Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்ப்பது தற்கொலைக்கு ஒப்பானது! -இரா.துரைரத்தினம்.

Featured Replies

sampanthan-and-ranil1-150x150.jpgஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மேதின ஊர்வலத்தை நடத்துவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கிறது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் என சொல்வதை விட சம்பந்தனும் சுமந்திரனும் கொழும்பில் இருந்து எடுத்த தீர்மானம் என சொல்வதே பொருத்தமானதாகும்.

ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி இத்தீர்மானம் எடுக்கப்படவில்லை. மேல் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கூட இது தொடர்பாக சிலர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும் அந்த ஆட்சேபனை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மேதினத்தை ஐ.தே.கவுடன் இணைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கேள்வி எழுப்பபட்ட போது மாவை சேனதிராசா அளித்த பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலவீனத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்தினால் பாதுகாப்பு இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி போன்ற பெரிய கட்சிகளுடன் நடத்தினால்தான் பாதுகாப்பு என்ற மாவை சேனாதிராசாவின் பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது இலக்கை விட்டு தடம்மாறி செல்கிறதோ என்ற ஆதங்கம் என்போன்றவர்களுக்கு ஏற்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்ன, அது என்ன நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எந்த ஒரு கட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி போன்ற பேரினவாத கட்சிகளோடு கைகோர்க்க முடியுமா? போன்ற விடயங்களை நாம் ஆராய்ந்தால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேதினத்தை நடத்த எடுத்திருக்கும் தீர்மானம் தற்கொலைக்கு சமமான முயற்சி என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் மக்களும் கடந்த 60வருடங்களுக்கு மேலாக மாறிமாறி ஆட்சி செய்து வந்த சிறிலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள், இனஅழிப்புக்கள் என்பவற்றை இங்கே பட்டியல் இடுவது நேரவிரயத்தை ஏற்படுத்தும் என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த காலகட்டத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்க முடியாது என்பதற்கான சில காரணங்களை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.

ஐக்கிய தேசியக்கட்சியினால்தான் மிகப்பெரிய வரலாற்று அழிவுகளும், கொடுமைகளும் நிகழ்த்தப்பட்டன. தமிழர்களை ஒடுக்குவதற்கும் அழிப்பதற்கும் என்றே கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவந்ததே ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம்தான். இந்த சட்டத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டன. வகைதொகையின்றி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்கள். இன்றும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து மேதினத்தை நடத்த நினைக்கும் மாவை அண்ணன் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை இருந்ததும் சித்திரவதை அனுபவித்ததும் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க காலத்தில்தான்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலைகளை இன்றும் வடக்கு கிழக்கில் முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் காணலாம்.

அந்த இரத்தங்கள் இன்னும் காயவில்லை. மக்கள் அழுகுரல்கள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் எப்படி கைகோர்க்க முடிகிறது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன சப்பை கட்டை கட்டினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

1977ஆம் ஆண்டு போரா சமாதானமாக என்ற தமிழ் மக்களுக்கு எதிரான போர்ப்பிரகடனத்தை வெளியிட்டு தமிழினப்படுகொலையை ஆரம்பித்த ஜே.ஆர்.தொடக்கம் இன்றைய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வரை தமிழின அழிப்புக்களை நான் பட்டியல் இட்டுத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருந்தாலும் படுகொலை விபரங்களை தராவிட்டாலும் எந்த ஆண்டில் எங்கெங்கு படுகொலை நடந்தது என்ற விபரங்களை மட்டும் சுருக்கமாக தருகிறேன்.

இனப்படுகொலைகள் 1977ஆம் ஆண்டு இனப்படுகொலை, 1981ஆம் ஆண்டு இனப்படுகொலை, 1983இனப்படுகொலை, 1990ஆம் ஆண்டு படுகொலைகள் என 91 கிராமங்களில் கூட்டுப்படுகொலைகளை நடத்தி இன அழிப்பை நடத்திய பெருமை ஐக்கிய தேசியக்கட்சியையே சாரும், ஒருபுறத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இனஅழிப்பை செய்து கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி மறு புறத்தில் மிகப்பெரிய சொத்தான யாழ். நூலகத்தையும் அழித்தது. யாழ். நூலகத்தை அழித்து போன்ற கொடுமைக்கு எந்த காலத்திலும் எந்த விதத்திலும் ஐக்கிய தேசியக்கட்சியால் பரிகாரம் செய்து விட முடியாது.

ஒவ்வொரு தமிழனும் இந்த உலகில் இருக்கும் வரை இந்த கொடுமைகளை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களின் பூர்வீக தாயத்தை சிங்கள தேசமாக மாற்றுவதில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய தேசியக்கட்சிதான்.

1983ஆம் ஆண்டு யூலை 24ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலி படுகொலை, தொடக்கம் சாம்பல்தோட்ட படுகொலை,(1984) சுன்னாகம் சந்தை படுகொலை, (1984) பருத்தித்துறை திக்கம் படுகொலை, (1984) ஓதியமலை படுகொலை, (1984) குழுழமுனை படுகொலை, (1984) செட்டிக்குளம் படுகொலை, (1984) மணலாறு மற்றும் தென்னமரவாடி படுகொலை, (1984) மன்னார் முருங்கன் படுகொலை, (1984) கொக்குளாய் படுகொலை, (1984) வங்காலை தேவாலயப்படுகொலை, (1986) முள்ளியவளை படுகொலை (1985) வட்டக்கண்டல் படுகொலை, (1985) புதுக்குடியிருப்பு ஜயன்கோவிலடிப்படுகொலை, (1985) திருமலை படுகொலை (1985) வல்வெட்டித்துறை படுகொலை( 1985) குமுதினி படகு படுகொலை (1985) கிளிவெட்டி படுகொலை (1985) திரியாய் படுகொலை (1985) சாம்பல்தீவு படுகொலை (1985) நிலாவெளி படுகொலை (1985) பிரமந்தனாறு படுகொலை ( 1985) கந்தளாய் படுகொலை ( 1985) மூதூர் கடற்கரைச்சேனை படுகொலை ( 1985) வயலூர் படுகொலை ( 1985) பெரியபுல்லுமலை படுகொலை ( 1986) கிளிநொச்சி ரயில்நிலைய படுகொலை ( 1986) உடும்பன்குளம் படுகொலை ( 1986) ஈட்டிமுறிச்சான் படுகொலை ( 1986) ஆனந்தபுரம் செல்வீச்சில் நடத்தப்பட்ட படுகொலை ( 1986) மண்டைதீவுக்கடல் படுகொலை (1986) சேருவில் படுகொலை ( 1986) தம்பலகாமம் படுகொலை ( 1986) பரந்தன் விவசாயிகள் படுகொலை ( 1986) பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை ( 1986) தட்டுவான்படுகொலை ( 1986) மூதூர் மணல்சேனை படுகொலை ( 1986) அடம்பன் படுகொலை (1986) பெரிய பண்டிவிரிச்சான் படுகொலை ( 1986) கொக்கட்டிச்சோலை இறால்பண்ணை படுகொலை ( 1987)பட்டித்திடல் படுகொலை (1987) தோணிதாண்டமடு படுகொலை ( 1987) அல்வாய் முத்துமாரி அம்மன் செல்வீச்சு படுகொலை ( 1987)

வீரமுனை படுகொலை ( 1990) கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம்படுகொலை ( 1990) சத்துருக்கொண்டான் படுகொலை ( 1990) சம்மாந்துறை சேவியர்புரம் படுகொலை ( 1990) சித்தாண்டி படுகொலை (1990) பரந்தன் சந்தி படுகொலை ( 1990) பொத்துவில் படுகொலை( 1990) திராய்கேணி படுகொலை ( 1990) கல்முனை படுகொலை ( 1990) துறைநீலாவணை படுகொலை ( 1990) ஏறாவூர் 5ஆம் குறிச்சி படுகொலை (ஓகஸ்ட்,1990) ஏறாவூர் படுகொலை ( ஒக்டோபர் 1990) கோரவெளி ஈச்சையடித்தீவு படுகொலை ( 1990) நெல்லியடி சந்தைப்படுகொலை (1990) நற்பிட்டிமுனை படுகொலை,( 1990) ஒட்டிசுட்டான் படுகொலை ( 1990) புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை ( 1991) கொக்கட்டிச்சோலை படுகொலை( 1991) புல்லுமலை படுகொலை ( 1990) கிண்ணயடி படுகொலை ( 1991) கரப்பொழை முத்துக்கல் படுகொலை ( 1992) தெல்லிப்பளை ஆலயப்படுகொலை ( 1992) மைலந்தனை படுகொலை ( 1992) கிளாலிப்படுகொலை ( 1993) மாத்தளன் படுகொலை ( 1993) கொக்குவில் ஆலயப்படுகொலை ( 1993) குருநகர் தேவாலயப்படுகொலை ( 1993) சுண்டிக்குளம் மீனவர் படுகொலை( 1993)

இதில் உதிரிகளாக படுகொலை செய்யப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை. இதைவிட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், இன்னமும் சிறையில் வாடுவோர் வகைதொகை இல்லை. இந்த படுகொலைகளினால் ஓடிய இரத்தம் வடக்கு கிழக்கில் இன்னமும் காயவில்லை. அந்த இரத்தங்களும் காயங்களும் ஆறுவதற்கு முன்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பால் எப்படி ஐக்கிய தேசியக்கட்சியுடன் கைகோர்க்க முடிகிறது?

இன்று வடக்கு கிழக்கு பிரிப்பதற்கும், வடக்கு கிழக்கு புவியியல் ரீதியாக இணைந்த தமிழ் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதை மாற்றும் வகையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி இன்று வடக்கையும் கிழக்கையும் பிரித்திருப்பது ஐக்கிய தேசியக்கட்சிதான். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் மணலாறு பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி அதன் பெயரை வெலிஓயா என பெயர்மாற்றம் செய்து அப்பிரதேசத்தை அனுராதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தது ஐக்கிய தேசியக்கட்சிதான். வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வடக்கு கிழக்கு புவியியல் ரீதியாக இப்போது இணைந்ததாக இல்லை. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் மணலாறு ( வெலிஓயா) இப்போது அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், எங்களுடைய பிள்ளைகளான போராளிகளையும் முற்றாக அழித்தது மகிந்த தலைமையிலான அரசாக இருக்கலாம். ஆனால் அந்த அழிப்பிற்கு வித்திட்டு பாதை அமைத்து கொடுத்தவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்க்க நினைக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கிழக்கில் ஏற்பட்ட பிளவே அந்த இயக்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கியகாரணம் என சொல்லப்படுகிறது. அந்த பிளவை வெற்றிகரமாக செய்து முடித்தவர் ரணில் விக்கிரமசிங்கதான். ரணில் விக்கிரமசிங்காவின் ஆலோசனைப்படி ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களாக இருந்த அலிசாகிர் மௌலானா, ராஜன் சத்தியமூர்த்தி, அப்போது அரசாங்க அதிபராக இருந்த மௌனகுருசாமி உட்பட ஒரு குழுவே திட்டமிட்டு பிளவை ஏற்படுத்தினார்கள். ( இந்த பிளவும் அதன் பின்னால் இருந்த சதியும் பற்றி தனியாக ஆராயப்படவேண்டும்)

இழந்த உரிமைகளை பெறுவதில் தமிழ் கட்சிகள், குழுக்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. ஆனால் தமிழர்களுக்கு உரிமையை வழங்க கூடாது என்பதில் சிங்கள பேரினவாத கட்சிகள் மிக ஒற்றுமையாகவே உள்ளன. அது சிறிலங்கா சுதந்திரக்கட்சியாகவோ, ஐக்கிய தேசியக்கட்சியாகவோ, ஜே.வி.பியாகவோ அல்லது ஜாதிக கெல உறுமய ஆக இருக்கலாம். அனைத்து சிங்கள கட்சிகளுக்கும் இடையில் ஆட்சியை பிடிப்பதில் போட்டியிருந்தாலும், தமிழர்களுக்கு உரிமையை வழங்க கூடாது என்பதில் அவர்கள் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்தும் நோக்கம் என்ன?

தேசியக்கட்சிகள் வடக்கு கிழக்கில் அரசியல் தளங்களை பதிக்க வேண்டும். இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் தேசியக்கட்சிகளின் பலம் இருக்க வேண்டும் என அண்மையில் மகிந்த ராசபக்சவும் பஷில் ராசபக்சவும் கூறியிருந்தனர். அவர்கள் கூறியதற்கு முக்கிய காரணம் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கும் பலத்தை உடைத்து தேசியக் கட்சிகள் என்று அவர்கள் கூறும் சிங்கள பேரினவாத கட்சிகளான சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் வடக்கு கிழக்கில் பலம்பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் இதனை கூறியிருந்தனர். இதன் ஒரு அங்கமாகவே ஐக்கிய தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் மேதினத்தை கொண்டாட முன்வந்தது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தன்னுடன் சேர்த்துக்கொண்டது.

எவ்வாறு டக்ளஸ் தனது கட்சியின் அடையாளத்தை இழந்து வடக்கில் அரசியல் நடத்துவது போல, பிள்ளையானும், கருணாவும் தங்களது சுயத்தை இழந்து அரசியல் நடத்துவது போல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிங்கள பேரினவாத கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தனது சுய அடையாளத்தை இழக்கப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றமும் நோக்கமும்

தேர்தலில் வெற்றிபெற்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சலுகைகளை அனுபவிப்பதற்காக மட்டுமோ அல்லது சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வைத்தான் தமிழர்கள் கோர வேண்டும் என பேசித்திரிவதற்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்படவில்லை.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் சம்பந்தன் போன்றவர்கள் சந்திரிக்காவின் சீலையை பிடித்துக்கொண்டு திரிந்த காலத்தில்…. தமிழ் மக்களுக்கு உறுதியான ஒரு அரசியல்தலைமை இருக்க வேண்டும் என்ற சிந்தனையே அற்று நீலனும், சம்பந்தனும், ஆனந்தசங்கரியும், சந்திரிக்கா கொடுத்த குண்டு துளைக்காத காரில் பவனி வந்து கொண்டிருந்த காலத்தில் எந்த அரசியல் இலாப நோக்கமும் இன்றி ஒரு சிலர் 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக எடுத்த அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது.

ஆயுதப்போராட்டம் ஒரு புறத்தில் நடந்து கொண்டிருந்தாலும் மறுபுறத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட, சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தலைமை ஒன்றின் தேவை கிழக்கு மாகாணத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமும், தமிழர் மறுமலர்ச்சி கழகமும் தொடர்ச்சியாக நடத்தி வந்த கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மூலம் உணரப்பட்டது. இதனைத்தொடர்ந்தே தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகின. இதன் தொடர்ச்சியாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது. ( இது தொடர்பான முழுமையான வரலாறு எழுதப்படும் போது இதை பலரும் அறிந்து கொள்வர்)

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என்று சொல்லும் சம்பந்தனுக்கோ அல்லது இப்போது இருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கைகோர்த்து கொஞ்சிக்குலாவ வேண்டும் என நினைப்பவர்களுக்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை யார் முன் மொழிந்தார்கள் என்றோ அது எங்கே எப்போது நடத்தது என்றோ தெரியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாறு கிராமத்தில் வாவி ஓரம் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில்தான் 2000ஆம் ஆண்டு மாலை வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் முன்மொழியப்பட்டது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் நண்பர் சிவராம், இப்போது வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம், ஆகியோரே அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு இயங்குவது என்றும் பதிவு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஆங்கில பதம் ரி.என்.ஏ என அழைப்பதென்றும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. இந்த ரி.என்.ஏ. என்ற பதத்தின் பின்னல் பல விடயங்கள் அப்போது பேசப்பட்டது.

அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமும் அதன் பயணமும் இலட்சியமும் இலக்கும் என்ன என்பவற்றை உள்ளடக்கி அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது. அதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது அறிக்கையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என இப்போது அழைத்து கொள்பவர்கள் முதலில் அந்த அறிக்கையை படிக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் தலைமையின் இலக்கு என்ன இலட்சியம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் எது? எதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமையை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

யாருக்கு பின்னாலும் செல்லாது, தனித்துவமாக நின்று ஆயுதப்போராட்டத்தை நடத்தியதால்தான் விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள். அதுபோல எந்த ஒரு பேரினவாத கட்சிகளுக்கு பின்னாலும் சலுகைகளுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ செல்லாது உறுதியான தனித்துவமான தமிழ் அரசியல் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்தார்கள்.

வீதியை போட்டுத்தருவார்கள், வேலைவாங்கித்தருவார்கள், என்ற நோக்கத்தோடு தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்யவில்லை.

பேரினவாத கட்சிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும், எங்களை அழித்தவர்களுக்கு வாக்குகளின் மூலம் பதில் சொல்வோம் என்ற உறுதியுடன் தான் கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தார்கள். தமிழ் மக்களின் இந்த உறுதியையும் உயர்ந்த இலட்சியத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறந்து வேறு திசையில் செல்கிறதோ என்ற ஏக்கமும் வேதனையுமே என்னைப்போன்ற பலரிடமும் இப்போது ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் மேதினத்தை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிய ஒரு காரணம். யாழ்ப்பாணத்தில் எங்களால் தனியாக மேதினத்தை நடத்த முடியாது. பாதுகாப்பு இல்லை. ஐக்கிய தேசியக்கட்சி போன்ற பெரிய கட்சிகளுடன் நடத்தினால்தான் பாதுகாப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் தெரிவித்த கருத்து தமிழ் மக்களை வெட்கித்தலைகுனிய வைப்பதாகவே உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் தனியாக மேதினத்தை நடத்துவதற்கு பாதுகாப்பில்லை. அச்சுறுத்தல் இருக்கிறது என கண்டால் அதை மக்களுக்கு சொல்லிவிட்டு மேதினத்தை நடத்தாமல் இருப்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கௌரவம். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசியல் தலைமை ஒன்றிற்கு சுதந்திரமாக தனது பிரதேசத்தில் மேதின கூட்டத்தை நடத்த முடியாத ஒடுக்குமுறை ஆட்சிதான் உள்ளது என்பதை தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லிவிட்டு மேதின கொண்டாட்டங்களிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்கியிருக்க வேண்டும்.

மிகப்பெரிய படுகொலைகளையும் ஒடுக்குமுறைகளையும் செய்து தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பறித்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்க்குமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும்.

உயர்ந்த இலட்சியத்திற்காகவும், தமிழ் மக்களின் விடுதலை என்ற உயரிய இலக்கை நோக்கியும் அமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவறான வழிக்கு கொண்டு சென்றால் அதற்கான தண்டனையை தமிழ் மக்கள் எதிர்காலத்தில் வழங்குவார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தனது அரசியல் நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள நினைத்தால் அதற்கு முதல் ஐக்கிய தேசியக்கட்சி செய்த அத்தனை தமிழின அழிப்புக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்

ஐக்கிய தேசியக்கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்க்குமாக இருந்தால்……. 1994க்கு பின்னர் தமிழ் மக்களை கொன்றொழித்து வரும் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்திருந்து மகிந்தவின் காலடியில் கிடக்கும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் என்ன வித்தியாசம்?

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவதற்கு ஒரு துளி நியாயத்தை கூட அவர்களால் தமிழ் மக்கள் முன் வைக்கமுடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் எடுத்திருக்கும் தற்கொலை முயற்சியை கட்சியில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களும் தமிழ் மக்களும் தடுத்து நிறுத்தப்போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இறுதியாக ஒன்றை சொல்லிவைக்க விரும்புகிறேன்…

தமிழ் மக்கள் வெறும் ஆட்டுமந்தைகள் அல்ல.

இரா.துரைரத்தினம்

www.Thinakathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.