Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்னார்க்கு இன்னார் என்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரேசன் வீடு கலகலப்பாக இருந்தது. அவரது ஒரே பெண்ணான ஹரிணிக்கு அன்று, பெண் பார்க்கும் வைபவம்.

"அப்பா, ஒவ்வொருத்தரா வந்து பார்த்துட்டு போறதுக்கு, நான் ஒண்ணும் பொருட்காட்சி இல்ல. ஒரு பையன பாருங்க, குடும்பத்த விசாரிங்க; என் போட்டோவ காட்டுங்க. எல்லாம் புடிச்சிருந்தா... பெண் பார்க்க வரட்டும்...' என்று, ஹரிணி கறாராக சொல்லியிருந்தாள்,

அதன்படியே, அவரது மருமகளின், தூரத்து உறவினரான ரமேஷ் பற்றி, சுந்தரேசனுக்கு தெரிந்தது. கொஞ்சம் தெரிந்த இடம் என்பதால், மருமகள் மூலமாகவே விசாரித்து, மற்ற விவரங்களை சேகரித்து, கடைசியில் ரமேஷையும் நேரில் பார்த்தார். பையன் களையாக இருந்தான். அப்பா இல்லை; அம்மா மட்டும். சொந்த வீடு, கை நிறைய சம்பளம்; அதுவும், ஒரு பெரிய நிறுவனத்தில். ஹரிணியின் போட்டோவைப் பார்த்ததும் அவர்களுக்கு பிடித்து விட்டது. அதன்படி, பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்காக, வெளியில் காத்துக் கொண்டிருந்தார் சுந்தரேசன்.

நல்ல நேரத்தில் ரமேஷ், தன் தாயுடன் காரில் வந்தான்.

""வாங்க... வாங்கம்மா...'' என, வாய் நிறைய வரவேற்று, உள்ளே அழைத்து சென்றார் சுந்தரேசன்.

ஹரிணி, ஜன்னல் வழியாக ரமேஷை பார்த்தாள். கொஞ்சம் நடிகர் சூர்யா போல இருந்தான். முதல் பார்வையிலேயே, அவளுக்கு, அவனை பிடித்து விட்டது.

""மங்களம் முதல்ல தண்ணி, அப்புறம் ஜூஸ் கொண்டா,'' என்று தன் மனைவிக்கு, அன்பு கட்டளை இட்டார் சுந்தரேசன்.

சோபாவில் அமர்ந்திருந்த ரமேஷிடம், ஜானகி, அவன் அம்மா, ""வீடு சூப்பரா இருக்கு ரமேஷ். ஒரே பொண்ணு வேற. பொண்ணும் நல்லாதான் இருக்கா. நல்ல முடிவா சொல்லு,'' என்றாள்.

""சரிம்மா,'' தலையாட்டினான் ரமேஷ்.

தண்ணீரையும், பின் ஜூசையும் இருவரும் பருகினர். யார் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற தயக்கத்தில், சில நொடிகள் அமைதியாக கழிய, பேச்சை ஆரம்பித்தான் ரமேஷ்.

""அங்கிள்... இந்த வீட்ல எத்தனை வருஷமா இருக்கிங்க?'' என்று கேட்டான். சுந்தரம் கொஞ்சம் யோசித்து, ""ம்... மூன்று வருஷமாச்சு. பழைய வீடு, தாம்பரம் பக்கத்துல இருந்தது. ஆனா, அப்ப சொன்னேனே... என் ஒரே பையன்... அந்த சம்பவத்திற்கு பின், அந்த ஊரே ராசியில்லன்னு இங்க வந்துட்டேன்.''

ரமேஷிற்கு புரிந்தது. அவரது, ஒரே மகன், சாலை விபத்தில் பலியானதை, நேரில் வந்த போது தெரிவித்திருந்தார்.

""ஆமா அங்கிள்... இங்க இந்த வீடு, "ஓகே'யா?'' கேட்டான்.

""ஆமாம் மாப்ள... இங்க வந்து தான், ஹரிணிக்கு வேலை கிடைச்சது. இப்ப உங்க சம்பந்தம் கிடைக்கப் போகுது. இதுவே பெரிய ராசி தானே!''

குஷியாக பேசினார் சுந்தரேசன்.

""சரி, கிரிஜாவும், அவுங்க குட்டி பையனும் எங்கே?'' சுந்தரேசனின் மருமகள் பற்றி ஜானகி கேட்க, சுந்தரேசன் சற்று மவுனத்திற்கு பின் சொன்னார்...

""மன்னிக்கணும். இப்ப அவுங்க எங்க கூட இல்ல.''

ஆச்சரியமான ரமேஷ், ""அப்படியா.... நான் மொபைல்ல பேசினப்ப இதைச் சொல்லவே இல்லியே!''

""அவளும் என் பொண்ணு மாதிரி தான். ஆனாலும், "தன் கணவன் இல்லாத வீட்டில் எப்படி எங்க கூட இருக்க முடியும்'ன்னு, தன் அம்மா வீட்டுக்கு போய்ட்டா. நாங்களும் ரொம்ப கட்டாயப்படுத்தல. என்ன இருந்தாலும், அவ, தன்னோட அம்மா வீட்ல இருக்கறமாதிரி, இங்க இருக்க முடியாதே... ஆனா, நாங்க, அவங்க கூட தொடர்பு வைச்சுக்கிட்டு தான் இருக்கோம். இப்ப பாருங்க... உங்கள பத்தி, அவ மூலமாகத் தான் தெரிஞ்சுது,'' சொல்லிவிட்டு, தன் மனைவி மங்களத்தை, ஓரக்கண்ணால் பார்த்தார். காரணம், மங்களம் ஏற்கனவே சொல்லியிருந்தாள். "நம்ப கிரிஜாவையும் கூப்பிடுங்க. வர்றவங்க கேட்டாலும் கேப்பாங்க...' என்று.

சுந்தரேசன் தான், "இங்க பாரு. நல்ல விசேஷம் நடக்கும் போது, அவ எதுக்கு. சரியா வாழக் கொடுத்து வைக்காதவ. அப்புறம் சொல்லிக்கலாம்...' என்று, மனைவியை அடக்கி வைத்திருந்தார்.

இப்போது ஜானகி அம்மாளை சமாளிக்க, சற்று சங்கடப்பட்டார்.

""சரி அங்கிள்... அவங்க தன்னோட அம்மாவோடயே இருக்கட்டும். இப்ப, இந்த நிகழ்ச்சிக்கு அவங்களை கூப்பிட்டிருக்கலாமே!'' வெளிப்படையாகவே கேட்டான் ரமேஷ்.

""மன்னிக்கணும். எனக்கு ராசி, சகுனம், திருஷ்டி இப்படி சில சென்டிமென்ட் விஷயங்கள்ல நம்பிக்கை உண்டு. நான் தான், ஒரு நல்ல காரியம் நடக்கும் போது, எதுக்குன்னு...வேற தப்பா நினைக்காதீங்க,'' என்று, பவ்யமாக சொன்னார் சுந்தரேசன் .

""அப்ப இவங்க?'' தன் அம்மாவை காட்டி கேட்டான் ரமேஷ்.

""ஐயோ... இவங்க அம்மா. தெய்வம் மாதிரி...''

சற்று பதறினார் சுந்தரேசன்.

""ஓ.கே., அங்கிள்... அது உங்க இஷ்டம். கல்யாணத்துக்கு வருவாங்கல்ல?''

கேட்ட ரமேஷிடம், ""அட அதுக்கு விட்டுருவோமா...'' சிரித்தபடி சொன்னார் சுந்தரேசன்.

பின், ரமேஷûக்கும் - ஜானகிக்கும், காபி கொண்டு வர, ஹரிணி அழைக்கப்பட்டாள். கொஞ்சம் நாணத்தோடு, ஒரு தட்டில் இரண்டு டம்ளரில் காபியை ஏந்தியபடி, ஹாலுக்குள் பிரவேசித்தாள் ஹரிணி.

ஜானகி நேராக பார்க்க. ரமேஷ் சுற்றுமுற்றும் பார்ப்பதுபோல், ஹரிணியை பட்டும் படாமலும் பார்த்தான்.

அவனது பார்வையில் ஹரிணி, அன்று பூத்த ரோஜாவைப், போல ப்ரஷ்ஷாக இருந்தாள்.

ஒரு சேரில் தரையை பார்த்தவாறு அமர்ந்தாள் ஹரிணி. ""ஏதாவது கேளுங்கம்மா...'' என்றார் சுந்தரேசன்.

""எங்கம்மா வேல பாக்குற?'' ஜானகி கேட்டாள்.

""பக்கத்துல, ஒரு மெட்ரிக் ஸ்கூல்ல... பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியரா இருக்கேன்.''

""என்ன படிச்சிருக்க ஹரிணி?''

""எம்.ஏ.லிட்ரேச்சர்.''

""எந்த காலேஜ்?''

""எத்திராஜ் கல்லூரியில படிச்சேன்.''

""என் பையன பிடிச்சிருக்கா?''

அதிரடியாய் கேட்டாள் ஜானகி.

ஹரிணி மெல்ல வெட்கப்பட்டு... ""அவருக்கு என்னை பிடிச்சிருக்கான்னு கேளுங்கம்மா...'' என்று சொல்லி, உள்ளே சென்றாள் ஹரிணி.

இதை ரசித்தான் ரமேஷ். பின் டிபன் வர, இருவரும் சாப்பிட்டனர். நடப்பது எல்லாம் சுந்தரேசனுக்கு, திருப்தியாக இருந்தது. மங்களம் மனசும் நிறைந்திருந்தது.

""அப்ப... எங்களுக்கு பிள்ளைய பிடிச்சிருக்கு... நீங்க முடிவ சொல்லிட்டீங்கன்னா மேற்கொண்டு பேசிடலாம்.''

ஆவலாக சொன்னார் சுந்தரேசன்.

""அங்கிள்... எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க ப்ளீஸ்... நாளைக்கு சொல்லிடறோம்,'' என்று கூறினான் ரமேஷ்.

""மாப்ள... நீங்க நல்லா யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க. ஆனா, நான், என் மனசுல உள்ளத சொல்லிடறேன்... எம்பொண்ணும், நீங்களும் யாருக்கு யாரும் எந்த விதத்திலும் கொறஞ்சவங்க இல்லை. ரெண்டு பேருமே உருவத்தில், படிப்பில், சமமான அந்தஸ்துள்ள குடும்பம் தான். இது மாதிரி அமையறது அபூர்வம். இது நடந்தா பலபேர் கண் பட்டுத்தான் தீரும்... அந்த அளவுக்கு பொருத்தமான ஜோடி நீங்க. நல்ல விஷயங்கள் சீக்கிரம் நடக்கட்டும்.''

தன் மனதில் பட்டதை, அப்பட்டமாக சொன்னார் சுந்தரேசன். தாயும், மகனும் சிரித்தபடி எழுந்து விடைபெற்றனர்.

அவர்கள் சென்ற பின், ஹரிணி பேசினாள்... ""அப்பா... என்ன இருந்தாலும் நானும், அவரும் சமம்ன்னு நீங்க சொல்லியிருக்க கூடாதுப்பா...''

""ஏம்மா... மனசில பட்டத தானே சொன்னேன்... நீ அவருக்கு, எந்த விதத்திலயும் குறைச்சலில்லம்மா.''

""அப்பா... உங்க மகள்ங்கறதுக்காக அப்படி கூட தோணியிருக்கலாம். ஆனா, ஆண்களுக்கு, "சுபீரியார்டி காம்ப்ளெக்ஸ்' இருந்தா, பெண்கள ஈக்வலா நெனைக்க தோணாதுப்பா...'' ஹரிணி சொல்ல, மங்களமும் அதை ஆமோதித்தாள்.

""ஆமாங்க... நாம பெண்ணை பெத்தவங்க. கொஞ்சம் அடக்கிதான் வாசிக்கணும்.''

""அட... என்ன நீங்க... நான் ஏதோ தப்பா பேசிட்டது போல குற்றம் சொல்றீங்க. ப்ளஸ், மைனஸ்ன்னு பாத்தா. ரெண்டு பேர்கிட்டயும், எந்த மைனசும் இல்ல. அதுதான் பொருத்தம்ன்னு சொன்னேன்.''

தன் நியாயத்தை மீண்டும் உறுதி செய்தார் சுந்தரேசன்.

ரமேஷ் வீட்டில்...

ஜானகி கேட்டாள், ""ஏண்டா அங்கயே சரின்னு சொல்ல வேண்டியதுதானே... ஏன் ஒரு நாள் டைம் கேட்ட?''

தன் அம்மாவையே கூர்ந்து பார்த்த ரமேஷ், ""அம்மா... பொதுவா பாக்குறப்ப, இது நல்ல சம்பந்தமா தோணும்... ஆனா, அந்த சுந்தரேசன் சொன்னதை கவனிச்சியாம்மா?''

"என்ன' என்பது போல் பார்த்தாள் ஜானகி.

""தம் பொண்ணுக்கு நல்ல வரன் சொன்ன, தன்னோட மருமகளையே விதவைன்னு ஒதுக்கி வெக்கிறாரேம்மா... அப்பறம், அவரோட பொண்ணு யாருக்கும் குறைஞ்சவ கிடையாதுன்னு சொன்னாரும்மா. தவிர, ரொம்ப சென்டிமென்ட் பாக்கறவரா இருக்காரும்மா...''

""சரி... அதுல என்னடா தப்பு! எனக்கு, நீ ஒஸ்தி. அதுமாதிரி அவருக்கு ஹரிணி ஒஸ்தி. அப்புறம், இந்த சென்டிமென்ட், ஜோஸ்யம், கடவுள் நம்பிக்கை, நேரம் காலம், ஆன்மிகம். இதெல்லாம் ஒருவரோட தனிப்பட்ட நம்பிக்கைகள். தங்களுக்குன்னு ஒரு அளவுகோல, தங்களோட திருப்திக்கேத்தபடி வெச்சு பாக்கறாங்க... இத ஒரு குற்றமுன்னு சொல்ல முடியுமா!''

தன் அம்மாவை ஆழமாக பாத்தான் ரமேஷ்.

""அம்மா... நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவு தான். இப்படி சில விஷயங்களில், நீ சொல்ற மாதிரி, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அளவுகோல் வெச்சு பாக்கறாங்க... வாழுறாங்க சரி. ஆனா, அதுல மத்தவங்க பாதிக்கப்பட கூடாதும்மா. இப்ப எனக்கு இந்த உருவ வழிபாடுல அவ்வளவா நம்பிக்கை கிடையாது. பெத்த அம்மாகிட்ட ரெண்டு வார்த்த பேசாத எவனும், எந்த கோவில்ல, எத்தன சாமிய கும்பிட்டாலும், எந்த புண்ணியமும் கிடைக்காதுன்னு நம்பறவன் நான். அதுக்காக மத்தவங்களும், இது மாதிரி நடக்கணும்ன்னு நான் சொல்ல முடியுமா... இல்ல அதுமாதிரி இல்லாதவங்க கிட்ட பேசாமத்தான் இருக்க முடியுமா... ஆனா, அவரு, தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்த, தன் மருமகளேயே விதவைங்கிற காரணத்துக்காக ஒதுக்கிட்டாரும்மா... அதபத்தின, விஷயத்தில நமக்கென்னன்னு இருக்க முடியாதும்மா... நாளைக்கு, நமக்கே... அதாவது, உனக்கே கூட, இந்த அவமதிப்பு வரலாம் இல்லியா... நம்பள வாழ்த்தற மனசுதான் முக்கியம். தவிர, அவரு பொண்ணை பத்தி, அவருக்கு ரொம்ப உயர்வான எண்ணம் இருக்கு. அதுல தப்பில்ல... ஆனால், இந்த சென்டிமென்ட் பாக்கறவரு, கணவன் - மனைவிங்கிற உறவுல, ரெண்டுபேரும் சமம்ன்னு எப்படி நெனைக்குறாரு... "கான்ட்ராஸ்ட்டா' இருக்கும்மா... ஸோ, என்னோட தேவை, அவருக்கு ரொம்ப முக்கியமோ இல்ல, கட்டாயமோ இல்லம்மா.''

ரமேஷின் கருத்துக்களால் துணுக்குற்றாள் ஜானகி, ""டேய் என்னடா என்னென்னவோ பேசற... பொண்ணு தான்டா முக்கியம்,'' என்றாள்.

""பொண்ணுதான் முக்கியம்ன்னா நான், எனக்கு பிடிச்ச... ஒரு பொண்ணை சொன்னா ... நீ சரின்னு சொல்வியாம்மா? மத்தபடி குடும்பம், அந்தஸ்து இதெல்லாம் பாக்க மாட்டியே!''

ஜானகி விழித்தாள். ""அட... அது இல்லடா... பொண்ணுதான் முக்கியம். மத்ததை சரி செய்துக்கலாம்ன்னு சொல்ல வர்றேண்டா,'' என்று சமாளித்தாள்.

""அம்மா... இந்த சம்பந்தத்தை யோசிச்சுதான் ஏத்துக்கணும்மா, ''சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்றான் ரமேஷ் .

குழப்பமானாள் ஜானகி, "என்ன இது... காலாகாலத்தில், ஒரு கால் கட்டு போட்டு, கடமையை முடிக்கலாம் என்றால், வேறு மாதிரி சிந்திக்கறானே இவன்...' என, கவலையோடு நினைத்தபடி தன் மத்த வேலைகளை கவனிக்க தொடங்கினாள் ஜானகி.

மறுநாள் காலை — ரமேஷ், சமையல் அறையிலிருந்த ஜானகியிடம் வந்தான்.

""அம்மா... என் சந்தோஷம் தானே உன் சந்தோஷம்?''

""ஆமாண்டா... அதிலென்ன சந்தேகம்.''

""சந்தேகம் இல்லம்மா... மறுபடியும், "கன்பார்ம்' செய்துகிட்டேன்ம்மா... இப்ப நான் சொல்றத கேட்டு நீ ஆச்சரியமோ, பயமோ, குழம்பவோ கூடாது... என்ன?'' என்று கேட்டு, தொடர்ந்து தன் மனதை திறந்தான் ரமேஷ்.

அவன் சொல்ல சொல்ல ஜானகியின் முகத்தில், நவரசங்களும் ஊர்வலமாக வரத் துவங்கின.

அதே நேரம், வீட்டில் உற்சாகமாக இருந்தார் சுந்தரேசன். ரமேஷ், வரப்போவதாக மொபைல் மூலம் சொல்லியிருந்தான்.

""மங்களம்... மாப்ள வந்ததும், மொதல்ல சுவீட் தரணும். நேத்திக்கே, அந்த திருப்பதி பிரசாதத்தை கொடுக்க மறந்துட்டேன். ப்ரிட்ஜ்லேந்து, அந்த லட்ட எடுத்து வை,'' பரபரத்துக் கொண்டிருந்தார். கூடவே, தன் வாட்சை பார்த்துக் கொண்டிருந்தார். நல்ல நேரம் முடிய, இருபது நிமிடங்கள் இருந்தன. அதற்குள் ரமேஷ் வர வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஹரிணி ஆபீசிற்கு சென்றிருந்தாள்.

அடுத்த சில நிமிடங்களிலேயே ரமேஷ் வந்தான். உள்ளே நுழைந்தவன், வணக்கம் சொல்ல, பதிலுக்கு உற்சாகத்தோடு வர வேற்றார் சுந்தரேசன். சில நொடிகள் கழிந்த பின்,""மாப்ள எல்லாம் நல்ல விஷயம் தான?'' ஆர்வமுடன் கேட்டார் சுந்தரேசன்.

""ரொம்ப நல்ல விஷயம் மாமா, உங்க குடும்பத்துல நாங்க சம்பந்தம் வெச்சுக்க முழு சம்மதம். ஆனா...'' சற்று நிறுத்தினான் ரமேஷ்.

"மாமா என்று அழைத்துவிட்டு, என்ன "ஆனால்' என்று பீடிகை போடுகிறான்' என்பது போல், கேள்விக் குறியோடு அவனைப் பார்த்தார்.

""உங்களுக்கு, "சென்டிமென்ட்' விஷயத்தில் ரொம்ப நம்பிக்கைன்னு சொன்னீங்க மாமா. அது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. அதாவது, எது எப்படி நடக்கவேண்டுமோ அது அப்படி தான் நடக்கணும், நடக்கும். அதுதான் விதி இல்லியா மாமா?'' ரமேஷ் கேட்க, சுந்தரேசன், "புரிந்தது' என்பது போலத் தலையாட்டினார்.

""நான் உங்க கூட சம்பந்தம் வெச்சுக்கறதுல, ஒரு சின்ன மாற்றம் மாமா. ஆமாம்... நான் உங்களுக்கு மாப்பிள்ளையா வர்றேன். ஆனா, ஹரிணிக்கு அல்ல,'' சற்று நிறுத்தினான் ரமேஷ்.

சுந்தரசேனுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஹரிணிக்கு இல்லையா... அப்படியென்றால், எதற்கு, "மாமா' என்று அழைக்கறான்.... இந்த கல்யாணம் நடக்காதா... பின்ன எப்படி மாப்பிள்ளை உறவு...

""புரியவில்லையா மாமா... நான் உங்க குடும்பத்துல உறவு வெச்சுக்க போறது... நீங்க மகளா பாவிக்கிற, உங்க மருமக கூடத்தான். அப்ப நான் உங்க மாப்ள மாதிரிதானே... கிரிஜாவும் எனக்கு தூரத்து உறவு முறையில், அத்தை மக மாதிரிதான். நான், அவங்கள மனைவியா ஏத்துக்க காரணம், எல்லா தகுதியும் அந்தஸ்தும் உள்ள உங்க மகளுக்கு, என்னைவிட்டா நிறைய மாப்பிள்ளைங்க கிடைப்பாங்க. ஆனா, ஒரு ஆண் துணை தேவைங்கிற ஸ்தானத்துல, கிரிஜா இருக்காங்க. என்னால, அந்த இடத்த பூர்த்தி செய்ய முடியும். இனிமே அவங்களும் சுமங்கலியா வலம் வரலாம். நானும், உங்க மூத்த மாப்பிள்ளையாக இருந்து, ஹரிணிக்கு நல்ல ஒரு பையனா பாக்கறேன். இத எங்கம்மாகிட்டேயும் சொல்லிட்டேன். கிரிஜாகிட்டயும் சம்மதம் வாங்கிட்டேன். மத்தபடி, இதுல உங்க கருத்த சொல்லலாம் மாமா...''

சொல்லிவிட்டு, அமைதியாக அவரையே பார்த்தான் ரமேஷ்.

அவனின் நிதானமான பேச்சு, சொன்ன காரணங்கள் எதையும் சுந்தரேசனால் மறுக்க முடியவில்லை. அவர் நம்பும் சென்டி மென்டையும், அவரால் நிராகரிக்க முடியவில்லை. தான் ஒதுக்கிய கிரிஜாவிற்கு, ஒரு நல்வாழ்வு கிடைக்கப் போவதை தவிர்க்கவும் விரும்பவில்லை. இன்னார்க்கு இன்னார் என்று இருக்கும் போது, கிரிஜாவுக்குரியவன் எப்படி ஹரிணிக்கு கணவனாக முடியும்! அதை உணர்ந்து மனதில் எழுந்த சிறு சலனத்தை மறைத்து, கைநீட்டி, ""வெல்டன் ரமேஷ்,'' என்றார். பதிலுக்கு ரமேஷும் கை குலுக்கினான்.

***

ஸ்ரீநிவாசன்

Dinamalar

பகிர்வுக்கு நன்றி அண்ணா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.