Jump to content

Search the Community

Showing results for tags 'ஜெயமோகன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 5 results

  1. மேட்டிமைவாதமா? jeyamohanDecember 26, 2023 அன்புள்ள ஜெ உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தால் மேட்டிமைவாதம் என்கிறார்கள். ஆலோசனை சொல்ல வருகிறார்கள். இவர்களைப்பற்றி உங்களுக்குச் சலிப்பாக இல்லையா? பிரதீப்ராஜ் அன்புள்ள பிரதீப், அண்மையில் பலபேர் இதைச்சுட்டி ‘ஆலோசனைகள்’ ‘வழிகாட்டுதல்கள்’ எழுதியிருந்தனர். இங்கே சமூகவலைத்தளங்களில் பேசப்படும் ஒவ்வொன்றும் நான் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறேனோ அதற்கான நேரடியான சான்றுகள். இலக்கியம், கலை என்பது குறித்த எந்த அறிதலுமற்ற ஒரு சூழல் இங்கே இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். அவற்றின் இடம் பற்றி, இலக்கியவாதிகள் அல்லது கலைஞர்களின் வாழ்க்கை பற்றி அடிப்படைப் புரிதல்கூட இல்லாத பாமரத்தனம். பாமரர்களாக இருக்கிறோம் என்பதுகூட தெரியாது, பாமரராக இருப்பதில் பெருமையும் உள்ளது. அந்த பாமரத்தனத்தையே எதிர்வினைகளாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் எதையும் நிரூபிக்கவே வேண்டியதில்லை. எழுதினால்போதும், நம் பொதுப்புத்தியினரின் எதிர்வினைகளே நான் சொன்னவற்றுக்கான நிரூபணங்களாக எழுந்து வரும். அண்மையில் சாகித்ய அக்காதமி விருது குறித்து ஒரு பேச்சு உருவானது. அதில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். ‘வெறும் ரெண்டு லட்சம் ரூபாய். அதுக்கு இவ்ளவு சண்டை’ இதுதான் பாமரத்தனம் என்பது. இவர்களுக்கு நோபல் பரிசுகூட அதிலுள்ள தொகை மட்டுமே. இவர்களுக்கு இவ்வுலகில் தெரிந்த ஒரே ‘மதிப்பு’ என்பது பணம், அதன் விளைவான அதிகாரம் மட்டுமே. இப்படி பேசுபவர்களில் பலர் நம் சூழலில் அளிக்கப்படும் ‘உயர்’கல்வி கற்றவர்கள். பலர் பொறுப்பான பணிகளில் இருப்பவர்கள். இலக்கியம் வாசிக்கும் நாம் இவர்களைத்தான் எதிர்கொள்கிறோம். இந்தப் புரிதல் நம்மிடம் இருக்கவேண்டும். (சுந்தர ராமசாமி எழுதினார். மேரி க்யூரி நோபல் பரிசு பெற்றபோது ‘என்ன பிரைஸ் வாங்கினா என்ன, அறுத்துக்கட்டுற சாதிதானே?’ என்று ஓர் ஐயர் சொன்னாராம். அந்தக்கால பொதுப்புத்தி. இப்போது பேசும் விதம் மட்டுமே மாறியிருக்கிறது. மனநிலை அதேதான்) இச்சூழலை வேறு எப்படி எதிர்கொள்ளமுடியும்? அவர்களுக்கு கலையிலக்கியம், சிந்தனை, தத்துவம் எதுவும் எளியமுறையில்கூட அறிமுகமில்லை. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு இங்கே பிரச்சாரம் செய்யப்படும் மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்கள் அறிந்தவை. கட்சியரசியல், நுகர்வுப்பொருட்கள் , கேளிக்கை. அவை அவர்கள் அறிந்துகொண்டவை அல்ல, அவர்களின் மூளைக்குள் திணிக்கப்பட்டவை. வேறு எதையும் அறியும் ஆர்வமோ, அறிவுத்திறனோ இல்லை. அதேசமயம் அறியாமை அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கை உள்ளது. ஒரு பத்தி எழுதவோ ஒரு பக்கம் படிக்கவோ தெரியாதவர்கள் எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்வதை, வழிகாட்டுவதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். அந்த வெட்கமற்ற கீழ்மையை சந்திப்பது எப்படி என்பது கலையிலக்கியங்களில், அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய சவால். இதை என்னிடம் சொல்லாதவர்களே இல்லை. அண்மையில் ஒருவர், இசைத்துறையில் வளர்ந்து வருபவர், சொல்லிச்சொல்லி வருந்தினார். அவருடைய கனவு, முயற்சி எதுவுமே நம் சூழலுக்கு ஒரு பொருட்டல்ல. இசையென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் சொல்லும் ‘வாழ்க்கை ஆலோசனை’கள்தான் தன் மிகப்பெரிய பிரச்சினை என்றார். ‘யாரைப்பாத்தாலும் பயமா இருக்கு சார்’ என்றார். ’நான் ஜனங்களை ஃபேஸ் பண்றதே இல்லை…பொழைக்கிற வழியப்பாருன்னு ஆரம்பிச்சிருவாங்க’ நான் அவரிடம் ’ஜெயகாந்தன் சொன்னதுதான் ஒரே வழி’ என்றேன். ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்வது’ ஓவியர்கள், கலைஞர்கள் அனைவரும் இங்கே சந்திக்கும் சிக்கல் இது. இதே சிக்கல் இங்கே சமூகப்பணியாளர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு பிரச்சினையே இரண்டுவகை ஆலோசனைகள்தான். ஒன்று, சமூகப்பணியை எல்லாம் நிறுத்திவிட்டு எப்படி நல்ல உலகியல்வாழ்க்கையை வாழ்வது என்னும் ஆலோசனை. இரண்டு, சமூகப்பணி என்றால் என்னவென்றே தெரியாத கும்பல்கள் சமூகப்பணியை எப்படிச் செய்வது என்று அளிக்கும் ஆலோசனைகள். ஆச்சரியமென்னவென்றால், இங்கே ஏதேனும் துறையில் ஆய்வுசெய்பவர்களுக்கேகூட இன்று இப்பிரச்சினை உள்ளது. அறிவியலிலோ பிற துறைகளொலோ முனைவர் பட்டம் பெற முப்பது வயது கடந்துவிடும். ‘தம்பி என்ன செய்றீங்க? ஏதாவது வேலைக்கு போலாம்ல? இந்தக்காலத்திலே ரிசர்ச்சுக்கெல்லாம் என்ன மதிப்பு? நம்ம பையன் இப்பவே ஒரு லெச்சம் சம்பாரிக்கிறான்’ என்ற வார்த்தைதான் நாலாபக்கமிருந்தும் வரும். அந்த ’ஒரு லட்சம் வாங்கும் வெற்றிபெற்ற இளைஞன்’ ஆப்பிள் கணிப்பொறியை நோண்டியபடி ‘லைஃப்ல ஜாலியா இருக்கணும் புரோ’ என்பான். ஆய்வுமாணவன் கூனிக்குறுகி புன்னகைக்கவேண்டும். சமூகப்பணியாளர் இந்த ஆலோசனைக் கும்பலை ஓர் எளிய பணிவுப்பாவனையில் கடந்து செல்வார். கூடவே மனதுக்குள் சிரித்துக் கொள்வார். “ஆமாங்ணா..அப்டியே செய்றேங்ணா’ என அவர்கள் பவ்யமாகச் சொல்வதைக் கண்டு நானும் கூட நின்றே சிரித்திருக்கிறேன். ஆய்வு செய்பவர்கூட இவ்வகையில் இவர்களை கடந்து செல்லலாம். அறிவியக்கவாதி கடந்து செல்லமுடியாது. ஏனென்றால் அவன் உரையாடியே ஆகவேண்டியவன். அவன் என்ன நிலைபாடு எடுக்கவேண்டும்? அதைத்தான் நான் சொல்கிறேன், ’நிமிர்வு’. நிமிர்வினூடாக அன்றி இந்த கும்பலைச் சமாளிக்க முடியாது. நிமிர்வு சற்றுக் குறைந்தால்கூட உங்கள் தன்னம்பிக்கையை அழித்து , உங்களை மீளாச்சோர்வில் தள்ளி, செயலற்றவர்கள் ஆக்கிவிடுவார்கள். அல்லது உங்களை எரிச்சலூட்டி எரிச்சலூட்டி எதிர்மறை மனநிலை கொண்டவர்கள் ஆக்கிவிடுவார்கள். இரண்டுமே அறிவியக்கச் செயல்பாடுகளுக்கு எதிரான உளநிலைகள். இந்த அற்பர்களின் பாவனைகள் ஏராளமானவை. ‘சமூகத்துக்கு பயனுள்ள மக்கள் பிரச்சினைகளை எழுதணும் சார்’ என்பது தொடக்கம். (சமூகத்திற்கு மிகமிகப் பயனுள்ளவராக வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்பது அவருடைய தோரணை). அந்தப்பேச்சு அப்படியே நீண்டால் ‘எழுதி என்ன ஆகப்போகுது? யார் சார் இப்பலாம் படிக்கிறாங்க? ஒரு நாலுபேருக்கு நல்லது செய்தா அதனாலே பிரயோசனம் உண்டு’ என்ற இடத்துக்கு வந்துசேரும். (அப்படி நாலுபேருக்கு அவர் என்ன செய்கிறார் என்று கேட்கக்கூடாது. அவர் செய்வது முகநூலில் அரசியல், சாதிச்சண்டை ’சவுண்டு’ விடுவதுதான்) அடுத்தது ‘எழுதுறது எல்லாம் சரிதான், நல்ல மனுசனா இருக்கணும் சார்’ (அதாவது அதைச் சொல்பவர் ஒரு அதிதூயோன்) அதன் முதிர்வு நிலை ‘யாரும் எதுவும் செஞ்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை. எல்லா பேரும் திருடன் சார்” . முத்தாய்ப்பு வரி “நாம நம்ம பொழைப்பப் பாப்பம்” ஆக, என்னைப்போல நீயும் வெந்ததைத் தின்று, விடியலில் அதை கழித்து, ஊடகம் ஊட்டுவதை மூளைக்குள் தேக்கி, அவற்றை பேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் ரீல்ஸிலும் அதைக் கழித்து வைத்து வாழ் என்பது சாராம்சம். இந்தக் கும்பலில் இருந்து முடிந்தவரை விலகி, தனித்து நிலைகொண்டாலொழிய இங்கே எந்தத்துறையிலும் எதையும் செய்துவிடமுடியாது. அதற்கான வழி என்பது தன்னைப் பற்றிய பெருமிதம். தன் செயல்பற்றிய நம்பிக்கை. தான் காலத்தின் குழந்தை என்னும் புரிதல். சமூகப்பெருக்கில் ஒருவனல்ல, அதை நடத்திச்செல்லும் சிலரில் ஒருவன் என்னும் தற்தெளிவு. அதையே நிமிர்வு என்று சொல்கிறேன். அதை ஏன் மேட்டிமைவாதம் என்கிறார்கள்? ஏனென்றால் அது இந்தப் பாமரர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவர்களை விமர்சனமும் செய்கிறது. ஆகவே வேறு வழியே இல்லை. பாமரன் எதையேனும் சொல்லி அறிவியக்கத்தை, கலையை நிராகரித்தே ஆகவேண்டும். மூர்க்கமான நிராகரிப்பு, அல்லது கேலிதான் அவன் அறிந்த வழிகள். அதற்கு அவன் கண்டடையும் சில நிரந்தரமான வரிகள் உண்டு. பழைய ஆட்கள் ‘இதனால் பணலாபம் உண்டா’ என்பார்கள். அதே மனநிலை கொண்டவர்கள் சமூகவலைத்தளங்களில் ‘இதனாலே சமூகத்துக்கு என்ன பயன்?’ என்பார்கள். இரண்டும் ஒரே கேள்விதான். எந்த பாமரனுக்கும் ஒன்று உள்ளூரத் தெரியும், அவன் வாழ்க்கை சாதாரணமானது, சாதாரணமான அந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல அவனுக்கு அறிவாற்றலோ துணிவோ இல்லை. ஆனால் அந்த பாமர வாழ்க்கை அவனுக்குச் சலிப்பையும் அளிக்கும். அவனுக்குத் தெரியும், அறிவியக்கத்திலோ கலையிலக்கியத்திலோ வாழ்பவர்களின் வாழ்க்கை பெரியது என்று. ஆகவேதான் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் பாமரனை தாழ்வுணர்ச்சி அடையச்செய்கிறான். அந்த தாழ்வுணர்ச்சியே எரிச்சலை மூட்டுகிறது பாமரனுக்கு. அறிவியக்கவாதி அல்லது கலைஞன் ஒன்றுமே செய்யவேண்டாம், சும்மா இருந்தாலே பாமரனை அவன் கூச்சம் கொள்ளச் செய்வான். ஆகவே பாமரனால் இகழப்படுவான். அதை அறிவியக்கவாதி அல்லது கலைஞன் எதிர்கொண்டே ஆகவேண்டும். நான் சொல்வது எழுத்தாளனையோ, கலைஞனையோ, ஆய்வாளனையோ, சமூகப்பணியாளனையோ மட்டும் அல்ல. நம் சூழலில் சாதாரணமாகப் புத்தகம் படிப்பவன், ஒரு நல்ல சினிமாவை தேடிப்பார்ப்பவன் கூட இதைச் சந்தித்தே ஆகவேண்டும். அதற்கான வழியே நிமிர்வு. ஆக, நான் மிகமிக திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். நான் முன்வைப்பது ஒருவகை மேட்டிமைவாதத்தையே. இன்று நம் சூழலில் ஓர் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் நிலைகொள்ள அந்த மேட்டிமையுணர்வு இன்றியமையாதது. இன்று தமிழில் எத்தனை வசைகளைப் பெற்றுக்கொண்டாலும் பாமரனை அவன் பாமரன் என்று சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அது ஒரு சமூகக் கடமை. அதற்குப் பதிலாக ஜனநாயகம், மனிதசமத்துவம் என்றெல்லாம் பசப்புவார்கள் அதே பாமரர். ஜனநாயகமும் மனிதசமத்துவமும் உரிமைகளில் மட்டுமே. தகுதியில் அல்ல என்று சொல்லியாகவேண்டும். ஒரு சிறுபகுதியினரேனும் தாங்கள் பாமரர்களாகவே இந்த சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம் என உணர்ந்தால், ஏதேனும் வகையில் மெலே செல்லமுயன்றால் அதுவே நம் சாதனை. சென்ற முப்பதாண்டுகளாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிவருவது கலையிலக்கியமும், சிந்தனையும் , சமூகப்பணியும்தான் ஒரு சூழலில் முதன்மையான செயல்பாடுகள் என. பிற பணிகள் அனைத்துக்கும் மேலாக அவற்றுக்கு ஓர் இடம் உண்டு என. அந்த மதிப்பும், அவற்றின் மீதான நம்பிக்கையும் கொண்ட சமூகங்களே வென்று வாழும். அந்த நம்பிக்கையும் மதிப்பும் நம் சமூகத்தில் இன்றில்லை, அவை உருவாக வேண்டும் என. நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அதையே எழுதியிருக்கிறேன். இங்கே ஏதேனும் ஒரு தருணம் அமைந்தால் உடனடியாக அறிவியக்கவாதியை கும்பலாகக் கூடி வசைபாடி கும்மியடித்து மகிழ எத்தனைபேர் கூடுகிறார்கள் என்று பாருங்கள். எனக்கு எதிராக அப்படி கூடுவதற்கு என் நிமிர்வும், என் கருத்துக்களும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்றால்; மிகப்பணிவான, அரசியலே பேசாத, அன்பையே முன்வைக்கும் அறிவியக்கவாதிகள்கூட தருணம் கிடைத்தால் இதே கும்பலால் இதே போல கும்பல்கூடி வசைபாடப்பட்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்? இங்கே வசைபாடப்பட அறிவியக்கச் செயல்பாடு ஒன்றே போதும், வேறொன்றும் தேவையில்லை. நம் சூழலில் கலைஞனிடம், அல்லது அறிவியக்கவாதியிடம் ஒருபோதும் தாழ்வும் பணிவும் அமையலாகாது எனறு நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் இங்கே மிக எளிய உலகியல்வெற்றி அமைந்தவர்கள்கூட ஒருவகை மிதப்புத் தோரணையுடன் கலைஞனையும் அறிவியக்கவாதியையும் அணுகும் மனநிலை ஓங்கியுள்ளது. பரிவுடன் பார்ப்பார்கள். தட்டிக்கொடுப்பார்கள். தமிழின் தலைசிறந்த கவிஞனிடம் ‘ஏதாவது வேலைக்குப் போகலாம்ல?’ என்று கெத்தாகக் கேட்ட கார்ப்பரேட் குமாஸ்தாவை கண்டு உண்மையிலேயே குமட்டலெடுத்திருக்கிறது எனக்கு. இவர்கள் ஓர் எழுத்தாளன் வறுமையில் இருந்தால் உள்ளூர மகிழ்வார்கள். மனதுக்குள் நல்லவேளை நானெல்லாம் வேலைக்கு வந்துவிட்டேன் என நினைத்துக்கொண்டு வெளியே அடாடா என்பார்கள். கலைஞர்களும் எழுத்தாளர்களும் உலகியலில் துன்புற்று தோல்வியுற்றால் இவர்களுக்குள் ஒரு நிறைவு உருவாகிறது. கலைஞன் இவர்களுக்கு அளிக்கும் தாழ்வுணர்ச்சியின் எரிச்சல் சற்றுக் குளிர்கிறது. அந்த கலைஞனை அவன் உலகியலில் தோல்வியடைந்து இறக்கும்போது ஆகா அடடா என்று கொண்டாடுவார்கள். அப்படியே மறந்தும் விடுவார்கள். எண்ணிப்பாருங்கள், பிரான்ஸிஸ் கிருபா சாவின்போது இங்கே என்னென்ன பேசப்பட்டது என்று. அவரை சுட்டிக்காட்டி பிறரை வசைபாடினார்கள். ஆனால் இன்று அவரை இவர்கள் எவராவது பேசுகிறார்களா? பிரான்ஸிஸ் கிருபா இன்றும் நமக்குத்தான் முக்கியம். நாம்தான் அவருடைய கலைவெற்றியையும் கலைச்சிதறல்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அவர் ஓர் அடையாளம். கலைஞன் எனும் நிலை ஒரு தோல்வி என்றும், தாங்கள் வென்றவர்கள் என்றும் சொல்லிக்கொள்ள ஒரு சான்று, அவ்வளவுதான். ‘அசல் கலைஞன்யா’ என்பார்கள். அடுத்த கணமே ‘குடிச்சே அழிஞ்சான்யா’ என்பார்கள். கலைஞன் என்றால் அழியவேண்டியயவன் என தங்களுக்கே சொல்லிக்கொள்ள அவன் ஒரு முகம், அதற்கப்பால் ஒன்றுமில்லை. இந்த பாமரர்களின் மனநிலைதான் ஒரு கலைஞன் உலகியலில் கொஞ்சம் வென்றால் உடனே வசைபாடச் செய்கிறது. அவனுடைய வெற்றியையோ நிமிர்வையோ கண்டால் எரிய வைக்கிறது. ஏனென்றால் அவன் இவர்கள் தாங்கள் அடைந்துவிட்டதாக எண்ணும் ஒரே வெற்றியைக்கூட இவர்களுக்கு அளிக்காமல் இவர்களைவிட மேலே அங்கும் சென்று நின்றிருக்கிறான். அதை அவர்களால் தாள முடிவதில்லை. அவர்களுக்கு முன் கலைஞனின் வெற்றியை, அவன் வாழ்வின் தீவிரத்தை நாம் முன்வைப்பதென்பது ஓர் அறிவார்ந்த அறைகூவல். உலகியலில் நாலுகாசு சேர்த்தவனின் வெற்று மேட்டிமைத்தனம் அல்ல இது. இங்கே ஒருவர் இன்னொருவரைச் சந்தித்ததுமே தன் பொருளியல்நிலையைத்தான் தன்னடையாளமாகச் சொல்கிறார் என்பதை கவனியுங்கள். தன் பணி, தன் தொடர்புகள் இரண்டையும் சொல்வார். அவற்றை அடைந்தவர் தன்னை ‘வெற்றியடைந்தவர்’ என நினைத்துக்கொள்கிறார். அதை வெற்றி என ஒருபோதும் கலைஞன், அறிவியக்கவாதி ஒப்புக்கொள்ளக்கூடாது. அந்தப் பாமரன் அப்படி நம்ப அனுமதிக்கக்கூடாது. அவன் முன் பணிவதென்பது அவன் அப்படி நம்ப வழியமைப்பதே. அது அறிவியக்கத்துக்கும் கலைக்கும் இழைக்கப்படும் துரோகம். ஆகவே சென்ற தலைமுறை எழுத்தாளர் சிலரின் மிகைப்பணிவு, தன்னிரக்கப் பாவனை ஆகியவற்றைக் கண்டும் எனக்கு அதே குமட்டல் உண்டு. அந்த உலகியலாளர் முன் நிமிர்ந்து நின்று ’நான் கலைஞன், நான் அறிவியக்கவாதி’ என்று சொல்லி கூடவே ’நான் இச்சமூகத்தில் மிக வெற்றிகரமானவன், உங்களை விட தீவிரமானதும் அதேசமயம் வெற்றிகரமானதுமான வாழ்க்கையை வாழ்பவன்’ என்று சொல்பவனே இன்றைய சூழலுக்குத் தேவையானவன். அவன் இந்தச் சமூகத்திற்கான மிகமிக அடிப்படையான ஒரு செய்தியைச் சொல்கிறான். இன்றைய அற்பர்களின் எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு அவன் நாளைய தலைமுறைக்காக அந்தப்பணியைச் செய்தாகவேண்டும் நாம் நீண்டகாலம் பஞ்சத்தில் உழன்ற ஒரு சமூகம். சென்ற தலைமுறை வரை உணவுக்கே போராடிய சமூகம். நம்மில் பெரும்பாலானவர்கள் கீழ்நடுத்தர, அடித்தளத்தில் இருந்து சென்ற ஒரு தலைமுறைக் காலத்தில் மேலெழுந்து வந்தவர்கள். இன்று நாம் அடிப்படை வறுமையை கடந்துவிட்டோம். சாப்பாட்டைப் பற்றி பதற்றப்படும் நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் இல்லை. இனி நாம் வெல்லவேண்டியது அறிவுத்தளத்தில், கலையில். இன்று தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு இணையாகவே கலையிலும் அறிவுத்தளத்திலும் நாம் முன்னகர்ந்தாகவேண்டும். நம் அடுத்த தலைமுறையினர் அதில் சாதித்தாகவேண்டும். அதற்கு நாம் நம் மூதாதையரின் பல உளநிலைகளை கடந்துசென்றாகவேண்டும். நம் மூதாதையர் நம்மிடம் அடிப்படையான ஒரு வருமானத்தில் நிலைகொள்ளும்படி கற்பித்தனர். ‘செட்டில்’ ஆவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தனர். நிலைகொண்டுவிட்டால் நிம்மதி அடைந்தனர். பொருளியல்நிலை தவிர எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நமக்குக் கற்பித்தனர். பொருளியல் நிலையை அடைந்ததுமே முழுநிறைவு கொள்ள பயிற்றுவித்தனர். கலை, இலக்கியம், ஆய்வு என அறிவார்ந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்றும் அது மனிதனை தோல்வியடையச்செய்யும் என்றும் நம்பினர். இனியேனும் நாம் அந்த மனநிலையை கடந்தேயாகவேண்டும். இல்லையேல் நம் சமூகம் வெறும் நுகர்வுக்கூட்டமாகச் சுருங்கிவிடும். வெற்றுக்களியாட்டுகளில் வீணாகி அழியும். அதன் இறுதிநிலை என்பது ‘காஸினோ’க்கள்தான். இன்றே அதன் தடையங்களைக் காண்கிறோம். நீங்கள் சொல்லும் புத்தாண்டுக்கொண்டாட்டம் எல்லாம் அதன் வெளிப்பாடுகளே. பொருளியல்செயல்பாடு முக்கியம்தான். அதுவே மைய ஓட்டம் . ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியினரேனும் கலை, இலக்கியம், அறிவுச்செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். மொத்தச் சமூகத்திற்கும் அச்செயல்பாடுகள் மேல் மதிப்பு உருவானாலொழிய அது நிகழாது. அந்த மதிப்பை அறிவுச்செயல்பாடுகளில், கலையிலக்கியங்களில் ஈடுபட்டுள்ள நாம் இன்று உருவாக்கவேண்டும். ஆகவே கலைஞனை, அறிவியக்கவாதியை பொதுச் சமூகம் குனிந்து பார்க்கலாகாது. நம் மேல் இரக்கமும் , ஊக்குவிப்பும் காட்டலாகாது. நம்மை நிமிர்ந்து பார்க்கவேண்டும். வியக்கவேண்டும். கலைஞனும் இலக்கியவாதியும் இரவலனாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அவன் கொடுப்பவனாக திகழ்ந்தாகவேண்டும். அவ்வாறு இலக்கியவாதி வெளிப்படும்போது உருவாகும் பொறாமை, கசப்பு, புகைச்சல், வசைபாடல் எல்லாம் நல்லதே. அவையெல்லாம்கூட பாமரர்களின் பாராட்டுதான். அவர்களின் பரிவும் கனிவும் மட்டும் உருவாகக்கூடாது. அவ்வாறு உருவானால் அடுத்த தலைமுறையில்கூட கலையிலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகள் மேல் சமூகமதிப்பு உருவாகாது. நான் நன்கு அறிந்த ஒன்றுண்டு. தமிழில் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்கள் இல்லத்தில் ஒரு புத்தகம்கூட வைத்துக்கொண்டதில்லை. தங்கள் குழந்தைகள் ஒரு புத்தகம்கூட வாசிக்க அனுமதித்ததில்லை. தங்கள் வாரிசுகள் முறையாகப் படித்து, ‘நல்ல வேலைக்கு’ சென்று விடவேண்டும் என்று அல்லும் பகலும் அப்படைப்பாளிகள் முயன்றனர். வாரிசுகள் அவ்வாறு வேலைக்குச் சென்றபின் அதை அப்படைப்பாளிகள் தங்கள் வெற்றியாக , வாழ்நாள் சாதனையாகச் சொல்லிக்கொண்டே இருப்பதை கண்டிருக்கிறேன். ‘நம்மைப்போல நம்ம பிள்ளை இருந்திரக்கூடாது’ என்று என்னிடம் சொன்ன பல எழுத்தாளர்களை நான் அறிவேன். அப்படியென்றால் அவர்களுக்கு உண்மையில் இலக்கியம், அறிவியக்கம் பற்றிய மதிப்புதான் என்ன? அவர்கள் சமூகத்துக்கு அளிக்கும் செய்திதான் என்ன? அவர்கள் இந்தச் சமூகத்தின் மொண்ணைத்தனத்தால் அவ்வளவு புண்பட்டார்கள் என கொள்வதா? நான் எதை நம்பினேனோ அதையே என் குடும்பத்திற்கு அளித்தேன். இலக்கியத்தை, அறிவுச்செயல்பாட்டை. அதுதான் பெருமைக்குரியது என எண்ணினேன். அதன் பொருட்டு எனக்கு வந்து குவிந்த அறிவுரைகள், குழந்தை வளர்ப்பு வழிமுறைகள் நான் எழுதிய நூல்களின் வரிகளை விட மிகுதி. ஆனால் என் வாரிசுகள் வேறெந்நிலைக்குச் சென்றாலும் ஏமாற்றமே அடைந்திருப்பேன். என் வாரிசுகளை இளமையிலேயே அதைச் சொல்லித்தான் வளர்த்தேன். இன்று அதன் பொருட்டு பெருமிதம் கொள்கிறேன். என் குடும்பமே அறிவுச்செயல்பாட்டில் ஈடுபாடுகொண்டிருப்பதை ஓர் இழிவென கேலி செய்து எழுதப்பட்ட நாலைந்து குறிப்புகள் என் கண்ணுக்குப் பட்டன. இந்த பாமரர் நடுவே நான் நிமிர்வை மட்டுமே முன்வைக்க முடியும் இல்லையா? அறிவியக்கச் செயல்பாடு, கலைச்செயல்பாடு உடனடியான வெற்றிகளை அளிப்பது அல்ல. அதற்கு நீண்டகாலத் தவம் தேவைப்படுகிறது. உறுதியான குறைந்தபட்ச வெற்றிக்கும் வாய்ப்பில்லை. அதில் எவ்வளவோ தற்செயல்கள் செயல்படுகின்றன. ஆய்வுகளுக்கும் இதுவே பொருந்தும். ஆனால் ஒரு சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரேனும் அவற்றுக்கு தங்கள் குழந்தைகளை துணிந்து அனுப்பவேண்டும். அவர்களுடன் நின்றிருக்கவேண்டும். சூழல் அளிக்கும் அழுத்தத்தை தாக்குப்பிடிக்க வேண்டும். படித்து வேலைக்குப்போய் சம்பாதிப்பது மட்டும் வெற்றி அல்ல என்றும் அறிவுச்செயல்பாடு மேலும் பெரிய வெற்றி என்று அவர்கள் நம்பவேண்டும். அவர்கள் பிறரிடம் அதைச் சொல்லவேண்டும். அந்த மனநிலையை இன்று நாம் உருவாக்கியாகவேண்டும். அண்மையில் மிகச்செல்வந்தரான ஓர் இளைஞரிடம் பேசினேன். அவர் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என குடும்பமும் சூழலும் சொல்வதாகச் சொன்னார். அவர் அறிவியக்க ஈடுபாடும், அதற்கான கூர்மையும் கொண்டவர். அவர் ஏன் சம்பாதிக்கவேண்டும் என்று நான் கேட்டேன். அவர் ஏன் தன் அகம் விழையும் அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடலாகாது? அவர் எவ்வளவு பெரும்பணிகளை ஆற்றமுடியும் . அவருக்கான நேரம் அவரிடமுள்ளது. அவருக்குத்தேவையான அடிப்படை முதலீடு கையிலுள்ளது. ஆனால் சம்பாதிக்காவிட்டால் சமூக மதிப்பு இருக்காது என குடும்பம் நினைப்பதாகச் சொன்னார். ’சம்பாதிப்பதை மட்டுமே மதிப்பெனக் கருதும் பாமரர்கள் எல்லா வற்கத்திலுமுண்டு. அவர்களின் மதிப்பை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘தாகூர் என்ன சம்பாதித்தார்?’ என்று கேட்டபோது அவர் திகைத்து அமர்ந்திருந்தார். உலகமெங்கும் மகத்தான அறிவியக்கவாதிகள் பலர் செல்வந்தக் குடியில் பிறந்து அதையே நல்வாய்ப்பென பயன்படுத்திக்கொண்டவர்கள். நவீன ஐரோப்பாவை உருவாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களே. பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் அறிவியக்கமே முதன்மையான சமூகச்செயல்பாடு என்ற பொதுமனநிலை உருவானது. எந்த அளவு செல்வமும் பதவியும் இருந்தாலும் ஒரு நல்லநூலை எழுதாவிட்டால், ஓர் அறிவியல்கண்டுபிடிப்பில் ஈடுபடாவிட்டால் எங்கும் மதிப்பில்லை என்னும் சூழல் முந்நூறண்டுக்காலம் ஐரோப்பாவில் இருந்தது. அதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய உலகம் ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவாகி வந்த ஒன்று. மிகச்சிலருக்கேனும் தங்கள் வாரிசுகள் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் ஆவது பெருமைக்குரியதே என நம்மால் காட்டமுடிந்தால் நம் வரலாற்றுப்பணியை ஆற்றுகிறோம். கலைஞர்களை, அறிஞர்களை, ஆய்வாளர்களை மதிப்புடன் நிமிர்ந்து பார்க்கும் ஒரு சூழலை அடுத்த தலைமுறையிலேலும் நாம் உருவாக்க முடிந்தால் நாம் வென்றோம். இன்று பாமரர்கள் பொறாமையால் எரிவதுகூட அதற்கான ஒரு தொடக்கமே. ஜெ https://www.jeyamohan.in/194617/
  2. பாலஸ்தீன் வாழ்வுரிமை November 11, 2023 அன்புள்ள ஜெ, கனடாவில் ஆற்றிய உரைக்குப் பின் கேள்வியின்போது நீங்கள் ஹமாஸ்- இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல பேசுகிறீர்கள். இது பற்றி உங்கள் நிலைபாட்டை அறிய விரும்புகிறேன். ரவிச்சந்திரன் —— தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் ஆசான் ஜெயமோகன் ஆற்றிய பேருரை.. அன்புள்ள ரவி, பொதுவாக ஈழத்தமிழர்களின் அடிப்படைப்பிரச்சினை ஒன்றுண்டு, அவர்கள் அரசியலை அன்றி வேறெதையும் யோசிக்கமுடியாமல் அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள் – ஆனால் அப்படிப்பேசும் 90 சதவீதம் பேரும் அரசியலில் இருந்து பாதுகாப்பாகக் கரையேறி அமர்ந்து வணிகம் அல்லது தொழில் செய்து வசதியாக வாழ்பவர்கள். அரசியல் அவர்களின் ஒரு அகவிளையாட்டு அன்றி வேறில்லை. ஆகவே அதில் மிகையுணர்ச்சிகளே அதிகம். பலர் கொதிநிலையிலேயே (அரங்குகளிலும் சமூகவலைத்தளங்களிலும் மட்டும்) காணப்படுவார்கள். ஓர் அரங்குக்கு வந்து ஒரு வகையில் தன்னை புனைந்து முன்வைத்துவிட்டால் தனக்கொரு அடையாளம் அமைந்துவிட்டது என நினைக்கிறார்கள். தங்கள் சமரசங்களும் சரிவுகளும் எல்லாம் பிறரை குற்றம் சாட்டுவதன் வழியாக சரியாகிவிடுமென கற்பனைசெய்கிறார்கள். பலர் அந்த விளையாட்டை 30 ஆண்டுகளாகச் செய்கிறார்கள் என்பதை அறிவேன். அவர்களில் பலர் அறுபதை அடைந்துவிட்டனர். அவர்களின் அடுத்த தலைமுறையினரில் அந்த நோய் சற்றுமில்லை. ஆகவே நாடுகடந்த ஈழத்தவர்களில் அதிகபட்சம் இன்னும் ஒரு பத்திருபதாண்டு நீடிக்கும் ஓர் எளிய உளச்சிக்கல் மட்டும்தான் இது. நான் கனடாவுக்கு சுற்றுலா விசாவில் சென்றவன். ஆகவே அரசியல் பேசலாகாது. சட்டப்படி எனக்கல்ல, என்னை அழைத்தவர்களுக்கு அது சிக்கலாகும். அதிலும் இன்று இந்தியா கனடா உறவு இருக்கும் நிலையில் அது அபாயவிளையாட்டு. அதை அவர்களுக்கு முன்னரே அறிவித்திருந்தேன். மேடையிலும் அறிவிக்கப்பட்டது. ஆயினும் முதல்கேள்வியாகவே அரசியல்தான் வந்தது. நான் எந்த வினாவையும் தவிர்ப்பவன் அல்ல, எனக்கு ஒளிக்க ஏதுமில்லை, மழுப்பவும் ஏதுமில்லை. என் பிழைகளும் குழப்பங்களும் உட்பட. ஆகவே சுருக்கமாக, ஆனால் தெளிவாக என் தரப்பை முன்வைத்தேன். சட்டத்துக்கு உட்பட்டு. * இஸ்ரேல்- பாலஸ்தீன் பிரச்சினையில் காந்தி சொன்னதுதான் தொடக்கம். ‘யூதர்களுக்கு ஒரு நிலம்’ என்பது ஒரு சென்றகாலக் கற்பனை. அது நவீன உலகுக்கு பொருந்துவதல்ல. அப்படி ஒரு நிலத்தை ஆக்ரமித்து தேசத்தை உருவாக்கவேண்டியது இல்லை. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு நாடு என அமையவேண்டிய தேவையே இல்லை. யூதர்கள் குடியேறிய எல்லா நாடுகளையும் தங்கள் நாடென அவர்களெ எண்ணலாம். அந்த வகையான நெகிழ்வான, ஒத்திசைவு கொண்ட தேசிய உருவகங்களே இன்று உலகமெங்குமுள்ள யூதர்கள் வாழும் நாடுகளிலுள்ளன. தேசமென்பது இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையலாகாது. நிலப்பகுதியின் அமைப்பால் சேர்ந்து வாழ்ந்தேயாகவேண்டியவர்கள் ஒரு தேசமாக ஆகலாம். அது ஒரு பொருளியல் கட்டுமானம் மட்டுமே. எதிர்காலத்தில் தேசமென்னும் அமைப்பு இல்லாமலும் ஆகலாம். இன்றைய தேச உருவகங்கள் எல்லாமே அனைவரையும் உள்ளீடு செய்யும் தன்மை கொண்டிருக்கவேண்டும். எந்த பிறப்பு சார்ந்த அடையாளமும், நம்பிக்கை சார்ந்த அடையாளமும் தேசியத்தை தீர்மானிக்கலாகாது. அது தனிநபரின் வாழ்வுரிமைக்கு எதிரானது. யூதர்களைப் போல கௌல்களும், கெல்டுகளும், வைக்கிங்குகளும், நார்மன்களும் எல்லாம் அவர்களுக்கான நாடு உருவாக்க ஆரம்பித்தால் உலகம் இனவாதப் போரில் அழியும். இஸ்ரேல் மிகப் பிழையான முன்னுதாரணம்- மத அடிப்படையிலான தேசிய உருவகங்களைப் போல. இதையே திராவிடதேசியம், தமிழ்த்தேசியம் எல்லாவற்றுக்கும் நான் சொல்வேன். * இரண்டு உண்மைகளே அறுதியாகத் திரண்டு வருபவை. அவற்றை மட்டுமே அந்த உரையின் முடிவில் சுருக்கமாகச் சொன்னேன். பாலஸ்தீன மக்களின் பூர்விக நிலம் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு வேறு நிலம் இல்லை. அதை மீட்க, தங்கள் வாழ்வுரிமைக்காக அம்மக்கள் போரிடுகிறார்கள். இரண்டு, இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய எந்த பொறுப்பையும் இன்றுவரை பேணியதில்லை. ஆயுதம் மட்டுமே அதன் வழியாக இருந்துள்ளது. இஸ்ரேல் ஒரு நாடு என்பதற்கான எந்த அரசியலறத்தையும் பேணியது அல்ல. ஒரு நாட்டின் அரசு செய்யும் ஒப்பந்தங்கள் அந்த அரசின் தொடர்ச்சிகளால் பேணப்பட்டாகவேண்டியவை. அவற்றை மீறுவது அரசு என்னும் கருத்தை மறுப்பது. குறிப்பாக வெளியுறவுச் செயல்பாடுகளில் . அவ்வாறு ஒரு தேசம் செயல்படுமென்றால் அதை எவ்வாறு தேசம் என்று சொல்ல முடியும்? இஸ்ரேல் அந்நாடு கையெழுத்திட்ட எந்த அமைதி ஒப்பந்தத்தையும் இம்மியும் மதித்தது இல்லை. இன்று வரை அது உலகின் மிக மோசமான ‘பொறுக்கி தேசமாகவே’ இருந்து வருகிறது. நிலமற்ற பாலஸ்தீனத்தையே இந்தியா ஏற்றிருக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை பலமுறை கடுமையாக கண்டித்துமுள்ளது. பாலஸ்தீனம் இந்தியாவால் ஏற்கப்பட்ட ஒரு நாடு. அந்த மக்களின் பாதுகாப்பையும் உரிமையையும் பேணும் கூட்டுப்பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. * மறுபக்கம், இந்தவகையான உரிமைப்போர்களில் எப்போதுமே நிகழும் ஒரு விளையாட்டுதான் இங்கும் நிகழ்கிறது. ஓரு சமூகம் உரிமைகளுக்காகப் போரிடுகிறது. அதற்கு ஒரு தலைமை அமைகிறது. அந்த தலைமை வலுப்பெற்று, அக்கோரிக்கை வெற்றி நோக்கிச் செல்லுந்தோறும் சில சமரசங்களைச் செய்தே ஆகவேண்டும். ஏனென்றால் பலவகையான வெளி ஆதரவுகளைத் திரட்டிக்கொண்டுதான் அது வெற்றியை அடையமுடியும். ஒவ்வொரு வெளி ஆதரவுக்கும் ஒரு சமரசத்தைச் செய்தாகவேண்டும். கொஞ்சம் விட்டுக்கொடுத்தாகவேண்டும். இன்றைய சூழலில் ’எதிரி’யை முழுமையாக ஒழித்து அதன் மேல் முழுமையாக தன் வெற்றியை நிறுவிக்கொள்வது எவராலும் இயலாது. உலகசக்தியான அமெரிக்காவால் கூட. ஆகவே எந்தச் சமரசத்துக்கும் வரமாட்டோம் என்று சொல்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மூடர்கள் மட்டுமே. தங்களுடன் அவர்கள் ஒரு சமூகத்தையே தற்கொலைக்குக் கொண்டுசெல்லக்கூடும். உரிமைகள் அரசியல் நடவடிக்கைகள் வழியாகவே அடையப்பட முடியும். போர் என்றால்கூட அது அரசியல்நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இருக்கமுடியும். பேச்சுவார்த்தையில் அழுத்தம்தரும் ஓர் உத்தி மட்டும்தான் அது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் போர் என்பது எல்லா தரப்புக்கும் இழப்பு என்பதனால் காலாவதியாகிப்போன பேரம்பேசும் உத்தி என்றே சொல்லலாம். ஆகவே, போர் வழியாக மட்டும் எதையும் அடைய முடியாது. அதேசமயம் ‘முழுமையான’ உரிமையை அரசியல் நடவடிக்கை வழியாக அடையவே முடியாது. போரிட்டாலும்கூட சமரச ஒப்பந்தம் வழியாகவே உரிமைகளை அடைய முடியும். எந்த உரிமையும் ஓர் சமரசப்புள்ளியில் அடையப்படுவதே. என்னென்ன அடையப்படுகிறது என்பதற்குச் சமானமாகவே என்னென்ன விட்டுக்கொடுக்கப்படுகிறது என்பதும் முக்கியமே. ஏனென்றால் எதிர்த்தரப்புக்கும் உரிமைகள் உண்டு. ஆனால் இன்றைய சூழலில் ஓர் உரிமை இயக்கத்தின் தலைமை அரசியல் நடவடிக்கை வழியாக, சமரசங்கள் செய்து கொண்டு, ஒரு பொதுத்தீர்வை எட்டியதுமே அந்த தரப்பிலேயே தீவிரநிலைபாடு கொண்ட ஒரு கோஷ்டி உருவாகிறது. அவர்கள் அந்த தலைமை ‘சோரம்போய்’விட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். காட்டிக் கொடுத்து விட்டதாகவும் கைவிட்டதாகவும் சித்தரிக்கிறார்கள்.சாகசம் தேடும் மூளைக்கொதிப்பு மிக்க இளைஞர்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள். பலசமயம் மக்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் ஓர் உரிமை இயக்கத்தின் அரசியல்தலைமை பலகாலமாக இருந்துகொண்டிருக்கும். அவர்களும் தீவிரநிலைபாடுகளைப் பேசியிருப்பார்கள். படிப்படியாக, சர்வதேச ஆதரவைப் பெறுந்தோறும், சமரசமாகியிருப்பார்கள். ஆகவே மக்கள் அவர்களில் சலிப்புற்றிருப்பார்கள். அப்பா தலைமுறை அவர்கள் ஆதரித்தால் மகன் தலைமுறை தீவிரவாதம் பேசுபவர்களை கவனிப்பார்கள். ஆவேசப்பேச்சுக்கள் எப்போதுமே கவற்சியானவை. அவற்றுடன் கொஞ்சம் உயிர்த்தியாகமும் சேர்ந்துகொண்டால் அந்த தரப்புக்கு ஆதரவு பெருகுகிறது. விளைவாக சமரசமுடிவை அடைந்த அரசியல்தரப்பு தோற்கடிக்கப்பட்டு, தீவிரத்தரப்பு மேலோங்குகிறது. அது பல ஆண்டுக்கால முயற்சியால் உருவான சமரசத்தீர்வை நிராகரிக்கிறது. உண்மையில், அவர்களுக்கு எதிரான அடக்குமுறைச் சக்திக்கும் அதுதான் தேவை. அவர்களும் அந்த ஒப்பந்தத்தை கைவிடவே தருணம் பார்த்திருக்கிறார்கள். தீவிரவாதத்தை சுட்டிக்காட்டி அவர்களும் ஒப்பந்தத்தை தூக்கி வீசுகிறார்கள். மீண்டும் தொடங்கிய இடத்துக்கே ஆட்டம் சென்று சேர்கிறது. இஸ்ரேல்- பாலஸ்தீன் விஷயத்தில் நிகழ்ந்தது இதுவே. யாஸர் அராபத் தோற்கடிக்கப்பட்டதும் பாலஸ்தீன விவகாரம் தொடங்கிய இடத்துக்கே சென்றுவிட்டது. யாசர் அராஃபத் சமரசம் வழியாகவே வெற்றியை அடைந்தார். அந்த வெற்றியால் அடைந்த நாட்டை இஸ்ரேலுக்கு நிகரான பொருளியல் வல்லமை கொண்டதாக ஆக்கியிருக்கவேண்டும். சர்வதேச ஆதரவைப் பெருக்கியிருக்க வேண்டும். அவ்வாறு நிலைகொண்டபின்னர் மெல்ல மேலும் உரிமைகளை கோரி அழுத்தம் அளித்திருக்கவேண்டும். மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக அடைந்திருக்க வேண்டும். உலகச்சூழல்கள் மாறுவதை கருத்தில்கொண்டு ராஜதந்திரங்கள் வகுத்து தங்கள் உரிமைகளை நோக்கி சென்றிருக்கவேண்டும். அமர்ந்தபின் காலை நீட்டுவது என்னும் உத்தி அது. ஆனால் தீவிரவாதத் தரப்பான ஹமாஸ் அவரை தோற்கடித்தது. எல்லா உரிமைப்போர்களிலும் அடக்கும்தரப்பு இதையே செய்கிறது. உங்கள் ஊரில் ஒரு சிறிய மக்கள்போராட்டம் நிகழ்ந்தால்கூட இதையே நீங்கள் காணலாம். கடைசியாக அரசுடனோ அல்லது எதிர்த்தரப்புடனோ ஓர் ஒப்பந்தம் போடப்பட்டு ஒரு சாத்தியமான வெற்றி கைக்கு வரும்போது தீவிரக்குரல் எழுந்து அதை அழிக்கும். உலகமெங்கும் இது நிகழ்ந்துள்ளது. இந்தியா வடகிழக்கிலும் பஞ்சாபிலும் காஷ்மீரிலும் மிக வெற்றிகரமாக இந்த உத்தியை பயன்படுத்தியிருக்கிறது. ஹமாஸுக்கே தொடக்கத்தில் இஸ்ரேலிய ஆதரவு இருந்தது, அராஃபத்தை ஒழிப்பதற்காக இஸ்ரேல் அதைச் செய்தது. அராஃபத் குவைத் மீதான ஈராக்கின் தாக்குதலை ஆதரித்து ஒரு பெரிய அரசியல் பிழையைச் செய்தார். ஹமாஸ் அதைப் பயன்படுத்தி அவரை முழுமையாக செல்லாக்காசாக்கியது. இன்றைய போர் இரு நாடுகளுக்கு இடையே அல்ல. ஹமாஸ் என்பது உலகறிந்த அரசியல்தலைமை இல்லாத ஓர் அமைப்பு. அதன் திட்டங்கள் என்ன என்று, அதன் செயல்களுக்கு எவர் பொறுப்பேற்பார்கள் என்று தெரியாத நிலையில் உலகில் எந்த நாடும் அதற்கு எந்த ஆதரவும் தெரிவிக்க முடியாது. வெளிப்படையான ஆதரவை ஈரான்கூட தெரிவிக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும். ஹமாஸ் தொடங்கியது இந்தப் போர். அவர்கள் மக்களுடன் மக்களாகப் பதுங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும், இஸ்ரேல் என்ன செய்யும் என்று. இஸ்ரேல் காசா பகுதி மக்களை அழிக்கும், அதன் விளைவான அனுதாப அலையைக் கொண்டு அரபு ஒற்றுமையை உருவாக்கி ஆதரவை பெறலாம் என அது எதிர்பார்த்தது. அதாவது தன் மக்களை பலிகொடுத்து வெற்றியை ஈட்ட முயன்றது. அது நிகழவில்லை. அரபுலகில் இருந்துகூட எந்த பெரிய ஆதரவும் அமையவில்லை. பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்கூட பெரிதாக ஆதரவு காட்டவில்லை. பாலஸ்தீன மக்கள் பலியாவதுதான் மிச்சம். காரணம், மிக வெளிப்படையானது. இன்றைய உலகம் முற்றிலும் வணிகம் சார்ந்தது. எல்லா நாடுகளையும் ஆள்பவர்கள் மாபெரும் வணிகநிறுவனங்கள்தான். அரசுகளின் அதிகாரம் இருந்த காலம் 2000 த்துடன் மறைந்துவிட்டது. இன்றைய கார்ப்பரேட்டுகள் உலகளாவிய, நாடற்ற, பொருளியல் அரசுகள். ஆகவே எந்த நாடும் தன் பொருளியல் நன்மையை மட்டுமே கருத்தில்கொள்ளும். அவற்றை இனமோ, மதமோ இயக்கவில்லை. அதை ஹமாஸ் புரிந்துகொள்ளவில்லை. மறுபக்கம் இஸ்ரேல். எண்ணிப்பாருங்கள் பாகிஸ்தான் வாகா எல்லைக்குள் நுழைந்து ஒரு முழுநாளும் தாக்குதல் நடத்த, இந்திய ராணுவம் அங்கே செல்லவே இல்லை என்றால் அதை ‘இயல்பானது’ என்றா எடுத்துக்கொள்வோம்? உலகின் மிகப்ப்பெரிய ராணுவங்களிலொன்று இஸ்ரேலிய ராணுவம். அங்கே எல்லா குடிமக்களும் போர்ப்பயிற்சி பெற்றவர்கள். அணுஆயுத நாடு அது. அதன் காசா எல்லை நம் வாகா எல்லை போலவே ’கொதிக்கும் எல்லைக்கோடு’ கொண்டது. அதை அப்படியே சும்மா விட்டார்களா என்ன? காசா எல்லையில் இருந்து டெல் அவிவ் மிக அண்மையிலுள்ளது. வாகா எல்லையில் இருந்து டெல்லியும் அருகில்தான். சிலமணிநேரப் பயணத்தொலைவு. ஆகவே இந்த தொலைவை ‘The longest route’ என சொல்வார்கள். அந்த தொலைவை ஹமாஸ் எதிர்ப்பின்றி கடந்துள்ளது. அது இஸ்ரேல் வேண்டுமென்றே தன் மக்களை பலிகொடுத்து ஆடிய ஆட்டம். உலகின் முன் போருக்கு ஓரு வலுவான காரணத்தை அது காட்டியது. அத்தகைய ஒரு தீவிரவாதத் தாக்குதல், பொதுமக்களைக் கொன்று ஆடிய வெறியாட்டம், எந்த ஒரு தேசத்தையும் பதறச் செய்யும். உடனடியாக இஸ்ரேலுக்கு ஆதரவான மனநிலை உருவாகும். ஏனென்றால் எல்லா நாடும் அதற்கிணையான தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. எல்லா நாட்டுக்கும் அப்போது உலக ஆதரவும் அமைந்துள்ளது. ஆக, இன்றைய போர் என்பது ஒரு தீவிரவாத அமைப்பும் ஒரு பொறுக்கிதேசமும் தங்கள் மக்களையே பலியாக்கி, மாறிமாறி மக்களைக் கொன்று ஆடும் வெறியாட்டம். * இதில் மிகக்கீழ்த்தரமானது அவரவர் அரசியல், சாதி, மதச்சார்புக்கு ஏற்ப ஒரு பக்க நிலைபாடு எடுத்து களமாடுவதுதான். ஹமாஸை ‘மாவீரர்கள்’ ‘போராளிகள்’ ‘தியாகிகள்’ என புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை வாசித்தேன். பாலஸ்தீன மக்களின் உயிர்வதையை தன் மதவெறியரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் ஒருவரின் உளநிலை என்ன? இந்த வகை கட்டுரைகள் உடனடியாக பல்லாயிரம்பேரை மறுதரப்பு நோக்கி கொண்டுசெல்பவை. மறுபக்கம், மொத்த பாலஸ்தீன தேசியக்கோரிக்கையையே மதத்தீவிரவாதமாகப் பார்க்கும் பார்வை. அது இந்தியாவுக்கு எதிரானது என்னும் பார்வை. அதிலிருந்து எழும் குரோதங்கள். இஸ்லாமிய எதிர்ப்பரசியலையே இஸ்ரேலிய ஆதரவாக ஆக்கிக்கொள்ளும் மனச்சிக்கல். இரு சாராருக்குமே மக்கள் பெரிதல்ல. அவர்களுக்கு போர் என்பது கிரிக்கெட் போல ஒரு விளையாட்டு. அன்றாடச் சலிப்பை நீக்கும் ஒரு சுவாரசியம். தன் தரப்பு ஜெயிக்கவேண்டும், அவ்வளவுதான். இன்றுநிகழும் இந்தப் போர், இதில் கொல்லப்படும் குழந்தைகள், உலகநாகரீகத்தின் அவமானம் என நான் நினைக்கிறேன். அதன் பழி இஸ்ரேல் மேல் என்றுமிருக்கும். எதுவும் எப்போதும் இஸ்ரேலை நியாயப்படுத்த முடியாது. இப்படியொரு பொறுக்கிநாடு உலகில் திகழமுடியும் என்பதே நீண்டகால அளவில் உலக ஒழுங்குக்கே எதிரானது. நாளை அந்நாடு எந்த சர்வதேச சூழியல், இணையவெளிச் சட்டங்களையும் மதிக்கவில்லை என்றால் உலகம் என்ன செய்யமுடியும்? இஸ்ரேல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதன்மேல் ஐநா கட்டுப்பாடு வரவேண்டும். நீண்டகால அளவில்கூட அக்கட்டுப்பாடும் கண்காணிப்பும் நீடிக்கவேண்டும். ஹமாஸ் தீவிரவாத இயக்கம், அதை பாலஸ்தீனத்தின் பிரதிநிதியாக எந்த நாடும் எவ்வகையிலும் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் பாலஸ்தீனத்தின் அரசியல்பிரதிநிதியாக ஓர் அமைப்பு, ஆளுமை அடையாளம் காணப்படவேண்டும். யாசர் அராபத் போல. அந்த அரசியலமைப்பின் பக்கபலமாக உலகம் நிலைகொள்ளவேண்டும். அவர்கள் இஸ்ரேலால் அழிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும். அதுவே இன்று உலகம் செய்யவேண்டிய முதல் கடமை. அதில் எந்த நியாயவாதத்துக்கும் இடம் இல்லை. அத்துடன் இப்போர் நிறுத்தப்பட்ட பின் இஸ்ரேல் மீது போர்க்குற்ற விசாரணையும் நிகழவேண்டும். இல்லையேல் எவரும் எதையும் செய்யலாமென்றே ஆகும். இவை என் கருத்துக்கள். ஓர் இலக்கியவாதியாக இதில் என் தரப்பு என்ன என்பதனால் பதிவுசெய்கிறேன். ஆனால் நான் நிபுணன் அல்ல. நிபுணர் அல்லாதவர்கள் செய்யும் விவாதங்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஆகவே விவாதிக்க விரும்பவில்லை. இவற்றையும் பிக்பாஸ் விவாதம்போல ஒரு பொதுவெளிக்களியாட்டாக ஆக்குவதே அருவருப்பூட்டுகிறது. ஜெ பிகு- இஸ்ரேல்- பாலஸ்தீன் பிரச்சினையை முழுமையாக தமிழில் எளிதாக வாசிக்க பா.ராகவன்எழுதிய நிலமெல்லாம் ரத்தம் ஒரு நல்ல நூல் நிலமெல்லாம் ரத்தம் வாங்க https://www.jeyamohan.in/193275/
  3. சனாதனம், சனாதன எதிர்ப்பு ஜெயமோகன் jeyamohanSeptember 13, 2023 சனாதன தர்மம் பற்றிய உதயநிதியின் பேச்சு பற்றி என்னிடம் ஆங்கிலத்தில் எழுதும் கேரள இதழாளர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். என் கருத்துக்களைச் சுருக்கமாகச் சொன்னேன். அவை வெளியாயின. என் கட்டுரைகளில் எப்போதுமே வாசிப்பில் என்னென்ன குழப்பங்கள் உருவாகும் என ஊகித்து, அவற்றையும் கருத்தில் கொண்டு, முழுமையாகவும் விரிவாகவும் கருத்துக்களைச் சொல்லியிருப்பேன். ஏனென்றால் எல்லா கருத்துக்களையும் இங்கே திரித்துச் சிதறடித்துவிடுவார்கள். ஆனால் பேட்டிகளில் அவ்வாறு அமைவதில்லை. சுருக்கமாகவே அந்தக் கருத்து இருந்தது. என் கருத்தையொட்டி ஒரு விவாதம் உருவானதை அறிந்தேன் – நான் பயணங்களில் இருந்தமையால் அவற்றைப் பெரியதாக கவனிக்கவில்லை. பல்வேறு இதழாளர்கள் அழைத்து மேலும் கருத்துக்களைக் கோரினர். அவர்கள் இதை ஒரு அரசியல் சார்ந்த விவாதமாக ஆக்க முயல்கிறார்கள் என தோன்றியது. எனக்கு அதில் ஆர்வமில்லை. ஆகவே தவிர்த்துவிட்டேன். நான் அரசியல்வாதி அல்ல. அரசியல் கருத்துக்கள் சொல்வதில்லை. இன்னொரு பக்கம் எனக்கு அறிவுரைகள், ஆலோசனைகள், விளக்கங்கள் வந்துகொண்டிருந்தன. இந்த வகை விவாதங்களில் எல்லாருமே தங்களை நிபுணர்கள் என்றே எண்ணிக்கொள்கிறார்கள். பலரும் அவரவர் அரசியல், அவரவர் மதநம்பிக்கை, சாதிப்பற்று சார்ந்து எதையாவது சொல்கிறார்கள். வேறுவகையில் என் மதிப்புக்குரியவர்களும் அதிலுண்டு. இது மதம் சார்ந்த விஷயம் அல்ல, தத்துவம் சார்ந்தது, ஆன்மிகம் சார்ந்தது. இதில் நான் ஒருவரின் குரலை பொருட்படுத்த வேண்டும் என்றால் அவருடைய குருமரபு என்ன, அவருடைய நேரடி ஆசிரியர் எவர் என்பது எனக்கு முக்கியம். அதன் வழியாக ஒட்டுமொத்தமாகவே அவரை நான் கருத்தில்கொள்ள முடியும். அவ்வாறல்லாமல் அங்கிங்கே எதையாவது வாசித்துவிட்டுப் பேசும் எவரையும் எவ்வகையிலும் நான் கவனிக்கத் தேவையில்லை. தத்துவத்தில் நேரடி ஆசிரியரின் சொற்களினூடாக அன்றி எந்த தெளிவையும் எவரும் அடைய முடியாது. ஆன்மிக தத்துவத்தை தங்கள் நிலைபாடுகளுக்கேற்ப எவரும் எளிதில் வளைக்கலாம். நேரடி ஆசிரியரில்லாமல் தத்துவம் வாசிப்பவர்கள் வாசிக்க வாசிக்க மேலும் மடையர்களாவார்கள். * நான் ஏற்கனவே திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு குறித்து என் தளத்தில் எழுதிய கட்டுரையின் சுருக்கமே ஆங்கிலத்தில் நான் சொன்னது. அது இருபதாண்டுகளாக திரும்பத்திரும்ப இந்த இணையப்பக்கத்தில் வெளியாகியுள்ள கருத்துதான். முப்பதாண்டுகளாக நான் சொல்லிக்கொண்டே இருக்கும் கருத்துதான். இதில் ஐயம் கேட்பவர்களுக்கு மட்டுமே விளக்க விரும்புகிறேன். விவாதிக்கத் தகுதியானவர் எவர் என எனக்குத் தெரியும். ( சனாதனம், திருமாவளவன் ) மீண்டும் சுருக்கமாகச் சொல்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் பழைய கட்டுரைகளை வாசிக்கலாம். இந்து ஆன்மிகம், இந்து தத்துவம் இரண்டையும் இணைத்து ‘இந்து மெய்ஞான மரபு’ என்று சொல்வது என் வழக்கம். அதில் ஞானத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அச்சொல்லை பயன்படுத்துகிறேன். அது ஒற்றைப்படையான ஒரு மதக்கட்டுமானம் அல்ல. ஒற்றைக் கருத்துநிலையும் அல்ல. அதற்கு எதுவும் மையமும் அல்ல. அப்படி ஒரு மையத்தை, ஒற்றைத் தன்மையை உருவாக்க முயல்பவர்கள் ஆன்மிகத்தை அல்ல, அரசியலையே நோக்கமாகக் கொண்டவர்கள். அது இந்து மெய்ஞான மரபின் அழிவுக்கே வழிவகுக்கும். இந்து மெய்ஞான மரபில் பற்று கொண்ட எவரும் எதிர்த்தாகவேண்டியது அந்தத் தரப்பு. இந்திய மெய்ஞான மரபையும் ஒற்றைப்படையானதாக கருத முடியாது. அது பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் தீவிரமான தத்துவ விவாதங்கள் வழியாக, பரஸ்பர மறுப்புகள் வழியாக உருவாகி வந்தது. அந்த விவாதம் அடிப்படைக் கேள்விகள் சார்ந்தது என்பதனால் அது ஒருபோதும் முடிவடையவும் வாய்ப்பில்லை. அவ்வாறு பல தரப்புகள், பல வழிகள் ஒன்றையொன்று மறுத்து இயங்கும்போது மட்டுமே மெய்யான ஆன்மிகதத்துவ உசாவலுக்கான வாய்ப்பு ஒரு ஞானப்பயணிக்கு அமைகிறது. பல ஆயிரமாண்டுகளாக இங்கே இருந்து வந்த ஞானசபைகளின் செயல்முறை இது. அந்த அவைகளில் எல்லா தரப்பினரின் குரல்களும் ஒலித்துவந்தன. ஒரு தரப்பைச் சேர்ந்தவர் தன்னுடையதே உண்மை, அறுதியானது என நம்பலாம். ஆனால் அதை மறுப்பவரை எதிர்ப்பதும் வெறுப்பதும் அறிவின்மை. தத்துவம் – மெய்ஞானம் ஆகியவற்றில் மிக எளிய அறிமுகம் கொண்ட ஒருவர்கூட ’எதிரித் தரப்பு’ ஒன்று உண்டு என எண்ண மாட்டார். தத்துவத்தில் எதிர்த்தரப்புகளே உள்ளன. ஒலிக்கக்கூடாத தரப்பு, அழிக்கப்படவேண்டிய குரல் என என ஏதுமில்லை. மெய்யியலில் எக்குரலும் ஞானப்பயணியை புண்படுத்துவதோ, அவமதிப்பதோ அல்ல. எதுவும் தடைசெய்யப்படவேண்டியது அல்ல. ஆகவே நான் ‘மதநிந்தை’ என்னும் கருத்துக்கே எதிரானவன். அந்த மனநிலையைப்போல அறிவுக்கும் ஞானத்துக்கும் எதிரான ஒரு நிலை இல்லை என நினைப்பவன். தொடர்ச்சியாக, முப்பதாண்டுகளாக, எல்லா தருணங்களிலும் இதைச் சொல்லி வந்திருக்கிறேன். ஞான விவாதங்களில் நம்பிக்கையாளர்களின் குரல்களுக்கு இடமில்லை. அறிவார்ந்த விவாதம் எப்போதும் அறிந்தவர்களால் வழிநடத்தப்படவேண்டும். அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தாகவேண்டும். * இந்து மெய்ஞான மரபின் பல்வேறு தரப்புகளை ஒட்டுமொத்தமாக மூன்றாகப் பகுக்கலாம். ஒன்று வைதிகத் தரப்பு. இன்னொன்று எதிர்வைதிகத் தரப்பு. மூன்றாவது, வேதாந்தத் தரப்பு. வைதிகத் தரப்பு என்பது வேதங்களை முதன்மையானதும் அறுதியானதுமான ஞானமாகவும், பிற அனைத்தையும் அதன் தொடர்ச்சியாகவும் பார்ப்பது. வேதவேள்விகளை முதன்மைப்படுத்துவது. அதையொட்டிய சடங்குகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவது. சடங்குவாதிகள், ஆசாரவாதிகள் என அவர்களைச் சொல்லலாம். பழைய மரபில் அவர்கள் பூர்வமீமாம்சகர்கள் எனப்பட்டனர். பூர்வமீமாம்சம் இந்திரன், வருணன் போன்ற வேதக்கடவுள்களை மட்டுமே ஏற்றுக்கொண்டது. சிவன், விஷ்ணு போன்ற முழுமுதல் தெய்வம் என்னும் கருத்தையும், ஆலயவழிபாட்டையும், பக்தியையும் ஏற்றுக்கொள்ளாதது. வேள்வியை முன்னிறுத்தியது. ஆனால் பின்னர் அது சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என்னும் ஆறுமதங்களிலும் நுழைந்து அவற்றை உள்ளிழுத்துக் கொண்டது. தன்னை நெகிழ்வாக்கிக் கொண்டு, முழுமுதல் தெய்வம், ஆலயவழிபாடு, பக்தி ஆகியவற்றுக்கும் இடம் கொடுத்தது. அதுவே இன்றைய வைதிகத் தரப்பு. இந்து ஞானமரபிற்குள் என்றும் மிக வலுவான வைதிகமறுப்புத் தரப்புகள் உண்டு. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் என்னும் நான்கு தரிசனங்களும் அடிப்படையில் வேதமறுப்பு நிலைபாடு கொண்டவை. சார்வாகம், தார்க்கிக மதம் போன்றவையும் அவ்வாறே. சைவ மதத்திலுள்ள ஆறு புறச்சமயங்கள் அடிப்படையில் வேத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. சைவ புறச்சமயங்களின் நீட்சி என கொள்ளத்தக்க சித்தர் மரபிலும் வலுவான வைதிக எதிர்ப்பு உண்டு. (இது சார்ந்த திரிபுகளுக்கும் அர்த்தமற்ற தர்க்கங்களுக்கும் அளவே இல்லை. ஆகவேதான் மெய்யுணர்ந்த ஆசிரியர் தேவை என்கிறேன்) மூன்றாவது தரப்பு ,வேதங்களை ஞானத்தின் தொடக்க நூலாகக் கொள்வது. வேதத்தின் மெய்ஞானத்தை வளர்த்து முன்னெடுத்துச்செல்லும் நோக்கம் கொண்டது. வேள்விகளுக்கு எதிரானது அல்லது வேள்விகளை முதன்மையாகக் கருதாதது. ஆசாரங்களுக்கு, சடங்குகளுக்கு எதிரானது. வேதமறுப்பும் அதில் அரிதாகவேனும் உண்டு. அதை வேதாந்தம் எனலாம். சனாதன தர்மம் என்ற பெயர் பலராலும் இந்துமரபை ஒட்டுமொத்தமாகச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது முதல் தரப்பான வைதிக மதத்தை சுட்டவே இன்று பெரும்பாலும் புழக்கத்திலுள்ளது. ஏனென்றால் சனாதனம் என்றால் தொன்மையானது, தொடக்கமற்றது என்று பொருள். தொன்மையை முதன்மையான சான்றாகக் கொள்பவர்கள் வைதிகர்களே. தங்கள் தரப்பு பழமையானது, வழிவழியாக வருவது, ஆகவே மறுக்கப்பட முடியாதது என அவர்களே நம்புகிறார்கள். அவர்களே அச்சொல்லை அழுத்தமாகவும், முதன்மையாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆகவே அவர்களை எதிர்ப்பவர்களும் அதையே பயன்படுத்துகிறார்கள். வைதிக மரபுக்கு எதிரிகள் தாங்கள் இந்துமதப்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை என்று தெளிவுபடுத்த சனாதன தர்மம் என்னும் சொல்லை கையாள்கிறார்கள். அத்துடன் வழிவழியாக வந்தவை என்று சொல்லி ஆசாரங்களையும், நம்பிக்கைகளையும் முன்வைப்பதை எதிர்ப்பதற்கும் அவர்கள் இச்சொல்லை கையாள்கிறார்கள். வேதாந்தத்தின் தொன்மையான நிறுவனங்கள் பலவும் நீண்டகாலம் முன்னரே வைதிகமயமாக்கப் பட்டுவிட்டன. அவை ஆசாரவாதத்தில் மூழ்கி, வேதாந்தத்தின் தத்துவத்தை முழுமையாகக் கைவிட்டுவிட்டன. ஆனால் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் வேதாந்தம் மறுமலர்ச்சி அடைந்தது. அதன் முகங்கள் என ராமகிருஷ்ண பரமஹம்சர் , விவேகானந்தர், நாராயணகுரு, நடராஜ குரு என பலர் உள்ளனர். ஆசாரவாத தரப்புகளின் கடுமையான கண்டனங்கள் எப்போதுமே இந்த புதிய வேதாந்த மரபுக்கு எதிராகவே இருப்பதை காணலாம். ஏனென்றால் மரபான வேதாந்த நிறுவனங்கள் வைதிக நிறுவனங்களாக ஆகிவிட்ட நிலையில் வேதாந்தத்தின் அறிவார்ந்த பார்வையை முன்வைப்பவை புதிய வேதாந்த மரபுகள்தான். ஆசாரவாதத்திற்கும், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கும், சடங்குவாதத்திற்கும் எதிரான முதற்பெரும் சக்தி இந்தியாவில் புதிய வேதாந்த மரபுகள்தான். இந்தியச் சூழலில் சாதிசார்ந்த பிரிவினை, புரோகிதர்களின் மேலாதிக்கம் ஆகியவற்றை நேரடியாகவும் தீவிரமாகவும் முன்வைப்பவர்கள் வைதிகர்கள் என்னும் சனாதனிகள்தான். இன்றளவும் அவர்கள் அதில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவில்லை. இந்துமதத்தின் மூலநூல்களான சுருதிகளில் சாதி-இன பேதங்கள் பேசப்படவில்லை என்றும், சாதிபேதங்களெல்லாம் ஆசாரங்களே ஒழிய அடிப்படைக் கொள்கைகள் அல்ல என்றும், அவற்றைக் கடந்து இந்து மரபின் மெய்ஞானமே இன்றைய உலகுக்கு உரியது என்றும் சொல்பவர்கள் புதியவேதாந்த மரபைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. ஆசாரவாதிகளான சனாதனிகள் அல்லது வைதிகர்கள் அவ்வாறு எந்நிலையிலும் ஒத்துக்கொண்டதில்லை. மட்டுமல்ல, அதன்பொருட்டு அவர்கள் புதியவேதாந்திகளை வசைபாடவும் தவறுவதில்லை. இன்று, சனாதனம் மீதான எதிர்ப்பு எழுந்ததும் இந்துமதத்தின் ஆசாரங்கள் அல்ல இந்துமெய்ஞானம் என்றும், பண்டைய நம்பிக்கைகளின் பொருட்டு இந்து மெய்ஞானத்தைக் குறைசொல்லமுடியாது என்றும், அவை காலத்தில் மாறிக்கொண்டிருக்கின்றன என்றும் சொல்பவர்கள் அச்சொற்களை மெய்யான சனாதனிகளான வைதிகர் எவரேனும் ஏற்பார்களா என எண்ணிப்பார்க்கலாம். அவர்களைக்கொண்டு அவ்வாறு சொல்ல வைக்க முயற்சியும் செய்யலாம். * இந்தியச் சிந்தனைச் சூழலிலும், இந்து மெய்ஞானப் பரப்பிலும் வைதிகமரபு என்னும் சனாதனத் தரப்புக்கு எதிரான கடுமையான எதிர்ப்பும் விமர்சனமும் எப்போதும் நிகழவேண்டும் என எண்ணும் தரப்பைச் சேர்ந்தவன் நான். ஏனென்றால் அது ஆசாரவாதம். சடங்குவாதம். தொன்மையை அப்படியே பேணும் நம்பிக்கை கொண்டது. பழைய மரபில் இருந்த மானுடவிரோத எண்ணங்களையும், செயல்களையும் நீட்டிக்க விரும்புவது. வைதிக மரபு அல்லது சனாதன மரபு பண்டைய இனக்குழு வாழ்விலிருந்த அனைத்தும் நீடிக்கவேண்டும் என்றும், ஏனென்றால் அவை வழிவழியாக வந்தவை என்றும் வாதிடுவது. அந்த இனக்குழு வாழ்வு இன்றில்லை என்றும், அந்த இனக்குழு வாழ்வின் வாழ்க்கைமுறைகள் பலவும் இன்றைய உலகின் நவீன அறவியலுக்கு ஒவ்வாத அநீதிகள் என்றும் ஏற்க பிடிவாதமாக மறுப்பது. மிகக்குறுகலான, முற்றிலும் தேங்கிப்போன வாழ்க்கைப்பார்வை கொண்டது. அத்தரப்பின் குரல் மேலோங்கினால் ஆன்மிகம், தத்துவம் இரண்டும் தேக்கமடையும். சமூக வாழ்க்கை இருள்மூடும். கடுமையான சமூக அடக்குமுறைகளும் சுரண்டல்களும் உருவாகி சமூகத்தின் பொருளியல் வாழ்க்கையே சிதைவுறும். எல்லா மதப்பழமை வாதத்திற்கும் இது பொருந்தும். எல்லா மதப்பழமைவாதங்களும் தேக்கமுற்ற பார்வை கொண்டவைதான். மானுடவிரோத அணுகுமுறை கொண்டவைதான். அவை ஓங்கிய எந்த நாடும் வாழ்ந்ததில்லை. கண்முன் பல உதாரணங்கள் உள்ளன. * நான் வைதிக மறுப்பாளன், சனாதனத் தரப்பை எற்காதவன். ஆனால் சனாதனம் என் எதிர்த்தரப்பு. எதிரித்தரப்பு அல்ல. நான் வேதமரபை நிராகரிப்பதில்லை. என் கட்டுரைகளில் அதைக் காணலாம். நான் வேதங்களிலுள்ள தொன்மையான ஞானத்தின் பரிணாமத்தை அறிவார்ந்து அணுகி அறிபவன், அவற்றின் ஞானமெனும் சாராம்சத்தை ஏற்பவன். ஆகவே நான் மூன்றாவதான வேதாந்த தரப்பினன். நான் வேதங்களில் நினைப்பெட்டா காலம் முதல் உருவாகி வந்திருக்கும் மாபெரும் ஆன்மிகமான ஆழ்படிமத் தொகையை பெரும் மானுடச் செல்வமெனக் கருதுபவன். அவற்றை பயில முயல்பவன். ஆனால் அதனுடன் இணைந்த ஆசாரவாதத்தை, சடங்குவாதத்தை நிராகரிப்பவன். நான் நாராயணகுருவின் மரபில் வந்த வேதாந்தியான நித்யசைதன்ய யதியை ஆசிரியராகக் கொண்டவன் .இந்தத் தரப்பு இந்திய சிந்தனையின் மிக வலுவான, மிக முற்போக்கான ஒன்று என்பதை கொஞ்சம் வாசிப்பவரேகூட அறிந்துகொள்ளமுடியும். என் தரப்புக்கு எதிராக ஓர் ஆசாரவாதி முன்வைக்கும் கடுமையான கண்டனங்களை, முழு மறுப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தத் தரப்பு என்றும் இங்கே இருக்கும் என்றும் நான் அறிவேன். அவர்கள் இந்து மரபின் நிலைச்சக்தி. எதையும் மாற்றாமலிருக்க முயல்பவர்கள். ஆகவே சில அடிப்படையான விஷயங்கள் காலத்தில் மறையாமலிருப்பதும் அவர்களால்தான். சென்ற காலங்களில் மிக எதிர்மறையான சூழலில் இந்து மெய்ஞான மரபின் மூலநூல்களும், ஆழ்படிமங்களும் அழியாமல் காக்கப்பட்டது அவர்களின் பிடிவாதத்தால்தான். எந்த ஒரு இயக்கத்திலும் நிலைச்சக்தி, இயக்க சக்தி (Static – Dynamic) என இரண்டு விசைகள் இருக்கும். நிலைச்சக்தி முற்றிலும் இல்லாமலானால் அந்த இயக்கம் நிலைகொள்ளாமல் சிதறிப்பரவி அழியும். நிலைச்சக்தி மேலோங்கினால் அவ்வியக்கம் தேங்கிச் சிதையும். இயக்க சக்தியே ஓங்கி நின்றாகவேண்டும். இந்து மரபில் அது நவவேதாந்தத்தின் தரப்புதான். அத்துடன் இரண்டாம் தரப்பினரான வைதிகமறுப்பாளரின் குரலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறொன்று இந்தியச் சூழலில் என்றும் இருந்துகொண்டிருக்கும். இந்து மரபுக்குள் என்றும் அது ஒலித்துக் கொண்டிருக்கும். அது ஒருபோதும் இல்லாமலாகக் கூடாது. அது ஒடுக்கப்படுமென்றால், அது அழியுமென்றால், இந்து மரபு ஆசாரவாதம் நோக்கிச் செல்லும். அதன் அறம் தேக்கமுற்று அழியும். வேதகாலத்திலேயே வைதிக மறுப்பு வலுவாக இருந்துள்ளது. வேதங்களில் பிரஹஸ்பதியின் மரபு வேள்விவாதத்திற்கு எதிரானதாகச் சொல்லப்பட்டுள்ளது. கணாதர், அஜித கேசகம்பிளி என பல வேள்விமறுப்பாளர்கள் வேதங்களிலேயே உள்ளனர். மகாபாரதத்தில் வேதமறுப்பு மிக வலுவாக முன்வைக்கப்படுகிறது. மகாபாரதப்போர் முடிந்து யுதிஷ்டிரர் பதவியேற்றதுமே சார்வாகர் வந்து அந்த வெற்றியை நிராகரிக்கிறார் சமண பௌத்த மதங்களில் வைதிக எதிர்ப்பு மிக வலுவாக இருந்தது. இன்றும் அம்மதங்கள் இங்கே உள்ளன. சைவத்தின் சமயப்பிரிவுகளில் பலவற்றில் வைதிக எதிர்ப்பு வீறுடன் இருந்தது. எம்.என்.ராய், தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய, கே.தாமோதரன் போன்ற அறிஞர்கள் இந்த மரபை ஆராய்ந்து விரிவாக எழுதியுள்ளனர். அதன்பின் இந்திய மறுமலர்ச்சியின்போது ஆங்கிலக் கல்வி வழியாக சீர்திருத்தப் பார்வையாகவும் தாராளவாதப் பார்வையாகவும் மார்க்ஸியப் பார்வையாகவும் வைதிக எதிர்ப்பு மீண்டும் உருவாகி வந்தது. நேரு, ராம் மனோகர் லோகியா, அம்பேத்கர், கே.தாமோதரன், இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு என அதன் சிந்தனைசார்ந்த முகங்கள் பல. சமூகசீர்திருத்தப் பிரச்சாரகராக ஈ.வெ.ரா அவர்களின் தரப்பும் அதுவே. அவர்களின் முழுமையான வைதிக மறுப்புக்கான அடித்தளங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, சமூகப்பார்வை. வைதிகமரபின் பழமைவாதப் பிடிவாதம். அது மானுடவிரோதமாகவே ஆகிவிட்டிருக்கிறது. சகமனிதனை அது விலங்கைவிட கீழாக நடத்துகிறது. அந்த நோக்கால் பலநூறாண்டுகள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அந்த மரபை முழுமையாக நிராகரிக்க முழு உரிமை உண்டு. இன்னொன்று, தத்துவப்பார்வை. வைதிகமரபின் மூலநூல் சார்ந்த பிடிவாதச் சிந்தனைப்போக்கு (Canonism) புதிய பார்வைகளை மறுப்பது. எனவே தாராளவாத, ஜனநாயகச் சிந்தனைகளுக்கு எல்லாவகையிலும் எதிரானது. நேருவோ, லோகியாவோ வைதிகமரபை நிராகரிப்பதும் இயல்பானதே. அக்குரல்கள் எழவேண்டும், வலுவாக அத்தரப்பு நிலைகொள்ளவேண்டும் என்றே விழைகிறேன். நாராயணகுருவின் முதன்மை மாணக்கரான சகோதரன் ஐயப்பன் வேதவிரோதத் தரப்பைச் சேர்ந்தவர். புதிய கேரளத்தின் முதல் நாத்திகர், முதல் மரபு எதிர்ப்பாளர் அவர். இன்னொருவர் நாராயணகுருவின் அணுக்க மாணாக்கரான சி.வி.குஞ்ஞிராமன். * தமிழகத்தில் நமக்கு எழுதப்பட்ட வரலாறு தொடங்கும்போதே இங்கே வைதிகம் இருந்துள்ளது. புறநாநூறு முதல் அதற்கான சான்றுகள் உள்ளன. அதை நான் விரிவாக எழுதியுள்ளேன். கூடவே புறநாநூறு முதல் வைதிக எதிர்ப்புக்கான தடையங்களும் உள்ளன. வைதிக அந்தணரை நிராகரிக்கும், கேலிசெய்யும் குறிப்புகளும் சங்கப்பாடல்களில் உள்ளன. சிலப்பதிகாரத்தில் வேளாப்பார்ப்பார் (வேள்விசெய்யாத அந்தணர்) என்னும் தரப்பினரை இளங்கோ பதிவுசெய்கிறார். அவர்கள் வேள்விக்கு எதிரானவர்கள். மது, இசை முதலியவற்றில் ஈடுபட்டு வாழ்ந்தவர்கள். மணிமேகலையில் தமிழகத்தில் அன்றிருந்த பல்வேறு தத்துவத் தரப்புகள் விரிவாகப் பேசப்படுகின்றன. அவற்றில்பல வைதிக எதிர்ப்புத் தன்மை கொண்டவை. தமிழகத்தில் பொது யுகம் 7 வரை சமண பௌத்த மதங்களே ஓங்கியிருந்தன. அவை முழுமையான வைதிக எதிர்ப்புத்தன்மை கொண்டவை. அவர்களின் நூல்கள் ஏராளமானவை. தமிழ் அறத்தின் முகமான திருவள்ளுவர் தமிழகத்தில் இருக்கும் தொன்மையான தரவுகளின்படி ஒரு சமணர். ஆசாரிய குந்துகுந்தர் என்னும் சமணமுனிவரின் மாணவர். ஏழாம் நூற்றாண்டு முதல் பக்தி இயக்கம் தமிழகத்தில் ஓங்கியது. சைவ வைணவ ஞானிகளால் உருவாக்கப்பட்ட பக்தி இயக்கம் பின்னர் இந்தியா முழுக்கச் சென்றது. பக்தி இயக்கம் வைதிக எதிர்ப்பு இயக்கம் அல்ல. வேதங்களை அது ஞானநூலாக ஏற்றுக்கொண்டதுதான். உதாரணமாக, சைவ பக்தி இயக்கம் சிவனை வேதமுதல்வன் என்று சொல்கிறது. ஆனால் அது வைதிக ஆதரவு இயக்கமும் அல்ல. அது வேள்விகளுக்கு எதிராக பக்தியையும் ஆலயவழிபாட்டையும் முன்வைத்தது. அவை இரண்டுமே வைதிக மரபுக்கு வெளியே இருந்தவை. வைதிகமரபு தன்னை பக்தி மற்றும் ஆலயவழிபாடு நோக்கி நகர்த்திக்கொண்டு பக்தி இயக்கத்தின்மேல் ஏறிக்கொண்டது. அவ்வாறுதான் அது தமிழகத்தில் பௌத்த, சமண மதங்களை வென்று மையப்போக்காக ஆகியது. வைதிகம் உருவாக்கிய பல ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் திரும்பத் திரும்ப பக்தி இயக்கம் நிராகரிப்பதைக் காணலாம். பக்தி இயக்கத்தின் மாறாத கரு என்பது வேதம் பயின்று, வேள்விசெய்யும் அந்தணர்கள் காணமுடியாத சிவனையும், விஷ்ணுவையும் சாதாரணமான வேடனோ விவசாயியோ தீவிரமான பக்தி வழியாக காண்பது என்னும் கதைதான். பக்தி இயக்கத்தின் முதன்மை ஞானிகள் பலரும் பிராமணரல்லாதவர்கள். அவர்களில் பலர் அடித்தளச் சாதியினர். நந்தனார் என்னும் தலித் பக்தரை ஆலயத்திற்குள் அனுமதிக்க பிராமணர்கள் மறுக்க, அவர் சிவனை கண்டு வழிபடுவதற்காக சிதம்பரம் ஆலயத்தின் நந்தி விலகி வழிவிட்டது என்ற கதையே ஓர் உதாரணம். பக்தி இயக்கம் எந்த வகையிலும் வேள்விகளைச் செய்யவோ வேள்விகளைக் காணவோ முடியாத சூத்திர – தலித் மக்களின் இயக்கமாகவே இருந்தது. அது உழைப்பாளிகளின் மரபு என்னும் பொருளில் சிரமண மரபு என்றே சொல்லப்பட்டது. வைதிக மரபு முன்வைத்த கடுமையான சாதியாசாரங்கள் பலவற்றை அது நிராகரித்தது. சடங்குகளை விலக்கி தூய பக்தியை முன்வைத்தது. வேதத்தை முதல்நூலாகச் சொன்னாலும் வைணவ இயக்கத்தை உருவாக்கிய ராமானுஜர் தலித் மக்களை திருக்குலத்தார் என்று சொல்லி வைணவர்களாக ஆக்கினார் என்பது வரலாறு. அவ்வகையில் தமிழ் பக்தி இயக்கத்தை ஒரு வைதிக மறுப்பு இயக்கம் என்று சொல்லலாம். தமிழகத்தின் சைவ மதம் என்பது பல அடுக்குகள் கொண்டது. மொத்தம் 12 பிரிவுகள் அதிலுள்ளன. அவற்றில் வலுவான பிரிவான சித்தாந்த சைவம் ஆறுபிரிவுகளை தனக்கு அன்னியமான புறச்சமயங்கள் என்று வகுக்கிறது. அறு பிரிவுகளை அகச்சமயம் என சொல்கிறது. அவற்றில் பல பிரிவுகள் வைதிக மறுப்புத்தன்மை கொண்டவை. அத்துடன் சித்தாந்த சைவமே கூட வேதாந்தம் போல வேதங்களை தொடக்கநூலாக, புனிதநூலாக கருதுகிறதே ஒழிய மூலநூலாக கொள்வதில்லை. சைவ ஆகமங்களும், அவற்றின் வழிவந்த சிவஞானபோதம் போன்ற தத்துவநூல்களுமே அவற்றின் முதன்மை நூல்கள். தமிழ் சித்தாந்த சைவத்தின் மையங்களான சைவ மடங்களுக்கு நடைமுறையில் வைதிக ஏற்பு இல்லை. அவற்றின் துறவிகள் சூத்திரர்கள்.வைதிக மரபின்படி சூத்திரர்கள் துறவுபூண உரிமை அற்றவர்கள். சைவத்தில் இருந்து கிளைத்தது வள்ளலாரின் இயக்கம். அது தொடக்கத்தில் சித்தாந்த சைவம்போல வேதங்களை மூலநூலாக ஏற்றாலும் பக்தி இயக்கத்தின் மனநிலை கொண்டிருந்தது. விரைவிலேயே அது முழுமையாக வைதிகமரபை நிராகரித்து ஜோதி தரிசனத்தை முன்வைப்பதாக ஆகியது. வள்ளலாரிடம் தமிழ் சித்தர் மரபின் தாக்கமும் உண்டு. சித்தர்மரபில் பலர் வைதிக எதிர்ப்பாளர்கள். தமிழகத்தின் மைய மதநம்பிக்கை பக்தி இயக்கம் சார்ந்தது. பக்தி இயக்கத்தினுள் ஒரு சிறுபகுதியாக சனாதனம் என குறிப்பிடப்படும் வைதிகம் இங்கே நீடிக்கிறது. மறைமுகமாக மட்டுமே அதன் செல்வாக்கு உள்ளது. மக்களுக்கு அதனுடன் நேரடியான உறவில்லை. அத்துடன் இந்து மதநம்பிக்கை என்பது இந்தியாவெங்கும் ஒரு குறிப்பிட்ட இயங்கியல் கொண்டது. அது மூன்று அடுக்குகளாகச் செயல்படுகிறது. உச்சத்தில் அது பிரம்மம் அல்லது பரம்பொருள் என்னும் அருவமான தூய தெய்வத்தை வழிபடுகிறது. மையத்தில் சைவ வைணவப் பெருமதங்கள் உள்ளன. அடித்தட்டில் நாட்டார் தெய்வங்களும் குடித்தெய்வங்களும் உள்ளன. நாட்டார் தெய்வங்களும் குடித்தெய்வங்களும் முழுமையாகவே வைதிக மரபுக்கு வெளியே உள்ளவை. பல தெய்வங்கள் வைதிகமரபுக்கு எதிரானவை. ஆகவே தமிழகத்தில் வைதிகம் போலவே வைதிக எதிர்ப்பும் என்றும் வலுவாக உள்ளது. வைதிக எதிர்ப்பாளர்கள் வைதிக மதத்தை சனாதன தர்மம் என்று குறிப்பிடுகிறார்கள். அந்த எதிர்ப்புக்கான வரலாற்றுப் பின்னணி உள்ளது. சமூகக் காரணங்களும் உள்ளன. * இந்த பின்னணியிலேயே நான் முன்பு திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்தேன். அது ஒலித்தாக வேண்டிய தரப்பு என்று குறிப்பிட்டு எழுதினேன். அதையே உதயநிதி பேசியது குறித்தும் சொன்னேன். வடஇந்தியாவில் தென்னிந்தியா போல வைதிகமரபுக்கு எதிரான குரல்கள் வலுவாக இல்லை. விவேகானந்தரில் இருந்து தொடங்கும் நவவேதாந்தத்தின் தரப்பும் அங்கே தீவிரமாக இல்லை. பக்தி இயக்கத்தின் வைதிக எதிர்ப்பு காலப்போக்கில் மழுங்கிவிட்டது. நாட்டார் வழிபாட்டின் வைதிக எதிர்ப்பு ஒருங்கிணைக்கப்படவில்லை. ஆகவே அங்கே வைதிகமே இந்துமதம் என்னும் எண்ணம் ஆழமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்துமதம் என்பது ஒற்றைப்படையான ஒரு அமைப்பு என்றும், அதில் ஒரே ஒரு கருத்துத் தரப்பே உள்ளது என்றும் அங்கே நம்பப்படுகிறது. அதை நிலைநிறுத்த அங்குள்ள ஆதிக்கசக்திகளும் அரசியல் சக்திகளும் இணைந்து முயல்கின்றன. உதாரணமாக, ஒருவரை பிடித்து ஜெய்ஸ்ரீராம் என சொல்லவைக்கிறார்கள். சொல்லாவிட்டால் அடிக்கிறார்கள். ஒரு தென்னகத்து தீவிரச் சைவன் உயிர்போனாலும் அதைச் சொல்ல மாட்டான். அவன் இந்துதான். நான் அப்படிச் சொல்ல மாட்டேன். நான் வேதாந்தி. நானும் இந்துதான். ஆனால் நாங்கள் கொல்லப்படுவோம். விவேகானந்தரோ நாராயணகுருவோ வள்ளலாரோ இன்றிருந்தால் அவர்கள் இக்கும்பலால் கொல்லப்பட்டிருப்பார்கள் இந்துமதமும் சனாதன மரபும் ஒன்று என்று சொல்லி, சனாதனத்துக்கு, அதாவது வைதிகத்திற்கு எதிரான தத்துவ நிலைபாடுகளையும், சமூக இயக்கங்களையும் இந்துமதத்திற்கு எதிரனதாக சித்தரிக்கும் போக்கு இந்து மெய்ஞான மரபுக்கே மிகமிக ஆபத்தானது. அது இந்து மெய்ஞான மரபின் உள்விவாதங்களை அழிக்கும். அதிலுள்ள சீர்திருத்தப் போக்குகளை ஒடுக்கும். இந்து மெய்மரபை பழமைவாதத்திலும், ஆசாரவாதத்திலும், சடங்குவாதத்திலும் கட்டிப்போடும். அது இந்து மதம் செய்துகொள்ளும் தற்கொலை. இந்தியச் சூழலில் இந்து அல்லாத மதங்களில் இருந்தும், தாராளவாதிகளில் இருந்தும், மார்க்ஸியர்களில் இருந்தும் உருவாகும் எதிர்க்குரலும் மிக முக்கியமானது. அந்த விமர்சனமே இந்துமதத்தின் பழமைவாதத்தையும் அதன் மனித எதிர்ப்பு மனநிலைகளையும் கட்டுப்படுத்தும் சக்தி. எந்தக்குரலும் ஒடுக்கப்படலாகாது. எந்த கருத்தும் அவமதிப்பாக கொள்ளப்படலாகாது. அதை எதிர்ப்பவர்கள் எதிர்க்கலாம். சனாதனிகளுக்கும் அந்த உரிமை உண்டு. வாதங்களில் தோற்கடிக்க முயலலாம். மிரட்டுவதும் வசைபாடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையவை அல்ல. அந்த விவாதச்சூழல் எப்போதும் இருந்தாகவேண்டும். புதிய தரப்புகள் உருவாகி வரவேண்டும். இந்து மதத்தின் வழிகாட்டிகளாக கற்றறிந்த அறிஞர்களும் ஞானிகளும் அமையவேண்டுமே ஒழிய அரசியல்வாதிகளும் தெருக்குண்டர்களும் அமையக்கூடாது. அனைத்து நதிகளும் கடலுக்கே செல்கின்றன என்று நமக்குக் கற்பித்தவர்கள் இந்து மெய்ஞானிகள் என்பதை நாம் மறக்கக்கூடாது. https://www.jeyamohan.in/188571/
  4. என்றுமுளதா தென்றமிழ்? JeyamohanSeptember 3, 2023 அன்புள்ள ஜெயமோகன் , தமிழ் மொழி ஆங்கில எழுத்துரு வடிவில் தொடரும் என்றும், தமிழ் எழுத்துரு மெல்ல வழக்கொழியும் என்று நீங்கள் சில ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தீர்கள். அது போலவே, இப்போது வாட்ஸாப் போன்ற கருத்துப் பரிமாற்ற மென்பொருட்களில் தமிழில் எழுதும் வசதி இருந்தாலும், ஆங்கில எழுத்துக்களாலேயே தமிழ் எழுதப்படுகிறது. குழுக்களில் தங்கிலீஷே எழுத்து மொழியாக இருக்கிறது. தமிழில் யாரும் கடிதங்கள் எழுதுவது இல்லை. தமிழில் செய்திகள் படிக்கும் வழக்கமும் தேய்ந்து, காணொளியாக மட்டுமே தமிழுலகத்துக்குத் தேவையான வம்பு தும்புகள் பகிறப்படுகின்றன. உலகெங்கிலும் மாறிவரும் செய்தி பரவும் முறைகளையும், தனிப்பட்ட தவல் பரிமாற்ற வழிகளையும் அடியொட்டியே இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன எனலாம். ஆனால் அந்தக் காரணங்களையும் தாண்டி, தமிழ் என்ற மொழியைக் கற்பதால் பொருளாதார ரீதியாக என்ன பயன் என்று வரையறுக்க முடியாத நிலையில், தமிழர்களுக்கே தமிழ் தேவையில்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. சராசரி வாழ்க்கையை நிகழ்த்த, தமிழ் பேச்சளவில் இருக்கிறது. ஆனால் அது தவிர்க்க முடியாத ஒன்று அல்ல. சட்டம் கற்பதற்கும், நம் மாநிலத்திற்கு உள் நடக்கும் தொழில் பரிவர்த்தனைகளுக்கும் தமிழ் போதும். ஆனால் அறிவியலும், பொருளாதாரமும், மருத்துவமும், பொறியியலும் ஆங்கிலம் தெரிந்தால்தான் கை வரும். இதில் தமிழால் பொருளீட்டக் கூடிய வழி உள்ள ஒரே துறை சினிமாதான் என்று தோன்றுகிறது. (அரசியல் பொருளீட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல. அது சேவை என்று வைத்துக் கொள்கிறேன்). இங்கு வசனம், பாடல்கள் எழுதும் திறமை உள்ளவர்கள் தமிழறிவிற்காக மட்டுமே பெரும் சம்பளம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. தமிழ் இலக்கிய விற்பன்னர்களையும் சினிமாத் துறை இதற்குப் பயன்படுத்திக் கொண்டு பதிலுக்குப் பொருளாதார நிழல் கொடுத்து இருக்கிறது. அந்த நிலையிலும் மாற்றங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. சமீபத்தில் ஒரு வலைத் தொடருக்கு வசனம் எழுதும் பணியை மேற்கொண்டபோது ஆங்கில எழுத்துருவிலேயே வசனத்தை எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டனர். எனக்கு நான் எழுதியதையே தமிழில் படித்துப் பார்த்தால்தான் சரியாக வந்திருக்கிறதா என்று கூடச் சொல்ல முடியும். ஆனால் தொடரின் இயக்குனர், நடிகர்கள் அனைவரும் தமிழை பேச மட்டுமே தெரிந்தவர்கள். அவர்களுக்குத் தங்கிலீஷில்தான் வசனம் வேண்டும். தொழில் நுட்பக் கலைஞர்களுக்கோ ஆங்கில மொழிமாற்றம் செய்தால்தான் புரிந்து கொள்ள முடியும். எனவே, தமிழ், ஆங்கிலம், தங்கிலீஷ் என்று மூன்று வடிவிலும் வசனப் பிரதிகள் தயாராகின. தமிழ்ப் பிரதியைப் படித்தது நானும், என்னைப் போலவே சிறிய ஊர் ஒன்றில் வளர்ந்த ஒரு உதவி இயக்குனரும் மட்டுமே. வரும் காலத்தில் தமிழில் எழுதும் திறமைக்கு தொழில் சார்ந்த எந்த ஒரு தேவையும் இல்லாது போகலாம். கேள்வி: 21ஆம் நூற்றாண்டில், தொழில் ரீதியாகக் தமிழால் மட்டுமே வளர்வதற்கு, தமிழ் எழுத்தால் மட்டுமே வாழ வழி அமைத்துக் கொடுத்து, உலகத் தமிழர்களை மொழியால் இணைப்பது தமிழ் சினிமாவும், தமிழ் சினிமா இசையும்தான்; பேச்சுத் தமிழ் மாற மாற, வெகு ஜனக் கலையான சினிமா மூலம் அந்த மாற்றம் வேகமடைய, தமிழ் சினிமாவுக்குத் தனித் தமிழே தேவைப் படாத காலம் ஒன்று வரும் போது, தமிழின் வீச்சு இன்னும் மங்கும் – என்று நினைக்கிறேன். திரைமொழி ஆதரிக்காவிட்டால், 2075-ஆம் ஆண்டில் 98% பள்ளிகளில் “தொட்டனைத்தூறும் மணற்கேணி…” படிக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. தமிழ் மொழிக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து உங்கள் எண்ணம் என்ன என்று சொல்ல முடியுமா? அன்புடன் சிவா அனந்த் அன்புள்ள சிவா உண்மையில் இன்னும் நூறாண்டுகளில் தமிழ் மொழி, தமிழிலக்கியம் எப்படி இருக்கும் என நம்மால் ஊகிக்கவே முடியாது. 1923ல் பாரதியார் தமிழ் மொழி மின்னூடகத்தில் இருக்கும் என்றோ, தமிழுக்கு தானியங்கி மொழிபெயர்ப்பு முறைகள் வருமென்றோ கற்பனை செய்திருக்க முடியுமா? இவ்வளவுக்கும் அவர் ஒரு தீர்க்கதரிசி, எப்போதுமே எதிர்காலத்தை எண்ணி வாழ்ந்தவர். ஆகவே நாளை என்னாகும் என்னும் கவலை தேவையற்றது என்பதே என் எண்ணம். என்னவானாலும் ஆகட்டும், அதுவே ஊழ் என்றால் நம கவலைப்பட்டும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் நாம் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும். அவை செய்யப்படவில்லை என்று ஆகக்கூடாது. இந்த மொழியை வாழ வைக்க, இவ்விலக்கியத்தை தொடரச்செய்ய நம்மால் ஆற்றவேண்டிய கடமைகள் சில உள்ளன. அவற்றை ஆற்றவே இங்கே வந்திருக்கிறோம். ஆற்றிவிட்டுச் செல்லவேண்டியதுதான். இந்த விடுபட்ட நிலை கொண்டவர்களே எதையேனும் உருப்படியாகச் செய்கிறார்கள். எஞ்சியோர் மிதமிஞ்சிய கொந்தளிப்பை, கவலையை வெளிப்படுத்துவார்கள். ஆனால் ஒன்றும் செய்யவும் மாட்டார்கள் நான் தனிப்பட்ட முறையில் சில அருவமான கருத்துருவங்களை நம்புபவன். அவற்றை ஊழ் என்று சொல்லலாம். இங்கே மானுட இனம் வாழுமா? வாழும், இதுவரை மானுட இனத்தை வாழவைத்த ஒரு benevolence, ஒரு நற்கருணை எங்கோ உள்ளது. அது மானுட இனத்தின் உள்ளத்திலும் இயல்பிலும் உறைந்துள்ளது. அன்பு, கருணை, நீதி என பல வடிவங்களில் அது வெளிப்படுகிறது. அது உள்ளவரை எநதச் சவாலையும் எதிர்கொண்டு மானுடம் வாழும். அந்த நற்கருணை நம்மை கைவிட்டதென்றால் நாம் அழிவோம். அந்நிலையில் நாம் செய்யக்கூடுவதென ஏதுமில்லை. ஆகவே நான் பொதுவாக எதிர்மனநிலை கொண்டவர்களின் எச்சரிக்கைகள் , பதற்றங்களை பெரிதாகக் கவனிப்பதில்லை. அதேதான் மொழிக்கும். தமிழ்மொழி இதுவரை வாழ்ந்தமைக்கான சில காரணங்கள் தமிழ் மொழியிலேயே உண்டு. அவை உள்ளவரை தமிழ் எப்படியோ வாழும். இனி ஒருவேளை அக்காரணங்கள் இல்லாமலாகி தமிழ் அழியவேண்டும் என்பதே ஊழ் என்றால் நாம் தடுக்க முடியாது. அவ்வளவு பெரிய பொறுப்பை நாம் சுமக்க முடியாது. தமிழின் இடத்தில் இன்னும் மேலான ஒன்று வந்தமையும் என நம்பவேண்டியதுதான். இந்த களத்தில் நாம் அறவே தவிர்க்கவேண்டிய சில மனநிலைகள் உண்டு. ஒன்று தமிழுக்கு‘எதிரிகள்’ நிறைய இருக்கிறார்கள் என்றும், அந்த எதிரிகளிடமிருந்து தமிழக்காக்க‘களமாட’வேண்டும் என்றும் கற்பனை செய்துகொள்வது. இது முழுக்க முழுக்க எதிர்மறை மனநிலைகளை கட்டமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியலே ஒழிய, இதில் எந்த தமிழ்சார்ந்த அக்கறையும் இல்லை. அவர்கள் தமிழுக்கு எதுவுமே செய்ததில்லை, செய்யப்போவதுமில்லை, செய்யவும் இயலாது. நேர்மாறாக அவர்களால் தமிழுக்கு அழிவே உருவாகும். அவர்கள் தமிழைப் பற்றிக்கொண்டிருக்கும் தொற்றுக்கிருமிகள் என்றே எண்ணுகிறேன். சற்றுக் கவனியுங்கள், அவர்கள் ஓர் அதீதநிலை எடுக்கிறார்கள். வெற்றுப்பாசாங்கு அது. ஆனால் அந்த அதீதநிலையை பயன்படுத்தி தமிழுக்குப் பணிசெய்த அனைவரையுமே வசைபாடி, அவமதிக்கிறார்கள். தங்கள் அரசியலை அவர்கள் ஏற்கவில்லை என்றால் அவர்களை ஒழிக்க முயல்கிறார்கள். எஸ்.வையாபுரிப் பிள்ளை முதல் அ.கா.பெருமாள் வரை அவர்களால் அனைவருமே வசைபாடப்பட்டிருக்கிறார்கள். இன்று தமிழுக்கு எவர் எந்தப்பணி செய்தாலும் இந்த கிருமிகளின் வசைகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பது எவ்வளவுபெரிய இடர்! மெய்யான பணி செய்த பலர் முழுமையாக மறக்கப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், மு.அருணாசலம் முதல் புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம் வரை. அவர்களுக்கு ஒரு நினைவுச்சின்னம்கூட இல்லாத மண் இது. இவர்களின் அதிகார அரசியலுக்கு உடன்படுவார்கள் என்றால் போலிகளை கொண்டாடி முன்வைத்து அவர்களை முன்னுதாரணங்களாக முன்னிறுத்தவும் செய்வார்கள். இது மெய்யான அறிஞர்கள் அவர்களுக்குரிய வாசகர்களையும் மாணவர்களையும் அடைவதை தவிர்க்கிறது. மெய்யான அறிஞர்களுக்கு ஆழமான உளச்சோர்வையும் அளிக்கிறது. அனைத்தையும்விட மோசமானது, இந்த அதிகார அரசியல் உருவாக்கும் போலித்தமிழ்வெறியின் இயக்கமுறை. அது முழுக்க முழுக்க எதிர்மறையானது. காழ்ப்பே உருவானது. வசைபாட மட்டுமே தெரிந்தது. ஆகவே செயலூக்கத்துக்கு நேர் எதிரானது. அதன் விளைவான தற்காலிகக் கொந்தளிப்பு மட்டுமே கொண்டது. அக்கொந்தளிப்பை இளைய தலைமுறைக்கு அளித்து, அவர்கள் எதையும் செய்யாதவர்களாக ஆக்கிவிடுகிறது இக்காழ்ப்பு. ஆனால் தாங்கள் ‘களமாடிக்’ கொண்டிருப்பதாகவும் நினைத்துக்கொள்ள செய்கிறது. செயலூக்கம் என்பது நேர்நிலை உளஅமைப்பு கொண்டதாகவே இருக்க முடியும். நம்பிக்கையுடன் பொறுமையாக நீண்டநாள் உழைத்துப் பணிசெய்வதாகவே அது அமைய முடியும். நீடித்த உழைப்புக்கு மட்டுமே ஏதேனும் செயல்மதிப்பு உண்டு. இரண்டாவதாக, நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றுண்டு. தமிழ்மொழியோ தமிழ்ப்பண்பாடோ ஓர் ‘அமைப்பு’ அல்ல. எனவே அந்த அமைப்பை தக்கவைக்கவோ வளர்ச்சியடையச் செய்யவோ எவரும் எதையும் செய்ய முடியாது. மொழி, பண்பாடு ,வாழ்க்கைமுறை என அனைத்தும் இணைந்து ஒற்றை நிகழ்வு. தமிழ் எழுத்துக்களை மாற்றுவது, தமிழை கணினிமயமாக்குவது போன்ற செயல்பாடுகள் தேவைதான். ஆனால் அடிப்படையில் தமிழர்கள் தமிழ் கற்று, தமிழில் வாசித்து, தமிழில் எழுதி, தமிழில் சிந்தனை செய்தால் மட்டுமே தமிழ் வாழும். தமிழில் வாசிப்பவர்கள் குறைவார்கள் என்றால் தமிழ் அழியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழ் ஒரு நடைமுறைத்தேவைக்கான பேச்சுமொழியாக நீடிக்கும். தமிழிலுள்ள இலக்கியங்களும் சிந்தனைகளும் மறையும் இன்றைய போக்கு தமிழின் அழிவையே காட்டுகிறது என்பதில் ஐயமே இல்லை. சென்னையில் தி ஹிண்டு இலக்கிய விழா நிகழ்கிறது. முழுக்கமுழுக்க ஆங்கிலம். அதற்கு ஆயிரம் பேர் செல்கிறார்கள். அதில் ஐந்துபேர் கூட அதே சென்னையில் நிகழும் தமிழ் இலக்கிய விழாக்களுக்கு வருவதில்லை. ஏனென்றால் சென்னையின் உயர்குடி, உயர்நடுத்தரக்குடி மக்களுக்கு சுத்தமாகத் தமிழே தெரியாது. சினிமாவில் தமிழ் எழுதப்படிக்க தெரிந்தவர்களே குறைவு. தமிழில் திரைக்கதைகளை அளித்தால் வாசிப்பவர்கள் அரிது. தமிழில் நூல்களை வாசிப்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். வசனங்கள் ‘தங்கிலீஷில்’தான் இளைய தலைமுறையினரால் வாசிக்கப்படுகின்றன. தமிழில் வெளிப்பாடு கொண்ட விளம்பரம் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் அவ்வாறுதான் சூழல் உள்ளது. இன்று பேச்சுமொழியாக தமிழை நீட்டிக்கச் செய்வதே கடினமாகியுள்ளது. நான் ரயிலில் தங்கள் சிறு குழந்தைகளிடம் தமிழில் பேசும் உயர்நடுத்தர வர்க்கத்து அன்னையரை கண்டதே இல்லை. “ராகுல் கம் ஹியர்’தான் மொழி. அந்த தலைமுறை என் நாவலை வாசிக்குமென நான் நினைக்கவுமில்லை.மிகமிக வேகமாக தமிழில் வாசிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள். முன்பு நகரங்களில் இருந்த சூழல் இன்று கிராமங்களிலும் உள்ளது. தமிழில் தேர்ச்சி இல்லை. ஆங்கிலம் தரமானது அல்ல. ஆகவே எந்த மொழியிலும் வாசிப்பது அருகியுள்ளது. தமிழ் பேச்சுமொழியாக நீடிப்பதில் முதல்பெரும் பங்களிப்பு சினிமாவுக்கே உள்ளது. உலகமெங்கும் தமிழ்க்குழந்தைகள் தமிழ் பேசுவது சினிமா பார்த்துத்தான். அதற்கே தடைபோடும் குடும்பங்கள் உள்ளன. தமிழ் நாவில் வந்துவிட்டால் ஆங்கில உச்சரிப்பு போய்விடும் என்று என்னிடம் பல பெற்றோர் கவலையுடன் சொன்னதுண்டு. தமிழ்ப்பெருமை பேசுபவர்கள், தமிழ்க்கல்வி பற்றி கொப்பளிப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் வழி கல்விகற்க வைத்தவர்களே. ஆனால் இது தமிழில் மட்டுமுள்ள சூழல் அல்ல. இந்திய மொழிகள் அனைத்திலும் இதுவே நிலைமை. வங்க மக்கள் வங்க மொழி பற்றிய பெருமிதம் நிறைந்தவர்கள். இன்று வங்க மொழியில் வாசிக்கும் இளைஞர்கள் கல்கத்தாவில் மிக அரிதாகிவிட்டனர். பெருமைமிக்க வங்க இலக்கியமே தேங்கிவிட்டது. ஆங்கிலத்தில் எழுதும் வங்காளிகளே புகழுடனிருக்கிறார்கள். மலையாளத்திலும் கன்னடத்திலும் அதுவே நிலைமை. அங்கெல்லாம் ஆங்கிலத்தில் எழுதினாலொழிய அடுத்த தலைமுறையினரைச் சென்றடைய முடியாத சூழல் உருவாகி வருகிறது. இன்னும் ஒரு தலைமுறைக்காலம் கடந்தால் இந்திய மொழி இலக்கியங்கள் வாசிக்கப்படுமா என்பதே சிக்கலான வினாவாக உள்ளது. நான் திரும்பத் திரும்பச் சொல்வது ஒன்றே. ஆங்கிலம் கற்பதை தடுக்கவே முடியாது. அது இன்னும் பெருகும். ஐரோப்பாவிலேயே ஆங்கிலக் கல்வி பல மடங்கு பெருகியுள்ளது. அதுவே அறிவியலின் மொழி, தொழிலின் மொழி, சர்வதேச மொழி. பிறமொழிகள் எளிய பேச்சுமொழியாகச் சுருங்கிவிடவே வாய்ப்பதிகம். ஏனென்றால் ஒரு குழந்தை இரு மொழிகளை பேச கற்றுக்கொள்ளலாம். இரண்டு எழுத்துவடிவங்களை கற்பது பெரும் சுமை. காரணம் இன்று கல்வி மேலும் மேலும் சிக்கலாக, சவாலாக ஆகிக்கொண்டே இருக்கிறது. இன்று ஆங்கிலத்திற்குள்ளேயே பல தனிமொழிகளை (meta language) கற்கவேண்டியுள்ளது. கணிதம், வேதியியல், உயிரியல் அனைத்துக்கும் அவ்வாறு தனிமொழிகள் உள்ளன. அவற்றைக் கற்கும் சவாலே மிகப்பெரியது. அச்சூழலில் இருமொழி கற்பது மும்மொழி கற்பது எல்லாம் இயல்வதே அல்ல. ஆகவே ஒரே எழுத்துரு பல மொழிகள் என்பதே மிக எளிய வழி. இந்திய மொழிகளெல்லாம் ஆங்கில எழுத்துருவில் இருந்தால் அச்சிக்கலை மிக எளிதில் சமாளிக்கலாம். எவர் என்ன சொன்னாலும் அது நிகழத்தான் போகிறது, நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தங்கிலீஷில் தமிழை வாசிப்பது தவறல்ல. ஆனால் தமிழில் எதுவுமே வாசிக்காமலிருப்பதே தவறு. ஆங்கில எழுத்துருவிலேயே ஒருவர் தமிழிலக்கியங்களை வாசிக்கும் சூழல் இருந்தால், வாசித்திருந்தால் ஒன்றும் பிழையில்லை. எந்த மொழியும் அதன் இலக்கியங்கள், சிந்தனைகளால்தான் வாழும். அதன் மரபுசார் இலக்கியமும் தத்துவமும் வாசிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கைமாறப்பட்டு தொடர்ச்சி உருவானால்தான் வாழும். அதுவே மொழியை வாழச்செய்யும் முறையே ஒழிய எழுத்துரு போன்ற அடையாளங்களைப் பேணிக்கொள்ளுவதோ பெருமைபேசி மெய்சிலிர்ப்பதோ அல்ல. உண்மையில் எங்கே மிகையான மெய்சிலிர்ப்பு இருக்கிறதோ அங்கே அந்த மெய்சிலிர்க்கப்படும் விஷயம் அழிகிறது என்றே பொருள். அது அனைவருக்கும் தெரியும். அந்தக் குற்றவுணர்ச்சியை மறைக்கவே அந்த மெய்சிலிர்ப்பும் கண்ணீரும். எதிரிகளுக்கு எதிராக போர்க்குரலெழுப்புபவர்களுக்கு நன்றாகவே தெரியும், அவர்களின் அறிவுசார்ந்த அக்கறையின்மையே மெய்யான எதிரி என. ஜெ https://www.jeyamohan.in/187744/
  5. புத்தகக் கண்காட்சியும் ஐயங்களும் ஜெயமோகன் jeyamohanJanuary 6, 2023 சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவை முப்பது ஆண்டுகளாக வெவ்வேறு வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதன் வண்ணங்கள் எனக்கு இன்றுவரை சலித்ததே இல்லை. தமிழில் அறிவுச்செயல்பாடுக்காக மட்டுமே நிகழும் ஒரு பெருநிகழ்வு இது. ஒவ்வொரு ஆண்டும் எவரேனும் எங்கேனும் எழுதி, வாட்ஸப் செய்திகளாக, மின்னஞ்சல்களாக புத்தகக் கண்காட்சி பற்றிய சில விமர்சனங்கள், எள்ளல்கள் என் காதில் விழுகின்றன. மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறேன். பழையவர்கள் அவற்றை கடந்துசெல்ல அறிந்திருக்கலாம். புதியவர்கள் குழம்பக்கூடும். ஆகவே அவற்றை மிகப்பழையவன் என்ற நிலையில் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது. இலக்கிய சூழலில் சோர்வூட்டும் எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்பவர்கள் நான்கு வகையானவர்கள். இந்நால்வரும் என்றும் இருப்பவர்கள். ஆனால் இன்று சமூக ஊடகங்கள் இவர்கள் குரலெழுப்ப வழியமைக்கின்றன. எண்ணிக்கைபலத்தால் இவர்கள் ஒரு சக்தியாக ஆகியிருக்கிறார்கள். என்றுமில்லாத அளவு இன்று இவர்களின் குரலால் இலக்கியவாதிகளும் வாசகர்களும் சூழப்பட்டிருக்கிறார்கள். அ. பெரிதாக ஏதும் எழுதாமல் அப்படியே ஓய்ந்துபோன சற்று மூத்த எழுத்தாளர்கள். இலக்கியம் என்பது தீவிரத்தால், அர்ப்பணிப்பால் அடையப்படுவது. அத்துடன் இயல்பான கற்பனையும் அறிவாற்றலும் இருக்கவேண்டும். இவர்களுக்கு இரண்டுமிருக்காது. கொஞ்சம் ஏதோ எழுதிப்பார்த்திருப்பார்கள். திசைதிரும்பி அங்கே இங்கே அலைந்திருப்பார்கள். மீண்டு வந்து அமர்வதற்கான திண்ணை என்பது முகநூல். அங்கே மீண்டும் எதையாவது எழுதுவார்கள். ஆனால் கலை கைவிட்டுப்போய்விட்டதென அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆகவே வம்புகளில் ஈடுபடுவார்கள். கசப்புகளையும் அவநம்பிக்கைகளையும் பொழிந்தபடியே இருப்பார்கள். இவர்களின் எதிர்மறை மனநிலை முழுக்க இலக்கியத்தின் வெற்றிகள்மேலும் புதிய எழுச்சிகள் மேலும்தான் இருக்கும். ஆ. இலக்கியத்தில் கவனம் பெறாது போன சிறு எழுத்தாளர்கள்.இவர்கள் தொடர்ந்து எழுதுவார்கள், செயல்படுவார்கள். ஆனால் இலக்கியம் கைவராது. இலக்கியம் என்றல்ல எந்தக்கலையும் அப்படித்தான். அது முயலும் அனைவருக்கும் அமையவேண்டுமென்பதில்லை. பல காரணங்கள். இயல்பான கற்பனைத்திறன்குறைவு, அறிவுநுண்மையின் போதாமை, வாசிப்பின்மை என. பலசமயம் வாழ்க்கைச்சூழலால்கூட ஒருவர் முழுமையாக வெளிப்பட முடியாமலாகும்.அவர்களுக்கு சூழல்மேல் கசப்பும் அவநம்பிக்கையும் இருக்கும். இ. அரசியலாளர்கள். இலக்கியச்சூழலில் அதிகமாகக் கேட்கும் குரல்களில் ஒன்று இத்தரப்பு. இவர்கள் இயல்பிலேயே இலக்கியத்துக்கான மொழிநுண்ணுணர்வும், வாழ்க்கைசார்ந்த பார்வையும் இல்லாதவர்கள். இளமையிலேயே ஓர் அரசியல்சார்பு உருவாகிவிடும். சுயமான சிந்தனை இல்லாத காரணத்தால் அந்த அரசியல் சார்ந்தே சிந்தனையை முன்னெடுத்து இறுக்கமான நிலைபாடாக ஆக்கிக் கொண்டிருப்பார்கள். தமிழ்ச்சூழலில் அரசியலென்பதே குழுமனப்பான்மை, தலைமைவழிபாடுதான். பெரும்பாலும் அதன் உள்ளுறை சாதியும் மதமும் தனிப்பட்ட நன்மைகளும்தான். ஆனால் இவர்களால் பெருந்திரளாக கூட முடியும். கூட்டாக கூச்சலிடமுடியும். அத்துடன் அந்த அரசியலால் இவர்களுக்கு ஓர் அபாரமான தன்னம்பிக்கை உருவாகிவந்திருக்கும். உலகுக்கே வழிகாட்ட, திருத்த, இடித்துரைக்க, கடிந்துகொள்ள, நையாண்டிசெய்ய தாங்கள் தகுதிபடைத்தவர்கள் என நம்புவார்கள். அதை எவராலும் உடைக்க முடியாது. அதை இவர்களில் உருவாக்குவது வழியாகத்தான் அந்த அரசியல்தரப்பின் அடித்தளமே அமைகிறது. இவர்களுக்கு இலக்கியத்துடன் தொடர்பே இல்லை. இலக்கியம் மொழிவழியாக அந்த ஆசிரியன் செய்யும் பயணம், கண்டடைதல் ஆகியவற்றாலானது. இவர்கள் பயணத்திற்கு முன்னரே கண்டடைதலை நடத்தியவர்கள். ஆனால் இவர்கள் இன்றைய சமூக ஊடகச் சூழலால் இலக்கியத்தை நேருக்குநேர் சந்திக்க நேர்கிறது. இவர்களுக்கு இலக்கியம் கண்ணெதிரே தீவிரமாக நிகழ்வது ஒருவகை நிம்மதியின்மையை அளிக்கிறது. இவர்கள் அறிந்தது அரசியல் மட்டுமே. ஆகவே இவர்கள் பார்வையில் எல்லாமே அரசியல்தான். இலக்கியத்தை ஒருவகை அரசியல் என்று புரிந்துகொள்கிறார்கள். இலக்கியம் இவர்களுக்குப் புரிவதில்லை. ஆகவே அது பூடகமான அரசியல் சதி என நினைக்கிறார்கள். அந்த எண்ணத்துடன் இடைவிடாது இலக்கியம் மீது மோதிக்கொண்டே இருக்கிறார்கள். இலக்கியத்தை திரிக்கிறார்கள். தங்கள் விரும்பியதை கண்டடைந்து அதையே அந்த இலக்கியம் சொல்வதாக ஆணையிட்டுச் சொல்கிறார்கள். இலக்கியவாதிகளை முத்திரையடிக்கிறார்கள். அணிதிரள்கிறார்கள், திரட்டமுயல்கிறார்கள். ஈ. இலக்கியப் பாமரர்கள். இவர்களுக்கு வாசிக்கும் வழக்கமெல்லாம் இருப்பல்லை. மிகமிகக்குறைவாகவே எந்த அறிவுசெயல்பாடு பற்றியும் தெரியும். ஆனால் சமூக ஊடகத்தால் இலக்கியத்தை வெறுமே வம்புச்செய்திகளாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் நால்வரும் உருவாக்கும் சில பொதுவான அசட்டுக் கருத்துக்கள் உண்டு. ஓர் இலக்கியவாசகன் இக்கருத்துக்களில் எவற்றையேனும் எவரேனும் சொன்னால் அக்கணமே அவரை அலட்சியம்செய்து விலகிவிடவேண்டும். அவருக்கும் இலக்கியத்திற்கும் எந்த உறவுமில்லை. அவருக்கும் அறிவியக்கத்தில் இடமே இல்லை. அவை இவை. அ. வாசகர்களை விட எழுத்தாளர்கள் ஜாஸ்தியாயிட்டாங்க. எல்லாரும் எழுதறாங்க. வாசகர்கள் எங்கே? தமிழில் எழுதுபவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுக்க அப்படித்தான். தொழில்நுட்பம் அதற்குக் காரணம். ஆனால் அதேபோல வாசிப்பும் பெருகியிருக்கிறது. தமிழகத்தில் எட்டு நகர்களில் பெரும் புத்தகக் கண்காட்சிகள் நடக்குமென முப்பதாண்டுகளுக்கு முன்பு எவர் நினைத்திருக்க முடியும்? பல்லாயிரம் வாசகர்கள் நூல்களை வாங்கி வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முகநூலில் வம்புக்கு வந்து நிற்பவர்கள் அல்ல. மௌனப்பெரும்பான்மை. ஆனால் அவர்களே இலக்கியத்தை தீர்மானிக்கிறார்கள். ஆம், இந்த எண்ணிக்கை போதாது. நம் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் வாசிப்பு இன்னும் பத்துமடங்கு ஆகவேண்டும். ஆனால் இன்று வாசிப்பவர்களே லட்சக்கணக்கானவர்கள். அவரவருக்குரியதை வாசிக்கிறார்கள். ஆன்மிகம், சுயமுன்னேற்றம், பொருளியல், தொழில்நுட்பம், வாழ்க்கைவரலாறு, அரசியல், புனைகதை. அவர்களில் ஒரு சிறுபகுதியே புனைகதை வாசகர். ஆனாலும் இங்கு ஆண்டுக்கு பல ஆயிரம் இலக்கிய நூல்கள் வெளிவந்து விற்கப்படுகின்றன. அவற்றில் ஏற்கப்படுவன மீண்டும் அச்சாகி வெளிவருகின்றன. அந்த போட்டிதான் உயிரின் இயல்பு. மலர்கள் அப்படித்தான் பூத்துக்குலுங்குகின்றன, கனியாகின்றவை சிலவே. விந்துத்துளியில் உயிரணுக்களில் கருவாகின்றது ஒன்றே. ஆகவே நூல்கள் பெருகட்டும். அந்தப் பெருக்கம் வளர்ச்சிதான். அதைக்கண்டு ஏளனம் செய்பவன், ஒவ்வாமை கொள்பவன் அறிவியக்க ஆர்வம் கொண்டவனே அல்ல. ஆ. ஒரு ரெண்டு புக் எழுதினவன்லாம் பெரிய ஆள் மாதிரி புத்தகக் கண்காட்சியிலே அலையறான். உள்ளூர் முனிசிப்பல் கவுன்சிலர் விடைத்து திரிவதை கண்டு ஒரு முனகலை வெளிப்படுத்தும் தெம்பில்லாமல் பம்முகிற, உயரதிகாரியிடம் இளிக்கிற பரிதாபத்திற்குரிய ஆத்மாக்கள்தான் இப்படிச் சொல்கின்றன. ஒரே ஒரு நூல் எழுதியவனும் சரி, நாளை எழுதவிருக்கிறேன் என நம்புபவனும் சரி, வாசகனும் சரி நிமிர்வுகொள்ளட்டும். அதற்கான இடம்தான் புத்தகக் கண்காட்சி. ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தாலே நீங்கள் தமிழகத்தின் மக்கள்தொகையில் லட்சத்திலொருவர் என நினைவுகூருங்கள். அதன்பொருட்டே நீங்கள் பெருமிதம் அடையலாம். வேறெந்த நிமிர்வைவிடவும் அது உயர்வானது. அறிவியக்கத்துடன் தொடர்பில் இருக்கிறேன் என்னும் திமிர் உங்களிடம் இருக்கட்டும். புனிதமான உணர்வு அது. ஆம், நான் வாசகன், நான் எழுத்தாளன் என இங்கு தின்று கழிந்து புணர்ந்து சாகும் இப்பெருந்திரள் நோக்கிச் சொல்லுங்கள். நீங்கள் எங்களை அறியமாட்டீர்கள், ஆனால் உங்களுக்காகவும் நாங்கள் சிந்திக்கிறோம் என்று சொல்லுங்கள். அந்த திமிரை உணரமுடியாதவன் ஒருவகை அற்பன், அவனுக்கு அறிவியக்கத்தில் இடமில்லை. இ. எழுத்தாளர்களை வாசியுங்க, ஆனா தனிப்பட்ட முறையிலே நெருக்கம் வைச்சுக்காதீங்க. அவங்கள்லாம் நல்லவங்க இல்லை இதைச்சொல்லும் அற்பன் தன்னை ஏதோ ஒருவகை புனிதன் என நினைத்துக்கொண்டிருக்கிறான். இவனுக்கு அரசியல்வாதியை கும்பிட, அதிகாரியை பணிய கூச்சமில்லை. எழுத்தாளனிடம் மட்டும் ஒவ்வாமையாம். எழுத்தாளனும் மனிதனே. அவனுக்கும் கொந்தளிப்புகள் இருக்கும். அவனுக்கும் தன்முனைப்பு இருக்கும். ஆனால் எந்த நல்ல வாசகனும் இந்த உலகில் எழுத்தாளனையே தனக்கு அணுக்கமானவனாக கருதுவான். அவனுடன் பேச, அவனுடன் அணுக்கம் கொள்ளவே துடிப்பான். நான் இன்றும் அப்படித்தான் இருக்கிறேன். எந்த எழுத்தாளரையும் தேடிச்சென்று பழகுவதில் எந்த தயக்கமும் எனக்கில்லை. நான் என் வாழ்க்கையில் இதுவரை கண்ட மாமனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்களே. எஞ்சியோர் மானுடசேவைப் பணியாளர்கள். சிந்திப்பவனிடம் மட்டுமே எனக்குப் பேசுவதற்கு இருக்கிறது. என்னுடைய எளிமையான சபைநாகரீகம், ஒழுக்கம் ஆகியவற்றை எழுத்தாளர்களிடம் நான் போடுவதில்லை. எழுத்தாளர் என்னை மதிக்கிறாரா கும்பிடுகிறாரா என்று நான் கவனிப்பதில்லை. எழுத்தாளனிடம் திகழும் ஒன்று உண்டு. சிலரிடம் சுதந்திரம், சிலரிடம் பித்து, சிலரிடம் சிரிப்பு, சிலரிடம் திமிறல், சிலரிடம் கனிவு, சிலரிடம் கனவு… ஏதோ ஒன்று அவனை எழுத்தாளனாக்குகிறது. அவனை பெருந்திரளில் ஒருவனாக, சாமானியனாக அல்லாமலாக்குகிறது. அதுதான் எனக்கு முக்கியம். அவர் என்னைப்போல் சலவைச்சட்டைபோட்டு உபச்சராமொழிகள் பேசி நான் மதிக்கும் ‘பெரியமனிதர்’ ஆக இருக்கவேண்டும் என்பதில்லை. குடித்துவிட்டு என்மேல் வாந்தி எடுத்த ஜான் ஆபிரகாம் நான் கண்ட மாமனிதர்களில் ஒருவர்தான். ஈ. ஆன்லைன்ல புக் வாங்கலாமே, எதுக்கு புத்தகக் கண்காட்சி? ஆன்லைனில் புத்தகம் வாங்குபவர்கள் எவரும் இதைச் சொல்வதில்லை, ஏனென்றால் அவர்கள் மெய்யாகவே புத்தகக் காதலர்கள். இதைசொல்பவர்கள் புத்தக ஒவ்வாமை கொண்டவர்கள். வாசகர்களுக்கு புத்தகங்களை காண்பதே கொண்டாட்டம்தான். ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைவதென்பது தமிழ்ச்சமூகத்தின் மூளையை கண்கூடாக பார்ப்பதுபோல. நம் அறிவியக்கத்தையே ஒரே பார்வையில் பார்ப்பதுபோல. உ. புத்தகங்கள்லாம் விலை அதிகம், மலிவா வித்தா நல்லது. புத்தகங்களை மெய்யாக வாங்கும் எவரும் சொல்வதல்ல இது. இன்று ஒரு நல்ல சாப்பாட்டுக்கு எளிதாக ஐநூறு ரூபாய் ஆகிறது. வீட்டுக்குக் கொண்டுவந்தால் ஆயிரம். ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஒரு நூல் வாழ்நாள் முழுக்க நம்முடன் இருப்பது. ஒன்று கவனித்திருக்கிறேன். புத்தகத்தின் விலை குறைத்து வைக்கப்பட்டால் அது கூடுதலாக விற்பதில்லை. அழகான நூல் விலை கூடுதலென்றாலும் அதுதான் விற்கும். அதுதான் புத்தகக் காதலர்களின் உலகம். வெளியே இருப்பவர்களுக்கு அது புரியாது ஊ. தமிழ்லே தரமான நல்ல நூல்களே இல்லை. அதனாலே வாங்குறதில்லை… சரி, ஆங்கிலத்தில் அண்மையில் என்னென்ன வாங்கி வாசித்தீர்கள் என்று இப்படிச் சொன்ன ஒருவரிடம் கேட்டேன். பெப்பேப்பே என்று ஏதோ சொல்லி சமாளித்தார். (பொதுவாக புத்தகம் பக்கம் தலைவைத்துப் படுக்காத கூட்டம் சொல்லும் பதில்தான். காந்தி, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்கள். ஆம், முழுத்தொகுப்புகள்!) ஆங்கிலத்தில் பல தலைப்புகளில் உள்ள ஏராளமான நூல்கள் தமிழில் இல்லைதான். தமிழில் துறைசார் நூல்கள் பல தரமற்றவையும்தான். ஆனால் ஒருவர் அடிப்படை அறிவுத்தேடல் கொண்டவர் என்றால் தமிழில் வாங்கிக்கொண்டே இருக்கவேண்டிய அளவுக்கு நூல்கள் உள்ளன. தமிழ் வாழ்க்கையை தமிழிலக்கியம் வழியாகவே அறிந்துகொள்ள முடியும். தமிழ்ப்பண்பாடு சார்ந்த மகத்தான நூல்கள் ஏராளமாக உள்ளன. சைவம், வேதாந்தம் சார்ந்து தமிழில் ஏராளமான மூலநூல்கள் உள்ளன. முக்கியமான நூல்களின் மொழியாக்கங்கள் உள்ளன. ஊ. புத்தகம் படிச்சா அறிவாளியா? அதனலே என்ன லாபம்? அதை புத்தகம் படிக்காதவரிடம் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. புத்தகம் படிப்பவனுக்கு அதற்கான விடை தெரியும் ஆகவே புத்தகக் கண்காட்சிக்குச் செல்லுங்கள். திளையுங்கள் https://www.jeyamohan.in/178126/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.