Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருத்தி எழுதப்படும் தீர்ப்புக்கள்

Featured Replies

எம் உதடுகள் புன்னகை மறந்த மரணச்சுவட்டின் பொசுங்கல் மணம் சூழ் நாட்களின் நான்காம் வருடம் வேகவேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

எப்போது நினைத்தாலும் அழுதுதீர்த்துவிட முடியாத இந்நூற்றாண்டின் பெருஞ் சோகத்தை நெஞ்சில் தாங்கியுள்ள தமிழ்ச் சாதிக்கான, நீதி தாமதிக்கப்படுவதை உலகதேசங்கள் தமக்கான சுயநலத்தின் தேவைகளுக்காக மட்டுமே கையாளும் சோகமே, கடந்து போன வருடங்கள் யாவற்றிலும் நிகழ்ந்து முடிந்தது.

போர் முறைகளைத் தாண்டியும், நன்கு திட்டமிடப்பட்ட இனவழிப்பின் சோகத்தை, ஆதியோடு அந்தமாய் சொல்லக் கேட்ட பின்னர், இடையிடையே தத்தமது பிராந்திய நலன்களை இடைச்செருகி, உலக சாசனங்களை மேற்கோள் காட்டுவதுடன் தமது வேலைமுடிந்துவிட்டதாக எழும்பிப் போன சர்வதேச நண்பர்களே, இற்றை வரைக்குமான எமது சம்பாத்தியம், புதிது புதிதாக நியமிக்கப்படுகின்ற வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும், வெளிவிவகாரச் செயலர்களுக்கும், ஐ.நா. அதிகாரிகளுக்கும், மாவிலாறு முதலாகி ஆனந்தபுரத்தில் அழுகைதொடங்கி, வட்டுவாகல் பாலத்தை கழுத்தளவு தண்ணீரில் கடந்த சோகம் ஈறாகி சொல்லி முடித்தே, எண்ணற்ற கீறல்கள் விழுந்து கிடக்கின்றன எம்மினத்தின் இறுதி நாள்களின் இறுவட்டின் மீது.

மானிட சோகத்தின் மரணப்புள்ளியில் இருந்து, கூவியவளின் குரலில் மறுவிளிம்புக்கு கேளாமல் வைத்திருந்ததில், "ஆயுதவுச்சத்தை அடைந்து நின்ற அங்கீகரிக்கப்படாத பலமிகு இராணுவம்'' ஒன்றின் வீழ்ச்சிக்கான வெற்றிடமாக தயார் செய்து கொடுத்த உலக வல்லரசுகள், கந்தகத்தின் இரசாயனக் குறியீட்டைக்கூட தெரிந்திராத பாலகர்களும் வலிந்தழைத்துக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகின்றவிதம், சந்தேகத்துக்கிடமின்றி அநியாயமானதே.

ஈழத்தமிழனின் இரத்த நதியை நீந்திக்கடக்கும் வரை அண்ணன் தம்பி கூட்டணியினரால் தோள்களில் வைத்துக் கொண்டாடப்பட்டு, அடுத்த கரையில் கழற்றி விடப்பட்ட முன்னாள் நண்பர்களிடம் கூட, "அப்பாவிகளின் சாவு'' பற்றிய தெளிவான எதிர்ப்புகள் எழுந்திராமையினால், சந்தேகத்தின் பயனை தனக்குச் சாதகமாக்கும் கொடுப்பினை இக்கணம் வரைக்கும் புலம்பெயர் தமிழர்களினால் முன்னகர்த்தப்படுகின்ற இலங்கையின் குற்றங்களை நிரூபிக்கும் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்கவில்லை.

"2009 மே'' இன் உடன் வந்த இரண்டு வருடங்களில், "போர்க் குற்றங்கள்' என்ற பலமான சொற்பிரயோகங்களோடு கூர் தீட்டப்பட்ட இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுக்கள், ஆறப்போட உதவுகின்ற மாநாடுகள் மூலமாக, வீரியமிழக்கச் செய்யப்பட்டு, "மனிதவுரிமை மீறல்கள்' என்ற புதிய பெயர் சுட்டியின் கீழ் ஆவேச குறைப்புச் செய்யப்பட்டிருக்கின்றன.

கூடவே, "தண்டிக்க வேண்டும்'' என்று சீறியவர்கள் யாவருமே, "விசாரிக்க வேண்டும்'' என்ற அளவுக்கு, உறவுப் பாலங்களின் உறுதியான ராஜதந்திர தந்திகள் மீது சுருக்கிப் பேசவும் தொடங்கியுள்ளமை கவனிக்கத்தக்கது.

பிரேரணை, விசாரணை, தண்டனை போன்ற சட்டபூர்வமான விடயங்கள் மீதான பொறுப்புக்கள் யாவற்றினையும், "உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்'' உலக நாடுகளின் பொறுப்பாக ஒப்படைத்து விட்டு, புறத்தில் நின்று அழுத்தம் கொடுப்பவனாக மட்டும் நூறு சதவீதம் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழனின் இன்றைய பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாயக மக்களின் சார்பாக, போர்க் குற்றத்தின் பேசும் படக் காட்சிகளான காணொலிகளையும், இறுதியுத்தத்தில் தப்பி வந்தவர்களினது சாட்சியங்களையும் தொகுத்து உண்மை பிசகாது உலகின் பார்வைக்குச் சமர்ப்பிக்கும் பாரிய வேலைத் தொகுதி புலத் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பெருமித வெற்றியோடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மனித குலத்துக்கு எதிரான கீழ்த்தரமான போர் முனைக் குற்றவாளிகளாக இலங்கை இராணுவத்தினரின் ஒழுக்கக் கேடுகள் சர்வதேச மக்களின் கடும் கோபத்தைக் கிளறி, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நோக்கி பல்வேறு நாடுகளும் ஒருமித்துக் குரல் தரக் காத்திருந்தன.

ஆனால், இறுதிநேரத்து திரைக்குப் பின்னான தயாரிப்பு மாறுதல்கள் காரணமாக, கடந்து போன ஜெனிவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில், நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா, தனது வாக்கை இலங்கைக்கு எதிராகச் செலுத்தி தீர்மானத்தை வெற்றி பெற வைத்ததானதொரு விம்பம் ஏற்படுத்தப்பட்டு சோனியாகாந்தி சக கருணாநிதியின் கூட்டணியினர் ஈழத்தமிழர்களின் இறுதிக் காவலர்களாக தம்மைத் தாமே முடிசூடிப் பெருமிதம் கொண்ட போதிலும், இவையனைத்தும் எப்போதோ முடிவு செய்யப்பட்ட அமெரிக்க இயக்குகையின் கீழான நாடகம் என்கின்ற "ஜெய மங்களத்துடன்'' கடந்து போனது அந்தப் பருவகாலம்.

இறுதிவரை ஈழத்தமிழர்களை இருக்கைகளின் நுனிக்கு அழைத்து வந்து, தற்காலிக ஆறுதல் ஒன்றையும், பிரகாசமான எதிர்காலம் ஒன்றுக்கான வாசல் ஒன்றினையும் தந்து விட்டுப் போன குறித்த பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவு அளித்து வாக்களித்த நாடுகளில் பெரும்பான்மைப் பலமுடையவை அரபு தேசங்கள் மற்றும் இணைந்த இஸ்லாமிய குடி முடியரசுகள்.

தன்னாள்கைக்குட்பட்ட சிறுபான்மைக் குடிகளைக் காக்கத்தவறியது மட்டுமல்லாது, திட்டமிட்ட எண்ணிக்கைக் குறைப்புச் செய்யும் பகிரங்கமான வழிகளின் மூலம் கொன்றொழித்த கொடூரத்துக்கான தண்டனைகளிலிருந்து தப்புவதற்காக, தனக்கு ஆதரவான உலக தேசங்களைத் தயார்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட அரசசார்பு தூதுக் குழுக்களில், பெரும்பான்மை இனத்தோரால் முடியாத காரியங்களை, இலங்கையின் இன்னொரு சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரச அனுசரணை அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுலபமாகச் சாதித்து, வெற்றித் திருமக்களாக தேசம் திரும்பினர்.

இந்தக் காலக் கொடூரம் இனியும் தொடர வேண்டும், என்ற எதிர்பார்ப்பு இன்றைய இலங்கை ஆட்சியாளர்களின் எண்ணங்களில் ஆழப்பதிந்துவிட்ட நப்பாசைகளில் ஒன்று. முதலாவது சிறுபான்மையினத்துக்கு எதிரான பரப்புரைகளில், இரண்டாவது சிறுபான்மையினத்தவரை நீளக் கயிற்றில் இறக்கி ஆடவிட்டு, மத்திய கிழக்கு நாடுகளின் அசைக்க முடியாத ஆதரவை விளைச்சலாகப் பெறும் விருப்பத்தை, பேரின வாதிகள் பிரித்தாளும் தந்திரத்தின் "கிளைமாக்ஸ் ஆட்ட நுணுக்கமாகவே'' பாவித்து வருகின்றனர்.

எண்ணிக்கையில் பெரிது, சிறிதென்ற வேறுபாடில்லாமல், தாய்மண்ணை நேசித்து,   தன்னுயிரின் பெறுமதியினை தாழக் குறைத்து கந்தக வெளிகளில் சந்தன மேனிகளை விதைத்து, நெஞ்செல்லாம் நிரவிநிற்கின்ற மாவீரக் குழந்தைகளில் இஸ்லாமிய சகோதரர்களும் இருக்கின்றார்கள், எனும் செய்நன்றியை அவ்வளவு இலகுவில் மறந்து விடுபவர்களல்ல ஈழத்தமிழர்கள்.

அவர்களின் ஈகையும், தியாகங்களும் எண்ணங்களில் விரைவில் பரந்தெழுந்து, வீரமரணம் வரை வழிநடத்திய தன்மானமும், உயிர்க் கொடையும், இன்றைக்கு வாரியிறைக்கப்படுகின்ற "அமைச்சுப் பதவிகளாலோ', "துரிதமாக தார் பூசப்படுகின்ற வீதிகளாலோ", "முன்னுரிமையுடன் உள்நுழைக்கப்படுகின்ற அரச நியமனங்களாலோ' சிறிதளவேனும் பிரதியிடப் படப்போவதில்லை.

எதிர்ப்புறத்தில் இன நல்லுறவில் புரிந்துணர்வு அடையாளமாக, யாருமே இல்லாத வெற்றுத் தசாப்த காலங்களின் போதும், எந்தவொரு பள்ளிவாசலிலும் ஒற்றைச் செங்கல்லைக் கூடப் பெயர்த் தெடுக்காதவர்களாகவும், உடைமையாளர்களின் பூர்வீக நிலங்களின் எல்லைகளை தமது எல்லைகளுக்கு ஒப்பாகப் பாதுகாத்தவர்களாகவும் மீளவும் கைகோர்த்துக் கொள்வதற்கான தமது தரப்பு விருப்பங்கள் யாவற்றினையும் வெளிப்படுத்தி நிற்கின்றவர்களுக்கு எதிரான உலக நகர்வுகளுக்கு பங்காளராகும் செயல் ஏற்புடையதாகுமோ?

கீழாகத் தாழ்ந்திறங்கி எண்ணற்ற விட்டுக் கொடுப்புகளுடன் முன்னகர்ந்த தமிழ்த் தரப்புக்களின் விருப்புக்கும் பெரும்பான்மை கிழக்கு மாகாண மக்களின் விருப்புக்கும் விரோதமாக, எடுக்கப்பட்ட தனித்த முடிவின் காரணமாக இன்றைய இலங்கைக்குள்ளான ஒரேயொரு அரசினுடையதில்லாத "மாகாண சபை'' என்கின்ற பெருமையைப் பெற்றிருக்க வேண்டிய கிழக்கு மாகாண சபையின் கனவு, காகிதங்களிலும் காதுகடிபட்ட செய்திகளிலும் துரிதமாகக் கரைத்தழிக்கப்பட்டமையே ஆகப்பிந்திய, அவப்பிரயோகம்.

இன்றைக்கு இருக்கின்ற இதே முதலமைச்சர் பதவியையும், விட்டுக் கொடுக்க தமிழ்த் தரப்புகள் முன் வந்திருந்த போதிலும், மத்திய அரசின் கடைக்கண் பார்வைக்கும், கடைப் பங்குடமைக்கும் ஆசை கொண்டு, தனித் தன்மையை அடகுவைத்து வீழ்ந்தே வாழ்வதை நீங்களும், நாங்களும் மறந்து போகலாம், மன்னித்தும் கடக்கலாம், ஆனால் காலத்தின் நீள நாக்குகள்.....?

பல்வேறு உலகத்தலைவர்களை சாட்சியாகக் கொண்டு நேற்றுவரை, "அரசியல் தீர்வுக்கான வழியாக அதிகாரப் பகிர்வை ''உலக அரங்குகளில் பேசிப் பேசியே சமாளித்து, போரின் பின்னான நான்கு வருடங்களை வெற்றிப் பெருமிதத்துடன் கடந்துவந்த இத்தீவின் ஆட்சியாளர்கள், "இனத்துவ அடிப்படையிலான வெவ்வேறு நிர்வாக அலகுகள், இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்படுவது சாத்தியமற்றது'' என்று அதிகாரம் பகிர்ந்து கையளிப்பினை முதல் முறையாக முற்றிலும் மறுதலித்துள்ள சமநாள்களில், "தீர்வொன்றுக்கான தேவையுடன் காத்திருக்கும் சிறுபான்மையினரின் ஒற்றுமைக்குறைவு எத்துணை ஆரோக்கியமானது?

இதே அரசியல் தீர்வொன்றுக்கான துரித நெருக்கல்களை கொடுப்பதற்காக இலங்கை அரசை உந்தித்தள்ளும் நெம்பு கோலாக உலக தேசங்களால் பயன்படுத்தப்படுகின்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள், ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைகள் என்பவற்றிலிருந்து, தப்பிக்கச் செய்யும் உதவிகள் யாவையும், "பூமராங்' ஆகி மீண்டும் வந்து "அரசியல் உரிமைகளையும், அதிகாரப் பகிர்வையும்'' இன்னுமொரு தசாப்தத்திற்கு மேலாக தாமதிக்கச் செய்யும் என்பதற்கு, தனித்தனியான விளக்கமும் தேவையா?

சுதந்திரத்துக்குப் பின்னான, இலங்கையின் அரசியல் வரலாற்றுப் பின்னணியில், உரிமைக் கோரிக்கைகளை உயர எழுப்பிய சிறுபான்மை மக்களின் பலவீனங்களை, தமக்கான பலமாகச் சேர்த்து, குனியக் குனியக் குட்டி தட்டி வைத்திருந்த தனியினமொன்றின் அதிகாரக் கதிரையை, ஆட்டிப்பார்த்தவர்கள் என்ற இறுமாப்பும், புகழும் இன்றைக்கு மௌனத்தின் கரும்புள்ளிக்குள் அழிந்து போன போராளிகளுக்கும், போராட்டத்தினை இயங்கு சக்தியாக முன்னெடுத்த மக்களுக்கும், என்றைக்குமே உண்டு.

அதே சிறுபான்மையினரின் எதிர்பு சக்தியின் வலுவளவினைப் பொறுத்துக் கொள்ளமுடியாதவர்களாக, இனக்குரோதத்தை வாய்ப்புக் கிடைக்கும் இடமெல்லாம் வளர்த்துவிட்டுக் குளிர்காய்ந்தவர்களுக்கு, உண்மையைத் தெரிந்துகொண்ட உலகம் தரப்போகும் தண்டனைகளுக்கு குறுக்கே நாம் எதற்கு வேண்டாமல்? "வந்துவிடுங்கள்  நண்பர்களே! நோக்கி நீளும் இந்த விரல்களில் கண்ணீர் பிசுக்கு காயாமல் கிடக்கின்றது இன்னமும்''!!

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=7113746906325694

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.