“கழிப்பறை உபயோகிப்பதைப் பற்றி மத்திய அரசு, இப்போதுதான் விளம்பரம் செய்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் 2,500 வருடங்களுக்கு முன்பே கழிப்பறை வசதியுடன், நவீன கட்டுமானங்களுடன் நாகரிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் கீழடியில் காண முடிகிறது” என்று இன்று கீழடிக்கு வருகை தந்த சீமான் மீடியாக்களிடம் பெருமிதமாகப் பேசினார்.
கீழடியில், கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களைப் பாதுகாக்க மைசூரில் இருக்கும் மத்திய தொல்லியல் துறை அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்வதாக தொல்பொருள் துறையினர் அறிவித்ததால், கீழடி அகழ்வுப்பணி மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர் தமிழக அரசியல்வாதிகள்.
இதனால் கொதித்து எழுந்துள்ள தமிழக தலைவர்கள், எழுத்தாளர்கள் இதைக் கண்டித்து பேசி வருகிறார்கள். மைசூருக்குப் பொருட்களைக் கொண்டு செல்லத் தடைவிதிக்க கனிமொழி என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.
இந்த நிலையில்தான் ராமநாதபுரம் வந்த சீமான், திரும்பும் வழியில் கீழடிக்கு வந்தார். நடந்துகொண்டிருந்த அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டு அங்கிருந்த ஆய்வாளர்களிடம் விவரங்கள் கேட்டார். அதன்பின் நம்மிடம் பேசியவர், ‘‘சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற தமிழரின் நாகரிக வாழ்வியலின் சாட்சியான தொல்பொருட்களைப் பார்க்கும்போது பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த வட்டாரம் முழுவதும் ஆய்வு செய்தால் தமிழர்களின் பண்டைய நாகரிக வாழ்வியலைப் பற்றிய தடயங்களைச் சேகரிக்கலாம். இரண்டு வருடங்களாக இங்கு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்திப் பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ‘தமிழரின் பெருமையைப் பாதுகாக்க வேண்டும்’ என்று மக்கள் கேட்கும் நிலையில்தான் அரசாங்கத்தின் நிலை உள்ளது. தற்போது நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை தொடர வேண்டும்.
இந்த தனியார் இடத்தை விலை கொடுத்து வாங்கி தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து, பராமரித்து தமிழக மக்களிடமும், மாணவர்களிடமும் இதன் பெருமைகளை எடுத்துச்சொல்ல அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதானிக்கு ஐயாயிரம் ஏக்கர் இடம் வேண்டுமென்றால், உடனே வாங்கிக்கொடுக்கும் அரசு, தமிழரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள சில ஏக்கர்களை வாங்கிக்கொடுக்க முடியாதா?
கழிப்பறை உபயோகிப்பதைப் பற்றி மத்திய அரசு இபோதுதான் விளம்பரம் செய்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் 2,500 வருடங்களுக்கு முன்பே கழிப்பறை வசதியுடன் நாகரிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை கீழடியில் காண முடிகிறது. தமிழரின் பண்டைய வீரமும், பெருமையும், வரலாறும், ஆவணங்களும் அழிக்கப்பட்டு வரும் சூழலில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்லக் கூடாது. மீறிக் கொண்டு செல்ல முயன்றால் நாம் தமிழர் கட்சி போராடும்’’ என்றார்.
http://www.vikatan.com/news/tamilnadu/69033-seeman-opposes-for-moving-keezhadis-ancient-artefacts.art?artfrm=related_article