Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீயாகதீபம் லெப்டினன் கேணல் நாள்-காணொளிகள்.

Featured Replies

 

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர்.

முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க. நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப் பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்

அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தையா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..

லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.

தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?

வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத் தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.

“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.

இந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.

திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர் என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.

அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..

பேச முடியவில்லை……

சிரிக்க முடியவில்லை………

ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?

முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.

“சிந்திய குருதியால்

சிவந்த தமிழ் மண்ணில்

சந்ததி ஒன்று

சரித்திரம் படைக்க….

முந்திடும் என்பதால்….

முளையிலே கிள்ளிட…..

சிந்தனை செய்தவர்

சிறுநரிக் கூட்டமாய்….

‘இந்தியப்படையெனும்’

பெயருடன் வந்தெம்

சந்திரன் போன்ற…

திலீபனின் உயிரைப்

பறித்திட எண்ணினால்…..

பாரிலே புரட்சி…..

வெடித்திடும் என்று….

வெறியுடன் அவர்களை…..

எச்சரிக்கின்றேன் !”

மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

இரத்த அழுத்தம் – 80/50

நாடித் துடிப்பு – 140

சுவாசம் – 24

- தியாக வேள்வி தொடரும்…

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.

ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.

நாலைந்து நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது? தான் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் கூறினார். அவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம். பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார். அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது.

அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். அவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்…..

என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது…… இந்தியத் தூதரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா? திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.

திலீபா ! நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது போலும்? உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

எமக்கு மட்டும் ஆயுதங்களைத் தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன? முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.

நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்.

ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும்? நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும்? தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் – பூரிப்பும் எப்பொழுது மலரும்?

அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.

ஆனால் நமது மண்ணில் அப்படியா?

எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள்? எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும்? எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்?

அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்?

அகிம்சை ! அகிம்சை ! அகிம்சை !

இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார்? நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யார்? சிங்களப் பேரினவாதம்தான் !

இன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் !

தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

“ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி வரையும் போராடுவான்…”

போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.

உதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. என்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.

காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.

இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.

இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.

தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர்.

அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.

“ கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கிட்டண்ணா, குட்டிசிறி ஐயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கின்றனர்.

திலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.

இரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை

இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.

அவரின் இரத்த அழுத்தம் 85/60

நாடித்துடிப்பு- 120

சுவாசம் -22

- தியாக வேள்வி தொடரும்….

 

இந்தியசிறிலங்கா கூட்டுச்சதிகளில் இருந்து தாயகத்தை மீட்க உண்ணா நோன்பிருந்துவீரச்சாவடந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர்  தியாகி லெப்ரினண்ட்கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது நினைவு நாட்கள் இன்று நான்காம் நாள்இந்திய – சிறிலங்காகூட்டுச்சதிகளிற்கு எதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்துஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன்.

தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அற்புத மனிதன் திலீபனன். ஒருசொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து உயிரை விட்டு உலகத்திற்கே அஹிம்சையைப் போதித்துச் சென்றான் தியாகி திலீபன். திலீபனின் ஆசை என்ன? கனவு என்ன? அவன் மக்களுக்கு எதனைக் கூறிச்சென்றான்? ஆம் மூன்றே மூன்று வார்த்தை தான் அது. “ மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” ஒவ்வொரு ஆண்டும் தியாகி திலிபனின் நினைவு நாட்களில் திலீபன் விட்டுச்சென்ற அந்த வார்த்தைகலை நாம் நினைவில் நிறுத்தி வழிபடுகின்றோம்.

18-09-1987 அன்று உண்ணாவிரத மேடையில் திலீபன் அண்ணா ஆற்றி உரையில் இருந்து..அவரது தெளிவான உறுதியான இலட்சியத்தின் மீது அவருக்கு இருந்த அந்த அசைக்கமுடியாத நம்பிக்கை..தெளிவாக அவரே அதை கோடிட்டு காட்டி உள்ளார்.
திலீபனுடன் நான்காம் நாள்

கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.

கடந்த மூன்று நாள்களாக ஒன்றுமே நான் உண்ணாமல் அருந்தாமால் இருந்தது சிறிது களைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் திட மனத்துடன் அதைச்சமாளித்துக் கொண்டேன். நான்காம நாளான இன்றுதான் எனக்குச் சற்று நாவறர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதைப்பொருட்படுத்தாமல் யாரிடமும் என் விரதத்தைப்பற்றிக் கூறாமல் இருந்தேன். இரண்டு மூன்று முறை ராஜனும் – நவீனும் என்னைச் சாப்பிட அழைத்த போது நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன்.

ராஐன், மாத்தயா அண்ணையிடம் இன்று என்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்பதை மாத்தயா அண்ணை என்னை மேடைக்குப் பின்புறமிருந்த வீட்டிற்கு அழைத்துப் பேசியதிலிருந்து அறிந்து கொண்டேன். என்னை வீணாகப் பட்டினி இடக்க வேண்டாம் என்று மாத்தயா வேண்டிக் கொண்டார். திலீபன் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது என்னால் எதுவும் அருந்த முடியவில்லை என்று மாத்தயாவிடம் கூறிய போது என்னால் தாங்க முடியவில்லை. விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சோகச் சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. ஓன்றுக்குமே நான் அழுததில்லை. இன்று?… மாத்தயா என்னை அதன் பின் வற்புறுத்தவில்லை.

 

ஆனால் இன்று காலை 10 மணியளவில் தலைவர் பிரபாகரன் என்னை அழைத்துவரச் சொன்னதாக மாத்தயா என்னிடம் கூறியபோது, என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

தலைவர் மிகவும் கண்டிப்பானவர். ஏன்ன சொல்லப்போகிறாரோ என்ற கேள்வியை எனக்குள் பலமுறை கேட்டுக் கொண்டேன்.

தலைவரின் அறைக்குள் பயத்துடன் சென்றேன்.

“இருங்க வாஞ்சி அண்ணா” என்ற அன்பான குரல் என்னை வரவேற்றது – ஆச்சரியத்தால் என் கண்கள் அகன்றுவிட்டன. சாப்பிடாத மயக்கத்தில் என் கண்களும் மயங்கிவிட்டனவா என்று, ஒருகணம் சிந்தித்தேன்.

இல்லை !

என் முன் இருப்பவர், தலைவர் பிரபாகரன் தான் !

துறு, துறுவென்று பார்க்கும் அதே கண்கள். வட்ட முகம், கூரிய அழகான பெரிய மூக்கு,

அளவாக – அழகாக நறுக்கிவிடப்பட்ட நீண்ட மீசை.

“நீங்க படிச்சவர். வயதில் மூத்தவர். நான் சொல்ல வேண்டியதில்லை. திலீபனில் அன்பு இருக்கவேண்டியது தான். அதற்காக இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் எதுவும் குடிக்காமல், சாப்பிடாமல் இருப்பது? நீங்கள் அவரைப் பார்க்க வேண்டியவர். உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும். நான் தலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைத்திருக்கிறீர்கள்? திலீபன் என் பிள்ளையைப் போன்றவன். நானே அவனை இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதித்திருக்கிறேனென்றால் என் மனத்தைக் கல்லாக்கித்தான் அதைச் செய்திருக்கிறேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையான மனோதிடம் திலீபனிடம் இருப்பதனால்தான், உண்ணாவிரதத்தை அவன் நடத்த விரும்பியபோது நான் அதற்குச் சம்மதித்தேன். ஒவ்வொருவராக இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான் நல்லது. திலீபனுக்கு அடுத்த சந்தர்ப்பம் உங்களுக்குத்தர முயற்சிக்கிறேன். அதுமட்டும் நீங்கள் வழக்கம்போல் சாப்பிட்டு, குடித்து இருக்கவேண்டும். திலீபனை வடிவாகக் கவனித்துக் கொள்ளுங்கள். இப்போது எதையாவது குடித்து உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள்.”

என்று கூறிய தலைவர், சொர்ணனை அழைத்து குளுக்கோசும் எலுமிச்சம் பழமும் வரவழைத்து, தானே தன் கைப்படக் கரைத்து, அந்தக் கிளாசை என்னிடம் நீட்டினார். ஆவ்வளவு கூறியபின் என்னால் எதுவும் திருப்பிக் கூற முடியவில்லை.மடமடவென்று வாங்கிக் குடித்தேன்.

தலைவர் பிரபாகரன் கண்டிப்பானவர் என்பது தெரியும். ஆனால் அவரின் அன்பான வார்த்தைகள் எமது வாயைத் தானாகவே அடைக்கச் செய்துவிடும் என்பது எனக்கு இன்றுதான் புரிந்தது.

திலீபனின் உண்ணாவிரதச் செய்தி இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், அரபு நாடுகளிலிருந்தும் தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டேயிருந்தன.

ஏன்? இந்தியாவின் தமிழகத்திலும் இந்தச் செய்தி, உணர்வு அலைகளைக் கொந்தளிக்கச் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உட்பட பல நாட்டுப் பத்திரிகைகள் திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகத் தலைப்புச் செய்திகளைப் போட்டிருப்பதாக, எமது தகவல் தொடர்பு அறிக்கைகள் கூறுகின்றன.

இன்று திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து நான்காவது நாள், அவரது உடல் மிகவும் அசதியாகக் காணப்பட்டது…..பயற்றங்காயைப்போல் வாடி வதங்கி, கட்டிலின்மேல் அவர் சுருண்டு கிடந்த தோற்றம், பார்ப்பவர் நெஞ்சங்களைப் பதை பதைக்க வைத்தது. அப்படியிருந்தும் அவர் இன்று மக்கள் முன் உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு:

“அன்பார்ந்த தமிழீழ மக்களே !

விளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651 ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயவங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும்.

எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. முக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்”.

நேற்று இரவு முழுவதும் அவர் ஆழ்ந்து தூங்கினார். இன்று காலை ஒன்பது மணி ஆகியும் தூக்கத்தைவிட்டு அவர் எழுந்திருக்கவில்லை.

இளைஞர்களான ‘நவீனன்கள்’ இருவரும், அவரின் இடப் பக்கத்திலும் வலப்பக்கத்திலுமாக அமர்ந்திருந்து விசிறியால் ஆள்மாறி ஆள் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று இரவு வழக்கத்தைவிட நாடித்துடிப்பு 110 ஆக அதிகரித்திருந்ததில் இருந்து அவர் உடல் நிலை பாதிப்படையத் தொடங்கிவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.

சூரியனின் கதிர்கள் பூமியெங்கும் வியாபித்திருந்தன.

அவரருகே சென்று அவரின் நாடித்துடிப்பை மெதுவாகப் பரிசோதித்துக் கொண்டு சுவாசத்தையும் எண்ணுகின்றேன்.

நாடித்துடிப்பு – 120

சுவாசத்துடிப்பு – 24

ஆம். சாதாரண நிலையிலிருந்து மிகவும் அசாதாரணமாகக் கூடிக்கொண்டிருக்கிறது நாடித்துடிப்பு.

(நாடித்துடிப்பு – சாதாரணம் 72-80)(சுவாசம் – 16-22)

நான்கு நாட்களாக நீராகாரம் உட்கொள்ளாத காரணத்தினால் உடலில் திரவநிலை குறையத் தொடங்கிவிட்டதால், இருதயத்திற்கும் நுரையீரல்களுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவும், கனமும் குறையத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இருதயமும், சுவாசமும் பலமாக வேலை செய்யத் தொடங்கியிருந்தன. இதைவிட இரண்டு நாட்களாகச் சிறுநீர் கழியவில்லை.

தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்குச் சிறுநீர் கழியாமல் இருக்குமானால் சிறுநீரகத் தளர்ச்சி (Kidney Failiure) ஏற்படலாம். ‘கிட்னி பெயிலியர்’ ஏற்படுமானால் அது இருதயத்தில் தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இறப்பை உண்டுபண்ணலாம்.

எனக்கு தெரிந்தவரை வழக்கமான நடைபெறக்கூடி இந்த நிகழ்சிகளினால் திலீபனின் உயிர் பறிக்கப்பட்டக்கூடிய வாய்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

நல்லூர்க்கந்தனிடம் முறையிட்ட மக்கள் நாச்சிமார் கோயில் அம்மனிடமும் மனமார வேண்டுவதைக் காதல் கேட்கிறேன்.

“தாயே உன் பிள்ளையொன்று உணவில்லாமல் செத்துக் கொண்டிருக்கிறது. அதை நீதானம்மா கடைசிவரையும் காப்பாற்ற வேண்டும்….”

நீண்ட, நாட்களுக்குப்பின், திலீபனுக்காக மக்களுடன் சேர்ந்து நானும் இப்படி வேண்டிக்கொள்கின்றேன்.

வெகு நேரத்தின்பின் கண் விழித்த திலீபன், எழும்புவதற்குச் சத்தியின்றி படுக்கையிலேயே கிடக்கிறார்.

மைதானம் சனக்கூட்டத்தினால் நிரம்பிக்கொண்டிருக்கிறது.

தீபனைப் பார்ப்பதற்குகாக அணியணியாக மேடைக்கு முன் புறம் மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்………. ஓருவர் முகத்திலாவது மகிழ்ச்சி இல்லை. சில தாய்மார்கள் திலீபன் படுத்திருக்கும் பரிதாப நிலை கண்டு பொறுக்க முடியாடல் விம்மி விம்மி அழுகின்றனர்.

கிறிஸ்தவ பாதிரியாரும் – பல வருடங்காய் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும், 1983 ஜூலையில் வெளிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதினள் சிங்கள இனவாதப் பூதங்கால் கொல்லப்பட்ட சமயம் எதிர்பாராத விதமாகத் தம்பியவரும் ஆகிய, வண, பிதா சிங்கராயர் அவர்கள், திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார்.

ஓரு துறவியாக இருந்தாலும் திலீபனின் கோலத்தைக் கண்டதும் அவர் அழுதே விட்டார். திலீபனின் கரங்ளைப் பற்றி அவர் அன்போடு வருடினார்.

உடல் சோர்வுற்று இருந்தபோதிலும் திலீபன் அவருடன் மனம் திறந்து வெகுநேரம்வரை பேசிக்கொண்டிருந்தார்.

தீலீபனின் பிடிவாதத்தையும், திடமனத்தையும் நன்கு அறிந்தவர் துறவி அப்படிருத்தும் திலீபன் படுத்திருக்கம் கோலத்தைக் கண்டு பொறுக்க முடியாடல் விசும்பினார்.

கொஞ்சமாவது தண்ணீர் அருந்திவிட்டு உண்ணாவிரதத்தைத் தொடருமாறு அவர் வற்புறுத்தினார்.

பாதர் சிங்கராயர்மீது திலீபனுக்கு எப்போதும் மிகுந்த மதிப்பும் பாசமும் உண்டு. அப்படியிருந்தும் தனக்கே உரிய புன்முறுவலைக் காட்டி- அதையே அவரின் – வேண்டுகோளுக்குப் பதிலாக்கிவிட்டு- மௌனமாகினார்- திலீபன்.

பாதர் சிங்கராயர் சென்ற பின் ஈரோஸ் இயக்கத் தலைவர் பாலகுமாரும், இயக்க யாழ். மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும் ‘பரா’ வும் வந்தனர்.

எந்த இயக்கத்தவர்களானாலும் அவர்ளுடன் சகஜமாகப் பேசுவதில் திலீபனுக்கு நிகர் திலீபன்தான்.

அவர்களும் திலீபனைத் தண்ணீராவது அருந்தும்ப டிவற்புறுத்தினார். அனால், அவர்களுக்குக் கிடைத்த பதிலும் மௌனம்தான்.

செல்வி குகசாந்தினி, திருமதி நல்லையா ஆகிய இரு பெண்கள் திலீபனுக்கு ஆதரவாக, சாகும்வரையிலான உண்ணாநோன்பினை ஆரம்பித்தனர். ஆத்துடன், வல்வெட்டித்துறையயில் 05 தமிழர்கள் ஏற்கெனவே உண்ணாவிரதம் ஆரம்பித்துவிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

இன்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், திலீபனை வந்து சந்தித்தார். இந்திய அரசிடமிருந்தோ, இந்தியத் தூதுவரிடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று. அவர் திலீபனிடம் கூறினார். அவருடன் திரு யோகியும் வந்திருந்தார்.

தீலீபனின் பொறுப்புக்களையெல்லாம் தன் தலைமீது சுமந்து கொண்டிருப்பவர் யோகி.சில நாட்களுக்குமுன் இந்திய அமைதி காக்கும் படையின் பாரபட்சமான நடவடிக்கைகளையும் சிங்கள இராணுவத்துக்கு ஆதரவான நடவடிக்கைளையும் கண்டித்து, ஓரு நாள் அடையாள மறியற் போராட்டம், சகல இராணுவ முகாம்களிலும் பொது மக்களால் நடத்தப்பட்டபோது, யாழ் கோட்டையின் முன்பாக அன்றைய மறியல் போராட்டத்தை முடித்துவைத்து திலீபன் பேசிய பேச்சு என்நினைவுக்கு வருகின்றது.

“ இந்த யாழ்ப்பாணக் கோட்டையியே சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழனின் கொடி பறந்த அந்த கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். ….. போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும் ஒல்லாந்தரிடமிருந்தும் ஆங்கிலேயரும் கைப்பற்றிக்கொண்டனர். ஆங்கிலேயரிடமிருத்து சிங்களவர் கடைசியில் கைப்பற்றினர். அதாவது புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அந்த தமிழ்க்கொடியைப் பறக்க விடுவதற்காக, ஒவ்வொருவரும் எமது உயிரை அர்பணித்துக்கொண்டு வருகிறோம். அதில் என் பங்கு எப்போது……? என்பதுதான் எமது கேள்வியாக இருக்க வேண்டும் தவிர, பதவிகள் எமக்கு பெரியதல்ல.. பதவிகளைத்தேடிச் செய்பவர்கள் புலிகள் அல்ல. அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்!”

அந்த தீர்க்கரிசனப் உயிர்வடிவம் கொடுப்பதற்குற்காகத்தான், திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான்.

திலீபன் ஓரு சிறப்பான சதுரங்க வீரன். தனது பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளை இதற்காக அவர் பெற்றுள்ளார். ஆரசியலில் எந்த காயை எப்படி, எந்த நேரத்தில், நகர்த்த வேண்டும் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரிந்துருக்க வேண்டும்.

அகிம்சைப் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் இந்திய நாட்டின் சமாதான படையினரின் கண்களைத் திறப்பதற்கு, இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது முற்றிலும் பொருத்தமானதே. இந்தியா உள்ப்பூர்வமாக அண்ணல் காந்தியைப் பின்பற்றும் நாடாக இருந்தால், நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இல்லையேல் உலகத்தின் பார்வையில் இருந்து அது தப்பவே முடியாது.

அன்றிரவு திலீபனுக்குத் தெரியாமல் அவரது இரத்த அழுத்தத்தைப் பதிவு செய்து விட்டேன். அது 100/65

நாடித்துடிப்பு – 114சுவாசம் – 25

இந்தியா என்ன செய்யப்போகிறது? ஏனக்கு ஒன்றும் புரியவில்லை. “வெள்ளையனே வெளியேறு” என்று ஆங்கிலேயரை வெளியேற்றுவதற்கதாகப் போராட்டம் நடாத்திய காந்தி இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ஆனால் திலீபனோ இந்தியப் படையை வெளியேறு என்று கூடக் கேட்கவில்லையே! இவர்கள் திலீபனின் சாதாரண கோரிக்கைகளுக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? எனக்கு எதுவும் புரியவில்லை.

- தியாக வேள்வி தொடரும்….

திலீபனுடன் மூன்றாம் நாள்

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது. முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது. நாக்கும் வறண்டுபோயிருந்தது. இந்த நிலையில் அவரின் பற்களைச் சுத்தம் செய்ய முடியாது. எதற்கும் அவரின் விருப்பத்தைக் கேட்டுவிடுவோமே என்று அவரைப் பார்த்துக் கேட்கிறேன்.

“பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?”

“இல்லை வாஞ்சியண்ணை… வேண்டாம்.”

கலைந்திருந்த தலைமயிரை நானே அவரருகில் சென்று வாரி விடுகிறேன். அவர் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை.

“வெளிக்குப் போகேல்லையோ?”

என்று மெதுவாகக் கேட்கிறேன்.

“போகவேணும் போலதான் இருக்கு.”

“சரி கீழே இறங்கி வாருங்கோ” என்று கூறிவிட்டு, மேடையை விட்டு நானே முதலில் இறங்கி, கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன்.

“வேண்டாம் விடுங்கோ……நானே வருகின்றேன்” என்று என் கையை விலக்கிவிட்டு தானே கீழே குதிக்கின்றார்…

மனதை எவ்வளவு திடமாக வைத்திருக்கின்றார் என்று எனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டேன்.

மறைவிடத்துக்குச் சென்ற அவர், சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார்.

5 நிமிடம்……

10 நிமிடம்……

15 நிமிடம்……

20 நிமிடம்……

நிமிடங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், எதுவித பயனும் ஏற்படவில்லை. அவரைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. என் கண்கள் என்னையறியாமலே கலங்குகின்றன. மேடையின் வலப்புறத்தில் ஏறி அமர்ந்த திலீபன், தூரத்தில் தெரியும் வழக்கமான ஆட்களை அழைத்து உரையாடத் தொடங்கினார். “கண்டபடி பேசினால் களைப்பு வரும்… கொஞ்சம் பேச்சைக் குறையுங்கோ…” என்று அவரைத் தடுக்க முயல்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. தனக்கே உரிய சிரிப்பை என் வார்த்தைகளுக்குப் பதிலாக்கிவிட்டுத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

Thiyaka-Theepam-Thileepan-Anna-3-600x400

கடைசியாக அவர் நீர் அருந்தி 45 மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இப்படி தன்னைத்தானே வருத்தப்போகிறார்?

இப்போதே சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு நாட்கள் போனால் என்னென்ன நடக்குமோ? என்று எண்ணிய நான், அவரின் காதுக்குள் குசு குசுக்கிறேன்.

“என்ன பகிடியா பண்ணுறீங்க?…… ஒரு சொட்டுத் தண்ணீரும் குடிக்கமாட்டேன் என்ற நிபந்தனையுடன்தானே இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கினனான். பிறகு எப்படி நான் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற கேட்டீங்க?”…

என்று ஆவசத்துடன் என்மீது பாய்கிறார்.

“இல்லை…… இப்பவே உங்களுக்குச் சலம் போறது நின்று போச்சு…… இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மேலும் மேலும் கஷ்டமாக இருக்குமே…… அதுக்காகத்தான் கேட்டனான்……”

என்று அசடு வழியக் கூறிவிட்டு, வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

“இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.”

அவரின் பேச்சில் இருந்த உண்மைகள் எனக்கும் தெரியும். ஆனால், திலீபனின் உயிர் மிகவும் பெறுமதி மிக்கது. அதை இப்படி வருந்த விடுவதா? என்ற ஏக்கத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால் அவர் தன் உயர்ந்த சிந்தனையால் என் பேச்சுக்கு ஆப்பு வைத்துவிட்டார்

நேரம் செல்ல செல்ல நல்லூர் ஆலய மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்காக வந்திருந்த சனக்கூட்டம், இன்று இலட்சத்தைத் தாண்- -டியிருந்தது. யாழ்ப் பாண நகரத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் காலை 9 மணி முதல் வரிசைவரிசையாக, வெள்ளைச் சீருடையில் அணிவகுத்து வந்து மைதானத்தை நிறைக்கத் தொடங்கினர்.

திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒர் அங்கத்தவர் என்ற நினைப்பு விடுபட்டு, “தமிழ் இனத்தின் பிரதிநிதி” என்ற எண்ணம்தான் அந்தச் சனக்கூட்டத்தினர் மத்தியில் நிறைந்திருந்தது. தாய்க்குலம் – திலீபன் வாடி வதங்கியிருந்த கோலத்தைக் கண்டு கண்ணீர் சிந்தியது. அந்தக் கண்ணீர் மழையில் இதயம் கனிந்து விட்ட வருணபகவான் கூடத் தீடீரென்று பலமாகக் கண்ணீர் சொரியத் தொடங்கிவிட்டான்.

ஆம் !

அனலாகக் கொதித்துக்கொண்டிருந்த சூரியன், ஒரு பிள்ளையின் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத், தன்னைத் தானே கருமேகத்தின் போர்வைக்குள் மூடிக்கொண்டான் மழைநீர் கோவில் மைதானத்தில் ஆறாக ஒடிக்கொண்டிருந்தது. ஆனால், பொதுமக்களில் ஓருவர்கூட எழும்பால் அப்படியே இருந்தனர். அப்பப்பா! மக்களின் உணர்வு மழைக்கு முன்னிலையில் அந்த வருணனின் மழைநீர் வெகு சாதாரணமானது என்ற எண்ணம் நிதர்சனமாகத் தெரிந்தது.

வாடிய நிலையிலும், சோர்ந்த நிலையிலும் தன் உயிரினும் மேலான மக்கள் மழையில் நனைவதைக் கண்ட திலீபன், அவர்களை சனைய வேண்டாம் என்று கைகளை அசைத்துச் சைகை காட்டினார். ஆனால், அவர்களோ அசைவதாக இல்லை. “உன்னால் மட்டும் தானா தமிழினத்துக்காக மெழுகாக உருக முடியும்? …… உன் உயர்ந்த இலட்சியத்துக்கு முன் இந்த மழை வெகு சாதாரணமானது!” என்று கூறுவதுபோல், அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

முரளியும் – நிரஞ்சனும், வேறு சிலரும் படங்குகளை விரித்துக் கட்டிக் கொண்டிருந்தனர்.

ஒலிபெருக்கியில் காசி ஆனந்தனின் கவிதையொன்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது.

“திலீபன் அழைப்பது சாவையா? – இந்தசின்ன வயதில் இது தேவையா?”

மூன்றாம் நாளான இன்று இராண்டாவது மேடையில் சூடான பேச்சுக்களும், கண்ணீர்க் கவிதைகளும் முழங்கிக்கொண்டிருந்தன. பேச்சாளர்களில் ஒருவரும், எமது தீவிர ஆதரவாளருமான காங்கேசன்துறை கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்கள் இப்படிப் பேசினார்:

“தியாகி திலீபனின் உயிர் விலைமதிப்பற்றது. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் தமிழ் இனத்துக்கே சொந்தமானவர். அப்படிப்பட்ட திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீராவது அருந்தி தன் உடலைக் காப்பாற்ற வேண்டும். ஆவர் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி நீர் உணவு அருந்தி எம் கவலையைப் போக்கவேண்டும். இது எனது வேண்டுகோள் மட்டுமல்ல. இங்கே வந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளும் இதுதான்.”

அந்தப் பேச்சைக் கேட்ட திலீபனின் முகம் வாடியதை நான் அவதானித்தேன். தான் பேசப்போவதாகக் கூறினார். அவரிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன்.

“இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன்.” அவர் பேசி முடித்ததும், மழை ஓய்ந்துவிட்டது.

திலீபனுடன் சேர்ந்து அவன் கோரிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினமும் நல்லூர்க் கோவில் மைதானத்தில் அடையாள உண்ணாவிரதம் இருப்போர் தொகை அதிகாரித்துக் கொண்டே வந்தது.

பலர் தாமும் சாகும்வரை திலீபனைப்போல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணா- -விரதம் இருக்க விரும்புவதாக,எம்மிடம் வந்து கூறினர். அவர்களின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் திணறினோம்.

செல்வி. சிவா துரையப்பா என்ற பெண் அச்சுவேலியைச் சேர்ந்தவர். 17.09.1987 இல் திலீபனுக்கு ஆதரவாக மூன்றாவது (சிறிய) மேடை ஒன்றில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

அன்றிரவு திலீபன் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவஸ்தைப்பட்டார். வைத்தியர் ஒருவரை அழைத்துவந்து அவரைப் பிரிசோதிக்க ஏற்பாடு செய்தோம் ஆனால், திலீபன் அதை மறுத்துவிட்டார். எந்தவித பரிசோதனையும், சிகிச்சையும் தான் இறக்கும் வரை தனக்கு அளிக்கக்கூடாதென்று உறுதியாகக் கூறிவிட்டார்.

அன்று அவர் கஷ்டப்பட்டு உறங்கும்போது நேரம் நள்ளிரவு 1.00 மணி.

அவரின் நாடித்துடிப்பு :- 11,

சுவாசம் – 24.

- தியாக வேள்வி தொடரும்….

திலீபனுடன் இரண்டாம் நாள்

அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்துவிட்டார்.முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார்.சிறுநீர் கழித்தார்.ஆனால் மலம் இன்னும் போகவில்லை.அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும்,அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார்.பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.நிகழ்ச்சிகளுக்கு தேவர் தலைமை தாங்கிக்கொண்டிருந்தார்.

கவிதைகளைப் படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்துத் தம் பெயர்களைப் பதிவுசெய்து கொண்டிருந்தனர்.நிதர்சனம் ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமெரா,நாலா பக்கங்களிலும் சுழன்று படம் பிடித்து கொண்டிருந்தது.மேடையில் கவிதைகள் முழங்கி கொண்டிருந்த போது “நான் பேசப்போகின்றேன்.மைக்கை வாங்கி தாங்கோ”என்கிறார்.

Thiyaka-Theepam-Thileepan-Anna-32-600x40

சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறீங்கள்.களைத்து விடுவீர்கள் என்று சொல்லப்படுகிறது.”இரண்டு நிமிசம் மட்டும் நிற்பாட்டி விடுவேன்.பிளீஸ் மைக்கை வாங்கித் தாங்கோ”என்று குரல் தளதளக்கக் கூறுகிறார்.அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.கண்கள் குழிவிழுந்து,முகம் சோர்ந்து காணப்பட்டாலும் அந்தப் பசுமையான சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.

”இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது” என்ற நிபந்தனையுடன்,மேடையில் நின்ற தேவரிடம் மைக் பெற்றுக் கொடுக்கப்படுகிறது.திலீபன் பேசப்போவதை தேவர் ஒலிப்பெருக்கியில் அறிவித்ததும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது.

திலீபன் பேசுகிறார்…!

Thiyaka-Theepam-Thileepan-Anna-20-600x40

“எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.நின்று கொண்டு பேசமுடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன்.நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்பது தெரியாது.அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன்.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம்.அறநூற்று ஐம்பது பேர் இன்றுவரை மரணித்துள்ளோம்.மில்லர் இறுதியாகப் போகும்போது என்னிடம் ஒரு வரி கூறினான்.நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன்.

“நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன்.மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம்”என்று கூறிவிட்டு,வெடிமருந்து நிரப்பிய லொறியை எடுத்து சென்றான்.இறந்த அறுநூற்று ஐம்பது பேரும் அநேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள்.அதனை நான் மறக்க மாட்டேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தலைவரின் அனுமதியினைக் கேட்டேன்.அப்போது தலைவர் கூறிய வரிகள் எனது நினைவில் உள்ளன.

“திலீபன்!நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன்” என்று அவர் கூறினார்.இத்தகைய ஒரு தெளிவான தலைவனை,தனது உயிரைச் சிறிதுகூட மதிக்காத தலைவனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும்.அது நிச்சயமாக தமிழீழத்தை,தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும்.இதனை வானத்தில் இருந்து,இறந்த அறுநூற்று ஐம்பது போராளிகளுடன் சேர்ந்து,நானும் பார்த்து மகிழ்வேன்.

நான் மனரீதியாக,ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன்.மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடை பெறுகின்றேன்.

விடுதலைப் புலிகள் உயிரிலும் மேலாக சிறுவர்களை,சகோதரிகளை,தாய்மார்களை,தந்தையர்களை நினைக்கிறார்கள்.உண்மையான,உறுதியான இலட்சியம்.அந்த இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள்.எனது இறுதி விருப்பமும் இதுதான்”

மிகவும் ஆறுதலாக – சோர்வுடன் – ஆனால்,திடமாகப் பேசிய அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர்.

அன்றிரவு தலைவர் வந்து திலீபனைப் பார்த்தார்.சோர்வுடன் படுத்திருந்த திலீபன் தலையை அவர் தன் கரங்களால் வருடினார்.ஒரு தகப்பனின் அன்பையும் – தாயின் பாசத்தையும் ஒன்றாகக் குழைத்தது போன்றிருந்தது அந்த வருடல்,இரண்டு இமய மலைகளையும் என் கண்கள் விழுங்கிக் கொண்டிருந்தன.

இரவு 12 மணிக்கு திலீபன் உறங்கத் தொடங்கினார்.

திலீபனின் வீட்டில் குணபாலன் என்ற சிறுவன் வேலை செய்வதற்காக இருந்தான். அவனது வறுமை நிலையைக் கண்ட திலீபன் தன் கையில் கிடைக்கும் பணத்தை அவனிடம் அடிக்கடி கொடுப்பார்.

யாழ். இந்துவில் அவர் படிக்கும்போது, வீட்டுக்கு வரும்போதெல்லாம் குணபாலனுக்காக கைநிறைய “டொபி”களுடன் வருவார். குணபாலனுக்கு ரீ.வி. பார்க்கும் பழக்கம் இருந்தது. தன் வேலைகளை முடித்துவிட்டு இரவு எட்டு மணிக்குப்பின், பக்கத்துவீட்டிற்குச் சென்று அவன் ரீ.வி. பார்ப்பது வழக்கம்.

குணபாலனுக்காகத் திலீபன் தன் தந்தையிடம் ஒரு ரீ.வி. வாங்கி வைக்குமாறு பலமுறை கெஞ்சிக் கேட்டார். இவரது தொல்லை தாங்கமுடியாமல் இராசையா ஆசிரியர் ஒருநாள் ரீ.வி. யை வாங்கி வந்துவிட்டார். குணபாலனும் அன்றிலிருந்து எதுவித சிரமமுமின்றி ரீ.வி. பார்த்துவரத் தொடங்கினான்.

யார் மீதும் எளிதில் அன்பு வைப்பதிலும், இரக்கம் காட்டுவதிலும் திலீபனுக்கு நிகர் அவரேதான். அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

திலீபன் யாழ். இந்துவில் படிக்கும் போது அவரது நெருங்கிய நண்பனாக இருந்தவர்களில் கணேசன் என்பவரும் ஒருவர்: இவர் இப்போது ஒரு டொக்ரராக இருக்கின்றார்.

ஒருநாள் திலீபன், கணேசன் மற்றும் சிலர் ஊரெழுவிலுள்ள திலீபனின் வீட்டுக்கு வந்தனர். அப்போது யாழ். இந்துவில் பொருட்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

திலீபனின் வீட்டிலே சில மாதங்களுக்குமுன் ஒரு நாய் செத்து விட்டதால், அதை ஒரு மரத்தின் கீழ் கிடங்கு வெட்டித் தாட்டிருந்தார்கள். திலீபனும் நண்பர்களும் அந்தக் கிடங்கைக் கிண்டி நாயின் எலும்புக் கூட்டை வெளியில் எடுத்துத் துப்புரவு செய்தார்கள்.

அப்போது ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் வெளியே போனாலும், திலீபனும் நண்பர்களும் அதைப் பொருட்படுத்தாமல் தமது வேலையை முடித்துவிட்டு, அந்த எலும்புக்கூட்டை அன்றே எடுத்துச்சென்று பொருட்காட்சியில் வைத்தனர்.

எதையும் ஆராய்ச்சி செய்துபார்ப்பதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால்தான், தான் இந்த உண்ணவிரதப் போராட்டத்தில் இறக்க நேரிட்டால் தனது உடலை யாழ். வைத்திய பீடத்துக்கு ஆராய்ச்சிப் படிப்புக்காக அனுப்பிவைக்கும்படி அவர் கூறினார் போலும்?

- தியாக வேள்வி தொடரும்…

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த [பார்த்திபன்] லெப்டினன் கேணல் திலீபன் அவர்கள், இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன் வைத்து நீர்கூட அருந்தாமல்  உண்ணாவிரதம் ஆரம்பித்த மூன்றாம் நாள் இன்றாகும்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்

-2.jpg

அவரால் முன்வைக்கப்பட்ட ஐந்தம்சக்கோரிக்கைகளாவன,

  1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
  2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
  3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
  4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
  5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.