Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – ஆய்விற்கான அவசியம் – பகுதி ஒன்று!

Featured Replies

ஐயரின் ஈழப்போராட்டத்தில்எனதுபதிவுகள் – ஆய்விற்கான அவசியம் – பகுதி ஒன்று!

தத்துவம்… கோட்பாடு… திட்டமிடுதல்… செயற்பாடு……

ஈழப் விடுதலைப் போராட்டம் தொடர்பான அனுபவங்களின் பதிவுகளாக, நினைவுக் குறிப்புகளாக, புனைவுகளாக, சுயசரிதைகளாக, ஆய்வுகளாக சில நூல்களே வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு வெளிவந்தவற்றில் பலவற்றை சசீவன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அவையாவன, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர்உலகம், சி. புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து, அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை, நேசனின் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள், சீலனின் புளொட்டில்நான், அன்னபூரணாவின் தேசிய விடுதலைப்போராட்டம் மீளாய்வை நோக்கி, அலியார் மர்சூஃப்பின் ஒரு போராளியின் டயறி, அற்புதனின் துரையப்பா முதல் காமினிவரை, மணியத்தின் புலிகளின் வதைமுகாம் அனுபவங்கள், ரயாகரனின் வதைமுகாமில் நான், ராஜினி திராணகம, ராஜன் ஹூல், கே.. சிறீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து எழுதிய முறிந்த பனை, செ. யோகரட்ணத்தின் தீ மூண்ட நாட்களும் தீண்டாமைக் கொடுமைகளும், மற்றும் பாலநடராஜ ஐயர் எழுதிய நூலொன்றும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாவற்றையும் வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த வரிசையில் இறுதியாக வந்துள்ள நூல், கணேசன் என்கின்ற ஐயரின் ஈழப்போராட்டத்தில்எனதுபதிவுகள் என்பதாகும். இதை இணையத்தில் வெளிவந்தபோது வாசித்து பின் நூலாக வெளிவந்தபின் இரண்டாம் தரமாக வாசிக்கின்றேன். சில நூல்களைப் பல மீள் வாசிப்புகளுக்கு உட்படுத்தப்படும் பொழுதுதான் அதன் பல்வேறு விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான அவதானிப்பினை அடிப்படையாகக் கொண்ட சில குறிப்புக்களே இந்தப் பதிவு.

நாம் கடந்துவந்த காலங்களையும் அக் காலகட்டதிற்குரிய தகவல்களையும் அனுபவங்களையும் மேற்குறிப்பிட்ட பல படைப்புகள் பதிவு செய்துள்ளன. இவை வெறுமனே பொழுதுபோக்கிற்காவும் தகவல்களை அறிவதற்காகவும் வாசிக்கப்பட வேண்டியவை மட்டுமல்ல. மாறாக, இவை ஈழத்து தமிழ் பேசுகின்ற சமூகங்களினதும் தனிமனிதர்களினதும் இயக்கத்தை, சிந்தனைப் போக்கை, தன்மையை, அரசியலை, உளவியலை, விடுதலைப் போராட்டத்தை எனப் பலவற்றை ஆழமாகவும் விரிவாகவும் புரிந்துகொள்வதற்கான ஆதார மூலங்களாக இருக்கின்றன. இதனால்தான் ஐயரின் நூலை முக்கியமான மூலப்பொருள் என ரகுமான்ஜான் தனது உரையில் குறிப்பிடுகின்றமை கவனத்திற்குரிய ஒன்றாகும்.

இந்த மூலப் பொருட்களை நாம் எப்படிப் பார்கின்றோம் என்பதற்கமைய அதுபற்றிய புரிதல் நமக்கு கிடைக்கின்றது. சதாரண மனிதர்களின் நேரடியாக பார்கின்ற பார்வைக்கும், சமூக மாற்றத்தை விரும்புகின்றவர்களினதும் அதற்காக செயற்பட ஆர்வமுள்ளவர்களின் ஆய்வுரீதியான பார்வைகளுக்குமிடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது நாம் அறிந்ததே. பின்னையவர்களது பார்வைகள் ஒரு ஆய்வாளருக்குரிய பன்முகப்பார்வைகள் கொண்ட தேடலாக இருக்கும் என்றால் மிகையல்ல. நமது சாதாரண பார்வைகள் மேம்பட வேண்டுமாயின் இவை தொடர்பான பன்முகப்பார்வைகளின் அடிப்படையிலான ஆய்வுகள் பல வெளிவரவேண்டும். இதுவே நமது சமூகம் மற்றும் அதன் இயக்கம் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துவதுடன் அவை தொடர்பான தத்துவார்த்த தெளிவையும், அதனடிப்படையில் கோட்பாட்டை உருவாக்குவதற்கான பார்வையும், செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான வழிகாட்டலையும் தரும் எனலாம். இதுவே சாதாரண மனிதர்களின் பார்வைகள் மேம்படுவதற்கும் வழிவகுக்கும்.

இந்த மூலப் பொருட்கள் சமூகத்தில் ஆதிக்கத்திலிருக்கின்ற பிரதான சிந்தனையோட்டத்தை அறிவதற்கும், அவற்றை மாற்றுவதற்கும், நேர்மறையான புதிய சிந்தனைகளை உருவாக்குவதற்கும், அதன் வழி ஆரோக்கியமாக செயற்படுவதற்கும், நம்மை வழிநடாத்திச் செல்வதற்கு ஏற்றவகையில் பயன்படுத்தப்படலாம். இதுவே ரகுமான் ஜான் குறிப்பிட்ட இன்னுமொரு முக்கியமான விடயமாகும். அதாவது இதுவரையான நமது சிந்தனை சட்டகத்தை கேள்விக்குள்ளக்குவதுடன் குறிப்பிட்ட சட்டகத்தை விட்டுவேளியே வந்து புதிய வழிகளில் சிந்திக்க முயற்சிப்பதாகும். இதன் விளைவாக கடந்த கால குறிப்பாக சமூகத்தில் ஆதிக்கமாகயிருக்கின்ற சிந்தனை முறைகளையும் கருத்துக்களையும் கேள்விற்குட்படுதுவதனுடாகவே புதிய சிந்தனை முறைகளையும் கருத்துக்களையும் உருவாக்குவதனுடாக புதிய வழிகளை அறியலாம். இதை நாம் திட்டமிட்ட முறைகளில் செயற்படுத்தவேண்டும்.

இவ்வறான படைப்புகளை சமூகவியல், மானுடவியல், வராலாற்றியல், பெண்ணியம், சாதியம், பாலியம், மற்றும் உளவியல் ஆகியவற்றின் அடிப்படைகளில் நாம் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டும். மேலும் விஞ்ஞான அடிப்படையில் புறம் சார்ந்து பிரித்தும் பகுத்தும் ஆராய்கின்ற அதேவேளை மெய்ஞான அடிப்படைகளில் அகம் சார்ந்து முழுமையான பார்வைக்கு உட்படுத்தியும் ஆய்வுகளை இருவகையாக மேற்கொள்ளலாம். இதுவே ஆரோக்கியமான முழமையான வழிமுறையாகும் என்றால் மிகையல்ல. இவ்வாறான ஆய்வுகளிலிருந்து கிடைக்கின்ற தரவுகள் மூலம் தமிழ் சமூகங்களினதும் தனிமனிதர்களதும் அகம் புறம் தொடர்பான பன்முகபரிமாணங்களை ஆழமாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ளவதற்கான வழியை ஏற்படுத்தலாம். இச் செயற்பாடுகளை புலமைசார் துறையிலிருக்கின்றவர்கள் முன்னெடுப்பதே சிறந்தது. ஏனெனில் அவர்கள் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமல்ல அதற்கான கோட்பாட்டு உபகரணங்களையும் கொண்டிருப்பார்கள். இதையே ரகுமான் ஜான் அவர்களும் வலியுறுத்துகின்றார்கள். அதேவேளை இவர்கள் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என சமூமாற்றம் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் அக்கறை உள்ளவர்கள் நம்பிக்கொண்டு சும்மாயிருக்கத் தேவையில்லை. அந்தவகையில் குறிப்பிட்ட ஒரு சிலர் அவ்வாறான முயற்சிகளை ஏற்கனவே முன்னேடுக்கின்றனர். அவர்கள் அதைத் தொடர்ந்தும் செய்வதுடன் மேலும் பலர் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவது அவசியமானதாகும்.

மேற்குறிப்பிட்டவாறான செயற்பாடுகளை இன்று முன்னெடுப்பவர்களை நோக்கி, என்னமீண்டும்சனங்களைகொண்டுபோய்இன்னுமொருமுள்ளிவாய்களில்அழிக்கப்போகின்றீர்களா என்ற கேள்விகளும் அல்லது விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இவர்களுக்கான பதில் ஒன்றே ஒன்றுதான். அடக்குமுறைக்குள் வாழ்கின்றவர்கள் தான் தாம் போராடுவதா? என்பதையும் எவ்வாறு போராடுவது? என்பதையும் தீர்மானிக்கப்போகின்றவர்கள். இவ்வாறான போராட்டங்கள் முள்ளிவாய்க்காளைப் போன்ற மிகப் பெரிய அழிவுகளுக்குப் பின்பும் எக் காலத்திலும் உருவாகலாம். அதை தீர்மானிக்கின்ற சக்தி அடக்கப்படுகின்ற மனிதர்களின் கைகளிலையே உள்ளது. ஆனால் அவ்வாறு ஒரு போராட்டம் உருவாகும் பொழுது நமது பொறுப்பு, பங்களிப்பு என்ன என்பதே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

உதாரணமாக இலங்கையில், 1970ம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கு எதிராக ஜேவிபியின் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சியை இந்திய அரசின் ஆதரவுடன் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்றும் சிறைபிடித்தும் அடக்கி ஒடுக்கினர். கட்சியை தடையும் செய்தனர். 1978ம் ஆண்டு ஜேவிபி மீதான தடை நீக்கப்பட்டு அரசியல் களத்தில் செயற்பட்ட அனுமதிக்கப்பட்டார்கள். மீண்டும் 1983ம் ஆண்டு தடைசெய்யப்பட்டனர். ஆனால் 1988ம் ஆண்டு இந்திய எதிர்ப்புவாதத்தை முதன்மைப்படுத்தி மீண்டும் ஜேவிபியினர் பெரியளவிலான கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதுவும் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஆனாலும் ஜேவிபி அழிந்துவிடவில்லை. மீண்டும் தலைமறைவாக இயங்கி தமக்கான தருணம் வந்தபோது பொதுவெளிக்கு வந்து செயற்படுகின்றனர். இக் கிளர்ச்சிகள் மீதான விமர்சனங்களுக்கு அப்பால் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று உள்ளது. என்னவெனில், சில காலங்களுக்கு முன் தம் மீது நடந்த அடக்குமுறைகளையும் கொலைகளையும் அழிவுகளையும் மறந்து மீண்டும் ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்தனர். இக் கிளர்ச்சிகள் சரியா தவறா என்பதும், எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதான ஆய்வுகளும் அது தொடர்பான விமர்சனங்களுக்கும் என்பது வேறு. அதேபோல் தம்மையும் தமது அமைப்பையும் இருபது வருடங்களுக்கு முதல் அடக்கி ஒடுக்கியதிலிருந்து அவர்கள் பாடம் கற்றார்களா என்பதும் கேள்விகுறியே. ஆனால் அவ்வாறன கிளர்ச்சிக்கான தேவையும் சுழலும் மீண்டும் வந்தது என்பதையும் அப்பொழுது முன்பைவிட மிகமோசமான வன்முறைப் பாதையில் செயற்பட்டார்கள் என்பதையுமே நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதுபோன்று பல நாடுகளில் மீண்டும் மீண்டும் நடைபெற்ற பல கிளர்ச்சிகளையும் புரட்சிகளையும் உதாரணங்களாகவும் ஆதாரங்களாகவும் காட்டலாம்.

இன்று தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைக்கான போராட்டமானது பல்வேறு காரணங்களால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது. பாரிய அழிவையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தமிழ் பேசும் மனிதர்களின் மீதான அடக்குமுறையானது முன்பைவிட இன்னும் மோசமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் இன்னுமொரு போராட்டமானது எப்பொழுதும் எங்கிருந்தும் ஆரம்பமாகலாம். அவ்வாறு நடைபெறாமலும் விடலாம். ஆனால் அவ்வாறான ஒன்று நடைபெறுமாயின் அதில் நாம் பங்குபற்றி சரியான திசைவழியில் கொண்டு செல்வதற்கு ஏற்ப நம்மை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். அது நமது பொறுப்பு. அதற்கு கடந்தகால செயற்பாடுகள் பற்றியும் தனிநபர், இயக்கம், கட்சி சார்ந்த சுயவிமர்சனங்களையும் ஏற்கனவே நாம் செய்திருக்க வேண்டியது முன்நிபந்தனையாகும். அதாவது கடந்தகால அனுபவங்களிலிருந்து குறிப்பாக நமது தவறுகளிலிருந்து ஆழமான விரிவான பாடங்களை நாம் கற்கவேண்டும். மேலும், சமூகம், தனிமனிதர்கள், அதன் இயக்கம் போன்றவை தொடர்பான பன்முகபார்வைகளையும் கொண்டிருக்கும் வகையில் நமது தேடல்களையும் ஆய்வுகளை விரிவாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் மீண்டும் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீள விடாமல் நமது இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்லலாம். அதேவேளை புதிய தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு அவற்றை உடனடியாக சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொண்டும் தேவையான மாற்றங்களை செய்து கொண்டும் முன்னேறலாம்.

முன்னேறிய அரசியல் தலைமைகள் மேற்குறிப்பிட்டவாறு தயார் நிலையில் அன்று இல்லாமையினால் ஏற்பட்ட விளைவே, விடுதலைப் புலிகளின் தலைமையால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட வழிதவறிய போராட்டம் என்றால் மிகையல்ல. ஏனெனில் அன்று தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கக் கூடிய ஒரு அரசியல் தலைமை சண்முகதாசன் அவர்களிடம் இருந்தது. ஆனால் அவர்கள் தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளையும் அடக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போக்கு நிலைகளையும் கவனிக்கத்தவறிவிட்டனர் (ஐயர் 8, 155, 172). இதற்கு அவர்கள் அறிந்த, நம்பிய தத்துவங்களும் கோட்பாடுகளும் தடையாக இருந்தன. மேலும் தாமறிந்த கோட்பாட்டினுடாக தவறான ஒரு போராட்டமாக நிறுபிக்கவே முனைந்ததனுடாக வரலாற்றில் எதிர்மறையானதொரு பாத்திரத்தையே ஆற்றினர். அன்றைய குறிப்பான சுழல் தொடர்பான துல்லியமான மதிப்பீட்டை அவர்கள் செய்திருக்கவேண்டும். அதனடிப்படையில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தமிழ் பேசும் மனிதர்களின் மன உணர்வைக் கணிப்பிட்டு அதற்கான தலைமையைக் கொடுத்து வழிநடாத்தி இருக்கவேண்டும். ஆனால் தவறவிட்டனர். தமது தவறை காலங்கடந்து உணர்ந்துபோது அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாதளவிற்கு அவர்கள் கையை விட்டு அரசியலே சென்றிருந்தது. இவர்கள் தொடர்பான இவ்வாறான ஒரு மதிப்பீட்டை சசீவனும் தனது பதிவில் முன்வைத்துள்ளார்.

இதன்விளைவாகவே, முன்னேறிய சிந்தனைகள் மற்றும் கோட்பாடுகளின் வழியாக தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது முன்னெடுக்கப்படவில்லை என பல இடங்களில் ஐயர் சுட்டிக் காட்டுகின்றார். மாறாக பொதுசன மட்டத்திலான ஜனரஞ்சக சிந்தனை மட்டத்திலும் பிரக்ஞையின்மையாகவுமே போராட்டமானது வழிநடாத்தப்பட்டது. இதன் விளைவுகளையே இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவேதான் இவ்வாறன ஒரு தவறை மீண்டும் விடாதவகையில் எப்பொழுதும் தயார் நிலையிலும், திறந்த மனதுடனும், மற்றும் ஒவ்வொரு கணத்திலும் பிரக்ஞையுடன் இருப்பதற்கும் ஏற்ற வகையில் நம்மை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது.

70களில் ஆரம்பங்களில், தாம் எதிர்நோக்கும் அடக்குமுறையான சுழல் தொடர்பாகவும் அதற்கு எதிராக செயற்படவேண்டும் என்ற எண்ணங்கள் தமிழ் பேசும் மனிதர்களிடம் தீவிரமாக இருந்துள்ளது. இதனைத்தான் சிவக்குமாரனின் செயற்பாடுகள் முதல் பிரபாகரன், ஐயர், தங்கத்துரை, குட்டிமனி, உமாமகேஸ்வரன் போன்றவர்களின் செயற்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் அக்கால சமூகத்தை, அதில் ஒரு அங்கமாக வாழ்ந்த மனிதர்களின் உணர்வுகளைப், பிரதிநித்துவப்படுத்துபவர்களாகவே கணிக்கப்பட வேண்டும். அக் காலத்திலிருந்த இவர்களது உணர்வுகளும் பங்களிப்புகளும் எவ்விதமான சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டவை. ஆனால் அடக்குமுறைகளுக்கு எதிரான இவர்களின் செயற்பாடுகள் அக் கால குறிப்பான சுழலின் தாக்கத்தால் உந்தப்பட்ட தன்னியல்பானதும் பிரக்ஞையின்மையானதுமான எதிர்வினைச் செயற்பாடுகளே என்றால் மிகையல்ல. இவ்வாறன அரச எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு காரணம், சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளும் அதன் இனவாத அரசியலுமே என்பதில் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. ஆனால் இந்த எதிர்வினைச் செயற்பாடுகள் அரசியல் கோட்பாடுகளிளால் உரசிப் பார்த்து முன்னெடுக்கப்பட்டவையல்ல என்பதையும் ஐயர் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றார். இதனை ரகுமான்ஜான் தனது உரையில் (பதிவில்) “சுக்கான் இல்லாத, திசையறி கருவியில்லாத படகுபோல எப்போதும் முன்னோக்கிச் செல்வதான ஒரு தோற்றப்பாட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கும் என மிக அழகாக விளக்கி உள்ளார். இதற்கு முதன்மையான காரணம், அன்றைய மனிதர்களது (மக்களது) சிந்தனைகளையும் எண்ணங்களையும், தன்னியல்பாக செயற்படத் தயாராக இருக்கின்ற இளைஞர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு வழிகாட்டக் கூடிய அரசியல் தலைமை ஒன்று இருக்கவில்லை. இதுவே தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியுற்றமைக்கான பல காரணங்களில் முக்கியமானதும் பிரதானமானதுமான ஒரு காரணம் எனலாம்.

இன்றைய நமது பணி எதிர்காலத்தில் மேற்குறிப்பிட்டவாறான ஒரு அரசியல் வெற்றிடம் எதிர்காலத்திலும் உருவாகாத வகையில் தத்துவம் மற்றும் கோட்பாட்டு அடிப்படைகளில் இன்றிலிருந்தே நம்மை தயார் செய்வதே என்றால் மிகையல்ல. இவ்வாறு செய்யாது விடுவோமானால் எவ்வாறு அன்றைய இளைஞர்களான பிரபாரகரன், உமாமகேஸ்வரன் போன்றவர்களது தலைமையில் எதிர்புரட்சிகர மற்றும் ஐனநாயகமின்மையான செயற்பாடுகளை முன்னெடுத்தனரோ, அவ்வாறே எதிர்காலத்தில் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக தன்னியல்பாக செயற்படப்போகின்ற புதிய தலைமுறை இளைஞர்கள் மீண்டும் அவ்வாறான தவறான பாதையில் செல்வதை தவிர்க்கமுடியாததாக இருக்கும். அரசியல் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் முன்னேறிய பிரிவினர் அன்று தமது பொறுப்பை ஆற்றாது அன்றைய இளைஞர்களின் செயற்பாடுகளையும் அதன் விளைவுகளை இன்று “பாசிசம்” என விமர்சிப்பதுபோல் எதிர்காலத்திலும் புதிய தலைமுறை இளைஞர்களின் எதிர்மறையான செயற்பாடுகளை மீண்டும் இவ்வாறே விமர்சிப்பதை மட்டுமே எதிர்காலத்தில் செய்யவேண்டிய தூர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம். அவ்வாறு எதிர்காலத்தில் நடைபெறுவதை தவிர்க்க வேண்டுமாயின், நாம் இன்றிலிருந்தே பிரக்ஞைபூர்வமாகவும் பன்முக பார்வைகளுடனும் பன்முக தளங்களில் செயற்பட ஆரம்பிக்கவேண்டியது அவசியமானதாகும்.

ஐயர் பல இடங்களில் தழிழ் தேசிய விடுத்தலைப் போராட்டத்தை தலைமைதாங்குதவற்கோ அல்லது தம்மை வழிநடாத்துவதற்கோ சமூகத்தின் முன்னேறிய பிரிவினரோ அல்லது இடதுசாரிகளோ முன்வரவில்லை எனக் குறிப்பிடுகின்றார். இருப்பினும் சில போராளிகள் மார்க்சியம் கோட்பாடு போன்றவற்றில் அக்கறையாக இருந்து செயற்பட்டுள்ளனர். இங்குதான் புரட்சிகர சக்திகளும் சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்ற அரசியல் செயற்பாட்டாளர்களும் கவனிக்கத் தவறவிடுகின்ற ஒரு விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. அது தனிமனிதர்களினதும் சமூகத்தினதும் உளவியலும் பிரக்ஞையின்மையான செயற்பாடுகளும். மார்க்சிய கோட்பாடுகளை உள்வாங்கி வழிநடாத்தான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்ல மார்க்சிய தத்துவங்களை ஆழமாக உள்வாங்கி அதன் வழியிலான கோட்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களிலும் புரட்சிகளிலும் கூட மனிதர்களின் தன்னியல்பான பிரக்ஞையின்மையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற என்பது நாம் அறிந்ததே. இதனால்தான் தனிமனிதர்களின் பங்கு ஆதிக்கம் முக்கயத்துவம் ஒரு அரசியல் போராட்டத்தை எந்தளவு மாற்றக் கூடியது என்பதை தனது அனுபத்தினுடாக வேதனையுடன் ஐயர் முன்வைக்கின்றார். அதேவை ரகுமான் ஜான் அதன் முக்கியத்துவத்தை கோட்பாட்டிப்படையில் விளக்குகின்றார். ஆகவேதான் மார்க்சிய த்த்துவத்தையும் அதன் வழியிலான கோட்பாடுகளை உருவாக்குவது மட்டும் ஒரு போராட்டமானது வெற்றிபெறவும் தனது இலக்கை அடையவும் போதாமையாகவே கருதுகின்றேன். இவற்றை முன்னெடுப்பதற்கு சமாந்தரமாக தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தமது பிரக்ஞையை வளர்ப்பதிலும் அக்கறையெடுக்க வேண்டும் என்பதே எனது முன்மொழிதல். இதுவே புரட்சியோ போரட்டமோ ஆரோக்கியமான வழியில் செல்வதை உறுதி செய்யும் என்பது எனது புரிதல்.

தனிய தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் தங்கியிருப்பதும், அல்லது தனிய செயற்பாடுகளில் தங்கியிருப்பது நமது இலக்குகளை அடைவதற்குப் போதுமானவையல்ல என்பதற்கு பல்வேறு நாடுகளின் போராட்ட வரலாற்றில் மட்டுமல்ல இலங்கையிலையே அதற்கான ஆதராங்கள் இருக்கின்றன. இவை இரண்டுக்குமிடையில் ஒரு சமநிலையை பேணிக் கொண்டு நமது இலக்குகளை அடையலாம். மேலும் இவை இரண்டும் அவசியமானவை ஆனால் போதுமானவையல்ல. ஏற்கனவெ குறிப்பிட்ட படி மனிதர்கள் தமது பிரக்ஞையின்மையான செயற்பாடுகளைப் புரிந்து கொண்டு பிரக்ஞையை வளர்ப்பது மிகவும் அடிப்படையானதாகும்.

முடிவாக, ஐயரின் எழுத்துக்களினடிப்படையில் உருவாக்கப்படுகின்ற முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றில் நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஏனெனில் இவரும் நம்மைப்போன்ற பிரக்ஞையின்மையாக வாழ்கின்ற ஒரு சாதாரண மனிதரே என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே, ஐயரின் அரசியல், அவரது நிலைப்பாடு மற்றும் அவரது பிரக்ஞை நிலையை என்பவற்றையும் கவனத்தில் கொண்டே இந்த நூலை ஆய்வு செய்யவேண்டும். இவர் நேர்மையுடன் தனது அனுபவங்களை முழுமையாக பகிர்ந்து கொண்டாலும், நமக்கு கிடைப்பது ஒருவரது ஒரு பக்கத் தரவு, ஆதாரம் மட்டுமே என்ற புரிதல் நமக்கு வேண்டும். மேலும் பல இடங்களில் சில விடயங்களை வெளிப்படையாக கூறாது ஆனால் குறிப்பாகவும் உணர்த்திச் சென்றிருக்கின்றரார். இவற்றை அவர் பிரக்ஞையாகவோ பிரக்ஞையின்மையாகவே செய்திருக்கலாம். ஆனால் முக்கியமானது. ஆகவே சொற்களுக்கு இடையிலும், அப்பாலும் நமது வாசிப்பை கொண்டு செல்லவேண்டியும் இருக்கின்றது. அப்பொழுதான் இவர் நேரடியாக கூறாமல் விட்டவற்றை உணர்ந்து அறிந்து கொள்ளலாம். மேலும் இவரது, தேர்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட சொற்களும், பக்கசார்ப்பற்ற, ஒருவரையும் புண்படுத்தாத வசனங்களும் நாம் கற்ற்றுக் கொள்ளவேண்டிய பண்புகள். இவரது கடந்த கால செயற்பாடுகள், அர்ப்பணிப்புகள் மட்டுமல்ல, அந்த அனுபவங்கைள இந்த நூலினுடாக பகிர்ந்து கொண்டதனுடாக, இவர் தமிழ் சமூகங்களிற்கும் அவர்களின் விடுதலைக்கும் மிகப் பெரிய பங்களிப்பை பொறுப்புணர்வுடன் மேலும் செய்திருக்கின்றார் என்றால் மிகையல்ல. அதை மனதில் கொண்டே இந்தக் குறிப்பை பதிவு செய்கின்றேன்.

பகுதி இரண்டு. விரைவில்.

மீராபாரதி

18.04.2012

ஐயரின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ நூல் வெளியீட்டில் (ரொறொன்ரோ) ரகுமான் ஜான் ஆற்றிய உரை

http://thesamnet.co.uk/?p=34531

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் ஐயர்

http://www.shaseevanweblog.blogspot.ca/

இன்றைய நமது பணி எதிர்காலத்தில் மேற்குறிப்பிட்டவாறான ஒரு அரசியல் வெற்றிடம் எதிர்காலத்திலும் உருவாகாத வகையில் தத்துவம் மற்றும் கோட்பாட்டு அடிப்படைகளில் இன்றிலிருந்தே நம்மை தயார் செய்வதே என்றால் மிகையல்ல. இவ்வாறு செய்யாது விடுவோமானால் எவ்வாறு அன்றைய இளைஞர்களான பிரபாரகரன், உமாமகேஸ்வரன் போன்றவர்களது தலைமையில் எதிர்புரட்சிகர மற்றும் ஐனநாயகமின்மையான செயற்பாடுகளை முன்னெடுத்தனரோ, அவ்வாறே எதிர்காலத்தில் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக தன்னியல்பாக செயற்படப்போகின்ற புதிய தலைமுறை இளைஞர்கள் மீண்டும் அவ்வாறான தவறான பாதையில் செல்வதை தவிர்க்கமுடியாததாக இருக்கும்.

உண்மையில் பல்லாயிரம் இளையவர்கள் தமது இனிய உயிர்களை தலைமை, இயக்கம் என்பனவற்றிற்கு அப்பால் தாயக மக்களின் விடுதலை என்ற அதியுயர் இலட்சியத்திற்காக அர்ப்பணித்துள்ளனர். ஆயுதப்போராட்டம் இனப்படுகொலையாக முடிவுக்கு வந்துள்ளது.

இன்று கூட்டமைப்பை முன்னிலைப்படுத்தி அதை அரசியல் தலைமையாய் ஏற்று சர்வதேசம் சில சாதகமான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியா, அமெரிக்கா ஆதரவுடன் பதின்மூன்றாவது அரசியலமைப்பு மாற்றத்திற்கு அமைவாக காணி, காவல்துறை அதிகாரங்களுடன் வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் தீர்வை முதல்கட்டமாக பெற நாம் அனைவரும் உழைக்கவேண்டும்.

அதுவே அடுத்த தலைமுறையை நிமிரச்செய்யும், அவர்களுக்கு ஒரு ஆயுத போராட்டத்தை விட்டுவைக்காமல் நாம் செயல்படல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.