Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்தும் அமைதி திரும்பாத வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna%20heavily%20damaged%20by%20shelli

"இங்கு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் 'இறுதியான நிலையான அரசியற் தீர்வொன்றை' முன்வைப்பதற்குப் பதிலாக 'வீதிகளுக்கு தரைவிரிப்புக்களை (carpeting the road)' போடும் பணியில் ஈடுபட்டுள்ளது" என றெக்னோ அடிகளார் குறிப்பிட்டார். இவ்வாறான அதிருப்தியான உணர்வுகளுடன் வடக்கில் மக்கள் வாழ்கின்றனர். 

இவ்வாறு ucanews.com correspondent, யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவிக்கின்றார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

சிறிலங்காவின் வடக்கில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களைப் போன்று, கடந்த நான்கு ஆண்டுகளாக அருட்திரு றெக்னோ பேர்னாட் அடிகளார் நாட்டில் நல்லதொரு சூழல் வருமென்ற எதிர்பார்ப்புடன் பொறுமையாகக் காத்திருக்கிறார். 

நல்லதொரு சமிக்கையானது தனது கடவுளிடமிருந்து வரவேண்டும் என அடிகளார் எதிர்பார்க்கவில்லை. இது தனது அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். 

"போர் முடிவடைந்ததன் பின்னர், அரசாங்கத்திடமிருந்து மீளிணக்கப்பாடு, சமாதானம் போன்ற பலவற்றை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். நாட்டில் மீளிணக்கப்பாடு ஏற்படுவதற்கான எவ்வித சமிக்கையும் காணப்படவில்லை" என யாழ்ப்பாணத்தில் இயங்கும் கத்தோலிக்க தேவாலயத்தின் சமூக சேவைகள் அமைப்பான கியூடெக் (HUDEC) நிறுவனத்தின் இயக்குனரான அருட்திரு றெக்னோ அடிகளார் தெரிவித்துள்ளார். 

பல பத்தாண்டுகளாக சிறிலங்கா அரசாங்கமானது தமிழ்த் தாய்நாடு கோரி வடக்கு கிழக்கில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மிகக் கொடிய உள்நாட்டு யுத்தம் ஒன்றை மேற்கொண்டது. இந்த யுத்தமானது மே 2009ல் சிறிலங்கா அரசாங்கப் படைகளால் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. போர் நடைபெற்ற காலத்தில் போரில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது. இறுதிக் கட்ட யுத்தத்தில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் சந்திக்கும் உச்சிமாநாடானது நவம்பரில் சிறிலங்காவில் நடைபெற்ற பின்னர் அடுத்த இரு ஆண்டுகளுக்கு சிறிலங்காவே இதன் தலைமைப் பொறுப்பை வகிக்கும். இதன்மூலம் சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மிக இலகுவாக நீக்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. 

ஆனால் போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மனித உரிமை மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நம்பகமான, சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது பயனுள்ள நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக அனைத்துலக மனித உரிமைக் கண்காணிப்பாளர்களும் மேற்குலக அரசாங்கங்களும் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன. 

தன்மீதான குற்றச்சாட்டை ஏற்று பொறுப்பளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதானது தமிழர்களுக்கும் சிங்களவர்களைக் கொண்ட நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் பெரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. போர் இடம்பெற்ற வலயங்களில் பொருளாதார அபிவிருத்தியை மட்டும் ஏற்படுத்துவதன் மூலம் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்திவிட முடியும் என சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. 

நாட்டில் மீளிணக்கப்பாடு ஏற்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கமானது 'மீளிணக்கப்பாட்டிற்கான பாதை' எனக் கருதிச் செயற்படுவதாகவும், நெடுஞ்சாலைகள் போன்ற அடிப்படைக் கட்டுமாணத் திட்டங்களை மட்டுமே நாட்டில் மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கை மற்றும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பளித்தல் போன்றன புறக்கணிக்கப்படுவதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரணாக விளங்கிய வன்னிப் பெருநிலப்பரப்பின் ஊடாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அங்கே புதிதாகத் திறக்கப்பட்ட வங்கிகள், இராணுவத்தால் நடாத்தப்படும் கடைகள், தொலைத் தொடர்புகள் தொடக்கம் குடிபானங்கள் வரை பல்வேறு பொருட்களை விளம்பரப்படுத்தும் பதாகைகள் போன்றவற்றைப் பார்க்க முடிந்தது. 

"இங்கு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் 'இறுதியான நிலையான அரசியற் தீர்வொன்றை' முன்வைப்பதற்குப் பதிலாக 'வீதிகளுக்கு தரைவிரிப்புக்களை (carpeting the road)' போடும் பணியில் ஈடுபட்டுள்ளது" என றெக்னோ அடிகளார் குறிப்பிட்டார். இவ்வாறான அதிருப்தியான உணர்வுகளுடன் வடக்கில் மக்கள் வாழ்கின்றனர். 

சிறிலங்கா அரசாங்கமானது வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை இன்னமும் பின்வாங்க செய்யவில்லை. வடக்கில் தமிழர் வாழும் பிரதேசங்களில் பாரியளவில் மீள்கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு தெற்கிலிருந்து சிங்களவர்கள் வரவழைக்கப்படும் அதேவேளையில், தமிழ் மக்களுக்கு எவ்வித வேலை வாய்ப்புக்களை வழங்கவும் அரசாங்கம் முன்வரவில்லை. 

தமிழ் மக்கள் தமது பகுதிகளிலுள்ள காவற்துறை நிலையங்களில் தமது சொந்த மொழியான தமிழ் மொழியில் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. பாதுகாப்பு நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை. வடக்கில் முதலீடுகளை இடுவதற்கும் தொழில்களை உருவாக்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கமானது ஊக்கத்தை வழங்கவில்லை. சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு முடிவுகட்டப்படவில்லை. 

"சோறு கறி போன்றன போதியளவில் கிடைக்கின்றதா என்பது மட்டும் முக்கியமல்ல. 'எனக்குச் சொந்தமானது' 'நான் மதிக்கப்பட வேண்டும்' 'எனக்கு கௌரவம் உண்டு' 'எனது கருத்துக்களும் பரிந்துரைகளும் மறுக்கப்படுகின்றன' போன்றன மக்களின் உணர்வாக உள்ளன. 'எனது மொழி மற்றும் எனது கலாசாரம் போன்ற மதிக்கப்பட வேண்டும்' போன்றன மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான காரணிகளாகும். இங்கு நேர்மையான அணுகுமுறை ஒன்று கைக்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இந்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தவில்லை என நான் நினைக்கிறேன்" என எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரன் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். 

கொள்கை வகுப்பு மற்றும் தீர்மானம் எடுத்தல் போன்ற விடயங்களில் தமிழ் மக்களுடன் கலந்தாலோசிக்கப்படுவதில்லை எனவும், 'அபிவிருத்தி என்பது முழுமையானதல்ல' என்கின்ற அணுகுமுறையுடன் சிறிலங்கா அரசாங்கம் செயற்படவில்லை என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஆராய்ச்சி நிறுவனமான மாற்றுக் கொள்கைகளுக்கான நிறைவேற்று இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். 

"தாம் இன்னமும் சந்தேகக் கண்ணுடன் நடாத்தப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்" எனவும் இவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

"மக்கள் ஒன்றுகூடி ஏதாவது நிகழ்வுகள் அதாவது விளையாட்டுப் போட்டி அல்லது பாடசாலை நிகழ்வு போன்ற எதுவானாலும் தமக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே நடாத்தப்பட வேண்டும் என சிறிலங்கா இராணுவத்தினர் வடக்கிலுள்ள தமிழ் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் இந்த நிகழ்வுகளுக்கு இராணுவத்தின் உள்ளுர் அதிகாரிகள் அதிதிகளாக அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என இராணுவத்தினர் கூறியுள்ளனர்" என சரவணமுத்து விளக்கியுள்ளார். 

"இது ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரச் சட்டமாகும்" என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார். 

வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் உற்றுநோக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முன்னர் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன், அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைக்கப்பட்டு மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். இவர்கள் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் எனவும் இராணுவத்தினர் பலவந்தப்படுத்துவதுடன், பாலியல் கொடுமைகளுக்கும் உட்படுகின்றனர். 

அமிதா, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 1995ல் இணைந்துகொண்டார். இவர் 2005ல் திருமணம் செய்த போது சாதாரண வாழ்க்கைக்குள் மீண்டும் புகுந்துகொண்டார். இவர் வாரத்தில் இரு தடவைகள் யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் மக்கள் தொடர்பகத்திற்கு சமூகம் தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டார். 

"இவ்வாறு நான் இராணுவ முகாமுக்குச் சென்ற வேளைகளில் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டேன். சுவரைப் பார்த்துக் கொண்டிருக்குமாறு என்னிடம் கூறிவிட்டு எனது பின்புறத்தை சிறிலங்கா இராணுவத்தினன் ஒருவன் கைகளால் தொட்டான். அவன் என்னை முத்தமிட முயற்சித்தான். ஆனால் நான் அதனை அனுமதிக்கவில்லை. இதனால் அவன் தனது கைகளை எனது பாவடையின் மீது வைத்தவாறு என்னைத் தகாத முறையில் தொட்டான்" என அமிதா என்கின்ற பெண் கூறினார். 

"நான் இராணுவ முகாமுக்குச் செல்லாத வேளைகளில் இராணுவத்தினர் என்னைத் தேடி வீட்டுக்கு வருவர். ஒருநாள் நான் எனது பெற்றோரின் வீட்டில் தனியாக நின்றபோது சிறிலங்கா இராணுவத்தினன் ஒருவன் அங்கு வந்தான். அவன் என்னைப் பிடிப்பதற்கு முயற்சித்தான். 'நீ உனது அறைக்குள் சென்று உடைகளைக் களை. நான் உனது உடலிலுள்ள காயங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளேன்' என அந்த இராணுவத்தினன் என்னிடம் கூறினான்" என்கிறார் அமிதா. 

இவ்வாறான உடற்சோதனைகளைப் புரிவதற்கு மக்கள் தொடர்பகமானது பெண் இராணுவத்தை அனுப்பியிருக்கும் என அமிதா தெரிவித்தார். "நீ இதனைச் செய்யாவிட்டால், நான் உனது தொடைகளைப் பதம் பார்ப்பேன்" என அந்த இராணுவத்தினன் அமிதாவிடம் கூறினான். இதனைக் கேட்ட அமிதா வேறிடத்தில் மறைந்து கொண்டார். அதிலிருந்து இவர் மறைந்தே வாழ்ந்தார். 

இந்தச் சம்பவமானது சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிவிட்டது என்பதைக் காண்பிக்கின்ற ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டாகும். 

வடக்கில் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினர் இவ்வாறான பாலியல் சித்திரவதைகள் மற்றும் மீறல்களைப் புரிகின்றனர் என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகிறது. இவ்வாறான சம்பவங்கள் மற்றும் மீறல்கள் உண்மையல்ல எனவும், இவை செவிவழிக் கதைகள் எனவும் இராணுவப் பேச்சாளர் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கில் சுயாட்சியை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதன் மூலம் மட்டுமே நாட்டில் நிலையான அரசியற் தீர்வை அடைந்து கொள்ள முடியும் என பல சுயாதீன அவதானிப்பாளர்கள் உறுதி தெரிவித்துள்ளனர். செப்ரெம்பர் 21ல் நடாத்தப்படவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தது. 

"சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்தத் திட்டமிட்டதானது சாதகமான நகர்வாக காணப்படுகிறது" என விக்கிரமரட்ன குறிப்பிட்டுள்ளார். ஆனால் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கமானது எவ்வாறு பகிர்ந்து வழங்கும் என்பது தொடர்பில் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக இதில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் எவ்வாறு மாகாணங்களுக்கு பகிரப்படும் என்பது உற்றுநோக்கப்படுகிறது. 

"13வது திருத்தச் சட்டத்தின் படி சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில அதிகாரங்கள் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அதிகாரங்கள் தற்போது வழங்கப்படவில்லை. இதனால் சிறிலங்கா அரசாங்கமானது வடக்கு மாகாணத்திற்கு உச்ச அளவிலான அதிகாரத்தை வழங்க முன்வரவேண்டும். மாகாண ஆளுநரின் ஒப்புதல் இல்லாது மாகாண சபையான எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது" என யாழ்ப்பாணத்தில் வெளிவரும் 'உதயன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தேவநாயகம் பிறேமானந் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை யார் கொண்டுள்ளனர் என்பது இன்று விவாதிக்கப்படும் பிரதான விடயமாக உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் சட்டத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றும் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா இராணுவத்தினர் தனியாருக்குச் சொந்தமான பெருமளவான நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளனர். இந்த நிலங்களில் பாதுகாப்புப் படையினர் விடுதிகள், தோட்டங்கள், சுற்றுலா மையங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளனர். இதனால் காணிகளுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 

"பெருமளவான நிலங்கள் எவ்வாறு பாதுகாப்பு நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட முடியும்?" என குருபரன் கேள்வியெழுப்புகிறார். தமக்குச் சொந்தமான நிலங்களை மீளவும் தம்மிடம் தருமாறு கோரி 1000 வரையான மக்கள் நீதிமன்றில் முறையிட்டுள்ளனர். இந்த நிலமானது 2430 ஹெக்ரேயர் பரப்பளவைக் கொண்டதாகும். இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுள் மிகப்பெரிய பலாலி இராணுவத் தளமும் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் 'தல்சேவன சுற்றுலா விடுதியும்' அடங்குகிறது. 

"இந்த நிலங்களில் விமானநிலையம் மற்றும் துறைமுகம் போன்றன அமைக்கப்படவுள்ளதால் இதனை மக்களிடம் திருப்பிக் கொடுக்க முடியாது. பலாலி போன்ற இராணுவத் தளங்கள் தேசியப் பாதுகாப்புக்கு அவசியமானது" என வணிகசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார். 

"பிரிவினைவாதத்தை தூண்டுகின்ற பரப்புரைகளை மேற்கொள்கின்ற அமைப்புக்கள் பல நாடுகளில் செயற்படுகின்றன. நாங்கள் எமது நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது" என வணிகசூரிய தெரிவித்துள்ளார். 

"சிறிலங்காவானது மனித உரிமை விடயத்தில் சிறப்பாகச் செயற்படுவது நிச்சயமானதாகும். நாட்டில் எல்லா இனங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதாக நாம் நம்புகிறோம்" என்கிறார் வணிகசூரிய. 

ஆனால் ஐரோப்பிய நாடொன்றில் புகலிடம் பெற முயற்சிக்கும் அமிதா போன்றவர்களுக்கு மீளிணக்கப்பாடு என்பது நாட்டில் இடம்பெறமாட்டாது எனக் கருதுகின்றனர். "நான் நாட்டுக்கு ஒருபோதும் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது எனக்குத் தெரியும். நான் இதற்குப் பதிலாக தற்கொலை செய்வதுதான் சிறந்த வழியாக இருக்கும்" என்கிறார் அமிதா. 

"அரசியற் தீர்வின்றி நாம் சிறந்த எதிர்காலத்தைப் பெறமுடியாது" என்கிறார் றெக்னோ அடிகளார். இவர் இந்த விடயத்தில் சாதகமான எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20130918109075

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.