Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவும் ஈழமும்!

Featured Replies

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.

லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி.

வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.

அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.

ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.

1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.

1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.

அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது. இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார்.

srilanka%2001.jpg

அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.

இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.

தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால்வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.

இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தீமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.

ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.

இந்தியா, சீனா போர் நடக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீர சிங்க அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.

வங்க தேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. வங்க தேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன்தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.

இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக்கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது. ராணுவத் தளவாடங்கள், கெம்பன்கோட்டா துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன.

கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.

ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.

தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.

இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும். ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.