Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மாவின் அதிரடி ஆட்டம் பலிக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் அதிரடி ஆட்டம் பலிக்குமா?

சந்திர. பிரவீண்குமார்
 

 

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரமுகர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரடியாகச் சந்தித்து "ஆலோசனை" செய்வதால் பொதுக்குழுவை கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும் ஆவலுடன் எதிர்நோக்குவது வழக்கம். அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயலலிதா இந்த கூட்டத்தில் அதிரடியான அறிவிப்புகளை வெளியிடுவதால் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்த பொதுக்குழுவிலும் அறிவிப்பு அமர்க்களப்படுத்தியது. இந்தக் கூட்டத்தில்தான், 'வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க உட்பட யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது. தனித்துப் போட்டியிடுவோம். நாற்பதும் நமதே' என்ற கோஷத்தை எழுப்பினார். இந்த அறிவிப்பு ஊடகங்களின் செய்திகளுக்குத் தீனி போட்டாலும் ஜெயலலிதாவின் எண்ணம் என்ன என்பதை யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

 

ஆனால், கடந்த வாரம் தமிழக முதல்வர் எழுப்பிய குரல் அவரது எண்ணம் தனித்துப் போட்டிதான் என்பதை உறுதியாக்கியுள்ளது. காவிரி பிரச்சினை குறித்துப் பேசிய ஜெயலலிதா, 'கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் இரட்டை நிலை எடுக்கின்றன' என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். மத்திய கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து நீடித்துவரும் தி.மு.க.வும் காவிரி பிரச்சினையில் துரோகம் செய்துவருவதாக அவர் கூறினார். இந்தப் பேச்சின் மூலம் அவர் காங்கிரசையும், பா.ஜ.க.வையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஜெயலலிதாவின் வியூகங்களையும், செயல்பாடுகளையும் பார்ப்பதற்கு முன்னால் அவரது அரசியல் வாழ்க்கையையும் பார்ப்பது பொருத்தமாக அமையும். அவருடைய அரசியல் வாழ்க்கையே அதிரடிகளின் தொகுப்புதான் என்று சொல்லலாம். தமிழ்ப் படங்களில் பிரபல கதாநாயகியாகத் திகழ்ந்த அவர், அரசியலுக்கு வந்தது 1983இல்தான். அப்போது அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் அனைவரும் ஜெயலலிதாவைவிட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு கட்சியை யார் கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்தது. மூத்த தலைவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் பின்னால் அணிவகுத்து நின்றார்கள். அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் பின்னால் சொற்ப எண்ணிக்கையிலான பிரமுகர்களே அணிவகுத்தார்கள். அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்த பிரச்சினையால் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது.

 

அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சினை சரிசெய்யப்பட்டு ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளரானார். அடுத்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா தமிழக முதல்வரானார். அடுத்த ஐந்து ஆண்டுகள் நடந்த ஆட்சியில் சமூக நலத் துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றைத் தவிர மற்ற துறைகளின் வளர்ச்சி எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மேலும் அந்த ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களின் காரணமாக ஆட்சிப் பொறுப்பை இழந்தார். 1996இல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. நான்கு இடங்களையே பெற முடிந்தது.

 

ஊழல் வழக்குகளாலும், உட்கட்சிப் பூசல்களாலும் கட்சி கலகலத்துப் போனாலும் ஜெயலலிதா மனம் தளரவில்லை. தன் மீதான வழக்குகளையே வெற்றி பெறும் அஸ்திரமாகப் பயன்படுத்தினார். காங்கிரஸுடனான கூட்டணியைப் புதுப்பித்தார். விளைவு, 2001இல் மீண்டும் முதல்வரானார்.

 

உண்மையில் ஜெயலலிதா பாணி அதிரடி அரசியலைத் தமிழகம் பார்த்தது அந்த ஆட்சியில்தான். ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அரசு ஊழியர்கள் சம்பந்தமான பிரச்சினை வெடித்தபோது யாருக்கும் பயப்படாமல் சில முடிவுகளை எடுத்தது அவர் உறுதியான செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. அடுத்த தேர்தலில் அவர் ஆட்சியை இழந்தாலும் 60 இடங்களுக்கு மேல் பெற்றது, உறுதியான செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று நம்பப்படுகிறது.

 

எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வின் பணி பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் தி.மு.க.வுடைய பணிகளில் இருந்த குறைபாடுகளை அவ்வப்போது அறிக்கையின் மூலமாக விமர்சனம் செய்துகொண்டே வந்தார். கருணாநிதியின் குடும்ப அரசியல் உட்பட பல்வேறு குறைபாடுகள் தி.மு.க. ஆட்சியின் மீது மக்களை வெறுப்படையச் செய்தன. அவற்றை சரிசெய்ய ஜெயலலிதாவின் உறுதியால் மட்டுமே சாத்தியப்படும் என்று நம்பினார்கள். அதனால் 2011ஆம் ஆண்டின் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றியை அடைந்தது.

 

எம்.ஜி.ஆர் கூட சந்தித்திராத மாபெரும் வெற்றி இது என்று அ.தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் இதை வர்ணிக்கின்றன. ஜெயலலிதாவின் பிரதமர் ஆசை துளிர்விட ஆரம்பித்தது அப்போதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆட்சியில் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்றாலும் சில மாற்றங்கள் தென்படவே செய்கின்றன.

 

ஜெயலலிதா என்றாலே எதையும் எழுதிக்கொண்டுவந்து படிப்பவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இந்த முறை அதில் மாற்றம். சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு உடனுக்குடன் பதில் தருகிறார். கூட்டணிக் கட்சிகளை சேர்ப்பதிலும், அவர்களை கழற்றி விடுவதிலும் தனக்கென ஓர் அணுகுமுறையைக் கொண்டுள்ளார். அவரது தடாலடி அறிவிப்புகள், தி.மு.க. ஆட்சி கொண்டுவந்த இடங்கள் மீதான கசப்புணர்வு ஆகியவை இன்னும் மாறிவிடவில்லை.

 

தற்போதைய சூழலில் தமிழகத்தில் மின்சாரப் பிரச்சினை தவிர வேறு எதுவும் பிரம்மாண்டமாக இல்லை. மின்சாரத் தட்டுப்பாடு இன்னும் அதிகமாகி வருகிறது. இது சம்பந்தமாக ஸ்டாலின் என்ன போராட்டம் நடத்தினாலும் 'அம்மா' கண்டுகொள்வதில்லை. மின்சாரத்தைப் பெருக்க மேற்கொள்ளப்படும் திட்டங்கள் இந்த ஆண்டுக்குள் நிறைவுபெற்று ஆண்டின் இறுதியில் தமிழகம் மின்தடையற்ற மாநிலமாக மாறும் என்று உறுதியளிக்கிறார். அதே நேரத்தில் இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய மின் தொகுப்பை வழங்காமல் காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறது என்று குற்றம் சுமத்துகிறார்.

 

ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவர் தீவிரமான தெய்வ நம்பிக்கையாளர். இந்து மத நம்பிக்கைகளில் பற்று கொண்டவர். பா.ஜ.க. தலைவர்களில், முக்கியமாக நரேந்திர மோடியின் தீவிர அபிமானி. இவற்றை அவர் மறைத்துக்கொண்டதும் இல்லை. அதனால் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும் என்றே சில மாதங்களுக்கு முன்புவரை நம்பப்பட்டது.

 

ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு வேறு. தற்போதைய நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை அமைப்பது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது. அதை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க.விலும் மோடியைத் தவிர பெரிய தலைவர்கள் யாரும் வலுவாக இல்லை. அதே நேரத்தில் மோடிக்கும் கட்சியில் முழு ஆதரவு இல்லை. இந்தச் சூழ்நிலையை மாநிலக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. மீண்டும் மூன்றாவது அணி ஆட்சிக்கு வருமா என்று எதிர்பார்க்கிறார்கள். ஜெயலலிதாவும் இந்த வாய்ப்பைக் கைப்பற்ற நினைக்கிறார்.

 

தமிழகத்தில் உள்ள 39 இடங்களும் தனக்கு கிடைத்தால் பிரதமராகலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். இந்த நிலையை உருவாக்கத் தன்னை தயார்படுத்திக் கொள்ள விரும்புகிறார். இப்போதைய சூழலில் ஜெயலலிதாவின் ஆட்சிக்குத் தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு இல்லை என்ற நிலையே இருக்கிறது. அதனால் அ.தி.மு.க.விற்கு உரிய 25 சதவீத வாக்குகள் முழுமையாகக் கிடைத்துவிடும். இன்னும் 7 சதவீத வாக்குகளை சுளையாகப் பெற்றால் 39 தொகுதிகளையும் சுலபமாக கைப்பற்றிவிடலாம். ஆனால் இதற்காகக் கடந்த முறை போன்று கூட்டணியைப் பெருக்கிக்கொள்வதில் விருப்பம் இல்லை. கூட்டணி வைத்தால் 25 முதல் 30 தொகுதிகள்வரை மட்டுமே போட்டியிட முடியும். அதனால் தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்க தன்னுடைய செல்வாக்கை மேலும் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

 

இந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் நில மோசடிக்கு எதிராக உறுதியான நடவடிக்கை, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023, அரசு தேர்வாணையத்தில் சீர்திருத்தம், ஆசிரியர் இடமாறுதலில் கவுன்சிலிங் போன்ற ஜெயலலிதாவின் செயல்பாடுகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. விவசாயத் துறைக்கான செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக இந்தியா டுடேயின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இவையெல்லாம் ஜெயலலிதாவின் சாதகங்கள்.

 

காவிரிப் பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி ஆறு ஆண்டுகளான பிறகும் அரசிதழில் அறிவிப்பு வெளியாகாததற்கு தி.மு.க.வே காரணம் என்று குற்றம் சுமத்தினார். இந்த விவகாரத்தில் காங்கிரசையும், பா.ஜ.க.வையும்கூட அவர் விட்டுவைக்கவில்லை. காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளார். தண்ணீர்த் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் நிலவும் சூழலில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாகவே சாத்தியமாகியது என்று பாராட்டப்படுகிறது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வின் முக்கியமான வாக்கு வங்கிகளில், முஸ்லிம் வாக்கு வங்கியும் ஒன்று. ஏற்கனவே பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் கிறிஸ்துவ வாக்குகளைக் குறிவைத்துள்ள ஜெயலலிதா சுமார் ஏழு சதவீதம் உள்ள முஸ்லிம் ஓட்டுகளையும் பெறும் முனைப்பில் இருக்கிறார். இந்த நிலையில் 'விஸ்வரூபம்' படத்தின் பிரச்சினை வெடித்தது அவருக்கு சாதகமாக அமைந்தது. படம், இஸ்லாமிய உணர்வுகளைப் புண்படுத்துவதாக வந்த புகாரை அடுத்து உடனடியாக படம் தடை செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் தடையை நீக்கியப் பிறகும் சட்ட ஒழுங்கைக் காரணம் காட்டி படத்தைத் திரையிடவிடவில்லை.

 

இலங்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் அக்கறை காட்டி வருவதும் புதிய அணுகுமுறையே. இந்த பிரச்சினை பற்றி அதிகம் பேசாத ஜெயலலிதா, இலங்கை விஷயத்தில் ஈழ தமிழர்களுக்காக மிகவும் தீவிரமான குரலில் பேசிவருகிறார். தமிழர்கள் பிரச்சினையைச் சரி செய்யாதவரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகனை கொடூரமாகக் கொன்றதற்காக இலங்கை அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறார். ஹிட்லர் ஆட்சியுடன் சிங்கள ஆட்சியை ஒப்பிடும் அளவுக்கு அவரது தீவிரம் இருக்கிறது. இலங்கைப் படையினரின் தமிழக மீனவர் மீதான தாக்குதல் விவகாரத்திலும் போர்க்குணத்துடன் செயல்படுகிறார்.

 

இந்த விவகாரங்களின் மூலம் தமிழர்களின் தன்னிகரற்ற தலைவியாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். தமிழர் நலன் கருதியே தான் தனியாக நிற்பதாகவும் குறிப்பிடுகிறார்.

 

தமிழக பிரச்சினைகள் மட்டுமல்லாது தேசிய அளவிலும் தனது பக்கம் பார்வையைத் திரும்பச் செய்துள்ளார் ஜெயலலிதா. பேச்சுக்கு நடுவே மணியடித்ததற்காக முதல்வர்கள் மாநாட்டிலிருந்து அவர் முதலில் வெளிநடப்பு செய்தது மற்ற மாநில முதல்வர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சமீபத்தில் ரயில் கட்டணம் உயர்ந்த போது எழுந்த முதல் எதிர்ப்புக் குரல் ஜெயலலிதாவுடையது.

 

சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்குக் கோரி வைகோ நடைபயணம் மேற்கொண்டபோது அந்த வழியில் வந்த ஜெயலலிதா தனது காரை விட்டு இறங்கி வைகோவை குசலம் விசாரித்தார். பொதுவாக அமைச்சர்கள்கூட சுலபமாகப் பார்க்க முடியாதவர், நடு வழியில் ஒரு தலைவரைச் சந்தித்தது அரசியல் அரங்கில் பல யூகங்களை எழுப்பியுள்ளது. தேசியக் கட்சிகளைக் கழற்றிவிட்டு சிறிய கட்சிகளின் துணையுடன் தேர்தலைச் சந்திக்க நினைக்கிறாரோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் வைகோவின் அயராத உழைப்பும் முழக்கமும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் ஜெயலலிதா தனது விருப்பத்தின்படி பெரிய கட்சிகளின் தயவு இல்லாமல் அதிக இடங்களில் போட்டியிட்டு அதில் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற வேண்டும். காவிரி, விவசாயிகள் நலன், முஸ்லிம் உனர்வுகள், இலங்கைத் தமிழர் நலன், தேசியக் கட்சிகளைத் தாக்குவது என்று பல விதங்களிலும் வெற்றிக்கான அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டிருக்கிறார்.

 

இவ்வளவு சாதகங்கள் இருந்தாலும் வழக்கம்போல அவரது செயல்பாடுகளே அவருக்குப் பாதகமாக அமைவதையும் மறுக்க முடியாது. தமிழ்நாடு புதிய சட்டமன்ற வளாகத்தில் அரசியல், கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் ஆகியவை மக்களை முகம் சுளிக்க வைத்தாலும் ஆதரவு குறைந்துவிடவில்லை. சென்ற சட்டமன்றத் தேர்தலில் உடனிருந்த விஜயகாந்துடன் மோதல் சில ஆதரவாளர்களைக் கவலையடையச் செய்ததையும் மறுக்க முடியாது. முதல்வரின் இதுபோன்ற செயல்பாடுகள் அவர் மாறவில்லை என்பதை காட்டுகிறது.

 

என்றாலும் பல்நோக்கு வியூகத்தையும் அவற்றில் அவர் காட்டும் தீவிரத்தையும் எதிர்க்கட்சிகளின் நிலையையும் பார்க்கும்போது ஜெயலலிதாவின் திட்டம் பலித்தாலும் பலிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=c8f85834-eb7d-4597-ab40-c955c49b269e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.