Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறக்கணிக்கப்பட்ட நாயகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர்


nagesh%202.jpg

யார் உதவியும் இன்றி, நாமே புதிதாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பது, அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் ஒன்று. எத்தனையோ முறை பார்த்திருந்தும்,  நீண்ட நாள் போதிய கவனம் தராதிருந்து, மிகத் தாமதமாகத் தான் நாகேஷ் என்னும் கலைஞனைக் கண்டுணர்ந்தேன். பாடல்களுக்காக “திருவிளையாடல்” படத்தைத் திரும்ப பார்த்த போது, 20 நிமிடங்களுக்குள் “தருமி”பாத்திரத்தில் நாகேஷின் அபாரமான நடிப்பே எனது மறு கண்டுபிடிப்புக்குக் காரணம். இத்தனை வருடங்கள் கழித்தும், அப்படத்தில் நாகேஷின் நடிப்பும், பாடல்களும் மட்டுமே இன்னும் பழைய தாகிப் போகாமல் புத்துணர்ச்சியுடன் உயிர்ப் போடு இருக்கிறது. படத்தின் மீதி பகுதிகளை காலத்தின் ஈவிரக்கமற்ற வாய் ஜீரணித்து விட்டது.
 
தாராபுரத்தில் கன்னட பிராமணக் குடும்பத்தில் பிறந்த நாகேஷ் இண்டெர் மீடியட் வரை படித்தார். மூன்று முறை அம்மை நோயின் தாக்குதல், அழகான அவரது முகத்தை சின்னா பின்னப்படுத்தியது.  படிப்பில் நாட்டம் கொள்ளாமல், மன உளைச்சலால் வீட்டை விட்டு ஓடியவர், கோயில்களின் இலவச உணவு சாப்பிட்டு,  ஹைதராபாத்தில் கீழ் நிலைவேலை செய்து வாழ்ந்தார். பின் ரயில்வேயில் வேலை கிடைத்த பின், சென்னை நகரத்தின் நாடகக் குழுக்களில் சேர்ந்து நடிக்கத் தொடங்கி, அதன் வழியே தமிழ் சினிமாவில் பிரவேசித்தார். வெகுஜன சினிமாவின் எந்த விதிக்குள்ளும் பொருந்தாத ஒரு முகத்தையும், உடல் வாகையும் வைத்துக் கொண்டு, அவர் இங்கே ஒரு நிலையான இடத்தைப் பிடித்தது ஒரு சாதனைதான். தனது தரம், அனுபவம் பார்க்காது, வாய்ப்பு வந்த படங்களில் எல்லாம் நடித்தவர், 600க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இதில் சில கதாநாயகபாத்திரங்கள்  (சர்வர்சுந்தரம், எதிர் நீச்சல், தேன் கிண்ணம், நீர்க்குமிழி). மற்றபடி, பெரும்பாலும்  நகைச்சுவைப் பாத்திரங்களில் தான் வலம் வந்தார். பிரபலமாயிருந்தும், யாரும் நடிக்காத பாத்திரங்களான “பிணமாகவும்  (மகளிர் மட்டும்)”, படம் முழுதும் எதுவும் பேசாமல், கிறிஸ்துவ பாதிரியாருக்காக தலையில்லாந்தர் மட்டும் தாங்கிய பாத்திரத்திலும் (யாருக்காக அழுதான்)  நடித்திருக்கிறார்.  
 
நாகேஷிற்கு முந்தைய காமெடி நடிப்பில், வசனம் தான் பிரதானமான ஒன்று.  இவர் தான் உடல் மொழியில்,  மிகத் திறமையாக கிண்டலை, அங்கதத்தை, கேலியை, கொண்டாட்டத்தை அனாயசமாகப் பிரதிபலித்தவர். “தில்லானா மோகனாம்பாளில்”சவடால் வைத்தி பாத்திரத்தில், சங்கீத கச்சேரியில் இருக்கும் மக்கள் அனைவரும் அவருக்கு எதிராக மாறும் போது அரங்கை விட்டு தப்பி ஓடும் காட்சியை எத்தனை முறையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பொறியில் மாட்டிக் கொண்ட விலங்கு போல, அரங்கு முழுவதும் சுற்றிச்சுற்றி, விழுந்தெழுந்து தப்பியோடுவது, வசனம் ஏதும் இன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தும் நடிப்புக்கு கறாரான மாதிரி. “திருவிளையாடலில்”சிவனின் பாத்திரத்தில் நடித்த சிவாஜியோடு பேசிக் கொண்டே தன் உடல் முழுதையும் வில்லாக வளைக்கும் காட்சியும், “காதலிக்க நேரமில்லை”யில் பாலையாவுக்கு கதை சொல்லும் காட்சியில் அவரது நடிப்பும் தமிழ் சினிமாவின் உச்சங்களின் ஒரு பகுதியாக வைத்துக் கருதப்பட வேண்டும்.
 
நாகேஷின் இன்னொரு விசேஷம்,  நடிப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்,  இயல்பாகவும்,  அனாயசமாகவும் நடித்தது. கமல், சிவாஜி போன்ற நடிகர்களின் நடிப்பில் முயற்சி, உழைப்பு,  திட்டமிடல் தெரியும் போது,  நாகேஷின் நடிப்பிலோ, வழியில் போய்க் கொண்டிருந்த ஒரு வரை அவசரத்தில் அழைத்து நடிக்க வைத்தது போன்று ஒரு சாதாரணத் தன்மை இருக்கும்.  ஆனால் அதனுள் இருக்கும் அபாரம் உன்னிப்பாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கும் போதும் தான் தெரிய வரும். அவரது மிகவும் கவனிக்கப்பட்ட,  பிரபலமான, தேர்ந்த நடிப்புகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் படமெடுக்கப்பட்டவை. 
 
அத்தனை திறமை இருந்தும், வாழ்க்கை முழுதும் எளிமையாகவும், அனாவசியமாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமலேயேயும் நாகேஷ் வாழ்ந்தார். கலை உலக வாழ்வின் உச்சத்தில் இருந்த போது கூட, மிகச் சாதாரணப் பாத்திரத்திலும் நடித்தார். தொழில் ரீதியாக அவரது சிறந்த தருணத்திலும், “  யாருக்காக அழுதான்” படத்தின் அதிசாதாரணப் பாத்திரத்தில் நடித்தார்.
 
மேற் சொன்ன அத்தனைக் காரணங்களுக்குப் பின்னும், தமிழ் உலகில் நாகேஷுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காமல் போனதற்குப் பலகாரணங்கள் உண்டு. அவர் நடிகராக அன்றி, காமெடியனாக அறியப்பட்டார்.  கறாரான வகைமாதிரிகளை உருவாக்கும், மொன்னையாகப் புரிந்து கொள்ளும் நமது சமூகத்தில், கதாநாயகன் சீரியசாகப் பார்க்கப்படுபவன்.  காமெடியன், கோமாளியாகப் பார்க்கப்படுபவன். அதனால், நாகேஷ் மேலோட்டமாகவே அணுகப்பட்டார்.  எந்தவொரு கட்சியின், நிறுவனங்களின்,  அமைப்புகளின், சக்தி வாய்ந்த மனிதர்களின் வெளிப்படையான மற்றும் உறுதியான ஆதரவும் அவருக்கு இருந்ததில்லை.  600க்கும் மேற்பட்ட படங்கள் நடித்தும், தென்னிந்திய மக்களின் விருப்பமுள்ள நடிகனாக இருந்தும், பத்மஸ்ரீ கூட அவருக்கு கிடைக்கவில்லை.  கூடவே, எதையும் அடைவதற்கான தகிடுதத்தங்களை அவர் செய்ததில்லை.  நமது டார்வினிய உலகில், பெரும்பாலான நேரங்களில் “வலிமை”உள்ளவனே வெற்றி பெறுபவன்.
 
எதிர் கதாநாயகப்  பாத்திரங்களில் அவர் தொடர்ந்து நடித்தது, நமது மரபின் முக்கியமான விதி விலக்கு. அங்கதத்திற்கு ஒரு விசேஷ முக்கியத்துவம் இல்லாத நம் கலாசார மரபில், காளமேகப் புலவர் ஒரு அபூர்வம். குறிப்பாக கடவுளை அவரைப் போல, முழு அங்கதத் தொனியோடு எதிர் கொண்டது நம்மில் அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.

அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலை நீலி;
ஒப்பரிய மாமன் உறி திருடி; சப்பைக் கால் அண்ணன்
பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை

என்றார் காளமேகம். சிவனை, பார்வதியை, கிருஷ்ணனை, வினாயகனை மற்றும் முருகனை ஒரு சேர இவ்வாரு எதிர் கொண்டது அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது. இந்த அளவு தரமான அங்கதச் சுவைப் பாடல்கள் நம்மிடம் எத்தனை இருக்கின்றன?
 
இத்தகைய பரம்பரையில் தான் நாகேஷும் இணைகிறார். “திருவிளையாடலின்” தருமி பாத்திரத்தில் அவர் சிவனை எதிர் கொண்டது அப்படிப்பட்ட ஒன்று தான். ஆனால் அப்படத்தின் வெற்றி விழாவில் அழைப்பு கூட இல்லாமல் ஒதுக்கப்பட்டார். அதையே நாம் தொடர்ந்து செய்தோம். விருதுகள் எதுவும் போய்ச் சேராது பார்த்துக் கொண்டோம். ஆடை ஆபரணங்களோடு கதாநாயகர்கள் கர்ப்ப கிருகத்தில் வீற்றிருக்க, சாதனை செய்த முக்கியமானவர்களை துணைத் தெய்வங்களாக்கி, கோயிலின் பின்னே வைத்து, வழிபாடு இன்றி, மூளியாக்கி, கேட்பாரற்றவர்களாக்கி விட்டோம்.

 

(அந்திமழை ஏப்ரல் 2013 இதழில் வெளியாகி உள்ள சிறப்புக் கட்டுரை)
 
 

http://andhimazhai.com/news/view/actor-nagesh-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.