Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் பாலுறவு சினிமா - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பாலுறவு சினிமா - யமுனா ராஜேந்திரன்

maru%20piravi_CI.jpg

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இன்று உலக சினிமாவிலும் முக்கியமான பிரச்சினை பள்ளிக் கூட விடலைப் பிள்ளைகளின் காமம் தொடர்பான பிரச்சினைதான். இங்கிலாந்தில் பள்ளிக் கூட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தமது மாணவ மாணவிகளோடு பாலுறவு கொண்டிருந்தார்கள் எனும் பிரச்சினை வெகுஜன ஊடகங்களில் பரவலான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்திலும் இவ்வாறான நடத்தை தவறிய ஆசிரியர்கள், மாணவிகளைப் பாலுறவுக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்படுகிறார்கள் எனும் செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது.

பள்ளிப் பிள்ளைகளின் மாறிவரும் பாலுறவு மதிப்பீடுகள் தொடர்பாக இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு சிறப்பிதழும் வெளியிட்டது. பள்ளி மாணவர்களுடன் உறவு கொள்கிற மத்தியதரப் பெண்கள் குறித்து படித்த மத்தியதரவயதுப் பெண்கள் கருத்துச் சொல்லிருக்கிறார்கள். பல பாகங்கள் வந்த அமெரிக்கன் பை போன்ற மேற்கத்திய அமெரிக்கப் படங்களில் பள்ளிப் பிள்ளைகனின் பாலுறவு சித்திரிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

பாலுறவு, வன்முறை, பள்ளிப் பிள்ளைகள், தலைமுறை இடைவெளி போன்ற பிரச்சினைகள் இன்று சர்வதேசிய கரலாச்சாரப் பிரச்சினையாக இருக்கிறது. தமிழகமும் தமிழ்ச் சினிமாவும் இதிலிருந்து தப்பமுடியாது.

தகவல் தொழில்நுட்ப ஊடகத்தின் வளர்ச்சியும், எமது நாடுகளில் இளம் பெண்களிடம் தோன்றியிருக்கிற உடுப்பு மோஸ்தர் தொழில் மீதான கவர்ச்சியும் இன்று பாலுறவு சம்பந்தமான மதிப்பீடுகளை மாற்றி விட்டிருக்கிறது. பாலுறுப்புகளும், முன்பு மறைக்கப்பட்ட பெண் உடலினது பகுதிகளும் இன்றைய ஆடை நாகரிகத்தினால் வெளிப்படையாக ஆகியிருக்கிறது. வயது வந்தோருக்கான படங்களும் நீலப்படங்களும் எமது சமூகங்களின் நள்ளிரவு அலைவரிசைகளில் பார்க்கக் கிடைக்கிறது.

இணையவெளி என்பது பாலுறவின் திறந்தவெளி அரங்காக ஆகியிருக்கிறது.

உலகவயமாதலுக்கும் நுகர்வுக் கலாச்சாரத்துக்கும் ஆட்பட்டிருக்கும் கீழை நாடுகளைச் சேர்ந்த எமது இளைய தலைமுறை இதனது பாதிப்புகளில் இருந்து தப்பமுடியாது. தொலைபேசி அழைப்பு மையங்கள் நமது நாடுகளுக்கு பாரிய அளவில் இடம்பெயரும் அதேவேளையில் நமது இளைய தலைமுறையினரின் ஆங்கில உச்சரிப்பும் நடை உடை பாவனைகளும் நுகர்வுத் தேர்வகளும் மாறுகின்றன. ஒரு புதிய மத்தியதர வர்க்கம் சார்ந்த இளைய தலைமுறை இதனால் உருவாகியிருக்கிறது.

இவர்கள் இன்று அதிகமும் பயணம் செய்கிறார்கள். பல் கலாச்சாரங்களை அறிந்து கொள்கிறார்கள். தேடிச் செல்வதும் புதிய அனுபவங்களில் ஈடுபடுவதும் இவர்களது உலகக் கண்ணோட்டமாக ஆகிவருகிறது. பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக் கனவு கானும் இந்தத் தலைமுறை, பாலுறவு சம்பந்தமாகவும் பழைய கட்டுக்களை மீறி வருகிறது. அமெரிக்க ஐரோப்பிய சினிமாக்கள் போலவே தமிழ் சினிமாக்களும் நுகர்வுக் கலாச்சாரப் பார்வையிலான இந்தப் பாலுறவுப் பிரச்சினைகளையும் தலைமுறை இடைவெளியையும் தமது படங்களில் சித்தரிக்க முயல்கிறது.

தமிழ் சினிமாவில் விக்கிரமன் (புது வசந்தம்) யூகி சேது (கவிதை பாட நேரமில்லை) ராபர்ட் ராஜசேகர் (பாலைவனச் சோலை) போன்றவர்கள் தனித்த அறையில் பாலுறவு தவிர்ந்து நட்புடன் வாழும் இளம் ஆண்கள் பெண்களைச் சித்தரித்தார்கள். அதே வகையில் கும்மாளம், காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற படங்களில் பாலுறவை நேரடியாகச் சித்தரிக்காமல் பாலுறவு வேட்கையை மட்டும் சித்தரித்தார்கள்.

துள்ளுவதோ இளமை, பாய்ஸ், இளசு ரவுசு புதுசு, குறும்பு போன்ற படங்கள் உடல் சார்ந்த பாலுறவையே காட்சியாகச் சித்தரிக்கப் புகுந்தன. துள்ளுவதோ இளமை, பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தையால் வீட்டிலிருந்து வெளியேறும் பள்ளிப் பிள்ளைகள், பிறரது வன்முறைக்கு ஆட்படுவதையும், பாலுறவில் ஈடுபடுவதையும் சித்தரித்தது. இன்னும் அப்படத்தில் பாலுறவு கொள்ளும்போது பாதுகாப்பில்லாமல் அந்நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவே தனது தோழியை சகதோழி கோபித்துக் கொள்கிறாள்.

பாய்ஸ் படத்தில் விலைமாதுவை தாய் தகப்பனற்ற வீட்டுக்குக் கூட்டிவந்து, விடலைகள் உறவு கொள்ள எத்தனித்தமை விஸ்தாரமான காட்சியாக இடம் பெற்றது. இளசு புதுசு ரவுசில் பாலுறவு அனுபவம் பெறுவதற்காக பள்ளிப் பிள்ளைகள் விலைமாதர் விடுதிக்குச் செல்வது காட்டப்பட்டிருந்தது. விலைமாதர் விடுதியில் கைது செய்யப்படும் பள்ளிப் பிள்ளையின் தாய், அப்படத்தில் தற்கொலை செய்து கொள்கிறாள். பிற பிள்ளைகள் விலைமாதர் விடுதிக்குப் போவதற்குக் காரணமாக, பெற்றோர்களின் பொறுப்பற்ற வெளிப்படையான பாலுறவு நடத்தை இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

குறும்பு படத்தில் பல ஆண் நண்பர்களைக் கொண்ட பெண் சித்தரிக்கப்பட்டிருந்தாள். அந்நண்பர்களுடன் அப்பெண் சாதாரணமாக முத்தம் தருதலிலும் ஈடுபடுகிறாள். தாய் தகப்பன் வீட்டில் இல்லாத வேளையில் அந்தப் பெண், அதே குடியிருப்பிலுள்ள தன் காதலனை உடலுறவு கொள்ளவும் வீட்டிற்கு அழைக்கிறாள். அந்தக் காதலனும் மருந்துக் கடையில் சென்று ஆணுறை வாங்கவும் செய்கிறான். தன் மகள் தான் இதில் ஈடுபடப் போகிறாள் எள்று தெரியாக பெண்ணின் தகப்பன், அந்தப் பையனை உற்சாகப்படுத்தவும் செய்கிறார். இன்னும் வேடிக்கையாக கல்யாணமான மத்தியதர வயது ஆணும் பெண்ணும் கூட பிறர்மனை விழைதல் விளையாட்டாக அப்படத்தில் காண்பிக்கப்படுகிறது.

தமிழ் சினிமா பாலுறவுச் சித்திரிப்பு குறித்து புதியதொரு கட்டத்துக்கு வந்துவிட்டது. பாலுறவு அனுபவங்களை நேரடியாகத் தமிழப் படங்களில் சித்திரிக்கும் காலம் தொடங்கிவிட்டது. இது போட்ட காசு தரும் வியாபாரம் என்று பலருக்குத் தெரியும். தமிழ் வெகுஜனக் கலாச்சாரத்தில் இதற்கு உதாரணம் ஆனந்த விகடன் மணியன். பிறன்மனை விழைதல் தொடர்பாக வெளிப்படையாக எழுதிய அவர்தான் தமிழின் முதல் பக்திப் பத்திரிக்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பக்திப்படங்களை எடுத்து வந்த பாரதி கண்ணன் வயசுப் பசங்க எனப் படம் எடுக்க வருகிறார். பக்தியும் சரி காமமும் சரி விமர்சனமற்ற உணர்வு சார்ந்த விசயம். போலிச் சாமியார்கள் பக்தியுடன் காமத்தையும் விiயாட்டாக்கி ஆட முடிகிறது. மணியனும் பாரதி கண்ணனும் பக்தியையும் காமத்தையும் எப்படி வியாபாரம் செய்யமுடியும் என்பதற்குச் சான்றானவர்கள்.

தனுஷின் அண்ணனான செல்வராகவன் நேரடியாக அமெரிக்கப் பாதிப்புக்கு உள்ளானவர். காமமும் கிளுகிளுப்பும் இல்லாமல் இனி தமிழ் சினிமா இல்லை என்கிறார் அவர். தனுஷ் சிம்பு போன்றவர்களின் வரவும், அமெரிக்க மனப்பான்மையுள்ள தமிழ் சினிமா இயக்குனர்களின் பிரவேசமும், கலாச்சார உலகவயமாதலும் சேர்ந்து இன்றைய தமிழ் பாலுறவுச் சினிமா உருவாகியிருக்கிறது.

இந்த இயக்குனர்களின் சித்தரிப்பு முறைகளும் கூட அமெரிக்க பாலுறவுப்படங்களின் சித்திரிப்புப் போன்றதுதான். பாலுறவு வேட்கை, இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தனிநபர் மற்றும் சமூக சார்ந்த விளைவுகள் போன்றவற்றைக் குறித்து நேரடியாகவும் காத்திரமாகவும் அமெரிக்கப் படங்கள் பேசுவதில்லை. அமெரிக்கர்கள், விடலைப் பையன்களின் சேட்டைகளில் இதுவும் ஒன்று என்கிற மாதிரித்தான் கேலிக்கூத்தாக்கி நகைச்சுவைப் படங்கள் எனும் போர்வையில் இதனைக் கொடுக்கிறார்கள். பாய்ஸ், இளசு புதுசு ரவுசு, குறும்பு போன்ற படங்களில் பாலுறவு நடவடிக்கையைத் தேடிச் செல்கிற அனைவருமே 'கேனப்பயல்கள்' மாதிரி சித்திரிக்கப்பட்டிருப்பது இந்தவகையில்தான்.

குறும்பு படத்தில் வருகிற ஒரு குடும்பத் தலைவி, குடும்பத் தலைவன் இடையிலான பிறர்மனைக் காமம் கூட கேலிக் கூத்தாக்கப்பட்டிருப்பது இவ்கையில்தான். அடிப்படையான தனிநபர் சமூக விளைவுகளைக் கொண்ட ஒரு பிரச்சினையை கேலிச்கூத்தாக்கிக் காசு பார்ப்பதுதான் இந்தப் படங்களின் இயக்குனர்களது நோக்கம். இந்தப் படங்களின் இயக்குனர்கள் எவருமே இந்தப் பிரச்சினையை தீவிரக் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை என்பது முக்கியமாக அவதானிக்கத்தக்கதாகும்.

தமிழ் சமூகம் இம்மாதிரிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனநிலை கொண்டிருக்கவில்லை என்பதை சொன்னார் பாலுமகேந்திரா. பாய்ஸ் படத்திற்கு வந்த எதிர்ப்பிணையிட்டு இப்படிச் சொல்லிய பாலுமகேந்திரா. பாய்ஸ் படத்தின் மீதான தமிழக வெகுஜனக் கண்டனத்தை முதிர்ச்சியுறா தமிழ் வெகுஜன மனோநில என்றே புரிந்திருக்கிறார். பாய்ஸ் படத்தில் சித்திரிக்கப்படுவது விடலைப் பையன்களின் பாலுறவு வேட்கை மட்டுமன்று, அப்படத்தின் காட்சிகள் சகல பெண்களின் உடல் மீதான வன்முறையை, அத்துமீறலைக் காட்சியாகக் கொண்டிருக்கிறது. பாலுறுப்புகள் தவிர ஏதுமற்றவர்கள் எனும் வகையில் அப்படத்தில் சகல வயதுப் பெண்களும் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விடலைப் பைன்களின் பாலுறவு வேட்கையை பல பத்தாண்டுகளுக்கு முன்பே அழியாத கோலங்கள் எனும் தமிழ் சினிமாவில் அனுமதித்தவர்கள் தமிழக மக்கள். அங்கு பெண் உடல் மீதான வன்முறையென்பது விகாரமான காட்சிகளாக இருக்கவில்லை. கலை அனுபவம்தான் அங்கு முக்கியமாக இருந்தது. காசு பார்க்கும் வியாபாரம் முக்கியமாக அங்கு இருக்கவில்லை.

விடலைப் பாலுறவுப் படங்கள் அனைத்திலும் சித்திரிக்கும் இன்னொரு விசயம் பொறுப்பற்ற பெற்றோர்கள் பற்றியது. பிறர் மனை விளையும் பெற்றோர், வீட்டு வேலைக்காரியுடன் காமுற்றோர், தமது பிள்ளைகள் முன்பே கலவி கொள்வோர், பிள்ளைகளைக் கவனியாது சமூகச் சேவைக்குச் சென்றுவிடுவோர், காசொன்றே குறியாக பாசத்தைத் தராதுவிடும் பெற்றோர் போன்றவர்களே பிள்ளைகளின் பாலுறவு நாட்டங்களுக்குப் பிரதான காரணங்கள் எனச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

பாய்ஸ் படம் மட்டுமே தகவல் தொழில் நுட்பம், தொலைக்காட்சிப் பிம்பங்கள், மோஸதர் தொழில்துறை போன்றவற்றைக் காரணமாகக் காட்டியது. அது இயக்குனரின் போலித்தனம் என்பது அந்தப்படத்தின் காட்சிகளாலேயே விளங்கும். தமிழ்ப் படமான பாய்ஸ்ஸில் இடம் பெற்ற காட்சி மோஸ்தர்கள், ஆடைகள் போன்ற அனைத்துமே பாலுறவுத் தூண்டலை நோக்கம் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது.

குஷி, வாலி, நியூ திரைப்படங்களால் அறியப்பட்ட எஸ்.ஜே.சூர்யாவின் படங்களில் பெண்களின் உறுப்புகளை உரசுவதற்கென்றே அலையும் இளைஞர்களின் அவஸ்தைகள் இருந்தன. சிறுவனால் கர்ப்பமடையும் மத்தியதர வயதுப் பெண் பற்றிய, சிம்ரன்-எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூ அந்த விகாரத்தின் உச்சமான படம் எனலாம். இதே விதமான மனநிலை கொண்ட பிறிதொரு இயக்குனர் சாமி. அவரது குறிப்பிடத்தக்க படங்கள் உயிர் மற்றும் சிந்து சமவெளி.

யூ டீயூபில் மட்டும் தமிழ் பாலுறவுப்படங்கள் ஐம்பதுக்கும் குறையாமல் முழுமையாகக் கிடைக்கின்றன. வெகுஜனத் திரையில் காணமுடியாத இப்படங்கள் டிவிடி வியாபரத்திற்கெனவே தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களாகும். பாலுறவுப் பிரச்சனை குறித்த படங்கள் தொடர்பான விவாதங்களை நாம் இரண்டு விதங்களில் இருந்து அணுகுவதால் மட்டுமே சரியான திசையில் பயணிக்க முடியும்.

எமது சமூகப் பண்பாட்டு விளைவுகள் சார்ந்தே பாலுறவுப் பிரச்சனையை அணுகமுடியும். பாலுறவு அனுபவம் தரும் சந்தோசம் என்பதை நமது சமூகம், அதனது விளைவுகள் சார்ந்து, வயது அடிப்படையில் புத்திபூர்வமாக முதிர்ச்சி அடைந்தோருக்கும், கல்யாண பந்தத்தில் நுழைந்தோருக்கும் மட்டுமே அனுமதித்திருக்கிறது. இப்படியான பாலுறவுப் பிரச்சனைகள், ஒழுக்கம் சார்ந்த தடைகளையும் தகர்த்து, தனிநபரின் பாலுறவுத் தேர்வையும் சுதந்திரத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

சேதுமாதவனின் மறுபிறவி, ஆர்.சி.சக்தியின் உணர்ச்சிகள், சிறிதரின் இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்கள் உடலுறவு சார்ந்த விசயங்களைக் கூடக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மறுபிறவியில் உளவியல் பிரச்சினையால் மனவியோடு பாலுறவில் ஈடுபடமுடியாத கணவன் சித்திரிக்கப்பட்டிருந்தான். உணர்ச்சிகள் படத்தில் இளம் விதவையின் பாலுறவு வேட்கை சித்திரிக்கப்பட்டிருந்தது. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் அன்னியர்களுக்கடையில் தனிமையில் நேரும் பாலுறவு சித்திரிக்கப்பட்டிருந்தது.

பாலுறவு என்பதும், பாலுறவு வேட்கை என்பதும் ஒரு அடிப்படையான மானுடப் பிரச்சினை. அதனது சமூக அறவியல் அடிப்படைகள் சார்ந்து அது ஏற்படுத்தும் பிரச்சினைகளை நிதானமாகப் பார்க்க வேண்டிய பொறுப்பு நிச்சயமாகவே ஓரு கலைஞனுக்கு உண்டு.

பாலுறவு சார்ந்த அடிப்படை வேட்கைகளைத் தற்போது 15-18 வயதுக்குள்ளேயே தலையிலும் உணர்விலும் பற்றிப் பிடிக்க வேண்டிய நிலைமையில், இளைய தலைமுறையினர் வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் விரும்புகிறோமோ இல்லையோ பாலுறவு அனுபவம் சார்ந்த வேட்கைகள் இவர்களிடம் சீக்கிரமாகவே தோன்றிவிடுகிறது. இதற்கான காரணம் நுகர்வுக் கலாச்சாரமும் உலகவயமாதலும் காட்சிக் கலாச்சாரத்தின் கட்டுதளையற்ற பரவலாக்கமும்தான் என்பதில் சந்தேகமில்லை.

சில மேற்கத்திய நாடுகளிலும் தமிழ் பெற்றோர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பள்ளிப்பிள்ளைகள் கர்ப்பத் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தெரிந்திருக்க வேண்டுமென அரசு விரும்புகிறது. அந்த நிலை எமது நாடுகளுக்கும் பரவுவது தவிரக்கவியலாமல் நிகழும். உலகவயமாதலின் பாதிப்புகளைத் தடு;த்து நிறுத்தமுடியாது. பள்ளிக் பிள்ளைகள் இதனைத் தெரிந்து கொள்வதன் மூலம் ஏற்படும் சாதக பாதகங்களை அந்தந்தப் பண்பாட்டுப் பின்புலத்தில் வைத்துச் சித்தரிக்கக் கூடாது எனச் சொல்வதும் சாத்தியமில்லை.

பிரச்சினை பொறுப்புடன் விளைவுகள் சார்ந்து பார்க்கப்படவேண்டும். சதை வியாபாரிகளை நாம் இவ்வகையில் இனம் காணவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப்படங்கள் அனைவரும் பார்க்கக் கூடிய படங்களாக இருக்கமுடியாது. பிரச்சினைகள் சித்திரிக்கப்படுவதற்கு ஒப்ப, அந்தந்த வயது சார்ந்தவர்கள் பார்க்கப்பட முடிவதாக தணிக்கைச் சான்றிதழ்கள் அமையவேண்டும். இதனை பிரித்தானியா போன்ற நாடுகள் ஏற்கனவே கடைப்பிடித்து வருகின்றன. காற்றாட்டுவெள்ளமெனப் பெருக்கெடுத்து வரும் உலகவயமாதலின் பாதிப்புகளை எவரும் தடுக்கமுடியாது. பாலாஜி சக்திவேலின் வழக்கு எண்.18/9 திரைப்படம் அதனை ஒரு காத்திரமான, சமூகப் பொறுப்புடனான செய்தியாகச் சொல்லியிருக்கிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82256/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.