுகிறேன். நீங்கள் எனக்காக மிகவும் தியாகம் செய்துள்ளீர்கள், நான் உங்களை வீழ்த்த, உங்களுக்கு கவலை கொடுக்க விரும்பவில்லை. என் கவனத்தை, இந்த தருணத்தில் இழக்க என்னால் முடியாது, அது தான் அந்தப் பயம்." என்றாள். அம்மா கையை நீட்டி மகளை கிட்ட அழைத்தவாறு, “என் குழந்தை, காதல் ஒரு அழகான விடயம். ஆனால் உங்கள் இதயம் இப்ப பிளவுபட்டதா என்று நீங்களே உங்களை கேட்டுக் கொள்ள வேண்டும். நாங்கள் முல்லைத்தீவில் இருந்து பல இழப்புகளுடன் வெகுதூரம் இன்று வந்துவிட்டோம், அதிக தியாகம் செய்துவிட்டோம் . நீ தான் என் ஒரே நம்பிக்கை. இந்த காதல் உன்னை தடுத்து நிறுத்தும் என்று நீ நம்பினால் மட்டும், நீ ஒரு தேர்வு கட்டாயம் விரைவில் செய்ய வேண்டும். உன் காதலா அல்லது உன் இலட்சியமா என்பதை என்றாள். அன்னையின் பேச்சைக் கேட்ட முல்லைமலரின் கண்கள் கண்ணீர் வழிந்தன. “எங்கள் மக்களை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுக்காக நான் போராடத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று உறுதியாக தாயிடம் சொன்னாள். பல்கலைக்கழகத்துக்கு திருப்பிய ஓரிரு நாட்களுக்குப் பிறகு, முல்லைமலர் ஆரூரானை வளாகத்தில் சந்தித்தாள். அவர்கள் இருவரும் ஒரு பெரிய மரத்தடியில் அமர்ந்தனர், அங்கு அவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி பல உரையாடல்களைப் பகிர்ந்து கொண்டனர். “ஆரூரன்,” முல்லைமலர், உணர்ச்சியால் கனத்த குரலில், “நான் உன்னுடன் ஒன்று பேச வேண்டும்” என்று ஆரம்பித்தாள். ஆரூரன் அவளை ஏறிட்டு பார்த்தான். “என்ன தப்பு, மலர்? ஏன் நீ இன்று தள்ளி , இடைவெளி விட்டு இருக்கிறாய்" கவலையுடன் கேட்டான். "நான் எங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்," அவள் குரல் கொஞ்சம் நடுங்கியது. "நான் உன்னை ஆழமாக நேசிக்கிறேன், உன்னை என்றும் மறக்க மாட்டேன், ஆனால் எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது - அதை என்னால் புறக்கணிக்க முடியாது. என் மக்களுக்கு நான் தேவை. நான் படித்து, பட்டம் பெற்று, எழுந்து நீதிக்காக போராட வேண்டும் என என் அம்மா எல்லாவற்றையும் தியாகம் செய்தார். அதிலிருந்து என்னைத் திசைதிருப்ப எதையும் அனுமதிக்க முடியாது, அதனால்த்தான் காதலை, அதன் உணர்வை கொஞ்சம் மறக்க முயலுகிறேன்" என்றாள். அவன் அமைதியாக இருக்க முயன்றாலும் ஆருரனின் முகம் வாடியது. “மலர், உங்கள் அர்ப்பணிப்பு எனக்குப் புரிகிறது. ஆனால் காதலுக்கும் சேவைக்கும் இடையே நாம் தேர்வு செய்ய வேண்டியதில்லை. நாங்கள் ஒன்றாக வலுவாக இருக்க முடியும், அருகருகே ஒன்றாக அங்கே வேலை செய்யலாம்" என்றான். முல்லைமலர் ஒரு தயக்கத்துடனும் அதேநேரம் ஒருவித உணர்வுடனும் தன் தலையை ஆட்டினாள், கண்களில் கண்ணீர் வழிந்தது. "அது உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே இரண்டு தோணியில் இப்ப கால் வைக்க விருப்பவில்லை. என் கவனம் உடனடியாக இன்று வாடி இருக்கும் எம் மக்களுக்கு செலுத்த வேண்டும், அதில் உறுதியாக இருக்கிறேன். நான் தோல்வியுற்றால், அவர்களின் நம்பிக்கையை மட்டுமல்ல எல்லாவற்றையும் நான் இழக்க வேண்டி வரும், என் அம்மாவின் தியாகம் உட்பட. நான் அதை நடக்க அனுமதிக்க முடியாது." என்றாள். ஆரூரன் மெல்ல தலையசைத்தான், இதயம் கனத்தது. “நான் உன்னை மதிக்கிறேன், மலர். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் என்றால், நான் உன் வழியில் தடையாக என்றும் நிற்க மாட்டேன். தூரத்தில் இருந்தாலும், கட்டாயம் நான் உன்னை அங்கிருந்து ஆதரிப்பேன், நேசிப்பேன்." என்றான். அதன் பிறகு தன் தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முல்லைமலர் படிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள் . அவளுடைய கடின உழைப்பும் உறுதியும் பலனளித்தன. அவள் கௌரவ பட்டம் பெற்றாள், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக நிற்பதற்காக ஒரு இளம் வழக்கறிஞராகப் புகழ் பெற்றாள். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கிற்குத் திரும்பிய அவள், அங்கு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை மீட்பதற்காகவும், இடம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் அயராது போராடத் தொடங்கினாள். முல்லைமலரின் பெயர் விரைவில் நம்பிக்கை அடையாளமாக மாறியது. அவள் சந்திப்புகளை ஏற்பாடு செய்தாள், விழிப்புணர்வை ஏற்படுத்தினாள் மற்றும் வேறு யாரும் செய்யத் துணியாத வழக்குகளை எடுத்துக் கொண்டாள். அவளது பேரார்வம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை கோரி ஒரு இயக்கத்தைத் தூண்டியது. அவளின் அம்மாவின் கனவு நனவாகி விட்டது - முல்லைமலர் தன் மக்களின் முதன்மைக் குரலாக மாறினாள். காதலை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக துறந்தாலும் முல்லைமலர் தன் பணியில் அதேநேரம் நிறைவு கண்டாள். நீதிக்கான காரணத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க அவள் தேர்வு செய்தது முற்றிலும் சரி என்று உணர்ந்தாள், எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு கண்ணியத்தை மீட்டெடுக்க அவளுடைய முயற்சிகள் உதவியது. அவள் மூலமாக, முல்லைத்தீவு மற்றும் அதற்கு அப்பால் உள்ள மக்கள் தமது உரிமைகள் மீட்கப்பட்டு, தமது நிலம், தமது வலிந்து காணாமல் போனவர்கள் மற்றும் அன்றாட அத்துமீறலுக்கு ஒரு முடிவு காணும் வரை ஓயாத ஒரு அலையைக் கண்டனர். முல்லைமலர் தன் மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க தன் இதயத்தில் மலர்ந்த காதலை துறந்தாள். இறுதியில், தன் மக்கள் மீதான அவளுடைய காதல் எல்லாவற்றிலும் மிகப்பெரிய அன்பாக மாறியது. அவள் பெற்ற அந்த கல்வி தான் அவளை வாடிய நொந்த மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக, ஒரு கலங்கரை விளக்காக மாற்றியது. அவளை, அந்த பெருமை மிக்க நிலைக்கு, "கரை சேர்த்த கல்வி" யை அவள் என்றும் மறக்கவில்லை! "கற்ககசடறகற்பனவகற்றபின் நிற்கஅதற்குத்தக" என்பது அவளின் உள்ளத்தில் என்றும் நிலைத்து இருந்தது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"மர்ம காடு" 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' பற்றி அலசி ஆராய, அதன் மூலப்பிரதியான மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலின், ஆங்கில பிரதியை [1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படட] வாசிக்கத் தொடங்கினேன். ஆறாம், ஏழாம் அத்தியாயத்தில், இலங்கைக்கு விஜயனின் வருகை மற்றும் அவனின் ஆட்சி மிக சுவாரசியமாக பல பொய்களையும் நம்ப முடியாத நிகழ்வுகளையும் கொண்டு இருந்தன. விஜயனும் தோழர்களும் இலங்கைத் தீவில் கரை ஒதுங்கி இலங்கைக்கு வந்தேறு குடிகளாக நின்ற போது 'அங்கு பெண் நாய் உருவில் குவேனியின் பரிவாரத்தைச் சேர்ந்த ஒரு யக்ஷினி (Yakshini) தோன்றினாள் என்றும், குவேனி 'பதினாறு வயதுப் பருவ மங்கையின் எழிலுருவை எடுத்துக் கொண்டு நாநாவிதமான அணிகலன் பூண்டவளாக ஆகி விஜயனுடன் இருக்கும் வேளை ' என ஒரு மர்ம தீவாக இலங்கையை வர்ணிக்கத் தொடங்கியது. நேரம் இரவு பன்னிரண்டு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது. என்னை அறியாமல் உறக்கம் என்னைக் கவ்விக் கொண்டது. கடல் அலைகள் கட்டுப்பாடு இழந்து, கரையை நோக்கி அசுர வேகத்தில் ஏறி இறங்கி முட்டி மோதின. நான் பயணம் செய்த படகும் அதில் அகப்பட்டு, உடைந்து சிதறி, நல்லவேளை, நான் ஒரு உடைந்த பலகைத் துண்டு ஒன்றைப் பிடித்து எதோ ஒரு கரை சேர்ந்தேன். அங்கே ஒரே அமைதி, சற்று தூரத்தில் பெரும் காடு, என்றாலும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் பேரிரைச்சல் மட்டும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. எனக்கு அந்த இரைச்சல் எரிச்சலை ஊட்டியது. அதில் இருந்து தப்ப காட்டை நோக்கி திரும்பி பார்க்காமல் ஓடினேன். அது ஒரு ஒரு பரந்த மற்றும் பழமையான காடு போல் இருந்தது. மகாவம்ச கதையில் வாசித்த நிகழ்வுகளின் ஆர்வத்தால் உந்தப்பட்ட நான், என் முதல் அடியை அந்த மங்கிய இருண்ட காட்டுக்குள் வைத்தேன். மர்மமே வடிவான இந்த மர்ம பூமியில் அடங்கியுள்ள நிகழ்வுகள் பலவற்றில் பஞ்சம் இல்லாமல் மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்து கிடக்கின்றன. அதில் அவ்வப் போது விஞ்ஞானத்தால் தீர்க்கப் படுகின்றன. உதாரணமாக நீண்ட நாள் மர்மத்திற்கு பின் பெர்முடாவில் ஏதும் மர்மம் இல்லை என்று அங்கு நடந்த பல சம்பவங்களுக்கு விளக்கம் அளித்தது விஞ்ஞானம். எனவே அது ஒரு மர்ம காடு போல் இருந்தாலும், நான் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அந்த காட்டின் புதிரான கவர்ச்சி என்னை உள்ளே வா வா என்று அழைத்தது. நான் தனி மனிதனாக, விசித்திரமான அதிசயங்களைப் மகாவம்சத்தில் வாசித்து இருந்ததால், மற்றும் அவற்றை வெறும் மூடநம்பிக்கை அல்லது புரளி என்று நம்பியவன் என்பதால், எந்த பயமும் தயக்கமும் இன்றி, சூரியன் வானத்தை தங்க நிறத்தில் வரைந்த போது, அதன் வெளிச்சம் சிறு சிறு கீறல்களாக காட்டுக்குள் எனக்கு வழிகாட்டிட உள்ளே , அதன் இதயமான, மையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என் வருகையை அங்கீகரிப்பது போல், சலசலக்கும் இலைகள் மற்றும் சலசலப்பான கிசுகிசுக்களுடன் காடு என்னை வரவேற்றது. படிப்படியாக, நான் ஆழமாகச் காட்டிற்குள் சென்றேன், என்னைச் சுற்றியுள்ள உலகம் ஒரு கனவுக் காட்சியாக எனக்கு தெரிந்தது. ஒளிரும் பூஞ்சைகள் (Fungii) பாதையை ஒளிரச் செய்தன, மற்றும் விசித்திரமான தாவரங்கள் மென்மையான காற்றுடன் நடனமாடின. காடு இப்ப உண்மையில் ஒரு மர்மமாகவே எனக்குத் தெரிந்தது. நான் எனது பயணத்தை மேலும் தொடர்ந்தபோது, நிலவு ஒளிரும் குளத்தின் மென்மையான பளபளப்பில் கவர்ந்த நான், அதன் அழகில் மயங்கி, ஒரு வெட்டவெளியில், நீரின் ஓரத்தில் அமர்ந்தேன். அப்போது தான் அவளைக் கண்டேன் - என்னை அப்படியே மயக்கும் கருணையின் தரிசனம் அது!பிரபஞ்சத்தின் ஆழத்தை பிரதிபலிக்கும் கண்கள் மற்றும் குளிர்ந்த ஆத்மாவின் இதயத்தை உருக்கும் புன்னகையுடன் ஒரு அழகிய நேர்த்தியான பெண் அவள். அவளை எப்படி நான் வர்ணிப்பேன் என்று எனக்குப் புரியவில்லை. அத்தனை அழகு அவள். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தெய்வ தாசிகளைப் பழிக்கத்தக்க அற்புதமான அழகு. அழகிய அகன்ற விழிகளைக் கொண்ட ஊர்வசி இவளிடம் தோற்று விடுவாள். கட்டழகியான இந்த மங்கை எங்கே? என் மனம் என்னிடம் இப்ப இல்லை. என் கண்கள் இமை வெட்டவில்லை. ''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்'' என, காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, யாய் மறப்பு அறியா மடந்தை- தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே." நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய ... அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள், இப்படி அவள் அழகு தேவதையாக இருந்தாள். நான் தெரிந்தும் தெரியாமலும் காட்டுக்குள் நுழைந்தாலும், - ரம்பை, ஊர்வசியை விட மிக சிறந்த மற்றொரு அழகியை பிரம்மா படைத்தார். அது தான் திலோத்துமை. அவளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் - ஈடிணையற்ற இந்த அழகியைப் பார்த்ததும், விடிகாலையில் பறவைகளின் ஒலி; வானிலே தெளிந்த ஒளி.. நிலவு- உரோகிணி என்னும் மீனுடன் கூடிய ஓரை (Constellation) நல்ல நாள் - அந்த நாளில் மணவீட்டினை அலங்கரித்து நடை பெற்ற திருமணம் போல் இருவரும் கூடும் இந்த நாள் நல்ல நாளாகட்டும் என்று எனக்குள் நான் முணுமுணுத்தேன். "புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்," நானும் அவளும் பல மணிநேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அவள் ஏற்கனவே என்ன அறிந்தவள் போல் சிரமமின்றி சிரித்து சிரித்து கதைத்தாள். எனது இதயம் தானாகவே மந்திரவாதியின் மந்திரத்தால் பிணைக்கப்பட்டது போல அவளுடன் இணைந்தது. நான் மீண்டும் மீண்டும் தீக்குளிக்கும் அந்துப்பூச்சி [விட்டில் பூச்சி] போல அவள் பக்கம் இழுக்கப்பட்டேன். வெறும் மனிதனின் மோகத்தை விட அது மேலானதாக இருந்தது. ஒரு மாலை நேரத்தில், சூரியன் அடிவானத்தில் மறைந்து, வானத்தை துடிப்பான வண்ணங்களால் வரைந்தபொழுது, அவள் என்னை காட்டின் இதயத்தில் மறைந்திருந்த ஒரு புனித தோப்புக்கு அழைத்துச் சென்றாள். அங்கு, அவள் அந்த காட்டின் மர்மத்தை, அதன் உண்மையை வெளிப்படுத்தினாள். கண்ணீர் ததும்ப அவளின் அந்த வாக்குமூலம் இருந்தது. தான் சாதாரண பெண் அல்ல என்றும் ஆனால் ஒரு பழங்கால ஆவி, பல நூற்றாண்டுகளாக காட்டில் பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினாள். எது எப்படி என்றாலும் என் உணர்ச்சிகளை என்னால் அடக்க முடியவில்லை. என் காதல் கதை, ஒரு மரண மனிதனுக்கும் அழியாத ஆவிக்கும் இடையே ஒரு நித்திய பிணைப்பு போல் இருந்தாலும், விஜயனும் [மனிதனும்] குவேனியும் [ராட்சத குலமும்] தம்மபாணி என்ற நகரத்தை ஏற்படுத்தி தம்பதிகளாக சில ஆண்டுகள் வாழ்ந்தது போல, ஏன் நான் அவளுடன் வாழக்கூடாது என என் மனம் என்னைக் கேட்டது. ஆனால் அவள் திடீரென வெள்ளைத் துணியால் போர்க்கப்பட்ட, அந்தரத்தில் உலாவும் ஒரு உருவாக, என்ன விட்டு விலகத் தொடங்கினாள். காட்டின் இருட்டில் அந்த வெள்ளை உருவம் பளபளத்தது. நான் ஓடிப் போய் அவளை தடுக்க முற்பட்டு, தழுவ முயன்றேன். ஆனால் அது உடலற்ற ஒரு உருவம் என்பது அப்ப தான் எனக்கு தெரிந்தது. அங்கு அவளும் இல்லை, அந்த அழகிய உடலும் இல்லை. குட்டிச் சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான சொற்கள் உள்ளன. ஆனால் அவள் இதில் ஒன்றிலும் இல்லை. அப்படி என்றால் அவள் யார்? காட்டின் மர்மம் என்ன ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. திடுக்கிட்டு கண் விழித்தேன், மகாவம்ச நூல் அப்படியே விரித்தபடி ஏழாம் அத்தியாயத்தில் இருந்தது. கவினி என்ற 'பேரழகு படைத்தவள்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபான குவேனியின் படம் அதில் வெள்ளை உடையில் வரையப்பட்டு இருந்தது. நான் கடைசியாக மர்மக்காட்டில் பார்த்த அதே உருவம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
- 1 reply
-
- 1
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 03 பகுதி 02 இல் நாம் முக்கிய மான, முதுமையில் தனிமையைப் பற்றிய, முதல் ஐந்து தகவல்களை பார்த்தோம். "சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே." என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நற்றிணை 210 ,பிறரைத் துன்புற விடாமையே சான்றோர் மதிக்கும் செல்வம் என்கிறது. அப்படி யென்றால், எமது பெற்றோரை எம் மதிப்புக்குள்ள முதியோரை தனிமை படுத்தி, அதனால் தனிமை அவர்களை துன்புறுத்த நாம் விடலாமா? என்பதை நாம் கட்டாயம் ஒரு தரமாவது சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனையை தூண்ட நான் மேலும் சில தகவல்களை கீழே தருகிறேன். 6. சமூக தனிமை பொதுவாக நீண்டகால நோய்க்கு வழி வகுக்க லாம். உதாரணமாக, நீடித்த அல்லது வீரியம் குறைந்த நாள்பட்ட நுரையீரல் நோய் [chronic lung disease],கீல்வாதம் [arthritis], பலவீன மான அசைவுத்தன்மை [impaired mobility], மற்றும் மன ச்சோர்வு [depression] ஆகும். எனவே சரியான பரா மரிப்பு ஒன்றை அவர்க ளுக்கு உறுதி செய்வதன் மூலம் இவற்றை நாம் குறைக்கலாம். உதாரணமாக, வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு தொலை பேசி யில் கதைப்பதாலும் அவர்களிடம் போய் வருவதா லும் [phone calls and visits] இவற்றின் தாக்கங்களை குறைக்கலாம். அப்படியே மற்றவர்களுக்கும் ஆகும். இது மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு [high blood pressure] கூட வழி வகுக்கிறது. 7. சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட மூத்த வர்கள் [Socially isolated seniors] அதிகமாக எதிர் கால த்தைப் பற்றிய நம்பிக்கை யற்ற வர்களாக பொது வாக இருக்கிறார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, சமூகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் [community - based programs and services] அங்கு கட்டாயம் தேவைப்படுகிறது. 8. உடல் மற்றும் புவியியல் தனிமை [Physical and geographic isolation] சமூக தனிமைக்கு அநேகமாக வழி வகுக்கிறது. இங்கு உடல் தனிமை என்பது மனித தொடர்புகள் மிக அருகி காணப்படும் ஒரு நிலை அல்லது ஒரு தனிமை சிறையில் இருப்பது போன்ற ஒரு நிலை எனலாம் [limited Human contact or solitary confinement].அதே போல புவியியல் தனிமை என்பது தனது இனத்தில் இருந்து பிரிந்து இருத்தல் எனலாம். உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ஆறுக்கு ஒரு முதியோர் உடல், பண்பாடு மற்றும் புவியியல் தடைகளுக்கு [physical, cultural, and/or geographical barriers] முகம் கொடு த்து, அதனால் அவர்கள் தங்கள் சக உறுப்பினர்கள் மற்றும் சமூக ங்களில் [peers and communities,] இருந்தும் விலக்கப் படுகிறார்கள். சலுகை மற்றும் சேவைகள் [benefits and services] பெற்று தங்கள் பொருளாதார பாது காப்பை [economic security] மேம்படுத்தும் வாய்ப்பை இந்த விலகல் தடைசெய்கிறது. அது மட்டும் அல்ல, ஆரோக்கியமான, சுயாதீன வாழ்க்கையை வாழக்கூடிய திறனை யும் தடை செய்கிறது. முது மையில் தனிமையில் இருப்பவர்களுக்கு பொது வாக நீண்ட கால பராமரிப்பும் தேவைப்படுகிறது. 9. ஒருவர் தனிமையையும் தனிமை படுத்தலையும் எதிர் நோக்க பெரிய ஆபத்து காரணியாக அமை வது,அவர் தனது துணையான கணவனையோ அல்லது மனைவியையோ இழப்பது ஆகும். பொது வாக கையறுநிலை [bereavement] தனிமையை ஏற்படுத்துவதுடன், கூடவே சமூகத்துடனான பரஸ்பரத்தையும் [social interactions] இழக்க வழி கோலுகிறது. மேலும் இன்று வாகனத்தை பாது காப்பாக ஓட்டும் ஆற்றல் [safe driving expectancy] இருபாலாருக்கும் 70 வயதை தாண்டினாலும், இன்னும் பல முதியோர் தமக்கு போக்கு வரத்து வசதிகள் பற்றாது என உணர்கிறார்கள். ஆகவே இதுவும் தனிமையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது. 10. முதியோரை பராமரிக்கும் குடும்ப உறுப்பினர் [family caregiver] கூட சமூகத்தில் இருந்து தம்மை தனிமைப்படுத்தும் ஒரு ஆபத்தை பொதுவாக எதிர் பார்க்கிறார்கள். குடுப்ப உறுப்பினராக இருந்து, பெற்றோரை, கணவனை அல்லது மனைவியை, அல்லது இன்னும் ஒரு குடும்ப உறுப்பினரை பராமரிப்பது ஒரு மகத்தான பொறுப்பு ஆகும். உதாரணமாக, அந்த உறுப்பினர் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோயில் [Alzheimer’s disease], அல்லது மனச் சோர்வினால் ஏற்படும் பைத்திய மான டிமென்ஷியா நோயில் [dementia], அல்லது ஒரு உடல் வலுக்குறைவில் [a physical impairment] இரு ந்தால், அது பராமரிப்பவருக்கு பெரும் பொறுப்பாக அமைகிறது. இதனால், அந்த குடும்ப பராமரிப்பவர் தனது சமூக தொடர்புகளை குறைக்க வேண்டி அல்லது புறம் தள்ள வேண்டி இருக்கலாம். இது அவர்கள் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்து கிறது. 11. தனிமை தொற்றும் [contagious] தன்மையுடையது. அதாவது ஒருவர் தனிமையில் இருக்கும் பொழுது ,அந்த தனிமை அநேகமாக அவரின் நண்பருக்கோ அல்லது அவர் தொடர்பு கொள்ளும் ஒருவருக்கோ பரவக் கூடிய சந்தர்ப்பம் உண்டு, இதனால் தங்கள் சமூக பிணையலை [social cohesion] பாது காக்கும் பொருட்டு, மக்கள் அவர்களிடம் இருந்து தம்மை மேலும் தனிமைப்படுத்த பார்க்கி றார்கள். இது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அது மட்டும் அல்ல தனிமையான மக்கள் ஆரோக்கிய மற்ற நடத்தைகளில் [unhealthy behavior] தம்மை பொதுவாக ஈடுபடுத்து கிறார்கள். உதாரணமாக, ஆரோக்கியமற்ற உணவு, குறைந்த உடற்பயிற்சி [lack of physical activity], புகை பிடித்தல் [smoking] போன்றவையாகும். எனவே ஒரு சமூக சூழலில் வாழ்வதே இவையே தடுக்கும் ஒரு வழியாகும். மேலும் அவர்கள் தொண்டூழியராக [Volunteering] தொழிற்படுவதன் மூலம் தனிமையையும் தனிமை படுத்தலையும் குறைக்க முடியும். முதியோர்கள் தமது அனுபவங்களை அறிவாற்ற ல்களை பயன் படுத்தி தமது சமூகத்திற்கு பங்களிக்க முடியும். இது அவர்களின் வாழ் நாளை கூட்டுவதுடன் [boost longevity] மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கும் [mental health and well-being] பங்களி க்கிறது. நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள் என்றால், கட்டாயம் சுகாதார தொடர்பான பாடங்கள், கணனி சம்பந்த மான பாடங்கள், அல்லது உடற்பயிற்சி சம்பந்த மான பாடங்கள் போன்றவற்றில் பங்கு பெறுவது நன்மை பயர்க்கலாம்? 12. தொழில் நுட்பம் [Technology] ஓரளவு தனிமையை குறைக்கலாம் என நாம் எதிர் பார்க்கலாம். உதாரணமாக, காது கேட்க்கும் தன்மையை இழந்தவர்களுக்கு காதொலிக்கருவி [hearing aid ] ஒன்று கொடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணை ப்பதன் மூலம் அவர்களின் தனிமையை குறைக்கலாம். அதே போல உடல் பயிற்சிகள் [Physical activity] தனிமையை குறைக்கி ன்றன. உதாரணமாக,கூட்டு உடற் பயிற்சி [Group exercise programs] இதில் முக்கியமான ஒன்றாகும். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாத ஒன்றா யினும் அதை பற்றிய விபரங்களை, உண்மைகளை அறிவதன் மூலம் நாம் அதை தடுக்க அல்லது குறைக்க முடியும். பொதுவாக நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக பல மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இது கிராமப் பகுதியில் குறைவு. வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடு மையை அனுபவிக்கும் நிலையில் யார் யார் என்று பொதுவாக பார்த்தால், குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், தனிமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனை க்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என நாம் வகைப் படுத்தலாம். இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் கிராமப்புறப் பகுதிகளை விட பொதுவாக, மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். பெற்றெ டுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோ ரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தி யாகப் படிக்கு ம்போதே நமக்கு வலிக்கிறது என்றா ல், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? குறிப்பாக ஒரு வெளி நாட்டிற்கு குடிவரவாளர்களாக தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் அந்த நாட்டின் வாழ்வுச் சூழலு க்குள் பொருத்திக்கொள்வ தற்கு எதிர்கொ ள்ளு ம்தடைகள் ஒரு புறம் இருக்க, புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்த வர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளை களை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளை களால் தனித்துவிடப்படும்போது மிகப்பெ ரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள் என்ப தும் குறிப்பிடத் தக்கது. ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டி யது. எனவே முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டிய டிக்கும் வகையில் முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொ டுப்ப து, ஃபேஸ்புக்கை [Facebook] இயக்கச் சொல்லி க்கொடு ப்பது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் முதியவர்களை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன். இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டா ட்டங்கள், விடுமுறைகள்... கூட்டுக்குடும்பம் என்றால் வயதான வர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையருக்கு ஒரு பாது காப்பாக முதியோர் இல்லம் சேர்ப்பவர்கள் இன்று பலர். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்... ஒருக்கா எம்மை நினைக்க ... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அது தவிக்கிறது. மேலும் வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோ ர்களை தனிமை வாட்டுகிறது. மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோ ர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று
-
"கீதை பிறந்தது" "கீதை பிறந்தது தர்மத்தை விளக்கவே மேதை கிருஷ்ணன் அருச்சினனுக்கு போதிக்கவே! காதை கொடுத்துக் கேட்டவன் தயங்கினான் பாதை புரியாமல் போரில் நின்றானே!" "தத்துவவாதியின் அறிவுரையோ ஒரு பக்கம் தத்துவம் சொன்னவனே மீறியதோ மறுபக்கம்? தந்திரம் நிறைந்த மாயோனின் கூத்தில் தயாளகுணன் கர்ணன் மடிந்ததும் தெரியாதோ?" "தர்மத்தை பாதுகாக்கப் பூமிக்கு வந்தவனே அர்த்தமே புரியாமல் வஞ்சகம் புரிந்தானே! வார்த்தையில் அழகாய்க் கூறிய அவனே தேர்ந்து எடுத்ததோ பொய்யும் பித்தலாட்டமுமே!" "அன்பை விதைத்தால் மனிதம் உயரும் அறம் நிலைநாட்டினால் பண்பு மலருமே! அவதாரம் எடுத்து போதித்த கொள்கை அநீதி வழியில் சென்றது ஏனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தாய்மை" "காதல் உணர்வில் இருவரும் இணைய காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]