Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்குற்றவாளிகளை தண்டிக்கும் வரையில் அந்த நாட்டில் உண்மையான அமைதி சாத்தியமில்லை - ஜி. அனந்த பத்மநாபன்

Featured Replies

ananth-padmanathan.jpg

இலங்கையில் நடந்த போர்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் வரையில் அந்த நாட்டில் உண்மையான அமைதி சாத்தியமில்லை என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நம்புகிறது. அந்த இலக்கை அடைவதில் இந்தியாவின் பங்களிப்பு முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் அமைய வேண்டும் என்று அம்னெஸ்டி எதிர்பார்ப்பதாக இந்த அமைப்பின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி தெரிவித்தார்.

 

 

பெங்களூரில் உள்ள அம்னெஸ்டி அலுவலகத்தில் இருந்து ஜி. அனந்த பத்மநாபன் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

‘நோ ஃபயர் ஸோன்: தி கில்லிங் ஃபீல்ட்ஸ் ஆஃப் ஸ்ரீலங்கா’ படத்தை ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலக அரங்கத்தில் திரையிட விடமாட்டோம் என்று இலங்கை அரசு கூறியிருந்தது. அதை மீறி படம் திரையிடப்பட்டுள்ளது. எப்படி சமாளித்தீர்கள்?

அந்த படம் நாங்கள் தயாரித்தது அல்ல. பிரிட்டிஷ் செய்தியாளர் கேலம் மேக்ரே இயக்கியுள்ளார். எங்களுக்கு கிடைத்த பல ஆவணங்கள், படத் துணுக்குகளை அவருக்கு கொடுத்தோம். பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். படத்தின் முன்னோட்டம் ஊடகங்களில் வெளியானதும் 83 நிமிடங்கள் ஓடக்கூடிய முழுப்படத்தை திரையிட விடாமல் தடுக்க இலங்கை அரசு முயற்சி செய்தது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்புக்கு ஐ.நா பார்வையாளர் அந்தஸ்து இருப்பதை சுட்டிக்காட்டி அந்த இடத்தை பயன்படுத்தும் உரிமையை நிலைநாட்டினோம்.

 

 

மனித உரிமைகள் மன்றம் சர்வதேச நிலவரம் குறித்து விவாதிக்கும் இந்த தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட்டுக் காட்ட தயாரிப்பாளர்களும் ஆர்வலர்களும் விரும்பினார்கள்.

இலங்கையின் பிரதிநிதி படத்தை பார்த்தாரா?

 

ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் (ரவிநாத் ஆர்யசின்ஹா) படம் முடிந்த பின்னர் அரங்குக்கு வந்து அந்தப் படம் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அளவில் நடத்தப்படும் பொய் பிரசாரத்தின் ஒரு பகுதி என்று தன் கருத்தை தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கு எதிராகவும் விடுதலை புலிகளுக்கு சாதகமாகவும் மனிதஉரிமை அமைப்புகள் செயல்படுவதாக அதிபர் ராஜபக்ச கூறுகிறார். இந்தியாவிலும்கூட அம்னெஸ்டி மீதான மக்களின் பார்வை ஒரே மாதிரி இல்லை. லாக்அப் மரணம், போலீஸ் என்கவுன்டர், தூக்கு தண்டனை போன்ற நிகழ்வுகளில் அரசுக்கும் அதன் துறைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டையே அம்னெஸ்டி எடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. குண்டு வைப்பது போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராகவோ, அவர்களால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாகவோ அம்னெஸ்டி குரல் கொடுப்பதில்லை என்கிறார்களே?

 

சிலருக்கு அப்படி ஒரு கருத்து இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அது சரியான மதிப்பீடு அல்ல. இலங்கை விவகாரத்தையே எடுத்துக் கொண்டால், அங்கு மனித உரிமைகளை மீறிய குற்றவாளிகள் ராணுவம் மட்டுமல்ல. விடுதலை புலிகளும் அந்த குற்றத்தை அதிகமாகவே செய்திருக்கிறார்கள். சிறுவர் சிறுமிகளை படையில் சேர்த்துக் கொண்டு ஆயுத பயிற்சி அளித்தது, அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியது, மனித குண்டுகள், கண்ணிவெடிகள் மூலம் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பலியாக காரணமாக இருந்தது… என்று புலிகள் மீதும் குற்றச்சாட்டுகள் வைத்தோம்.

இலங்கை ராணுவத்தை போன்றே விடுதலை புலிகளும் குற்றம் செய்துள்ளனர் என்று ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக்காட்டி தகவல்களும் வெளியிட்டு வரும் அமைப்பு அம்னெஸ்டி. கடைசி கட்ட போரில் பலியானவர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக இருப்பதற்கு புலிகளும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே செயல்பட உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள சீருடை அணிந்த அரச படையினர் அதற்கு முற்றிலும் மாறாக மனிதஉரிமைகளை மீறிய குற்றத்தை மன்னிக்க முடியாது. அவர்களை நீதியின்,முன்னால் நிறுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

ஜெனிவாவில் படத்தை திரையிட்டு பேசிய இயக்குனர் மேக்ரேயும் ‘புலிகளும் போர் குற்றம் புரிந்திருக்கிறார்கள். குழந்தைகளை படையில் சேர்த்து துப்பாக்கி ஏந்த வைத்துள்ளனர். அப்பாவி மக்கள் தப்ப முடியாமல் தடுத்து அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே நடந்த கொடுமைக்கு அவர்களும் உடந்தை’ என்று கூறியிருக்கிறார். ஒருதலை பட்சமான பிரசாரம் என்று கண்டிக்கும் இலங்கை அரசின் கோபத்தை ஆற்றும் முயற்சியா?

 

அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இது தமிழ் மொழி பேசும் மக்களுக்கு , தமிழர்களுக்கு , எதிரான போர் குற்றங்கள் என்ற ரீதியில் அணுகுவது சரியல்ல. தமிழ்நாட்டில் சில தலைவர்கள் அப்படி சித்தரிக்கிறார்கள். இது உண்மையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனுக்கு உகந்ததல்ல. அடிப்படை மனித உரிமைகள் மீறலாகத்தான் அணுக வேண்டும். மக்களின் வாழ்வதற்கான, கற்பதற்கான, உழைப்பதற்கான, பிழைப்பதற்கான உரிமைகளை நசுக்கியுள்ளனர்.

ராணுவமும் புலிகளும் அவரவர் நிலையில் நின்று இந்த குற்றத்தை புரிந்துள்ளனர். அதை நேர்மையுடன் அங்கீகரிக்கும்போது தான் நீதிக்கான போராட்டத்தில் தமிழர் அல்லாத ஏனைய மக்களின் ஆதரவும் நல்லெண்ணமும் கிடைக்கும். இனம் சார்ந்த, மொழி சார்ந்த பிரச்னையாக இதை பார்ப்பது பரந்த கண்ணோட்டம் ஆகாது. விரும்பும் பலன்களையும் தராது.

 

அதையும் தவிர, அம்னெஸ்டி இந்தியாவின் முயற்சிகள் இந்திய அரசு சார்ந்ததே தவிர, இலங்கை அரக்கு எதிராக பிரசாரம் நடத்தும் தேவை எங்களுக்கு இல்லை.

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் இதே விஷயத்துக்காக முன்பு ஒரு தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 22ம் தேதி இன்னொரு தீர்மானம் வரும்போது அதில் வாக்கெடுப்பு இருக்காது என்று பேச்சு அடிபடுகிறது?

 

சென்ற முறை தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் பங்கேற்கவில்லை. இந்த தடவை கடுமையான எதிர்ப்பை இலங்கை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தியா அழுத்தம் கொடுத்தால் இலங்கை அரசு வழிக்கு வர வாய்ப்பிருக்கிறது. அதைத்தான் அவரிடம் மனுவாக கொடுக்க இருக்கிறோம்.

 

இன்னொரு நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் அதன் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் ஒரு கொள்கையை பின்பற்றி வருகின்றன. ராஜபக்சயும் அதையே திருப்பி பாடுகிறார். இந்தியா கோடு தாண்டும் என்று நம்புகிறீர்களா?

 

தாண்டிதான் ஆக வேண்டும். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்தியாவின் கொள்கை இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது என்பதுதான். ஆனால் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் மனித உரிமைகள் மிகவும் மோசமாக மீறப்பட்ட நேரத்தில் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டதே. சாதாரண நாடு என்றால் வாய் மூடி இருக்கலாம்.

பொருளாதாரத்திலும் ஆயுத பலத்திலும் வல்லரசாக காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

 

இந்த நிலையில் உலகின் எந்த பகுதியில் நல்லது கெட்டது நடந்தாலும் அதில் இந்தியா ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும். அது உலகத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் உலகம் இந்தியாவை மதிப்பிடும்.

இலங்கையில் நடந்தது என்ன என்பது உலகுக்கு தெரியும். இப்போது இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை ஐ.நா சொல்கிறது. பல நாடுகள் சொல்கின்றன. பக்கத்து நாடான இந்தியா வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பது எப்படி பொருத்தமாக இருக்க முடியும்?

 

மேலும், போர் குற்றம் போன்ற நிகழ்வுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட நாடு இறையாண்மை என்ற கவசத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது. சர்வதேச சட்டம் அதைத்தான் சொல்கிறது.

உலகத்துக்கு வழிகாட்ட ஆசைப்படும் அமெரிக்க மட்டும்தான் எங்கே எது நடந்தாலும் கருத்து சொல்கிறது. ஜனநாயகம், மனித உரிமைகள் நசுக்கப்படுவதாக குரல் கொடுக்கிறது. ராணுவ ரீதியாக தலையிடவும் செய்கிறது. அப்படியெல்லாம் இந்தியாவால் செயல்பட முடியுமா? அமெரிக்காவுக்கு அதற்கான தகுதி இருப்பதாக அம்னெஸ்டி நம்புகிறதா?

 

 

நிச்சயமாக இல்லை. அமெரிக்காவில் மனித உரிமைகள் சிறப்பாக மதிக்கப்படுவதாக நாங்கள் கூறவில்லை. அவர்களின் மீறல்களும் உலகம் அறிந்தவை. அமெரிக்காவை இந்தியா பின்பற்ற வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை அல்ல. குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதற்கு ஆதாரங்கள் உள்ளன. சட்டப்படி விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை தண்டிக்க சொல்கிறோம். ஒரு காரியத்துக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும்தானே?

மேற்கத்திய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தில் சமூக பார்வையும் மதிப்பீடுகளும் தனித்தன்மை கொண்டவை. பெரிய தப்பு நடந்தாலும் ‘சரி, நடந்தது நடந்து விட்டது, இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்’ என்று அடுத்த கட்டத்துக்கு நகரும் மனப்போக்கு பிரதானமாக இருக்கிறது.

 

நடந்த தப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து வழக்கு போட்டு, நீண்ட விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கி, அதற்கு அப்பீல் போய், அதற்கு மேலும் சென்று, கடைசியில் மன்னிப்பு என்றோ மரணம் என்றோ பயனற்ற முடிவை எட்டுவதைவிட மறப்போம் மன்னிப்போம் என்று நகர்வதுதான் புத்திசாலித்தனம் என்று நினைக்கிறார்கள்.

 

இந்தியாவில் மட்டுமின்றி பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாள் எல்லாவற்றிலும் வெகுஜன கலவர குற்றவாளிகள் ஒருவர்கூட இதுவரை தண்டனை அனுபவிக்கவில்லை. அம்னெஸ்டியால் இதை எப்படி மாற்ற இயலும்?

 

கலாசார வேறுபாடு வேறு, சட்டத்தின் ஆட்சி என்பது வேறு. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பது கலாசார அடிப்படையில் உருவான சித்தாந்தம். நீங்கள் சொல்வது நேரடியாக பாதிக்கப்படாதவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். சித்ரவதை, கொலை, பலாத்காரம் போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வளவு சீக்கிரம் மறப்போம் மன்னிப்போம் மனநிலைக்கு வர மாட்டார்கள். நினைத்தாலும் வர முடியாது.

கண்ணுக்கு கண் என்று பழி வாங்க துடிக்காவிட்டாலும், தப்பு செய்துவிட்டு சாதாரணமாக நடமாடுகிறானே என்ற உறுத்தல் நிச்சயம் இருக்கும். குறைந்தபட்சம் இரண்டு அடியாவது கொடுத்தால்தான் நிம்மதி..தெரியாமல் இடித்தாலும் ஒரு ஸாரியாவது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல?அப்படித்தான்.

 

அதனால்தான் இலங்கை அரசு தானாகவே ஒரு குழு அமைத்து போர் குற்றங்களை விசாரிக்க முன்வந்ததை உலகம் வரவேற்றது. எல்.எல்.ஆர்.சி என்று பெயரிடப்பட்ட அந்த கமிஷனின் விசாரணையும் அறிக்கையும் வெறும் கண் துடைப்பு என்று தெரிய வந்த பிறகுதான் ஐ.நா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பங்களாதேஷில் 40 ஆண்டுக்கு பிறகு இப்போது போர் குற்றவாளிகளுக்கு தீர்ப்பும் தண்டனையும் வழங்கப்படுகிறது. கம்போடியாவிலும் அதுதான் நடக்கிறது.

தாமதம் ஆகிறது என்பதற்காக விசாரணையே வேண்டாம் என்று தீர்மானிக்க முடியாது. குற்றவாளி இறந்த பிறகுகூட தண்டிக்கப்படலாம். பாதியில் நிற்பதல்ல நீதிக்கான பயணம்.

முதல் தீர்மானம் எந்த பலனையும் அளிக்காத நிலையில் இந்த தீர்மானம் மீது இந்தியாவின் நிலை மாறும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

 

கடந்த முறை நமது நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் வந்தபோது காணப்பட்ட சூழலுக்கும் இப்போதைய சூழலுக்கும் வேறுபாடு தெரிகிறது. இலங்கை நிலவரம் மோசமாகி வருவதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். நாட்டின் தலைமை நீதிபதியை தூக்கி எறியும் துணிச்சல் கொண்ட ஒரு அதிபரிடம் பெரும்பான்மை மக்களுக்கே நீதி கிட்டவில்லை என்று இங்குள்ளவர்கள் பேச தொடங்கியுள்ளனர்.

தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து இந்திய மக்களின் எதிர்பார்ப்பும் இலங்கை அநீதிக்கு பரிகாரம் காண்பதில்தான் இருக்கிறது என்பதை மத்திய அரசு உணரும்போது அது ஜெனிவாவில் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.

 

 

தினகரன் – தமிழ்நாடு

 

http://www.eelamview.com/2013/03/03/ananth-padmanathan/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.