Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012: தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் ஆண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2012: தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் ஆண்டு

எஸ். கோபாலகிருஷ்ணன்
 

 

2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்விப் பட்டியல்கள் குவிகின்றன. வசூல் சார்ந்தும் தரம் சார்ந்தும் இந்தப் பட்டியல்கள் அணிவகுக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் தத்தமது துலாக்கோலில் கோலிவுட்டை நிறுத்துப் பார்க்கின்றன. தமிழ் சினிமாவின் ஓராண்டுக் கால இயக்கத்தை நுட்பமாக அவதானிக்கும்போது அதில் உருவாகியுள்ள புதிய சலனங்களைப் புறக்கணித்துவிட முடியாது.

 

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநர்களே அதிகமாகச் சாதித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். பல புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் தங்கள் முதல் அடியை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதித்திருக்கிறார்கள். சில பல வெற்றிகளைக் கொடுத்து தங்களுக்கான நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் இயக்குநர்கள் இந்த ஆண்டு தங்கள் முத்திரையை மீண்டுமொருமுறை பதித்திருக்கிறார்கள். நட்சத்திர நடிகர்களின் படமானாலும் அவை வெற்றிபெற இயக்குநரின் புத்திசாலித்தனம் தேவைப்பட்டிருக்கிறது. அதை நம்பாத படங்களில் நடசத்திரங்கள் நடித்திருந்தாலும் அவை மண்ணைக் கவ்வியிருக்கின்றன. அதிகம் எதிர்பார்க்கப்படும் சில இயக்குநர்கள் சொதப்பியும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் நடப்பவைதான் என்றாலும் இந்த ஆண்டு இந்த உண்மைகளைக் கூடுதல் அழுத்தத்துடன் நிரூபிக்கப் பல படங்கள் சாட்சியாக நிற்கின்றன.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வணிக சினிமாவின் முன்னணி இயக்குநர் என்று வர்ணிக்கப்படும் ஷங்கரின் நண்பன் வெளியானது. பாய்ஸைத் தவிர இவர் இயக்கிய அனைத்துத் தமிழ்ப் படங்களும் வெற்றிபெற்றவை. அந்தப் பட்டியலில் நண்பனும் இணைந்துகொண்டது. தன் சொந்தக் கதையை இயக்குவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் ஷங்கர், முதல் முறையாக ஒரு இந்திப் படத்தை மறுஆக்கம் செய்ய ஏற்றுக்கொண்டது பலரை ஆச்சரியப்பட வைத்தது. மூலத்துக்கு விசுவாசமான மறுஆக்கம் என்றாலும் காட்சிகளைப் படம்பிடித்த விதத்தில் தெரிந்த பிரம்மாண்டத்தில் தன் முத்திரையைப் பதித்தார் ஷங்கர்.

 

நண்பனில் விஜய் என்னும் நட்சத்திரம் நடித்திருந்தாலும் அவர் தன்னை இயக்குநரின் நடிகராக மாற்றிக்கொண்டதாலேயே இந்தப் படம் வெற்றிபெற்றது என்பதை மறுக்க முடியாது. அவருடன் நடித்த இளம் நட்சத்திரங்களான ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நட்சத்திரங்களாக இல்லாமல் பாத்திரங்களாகவே திரையில் தோன்றினார்கள்.

 

ஏற்கனவே பல வெற்றிகளைக் கொடுத்திருக்கும் இயக்குநர் லிங்குசாமியின் வேட்டையும் ஜனவரியில் வெளியானது. இரட்டை நாயகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அரதப் பழசான கதையை எடுத்துக்கொண்டாலும் அதை சுவாரஸ்யமாக நகர்த்திச்செல்லும் திரைகக்தையை அமைத்து தப்பித்துக்கொண்டார் லிங்குசாமி.

 

இயக்குநராக முத்திரை பதிக்கத் தவறிய இவர் ஒரு தயாரிப்பாளராகத் தன் அடையாளத்தை அழுத்தமாகப் பதித்துவிட்டர். லிங்குசாமி இந்த ஆண்டு தயாரித்த இரண்டு படங்களும் முக்கியமான படங்களாயின. முதல் படம் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9. இவர் இயக்கிய காதல் ஏற்படுத்திய அதிர்வுகளை கல்லூரி ஏற்படுத்தவில்லை என்றாலும் வழக்கு எண் இவரையும் தமிழ் சினிமாவையும் புது உயரங்களுக்குக் கொண்டுசென்றது. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் புதுமுகங்கள். அழகுக்கும் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் தரும் சினிமா வழமையைக் கணக்கில்கொள்ளாமல் பாத்திரங்களுக்கேற்ற முகவெட்டுகளைத் தேர்ந்தெடுத்துக் கதை சொல்லும் திறன்மீது இருந்த தன்னம்பிக்கையை நிரூபித்தார் பாலாஜி. அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளையும் அவர்களை வஞ்சிக்கும் பணக்காரர்களையும் பற்றிப் பேசிய இந்தப் படம் ஏற்கனவே விருதுகளைக் குவிக்கத் தொடங்கிவிட்டது. வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளரைத் திருப்திப்படுத்தியது.

 

மைனாவின் மூலம் முத்திரை பதித்த பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படத்தையும் லிங்குசாமி தயாரித்தார். இதிலும் புதுமுகங்கள் அல்லது அதிகம் அறியப்படாத முகங்களையே நடிக்கவைத்தார் சாலமன். வித்தியாசமான கதைக் களமும் காட்சிகளின் அழகியலும் மிகையில்லாத பாத்திரப் படைப்புகளும் படத்தை வெற்றிபெற வைத்திருக்கின்றன.

 

முழு நீள நகைச்சுவைப் படங்ளுக்காகப் பெயர்பெற்ற ராஜேஷின் இயக்கத்தில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இந்த ஆண்டு வசூல் ரீதியாக வெற்றியை வாரிக் குவித்தது. உதயநிதி நாயகனாக நடித்தாலும் படம் சந்தானத்தை நம்பியே எடுக்கப்பட்டிருக்கிறது என்று வெளிப்படையாகவே தெரிந்தது. ரசிகர்களும் அதை அவ்வாறே ஏற்றுக்கொண்டு படத்தை வெற்றிபெற வைத்தார்கள்.

 

நகைச்சுவைப் பட இயக்குநராக அறியப்பட்ட மற்றொரு இயக்குநர் சுந்தர்.சி, சில ஆண்டுகளாக நாயக அந்தஸ்தைப் பிடிப்பதில் ஆர்வம் செலுத்தி வந்தார். அந்த முடிவைக் கைவிட்டு அவரை மீண்டும் இயக்கத்தின்பால் திரும்பவைத்த படம் கலகலப்பு. பெயருக்கேற்றாற்போல் கலகலப்பூட்டும் காட்சிகள் படத்தை வெற்றிபெற வைத்தது. கவலைகளை மறந்து ரசிகர்களை சிரிக்க வைத்த படம் என்ற புண்ணியத்தையும் கட்டிக்கொண்டது.

 

ஷங்கர், பாலாஜி சக்திவேல், பிரபு சாலமன், ராஜேஷ் ஆகியோர் இந்த ஆண்டு வெளியான படங்களின் மூலம் தங்கள் முத்திரையைப் பதித்துவிட்டார்கள். துப்பாக்கியின் மூலம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே நிற்கிறார். விஜய் என்னும் நட்சத்திரத்தை வைத்துப் படம் எடுத்தாலும் ரசிகர்களின் நாடித் துடிப்பை மிகச் சரியாக கணித்து அதற்கேற்ற கதையையும் சுவாரஸ்யமான திரைக்கதையையும் அமைத்து விஜயின் நாயக பிம்பத்தைத் தன் கதைக்கேற்றவாறு பயன்படுத்தி சினிமா என்றுமே இயக்குநரின் ஊடகம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் முருகதாஸ். படம் இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தாலும் அது மறக்கப்பட்டுவிட்டதையே படத்தின் பெருவெற்றி காட்டுகிறது.

 

இவர்கள் நால்வருடன் போட்டியிட முடியாவிட்டாலும். தங்களுக்கிருக்கும் சாதக பாதகங்களைக் கொண்டு கவனிக்க வைத்த இயக்குநர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர் மகிழ் திருமேனி. இவரது முதல் படமான முன்தினம் பார்த்தேனே முழுக்க முழுக்க காதலைப் பேசிய படம். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தடையறத் தாக்க என்னும் குற்றவியல் சார்ந்த படத்தை இயக்கினார். ரவுடிகளால் பாதிக்கப்படும் இளைஞன் என்ற ஒரு வரிக் கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடிக்க நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் நாயகன் அருண் விஜயின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்த ஆக்ஷன் திரில்லர் வகைப் படத்தில் காதல் அத்தியாயமும் சிறப்பாக இருந்தது.

 

வெற்றிகரமான முதல் முயற்சிகள்

 

இந்த ஆண்டு முதல் வாய்ப்பையே முத்தான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை கணிசமானது. இந்தப் போக்கைத் தொடங்கி வைத்தவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி என்ற இவரது குறும்படம் நடிகர் சித்தார்த்தை ஈர்த்தது. யூ டியூபில் இதைப் பார்த்த சித்தார்த் இதே கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தார். குறும்படத்தை முழுநீளத் திரைப்படமாக மாற்றி முதல் வெற்றியை ருசித்தார் பாலாஜி மோகன்.

 

இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நான் என்ற படத்தைத் தயாரித்து அதில் நாயகனாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. வழக்கமாக இதுபோன்ற படங்களின் மீது படரும் அவநம்பிக்கை நிழல் இந்தப் படத்தின் மீதும் படர்ந்தது. ஆனால் படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்தது. குடும்பம் என்னும் பாதுகாப்பை இழந்த ஒருவன் சூழ்நிலை நிர்ப்பந்தங்களால் குற்றங்களைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதே கதையின் ஆதார முடிச்சு. உதவிக்கு எந்த ஆதாரமும் இல்லாத ஒருவன், சூழ்நிலை தரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒரே ஒரு தவறின் மூலம் வாழ்க்கையில் நிலை பெற விரும்புகிறான். ஆனால் அதன் மூலம் அவனுக்குக் கிடைக்கும் வாய்ப்பும் வாழ்க்கையும் அவனை மேலும் பல தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. மீண்டும் மீண்டும் குற்றங்களில் சிக்கிக்கொள்ளும் அவன் தண்டனைகளிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகளைச் சித்தரித்திருந்த விதம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கப் போதுமானதாக இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் நாயகன் செய்யும் தவறுகளை அவற்றின் பின்னணியோடு கையாளத் தொடங்கிய இயக்குநர் ஒரு கட்டத்துக்கு மேல் அவற்றை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியது படத்தைச் சறுக்க வைத்தது. ஆனால் திரைக்கதையின் விறுவிறுப்பு அதை மறக்கடித்தது. இந்த ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு வழங்கிய இயக்குநர் ஜீவா ஷங்கர் நம்பிக்கை தரும் இயக்குநர்கள் பட்டியலில் இணைகிறார்.

 

நான் வெளியான அதே நாளில் வெளியான அட்டக்கத்தியும் ரசிகர்களை ஈர்த்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் கீழ் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்நிலையை யதார்த்தமாகப் படம் பிடித்த அட்டக்கத்தி, காதலில் தொடர் தோல்விகளை சந்திக்கும் நாயகனின் கதையை நகைச்சுவை ததும்பச் சித்தரித்தது. காதல் தோல்வியையும் நகைச்சுவையையும் இணைத்ததை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் தொட்டிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

 

பாலாஜி மோகனைப் போல் கார்த்திக் சுப்பாராஜ், பாலாஜி தரணீதரன் ஆகிய குறும்பட இயக்குநர்களும் திரைப்பட இயக்குநர்களாக மாறினார்கள். இவர்களுக்கு பாலாஜியைப் போல் சித்தார்த் என்ற நடிகரின் துணை கிடைக்கவில்லை. முற்றிலும் புதுமுகங்களை வைத்துத் தங்கள் திறமையை முதலீடாகக் கொண்டு வெற்றிபெற்றார்கள்.

 

கார்த்திக், பீட்ஸா என்ற திகில் படத்தை எடுத்து ரசிகர்களை நீண்ட நாட்களுக்குப் பின் திரையரங்கில் அலற வைத்தார். அமானுஷ்ய விஷயங்களைப் பின்னணியாகக் கொண்டு ரசிகர்களை நகம் கடிக்க வைத்த மர்ம முடிச்சுகள் நிறைந்த படமாக இந்தப் படம் இருந்தது. பார்வையாளர்களைக் கட்டிப்போடும் திரைக்கதையில் சில பல ஓட்டைகள் இருந்தாலும் படத்தில் கிடைத்த திகிலுணர்வு அதன் வெற்றிக்கு வழிகோலியது.

 

பாலாஜி தரணீதரன் தன் நண்பரின் வாழ்க்கையில் நடந்த விபத்தை மையமாகக் கொண்டு நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் என்ற குறும்படத்தை இயக்கினார். அதையே திரைப்படமாக இயக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ் சினிமாவில் தன் அடையாளத்தைப் பதித்துவிட்டார். இரண்டரை மணிநேரப் படம், பாடல்களோ, தனி நகைச்சுவைக் காட்சிகளோ திகிலுணர்வை ஏற்படுத்தும் சம்பவங்களோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய தினம் நடக்கும் விபத்தினால் தன் வாழ்வில் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்தவற்றை மறந்துவிடுகிறார் நாயகன். அந்த விபத்துக்குப் பொறுப்பேற்கும் நண்பர்கள் நாயகனின் குறையை மறைத்துத் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடிக்கிறார்கள். ரசிகர்களைப் படத்துடன் கட்டிப்போடும் சாதனையை இந்தக் கதையை வைத்துக்கொண்டு நிகழ்த்திக் காட்டினார் பாலாஜி. படத்திலிருந்த ஒரு சில குறைகளை அரங்கைவிட்டு வெளியேறிய பின்தான் யோசிக்க முடிந்தது.

 

இந்த ஆண்டு சமூகப் பிரச்சினையைப் பேசும் படங்களில் முக்கியமான ஒரு படத்தை இயக்கியவரும் ஒரு புதுமுகமே. லிங்குசாமி தன் மீது வைத்த நம்பிக்கையைப் புதுமுகம் அன்பழகனின் மீது வைத்து சாட்டை படத்தைத் தயாரித்தார் இயக்குநர் பிரபு சாலமன். அரசுப் பள்ளிகளின் பிரச்சினைகளையும் அவற்றை மாற்ற சில உருப்படியான யோசனைகளையும் சொன்ன இந்தப் படம் கல்விப் பிரச்சினையை துல்லியமாக அணுகிய படங்களுள் ஒன்றாகப் பெயர் பெற்றது. இந்தப் படத்தில் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி ஏற்றிருந்த ஆசிரியர் பாத்திரம் பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களின் மனங்களில் அவர் போன்ற ஒரு ஆசிரியருக்காக ஏங்கவைத்தது.

 

இந்த ஆண்டு வியாபார ரீதியாக வெற்றிபெற்றுள்ள சில படங்களில் ஒன்று புதுமுகம் பிரபாகரன் இயக்கிய சுந்தரபாண்டியன். இயக்குநராகவும் நடிகராகவும் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றிருக்கும் சசிக்குமார் இந்தப் படத்தில் நடித்துத் தயாரிக்கவும் செய்தார். நட்பு, காதல், குடும்ப செண்டிமண்ட், நகைச்சுவை என்று குடும்பத்துடன் படம் பார்க்க நினைப்பவர்களை திரையரங்குக்கு ஈர்ப்பதில் இந்தப் படம் வெற்றிகண்டது. இந்தப் படம் அப்பட்டமாக ஒரு குறிப்பிட்ட சாதியைத் தூக்கிப் பிடித்து அவர்கள் நிகழ்த்தும் வன்முறைகளை நியாயப்படுத்த முயன்றாலும் படமமெங்கும் விரவிக் கிடந்த பொழுதுபோக்கு அம்சம் அதை மறக்கச் செய்தது.

 

இந்த ஆண்டு ஒரு முக்கியமான பெண் இயக்குநரும் கிடைத்திருக்கிறார். நல்ல குணச்சித்திர நடிகையாக அறியப்பட்டிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோஹணம் இந்த ஆண்டு வெளியானது. படங்களின் பொருட்செலவு 50 கோடிகளைத் தாண்டும் காலகட்டத்தில் 40 லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு சிறிய தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை தந்தது. ஏழை நடுத்தர வயதுப் பெண்மணியின் மனநலப் பிரச்சினையை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் வியாபார வெற்றியைப் பெறாவிட்டாலும் ஒரு சிறந்த பெண் இயக்குநர் கிடைத்த திருப்தி கிடைத்தது.
 
தமிழ் சினிமாவுக்கு மற்றொரு பெண் இயக்குநரும் இந்த ஆண்டு அறிமுகமானார். இவர் சினிமாவுக்குப் புதியவர் அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள், நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய "3" எனும் படம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியானது. பாடல்கள் பெற்ற வெற்றியைப் படத்தால் தக்கவைக்க முடியவில்லை. ஒரு காதல் கதையின் மூன்று அத்தியாயங்களைப் பேசிய இந்தப் படத்தில் காதல் காட்சிகள் ரசனையாக எடுக்கப்பட்டிருந்தாலும் செயற்கையாகத் திணிக்கப்பட்ட சோகக் காட்சிகளால் படம் ஒட்டுமொத்தமாக ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. படத்தின் பல காட்சிகள் தனுஷின் முந்தைய படமான மயக்கம் என்ன என்ற படத்தின் மறுவார்ப்பாக இருந்ததாகவும் ரசிகர்கள் கருதினார்கள்.
 
 
சொதப்பிய இயக்குநர்கள்
 
இந்த ஆண்டு சொதப்பிய இயக்குநர்கள் பட்டியலில் சில புகழ்பெற்ற இயக்குநர்கள் இருந்தார்கள்.
 
மிஸ்கினின் முகமூடியில் வியாபாரப் படம் எடுப்பதா அல்லது தன் புத்திசாலித்னத்தை நிறுவுவதா என்ற குழப்பம் தென்பட்டது. விக்ரமை வைத்து தெய்வத் திருமகள் என்ற உணர்ச்சிமிகு படைப்பைத் தந்த விஜய் அவருடன் மீண்டும் கைகோர்த்த படத்தில் கதைக்கோ திரைக்கதைக்கோ பெரிதாக மெனக்கெடவில்லை. அயனின் வெற்றியும், ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்களாக சூரியா நடிக்கிறார் என்ற பரபரப்பும் கே.வி. ஆனந்தின் மாற்றானுக்குக் கைகொடுக்கவில்லை. நம்ப முடியாத கதை மற்றும் ஓட்டைகள் நிறைந்த திரைக்கதை படத்தைப் பலிவாங்கியது. நீதானே என் பொன்வசந்தத்தில் காதலர்களுக்குள் அடிக்கடி நிகழும் ஊடல் என்ற கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த கௌதம், வலுவான திரைக்கதை அமைப்பதில் கோட்டைவிட்டார்.
 
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிய புதுமுக இயக்குநர்களுக்கும் பஞ்சமில்லை. கார்த்தியின் சகுனியை இயக்கிய புதுமுகம் சங்கர் தயாள் கார்த்தியின் நாயக பிம்பத்தை நம்பி எக்கச்சக்கமாகச் சரடு விட்டிருந்தார். அஜீத்தின் நாயக பிம்பத்தில் மயங்கி வன்முறையும் கவர்ச்சியும் மட்டுமே கொண்ட பலவீனமான திரைக்கதையை பில்லா- 2 படத்துக்கு அமைத்தார் சக்ரி டோலட்டி. இந்த இரு படங்களும் தோல்வி அடைந்தன.
 
இந்த ஆண்டு நன்றாக ஓடிய, நல்ல பெயர் பெற்ற எல்லாப் படங்களும் இயக்குநர்களின் படைப்பாளுமையாலேயே வலுப்பெற்றன. பெரிய நட்சத்திரங்களை நம்பி எடுக்கப்பட்ட பல படங்கள் இயக்குநர்களின் சறுக்கலால் தோல்வியுற்றன. நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டு வென்ற படங்களும் நட்சத்திரங்களுக்காக மட்டுமல்லாமல் இயக்குநர்களின் ஆளுமையாலும் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. புகழ்பெற்ற இயக்குநர்கள் தங்கள் புகழைத் தக்கவைத்திருக்கிறார்கள் அல்லது மேல்நோக்கிச் சென்றிருக்கிறார்கள். புதுமுக இயக்குநர்கள் பிரகாசமான நம்பிக்கைகளை வழங்கியிருக்கிறார்கள். எனவே கடந்துபோன ஆண்டை இயக்குநர்களின் ஆண்டு என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=1c9f006a-301e-4fbd-be1b-cfd2bfd22633

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.