Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் என்ன செய்யப் போகிறது இந்தியா?

Featured Replies

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பங்கரில் பிடித்து வைக்கப்பட்டுப் பின் கொல்லப்பட்டது தொடர்பாகச் சமீபத்தில் "சனல் 4' வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அனைத்துத் தரப்பினரும் இதைக் கண்டித்துள்ளனர். ஹிட்லரின் நாசி அழித்தொழிப்புகளுடன் இதை ஒப்பிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்கிற சட்ட மன்றத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்."சனல் 4' வெளியிட்டுள்ள இப்படங்கள் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பதைக் கருணாநிதி கண்டித்துள்ளார்.

 

 

இந்தியாவின் முக்கிய நாளிதழான"இந்து' வில் என்.ராம் ஆசிரியராக இருந்தவரை ராஜபக்ஷக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பிற நடுநிலைச் செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலை, இப்போது சித்தார்த் வரதராஜனின் ஆசிரியத்துவத்தில் பெரிய அளவு மாறியுள்ளது. "சனல் 4' இன் படங்களை "இந்து' நாளிதழே முதலில் வெளியிட்டதோடு, இது தொடர்பாக வெளிவரவுள்ள ஆவணப்படத்தின் இயக்குனர் கலூம் மெக்ரேயின் "ஒரு சிறுவனின் கொலை எனும் விரிவான கட்டுரையையும் வெளியிட்டது. உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்கிற தலைப்பில் இந்திய அரசை நோக்கி மௌனம் காக்க வேண்டாம் என வலியுறுத்தி அது எழுதியுள்ள தலையங்கம் பெப்ரவரி 22 வெளிவந்தது.


எனினும் பாலச்சந்திரனின் கொலைக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என்கிற அளவிலேயே அதன் கருத்து அமைந்துள்ளது.

"சனல் 4' தற்போது வெளியிட்டுள்ள படம் இதுவரை வெளிவந்துள்ள இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.

 

விடுதலைப் புலித் தலைவர்களும் பிறரும் ஒன்று போரினூடாகக் களத்தில் கொல்லப்பட்டார்கள் அல்லது போரின் பக்க அழிவுகளாக இடையில் சிக்கி அழிந்து போனார்கள் என்றே இதுவரை இலங்கை அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள படங்கள் பங்கரில் பிடித்து வைக்கப்பட்டுப் பின் கைக்கெட்டும் தூரத்தில் நின்று அச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதைக் காட்டுகின்றன. ஆக இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

 

வெள்ளைக் கொடிகளுடன் வந்து சரணடைந்த விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் மற்றும் குடும்பத்தார்கள் எல்லோருமே இப்படித்தான் கொல்லப்பட்டிருப்பார்கள் என ஊகிக்க இடமுண்டு.

 

"திட்டமிட்ட படுகொலை' என்கிறபோது சிறுவன் பாலச்சந்திரன் மற்றும் அவனது ஐந்து மெய்க்காப்பாளர்களைக் கொன்ற இக் குற்றத்தின் பொறுப்பு, அவர்கள் முன் நின்று துப்பாக்கி விசையை அழுத்தியவர்களோடு முடிந்து விடுவதில்லை. மேலிருந்து இடப்பட்ட ஆணையின் விளைவாகவே அது மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனவே, இக்கொலைகளில் ஆணைப் பொறுப்பு வந்துவிடுகிறது. இதன்மூலம் அவர்கள் போர்க்குற்றங்களுக்கான குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்குத் தகுதியுடையவர்களாகின்றனர்.


யுகோஸ்லாவியாவின் ஸ்லோபோன் மிலோசெவிச் போல இவர்கள் நேரடியான சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்படுவதில் சில சட்டச் சிக்கல்கள் இருக்கலாம். பன்னாட்டு நீதிமன்றத்தில்  ஒருவர் விசாரிக்கப்பட வேண்டுமானால் ஒன்று அவரது நாடு அதில் அங்கத்துவம் பெற்றிருக்க  வேண்டும். அல்லது அவர் செய்த குற்றம் அத்தகைய நாடொன்றில் நடைபெற்றிருக்க வேண்டும். இலங்கை சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு உறுப்பு நாடல்ல.  எனினும் "ஐ.நா' பாதுகாப்பு அவையில் இதற்கொரு தீர்மானம் இயற்றி  சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தலாம். அதற்கு சீனா, ரஷ்யா முதலிய நாடுகள் உடன்படாது. எனவே மிலோசெவிக்கின் மீது எடுக்கப்பட்டது போன்ற நடவடிக்கை இதில் சாத்தியமா என்பது ஐயமே.

 

 

இந்த நிலையில், மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் உயர் தூதுவர் நவநீதம்பிள்ளை இரு வாரங்களுக்கு முன் ஐ.நா. மனித உரிமைக் குழுவிடம் இலங்கை நிலை குறித்து அளித்துள்ள 18 பக்க அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக் குழு மற்றும் காணாமல் அடிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரிக்க தனி ஆணையம் முதலியவற்றை அதில் அவர் பரிந்துரைத்துள்ளார். சென்ற ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கை அரசே ஒரு விசாரணையை நடத்த வேண்டுமெனவும் அதற்கு வெளியிலிருந்து வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட வேண்டும் என்பது போலவும் வாசகங்கள் இருந்ததில் வெளிநாட்டு வழிகாட்டுதல் அல்லது கண்காணிப்பு குறித்த வாசகங்களை நீக்கி அத் தீர்மானத்தை இந்தியா  நீர்க்கச் செய்தது. ஆக இலங்கை அரசே ஒரு குழுவை அமைத்துத் தன்னிச்சையாக விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பதாகத் தீர்மானம் இறுதி வடிவம் எடுத்தது.


இலங்கை அரசு என்ன செய்தது என்பது நமக்குத் தெரியும். மேஜர் ஜெனெரல் கிரிசாந்த டி சில்வா என்பவரது தலைமையில் ஆறு இராணுவ அதிகாரிகள் கொண்ட குழு போர்க் குற்றங்கள் தொடர்பாக"விசாரணை'யை நடத்திச் சென்ற வாரம் ஜெனெரல் ஜெயசூர்யாவிடம் அறிக்கை அளித்தது. அதன்படி எந்தப் போர்க் குற்றத்தையும் இலங்கை இராணுவம் செய்யவில்லை. எல்லாவற்றையும் விடுதலைப் புலிகளே செய்தனர்.

 

இப்படிக் குற்றவாளிகள் தம்மைத் தாமே விசாரித்துக் குற்றம் செய்யவில்லை என அறிவித்துக் கொள்ளும் கூத்து இன்னொரு முறை அரங்கேறக் கூடாது. எது உச்சபட்சமாகச் சாத்தியம், அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என யோசிக்கும்போது, முதற்கட்டமாக  நவநீதம்பிள்ளையின் பரிந்துரையின்படி  சுயேச்சையாக இயங்கும் ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைப்பது குறித்துத் தீர்மானம் இயற்றுவதே சரியாக இருக்கும். அப்படியின்றி இலங்கை அரசுக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் அளித்து ஒரு தீர்மானத்தை இயற்றி விஷயத்தை முடித்துவிடும் ஆபத்தை அனுமதிக்கலாகாது.

இந்தியா இதில் எந்த அளவிற்கு ஒத்துழைக்கும்?

 

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. வணிக மற்றும் போர் முக்கியத்துவம் வாய்ந்த இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் விரிவாக்கத்திற்கு எதிராக அமெரிக்காவின் போர்த்தந்திரப் பங்காளியாக  இருப்பது இந்தியா. இந்தியாவின் ஒப்புதலின்றி அமெரிக்கா அதன் தீர்மான வாசகங்களை வடிவமைக்காது. இன்றைய இந்தியா நேரு காலத்திய இந்தியா அல்ல. வெளியுறவுக் கொள்கையில் அறம், நடுநிலை, அணி சேராமை  என்பதெல்லாம் இப்போது கிடையாது.  அத்வானி துணைப் பிரதமராக இருந்தபோது இதை வெளிப்படையாகவே, பிரச்சசினையை அது இதுவரை அணுகி வந்துள்ளது. இனியும் அணுகும்.ஈழப்பிரச்சினையில் நேரடியாக இராணுவத் தலையீடுகளைச் செய்தபோதும், இலங்கை அரசுக்கும் இராணுவத்திற்கும் எதிராகப் போராளிக் குழுக்களை வளர்த்த போதும், இறுதிப் போரில் புலிகளை அழிப்பதில் உதவிகள் செய்த போதும் இந்தியா ஓரம்சத்தில் உறுதியாக இருந்தது.

 

 

அதை வெளிப்படையாகச் சொல்லியும் வந்தது. எக்காரணம் கொண்டும் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக இந்தியா இருக்காது என்பதுதான் அது. அதாவது தனி ஈழம் என்பதை நோக்கி அது எந்த அசைவையும் அனுமதிக்காது என்பதுதான். ஏனெனில், அப்படி ஏதும் நிகழ்ந்தால் அதையடுத்து தன்னுடைய இறையாண்மையைப்  பாதிக்கும் என அதற்குத் தெரியும். இலங்கையை நோக்கித் தன் இராணுவ வலிவைக் காட்டிச் சற்றே அச்சுறுத்துவது அல்லது முழுமையாக அதற்கு உதவுவது என்பதெல்லாம் இந்து மகா சமுத்திரப் பகுதியில் தனது நீண்ட கடற்கரையின் ஊடான பாதுகாப்பை உறுதி செய்வது, இலங்கையை முழுமையாகச் சீனாவின் பிடிக்குள் விட்டுவிடாமல், தனது பொருளாதார நலன்களை விட்டுக் கொடுக்காமல் தன் கட்டுக்குள் வைப்பது என்கிற அடிப்படைகளிலேயே அமைந்து வந்துள்ளது.

இன்று இலங்கையில் மலேசியாவிற்கு அடுத்தபடியாக அதிக முதலீட்டைச் செய்துள்ள நாடு இந்தியா. 1998ல் கையெழுத்திடப்பட்டு, 2000த்தில் நடைமுறைக்கு வந்த"இந்திய இலங்கை சுதந்திர வணிக ஒப்பந்தம் இந்திய வர்த்தகர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இன்று இந்தியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் சின்னஞ் சிறிய இலங்கை ஐந்தாவதாக உள்ளது.

 

 

அம்பாந்தோட்டையில் துறைமுகம், நுரைச்சோலையில் 900 மெ.வாட் அனல் மின் நிலையம், கொழும்பு  கட்டுநாயக்கா விரைவுப் பாதை, பலாலி  காங்கேசந்துறை ரயில் பாதை, 1000 ஏக்கர் விவசாயப் பண்ணை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க ஒப்பந்தம், யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர்களுக்கு வீடுகட்டும் திட்டம், மன்னாரில் எண்ணெய் தோண்டும் பணி முதலியனவற்றின் ஊடாக இன்று சீனா இலங்கையில் காலூன்றியுள்ளது. சீனச் சிறைக் கைதிகள் சும்மார் 20,000 பேர் இலங்கையில் இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதற்கு ஈடாக இந்தியாவும் மன்னாரில் ஒரு பகுதியில் எண்ணை தோண்டுகிறது. சம்பூரில் 500 மெ.வாட் அனல் மின் நிலையம் அமைக்கிறது. பலாலி விமான நிலையம், தலைமன்னார்  மடு மற்றும் காலி மாத்தறை ஆகிய இரயில் பாதைகள் அமைப்பு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. கண்டி, யாழ்ப்பாணம், அம்பந்தோட்டை ஆகியவற்றில் மேலும் மூன்று தூதரகங்களை அமைத்து இலங்கையுடனான இராஜதந்திர உறவை நெருக்கமாக்கியுள்ளது.     

 

இந்தியாவின் அணுகல்முறை எப்படி அமையும் என்பதை இத்தகைய பின்னணிகளிலிருந்தே  நாம் அனுமானிக்க வேண்டும்.  கீழ்க்கண்ட அம்சங்கள் அதில் முக்கிய பங்கு வகிக்கும்.

 

1.    இந்துமகா சமுத்திரத்தில் சீன விரிவாக்கத்திற்கு ஈடாகத் தன் செல்வாக்கையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்துதல்,
2.    இலங்கையில் தன் வர்த்தக நலனைப் பாதுகாத்தல்,
3.    இலங்கையின் இறையாண்மையைக் காத்தல்,
4.    தமிழகத்தின் எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் சமாளித்தல்.

 

இவற்றோடு மனித உரிமை மீறல்களில் இலங்கை போன்ற ஒரு நாட்டைத் தட்டிக் கேட்கும் அறத் தகுதி இந்தியாவிற்குக் கிடையாது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் கூட அது கிடையாதுதான்.

 

பாலச்சந்திரனின் படுகொலைப் படங்கள் வெளிவந்த அன்றேதான் இன்னொரு செய்தியும் வெளிவந்தது. சென்ற ஆண்டு முழுவதும் பிரிட்டன் இலங்கைக்கு சிறு ஆயுதங்களை விற்றுக் கொண்டிருந்தது என்பதுதான் அது. இரு வாரங்களுக்கு முன் நான் இலங்கையில் இருந்தபோது இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, இலங்கையில் எல்லாம் சரியாக நடந்து கொண்டுள்ளது என்றும் அமைதி திரும்பிக்கொண்டுள்ளது என்றும் பேசிய செய்தி இதழ்களில் வந்திருந்தது.

 

அமெரிக்காவும் பிரிட்டனும், ஈராக்கிலும் ஆப்கனிலும் செய்தவற்றை மனதிற்கொண்டு இலங்கைப் பிரச்சினையில் அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் சந்தேகிக்க வேண்டும் என்றோ, நிராகரிக்க வேண்டும் என்றோ நான் சொல்ல வரவில்லை. இன்றைய சூழலில் நாம் அவற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அமெரிக்காவாகட்டும் இந்தியாவாகட்டும் அவற்றின் எல்லை என்ன, அவை எதுவரை செல்லும் என்கிற கணிப்பு நமக்குத் தேவை.


மார்ச் 15 அன்று ஜெனீவாவில் இயற்றப்பட உள்ள தீர்மானம் இன்னொரு ஆண்டு கால அவகாசத்தை இலங்கைக்கு அளிப்பதோடு நின்றுவிடாமல், பாலச்சந்திரனின் படுகொலை குறித்துப் புதிய தகவல்களின் பின்னணியில் ஒரு சுயேச்சையான பன்னாட்டு விசாரணை என்கிற அளவிற்கேனும் செல்ல வேண்டுமானால் அதில் இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது முக்கியம். இந்தியா எடுக்கப் போகிற நிலை  நான் மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்களில் முதல் மூன்று அம்சங்களை ஈடு கொடுக்கும் அளவிற்கு தமிழகத்தின் உணர்வு என்கிற நான்காவது அம்சம் எந்த அளவு வலுவாக அமையப் போகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

 

தமிழகத்தில் மேலெழும் இவ் உணர்வு ஏதோ தமிழ் உணர்வாளர்களின் குரல் என்பதாக அல்லாமல் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்ததாக அமையும்போதே இந்திய அரசு அதைக் கண்டு அஞ்சும் நிலை ஏற்படும்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=2963:2013-02-24-18-03-51&catid=293:article&Itemid=542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.