சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 07
அத்தியாயம் 7 - வடக்கு நோக்கித் திரும்புதல்
கிழக்கு கடற்கரையை, திருகோணமலையில் இருந்து அம்பாறை வரை சென்று பார்த்த பிறகு, கதிர்காமம் மற்றும் மலை நாடு ஏறி இறங்கியபின், ஆரனும் அனலியும் ஆழ்ந்த தமிழர் வரலாற்று அறிவுடனும் மற்றும் தங்களுக்கு இடையினான நல்ல புரிதலுடனும் காடுகள் மற்றும் தடாகங்கள் வழியாக வடக்கு நோக்கி அவர்கள் திரும்பினார்கள். முதலில் அவர்களின் அன்பையும் ஆர்வத்தையும் தூண்டிய நகரம் அது. இந்த முறை, நகரம் ஒரு இலக்காக மட்டுமல்லாமல், ஒரு வீடு திரும்பும் இடமாகவும் இருந்தது.
என்றாலும் அவர்கள், மன்னாரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான மடுமாதா தேவாலயம் மற்றும் இலங்கையில் உள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகவும், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றானதுமான திருக்கேதீஸ்வரம் ஆலயம், முல்லைத்தீவில் உள்ள ஒட்டி சுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் மற்றும் முள்ளிவாய்க்கால் போய், அதன் பின் யாழ்ப்பாணம் போகத் தீர்மானித்தனர்.
அதன்படி, அவர்கள் முதலில் முல்லைத்தீவு சென்று ஒட்டி சுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் மற்றும் முள்ளிவாய்க்கால் இரண்டையும் பார்த்தனர். முள்ளிவாய்க்காலின் வெண்மணற் கடற்கரை மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது என்றாலும், மே, 2009-இல் அங்கு பாய்ந்த இரத்தத்தின் சிவப்பு நிறம் தான் ஆரனின் கண்களில் தெரிந்தது. அவன் கண்களில் இருந்து கண்ணீர் அவனை அறியாமல் ஒழுகியது. அனலி உடனடியாக அவனை அணைத்து, கண்ணீரைத் துடைத்தாள்.
அப்பொழுது கதிரவன் மறையவும், கார்மேகம் சூழவும் சரியாக இருந்தது. சட்டென்று மாறிய வானிலைக்கு ஏற்றாற் போல் பாடல் ஒன்று காற்றில் தவழ்ந்தது, “நீயும் நானும் அன்பே.. கண்கள் கோர்த்துக் கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்”, அருமையாக இருந்தது.
நீண்ட காலம் தனியாக தவித்த அனலி ஒரு கணம், தன்னையே இழந்துவிட்டாள்! அந்த உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தனக்குள்ளே தானே சிரித்துக்கொண்டாள். அப்பொழுது அவளின் முழுமையாக வெளிவராத புன்னகையும் மற்றும் அவள் அணிந்திருக்கும் கண்ணாடியையும் தாண்டி வெளிப்படும் அவளின் கண்களின் அழகும் ஆரனை ஒருகணம் வாயடைக்க வைத்தது.
பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான்
கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன்
விண்ணில் வாழும் தேவதை இவளோ
மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ?
உதடு பிரித்து முத்துப் புன்னகை
உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை
உதடு சுழித்து கொல்லும் புன்னகை
உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ?
முன்பு அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த அவன் ஏனோ இப்ப அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். “ஹலோ” என்று அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து மண்ணிற்கு கொண்டு வந்தான்! அப்பொழுது, வானொலியில் “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை” இசைஞானியின் பாடல் ஒலித்தது. அதன் பின் அவர்கள் தங்கள் உணர்வுகள், கற்பனைகளில் இருந்து விடுபட்டு, ஒருவாறு சமாளித்துக்கொண்டு அவர்கள் மன்னார் சென்றனர்.
மன்னார் நகரில், ஆரனும் அனலியும் தங்கள் காலை உணவை ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில், யாரோ ஒருவர் “சண்டை நடந்த காலத்தில, அவங்கள் சைவம், வேதம் எண்டு பார்த்து விட்டே, குண்டு போட்டவங்கள்; பிடிச்சுக் கொண்டு போனவங்கள். தமிழன் எண்டு மட்டும் தானே பார்த்தவங்கள். அப்ப நாங்கள் ஏன் சைவம், வேதம் எண்டு வேற்றுமை காட்ட வேண்டும்….” என்ற உரையாடல், அவர்களின் கவனத்தை, வெகுவாக ஈர்த்தது.
அப்பொழுது அனலி, ஆரானிடம் மெதுவாக "ஆமாம், போர் நடைபெற்ற காலங்களில், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், மடுமாதா தேவாலயம் உட்பட வடக்கு, கிழக்கு தேவாலயங்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீது, தமிழர்கள் என்றே குண்டு போடப்பட்டது. இதேபோல வடக்கு, கிழக்கில் இந்துக் கோவில்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீதும், தமிழர்கள் என்றே குண்டுகள் போடப்பட்டன. அன்று, அவ்வாறு கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களை இன்று, இந்து, கிறிஸ்தவம் எனக் கூறுபோட்டு, வேரறுக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன" என்று வேதனையுடன் கூறினாள்.
ஆரன், அனலியை கூர்ந்து பார்த்தான். " அனலி உனக்கு ஒன்று தெரியுமா?, பண்டாரநாயக்க, தான் பிறந்த கிறிஸ்தவத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறியதாலேயே, பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட சிங்கள சமூகம், தங்களின் தலைவராக அவரை ஏற்றுக் கொண்டது. ஆனால் தந்தை செல்வா, தான் பிறந்த, தான் நேசித்த கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிக் கொண்டே, பெரும்பான்மை இந்து மக்களைக் கொண்ட, தமிழ்ச் சமூகத்தின் ஏக தலைவராக இறுதி மூச்சு வரை கோலோச்சினார். அது தான் தமிழ் மக்களின் பெருமை! அதை உடைக்கத்தான் இப்போது இந்த சதிகள்!!" என்றான்.
"இதேவேளை, தமிழர் பிரதேசங்களை விழுங்கும் ஓர் ஊடகமாகவே விகாரைகளையும் தாதுகோபுரங்களையும் பேரினவாதம் அமைத்து வருகின்றது. இது காலங்காலமாக, நம் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வரும் அசிங்கமான விடயமாகும். இதன் கரும் புள்ளிகளே, வடக்கு, கிழக்கு தமிழ் பாரம்பரிய பிரதேசங்களில் புத்தர் கோவில் ஆக்கிரமிப்பு ஆகும். ‘நாம் தமிழர்கள்’ என்ற பொது நலனைக் காவு கொடுத்து விட்டு, மதம் என்ற சுய நலனுக்குள் சிக்கக் கூடாது. இல்லையேல், பெரும் புயல் போல சீறிப்பாய்ந்து வருகின்ற பேரினவாதத்துக்கு முன்னால் சுருண்டு போய் விடுவோம். பிரிந்து கிடந்தால், எம்மால் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது; எங்கள் தலை எழுத்தையே மாற்றி விடுவார்கள்." என்றான் ஆரன்.
"ஆகவே, எமக்குள் இருக்கின்ற வேண்டப்படாத தடுப்புகளை உடைத்து, சுதாகரிக்க வேண்டிய நேரமிது. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழாக மட்டும் இருக்கட்டும், எங்களின் மூச்சும் பேச்சும் வீச்சும்!" என்று முடித்தாள் அனலி.
திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டு நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது அதன் பெருமையைக் கூறுகிறது. அனலி சுந்தரரின் ஈழத்து தேவாரத்தை பாடிக் காட்டினாள்.
மூவர் என இருவர் என
முக் கண்ணுடை மூர்த்தி
மாவின் கனி தூங்கும் பொழில்
மாதோட்ட நன் னகரில்
பாவம் வினை அறுப்பார் பயில்
பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திருக்
கேதீச்சரத் தானே!
ஆரன் உடனடியாக ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரின் ஈழத்து தேவாரத்தை ஒருவாறு எழுத்துக்கூட்டி வாசித்துக் காட்டி, இதன் கருத்து உனக்குத் தெரியுமா என்று அனலியைக் கேட்டான்
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்
எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின்
மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே!
"ஆமாம், முதல் வரியில், 'புனைந்த துகிலை ஆடையாய்க் கொண்ட பெளத்தர்கள் புறம் பேசுவதே கொண்டுள்ளார்கள்' என்று கூறப்படுவதில் இருந்து, இன்றும் இன்னும் சைவ மத ஆலயங்களுக்கு எதிராக அல்லது வலிந்து கட்டப்படும் புத்த ஆலயங்கள், அவர்களின், அந்த சிலரின் செயலுக்கு எடுத்துக்காட்டாகிறது." என்றாள்.
மேலும் இந்நாட்டுப் பழங்குடியினரான நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் ஆகும் . அந்த பெருமை மிக்க ஆலயத்தைக் கண்டுகளித்த பின் அவர்கள் மடுமாதா தேவாலயம் சென்று பார்த்தனர். அதன் பின் யாழ்ப்பாணம் சென்றனர்.
பொதுவாகவே எல்லா பசங்களுக்கும் அவங்க காதலன் காதலியுடன் ஒரு நீண்ட தொலைதூர பயணம் செய்ய விருப்பம் இருக்கும், அதுவும் காதலியுடன் பிரத்தியேக வாகனத்தில் தொலைதூர பயணம் என்றால் அதன் இன்பத்தை சொல்லவா வேண்டும்? ஆரன், அனலி அதற்க்கு விதிவிலக்கு அல்ல. என்றாலும் அனலியின் அப்பாவின் அந்த எச்சரிக்கைகளை அல்லது வேண்டுகோளை ஆரன் என்றும் மறக்கவில்லை.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 08 தொடரும்
துளி/DROP: 1957 [கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [A Journey to the homeland through Love, Faith, and Roots] / பகுதி 7
https://www.facebook.com/groups/978753388866632/posts/33015708298077725/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.