Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமிய தமிழர்களும், சாவக - ஹம்பேயர்களும்: சேரமான்

Featured Replies

 

rizana.jpgசவூதி அரேபியாவை தமது தாயகமாக விளித்துக் காலம் காலமாக இஸ்லாமிய தமிழர்களிடையே நயவஞ்சக அரசியல் புரிந்துவரும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முகத்தில் கரிபூசிய சம்பவமாக கடந்த வாரம் சவூதியில் நிகழ்ந்தேறிய ரிசானா என்ற இஸ்லாமிய தமிழ் யுவதியின் தலைதுண்டிப்பு சம்பவம் திகழ்கின்றது.

‘நாங்கள் முஸ்லிம்கள். நாங்கள் தமிழ் மொழியில் பேசினாலும் சவூதி அரேபியாதான் எங்கள் தாயகம். எனவே நாங்கள் தமிழர்கள் அல்ல’: இதுதான் காலம்காலமாக சிங்கள அதிகாரவர்க்கத்திற்கு துணைநின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இரண்டகம் செய்யும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வைக்கும் வாதம்.

ஆனாலும் சவூதி அரேபியாவில் தமது ஆணிவேரைத் தேடித் தம்மைத் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ளும் இந்த முஸ்லிம் தலைமைகளால், தமது தாயகம் என்று கூறப்படும் சவூதி மண்ணில் இஸ்லாமிய தமிழ்ப் பெண் ஒருவர் அவலமாக தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ரிசானாவின் தலைதுண்டிப்பு என்பது வெறுமனவே இலங்கையின் முஸ்லிம் தலைமைகளின் கையாலாகாத்தனத்திற்கு மட்டும் சான்றுபகரவில்லை: கூடவே சவூதி அரேபியாவை தமது தாயகமாக விளிக்கும் முஸ்லிம் தலைமைகளின் மிதமிஞ்சிய முஸ்லிம் கற்பனைத் ‘தேசியவாதத்தையும்’ தகர்த்தெறிந்துள்ளது.

ரிசானா மீது 2005ஆம் ஆண்டு கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பொழுதும் சரி, அரபுச் சிறையில் அவர் சித்திரவதை செய்யப்பட்ட பொழுதும் சரி, இறுதியாக அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்த பொழுதும் சரி, அவரைத் தமது மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற அரபு வம்சாவழிப் பெண்ணாக எந்தவொரு அரபுக் குடிமகனும் கருதியதாகத் தெரியவில்லை.

உண்மையில் ஈழத்தீவில் வசிக்கும் முஸ்லிம்கள் யார்? இவர்கள் தமிழ்மொழி பேசும் அரபு வம்சாவழிகளா? அல்லது இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தமிழர்களா? இதற்கான பதில் ஒற்றை வார்த்தையில் கூறக்கூடிய ஒன்றல்ல. ஆனால் இதற்கான பதிலை ஈழத்தீவிற்கும், இஸ்லாமிற்கும் இடையிலான வரலாற்றுப் பின்னணியை ஆராய்வதனூடாகப் பெற முடியும்.

இஸ்லாம் என்பது கி.பி. 610 ஆண்டில் அரபு மண்ணில் தோற்றம் பெற்ற ஒரு மதம். ஆனால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அராபியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வணிகத் தொடர்பாடல்கள் இருந்துள்ளன. அராபியர்கள் மட்டுமன்றி, ஆபிரிக்கர்கள், யூதர்கள், கிரேக்கர்கள், உரோமர்கள், சீனர்கள் என உலகின் பலதரப்பட்ட மக்களுடன் பல நூற்றாண்டுகளாக வணிகத் தொடர்புகளை தமிழர்கள் பேணி வந்துள்ளார்கள்.

பொதுவாக ஈழத்தீவின் வடமேற்கிலிருந்து வந்த வணிகர்களை யவனர்கள் என்றும், வடகிழக்கிலிருந்து வந்த வணிகர்களை சாவகர்கள் என்றும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் விளக்கின்றன. சங்க காலத்தில் பூம்பூகார், தொண்டி போன்ற துறைமுகங்கள் தமிழகத்தில் பிரசித்தி பெற்று விளங்கியமை போன்று தமிழீழத்தில் மாந்தை, ஊர்காவற்துறை, மாதகல் போன்ற பகுதிகள் முக்கிய வெளிநாட்டு வணிகத் துறைமுகப் பகுதிகளாகத் திகழ்ந்தமைக்கான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. அதிலும் அரபு தேசத்திலிருந்து வந்த குதிரைகளையே அதிக அளவில் தமது புரவிப் படைகளில் தமிழகத்து மன்னகர்களும், சரி ஈழத்தமிழ் மன்னர்களும் சரி விரும்பி பயன்படுத்தியிருந்தார்கள்.

இவ்வாறாக அரபு தேசத்திற்கும், ஈழத்தீவிற்கும் இடையே நீண்ட வரலாற்றுப் பின்னணி இருந்தாலும்கூட, சங்க காலத்திலோ அன்றி சங்கம் மருவிய காலத்திலோ பெரும் தொகையில் ஈழத்தீவில் அராபியர்கள் குடியேறியதாக வரலாற்றுப் பதிவுகள் எவையும் இல்லை. ஆனாலும், இராசேந்திர சோழன் காலத்திற்குப் பின்னர் (ஏறத்தாழ 950 ஆண்டுகளுக்கு முன்னர்) ஈழத்திற்கு வருகை தந்த அரபு வணிகர்கள் சிலர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து பின்னர் அவர்களையும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் ஈழமண்ணிலேயே விட்டுச் சென்றதாக சில பதிவுகள் உள்ளன.

எனினும் இவ்வாறான சம்பவங்கள் பெருமளவில் இடம்பெறவில்லை. தவிர இவ்வாறு அரபு வணிகர்களுக்கும், ஈழத்தமிழ்ப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகள் தமது தந்தையர் தேசத்தோடு தொடர்புகளைப் பேணியதாகப் பதிவுகள் இல்லை. மாறாக ஈழத்தில் வாழ்ந்த ஏனைய தமிழ்க் குடிகளோடு தமிழர்களாக ஒன்றித்தே தலைமுறை தலைமுறையாக இவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

எனினும் கி.பி. 1311ஆம் ஆண்டு தமிழகத்தில் பாண்டி நாட்டுத் தலைநகர் மதுரையை டில்லியிலிருந்து வந்த மலீக் கபூரின் தலைமையிலான முகாலயப் படைகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சுந்தபாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் இடையில் நடைபெற்ற சகோதரச் சண்டையில் சுந்தபாண்டியனுக்கு உதவியாக வந்த மலீக் கபூரின் படை மதுரையைக் கைப்பற்றியதோடு மட்டும் நின்றுவிடாது அங்கு வசித்து வந்த சைவர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றியது.

இதுவே தமிழகத்தில் இஸ்லாம் வேரூன்றுவதற்கு காலாகியது. இதன் பின்னர் நடந்த மதமாற்றங்கள் - திருமணங்கள் போன்றவற்றின் விளைவாக தோற்றம் பெற்றதே இஸ்லாமிய தமிழ் சமூகமாகும். இவர்களின் வழித்தோன்றல்களே பின்னர் ஈழத்திலும் குடியேறினார்கள்.

இவர்கள் சாராம்சத்தில் தமிழர்கள். அதிலும் இஸ்லாமிய மார்க்கத்தை தமது சமயமாகத் தழுவிக் கொண்ட அல்லது தழுவுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழர்கள். இலங்கையின் முஸ்லிம் தலைமைகள் கூறுவது போன்று இவர்கள் அராபியர்களும் அல்ல. சவூதி அரேபியாவைத் தாயகமாகக் கொண்ட தமிழ்பேசும் முஸ்லிம்களும் அல்ல. ஆனாலும் அக்காலப் பகுதிகளில் தமிழர்களோடு தமிழர்களாகக் கலந்திருந்த அரபுக் கலப்பின இஸ்லாமியத் தமிழர்களோடு இவர்கள் கூடி வாழ்ந்தார்கள்.

தமிழகத்திலிருந்து நிகழ்ந்த இந்த இஸ்லாமியத் தமிழர்களின் வருகையோடு ஈழத்தீவில் மேலும் பல கட்டங்களாக இஸ்லாமிய மதமாற்றங்கள் நிகழ்ந்தன. இக்காலப் பகுதியில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் இவர்களை சோனகர்கள் என்று குறிப்பிடுகின்றன. எனினும் பதினாறாம் நூற்றாண்டில் ஈழத்தீவில் கால்பதித்த போர்த்துக்கேயர்களும், ஸ்பானியர்களும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அராபியர்களையும், வட ஆபிரிக்கர்களையும் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் ‘மூர்’ என்று சொற்பதத்தையே இஸ்லாமியத் தமிழர்களைக் குறிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.

ஆனாலும் இவர்களை இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தமிழர்களாகவே அக்காலப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் கருதியிருந்தார்கள். இதற்கான சான்றாக பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்கூறில் (கி.பி.1736) மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை அமைகின்றது. அப்பொழுது ஈழத்தில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் அரபு தேசத்திலிருந்த வந்தோராக அதில் விளிக்கப்படவில்லை. மாறாக முகம்மதிய சமயத்தை தழுவிய சோனகத் தமிழர்களாகவே இவர்களை யாழ்ப்பாண வைபவமாலை விளிக்கின்றது. இதுபற்றிய விபரமான குறிப்புக்கள் நல்லூர் கோவில் வளாகத்திற்கான உரிமம் தொடர்பாக சைவத் தமிழர்களுக்கும், இஸ்லாமியத் தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பற்றிய பதிவில் உள்ளன.

அவை வருமாறு:

“அக்காலத்தில் சந்தச்சாய்பு என்பவனால் மகம்மது மார்க்கத்தவர்களாக்கப்பட்ட தமிழ் வமிசத்தவர்களான சில சோனகக் குடிகள் காயில் பட்டணம் முதலிய இடங்களிலிருந்து வந்து தென்மிருசுவில் என்னும் ஊரிலே குடியிருந்து, சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள், முகாவில் எனுமிடங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரம் பண்ணிக் கொண்டு, தாங்களிலிருந்ததென மிருசுவிலுக்கு உசனென்று பெயரிட்டார்கள். சில காலம் அவ்விடத்திலிருந்து, அவ்விடம் வசதிப்படாததனால், அந்தச் சோனகக் குடிகள் அவ்விடத்தை விட்டு நல்லூரிற் கந்தசுவாமி கோயிலிருந்த இடத்திலே வந்து குடியிருந்தார்கள்.

சோனகர் அதிலே குடியிருந்தாற் கந்தசுவாமி கோவில் கட்ட வருங்காலத்திற் தடையாயிருக்குமென்று நினைத்துத் தமிழர் கூடி அவர்களை அவ்விடத்தை விட்டுப் புறப்படுத்தத் தெண்டித்துப் பார்த்துங் கூடாமற் போயிற்று. ‘அந்த நிலங்களுக்கு அதிக விலை தருவோம். எங்களுக்கு விற்று விடுங்கள்,’ என்றுங் கேட்டுப்பார்த்தார்கள். சோனகர் அதற்குச் சம்மதிக்கவில்லை. யாதொரு இணக்கத்துக்குஞ் சோனகர் சம்மதியாதே போனதனால், அந்தத் தமிழர் பன்றியிறைச்சியைக் கொண்டு போய் அவர்கள் தண்ணீர் குடிக்கும் கிணறுகளிற் போடுவித்தார்கள்.

பன்றியிறைச்சியைக் கண்டவுடனே சோனகர் அழுது புலம்பிப் பசி பட்டினியாய்க் கிடந்து, ஆற்றாமல், ஈற்றிலே தமிழருடனே தங்கள் பெருநாட்களிலே தாங்கள் வந்து தங்கள் சமய வழிபாடு செய்யத் தடைபண்ணாதிருப்பதற்கு ஓர் உடன்படிக்கை எழுதுவித்துக்கொண்டு, கிடைத்த விலையையும் வாங்கிக் கொண்டு போய், நாவாந்துறைக்கு கிழக்குப் பக்கமாகக் குடியேறினார்கள்.”

இருநூற்று எழுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையே ஈழத்து முஸ்லிம்களை மதமாற்றம் பெற்ற தமிழர்களாக விளிக்கும் பொழுது என்ன அடிப்படையில் இஸ்லாமிய தமிழர்களை அரபுவம்சாவழிகளாக இன்றைய முஸ்லிம் தலைமைகள் கூற முடியும்? இதனைப் புரிந்து கொள்வதற்கு போர்த்துக்கேயரின் காலத்தில் அப்பொழுது தமிழ் வன்னிமைச் சிற்றரசில் ஒன்றாக விளங்கிய தற்போதைய மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற குடியேற்றம் ஒன்றையும், பின்னர் ஒல்லாந்தர் காலத்தில் இந்தோனேசியாவிலிருந்து தென்னிலங்கையில் நடைபெற்ற ஜாவானிய (இஸ்லாமிய சாவகர்) கூலிப்படையின் வருகையையும், அவர்களுக்குப் பின்னர் ஆங்கிலேயர்களின் காலத்தில் ஆப்கானிஸ்தான், அரபுதேசம், பாரசீகம் (ஈரான்) போன்ற நாடுகளிலிருந்து கண்டியில் குடியேறிய ஹம்பேயர்கள் எனும் முஸ்லிம்களின் வருகையையும் நாம் ஆராய்வது அவசியமானது.

தென்னிலங்கையிலும், மலையகத்திலும் செறிந்து வாழும் இந்த சாவக-ஹம்பேய முஸ்லிம்களின் வழித்தோன்றல்களே இன்று இலங்கையின் முஸ்லிம் தலைமைகளாக விளங்குகின்றனர். தமிழ் மொழியைப் பேசினாலும் தம்மை அராபிய வம்சாவழிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்களே ஈழத்தின் இஸ்லாமிய தமிழர்களுக்கும், ஏனைய தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையில் நயவஞ்சக அரசியல் புரிபவர்களாக விளங்குகின்றனர்.

ஈழத்தீவில் வசிக்கும் முஸ்லிம்களைத் தேசிய இனமாக சித்தரித்து இஸ்லாமிய ஈழத்தமிழர்களின் தமிழ்த் தேசிய அடையாளத்தை மறுதலிப்பவர்களும் இவர்களே. இந்த சாவக-ஹம்பேயர்களால் பலிக்கடாவாக்கப்படும் இஸ்லாமிய தமிழர்களின் குறியீடாகவே சவூதியில் தலைதுண்டிக்கப்பட்ட ரிசானா என்ற ஈழத்தமிழ் முஸ்லிம் பெண் திகழ்கின்றார்.

 

ww.sankathi24.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.