-
Posts
1085 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"முகநூல்" "முகநூல் படும்பாடு தலையை சுற்றுது முகர்ந்து பார்க்கினம் காமம் தேடி முகத்தை ரசிக்கினம் காதல் நாடி முழுதாய் அலசினம் நட்பு வேண்டி" "முத்து முத்தான அறிவும் அங்குண்டு முழக்கம் இடும் கவிதைகளும் உண்டு முடங்க வைக்கும் போலிகளும் அங்குண்டு முடிந்தவரை ஏமாற்றிக் கறப்பவரும் உண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 33 முடிவுரை திராவிடர்களின் தோற்றுவாய், ஆஃப்பிரிக்காவுடன் அவர்களின் தொடர்பு, ஆரியர்களின் இந்தியா வருகை, தெற்கு இந்தியாவிற்கு அவர்களின் [திராவிடர்களின்] குடிபெயர்வு பற்றி இன்று பல கோட்பாடுகளும் மற்றும் ஆய்வுகளும் விளக்கம் அளிகின்றன. அந்த விளக்கம் மூலம், திராவிடர்கள் சிந்து சம வெளியின் ஆரம்ப நிறுவனர் என்பதையும், இந்தியா உப கண்டத்தின் தொல்குடி மக்கள் இவர்களே என்பதையும், இவர்களின் மூலத்தை மூல-ஈலமைட்டு, சுமேரியா, மூல-சஹாராவில் [Proto-Elamite, the Sumerian, the Proto-Saharan] தேட வேண்டும் என்பதையும், எடுத்து கூறுகிறது. எல்லா கோட்பாடுகளும் ஆய்வுகளும் அவை எந்த விளக்கத்தை கொடுத்தாலும் எல்லாம் திராவிடர் ஒரு கம்பீரமான திறமையான இனம் எனபதில் ஒன்றாய் உள்ளன. ஆஃப்பிரிக்காவுடனான திராவிடர்களின் தொடர்பு இலகுவில் நிராகரிக்கக் கூடியது அல்ல, அது மட்டும் அல்ல அதில் ஆதாரம் இல்லாமலும் இல்லை. கோட்ப்ரே ஹிக்கின்ஸ், தனது Anaclypsis என்ற முதன்மை ஆக்கத்தில் [a lengthy two - volume treatise written by religious historian Godfrey Higgins, and published after his death in 1833] ஹெரோடோடஸ் [Herodotus] என்ற கிரேக்க வரலாற்று அறிஞரின் கதை ஒன்றை எடுத்து கூறுகிறார். அங்கு கருப்பு இனத்தவர்களின் நாட்டிற்கான ஹெரோடோடஸின் பிரயான அனுபவத்தை கூறும் போது, "ஹெரோடோடஸ் கிரேக்க நாட்டிற்கு திரும்பிய பின் அவரை சூழ்ந்த மக்கள் அவரை பார்த்து எங்களுக்கு எதியோப்பியா என அழைக்கப்படும் கருப்பு இன மக்கள் வாழும் அந்த சிறந்த பெரும் நாட்டைப் பற்றி கூறுங்கள் எனக் கேட்டதற்கு, ஹெரோடோடஸ் பதில் அளிக்கும் போது, அங்கு இரண்டு பெரும் சிறப்பு வாய்ந்த எதியோப்பியா நாடுகள் உண்டு என்றும், ஒன்று இந்தியாவிலும் மற்றது எகிப்திலும் என்றார்" என குறிப்பிட்டு உள்ளார். ஆஃப்பிரிக்கா கண்டத்திலும் தென் கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதியிலும் பரவியிருந்த இந்த கருப்பு மக்களின் சிறப்பு மிகுந்த நாகரிகத்தினை ஒன்றாக பார்க்கும் பயனிகளினதும் வரலாற்றாசிரியர்களினதும் குறிப்புகளில் இது முதலாவதும் அல்ல, இறுதியும் அல்ல. திராவிடர்கள் பொதுவாக கருப்பு நிற உடல் கட்டமைப்பையும் கருத்த முடியையும் கண்ணையும் பெரிய நெற்றியையும் கொண்டு உள்ளார்கள். இப்படி யாக ஆஃப்பிரிக்கருடன் ஒத்த உடல் கட்டமைப்பை, தோற்றத்தை திராவிடர்கள் கொண்டு இருப்பதால், இவர்கள் ஆஃப்பிரிக்காவை தோற்றுவாயாக கொண்டவர்கள் என கருதுகிறார்கள். என்றாலும் உடல் பண்பின் ஒற்றுமைகள் எல்லா நேரமும் ஒரு நெருங்கிய தொடர்பை காட்டாது. ஏனென்றால், ஒரு இனத்தின் தோலின் நிறம் சூரிய ஒளியின் பிரகாசமான நிலைமைக்கு ஏற்றவாறு காலப்போக்கில் மாற்றம் அடைகிறது என நவீன மரபியலாளர்கள் [Modern geneticists] பரிந்துரைகிறார்கள். இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒன்று காக்கேசியன் [Caucasian] எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலியன் [Mongolian] எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் [Negroid] என்கிற கருப்பினம். மேற்கண்டவாறு மனித இனப்பாகுபாடு இருப்பினும், தற் காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இனத்துக்கு இனம் கண், வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது. தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன. பொதுவாக நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராலாய்ட் [Australoid] என்று துணை இனமாக பிரித்துக்காட்டுகின்றனர். உலக மக்கள் அனைவரும் ஆஃப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களே. காலப்போக்கில் அந்ததந்த காலநிலைக்கு ஏற்ப பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக வேறுபட்ட உடல் தோற்றங்களை, தோல் நிறத்தை தழுவிக் கொண்டது. இதனால் மனித இன மானது வெள்ளையினம், கருப்பினம், சீன இனம், திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்டன. திராவிடர்களின் ஆப்பிரிக்கன் ஒத்த தன்மை இரண்டு இடங்களிலும் நிலவிய ஓரளவு ஒரே விதமான கால நிலையின் விளைவாகும். அது மட்டும் அல்ல செனிகல், மாலி, நைகர், சாட், சூடான், எதியோப்பியா, சோமாலியா போன்று தென் இந்தியாவும் அதே அட்சரேகையில் [latitude] இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதை விட ஆஃப்பிரிக்காவின் கிழக்கு கரையையும் தென் இந்தியாவையையும் பிரிப்பது இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து சமுத்திரம் மட்டுமே. மேலும் இந்தியா உப கண்டம் கிழக்கு ஆஃப்பிரிக்காவுடன் முன்னர் இணைக்கப்பட்டு இருந்ததாக புவியியலாளர்கள் [geologists] முன் மொழிகிறார்கள். கருத்த ஆஃப்பிரிக்கர்களினதும் திராவிடர்களினதும் மொழி ஒற்றுமை பல அறிஞர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த மொழி ஒற்றுமை நவீன ஆஃப்பிரிக்க மொழியில் மட்டும் இன்றி பண்டைய எகிப்து மொழியிலும் காணப்பட்டுள்ளது. உதாரணமாக, கலாநிதி க.ப.அறவாணன், கலாநிதி கிள்ய்டே அஹமத் வின்டர்ஸ், கலாநிதி U. P. .உபத்யாய [Dr Aravaanan, Dr Clyde Winters, Dr. U. P. Upadhyaya] போன்றோர்கள் ஆஃப்பிரிக்கர்களுக்கும் திராவிடர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள். என்றாலும் இவர்கள் அனைவரும் 1970 ஆண்டளவில் தான் எழுதி உள்ளதுடன் இவர்கள் எவருமே மரபியலாளர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நைகர் - கொங்கோ குடும்பத்தைச் சேர்ந்த ஆஃப்பிரிக்க மொழிகளில் [Niger - Congo family of languages] இருந்து திராவிட மொழி தோன்றியதாக ஆஃப்பிரிக்க - திராவிட கருது கோள் வாதாடுகிறது. ஆகவே திராவிட பண்பாட்டுடன் தொடர்புடைய பெரும்பாலான கலாச்சார மற்றும் தொழில்நுட்பங்கள் ஆஃப்பிரிக்காவை மூலமாக கொண்டவை என்கிறது. இதனால் சில ஆய்வாளர்கள் இந்தியர்களை, இந்தோ - ஆஃப்பிரிக்கன் [Sudroid] இனம் என அழைக்கிறார்கள். செனிகல் ஜனாதிபதி லெப்போல் சேடர் செங்கோர் [Leopold Sedar Sengkor], உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கருத்தரங்கில் 23ம் திகதி மே மாதம்,1974 விரிவுரை நடத்தும் போது, அவர் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் முந்தய வரலாற்று அறிஞர்களை நோக்கி இந்து சமுத்திரம் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே தோன்றி இருந்தால் ஒழிய மற்றும் படி கிழக்கு ஆஃப்பிரிக்காவிற்கும் தென் இந்தியாவிற்கும் இடைப்பட்ட இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சி செய்து அங்கு புதைந்து கிடைக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார். இது அதிகமாக கடற்கோள் மூலம் கடலின் அடியில் மூழ்கிய ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாஃப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்ட லெமூரியா அல்லது குமரி கண்டம் என இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் ஒரு நீண்ட நிலப்பரப்பை அவர் குறிப்பிட்டு இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. மனித இனத்தின் கதை எமது மரபணுக்களில் குறியீட்டு சொல் [code word] மூலம் எழுதப்பட்டுள்ளது. மரபணு (gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப் படுகின்றன. மரபுப் பண்புகளுக்கு மரபணுதான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) என்பது மரபணுத்தொடரில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும். இது மரபணு விகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினத்தைப்பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. இன்று நாம் மரபணுவை வாசிக்கக்கூடியதாக உள்ளது. ஆகவே இதுவரை கிடைக்கப்பெற்ற எல்லா தொல்பொருள் தவல்களையும் மொழியியல் ஆய்வுகளையும் இந்த புதிய டிஎன்ஏ [DNA] ஆய்வுகளுடன் இணைத்து ஒரு வரலாறு எடுத்துரைத்தால் அதில் ஒரு உண்மை அல்லது அர்த்தம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே / ஒரே இனமே. பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். இவர்கள் 1] கட்டையான மக்களாக பொதுவாக 5 அடி 4 அங்குல [1.626 மீட்டர்] உயரத்தையும், 2] தோல், பழுப்பு நிறத்தில் இருந்து கிட்டத்தட்ட கருப்பு நிறம் வரையும். 3] அதே போல கண் கருப்பில் இருந்து இருண்ட பழுப்பு வரையும், 4]பொதுவாக நீண்ட தலையோட்டையும் , நீண்ட குறுகிய முகத்தையும் அகன்ற நெற்றியையும், 5] கருப்பு அல்லது இருண்ட பழுப்பு முடியையும், 6] நேரான, நீண்ட,குறுகிய மூக்கையும், 7] இரத்த வகைகள் பொதுவாக O (37 சதவீதம்), A (22 சதவீதம்), B (33 சதவீதம்). and AB (7 சதவீதம்) ஆகவும் திராவிடர்களின் பொதுவான இனப்பாகுபாடுடைய பண்புகள் அமைகின்றன. தமிழர்கள், ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது என மரபு வழித் தமிழர் வரலாறு கூறுகிறது. கடல் கொந்தளிப்பில் இரு தரம் தமது நாட்டை பறி கொடுத்தார்கள் என்றும், ஒவ்வொரு தடவையும் மன்னன் புது தலை நகரத்தை நிறுவி அடுத்தடுத்து மூன்று சங்கங்களில் - தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் - தமிழை வளர்த்தான் என மேலும் கூறுகிறது. பண்டைய நாகரிகங்களான சுமேரிய நாகரிகத்துடனும் சிந்து சம வெளி நாகரிகத்துடனும் தமது வரலாற்றை ஒப்பிட்டு பார்க்க அல்லது இணைக்க இந்த செவிவழி கதையே அவர்களை தூண்டியது எனலாம். ஹிராஸ் பாதிரியார் [Father Heras] சிந்து சம வெளி மக்களை திராவிடனுடன் அடையாளம் காட்டுகிறார். 1960 இல் இந்த திராவிட அடையாளத்தை நிருவிப்பதற்காக இஸ்காண்டினேவிய [வட ஐரோப்பாவின் ஒரு பகுதியாகும். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஆகிய நாடுகள் இதில் அடங்கும் / Scandinavian] ஆசிய ஆய்வுகள் நிறுவனம் பல அறிவிப்புக்களை செய்தது. இந்த கோட்பாடை ஜப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞருமான பேராசிரியர் நொபொரு கராஷிமா [Noboru Karashima ] தீவிரமாக ஆதரிக்கிறார். மேலும் இன்றைய பல நவீன ஆய்வுகள் மொகஞ்சதாரோ ஹரப்பா உட்பட்ட பெரிய நகரங்களை உள்ளடக்கிய பண்டைய சிந்து சம வெளியில் வாழ்ந்த குடி மக்கள் திராவிடர்கள் என ஊகிக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் தமது தோற்றுவையை கி மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் தேடுகிறார்கள். எப்படியாயினும் அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த, இன்றைய டிஎன்ஏ தொழில்நுட்பத்துடன் ஒரு ஒழுங்கு படுத்திய ஆய்வு தேவைபடுகிறது.. 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஹரப்பா காலத்தை சேர்ந்த நாலு எலும்பு கூடுகள் வடமேற்கு இந்தியாவில், இன்றைய அரியானா மாநிலத்தில், ராகிகர்ஹியில் [Rakhigarhi] உள்ள பண்டைய இடுகாடு ஒன்றில் 23 ம் திகதி, தை மாதம், 2015 முதல் மேற்கொண்ட அகழ்வு ஆராச்சியில் தோண்டி எடுக்கப்பட்டன. அந்த இறந்தவர் உடலிலிருந்து கொஞ்சம் திசுக்கள், எலும்பு மாதிரிகளை சேகரித்து அதில் இருந்து அவரது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை தடயவியலாளர்கள் [forensic scientists] ஆராய்ந்து பார்த்து, சிந்து வெளி மனித குடியேற்றத்தின் வரலாற்றினதும் தோற்றுவாயினதும் இரகசியத்தை வெளிப் படுத்துவார்கள் என தொல் பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மேலும் ராகிகர்ஹியில் நிலம் மணலாக இருப்பதால் அந்த எலும்பு கூடுகள் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டு இருக்க சந்தர்ப்பம் அதிகமாக உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே விரைவில் விஞ்ஞான பூர்வமான ஹரப்பானின் அடையாளம் வெளிச்சத்திற்கு வரும் என நாம் எதிர் பார்க்கலாம். பன்மொழிப் புலவரும் பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம், மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன் [Professor A. Sathasivam from Sri Lanka and Dr. Loganathan Muttarayan from Malaysia.], போன்றோர்கள் சுமேரியனின் அடையாளத்தை திராவிடர்களுடன் திவீரமாக பரிந்துரைக்கின்றனர். அது மட்டும் அல்ல, 1975ல் காலமான பேராசிரியருமான வரலாற்றாளருமான கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி [K.A. Nilakantta Sastri,] சுமேரிய, திராவிட ஆலய வழிப்பாட்டின் ஒற்றுமையை எடுத்துக் காட்டினார். தமிழர்களை அப்படி இல்லாவிட்டால், திராவிடர்களை மத்திய தரைக்கடல் பகுதியுடன் இணைக்கும் கருதுகோளை இன்னும் ஆராய்ச்சியாளர் Dr. N லஹோவரி [Dr. N. Lahovary] போன்ற குறிப்பிடத்தக்க பல அறிஞர்கள் வாதிடுகிறார்கள். இந்த கோட்பாடை உறுதிப்படுத்த ஒருவர் இரண்டு வழிமுறையில் ஆராய வேண்டி உள்ளது. இந்தியாவில் இருக்கும் ஒத்த மொழி குடும்பங்களுடன் சுமேரிய மொழியை நன்றாக ஆராய்தல் வேண்டும். இரண்ட்டாவதாக இன்று கிடைக்கக் கூடிய பண்டைய சுமேரியர்களின் எலும்புக்கூடுகளை உடல் பரிசோதனை செய்து சுமேரியருக்கும் திராவிடருக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கண்டறிய வேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 34 தொடரும்
-
'பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்' "ஒட்டாவா நகரில் காலை பொழுதில் கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி பாட்டன் கையை மெல்ல பிடித்து வட்ட மிட்டு துள்ளி குதித்து முட்டி மோதி இன்பம் பொழிந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க பாட்டு படித்து இனிமை காட்டும் குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து எட்டு திக்கும் துள்ளி குதித்தேன்" "சொட்டு சொட்டாய் விழும் மழையில் பட்டும் படாமலும் நனைந்து விளையாடி நீட்டி நிமிர்ந்து வாங்கில் படுத்து லூட்டி அடித்து சிரித்து மகிழ்ந்தோம்" "ஒட்டி உறவாடும் அன்பு மழலைக்கு வெட்டி பேச்சு பட்டாம் பூச்சிக்கு மொட்டாய், மலரா குட்டி பெண்ணுக்கு நட்சத்திரம் சிமிட்ட நானும் போற்றினேன்" "கட்டி அனைத்து முத்தம் கொடுத்து தட்டி கொடுத்து உற்சாகப் படுத்தி ஒட்டி உடை அழகு தேவதைக்கு பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 02 முதுமையில் தனிமைக்கான காரணங்களையும் அதன் விளைவு களையும் நேர த்துடன் ஓரளவு விபரமாக நாம் அறிவதன் மூலம் அதை இலகுவாக தடுக்கலாம். மனிதர்களுக்கு வயது போகப் போக, தனிமையில் வசிக்கும் நிலையின் வாய்ப்பும் அதிகமாக அதிகரித்து செல்கி றது. தனிமையில் வாழ்வது, அவர் சமூ கத்தில் இருந்து தனிமை படுத்தப் பட்டார் என்பதை குறிக்காது எனினும், கட்டாயம் ஒரு நோய் தாக்க நிலைக்கு அடிகோலக் கூடிய காரணிகளில் ஒன்றாகும். மற்றது எவ்வளவு அடிக்கடி முதியோர்கள் சமூக நடவடிக்கைகளில் ஈடு படுகிறார்கள் என்பதும் ஆகும். பொதுவாக, வயது போகப் போக சமூக தொட ர்புகள் குறைய தொடங்கு கின்றன. உதாரண மாக வேலையில் இருந்து ஓய்வு பெறுதல், நெரு ங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இறப்பை தழுவுதல், அல்லது அவரால் தன் பாட்டில் அசைதல் முடியாமை [lack of mobility] போன்றவை யாகும். தனிமைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க , அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூர மானதும் ஆகும். இந்த முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்து விடுவ தில்லை. எனவே முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படு த்திக் கொண்டால் அதை அவரால் தன்பாட்டில் தவிர்க்கவும் முடியும். பொதுவாக,ஒருவர் முதுமை நிலையை அடையும் பொழுது, அவரின் உடலின் செயல்பாடு குறையத் தொடங்கு கின்றன. உதாரணமாக, திசுச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறை பாடு, நரம்பு மண்டலத் தளர்ச்சி, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவி யல் பாதிப்புகள் என பல்வேறு முறை களில் உடல் தொழிற்பாடும் நலமும் குன்றுகின்றன. மேலும் உடல் பல்வேறு நோய்களுக்கும் இலகுவாக உட்படு கின்றது. இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமை ப்படுத்லின் காரணமாகவே ஏற்படுகிறது என லாம். இன்று ஒருவரின் ஆயுள் எதிர்பார்ப்பு உலக அளவில் 71.5 ஆண்டுகளை (68 ஆண்டுகள் 4 மாதம் ஆண்களுக்கும் 72 ஆண்டுகள் 8 மாதம் பெண்களுக்கும்) தாண்டியுள்ளது என கணிக்கப் பட்டு ள்ளது. என்றாலும் இது நாட்டுக்கு நாடு அங்கு நிகழும் சூழலைப் பொறுத்து வேறுபடுகிறது. உதாரணமாக,ஒட்டு மொத்தம் ஆயுள் எதிர்பார்ப்பு ஜப்பானில் 82 .6 ஐயும் , ஸ்விட்சர்லாந்து 81 .7 ஐயும் , ஆஸ்திரேலியா 81 .2 ஐயும்,கனடா 80 .7 ஐயும், சிங்கப்பூர் 80 .0 ஐயும் , ஐக்கிய இராச்சியம் 79 .4 ஐயும், ஐக்கிய அமெரிக்கா 78 .2 ஐயும் , அப்படியே மலேசியா 74 .2 ஐயும் ,இலங்கை 72 .4 ஐயும் , இந்தியா 64 .7 ஐயும் தாண்டி யுள்ளது. பொதுவாக இவர்கள் இரண்டு விதமான பிரச்சனை களுக்கு முகம் கொடுக்கிறார்கள். முதலாவது, அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதி க்கப்படுதலும் அதன் காரணமாக,வெளியில் தனி மையில் போக முடியாததால், ஓர் இடத்தில் முடங்கிப் போதல், அதனால் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரைச் சார்ந்தி ருத்தல், சமூகத் தொடர்பு குறைந்து போதல் போன்றவையாகும். மற்றது மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, பிறரைச் சார்ந்திருப்பது, அவர்க ளால் உதாசீனப்படுவது, நிந்திக்கப்படுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுது போக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை [ஆர்வ மின்மை] போன்றவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும். இவர்களது மிக முக்கிய தேவை என்பது அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவையாகும். ஆனால், அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் மிகக் மிக்க கொடுமை யானது அவர்கள் அனுபவிக்கும் முதுமையில் தனிமைதான். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர் முதுமையில் தனிமையில் பேச்சு துணை இன்றி சிலவேளை இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது சில வேளை இருப்பது, தனது சுகதுக்கங்களை மனம் விட்டு பேச முடியாது சிலவேளை இருப்பது, போன்ற நிலைமைகள், அவர்களை கட்டாயம் துன்பப் படுத்தும். மேலும் இவர்கள் தங்கள் பிரச்சினை களை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாத போது, அவற்றுக்குத் தீர்வு என எதுவும் அவர்கள் கண்ணில் படுவதும் இல்லை. நாளை நமக்கு முதுமை வரும் போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே இன்று நம் முன் நடமாடும் தாய் தந்தையரை, மற்றும் முதியோரை, நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை,நாம் அனைவரும் எமது மனதில் ஏற்றுக் கொண்டாலே இதற்கு விடை இலகுவாகி விடுகிறது எனலாம். இனி முக்கிய சில தகவல்களை கீழே தருகிறேன். 1. முதுமையில் தனிமை இறப்பு சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது. உதாரணமாக, முதிர்ந்தோரில், 52 அல்லது அதற்கு மேற்பட்டோரில், சமூகத்தில் இருந்து தனிமையாதலும் மற்றும் தனிமையில் இருப்பதும் [social isolation and loneliness] இறப்பு சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.பொதுவாக, ஒரு மனிதன் தனித்தோ அல்லது எந்த வித சமுக தொடர்பு இன்றியோ இருப்பது, அதனால் ஒன்றி இருக்கும் பொழுது, அவர்களின் நம்பிக்கை உடையவர்களால் ஏற்படும் உடனடியான மருத்துவ கவனிப்பு அற்றுப் போகிறது. இது கடுமையான தீவிர நோய் அறிகுறிகள் ஏற்பட வழி வகுக்கலாம். எனவே, தனிமையை குறைப்பதே இறப்பின் வீதத்தை குறைக்கும் முதல் காரணியாக நாம் கொள்ளலாம். 2. தனிமையை ஒருவர் உணரத் தொடங்குவது, அவரின் உடல் ,மன ஆரோக்கியத்தை [physical and mental health] கட்டாயம் பாதிக்கும். அதிலும், முக்கி யமாக, முதுமையில் தனிமை மிகவும் பொல்லாதது. இங்கு தனிமை என்பது எதோ தனித்து கண் காணாத இடத்தில், யாவரும் இன்றி, தனி மனிதனாக வாழ்வது அல்ல. தனிமை எல்லா நிலை யிலும் உண்டு. உதாரணமாக, குடும்பத்தினரோடு, ஆனால், பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்களும் தனி மையில் இருப்பவர்களே! அனுபவம், அறிவு எல்லாம் மிகுந்த முதுமை பொது வாக இனிமையாக இருக்கலாம் என ஒருவர் எண்ணலாம். ஆனால் உண்மை அப்படி அல்ல. நோய்நொடிகள், தனிமை என்று முதுமையை வாட்டும் பிரச்சினைகள் பல இன்று உண்டு. இதிலிருந்து தப்பிக்க வழிகளும் சில இருக்கின்றன. இளமையாக இருக்கும்போதே நமக்கும் முதுமை உண்டு என்பதை உணர வேண்டும். அந்த உண்மை புரிந்தாலே முதுமை இனிமை ஆகிவிடும். ஆகவே நாம் தான் நம்மை தயார் படுத்த வேண்டும். உதார ணமாக, முதியோர் நிலையம் [senior centers], அப்ப டியான தனிமை உணர்வுகளை தோற்கடிக்க வைக்கும் ஒரு வழியாகும். 3.ஒருவர் தனிமையை உணரும் பொழுது அல்லது தனிமையை அனுபவிக்கும் பொழுது,அவரின் அறிவாற்றலில் வீழ்ச்சி [cognitive decline] ஏற்பட்டு , டிமென்ஷியா [dementia] என்ற மனத்தளர்ச்சி யினால் ஏற்படும் மறதிநோய், புத்திமாறாட்டம், போன்ற ஆபத்துக்கள் நிறைய உண்டு. இவை ஆய்வு மூலம் நிருவப் பட்டுள்ளன [feelings of loneliness are linked to poor cognitive performance and quicker cognitive decline.]. வயதான பிறகு மனது பந்த பாசங்களை எதிர்பா ர்க்கும். இருந்தாலும் அவர்களோடு அதிக எதிர் பார்ப்பு களை வைத்திருக்காமல், எம்மை நாம் தயார் படுத்தினால் முதுமையை ஓரளவாவது இனிமை ஆக்கலாம். உதாரணமாக, டாக்டர் கசியப்போ [Dr. Cacioppo] ,நாம் ஒரு சமூக இனங்க ளாக [social species] பரிணாமம் அடைந்து உள்ளோம் என்கிறார். எனவே எங்கள் மூலையில் அப்படியான எண்ணம் இறுக்கமாக படிந்துள்ளது. எனவே அவை நிறைவேறாத வேளையில், அது உடல் மற்றும் நரம்பியல் [physical and neurological] தாக்கங்களை உண்டாக்கலாம். 4.முதியோர்கள் முறை கேடுகளால் அல்லது முதி யோர் வன்கொடு மைகளால் மிகவும் பாதிக்கப் படுவதற்கு [vulnerable to elder abuse], சமூக தனிமை [Social isolation] இலகுவாக வழிவகுக்கிறது, பல ஆய்வுகள் இதை ஆதரிக்கின்றன. மேலும் இதை கருத்தில் கொண்டு,ஜூன் 15-ல் உலக முதியோர் வன்கொடுமை விழிப்பு ணர்வு நாள் உலகம் எங்கும் அனுசரிக்கப்படுகிறது. 2050-ல் ஒட்டுமொத்த இளைஞர்களின் எண்ணிக்கையை விடவும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு. ஏற்கெ னவே உலக அளவில் வாழும் பெருவாரியான முதியோர் உடல் மற்றும் மனரீதியிலான வன்கொடு மைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதையும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. இதனை முன்னிறுத்தி முதியோர் எதிர்கொள்ளும் சவா ல்களையும் பிரச்சினைகளையும் அவதா னிக்கத் தொடங்கியது உலக சுகாதார அமைப்பு. அதன் விளைவாக முதியோர், முதியோரைப் பராமரி ப்பவர்கள் மற்றும் அரசாங்கம் ஒன்றுகூடி முதியோருக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாளை ஐ.நா. சபை 2006-ல் அறிவித்தது என்பது குறிப்பிடத் தக்கது. 5. நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்ற ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோர் பெரும் பாலும் சமூகமாக தனிமை ப்படுத்த ப்ப டலாம் [likely to be socially isolated]. இவர்கள் மற்ற முதியோர்களை விட குறைந்தது இரண்டு மடங்கு தனிமையில் வாழ நேரிடலாம். இவர்கள் அதிகமாக ஒற்றையாக [single] ஆக வாழ்வதுடன் மேலும் அதிகமாக தமக்கென பிள்ளைகள் அற்றவர்க ளாகவும் இருப்பார்கள். அது மட்டும் அல்ல அவர்களின் இரத்த உறவினர்களிடம் [biological families] இருந்து அநேகமாக பிரிந்து வாழ் பவர்க ளாகவும் இருப்பார்கள். அவர்களை ஆதரிப்பதற்கு பொதுவாக அவர்களளைப் பற்றிய களங்கம் மற்றும் பாகுபாடு [Stigma and discrimination] ஒரு தடையாக உள்ளது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும்.
-
"முப்பெருந் தேவியர்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in கவிதைக் களம்
எல்லோருக்கும் நன்றிகள் -
"ஈரமான எண்ணங்கள்" [ஒரு தோல்வியுற்ற காதல் கதை] பருத்தித்துறை வடக்கு நகரத்தின் காற்று எப்போதும் கடல் வாசனை சேர்ந்து உப்புடன் கனமாக இருந்தது. அரனும் சூரியாவும் சிறுவயதிலிருந்தே ஒருவரை யொருவர் நன்கு அறிந்தவர்கள், ஒன்றாக கூடிக் குலாவி விளையாடியவர்கள், இன்று வளர்ந்து வாலிப வயதை அடைந்துவிட்டார்கள், ஆனால் இன்றும் கடற்கரையில் வெறுங்காலுடன், அலைகளுக்கு எதிராக குழந்தைகள் போல் ஒன்றாக ஓடுகிறார்கள். அவர்களிடையே எப்போதும் பேசப்படாத எதோ ஒரு இணைப்பு ஒன்று இருந்தது, அவர்கள் இன்று வளர்ந்தாலும் அவர்களின் இதயங்களை ஒன்றாக இணைக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத ஒரு அன்பு , கவர்ச்சி, உணர்வு இருந்தது. அரண் அவளை நெருங்கும் போது சூரியாவின் கண்கள் ஒளிரும் விதம், நாட்கள் எவ்வளவு இருட்டாக, சோர்வாக தோன்றினாலும் அரனின் புன்னகை அவள் முகத்தில் எப்போதும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் விதம் அவளுக்குள் ஒழிந்து இருக்கும் ஒரு திடமான எண்ணத்தை, உணர்வை சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருந்தன. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, காதல் கடலைப் போல கணிக்க முடியாதது. அது உங்களை அலையுடன் முன்னோக்கி கொண்டு செல்லலாம் அல்லது உங்களை மீண்டும் கடலின் ஆழத்திற்கு உள் நோக்கி இழுக்கலாம். எப்பொழுதும் தன்னைப் பற்றி மிகவும் உறுதியாக கருதுவது போல் வெளிக்காட்டிக் கொள்ளும் அரண், உண்மையில் ஒரு தெளிவற்ற மனதைத் தான் கொண்டிருந்தான். அவனது எண்ணங்கள், தங்கள் கிராமத்தை அடிக்கடி நிழல் கொடுத்து மறைக்கும் பருவ கால மேகங்களைப் போல, எப்போதும் மாறிக் கொண்டே இருந்தன, அதனால், அவனால் உறுதியாக முடிவெடுக்க முடியாதவனாக, இருந்தான். அவள் திடமான எண்ணங்களை கொண்டு இருக்கும் அதேவேளை அவனது ஒரு ஈரமான எண்ணங்களாக [wet thoughts] இருந்தது. "மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்" மனதின் சிறப்புத் தன்மை வாழும் உயிர்களுக்கும் நன்மை பயக்கும் என்பது எனோ அவனுக்கு புரியவே இல்லை. அது நட்புக்கும் காதலுக்கும் கூட ஒரு நன்மை, வலிமை கொடுக்கும். ஆனால், "ஈரமான எண்ணங்கள்" என்பது தெளிவற்ற, திரவம் போல் அங்கும் இங்கும் ஓடக் கூடிய ஒரு உணர்ச்சி மனநிலையைக் குறிக்கும். அதனால், அதை புரிந்துகொள்வது கடினம். எண்ணங்கள் முழுமை அடையாமல், தண்ணீர் எப்படி பிடிப்பது கஷடமோ அப்படி வழுக்கிக் கொண்டு போவது. ஒரு திடமான ஒன்றல்ல. அப்படித்தான் அரன் இருந்தான். அதேநேரம் ஈரமான என்பது கருணை, அன்பு அல்லது மனக்கசிவு என்பதையும் கூட குறிக்கலாம். அவனும் அப்படித்தான் இரண்டு கருத்துக்களுக்கும் ஒத்து இருந்தான். "கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண, பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும் மெய் ஒன்று சார, செவிஒன்று கேட்க விரும்பும் யான் செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே" என்பார் பட்டினத்தார். இங்கே மனம் ஒன்றிச் செய்யமல், மலரை எடுத்து இட்டு அருச்சனை செய்யும் போது வெறும் கை மாத்திரம் இயங்கினால் போதாது, வாக்கும் மனமும் ஒன்று பட வேண்டும் என்கிறார். அப்படித் தான் அவனும் அவளை நேசிக்கிறான், தன் மனதில் காதல் என்ற மலரைத் தூவி பூசிக்கிறான். ஆனால் அவனது மனம் வள்ளலார் சொன்ன பேய்க் குரங்கு போல் ஊசல் ஆடுகிறது. இந்த அவனின் இயல்பை சிலதடவை சூரியா கவனித்தாலும், அதை தொடக்கத்தில் பெரிதுபடுத்தவில்லை. சில சந்தர்ப்பங்களில், இருவரும் உரையாடும் பொழுது, அரன் நழுவிப் போகும் எதையோ பிடித்துக் கொள்ளப் போராடுவது போல அவனது கண்கள் அவளிடம் இருந்து விலகி எங்கோ தூரப் போவதைக் கண்டுள்ளாள். என்றாலும் அரன் அவளை என்றுமே நேசித்தான். ஈரமான எண்ணத்திலும் அவள் ஒரு மூலையில் அவனின் அன்பால் சூழ்ந்து இருந்தாள். அது அவளுக்கு, அவனின் பல நடவடிக்கைகளில் வெளிப்படையாகி உறுதியளித்தது. என்றாலும் அது விழித்த நேரம் கலைந்து போகும் கனவு போல போகக் கூடாது என்பதே அவளின் பிரார்த்தனை இன்னும் சிறிது நேரத்தில் கதிரவன் தன் கதிர்களை மடித்துக் கொண்டு துயிலைப் போகும் மாலை நேரம் அது. கடற்கரை முழுக்க காதலர்கள் அல்லது நண்பன் நண்பிகள் இருவர் இருவராக வண்ண வண்ண நிறத்தில் ... காதலியின், நண்பியின் தாவணிக் குடைக்குள் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்துக் கொண்டும், எதோ என்னவோ கேட்டு கேட்டு கெஞ்சிக் கொண்டும் இருந்தார்கள். குழந்தைகள் பல, வெள்ளை மணலில் தவண்டு போகும் நண்டுகளை விரட்டிப் பிடிக்க பின்னால் ஓடி, அவை நிலத்துக்குள் புகுந்து ஒழிக்க, தோற்று போய் சிணுங்கிய முகங்களோடு பரிதாபமாக நிற்க்க ... அவர்கள் இருவரும் கடற் கரையில் ஒரு ஓரமாக ஒன்றாக அமர்ந்தனர். சூரியன் அடிவானத்திற்குக் கீழே கதிரவன் மூழ்கி, தண்ணீரின் மேற்பரப்பில் ஒரு மென்மையான, தங்க ஒளியை விட்டுச் சென்றது. சூரியா அரனின் தோளில் தலை சாய்த்து, அவனது இருப்பின், காதல் அரவணைப்பை உணர்ந்தாள். அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த, அதே கிராமத்தில், ஒரு நாள் அவர்கள் ஒன்றாக இல்லற வாழ்க்கையை உருவாக்குவார்கள் என்று அவள் கற்பனை செய்து, அதை அவள் கனவு கண்டாள். அவளால் அவர்களின் எதிர்காலத்தை மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதில் உறுதியாகவும் இருந்தாள். கொஞ்ச நேரத்தால், இருவரும் கைகளை பிடித்தப் பிடி, இளம் பருவத்தில் ஓடி விளையாடிய மாதிரி, அலைகளை காலில் மிதித்த படி மெதுவாக ஓடி ஆனந்தமாக கழித்தார்கள். சூரியாவின் கூந்தல் கடல் காற்றில் முகத்தை மறைத்து மறைத்து விளையாட விரலால் அதைச் சரி செய்தபடி அன்ன நடைபோட்டாள். உன் காலழகையாவது நான் தொட்டு வணங்குகிறேன் என கடல் அலைகள் ஒன்றின் பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு அவள் கால்களை முத்தமிட்டு முத்தமிட்டு மகிழ்ந்து போனது. வழக்கத்தை விட சூரியா இன்று அழகாய் ஒளிர்ந்து கொண்டு இருந்தாள். ஆனால், அவன் எனோ திடீரென ரசிக்கும் மன நிலையில் இல்லாமல் போய் விட்டான். அரனின் மனம் அடிக்கடி இருந்தது போல் வேறெங்கோ போய் விட்டது. அவனது எண்ணங்கள் அதற்குள் சிதறி, அவனது வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கின. எப்போதுமே அவனுக்கு மிகவும் கட்டுப்பட்டதாக உணர்ந்த சிறிய கிராமத்திலிருந்து விலகி, வாய்ப்புள்ள வாழ்க்கையைத் தொடர, அவன் கொழும்புக்குச் செல்ல வேண்டும் என்று அவனது குடும்பத்தினர் விரும்பிய அந்த எண்ணம் அவனை எப்பொழுதும் திடீர் திடீரென தூண்டிக் கொண்டு இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் வெளியேறுவதைப் பற்றி நினைக்கும் போது, சூரியாவின் முகம் அவன் மனதில் தோன்றி, முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தது. "என்ன யோசிக்கிறாய்?" சூரியா அமைதியாகக் கேட்டாள், அலைகளின் மென்மையான மோதலில் அவள் குரல் அவனுக்கு கேட்கவில்லை. ஒருவேளை அந்த அவனது "ஈரமான எண்ணங்கள்" அவனைத் தடுமாற வைத்து விட்டது. தன் எண்ணங்களை எப்படி வார்த்தைகளாக்குவது என்று தெரியாமல் அரண் தயங்கினான். அவன் பொய் சொல்ல விரும்ப வில்லை, ஆனால் அவனது மனதில் மேக மூட்டமான மூடு பனி, அங்கு குடியேறிய ஈரமான எண்ணங்கள், விடயங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத படி, எப்படி அதை விளக்குவது என்பது பற்றி தெளிவாக உணர முடியலாம் மறைத்து விட்டது. "நான் நான் ... எனக்குத் தெரியாது," என்று அவன் இறுதியாகக் கூறினான், அவனது குரல் தாழ்ந்தது, மெல்லிய குரலில் எந்த உணர்வையும் காட்டாமல் . "நான் எல்லாவற்றையும் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்காலம் .. எங்களை .... கொழும்பு....” முணுமுணுத்தான். சூரியா எழுந்து மீண்டும் உட்கார்ந்தாள், அவள் கண்கள் அவன் முகத்தை .. இன்னும் அங்கு எதையோ தேடியது ... "நீங்கள் எங்கள் இருவரையும் பற்றி நினைக்கும் போது ... நீங்கள் என்ன அங்கு பார்க்கிறீர்கள்?" அரண் உடனடியாக அவள் கேட்க விரும்பிய வார்த்தைகளைச் சொல்ல ஆசைப்பட்டு அவளைப் ஏறிட்டுப் பார்த்தான். ஆனால் அவனது "ஈரமான எண்ணங்கள்" அவனது மனதின் பிளவுகளில் மழை பொழிவது போல் குழம்பியது. அவன் அவளை நேசிப்பதை அவன் அறிந்திருந்தான், ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் அவர்களின் எதிர்காலத்தை ஒன்றாக கற்பனை செய்ய முயற்சித்த போது, அவன் கைகளில் தண்ணீரைப் பிடிக்க முயற்சிப்பது போல, அவனுடைய உள்ளத்தில் ஏதோ ஒன்று வழுக்கி இடம் மாறியது, கிராமத்தில் தங்கி, சூரியா கனவு கண்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒரே நேரத்தில் சரியென்றும் தவறென்றும் தோன்றியது. அவனது இதயம் இரண்டு திசைகளிலும் இழுக்கப்பட்டது போல் இருந்தது, அந்த இரண்டையுமே தெளிவாக அவன் உணரவில்லை. "எனக்குத் தெரியாது," அவன் கிசுகிசுத்தான், அடிவானத்தில், வண்ண நிறத்தில் பார்வையைத் திருப்பினான். மீண்டும் "நான் என்ன பார்க்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, சூரியா." என்றான். அவள் இதயம் உடைந்தது, குமுறியது. அவள் எதிர்பார்த்த பதில் அது இல்லை, ஆனால் அவள் பயந்த பதில் தான் அது. "நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ... அல்லது உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு புரியாதா ?" அவள் மனமுடைந்து கேட்டாள். அரனின் மௌனமே அவளுக்கான பதிலாக இருந்தது. அவள் மீதான அவனது காதல் உண்மையானது, ஆனால் அது முடிவெடுக்க முடியாத மூடுபனிக்குள் சிக்கிக்கொண்டது, அவனுக்குள் இருந்த அசைக்க முடியாத "ஈரமான எண்ணம்" ஒவ்வொரு முறையும் அவன் முயன்றபோது, அது நழுவி, குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர வேறு எதையும் அவனுக்கு விட்டு விடவில்லை. "எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும், அரண்," அவள் மெதுவாக. உறுதியாக இறுக்கமாக சொன்னாள், அவள் குரல் நடுங்கியது. அவன் அப்போது அவளைப் பார்த்தான், அவன் கண்கள் ஈரமான சோகத்தால் நிறைந்தது. அவன் ஏதோ சொல்ல விரும்பினான், அவனுடைய மனம் அவளைப் போல தெளிவாக இல்லை என்பதையும், அவள் மீதான அவனது காதல் எப்போதும் அவனைத் துன்புறுத்திய அதே "ஈரமான எண்ணங்களில்" சிக்கியுள்ளது என்பதையும் விளக்க விரும்பினான். ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அவை அவனது எண்ணங்களைப் போலவே மழுப்பலாக இருந்தன, அவன் அவற்றைப் புரிந்துகொள்வதற்குள் நழுவிச் சென்றன. சூரியா சட்டென எழுந்து நின்றாள், அவள் கால்களுக்குக் கீழே, அவளின் உறுதியான காலினால் மென்மையான வெள்ளை மணல் கொஞ்சம் கீழே மூழ்கியது. "எனக்கு உறுதியான ஒருவன் தான் தேவை," என்று அவள் சொன்னாள், அவள் இதயம் உடைந்தாலும், இப்போது அவள் குரல் கம்பீரமாக இருந்தது. "ஈரமான எண்ணங்கள் கொண்ட உன்னுடைய காதல் எனக்கு இனி வேண்டாம், அதைவிட காதல் இல்லாமலே வாழ்ந்து விட்டு போகலாம் என்று உரக்க கோபத்துடன் உறுதியாகக் கூறினாள். அவள் கோபத்தில் பிரிந்து செல்வதை அரண் தடுக்கவில்லை. ஆனால், அவள் உருவம், சிறியதாகி, இருள் சூழ்ந்த மாலையில், இருட்டில் மறைவதை அவன் பார்த்துக் கொண்டு அப்படியே கடற்கரையில் நின்றான். அவன் அவளை நேசித்தான், ஆனால் அது வரையறுக்கப்படாத, முடிவற்ற சாத்தியக் கூறுகளால் அவன் தேர்ந்தெடுக்க முடியாத ஒரு காதலாக போயிற்று. "மனம் என்னும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தானே! அலை அலையாக ஆசைகள் எழும்ப அவன் வசம் விழுந்தேனே!" "நதி வழி போனால் கரை வரக் கூடும் விதி வழி போனானே! விதை ஒன்று போட வேறு ஒன்று முளைத்த கதை என்று ஆனானே!" "என்ன சொல்வது என்ன செய்வது அவனின் ஈரமான எண்ணங்கள் முடிவு செய்யா குரங்குமணமே! தானே தேய்ந்தான் என்னையும் தேய்த்தான் பிரியும் தருவாயிலும் அவன் மரமாய் அங்கு நிற்கிறானே!" இறுதியில், கோபமோ துரோகமோ அவர்களைப் பிரித்தது அல்ல. அரனின் ஈரமான எண்ணங்கள், அவர்களுக்கிடையில் மகிழ்வாக இருந்திருக்கக் கூடிய காதலை மூழ்கடித்து விட்டன, அலைகளின் ஓசையைத் தவிர வேறு எதையும் விட்டு விடாமல், முடிவில்லாமல் கரையில் மோதின. சூரியா திரும்பிப் பார்க்கவே இல்லை. காதல் ஒரு உணர்வை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதை அவள் அறிந்தாள் - அது ஒரு முடிவாக இருக்க வேண்டும், திடமான மற்றும் அசைக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், தனது ஈரமான எண்ணங்களில் தொலைந்து போன அரண், ஒருபோதும் அந்தத் தேர்வைச் செய்ய அவனால் முடியவில்லை. அதனால், கிராமத்தின் மீது படர்ந்திருந்த மூடு பனி போல, அவர்களது காதல், மெல்ல காற்றில் மறைந்தது, அரனின் மனதில் இருந்த மேகங்கள் எப்போதோ தெளிந்திருந்தால், என்னவாக இருந்திருக்கும் என்ற நினைவுகளை மட்டுமே விட்டுச் சென்றது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அன்பு செலவானால் ஆதரவு வரவு....!" "அன்பு செலவானால் ஆதரவு வரவு பண்பு திடமானால் மனிதம் உயர்வு துன்பம் இறந்தால் இன்பம் பிறப்பு தென்பு உதித்தால் தோல்வி மறைவு!" "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பு அல்ல அற்பம் சொற்பம் தேடல் அல்ல அறிவு உணர்ந்த பாசம் அதுவே!" "பருவம் மலர்ந்தால் காதல் நாடும் படுத்து கிடந்தால் பரிவு தேடும் பரிவு காதல் இரண்டும் அன்பே பலபல வடிவில் எல்லாம் பாசமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"முப்பெருந் தேவியர்" "மூன்று வடிவில் முப்பெருந் தேவியர் நன்று சிந்தித்தால் மூவரும் ஒருவரே! ஊன்றிக் கவனித்தால் விளக்கம் புரியும் தோன்றிய மூவரின் வரலாறும் தெரியுமே!" "கல்வி இருந்தால் நாகரிகம் வளரும் கருத்துக்கள் தெளிந்தால் தீர்மானம் சரியாகும்! செல்வம் இன்றேல் வறுமை சூழும் இல்லற வாழ்வும் முறிந்து போகும்!" "வீரம் இல்லா சமூகம் அழியும் கரங்கள் இணைந்தால் வாழ்வு இனிக்கும்! அறம் காக்க மூன்றும் வேண்டும் பரம்பொருளாய் உருப் பெற்றதும் இதற்கே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
- 1 reply
-
- 1
-
"காதல் என்னும் நினைவினிலே" "காதல் என்னும் நினைவினிலே நான் சாதல் தேடி என்னை வருத்துகிறேனே முதல் அன்பு உணர்வுமட்டுமே என்றாலுமே மோதல் வேண்டாம் என்னிடம் வாராயோ!" "காத தூரம் விலகிப் போனாலும் காமம் துறந்து தனிமை தேடினாலும் காந்தை உன்னை மனதில் பதித்து காலம் கடந்தும் காத்து இருப்பேனே!" "காதலைத் தீண்டாமல் வாழ்வும் இல்லை காரிகையை எண்ணாமல் மனிதனும் இல்லையே காதணி ஆடும் அன்னநடை சிங்காரியே காலம் தாழ்த்தாமல் அருகில் அமராயோ!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
செவ்வாய் [29/10/2024] தரணியில் வந்த என் பேரப்பிள்ளைக்கு, மனமார வாழ்த்துக்கள்!! வியாழன் இரவு, 31 /10 / 2024 என் கையில் வீடு வந்து தழுவினார். இதை விட, வேறு என்ன பிறந்த நாள் 01/11/2024 பரிசு, தேவை எனக்கு ? "மழலையின் மொழி கேட்டு" "மழலையின் மொழி கேட்டு நான்பேசும் மொழி மறந்தேன் மழலையின் மொழி பேசி என்னையே நான் மறந்தேன்!" "மழலையின் குறும்பு கண்டு துன்பங்கள் ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இதயமே வானில் பறந்தன!" "குழலூதும் குழவியை பார்த்து குறும்பு கண்ணனை மறந்தேன் குழந்தை காட்டும் நளினத்தில் குமரி ஊர்வசியை மறந்தேன்!" "குழவி தளர்நடை கண்டு குதூகலித்து நான் மகிழ்ந்தேன் குழவியின் கொஞ்சிக் குலாவுதலில் குரத்தி வள்ளியை மறந்தேன்!" "தரணியில் ஓர்நிலவு கண்டேன் மழலையில் பலநிலவு கண்டேன் தரணியில் குழந்தை ஆடுகையில் மயிலும் மலைத்து நிற்கக்கண்டேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என் மூச்சு நீயடி" இந்தியப் பெருங்கடலின் எல்லையற்ற விரிவை உற்றுப் பார்த்துக் கொண்டு சிவகுமார் யாழ்ப்பாணக் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, அப்பொழுது தண்ணீரின் மேல் ஒரு சூடான தங்க நிறத்தை வீசியது, ஆனால் காட்சியின் அழகு அவனைக் கவரவில்லை. அவன் சுவாசித்த காற்றாக மாறிய மீராவின் நினைவுகளால் அவன் மனம் மூழ்கி இருந்தது. அவன் வாய் "என் மூச்சு நீயடி" என முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த சிவகுமார் அமைதியான அதே நேரம் மதிப்பீட்டுத் திறனையும் மற்றும் சுயபரிசோதனை அல்லது அகநோக்குப் பார்வை அல்லது சிந்தனை கொண்ட இளைஞன் ஆவான். அவனது பெற்றோர் எப்போதும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர், அதை, அவர்களின் வார்த்தைகளை இதயத்தில் அவன் எடுத்துக் கொண்டான். கண்டியின் செழிப்பான மலைப்பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில், அவனது கல்வித் திறமை, அவனிற்கு ஒரு விரும்பத்தக்க இடத்தைப் பெற்றுத் தந்தது. பேராதனைப் பல்கலைக் கழகம் இலங்கையின் முதற்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இலங்கையின் கடைசி இராசதானியின் தலைநகராக விளங்கிய கண்டி நகருக்கு அண்மையிலும் இருந்தது. இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள பேராதனை இயற்கை அழகு நிறைந்த ஒரு பகுதியாக இலங்கையின் சுற்றுலா முக்கியத்துவம் உடையதாக விளங்கும் பேராதனை தாவரவியற் பூங்காவுக்கு மிக அருகாமையிலும் ஹந்தானை மலையை அண்டிய தாழ்வான பகுதியில் அவ்வியற்கைச் சூழலுடன் இணைந்தவாறு காட்சி அளித்தது. மகாவலி ஆறு பல்கலைக்கழக வளாகத்துக் கூடாகவே ஓடுவது மேலும் அழகு சேர்த்தது. அங்கு தான் அவன் முதல் முதல் மீராவைப் பார்த்தான். சிவகுமார் யாழ்ப்பாணத்தில் தனது அமைதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கட்டிட பொறியியல் [சிவில் இன்ஜினியரிங்] படிப்பதற்காக, போரினால் பாதிக்கப்பட்ட தனது சொந்த ஊரை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு நாள் அது உதவும் என்ற நம்பிக்கையில் அந்த துறையை தேர்ந்தெடுத்தான். அதேவேளை கண்டியில் நன்கு அறியப்பட்ட தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மீரா, எழுத்தாளராக வேண்டும் என்ற இலட்சியத்துடன் இலக்கியத்தைத் தனது முதன்மைத் துறையாகத் தேர்ந்தெடுத்தாள். அவள் எப்பொழுதும் வெளிப்படையாகச், சிரித்த முகத்துடன் பேசுவாள், அவளுடைய குரல் இனிமையும் உணர்ச்சியும் கூடியது. ஒவ்வொரு ஆண்டும் பேராதனைத் தமிழ் மன்றம் நடத்தும் விவாதப் போட்டியில், முதலாமாண்டு மாணவியான மீரா, தன் வாதத்தை உக்கிரமாக, பல சங்க இலக்கிய உதாரணங்களுடன் விவாதித்தது பார்வையாளர்களை மட்டுமல்ல, அங்கு நிகழ்வுகளை ஒழுங்கு படுத்திகொண்டு இருந்த இரண்டாம் ஆண்டு மாணவனான சிவகுமாரையும் கவர்ந்தது. “புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்" அவன் ‘இருண்ட கூந்தலையும் மையுண்ட கண்களையும் உடையைவளுமான மீராவின் அழகில் அப்படியே தன்னைப் பறிகொடுத்துவிட்டான். அவளைப் போன்ற ஒருவளை அவன் இதுவரை சந்தித்ததில்லை. அவன் அவளைத் தனியே சந்திக்க விரும்பினான். ஆனால் என்ன ஆச்சரியம், அவன் மேடையில் பின் நின்று அடுத்த நிகழ்ச்சியை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கும் போது, மீரா, எவளை தான் சந்திக்கவேண்டும் என்று நினைத்தானோ, அவளே, அவன் அருகில் வந்து வணக்கம் என்றாள். ' உங்களின் ஒழுங்கமைப்பிற்கும் எனக்குத் தந்த வாய்ப்பிற்கும் நன்றி' என்று புன்முறுவலுடன் கூறினாள். இருவரும் கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் சிறு அறிமுகம் செய்தனர். “நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்" இருவர் கண்களும் சில கணம் இமைக்க மறந்தேவிட்டன, ஆனால் அவர்களின் நெஞ்சம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தன. காலப்போக்கில், அவர்களின் தொடர்புகள் அடிக்கடி நிகழ்ந்தன, பல்கலைக்கழக நூலகத்தில் நீண்ட படிப்பு அமர்வுகளாகவும், காபியுடன் சாதாரண உரையாடல்களாகவும், இறுதியில், பேராதனையின் பசுமையான, பரந்து விரிந்த பூந் தோட்டங்களில் மற்றும் மகாவலி ஆற்றங்கரை ஓரமாக பொழுதுபோக்கு நடையாகவும் மாறியது. விருப்பங்களின் விளை நிலத்தில் களைகளா, பயிர்களா என்று கணிக்க முடியாமல் தினம் தினம் முளைத்து வளரும் தாவரங்களின் தன்மைகளை கவனித்துக் கொண்டிருப்பதில் - காதலுக்கு இருக்கும் சிலிர்ப்பும், வலியும் கணக்கிட முடியாதவை. வாய்க்கால்களில் வழிவது காதல்ப் பயிரை வளர்க்கிறதா அல்லது களைகளின் கால்களை நனைக்கிறதா என்பதைக் கண்டு கொள்ளும் வரை காதலுக்கு இருக்கும் காத்திருப்பு அவஸ்தைகள் வார்த்தைகளில் நெய்து விட இயலாதவை. அப்படித்தான் அவன் இருந்தான். காதல் ஒரு புதுவிதமான உணர்வோ, என் மொத்த செல்களையும் புலன்களாக்கும் ஒர் புல்லாங்குழலிசையோ, என்னவாயிற்று எனக்கு ? தன்னையே அவன் கேட்டுக் கொண்டேன். "என் மூச்சு நீயடி", என் பார்வையின் பரவசம் நீயே. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு துளிக் காதல் விழுந்த போது எப்படி எனக்குள் ஒரு கோடிப் பூக்கள் சிரிக்கின்றன? ஒரு மூச்சுக் காற்று பட்டதும் ஆயிரம் சிட்டுக்கள் எப்படி சுவாசம் பெற்றன? அவள் தன்னை விரும்புகிறாளா என்பது இன்னும் சரியாகப் புரியவில்லை. அவள் கதைக்கிறாள், ஒன்றாக நடக்கிறாள், ஆனால் தானும் காதல் கொண்டுள்ளேன் என்பதை எந்த விதத்திலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை. அது தான் அவனை வாட்டிக்கொண்டே இருந்தது. ஒரு மாலைப் பொழுது மீண்டும் நூலகத்தில் இருவரும் ஒரே இலக்கியப் புத்தகத்தை எடுக்க விரும்பிய போது தற்செயலாகச் சந்தித்தனர். அதே இலக்கியப் புத்தகத்தை இருவரும் அடைய முயற்சித்த போது, அவர்களின் கைகள் இலேசாக உராய்ந்தன. "உங்களுக்குப் பிறகு நான் வாசிக்கிறேன் " அவள் புன்முறுவலுடன் விட்டுக்கொடுத்தாள், "இல்லை, தயவுசெய்து, நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்," என்று அவன் அவளிடம் அந்தப் புத்தகத்தை கட்டாயப்படுத்தி கொடுத்தான், ஆனால் அவள், அப்படி என்றாள் நாம் இருவரும் ஒன்றாய் வாசித்து இரசிக்கலாம் என்று, அவன் கையைப் பிடித்து, ஒரு ஒதுக்குப்புறமாக பக்கத்தில் பக்கத்தில் கொஞ்சம் நெருக்கமாக இருந்தாள். அவனது இதயம் துடித்தது. அந்த நெருக்கமான தொடர்பு, புத்தகத்தை மறந்து, நீண்ட உரையாடல்களிற்கு வழிவகுத்தது - முதலில் கல்வியாளர்களைப் பற்றி, பின்னர் வாழ்க்கை, கனவுகள் மற்றும் இடையில் உள்ள அனைத்தையும் பற்றி நீண்டு கொண்டு போனது, நூலகத்தின் சாளரம் ஊடாக குளிர் காற்றும் அவர்களைத் தழுவியது. அவள் திரும்பிப் பார்த்தால், அங்கு யாரும் கண்ணிற்குத் தெரியவில்லை. அவள் உடனடியாக ' நான் உன்னை விரும்புகிறேன்' என்று தன் மென்மையான இனிய குரலில் தயக்கத்துடன் கூறி, அவன் கையை எடுத்து தன் மார்பில் வைத்தாள். அவனும் "என் மூச்சு நீயடி" என்று அவள் காதில் கூறி, அவள் கன்னத்தில் தன் செவ்விதழைப் பதித்தான். அவள் தன் இரு கண்களையும் மூடி, "என் உயிரும் நீயடா" என்று சட்டென அவனை ஒரு கணம் கட்டிப்பிடித்தாள். அதன் பிறகு அவர்கள் அதிக நேரம் ஒன்றாகச் செலவிடத் தொடங்கினர். மீராவின் அழகும் அவளது புன்னகையும், அவளது அன்பும் சிவகுமாரின் உள்ளத்தில் புத்துயிர் பெற்றது. அவள் இதயங்களைத் தொடும் வீரம், காதல் நாவல்களை எழுதுவதைப் பற்றி பேசினாள், அதே நேரத்தில், அவன் சமூகங்களை மேம்படுத்தும் பொறியாளர் தீர்வுகளுக்கான தனது லட்சியத்தைப் பகிர்ந்து கொண்டான். அவர்களது காதல் இன்னும் நெருக்கமானதாக மாறியது. ஒரு நிலவொளி இரவில், மகாவலி ஆற்றின் அமைதியான ஒட்டத்தை பார்த்தபடி, சிவகுமார் தனது காதலை மீண்டும் தெரியப் படுத்தினான். மீரா, என் காதலியே, நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றும் நீ தானே," என்று அவன் கிசுகிசுத்தான். அவள் அவனைப் பார்த்தாள், அவள் கண்கள் கொட்டாத கண்ணீரால் மின்னியது. "நீ என்றும் என்னுடையவன்," அவள் மெதுவாகப் பதிலளித்தாள். அந்த இரவில் அவள் அவனைப் பார்த்த விதம் சிவகுமாருக்கு இன்னும் நினைவில் இருந்தது, அவர்களுக்கிடையில் பேசப்படாத வார்த்தைகளில் உலகமே ஓய்வெடுத்தது போல் அவள் கண்கள் அவனுக்கு மின்னியது. அந்த நிமிடம் முதல் மீரா அவனது ஆணிவேராக மாறினாள். தேர்வுகளின் மன அழுத்தம், அவர்களின் எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மை மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு அவர்களைப் பிரிக்கும் யாழ்ப்பாணம் - கண்டிக்கான தூரம் ஒன்றும் தங்கள் காதலுக்கு தீங்கு வராது என்று அவன் நம்பினான். மீரா அவனது நம்பிக்கை, இருண்ட காலங்களில் அவனை அழைத்துச் சென்ற ஒளி. சந்தேகங்கள் எழும்பும் போதெல்லாம், அவளுடைய வார்த்தைகள், அவள் அவனைப் பார்த்த விதம், அவள் கொடுத்த வாக்குறுதிகள் அவனுக்கு திடம் ஒன்றை கொடுத்தது. பட்டப்படிப்பு முடிந்ததும், அவர்களின் கனவுகளில் யதார்த்தம் ஊடுருவத் தொடங்கியது. மீரா கண்டியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினாள், சிவகுமார் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றான். தங்கள் காதல் எந்த சவாலையும் தாங்கும் என்று நம்பி, தொடர்ந்து இணைந்திருப்பதாக ஒருவருக்கொருவர் உறுதியளித்தனர். ஆனால் தொலைபேசியில் அவளது குரலின் அரவணைப்பு குறைந்து கொண்டே போனது. அவர்களின் உரையாடலும் நிச்சயமற்ற பதட்டத்தால் நிறைந்து இருந்தது. ஒரு நாள் மதியம் சிவகுமாருக்கு மீராவிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் குரல் தழுதழுத்தது. “ எனக்குத் திருமணம் செய்து வைக்க என் வீட்டார் ஏற்பாடு செய்துள்ளனர்” என்றாள் அவள். "எல்லாம் மிக வேகமாக வீட்டில் நடக்கிறது, அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள், நான் என்ன செய்வது? " அவன் உள்ளம் கனத்தது. "நீ எம் காதலை சொல்லவில்லையா?" அவன் குரலில் விரக்தி காணப்பட்டது. "முயற்சித்தேன் சிவா. உன்னைப் பற்றி அவர்களிடம் சொல்ல முயற்சித்தேன், ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள், குடும்ப பாரம்பரியம், மரியாதை முதலில் வரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்," அவள் வேதனையுடன் விளக்கினாள். இப்போது அந்த வெளிச்சம் மங்கிவிட்டது. அவனுக்கு நம்பிக்கை கொடுத்த பெண், அவனிடம் இருந்து விலகிவிட்டாள். சிவகுமாரின் இதயம் படபடத்தது, அவநம்பிக்கை அவனுள் பரவியது. அவன் மீராவிடம் கொஞ்சம் கோபமாக, "என்ன பேசுகிறாய் மீரா? நீ எனக்கு ... எங்களுக்கு வாக்குறுதி ஏன் கொடுத்தாய்." அவன் அழாக்குறையாகக் கேட்டான். ஆனால் மீரா "நான் பெற்றோரின் வார்த்தைகளை மீரா முடியாது, அது அவ்வளவு சுலபம் இல்லை சிவா. என் குடும்பம் தான் எனக்கு எல்லாமே. அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, நானும் அவர்களுக்கு எதிராக என்னால் செல்ல முடியாது. ஒன்று மட்டும் எனக்கு ஞாபகம் வருகிறது, 'பள்ளிக் காதல் படலை வரை', மன்னிக்கவும் " என்றாள். பின் வந்த நாட்கள் மங்கலானவையாக அவனுக்கு இருந்தது. சிவகுமார் தனக்கு அடியில் இருந்து நிலம் உடைந்து சிதறுவது போல் உணர்ந்தான். அவனால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. அவன் கற்பனை செய்த எதிர்காலம் சிதைந்து கொண்டிருந்தது, அதைத் தடுக்க அவன் சக்தியற்றவனாக இருந்தான். அவனது பெற்றோர்கள் அவனது உடல், மனம் சரிவதைக் கவனித்தனர் மீராவின் நிச்சயதார்த்தம் பற்றிய செய்தி பரஸ்பர நண்பர்கள் மூலம் வேகமாக அவனுக்கும் பரவியது. கண்டியில் உள்ள செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனை அவள் திருமணம் செய்கிறாள் என்பதை அவன் அறிந்தான். சிவக்குமாருக்கும் தபால் மூலம் அழைப்பு அட்டை கிடைத்தது, சிவகுமார் தன் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து, தன் கையில் இருந்த அழைப்பிதழை வெறித்துப் பார்த்தான். அலங்கரிக்கப்பட்ட அட்டையின் விளிம்புகள் தங்க நிறத்தில் மின்னியது, ஒரு காலத்தில் அவனுக்கு சொந்தமான இதயம் இப்போது பிரிந்து அந்நியன் ஆகியது. அது ஒரு கூர்மையான கத்தியைப் போல அவனைத் துளைத்தது, அவனது மனம் பாதிக்கப்பட்டது, அவனுடைய நம்பிக்கைக்குரிய அவனது வாழ்க்கை, இன்று அர்த்தமற்றதாகத் தோன்றியது. அந்தவேளையில் தான், அவன் ஒரு நாள் மாலை, இந்தியப் பெருங்கடலின் எல்லையற்ற விரிவை உற்றுப் பார்த்துக் கொண்டு யாழ்ப்பாணக் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். அவனது வாய் மீண்டும் மீண்டும் "என் மூச்சு நீயடி" என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. அவன் நிச்சயதார்த்த அட்டையைப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் அமர்ந்தான். அவன் இதயம் துரோகத்தின் கனத்தால் கனத்தது. ஒரு காலத்தில் அவளைப் பற்றிய எண்ணங்களால் மிகவும் நிரம்பிய, உயிருடன் இருந்த அவனது மூச்சு இப்போது ஆழமற்றதாகவும் அர்த்தமற்றதாகவும் அவன் உணர்ந்தான். அவனது சிறிய வீட்டின் ஒவ்வொரு மூளையும் அவளை நினைவூட்டியது - இரவு நேர தொலைபேசி அழைப்புகள், அவர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள், பல்கலைக்கழக இடைவேளையின் போதும் அவள் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோதும் எடுத்த புகைப்படங்கள் இன்னும் நினைவூட்டிக்கொண்டு இருந்தது. மன அலைகள் மட்டும் அல்ல, கடல் அலைகளும் பாறைகளுக்கு எதிராக பெரிய சத்தத்துடன் மோதின, ஆனால் இன்றிரவு, அவை அவனுக்கு அமைதியைத் தரவில்லை. அவன் கண்களை மூடிக்கொண்டான், அவன் தலைமுடியில் உப்பு நிறைந்த காற்றினை உணர்ந்தான். "என் மூச்சு அவளது" என்று அவன் மீண்டும் கிசுகிசுத்தான், கடலின் இரைச்சலில் அவனது குரல் தன் வலுவை இழந்தது. "அவள் இல்லாமல் நான் ஒன்றுமில்லை." அவன் அலறினான். என்றாலும் அவன் மீண்டும் மீண்டும் "என் மூச்சு நீயடி" என்ற வார்த்தைகளைப் மனதில் பேசும் பொழுது, அவன் மனதில் ஒரு மெல்லிய எண்ணமும் மின்னியது. மீரா உண்மையில் அவனுடைய முழு உலகமா, அல்லது அவள் அவனை அப்படி ஆக்கினாளா ? சிவக்குமார் கடற்கரையின் ஈர மணலில் அமர்ந்து, அடிவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆனால் அவன் நெஞ்சு அவன் எண்ணத்துக்கு பதில் சொல்லாமல் "என் மூச்சு நீயடி" என்றே சொல்லிக் கொண்டு இருந்தது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024]
kandiah Thillaivinayagalingam posted a topic in நிகழ்தல் அறிதல்
"என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024] "நவம்பர் ஒன்று கதிரவன் ஒளிர்கிறான் நவீன உலகில் புத்தன் அழுகிறான் நலிந்த மக்கள் விடிவை நோக்கினம் நம்பிக்கை கொண்டு நானும் எழுகிறேன்!" "வானில் விண்மீன் கண்ணைச் சிமிட்டுது வாழையிலைத் தோரணம் காற்றில் ஆடுது வாசனைப் பண்டம் மகிழ்வைக் கொடுக்குது வாழ்த்துப் பாடி வெண்புறா பறக்குது!" "அத்தியடி மண்ணில் நானும் உதித்தேன் அ-க-தி என்று பெயரைப் பொறித்தேன் [அத்தியடி - கந்தையா - தில்லைவிநாயகலிங்கம்] அன்பு கொண்ட உலகம் கண்டேன் அளந்து எடுக்கும் அறிவும் கொண்டேன்!" "அயராது உழைக்கும் தந்தை உடன் அனைவரையும் அணைக்கும் தாய் உடன் அண்ணன் அக்கா துணை உடன் அடி எடுத்து நடக்கத் தொடங்கினேன்!" "விளையாட ஒரு துணை வந்தது விழுந்தால் கைகொடுக்க கை வந்தது விவேகம் படைத்த தம்பி பிறந்தான் விழிப்பு அடைந்து பொய்களை எறிந்தேன்!" "யாழ்மத்திய கல்லூரி என்னை வரவேற்றது யானை முகத்தானின் உண்மை அறிந்தேன் யாகத்தீயில் சமயம்சாதி போட்டு எரித்தேன் யார் என்பதின் விளக்கம் அறிந்தேன்!" "அறிவிற்கு பத்தொன்பதில் பேராதனை சென்றேன் அயராது படித்து பொறியியல் கற்றேன் அறுபது ஆயிரம் கனவு கண்டேன் அடையாளம் மறுக்கும் அரசை வெறுத்தேன்!" "ஆக்கம் கொண்ட சமூகம் வேண்டும் ஆசை அடக்கம் இரண்டும் வேண்டும் ஆதிரனாக என்றும் வாழ வேண்டும் ஆராய்ந்து எடுக்கும் திறன் வேண்டும்!" "இறுமாப்பு என்னுடன் பிறந்த ஒன்று இதயங்கள் என்றும் உண்மை ஒளி இகழ்ச்சி புகழ்ச்சி கடந்து வாழபவன் இன்பம் துன்பம் சமமாக மதிப்பவன்!" "ஈரம் இல்லா உலகமும் பார்த்தேன் ஈவிரக்கம் அற்ற அரசையும் கண்டேன் ஈன்றவளும் இல்லை இணைந்தவளும் இல்லை ஈசனைக் கேள்விகேட்க நெஞ்சம் துடிக்குதே!" "உலகத்தை கட்ட பொறியியல் படித்தேன் உண்மையைக் காண பகுத்தறிவு கொண்டேன் உண்பது நாழி உடுப்பவை இரண்டே உணர்ந்து நடந்தால் மனிதம் வாழுமே!" "ஊரை விட்டு ஊரு போனேன் ஊசி முனையில் உயிரைப் பிடித்தேன் ஊதிக் கெடுக்கும் கொடியவர் முன்னே ஊமையாய் இருந்து கடந்து சென்றேன்!" "எறும்புகள் போல் சுமை தாங்கினேன் எண்ணங்கள் வளர்த்து அறிவைக் கூட்டினேன் எச்சில் இலை நக்குவான் அல்ல எரிவனம் கண்டு அஞ்சுபவனும் அல்ல!" "ஏற்றம் இறக்கம் என்னை வாட்டவில்லை, ஏழை பணக்காரன் என்னிடம் இல்லை ஏசி எவரையும் திட்டுவதும் இல்லை ஏமாற்று பேர்வழியை நம்புவதும் இல்லை!" "ஐயம் அற்ற வாலிப பருவத்தில் ஐயனார் கோயிலிலும் கும்மாளம் அடித்தேன் ஐதிகம் மதம் சடங்குகள் அறியேன் ஐயன் என்னை வாழ விடுங்கள்!" "ஒருவராய் இருவராய் பலராய் திரிந்தேன் ஒருவருக்கு ஒருவர் துணை புரிந்தேன் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒதுங்கிப் போனால் இருப்பதும் போகும்!" "ஓடும் உலகில் நானும் ஓடினேன் ஓதி எவரையும் கெடுக்க மாட்டேன் ஓசைநயம் கொண்ட வாழ்க்கை வாழு ஓரமாய் பதுங்கும் வாழ்வைத் துற!" "ஒளவையார் உரைத்த அறிவுரை ஆகினும் ஒளதடமாய் ஏற்றத்தை மட்டும் எடுப்பேன் ஔவியம் என்னும் அழுக்காறு இல்லை ஔரப்பிரகம் என்னும் ஆட்டுமந்தை நானல்ல!" "எளிமை வாழ்வு தூய்மை தர எதிலும் பற்றற்ற தனிமை வர எனக்குள் நானே எதையும் அலச என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!” "பச்சிளம் குழந்தையாய் தவழ்ந்து வளர பருவ வாலிபனாய் முரடாய் நடக்க படிப்பு கொஞ்சம் திமிராய் மாற பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "நானாய் வாழ அமைதி தேடினேன் நாலும் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் நாயாய் அலைகிறான் என்று கூறினர்!” "உறங்கி கிடைக்கா நெஞ்சு ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் உருவம் மாற்றும் வயது ஒருபக்கம் உறவை நினைக்கும் மனது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது என்னவளை நினைக்க அழுகை வருகுது எழுதுகோல் எடுத்து ஆத்திரம் தீர்க்கிறேன் எழுச்சி கொண்ட தேசம் தேடுகிறேன்!" "பேச்சு மூச்சு நிற்க முன்பு பேயென என்னை விரட்ட முன்பு பேரப் பிள்ளைகள் சூழ்ந்து நிற்க பேரானந்தம் தரும் மரணம் தழுவட்டும்!” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] -
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 32 எப்படி திராவிடர்களை தென் இந்தியாவின் சுதேசிகள் அல்லவென்றும் அவர்கள் இந்தியாவின் வட-மேற்கு எல்லைப் புறத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதினார்களோ, அப்படியே கருநிறமுடைய நீகிரோ ஆஃப்ரிக்கரும், ஆஃப்ரிக்காவில் உயர் விலங்கினமான மனித குரங்கினமாக பரிணாமித்து இருந்தாலும், அவர்கள் ஆஃப்ரிக்கா சுதேசிகள் அல்லவென்றும் கருதுகிறார்கள். குறைந்தது எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னர், மனித இனம், ஆஃப்ரிக்க கண்டத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் சென்று, குடியேறி வாழ்ந்து வந்தது என்றும். மனித இனம், வெள்ளையினம், கருப்பினம், சீன இனம், திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்ட உடல் தோற்றங்களைப் பெறுவதற்கு பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இன்றைய ஈராக்கில் இருந்த பாபிலோனிய நாகரிகம் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். விவிலிய நூலில் அது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளதால், அது பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதே ஈராக்கிய பிரதேசத்தில், பாபிலோனியாவுக்கு முன்பிருந்தது சுமேரிய சாம்ராஜ்யம் ஆகும். சுமேரிய சாம்ராஜ்யத்தின் குடி மக்கள் கறுப்பினத்தவராக இருந்திருக்க வேண்டும். ஆஃப்ரிக்கர்கள், திராவிடர்களாக இனம் மாறிய காலகட்டமும் அதுவாக இருக்கலாம். அரேபிய தீபகற்பத்திலும் அந்த இனம் பரவி வாழ்ந்திருக்கின்றது. அங்கிருந்து மீண்டும் சிலர் ஆஃப்ரிக்காவுக்கு புலம் பெயர்ந்து சென்றது என்கிறார்கள். மத்திய தரை கடல் மக்கள் திரும்பி ஆஃப்ரிக்காவிற்கு வரும் முன்பு, குள்ள இனத்தவர்கள் [Pygmies], காட்டு வாசிகள் [Bushmen] ஆஃப்ரிக்கா முழுவதும் பரவி இருந்ததாகவும் கருதுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்து கி மு 8000-3000 இடைப்பட்ட காலத்தில் மேற்கு ஆசிய பெரும் பகுதியில், நைல், சிந்து ஆற்று வரை Proto-Mediterranean, Mediterranean and Hamite.போன்ற கருமையான மக்கள் இருந்தார்கள் என்பது ஆகும். செமிடிக் மக்களின் அழுத்தம் காரணமாக, ஒட்டுநிலை மொழி ஒன்றை பேசிய முன்னைய குடிகளான சுமேரியர்கள், அங்கிருந்து கலைந்து கிழக்கு பக்கமாக இந்தியா நோக்கியும் மேற்கு பக்கமாக ஆஃப்ரிக்கா நோக்கியும் சென்றனர். இன்றைய திராவிட மொழி பேசுபவர்களும் நீக்ரோ - ஆஃப்ரிக்க மொழி பேசுபவர்களும் இந்த முன்னைய கூட்டத்தை பிரதிநிதிபடுத்துவதுடன் தங்களது புதிய பகுதிகளிலும், அவைகளுக்கு இடையில் நீண்ட தூர இடைவெளி இருப்பினும் பல மூல மொழி அம்சங்களை தொடர்ந்து வைத்திருந்தார்கள். மேலும் கலைந்து போகாமல் அங்கேயே தங்கிய மற்றொரு கூட்டம், காலப்போக்கில் வென்ற கூட்டத்துடன் முற்றிலும் அல்லது Hamite போல் பகுதியாக ஒன்றிப் போயினர், இதனால் தமது மொழியியல் பாரம்பரியத்தை, உரிமையை அவை இழந்தனர் அல்லது காக்கசு[Caucasus] பிரனீசு [Pyrenees ] போன்ற தொலைதூர மலை பகுதிகளில் அடைக்கலம் புகுந்து தமது மொழி அம்சங்களை காக்கேசிய, பாஸ்க் போன்ற மொழிகளில் [Caucasian, Basque] பாதுகாத்தனர். ஆகவே அவர்களின் சந்ததியான திராவிட மொழி பேசுபவர்களுக்கும் நீகிரோ - ஆஃப்ரிக்க மொழி பேசுபவர்களுக்கும் இடையில் கட்டாயம் ஒரு மொழியியல், பண்பாட்டு சிறப்பியல்பு இருக்க வேண்டும். இதை ஆராயும் போது, அவைகள் ஒரே கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றாலும், நெடுந்தொலைவில் நெருங்கிய உறவு இல்லாது அவை நீண்ட காலத்திற்கு வளர்ச்சி அடைந்து, இன்றைய நிலை அடைந்ததையும் கவனத்தில் எடுக்க வேண்டும். பண்டைய தாய்வழி சமுதாயம் இன்னும் திராவிடர்களிடம், குறிப்பாக கேரளா மக்களிடமும் தெற்கு கரையோர கன்னட மக்களிடமும் இருக்கிறது. அதுபோல கருநிறமுடைய நீகிரோ ஆஃப்ரிக்கரும் தமது வழிவழிச் சொத்தை [மரபு வழி முதியத்தை] பெண் வழி மூலமே கைமாற்றிக் கொடுகிறார்கள். குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான மரபுவழிச் சட்டமாக உருவான தேசவழமைச் சட்டத்தின் தொடக்கத்தின் அடிப்படைகள், பிராமணியச் செல்வாக்குக்கு முந்திய திராவிட மரபான தாய்வழி மரபை அடிப்படையாகக் கொண்ட, மலபார் பகுதியின் மருமக்கட்தாயம் [மருமக்கதாயம் அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20ஆம் நூற்றான்டுகளில் கேரள மாநிலத்தின் நாயர் சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும்.] எனப்படும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என ஆய்வாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனாலும், பெண்களுடைய வழிவருகின்ற சீதனச் சொத்து தொடர்பில் கணவனின் சம்மதம் இன்றிப் பெண் தீர்மானம் எடுக்கக்கூடிய வழி இல்லாது இருப்பதானது அக்காலத்தியேயே யாழ்ப்பாணச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாக நிலை பெற்றுவிட்டதைக் குறிக்கிறது. நாக வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு, போன்றவையில் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. நாக வழிபாடு ஒரு முக்கிய சிறப்பியல்பாக இந்தியா, இலங்கை திராவிடரிடமும் நீக்ரோ - ஆஃப்ரிக்க போன்ற மக்களிடமும் காணப்படுகிறது. சிந்துவெளி நாகரிகக் கால கண்டுபிடிப்புகளில், முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். அத்துடன் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் [தாய்] வழிபாட்டுடன் இணைந்து நடைபெறுகிறது. சர்ப்ப காவு எனப்படும் நாக பீடத்தில் அல்லது ஒரு புதரில் அல்லது மரங்களும் புதர்களும் அடர்த்தியாக வளர்ந்த ஒரு பகுதியில் கல்லாலான பாம்பு சிலைகள் வைத்து பொதுவாக அங்கு வழிபடுகின்றனர். இந்த திராவிட, நீக்ரோ - ஆஃப்ரிக்க சமுகத்தில் தாய் தெய்வ வழிபாடு ஒரு முக்கியத்துவம் பெற்றிருந்தன. அங்கு பல பெண் தெய்வங்கள் இருந்தன. என்றாலும் பிற்காலத்தில் இந்திய - ஐரோப்பியர் [Indo - European] குடுப்பத்தை சேர்ந்த கிரேக்கரும் ஆரியரும் மனிதவுருவகம் கொடுக்கப்பட்ட இயற்கை சக்திகளை ஆகாயத்தில் வாழும் கடவுளாக கொண்டுவந்தார்கள். இது திராவிடர்களின் பூமியில் வசிக்கும் தாய் தெய்வத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. இந்த திராவிடர்களின் கோட்பாடுகளில் இருந்தே சக்தி, சிவா என்ற எண்ணம் உருவானது. மேலும் இந்த தாய் தெய்வம் கருத்த கடவுளாகவே இந்தியாவில், இலங்கையில் [காளி] காணப்படுகிறது. இந்தியாவில் தாய் தெய்வத்திற்கும் சிவாவிற்குமான திருமண சடங்கு, பண்டைய சுமேரியாவில் தாய் தெய்வத்திற்கும் சந்திர கடவுளுக்கும் இடையில் நடைபெறும் சில திருமண சடங்குடன் ஒத்து போகின்றன. எப்படியாயினும் பின் காளி, துர்க்கை போன்ற திராவிடர்களின் தெய்வங்கள் எல்லாம் பார்வதியின் அவதாரங்களாக மாற்றப்பட்டன. பார்வதியை சக்தியாக்கி, சிவனின் மனைவியாக்கினார்கள். அதே போல, தாய் தெய்வ வழிபாடு ஆஃப்ரிக்கா முழுவதும் பொதுவாக இருந்தது. என்றாலும் அதன் பெயர் இடத்திற்கு இடம் மாறுபட்டு இருந்தன. கானாவில் (Ghana) அசாந்தி (Ashanti) மக்கள் பெண் தெய்வம் 'Nyame' யையும் ஆக்கான் (Akan) மக்கள் பெண் தெய்வம் 'Ngame'' யையும் வணங்குகிறார்கள். தமிழகத்தில், தாய் தெய்வமான கொற்றவையின் மகனாக கருதப்படும் முருகனை வழிபாடு செய்தல் தொன்மையானது. இதனைச் சங்க கால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, பரிபாடல், என்பன மிகச் சிறப்பாக கூறுகின்றன. ஆஃப்ரிக்காவில் கென்யாவில் [Kenya] வாழும் கிகுயு Kikuyu] இன மக்கள் முருகன் போன்ற ஒன்றை, தெய்வமாக, முழு முதற் கடவுளாக, வழிபடுகின்றனர். ஏறக்குறைய 25 ஆஃப்ரிக்க பழங்குடி இனங்கள் இந்த முழுங்கு [Mulungu] அல்லது முருங்கு [Murungu,] கடவுளை வழிபடுகிறார்கள். சிலர் இதை மலைக்கடவுள் என்று சொல்லுகிறார்கள், வேறு சிலர் போர்க்கடவுள் என்று சொல்லுகிறார்கள், முருங்கு கடவுள் பெயர் கூட ஒரே மாதிரி இருக்கிறது.மேலும் தமிழர்களின் முருகன் மலைகளில் குடியிருப்பதுடன் அவரும் ஒரு போர் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது. கென்யா மலை [Mount Kenya] கிகுயு மக்களுக்கு [The Kikuyu (also known as Agikuyu) are a central Bantu community. They share common ancestry with the Embu, Kamba, Tharaka, Meru and Mbeere. Traditionally they inhabited the area around Mount Kenya, including the following counties: Murang'a, Nyeri, Kiambuu, Nyandarua, Kirinyaga and Nakuru.] புனிதமானது. இதை இவர்கள் கிரி எங்கை [kirinyaga எங்கை கடவுளின் மலை] என்று அழைக்கின்றனர். தமிழிலும் கிரி என்பது மலையை குறிக்கும். [நீல கிரி - blue mountain ] தமிழில் அம்மா என்ற சொல் குப்பத்து [கிராம] பெண் தெய்வத்தையும் அவள் கொடுக்கும் அல்லது அவள் அருளால் குணமடையும் அம்மை நோயையும் [small-pox] குறிக்கிறது. இந்த அம்மா தெய்வத்தின் ஒத்த தன்மையை பிரெஞ்சு சூடானில் [மாலி] உள்ள டோகோன் [Dogon] இனத்தவர்களின் உட்குழுவான அம்மா சமய பிரிவினரிடம் [The Amma sect] காணலாம். இவர்கள் அம்மா என்ற பெண் படைப்பு தெய்வத்தை வழிபடுவதுடன் அம்மாவிற்கு தினைப் பொங்கலும் [boiled millet] பலிபீடத்தில் படைக்கிறார்கள் [The celebration is once a year and consists of offering boiled millet on the conical altar of Amma, colouring it white]. அத்துடன் மேற்கு ஆஃப்ரிக்கா நாடுகளில் உள்ள கோயில் அமைப்பு கேரள தமிழ்க் கோயில் அமைப்பை ஒத்திருக்கின்றது. மேலும் ஒரு மத்திய திராவிட மொழியான கோண்டி பேசும் மக்கள் இன்னும் கிழக்கு ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள சோமாலிலாந்து [Somaliland,] கல்லாஸ் [கிழக்கு ஆஃப்ரிக்க ஹமிடிக் இனக் குழுவினர்] மக்களைப்போல வீடு கட்டுகிறார்கள் [The Gonds of Central India, a Dravidian tribe, even now erect the houses similar to those erected by the Gallas [The Gallas are a Hamitic people of East Africa] of Somali land.]. மேலும் சோமாலிய மொழி - தமிழ் மொழிகளுக் கிடையில் சில ஒற்றுமையும் காணப்படுகிறது. சோமாலிய மொழி - தமிழ் மொழி பரஸ் - பரி (குதிரை) ப(B)ரிஸ் - அரிசி ஆப்பா - அப்பா யரான் - சிறுவன் ஹிந்டிஸ் - சிந்துதல் அலோல் - அல்குல் (பெண்குறி) குன் - உண் இந்த மொழிகளை இப்படி ஆராய்ந்து கொண்டே போனால், இது போன்ற நிறைய ஒற்றுமைகளை மேலும் கண்டுபிடிக்கலாம்? மூல கூட்டமான திராவிட - சுமேரியர் கலைந்து வெவ்வேறு திசையில் இந்தியாவை நோக்கியும் ஆஃப்ரிக்கா நோக்கியும் சென்ற பின்பும் அவர்கள் தங்களுக்கிடையில் தொடர்புகளை கடல் வழியாக பேணி பாதுகாத்து இருந்தார்கள் என நாம் ஏற்று கொள்ளலாம். ஆரியர்களின் வருகையால் அல்லது இயற்கையின் சீற்றத்தால் அல்லது இரண்டும் கலந்த ஒரு நிலையால் சிந்து சம வெளி மக்கள் கூட்டம் அழிந்து மேற்கு கரையோரத்தால் தென் இந்தியா வந்தார்கள் எனப்படுகிறது. சிந்து சம வெளி மக்களின் கடலோடு இணைந்த வாழ்க்கை நன்கு அறிந்ததே. அதே மாதிரி தென் இந்தியாவின் திராவிட அரசர்கள் கடல் வழியாக மெசொப்பொத்தேமியா, அரேபியா, எகிப்து மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்காவுடன் தொடர்புகள் வைத்திருந்தார்கள். எகிப்து வணிகர்கள் இந்தியா கடலில் வியாபாரம் செய்தார்கள். தொல்பொருள் அகழ்வு ஆராச்சி இதை உறுதி படுத்துகின்றன. நான் இந்த தொகுப்பை எல்லா சிறந்த அறிஞர்களுக்கும் ஒரு வேண்டு கோளுடன் நிறைவு செய்கின்றேன்.அதாவது இந்த உயர் நோக்கமுள்ள ஆய்வில் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் மகிமையை ,பெருஞ்சிறப்பை, புகழை சான்றுகளுடன் ஒருமித்த கருத்துடன் உலகத்திற்கு வெளி கொண்டு வரும்மாறு கேட்டுக்கொள்கிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 33 தொடரும் [ இணைத்த வரைபடத்தில் உள்ள பாரசீகம் (Persia) என்ற இடத்தில்தான் சுமேரியா, அசீரியா, பாபிலோனியா, பாரசீக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. பண்டைய மேற்கு தமிழகத்தில் (கேரளா), இன்றைய கொச்சி அருகே, அன்று இருந்த முசிறியும், வரை படத்தில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன.]
-
"தலைத் தீபாவளி" [இன்று மலரும் தீபாவளியை முன்னிட்டு] எனக்கு திருமணம் செப்டம்பர் நாலாம் திகதி நடந்தது, என் மனையாள், என் பாடசாலையிலேயே என்னைவிட இரண்டு ஆண்டு குறைய படித்த மாணவி. ஆகவே அவரை எனக்குத் நன்றாக முதலே தெரியும். அதே போல அவருக்கும் என்னையும் என் போக்கையும் மிக நன்றாகத் தெரியும் . 'சமயமா ? மானிடமா?' என்ற விவாத போட்டியில் நாம் எதிர் எதிர் அணிக்குத் தலைமை தங்கி உள்ளோம். என்றாலும் இது பெற்றோர் முடிவு எடுத்த ஒன்று. அவள் மிகவும் சமயத்திலும் அதன் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை உள்ளவள். நான் எதிலும், அது பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வந்தாலும், எடுத்தவுடன் நம்பிக்கை கொள்ளுவதில்லை, அலசி ஆராய்ந்தே, அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் மட்டுமே, ஏற்றுக் கொள்வேன். குறிப்பாக தமிழர் பண்பாட்டுக்கு அல்லது தமிழரை இழுவுபடுத்தும் எதையும் நான் ஏற்றுக் கொளவதில்லை. அது மட்டும் அல்ல தமிழர் சமயமான சைவ சமயம் இந்து மதத்துக்குள் [வைதீக மதம்] உள்வாங்கப்பட்டதே, அது தன் தனித்துவத்தை இழக்க காரணம் என்பதே என் வாதம். உதாரணமாக முருகன்- ஸ்கந்தன் ஆகியதைக் அல்லது சிவன்- ருத்திரன் ஆனதைக் கூறலாம். நாம் இருவரும் இந்த விடயங்களில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் மிக அன்பாக, நட்பாக, விட்டுக் கொடுப்புடன் வாழ்க்கை ஆரம்பித்தது. எந்தவித பிரச்சனையும் எமக்கிடையில் வரவில்லை. நல்ல புரிந்துணர்வுடன் குடும்ப வாழ்வு நகர்ந்தது. அவர் ஒழுங்காக விரதங்கள், ஆலயம் போவது, எல்லாம் கடைப்பிடிப்பார். அது அவரின் தனிப்பட்ட விடயம். அவரின் சுதந்திரம். நான் தலையிடுவதில்லை. நான் பிறவியில் சைவம் [சைவ உணவு உண்பவன்] என்பதால், அது உண்மையில் என்னை தாக்கவே இல்லை. இரண்டு மாதம் கழிய தீபாவளி நாள் நெருங்கி வந்தது. அவள் அது 'எமது' தலைத் தீபாவளி என்று பெரிதாக கொண்டாட வேண்டும் என ஒரு திட்டமே போடத் தொடங்கிவிட்டார். அவர் அதை கொண்டாடுவது பற்றி எனக்கு கவலை இல்லை. அதற்குத் தேவையான பணம், நேரம் ஒதுக்கி கொடுப்பதிலும் பிரச்சனை இல்லை. ஆனால் அது 'எமது' என்று என்னையும் அதற்குள் இழுப்பதில் தான் பிரச்சனையாக எனக்கு இருந்தது. என் மனச் சாடசிக்கு விரோதமாக என்னால் என்னை ஈடுபடுத்த முடியாது. அது அவளுக்கும் தெரியும். என்றாலும் அவள் பிடிவாதமாக அதில் இருந்தாள். தீபாவளி என்ற பெயரில், உண்மையில் ஒரு இறப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும் ஒரு தமிழ் [திராவிட] அரசனின் மரணத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்! ராமர் என்ற தனியொருவரை தீபத்துடனும் புத்தாடையுடனும் சிறந்த உணவுகளுடனும் கொண்டாடட்டும். அதே போல கிருஷ்ணாவையும் கொண்டாடட்டும். அதில் ஒருவருக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், ஏன் ஒரு மரணம் கொண்டாடப் படவேண்டும்? அது தான் என் கேள்வி . உதாரணமாக காலிஸ்தானார்கள் இந்திரா காந்தியின் படு கொலையை விழாவாக கொண்டாடினால், அதற்கு நீ எவ்வாறு முகம் கொடுப்பாய் ? இதைத்தான் நான் அவளிடம் விளக்கமாகக் கேட்டேன். ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களுக்கு இந்திரா காந்தி ஒரு மோசமான பெண். மறவர்களுக்கு அவள் ஒரு நல்ல பெண். ஆகவே கொலை மற்றும் எதிர் கொலை போன்றவை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாறக்கூடாது. ஒரு தேசமோ ஒரு தேசத்தின் ஒரு பகுதியோ ராமரின் பிறந்த தினத்தையோ அல்லது முடிசூட்டு விழாவையோ கொண்டாடுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் தமிழர்களின் [திராவிடர்களின்] பிரதிநிதியாக கருதப்படும் ராவணன் உருவப் பொம்மை ஏன் எரிக்க வேண்டும்? இது, இருதரப்பினர்களுக்கும் இடையில் அவர்களின் பகையான உறவை ஞாபகப்படுத்தவே உதவும் என அவளுக்கு விரிவாகக் எடுத்து கூறினேன். ஆனால் அவள் அதில் விட்டுக்கொடுப்பு செய்ய மறுத்துவிட்டாள். தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். நீங்க எங்கள் வீட்டிற்கு வந்து அப்பா அம்மா என் சகோதரர்களுடன் அதில் பங்குபற்றவேண்டும். இது நான் கல்யாணத்துக்கு முன்பே கண்ட கனவு! என் நம்பிக்கை!! . அவள் கோபமாக சொல்லிவிட்டு படுக்கை அறைக்கு போய் படுத்துவிட்டாள்! எனக்கு இது தலை தீபாவளியா அல்லது தலை போகும் தீபாவளியா புரியவில்லை. அன்று என்னுடன் சமயமா ? மானிடமா ? என்ற விவாதத்தில் தோற்று கண்ணீருடன் கோபமாக போனது ஞாபகம் வந்தது. நான் ஏளனச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டு கைதட்டிக் கொண்டு இருந்தேன் . ஆனால் இன்று நிலைமை வேறு? ஆனால் நாம் தமிழர். உலகின் மூத்த குடிகளில் ஒருவன். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பறைசாற்றிய இனம் என்ற கர்வமும் என்னை விட்டு விலகவில்லை? அவள் இரவு சாப்பாடு சாப்பிடவும் இல்லை, ஏன் இரவு உடை கூட மாற்றவில்லை, அப்படியே கட்டிலில் குறுக்காக படுத்து இருந்தாள். நான் ஒரு தேநீர் மட்டும் குடித்துவிட்டு, இரவு செய்திகளை பார்த்துவிட்டு அறைக்கு வந்தேன். அவள் குறுக்காக மட்டும் அல்ல, கைகளையும் நீட்டி, நான், தனக்கு பக்கத்தில் படுக்காதவாறு போர்வையால் மூடி படுத்து இருந்தாள். உண்மையில் நித்திரையா ஊடலா எனக்குத் தெரியாது? "நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே" என்ற வரி என் நெஞ்சில் மின்னலாக வந்தது. உனக்கான துன்பத்துக்கு காரணமான நீயே அதற்கான ஆறுதல் என்றது இனி என் வாழ்க்கை இனிய வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணாதே. பிறப்பு இறப்பு போல இன்ப துன்பமும் உண்டு என எச்சரிக்கையும் விட்டது. அது உண்மையில் அவளுக்கு சொல்ல வேண்டியது. தேவையில்லாமல் தானே தன் தலைக்கு வலிய துன்பத்தை வாரிப் போட்டுக்கொண்டு, மற்றவரையும் படுக்கவிடாமல் வருத்திக் கொண்டு படுத்து இருப்பவள் அவள்தானே! குடும்பம் என்றால், ஒருவரை ஒருவர் வீட்டுக் கொடுத்து நடக்கவேண்டும். ஆனால் அதற்காக எம் மானத்தை விற்கமுடியாது. எனவே காலை நாம் இருவரும் அவளின் தாய் வீட்டுக்கு போவதாகவும், என்றாலும் ஏதாவது சாட்டு சொல்லி, கொண்டாட்டத்தின் பொழுது அதில் இருந்து விலகுவதாகவும் யோசித்தேன். நான் மற்ற அறையில், அவளை குழப்பாமல் படுத்துவிட்டேன். ஆனால் எனக்கு நித்திரை வரவில்லை. கண் மூடி சும்மா படுத்து இருந்தேன். ஓர் சில மணித்தியாலத்தில் பின், யாரோ என் கதவை மெல்ல திறப்பது கேட்டது. மெல்ல கண் திறந்து பார்த்தேன். அவள் தான் ! இரவு உடையில், அழகு தேவதையாக, என் கிட்ட வந்து, என்னை தட்டினாள். "சரி நாம் இறப்பை கொண்டாடாமல் முடிசூட்டு விழாவை மட்டும் கொண்டாடுவோம், இப்ப எழும்பு வாங்க சாப்பிட " என்று கையை பிடித்து இழுத்தாள்! இருவரும் சாப்பிட்ட பின், அவள் திருஞானசம்பந்தர் தேவாரம் ஒன்றை எனக்கு கேட்கக்கூடியதாக "வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்" பாடிக்கொண்டு, மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று அழாக்குறையாக கேட்டாள். எனக்கு சிரிப்புத் தான் வந்தது. கபாலீச்சரம் என்னும் கோயிலில் [சிவன் கோவில்] விளங்கும் பெருமானைக் என்று குறிப்பிட்டதை அவள் கவனிக்கவில்லை போலும். "மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர, வருகதில் அம்ம!" [அகநானுறு 141] தெருவெங்கிலும் விளக்கு வைக்கின்றனர். மாலைத் தோரணம் கட்டுகின்றனர். பழமை மேம்பாடு கொண்ட நம் ஊரில் எல்லாரும் கார்த்திகை என்ற விளக்கீட்டு விழாவை [தீபம் + ஆவளி / விளக்கு வரிசை] கொண்டாடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் விழாக் கொண்டாட அவர் வரவேண்டும் என்ற அவளின் ஏக்கம் முழுதாக தேவாரத்தை பார்க்க விடவில்லை போலும். தலை தீபாவளி, தலை போகாமல் , புரிந்துணர்வுடன் அவள் தீபாவளியாகவும் நான் கார்த்திகை விளக்கீடாகவும் ஒன்றாக இரு தரப்பு குடும்பகங்களுடனும் ஆனால் மரணத்தை, இழவு படுத்துதலை தவிர்த்து மகிழ்வாக கொண்டாடினோம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01 உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம். அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் சுதந்திரம், ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில் ,சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு - இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்து உள்ளதுடன், சராசரி ஆயுள் காலம் 75 - ஐ தாண்டுகிறது. என்றாலும் அவர்கள் மகிழ்வாக வாழ்கிறார்களா என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது? பிசிராந்தையர் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புறநானூறு பாடல் 191 ஞாபகம் வருகிறது: ‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்க; அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே. “உங்களுக்குச் சென்ற ஆண்டுகள் பலவாக இருக்கவும், உங்களுக்கு நரையில்லையே அது எப்படி என நீங்கள் கேட்பீராயின் கூறுவேன்: "வீட்டில் மனைவி நல்லவள்; மக்கள் அறிவு நிரம்பியவர். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது போல் ஏவலர் குறிப்பறிந்து நடப்பவர். எனவே வீட்டில் சிக்கல் இல்லை. அக அமைதி கூடிற்று. புறத்தேயும் அரசன் நல்லவன்,என் நாட்டு அரசனும் நீதி அல்லாதவற்றைச் செய்யாமல் காவல் காப்பவன். ஊரார் சான்றோர். புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான் அந்த புலவன். ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்ப தும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்று பொதுவாக மூன்று விதமாக இந்த முதியோர்கள் வாழ்கிறார்கள். உதாரணமாக, சிலர் பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிக்கிறார்கள், சிலர் கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிக்கிறார்கள், மற்றும் சிலர் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவராக தனியாக வசிக்கிறார்கள். இங்கு ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்கத் தொடங்குவதும் அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம். அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா? "இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே" இங்கே முதல் பதினொரு அடிகளில் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்வி ட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில் ... "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து , இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும் , முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். அது மட்டும் அல்ல, நற்றிணை 10 இல் , காதல் என்பது உடற்காமம் அன்று அதனையும் கடந்து மனதளவில் உயர்ந்து நிற்பதாகும். எனவே, உடல் அழகு நீங்கி நரையோடு முதுமை வந்த போதும் அவளைப் போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்கிறது. இது இரு சாராருக்கும் பொருந்தும். "பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கே ழூர" மேலும் உடம்பின் வெவ்வேறு மாற்ற நிலையை குண்டலகேசிப் பாடல் ஒன்று இப்படி எடுத்து உரைக்கிறது; "பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளுநாள் சாகின் றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?" அதாவது, பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. பின் குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் பிறக்கிறது. அந்த காளைப் பருவம் செத்து, காதலுக்கு உரிய இளமைப் பருவம் ஏற்படுகிறது. அதுவும் பின் மாறி முதுமை உண்டாகிறது என்கிறது. ஆனால், பொதுவாக இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது. முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் "முதுமையில் தனிமை" மிகவும் கொடியது. அது மட்டும் அல்ல, முதுமையை இன்னொரு குழந்தைப் பருவம் எனலாம். குழந்தைகள் எப்படித் தங்கள் மீது கவனமும் அன்பும் செலுத்தப்பட வேண்டும் என்ற விரும்புவார்களோ, அதே போல முதியவர்களும் விரும்புவார்கள். இதை நாம் அறிய வேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும்.
-
"விடிவை நோக்கி" "விடிவை நோக்கி புறப்படும் மனிதா அடி வருடுவதை மறந்து விடடா குடித்து கும்மாளம் அடித்தது போதும் இடித்து முழங்கி விடியலைத் தேடடா !" "படிப்பு ஈன்ற அறிவைக் கொண்டு நடிக்கும் தலைவனை விலத்தி விடடா துடிக்கும் இதயத்தில் துணிவை ஏற்றி கூடி ஒன்றாய் விடிவை நோக்கடா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
- 1 reply
-
- 1
-
"தாத்தாவின் ஆசீர்வாதம்" [செவ்வாய், 29 அக்டோபர் 2024] / A Granddad’s Blessing [Tuesday, 29 th October, 2024] "இன்று மலர்ந்த மழலைச் செல்வமே இன்பம் பூத்த இனிய புன்னகையே இசை அமுதமாய் அழுகை ஒலிக்க இதயம் மகிழ்ந்த வாழ்த்து உனக்கு!" "ஆறாவது பேரன் அழகிய குழந்தையே ஆனந்தம் கொடுக்கும் குட்டிப் பயலே ஆடிப்பாடி அண்ணன் இருவரும் கொண்டாட ஆசை வைத்து உன்னை ஆசீர்வதிக்கிறேன்!" "மூத்த அண்ணா புத்திசாலி திரேன் மூதறிவு கொண்ட பலமான அண்ணா மூங்கில்தோள் கொண்ட கம்பீர நிலன் மூதேவியை துரத்தி தம்பியை வாழவைப்பான்!" "அம்மா உன்னால் இன்று பிரகாசிக்கிறார் அனைவரும் உன்னில் பாசம் காட்டினம் அநீதி அழிக்க ஆண்டவன் தோண்றினானாம் அன்பு கொட்டிட பேரன் தோன்றினான்!" "சிரிப்பிலும் மகிழ்ச்சியிலும் உன்னைக் காண்கிறேன் சிவிகையில் உன்னைத் தூக்கி ஆட்டுவோம் சிறப்பு பொருந்திய சின்னப் பேரனே சிந்தனைச் சிற்பியாய் சிறந்து விளங்குவாயே!" "இரவும் பகலும் அருகில் இருப்பேன் இரண்டு அண்ணாவும் சேர்ந்து விளையாடுவினம் இனிமை கொண்ட வாழ்வு மலர இதயம் நிறைய என்றும் வாழ்த்துவேன்!" தாத்தா: கந்தையா தில்லைவிநாயகலிங்கம் "A Granddad’s Blessing" "Today, dear child, you’re here with us, A gift so pure, a joy to discuss. My eighth grandchild, my heart grows wide, As I hold you close with so much pride!" "Your eldest brother, wise Dhrien, so bold, At nine years old, his heart of gold. And Nilan, your brother, with a smile so true, Now has a friend in life—that’s you!" "Your mother beams with love so bright, And here I stand, my heart alight. A family blessed, in laughter and cheer, With you, dear grandson, our joy is clear!" "Welcome to life, to love, to light, I’ll be by your side, day and night. With endless blessings from a grateful heart, From your Granddad, who loves you from the start!" Granddad Kandiah Thillaivinayagalingam
-
"மரணத்தை தள்ளி போடலாமா?" & "முடிவுரை" எமக்கு முன்பு இந்த பூமியில் ஏறத்தாழ 100 பில்லியன் மக்கள் வாழ்ந்து இறந்து இருக்கலாம். ஆனால் அவர்களில் ஒருவர் கூட திரும்பி வந்து, மறுமை இருக்கிறது என்பது [existence of an afterlife] பற்றி எந்தவித ஐயப்பாடும் இன்றி, தெளிவான ஆக்கபூர்வமான சாட்சியம் அளித்ததாக வரலாறு இல்லை. என்றாலும் பல சமய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் இவைபற்றி பல தரவுகளை, கதைகளை தம் கற்பனைக்கு ஏற்றவாறு கூறுகின்றன. நாம் ஏன் இறக்கிறோம் என்பதற்கு இறையியலாளர்கள் மற்றும் மத விசுவாசிகள் [Theologians and religious believers] நீண்ட காலமாக இரண்டு அடிப்படையில் பதிலை கூறுகிறார்கள். முதலாவது இறப்பு என்பது இந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாற்றம் அடைதல் என்கிறார்கள் [death is simply a transition from this stage to the next in a cosmic proscenium]. இரண்டாவதாக, கடவுளின் வடிவமைப்பின் ஒரு பகுதியாக அது உள்ளதுடன், அதற்கான காரணம் நீங்கள் இவ்வுலகத்தை விட்டு அவ்வுலகம் சென்றதும், உங்கள் செயல்களுக்கான தார்மீக மதிப்பெண்களை கணக்கிட்டு அது உங்களுக்கு தெரிய படுத்தப்படும் [that will be disclosed once we get to the other side, usually involving a cosmic comeuppance for one’s actions and a settling of all moral scores] என்கிறார்கள். என்றாலும் விஞ்ஞானிகள், பரிணாமத்தின் கொள்கையின் படி, அது எங்கள் சந்ததியினூடாக அழியாத மரபணுக்களையும் ஆனால் அழியும் உடல்களையும், ஏனென்றால், உங்களை பாட்டன், பூட்டன், ஓட்டன், சேயோன், பரன் என்று உயிருடன் வைத்திருப்பதை விட, எதிர்கால தலைமுறையினரை நோக்கி வளங்கள் சிறப்பாக ஒதுக்கப்படுகின்றன என்பதால், மற்றவர்கள் வாழ நாம் இறக்கிறோம் என்கிறது [Due to the logic of evolution, or the fact that natural selection created immortal genes through our offspring but mortal bodies because resources were better allocated toward future generations than keeping alive great great grandparents — we die so others may live]. அதாவது மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பது ஆகும். என்றாலும் மனிதன் ஆண்டுக்கணக்காக மரணத்தை வெல்ல, அதன்மூலம் ஒரு இறவாநிலை அல்லது மரணமின்மையை அடைய முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். தன் எண்ணங்களுக்கு வடிவமாகவே புராணங்களிலும் இதிகாசங்களிலும் அதை புகுத்தினான். உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [“Gilgamesh Epic”/ written c. 2150 - 1400 BCE] என்கிடு இறந்ததும், கில்கமெஷ் மிகவும் கலக்கம் அடைந்து, குழப்பம் அடைந்து, இறப்பு அற்ற நிலையான வாழ்வை பெறுவதற்க்காக உட்னபிசிதிம் (Utnapishtim) என்ற கடவுளை நாடி, மரணமில்லாமை பற்றிய ரகசியத்தை அறிய முயற்சிக்கும் கில்கமெஷின் பயணத்தை இந்த நூல் விவரிக்கிறது. கில்கமெஷ் அழியாத வாழ்வை பெறாவிட்டாலும், 126 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதாகவும் [the Sumerian King List records his reign as 126 years] மிகப்பெரிய வலிமை கொண்டவனாகவும் இருந்தான் என்கிறது. அதே போல மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி, பாற்கடலை கடைந்து அங்கு திரண்டெழும் (சாகாமல் உயிர்வாழ உதவும்) அமுதத்தை அசுரர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆனால் பின் மகாவிஷ்ணுவின் உதவியுடன் ஏமாற்றி, தேவர்கள் மட்டும் குடிக்கும் ஒரு "பால் கடல் கடைதல்" என்ற புராண கதையை இந்து புராணத்திலும் காண்கிறோம். ஆனால் ஒரு உண்மையான முயற்சி ஒன்றை, கிமு 221 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசர் யிங் ஷெங் [Ying Zheng] என்னும் சொந்தப் பெயர் கொண்ட சின் ஷி ஹுவாங் ,கிமு 259 – செப்டெம்பர் 10, கிமு 210, [Qin Shi Huang, 'First Emperor of Qin, 18 February 259 BC – 10 September 210 BC ] என்பவர், தான் பெற்ற அதிகாரத்தையும் வலிமையையும் நிரந்தரமாக பாதுகாக்க, என்றென்றும் இறைவா வாழும் யோசனை ஒன்றை கொண்டிருந்தார். தனது கடைசி காலத்தில், புராணத்தில் கூறப்பட்டிருந்த, அனைத்து நோய் நிவாரணியான அமுதம் ஒன்றை [mythical elixir of life] இறைவா மருந்தாக அருந்த பாடுபட்டார். ஆனால் அவர் பாதரச மாத்திரைகளை [mercury pills] அந்த முயற்சியில் சாப்பிட்டு தன் உயிர் நீத்தார் என வரலாறு கூறுகிறது. இன்றைய நவீன உலகில் கூட, இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. இதனால், மனித வாழ்வின் நீண்ட ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ளது புள்ளிவிபரங்கள் படி தெரியவருகிறது. உதாரணமாக கடந்த இருநூறு ஆண்டுகளில், சராசரி மனித ஆயுள் 40 இல் இருந்து 72 இற்கு அதிகரித்துள்ளது. மேலும் சில வளர்ந்த நாடுகளில் [developed countries], இன்று சராசரி ஆயுள் காலம் 80 ஆகிவிட்டது. ஆகவே வரும் காலத்தில் அது 100 ,150 , 200 றைக் கூட தாண்டலாம் ? ஆனால் இறவா நிலை அடையும் என்பது இப்போதைக்கு, இப்ப இருக்கும் சூழ்நிலையில் சொல்லமுடியாது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதலாக 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், உலகளாவிய வயது கண்காணிப்பு அட்டவணை [Global AgeWatch Index], 2050 இல் 60 வயது வரை உள்ளவர்களின் தொகை ஒரு கணிசமான அளவு அதிகரிக்கும் என்கிறார்கள். அப்பொழுது 60, 40 போலாகிவிடும் என எதிர்வு கூறுகிறார்கள் [By then, people may start saying that sixty is the new forty]. அடுத்த நூற்றாண்டில், அதிகமாக மனிதர்களின் முக்கிய உறுப்புகள், இயந்திரங்கள் மற்றும் கணினிகளால் [with machines and computers] மாற்ற முடியும் என நம்புகிறார்கள். உதாரணமாக, பேராசிரியர் யூவால் நுவா அராரி (Yuval Noah Harari 24 பிப்பிரவரி 1976), தான் எழுதிய ஹோமோ டியூஸ் ['Homo Dais' / நாளைய வரலாறு] என்ற புத்தகத்தில், சமய நம்பிக்கை உள்ள மக்கள், கடவுளின் தீர்ப்பே மரணம் எனலாம், ஆனால் விஞ்ஞானிகளுக்கு இது உடலில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு [a technical glitch in the body] என்றும், ஆகவே விஞ்ஞானிகள் இதற்கான தீர்வை ஆய்வகங்களில் கண்டு பிடித்து மரணத்தை ஒரு காலம் தவிர்க்கலாம் என்கிறார். அதே போல படிவளர்ச்சிக்கு அமைய மனிதரில் இருந்து அல்லது மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செலுத்த மீவுமனிதர் [Transhuman] என்ற ஒன்று மரபணு பொறியியல், தானியங்கியல், நனோ தொழில்நுட்பம் போன்ற நுட்பங்கள் மூலம் உருவாக்கலாம் என்ற ஒரு ஜோசனையும் இன்று உண்டு. உதாரணமாக, ஊனம், வலி, நோய், முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத அம்சங்களை குறைக்க அல்லது தீர்க்க இந்த திட்டம் முயல்கிறது. மரணத்தை வெல்ல இவை எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இன்றைய சூழலிலும், இன்றைய விஞ்ஞான கோட்பாடுகளிலும் இல்லை என்றே கூறலாம், அனால் தள்ளிப் போட முடியும் [Researchers use mathematics and cell science to conclude that the aging process and death are inevitable, no matter how hard you try.but we can still live longer]. ஒரு மனித ஜீவனானவன் ஒரு மோட்டார் காரைப் போன்றவனல்ல. அவனது பாகங்களை தொடர்ந்து மாற்றிச் சரி செய்து, வியாதிகளிலிருந்து அவனை காப்பாற்றி, வயோதிகமடைவதை தடுத்து நிறுத்தி மரணத்தை வென்று என்றென்றைக்குமாக அவனை வாழ வைத்துவிட முடியாது என்பதே உண்மை. ஆகவே இயற்கையின் நியதிகளில் மரணமும் ஒன்றாகும். ஆகவே நாம் மரணத்தைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும். ஏன் என்றால் மரணத்தைப் புரிந்து கொள்ளாமல் நம்மால் வாழ்க்கையை முறையாகப் புரிந்து கொள்ள முடியாது. வாழவும் முடியாது என்பதாலாகும். இது தான் இந்த கட்டுரையின் நோக்கமும் ஆகும். “கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே" ஒரு சித்தர் தன் பாடல் மூலம் உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறி உள்ளார். இன்று நாம் மிகவும் நுண்ணியமாக உடல் அமைப்பையும் அதன் இயக்கத்தையும் அறிகிறோம். ஆகவே எம் உடல் ஒரு இயந்திரம் போல் காட்சி அளிக்கிறது. எனவே இதை எமக்கு தெரிந்த இலகுவான மின்விசிறி இயந்திரத்துடன், ஒரு உதாரணத்துக்கு ஒப்பிடுவோமாயின், ஒரு மின்விசிறி சுழல்கின்றது என வைப்போம். ஆகவே அதில் இருந்து காற்று வெளியேறுகிறது. இப்போது இந்த வெளியேறும் காற்றை நாம் மீண்டும் மின்சக்தியாக மாற்றி, இதை மட்டுமே கொண்டு, மீண்டும் மீண்டும் இந்த செயலை தொடரமுடியுமா என்று சிந்தித்தோம் என்றால், வெப்ப இயக்க வியலின் இரண்டாம் விதியின் [the Second Law of Thermodynamics, or the fact that there’s an arrow of time in our Universe that leads to entropy [the amount of energy which is unavailable to do work / a measure of disorder] and the wearing down and eventual death of all systems, from stars and people to the Universe itself;] படி இது சாத்தியமற்றது. நேரம் செல்ல செல்ல, மின்விசிறியின் திறம் குறைந்து கொண்டே வரும். ஒரு சமயத்தில் அது நின்று விடும். அப்படித்தான் எம் உடலும் என்கிறார்கள். உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். சித்தர், முக்தர், ஞானிகள், யோகிகள், முனிவர்கள் எல்லோரும் மரணத்தை வெல்ல எதையெதையோ செய்து பார்த்தார்கள். மூச்சை அடக்கிப் பார்த்தார்கள். மௌனத்தில் இருந்து பார்த்தார்கள். காயகல்ப்பம் [இன்றைய விஞ்ஞான புரிதலின்படி செல் அழிவை மீட்டெடுக்கும் பணியைச் செய்யக்கூடிய தாவர நுண்கூறுகள் கொண்ட ஒரு மருந்து / காயம் என்றால் உடல். கல்பம் என்பது நீண்ட கால அளவை குறிக்கும் சொல்] உட்கொண்டு பார்த்தார்கள். ஆனால் மரணத்தை வெல்ல முடியவில்லை. புத்தன், யேசு, முகமதுநபி, இராமன், சங்கரர், இராமானுஜன் எல்லோருமே மாண்டு போனார்கள். "காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன் காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்" என முழங்கிய பாரதியும் இன்றில்லை. இதுதான் உண்மை! "நொந்த புண்ணைக் குத்துவதால் பயனொன்றில்லை நோ யாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான் அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்! பார்மீது நான் சகா திருப்பேன், காண்பீர்!" (பாரதியார் சுயசரிதை) "முடிவுரை" உடல்நலக் குறைபாடு, விபத்து, மனநிலை மாற்றம், மன அழுத்தம் என பல காரணங்களால் இறப்பு ஏற்படுகிறது. இப்போதெல்லாம் இயற்கை மரணங்கள் என்பது அரிதிலும் அரிதாகி விட்டது. பிறப்பென்றால், இறப்பு என்பது நிர்ணயம் செய்யப்பட்டது தான். ஆனால், அது தானாக நிகழ வேண்டுமே தவிர நாமாக ஏற்படுத்திக் கொள்ள கூடாது. சித்தார்த்தன் ஒரு மரணத்தை முதன்முதலாகப் பார்த்த பின்னர்தான் ஆன்மீகத் தேடல் ஏற்பட்டு புத்தரானான். மரணத்தைப்பற்றி எப்போது ஒருவர் சிந்திக்க துவங்குகிறாரோ அப்போதுதான் ஆன்மீகத் தேடல் உண்டாகிறது எனலாம். இந்த நூற்றாண்டின் கவிஞன் கண்ணதாசன் இறப்பை பற்றி இப்படி கூறுகிறான்: "வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?" இதன் கருத்து ஒரு மனிதன் இறக்கும் போது, அவனது உறவினர்களும் நண்பர்களும் வீடு வரை மட்டும் வருகிறார்கள். அவனது துணைவியார் [மனைவி] வீதி வரை வருகிறாள். அவனது அன்பு பிள்ளைகள் சுடலை வரை வருகிறார்கள். அதன் பின் அவனை தொடர்வது யாரோ? என கேள்வி கேட்கிறான். இதன் உண்மையான அர்த்தம் உடல் எரித்த பின் அவரை ஒருவரும் அல்லது எதுவும் தொடர்கிறதா என்பது தெரியாது என்பதே அல்லது அப்படி ஒன்றும் இல்லை என்பதே ஆகும். என்றாலும் அதற்கும் தனது பதிலை கொடுக்கிறான் கண்ணதாசன் -வேறு ஒரு பாட்டில் அல்ல - அதே பாட்டில் . "விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு" மிகவும் எல்லோராலும் அறியப்பட்ட பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த சித்தர் பட்டினத்தாரும் அதற்கான விடையை தருகிறார். அவரின் ஒரு பாடல் மேலே கூறிய பாடல் வரிகளை ஒத்து போகிறது. "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பு ஒழுக மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும் சுடுகாடு மட்டே பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே" ஒரு மனிதன் இறந்த பின், அவனது இறுதி பயணத்தில் உடன் வருவது யார்? என்ற கேள்விக்கு இந்த பாடல் பதில் அளிக்க முயல்கிறது. "சேர்த்துக் குவித்துள்ள செல்வமா?" "அது வீட்டோடு தங்கிவிடும்!" "மனைவியா?" "வீதிவரை துணை வருவாள்!" "மகனா?" "சுடுகாடு வரை துணை வருவான்" "கடைசிவரை வரும் துணை யார்?" "நல்வினை தீவினைகளே!" என்று பதில் அளிக்கிறது. பட்டினத்தாருக்கு இப்படி ஒரு ஞானம் தந்த வாக்கியம்: "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற வாக்கியமே! இதன் கருத்து "மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக் கூட கடைசியில் கையில் கொண்டு செல்ல முடியாது'' என்கிறது. பொதுவாக சித்தர் பாடல்கள் மிகவும் தத்துவமானவை, அப்படி பட்ட பாடல்களில் ஒன்று: "நந்தவனத்தில் ஓர் ஆண்டி நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி" இந்த பாடலின் கருத்தை மேலோட்டமாக பார்க்கும் போது, இந்த ஏழையின் முயற்சி, இரங்கி பெற்ற மட்பானையை பாதுகாக்காமல், வீணாய் போயிற்று என்று தோன்றும். ஆனால் அது உண்மையான கருத்தல்ல. நந்தவனம் என்பது பூமியை குறிக்கிறது. அது போல ஆண்டி என்பது மனிதனை குறிக்கிறது. இந்த பூமியில் பிறக்கும் எவரும் ஒன்றும் கொண்டு வருவதில்லை. ஆகவே அவன் ஒரு ஆண்டி. நாலு ஆறு, மொத்தம் பத்து மாதத்தின் பின் பிறக்கிறான். ஆகவே இந்த பத்து மாதத்தை, தன்னை இந்த மனித உடலில் இந்த பூமியில் கொண்டு வந்த படைத்தவனை வேண்டுவதாக கருதலாம். தன்னுடைய உயிரை வைத்திருந்த உடலை மட்பானைக்கு ஒப்பிடுகிறார். ஆகவே அந்த குயவர் கடவுளாகிறார். தன்னுடைய உடல்நலத்தை பேணாது, வீணாக இந்த பூமியில் சுற்றித்திரிந்தது தனது வாழ்வை போட்டு உடைக்கிறான் என்கிறது. "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்ற தமிழ் பழ மொழியையும் நினைவு கூறுங்கள். அது சொல்லுவது என்னவென்றால் ஒரு மனிதன் ஆறு வயதிலும் சாகிறான். நூறு வயதிலும் சாகிறான்.ஆகவே வாட்டமுறுவதிலும் அல்லது தன்னிலை இழப்பதிலும் ஒரு அர்த்தம் இல்லை. ஆகவே உங்கள் நல்ல முயற்சிகளை வைத்து, நீங்கள் வாழும் மட்டும் வாழுங்கள் என்பதே. வாழ்க்கையும் இறப்பும் ஒரு நாள் சந்தித்தன. வாழ்க்கை மிகவும் பெருமையாகவும் கர்வத்துடனும் இறப்பிடம் சொன்னது என்னை எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் உன்னை யாரும் விரும்புவதில்லையே என்று கூறி கொக்கலித்து சிரித்தது. அதற்கு மிக அமைதியாக, ஒரு புன்னகையுடன் இறப்பு கூறியது: "நீ [வாழ்க்கை] ஒரு அழகான பொய். நான் [இறப்பு] ஒரு கசப்பான உண்மை." என்றது. ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் ஒவ்வொரு பயணத்தில் போகின்றனர். பயணத்தின் நோக்கமும் அது போய் சேரும் இடமும் வெவ்வேறாக இருந்தாலும், கடைசியில் எல்லோரும் மரணத்தை நோக்கியே போகிறோம் என்பதை மறுக்க முடியாது. மரணத்தை பற்றிய தெளிவும்,மரணதிற்கு பின் நடக்க போகும் நிகழ்வுகள் பற்றியும் தெரிந்து இருந்தால் மனசுக்குள் ஆத்திரமும், அவசரமும் தலை தூக்க வாய்ப்புகள் ரொம்ப குறைவே. இதனால் என்ன ஆகும். மனசு சந்தோசமாக இருக்கும். மனசு சந்தோசமாக இருந்தால் ரொம்ப நாள் உயிர் வாழலாம். சும்மா சாப்பிடுவதும் நித்திரை கொள்வதும் தான் வாழ்க்கை என்று வாழ்ந்தால் அதில் நீங்கள் ஒன்றும் அடையப் போவதில்லை. உங்களை அறிவுள்ளவராக மாற்றும் எந்தவித அனுபவத்தையும் நீங்கள் பெறவில்லை என்றால், உங்கள் பார்வையில் இந்த உலகம் எப்படிபட்டது என்பதையும் அறியமாட்டீர்கள். ஞானம் மிக பயனுடையது. நீங்கள் இந்த உலகை விட்டு போகும் போது, "நான் எந்தவித கவலை அல்லது வருத்தம் இன்றி வாழ்ந்தேன்" என்று சொல்லவேண்டும். ஆகவே இந்த வாழ்வை நாம் நல் வழியில், நல் நோக்கத்துடன் விவேகானந்தர் கூறியது போல, "மரணம் வருவது உறுதியாக இருக்கும் போது, மேலான இலட்சியத்திற்கா வாழ்ந்து இறந்து போவது சிறந்தது" என வாழ்வோமாக! புறநானுறு 356:1 - 4, "களரி பரந்து கள்ளி போகிப் பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய் ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு" என பாடுகிறது. களர் நிலம் பெருகிக் கள்ளி முளைத்தது. பகலில் கூவும் கூகைகளாலும் பிணம் சுடும் தீயின் வெளிச்சத்தாலும் சூழ்ந்த இந்த சுடுகாடு காண்போர்க்கு அச்சத்தை வரவழைப்பது போல உள்ளது. அப்படிபட்ட காண்போர்க்கு அச்சத்தைத் தரும் கொடிய இடம் சுடுகாடு. நாடாண்ட மன்னர்கள் கூட முடிவில் அந்த சுடு காட்டைத்தான் சென்றடைகின்றனர். வாழ்க்கை நிலையாதது. ஒருவன் செய்த செயல்களுக்கேற்ப அவனைச் சாரும் பழியும் புகழும் அவன் இறந்த பிறகும் நிலைத்து நிற்கும். ஆகவே, இறப்பதற்கு முன், நற்செயல்களைச் செய்து புகழைத் தேடிக்கொள் என்பதேயாகும். இவ்வாறே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடலான மற்றும் ஒரு புறநானுறு 359:8-18 பாடலும் "காடுமுன் னினரே நாடுகொண் டோரும்; நினக்கும் வருதல் வைகல் அற்றே; வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; அதனால், வசைநீக்கி இசைவேண்டியும் நசைவேண்டாது நன்றுமொழிந்தும் நிலவுக்கோட்டுப் பலகளிற்றோடு பொலம்படைய மாமயங்கிட இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது கொள்என விடுவை யாயின் வெள்ளென ஆண்டுநீ பெயர்ந்த பின்னும் ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே." என ஆலோசனை வழங்குகிறது: அதாவது நாடுகளை வென்றவர்களும் அத்தகைய சுடுகாட்டைத்தான் சென்றடைந்தனர். உனக்கும் அந்த நாள் வரும். இவ்வுலகில் அவரவர் செய்த பழியும் நிலைத்து நிற்கும்; புகழும் நிலைத்து நிற்கும்.அதனால்,பழியை நீக்கிப் புகழை விரும்பி, விருப்பு வெறுப்பு இல்லாமல், நடுநிலையில் இருந்து, நல்லவற்றையே பேசி, ஒளிறும் தந்தங்களையுடைய களிறுகளையும்,பொன்னாலான அணிகலன்களை அணிந்த குதிரைகளையும், பொன்னிழை அணிந்த தேர்களையும் இரவலர்க்குக் குறையாது கொடுத்து அனுப்பினால், வெளிப்படையாக, நீ மேலுலகத்திற்குச் சென்ற பின்னரும் உன் ஈகையால் உண்டாகும் புகழ் இவ்வுலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்கிறது. "இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா? உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா? கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது போனால் போகட்டும் போடா..." [பாலும் பழமும்/கவிஞர் கண்ணதாசன்] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"மண்ணும் மரமும்" "மண்ணும் மரமும் பண்பு காட்டும் ஒன்றுபட்டு மனிதனை வாழ வைக்கும் கண்ணும் இமையும் போல இருந்தே மனித வாழ்வைத் தக்க வைக்கும்!!" "வானத்தின் அடியில் மண் இருக்கும் நீண்டு நிரப்பும் வேருக்கு தொட்டிலாகும்! விதை புதைந்து மரம் உயரும் மண்ணில் வளர்ந்து வானம் தொடும்!!" "பழைய கதைகளை மண் கிசுகிசுக்கும் தோண்டிப் பார்த்தால் வரலாறு புரியும்! காலத்தின் தழுவலில் இயற்கையின் பிணைப்பில் மண் உடலே! மரம் கருணையே!!" . [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பேதையே போதையேன்" "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே சிற்றிடையாள் ஒளவை அன்று கூறினாள் சினம் ஏன் இன்று உனக்கு ?" "பேதையே போதையேன் நானும் கேட்கிறேன் பேரறிவு கொண்ட தலைவனே சொல்லாயோ? பேச்சில் எதற்குத் தையல் மட்டும் பேரொலி உடன் விடலையைச் சேர்க்கையோ?" "தெண்கள் தேறல் மாந்தி மகளிரென தென்னாட்டு மூதை பாட்டுப் பாடினாள் தெளிவாகத் தெரியுது இருவரும் அருந்தினரென" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"காற்றில் ஆடுது வெள்ளை ரோசா" "காற்றில் ஆடுது வெள்ளை ரோசா காதல் பேசுது பொன் வண்டு கானம் பாடுது சுற்றி வருகுது காமம் கொண்டு தேன் பருகுது!" "இதயம் கவருது சிவப்பு ரோசா இதழ்கள் தொட்டு வண்டு கொஞ்சுது இச்சை கொண்டு துள்ளிக் குதிக்குது இணக்கம் சொல்லி ரோசா அணைக்குது!" "அழகாய் மலருது ஊதா ரோசா அருகே வருகுது கருத்த வண்டு அங்கம் எல்லாம் தொட்டு ரசிக்குது அடக்கமாய் ரோசா விட்டுக் கொடுக்குது!" "கண்ணைக் கவருது ஆரஞ்சு ரோசா கதிரவன் அன்பில் தன்னை மறக்குது கபடன் வண்டு கொஞ்சிக் குலாவுது கள் குடித்து மயங்கிப் படுக்குது!" "உள்ளம் பறிக்குது இளஞ்சிவப்பு ரோசா உரிமை கொண்டாடுது சிவப்பு வண்டு உறிஞ்சி குடித்து முத்தம் இட உல்லாசம் அடைந்து ரோசா மகிழுது!" "மரத்தில் தொங்குது மஞ்சள் ரோசா மகிழ்ந்து கூடுது இளம் வண்டு மது சொரிந்து இதழ் நெளித்து மஞ்சம் ஆகுது அழகு ரோசா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
“ஆண்டாள் மாலை”
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in பேசாப் பொருள்
எல்லோருக்கும் நன்றி