Search the Community
Showing results for tags 'நிலாந்தன்'.
-
கஜனின் அழைப்பு ? - நிலாந்தன் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக கஜேந்திரக்குமார் அறிவித்துள்ளார். அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில் இரண்டு கஜன்களும் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். முதலாவதாக இந்த நகர்வை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது ஏதோ ஒரு அடிப்படையில் தமிழ் ஐக்கியத்துக்கான முயற்சிதான். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது. என்பிபி அரசாங்கம் ஒரு யாப்பை மாற்றக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு யாப்பை அவர்கள் உருவாக்க முயற்சிக்கக்கூடும். அந்தத் தீர்வானது ஏற்கனவே 2015இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில் ஒரு புதிய யாப்பை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் முன்வைக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வை அடிப்படையாகக் கொண்டதாக அமையலாம் என்ற சந்தேகங்களின் பின்னணியில், கஜேந்திரக்குமாரின் மேற்படி அறிவிப்பு வந்திருக்கின்றது. அந்த யாப்புருவாக்க முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சிகளும் பங்களிப்பைச் செய்தன. அது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வு என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறியது. அனுர அரசாங்கம் அந்த தீர்வு முயற்சியைத் தொடரலாம் என்ற சந்தேகம் இப்பொழுது உண்டு. எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் அவ்வாறு யாப்புருவாக்க முயற்சியை முன்னெடுக்கும் பொழுது தமிழ்த் தரப்பானது தன் எதிர்ப்பை வலிமையாக ஒற்றுமையாகக் காட்டவேண்டிய ஒரு தேவை எழுந்திருக்கிறது. அந்த தேவையின் அடிப்படையில்தான் கஜனின் மேற்படி நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய முயற்சிகளில் பெருமளவுக்கு ஒத்துழைக்காத ஒரு கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். எனினும் முன்னணியும் ஈடுபாடு காட்டிய ஐக்கிய முயற்சிகளின்போது உருவாக்கப்படும் ஆவணங்களில், விட்டுக்கொடுப்பற்ற தமிழ் நிலைப்பாடுகளை எடுப்பதற்கும், அந்த ஆவணங்களின் கொள்கைரீதியான தெளிவான சரியான நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் முன்னணிதான் அதிகம் பங்களிப்பை செய்வதுண்டு. தமிழ்மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவு விடயத்திலும் முன்னணியின் உழைப்பு அதிகம் உண்டு. சிவில் சமூகமும் அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு பேரவையாகும். அதன் இணைத் தலைவர்களில் ஒருவராக அப்பொழுது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் இருந்தார். எனவே பேரவையின் முன்மொழிவுக்கு கனதி அதிகமுண்டு. அந்த முன்மொழிவை உருவாக்கும் பொழுது பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் பின்னர் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொண்டன. பேரவையும் செயலிழந்தது. பேரவையின் முடிவுக்கு முன்னணியும் ஒரு முக்கிய காரணம். எனினும் இப்பொழுது அந்த முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் ஒரு ஐக்கியத் தளத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னணி முன்வந்திருக்கிறது. கஜன் அழைப்பு விடுத்திருப்பது பிரதானமாக இரண்டு தரப்புகளுக்கு. ஒன்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி. மற்றது தமிழரசுக் கட்சி. இதில் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் குறிப்பிட்ட சில கட்சிகள் ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவைக்குள் அங்கம் வகித்தன. தீர்வு முன்மொழிவை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் பங்களிப்பை நல்கின. அதேசமயம் அக்கட்சிகள் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருந்தன. கூட்டமைப்பு ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு சேர்ந்து உருவாக்கிய எக்கிய ராஜ்ய என்ற வரைவுக்கும் அவை பங்களிப்பை வழங்கின. அந்தத் தீர்வு முயற்சியில் தமிழ்த் தரப்பில் சுமந்திரன் தீர்மானிக்கும் சக்தியாகச் செயற்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது அவர் அந்த தீர்வு முயற்சியை ஆதரித்துப் பேசியும் இருக்கிறார். அந்த யாப்புருவாக்க முயற்சியில் ஜேவிபியும் பங்காளியாக இருந்ததை அவர் ஒரு சாதகமான அம்சமாகச் சுட்டிக்காட்டியும் இருக்கிறார். எனவே இப்பொழுது கேள்வி என்னவென்றால், அனுர அரசாங்கமானது எக்கிய ராஜ்யவை மீண்டும் தூசுதட்டி எடுத்தால் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன? சுமந்திரனின் நிலைப்பாடு என்ன? ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, இந்தியாவின் கைக்கூலிகள், இந்தியா சொல்வதைக் கேட்டு நடப்பவர்கள் என்று திரும்பத் திரும்ப குற்றஞ்சாட்டி வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அக்கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகித்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொது வேட்பாளரை இந்தியாவின் சூழ்ச்சி என்று வர்ணித்தது. அதில் ஈடுபட்ட சிவில் சமூகத்தவர்களையும் முதுகெலும்பில்லாதவர்கள் ,இந்தியாவுக்கு ஊழியம் செய்பவர்கள் என்று வசைபாடியது. ஆனால் பொது வேட்பாளர் பெற்ற வாக்குகள் தேசியவாத வாக்குகளை என்று பின்னர் கஜேந்திரகுமார் ஒரு விளக்கமும் கொடுத்தார். இப்பொழுது மேற்படி கட்சிகளை பேரவையின் முன்மொழிவின் கீழ் ஒன்றிணையுமாறு அவர் கேட்டிருக்கிறார். ஆயின் அக்கட்சிகள் இப்பொழுது இந்தியாவின் பிடிக்குள் இல்லை என்று அவர் நம்புகிறாரா? ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் கஜேந்திரகுமாரின் அழைப்புக்கு உத்தியோகபூர்வமாக பதில் எதையும் கூறியிருக்கவில்லை கடந்த 15 ஆண்டுகளில் ஐக்கிய முயற்சிகளுக்கு பெரும்பாலும் ஆதரவை வழங்காத ஒரு கட்சி இவ்வாறு அழைப்பு விடுத்திருப்பது சாதகமான ஒரு மாற்றம்தான். கடந்த 15ஆண்டுகளிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை பெரும்பாலும் சிவில் சமூகங்கள்தான் முன்னெடுத்திருக்கின்றன. மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயரின் முன்முயற்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பில் இருந்து தொடங்கி, தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் பொதுக் கட்டமைப்பு வரையிலுமான பெரும்பாலான ஐக்கிய முயற்சிகளின் அனுசரணையாளர்களாக சிவில் சமூகங்களே செயற்பட்டிருக்கின்றன. தமிழ்மக்கள் பேரவை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி,பல்கலைக்கழக மாணவர்கள் தலையிட்டு உருவாக்கிய 13 அம்ச ஆவணம், 2021இல் ஐநாவுக்கு எழுதிய கூட்டுக் கடிதம், அதன்பின் இந்தியச் சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழ் கைதிகளை விடுவிக்குமாறு கேட்டு தமிழக முதல்வருக்கு எழுதப்பட்ட கூட்டுக் கடிதம், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தியமை ஆகிய பெரும்பாலான ஐக்கிய முயற்சிகள் அனைத்தின் பின்னணியிலும் சிவில் சமூகங்கள்தான் அனுசரணை புரிந்தன. அவ்வாறு மக்கள் அமைப்புகளின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்தைத்தான் இப்பொழுது கஜேந்திரகுமார் ஒன்றிணைவுக்கான அடிப்படையாக எடுத்திருக்கிறார். இந்த முயற்சிகளின் நோக்கம் அனுர அரசு கொண்டுவரக்கூடிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை தமிழ்த் தரப்பு ஐக்கியமாக எதிர்கொள்வதே. அது நல்ல விடயம். அதைப் பாராட்ட வேண்டும்.ஆனால் அந்த ஆவணத்தை உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை இப்பொழுது இல்லை. அது செயல்படாத ஐந்தாண்டு கால இடைவெளிக்கு பின் தமிழ் மக்கள் பொதுச் சபை என்ற கட்டமைப்பு உருவாகியது. தமிழ்மக்கள் பொதுச்சபையின் முன்னெடுப்பினால் தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இப்பொழுது அது செயல்படுவதில்லை. கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் மத்தியில் தோன்றிய மக்கள் அமைப்புகள் ஒரு கட்டத்துக்குப் பின் தொடர்ச்சியாக செயல்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமைப் பேரவை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சி இயக்கம், தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஆகிய அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பின் தேங்கியிருக்கும் ஒரு நிலைமையை காண்கிறோம். ஏன் ? ஏனென்றால்,சிவில் சமூகங்களுக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. சிவில் சமூகங்கள் கட்சிகளைப்போல செயல்பட முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பிலிருந்து சிவில் சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அது. முழு நேர அரசியற் செயற்பாட்டாளர்களைக் கொண்ட, அர்ப்பணிப்புமிக்க ஒரு அரசியல் இயக்கம்தான் இப்பொழுது தமிழ்மக்களுக்கு தேவை. அந்த அரசியல் இயக்கத்தால் வழி நடத்தப்படும் ஒரு தேர்தல் அரசியலே தமிழ் மக்களை சரியான வழியில் செலுத்தும். சிவில் சமூகங்கள் பேராசிரியர் ஜெயதேவ உயங்கோட கூறுவதுபோல அரசியல் சமூகத்தின் மீது “தார்மீகத் தலையீட்டைச்”செய்யலாம். ஆனால் தேர்தல் நடவடிக்கைகளில் கட்சிகளைப்போல ஈடுபடுவது என்றால் அதற்கு அரசியல் இயக்கங்கள்தான் பொருத்தமானவை. சிவில் சமூகங்கள் எப்பொழுதும் தளர்வான கட்டமைப்பைக் கொண்டவை. சிவில் சமூகங்களில் பல்வேறு வகையினர் இருப்பார்கள். அரசு சார்பற்ற நிறுவனங்களின் நிதியில் இயங்குபவை, தூதரகங்களோடு உறவை வைத்திருப்பவை, கட்சிகளோடு நேரடியாகச் சம்பந்தப்பட விரும்பாதவை, கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தமது யாப்பில் எழுதி வைத்திருப்பவை… போன்ற பல வகைப்பட்ட சிவில் சமூகங்கள் உண்டு. இவ்வாறான சிவில் சமூகங்களின் கூட்டுக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழ்மக்கள் பொதுச் சபையானது ஒரு தேர்தல்மைய அமைப்பு அல்ல என்பதனை அந்த அமைப்பின் பிரதான நிகழ்வுகளின் போதும், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுதும் மிகத் தெளிவாகத் திரும்பத் திரும்ப கூறப்பட்டது. தமிழ்மக்கள் பொதுச்சபையின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் எல்லாவற்றிலும் அதைக் காணலாம். இந்த வரையறைதான் ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலை கையாள முடியாது என்று தமிழ்மக்கள் பொதுச்சபை அறிவிக்க முக்கிய காரணங்களில் ஒன்று. சிவில் சமூகங்களின் கூட்டிணைவு ஒரு தளர்வான அமைப்பாகவே இருக்கும். அது கட்சிபோல செயல்பட முடியாது. கட்சிபோல செயல்படுவதென்றால், அல்லது தேர்தலில் நேரடியாக ஈடுபடுவது என்றால், அதற்குப் பலமான அரசியல் இயக்கம் தேவை. சிவில் சமூகங்களுக்கு ஊடாக தம்மை பலப்படுத்திக் கொண்டு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு. அப்படிப்பட்டவர்கள் சிவில் சமூகங்களில் இருந்து விலகி கட்சிகளில் இணைந்துதான் தேர்தல் கேட்டார்கள் .சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளாக தேர்தல் கேட்கவில்லை. எனவே இந்த இடத்தில் தெளிவான பிரிகோடு இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை ஏற்கனவே திரும்பத்திரும்பத் தெரிவித்திருந்தது. இப்படிப்பட்டதோர் கட்சி மற்றும் சிவில் சமூகப் பின்னணிக்குள்,தேர்தல் முடிந்த கையோடு,கட்சிகளை ஒரு மேசையில் அமர்த்த சிவில் சமூகங்கள் எவையும் முயற்சிக்காத ஒரு வெற்றிடத்தில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதாவது ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய முயற்சிகளுக்கு எதிராக காணப்பட்ட கட்சி,ஒரு புதிய ஐக்கிய முயற்சிக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது. தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்த அழைப்பு வந்திருக்கலாம். அவர்களுக்கு நெருக்கமான சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆலோசனையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எதுவாயினும் முன்னணியின் ஐக்கியத்துக்கு எதிரான முன்னைய நிலைப்பாடுகளை தூக்கிப்பிடிக்க இது நேரமல்ல. கஜேந்திரகுமாரின் அழைப்பு காலத்தின் தேவை. கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் கட்சிகளின் மீது செல்வாக்கை பிரயோகிக்கக்கூடிய மக்கள் அமைப்புகள் இல்லாத ஒரு வெற்றிடத்தில், ஒரு கட்சியே முன்வந்து அந்த அழைப்பை விடுப்பது தவிர்க்கமுடியாதது. இறந்த காலத்தில் இருந்து அக்கட்சி பாடங்கற்றிருப்பதை வரவேற்கலாம். ஒரு ரஷ்ய பழமொழி உண்டு “கடவுளுக்கு உள்ள பிரதான பிரச்சனை என்னவென்றால்,மனிதர்களை வைத்துத்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருப்பது” என்று. தமிழ் அரசியலுக்கும் அது பொருந்தும். இருக்கிற கட்சிகளை வைத்துச் சாத்தியமான ஐக்கியத்தைத்தான் கட்டியெழுப்பலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தோடு இருக்கும் என்பிபி அரசாங்கம் ஒரு தீர்வை நோக்கி முயற்சித்தால், அதை எதிர்கொள்ள அப்படியொரு சாத்தியமான ஒருங்கிணைவு அவசியம். https://www.nillanthan.com/7011/
-
மாவீரர் நாள் 2024 : மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் – நிலாந்தன்! December 1, 2024 நான்கு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் திண்ணை விருந்தினர் விடுதியில் ஒரு தூதரகத்தின் இரவு விருந்தில் கலந்து கொண்டேன். எனது மேசையில் மூத்த ஊடகவியலாளர்கள் இருவரும் ஊடக முதலாளி ஒருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் கட்சி ஒன்றின் முக்கியஸ்தரும் அமர்ந்திருந்தார்கள். எங்களோடு இருந்து கதைத்துக்கொண்டிருந்த ஒரு ராஜதந்திரி என்னைப் பார்த்துச் சொன்னார் ” எல்லா ஈழத் தமிழர்களின் மனதிலும் ஒரு நாடு என்ற கனவு உண்டு” இப்படிக் கூறிவிட்டு அருகில் இருந்த அந்தக் கட்சிப் பிரமுகரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சொன்னார் “இதோ இவருடைய தலைவர் அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவரிடமும் அந்தக் கனவு உண்டு” ஆம். அந்தக் கனவு எல்லா ஈழத் தமிழர்களிடமும் இருப்பதால்தான் அந்தக் கனவைக் கட்டியெழுப்பிய தியாகிகளை அவர்கள் எல்லா இடர்களின் மத்தியிலும் நினைவு கூர்கிறார்கள். இம்முறை மாவீரர் நாளையொட்டி போலீசார் கடந்த ஆண்டுகளில் செய்வதைப் போல நீதிமன்றத்திற்கு போய் தடை உத்தரவுகளை பெற்றுக் கொண்டு வரவில்லை. எனினும் அம்பாறையில் போலீசார் சில நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் நினைவுப் பொருட்களுக்குத் தடை என்று அறிவித்திருந்த போதிலும், பெரும்பாலான சிறிய மற்றும் பெரிய தமிழ்ப் பட்டினங்களில் மாவீரர்களின் பாடல்கள் அனைத்தும் ஒலிக்கவிடப்பட்டன. உட்கிராமங்களில் மக்கள் கூடும் இடங்களிலும் பாடல்களைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அடர் மழை பொழிந்தது. வெள்ளம் பெருகி சில இடங்களில் பாதைகளை மூடியது. புயல் வரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது. எனினும் மழை விட்டிருந்த இடையூட்டுக்குள் மக்கள் துயிலுமில்லங்களை நோக்கிக் குவிந்தார்கள். குடைகளின் கீழே சுடர்களை ஏற்றினார்கள். ஆம். அவர்கள் தமது தேசக் கனவைக் கட்டியெழுப்பப் புறப்பட்டவர்களை ஒரு தேசமாக நினைவு கூர்ந்தார்கள். “அதிகாரத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம்தான்” என்று மிலன் குந்ரோ- Milan Kundera- கூறுவார். நினைவுகளின் போராட்டம் அல்லது மறதிக்கு எதிரான போராட்டம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசமாகத் திரள்வதன் ஒரு பகுதி. நீதிக்கான போராட்டத்தின் ஒரு பகுதி. தமிழ் மக்கள் எதை எதை மறக்கவில்லை? அல்லது மறக்கக் கூடாது? தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகத் தங்களைத் தியாகம் செய்தவர்களை மறக்கக்கூடாது. அதேசமயம் அந்த தியாகியின் இழப்பால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களையும் மறந்துவிடாதிருக்க வேண்டும். தியாகிகளின் வீட்டில் அடுப்பு எரிகின்றதா? அந்தத் தியாகியின் வீட்டுக்கூரை மழைக்கு ஒழுகுகின்றதா? அந்த தியாகியின் முதிய பெற்றோர் இப்பொழுது யாரோடு இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள்? அந்த தியாகியின் மனைவி இப்பொழுது எங்கே? அவருடைய வருமான வழி என்ன? அந்த தியாகியின் பிள்ளைகள் ஒழுங்காக படிக்கிறார்களா? போன்ற எல்லா விடயங்களையும் மறந்துவிடாமல் கவனிக்க வேண்டும். இரண்டாவதாக, அந்தத் தியாகியோடு போர்க்களத்தில் நின்றவர்கள், கையைக் காலைக் கொடுத்தவர்கள், கண்ணைக் கொடுத்தவர்கள், இடுப்புக்குக் கீழ் இயங்காதவர்கள்,சக்கர நாற்காலிகளில் வாழ்பவர்கள், இப்பொழுதும் படுக்கையில் கிடப்பவர்கள், இப்பொழுதும் உடல் முழுவதும் சன்னங்களைக் காவிக்கொண்டு திரிபவர்கள், என்னவென்று தெரியாத நோய்களைக் காவிக் கொண்டு திரிபவர்கள்…ஆகிய முன்னாள் இயக்கத்தவர்களையும் மறக்கக்கூடாது. இந்த நாட்டிலேயே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தரப்பு -most vulnerable-அவர்கள்தான். அவர்களிற் சிலர் கடந்த 15 ஆண்டுகளாக தேர்தல் கேட்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆறு பேர் வெவ்வேறு கட்சிகளில் தேர்தல் கேட்டார்கள். ஒருவரும் வெற்றி பெறவில்லை. காலை இழந்த ஒரு பெண்ணுக்கும் வெற்றி கிடைக்கவில்லை. அந்த முன்னாள் இயக்கத்தவர்களில் யாருக்குமே தமிழ் மக்கள் வெற்றியைக் கொடுக்கவில்லை. ஏன்? ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம் தேர்தல் கேட்கக்கூடாது என்று தமிழ் மக்கள் நம்புகிறார்களா? அல்லது, இந்த விடயத்தில் தமிழ் மக்களுக்கு மறதி அதிகமா? அல்லது முன்னாள் இயக்கத்தவர்கள் தேர்தல் அரசியலின் கள்ளச் சூத்திரங்களைக் கற்றுத் தேறவில்லையா? ஒவ்வொரு ஆண்டும் துயிலும் இல்லங்களில் சிந்தப்படும் கண்ணீர் யாருக்கு வாக்காக மாறுகிறது? தியாகிகளை நினைவு கூர்வது என்பது, அந்த தியாகிகளோடு போர்க்களத்தில் நின்றவர்களை, போராட்டத்தில் தமது இளமையை, தமது வயதுகளை, தமது கல்வியை, அவயவங்களை இழந்தவர்களையும் மறந்து விடாமல் இருப்பதுதான். மூன்றாவது,போராடப்போய் சிறை வைக்கப்பட்டவர்களை,காணாமல் ஆக்கப்பட்டவர்களை, அவர்களுக்காகப் போராடும் முதிய அம்மாக்கள் அப்பாக்களை, போரினால் விதவைகளாக்கப்பட்டவர்களை மறந்துவிடாதிருக்க வேண்டும். போர் விதவைகள் கிட்டத்தட்ட 90000 பேர் உண்டு. தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது போரினால் யார் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை தூர்ந்துபோனதோ, யாரெல்லாம் மீண்டெழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையை, வாழ வேண்டும் என்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுந்தான். நாலாவது, 2009ஐ உடனடுத்த ஆண்டுகளில் நினைவு நாட்களை ஒழுங்குபடுத்தியது அரசியல் கட்சிகள்தான். அவர்களால்தான் அப்பொழுது அதைத் துணிந்து செய்ய முடிந்தது. இப்பொழுதும் நினைவு கூரும் களங்களின் பின் கட்சிகள் உண்டு. நினைவிடங்களில் கூடும் மக்களின் கூட்டுத் துக்கத்தை கொத்து வாக்காக எப்படித் திரட்டுவது என்பது அவர்களுடைய பிரச்சினை. ஆனாலும் மறதிக்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்கு ஒரு பங்கு உண்டு. அதே சமயம் அவர்களுடைய அரசியல் முதலீடும் தமிழ் மகாஜனங்களின் மறதி தான். 2009க்கு முன்பு தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதி தியாகத்துக்குத் தயாராக இருப்பது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அடிப்படைத் தகுதி பிழைக்கத் தெரிந்திருப்பது. இந்தத் தகைமை வேறுபாட்டுக்குப் பின்னால் உள்ள சீரழிவை தமிழ் மக்கள் மறந்து விடாமல் இருக்க வேண்டும். தமிழ்க் கட்சிகளுக்கு தமிழ் மக்களின் நினைவும் தேவை; மறதியும் தேவை. தமிழ் மக்களின் மறதியின் மீது அதிகம் வெற்றிகரமாக அரசியல் செய்வது தமிழரசுக் கட்சிதான். கடந்த 15 ஆண்டுகளாக தலைவராக இருந்த சம்பந்தர் ஒவ்வொரு பெருநாள் திருநாளின் போதும் குடுகுடுப்பைச் சாத்திரக்காரனைப் போல அல்லது சுயாதீன திருச்சபையின் போதகரைப் போல அருள் வாக்குக் கூறிக்கொண்டிருந்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும் என்றெல்லாம் கூறினார். எதுவும் வரவில்லை. சம்பந்தரும் இப்பொழுது இல்லை. ஆனால் தமிழ் மக்கள் அதையெல்லாம் மறந்துபோய் இந்த முறை தமிழரசுக் கட்சிக்கே அதிகம் வாக்குகளைக் கொடுத்தார்கள். தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் மறதியை வைத்து விளையாடுகிறது என்பதனை எப்பொழுதும் சுட்டிக்காட்டுவது, பிரதானமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களின் மறதிக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்பது அந்தக் கட்சிதான். அதே சமயம் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏகபோக வாரிசாக தன்னைக் காட்டிக்கொள்ளப் பார்க்கின்றது. நினைவு நாட்களைத் தத்தெடுக்கப் பார்க்கின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அந்த கட்சியின் செயலாளர் கஜேந்திரன் ஒரு காணொளியில் கூறுகிறார்…. ஏனைய எல்லா கட்சிகளையும் விடவும் சாகத் தயாரான கட்சி தாங்கள்தான் என்று. ஒரு கட்சி தனது மக்களுக்காக சாகத் தயாராக இருக்கிறது என்பதனை யாராவது அந்த கட்சியின் உறுப்பினர் செத்துத்தான் நிரூபிக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்காகப் போராடி யாரும் அப்படி உயிரைத் துறந்ததாகத் தெரியவில்லை. தன்னை ஏனைய கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தான் மட்டும் சாகத் தயாரான கட்சி என்று முன்னணி கூறிக்கொள்கிறது. ஆனால் 3லட்சத்துக்கும் குறையாத போராளிகளும் மக்களும் உயிரைக் கொடுத்த ஒரு போராட்டத்தை கடந்து வந்த இனம் இது என்பதை அந்தக் கட்சி மறந்து விட்டது. இதுவும் தமிழ் மக்களின் மறதியின் மீது செய்யப்படும் அரசியலே. இவ்வாறு தமிழ் மக்களின் மறதியின் மீது அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகள், நினைவு நாட்களை வைத்துச் சூதாடுவதைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் மறதிக்கு எதிராகப் போராட வேண்டும். எனவே மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் என்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசத்தைக் கட்டியெழுப்பிய நினைவுகளைத் தொடர்ந்தும் தேசத்தை பிணைக்கும் நினைவுகளாகப் பேணுவதுதான். நினைவின் பசை கொண்டு ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது. மேலும், இறந்த காலத்தை மறந்து விடாமல் இருப்பது என்பது, இறந்த காலத்திலேயே வாழ்வது அல்ல. காயங்களோடு வாழ்வது அல்ல. துக்கத்தில் உறைந்து கிடப்பதும் அல்ல. மாறாக, இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்வது. மகத்தான வீரமும் மகத்தான தியாகமும் எங்கே எப்படித் தோல்வியுற்றன என்பதைக் கற்றுக்கொள்வது. கூட்டுத் துக்கத்தை, கூட்டுக் காயங்களை,கூட்டு மனவடுக்களை,கூட்டுத் தோல்வியை, கூட்டு அவமானத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவது. அந்த அரசியல் ஆக்க சக்தியை நீதிக்கான போராட்டத்தின் உந்து விசையாக மாற்றுவது. நிலாந்தன் https://www.nillanthan.com/6996/
-
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி? - நிலாந்தன் adminNovember 24, 2024 அண்மையில் நடந்த “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்” இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கைக்கான சீனத் தூதர். இந்த வாரம் அவர் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்தார். நடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு தமிழர்களை நோக்கி வந்த முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் அவர். யாழ்ப்பாணத்தில் அவர் யாழ். ஊடக அமையத்துக்கு விஜயம் செய்து அங்கே ஒரு ஊடகச் சந்திப்பையும் நடத்தினார். ஒரு நாட்டின் தூதுவர் நாட்டின் ஒரு மாவட்டத்தில் உள்ள “பிரஸ் கிளப்புக்கு” தானாக வந்து ஊடகவியலாளர்களை சந்திப்பது என்பது பொதுவானது அல்ல. அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களில் ஒன்றுதான் மேலே உள்ளது. இனப்பிரச்சினைக்கு சீனா முன்வைக்கும் தீர்வு என்ன? என்று கேட்கப்பட்ட பொழுது, அவர் மேற்கண்ட பதிலைச் சொன்னார். அந்த ஊடகச் சந்திப்பின் தொடக்கத்தில் அவர் பின்வருமாறு சொன்னார்.. ”இலங்கை வரலாறிலேயே முதற் தடவையாக தெற்கை மையப்படுத்திய கட்சியான என்பிபிக்கு -தேசிய மக்கள் சக்திக்கு- யாழ்ப்பாண மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்”என்று. மேலும், தனது யாழ் விஜயத்தின் போது தான் பருத்தித்துறைக்குச் சென்றதாகவும் அங்கே, “பல்வகைமைக்குள் ஒற்றுமையே சிறீலங்காவின் பலம் ” என்ற வாசகத்தைப் பார்த்ததாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த வாசகம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது சீனா, என்பிபியின் வெற்றியை ஆர்வங் கலந்த எதிர்பார்ப்போடு பார்க்கின்றது. அந்த வெற்றியில் தமிழ்மக்கள் பங்காளிகளாக இணைந்திருப்பதை மிகவும் எதிர்பார்ப்போடு பார்க்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வுக்குரிய அடிப்படைகளை அது பலப்படுத்தும் என்றும் சீனா கருதுவதாகத் தெரிகிறது. மேலும் முக்கியமாக என்பிபியின் வெற்றியானது சீனாவுக்கு சௌகரியமான ஒர் அரசியற் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக சீனா கருதுவதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் சீனத் தூதர் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்திருக்கிறார். இதில் முதலீட்டுத் துறையோடு ஈடுபாடுடையவர்கள், தொழில் முனைவோர் போன்றவர்கள் அதிகமாககு காணப்பட்டிருக்கிறார்கள். இதற்குமுன் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது இங்குள்ள கருத்துருவாக்கிகளையும் சந்தித்தார். அதில் சில கருத்துருவாக்கிகள் உரையாடலின் மையத்தை இனப்பிரச்சினையை நோக்கிக் குவித்தார்கள். இலங்கைத்தீவின் வளர்ச்சிக்கு சீனா எப்படி உதவ முடியும் என்ற உரையாடலில் இருந்த கவனக்குவிப்பு இனப்பிரச்சினை மீது மாற்றப்பட்டது. ஆனால் இம்முறை அவ்வாறான விவகாரங்களைத் தொடக்கூடிய கருத்துருவாக்கிகள் சந்திப்பில் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள். சிவில் சமூகங்களை சந்தித்தபொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான கேள்விகளை சீனத் தூதுவர் பெருமளவுக்கு தவிர்க்க முயற்சித்திருக்கிறார். ஆனால் ஊடகச் சந்திப்பில் அவர் என்பிபியின் வெற்றிக்கு தமிழ் மக்கள் பங்களித்தமையை சிலாகித்துப் பேசியுள்ளார். சீனா மட்டுமல்ல, எம்பிபியின் மூத்த தலைவராகிய ரில்வின் சில்வா கூறுகிறார், வடபகுதி மக்கள் இனவாதத்தைப் புறக்கணித்துவிட்டு தமக்கு வாக்களித்திருப்பதாக. சட்டத்தரணி பிரதீபா மகாநாம என்பவர் கூறுகிறார், “இனி வரும் காலங்களில் ஜெனிவாவில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாது” என்று. விமல் வீரவன்ச கூறுகிறார், இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்குத் தாம் எதிரானவர்கள் என்ற செய்தியை தமிழ் மக்கள் வழங்கியுள்ளதாக. ஒற்றை ஆட்சிக்குள் அனைத்து இன மக்களும் சம உரிமை கிட்டும் வகையிலான பயணத்தைத் தொடர வேண்டும் என்பதற்குரிய ஆணையே அதுவென்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேற்சொன்ன கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? என்பிபியின் வெற்றியை குறிப்பாக அதற்கு தமிழ்மக்கள் வழங்கிய ஆதரவை வைத்து இன முரண்பாடுகள் தணிந்து விட்டதாக அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. என்பிபிக்குக் கிடைத்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது அசாதாரணமானது. அது மூவினத்தன்மை பொருந்தியது. ஆனால் அதன் பொருள் தமிழ் மக்கள் இந்தமுறை மட்டும்தான் அவ்வாறு தெற்கில் உள்ள ஓர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளார்கள் என்பதல்ல. கடந்த 2015ல் ரணில் மைத்திரி கூட்டரசாங்கத்துக்கும் தமிழ்மக்கள் ஆதரவை வழங்கினார்கள். ஆனால் அந்த ஆதரவை அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வழங்கினார்கள். இந்தமுறை வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் நேரடியாக அரசாங்கத்துக்கே அந்த ஆதரவை வழங்கியதுதான். இந்த வித்தியாசத்தைத்தான் சீனத் தூதர் எதிர்பார்ப்போடு பார்க்கிறாரா? இம்முறை ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் என்பிபிஐ நோக்கிப் பெயர்ந்திருக்கின்றன. ஆனால் எனது கட்டுரைகளில் திரும்பத்திரும்பக் கூறப்படுவதுபோல, அவை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் என்பிபி முன்வைத்த வாக்குறுதிகளுக்காக வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல. அவை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவாக வெறுப்பும் சலிப்பும் அடைந்த மக்கள் வழங்கிய வாக்குகள்தான். அண்மையில் பிபிசி தமிழ்ச் சேவை தமிழ் மக்களைப் பேட்டி கண்ட பொழுது அது தெளிவாக வெளிப்பட்டது. எனவே என்பிபிக்கு கிடைத்த வாக்குகள் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக வழங்கப்பட்ட மக்கள் ஆணை அல்ல. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது அரசியலமைப்பை மாற்றத் தேவையான அடிப்படைகளில் ஒன்று. அந்த அடிப்படையில் சிந்தித்தால், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு ஒரு புதிய யாப்பை உருவாக்க என்பிபி தயாரா ? இங்கு ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமே இனப்பிரச்சினையைத் தீர்த்து விடாது. மாறாக, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான “பொலிடிக்கல் வில்” அதாவது அரசியல் பெரு விருப்பம் என்பிபியிடம் இருக்க வேண்டும். அதை மேலும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், மகாவம்ச மனோநிலைக்கு வெளியே வந்து தமிழ் மக்கள் ஏற்கத்தக்க ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதுதான் உண்மையான மாற்றம். இதற்கு முன்னிருந்த சிங்கள ஆட்சியாளர்களிடம் இருக்காத அந்த அரசியல் பெரு விருப்பம் என்பிபியிடம் உண்டா? இந்தவிடயத்தில் என்பிபியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைதான் அதற்குத் தடையாகவும் இருக்கப் போகிறது. ஏனெனில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை புரட்சிகரமானது அல்ல. 2019இல் மூன்று விகித வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி 2024 இல் ஜனாதிபதி தேர்தலில் 42 விகித வாக்குகளைப் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றி இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இந்த எழுச்சியானது சிங்கள பௌத்த கூட்டு மனோநிலையை அரசியல் மயப்படுத்தியதால் கிடைத்த எழுச்சியல்ல. முன்னைய ஆட்சியாளர்களின் மீது ஏற்பட்ட வெறுப்பினால் ஏற்பட்ட கோப எழுச்சி. ராஜபக்சங்களுக்கு வாக்களித்த அதே சிங்கள வாக்காளர்கள்தான் அவர்களை ஓட ஓட விரட்டினார்கள். அதே வாக்காளர்கள்தான் இப்பொழுது என்பிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறார்கள். அதாவது முன்னைய ஆட்சியாளர்கள் மீது வெறுப்படைந்த சிங்கள முஸ்லிம், மலையக வாக்காளர்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் மீது நம்பிக்கையிழந்த ஒரு பகுதி தமிழ் வாக்காளர்களும் அள்ளிக் கொடுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை அது. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான மக்கள் ஆணையல்ல. என்பிபி அந்த வெற்றியின் கைதியாக இருக்குமா? அதாவது இறந்த காலத்தின் கைதியாக இருக்குமா? அல்லது வருங்காலத்தின் துணிச்சலான புரட்சிகரமான தொடக்கமாக இருக்குமா? சீனத் தூதர் தனது ஊடகச் சந்திப்பில் சுட்டிக்காட்டிய அந்த வாசகங்கள் எழுதப்பட்ட சீமெந்துப் பலகை பருத்தித்தறையில் உள்ளது. சிங்கக் கொடிக்குக் கீழே அந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது. அது படைத்தரப்பால் நிறுவப்பட்ட ஒரு விளம்பரப் பலகை. அதுபோன்ற பல தமிழ்ப் பகுதிகளில் உண்டு. குறிப்பாக 2009இல் ஆயுத மோதல்கள் முடிந்த கையோடு “ஒரே நாடு ஒரே தேசம்” என்ற சுலோகம் ஒரு வெற்றிக் கோஷமாக முன்வைக்கப்பட்டது. பல படை முகாம்களின் முகப்பில் அல்லது மதில்களில் அது எழுதப்பட்டது. இப்பொழுது பல்வகைமைக்குள் ஐக்கியம் என்ற வாசகம் மிஞ்சியிருக்கிறது. பலாலி பெருந் தளத்தின் வடமாராட்சி எல்லை என்று வர்ணிக்கத்தக்க ஒரு திருப்பத்திலும் இந்த வாசகம் உண்டு. தமிழ் மக்களின் நிலத்தைப் பிடித்து வைத்திருக்கும் ஒரு படைத்தரப்பின் சுலோகங்கள் அவை. பல்வகைமைக்குள் ஒற்றுமை என்று அங்கு கூறப்படுவது அதன் மெய்யான பொருளில் சிங்கக் கொடியின் கீழ் ஒரே நாடு ஒரே தேசம் என்பதுதான். சீனத் தூதுவர் அதை உதாரணமாகக் காட்டுகிறார். ரில்வின் சில்வாவின் கருத்துக்களும் அதைத்தான் நிரூபிப்பவைகளாகக் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் இனவாதத்தைப் புறக்கணித்திருப்பதாக அவர் கூறுகிறார். தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடு என்பது இனவாதம் அல்ல. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் தமிழ் மக்களை ஒடுக்கியது. தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்க முற்பட்டது. அதற்கு எதிரான போராட்டத் தத்துவந்தான் தமிழ்த் தேசியவாதம். அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ஒடுக்குமுறைக்கு எதிரானது என்பதனால் அது முற்போக்கானது என்று மார்க்சியர்கள் கூறுவார்கள். எனவே தமிழ்த்தேசிய வாதம் இனவாதம் அல்ல. அதை இனவாதம் என்று கூறுவதுதான் சுத்த இனவாதம். அதுபோலவே ஜனாதிபதி அனுரவின் புதிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது உரையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்துத் தெளிவான அரசியல் அடர்த்தி மிக்க வாக்குறுதிகள் இல்லை. மாறாக மேலோட்டமான பொத்தாம் பொதுவான சொல்லாடல்தான் உண்டு. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் பெரு விருப்பம் என்பிபியிடம் உண்டு என்று நம்பத்தக்க துணிச்சலான வார்த்தைப் பிரயோகங்கள் அங்கு இல்லை. சீனத் தூதுவர் தன்னையறியாமல் சுட்டிக்காட்டியதுபோல சிங்கக் கொடியின் கீழ் பல்வகைமைக்குள் ஒற்றுமை? https://www.nillanthan.com/6983/
-
நாடாளுமன்றத் தேர்தல் 2024 : தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் - நிலாந்தன் தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என் பி பி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது ஒரே தென்னிலங்கைக் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர். என்பிபி இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பி தமிழ் மக்கள் அதற்கு வாக்களிக்கவில்லை. பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதன் விளைவே அது. தமிழ்ச் சமூகமானது ஒருவர் மற்றவரை நம்பாத; தன் பலத்தை தானே நம்பாத; ஒருவர் மற்றவரை சந்தேகத்தோடு பார்க்கின்ற; ஒருவருக்கு எதிராக மற்றவர் சூழ்ச்சிக் கோட்பாடுகளைப் புனைகின்ற; சமூகத்தில் மினுங்கிக் கொண்டு தெரியும் ஒருவரை சந்தேகத்தோடு வெறுப்போடு அணுகுகின்ற; வெறுப்பர்கள் அதிகம் நிறைந்த; கூட்டுணர்வு குறைந்த; தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயரும் வேட்கை மிகுந்த ஒரு சமூகமாக மாறி வருகின்றது. அவ்வாறு தூர்ந்து கொண்டு போகும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு. தன் பலம் உணர்ந்து ஒருவர் மற்றவரை நம்பிக்கையோடு பார்க்கின்ற; உருகிப்பிணைந்த ஒரு திரட்சியாக தமிழ் மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உண்டு. ஆனால் தேசியவாத அரசியல் என்றால் மக்களைத் திரளாக்குவதுதான் என்ற எளிமையான பேருண்மையை விளங்கிக் கொள்ளாத அல்லது அதை விளங்கிக் கொள்ளத் தேவையான பண்பாட்டு இதயத்தைக் கொண்டிராத; தேசிய கூட்டுணர்வைக் கொண்டிராத, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவே, அதிகரித்த சுயேச்சைகளும் கட்சிகளும் ஆகும். இதனால் ஏற்பட்ட சலிப்பினாலும் விரக்தியினாலும் வெறுப்பினாலும் ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் என்பிபியை நோக்கிப் போனார்கள். நாடாளுமன்றத்தில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது திருப்பகரமான மாற்றங்களைச் செய்யப் போதுமான ஒரு பெரும்பான்மை. அப்படிப் பார்த்தால் என்பிபி இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் புரட்சிகரமான முடிவை எடுக்குமா? அல்லது மகாவம்ச மனோநிலையின் கைதியாக மாறி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தானே தோற்கடிக்குமா? இலங்கைத் தீவியின் எந்த ஒரு தேர்தல் வெற்றியும் எப்பொழுது முழு வெற்றியாக மாறுகிறது என்றால், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் போதுதான். என்பிபி கருதுவதுபோல இனப்பிரச்சினை, ஒரு மனிதாபிமானப் பிரச்சினையல்ல. அது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமையின் விளைவுதான். இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள்,தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இறமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு, இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை பல்லினத் தன்மை கொண்ட ஒன்றாகக் கட்டமைக்க வேண்டும். அவ்வாறான அடிப்படை மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு என்பிபி தயாரா? இப்போதிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதைச் செய்யப் போதுமானது. அதே சமயம் இம்முறை தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நம்பிக்கையூட்டும் விடயங்கள் எவை என்று பார்த்தால், கிழக்கில் பிரதேச வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் தோற்று விட்டார். அது பெரிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியல்ல. சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்விதான். சங்குக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த தோல்விபோல. எனினும் தேர்தல் கணக்கில் அது தோல்வி. கிழக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஐந்து ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தாயக ஒருமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியின் அடுத்த கட்ட வளர்ச்சி. ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மைய பிரதேச வாதத்துக்கு தலைமை தாங்கும் அரசியல்வாதி தோல்வியுற்றிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்திருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரித்த ஜேவிபிக்கு வடக்கு கிழக்கில் 7 ஆசனங்கள் கிடைத்திருக்கும் ஒரு பின்னணியில் கிழக்கில் தாயக ஒருமைப்பாட்டுக்கான பலமான மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது. மேலும் தமிழரசுக் கட்சி அதிகம் ஆசனங்களை பெற்ற ஒரு தனிக் கட்சியாக மேலெழுந்திருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு ஆசனங்கள் அதிகம். ஒரு கட்சியாக அந்த வெற்றியைக் கொண்டாடலாம். ஆனால் தேசத்தைத் திரட்டுவது என்பது கட்சியைப் பலப்படுத்துவது மட்டும் அல்ல. கடந்த நாடாளுமன்றத்தோடு ஒப்பிடுகையில் மொத்த தமிழ் தேசியப் பிரதிநிதித்துவத்தில் மூன்று ஆசனங்கள் இழக்கப்பட்டமை வீழ்ச்சி. என்பிபி யாழ்ப்பாணத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கிறது. கிழக்கிலும் அதற்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன. அவை தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விகள். இந்தத் தோல்விகளுக்கு ஊடாகப் பார்த்தால் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றியைக் கொண்டாட முடியாது. ஆனால் சுமந்திரன் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறார். கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாகத் தமிழரசியலைத் தீர்மானிக்கும் சக்திபோல செயற்பட்ட சுமந்திரனும் இந்தத் தோல்விக்குப் பொறுப்பு. அதற்குரிய தண்டனையை வாக்காளர்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டு கட்சி பெற்ற சிறு வெற்றியை எப்படிக் கொண்டாட முடியும்? ஏனைய கட்சிகள் இல்லாமல் தனிக் கட்சியாக வெல்ல முடியும் என்று மார்தட்டுவதே தேசியவாத அரசியலுக்கு,தேசத் திரட்சிக்கு எதிரானது. முன்னணி ஏற்கனவே இருந்த ஓர் ஆசனத்தை இழந்திருக்கிறது. சங்கிற்கு ஒரேயொரு ஆசனந்தான். மானும் மாம்பழமும் வெற்றி பெறவில்லை.சங்குச் சின்னதைப் பயன்படுத்துவதன்மூலம் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை நாடாளுமன்றத் தேர்தலுக்கும் மடை மாற்றலாம் என்ற எதிர் பார்ப்பு வெற்றி பெறவில்லை. செல்வம் அடைக்கலநாதனுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் மொத்தம் 5695. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இம்முறையும் வெற்றி பெறவில்லை. தென்னிலங்கையில் இரண்டு தடவை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேவிபிக்கு வடக்கில் 5 ஆசனங்கள். ஆனால் ஆயுதப் போராட்டத்தில் உறுப்புகளை இழந்தவர்களும் உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் வெற்றி பெறவில்லை. சசிகலா எதிர்பார்த்த அனுதாப வாக்குகள் அவருக்குக் கிடைக்கவில்லை. தென்மராட்சியில், ரவிராஜ்ஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் கலகம் அதிக வாக்குகளை வென்றிருக்கின்றது. அர்ஜுனாவுக்கு கிடைத்த வெற்றியை வைத்து சமூக வலைத்தளங்களில் யாழ்ப்பாணத்தவர்கள் பரிகசிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த வெற்றியை சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியுப்கள் உருவாக்கும் புதிய அரசியல் பண்பாட்டுக்கூடாகவே விளங்கிக்கொள்ள வேண்டும். யுடியூபர்களின் காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பொருத்தமான உபாயங்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதைவிட முக்கியமாக தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம்தான் அர்ஜுனாவைப் போன்றவர்களின் வெற்றிகளுக்கு மூலகாரணம். அந்த வெற்றிடத்திற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளே பொறுப்பு. முடிவாக, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் வருமாறு. முதலாவது பேருண்மை. தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஒரு பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. தேசத்தைத் திரட்டத் தவறினால்,தென்னிலங்கை மையக் கட்சிகள் வாக்குகளைக் கவர்ந்து சென்று விடும். இரண்டாவது பேருண்மை, சமஸ்ரியை தேர்தல்மூலம் அடைய முடியாது. தேர்தல்களின் மூலம் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது. மூன்றாவது பேருண்மை, சமஸ்ரியை அடைவதாக இருந்தால் ஈழத் தமிழர்கள் நாட்டுக்கு வெளியே அணிகளையும் கூட்டுக்களையும் உருவாக்க வேண்டும். அந்த அணிகளின் மூலம் தீர்வுக்கான பிராந்திய மற்றும் அனைத்துலகச் சூழலைக் கனியச்செய்ய வேண்டும். அவ்வாறு உலகத்தைத் திரட்டுவது என்றால் அதற்கு முதல் இங்கு தாயகத்தில் தேசத்தைத் திரட்ட வேண்டும். தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புகளை ஒரு பெருந்திரளாக்க வேண்டும். தேசத்தைத் திரட்டினால்தான் உலகத்தைத் திரட்டலாம். அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறினால் தென்னிலங்கையை மையக் கட்சிகள் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் படிப்படியாக அரித்துத் தின்று விடும். https://www.nillanthan.com/6972/
-
தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்? நிலாந்தன். adminNovember 10, 2024 பிபிசி தமிழ்ச்சேவை கடந்த 7 ஆம் தேதி ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரை வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள உள்ள அரசியல்வாதிகளையும் பொது மக்களையும் நேர்கண்டு எழுதப்பட்டுள்ளது. அதில் தேசியம், சமஸ்டி, 13 ஆவது திருத்தம் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதில் நேர்காணப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அதுதொடர்பாக முழுமையான விளக்கம் இருக்கவில்லை. அதுபோலவே சுமந்திரனின் பிரச்சாரக் காணொளி ஒன்றில் அவர் தேசியம் என்றால் என்ன என்று கேட்கிறார். அந்த வார்த்தையை பயன்படுத்தும் பலருக்கு அதன் அர்த்தம் தெரியாது என்ற பொருள்பட கருத்துரைக்கிறார்.மேலும் அவருடைய பிரச்சார காணொளிகளில் அவர் “அறிவார்த்த தமிழ் தேசியத்தின் குரல்” என்று அழைக்கப்படுகிறார். அறிவார்ந்த தமிழ்த் தேசியம் என்றால் என்ன? அதுபோலவே மான் சின்னத்தின் கீழ் போட்டியிடும் மணிவண்ணன் “நவீன தமிழ்த் தேசியம்” என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். நவீன தமிழ் தேசியம் என்றால் என்ன? சுமந்திரன் அந்தக் காணொளியில் கேட்பதுபோல,பிபிசி தமிழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல,தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு வாக்காளப் பெருமக்களுக்கு மட்டுமல்ல பல வேட்பாளர்களுக்கே பதில் தெரியாது. ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஒரு கருநிலை அரசை நிர்வகித்து அது தோற்கடிக்கப்பட்ட கடந்த 15 ஆண்டுகளின் பின்னரும் தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு நிலைமைதான் காணப்படுகின்றதா? தமிழ் அரசியல்வாதிகள் எத்தனை பேர் இந்த கேள்விக்கு பொருத்தமான விடையைக் கூறுவார்கள்? அவர்களுக்கு பொருத்தமான விடை தெரிந்திருந்தால் தமிழரசியல் இப்போதுள்ள சீரழிவான நிலைக்கு வந்திருக்காது. எனவே முதலில் நாங்கள் ஒரு தெளிவிற்கு வருவோம்.தேசம், தேசியம் என்றால் என்ன என்பதனை சுருக்கமாகப் பார்க்கலாம். தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் தேசமாக வனைகின்றன. முதலாவது பாரம்பரிய தாயகம் அல்லது நிலம். இரண்டாவது இனம் அல்லது சனம். மூன்றாவது பொதுவான மொழி. நாலாவது பொதுவான பண்பாடு. ஐந்தாவது பொதுவான பொருளாதாரம். இந்த ஐந்தையும் விட ஆறாவதாக ஒரு விடயமும் உண்டு. அதுதான் அடக்குமுறை. ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய அடையாளங்களை அழிக்கும் நோக்கத்தோடு கட்டமைக்கப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளும் ஒரு மக்கள் கூட்டத்தை தற்காப்பு உணர்வோடு தேசமாகத் திரட்டுகின்றன. எனவே இப்பொழுது தெளிவான ஒரு முடிவுக்கு வரலாம். தேசியவாத அரசியல் என்பது அல்லது தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதுந்தான். அதாவது அதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், ஒரு மக்கள் கூட்டத்தை உருகிப் பிணைந்த பெருந் திரளாகத் திரட்டுவது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு கட்சியாவது மக்களைத் தேசமாகத் திரட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறதா? இல்லை. இதற்கு முதற்பொறுப்பு தமிழரசுக் கட்சிதான். ஏனெனில் உள்ளதில் பெரிய கட்சி அது. வடக்கு கிழக்காக ஒப்பீட்டளவில் பரந்த கட்டமைப்பை கொண்டிருக்கும் கட்சி. கடந்த15 ஆண்டுகளாக தமிழ் மிதவாத அரசியலின் பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த கட்சி. எனவே கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதற்கு அக்கட்சி தான் முதல் பொறுப்பு. தமிழ்த் தேசிய வரலாற்றில் உருவாகிய,பெரிய கூட்டாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிதைவதற்கு காரணம், தமிழரசுக் கட்சிதான். கூட்டமைப்பிலிருந்து பங்காளிகளை படிப்படியாக அகற்றும் ஒரு போக்கின் விளைவாக இப்பொழுது தமிழரசு கட்சி தானும் இரண்டாகி,பலவாகி நிற்கிறது. அடுத்தது, தமிழ்த் தேசிய முன்னணி. தேசியவாத அரசியல் என்பதனை தூய்மை வாதமாக சித்திரித்து, தனது அரசியல் எதிரிகளை துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று முத்திரை குத்துவதன்மூலம் அந்தக் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக தேசத்தை திரட்டத் தவறிவிட்டது. சிறிய கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்துவது; போலீசாரோடு, புலனாய்வுத் துறையோடு மோதுவது; விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களைத் தத்தெடுப்பது; போன்றவற்றின்மூலம் அக்கட்சி தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் கட்டமைக்கப் பார்க்கின்றது. தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் காட்டிக் கொள்வதே அடிப்படைத் தவறு. ஆயுதப் போராட்டம் வேறு,மிதவாத அரசியல் வேறு. இரண்டாவது தவறு, தங்களைப் புனிதர்களாக காட்டுவதற்காக தமது அரசியல் எதிரிகளை சாத்தான்களாக துரோகிகளாக சித்தரிப்பது. மற்றவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் யாரும் தங்களை தியாகிகள் ஆக்கிவிட முடியாது. மாறாக, முன்னுதாரணம் மிக்க தியாகங்களைச் செய்வதன் மூலம் தான் யாரும் தங்களைத் தியாகிகள் ஆக்கலாம். அரசியல் களத்தை தியாகி எதிர் துரோகி என்று பிரிப்பது தேசத்தை திரட்டுவதற்கு உதவாது. தேசம் என்பது ஒரு சமூகத்தின் பலம் பலவீனம் எல்லாவற்றினதும் திரட்சி தான். நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லாருடையதும் திரட்சி தான். முன்னணியின் கடந்த 15 ஆண்டுகால அரசியல் என்பது தேசத்தைத் திரட்டுவது அல்ல. தேசத்தை சிதறடிப்பதுதான். அதன் விளைவாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அக்கட்சிக்குள்ளே உடைவு ஏற்பட்டது. தமிழரசுக் கட்சியைப் போலவே அவர்களும் தோல்விகளில் இருந்து எதையுமே கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு மாற்றாக எழுவது என்பது தேசத்தைச் சிதறடிக்கும் அரசியலுக்கு எதிராக தேசத்தைத் திரட்டும் அரசியல்தான். அடுத்தது குத்து விளக்குக் கூட்டணி. இப்பொழுது அது சங்கு கூட்டணி. தொடக்கத்திலிருந்து தன் சொந்தப் பலத்தை நம்பாத ஒரு கூட்டு அது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஜனநாயகம் என்ற ஒரு சொல்லை முன்னொட்டுவதன் மூலம் தன்னை மெய்யான கூட்டமைப்பாக காட்ட அவர்கள் முயன்றார்கள். கட்சிப் பெயருக்குத்தான் வாக்கு விழும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதுபோலவே ஜனாதிபதி தேர்தலில் கட்டி எழுப்பப்பட்ட சங்குச் சின்னத்தைக் கைப்பற்றியதின்மூலம் பொது வேட்பாளருக்கு கிடைத்த வெற்றிகளை தங்களுக்கு மடை மாற்றலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதாவது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட பெயர், இடையில் ஸ்தாபிக்கப்பட்ட சின்னம் என்பவற்றை தம் வசப்படுத்துவதன் மூலம் வாக்குகளைக் கவரலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது ஒரு தேர்தல் உத்தி மட்டுமே. எல்லா தேர்தல் உத்திகளும் தேசத்தை திரட்டுவன அல்ல. எனினும்,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தைத் திரட்டும் கோஷத்தின் கீழ் இந்த கூட்டு பொதுக் கட்டமைப்புக்குள் ஓர் அங்கமாக இருந்தது. பொது வேட்பாளரை முன்நிறுத்தி ஒரு பொதுக் கோரிக்கையாகிய தேசத்தை திரட்டும் கோரிக்கைக்காக உழைத்த கட்சிகள் இந்த கூட்டுக்குள் உண்டு. ஆனால் அந்த உழைப்பின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்ட சங்கு சின்னத்தை கைப்பற்றும் விடயத்தில் அவர்கள் தேசத் திரட்சியா?அல்லது கட்சி அரசியலா?அல்லது தேர்தல் வெற்றியா?என்று முடிவெடுக்க வேண்டி வந்த பொழுது, இக்கூட்டானது கட்சி அரசியல் சார்ந்த தேர்தல் வெற்றிக்கு முன்னுரிமை வழங்கியது. எனவே தேசத் திரட்சிக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கிறார்களா இல்லையா என்பதனை அவர்கள் மீண்டும் எதிர்காலத்தில் நிரூபிக்க வேண்டியிருக்கும். அடுத்தது மான் கட்சி. இக்கட்சியும் பொது வேட்பாளரை முன் நிறுத்திய பொதுக் கட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்தது. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து அனேகமாக ஒதுங்கிவிட்டார். கட்சியின் முதன்மை வேட்பாளராகக் காணப்படும் மணிவண்ணன் தன்னுடைய தாய்க் கட்சியாகிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து எங்கே துலக்கமான விதங்களில் வேறுபடுகிறார் என்பதனை இனி நிரூபிக்க வேண்டியிருக்கும். மற்றவை சுயேச்சைகள். இம்முறை தேர்தலில் அதிகம் சுயேச்சைகள் தோன்றக் காரணமே பிரதான கட்சிகளின் தோல்விதான். பிரதான கட்சிகளில் இருந்து வெளிவந்த ஒரு பகுதியினர் சுயேச்சையாக நிற்கிறார்கள். பிரதான கட்சிகளால் உள்வாங்கப்படாதவர்களும் சுயேச்சையாக நிற்கின்றார்கள். தலைமைத்துவ வெற்றிடம் காரணமாக யாராவது தங்களை வந்து மீட்க மாட்டார்களா என்று காத்திருக்கும் தமிழ் கூட்டு உளவியல் காரணமாக திடீரென்று பிரபல்யம் ஆகிய அர்ஜுனாவை போன்றவர்களும் சுயேச்சையாக நிற்கிறார்கள். யார் எதற்காக நின்றாலும் சுயேச்சைகள் அதிகரிப்பதற்கு காரணம் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தேசத்தைத் திரட்டது தவறியமைதான். எனவே இம்முறை தேர்தல் களம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதை என்று சொன்னால், தமிழ்த் தேசியம் பேசும் எல்லாக் கட்சிகளுமே தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் விடயத்தில் தோல்வி அடைந்துவிட்டன என்பதைத்தான். இந்த அடிப்படையில் பார்த்தல்,கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளர் பெற்ற வெற்றி அரிதானது. அது ஒரு மிகப்பெரிய வெற்றி இல்லைத்தான். ஆனாலும் அடிப்படை வெற்றி. அந்த முயற்சியில் ஈடுபட்ட கருத்துருவாக்கிகளை “பத்தி எழுத்தாளர்கள்” என்று சிறுமைப்படுத்தியது ஒரு பகுதி. தமிழில் பத்தி எழுத்தாளர் என்ற வார்த்தை அதிகம் அவமதிக்கப்பட்ட ஒரு காலகட்டம் அது. அதாவது தேசத்தைத் திரட்ட முற்பட்ட குற்றத்துக்காக அதில் முன்னணியில் நின்றவர்களை சிறுமைப்படுத்த அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. சுமந்திரன் பொது வேட்பாளரை ஒரு கேலிக்கூத்து என்று சொன்னார். கஜேந்திரன் இந்த முயற்சியில் நீங்கள் வென்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்குத் தெரியும் என்று சொன்னார். முடியுமென்றால் ஒரு பொது வேட்பாளர் நிறுத்திக் காட்டுங்கள் என்று ரணில் சவால் விட்டார். பொது வேட்பாளர் முழுத் தீவுக்கும் பொதுவான நாசமாக முடியும் என்று சஜித் எச்சரித்தார். அது ஆண்டிகள் கூடிக் கட்டும் மடம் என்றும் ஆபத்தான விஷப் பரீட்சை என்றும் எழுதினார்கள். அதாவது,தென்னிலங்கையில் உள்ள கட்சிகளும் பொது வேட்பாளரை ஆபத்தாகப் பார்த்தன. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட பிரதான கட்சிகள் இரண்டு அதனை விரோதமாகப் பார்த்தன. தேசத் திரட்சிக்கு எதிரான ஊடகவியலாளர் சிலர் தெரிந்தோ தெரியாமலோ தமது சொந்த மக்களைத் தோற்கடிப்பதற்காக உழைத்தார்கள். ஆனாலும் பொது வேட்பாளர் அடிப்படை வெற்றியைப் பெற்றார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு தமிழ் அரசியல்வாதி பெற்ற ஆகப்பெரிய வாக்குகளை அவர் பெற்றார். கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்ஷத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளைக் கடந்து தேசத்தைத் திரட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சிக்குக் கிடைத்த அடிப்படை வெற்றி அது. மக்கள் அமைப்புகளும் கட்சிகளும் இணைந்தால் அவ்வாறு வாக்குகளைத் திரட்ட முடியும் என்பது ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. கட்சிகளின் போதாமை காரணமாகத்தான் மக்கள் அமைப்பொன்று கட்சிகளோடு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிவந்தது. எனவே கட்சிகள் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது என்பது கடந்த ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. இப்பொழுது,மீண்டும் கட்சிகள் தேசத்தைத் திரட்டுவதில் எவ்வளவு தூரம் தோல்வியடைந்துள்ளன என்பதனை நிரூபிக்கும் ஆகப்பிந்திய உதாரணமாக நாடாளுமன்றத் தேர்தல் களம் காணப்படுகிறது. அதாவது தேசியம் என்றால் என்ன ? தேசியவாத அரசியல் என்றால் என்ன? என்பதை ஆழமாக விளங்கிக் கொள்ளத் தவறிய கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை மீண்டும் சிதறடிக்கும் ஒரு தேர்தல் களம் இது. எனினும்,தமிழ்த் தேசிய அரங்கில் ஒரு கட்சி ஏகபோகத்தை மேலும் உடைத்துக்கொண்டு பல தரப்புக்கள் மேலெழுமாக இருந்தால் அதுவும் ஒருவிதத்தில் நன்மைக்கே. https://www.nillanthan.com/6966/
-
விருந்தகங்களில் வேட்பாளர்கள் தேங்காய் கியூவில் வாக்காளர்கள்? – நிலாந்தன். மருத்துவர் அர்ஜுனா மான் கட்சியின் பெண் வேட்பாளரோடு நாகரீகமின்றி நடந்து கொண்டது ஒரு விருந்தகத்தில் ஆகும். அது தொடர்பாக ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளராகிய மிதிலைச்செல்வி அந்த விருந்தகத்துக்கு தானும் உணவருந்தச் செல்வதுண்டு என்று கூறுகிறார். தனக்குத் தெரிந்தவர்களையும் அங்கு விருந்துண்ண அழைத்துச் செல்வதுண்டு என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த போது அந்த விருந்தகத்தில் நிறையப் பேர் தெரிந்த ஆட்கள் இருந்ததாகவும், அவர்களில் அனேகர் ஏதாவது ஒரு கட்சியோடு தொடர்புடைய ஆட்கள்தான் என்றும் கூறுகிறார். அதாவது அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்த தகவல்களின்படி அர்ச்சுனாவும் உட்பட தமிழ் வேட்பாளர்களில் ஒரு பகுதியினர் அப்படிப்பட்ட உயர்தர விருந்தகங்களில்தான் உணவு அருந்துகிறார்கள். தமது ஆதரவாளர்களையும் அங்கே அழைத்துச் செல்கிறார்கள். இது முதலாவது சம்பவம். இரண்டாவது சம்பவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. யாழ்ப்பாணத்தில் ஒரு விருந்தினர் விடுதியில் தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது. தேர்தல் திணைக்களத்துக்கு நிதி அதிகாரம் வழங்குவது குறித்தும் தேர்தல்கள் தொடர்பில், மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளதுபோல நிரந்தரமான ஒரு நேர அட்டவணை அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கருத்துக்களைத் திரட்டுவதற்கான ஒரு கருத்தமர்வு அது. இதில் கலந்து கொண்ட வளவாளர்கள் மற்றும் பயனாளர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகை பணம் வழங்கப்பட்டது. பொதுவாக அரசு சார்பற்ற நிறுவனங்களின் கருத்தரங்குகளில் அப்படித்தான், பெரும்பாலும் விருந்தினர் விடுதிகளில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது; வருகை பதிவை எடுப்பது; முதலில் சிற்றுண்டியும் பின்னர் மதிய உணவும் கொடுத்து முடிவில் பயணச் செலவு என்று சொல்லி ஒரு தொகையை கொடுப்பது. இதுபோன்ற பெரும்பாலான கருத்தரங்குகள் “ஏசி” வசதி கொண்ட விருந்தினர் விடுதிகளில்தான் நடக்கும். மின்விசிறிகளைக் கொண்ட, ஜன்னல்கள் திறந்து விடப்படும் சாதாரண மண்டபங்களில் நடப்பது குறைவு. பவ்ரல் எனப்படுவது நேர்மையான, முறைகேடுகளற்ற ஒரு தேர்தல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்காகச் செயற்படும் ஒரு சிவில் அமைப்பு. அது தனது கூட்டத்தை வளிபதன வசதி கொண்ட விருந்தினர் விடுதிகளில் நடத்துவதோடு பயனாளிகளுக்கு பணமும் கொடுக்கின்றது. அதாவது நேர்மையான தேர்தலைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்குகளுக்கு வருபவர்களை ஊக்குவிப்பதற்கு காசு கொடுக்க வேண்டியிருக்கிறதா? இதுபோன்ற கருத்தரங்குகளை ஏன் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பொதுவான வாய்ப்பாட்டுக்கு வெளியே போய் சாதாரண மண்டபங்களில் நடத்தக்கூடாது? பவ்ரல் போன்ற அமைப்புக்கள் அப்படிச் செய்யலாமென்றால், கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வாகனங்களை ஒழுங்குப்படுத்தி, அதில் வருபவர்களுக்கு சாப்பாடும் சிற்றுண்டியும் குடிபானமும் காசும் கொடுத்து அழைத்துக் கொண்டு வருவதில் என்ன தவறு? தமிழ்ப் பகுதிகளில் சில கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்துக் கொண்டு வரும் ஆதரவாளர்களுக்கு உணவு அல்லது சிற்றுண்டி, குடிபானம் என்பவற்றோடு காசும் கொடுக்கின்றன. கிட்டத்தட்ட 2500 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. தேர்தல் நாளன்று தூர இடங்களில் இருக்கும் வாக்காளர்களை வாகனம் விட்டு ஏற்றி இறக்குவதற்கும் அதாவது வாக்களிப்பதற்கும் காசு கொடுக்கப்படுகிறது. அல்லது மது கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் உண்டு. மேற்கண்ட இரண்டு சம்பவங்களையும் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? வேட்பாளர்களில் ஒரு தொகுதியினர் உயர்தர விருந்தகங்களில் உணவருந்துகிறார்கள். அங்கே தமது ஆதரவாளர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். வாக்காளர்களுக்கு அறிவூட்டும் நோக்கத்தோடு நடாத்தப்படும் கருத்தரங்குகளும் அப்படிப்பட்ட விருந்தகங்களில்தான் நடக்கின்றன. அங்கேயும் பயனாளிகளுக்கு அந்த விருந்தினர் விடுதியின் தரத்துக்கு ஏற்ப உணவு கொடுக்கப்படுகிறது. சராசரி வாக்காளர்கள் அண்ணாந்து பார்க்கும் விருந்தகங்களில் வேட்பாளர்கள் சாப்பிடுகிறார்கள். நேர்மையான தேர்தலை குறித்து வகுப்பெடுப்பவர்களும் சாப்பிடுகிறார்கள். ஆனால் சராசரி வாக்காளர்கள் எங்கே சாப்பிடுகிறார்கள்? நட்சத்திர அந்தஸ்த்துள்ள விருந்தகங்களில் உணவருந்தும் வசதி வாய்ப்புகளைக் கொண்டிராத சராசரி வாக்காளர்கள் “மந்தை மனோநிலை”யோடு வாக்களிக்கிறார்கள் என்று புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகிறார். லண்டனில் வசிக்கும் அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளர். ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களைக் குறித்து முகநூலில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.. ”பொதுகட்டமைப்பு என்ற தற்காலிக அமைப்பு (ad hoc committee) முன்வைத்த கோசங்களுக்காக மக்கள் வாக்களித்தார்களா? அல்லது ஒரு மந்தை மனப்பாங்கில் (herding mentality) தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தார்களா? முதலாவது எனில் அரசியல் விழிப்புணர்வுமிக்க இரண்டு லட்சம் பேரை திரட்டிவிட்டீர்கள் என்று கூறுவீர்களா?” இங்கு அவர் மந்தை மனப்பாங்கு என்று குறிப்பிட்டிருப்பது தமிழ்மக்கள் இன உணர்வின் அடிப்படையில் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததைத்தான். அதாவது ஒரு தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்த சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் மக்களும் மந்தை மந்தை மனப்பாங்கோடு வாக்களித்ததாக அவர் கூறுகிறார். சுமந்திரன், யாழ்ப்பாணத்தில், சஜித் பிரேமதாசாவின் மேடையில் வைத்து கூறினார்,பொது வேட்பாளருக்குப் போடும் வாக்குகள் வீணாகப் போகும் வாக்குகள் என்று. அதாவது, தமிழ்ப் பொது வேட்பாளருக்கு விழுந்த இரண்டு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் குறையாத வாக்குகள் வீணாய்ப்போன, மந்தைத்தனமான வாக்குகளா? ஆயின்,தமிழ் வாக்காளர்களை, விமர்சன பூர்வமாக சிந்திக்கும்(Critical thinking), “அரசியல் விழிப்புணர்வுமிக்க” வாக்காளர்களாக வளத்தெடுப்பதற்கு எந்த ஒரு கட்சியிடமாவது ஏதாவது ஒரு பொறிமுறை உண்டா? இல்லையே? எல்லாக் கட்சித் தலைவர்களும் குருட்டு விசுவாசிகளைத்தானே அருகில் வைத்திருக்கிறார்கள்? விழிப்படைந்த தொண்டர்களை ஏன் அருகில் வைத்திருப்பதில்லை ? குருட்டு விசுவாசிகளை, விமர்சனபூர்வமாக சிந்திக்கும் விழிப்படைந்த வாக்காளர்களாக மாற்றுவதற்கு கட்சிகளிடம் பொருத்தமான அரசியல் தரிசனங்களோ கட்டமைப்புகளோ இல்லை. கட்சித் தலைவர்களிடமும் அதற்குரிய கொள்ளளவு இல்லை. இந்நிலையில்,தேர்தலை புத்திபூர்வமாக அணுக முற்றப்படும் பவ்ரல் போன்ற அமைப்புகள் தமது விழிப்பூட்டும் கருத்தரங்குகளை ஏசி வசதிகளைக் கொண்ட விருந்தகங்களில் நடத்துவதை விடவும் கிராமங்களை நோக்கிச் சென்றால் என்ன? தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தேர்தல் காலத்தில் மட்டும் ஊர்களை நோக்கிச் செல்லாமல்,தொடர்ச்சியாகத் தமது ஆதரவாளர்களுக்கு விழிப்பூட்டும் கூட்டங்களை நடத்தினால் என்ன? தமிழ்க் கட்சிகள் பெரும்பாலானவை விசுவாசிகளைத்தான் கட்சி உறுப்பினர்களாக வைத்திருக்கின்றன. விமர்சனபூர்வமாக சிந்திக்கும் விழிப்படைந்த அரசியல் செயற்பாட்டாளர்களை அல்ல. விசுவாசிகள் முகநூலில் ஒருவர் மற்றவரைத் துரோகி என்பார்கள். நேற்று நண்பனாக இருந்தவர் இன்று கட்சி மாறிவிட்டால் அவர் துரோகியாகி விடுகிறார். தமது கட்சித் தொண்டர்களுக்கு விழிப்பூட்டி அவர்களை அரசியல் மயப்படுத்தும் வேலை திட்டங்கள் எந்த ஒரு கட்சியிடமும் இல்லை. இந்த லட்சணத்தில் ஒரு கட்சியின் ஆதரவாளர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களை மந்தைகள் என்று கூறுகிறார். ஆனால் தமிழ் வாக்காளர்களை மந்தைகளாக வைத்திருக்கத்தான் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். இனமான மந்தைகள்; ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசுகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் மந்தைகள்; ஆயுதப் போராட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டி அதன்மூலம் தங்களைத் தியாகிகளாகக் காட்டிக் கொள்ளும் மந்தைகள்; சாராயப் போத்தலுக்கு வாக்களிக்கும் மந்தைகள்; காசு கொடுத்துப் பேருந்துகளில் ஏற்றுக் கொண்டு வரப்படும் மந்தைகள் ; முகநூலில் நேரலையில் தோன்றும் மருத்துவரை நம்பிக் காசை விசுக்கும் மந்தைகள்; போன்ற எல்லா எல்லாவகை மந்தைகளையும் குருட்டு விசுவாசிகளையும் மேய்க்கத்தான் எல்லாக் கட்சிகளும் விரும்புகின்றன.வாக்காளர்களை மந்தை மனோநிலையில் இருந்து விடுவித்து அரசியல் விளக்கமுடைய விழிப்படைந்த வாக்காளராக மாற்றுவதற்கு எந்தக் கட்சியாவது தயாரா? அல்லது எந்த என்.ஜி.யோவாவது தயாரா? https://www.nillanthan.com/6954/
-
தமிழ் மக்கள் ஏன் பலூன்களின் பின் போகிறார்கள்? – நிலாந்தன். மருத்துவர் அர்ஜுனா ஊசிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு விருந்தகத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது மான் கட்சியை சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் அவருக்கு தன்னுடைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கின்றார். அந்த காட்சியை அர்ஜுனா வழமை போல நேரலையில் விடுகிறார். அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்கிறார். அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து விலகிச் செல்கிறார். அர்ஜுனா அந்த வேட்பாளர் வழங்கிய துண்டுப் பிரசுரத்தால் தன் வாயைத் துடைக்கிறார். அதையும் நேரலையில் விடுகிறார். ஒரு சக வேட்பாளரை அந்த மருத்துவர் எப்படி நடத்தியிருக்கிறார் என்பது அவருடைய அரசியல் நாகரீகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கக்கூடியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் சாவகச்சேரியில் ஒரு கலகக்காரனாக எழுச்சி பெற்றார். தனக்கு கிடைத்த பிரபல்யத்தை அவர் மிகவும் திட்டமிட்டு கட்டமைத்தார். யூ டியூப்பர்களின் காலத்தில் அது அவருக்கு மிகவும் இலகுவாக இருந்தது. தனக்கு கிடைத்த பிரபல்யத்தை இப்பொழுது அவர் அரசியலில் எதிர்பார்ப்போடு முதலீடு செய்கிறார். அவருடைய தேர்தல் சின்னம் ஊசி. சமூக வலைத்தளங்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு பலூன் அவர். அவருடைய ஊசியே அவரைக் குத்தி வெடிக்கச் செய்துவிடும் என்பதைத்தான் அந்த விருந்தகத்தில் மான் கட்சியின் பெண் வேட்பாளரை அவர் கையாண்ட விதம் நமக்கு உணர்த்துகின்றதா? அவருக்கு கிடைத்த பிரபல்யத்துக்குக் காரணம் என்ன? சாமானியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சமூக வலைத்தளங்களா? அல்லது, மருத்துவத் துறைக்குள் காணப்படும் விமர்சனத்திற்குரிய அம்சங்களா? அல்லது அந்த விவகாரங்களை அந்த துறை சார்ந்த ஒருவரே வெளியே கொண்டு வந்ததுதான் காரணமா? இல்லை. இவற்றைவிட ஆழமான ஒரு காரணம் உண்டு. தமிழ்மக்கள் தங்களுக்காக, தங்களுக்குரிய நீதிக்காகப் போராட யாராவது வரமாட்டார்களா? தங்களுக்காக தன்னைத் தியாகம் செய்ய யாராவது வரமாட்டார்களா? என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் அதற்குரிய முக்கிய காரணம். அதாவது அதைச் சுருக்கமாகச் சொன்னால், தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று காணப்படுகிறது என்று பொருள். அர்ச்சுனாவின் பின்னால் மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் வெவ்வேறு தரப்புகள், கட்டமைப்புக்கள் போன்றவற்றை நோக்கி அதிகரித்த எதிர்பார்ப்போடு அவற்றின் பின் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த தலைமைத்துவம் அல்லது எதிர்பார்த்த தொடர்ச்சியான காட்சி மாற்றங்கள் நடக்கவில்லை. தமிழ்மக்கள் பேரவை தோன்றிய பொழுது தமிழ்மக்கள் அதிகம் எதிர்பார்ப்போடு அதை நிமிர்ந்து பார்த்தார்கள். இரண்டு எழுக தமிழ்களிலும் கலந்துகொண்ட அனைவருமே தாமாக வந்தவர்கள்தான். யாரும் வாகனம் விட்டு அழைத்து வரவில்லை. விக்னேஸ்வரன் மாகாண சபையில் சுமந்திரன் அணியினரால் சுற்றி வளைக்கப்பட்ட பொழுது அவருக்கு கிடைத்த ஆதரவு தன்னியல்பானது. யாரும் திட்டமிட்டு ஒழுங்கமைக்காதது. ஆனால் விக்னேஸ்வரன் தனக்கு கிடைத்த ஆதரவையும் அபிமானத்தையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து தக்கவைக்க முடியாதவராகத் தன்னை நிரூபித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இயங்கா நிலைக்கு அவரும் ஒரு காரணம். மாகாண சபையின் காலம் முடிந்த பொழுது சமூக செயற்பாட்டாளராகிய திரு செல்வின் என்னிடம் கேட்டார்… “விக்கி இப்பொழுது என்ன முடிவை எடுக்க வேண்டும்? ஒரு கட்சியை தொடங்கி கட்சி அரசியலை முன்னெடுப்பதா? அல்லது தமிழ் மக்கள் பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்து அதற்கு தலைமை தாங்குவாரா?” என்று. நான் சொன்னேன்…”அவர் மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கத் தேவையான வாழ்க்கை ஒழுக்கத்தையோ அல்லது அரசியல் தரிசனத்தையோ கொண்டவர் அல்ல. அநேகமாக அவர் கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடும்” என்று. விக்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார். ஆனால் அவர் மாகாண சபைக்குள் சுமந்திரன் அணியினால் சுத்திவளைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்த கவர்ச்சியும் ஜனவசியமும் இப்பொழுது இல்லை. தமிழ் மக்கள் பேரவை ஓய்வுக்கு வந்து சில ஆண்டுகளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி இடம் பெற்றது. அங்கேயும் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். தாமாகத் திரண்டார்கள். அது ஒரு பெரிய எழுச்சி. தூதரகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த எழுச்சி. படைத் தரப்பை முகாம்களுக்குள் முடக்க வைத்த ஒரு எழுச்சி. ஆனால் அது பின்னர் பலூன் ஆகியது. அந்த பேரெழுச்சியின் பெயரால் உருவாக்கப்பட்ட அமைப்பு அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகவில்லை. அந்த அமைப்பின் இணைத் தலைவர்கள் ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் காணப்படுகிறார்கள். ஆனாலும் அது ஒரு பேரியக்கமாக வளர்ச்சி பெறவில்லை. அப்படித்தான் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி 2 லட்சத்து 26 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற, கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்த ஒரு ஹைபிரிட் கட்டமைப்பை நோக்கி தமிழ்மக்கள் அதிகரித்த எதிர்பார்ப்போடு காணப்பட்டார்கள். ஆனால் சில நாட்களில் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுக் கட்டமைப்பு போட்டியிடவில்லை. பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து வரும் எல்லா தேர்தல்களிலும் கட்சிகளையும் மக்கள் அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்தார்கள். இப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள். திருக்கோணமலையில் சங்கையும் வீட்டையும் இணைத்தது பொதுச் சபையின் மதத் தலைவர்களில் ஒருவராகிய திருமலை ஆயர்தான். எனவே தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு முயற்சித்து இருந்திருந்தால் மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைக்கலாம், அதன்மூலம் வாக்குச் சிதறலைத் தடுத்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பு சங்குக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு முன்கையெடுத்திருந்தால் அரங்கில் இப்பொழுது தோன்றியிருக்கும் பெரும்பாலான சுயேச்சைகள் அந்த கட்டமைப்புக்குள் வந்திருக்கும் என்பது உண்மை. கட்சிகளுக்குள் உடைந்து வெளியே வருபவர்கள் பொதுக் கட்டமைப்பை நோக்கி வந்திருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை. பொதுக் கட்டமைப்பு இப்பொழுது நடைமுறையில் இல்லை. பொதுக் கட்டமைப்புக்குள் காணப்பட்ட மக்கள் அமைப்பு நாடாளுமன்றத் தேர்தலைக் கையாள்வதில்லை என்று முடிவெடுத்தது. இதனால் சங்குக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இப்படியாக தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வெவ்வேறு அமைப்புகளின் மீதும் நபர்களின் மீதும் தங்கள் நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள். எதிர்பார்ப்போடு பார்க்கின்றார்கள். யாராவது வந்து மீட்க மாட்டார்களா? எந்தக் கட்டமைப்பாவது ஒரு காட்சி மாற்றத்தை ஏற்படுத்தாதா? என்று எதிர்பார்ப்போடு அந்த அமைப்பின் பின் அல்லது நபர்களின் பின் செல்கிறார்கள். முடிவில் உற்சாகமெல்லாம் வடிந்து போய்ச் சலித்து அரசியலில் ஆர்வமற்று ஒதுங்கி விடுகிறார்கள். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் அவ்வாறு தமிழ் மக்கள் சலிப்போடு ஒதுங்கி நிற்கும் ஒரு நிலைமை தோன்றக்கூடும் என்ற பயம் பரவலாக உண்டு. சில கிழமைகளுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில், தேசமாகத் திரள்வோம் என்று நின்ற மக்கள், இப்பொழுது விருப்பு வாக்கு கேட்டுத் தமிழர்களை வாக்காளர்களாகக் கூறுபோடும் கட்சிகளையும் சுயேச்சைகளையும் சலிப்போடும் ஏமாற்றத்தோடும் விரக்தியோடும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விரக்தி சிலசமயம் அனுர அலையின் பின் மக்களை உந்தித் தள்ளிவிடுமா என்ற பயம் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் உண்டு. இதே நிலைமை திருக்கோணமலையிலோ அம்பாறையிலோ ஏற்பட்டால் என்ன நடக்கும்? புலம்பெயர்ந்து வாழும் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார், திருகோணமலையில் எவ்வளவுதான் வாக்குகள் சிதறினாலும் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காக இனமாகச் சிந்தித்து வாக்களிக்கும் ஒரு பாரம்பரியம் அங்குண்டு. அது இனியும் தொடரும் என்று. தொடர்ந்தால் நல்லது.அம்பாறையிலும் அப்படி நடந்தால் நல்லது. வடக்கில்,மீன் கரைந்தாலும் சட்டிக்குள்தான் இருக்கும் என்று நம்புவோமாக. https://www.nillanthan.com/6943/
-
அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை – நிலாந்தன். adminOctober 20, 2024 வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் கோசிமினின் வாக்கியம் ஒன்று உண்டு”மக்களிடம் செல்லுங்கள். மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள். மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்று. மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தயார்? கடந்த பல தசாப்தங்களில் தமிழ்கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட விடயங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை? எல்லாப் பழியையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மீது சுமத்திவிட்டு தமிழ் தலைவர்கள் தங்கள் தோல்விகளுக்குப் பொறுப்புக்கூறாமல் தப்பி வந்திருக்கிறார்களா? தங்களால் முடியாமல்போன விடயங்களுக்காக யாராவது தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்களா? கடந்த பல தசாப்த காலமாக தமிழ் அரசியலில் பொறுப்பு கூறாமை என்பது ஒரு பண்பாடாக வளர்ந்து விட்டது. தலைமைத்துவம் என்பது வெற்றிக்கும் தோல்விக்கும் பொறுப்புக்கூறுவது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் பொறுப்புக் கூறுவது.வரவுக்கும் செலவுக்கும் பொறுப்புக் கூறுவது. ஆனால் தமிழ் அரசியலில் எத்தனை பேர் அவ்வாறு பொறுப்பு கூறியிருக்கிறார்கள்? தமது தேர்தல் அறிக்கைகளுக்கு எத்தனை பேர் பொறுப்புக் கூறியிருக்கிறார்கள்? இந்த விடயத்தில் ஆயுதப் போராட்டத்தை தனியாக ஆராய வேண்டும். ஆனால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான மிதவாத அரசியலை தொகுத்துப் பார்த்தால் எத்தனை தலைவர்கள் தமது தோல்விகளுக்கு பொறுப்பு கூறியிருக்கிறார்கள்? உள்ளதில் பெரியதும் மூத்ததும் ஆகிய கட்சி தமிழரசுக் கட்சி. அதற்கு ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி என்றும் பெயர் உண்டு. கடந்த 74 ஆண்டுகளாக, தனது பெயரில் உள்ள பெடரலை அதாவது சமஸ்டியை ஏன் அடைய முடியவில்லை என்பதற்கு அந்தக் கட்சி தன் மக்களுக்கு எப்போதாவது பொறுப்புக் கூறியிருக்கிறதா? தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத செல்வநாயகம், அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்காமல், மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாரா? 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழர் விடுதலைக் கூட்டணி. சில ஆண்டுகளிலேயே, 81ஆம்ஆண்டு மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தல்களை நோக்கிச் சரணடைந்தது. அதற்கு அவர்கள் பொறுப்புக் கூறினார்களா? மன்னிப்பு கேட்டார்களா? நவீன தமிழ் அரசியல் வரலாற்றில் தமிழ்மக்கள் ஆகக்கூடிய நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றிருந்த காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தேர்தல் கேட்ட காலகட்டம் தான். 22 ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் தமிழ் பிரதிநிதித்துவம் உச்சமாக இருந்த அக்காலகட்டத்தில்தான், 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில், மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் அதிக தொகை மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டார்கள். அதாவது ஆகக்கூடுதலான ஆசனங்களை தமிழர்கள் பெற்றிருந்த ஒரு காலகட்டத்தில்தான், அதிக தொகை தமிழ்மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டார்கள். 22 ஆசனங்களினாலும் அந்த இனஅழிப்பை தடுக்க முடியவில்லை. அது கூட்டமைப்பின் தோல்வியும்தான். அதற்கு கூட்டமைப்பு பொறுப்புக் கூறியதா? 2009க்குப்பின் கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கைகளில் வெவ்வேறு வகைப்பட்ட வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றன. இவற்றில் இத்தனை நிறைவேற்றப்பட்டன? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கு எந்தக் கட்சியாவது பொறுப்புக்கூறியதா? அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டதா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் எதுவரை முன்னேறியுள்ளது? பரிகார நீதியை நோக்கி எதுவரை முன்னேறியுள்ளது?என்று தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுக்குமா? இன அழிப்புக்கு எதிராக இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைக்கும் விடயத்தில் ஏனைய கட்சிகளைவிட தான் நேர்மையாகவும் துணிச்சலாகவும் உண்மையாகவும் நடப்பதாகக் கூறும் முன்னணி, அந்த விடயத்தில் கடந்த 15 ஆண்டுகளில் எதுவரை முன்னேறியிருக்கிறது என்பதனை தமிழ் மக்களுக்கு எடுத்து கூறுமா? தன்னுடைய சமரசத்துக்கு இடமற்ற வெளியுறவுக் கொள்கை காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தான் பெற்றுக்கொண்ட வெற்றிகளைக் குறித்து அக்கட்சி தமிழ் மக்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறுமா? எல்லாருமே தமிழ் மக்களின் மறதியின் மீதே தமது தேர்தல் வெற்றிகளை முதலீடு செய்கிறார்களா? ஆம் கடந்த 15 ஆண்டுகளாக மட்டுமல்ல, அதற்கு முன்னரும் பொறுப்புக்கு கூறாமை என்பது தமிழ் அரசியலில் ஒரு பண்பாடாகவே வளர்ந்துவிட்டது. தமிழ்க்கட்சித் தலைவர்களில் பலர் தமது தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் இயலாமைகளுக்கும் மன்னிப்புக் கேட்டதில்லை. அதாவது பொறுப்பு கூறியதில்லை. ஆனால் கடந்த வாரம் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் முன்னிலையில் மக்களுக்கு உண்மையை கூறினார்கள்; பொறுப்புக் கூறினார்கள். தமிழ்மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பு ஏப்ரல் மாத கடைசியில் உருவாகியது. அது பின்னர் கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக்கூட்டமைப்பை உருவாக்கியது. அப்பொது கட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன் நிறுத்தியது. பொது வேட்பாளர் தமிழரசியலில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற ஒருவராக மேலெழுந்தார். அரசற்ற சிறிய இனம் ஒன்று அரசாங்கம் அறிவிக்கும் ஒரு தேர்தலை எப்படி வித்தியாசமாக படைப்புத் திறனோடு, விவேகமாக,கையாள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற மக்கள், அரசாங்கம் அறிவிக்கும் ஒரு தேர்தலை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டு தமது கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என்பதற்கும் அது ஒரு முன்னுதாரணம். ஆனால் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத அளவுக்கு சில நாட்களிலேயே நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்மக்கள் பொதுச்சபை தேர்தலில் பங்குபற்றுவதில்லை என்று முடிவெடுத்தது. அதனால் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகித்த இரண்டு கட்சிகள் கட்டமைப்பிலிருந்து விலகின. விளைவாக பொதுக் கட்டமைப்பு செயலிழந்தது. தமிழ்மக்கள் பொதுச்சபையானது தொடர்ந்து பொதுக் கட்டமைப்பாக தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பம் சங்குக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. ஒரு வெற்றியை காட்டிய பொதுகட்டமைப்பு அடுத்த தேர்தலில் தங்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். தமிழ்மக்கள் பொதுச்சபைக்குள்ளும் இது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. நாடாளுமன்றத் தேர்தலைக் கையாள வேண்டும் என்று ஒரு தரப்புக் கூறியது.ஆனால் தேர்தல்களை தொடர்ச்சியாக கையாள்வது ஒரு மக்கள் அமைப்பின் வேலை அல்ல என்று மற்றொரு தரப்புக் கூறியது.ஜனாதிபதித் தேர்தலை தேசத்தை திரட்டுவதற்கான ஒரு களமாக பயன்படுத்துவதே தமிழ் மக்கள் பொதுச் சபையின் இலக்காக இருந்தது.அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றது.ஜனாதிபதித் தேர்தலுக்கான களநிலவரம் அத்தகையது.ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அத்தகையது அல்ல. அங்கே கட்சிகளும் சுயேச்சைகளும் விருப்பு வாக்குகளும் வாக்காளர்களை சிதறடிக்கும்.அதாவது தேசத்தைச் சிதறடிக்கும். எனவே தேசத்தைச் சிதறடிக்கும் ஒரு தேர்தல் களத்தில் தாமும் இறங்கி மக்களைச் சிதறடிக்க முடியாது என்று பொதுச் சபைக்குள் ஒரு பிரிவு வாதிட்டது. மக்கள் அமைப்பில் காணப்படும் கடற் தொழிலாளர் சங்கங்களும் விவசாய அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் நாடாளுமன்றத் தேர்தலைக் கையாள வேண்டும் என்று கேட்டன.பொதுச்சபை குறைந்தபட்சம் சுயேச்சையாகவாவது இறங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.ஆனால் தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது தேர்தல்களால் மட்டும் செய்யக்கூடிய ஒன்று அல்ல.ஆகக்கூடிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் ஆகப்பெரிய இனஅழிப்பு இடம்பெற்றது.எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது தேர்தல்களுக்கும் அப்பால் பரந்தகன்ற தளத்தில் பல்வேறு கட்டமைப்புகளுக்கூடாக செய்யப்பட வேண்டும் என்று பொதுச் சபைக்குள் ஒரு பிரிவு வாதிட்டது. முடிவில் பொதுச்சபை தேர்தலில் பங்கெடுக்கவில்லை.அதனால் பொதுக் கட்டமைப்பும் செயலிழந்து போனது.பொதுச்சபை தேரைக் கொண்டுவந்து தெருவில் விட்டுவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. அது தவறு. ஜனாதிபதித் தேர்தல் என்ற தேரை இழுத்த தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு அந்த தேரை தேர் முட்டிக்குள்தான் கொண்டு வந்து நிறுத்தியது. எனவே தேர் தெருவில் நிற்கிறது என்ற வாதம் சரியல்ல.மாறாக தொடர்ந்து தேர்தல் திருவிழாக்களை எதிர்கொள்ள தமிழ்மக்கள் பொதுச்சபை தயாரில்லை என்பதுதான் உரிய விளக்கம் ஆகும். இதுதொடர்பான இருதரப்பு விவாதங்களிலும் ஆழமான ஓர் உண்மை உண்டு. ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பு ஒரு தேர்தலாக அணுகவில்லை.அதற்குரிய அரசறிவியல் விளக்கத்தை அது கொண்டிருந்தது. ஆனால் அந்த விளக்கம் வாக்களித்த மக்களை முழுமையாக சென்றடையவில்லை. தமிழ்த் தேசிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலை ஒரு தேர்தலாகத்தான் பார்த்தார்கள்.பெரும்பாலானவர்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும் பொழுது தமிழ் வாக்கு தமிழருக்கு என்றுதான் சிந்தித்தார்கள். மாறாக தேர்தலை ஒரு தேர்தலாக கையாளாத களம் அது என்பது பெரும்பாலான வாக்காளர்களுக்கு விளங்கியிருக்கவில்லை.50 நாட்களுக்குள் அந்த விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய சக்தி தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் பொதுக் கட்டமைப்புக்கும் இருக்கவில்லை.எனவே வாக்காளர் மனோநிலை என்பது தொடர்ந்து தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும்;கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காணப்பட்டது. அதற்குக் காரணம் கட்சிகள்தான்.மக்கள் ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை உணர்கிறார்கள்.ஏதாவது ஒரு கூட்டு அல்லது யாராவது தலைவர்கள் வந்து தங்களுக்கு ஒரு புதிய வழியைக் காட்ட மாட்டார்களா என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.அதனால்தான் கலகக்காரனாக மேலெழுந்த ஒரு மருத்துவரை ஒருபகுதி மக்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள்.அதனால்தான் ஜேவிபியின் எழுச்சியை ஒருபகுதி மக்கள் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். அதனால்தான் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பும் தமிழ்மக்கள் பொதுச்சபையும் தொடர்ந்து தேர்தல்களில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களுடைய அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு மக்கள் அமைப்பு மன்னிப்பு கேட்டது.அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அது தொடர்பாக விளக்கம் அளித்தார்கள். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல அவர்கள் மக்களுக்கு உண்மையைக் கூறினார்கள்.பொது வாழ்வில் மக்களுக்கு உண்மையை கூறுவது மகிமையானது. அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு ஒரு வாழ்க்கை முறை வேண்டும். பொது வாழ்வில் ஈடுபடும் பெரும்பாலான பிரமுகர்கள் மக்களுக்குப் பொறுப்பு கூறுவதில்லை.தனது செயல்களுக்குப் பொறுப்புக்கூறும் துணிச்சல் மக்கள் அமைப்பிடம் உண்டு என்பதனால் அது நாடாளுமன்றத் தேர்தலைக் கையாளாமல் விட்டதற்கு மன்னிப்புக் கேட்டது. தேர்தலைக் கையாளாமல் விட்டதற்கு அரசறிவியல் விளக்கம் உண்டு.அதே சமயம் சங்குக்கு வாக்களித்த மக்களின் கூட்டுணர்வு வேறாக உள்ளது. மக்கள் மீண்டும் மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைத்து வாக்குகள் சிதறுவதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.அந்த எதிர்பார்ப்பை தொடர்ச்சியாக நிறைவேற்ற முடியாமைக்கு மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்டார்கள். மக்களைச் சிதறடித்தது கட்சிகள்தான்.அதற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதும் கட்சிகள்தான்.மக்களை ஆகக்குறைந்தபட்சம் ஒன்றுதிரட்டிய மக்கள்அமைப்பு அதைத்தொடர்ந்து எல்லாத் தேர்தல்களிலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாக்காளர்களின் கூட்டுஉணர்வை மதித்து பொறுப்பு கூறியது. அதை கட்சிகள் பின்பற்றுமா? சுயேட்சைகள் பின்பற்றுமா? கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமது மக்களுக்கு உண்மையை கூறாதவர்கள், பொய்யான வாக்குறுதிகளை வழங்கியவர்கள்,தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியவர்கள் அனைவரும் தமிழ்மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். பிரதான அரசியல்வாதிகளின் அணிகலன்களாக காணப்படும் இரண்டாம் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள் அநேகர் மீது ஊருக்குள் குற்றச்சாட்டுகள் உண்டு.பாலியல் குற்றச்சாட்டுக்கள்,ரகசிய டீல்கள் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உண்டு.தமது அணிகலன்களாக காணப்படும் இரண்டாம் மூன்றாம் நிலை முக்கியஸ்தர்கள் தொடர்பிலும் தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்பது தமிழ் படத்தில் வரும் கொமெடி வாக்கியமாக இருக்கலாம். ஆனால் தேசத்தை நிர்மாணிக்கும் அரசியலில் அது பகிடி அல்ல.பொறுப்புக்கூற வேண்டிய விடயம்.தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக் கூறுவார்களா? https://www.nillanthan.com/6939/
-
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்?- நிலாந்தன். adminOctober 13, 2024 கடந்த 15 ஆண்டுகளில் எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து, திரண்டு வாக்களித்தார்கள். அங்கே ஒரு திரட்சி இருந்தது. அதேசமயம் ஏனைய தேர்தல்களில் குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களைத் திரட்ட முடியவில்லை. தமிழ் மக்கள் சிதறி வாக்களித்தார்கள். இம்முறை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவானது அந்தச் சிதறலை மேலும் அதிகப்படுத்துமா? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுது “தேசமாகத் திரள்வோம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளாகச் சிதறுவோம் அல்லது குழுக்களாகச் சிதறுவோம் அல்லது கட்சிக்குள் அணிகளாகச் சிதறுவோம் அல்லது சுயேச்சைகளாகச் சிதறுவோம் என்ற கோஷத்தை முன்வைக்க வேண்டி வருமா? நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்த்தேசிய அரசியல் களம் அப்படித்தான் காட்சி தருகின்றது. தேசியவாத அரசியல் என்பது மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. மக்களை கூட்டுணர்வின் அடிப்படையில் ஒரு தேசமாகத் திரட்டுவது. ஆனால் கட்சிகள் மத்தியில் கூட்டுணர்வு இருந்தால்தான் அவை மக்களைக் கூட்டிக்கட்ட முடியும். கட்சிகள் மத்தியில் அது இல்லையென்றால் எப்படி மக்களைத் தேசமாகத் திரட்டுவது? உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஒரு தனிநபரின் கருவியாக மாறி அந்தத் தனிநபரை வெல்ல வைப்பதற்காக அவருடைய விசுவாசிகளை வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கின்றது. அந்த விசுவாசிகள் தமக்கு விசுவாசமான தலைவருக்காக வாக்குகளை சேகரித்துக் கொடுப்பார்கள். ஒரு மூத்த கட்சியானது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது என்னென்ன அளவுகோல்களை வைத்து அதைச் செய்திருக்க வேண்டும் ? ஆனால் அதைக் கேள்வி கேட்க வேண்டிய மூத்தவர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனும் என்ன செய்கிறார்கள்? சிறீதரனுடைய ஆதரவாளர்கள் ரஜினிகாந்தின் படத்தில் வரும் ஒரு பஞ் டயலாக்கை பரவலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். “சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாகத்தான் வரும். பன்றிகள்தான் கும்பலாக வரும்” என்ற வசனம் அது. அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி சிங்கங்களும் பன்றிகளுமாக,சிவஞானம் கூறுவதுபோல “அறுவான்களும் குறுக்கால போவான்களுமாக” சிதறிப்போகிறது என்று பொருள். அது தேசியக் கூட்டுணர்வோடு ஒரு திரட்சியாக இல்லை. வேட்பாளர் பட்டியல் வெளிவந்ததிலிருந்து கட்சிக்குள் மகளிர் அணியும் தவராசா அணியும் ஏனைய அணிகளும் நொதிக்கத் தொடங்கிவிட்டன. தவராசா அணி சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. இவ்வாறு தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் ஏற்கனவே தூர்ந்து போன கட்சியை மேலும் சிதைக்கக்கூடும். அவ்வாறு தமிழரசுக் கட்சி பலவீனமடையும் பொழுது அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேறு கட்சிகள் அல்லது வேறு கூட்டுக்கள் உண்டா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தேசியவாத அரசியல் குறித்த பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தரிசனங்களைக் கொண்டிராத ஒரு கட்சி. தங்களைத் தியாகிகள் ஆகவும் புனிதர்களாகவும் காட்டுவதற்காக மற்றவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டும் ஒரு கட்சி. தன்னை புத்திசாலிகள், கொள்கைவாதிகளின் கட்சியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு கட்சி. தேசம் என்பது புனிதர்கள், தியாகிகள், கொள்கைவாதிகளை மட்டும் கொண்டதல்ல. திருடர்கள், அயோக்கியர்கள், சமானியர்கள் என்று எல்லா வகைப்பட்டவர்களினதும் திரட்சிதான் தேசம். முன்னணியின் அரசியல் பெருந்திரட்சிக்கு உரியதல்ல. அதனால் முதன்மைக் கட்சியாக மேலுயர முன்னணியால் இதுவரை முடியவில்லை. அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றுக்கூடாகத்தான் கொள்கையைப் பரவலாக்கலாம், மக்கள் மயப்படுத்தலாம், அதை ஒரு திரண்ட அரசியல் சக்தியாக மாற்றலாம். தூய தங்கத்தை வைத்துக்கொண்டு ஆபரணம் செய்ய முடியாது. அதில் செம்பு கலக்க வேண்டும். செம்பைக் கலக்காவிட்டால் தங்கம் பிரயோகநிலைக்கு வராது. அப்படித்தான் நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்காவிட்டால் கொள்கை மக்கள் மயப்படாது. இதுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ள பிரதான பலவீனம். அவர்களால் தேசத்தைத் திரட்ட முடியாது. எனவே தமிழரசுக் கட்சி சிதையும்போது ஏற்படும் வெற்றிடத்தில் ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாக மாறி ஆசனங்களைக் கைப்பற்றத் தேவையான அரசியல் தரிசனமும் நெகிழ்வும் முன்னணியிடம் இல்லை. அடுத்தது குத்துவிளக்குக் கூட்டணி. அந்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலின் பின் சங்குச் சின்னத்தை கைப்பற்றியதன்மூலம் சங்குக் கூட்டணியாக மாறியிருக்கிறது. அங்கேயே சர்ச்சைகள் உண்டு. ஒரு கூட்டு வெற்றியை அதன் பங்காளிகளில் ஒரு பகுதி மட்டும் சுவவீகரிக்கப் பார்க்கின்றது. சங்கு இப்பொழுது தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பின் சின்னம் அல்ல. ஏனெனில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு இப்பொழுது இல்லை. அதற்குள் இருந்த தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் ஈடுபடவில்லை. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் தமிழ் மக்கள் கூட்டணியும் அக்கூட்டுக்குள் இல்லை. எனவே சங்கு பொதுக் கட்டமைப்பின் சின்னமல்ல. சங்குக்கு விழுந்த 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளும் சங்கச் சின்னத்தை எடுத்து வைத்திருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்குமா? சங்குக்கு விழுந்த வாக்குகள் தேசத் திரட்சிக்கு விழுந்த வாக்குகள். அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசத் திரட்சி என்ற அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். அரியநேத்திரன் ஒரு குறியீட்டு வேட்பாளர். ஏறக்குறைய ஒரு துறவிபோல அவர் தேர்தலில் நின்றார். அவருக்கு வாக்குத் திரட்டுவதற்காக மக்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் துறவிகளைப்போல சம்பளம் வாங்காமல் இரவு பகலாக வேலை செய்தார்கள். அவரை வேட்பாளராக முன்னிறுத்திய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கித்தான் உழைத்தன என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் பொது வேட்பாளரை நோக்கி அவர்கள் திரட்டிய வாக்குகள் பொதுவானவை. பொதுவான வாக்குகள் இப்பொழுது ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பாக உள்ள சங்குக் கூட்டணிக்கு மட்டும் கிடைக்குமா? கிடைக்காது. உதாரணமாக, கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி சங்குக்காக வேலை செய்தது. அது முழுமையாக வேலை செய்ததா இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அங்கு கிடைத்த வாக்குகளுக்குள் தமிழரசு கட்சியின் வாக்குகளே அதிகம் உண்டு. எனவே சிறீதரனா? சங்கா? என்று வரும் பொழுது சிறீதரனின் ஆதரவாளர்கள் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள். அப்படித்தான் மட்டக்களப்பிலும் அரிய நேத்திரனுக்காக சிறீ நேசனும் உட்பட பல மூத்த தமிழரசுக் கட்சிக்காரர்கள் ஒன்றாக நின்று உழைத்தார்கள். தங்களின் ஒருவருக்கு அவர்கள் பொதுவாக வாக்குத் திரட்டினார்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடைய வாக்குகள் வீட்டுக்குத் தான் விழும். சங்குக்கு அல்ல. அப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அருண் தப்பிமுத்து திரட்டிய வாக்குகளும் சங்குக்கு விழாது. மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சரவணபவன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் உட்பட பலரும் சங்கின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் சங்கு கூட்டணிக்குள் நிற்கவில்லை. மாறாக தவராசாவின் சுயேட்சைக் குழுவாக களமிறங்குகிறார்கள். அவர்கள் சங்குக்கு திரட்டிய வாக்குகள் இனி அவர்களுடைய சுயேச்சைக் குழுவுக்குத்தான் அதிகமாக விழும். அப்படித்தான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் சுயேச்சையாக நிற்கும் தமிழர் சம உரிமை அமைப்பும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்காக விசுவாசமாக உழைத்தது. அந்த அணி இப்பொழுது சுயேச்சையாகக் கேட்கின்றது. எனவே பொது வேட்பாளருக்காக அவர்கள் சேகரித்த வாக்குகள் அந்த சுயேச்சைக்கு விழுமா அல்லது சங்குக்கு விழுமா? தமிழ் மக்கள் சின்னத்தைப் பார்த்து மயங்குவார்களா? இதுதான் பிரச்சினை. ஒரு சன்னியாசி போல அரியநேத்திரன் தேர்தலில் நின்ற பொழுது தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு அவருக்கு வாக்களித்தார்கள். அதே கூட்டுணர்வோடு இப்பொழுது வாக்களிக்க மாட்டார்கள். கட்சி விசுவாசம், தனி நபர் விசுவாசம், பிரதேச விசுவாசம், ஊர் விசுவாசம் போன்ற பல காரணிகளாலும் வாக்குகள் சிதறடிக்கப்படும் ஆபத்து அதிகமுள்ள ஒரு தேர்தல் இது. மேற்சொன்ன அனைத்து விசுவாசங்களும் தேசியக் கூட்டுணர்வுக்கு விரோதமானவை. பொது வேட்பாளருக்கான தேர்தலில் பிரச்சாரப் பணிகள் தொடங்கிய போது “எமக்காக நாம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் தேர்தலில் “எனக்காக நான்” என்பதுதான் நடைமுறையாக உள்ளது. அடுத்தது, விக்னேஸ்வரனின் கட்சி. அது இப்போதைக்கு பிரதான நீரோட்டக் கட்சியாக பலமாக எழும் என்று நம்பமுடியாத ஒரு கட்சிச் சூழல்தான் காணப்படுகிறது. நடக்கவிருக்கும் தேர்தல் அந்த கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் காட்டும். தொகுத்துப்பார்த்தல், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சங்குக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜேவிபியின் கூட்டணி, சுயேச்சைக் குழுக்கள் என்று மொத்தம் 44 தரப்புகள் தமிழ் வாக்குகளைக் கேட்கப் போகின்றன. இதில் அனுர அலை எந்த அளவுக்கு வாக்குகளைக் கவரும் என்பதை இப்பொழுது மதிப்பிடுவது கடினம். இப்படி ஒரு நிலையை கிழக்கில் அனுமதித்தால், குறிப்பாக திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அங்குள்ள சிவில் சமூகங்களிடம் உண்டு. திருகோணமலையில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் இது தொடர்பில் தலையிட்டிருக்கிறார். அங்கே போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதனால் வாக்குகள் சிதறுவது தடுக்கப்பட்டு குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதித்துவமாவது பாதுகாக்கப்படலாம். ஆனால் அம்பாறையில் நிலைமை அவ்வாறில்லை. ஆகமொத்தம் வரும் நாடாளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களை வாக்காளர்களாகச் சிதறடிக்கப் போகிறது. சில கிழமைகளுக்கு முன்பு தேசமாகத் திரள்வோம் என்ற கோஷம் ஜனாதிபதித் தேர்தலில் பலமாக ஒலித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளாகச் சிதறும் ஆபத்தே அதிகரித்து வருகின்றது. எனது நண்பர் ஒருவர் பின்வருமாறு கேட்டார் “இப்படியே சிதறிப்போனால் சனங்கள் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்” என்று சலிப்படையக்கூடுமா? https://www.nillanthan.com/6934/
-
பார் பெர்மிற் – நிலாந்தன் அரசுத் தலைவர் அனுர, பார் பெர்மிற் – மதுச்சாலை அனுமதிகள் தொடர்பான விடயத்தைக் கைவிட்டாலும் சுமந்திரன் அதனைக் கைவிட மாட்டார் போலத் தெரிகிறது என்று ஒரு வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் முகநூலில் எழுதியுள்ளார். அதில் உண்மை உண்டு. தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பகுதியினருக்கு ரணில் விக்கிரமசிங்க மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் அதிகமாக முன்வைத்ததும் அதைப் பிரசித்தப்படுத்தியதும் சுமந்திரனும் அவருடைய அணியினரும்தான். ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசப்படுத்துவதற்கு அவ்வாறு மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கியதாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே தமது சொந்த மக்களுக்கு மது விற்கிறார்கள் என்பது தமிழ் பொது உளவியலில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய ஒரு குற்றச்சாட்டு. சுமந்திரன் அதை நன்கு விளங்கி தனக்கு எதிரான தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதனை திட்டமிட்டுக் கட்டமைத்து வருகிறார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் மதுச்சாலைகளுக்கான அனுமதிப் பத்திரத்தை அல்லது எரிபொருள் விற்பனை நிலையத்துக்கான அனுமதிப் பத்திரத்தை வாங்குகிறார்கள், மதுசாலைகளையும் எரிபொருள் விற்பனை நிலையங்களையும் தாங்களே நடத்துகிறார்கள் அல்லது தங்களுடைய பினாமிகளுக்கு ஊடாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியது அல்ல. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் தொகையாக ஒரு தொகுதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவ்வாறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது இதுதான் முதல் தடவை. அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறுமைப்படுத்தலாம், மக்கள் முன் அம்பலப்படுத்தலாம் அவமானப்படுத்தலாம். அவர்களுடைய வாக்காளர்கள் மத்தியிலேயே அவர்களுடைய மதிப்பைக் குறைக்கலாம். அவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதையும் தடுக்கலாம். தமிழ்ப் பொதுப் புத்திக்குள் குடியாமை அதாவது மது அருந்தாமை என்பது ஓர் ஒழுக்கமாக கருதப்படுகின்றது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய பல சான்றோர், துறைசார் நிபுணர்கள் மதுப்பிரியர்களாக இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். இங்கே பிரச்சினை எங்கு வருகிறது என்றால் மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான். அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய விக்னேஸ்வரன் அதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதன் விளைவாக இப்பொழுது சர்ச்சைகளுக்குள் சிக்கியிருக்கின்றார். ஆனால் குற்றஞ்சாட்டப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவர் ஒருவர் தான் இதுவரை குற்றச்சாட்டு தொடர்பாக தனது வாக்காளர்களுக்கு தன்னிலை விளக்கத்தை வழங்கியிருக்கிறார். ஏனைய யாருமே அது தொடர்பாக வாய் திறக்கவில்லை. அரசுத் தலைவர் அந்தப் பட்டியலை வெளிவிடும்வரை காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் குற்றச்சாட்டுகளில் உண்மை உண்டா இல்லையா என்பதனை தமது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களில் மட்டுமல்ல காசுப் பெட்டி கைமாறியது, கள்ள டீல்கள் செய்தது போன்றவை தொடர்பாகவும் வாய்திறக்க வேண்டும். இவை தொடர்பில் அவர்கள் கள்ள மௌணம் சாதிக்க முடியாது. இவைபோன்ற விடயங்களில் தமது சொந்த மக்களுக்குப் பொறுப்புக்கூற முடியாத அல்லது பதிலளிக்க முடியாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். தென்னிலங்கையில் இப்பொழுது “அனுர அலை” ஒன்று அடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ் நோக்கு நிலையில் அது மெய்யான மாற்றம் இல்லைத்தான். ஆனாலும் அரசியலில் நேர்மையானவர்களையும் கண்ணியமானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்ற பொது ஜன விருப்பத்தை அது மீண்டும் அரங்கில் பேசுபொருள் ஆக்கியிருக்கிறது. அந்த அலை தமிழ் மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், கண்ணியமானவர்கள் போட்டியிட வேண்டும். குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலை தேக்க நிலையில் வைத்திருப்பதற்கு பொறுப்பானவர்களும் போட்டியிடக் கூடாது என்ற கோரிக்கைகள் வலிமையாக மேலெழுகின்றன. பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், தமது மக்களுக்கு பொறுப்புக் கூறத்தக்க நேர்மையானவர்கள், தகுதியுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக மேலெழுகின்றன. இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சுமந்திரன் அணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு வலிமை உண்டு. தமிழ்ப் பொது புத்தியை பொறுத்தவரை மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றது, அல்லது தமது பினாமிகளின் ஊடாக மதுச்சாலைகளை நிர்வகிப்பது என்பது அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கூடியது. ஆனால் தன் அரசியல் எதிரிகளை அவ்வாறு தகுதி நீக்கம் செய்ய முற்படும் சுமந்திரன் அணி அந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தகுதியுடையதா? ஏனெனில் சுமந்திரன் எப்படிப்பட்ட ஒரு அரசியலை செய்கின்றார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியலைத்தான் அவர் செய்து வருகிறார். அவர் எல்லாவற்றையும் கொட்டிக் குலைக்கிறார். தனது சொந்தக் கட்சியையும் கொட்டிக்குலைக்கிறார். அவரும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஒருவர்தான். அதைவிட முக்கியமாக, தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்புத் தொடர்பில் பொறுப்புக்கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடந்த பொழுது ஐநா கூட்டத் தொடரும் நடந்து கொண்டிருந்தது. அங்கே போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சஜித் பிரேமதாச பொறுப்புக்கூறல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை. பொறுப்புக்கூறல் எனப்படுவது இறந்த காலத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது. இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரற்ற ஒரு தலைவர் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் எப்படிப் பொறுப்புக் கூறுவார்? இந்த விடயத்தில் பொறுப்புக் கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு அரசியல்வாதி, தமிழ் அரசியலை எங்கே கொண்டு போய் நிறுத்த முயற்சிக்கின்றார்? தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத் தர முயற்சிக்கின்றார்? பிரதான அரசியல் விவகாரத்தில் தனது சொந்த மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஓர் அரசியல்வாதி தனது அரசியல் எதிரிகள் சலுகையாக மதுச்சாலை அனுமதிகளைப் பெற்றது குறித்துக் குற்றம் சாட்டுகிறார். தனது அரசியல் எதிரிகளை சிறுமைப்படுத்தித் தோற்கடிக்க முயற்சிக்கும் அவர் எப்படிப்பட்ட ஓர் அரசியலை முன்னெடுக்கிறார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் ஓர் அரசியலைத்தானே முன்னெடுக்கிறார்? தனது அரசியல் எதிரிகளைக் குற்றஞ் சாட்டுவதன் மூலம் அவர் தன்னை குற்றமற்றவராகக் காட்டப் பார்க்கிறாரா? கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது குற்றங்கள் மிகுந்ததாக, கண்ணியமற்றதாக, நேர்மையற்றதாக மொத்தத்தில் பொறுப்புக்கூறத் தயாரற்றதாக மாறிவிட்டது. அதற்கு சம்பந்தரும் பொறுப்பு, சுமந்திரனும் பொறுப்பு. சுமந்திரனை குற்றஞ்சாட்டும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பு. ஆனால் அதைத் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான சக்திகள் மிகவும் தந்திரமாக திட்டமிட்டு பயன்படுத்துகின்றன. எப்படியென்றால், தமிழ் மக்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதிகளையே அவர்கள் முன் குற்றவாளிகளாகக் காட்டி, சிறுமைப்படுத்தி, கீழ்மைப்படுத்தி தமது சொந்த பிரதிநிதிகளை தமிழ் மக்கள் நம்ப முடியாத ஒரு சூழலை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது எங்கே கொண்டு போய்விடும்? தமது சொந்தப் பிரதிநிதிகளின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அலைக்குப் பின் போகக்கூடிய வாய்ப்புகளை அதிகப்படுத்தும். தமிழ் வாக்குகள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே போகும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும். இதை இப்படி எழுதுவதற்காக இக்கட்டுரையானது மதுச்சாலை அனுமதிகளைப் பெற்ற அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தக்கூடாது என்று கூறுவதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தமது வாக்காளர்களுக்குப் பொறுப்புக்கூறும் தகுதியற்றவர்கள் அனைவரையும் தமிழ் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். ஆனால் அதனை தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டும். தமிழ் மக்களை ஒரு இனமாகத் திரட்டுவது; தேசமாகத் திரட்டுவது என்ற நோக்கு நிலையிலிருந்து செய்ய வேண்டும். தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கு நிலையிலிருந்து செய்ய முடியாது. தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியல்வாதிகள் அதைச் செய்வது என்பது தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்க முற்படும் வெளித் தரப்புகளுக்குத்தான் சேவகம் செய்யும். மாறாக தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கு நிலையில் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள நேர்மையற்றவர்கள், கண்ணியமற்றவர்கள், நபுஞ்சகர்கள், நசியல் பேர்வழிகள், வழிந்தோடிகள், டீலர்கள் போன்றவர்களைத் தமிழ்மக்கள் தோற்கடிக்க வேண்டும். https://www.nillanthan.com/6916/
-
அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர். அப்படிப்பட்ட ஓரமைப்பின் தலைவர் இப்பொழுது நாட்டின் அரசுத் தலைவராக வந்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் பதவி வரையிலுமான இந்த வளர்ச்சியை ஏற்கனவே ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களாகிய தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். அதன் பொருள் அனுரவின் மாற்றம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அல்லது இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வை நம்ப வேண்டும் என்பதோ அல்ல. ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் வரையிலுமான ஜேவிபியின் வெற்றிக்குள் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டு. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படுகின்ற புதிய கூட்டை தமிழ் மக்கள் விருப்பு வெறுப்பு இன்றிக் கற்க வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு அது. ஆயுதப் போராட்ட மரபில் வந்த ஓர் அமைப்பும் புத்திஜீவிகளும் இணைந்து அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அக்கூட்டின் மையக் கட்டமைப்புக்குள் 73 உறுப்பினர்கள் உண்டு. அதில் அறுவர் மட்டுமே தமிழர்கள். அங்கு இன விகிதாசாரம் பேணப்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியை ஆதரிக்கும் சில படித்தவர்கள் இம்முறை தேர்தலில் இனவாதம் பின்வாங்கி விட்டது என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். தமிழ் பொது வேட்பாளர் இனவாதத்தை முன் வைத்ததாகவும் விமர்சிக்கின்றார்கள். ஆனால் “அரகலிய” போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியது போல, தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதம் பெரிய அளவில் கதைக்கப்படவில்லை என்பதை வைத்து இனவாதம் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது. அனுர கூறும் மாற்றம் எனப்படுவது இனவாதம் இல்லாத ஓர் இலங்கை தீவா? இது தேர்தல் காலம் மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் சபையின் பொறுப்புக் கூறலுக்கான விவாதங்கள் நடக்கும் ஒரு காலகட்டமும் ஆகும். வரும் ஏழாம் திகதி வரையிலும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறும். இதில் பொறுப்புக் கூறல் தொடர்பில் அனுரவின் நிலைப்பாடு என்ன? அசோசியேட்டட் பிரஸ் என்ற ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வியை இங்கு பார்க்கலாம் “பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்வியைப் பொறுத்தவரை அது பழிவாங்குகலுக்கான ஒரு வழியாக அமையக்கூடாது. யாரையாவது குற்றச்சாட்டுவதாகவும் அமையக்கூடாது. மாறாக உண்மையைக் கண்டுபிடிப்பதாக மட்டும் அமைய வேண்டும்….. பாதிக்கப்பட்ட மக்கள் கூட யாராவது தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் என்ன நடந்தது என்பதனை அறிவதற்கு மட்டும்தான் விரும்புகிறார்கள் ” என்று அனுர கூறுகிறார். அதாவது அவர் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குத் தயாரில்லை. குற்றங்களை விசாரிப்பது உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு என்று கூறுகிறார். ஆயின் யார் குற்றவாளி என்ற உண்மையை கண்டுபிடித்த பின் அவரை தண்டிக்காமல் விட வேண்டும் என்று அவர் கூற வருகிறாரா? பாதிக்கப்பட்ட மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அவருக்கு யார் சொன்னது? அதாவது அனுர பொறுப்புக் கூறுவதற்குத் தயார் இல்லை. குற்றவாளிகளைப் பாதுகாப்பது என்பதே இனவாதம்தான். நாட்டின் இனவாதச் சூழலை அனுர மாற்றுவார் என்று தமிழ் மக்களை நம்ப வைப்பதாக இருந்தால் அவர், கடந்த காலங்களில் அவருடைய கட்சி குறிப்பாக அவர் தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த இரண்டு பிரதான நிலைப்பாடுகளுக்கு பொறுப்புக் கூறுவாரா? மன்னிப்புக் கேட்பாரா? தமிழ் மக்களின் தாயகத்தை அதாவது வடக்கையும் கிழக்கையும் சட்ட ரீதியாகப் பிரித்தது ஜேவிபிதான். இது முதலாவது. இரண்டாவது, சுனாமிக்குப் பின்னரான சுனாமிப் பொதுக் கட்டமைப்பை எதிர்த்து அனுர தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார். சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எனப்படுவது மனிதாபிமான நோக்கங்களுக்கானது. இயற்கைப் பேரழிவு ஒன்றுக்குப் பின் உருவாக்கப்பட இருந்த மனிதாபிமானக் கட்டமைப்பு அது. அதைக் கூட எதிர்த்த ஒருவர் இப்பொழுது அதற்கு பொறுப்பு கூறுவாரா? தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? அவரிடம் இனவாதம் இல்லை என்று கூறி அவருக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாகக் கேட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள படித்தவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? அதுமட்டுமல்ல தமிழ் பொது வேட்பாளரோடு அனுர பேச முற்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தமிழ் பொது வேட்பாளரோடு உரையாடத் தயாராக இருந்தார்கள். ஆனால் அனுர உரையாடத் தயாராக இருக்கவில்லை. யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திடம் ஜேவிபி அதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பிடம் அவர் உத்தியோகபூர்வமான கோரிக்கைகள் எவற்றையும் முன் வைத்திருக்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளரை அவர் பொருட்படுத்தவில்லை. அதாவது தமிழ் வாக்குகளை அவர் பொருட்படுத்தவில்லை ? அவர் பதவியேற்றபோது தேசிய கீதம் இசைக்கப்படுகையில் ஒரு பகுதி பிக்குகள் எழுந்து நின்றமையை சில தமிழர்கள் பெரிய மாற்றமாகச் சித்திருக்கிறார்கள். ஆனால் பதவியேற்ற போது பௌத்தப்பிக்குகளின் முன் அவர் மண்டியிட்டு அமர்ந்து ஆசீர்வாதம் பெறுவதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர் இடதுசாரி மரபில் வந்த ஒரு தலைவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரால் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் வழமைகளை மீறிச் செயல்பட முடியவில்லை என்பதைத்தான் அந்த ஆசீர்வாதம் பெறும் நிகழ்ச்சி நமக்கு உணர்த்தியது. அந்த மத ரீதியான சிஸ்டத்தை அவரால் மாற்ற முடியவில்லை. அவரும் அந்த சிஸ்டத்தின் கைதிதான். அதனால்தான் தமிழ் மக்கள் அவர் கூறும் மாற்றத்தை அதாவது சிஸ்டத்தில் மாற்றம் என்பதனை சந்தேகத்தோடு பார்க்கின்றார்கள். ஏனெனில், தமிழ் மக்கள் கேட்பது மேலோட்டமான சிஸ்டத்தில் மாற்றத்தை அல்ல. தமிழ் மக்கள் கேட்பது அதைவிட ஆழமான கட்டமைப்பு மாற்றத்தை. ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் மாற்றம். அதைச் செய்ய அனுராவால் முடியுமா? பதவியேற்ற பின் அவர் ஆற்றிய உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பின்வருமாறு கூறுகிறார்.. “சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம். தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.” இது அரசியல் அடர்த்தி குறைந்த வார்த்தைகளால் வழங்கப்படும் கவர்ச்சியான ஆனால் மேலோட்டமான வாக்குறுதி. இப்படிப்பட்ட லிபரல் வாக்குறுதிகள் பலவற்றை தமிழ் மக்கள் ஏற்கனவே கடந்து வந்து விட்டார்கள். தமிழ் மக்கள் கேட்பது அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தும் கடடமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள், தேசங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ளும் மாற்றத்தை. அந்த அடிப்படையில் வழங்கப்படும் ஒரு தீர்வை. தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கும் ஒரு தீர்வை. அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அனுரவால் முடியுமா? https://www.nillanthan.com/6909/
-
தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது -நிலாந்தன் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் முன்வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால், அவர் இந்தியாவின் ஆள் என்ற சந்தேகம். அதனால், பொது வேட்பாளரை இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று சந்தேகித்தார்கள். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை தொடர்ந்து வளர்த்துச் சென்றபடியால் அதுவும் இந்தியாவின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம். இம்முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த விடயத்தை கையில் எடுத்தார். அதனால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தவர்கள் மேலும் உஷாரானார்கள். அதன்பின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு காணொளி ஊடகத்தின் அனுசரணையோடு இயங்கிய ஒரு குடிமக்கள் சமூகம் பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தியது. அக்குடிமக்கள் சமூகத்தின் பிரதானியாக இருப்பவர் 13ஆவது திருத்தத்தை தொடர்ச்சியாக ஆதரித்து வருபவர். அவர் அதை வெளிப்படையாகத்தான் செய்கிறார். எனவே அந்தச்சிவில் சமூகம் இந்த விடயத்தைக் கையில் எடுத்த காரணத்தால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் அதிகரித்தது. முடிவில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய பொழுது, அதில் உள்வாங்கப்பட்ட பெரும்பாலான கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியவை. அதனால் சந்தேகம் மேலும் கூடியது. மேற்சொன்ன சந்தேகங்கள் அவ்வளவும் போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு. எதுக்கெடுத்தாலும் இந்தியாவின் சதி என்று குற்றஞ்சாட்டும் அக்கட்சியானது, பொது வேட்பாளர் என்ற விடயம் இந்தியாவின் அனுசரணையோடு மேடையேற்றப்படும் நாடகம் என்று கூறிவருகிறது. அதேசமயம் பொது வேட்பாளரைக் கண்டு பயப்படும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியானது அதனை வேறுவிதமாக அணுகியது. சுமந்திரன் இந்தியத் தூதுவரை சந்தித்து பொது வேட்பாளர் தொடர்பாகவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் அவர் தெரிவித்த கருத்துக்களை தனக்கு விசுவாசமான பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியே கொண்டு வந்தார். அந்தச் செய்திகள் யாவும் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை; தென்னிலங்கையில் உள்ள யாரோ ஒரு வேட்பாளரோடு பேச்சுவார்த்தைக்கு போகுமாறு கேட்கிறது என்பதைச் சாராம்சமாகக் கொண்டிருந்தன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்த எந்த ஒரு இந்திய பிரதானியும் இதுவரை பொது வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதே தொகுக்கப்பட்ட அவதானிப்பு ஆகும். தமிழரசு கட்சிக்குள் சிறீதரன் அணி பொது வேட்பாளரை வலிமையாக ஆதரிக்கிறது. சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான மோதலுக்குள் பொது வேட்பாளர் எப்பொழுதோ சிக்கிவிட்டார். இந்நிலையில் சிறீதரனை பலவீனப்படுத்துவதற்காகவும் பொது வேட்பாளரைப் பலவீனப்படுத்துவதற்காகவும் இந்தியா பொதுவேட்பாளர் என்ற தெரிவைக் குறித்து மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை சுமந்திரனுக்கு நெருக்கமான பத்திரிகைகள் அடிக்கடி பிரசுரித்தன. அதன்மூலம் சிறீதரன் இந்தியாவுக்கு விருப்பமில்லாத ஒரு விடயத்தை செய்கிறார் என்பதை அவருக்கு குறிப்பாலுணர்த்த முற்பட்டன. ஆனால் இந்த இடத்தில் அப்பாவித்தனமான ஒரு கேள்வி எழும். பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட் என்றால் பிறகு ஏன் இந்திய ராஜதந்திரிகளும் பிரதானிகளும் அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்கள்? கடந்த வாரத்துக்கு முதல் வாரம் இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித்குமார் டோவால் கொழும்புக்கு வந்திருந்தார். அவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். அச்சந்திப்பின்போது அவர் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு அதாவது பொது வேட்பாளரை முன்னிறுத்தும் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கும் வகிக்கும் கட்சிகளும் கலந்து கொண்டன. எனவே அக்கட்சிகளுக்கும் அவர் சொன்ன செய்தி அதுதான். இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்பதனை அவர்கள் மறைமுகமாக உணர்த்த முற்படுகின்றார்கள். இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அவ்வாறு கூறிய பின்னரும் அது இந்தியாவின் ப்ரொஜக்ட்தான் என்று நம்புகிறவர்கள் இப்பொழுதும் நாட்டில் உண்டு. இந்த விடயத்தோடு தொடர்புடைய மற்றொரு சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் கிளிநொச்சிக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சமத்துவ கட்சியின் தலைவர் சந்திரகுமாரை சந்தித்திருக்கிறார்கள். அதன்பின் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கிறார்கள். மேற்படி சந்திப்பானது சிறீதரனுக்கு சில செய்திகளை உணர்த்தும் நோக்கிலானது என்று அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகின்றது. சிறீதரனுடைய பலமான கோட்டையான கிளிநொச்சியில் அவருடைய அரசியல் எதிரியான சந்திரக்குமாரை அவருடைய அலுவலகத்திலேயே இந்தியத் துணைத் தூதுவர் தேடிச்சென்று சந்தித்து அவருக்கு ஒரு அந்தஸ்தை கொடுத்தமை என்பதும், சந்திப்பின்போது சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குமாறு சூசகமாக வலியுறுத்தியமை என்பதும் சிறீதரனுக்கு சில விடயங்களை உணர்த்தும் நோக்கிலானவை. அதாவது பொது வேட்பாளரின் விடயத்தில் இந்தியா ஆதரவாக இல்லை. எனவே பொது வேட்பாளருக்கு எதிராக சஜித்தை ஆதரிக்கும் சந்திரகுமாரை தேடிச் சென்று சந்தித்ததன் மூலம் இந்தியா சிறீதரனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முற்படுகின்றதா? எனினும் அச்செய்தி வெளிவந்த பின்னர்தான் சிறீதரன் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அவருடைய கட்சி செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எவ்வாறு பொது வேட்பாளருக்கு ஆதரவான பணிகளை திட்டமிட்டுப் பரவலாக்கலாம் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதாவது சிறீதரன் பொது வேட்பாளரின் விடயத்தில் தொடர்ந்து உறுதியாக நிற்கிறார் என்ற செய்தி அந்த கூட்டத்தில் உண்டு. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறீதரனுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதன் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அதுவும் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்பதனை வெளிப்படுத்தியது. இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது ஓரளவுக்கு வெளிப்படையாகத் தெரியத்தொடங்கிவிட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் , கொழும்பில் உள்ள இந்தியத் தூதர், யாழ்ப்பாணத்தில் உள்ள உபதூதுவர் போன்றவர்கள் தென்னிலங்கையில் உள்ள யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிக்குமாறு கூறிவரும் ஒரு பின்னணியில், பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று கூறுவது எந்த வகை அறிவியல்? அவ்வாறு சந்தேகிப்பவர்கள் மேலும் ஒரு தர்க்கத்தை முன்வைக்கின்றார்கள். பொது வேட்பாளர் சஜித்தின் வாக்குகளைக் கவர்ந்தால் ரணில் வெல்வார். எனவே ரணிலை வெல்லவைக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை பொது வேட்பாளர் நிறைவேற்றுகிறார் என்று ஒரு வியாக்கியானம். முதலாவதாக ரணில் ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்புகின்றது என்பது சரியா? ரணில் விக்கிரமசிங்க புத்திசாலி; தந்திரசாலி; முதிர்ச்சியானவர். அவர் எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துச் சமாளிக்கக் கூடியவர் என்பது ஒரு பொதுவான அவதானிப்பு ஆகும். அவ்வாறு எல்லா நாடுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒரு தலைவர் தெரிவு செய்யப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பது ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்த பொழுது தெரிய வந்தது. அதில் இந்தியா ரணிலுக்கு எதிராக நின்ற டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு தமிழ் கட்சித் தலைவர்களை கேட்டிருந்தது. கடந்த சில வார கால நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா வெளிப்படையாகவே சஜித்தை ஆதரிக்குமாறு கேட்கிறது என்று தெரிகிறது. அப்படியென்றால் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று பொருள். இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று தெரிந்த பின்னரும் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் அணியை இந்தியா இயக்குகிறது என்று கூறுவது எந்த வகை அறிவியல் ? ரணிலை வெல்ல வைப்பதற்கான இந்தியாவின் நிகழ்ச்சி நிரலைத்தான் பொது வேட்பாளர் முன்னெடுக்கிறார் என்ற சூழ்ச்சிக்கு கோட்பபாடு சரியென்றால் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிரமான நிலைப்பாடுகள் தென்னிலங்கையில் யுத்த வெற்றிவாதத்தை தக்க வைக்க உதவும். அதன்படி மஹிந்த ராஜபக்சவை பலமாக வைத்திருப்பதுதான் முன்னணியின் மறைமுக நிகழ்ச்சிநிரல் என்ற சூழ்ச்சிக் கோட்பாடும் சரியா?அல்லது பகிஷ்கரிப்பானது தென்னிலங்கை வேட்பாளர்கள் யாரோ ஒருவருக்கு சாதகமானது என்று வியாக்கியானப்படுத்தலாமா? ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் விழும் மொத்த வாக்குகளில் ஐம்பது விகிதத்துக்கு மேல் எடுப்பவர்தான் ஜனாதிபதியாக வரலாம். ஆனால் தமிழ் மக்கள் வாக்களிக்காவிட்டால் விழும் வாக்குகளின் எண்ணிக்கை குறையும். அதனால் விழுந்த வாக்குகளில் 50 விகிதம் என்பது ஒப்பீட்டளவில் குறையும். அது தென்னிலங்கை வேட்பாளர்களுக்குச் சாதகமானது. எனவே பாகிஸ்தரிப்பானது தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு சாதகமானது என்று ஒரு வியாக்கியானத்தைச் செய்தால் அதற்கு என்ன பதில்? அதைவிட மேலும் ஒரு ஆழமான கேள்வியை இங்கு கேட்கலாம். உலகில் உள்ள எந்த ஒரு பேரரசும் அயலில் உள்ள சிறிய இனத்தை அல்லது நாட்டை ஒற்றுமைப்படுத்த விரும்புமா? அல்லது “டிவைட் அண்ட் ரூல்” என்று ஆங்கிலத்தில் கூறப்படுவதுபோல பிரித்துக் கையாள முயற்சிக்குமா? இந்தப் பூமிப் பந்தில் சிதறிப் போய் இருக்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை ஒன்றாகத் திரட்ட வேண்டுமா இல்லையா? தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வை,தேசிய உணர்வை பலப்படுத்த வேண்டுமா இல்லையா?அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதானே தேசியவாத அரசியல்? ஒரு மக்கள் கூட்டத்தை அவ்வாறு ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை ஒரு பக்கத்துப் பேரரசின் சதிவேலை என்று சந்தேகிக்கும் அறிவாளிகள் தங்களுடைய இனத்தை அவமதிக்கிறார்கள்; தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களை அவமதிக்கிறார்கள். முற்கற்பிதங்களும் சந்தேகங்களும் ஊகங்களும் அவர்களுடைய அறிவை மழுங்கடித்துவிட்டன. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமது சொந்த மக்களைச் சிதறடிக்கும் சக்திகளுக்குச் சேவகஞ் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தேசிய இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகளே. எனவே அவற்றுக்கு உள்நாட்டுத் தீர்வு கிடையாது. அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. அப்படிப் பார்த்தால் அனைத்துலகத்தில் ஆதரவு அணியைத் திரட்டாமல் தீர்வு கிடைக்காது. அனைத்துலகத்தைத் திரட்டுவதென்றால் முதலில் ஈழத் தமிழர்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்களைத் திரட்டாமல் அனைத்துலக சமூகத்தை எப்படித் திரட்டலாம் என்று யாராவது கூறுவீர்களா? https://www.nillanthan.com/6904/
-
தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வந்துவிட்டது. அந்த அறிக்கையானது பின்வரும் விடயங்களை தெளிவாக முன் வைக்கின்றது. முதலாவதாக, அது தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம் என்று கூறுகின்றது. அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பன்னாட்டுப் பொறிமுறையின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இரண்டாவதாக, அந்த அறிக்கையானது ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வுகளை நிராகரிக்கின்றது. அதேசமயம் இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கை தீவின் புதிய யாப்பானது பன்மை தேசிய அரசாக கட்டமைக்கப்பட்ட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. மூன்றாவதாக, இன அழிப்புக்கு எதிரான பரிகார நீதியை அந்த அறிக்கை கோரி நிற்கின்றது. பரிகாரநீதி என்பது அதன் அதன் பிரயோக வடிவத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை உள்ளடக்கியதுதான் என்ற ஒரு வியாக்கியானம் உண்டு. அந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடக்கின்றன. அந்த அறிக்கையில் பன்மைத் தேசியம் என்ற பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பன்மைத் தேசிய அரசு என்ற பதம் கடந்த தசாப்தங்களில் அறிமுகத்துக்கு வந்தது.1980 களின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடாகிய பொலிவியாவில் சுதேச மலைவாழ் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர்களால் பிரயோகிக்கப்பட்ட வார்த்தை அது.பொலிவியாவின் புதிய யாப்பின்படி அங்கு இருப்பது பன்மை தேசிய அரசு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் எங்கேயும் பொலிவியா என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை. பன்மைத் தேசிய பண்புடைய ஒரு அரசைக் கட்டமைக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே தவிர பொலிவியாவைப்போல என்று கூறப்படவில்லை. பொலிவியாவில் இருப்பது போன்ற ஒரு தீர்வை இங்கு உருவாக்க வேண்டும் என்று அந்த தேர்தல் அறிக்கை எங்கேயும் கேட்கவில்லை. தேர்தல் அறிக்கையில் இருப்பது ஒரு கருத்துருவதைக் குறிக்கும் வார்த்தை.பொலிவியாவில் இருப்பது ஒரு கட்டமைப்பு.இரண்டையும் ஒன்றை மற்றத்துடன் மாறாட்டம் செய்யத் தேவையில்லை.மேலும்,கஜேந்திரக்குமார் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ற் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாரும்போது அந்த வார்தையைப் பயன்படுத்துகிறார்.அவர் தனது உரையில் “ஸ்ரீலங்கா ஒரு பன்மைத் \தேசிய நாடு”என்று கூறுகிறார்.அவர் அப்படிக் கூறியதற்காக, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது, அவருடைய கட்சியின் பகிஷ்கரிப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது என்று பொருள் கொள்ளலாமா? அந்த தேர்தல் அறிக்கை மிகத் தெளிவாக ஈழத் தமிழர்கள் இறமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம்; தேசம் என்று கூறுகின்றது. ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வை அது நிராகரிக்கின்றது. அதுமட்டுமில்லை,அந்த தேர்தல் அறிக்கையானது நிலை மாறுகால நீதியை நிராகரித்து, பரிகார நீதியைக் கேட்கின்றது. பரிகார நீதி என்பது இனப்படுகொலைக்கு எதிராகத் தரப்படுவது. அது பெரும்பாலும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் தனக்கு என்ன தேவை என்பதனை அதன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் கேட்பதற்கு உரிமை உடையது என்பதனை ஏற்றுக் கொள்கிறது.அந்த அடிப்படையில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அந்த மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என்பதே பரிகாரநீதியின் பிரயோக யதார்த்தமாக காணப்படுகின்றது. ஆனால் தேர்தல் அறிக்கையில் பொதுஜனவாக்கடுப்பு வெளிப்படையாக கேட்கப்படவில்லை, பொலிவியாவைப்போல ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வு கேட்கப்படுகிறது என்றெல்லாம் வியாக்கியானங்கள் தரப்படுகின்றன. இந்த வியாக்கியானங்கள் உள்நோக்கமுடையவை. அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் மேலோட்டமாக வாசித்து விட்டு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அவை. சுருக்கமாகச் சொன்னால் யானை பார்த்த குருடர்களின் விமர்சனங்கள். தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்பது கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 40 நாள் குழந்தை அது.ஒரு 40 நாள் வயதான ஒரு கட்டமைப்பானது ஒரு பொது முடிவுக்கு வருவதில் பல நெருக்கடிகள் இருக்கும். அந்த கட்டமைப்புக்குள் ஏழு மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் 7 கட்சித் தலைவர்களும் உண்டு. மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்குள்ளும் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்ட சிவில் சமூகங்கள் உண்டு. அதுபோல கட்சித் தலைவர்கள் மத்தியிலும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உண்டு. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னுறுத்தும் விடயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள். அதற்காக எல்லா விடயங்களிலும் அவர்கள் உருகி பிணைந்த ஒரு கட்டமைப்பாக மாறிவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடு. ஒரு புதிய பண்பாடு. இது இனிமேல் எப்படி வளரப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபையில் உறுப்பாக உள்ள குடிமக்கள் சமூகம் ஒன்று அந்த அறிக்கையில் 13ஆவது திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் வர வேண்டும் என்று கேட்டது. அதுபோல தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில பொது வாக்கெடுப்பை வெளிப்படையாக கேட்க வேண்டாம் என்று வலியுறுத்தின.மொத்தம் 14 பேர்களைக் கொண்ட அந்த கட்டமைப்புக்குள் ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.அந்த பொது முடிவுதான் வெளிவந்திருக்கும் தேர்தல் அறிக்கையாகும். அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் அதை விமர்சிப்பவர்கள் பெருமளவுக்கு தாங்கள் எதிர்பார்த்த தீர்வு முன்மொழிவுகள் அங்கே இல்லை என்பதை ஒரு காரணமாக முன்வைக்கின்றார்கள்.ஒரு பகுதியினர் சமஸ்ரி என்பது தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு என்ற விடயம் வெளிப்படையாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தாங்கள் வசிக்கும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களோடு உரையாடும் பொழுது இந்த ஆவணத்தை முன்வைத்து உரையாட வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிடும் அவர்கள், இந்த ஆவணம் தமது செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமையக்கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். எனினும் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து அந்த ஆவணத்தைத் தயாரிக்க முடியவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தபடியால் எல்லாரையும் திருப்திப்படுத்தும் ஒரு நிலைமை அங்கே இருக்கவில்லை என்பதனை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த அறிக்கை தொடர்பில் இதுவரையிலும் வெளிவந்த பிரதிபலிப்புகளை தொகுத்து பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அந்த அறிக்கை தாயகத்திலும் டயஸ்போறாவிலும் பரவலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதனை எல்லாரும் பரபரப்போடு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அந்த அறிக்கைக்குள் தங்களுடைய விருப்பங்கள் கோரிக்கைகள் இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புகளிடமும் இருந்திருக்கிறது. இது எதைக் காட்டுகின்றது? அப்படி ஒரு அறிக்கை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு,தவிப்போடு ஒருவிதத்தில் ஏக்கத்தோடு தமிழ்ச் சமூகம் களத்திலும் புலத்திலும் காத்திருந்தது என்பதை காட்டுகின்றதா? அதுதான் உண்மை. தமிழ் மக்கள் பேரவைக்குப் பின் கடந்த சுமார் எட்டு வருடங்களாக தமிழ் மக்கள் பேரவையை போல ஒரு கூட்டு வராதா ? அது மீண்டும் ஒருமித்த குரலில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தாதா? என்ற தவிப்போடு பெரும்பாலான தமிழ் மக்கள் காத்திருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் அது காட்டுகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதற்கும் தவிப்போடு காத்திருக்கிறார்கள் என்று பொருள்.ஆயின் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வார்களா? https://athavannews.com/2024/1398565
-
அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? - நிலாந்தன் ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னார், “சுமந்திரன் நம்பியாராக மாறி அரியனேந்திரனை எம்ஜிஆர் ஆக்கிவிட்டார், இனி நடக்கப் போவது எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையிலான சண்டை. தமிழ் கூட்டு உளவியல் என்பது கதாநாயகன்-வில்லன் என்ற துருவ நிலைப்பட்ட மோதலை ரசிப்பது. நமது புராணங்களில் இருந்து திரைப்படங்கள் வரையிலும் அப்படித்தான் காணப்படுகின்றன. இந்நிலையில் தமிழரசுக் கட்சியை தமிழ்க் கூட்டு உணர்வுக்கு மாறாக சஜித்தை நோக்கி திருப்பியதனால் சுமந்திரன் இப்பொழுது வில்லனாக காட்டப்படுவார். அவர் வில்லனாகவும் அரியநேத்திரன் கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தப்படும் பொழுது அங்கே ஒரு திரைப்படம் ஓடும். அது தமிழ் பொது உளவியலைக் கவரும். இனி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரச்சாரம் தன்பாட்டில் நடக்கும். கதாநாயகனுக்கு வில்லனுக்கு இடையிலான மோதல். அது அரியனேத்திரனை நோக்கி அதிகம் வாக்குகளை ஈர்க்கும்” என்று. ஆனால் அரியநேத்திரனை ஒரு பொது வேட்பாளராக முன்னிறுத்திய பொதுகட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்… ”தமிழ் மக்களைத் திரட்டுவது; அல்லது ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் மக்களை ஒன்றிணைப்பது; அல்லது தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ செய்யப்படும் விடயம் அல்ல என்று. ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது. தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஆக்கபூர்வமானது. அது எதிர்மறையானது அல்ல. இந்த இடத்தில் வில்லர்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராக ஒரு மக்கள் கூட்டத்தை கட்டமைப்பது நிரந்தரமானது அல்ல. சரியானதுமல்ல” என்பது தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் அங்கம் வகிக்கும் கருத்துருவாக்கிகளின் நிலைப்பாடாகும். ஆனால் தேர்தல் களம் அந்த நிலைபாட்டிற்கு மாறாக கதாநாயகன்-வில்லன் என்று துருவ நிலைப்படத் தொடங்கி விட்டது. அதாவது தமிழ்ப் பொது உளவியலின் பொதுவான வாய்ப்பாட்டுக்குள் அது விழத் தொடங்கிவிட்டது. இதனால் அரியநேத்திரனை நோக்கி குவியும் வாக்குகளின் தொகை அதிகரிக்கலாம். தமிழரசுக் கட்சியில் உள்ள சுமந்திரன் அணியின் இந்த முடிவு ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டது. அதில் புதிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே கட்சியின் இரண்டு மாவட்டக் கிளைகள் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்திருந்த ஒரு பின்னணியில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றது. கட்சியின் மூத்த உறுப்பினராகிய சிவஞானம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை சஜித்தை ஆதரிப்பது மக்களுடைய கூட்டுணர்வுக்கு எதிரானது என்பது அவருக்கு தெரிகிறது. இது கட்சித் தொண்டர்களுக்கும் தெரிகிறது. கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, அரசியலை கணிதமாக, விஞ்ஞானமாக அணுகும் யாருக்கும் அது தெளிவாகத் தெரியும். சஜித்திடம் 13ஐத் தவிர வேறு எதுவும் இல்லை. சமஸ்டி கட்சி ஆதரவாளர்கள் 13-வது திருத்தத்தை ஒரு வாக்குறுதியாக ஏற்றுக் கொள்ள தயாரா? 13 ஒரு புதிய தீர்வு அல்ல. ஏற்கனவே யாப்பில் இருப்பது. அப்படிப் பார்த்தால் யாப்பை நிறைவேற்றுவேன் என்று கூறும் ஒரு வேட்பாளருக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி கேட்கின்றதா? இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், ஒரு நாட்டின் அதி உயர் சட்ட ஆவணமாகிய யாப்பை நிறைவேற்றுவது தான் அந்நாட்டின் தலைவர்களுடையதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். இலங்கைத் தீவு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைக் கொண்டது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எட்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் பதவியில் இருந்திருக்கிறார்கள். இவர்களில் யாருமே யாப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை என்பது எதனைக் காட்டுகிறது? நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் இலங்கைத் தீவின் யாப்பை மீறி ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக யாப்பை மீறும் ஒரு பாரம்பரியத்தை கொண்ட ஒரு நாட்டில் இப்பொழுது ஒரு தலைவர் யாப்பை அமல்படுத்துவேன் என்று கூறுகிறாராம் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமாம். சுமந்திரன் அணியின் இந்த முடிவு தமிழரசு கட்சிக்குள் மேலும் பிளவுகளை அதிகப்படுத்துமா? பொது வேட்பாளர் விடயம் தமிழரசு கட்சிக்குள் ஏற்கனவே காணப்படும் தலைமைத்துவப் போட்டியை மேலும் ஆழப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான அலையொன்று எழத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், சுமந்திரன் அணியின் முடிவு வந்திருக்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் தேர்தலுக்கு முதல் வாரம் அல்லது சில நாட்களுக்கு முன்னர்தான் வாக்களிப்பு அலை தோன்றும். தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இது பொருந்தும். தமிழ் நடுத்தர வர்க்கத்தில் ஆங்கிலம் தெரிந்த ஒரு பகுதியினர் ரணில் மீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள். மாற்றத்தை விரும்பும் மற்றொரு பிரிவினர் அனுரமீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள். இப்பொழுது தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணியானது சஜித்தை ஆதரிக்குமாறு கேட்டு இருக்கிறது. அதனால் தமிழ் வாக்காளர்கள் நான்கு முனைகளில் சிதறடிக்கப்படுவார்களா? அவ்வாறு தமிழ் வாக்காளர்கள் சிதறடிக்கப்படக்கூடாது என்று முடிவெடுத்துத்தான் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார். தமிழ் மக்களைக் கோர்த்துக்கட்டுவது, கூட்டிக்கட்டுவதுதான் என்று பொது வேட்பாளரை ஆதரிக்கும் தரப்பு தொடர்ச்சியாக கூறி வருகின்றது. ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முதன்மைக் காரணம் தமிழ் மக்களை ஒன்றிணைப்பது. தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பது. தமிழ்க் கூட்டு உளவியலை பலப்படுத்துவது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். அதாவது அவர்கள் தமிழ் வாக்காளர்களைத் திரட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் சுமந்திரனும் அவருடைய அணியும் தமிழ் வாக்காளர்களைச் சிதறடிக்கலாம் என்று நம்புகிறார்கள். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் தாங்கள் எடுத்த முடிவை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர்கள் நம்பக் கூடும். ஆனால் தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு முடிவெடுத்த தருணங்களில் கட்சியையோ சின்னத்தையோ தலைவர்களையோ பொருட்படுத்தவில்லை என்பதற்கு கடந்த நூற்றாண்டு முழுவதிலும் உதாரணங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டில்,ஜி ஜி பொன்னம்பலம் மகாதேவாவை தோற்கடித்தார். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூறித் தோற்கடித்தார். ராமநாதன் குடும்பத்தில் வந்த உயர் குழாத்தைச் சேர்ந்த மகாதேவாவை ஜி.ஜி தோற்கடித்தார். செல்வநாயகம் ஜிஜியை இலட்சியத்தின் பெயரால் தோற்கடித்தார். அதன் பின் தமிழ் ஐக்கியத்தின் பெயரால்; கொள்கைக்காக, தமிழர் விடுதலைக் கூடடணியின் உதய சூரியன் சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள். அதன் பின் இந்திய அமைதி காக்கும் படை நாட்டில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், நடந்த பொதுத் தேர்தலில், முன்பின் அறிமுகம் இல்லாத சுயேட்சை சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். உதய சூரியனைப் பின்னுக்குத் தள்ளினார்கள் .வேட்பாளர்களின் முகமே தெரியாத ஒரு போர் சூழலில், தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வெளிச்ச வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து, 13 ஆசனங்களை ஈரோஸ் இயக்கத்துக்குக கொடுத்தார்கள். தேர்தலில் ஈரோஸ் இயக்கத்தின் பிரமுகராகிய பராவை இந்திய அமைதி காக்கும் படை கைது செய்து முகாமில் அடைத்து வைத்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பொழுது கைதியாக இருந்த பராவை “நீங்கள் இப்பொழுது எம்பி ஆகிவிட்டீர்கள் வெளியே போகலாம்” என்று கூறி அனுப்பி விட்டார்கள். அத்தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயமாகிய பொழுது உதயசூரியன் சின்னத்தை தமிழ் மக்கள் தோற்கடித்தார்கள். உதய சூரியன் சின்னமானது ஒரு காலம் வெற்றியின் சின்னமாக இருந்தது. ஐக்கியத்தின் சின்னமாக இருந்தது. அப்படிபட்ட உதயசூரியன் சின்னத்தை தோற்கடித்த ஒரு மக்கள் கூட்டம், முகம் தெரியாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து சுயேட்சையை வெல்ல வைத்த ஒரு மக்கள் கூட்டம், கூட்டுணர்வோடு முடிவெடுக்கும் பொழுது, சின்னமும் கட்சியும் ஒரு பொருட்டே அல்ல. https://www.nillanthan.com/6886/
-
ஜனாதிபதித் தேர்தல்:தமிழ்மக்கள் அறிவுபூர்வமாக முடிவெடுப்பார்களா? - நிலாந்தன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக கணித விஞ்ஞானப் பிரிவுகளைச் சேர்ந்த கல்வி நிலையங்களுக்கு என்னென்ன பெயர்கள் என்று பார்த்தால், விஞ்ஞான மண்டபம்; விஞ்ஞான உலகம்; விஞ்ஞான சமுத்திரம்; விஞ்ஞான நீரோட்டம். விஞ்ஞான மூலை, இணைந்த கணிதத்தில் வெற்றி, மிஸ்டர் பிஸிக்ஸ்,……இப்படியே நீண்டு கொண்டு போகும். இப்பெயர்கள் யாவும் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்கள் தொடர்பான ஒரு சமூகத்தின் அபிப்பிராயங்களைக் காட்டுபவை. இந்நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் படிக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் முன்னணி தனியார் பாடசாலைகள் சிலவற்றில் கணித அல்லது விஞ்ஞானப் பட்டதாரி ஒருவர்தான் அதிபராகவும் இருக்கலாம் என்று எழுதப்படாத விதி உண்டு. கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் குறித்து தமிழ் சமூகத்தில் உயர்வான மதிப்பீடுகள் உண்டு. இவ்வாறு கணித விஞ்ஞானத் துறைகளில் அதிகம் நாட்டமுள்ள ஒரு சமூகமானது தன் நடைமுறை வாழ்வில் எல்லாவற்றிலும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கணிதமாக அணுக வேண்டும். ஆனால் தனது பாடத் தெரிவுகளில் விஞ்ஞானத்துக்கும் கணிதத்துக்கும் முக்கிய இடத்தைக் கொடுக்கும் ஒரு சமூகம், தனது அரசியல் தெரிவுகளில் எப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகின்றது? உடுப்பு வாங்கப் போனால் புடவைக் கடையில் எத்தனை மணித்தியாலத்தை எமது பெண்கள் செலவழிக்கிறார்கள்? சந்தையில் நாளாந்தம் காய்கறி வாங்கும் பொழுதும் எவ்வளவு கவனமாகத் தெரிந்தெடுக்கிறோம் ? தக்காளிப் பழத்தை நிறம் பார்த்து; அழுத்திப் பார்த்து ஒவ்வொன்றாக தெரிகிறோம். கத்தரிக்காயை நிறம் பார்த்து; அழுத்திப் பார்த்து ஒவ்வொன்றாகத் தெரிகிறோம். இவ்வாறு அன்றாட வாழ்வில் தெரிவு என்று வரும் பொழுது கவனமாகவும் நேரமெடுத்தும் பொருட்களை வாங்கும் ஒரு மக்கள் கூட்டம், தனது அரசியலில் அவ்வாறு நிதானமாகவும் கணிதமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திக்கின்றதா? அவ்வாறு விஞ்ஞானபூர்வமாக சிந்தித்திருந்தால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்? எப்பொழுது எடுத்திருந்திருக்க வேண்டும் ? தபால் மூல வாக்களிப்புக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள்தான் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தன் முடிவை அறிவிக்கவில்லை. இன்னொரு கட்சி பகிஸ்கரிக்கின்றது. ஏனைய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துகின்றன. இதில் எது விஞ்ஞானபூர்வமான முடிவு ? அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகளைக் கையாள்வது என்பது ஒரு கணித ஒழுக்கம். அப்படிப் பார்த்தால் தமிழ் மக்கள் தம் முன்னால் இருக்கும் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆழமாகப் பரிசீலித்து முடிவுகளை எடுக்கின்றார்களா? தமது கட்சிகளும் தலைவர்களும் எடுக்கும் முடிவுகளை குறித்து தமிழ் மக்கள் கேள்வி கேட்கின்றார்களா? நீங்கள் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுத்தீர்கள் என்று தமது தலைவர்களிடம் அவர்கள் கேள்வி கேட்பதுண்டா ? சந்தையில் காய்கறிகளைத் தெரியும்பொழுது தெரிவு பிழைத்தால் உணவு வயிற்றில் நஞ்சாகிவிடும். பள்ளிக்கூடத்தில் பாடத் தெரிவு பிழைத்தால் கல்வி நரகமாகிவிடும். உடுப்புக் கடையில் தெரிவு பிழைத்தால் குறிப்பிட்ட நபரின் தோற்றக் கவர்ச்சி குறைந்து விடும். ஆனால் அரசியலில் தெரிவு பிழைத்தால் என்ன நடக்கும் ? 2009 க்கு பின் வந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மூத்த தலைவராகிய சம்பந்தர் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு முடிவை எடுத்திருக்கலாம். அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்திருந்தால் தமிழ் அரசியலின் போக்கே வேறு திசையில் போயிருந்திருக்கும். சம்பந்தரின் பூதவுடல் தந்தை செல்வா கலையரங்கில் கூரை பதிந்த அந்த சிறிய மண்டபத்தில் விசிறிகளின் கீழே தனித்து விடப்பட்ட அவலம் ஏற்பட்டிருக்காது. ஓர் அரசனைப் போல அவருக்கு ராஜ மரியாதை கிடைத்திருந்திருக்கும். ஆனால் சம்பந்தர் ஒரு முதிய தலைவராகவும் அனுபவத்தில் பழுத்த தலைவராகவும் அன்று முடிவெடுக்கவில்லை. போருக்குத் தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வாக்களிப்பது என்று முடிவெடுத்தார்.. அந்தத் தளபதி,போருக்கான அரசியல் தீர்மானத்தை எடுத்து போரை வழிநடத்திய ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகத் திரும்பியிருந்தார். அது போர் வெற்றிக்கு உரிமை கோருவதில் வந்த போட்டி. அவ்வாறு ராஜபக்ஸக்களுக்கு எதிராகத் திரும்பிய தளபதியை வைத்து ராஜபசக்களை-அவர்கள் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர் என்பதற்காக அல்ல, மாறாக-அவர்கள் சீனாவை நோக்கிச் சாய்கிறார்கள் என்பதற்காக, அரங்கில் இருந்து அகற்ற முயற்சித்த நாடுகளின் கொள்கைத் தீர்மானங்களைப் பின்பற்றி தமிழ்த் தரப்பு முடிவெடுத்தது. அதன் விளைவாக சரத் பொன்சேகாவோடு ஒரு உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது. விளைவாக அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா மட்டும் தோற்கவில்லை, சம்பந்தரும் தோற்கத் தொடங்கினார். சம்பந்தரின் வழியும் தோற்கத் தொடங்கியது. தமிழ் மக்களை அழிக்கும் போருக்கான அரசியல் தீர்மானத்தை எடுத்து, அதற்காக அனைத்துலக சமூகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக ஒன்று திரட்டிய ஒரு குடும்பத்துக்கு எதிராக வாக்களிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, தமிழ் மக்கள் அந்த குடும்பத்தின் ஆணையை ஏற்றுப் போரை முன்னெடுத்த ஒரு தளபதிக்கு வாக்களித்தார்கள். போருக்குத் தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வாக்களித்துவிட்டு, அந்தப் போரை ஒரு இன அழிப்பு போராகவும் அங்கே போர் குற்றங்கள் நடந்தன என்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்தன என்றும் அனைத்துலக சமூகத்தின் முன் போய் நின்று முறையிடுவது ஒரு புத்திசாலியான சமூகம் செய்யக்கூடிய அரசியலா? சரத் பொன்சேகா இப்பொழுதும் தனது தேர்தல் பிரச்சாரங்களில் தான் மனித குண்டினால் தாக்கப்பட்ட பொழுது பயணித்த காரை ஒரு காட்சிப் பொருளாகக் காவித்திருக்கிறார். ஆனால் அவருடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு சிங்கள மக்கள் வருவது குறைந்து விட்டது. அந்தக் காருக்கு இருந்த கவர்ச்சி குறைந்துவிட்டது. ஆனால் அந்தப் போரை இன அழிப்பு போர் என்று குற்றம் சாட்டும் ஒரு மக்கள் கூட்டம், அப்போரை முன்நின்று நடாத்திய ஒரு தளபதிக்கு, அந்தப் போரில் வெற்றி கொண்டதற்காகவே ஃபீல்ட் மார்ஷல் விருது பெற்ற ஒரு தளபதிக்கு, அந்தப் போர் நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு கழிந்திருந்த ஒரு காலகட்டத்தில், அந்தப் போரினால் அகதியானவர்கள் அப்பொழுதும் நலன் புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், அந்த போரினால் காணாமல் போனவர்களை உறவினர்கள் தேடிப் போராட முடியாதிருந்த ஒரு காலச் சூழலில், அந்தப் போரில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்தது. கணிதத்தை விஞ்ஞானத்தை விரும்பிக் கற்கும் ஒரு மக்கள் எடுக்கக்கூடிய புத்திசாலித்தனமான முடிவா அது? அல்லது தீர்க்கதரிசனமும் துணிச்சலும் மிக்க முடிவா அது? நிச்சயமாக இல்லை. அந்த ஜனாதிபதித் தேர்தலை சம்பந்தர் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டுக் காயங்களுக்கு ஊடாகவும் கூட்டு மன வடுக்களுக்கு ஊடாகவும் சிந்தித்து இருந்திருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருந்திருக்கும். அவருடைய இறுதி ஊர்வலத்தில், தந்தை செல்வாவின் ஊர்வலத்தில் திரண்டதுபோல ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்திருப்பார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒப்பீட்டளவில் அதிக தமிழ் ஆசனங்களுக்குத் தலைமை தாங்கிய ஒரு தலைவர் அரசியலைக் கணிதமாக மதிப்பீடு செய்யத் தவறினார். முடிவுகளை விஞ்ஞானபூர்வமாக எடுக்கத் தவறினார். குறைந்தபட்சம் முடிவுகளை இதயபூர்வமாக எடுத்திருந்தால்கூட நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கும். அன்று எடுக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகளின் விளைவுதான் இன்றுள்ள தமிழ் அரசியலாகும். இவ்வாறாக கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழ் அரசியலில் எடுக்கப்பட்ட புத்திபூர்வமற்ற விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகள் அனைத்தையும் தமிழ் மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். காய்தல் உவத்தல் இன்றிப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். தமது வாழ்வின் அன்றாட தேவைகளுக்காக சுண்டிப் பார்த்து பொருட்களை வாங்கும் ஒரு மக்கள் கூட்டம், அரசியலிலும் அவ்வாறு சுண்டிப் பார்த்து முடிவெடுக்குமா? தமிழ்ப் பொது வேட்ப்பாளருக்கு திரண்டு சென்று வாக்களிக்குமா? நன்றி- உதயன் https://www.nillanthan.com/6877/
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன் “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன. இப்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். ஒரு இடதுசாாரியாக இருந்தவர். 1931ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் முதலாவது தேர்தல் நடந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய, யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் தேர்தலை பரிஷ்கரிக்குமாறு மக்களைக் கேட்டது. காந்தியின் செல்வாக்குக்கு உள்ளாகிய யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் இலங்கை தீவுக்கு முழு சுயாட்சி வேண்டும் என்று கேட்டு அத் தேர்தலைப் புறக்கணித்தது. அப்புறக்கணிப்பை தென்னிலங்கையில் உள்ள இடதுசாரிகள் பெருமளவுக்கு ஆதரித்தார்கள்.அவ்வாறு ஆதரித்த இடதுசாரிகளில் ஒருவராகிய பிலிப் குணவர்தன அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது மேற்கண்டவாறு கூறியுள்ளார். இக்குறிப்பு யாழ்ப்பாணம் யுத் காங்கிரசைப்பற்றி கலாநிதி சீலன் கதிர்காமர் எழுதிய நூலில் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசை பின்பற்றி தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்த தென்னிலங்கை இடதுசாரிகள் கடைசி நேரத்தில் குத்துக்கரணம் அடித்து தேர்தலில் பங்குபற்றினார்கள் என்பது வேறு கதை. யாழ்.வாலிப காங்கிரசின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் பெருமளவுக்கு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் ஓரளவுக்கு வாக்களிப்பு நடந்தது. வாலிபக் காங்கிரஸ் அவ்வாறு தேர்தலை புறக்கணித்தது சரியா பிழையா என்ற விவாதத்தில் இப்பொழுது இறங்கத் தேவையில்லை. ஆனால் கடந்த நூற்றாண்டில் இலங்கைத் தீவின் முதலாவது தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு இளைஞர் அமைப்பு “ப்ரோ ஆக்டிவாக”-செயல் முனைப்பாக ஒரு முடிவை எடுத்துப் புறக்கணித்தது என்பதுதான் இங்கு முக்கியமானது. காலனித்துவ அரசாங்கம் நடாத்திய முதலாவது தேர்தலை தமிழ்த் தரப்பு எவ்வாறு செயல்முனைப்போடு அணுகியது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. அங்கிருந்து தொடங்கி கடந்த சுமார் 83 ஆண்டுகால இடைவெளிக்குள் தமிழ்த் தரப்பு அவ்வாறு தேர்தல்களை செயல்முனைப்போடு கையாண்ட மேலும் ஒரு சந்தர்ப்பம் எதுவென்றால், அது 2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலாகும். அப்பொழுது வன்னியில் ஒரு கருநிலை அரசை நிர்வகித்த விடுதலைப்புலிகள் இயக்கம் அந் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது. அவ்வாறு தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை தடுப்பதே அந்த பகிஷ்கரிப்பின் நோக்கமாகும். ஏனென்றால் அப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்த அரசாங்கம் நோர்வையின் அனுசரணையோடு ஒரு சமாதான முயற்சியை முன்னெடுத்து வந்தது. சமாதான முயற்சியை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தருமர் பொறியாகவே பார்த்தது. எனவே அதில் இருந்து வெளிவருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்று அந்த இயக்கம் சிந்தித்தது. அதன் விளைவாக தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்தது. தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்திருந்தால் அவர்கள் தனக்கே வாக்களித்திருந்திருப்பார்கள் என்று ரணில் விக்ரமசிங்க இப்பொழுதும் நம்புகின்றார். தன்னுடைய வெற்றியைத் தடுத்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு ஏற்றியதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானத்தை முறிக்க விரும்பியது என்றும் அவர் நம்புகிறார். அத்தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு யாழ்ப்பான வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது. தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது. அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்த பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும். இவ்வாறு தென்னிலங்கையில் இருந்து அறிவிக்கப்படும் ஒரு தேர்தலை செயல்முனைப்போடு அணுகும் மூன்றாவது முயற்சிதான் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் ஆகும். கடந்த 83 ஆண்டுகளிலும் மீண்டும் ஒரு தடவை தமிழ்த் தரப்பு ஒரு தேர்தலை நிர்ணயகரமான விதங்களில் எதிர்கொள்ளும் ஒரு முடிவு இது. முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தரப்பு தேர்தலைப் புறக்கணித்தது. ஆனால் இம்முறை தமிழ்த் தரப்பு தேர்தலில் பங்குபற்றுகின்றது. அதன்மூலம் தமிழ் மக்களை ஒன்று திரட்ட முயற்சிக்கின்றது. தமிழ் மக்களை ஒரு திரண்ட அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதன்மூலம் தமிழ் மக்களுடைய பேரபலத்தை அதிகப்படுத்தி, இனப்பிரச்சினை தொடர்பான மேடைகளில் தமிழ் மக்களை ஒரு திரண்ட சக்தியாக நிறுத்துவது தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தின் முதல் நிலை நோக்கமாகும். தமிழ் மக்களை அகப்பெரிய திரட்சியாக மாற்றினால் அது பேச்சுவார்த்தை மேசையிலும், நீதி கோரும் மேடைகளிலும் தமிழ்மக்களை பலமான சக்தியாக மாற்றும். அந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்படுகின்றார். அந்த முடிவு தென்னிலங்கை வேட்பாளர்களின் மீது எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதற்கு ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தரப்பைப் பேச அழைத்ததில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழ் பகுதிகளிலும் ஒரு பகுதி அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். தென்னிலங்கையில் யாரெல்லாம் தமிழ் வாக்குகளை கவர விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரும் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள். அவர்களுடைய தமிழ் முகவர்கள் எஜமானர்களை விட அதிகமாக பதறுகிறார்கள். தமிழ் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் திருப்தியூட்டும் வெற்றிகளைப் பெறத் தவறி விடுவார்கள் என்று அவர்களுக்கு பதட்டம். ஆனால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் தமிழ் மக்களுக்கு எதைத் தருவார்கள் என்பதனை அவர்களால் இன்று வரை தெளிவாகக் கூற முடியவில்லை. கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, அவர்களில் யாருமே சமஸ்டியைத் தரப்போவதில்லை. அப்படி என்றால், அவர்கள் தரக்கூடிய சமஸ்டிக்கு குறைவான வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதாவது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை தந்து விட்டு அவற்றை மீறிய, அல்லது உடன்படிக்கைகளை எழுதி விட்டு அவற்றை தாமாக முறித்துக் கொண்ட ஒரு தரப்பு இப்பொழுதும் வாக்குறுதியைத் தரும் என்று காத்திருப்பதை எப்படிப் பார்ப்பது? அவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. தத்துவஞானி ஹெகல் கூறுவது போல “வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான்.” இவ்வாறு வரலாற்றுக் குருடர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை நிறுத்தும் தரப்பைப் பார்த்து முட்டாள்கள் என்கிறார்கள். அது ஒரு கேலிக்கூத்து என்கிறார்கள். அது ஒரு விஷப்பரீட்சை என்கிறார்கள். ஆனால் அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கும் யாருமே இதுவரையிலும் எந்த தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொன்னால் தென்னிலங்கையில் உள்ள எந்த வேட்பாளர் சரி என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொல்பவர்கள் யாருமே இதுவரையிலும் எந்தத் தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவான முடிவை மக்களுக்கு கூறவில்லை. ஏன் கூறவில்லை ? ஏனென்றால் தென் இலங்கையில் உள்ள எந்த ஒரு கட்சியும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆகக் குறைந்தபட்ச வாக்குறுதியைக்கூட தருவதற்குத் தயாராக இல்லை. இப்பொழுது தராத வாக்குறுதியை அவர்கள் பிறகெப்பொழுதும் தரப்போவதில்லை. எனவே இந்த இடத்தில் தமிழ் மக்கள் தெளிவாக செயல்முனைப்போடு இரண்டு முடிவுகளில் ஒன்றைத்தான் எடுக்கலாம். ஒன்று பகிஸ்கரிப்பது அல்லது தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது. தமிழ்ப் பொது வேட்பாளருக்குள் பகிஸ்கரிப்பும் உண்டு. அதாவது தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்தான் தமிழ் வேட்பாளர் முன்னிறுத்தப்படுகிறார். கடந்த 84 ஆண்டுகளுக்குள் தமிழ் மக்கள் எடுத்த நிர்ணயகரமான ஒரு முடிவாக அதை மாற்ற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். 83 ஆண்டுகளுக்கு முன் பிலிப் குணவர்த்தன “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” என்று சொன்னார். இப்பொழுது கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இம்முறை வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் பொது வேட்பாளரை முன்னிறுத்துகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் அதிகரித்த வாக்குகளைத் திரட்டினால் அது தென்னிலங்கைக்கும் வெளியுலகத்துக்கும் தெளிவான கூர்மையான செய்திகளைக் கொடுக்கும். தமிழ் ஐக்கியத்தை மேலும் பலப்படுத்தும். எனவே இப்பொழுது தமிழ்மக்கள் முன்னாள் உள்ள தெரிவு இரண்டுதான். ஒன்று, தென்னிலங்கை வேட்பாளர்களுக்காக காத்திருந்து மேலும் சிதறிப் போவது. இன்னொன்று தமிழ்ப்பொது வேட்பாளரை பலப்படுத்துவதன்மூலம் முழு இலங்கைக்கும் வழிகாட்டுவது. https://www.nillanthan.com/6872/
-
அர்ஜுனாவும் இரும்பு மோதிரமும்- நிலாந்தன் ஒரு கனேடிய நண்பர், அவர் ஒரு பொறியியலாளர், இரும்பு மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அதற்குப் பின்னால் உள்ள கதையைச் சொன்னார். கனடாவில், கியூபெக் பாலம் 1907ஆம் ஆண்டு மனிதத் தவறுகளால் நொறுங்கி விழுந்தது. அதில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு தவறு இனிமேலும் நடக்க கூடாது என்ற சங்கல்பத்தோடு பொறியியலாளர்களுக்கான சத்தியப்பிரமாணம் ஒன்றைக் குறித்துச் சிந்திக்கப்பட்டது. டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பொறியியலாளர் Haultain ஹோல்டேய்ன் 1922ஆம் ஆண்டு பொறியியலாளர்களுக்கான தொழில்சார் சத்தியபிரமாணத்தை அறிமுகப்படுத்தினார். 1925ஆம் ஆண்டு அவருடைய மேற்பார்வையின் கீழ் பொறியல் பட்டதாரிகள் இரும்பு மோதிரம் அணிந்து சத்தியபிரமாணம் செய்து கொண்டார்கள். முதலாவது தொகுதி இரும்பு மோதிரங்கள் உடைந்து விழுந்த கியூபெக் பாலத்தின் இரும்புத் தூண்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. இது கனேடியப் பொறியியலாளர்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். மருத்துவர்களுக்கும் அவ்வாறு உலகளாவிய “ஹிப்போகிரடிஸ் ஓத்” என்று அழைக்கப்படும் சத்தியப்பிரமாணம் உண்டு. பொறுப்புக்கூறல் எனப்படுவது மருத்துவத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் மட்டுமல்ல எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். ஒரு சமூகப் பிராணியாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அது பொருந்தும். மருத்துவர் தவறுவிட்டால் உயிர் போகும் உறுப்புகள் போகும்.பொறியியலாளர் தவறுவிட்டால் பாலம் இடிந்து விழும்; அல்லது கட்டடம் இடிந்து விழும்; உயிர் போகும்; உறுப்புகள் போகும்; சொத்துக்கள் போகும். ஆசிரியர் தவறுவிட்டால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் நாசமாகும். தலைவர்கள் தவறு விட்டால் ஒரு நாடு அழிந்து போகும். எனவே மனிதத் தவறுகளுக்கு மனிதர்கள் பொறுப்புக் கூற வேண்டும். சமூகத்தின் மிகச்சிறிய அலகாகிய குடும்பத்துக்குள் குடும்ப அங்கத்தவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். நிறுவனங்களுக்குள் கட்டமைப்பு சார்ந்து,தொழில் தர்மம் சார்ந்து,பதவிவழி சார்ந்து,பொறுப்புக்கூற வேண்டும். தலைவர்கள் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.ஆகக் குறைந்தது எல்லா மனிதர்களும் தங்களுடைய மனச் சாட்சிக்காவது பொறுப்புக் கூற வேண்டும். மருத்துவர் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை அதிகப்படுத்தியுள்ளார். மருத்துவத்துறை சார்ந்தவர்கள் சமூகத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தங்களை அவர் அதிகப்படுத்தியுள்ளார். அவர் எப்பொழுதும் நேரலையில் தோன்றினார். அப்பாவித்தனமாகவும் வெகுளித்தனமாகவும் தனக்குச் சரியெனப்பட்டதை நேரலையில் கூறினார். அவரிடம் உள்ள அப்பாவித்தனமும் தன்னைத் தற்காத்துக் கொள்ளாத துணிச்சலும் கலகக் குணமும் அவரை மக்களுக்கு நெருக்கமானவர் ஆக்கின. அதேசமயம் அந்த அப்பாவித்தனமும் அவசரமும் நிதானமின்மையும் பக்குவமின்மையும் ஊடகங்கள் முன் அவரை சிலசமயம் பலவீனமானவராகவும் காட்டின. சுகாதாரத்துறை தொடர்பாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வெவ்வேறு ஊடகவியலாளர்கள் ஏற்கனவே முன்வைத்திருக்கிறார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த மு.தமிழ்ச்செல்வன் அதுதொடர்பாக கட்டுரைகள் எழுதியிருந்தார். ஆனால் அர்ஜுனா இதில் எங்கே வேறுபடுகிறார் என்றால், அவர் அந்த சிஸ்டத்துக்குள் இருந்துகொண்டே அந்த சிஸ்டத்தைக் கேள்வி கேட்கின்றார் என்பதுதான். அதுதான் அவருக்கு கிடைத்த கவர்ச்சி. அந்தக் கவர்ச்சியை அவர் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வாரா இல்லையா; அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எத்தகையது; அவருடைய தனிப்பட்ட சுபாவம் எத்தகையது… போன்ற எல்லா விடயங்களுக்கும் அப்பால்,அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு துறைசார் உயர் அதிகாரிகள் பதில் கூறுவதே பொருத்தமானது. ஏனெனில் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மருத்துவத்துறைக்கு அது தொடர்பில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தில் கிராமவாசிகள் அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகள் என்று அழைப்பார்கள். அங்கு மருந்தும் சிகிச்சையும் இலவசமாக தரப்படுகிறது என்று பொருள். ஆனால் அவை மெய்யான பொருளில் தர்மாஸ்பத்திரிகள் அல்ல. அங்கே வேலை செய்யும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் சம்பளம் வாங்குகிறார்கள். அந்தச் சம்பளம் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து திரட்டப்படுவது. அங்கு வழங்கப்படும் இலவச மருந்தும் சிகிச்சையும்கூட மக்களுடைய வரிப் பணம்தான். எனவே அங்கே யாரும் யாருக்கும் தானம் செய்யவில்லை. யாரும் யாரிடமும் தானம் பெறவும் இல்லை. ஆனால் வாங்கும் சம்பளத்துக்கு மேலதிகமாக தமது தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்கள் அநேகர் உண்டு. தாம் பொறுப்பேற்ற நோயாளியை காப்பாற்றுவதற்காக ஊண் உறக்கமின்றி சேவை புரியும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவமனைக்குப் போகக்கூடாது என்பதனை ஒரு தவம் போல கடைப்பிடிக்கும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவத் துறைக்கு போனாலும் அங்கே நோயாளியின் நிதிநிலையைக் கருத்தில் எடுத்து காசு வாங்காத மருத்துவர்கள் உண்டு. வாங்கிய காசை உண்டியலில் சேகரித்து தானம் செய்யும் மருத்துவர்கள் உண்டு. எனவே அர்ஜுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் மருத்துவர்களுக்கும் பொருந்தாது. போர்க்காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. பெருந்தொற்றுநோய் காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. இப்பொழுதும் தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. அரச மருத்துவமனையை தர்மாஸ்திரியாக பார்க்கும் மக்கள் அங்கு மருத்துவர்கள் தாதியர்களும் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மமாக இல்லை எனும் பொழுது அதிருப்தி அடைகிறார்கள், கோபமடைகிறார்கள். குறிப்பாக தனியார் மருத்துவத்துறை மீதான விமர்சனங்கள் அந்தக் கோபத்தை அதிகப்படுத்துகின்றன. அந்தக் கோபங்களை கேள்விகளை அதிருப்தியை அர்ஜுனா குவிமயப்படுத்தினார். அதனால்தான் சாவகச்சேரியில் அத்தனை மக்கள் திரண்டார்கள். சில நாட்களுக்கு முன் சம்பந்தரின் அஞ்சலி நிகழ்வில் திரண்டதைவிட அதிக தொகையினர் ஒரே நேரத்தில் திரண்டார்கள். அர்ஜுனா எப்பொழுதும் நேரலையில் தோன்றினார் அதுதான் அவருடைய பலம். பின்னர் அதுவே அவருக்கு பலவீனமாகவும் மாறியது. அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகத்தின் மத்தியில் மருத்துவர்களுக்கு உயர்வான பவித்திரமான ஒரு இடம் உண்டு. பொதுவாக மருத்துவர்கள் அந்த பவித்திரமான ஸ்தானத்தை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. ஆனால் அர்ஜுனா வெளியே வந்தார். பல மாதங்களுக்கு முன் கண்டாவளையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் வெளியே வந்தார். இப்பொழுது முகநூலில் சில மருத்துவர்கள் அவ்வாறு வெளியே வருகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் விதிவிலக்கு. பொதுவான மருத்துவர் குணம் என்பது தனக்குரிய பவித்திரமான ஸ்தானத்தைப் பேணுவதுதான். ஆனால் அர்ஜுனா அப்படியல்ல. அவர் மருத்துவர்கள் தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொதுவான பிம்பத்துக்கு வெளியே நிற்கிறார். நேரலைமூலம் அவர் சமூக வலைத்தளங்களில் கட்டியெழுப்பியிருக்கும் பிம்பமும் திடீர் வீக்கமாக இருக்கலாம். அவர் தன்னுடைய தனிப்பட்ட தவறுகளை, பலவீனங்களை சிஸ்டத்தின் மீதான விமர்சனங்களாக மாற்றுவதில் வெற்றி கண்டு விட்டார் என்ற ஒரு விமர்சனமும் உண்டு. எனினும்,அவர் சார்ந்த சிஸ்டத்தின் மீது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் விசாரணைக்குரியவை. திணைக்களம் சார்ந்த உள்ளக விசாரணைகள் உண்மைகளை வெளியே கொண்டு வரலாம். அல்லது ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அதை மணந்து கண்டுபிடிக்கலாம். அர்ஜுனா எழுப்பிய கேள்விகள் தொடர்பாக உண்மைகளை புலனாய்ந்து வெளியே கொண்டுவர வேண்டிய துறைசார் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அது ஊடகத்துறை சார்ந்த பொறுப்புக் கூறல். அதேசமயம் துறைசார் அரச உயர் அதிகாரிகள் அவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக மக்களுக்கு பதில்கூற வேண்டும். அதைவிட முக்கியமாக அர்ஜுனா ஒரு பொறியைத் தட்டிப்போட்டதும் அது எப்படி சாவகச்சேரியில் தீயாகப் பரவியது என்பதற்குரிய சமூக உளவியலையும் தொகுத்து ஆய்வுசெய்ய வேண்டும். அர்ஜுனாவின் கலகம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. அது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரவலாகக் காணப்பட்ட அதிருப்தி,கோபம்,பயம், சந்தேகம் போன்றவற்றின் தொகுக்கப்பட்ட விளைவுதான். ஏற்கனவே பொதுப் புத்திக்குள் இருந்த பயங்களையும் கோபத்தையும் அதிருப்தியையும் அர்ஜுனா ஒருங்குவித்தார் என்பதுதான் சரி. அர்ஜுனாவின் விமர்சனங்கள் விவகாரம் ஆகிய பின் சில நாட்கள் கழித்து யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஒரு குறிப்பை முகநூலில் போட்டார். அது போதனா வைத்தியசாலை மீதான விமர்சனங்களுக்குப் பதில் கூறும் நோக்கிலானது. ஆனால் அதற்கு கீழே வந்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், 500க்கும் அதிகமான கருத்துக்களில் 90 விகிதத்துக்கும் அதிகமானவை மருத்துவத் துறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவை. அதில் ஒரு செய்தியுண்டு. பொதுசன மனோநிலை ஏன் அவ்வாறு அதிருப்தியோடும் கோபத்தோடும் காணப்படுகின்றது? ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு துறைசார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பு அதிகரிப்பது நல்லது. ஒவ்வொருவரும் தொழில் சார்ந்தும் அறம் சார்ந்தும் குறைந்தது மனச்சாட்சிக்காவது பொறுப்புக்கூற வேண்டும். ஒரு மருத்துவர் கூறியதுபோல, பொது வைத்தியசாலைகளில் கழிப்பறைகளை பயன்படுத்துவதிலும் பொதுச்சொத்தை நுகர்வதிலும் பொதுமக்கள் எவ்வளவு தூரம் பொறுப்போடு காணப்படுகிறார்கள்?எல்லாப் பொது மருத்துவமனைகளிலும் கழிப்பறைகள் மோசமாகக் காணப்படுகின்றன. ஏன் அதிகம் போவான்? முருகண்டியில் கழிப்பறைக்குக் காசு வாங்கப்படுகின்றது. ஆனால் அந்தக் கழிப்பறையின் சுகாதாரச்சூழல் எப்படியிருக்கிறது? மேற்கத்திய சமூகத்தின் சமூகப் பொறுப்பை கண்டுபிடிக்கக் கூடிய இடங்களில் ஒன்று கழிப்பறைகள் ஆகும். அங்கே பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கும். அது நலன்புரி அரசுக் கட்டமைப்பு. தவிர அங்கே கழிப்பறைகள் உலர்ந்தவை. ஆனால் நமது கழிப்பறைகளோ ஈரமானவை. எனவே எமது சூழலுக்கு ஏற்ப வித்தியாசமாகச் சிந்தித்து கழிப்பறைகளில் சுத்தத்தைப் பேண வேண்டும். ஆனால் பொதுக் கழிப்பறைகளை வைத்து ஒரு சமூகத்தின் பொறுப்புணர்ச்சியை மதிப்பிடலாம். எனவே பொறுப்புக்கூறல் எல்லாத் தளங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். பொது மக்களில் தொடங்கி அரசாங்கம் வரை அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறல் என்ற வார்த்தைக்கு அதிகம் பிரயோக அழுத்தம் உண்டு. அரசியல் அடர்த்தி உண்டு. 2015 ஆம் ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட30/1 தீர்மானம் பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கு உரியது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு யாருமே இதுவரை பொறுப்புக் கூறவில்லை. இவ்வாறு அரசியல் அர்த்தத்தில் பொறுப்புக் கூறப்படாத ஒரு நாட்டுக்குள், அல்லது பொறுப்புக்கூற யாருமற்ற ஒரு நாட்டுக்குள், பொறுப்புக் கூறலை பன்னாட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டம்,தனக்குள்ளும் அந்தந்தத் துறை சார்ந்து அல்லது ஆகக்குறைந்தது அவரவர் தமது மனச்சாட்சிக்காவது பொறுப்புக் கூறத்தானே வேண்டும்? https://www.nillanthan.com/6828/
-
சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன் இலங்கைத் தீவின் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா? முதலாவது சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி. அவர் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி சுயேட்சைச் சின்னத்தில் போட்டியிடுவது இதுதான் முதல் தடவை. உண்மையில் அவர் சுயேச்சை அல்ல. தாமரை மொட்டு கட்சியின் பெரும்பாலான பகுதி அவருக்கு பின் நிற்கின்றது. அப்படிப் பார்த்தால், அவர் தாமரை மொட்டுக்களின் மறைமுக வேட்பாளர்களில் ஒருவர். தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிக்கு பின் எழுச்சி பெற்றது. ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்பமயப்படுத்தி நிறுவனமயப்படுத்தி கட்டியெழுப்பியதே பொதுஜன பெரமுன எனப்படும் தாமரை மொட்டுக் கட்சியாகும். ஆனால் ரணில் இப்பொழுது அதில் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விட்டார். இலங்கைத் தீவின் கட்சி வரலாற்றில் இறுதியாகத் தோன்றிய பெரிய கட்சியும் சிதையும் ஒரு நிலை. அதன் விளைவாகத்தான் ரணில் சுயேட்சையாக நிற்கிறார். ரணில் சுயேட்சையாக நிற்கிறார் என்பதற்குள் ஓர் அரசியல் செய்தியுண்டு. அது என்னவென்றால் இலங்கைத்தீவின் பிரதான கட்சிகள் யாவும் சிதைந்து போகின்றன என்பதுதான். இலங்கைத் தீவின் மூத்த கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் வாரிசு அவர். ஆனால் அந்தக் கட்சி சிதைந்து சஜித் பிரேமதாசாவின் தலைமையில் வேறொரு கட்சி ஆகிவிட்டது. அதுபோல இலங்கைத் தீவின் மற்றொரு பெரிய பாரம்பரிய கட்சியாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதைந்து அதிலிருந்துதான் தாமரை மொட்டுக் கட்சி தோன்றியது. இப்பொழுது தாமரை மொட்டுக் கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. இக்கட்சிகள் ஏன் சிதைக்கின்றன? ஏனென்றால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் சிதைந்து விட்டது. இலங்கைத் தீவின் ஜனநாயகம் எங்கே சிதையத் தொடங்கியது? இலங்கை தீவின் பல்லினத்தன்மையை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஏற்றுக்கொள்ளத் தவறியபோதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத் தீவின் பாரம்பரிய கட்சிகள் சிதைவதற்குக் காரணம். ஈழப் போரின் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரிய கட்சிகள் இரண்டுமே சிதைந்து விட்டன. அந்த சிதைவிலிருந்து தோன்றிய மற்றொரு பெரிய கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. அந்தச் சிதைவின் வெளிப்பாடுதான் ரணில் சுயேட்சையாக நிற்பது. அதாவது இனப்பிரச்சனையைத் தீர்க்கத் தவறினால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் மேலும் சிதையும் என்பதன் குறியீடு அது. அவருடைய சின்னம் சிலிண்டர். அதுவும் ஒரு குறியீடு எந்த ஒரு சிலிண்டருக்காக நாட்கணக்கில் மக்கள் வரிசையில் காத்து நின்றார்களோ அதே சிலிண்டர்தான். அது நாட்டை பொருளாதார ரீதியாக அவர் மீட்டெடுத்ததன் அடையாளமாகக் காட்டப்படக்கூடும். எனினும் ஒரு நாட்டின் ஜனாதிபதி சுயேட்சையாகப் போட்டியிடும் அளவுக்கு நாட்டின் கட்சி நிலவரம் உள்ளது என்பதை அது காட்டுகிறது. அதாவது ரணில் ஒரு வெற்றியின் சின்னமாக இங்கு தேர்தலில் நிற்கவில்லை. சிதைவின் சின்னமாகத்தான் தேர்தலில் நிற்கின்றார். மற்றொரு சுயேச்சை, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன். அவருடைய சின்னம் சங்கு. அது மகாவிஷ்ணுவின் கையில் இருப்பது. போர்க்களத்தில் வெற்றியை அறிவிப்பது. சுடச்சுட பண்பு கெடாது வெண்ணிறமாவது. தமிழ்ப் பண்பாட்டில் பிறப்பிலிருந்து இறப்புவரை வருவது. பிறந்த குழந்தைக்கு முதலில் சங்கில் பாலூட்டுவார்கள். திருமணத்தில் முதலில் பாலூட்டுவது சங்கில்தான். இறப்பிலும் சங்கு ஊதப்படும். அரியநேத்திரன் ஒரு குறியீடு. அவருடைய சின்னமும் ஒரு குறியீடு. தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. தமிழ்ப்பொது நிலைப்பாடு என்பது பிரயோகத்தில் தமிழ் ஐக்கியம்தான். தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிக்கும் ஒருவர் சுயேட்சையாக நிற்பதன் பொருள் என்ன? அவர் கட்சி கடந்து நிற்கிறார் என்றும் வியாக்கியானம் செய்யலாம். அவர் ஒரு கட்சி பாரம்பரியத்தில் வந்தவர்தான். ஆனால் அந்தக் கட்சியின் வேட்பாளராக அவர் இங்கு நிற்கவில்லை. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளின் பிரதிநிதியாகவும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவர் ஒரு பொது நிலைப்பாட்டின் பிரதிநிதியாக நிற்கிறார். அதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. இது ஒரு புதிய பண்பாடு.கட்சிக்காக வாக்குக் கேட்காமல்,ஒரு தனி நபருக்காக வாக்கு கேட்காமல்,ஒரு பொது நிலைப்பாட்டுக்காக வாக்கு கேட்பதற்கு ஒருவரை பொதுவாக நிறுத்தியிருப்பது என்பது. அரியநேத்திரன் தமிழரசுக் கட்சிப் பாரம்பரியத்தில் வந்தவர். ஆனால் அவருடைய கட்சி பொது வேட்பாளர் தொடர்பாக இன்றுவரை முடிவு எடுக்கவில்லை. கடைசியாக அந்த கட்சியின் மத்திய குழு கடந்த வார இறுதியில் கூடியபொழுதும் முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுது, தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்கும் கட்சி தங்களுடையது என்ற பொருள்பட பேசியிருக்கிறார். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சி, அதிலும் குறிப்பாக இனஅழிப்புக்கு நீதி கோரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சியானது, எவ்வாறு தலைமை தாங்க வேண்டும்? அது எதிர்த் தரப்பின் அல்லது வெளித் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு பதில் வினையாற்றும் அரசியலை முன்னெடுக்க வேண்டுமா? அல்லது செயல்முனைப்போடு நீதியைக் கோரும் போராட்டமாக அந்த அரசியலை வடிவமைக்க வேண்டுமா? கட்சியின் மூத்த தலைவர் சிவஞானம் கூறுகிறார், மக்கள் முடிவெடுப்பார்கள் என்று. தலைமை தாங்குவது என்பது மக்களை முடிவெடுக்க விட்டுவிட்டு மக்களின் முடிவைக்ககட்சி பின்பற்றுவது அல்ல. கட்சி முடிவெடுத்து மக்களுக்கு வழிநடத்த வேண்டும். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு வழிநடத்துவதற்குப் பெயர்தான் தலைமைத்துவம். ஆனால் தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தருவார்கள் என்று அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையும் காத்திருப்பது என்பது ஒரு போராடும் இனத்துக்கு அழகில்லை; மிடுக்கில்லை; அதற்கு பெயர் தலைமைத்துவமும் இல்லை. பொது வேட்பாளர் விடையத்தில் தமிழரசுக்ககட்சி இரண்டாக நிற்கிறது என்பதே உண்மை நிலை. ஒருமித்த முடிவு எடுக்க முடியாமலிருப்பதற்கு அதுதான் காரணம். அதாவது தலைமைத்துவம் பலமாக இல்லை என்று பொருள். தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பது தலைமைத்துவப் பலவீனம்தான். கிடைக்கும் தகவல்களின்படி எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் 13ஆவது திருத்தத்திற்கு மேல் எந்த ஒரு தீர்வையும் தரப்போவதில்லை. தமிழரசுக் கட்சி முன்வைக்கும் சமஸ்டித் தீர்வுக்கு எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. ஆயின், யாருடைய தேர்தல் அறிக்கைக்காக தமிழரசுக் கட்சி காத்திருக்கின்றது ? அவர்கள் சமஸ்ரியைத் தர மாட்டார்கள் என்று தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவர்களுக்காக காத்திருப்பது எதைக் காட்டுகின்றது? சமஷ்டி அல்லாத வேறு ஏதோ ஒன்றுக்கு இறங்கிப்போகப் போகிறோம் என்பதையா? அவர்கள் யாருமே சமஸ்ரித் தீர்வுக்கு உடன்படத் தயாரில்லை என்றால், அதன் பின் கட்சி என்ன முடிவு எடுக்கும்? தேர்தலைப் பரிஷ்கரிக்குமா? அல்லது பொது வேட்பாளரை ஆதரிக்குமா? பகிஸ்கரிப்பது தவறு என்று ஏற்கனவே சுமந்திரன் கூறியிருக்கிறார். அப்படியென்றால் பொது வேட்பாளரை ஆதரிப்பதைத்தவிர வேறு தெரிவு இல்லை. அல்லது அவர்கள் தரக்கூடியவற்றுள் பெறக்கூடியவற்றை எப்படிப் பெறலாம் என்று காத்திருக்கிறார்களா? அதற்குச் சிறீதரன் அணி தயாரா? கட்சியின் மத்திய குழு கூடுவதற்கு முதல் நாள் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது அங்குள்ள விவசாய அமைப்புகள் அப்பொதுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தின. அதில் தமிழ்மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இறுதியில் பேசினார். அவருடைய உரை மிகத் தெளிவாக இருந்தது. அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்திப் பேசினார். கடந்த மாதம் 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தனியார் விருந்தினர் விடுதியில் மாவை சேனாதிராஜாவை சந்தித்தது பற்றியும், மாவையிடம் கையளித்த ஆவணம் ஒன்றைப்பற்றியும் அதிலவர் குறிப்பிட்டார். அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதைப் பற்றிய அம்சங்கள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். போலீஸ் அதிகாரத்தை இப்போதைகுத்த் தர முடியாது என்றும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின் நாடாளுமன்றத்தில் அதை தீர்மானிக்கலாம் என்றும் ரணில் கூறியுள்ளார். அதை பதிமூன்று மைனஸ் என்று சிறீதரன் வர்ணிதார். ஆயின், தமிழரசுக் கட்சி 13 மைனசை ஒரு பேசுபொருளாக ஏற்றுக்கொள்ளத் தயாரா? இல்லையென்றால், யாரிடமிருந்து சமஸ்ரி வரும் என்று சமஷ்ரிக் கட்சி காத்திருக்கின்றது? சமஸ்ரியை யாராவது ஒரு சிங்களத் தலைவர் தங்கத்தட்டில் வைத்துத்தருவார் என்று இப்பொழுதும் சமஷ்ரிக் கட்சி நம்புகின்றதா? போராடாமல் சமஸ்டி கிடைக்கும் என்று சமஸ்ரிக் கட்சி நம்புகின்றதா? தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவே அவ்வாறான ஒரு போராட்டந்தான் என்பதனை சமஸ்ரிக்கட்சி ஏற்றுக் கொள்கிறதா? அக்கட்சி முடிவெடுக்காமல் தடுமாறுவதும் ஒரு விதத்தில் பொது வேட்பாளர் அணிக்குச் சாதகமானது. உள்ளதில் பெரிய கட்சி முடிவெடுக்காமல் இரண்டாக நிற்பது பொது வேட்பாளருக்கு நல்லது. ஏனென்றால் தமிழரசுக் கட்சியின் வாக்காளர்களும் உட்பட தமிழ்மக்கள் தங்களுக்குத் தெளிவான இலக்குகளை முன்வைத்து தங்களை வழிநடத்த தயாரானவர்களின் பின் திரள்வார்கள். ஏற்கனவே ஈரோஸ் இயக்கத்தின் சுயேச்சைக் குழு பெற்ற வெற்றி ஒரு மகத்தான முன்னுதாரணமாகும். அது இலங்கைத்தீவின் தேர்தல் வரலாற்றில், தமிழரசியலில் ஒரு நூதனமான வெற்றி. அந்தத் தேர்தலில் அமிர்தலிங்கம், சம்பந்தர், யோகேஸ்வரன், ஆனந்தசங்கரி உட்பட பல மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தார்கள். அதைவிட முக்கியமாக திருகோணமலையில் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அன்றைக்கு அந்த சுயேட்சைக் குழுவுக்குக் கிடைத்த வெற்றி தமிழ்க் கூட்டுணர்வுக்குக் கிடைத்த வெற்றி. இன்றைக்கும் தமிழ்க் கூட்டுணர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்களாக இருந்தால், அது தமிழ்த் தேசிய அரசியலின் போக்கை மட்டுமல்ல, இலங்கை தீவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கைகையும் தீர்மானிக்கும் வாக்களிப்பாக அது அமையும். https://www.nillanthan.com/6860/
-
பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன் தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த கேள்வியை முன்வைத்து பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக உருப்பெருக்கிக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அடக்கப்படும் அமைப்புக்கான முதலாவது கருநிலைச் சந்திப்பு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம் பெற்றது. அதன் பின் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் மாதம் 29 ஆம் திகதி இறுதியாக்கப்பட்டது. அதன்பின் ஜூலை மாதம் 22 ஆம் திகதி அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு பொதுக் கட்டமைப்பு இயங்கத் தொடங்கியது. அத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிப்பதற்காக அன்றிலிருந்து இயங்கத் தொடங்கியது. கடந்த எட்டாம் திகதி ஒரு பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அப்படிப் பார்த்தால் மொத்தம் 18 நாட்கள்தான் ஒரு பொது வேட்பாளருக்கான தேடல் மும்முரமாக இடம்பெற்றது. ஒரு சமூகத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயகரமான விதங்களில் தடம் மாற்றக்கூடிய ஒரு குறியீட்டு வேட்பாளரை கண்டுபிடிப்பதற்கு 18 நாட்கள் சென்றன என்பது ஒப்பீட்டளவில் குறைவுதான். அதற்காக 18 மாதங்களை எடுத்துக் கொண்டால் கூட குற்றமில்லை. ஒரு பொது வேட்பாளர் ஒரு பொதுக் குறியீடு என்று தொடக்கத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது. அவ்வாறு ஒரு பொதுக் குறியீட்டை ஏன் தேட வேண்டி வந்தது? ஏனென்றால் தமிழ் மக்கள் மத்தியில் கட்சித் தலைவர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. ஆனால் தமிழ் அரசியல் சக்தியை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைவர்கள் அநேகமாக இல்லை. தமிழ் மக்களை ஆகக்கூடியபட்சம் ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ்; ஒரு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைமைகள் இருந்திருந்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கு தேவையே இருந்திருக்காது. எனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தேடுவதில் உள்ள சவால் என்னவென்றால், தமிழ் மக்களை ஒரு பொதுக் குடையின் கீழ் ஒன்றிணைக்க வல்ல தலைமைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதுதான். இப்பொழுது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பொது வேட்பாளர் அவ்வாறு எல்லாத் தகமைகளும் உடையவர் என்று இக்கட்டுரை கூறவரவில்லை. அரசியலில் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையில் எதிலுமே 100% பூரணமானது என்று எதுவும் கிடையாது. இருப்பவற்றில் சிறந்தவற்றை வைத்துத்தான் அரசியலைக் கொண்டு போகலாம். ஏனென்றால் அரசியல் எனப்படுவது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்று பார்த்தால் இருக்கின்றவைகள்தான் சாத்தியக்கூறுகள். இல்லாதவைகள் அல்ல. இந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளரை பொதுக் கட்டமைப்பு முன் வைத்திருக்கின்றது. தமிழ்ப் பொது நிலைப்பாடு என்பது தமிழ்த் தேசிய நிலைப்பாடு தான். தமிழ்த்தேசிய நிலைப்பாட்டின் பிரதான மூலக்கூறு தாயக ஒருமைப்பாடு. அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உணர்வுபூர்வமாகவும் நடைமுறைச் சாத்தியமான விதத்திலும் ஒன்றிணைக்கும் தேவைகளை அடிப்படையாக வைத்து கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் ஒரு குறியீடுதான். தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் காணப்படும் கருத்துருவாக்கிகள் ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக கட்டியெழுப்பிய கருத்துருவாக்கம் என்னவென்றால், கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளர்தான். அவரும் அரசியல் கட்சிகள் சாராதவராக இருந்தால் உத்தமம் என்று கருதப்பட்டது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒரு பெண் வேட்பாளரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நெருக்கடிகள் இருந்தன. மட்டுமல்ல, நாட்களும் குறைவாக இருந்தன. ஒரு பெண் வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஓர் ஆண் வேட்பாளரை அதாவது கட்சிசாரா ஆண் வேட்பாளரை கண்டுபிடிக்கலாமா என்று சிந்திக்கப்பட்டது. ஆனால் அங்கேயும் வரையறைகள் இருந்தன. அதன் பின்னர்தான் கட்சி சார்ந்த யாராவது இருப்பார்களா என்று தேட வேண்டி வந்தது. ஜனாதிபதித் தேர்தல் பொறுத்து பொதுக் கட்டமைப்புக்கு சட்டரீதியாக சில வரையறைகள் இருந்தன. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தலாம். அல்லது ஒரு முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுயேட்சையாகக் களமிறங்கலாம். இந்த இரண்டு சாத்தியக்கூறுகளுக்குள்ளும்தான் ஒரு பொது வேட்பாளரைத் தேட வேண்டியிருந்தது. அதாவது தேர்தல் சட்டங்களின்படி ஒன்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி வேண்டும். அல்லது முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டும். தமிழ் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உண்டு. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் அவ்வாறு சின்னத்தை தருவதற்குத் தயாராகக் காணப்பட்டன. சில கட்சிகள் தரத் தயங்கின. பொதுகட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒரு விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்தை ஒரு பொது நிலைப்பாட்டுக்காகப் பயன்படுத்தி அதன்மூலம் திரட்டப்பட்ட வாக்குகளையும் பிரபல்யத்தையும் அடுத்து வரும் தேர்தலில் அக்கட்சி தனது தனிப்பட்ட கட்சி தேவைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஒர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று அங்கே சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தேர்தல் ஆண்டுகளாகக் காணப்படும் ஓர் அரசியல் பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலை உடனடுத்து வரக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தமது கட்சி சின்னத்தைப் பயன்படுத்தாமல் விடுவது தொடர்பில் கட்சிகள் அதிகமாக யோசித்தன. இப்படிப்பட்டதோர் பின்னணியில், ஒரு சுயேச்சை வேட்பாளரைப் பொதுக் கட்டமைப்பு முன்நிறுத்தியமை என்பது கட்சிச் சின்னம் கிடைக்காத காரணத்தால் அல்ல. அதைவிட முக்கியமாக வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த தாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கு நிலையில் இருந்துதான் என்று , தமிழ் மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள். மேலும் தமிழரசுக் கட்சிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை பொதுகட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துவது என்பது பரந்தகன்ற தளத்தில் கட்சிகளைக் கடந்த தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான அடித்தளமாகவும் அமையும். கடந்த 15 ஆண்டுகளாக கருத்துருவாக்கமாக காணப்பட்ட ஒரு விடயம், இப்பொழுது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்து விட்டது. தமிழ்ப் பொது வேட்பாளர் பரந்தகன்ற தளத்தில் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டுவாராக இருந்தால், அதுவே கடந்த 15 ஆண்டுகளில் கிடைத்த மகத்தான வெற்றியாக அமையும். தமிழ்மக்கள் எங்கே ஒன்றாக நிற்கிறார்கள்? சில நினைவு கூர்தல்களைத்தவிர மற்றெல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் தமிழ்மக்கள் இரண்டாகப்; பலவாக நிற்கிறார்கள். வடக்காக,கிழக்காக;சாதியாக,சமயமாக;கட்சிகளாக,கொள்கைகளாக ; தியாகிகளாக, துரோகிகளாக ;கட்சிகளுக்குள் அணிகளாக; முகநூலில் குழுக்களாக; திருச்சபைக்குள் அணிகளாக;ஆலய அறங்காவலர் சபைகளுக்குள் அணிகளாக ; பழைய மாணவர் சங்கங்களுக்குள் அணிகளாக; புலம்பெயர்ந்த நாடுகளில் அமைப்புகளாக; அமைப்புக்களுக்குள் அணிகளாக….எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் தமிழ்மக்கள் இரண்டாகப்,பலவாக நிற்கிறார்கள். எங்கே ஒன்றாக நிற்கிறார்கள்? ஒன்றாக நிற்கக்கூடாது என்பதில்தானே ஒன்றாக நிற்கிறார்கள்? தன் பலம் எதுவென்று தெரியாமல்; தன்னைத் தானே நம்பாமல்; சிதறிக் கொண்டு போகும் ஒரு மக்கள் கூட்டத்தை அகக்கூடிய மட்டும் பெருந் திரளாகக் கூட்டிக்கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஏனெனில் தேசம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளாகும். தங்களை தேசமாக உணரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உணர்வே தேசியம் எனப்படுகின்றது. அக்கூட்டு உணர்வுக்கு தலைமை தாங்குவதுதான் தேசியவாத அரசியல். தமிழ் பொது வேட்பாளர் என்று தெரிவின் முதன்மை நோக்கமும் அதுதான். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை வெளி உலகத்துக்கு ஒரே குரலில் கூறுவார்களாக இருந்தால், தமிழ் மக்களின் பேர பலம் அதிகரிக்கும். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 15 ஆண்டுகளாக இன அழிப்புக்கு எதிராக நீதி கிடைக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. 2009 மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ஆயுதப் போராட்டம்தான். அது ஒரு விளைவுதான்.மூல காரணமாகிய ஒடுக்குமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. அதாவது இன ஒடுக்கு முறை நிறுத்தப்படவில்லை. இன ஒடுக்குமுறை எனப்படுவது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாகத் திரண்டிருப்பதை அழிப்பதுதான். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் காரணிகளை அழிப்பதுதான். அதனால், ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெரும் திரளாக;தேசிய இனமாக தமிழ் மக்களைத் திரட்டி எடுப்பதுதான் தேசியவாத அரசியல்.தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு அந்தக் கொள்கை வழிபட்டதே. எனவே தமிழ் மக்கள் முன் இரண்டே இரண்டு தெரிவுகள்தான் உண்டு ஒன்று ஒரு தேசமாகத் திரள்வது. அல்லது தன் பலம் எதுவென்று தெரியாத; தன்னைத் தானே நம்பாத; ஒரு மக்கள் கூட்டமாகச் சிதறித் தூர்ந்து போவது. https://www.nillanthan.com/6854/
-
ஜனாதிபதித் தேர்தல் களம்: திரட்டுவதா சிதறடிப்பதா? - நிலாந்தன்
கிருபன் posted a topic in அரசியல் அலசல்
ஜனாதிபதித் தேர்தல் களம்: திரட்டுவதா சிதறடிப்பதா? - நிலாந்தன் “இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எதிர்வுகூற முடியாதவை மட்டுமல்ல, ஊகிக்க முடியாதவைகளுந்தான்” என்று ஒரு மேற்கத்திய தூதராக அதிகாரி சொன்னார். இலங்கைதீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஜனாதிபதி முறைமை அமல்படுத்தப்பட்ட பின், ஒரு பிரதான வேட்பாளர் அதுவும் ஜனாதிபதியாக இருப்பவர், சுயேட்சையாக கட்டுப்பணம் செலுத்தியிருப்பது என்பது இதுதான் முதல்தடவை. முன்னெப்பொழுதும் தேர்தல் களத்தில் இந்த அளவுக்கு நிச்சயமின்மைகள் நிலவியதில்லை. இது எதை காட்டுகிறது ? போட்டி அதிகமாக இருப்பதை மட்டும் காட்டவில்லை. பெரும்பான்மையானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்பதையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் தாமரை மொட்டு கட்சிதான் பலமாக உள்ளது. அதன் தயவில்தான் ஜனாதிபதி தங்கியிருக்கிறார். ஆனாலும் அவரை வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளராக நிறுத்த தாமரை மொட்டுக் கட்சி தயாரில்லை என்று தெரிகிறது. கடந்த பல மாதங்களாக அது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிகிறது. வெற்றியளிக்கவில்லை மட்டுமல்ல அவை முரண்பாடுகளை தவிர்க்க உதவவில்லை என்றும் தெரிகிறது. அண்மையில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் அதைத்தான் காட்டுகின்றன. ரணில், தமது கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார் என்ற பொருள்பட நாமல் கருத்து தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியதைப்போல அவர் தமது கட்சி பிரமுகர்களைக் கழட்டி எடுக்க முயற்சிக்கிறார் என்ற பொருள்பட நாமல் பேசியிருக்கிறார். கிடைக்கும் தகவல்களின்படி தாமரை மொட்டுக் கட்சியைச் சேர்ந்த பலர் ரணிலை நோக்கிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனோகணேசன் தனது முகநூற்பதிவில் கூறியதுபோல, ராஜபக்சக்கள் ரணிலை தமது வேட்பாளராக்கினால் தம்மைப் பாதுகாக்கலாம் ஆனால் கட்சியைக் காப்பாற்ற முடியாது. ரணில் கட்சியைச் சாப்பிட்டு விடுவார் என்பதே சரி. ஒரு சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கி வளர்ச்சிப் போக்கில் பல்வேறு தரப்புக்களின் பொது வேட்பாளராக அவர் மாறக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன. அதன் மூலம் ராஜபக்சக்களின் தவறுகளுக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லாத ஒரு வெற்றியைப் பெற அவர் முயற்சிக்கிறாரா? இப்போதுள்ள நிலைமைகள் இதேபோக்கில் தொடர்ந்தும் வளர்ந்து சென்றால் தேர்தல் களத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பிரதான வேட்பாளர்கள் நிற்க முடியும். சரத் பொன்சேகாவும் விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதியின் நோக்கங்களை நிறைவேற்றும் டம்மி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்தும் தென்னிலங்கையில் உண்டு. சரத் பொன்சேகா அனுரவிற்குப் போகக்கூடிய படைத்தரப்பினரின் வாக்குகளை கவர்ந்து எடுப்பார். அவரும் விஜயதாச ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவின் போட்டியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை கவரும் நோக்கத்தோடு களமிறக்கப்பட்டார்களா என்ற சந்தேகங்களும் உண்டு. எதுவாயினும் தென்னிலங்கையில் தேர்தல் களம் முன்னெப்பொழுதையும்விட நிச்சயமற்றதாகக் காணப்படுகின்றது. இது சிங்கள வாக்காளர்களைக் குழப்பும்; சிதறடிக்கும். விளைவாக தெரிவு செய்யப்படப் போகும் ஜனாதிபதி பருமனில் கூடிய பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருவாரா என்பதும் சந்தேகம்தான். அவருக்குக் கிடைக்கக்கூடிய சிங்களமக்களின் ஆணை ஒப்பீட்டளவில் பலவீனமாகவே இருக்கும். இந்தப்பின்னணியில் தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை கவர்வாராக இருந்தால் தெரிவு செய்யப்படப்போகும் ஜனாதிபதி மிகப்பலவீனமான ஆணையோடு பதவிக்கு வருவார். அவருக்கு தமிழ் மக்களின் ஆணையும் கிடைக்காது; கிடைக்கக்கூடிய சிங்கள, முஸ்லீம் மக்களின் ஆணையும் பலவீனமாக இருக்கலாம். இது அடுத்த ஆண்டு தென்னிலங்கை அரசியலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை வெற்றிகரமாக மீட்டெடுப்பது என்று சொன்னால் அதற்குப் பலமான ஒரு அரசுத் தலைவர் வேண்டும். ஆனால் ஒப்பீட்டளவில் பலவீனமான மக்கள் ஆணையோடு தெரிவு செய்யப்படக்கூடிய ஒரு ஜனாதிபதி பொருளாதார நெருக்கடி தொடர்பில் துணிகரமான முடிவுகளை எடுக்கக் கூடியவராக இருப்பாரா?அவ்வாறு பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாவிட்டால் நாடு இன்னும் கொதிநிலைக்கு போகும். இது முதலாவது விடயம். இரண்டாவது விடயம், அவ்வாறு ஒப்பிட்டுளவில் பருமன் குறைந்த ஒரு வெற்றியை பெறக்கூடிய புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத் தேர்தலும் உட்பட ஏனைய தேர்தல்களை உடனடியாக வைக்கக்கூடிய நிலைமைகள் இருக்குமா? ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போகும் கூட்டு ஒரு பொதுத் தேர்தலை நடத்தி அந்த வெற்றியை மேலும் உறுதிப்படுத்தவும் பலப்படுத்தவும் முயற்சிக்கும். ஆனால் தெரிவு செய்யப்பட போகும் ஜனாதிபதிக்கு கிடைக்க கூடிய வெற்றி ஒப்பீட்டளவில் பலமாக இல்லையென்றால் அந்தக்கூட்டு பொதுத் தேர்தலை வைத்து ஒரு விசப்பரீட்சையைச் செய்யுமா? அல்லது பருமனில் சிறியது ஆனாலும் அந்த வெற்றி அடுத்தடுத்த தேர்தல்களில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்பி தேர்தல்களை வைக்கக்கூடுமா? அல்லது அப்படிப்பட்டதோர் சூழலில் ஒரு தேர்தலை வைத்தால் பலமான பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படுமா? எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் தென்னிலங்கையில் இப்பொழுது காணப்படும் போட்டி நிலை எனப்படுவது அல்லது நிச்சயமற்ற நிலை எனப்படுவது அல்லது ஊகிக்கமுடியாத நிலை எனப்படுவது நாடு ஒரு நிச்சயமற்ற ஆண்டை நோக்கிச் செல்கிறது என்ற ஊகங்களைப் பலப்படுத்துமா? இதில் தமிழ்மக்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நிர்ணயகரமானவைகளாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழ்மக்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிகமாக வாக்களிக்கிறார்களோ அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அதிகரிக்கும். அது அதன் தர்க்கபூர்வ விளைவுகளை தென்னிலங்கையில் ஏற்படுத்தும். இப்படிப்பட்டதோர் நிர்ணயகரமான அரசியல் சூழலில் தமிழ்மக்கள் என்ன செய்ய வேண்டும்? தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ்மக்கள் தென்னிலங்கை அரசியலுக்குப் பதில் வினையாற்றும் ஓர் அரசியலை தெரிந்தெடுப்பதா? அல்லது செயல் முனைப்புடன் இயங்கி தென்னிலங்கை வேட்பாளர்களை தங்களை நோக்கி வரச்செய்வதா? தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று கூறும் தமிழ் அரசியல்வாதிகள் அவர்களோடு பேரம் பேசலாம் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால் தென்னிலங்கை வேட்பாளர்களில் யாராவது ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி சமஸ்ரியை ஏற்றுக் கொள்ளத் தயாரா? இல்லையென்றால் எது தொடர்பில் அவர்களோடு பேரம் பேசுவது? அடுத்தது, அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும்வரை காத்திருப்பது என்பது தென்னிலங்கையின் நகர்வுகளுக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியல். இது சரியா? அடுத்தது அவர்கள் எப்பொழுது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள்? பெரும்பாலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான். அப்பொழுது அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளில் பேரம் பேசக்கூடிய வாய்ப்புகள் இல்லையென்றால் என்ன முடிவை எடுப்பது? எந்த முடிவையும் எடுக்க முடியாது. யாரோ ஒருவருடன் ஏதோ ஒரு டீலுக்குப் போவதைத் தவிர. அதாவது தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவைப் பொறுத்தவரை டீலுக்குக் காத்திருப்பதுதான். இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்துப் பேரம் பேசுவதற்காக அல்ல. அவர்கள் தேர்தல் அறிக்கைகளுக்காக காத்திருக்கவில்லை. முடிவெடுக்காமல் காலத்தைக் கடத்துகிறார்கள் என்பதே சரி. தேசியவாத அரசியல் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் பிறத்தியாரின் முடிவுகளுக்காக காத்திருப்பது அல்ல. தானே முடிவெடுத்து, அதற்காக உழைத்து பிறத்தியாரை தன்னை நோக்கி வரச்செய்வது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதுதான். ஆனால் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை பொறுத்திருந்து எடுக்க முடியாது. ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக சிதறிக் கொண்டு போகும் ஒரு மக்கள் கூட்டத்தை கூட்டிக்கட்டுவது என்ற முடிவை எப்பொழுதோ எடுத்திருந்திருக்க வேண்டும். அதை இனிமேல்தான் தென்னிலங்கை வேட்பாளர்களின் முடிவைக் கண்டு எடுப்பது என்பது தந்திரோபாயத் தவறு மட்டுமல்ல,தோல்விகரமானது. தங்களை ஒரு தேசமாகக் கருதும் தமிழ்மக்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை விடவும் தங்களை செயல்முனைப்போடு கட்டியெழுப்பதுதான் தேசியவாத அரசியல். அதுதான் தமிழ்ப் பொது வேட்பாளர். எனவே தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்காக காத்திருப்பது என்பது திட்டவட்டமாக தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்பதுதான். தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்பது என்பது தமிழ் அரசியல் சக்தியை ஒரு மையத்தில் குவிக்கும் செயற்பாட்டுக்கு எதிரானதுதான். அதாவது தமிழ் மக்களை ஐக்கியப்படுத்திப் பலப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிரானது. இதை இன்னும் அதன் தர்க்கபூர்வ விளைவின் அடிப்படையில் கூறின் தமிழ் மக்களைச் சிதறடிக்கும் சக்திகளுக்குச் சேவை செய்வது. எவ்வாறெனில், ஒரு பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் சில அரசியல்வாதிகள் தமிழ் வாக்குகளை சஜித்தை நோக்கிச் சாய்த்துச் செல்வார்கள். இன்னொரு பகுதி குறிப்பாக ஆங்கிலம் தெரிந்த படித்த நடுத்தர வர்க்கும், ரணில் நாட்டின் பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் நிமிர்த்தியிருப்பதாகக் கருதி அவருக்கு வாக்களிக்கும். இன்னொரு பகுதி மாற்றத்தை வேண்டி அனுரவுக்கு வாக்களிக்கும். ஒரு பகுதி தேர்தலைப் பகிஷ்கரிக்கும். இவ்வாறு பலவாறாக தமிழ் வாக்குகள் சிதறும்போது ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் சலிப்படைவார்கள்; வாக்களிப்பில் ஆர்வமிழப்பார்கள். அதாவது ஒரு வாக்களிப்பு அலை எழாது. அது வாக்களிப்பில் கலந்து கொள்வோரின் தொகையைக் குறைக்கும் மொத்தத்தில் தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் அல்லாத எந்த ஒரு தெரிவும் தமிழ் வாக்குகளைப் பலவாகச் சிதறடிக்கும் இப்பொழுது மிக எளிமையான ஒரு கேள்வி தான் உண்டு. தமிழ் மக்களை சிதறு தேங்காயாகச் சிதறடிப்பதா? அல்லது ஒவ்வொரு நெல்மணியாகக் கூட்டிக் கட்டுவதா? https://www.nillanthan.com/6850/ -
தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள் - நிலாந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் சுவர்களில் ஓர் அனாமதேயச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில் “தேசமே பயப்படாதே” என்று வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது. யார் ? யாருக்குப் பயப்படக்கூடாது? என்று யார் கூறுகிறார்கள்? இந்த சுவரொட்டி ஒட்டப்படுவதற்கு முன்பு, ஜேவிபி ஒரு பெரிய பலவண்ணச் சுவரொட்டியை ஒட்டியது. அதில் “எங்கள் தோழர் அனுர” என்று எழுதப்பட்டிருந்தது. அனுரவின் பெரிய முகம் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் சில நாட்களுக்கு முன்பு ”நாங்கள் தயார்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. அதுவும் பலவண்ணச் சுவரொட்டி. அதில் தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர்கள் மூவருடைய படங்கள் காணப்பட்டன. அதற்குக் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு சுவரொட்டியில் நற்செய்தி வருகிறது என்ற பொருள்பட எழுதப்பட்டிருந்தது. அது ஒட்டப்பட்ட அடுத்த அடுத்த நாள் ரணில் செய்வார் என்று இன்னொரு சுவரொட்டி வந்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் உதவிக்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றிருந்த ஒரு பின்னணியில் ஜனாதிபதி நாட்டுக்கு உரை நிகழ்த்தவிருந்தார். அதை முன்னிட்டு அந்தச் சுவரொட்டிகள் வெளிவந்தன. இக்கட்டுரை எழுதப்படுகையில் ஒரு சுவரொட்டி சில நாட்களுக்கு முன் ஓட்டப்பட்டது. அதில் “ரணிலை விரட்டுவோம்” என்று கறுப்பு வெள்ளையில் எழுதப்பட்டுள்ளது. நிச்சயமாக மேற்கண்ட சுவரொட்டிகள் யாவும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஒட்டப்பட்டவை. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சுவர்களில் வண்ணவண்ணச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மையக் கட்சிகள், யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் என்ன ஒட்டப்பட்டு இருக்கிறது என்பதனை அறிந்திருக்கிறார்களா? தென்னிலங்கைக் கட்சிகள் மட்டுமல்ல, அந்தக் கட்சிகளுக்கு தமிழ்மக்களின் வாக்குகளை மடைமாற்ற முயற்சிக்கும் தமிழ் முகவர்கள், தமது சொந்த மக்களின் மனங்களில் எந்தக் கனவு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதனை அறிந்திருக்கிறார்களா? தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிர்ணயகரமான தருணங்களில் கொள்கைகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கொலனித்துவ ஆட்சிக்காலத்தில், இலங்கை பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட பின் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், 1931ஆம் ஆண்டு தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள். அப்பொழுது இருந்த யாழ்ப்பாண வாலிபக் காங்கிரஸ் மகாத்மா காந்தியின் செல்வாக்குக்கு உட்பட்டு தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுத்த கோரிக்கையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அங்கிருந்து தொடங்கி தமிழ்மக்கள் நிர்ணயகரமான தேர்தல்களில் நிர்ணயகரமாக முடிவெடுத்து வாக்களித்திருக்கிறார்கள். மிகப்பலமான உயர்குழாத்தைச் சேர்ந்த சேர்.பொன் ராமநாதன்,பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு ஆகிய மகாதேவாவை ஜி.ஜி.பொன்னம்பலம் 1947ஆம் ஆண்டு “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூறித்தோற்கடித்தார். அதே பொன்னம்பலத்தை பின்னர் கொள்கையின் பெயரால் செல்வநாயகம் தோற்கடித்தார். பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போதும் தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள். அதன்பின் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைத் தீவில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ்மக்கள் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட ஈரோசுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு சுயேச்சை குழு 13 ஆசனங்களை வென்றது அதுதான் முதல்தடவை. அந்த வெற்றி தமிழ்மக்களின் போராட்டத்தின் விளைவு. தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள். அதன் பின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டு உருவாக்கப்பட்ட பின் நடந்த முதலாவது தேர்தலில், தமிழ்மக்கள் திரண்டு வாக்களித்திருக்கிறார்கள். அதாவது போராட்டத்தின் விளைவாக தோன்றிய கூட்டமைப்புக்கு கொள்கை அடிப்படையில் வாக்களித்தார்கள். 22ஆசனங்களை அள்ளிக்கொடுத்தார்கள். ஏன் அதிகம் போவான்?கடந்த 15 ஆண்டுகளிலும் ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ்மக்கள் எப்படி வாக்களித்தார்கள்? தங்களைத் தோற்கடித்த குடும்பத்துக்கு எதிராக பெருமளவுக்கு ஒன்றுபட்டு வாக்களித்தார்கள். எனவே தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதிலும் ஆகக்கூடியபட்சம் ஒரு பெருந்திரளாகத் திரண்டு ஒன்றுபட்டு வாக்களித்த பல தருணங்கள் உண்டு. ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்து வாக்களித்த தருணங்கள் பல உண்டு. ஆனால்,கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் அல்லாத ஏனைய தேர்தல்களில் வாக்காளர்களாக சிதறடிக்கக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் அவர்களை மீண்டும் ஒரு பெரிய மக்கள் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க மாட்டார்கள் என்று புள்ளி விபரங்களைக் காட்டிப் புலம்புவர்களும் பயமுறுத்துவோர்களும் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். கட்சி அரசியல் என்பது ஆகக்கூடிய பட்சம் வாக்குகளைத் திரட்டுவதுதான். அதிலும் குறிப்பாக தேசியவாத கட்சி அரசியல் என்றால், மக்களை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அதைச் செய்யாத அல்லது செய்ய முடியாத அரசியல்வாதிகள் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்று பயமுறுத்தப் பார்க்கிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு மட்டுமல்ல கட்சி அரசியலுக்கே லாயக்கில்லாதவர்கள். தமிழ்மக்களை வாக்காளர்களாகச் சிதறடித்ததில் அவர்களுக்கும் பொறுப்புண்டு. எனவே தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு தமிழ்மக்ககளை ஒன்றாக்குவது. தமிழ்ப் பலத்தை ஒன்று திரட்டுவது. தமிழ் அரசியல் சக்தியை ஒரு மையத்தில் குவித்து ஆகக்கூடியபட்சம் ஆக்க சக்தியாக மாற்றுவது. இந்த அடிப்படையில்தான் கடந்த திங்கட்கிழமை 22ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டது. ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும், மக்கள் அமைப்பாகிய “தமிழ்மக்கள் பொதுச்சபை”க்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை அது. அந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இரண்டு முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது முக்கியத்துவம், கட்சிகளும் மக்கள் அமைப்பொன்றும் அவ்வாறு ஓர் உடன்படிக்கையை எழுதிக்கொள்வது நவீன தமிழ் வரலாற்றில் அதுதான் முதல் தடவை. தமிழ்மக்கள் பொதுச் சபையெனப்படுவது தமிழர் தாயகத்தில் உள்ள குடி மக்கள் சமூகங்கள்; செயற்பாட்டு அமைப்புக்கள்; மக்கள் அமைப்புக்கள் என்பவற்றின் கூட்டிணைவாக உருவாக்கப்பட்ட, ஒப்பீட்டளவில் பெரிய ஒரு மக்கள் கட்டமைப்பாகும். அந்த மக்கள் அமைப்பு, ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளோடு எழுதிக்கொண்டு ஒர் உடன்படிக்கை அது. அந்த நிகழ்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன் கூறினார், வாக்களித்த மக்களும் அந்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களும் எழுதிய உடன்படிக்கை அதுவென்று. உண்மையில் இரண்டும் இரு வேறு தரப்புகள் அல்ல. இரண்டுமே, ஒன்று மற்றதை இட்டு நிரப்பிகள்தான். ஆனால் அவ்வாறான இட்டு நிரப்பிகள் தங்களுக்கு இடையில் ஓர் உடன்படிக்கை எழுதவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? ஏனென்றால் கட்டமைப்பு ரீதியாக இயங்குவது என்று முடிவெடுத்து எழுதப்பட்ட ஒர் உடன்படிக்கை அது. ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட உடன்படிக்கை அது. இரண்டாவது முக்கியத்துவம், தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயம் கட்டமைப்பு ரீதியாக முன்நகரத் தொடங்கியுள்ளது என்று பொருள். கடந்த 15 ஆண்டுகளாக ஒரு கருத்துருவாக்கமாக, சில கட்சிகளின் நடவடிக்கையாக, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு, இடையில் கைவிடப்பட்ட ஓர் அரசியல் நகர்வாகக் காணப்பட்ட ஒன்று, இப்பொழுது கட்டமைப்பு சார்ந்து அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கியிருக்கின்றது. இது மிக முக்கியமானது. தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ்ப் பொது வாழ்வில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் பாரம்பரியம் பலவீனமாக உள்ளது. கட்சிகளுக்குள் உரிய பொருத்தமான கட்டமைப்புகள் இல்லாத பின்னணிக்குள்தான் தனிநபர் ஓட்டங்களும் தனிநபர் சுழிப்புக்களும் இடம்பெறுகின்றன. இருக்கின்ற கட்டமைப்புகள் பலவீனமாக இருப்பதினால்தான் நீதிமன்றம் ஏற வேண்டியிருக்கிறது. கட்டமைப்புக்கு பொறுப்புக்கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தினால் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும். அதில் ஒரு கூட்டுப் பொறுப்பும் இருக்கும். தமிழ் அரசியல் பரப்பில் விடயங்களை கட்டமைப்புக்கூடாக விளங்கிக் கொள்ளும் தன்மையும் குறைவு. அதனால்தான் யார் ஜனாதிபதி வேட்பாளர் ?அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் எது? யாரையாவது மனதில் வைத்துக் கொண்டு ஒரு வேட்பாளரைத் தேடுகிறோம் என்று பொய் சொல்லப்படுகிறதா? போன்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. அதற்கு ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும்; அந்தக் கட்டமைப்பு கூட்டாக முடிவு எடுக்கும்; அந்த முடிவுகளின் அடிப்படையில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் ;அவருக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒரு கட்டமைப்பு எழுதும்… என்றெல்லாம் கூறப்பட்ட போதிலும், இதுபோன்ற கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றன. இப்பொழுது ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலானது. இரண்டு தரப்பையும் சேர்ந்த ஏழு, ஏழு பேர் அதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 14 பேர். இந்த 14 பேர்களும் உபகுழுக்களை உருவாக்குவார்கள். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க ஒரு உபகுழு, தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுத ஒரு உபகுழு, நிதியை முகாமை செய்ய ஒரு உபகுழு… என்று உபகுழுக்கள் உருவாக்கப்படும் என்று அப்பொதுக் கட்டமைப்பு கூறுகின்றது. நவீன தமிழ் அரசியலில் இது ஒரு புதிய நகர்வு. ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியல் போக்கை கூட்டாக தீர்மானிப்பது என்பது. இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்குள் ஏழு கட்சிகள் உண்டு. எதிர்காலத்தில் இணையக்கூடிய கட்சிகளுக்காக அந்த உடன்படிக்கை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த நிகழ்வில் கூறப்பட்டது. அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றில் இருந்துதான் சாத்தியமற்றவற்றை அதாவது அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்யலாம். சாத்தியமானவற்றிலிருந்துதான் அதைத் தொடங்கலாம். வானத்தில் எவ்வளவு உயரக் கோபுரத்தைக் கட்டுவதாக இருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் நிலப்பரப்பில்தான் அத்திவாரத்தைப் போடவேண்டும். அப்படித்தான் இந்த உடன்படிக்கையும்.சாத்தியமான வற்றுக்கிடையிலான ஒரு உடன்படிக்கை. எதிர்காலத்தில் இது விரிந்தகன்ற தளத்தில்,பரந்தகன்ற பொருளில் ஒரு தேசத் திரட்சியாகக் கட்டி எழுப்பப்படும் என்று இரண்டு தரப்பும் எதிர்பார்க்கின்றன. கடந்த 15 ஆண்டுகால தமிழரசியல் எனப்படுவது எதிர்த் தரப்புக்கு அல்லது வெளித் தரப்புக்கு பதில்வினை ஆற்றும் “ரியாக்டிவ் பொலிடிக்ஸ்”ஆகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது, அதை “ப்ரோஆக்டிவாக” மாற்றும். அதாவது செயல்முனைப்புள்ளதாக மாற்றும். தமிழ்த்தரப்பு இப்பொழுது ஒரு புதிய நகர்வை முன்னெடுக்கின்றது. இதற்கு இனி வெளித்தரப்புகளும் தென்னிலங்கைத் தரப்புக்களும் பதில்வினையாற்ற வேண்டிவரும். அதாவது வெளித் தரப்புகள் தமிழ்த்தரப்பை நோக்கி வரவேண்டியிருக்கும்.இவ்வாறு தமிழரசியலை “ப்ரோ ஆக்டிவாக”-செயல்முனைப்புள்ளதாக மாற்றும்பொழுது, தமிழ்மக்கள் தங்களுடைய சுவர்களில் வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டும் கட்சிகளுக்கு தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள். https://www.nillanthan.com/6841/
-
சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன் சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அங்கிருந்துதான் அடுத்த கட்டம் தொடங்கும். சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்? சம்பந்தர் சிதறிப்போன தன் பலத்தைத் தானே உணராத ஒரு தமிழ்ச் சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். சம்பந்தரின் வழி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதனை இரண்டு தளங்களில் ஆராயலாம். முதலில் அனைத்துலக அளவில். இரண்டாவதாக உள்நாட்டுக்குள். அனைத்துலக அளவில் சம்பந்தர் தமிழ்மக்களின் மெய்யான பலம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் எது காரணமோ அதுதான் தமிழ் மக்களின் மெய்யான பலமும். அதுதான் தமிழ் மக்களின் புவிசார் அமைவிடம். அந்த அமைவிடம் காரணமாகத்தான் இனப்பிரச்சினை பிராந்தியமயயப்பட்டது. பின்னர் பூகோளமயப்பட்டது. அந்த அமைவிடம் காரணமாகத்தான் திம்புவிலிருந்து ஒஸ்லோ வரையிலும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அந்த அமைவிடம் காரணமாகத்தான் ஈழத்தமிழர்கள் பேரரசுகளின் இழுவிசைகளுக்குள் சிக்கிக் கிழிபடும் மக்களாக மாறியிருக்கிறார்கள். எனவே எது ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கெல்லாம் ஊற்றுமூலமாக இருக்கின்றதோ அதையே வெற்றிக்குரிய அடிப்படையாக மாற்றுவதில் சம்பந்தர் வெற்றி பெறவில்லை. அவர் ஈழத் தமிழ் அரசியலை பெருமளவுக்கு சர்வதேச மயநீக்கம் செய்வதிலும் பிராந்திய மயநீக்கம் செய்வதிலும் ஆர்வமாகக் காணப்பட்டார். இந்தியாவிடம் போனால் சிங்களமக்கள் கோபிப்பார்கள் என்று கருதி இந்தியாவின் அழைப்பை நிராகரித்தார். அதுபோலவே ஐநாவில் பரிகார நீதியை கேட்க அவர் விரும்பவில்லை. அதாவது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை அவர் கேட்கவில்லை. மாறாக நிலை மாறு கால நீதியைத்தான் சம்பந்தர் ஆதரித்தார். அதற்குரிய ஐநாவின் தீர்மானத்தில் அவர் பங்காளியாகவும் இருந்தார். ஆனால் ” 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையை செய்தோம் அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்று சுமந்திரன் 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கூறினார். எனவே பரிகார நீதியும் இல்லை; நிலைமாறுகால நீதியும் இல்லை. இப்பொழுது ஐநாவில் ஒரு பலவீனமான சான்றுகளைச் சேகரிக்கும் அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுதவிர புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களால் இயன்றதைச் செய்து இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். குறிப்பாக கனடாவில் குறிப்பிட்ட செல்லக்கூடிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றை எல்லாம் அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துச்செல்லத் தேவையான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை தாயகத்தில் இருந்து சம்மந்தர் வழங்கத் தவறினார். அதனால் அவர் இனப்பிரச்சினையை உள்நாட்டுக்குள் சுருக்க விரும்பிய சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குத் துணைபோனார் என்பதுதான் சரி. அதாவது சர்வதேச அளவில் சம்பந்தர் தமிழ் மக்களின் அரசியலை குறிப்பிடத்தக்க அளவுக்கு தோற்கடித்து விட்டார். இனப்பிரச்சனை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு அனைத்துலகப் பிரச்சினைதான். அதற்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. உள்நாட்டுத் தீர்வு கிடையாது. எனவே இனப்பிரச்சினையை அதன் சர்வதேச, பிராந்தியப் பரிமாணங்களில் இருந்து வெட்டி எடுப்பது என்பது தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்குச் சமம். சம்பந்தர் அதைத்தான் செய்தார். உள்நாட்டில் அவர் என்ன செய்தார்? யாழ்ப்பாணத்தில் அவருடைய இறுதி நிகழ்வு அதற்குச் சான்று. நூற்றுக்கணக்கானவர்கள்தான் அதில் பங்குபற்றினார்கள். அவருடைய கட்சி அவரை ஒரு முதுபெரும் தலைவர் என்று அழைக்கின்றது. ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் பூதவுடல் எடுத்துவரப்பட்ட வழிநெடுக மக்கள் காத்திருந்து மலர் தூவவில்லை. அதுமட்டுமில்லை, அவருடைய கட்சித் தொண்டர்கள்கூட ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தவில்லை. அதைவிட முக்கியமாக, சம்பந்தரின் பூத உடல் அடுத்த நாள் விமானத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு இடைப்பட்ட இரவில் தந்தை செல்வா கலையரங்கில் ஓர் அறையில் விடாது சுற்றும் விசிறிகளின் கீழே அனாதையாக வைக்கப்பட்டிருந்தது என்ற செய்தி. அது மிகத் தோல்விகரமானது. சில கட்சி உறுப்பினர்கள் அந்த அறைக்கு வெளியே நின்று இருக்கலாம். ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் உடல் ஒர் இரவு முழுவதும் அனாதையாக விடப்பட்டிருந்தமை என்பது சம்பந்தரின் அரசியல் தோல்வியை காட்டுகின்றது. பொதுவாக ஊரில் ஒரு கிராமவாசி இறந்தால், இரவில் அந்த உடலைத் தனியே விட மாட்டார்கள். அந்த உடலுக்கு அருகே யாராவது உறங்குவார்கள். ஒரு குத்துவிளக்கு அல்லது மெழுகுதிரி கால்மாட்டில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். யாராவது தேவாரம் பாடுவார்கள் அல்லது ஜெபம் பண்ணுவார்கள். இடைக்கிடை பெண்கள் ஒப்பாரி வைப்பார்கள். ஆனால் சம்பந்தருக்கு தந்தை செல்வா கலையரங்கில் இவை எவையும் இருக்கவில்லை. சம்பந்தரின் தோல்வியை மதிப்பிட அது ஒன்றே போதும். நவீன தமிழ் அரசியலில் ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற ஒரு கூட்டணி அவருடைய கையில் கொடுக்கப்பட்டிருந்தது. 22 ஆசனங்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த ஆசனங்களின் தொகை குறைந்து இப்பொழுது மொத்தம் 13 ஆசனங்கள். அவைகூட சம்பந்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. முதலில் ஆயுத மோதல்கள் முடிந்த கையோடு சம்பந்தர் கூட்டமைப்பைப் புலி நீக்கம் செய்தார். அதன்பின் படிப்படியாக சர்வதேச நீக்கம், பிராந்திய நீக்கம் செய்தார். கஜேந்திரகுமார் அணி வெளியேறத்தக்க சூழ்நிலைகளை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக ஆயுதப் போராட்ட மரபில் வந்த பங்காளிக் கட்சிகள் விலகிப் போகக்கூடிய நிலைமைகளை அவருடைய பட்டத்து இளவரசர் ஏற்படுத்தினார். முடிவில் தமிழரசுக் கட்சி மட்டும் மிஞ்சியது. இப்பொழுது அதுவும் இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. அதுமட்டுமல்ல, அவருடைய காலத்தில் கிழக்கில் வடக்கை எதிர்த்துக்கொண்டு தெற்குடன் கைகோர்க்கும் ஒரு கட்சி மேலெழுந்து விட்டது. மேலும் கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின்போது யாருக்கு செயலாளர் பதவி கொடுப்பது என்ற விவாதங்களில் திருகோண மலையா? மட்டக்களப்பா? எது உண்மையாகக் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவது? என்ற ஒரு விவாதமும் எழுந்தது. அதாவது சம்பந்தரின் காலத்தில் கிழக்கில் உப பிரதேசவாதம் ஒன்றும் உற்பத்தி செய்யப்பட்டது. ஆயின், சம்பந்தர் தமிழரசியலை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்? இந்த தோல்வி எங்கிருந்து வந்தது? சம்பந்தரின் அரசியல் வழியின் விளைவு அது. சிங்கள மக்களைப் பயமுறுத்தககூடாது என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனால் தமிழ் மக்களின் பயங்களை ; கூட்டுக் காயங்களை; கூட்டுத் துக்கத்தை கூட்டு மனவடுக்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆயுத மோதலுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டுத் துக்கத்துக்கும் கூட்டச் சிகிச்சையாக அமையவில்லை ஒரு அரசியலை; பண்புரு மாற்ற அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டிய ஒரு தலைவர் அவர். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. செய்யத் தேவையான அரசியல் உள்ளடக்கம் அவரிடம் இருக்கவில்லை. 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் ஒரு விளைவுதான். அது மூல காரணம் அல்ல. மூல காரணம் இன ஒடுக்கு முறைதான். அதாவது இலங்கைத்தீவின் இனப்பல்வகைமையை ஏற்றுக்கொள்ளாமை. யுத்த வெற்றிகளின் மூலம் மூலகாரணம் மேலும் வீங்கித் தடித்தது. அது யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. மாற்றவும் முடியாது. ஏனென்றால் அது ஓர் இனப்படுகொலை. போரில் வெற்றி பெற்ற ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை அடிப்படையாக வைத்து ஒரு கட்சியைக் கட்டி எழுப்பினார்கள். அதன்மூலம் யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கினார்கள். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது நாட்டைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலே பேணுவதுதான். வென்றவர்களும் தோற்றவர்களுமாக நாடு தொடர்ந்து பிளவுண்டிருக்கும். இவ்வாறு யுத்த வெற்றிவாதிகள் நாட்டைப் பிளவுண்ட நிலையில் பேணும்பொழுது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் தலைவராகிய சம்மந்தரோ “பிளவுபடாத இலங்கைக்குள்; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று மந்திரம்போல சொல்லிக் கொண்டு, சிங்கள மக்களின் பயங்களைப் போக்குகிறோம் என்று புறப்பட்டு, இறுதியிலும் இறுதியாக யுத்த வெற்றிவாதிகளால் தோற்கடிக்கப்பட்டார். யுத்தவெற்றி வாதம் எனப்படுவது, சிங்கள பௌத்த இனவாதத்தின் 2009க்கு பின்னரான “அப்டேட்டட் வேர்சன்” தான். யுத்தவெற்றி வாதமானது தொடர்ந்து ஒடுக்கு முறைகளையும் ஆக்கிரமிப்பையும் முன்னெடுத்துக் கொண்டிருக்க, அதாவது நாட்டைப் பிளவுண்ட நிலையிலே தொடர்ந்தும் பேண, சம்பந்தாரோ நேசக்கரம் நீட்டிக் கொண்டிருந்தார். முடிவில் யுத்த வெற்றி வாதம் சம்பந்தரின் வழியைத் தோற்கடித்தது. அவருடைய விசுவாசத்துக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் மாளிகையை இறக்கும்வரை அவருக்கு வழங்கியது. இப்படித்தான் சம்பந்தர் தோற்கடிக்கப்பட்டார். தென்னிலங்கையோடு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காக அவர் வகுத்த வழியின் விளைவாக கூட்டமைப்பு உடைந்தது. முடிவில் அவருடைய தாய்க்கட்சியும் உடைந்து விட்டது.சம்பந்தர் தோற்றுப் போனார். தோல்வியுற்ற ஒரு தலைவராகத்தான் அவர் இறந்து போயிருக்கிறார். அவருடைய உடல் யாழ்ப்பாணத்தில் தனித்து விடப்பட்டிருந்த அந்த இரவிலிருந்து எதிர்காலத் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். சம்பந்தர் தமிழ் மக்களைச் சிதறடித்து விட்டார். தமிழ் மக்களின் அடிப்படைப் பலங்களைப் பொருத்தமான விதங்களில் கையாளத் தவறி, தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறார். முடிவில் தானும் தனிமைப்பட்டுப் போனார். எனவே சம்மந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது, சம்பந்தர் சிதறடித்தவற்றை சேர்த்துக் கட்டுவதுதான். சம்பந்தர் தமிழ் மக்களின் எந்தெந்த பலங்களைச் சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் மீண்டும் ஒன்றிணைப்பதுதான். எந்தெந்த கட்சிகளை சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் ஒன்றாக்குவதுதான். சம்பந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது ஒன்று திரட்டும் அரசியலாக இருந்தால்தான் அது அதன் கடந்த 15 ஆண்டு கால தோல்வியின் தடத்திலிருந்து வெளியே வரலாம். இங்கேதான் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு கால முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தால், அதில் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசனமான தெரிவுதான் உண்டு. ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது. ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் தமிழ் மக்களை ஒன்றாக்குவது. சம்பந்தரின் வழியிலிருந்து விலகி வருவதென்றால் அதைவிட வேறு வழி இல்லை. சிதறடிக்கப்பட்டவற்றை ஒன்று சேர்ப்பது. https://www.nillanthan.com/6820/
-
சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன். யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது கட்சியின் முதுபெரும் தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக் கணக்கானவர்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் ஏற்பாட்டாளர்கள் சிந்திக்கவில்லை? உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த கட்சிக்காரர்களும் உட்பட ஒரு தொகுதி கட்சித் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலே அங்கே ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு வந்திருக்கலாம். அஞ்சலி நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு அருகே யாழ் மத்திய கல்லூரி வழமை போல இயங்கியது.மண்டபத்தில் ஒலித்த சோக கீதத்தைத் தாண்டி பள்ளிக்கூடப் பிள்ளைகளின் இரைச்சல் கேட்டது.யாழ் நகரம் வழமை போல இயங்கியது.கடைகள் பூட்டப்படவில்லை; நகரத்தின் விளம்பர ஒலிபெருக்கிகளில் வளமை போல சினிமா பாடல்கள் ஒலித்தன.சோக கீதம் ஒலிக்கவில்லை. நகரத்தில் துக்கத்தின் சாயலைக் காண முடியவில்லை. சம்பந்தரின் பூத உடல் பலாலி விமான நிலையத்திலிருந்து தந்தை செல்வா கலையரங்கை நோக்கி வந்த வழி நெடுக மக்கள் திரண்டு நின்று துக்கத்தை வெளிப்படுத்தவில்லை. அப் பூதவுடலை யாழ்ப்பாணத்திலிருந்து வழியனுப்பி வைத்த பொழுதும் மக்கள் திரண்டு நின்று வணக்கம் செய்யவில்லை. ஆனால் தந்தை செல்வாவின் பூதவுடல் தெல்லிப்பளையிலிருந்து முற்ற வெளியை நோக்கி வந்த பொழுது வழிநெடுக மக்கள் திரண்டு நின்றார்கள். சில இடங்களில் சில கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலம் நீண்டு சென்றதாகத் தகவல். அது ஒரு தேசிய துக்க நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டது. மக்கள் தன்னியல்பாக செல்வாவை தந்தை என்று அழைத்தார்கள்.தன்னியல்பாக ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதி ஊர்வலத்தில் திரண்டார்கள். ஆனால் சம்பந்தருக்கு அது நடக்கவில்லை. ஏன் ? ஈழத் தமிழர்களின் நவீன அரசியலில் மிக நீண்ட காலம், இறக்கும்வரை பதவியில் இருந்த ஒரு தலைவர் அவர். தமிழ் மக்களின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற திருக்கோணமலையின் பிரதிநிதி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டம், ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய மிதவாத அரசியல் ஆகிய மூன்று கட்டங்களையும் தொடுக்கும் மூத்த அரசியல்வாதி. எல்லாவற்றையும் விட முக்கியமாக கிழக்கில் இருந்து எழுச்சி பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதிக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அஞ்சலி செய்யாதது ஏன்? ஏனென்றால், சம்பந்தர் இறக்கும்பொழுது ஏறக்குறைய தோல்வியுற்ற ஒரு தலைவராகவே இறந்தார். சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு முன்னப்பொழுதையும் விட அதிகம் விட்டுக்கொடுப்பதன் மூலம் ஒரு தீர்வைப் பெறலாம் என்று அவர் கற்பனை செய்தார். அதில் தோல்வியடைந்தார். எனவே அவரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புத்தான். ஆயுத மோதல்களுக்கு பின்வந்த மிதவாத அரசியலின் தலைவரான அவர் நீட்டிய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கத் தயாராக இருந்திருந்தால். சம்பந்தரின் வழி வெற்றி பெற்றிருக்கும்.ஆனால் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு ராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. அதைவிட முக்கியமாக அது அரசியல் வெற்றியாக மாற்றப்பட முடியாத ஓர் இனப்படுகொலை.ராஜபக்சக்கள் அந்த வெற்றியை ஒரு கட்சியின் அடித்தளமாக மாற்றினார்கள்.அதன் மூலம் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கினார்கள். யுத்த வெற்றிவாதம் எனப்படுவது சம்பந்தருடைய விட்டுக் கொடுக்கும் அரசியலுக்கு எதிரானது.யுத்த வெற்றிவாதமானது தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது சம்பந்தர் மட்டும் தனிக்குரலில் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்; பிரிக்கப்படாத இலங்கைக்குள் ; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆயுத மோதல்களுக்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த அப்படிப்பட்ட ஒரு தலைவரை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு உரிய முக்கியத்துவம் கொடுத்து பொருத்தமான விதத்தில் கையாளத் தவறியது. அவருடைய விட்டுக் கொடுப்புகளுக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் வீடு அவர் இறக்கும்வரை வழங்கப்பட்டது. அந்த வீட்டை ஏற்றுக்கொண்டதன் மூலமும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஸ்தானத்தை இழந்த பின்னரும் அந்த வீட்டை விடாது வைத்துக் கொண்டிருந்ததன் மூலமும் சம்பந்தர் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் குறைத்துக் கொண்டார். இப்படிப் பார்த்தால் சம்பந்தரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புதான். இந்த விடயத்தில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நம்புமளவுக்கு சம்பந்தர் ஏமாளியாக இருந்தாரா என்ற கேள்வி எழும். அல்லது அவர் தன் சொந்த மக்களின் போருக்கு பின்னரான கூட்டு உளவியலை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு தலைவராக இருந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது விளங்கிக் கொண்ட போதிலும் அதற்கு விரோதமாக செயல்பட்டவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? அதனால்தான் அவருடைய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்த பொழுது மக்கள் அதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வரவில்லையா ? இரண்டாவதாக, அவரை தோற்கடித்தது, அவருடைய அரசியல் வாரிசுகள். யாரை தன்னுடைய பட்டத்து இளவரசர்போல வளர்த்தாரோ, அவரே சம்பந்தரைக் குறித்து பொதுவெளியில் விமர்சிக்க தொடங்கினார். அவர் மற்றொரு வாரிசாக இறக்கிய விக்னேஸ்வரன் அவருக்கு எதிராகத் திரும்பினார்.தனது சொந்த தேர்தல் தொகுதியில், திருக்கோணமலையில் தன்னுடைய வாரிசாக அவர் யாரை இறக்கினாரோ, அவர் தனக்குத் தெரியாமல் நியமனங்களைச் செய்கிறார் என்று புலம்பும் ஒரு நிலைமை ஏற்பட்டது. அதாவது தன் மிக நீண்ட அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பந்தர் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே மதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின் பின் கட்சி இரண்டாக உடைந்தது. கட்சிக்காரர்களே கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். தனது தாய்க் கட்சி உடைந்த போதும், அந்தக் கட்சியை கட்சிக்காரர்களே நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்திய பொழுதும், அதைத் தடுக்கும் சக்தியற்றவராக, கையாலாகாத ஒரு தலைவராக, சம்மந்தர் காட்சியளித்தார். அதாவது அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய கண் முன்னாலேயே அவருடைய தாய்க் கட்சி உடைக்கப்படுவதையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதையும் கையாலாகாதவராக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர் தோற்கடிக்கப்பட்டிருந்தார். சம்பந்தரை அவருடைய வாரிசுகளே தோற்கடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் அவருடைய அஞ்சலி நிகழ்விலும் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை தோற்கடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒர் அரசியல் தலைவரின் அஞ்சலி நிகழ்வு என்பதும் ஓர் அரசியல் நிகழ்வுதான். அதை அதற்குரிய கால முக்கியத்துவத்தோடு விளங்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கட்சிக்காரர்கள் செய்யத் தவறினார்கள்.அவரைப் பெருந்தலைவர் என்று அழைத்த கட்சிக்காரர்களே அந்த அஞ்சலி நிகழ்வை பிரம்மாண்டமானதாக ஒழுங்குபடுத்தத் தவறினார்கள். அல்லது அவர்களால் அவ்வாறு ஒழுங்குபடுத்த முடியாத அளவுக்கு மக்களின் கூட்டு மனோநிலை இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா? அதனால் யாழ்ப்பாணத்தில் அந்த சாவீடு சோர்ந்து போன ஒரு சா வீடாகக் காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தில்,சம்பந்தரின் அஞ்சலி நிகழ்விலும் அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய வாரிசுகளும் அவருடைய விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்களும் அவர் இறந்த பின்னரும் அவரைத் தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்லலாமா? https://athavannews.com/2024/1391210
-
தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன் கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில், புங்கங்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் ஒரு பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது. தமிழ் நாட்டின் விருது நகர் ரோட்டறிக் கழகத்தின் இளையோருக்கான தலைமைத்துவ விருதுகளை வழங்கும் நிகழ்வு அது. (RYLA-Rotary Youth Leadership Awards) கனடாவை மையமாகக் கொண்டியங்கும்”ஈ-குருவி-புதிய வெளிச்சம்”அமைப்பு தமிழகத்தின் இதயம் நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் அனுசரணையோடு இளம் தொழில் முனைவோருக்கான வதிவிடக் கருத்தரங்கு ஓன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது. இளம் தொழில் முனைவோரின் நம்பிக்கைகளை, தொழில் திறன்களைக் கட்டியெழுப்புவது அக்கருத்தரங்கின் நோக்கமாகும். அதில் பங்குபற்றிய இளையோர் பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றினார்கள். அவர்கள் ஆற்றிய உரைகளின் சாராம்சம் கால முக்கியத்துவம் உடையது; அரசியல் முக்கியத்துவம் உடையது; நம்பிக்கையூட்டுவது. அதில் ஓர் இளைஞர் பின்வரும் பொருள்பட பேசினார் “நான் யார்? இந்த நாட்டில் என்னுடைய பங்கு என்ன? என்ற கேள்வி என்னிடம் இருந்தது… இந்த வதிவிட கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் அதற்குரிய பதிலைப் பெற்றுக் கொண்டேன் ” என்று. ஏனைய பெரும்பாலான இளையோர் தாங்கள் எந்தெந்த துறைகளில் தொழில் முனைவோராக எழுச்சி பெறுகிறார்கள் என்று பேசினார்கள். விஸ்வமடுவிலிருந்து வந்த ஒரு இளையவர் தான் எப்படி தனது சொந்த காயங்களில் இருந்து மீண்டு எழுந்தார் என்பதனைப் பேசினார். போரில் முகம் சிதைந்து கிடந்த அவர் எப்படி ஒரு தொழில் முனைவோராக வெற்றி பெற்றார் என்பதனை விளங்கப்படுத்தினார். அந்த இளையோரின் குரல்களிலும் வார்த்தைகளிலும் நம்பிக்கை பிரகாசித்தது. தமது தாய் நிலத்தில் தாம் தமது தொழில்களை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். அந்த நம்பிக்கைதான் இங்கு இன்று இந்த கட்டுரையின் குவிமையம். இந்த நாட்டில் தன்னுடைய வகிபாகம் என்ன? தான் யார்? என்பதைக் குறித்து ஒரு தொகுதி இளையோர் சிந்திக்கிறார்கள். இன்னொரு தொகுதி அதன் வேர்களை அறுத்துக் கொண்டு புலம்பெயர்ந்து வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு கனேடிய விசா வழங்கும் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். ஒர் அழகிய இளம் பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டைக் கையளிப்பதற்கு வந்திருந்தார். அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை அங்கு கையெழுத்து விட்டு திரும்பி வருகையில் கவனித்தேன். அவருடைய கண்கள் அசாதாரணமாக மகிழ்ச்சியால் பூரித்து போயிருந்தன. கிடைத்தற்கரிய ஒரு வேறு கிடைத்ததுபோல அவர் நடந்து போனார். அந்த அலுவலகம் அமைந்திருக்கும் சிறிய வீதி காலி வீதியில் போய் ஏறும் சந்தியில் அவருடைய தாயும் சகோதரரும் அவருக்காக காத்து நின்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர் ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து விட்டு வெற்றியின் வாசலில் நிற்பவர் போல நடந்து கொண்டார். இது முதலாவது அவதானிப்பு. இரண்டாவது அவதானிப்பு, யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தரப் பிரிவில் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் கற்கும் பிள்ளைகளுக்கான தனியார் கல்வி நிறுவனம் ஒன்று அமைந்திருக்கும் கன்னாதிட்டி வீதியில் ஒரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் பின்வருமாறு உண்டு ” be a Canadian”- “கனேடியனாக இரு: புதிய வாழ்க்கையின் முதல்படி” கனடாவுக்கு போவது; லண்டனுக்குப் போவது; தாயகத்தை விட்டுப் போவது என்பது ஒரு பகுதி இளையோர் மத்தியில் தணியாத தாகமாக மாறி வருகிறது. அதே சமூகத்தில் இன்னொரு பகுதி இளையோர் இந்த நாட்டில் “என்னுடைய வகிபாகம் இது; நான் எனது தொழிலையும் நாட்டையும் ஒருசேரக் கட்டி எழுப்ப போகிறேன்” என்று நம்பிக்கையோடு மேலெழுகிறார்கள். இக்கட்டுரை புலப்பெயர்ச்சிக்கு எதிரானது அல்ல. புலம்பெயர்பவர்களின் பயங்களை; கவலைகளை; எதிர்காலத்தைக் குறித்த கனவுகளை இக்கட்டுரை அவமதிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே நிலம் சிறுத்து வருகிறது. அதாவது தாயகம் சிறுத்து வருகிறது. இப்பொழுது சனமும் சிறுக்க தொடங்கிவிட்டது. இது தொடர்பாக திருத்தமான புள்ளிவிபரங்கள் எந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. கனடா அதன் விசிட் விசா விதிகளில் தளர்வுகளை ஏற்படுத்திய பின் அண்மை ஆண்டுகளில் இதுவரை இருப்பதாயிரத்துக்கும் குறையாதவர்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து விட்டதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு புலம்பெயர்வதற்காகக் காத்திருக்கும் இளையவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக ஒரு மனநல மருத்துவர் அண்மையில் தெரிவித்தார். ”இந்த நாட்டில், இந்த சமூகத்தில் நான் அதிககாலம் இருக்கப் போவதில்லை. இனி இது எனது நாடுமல்ல எனது சமூகமும் அல்ல. எனவே விசா கிடைப்பதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நான் எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகலாம்” என்று சிந்திக்கும் ஒரு பகுதி இளையவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை அந்த மருத்துவர் சுட்டிக்காட்டினார். ஒருபுறம் நகர்ப்புறங்களில் அன்றாட கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை. பல வாகனம் திருத்தும் கடைகளில் உதவிக்கு ஆட்கள் இல்லை. மேசன் வேலை , வயரிங் வேலை, பெயிண்டிங் வேலை போன்ற வேலைகளுக்கும் உதவி ஆட்கள் கிடைப்பது அரிது. அன்றாடச் சம்பளத்துக்கு வருபவர்கள் கைபேசிகளை கொண்டு வருகிறார்கள். வேலை பாதி; கைபேசி பாதி. இன்னொருபுறம் வேலையற்ற பட்டதாரிகள் வட-கிழக்கில் மட்டும் கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கும் குறையாதவர்கள் வேலை வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கிறார்கள். தமது கல்வித் தகமையைவிடக் கீழான உத்தியோகங்களுக்குப் போகிறார்கள். ஒருபுறம் கூலி வேலைகளுக்கு ஆட்கள் இல்லை. இன்னொருபுறம் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. இப்படிப்பட்டதோர் சமூகத்தில் இருந்து படித்தவர்களும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,அதே சமூகத்தில் ஒரு சிறு தொகுதி தொழில் முனைவோர் அதுவும் இளையோர் நம்பிக்கையோடு மேடை ஏறுகிறார்கள். தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது என்பது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். அந்த அடிப்படையில் பார்த்தால் அந்த வதிவிடக் கருத்தரங்கு கவனிப்புக்குரியது. அதில் மற்றொரு செய்தியும் உண்டு அந்த கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெரு முதலாளியுந்தான். வளவாளர்களாக வந்தவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். தமிழகத்தின் விருதுநகர் ரோட்டறி கழகத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அது முன்னெடுக்கப்பட்டது. அரசற்ற ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய தேச நிர்மாணத்தின் பங்காளிகள் என்று பார்க்கும்பொழுது புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் தமிழகத்தையும் குறிப்பிட்டுச் செல்லலாம். நிதிப் பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது ஈழத் தமிழர்களின் ரத்தமும் சதையுமாக இருக்கிறது. அது தாயக அரசியலில் தொலை இயக்கி வேலைகளைச் செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு; தாயகத்தோடு கலந்து பேசாமல் பிரகடனங்களை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு;எனினும்,தேசத்தைக் கட்டியெழுப்பும் செய்முறையைப் பொறுத்தவரை அதில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் முதன்மைப் பங்காளி. அடுத்தது தமிழகம். நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது தமிழகத்தின் திரைப்படத் தொழிற்துறைக்குள் செல்வாக்கு மிக்க முதலீட்டாளர்களாக வளர்ச்சி பெற்று வருகிறது. அது பெருமளவுக்கு சீரியஸான கலை முதலீடு அல்ல. இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுக் காயங்களையும் கூட்டு மனோநிலையையும் பிரதிபலிக்கும் கலை முயற்சியும் அல்ல. அவை பெருமளவுக்கு ஜனரஞ்சகமானவை. ஆனால் கோடிக் கணக்கான காசு புரளும் முதலீடுகள். அதேசமயம்,சினிமா தவிர தமிழகத்தின் ஏனைய தொழில்துறைகளில் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் முதலீடுகள் ஒப்பீட்டளவில் குறைவு. இது தொடர்பாக தேசத்தை கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து ஒரு முதலீட்டு திட்டம் வகுக்கப்படவில்லை. தமிழகம் புவியியல்ரீதியாகவும் இனரீதியாகவும் மொழிரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஈழத்தமிழர்களுக்கு மிக அருகில் காணப்படுகின்றது. இறுதிக்கட்டப் போரில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்களின் விளைவாக இந்தப் பிணைப்புகள் அதிகம் சோதனைக்கு உள்ளாகியுள்ளன. மீனவர்கள் விவகாரம் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய பெரு முதலாளிகளால் தாங்கள் விழுங்கப்பட்டு விடுவோம் என்ற ஈழத்தமிழ் வணிகர்களின் அச்சம் போன்றவையும் அந்த உறவுகளை மேலும் சோதனைக்கு உள்ளாக்குகின்றன. தமிழகம் இப்பொழுது இந்தியாவின் மிக வேகமாக முன்னேறும் மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அது இரண்டாவதாக பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட மாநிலமாகக் காணப்படுகின்றது. இப்படிப்பட்ட புதிய வளர்ச்சிகளின் பின்னணியில்,நிதிப் பலம்மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து ஓர் அமைப்பும் இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த தொழிற்சார் வளவாளர்களும் இணைந்து இளம் தொழில் முனைவோருக்கான ஒரு வதிவிடக் கருத்தரங்கை நடாத்தியிருக்கின்றனர். “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று பாடிய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து இளையவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், அதே இளையவர்கள் மத்தியில் தமது சொந்தத் திறமைகளின் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப இது போன்ற கருத்தரங்குகள் உதவும். இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்பு ஒன்றின் தன்னார்வ முயற்சிகளும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தாகமும், தமிழகத்தின் துறைசார் நிபுணத்துவமும் ஒன்றிணையும் போழுது, அது புதிய நொதிப்புகளை ஏற்படுத்த முடியும். தமிழ் நோக்கு நிலையில் இருந்து தாயகமும் டயஸ்பொறாவும் தமிழகமும் இணைந்து வளங்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதும் கூட்டு முதலீடுகளைக் குறித்துச் சிந்திப்பதும் பொருத்தமானவை. தாயகத்தில் உள்ள தொழில் முனைவோரைப் பொறுத்தவரை ஊரில் உழைக்கலாம்,சொந்த காலில் நிற்கலாம் என்ற நம்பிக்கை அதிகரித்தால், வேரை அறுத்துக் கொண்டு தாய் நிலத்தை விட்டு வெளியேறும் நிலைமைகள் தோன்றாது.தாய் நிலத்தில் தன்னுடைய வகிபாகம் என்ன என்ற தெளிவு இருந்தால், இளைய தலைமுறை நாட்டை விட்டு வெளியேற விரும்பாது. புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளும் தமிழக முதலாளிகளும் தாயகத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதை கொழும்பின் நோக்கு நிலையில் இருந்து செய்வதை விடவும் தாயகம்- தமிழகம்- டயஸ்பெரா ஆகிய முக்கூட்டு நோக்கு நிலையில் இருந்து செய்வது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒப்பீட்டுளவில் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பாக, தாயகத்தைக் கட்டியெழுப்புவது என்ற நோக்கு நிலையில் அது அதிகம் பொருத்தமானதும்கூட. https://www.nillanthan.com/6803/
-
வள்ளல்களும் தமிழரசியலும் - நிலாந்தன் இலவசமாகக் கிடைப்பதைப் பெரும்பாலானவர்கள் கைவிடமாட்டார்கள். இது பெரும்பாலான எல்லாச் சமூகங்களிலும் காணப்படும் ஒரியல்பு. அதிலும் குறிப்பாக ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில்,கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தில், உதவிக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். கடந்த 15 ஆண்டு கால ஈழத்தமிழ் அரசியலானது அவ்வாறு உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பொருத்தமான நிவாரணத் திட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கத் தவறிவிட்டது. 2009இல் காணாமல்போன தனது இளம் கணவனுக்காக போராடிய இளம் மனைவி இப்பொழுது முதுமையின் வாசலை அடைந்து விட்டாள். அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அப்படித்தான் காயப்பட்டவர்கள், அவயங்களை இழந்தவர்கள், மிகக்குறிப்பாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், கழுத்துக்குக் கீழ் இயங்க முடியாதவர்கள், இரு கண்களையும் இழந்தவர்கள், இரு கால்களையும் இழந்தவர்கள்… போன்றவர்களுக்கு உதவுவதற்கு ஒரு மையத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட எத்தனை கட்டமைப்புகள் உண்டு? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாக உள்ள பெண்களின் கண்ணீரை வைத்து அரசியல் செய்யும் ஒரு சமூகம், அப்பெண்கள் மத்தியில் காணப்படுகின்ற இளவயதினருக்குப் புதிய வாழ்வைக் கொடுக்கத் தவறிவிட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள ஒரு சமூகத்தில் பிறரிடம் இருந்து கிடைக்கக்கூடிய உதவிக்காக காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். தமிழ்ச்சமூகத்தில் பிறர் உதவியில் தங்கியிருக்கும் தொகையினரை கடந்த 15ஆண்டுகளாக அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள தனி நபர்கள், தன்னார்வ அமைப்புக்கள், இவைதவிர நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வள்ளல்கள், கொடையாளிகள் போன்றவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அரவணைத்து வருகிறார்கள். மேற்சொன்ன ஒவ்வொரு தரப்பும் அவரவர் நோக்கு நிலையில் இருந்துதான் அந்த மக்கள் கூட்டத்தை அரவணைக்கிறார்கள். அதனால் தேவை நாடிகளாக இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு விகிதமளவு நிவாரணம் கிடைக்கிறது. உதவிகள் கிடைக்கின்றன. உளவளத் துணையும் கிடைக்கின்றது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்பவர்கள் தானம் செய்பவர்கள் முதலாவதாக, நல்லதைத்தான் செய்கிறார்கள். ஆனால் தொண்டும் தானமும் மட்டும் ஒரு சமூகத்தை அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ வைக்க உதவாது. அந்த மக்களைக் கையேந்தி மக்களாக வைத்திருப்பதற்கும் அப்பால் அவர்களை வாழ்வில் பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்களாக, விடாமுயற்சி உள்ள உழைப்பாளர்களாக மாற்ற வேண்டும். அது தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாடு. ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாடு.இந்த அடிப்படையில் சிந்தித்தால் தானமும் தொண்டும் கருணையின் பாற்பட்ட செயல்கள் மட்டுமல்ல. அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஒரு பகுதி.அவை தேசியக் கடமைகள். காயத்தில், துக்கத்தில், இழப்பில், தனிமையில் விழுந்து கிடப்பவர்களுக்குக் கைகொடுப்பது, அவர்களைத் தூக்கி நிறுத்துவது, அவர்களின் காயங்களை ஆற்றுவது, போன்றன ஒப்பீட்டளவில் “செட்டில்ட் “ஆன தமிழ் மக்களின் தேசியக் கடமைகள். அதற்கு ஓர் அரசியல் தலைமைத்துவம்தான் முழுமையான பொருளில் வழி நடத்த முடியும். ஓரளவுக்குச் சமூகத் தலைமைத்துவமும் மதத் தலைமைத்துவமும் செயற்பாட்டு அமைப்புக்களும் செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட செய்முறைகள் கடந்த 15 ஆண்டுகளாக மிகக்குறைந்த அளவில்தான் நடநதிருக்கின்றன. மிகக் குறைந்த தொகையினர்தான் அவ்வாறு வலுவூட்டப்பட்டிருக்கிறார்கள். பெருந்தொகையானவர்கள் தொடர்ந்தும் கையேந்திகளாகவும் நிவாரணங்களுக்காகக் காத்திருப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு சமூகப் பின்னணியை வள்ளல்களும் கொடையாளிகளும் தமக்கு வசதியாகக் கையாளப் பார்க்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை அப்படி ஒரு சம்பவம் நடந்தது. அன்று கொழும்புக்கான ஐநாவின் இணைப்பாளர், ஐநா அலுவலகம் ஒன்றில் குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திப்பதாக இருந்தார். ஆனால் அவருடைய பயணம் சிறிது நேரம் தாமதம் ஆகியது. ஏனென்றால் அவர் வரும் வழியில் நாவலர் வீதியில் ஒரு பல்பொருள் அங்காடியைச் சூழ உள்ள பிரதேசத்தில் அசாதாரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அங்குள்ள ஒரு பல்பொருள் அங்காடி உரிமையாளரின் பெருமெடுப்பிலான தான நிகழ்வே அந்த நெரிசலுக்குக் காரணம். அங்கே போலீசாரும் படை வீரர்களும் காணப்பட்டார்கள். எனினும் அங்கு பெருகிய மக்களைக் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. அதனால் ஐநாவின் பிரதிநிதி சிறிது கால தாமதமாக சந்திப்புக்கு வந்தார். மேற்சொன்ன பல்பொருள் அங்காடியின் முதலாளி ஏற்கனவே அதுபோன்ற தான நடவடிக்கைகளுக்காக மிகவும் பிரபல்யமானவர். உதவி தேவைப்படுகிறவர்களுக்கு அவர் காசை அள்ளிவீசுவார். அன்றைய தான நிகழ்வுக்கு வெளியிடங்களில் இருந்து குறிப்பாக தூர இடங்களில் இருந்து மக்கள் முதல்நாளே இரவு பயணம்செய்து அங்கு வந்திருந்தார்கள். வயோதிபர்கள், நோயாளிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என்று பல வகைப்பட்டவர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களைக் கௌரவமான விதத்தில் ஒழுங்குபடுத்தி அதை ஒரு கௌரவமான தான நிகழ்வாகச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருந்திருந்தால், அன்றைக்கு அந்த நெரிசலைத் தவிர்த்து இருந்திருக்கலாம். அல்லது அது ஒரு கட்டுப்படுத்த முடியாத பெரும் விழாவாக வெளியில் தெரிவதை அந்த முதலாளி விரும்பினாரோ தெரியவில்லை. கொடையாளிகள் அல்லது வள்ளல்கள் எல்லாச் சமூகங்களிலுமே போற்றப்படுகின்றார்கள். எல்லா மதங்களிலுமே அவர்களுக்கு உயர்வான இடம் உண்டு. குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் புராண நாயகனாகிய கர்ணன், முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்த மன்னன் பாரி போன்றவர்கள் உதாரணங்களாகக் கூறப்படுவதுண்டு. நவீன வரலாற்றிலும் கோடீஸ்வரர்களும் உலகப் பெரு முதலாளிகளும் தாம் திரட்டிய செல்வத்தின் ஒரு பகுதியைத் தானம் செய்கிறார்கள். அல்லது தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழராகிய ராஜ் ராஜரத்தினம் அவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்களை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தானம் செய்வதற்கு உழைக்க வேண்டும். உழைத்தால்தான்,செல்வத்தைத் திரட்டினால்தான், தானமாகக் கொடுக்கலாம் என்ற பொருள்பட அவர் தன்னுடைய “சமனற்ற நீதி” என்ற நூலில் எழுதியிருக்கிறார். தொண்டு செய்வது நல்லது. வள்ளல்கள் போற்றுதற்குரியவர்கள். ஆனால் தொண்டர்களும் வள்ளல்களும் அரசியலில் இறங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு போக்கு எங்கிருந்து வருகிறது ? தமிழகத்தில் எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றவர்கள் வள்ளல்களாக போற்றப்படுகிறார்கள். அதனால் லட்சக்கணக்கான ஆதரவாளர்களை அவர்கள் சம்பாதித்தார்கள். ஈழத்தமிழர்கள் மத்தியில் அவ்வாறு வள்ளல்கள் அரசியலில் ஈடுபடும் ஒரு போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. வள்ளல்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று இக்கட்டுரை கூறவரவில்லை. கடந்த 15 ஆண்டுகால தமிழ் அரசியல் போக்கெனப்படுவது வள்ளல்களுக்கும் கொடையாளிகளுக்கும் வசதியான ஒன்றுதான். கொடைகளின்மூலம் வள்ளல்கள் சமூகத்தில் இயல்பாகவே அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் பெற்று விடுகிறார்கள். அதை அவர்கள் அரசியலில் முதலீடு செய்வது இலகுவானது. ஏற்கனவே தமது தொழில்சார் திறமைகள் காரணமாக புகழடைந்த,செல்வந்தர்களாகிய சிலர் தமிழரசியலில் இறங்கிவிட்டார்கள். செல்வந்தர்களாகவும் பிரபல்யங்களாகவும் இருக்கும் பலர் இறங்கத் துடிக்கிறார்கள் .இப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழலில் வள்ளல்கள் இலகுவாக அரசியலில் நுழையலாம். இது அரசியல்வாதியாக இருப்பதற்குரிய தகமை என்ன என்ற தமிழ்ச் சமூகத்தின் அளவுகோல்களைக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? அதுமட்டுமல்ல தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலை முன்னெடுக்கத் தவறிய ஒரு வெற்றிடத்தில்தான் வள்ளல்கள் ஒரு தேசியக் கடமையை தனிப்பட்ட தானமாகவும் கருணையாகவும் கருதி அதன் ஊடாக அரசியலில் பிரவேசிக்க முயற்சிக்கிறார்களா? கூட்டு மனவடுகளோடும் ஆறாத கூட்டுக்காயங்களோடும், அவநம்பிக்கைகளோடும் காணப்படும் ஒரு சமூகத்தை பண்புருமாற்றத்தின் ஊடாகக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு 2009க்குப் பின் வந்த எல்லாத் தலைவர்களுக்கும் இருந்தது. ஆனால் அது பொருத்தமான விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை. அதன் விளைவாக விழுந்த வெற்றிடத்தில்தான் வள்ளல்கள் தலைவர்களாக வர முயற்சிக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்துக்கு இப்பொழுது தேவையாக இருப்பது 15ஆண்டுகளின் பின்னரும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு கூட்டு அரசியல் செயல்பாடுதான். ஆனால் அவ்வாறு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை முன்னெடுக்கவல்ல ஆளுமை மிகுந்த தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு? மக்களுக்கு நிவாரணம் வேண்டும்.உதவிகள் வேண்டும். நிதிவளம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் காசை என்ன செய்வது என்று தெரியாமல் கோவில்களில் கொண்டு போய்க் கொட்டுகின்றது. அந்தக் காசைப் பயன் பெறுமதி மிக்கதாக மாற்றலாம். அதற்கு 2009க்குப் பின்னரான தமிழ் அரசியலைக் குறித்த பொருத்தமான அரசியல் தரிசனமும் பொருளாதார தரிசனமும் நிவாரண தரிசனமும் இருக்க வேண்டும். வள்ளல்களுக்கு அவ்வாறான தரிசனம் இருக்குமாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் வள்ளல்கள் தங்களை புதிய எம்ஜிஆர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தான நிகழ்வை நாடகத்தனமாக ஒழுங்குபடுத்தி, பாட்டுக்கு எம்ஜிஆர் போல ஆடி, யுடியுப்பர்களுக்குச் செய்தியாக மாறும் போதுதான், அது விவகாரமாகிறது. தொண்டு நல்லது. தானம் நல்லது. ஆனால் தொண்டர்களும் வள்ளல்களும் அரசியல்வாதிகளாக வர விரும்பினால் அதற்குரிய ஒழுக்கமும் தரிசனமும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும். தானம் ஒரு அர்ப்பணிப்புத்தான். ஆனால் அது மட்டும் போதாது. பொருத்தமான அரசியல் தரிசனம் இருக்க வேண்டும். அது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அதை ஒரு தேசியக் கடமையாக செய்ய வேண்டும். அற்புதமான ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஒரு கை கொடுப்பது மறுகைக்குத் தெரியக்கூடாது என்று. தானம் செய்வதால் தனக்குக் கிடைக்கும் புகழையும் பிரபல்யத்தையுங்கூடத் தானம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மகாபாரதத்தில் கர்ணன் இறக்கும் தறுவாயில் அவனுடைய தர்மமே அவனுக்குப் பாரமாக இருந்தது. அதனால் கர்ணன் தானம் செய்து தான் சம்பாதித்த புண்ணியத்தையும் தானம் செய்தான். அது புராண கால கர்ணன். அவனுக்குத் தலைகாத்த தர்மம் ஒரு பாரம். நவீன அரசியலில் தர்மம் ஒரு முதலீடா? https://www.nillanthan.com/6796/