Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமும், தமிழீழமும் - சேரமான்

Featured Replies

ராஜீவ் காந்தியின் ‘ஆவியை’ அடிக்கடி தட்டியெழுப்பி, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இடைவிடாது ஊறு விளைவித்து வரும் டில்லி அதிகார வர்க்கம் தனது அடுத்த இலக்காக ‘ஈழம்’ என்ற சொற்பதம் தமிழகத்தில் கையாளப்படுவதை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ‘தமிழீழம் எனது நிறைவேறாத கனவு... அது நாளை நிறைவேறாது போனாலும் நாளை மறுதினமாவது நிறைவேறும்’ என்று கூறி இருபத்தாறு ஆண்டுகளாக புதைகுழியில் செத்துக்கிடந்த டெசோ அமைப்பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிர்த்தெழ வைத்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அதே வேகத்தில் ‘அந்தர்’ பல்டி அடித்து ‘தமிழீழத்தை நிறுவுவது டெசோ அமைப்பின் நோக்கம் அல்ல’ என்று அறிவித்து ஒரு சில நாட்கள் கடப்பதற்குள் ‘ஈழம்’ என்ற சொற்பதத்திற்கு சாவுமணியடிக்கும் முயற்சியில் டில்லி அதிகார வர்க்கம் ஈடுபட்டுள்ளது.

‘ஈழம்’ என்ற சொற்பதத்தின் மீது டில்லி அதிகார வர்க்கத்திற்கு அப்படி என்ன வெறுப்பு? ‘தமிழகத்தை உள்ளடக்கிய அகன்ற தமிழீழத்தை நிறுவுவது தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு’ என்று இதுகாறும் குற்றம் சுமத்தி வந்த டில்லி அதிகார வர்க்கத்தின் காழ்ப்புணர்ச்சி இப்பொழுது ‘ஈழம்’ என்ற சொற்பதத்தின் பக்கம் திரும்பியிருப்பதன் சூட்சுமம்தான் என்ன? இவற்றை நாம் புரிந்துகொள்வதற்கு ‘ஈழம்’, ‘தமிழீழம்’ ஆகிய இரு சொற்பதங்களுக்கு இடையே உள்ள அரசியல்-வரலாற்று ரீதியான தொடர்புகளை ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

1970களில் ஆயுத எதிர்ப்பியக்கமாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முகிழ்ப்பதற்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்ற சொற்பதம் ‘தமிழீழம்’. 1924ஆம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியில் இலங்கை சட்ட சபைக்கான முதலாவது தேர்தல் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது மேலைத்தேய ஏகாதிபத்தியவாதிகளின் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்னர் ஈழத்தீவில் தமிழ் அரசுகள் இயங்கிய வடக்குக் கிழக்கு மாநிலங்களை குறியீடு செய்யும் வண்ணம் இச்சொற்பதம் தமிழ் அரசியல் தலைவர்களால் கையாளப்பட்டது.

ஈழத்தமிழர்கள், தமிழக வம்சாவழித் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள், பறங்கியவர்கள் என ஈழத்தீவை தமது தாயமாக வரித்துக் கொண்டோருக்கான தேசிய அடையாளமாக ‘சிலோனீஸ்’ என்ற சொற்பதத்தைக் கட்டமைப்பதற்கு பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் எடுத்த முயற்சிக்கு எதிர்வினையாகவே ‘தமிழீழம்’ என்ற தேசிய அடையாளத்தை அப்போதைய தமிழ்த் தலைவர்கள் முன்வைத்தனர்.

இதன் பின்னர் 1948ஆம் ஆண்டில் ஈழத்தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி நீங்கிய பொழுது விசுவரூபமெடுத்த சிங்கள-பௌத்த இனவாதத்திற்கு எதிர்வினையாக எழுந்த தமிழ்த் தேசிய எழுச்சியின் அச்சாணியாகத் ‘தமிழீழம்’ என்ற சொற்பதம் பரிணமித்தது.

மேலைத்தேயர்களின் வருகைக்கு முன்னர் ‘தமிழீழம்’ என்ற பெயரில் ஈழத்தீவில் அரசுகள் எவையும் இயங்கவில்லை என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. அதேநேரத்தில் 1505ஆம் ஆண்டு ஈழத்தீவில் முதன் முதலாக போர்த்துக்கேயர்கள் கால்பதித்த பொழுது அங்கு தமிழ் அரசு ஒன்றும், ஒன்பது தமிழ்ச் சிற்றரசுகளும், இரண்டு சிங்கள அரசுகளும் இயங்கி வந்தன.

இது பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை அக்காலத்தில் போர்த்துக்கேய தளபதிகள் எழுதிய நூல்களில் காண முடியும். இதில் வடக்கே மன்னார் தீவையும், அதனை அண்டியுள்ள நிலப்பகுதிகளையும், யாழ்ப்பாணக் குடாநாட்டையும், தீவகத்தையும் உள்ளடக்கி யாழ்ப்பாண இராச்சியம் என்ற தமிழ் அரசு இயங்கியது. தென்னிலங்கையில் தற்பொழுது சிறீஜெயவர்த்தனபுர அமைந்துள்ள பகுதியை தலைநகராகக் கொண்டு சிங்களவர்களின் கோட்டை இராச்சியமும், மலையகப் பகுதிகளை மையமாகக் கொண்டு கண்டி இராச்சியமும் இயங்கி வந்தன. இதில் யாழ்ப்பாண இராச்சியம் ‘ஜவ்னாபட்டினம்’ என்று போர்த்துக்கேயர்களால் அழைக்கப்பட்டது.

யாழ்ப்பாண இராச்சியத்திற்கும், தென்னிலங்கையின் சிங்கள இராச்சியங்களுக்கும் இடைப்பட்ட வன்னிப் பெருநிலம், திருமலை, மட்டக்களப்பு-அம்பாறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி வன்னியர்களின் நாடு என்று போர்த்துக்கேயர்களால் அழைக்கப்பட்டது.

இதுபற்றிய குறிப்பு 1685ஆம் ஆண்டு போர்த்துக்கேய தளபதியான கப்டன் ஜோன் றிபேய்ரோ அவர்கள் எழுதிய வரலாற்று நூலில் காணப்படுகின்றது. இவ்வாறு வன்னியர்களின் நாடு என்று அழைக்கப்பட்ட நிலப்பகுதியில் இயங்கிய பனங்காமம், மேல்பற்று, முள்ளியவளை, கருணாவல்பற்று, கரிக்கட்டுமூலை, தென்னமரவாடி, திருகோணமலை ஆகிய ஏழு சிற்றரசுகள் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகையின் கீழும், புத்தளத்தை உள்ளடக்கிய சிற்றரசு கோட்டை இராச்சியத்தின் ஆளுகையின் கீழும், மட்டக்களப்பு-அம்பாறையை உள்ளடக்கிய சிற்றரசு கண்டி இராச்சியத்தின் ஆளுகையின் கீழும் இயங்கியதாகப் போர்த்துக்கேயர்களின் வரலாற்றுக் குறிப்புக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் போர்த்துக்கேயர்களின் வருகைக்கு முற்பட்ட காலப்பகுதியில் புத்தளம், மட்டக்களப்பு-அம்பாறை ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு சிற்றரசுகளும் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகையின் கீழ் இயங்கியமைக்கான வரலாற்றுப் புதிவுகள் உள்ளன. இந்த வகையில் ‘தமிழீழம்’ என்ற சொற்பதம் 1924ஆம் ஆண்டில் முதன் முறையாக முன்வைக்கப்பட்டாலும்கூட, போர்த்துக்கேயர்களின் வருகைக்கு முன்னர் ஈழத்தமிழ் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட யாழ்ப்பாண இராச்சியத்தையும், ஒன்பது வன்னிமைகளையும் அது குறியீடு செய்வதால் யாழ்ப்பாணம் - வன்னிமை என்ற சொல்லாடலின் நவீன பெயராகவே தமிழீழம் என்ற சொற்பதத்தை நாம் கொள்ள முடியும்.

எவ்வாறு இந்தியா என்ற சொற்பதம் மேலைத்தேயர்களின் வருகைக்கு முன்னர் பாரத உபகண்டத்தில் இயங்கிய அறுநூறுக்கும் அதிகமான அரசுகளையும், சிற்றரசுகளையும் இன்று குறியீடு செய்கின்றதோ, அவ்வாறே தமிழீழம் என்ற சொற்பதமும் மேலைத்தேயர்களின் வருகைக்கு முன்னர் ஈழத்தீவில் பல நூற்றாண்டுகளாக இயங்கிய தமிழ் அரசையும், அதன் ஆளுகையின் கீழ் இயங்கிய ஒன்பது வன்னிமைகளையும் குறியீடு செய்கின்றது.

‘தமிழீழம்’ என்ற சொற்பதத்தை இருபதாம் நூற்றாண்டின் கருத்துருவமாக இன்று சிறுமைப்படுத்த முற்படும் டில்லி அதிகார வர்க்கம், ‘இந்தியா’ என்ற சொற்பதத்தின் குறுகிய வரலாற்றை மறுக்க முடியாது. வரலாற்று ரீதியில் பார்க்கும் பொழுது ஹிந்துஸ்தான் என்ற சொற்பதத்தின் நவீன வடிவமாகவே இந்தியா என்ற சொற்பதத்தை நாம் கொள்ள முடியும். இந்து நதிக்கு அப்பால் வசித்தோரை இந்துக்கள் என்று அழைக்கும் மரபு பண்டைக்காலத்து பாரசீகர்களிடம் (ஈரானியர்கள்) காணப்பட்டது.

இதனைத் தழுவி பாரத உபகண்டத்தை ஹிந்துஸ்தான் என்று கிரேக்கர்கள் அழைத்தனர். இரண்டாயிரத்து முந்நூற்று முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்தின் வட எல்லையில் மாவீரன் அலெக்சாண்டர் போர்தொடுத்ததைப் பதிவுசெய்த கிரேக்க வரலாற்றுக் குறிப்புக்கள் பாரதத்தை ஹிந்துஸ்தான் என்றே குறிப்பிடுகின்றன. முகாலிய சக்கரவர்த்தி அக்பரின் காலத்திலும் பாரத உபகண்டம் ஹிந்துஸ்தான் என்றே அழைக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் கார்ல் மார்க்ஸ் எழுதிய தொடர் பத்தி எழுத்துக்களில்கூட ஹிந்துஸ்தான் என்ற சொற்பதமே காணப்படுகின்றது.

இவ்வாறு குறுகிய வரலாற்றை ‘இந்தியா’ என்ற சொற்பதம் கொண்டிருக்கையில், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை ‘ஈழம்’ என்ற சொற்பதம் கொண்டுள்ளதை டில்லி அதிகார வர்க்கம் மறுக்க முடியாது. சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ‘ஈழம்’ என்ற சொற்பதம் முழு இலங்கைத் தீவையும் குறியீடு செய்வதோடு, அங்கு தமிழர்களின் ஆட்சி நிலவியதையும், தமிழ் மொழி செழித்தோங்கியதையும் உறுதி செய்யும் வகையில் ஈழத்துப் பூதன்தேவனார் என்ற ஈழத்தமிழ் புலவரால் எழுதப்பட்ட பாடலும் உள்ளது.

வரலாற்று ரீதியில் முழு இலங்கைத்தீவையும் குறியீடு செய்யும் சொற்பதமாக ‘ஈழம்’ விளங்கினாலும்கூட, தமிழீழம் என்ற சொற்பதத்திற்கான மாற்றுச் சொற்பதமாகவே இன்று ‘ஈழம்’ என்ற சொல்லை சிங்கள இனவாதிகளும், டில்லி அதிகார வர்க்கமும், அதன் ஏவலாளிகளாக விளங்கும் பார்ப்பனிய ஊடகங்களும் கையாள்கின்றது. இதேநேரத்தில் சிங்களத்தின் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில்கூட இலங்கைக்கான மாற்றுச் சொற்பதமாக ‘ஈழம்’ காணப்படுகின்றது. சிங்களத்தின் தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்த நல்லதம்பி புலவர் ‘ஈழ சிரோமணி’ என்ற சொல்லாடலை கையாள்கின்றார்.

ஈழத்தையும், தமிழீழத்தையும் ஒத்தசொற்களாகக் கொண்டு, படை வலிமையூடாக தமிழீழ அரசை அழித்த சிங்களம், தனது தேசிய கீதத்தில் இருந்து ‘ஈழம்’ என்ற சொற்பதத்தை அகற்ற முற்படுதில் முழுமையான சிங்கள-பௌத்த இனவாதம் பொதிந்து கிடப்பதைக் காண முடியும். ஆனால் தமிழ் மக்களின் நலன்களின் அக்கறை கொண்டிருப்பதாக கூறும் டில்லி அதிகார வர்க்கம், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட ‘ஈழம்’ என்ற சொற்பதத்தை அடையாளமின்றி வேரோடு கருக்க முற்படுவதில் ஈழத்தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியைத் தவிர வேறு எதனையும் காண முடியாது.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.