Jump to content

இரத்ததானம்: பொது நலமும் சுய நலமும்


Recommended Posts

பதியப்பட்டது

இரத்ததானம்: பொது நலமும் சுய நலமும்


 

80களில் (அப்பொழுது மட்டுமல்ல இன்றுவரை) குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரியளவிலும் தெற்கில் ஒரளவிலும் இரத்தம் மிகவும் தட்டுப்பாடாக இருந்த காலங்கள் அவை. ஏனெனில் அந்தளவிற்கு நாள்தோரும் செல் அடிகளும் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கி சுடுகளும் பொம்பர் அடிகளும் நடைபெற்ற நேரங்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு இரத்தம் தேவைப்பட்டது. ஆகவே தமது உறவினர் யாருக்காவது இரத்தம் தேவை எனின் பிற உறவினர்கள் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக இருந்தது. அப்பொழுதுதான் குறிப்பிட்ட உறவினருக்கு இரத்தம் வழங்கி அவரைப் பாதுகாப்பார்கள். இல்லாவிட்டாலும் பாதுகாப்பார்கள். ஆனால் இரத்ததானம் வழங்குவதை ஊக்குவிப்பதற்கு அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.


 

1986ம் ஆண்டு ஆரம்பத்தில் ஒரு நாள் அப்பா மிகவும் பாதிப்புக்குள்ளாகி யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டது. இதனால் அப்பாவுக்கு இரத்தம் வழங்கி அவரைக் காப்பாற்ற நாம் யாராவாது இரத்தம் வழங்கவேண்டி இருந்தது. எனது நாவற்குழி நண்பர்களுடன் இதனைப் பகிர்ந்தபோது நண்பர் ஆனந்தன் (நன்றி) அவர்கள் இரத்தம் தருவதற்கு முன்வந்தார். என்னையும் இரத்ததானம் செய்ய ஊக்கிவித்தார். எனக்கு இது முதல் அனுபவமாக இருந்தபோதும் அப்பாவிற்காக உடன்பட்டேன். இரத்ததானம் வழங்கிய பின் மிகவும் திருப்பதியாக இருந்தது. அப்பாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.blood2.jpg?w=214&h=200


 

மேலே குறிப்பிட்டபடி அப்பொழுதெல்லாம் அடிக்கடி பத்திரிகைகளில் இரத்தம் தேவை என யாழ். ஆஸ்பத்திரி இரத்த வங்கியிலிருந்து விளம்பரம் செய்வார்கள். அன்று இரத்ததானம் பற்றி மனிதர்களிடம் இருந்த குறைவான விழிப்பு நிலையும் தவறான அபிப்பிராயங்களும் நம்பிக்கைகளும் இரத்ததானம் செய்வதில் பல தயக்கங்களையும் தடைகளையும் ஏற்படுத்தியிருந்தது. நான் ஏற்கனவே இரத்தம் வழங்கிய அனுபவத்தால் இந்த விளம்பரங்களைப் பார்த்துவிட்டு யாழ்.இரத்த வங்கிக்கு இரத்ததானம் செய்ய பல தடவைகள் சென்றேன்.


 

இரத்த வங்கியில் பொறுப்பாக இருந்த வைத்தியர் மிகவும் நல்ல மனிதர். அவரது பெயர் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அவருக்கு கீழே வைத்தியர் இல்லாத இன்னுமொருவர் பொறுப்பாக இருந்தார். அவர் பெயர் வடிவேலு. இவர் எதிர்காலத்தில் என் நல்ல நண்பராக வரவிருந்த, இன்று கனடாவில் வசிக்கின்ற பார்த்தீபனின் தந்தை. இவர் எனது இரத்ததானம் வழங்கிய வரலாற்றை கேட்டறிந்தார். ஏற்கனவே மூன்று மாதத்திற்கு முதல் இரத்ததானம் வழங்கியதால் மீண்டும் இரத்ததானம் வழங்க தகுதியாக இருந்தேன். ஆம். ஆரோக்கியமான ஒவ்வொரு மனிதர்களும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்ததானம் வழங்கலாம். அன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் மற்றும் தவறாது எனது பிறந்த நாள் அன்றும் இரத்ததானம் வழங்குவதை ஒரு பழக்கமாக கொண்டிருந்தேன். இது எனது உடலுக்கு புதிய இரத்தத்தையும் உருவாக்கிக் கொண்டிருந்தது. அன்றைய சூழ்நிலையில் ஏற்பட்ட அனுபவத்தால் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட விரும்பாது இருந்த எனக்கு இப்படியாவது பங்களிக்க சந்தர்ப்பம் கிடைத்தது திருப்தியாக இருந்தது.


 

blood3.jpg?w=284&h=200இரத்த வங்கிக்கு மேலும் மேலும் இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் நான் ஆகக் குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆகவே எனது தங்கையை ஒரு நாள் கூட்டிச் சென்றேன். இரத்த வங்கியில் அவரது நிறையை அளந்து விட்டு இப்போதைக்கு இந்தப் பக்கம் வரவேண்டாம் எனக் கூறித் திருப்பி அனுப்பி விட்டார்கள். ஆம். இரத்தம் வழங்குவதற்கு ஆரோக்கியமான உடல் என்பது ஆகக் குறைந்தது 60 கிலோ அல்லது 120 இறாத்தல் நிறையுடையவர்களாக இருக்கவேண்டும். ஆனால் நமது வறுமையின் காரணமாக தங்கையின் நிறையோ 40ற்கும் குறைவாக இருந்தது. ஆகவே இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்க என்ன செய்யலாம் என அவர்களுடன் கலந்தாலோசித்தேன். பாடசாலைகளில் ஒழுங்கு படுத்தலாம் என்றார்கள். அப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு முதல் நடைபெறுகின்ற ஆங்கில வகுப்புகளுக்கு சென்று கொண்டிருந்த காலம்.  ஆங்கில வகுப்பு ஆசிரியர்களுடன் கதைத்து இந்த வகுப்புகளிலிருந்து இரத்த வங்கிக்கு இரத்ததானம் வழங்க ஒழுங்கு செய்தேன். பல நண்பர்கள் இரத்ததானம் வழங்கினார்கள். அன்று கொழும்பிலிருந்து இங்கு கல்வி கற்க வந்த நண்பி ஒருவரும் ஆர்வமாக இரத்தம் வழங்க முன்வந்தார். ஆனால் அவர் மற்றவர்கள் வழங்கிய இரத்தத்தைக் கண்டு  மயங்கி விழுந்து விட்டார். இப்படியும் சிலருக்கு நடப்பது உண்டு. ஆனால் இரத்தானம் வழங்க இது ஒரு தடையல்ல.


 

அன்றயை சூழலில் இப்படி பல வழிகளிலும் பலர் இரத்த வங்கிக்கு இரத்தம் கிடைப்பதற்கு முயற்சி செய்தனர். நானும் தனிப்பட 10 தடவைகளுக்கு மேல் குறுகிய காலத்தில் இரத்ததானம் வழங்கியிருந்தேன். இவ்வாறு வழங்கியதற்கான ஒரு சிறிய புத்தகமும் சான்றாக தருவார்கள். இவ்வாறன ஒரு நாளில் இரத்த வங்கிக்கு சென்றபோது வடிவேலு அவர்கள் என்னிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். நீங்கள் தனிப்பட இவ்வாறு இரத்தம் வழங்குவது நல்லது. பலருக்கு பயன்படுகின்றது. இதேபோல் நீங்கள் இன்னுமொரு வழியிலும் இரத்ததானம் வழங்குவதை ஊக்குவிக்கலாம் என்றார். அதாவது என்னைப் பற்றிய ஒரு செய்தியைப் பத்திரிகையில் வெளியீட்டால் நம்பிக்கையில்லாத மனிதர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்கும் என்றார். எனக்கு என்னை நானே விளம்பரம் செய்வதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. ஆகவே நான் விரும்பவில்லை எனக் கூறினேன். அப்பொழுது அவர் பொது நலத்திலும் ஒரு சுயநலம் என்றார். அப்படி கூறிய பின்பும் நான் உடன்படாது வந்து விட்டேன். ஆனாலும் அவர் கூறியது என் மனதை ஏதோ செய்து கொண்டிருந்தது. எனது சுய நலத்தையும் பொது நலமாக மாற்ற முயற்சி செய்தேன்.blood4.jpg?w=220&h=200


 

இரத்தத்தில் பல வகை உண்டு. ஓ(O) ஏ(A) பீ(B) ஏபீ(AB). இதில் ஓ(O) வகை உடையவர்கள் அனைவருக்கும் வழங்கலாம். ஆனால் அதே வகையைத் சேர்தவர்களிடம் மட்டும் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஏபீ(AB) வகையைச் சேர்ந்தவர்கள் அனைவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அவருக்கு மற்றுமே வழங்கலாம். மற்றவர்களுக்கு வழங்க முடியாது. எனது ஓ(O)  நேர்மறை வகையைச் சேர்ந்தது. ஓ(O)  எதிர் மறைதான் அனைவருக்கும் பயன்படுத்தக்கூடிய மிகத் திறன் வாய்ந்தது. ஆனால் ஓ(O) மறை வகையைச் சேரந்தவர்களுக்கு அதே வகையைக் கண்டுபிடிப்பது மிகவும் கஸ்டமானது. இது எனது பொது அறிவிலிருந்து மட்டுமே குறிக்கின்றேன்.


 

ஒரு நாள் யாழ். சஞ்சிவி பத்திரிகையில் பத்து தடவைகளுக்கு மேல் இரத்ததானம் வழங்கியவர் என்ற செய்தி எனது படத்துடன் வெளியாகியது. அதற்கடுத்த கிழமை சஞ்சிவி பத்திரிகையிலிருந்து என்னை நேர்முகம் செய்து இன்னுமொரு செய்தியையும் வெளியீட்டனர். இதனால் அதிகமானவர்களுக்கு இரத்ததானம் வழங்குவதற்காக ஊக்கம் கிடைத்ததோ தெரியாது. ஆனால் கொஞ்சக் காலம் எனது நண்பர்கள் மத்தியில் இரத்ததானம் பாரதி எனவும் அழைக்கப்பட்டேன். பின்பு கொழும்பு மற்றும் கனடா வந்த பின்பும் சில காலம் வழங்கினேன். கனடாவில் இரத்ததானம் வழங்குவது என்பது மிகச் சதாரணமான செயற்பாடு. பலர் ஆர்வமாக இரத்ததானம் செய்வதை பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். கனடாவில் ஒரு முறை இரத்ததானம் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு அவர்கள் தொலைபேசி மூலமாக அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்க்ள.


 

இப்பொழுது இந்தப் பதிவை எழுதுவதற்கு இன்று காலை நான் பார்த்த இரத்ததான பிரச்சாரப் படம் ஊக்கியாக இருந்தது. இது யதார்த்தபூர்மற்ற சாதாரண படமாக இருந்தபோதும் இரத்ததானம் வழங்குவது ஒரு நேரத்தில் மற்றவர்களுக்கு உதவுகின்றதோ இல்லையோ எங்களுக்காவது உதவும் என்ற செய்தி முக்கியமானது. இதற்கு ஆதரவாக எனது அனுபவத்தையும் இங்கு பதிவு செய்கின்றேன்.


 

24.02.2013.


 

மீராபாரதி


 

http://youtu.be/s4fNYJrmKgY


 

http://tinyurl.com/b2lsrw2

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.