டி20 உலகக்கோப்பை யாருக்கு? நியூசிலாந்தின் மிகப்பெரிய பலமும் இந்தியாவின் ஒரே பலவீனமும்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் (இடது), நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர்
கட்டுரை தகவல்
வித்யுத் சிவராமகிருஷ்ணன்
சிஎஸ்கே முன்னாள் வீரர்
8 மார்ச் 2026, 02:24 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
உலக சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் போகும் அந்த இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டோம். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று எதிர்பார்த்ததைப் போலவே இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. அரையிறுதி போன்ற ஒரு போட்டியில் 250 ரன்கள் அடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதனால் பெரும் நம்பிக்கையோடு இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழையும்.
அதேபோல் நியூசிலாந்து அணியும் அதுவரை தோற்காமல் இருந்த தென்னாப்பிரிக்காவை மிகவும் எளிதாக வீழ்த்தி ஆமதாபாத் சென்றிருக்கிறது. அந்தப் போட்டியில் அவர்கள் வென்ற விதம் நிச்சயம் அவர்கள் நம்பிக்கையை பல மடங்கு அதிகப்படுத்தியிருக்கும்.
முன்பெல்லாம் இப்படியொரு மிகப் பெரிய போட்டி நடக்கிறது என்றாலே வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு இருக்கும். அதுவே சிலருக்கு சவாலாக அமைந்துவிடும். ஆனால், இந்தத் தலைமுறை வீரர்களெல்லாம் அப்படி இல்லை. அவர்கள் பெரிய போட்டிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. சொல்லப்போனால் அந்த நெருக்கடியை அவர்கள் விரும்புகிறார்கள். அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அதனால், இந்த இரு அணி வீரர்களுமே நிச்சயம் இறுதிப் போட்டியில் ஒரு மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு சொல்லலாம்.
ஆதிக்கம் செலுத்தும் இந்தியா
இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவைப் பற்றி எழுதிய போதே, இந்த இந்திய அணி ஸ்டீவ் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் வழிநடத்திய அந்த ஆஸ்திரேலியாவைப் போல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். அதை உணர்த்தும் விதத்தில் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு இருந்திருக்கிறது. சொல்லப்போனால் கடந்த உலகக் கோப்பை செயல்பாட்டை விடவுமே இம்முறை சிறப்பாக இருந்திருக்கிறது.
இந்திய வீரர்கள் முழுமையான அணியாக செயல்பட்டிருக்கிறார்கள். பேட்டிங், பௌலிங், பெரிய ஷாட்கள் அடிப்பது, ஃபிட்னஸ் என அனைத்துமே பிரகாசமாக இருந்திருக்கிறது. கொஞ்சம் பிரச்னையாக இருந்த ஃபீல்டிங்கும் கூட கடந்த அரையிறுதிப் போட்டியில் முன்னேற்றம் கண்டிருக்கிறது.
பேட்டிங்கில் எல்லா வீரர்களுமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சின்னச் சின்ன இன்னிங்ஸ்களாக இருந்தாலும் அதன்மூலம் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இதை நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியா தொடரும் என்று நம்பலாம்.
என்னதான் எல்லோரும் சோபித்தாலும், சஞ்சு சாம்சன் மீது அதிக கவனம் விழவே செய்கிறது. சமீபத்திய போட்டிகளில் அவர் ஆடிக் கொண்டிருக்கும் விதம் இந்தியாவுக்கு மிகப் பெரிய பலம். தன்னுடைய சிறந்த செயல்பாட்டை இத்தொடரின் முக்கியமான கட்டத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக இந்தப் போட்டியில் அவர் தன்னுடைய மூன்றாவது சிறந்த செயல்பாட்டைக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.
பெரிதும் சிரமப்படாமல், தன்னுடைய 'கிளாசிக்கான' பேட்டிங் மூலம் அவர் ரன் குவிக்கிறார். பவர்பிளேவிலும் சரி, பவர்பிளே முடிந்தும் சரி சரியாகக் கணக்கிட்டு ஆடுகிறார். பீல்டிங் இடைவெளிகளை சரியாகப் பயன்படுத்துகிறார். அதனால், எதிரணிகளுக்கு அவரை ஆட்டமிழக்கச் செய்வது அவ்வளவு எளிதானதாக இருக்காது. நியூசிலாந்து பௌலர்களுக்கு நிச்சயம் சாம்சன் தலைவலியாக இருக்கப்போகிறார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகனாக ஜொலித்திருக்கிறார் சஞ்சு சாம்சன்
ஆரம்பத்தில் அவர் அசத்தினால், மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என அனைவருமே கலக்குகிறார்கள். துபே தன் அணுகுமுறையில் காட்டும் முதிர்ச்சி அருமையாக இருக்கிறது. ஆதில் ரஷீத் பந்துவீச்சில் சிக்ஸர்கள் விளாசினாலும், சரியான பந்து வரும் போது பேக் ஃபூட்டில் காத்திருந்து சிங்கிளும் எடுக்கிறார். அது அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதேபோல், ஃபினிஷிங் ரோலில் திலக் வர்மா தற்போது ஆடும் விதம் சிறப்பாக இருக்கிறது. இந்தியாவுக்கு நல்லபடியாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஆடுகிறார். இவர்களின் பங்களிப்பு இந்தியாவின் மிடில் ஆர்டரை நன்கு பலப்படுத்தியிருக்கிறது.
அதேபோல், பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருந்திருக்கிறது. அர்ஷ்தீப் சிங் சற்று கூடுதலாக ரன் கொடுத்தாலும், முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். புதிய பந்தில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு நன்கு ஸ்விங் கிடைக்கிறது. ஜஸ்ப்ரித் பும்ரா... என்ன சொல்வது. உலகின் தலைசிறந்த பௌலர் ஒவ்வொரு போட்டியிலும் முத்திரை பதிக்கிறார். அரையிறுதிப் போட்டியில் ஒவ்வொரு பௌலரும் ரன்கள் வாரி வழங்கும்போது இவர் ஆட்டத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார்.
அதேசமயம் இந்தியாவின் சுழற்பந்துவீச்சு சற்று கவலை தருவதாக இருக்கிறது. வருண் சக்கரவர்த்தியின் ஃபார்ம் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக இல்லை. அது முன்னேற்றம் காண வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கும்.
அரையிறுதியில் அக்ஷர் பட்டேலின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. அதுதான் ஆட்டத்தையே மாற்றியது என்று சொல்லலாம். ஹேரி ப்ரூக் கேட்சை பின்னால் ஓடிச்சென்று பிடித்தது, வில் ஜேக்ஸ் கேட்சைப் பிடிக்க பவுண்டரி எல்லையில் அதிவேகமாக ஓடிவந்து பாய்ந்து பிடித்து துபேவிடம் வீசியது... அவருடைய வேகம், துல்லியம் மற்றும் சிந்திக்கும் திறன் அனைத்தையும் அந்த செயல்பாடுகளில் பார்க்க முடிந்தது. இந்த செயல்பாடு நிச்சயம் மற்ற வீரர்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,சூப்பர் 8 சுற்று போட்டிகளிலிருந்து வருண் சக்கரவர்த்தியால் பெரிதாக சோபிக்க முடியவில்லை
'இந்தியா ஆட விரும்பாத அணி நியூசிலாந்து'
இந்த உலகக் கோப்பையில் நன்கு தயாராகியிருந்த அணி, புத்திசாலித்தனமான அணி என்றால் அது நியூசிலாந்து தான். இப்போது மட்டுமல்ல, அவர்கள் எப்போதுமே அப்படித்தான். ஒவ்வொரு பெரிய தொடர்களுக்கு முன்பும் பாருங்கள், பெரும்பாலான நிபுணர்களின் டாப் 4 கணிப்பில் நியூசிலாந்து இருக்காது. ஆனால், அவர்கள் எப்படியும் அந்த இடத்தை அடைந்துவிடுவார்கள். டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என எந்தத் தொடராக இருந்தாலும் அவர்கள் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்து அரையிறுதிக்காவது எப்படியும் முன்னேறிவிடுவார்கள். அவர்களின் ஆட்டம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சீராக இருக்கிறது.
இந்த அணியின் பெரும் பலம் தங்களைப் பற்றிய அவர்களின் புரிதல் தான். அவர்கள் அணியின் பலம் என்ன, பலவீனம் என்ன, எந்த வீரரால் என்ன செய்ய முடியும் என அனைத்தையும் அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.
இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்வதை இந்திய அணி விரும்பி இருக்குமா என்றால் நிச்சயமாகக் கிடையாது. ஏனெனில், இந்தியாவிற்கு அவர்கள் எப்போதுமே தலைவலியாக இருந்திருக்கிறார்கள். நீண்ட காலம் கழித்து இந்தியாவை இந்தியாவில் டெஸ்ட் தொடரில் வைட் வாஷ் செய்தார்கள். அதேபோல், சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தினார்கள். டி20 ஃபார்மட்டில் அவர்களால் சோபிக்க முடியவில்லை. ஆனால், நிச்சயம் இந்த இறுதிப் போட்டியில் அவர்கள் மறுபடியும் இந்தியாவுக்கு பிரச்னை தருவார்கள்.
அதுமட்டுமல்லாமல் அவர்களின் ஃபீல்டிங் வேறொரு தளத்தில் இருக்கும். அக்ஷர் படேல் எப்படி தன் ஃபீல்டிங்கால் அரையிறுதியை மாற்றினாரோ அதேபோல் நியூசிலாந்து வீரர்கள் ஒரு தருணத்தில் போட்டியை மாற்றிவிடுவார்கள். (2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியின் ரன் அவுட் நினைவில் இருக்குமே!) அதிலும், கிளென் ஃபிலிப்ஸ் போன்ற வீரரெல்லாம் நொடியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார்.
இந்த அணியின் இன்னொரு பலம் அவர்களின் ஆல்ரவுண்டர்கள். கேப்டன் மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், கோல் மெக்கான்கீ, கிளென் ஃபிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் என பிளேயிங் லெவனிலேயே அவர்களால் 5 ஆல்ரவுண்டர்களை களமிறக்க முடியும். இது அவர்களின் மிகப் பெரிய பலம். இந்தத் தொடரில் ரச்சின் ரவீந்திரா தன் பந்துவீச்சின் மூலம் எப்படியான தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். 10.63 என்ற அசாத்தியமான சராசரியில் இதுவரை 11 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இதுதான் நியூசிலாந்து வீரர்களின், அந்த அணியின் பலம். எந்த வீரரும், எந்த ரூபத்திலும் போட்டியை மாற்றிவிடுவார்.
இந்தியாவைப் போலவே அவர்களும் முழுமையான ஒரு அணியாக இருக்கிறார்கள். அனைத்து துறையுமே அவர்களுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
நியூசிலாந்து ஓப்பனர்கள் vs இந்திய பௌலர்கள்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து ஓப்பனர்கள் ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபர்ட்
இந்தப் போட்டியில் இந்தியாவுக்குப் பெரிய சவாலாக இருக்கப்போவது டிம் செய்ஃபர்ட், ஃபின் ஆலன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப். இவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்ற வேட்கை (intent)காட்டுகிறார்கள். அநாயசமாக பெரிய ஷாட்கள் ஆடுகிறார்கள். இந்தத் தொடர் முழுவதுமே அந்த அணிக்கு சீராக நல்ல தொடக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ஒருவர் அடித்து ஆடும்போது, இன்னொருவர் நிதானம் காட்டுகிறார். அதனால்தான், அவர்களால் நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைக்க முடிகிறது.
உதாரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த அரையிறுதிப் போட்டியில் கூட முதலில் செய்ஃபர்ட் தான் அதிரடி காட்டினார். பின்னர் தான் ஃபின் ஆலன் விஸ்வரூபம் எடுத்து அதிரடி சதத்தை பூர்த்தி செய்தார். இந்த இணக்கமான புரிதல் அவர்களுக்குப் பெரிய பலமாக இருக்கிறது. பவர்பிளேவில் அவர்கள் 75-80 ரன்கள் எடுத்துவிட்டால் இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாக அமைந்துவிடும்.
இவர்களை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தால் இந்திய அணிக்கு வெற்றி வசப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதற்கு என்ன மாதிரியான திட்டமிடுகிறார்கள் என்பதையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனெனில், பும்ராவை பவர்பிளேவில் எத்தனை ஓவர்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது இவர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும். அதனால், இவர்களை வீழ்த்த சூர்ய்குமார் விரைவிலேயே பும்ராவை அழைத்து வருவாரா என்று பார்க்க வேண்டும். பவர்பிளேவுக்குள் நியூசிலாந்தை சுமார் 45, 50 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி ஓப்பனர்களை வெளியேற்றப் பார்க்கவேண்டும்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,சனிக்கிழமையன்று பயிற்சியின்போது அக்ஷர் பட்டேல் உடன் ஜஸ்ப்ரித் பும்ரா
இந்த இடத்தில் தான் வருண் போன்ற ஒரு பௌலர் வந்து கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதேசமயம் நியூசிலாந்தும் வருணை அவ்வளவு எளிதில் விட்டுவிடாது. இங்கிலாந்து எப்படி முதல் பந்தில் இருந்தே வருணின் பந்துவீச்சை அட்டாக் செய்ததோ, அதைபோலவே நியூசிலாந்து பேட்டர்களும் செய்ய நினைக்கலாம். அரையிறுதியில் வருண் வீசிய முதல் 3 பந்துகளிலுமே ஜேக்கப் பெ;jதெல் சிக்ஸர் விளாசினார். அதுதான் ஆட்டத்தில் அவர்கள் நீடித்து நிற்க அஸ்திவாரம் அமைத்தது. நியூசிலாந்தும் அதையே செய்ய நினைக்கலாம்.
வருண் சக்கரவர்த்தியை நியூசிலாந்து பேட்டர்கள் எப்படி எதிர்கொள்கிறார்களோ அதுவே இந்தப் போட்டியைத் தீர்மானிக்கும் என்று நான் நினைக்கிறேன். எப்படியும் பவர்பிளேவின் ஐந்தாவது அல்லது ஆறாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்துவீசக்கூடும். அந்த ஓவரில் 20 ரன்கள் செல்வதோ, இல்லை விக்கெட் விழுவதோ ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும்.
அதேசமயம், மற்ற பேட்டர்களும் சாதாரணமானவர்கள் இல்லை. ரச்சின், ஃபிலிப்ஸ், மிட்செல், சேப்மேன் என தரமான பேட்டர்கள் இருக்கிறார்கள். ஒன்பதாவது வீரராகக் களமிறங்கும் மெக்கான்கீயே ஒரு ஆல்ரவுண்டர் தான். அவரால் என்ன செய்யமுடியும் என்பதை இலங்கைக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் அவர் காட்டினார். அதனால், அவர்களின் பேட்டிங் மிக நீளமாகக் காட்சியளிக்கிறது.
இந்திய ஓப்பனர்கள் vs நியூசிலாந்து பௌலர்கள்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் ஷர்மா ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார்
இந்திய பேட்டிங்கிலும் பவர்பிளேவில் இந்தியா எத்தனை ரன்கள் எடுக்கிறது என்பது ஆட்டத்தின் போக்கில் தாக்கம் ஏற்படுத்தும். அதற்கு இந்தியாவின் தொடக்கம் முக்கியம். இந்திய பேட்டிங்கில் தற்போது இருக்கும் ஒரு சிறிய ஓட்டையும் அங்குதான் இருக்கிறது.
அபிஷேக் ஷர்மா இந்தத் தொடரில் சோபிக்கவில்லை என்றாலும், இறுதிப் போட்டியில் அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. நிச்சயம் அவர் அதே அதிரடியைத் தான் காட்டுவார். பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் அதைத்தான் ஊக்குவிப்பார். அதனால், முதல் பந்தில் இருந்தே அவர் அதிரடி காட்டுவார் என்று நம்பலாம்.
நியூசிலாந்தின் மேட் ஹென்றி இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். உடன், லாக்கி ஃபெர்குசனுமே தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு ஒரு முழுமையான பௌலராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு எதிராக இந்தியா நன்கு ரன் சேர்க்கவேண்டும். இந்தியாவுமே பவர்பிளேவில் 75, 80 ரன்களைக் குறிவைக்கும். அதனால், இவர்களுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா சிறப்பாக ரன்சேர்க்க வேண்டும்.
அதேசமயம், ஆஃப் ஸ்பின்னர் மெக்கான்கீ புதிய பந்தில் பந்துவீசினால் அது அபிஷேக் ஷர்மாவுக்கு சவால் கொடுக்கலாம். இடது கை பேட்டரான அபிஷேக் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராகத் தடுமாறுவதைப் பார்த்தோம். மெக்கான்கீ அரையிறுதிப் போட்டியில் இரண்டாவது ஓவரை வீசி குவின்டன் டி காக், ரயன் ரிக்கில்டன் என இரண்டு இடது கை பேட்டர்களை அடுத்தடுத்து அவுட்டாக்கியதையும் பார்த்தோம். அதனால், அபிஷேக் ஜாக்கிரதையாக பேட்டிங் செய்வது முக்கியம்.
மிட்செல் சான்ட்னர் - இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பேட்டிங், பௌலிங், கேப்டன்சி என அனைத்து தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் மிகச் சிறந்த ஸ்பின்னர். புத்திசாலித்தனமானவர். இந்தியாவுக்கு எப்போதுமே பிரச்னைகள் ஏற்படுத்தியிருக்கிறார். அதனால், மிடில் ஓவர்களில் இந்திய அணி அவரை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதும் முக்கியம்.
இந்திய அணியில் நிறைய இடது கை பேட்டர்கள் இருக்கிறார்கள். அபிஷேக், இஷான், திலக், துபே என்று பெரும் படையே இருக்கிறது. அவர்கள் சான்ட்னரின் இடது கை சுழலை அடித்து ஆடுவார்களா இல்லை சற்றே கவனத்துடன் எதிர்கொள்வார்களா என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனெனில், அவர் தன் ஸ்பெல்லில் போட்டியை மாற்றிவிடக்கூடியவர். அவர் 2 விக்கெட்டுகள் எடுத்துவிட்டாலே, இந்தியாவுக்கு அதிலிருந்து மீள்வது எளிதாக இருக்காது.
பௌலராக, பேட்டராக மட்டுமல்லாது கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். சத்தமே இல்லாமல் ஒரு இளம் அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். இந்த இறுதிப் போட்டியிலும் அவர் தன் படையை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்றுதர முனைப்போடு இருப்பார்.
வெற்றி பெறப் போவது யார்?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இறுதிப் போட்டி நடக்கும் ஆடுகளத்தை சனிக்கிழமை பார்வையிடும் இந்திய கேப்டன் சூர்யகுமார்
இதுபோன்ற போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார் என்று அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், ஒரு இன்னிங்ஸை ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிடும். ஃபின் ஆலன் இன்னிங்ஸ் தென்னாப்பிரிக்காவை வெளியேற்றியது. சாம்சனின் இன்னிங்ஸ் இங்கிலாந்தை வெளியேற்றியது. அதுபோன்ற ஒரு செயல்பாடு இந்த இறுதிப் போட்டியையும் முடிவு செய்யலாம்.
அணியின் ஆட்ட முறை, வேட்கை (intent), வீரர்களின் திறன் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் முன்பே சொன்னதுபோல் அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை யாரும் செய்யாததைப்போல் இந்த அணியால் தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பை வெல்ல முடியும். அதற்கான பிரகாசமான வாய்ப்பு இப்போது அவர்களிடத்தில் இருக்கிறது. நான் இந்தியாவைச் சேர்ந்தவன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அவர்கள் ஆடும் கிரிக்கெட் அப்படி அசாத்தியமானதாக இருக்கிறது.
அதேசமயம் எப்போதுமே கொஞ்சம் கூட நியூசிலாந்து அணியை மட்டும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.
(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
டி20 உலகக்கோப்பை யாருக்கு? நியூசிலாந்தின் மிகப்பெரிய பலமும் இந்தியாவின் ஒரே பலவீனமும்
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.