Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்குள் முரண்பாடுகளை வளர்க்க இரணைமடுக் குளத்தை அரசியலாக்கும் சிறீலங்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குள் முரண்பாடுகளை வளர்க்க இரணைமடுக் குளத்தை அரசியலாக்கும் சிறீலங்கா!

பிப் 15, 2013
 
தமிழ் மக்களை தங்களுக்குள் முட்டிமோத வைத்து அவர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இன்று சிங்கள தேசம் முயற்சியெடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் தங்களுக்குள் முட்டி மோதினால் அவர்கள் சுதந்திரத்தைப் பற்றியோ, தன்னாட்சி அதிகாரம் பற்றியோ சுயநிர்ணய உரிமை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள்.
 
அப்போது ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற தனது கொள்கையை முன்னெடுத்து தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருக்கலாம் என்று சிங்களம் நம்புகின்றது. இதற்காக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த சிங்களம் முற்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே கிளிநொச்சி இரணைமடு தண்ணீர்ப் பிரச்சினையை சிங்கள தேசம் பெரும் அரசியலாக்கியுள்ளது.
 
இரணைமடுக் குளத்தின் நீரைப் பயன்படுத்தி வன்னி மக்களையும் யாழ். குடாநாட்டு மக்களையும் முரண்பட்டு பிளவடையச் செய்வதன் மூலம் அவர்களின் இலட்சிய வேட்கையை இல்லாதொழிக்க முடியுமெனவும் சிங்களம் கனவு காண்கிறது. தமிழீழத்திலுள்ள மிகப் பெரிய நீர்த்தேக்கம் இரணைமடு நீர்த்தேக்கம். வன்னி மக்களின் வாழ்வாதாரத்துடனும் பொருளாதாரத்துடனும் பின்னிப்பிணைந்தது இந்த இரணைமடுக் குளம். அதேபோன்று தமிழீழப் போராட்ட வரலாற்றின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றியதும் இந்த நீர்த்தேக்கம்தான்.
 
சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல தடவைகள் விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தாக்குப்பிடித்து நிற்பதற்கு இந்த நீர்த்தேக்கமே காரணமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்திற்கு எதிராகவும் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராகவும் பல வருடங்களாகத் தாக்குப்பிடித்து நின்று சமராடி பெரு வெற்றிகளை ஈட்டுவதற்கும் இந்த இரணைமடுக்குளமே காரணமாக அமைந்தது. அதாவது இரணைமடு நீரைப் பயன்படுத்தி வன்னியில் மேற்கொள்ளப்பட்ட விவசாயச் செய்கைகளே மேற்படி வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக அமைந்தன. எத்தகைய பொருளாதாரத் தடைகள் விதித்த போதிலும் வன்னியில் என்றுமே அரிசிக்குப் பஞ்சம் இருக்கவில்லை. மரக்கறிகளுக்கும் தட்டுப்பாடு இருக்கவில்லை. இவற்றை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்வதற்கு வன்னி மக்களுக்கு உதவி செய்தது இந்த இரணைமடுக் குளம்தான்.
 
யாழ். குடாநாட்டில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரல் என்ற பெயரில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்களுக்கிடையே தமிழகத்தையும் கர்நாடகாவையும் போன்ற நிரந்தர முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் இந்த திட்டத்தைச் செயற்படுத்துவது என்ற பெயரில் கோடிக்கணக்கான நிதியைச் சுருட்டுவதற்கும் சிங்கள அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
 
இந்த நிலையில், இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக தங்களிடம் எந்தவொரு கருத்தும் பெறப்படவில்லையென்றும் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தினால் வன்னி மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்குவார்கள் என்றும் கிளிநொச்சி விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.
 
கிளிநொச்சியிலுள்ள இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கு உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் பல மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளன. இதற்கான ஆரம்ப கட்ட வேலையாக இரணைமடுவிலிருந்து கொண்டுவரப்படும் நீரை யாழ்ப்பாணத்தில் எங்கெங்கு வைத்து தாங்கிகளில் சேமித்து பொதுமக்களுக்கு விநியோகிப்பது என்று இடங்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கான ஆரம்ப வேலைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று கடந்த ஆறாம் திகதி (06.02.2013) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
 
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உயரதிகாரிகள், ஜனாதிபதி செயலணிக் குழுவின் அதிகாரிகள், வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் ஆகிய உயரதிகாரிகளும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 21 கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
இந்தக் கலந்துரையாடலின் போது இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பை வெளியிட்டுயிட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள், உயரதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகிப்பதற்கு நாம் தடையாக இருக்கவில்லை. அந்த மக்களுக்கு நீர் தேவை என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர்களுக்கு குடிதண்ணீர் அத்தியாவசியமானதுதான். அதற்காக இரணைமடுத் தண்ணீரைத்தான் அங்கு கொண்டு செல்ல வேண்டுமென்றில்லை. மாற்றுத் திட்டங்கள் தொடர்பாக ஆராயலாம் என்றும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 
கிளிநொச்சியில் சிறுபோகம் பெரும்போகம் என்று இரண்டு தடவைகள் விவசாய நடவடிக்கை இடம்பெறுகின்றது. பெரும்போகத்தின் போது ஒரு விவசாயி எத்தனை ஏக்கர் வயல்களிலும் விவசாயம் செய்ய அனுமதிக்கப்படுகின்ற போதிலும் சிறுபோகத்தில் இரணைமடுக் குளத்தில் தண்ணீர் போதாமையால் விவசாயச் செய்கையின் அளவு மட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு விவசாயி ஓரிரு ஏக்கர் பரப்பளவிலேயே விவசாயம் செய்வதற்கு விவசாயத் திணைக்கள அதிகாரிகளால் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இரணைமடுவிலுள்ள தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றால் தாங்கள் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுமென்றும் கிளிநொச்சி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரியில் வசிக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிதண்ணீரில்லாமல் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளார்கள் என்றும் யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுத் தண்ணீரைக் கொண்டு செல்ல முற்படுகின்ற அதிகாரிகள் பூநகரி மக்களை ஏன் கவனத்தில் எடுக்கவில்லையென்றும் கிளிநொச்சி விவசாயிகள் கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.
 
இரணைமடுக் குளத்தின் நீர்க் கொள்ளளவு 37 கன அடிகளாகும். ஆனால், தற்போது இந்தக் குளத்திற்கு மிக அருகாமையாக குளத்தின் அடிவாரத்துடன் இணைந்ததாக சிறிலங்காப் படையினரின் பாரிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 33 அடிகளாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வது சாத்தியப்பாடற்றது. ஏற்கனவே உள்ளது போன்று இராணுவ முகாமை அகற்றி தண்ணீரின் அளவை 37 கன அடிகளாக சேமித்தால் யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையென்றும் கிளிநொச்சி விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.
 
மேற்படி சந்திப்பின் போது ஜனாதிபதி செயலணியிலிருந்து வந்த அதிகாரிகள் விவசாயிகளுடன் கடுமையாக முரண்பட்டுள்ளனர். தேசிய சொத்துக்களை தாங்கள் எப்படியும் பயன்படுத்த முடியும் என்று கூறிய மேற்படி அதிகாரிகள் தேசிய சொத்தான மின்சாரத்தை கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு விநியோகிப்பதைப் போல இரணைமடுத் தண்ணீரும் தேசிய சொத்து என்றும் அதனை தாங்கள் எங்கேயும் கொண்டு செல்வோம் என்றும் கூறியிருக்கின்றனர். இதன்போது, ‘நாங்கள் கடந்த 28 வருடங்களாக மின்சாரம் இல்லாமல் தான் வாழ்ந்தோம். நீங்கள் விரும்பினால் மின்சாரத்தை நிறுத்துங்கள். ஆனால் இரணைமடு தண்ணீரைக் கொண்டு செல்லாதீர்கள்’ என்று கிளிநொச்சி விவசாயிகள் பதிலளித்திருக்கின்றனர்.
 
இதேவேளை இரணைமடுத் தண்ணீர் விவகாரத்தின் மூலம் கிளிநொச்சி மக்களுக்கும் யாழ்ப்பாண மக்களுக்குமிடையே பிரதேசவாத வேறுபாட்டை ஏற்படுத்துவதற்கு  சிறிலங்கா அரசாங்கமும் அரசுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோத சக்தியாகிய ஈ.பி.டி.பி யும் சில திட்டங்களை தீட்டியுள்ளதாகவும் அதற்கேற்ப சில குழப்பவாதிகள் வன்னிக்குள் இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் இரகசியமான தகவல்கள் தெரியவருகின்றன.
 
எனவே, இரணைமடு தண்ணீர் விடயத்தில் வன்னி மக்களும் யாழ்ப்பாண மக்களும் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். தெளிவான புரிந்துணர்வுடன் இதனை அணுகுவதன் மூலமே முரண்பாடுகளின்றி வாழ முடியும். பிரதேச வேறுபாடுகள் தொற்றிக்கொண்டால் எமது இலட்சியப் பயணம் தடைப்பட்டுவிடும். ஏற்கனவே, பச்சைத் துரோகி கருணா மட்டக்களப்பு மக்களுக்கும் ஏனைய தமிழ்  மக்களுக்குமிடையே பிரதேசவாதத்தை ஏற்படுத்த முயன்று படுதோல்வியடைந்து இன்று பல்லுடைந்த நாகம் போல, தேடுவாரற்ற நாய் போல சிங்களத்திற்கு காவல் காக்கின்றான். மகிந்தவுக்கு வாலாட்டிக் கொண்டிருக்கின்றான். கருணாவின் பிரதேசவாதம் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அவர்கள் இன்றும் ஒற்றுமையுடனேயே இருக்கின்றனர். தமிழீழ இலட்சியத்தை அடைவதில் அன்றைய உறுதிப்பாட்டைப் போல இன்றும் அந்த மக்கள் அர்ப்பணிப்புடனேயே செயற்படுகின்றனர்.
 
இந்த இக்கட்டான சூழலில் எங்களை யாரும் குழப்பிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள மக்களின் பெருமளவான உறவினர்கள் இன்று புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்றனர். எனவே, புலம்பெயர் மக்கள் தாயகத்திலுள்ள தமது உறவினர்களுக்கு இந்த விடயம் தொடர்பாக தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். யாழ் மாவட்டம் தொடர்ந்து வரட்சியான மாவட்டமாக மாறி வருவது உண்மைதான். இது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்வது அவசியம்தான். ஆனால், இந்த மக்களுக்கு குடிநீர் வழங்குகின்றோம் என்ற போர்வையில் மக்களைக் குழப்பி பிரதேச வாதத்தைக் கிழப்புவதற்கும் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டுவதற்கும் எந்தவொரு மக்களும் அனுமதி வழங்கக்கூடாது.
 
அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்ற இவ்வாறான விடயங்களில் புலம்பெயர் தமிழ் மக்களும் அவதானமாக இருக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் அபிவிருத்திக்கென ஒதுக்கப்படுகின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்குமாறும் மக்களுக்கிடையே முரண்பாடுகளற்ற வகையில் அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறும் நிதி ஒதுக்குகின்ற சர்வதேச அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.
 
புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற நீங்கள் தனித்தனியே இயங்காமல் ஒரு அமைப்பு சார்ந்து இயங்குவதன் மூலம் சர்வதேச அமைப்புகளிடம் நீங்கள் விடுக்கின்ற கோரிக்கைகள் வலுவானதாக அமையும். இது தொடர்பாக நீங்கள் சிந்திக்க வேண்டும்.
 
- தாயகத்தில் இருந்து வீரமணி 
 
நன்றி: ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.