Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு மே-18களும், மக்கள் ஆணையும் -- வளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மே-18களும், மக்கள் ஆணையும் -- வளவன்

25 செப்டம்பர் 2013

(மிதவாதத்திலிருந்து தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்திலிருந்து மிதவாதத்திற்கும்)

தமிழர் தேசிய விடுதலைக்கான முப்பது வருட கால சாத்வீகப்போராட்டத்தின் நிறைவுக்கட்டத்தில் 1976 மே 14 ம் திகதி வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 1977 தேர்தலில் ' ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு ' என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் மக்களாணை பெறப்பட்டது. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும் என்ற தீர்மானத்தின் சாரம் 'சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு' என்பதே. இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களைப் பொறுத்தவரை இதுவே ஜனநாயக முறையில் தமிழீழத் தனியரசுக்கான தமது மக்களாணையை அவர்கள் முதலாவதாக மட்டுமல்ல இறுதியாகவும் வெளிப்படுத்தக்கூடியதாகவிருந்த சந்தர்ப்பமாகும்.

1977 இற்குப் பின்னர் தமிழீழம் குறித்த மக்களாணையை இலங்கைத் தீவில் ஜனநாயக முறையில் முன்வைக்க முடியாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் (1979 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) கொண்டுவரப்பட்டது மட்டுமல்ல சிறிலங்காவின் அரசியல் யாப்பில் 6ம் திருத்தம் என்ற திருத்தத்தையும்; 1983 இல் கொண்டுவந்து தனிநாட்டுக்கோட்பாட்டை - அதாவது இந்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையை - யாப்புரீதியாகவே சிறிலங்கா அரசு மறுதலித்துவிட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 77இல் கிடைத்த மக்களாணையை அடிப்படையாகக் கொண்டே பின்னாட்களில் தொடர்ந்த ஆயுத வழியிலான தமிழீழ விடுதலைப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி 36 வருடங்கள் கடந்து விட்டது. இதற்கு பிறகு எத்தனையோ நடந்து முடிந்து ஒரு பாரிய இனவழிப்பிற்கு பின்னர் எஞ்சிய, தோற்றுப்போன, இனமாக தமிழர்கள்; தெரிகின்றார்கள். இதைத்தான் வட்டுக்கோட்டையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் நந்திக்கடலில் நடந்த சமருடன் முடிவடைந்து விட்டதாக அரசு தனது ' போர் வெற்றிப்பிரகடனத்தில்' முழங்கியது.

முப்பது வருடகால அகிம்சைப்போர், முப்பது வருடகாலத்திற்கும் மேலாக நீண்ட ஆயுதப்போர் என்பவற்றின் முடிவில், ஆரம்பிக்கும் புதியதொரு தேசிய விடுதலைப்போராட்ட வடிவத்தின் நுழைவாயிலில் நின்றபடி மீண்டும் ஒரு மக்கள் ஆணை வழங்கப்பட்டிருக்கின்றது. 1977 இல் வழங்கப்பட்ட ஆணைக்கு இதனை ஒப்பிடுபவர்கள் இரண்டு காலப்பகுதிகளின் சூழமைவுகளையும் சிந்திப்பார்களாயின் இன்றைய மக்கள் ஆணையின் கனதி புரியும். வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஆதரித்து ஆணையிட்டபோது, பிரிவினைக்கான கோரிக்கைக்காக பேரினவாதம் பரிசளிக்கூடிய இனப்படுகொலையை அனுபவித்து மீண்ட, அழிக்கப்பட்ட, ஒரு இனமாகவோ, அபிவிருத்தியை வேண்டிநிற்கும் பொருளாதாரச் சிதைவுகண்ட தேசமொன்றின் மக்களாகவோ தமிழ் மக்கள் இருக்கவில்லை.

இன்று நிலைமை அதுவல்ல. போர்தின்ற தேசமொன்றில் இனஅழிப்பின் முடிவில், தோற்றுப்போன ஒரு இனமாக, தொடரும் அரச பயங்கரவாதத்தின் நேரடி, மறைமுக அச்சுறுத்தல்களுக்கும், கண்காணிப்புக்கும் மத்தியில் அச்சமின்றி உரத்து தங்கள் உரிமைக்குரலை தமிழர்கள் முழங்கியிருக்கிறார்கள். எத்தனையோ இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்கள், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவப் பிரசன்னம், சட்டவிரோத மீள் குடியேற்றம், நெருக்கீடுகள், ஆபத்துக்கள் மத்தியில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் திரண்டெழுந்து தங்கள் விடுதலைக்காக - உரிமைக்காக வாக்களித்தனர். தமது உயிரையும் வாழ்வையும் பணயம் வைத்த இந்த உரிமை முழக்கம் பலருக்குப் பல செய்திகளைச் சொல்லியிருக்கின்றது. பல அதிர்வுகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

தேர்தலில் தமிழர்கள் தமது தீர்க்கமான முடிவை, ஜனநாயக ரீதியில் சர்வதேசத்தின் செவிகளில் எடுத்துரைத்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் சில நாடுகள் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேசியக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டு எந்தவிதமான தீர்வையும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை 13வது திருத்தச் சட்டத்திற்குள் அடக்கிவிடலாம் என்றும் கனவுகாண்கின்றன. இந்த நிலையில் நாங்கள் இறைமையுள்ள தனித்தேசியமாக வாழவிரும்புகிறோம். வன்னிப்போரில் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்து, இராணுவ தொழில்நுட்ப வளங்களை வழங்கி விடுதலைப் புலிகளை நீங்கள் தோற்கடித்திருக்கலாம். ஆனால் நாங்கள் தனித்துவமாக வாழ விரும்புகிறோம். அதுவே எங்கள் அபிலாசை. தாயகம், தேசியம், தன்னாட்சி, இவை மறுக்கப்படுமாயின் தனியரசு என்பது தமிழர்களின் அபிலாஷை என்ற தமிழர்கள் சொன்ன செய்தியை அதன் உண்மைகளை சர்வதேசம் புரிந்து கொண்டால் - புரிதலுக்கு அமைவாகச் செயற்பட்டால் இலங்கையின் எதிர்காலம் அமைதியானதாக, ஆரோக்கியமானதாக இருக்கும்.

வடக்கு மாகாணத்தில் அதிகூடிய வாக்களிப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு காணாத வெற்றியும் வெறுமனே ஒருதேர்தல் வெற்றி மட்டுமல்ல. அது நாட்டை ஆளும் அரசாங்கங்களுக்கும் கடும் போக்காளர்களுக்குமான தமிழரின் செய்தி. இதன் மூலம் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு முக்கியமான செய்திகளை தமிழ் மக்கள் கூறியுள்ளனர். அபிவிருத்தி என்று வீதிகளைப் புனரமைக்கலாம், வீடுகளைக் கட்டலாம், வடக்கின் வசந்தம் என்று யாழ்.தேவியில் கிளிநொச்சி வரலாம். ஆனால் சலுகைகளால் எங்கள் மனங்களை வென்று விட முடியாது. காலாகாலமாக நீங்கள் எங்களுக்குச் செய்த கொடுமைகளை மறந்து உங்களோடு நாங்கள் சேர்ந்து வாழ்வதென்பது கடினமானது. போரில் தமிழ் மக்களைக் கொன்றொழித்து, நீங்கள் எங்கள் இனத்தைக் கருவறுத்த கொடுமையை நாம் எக்காலத்திலும் மன்னிக்கவும் மறக்கவும் மாட்டோம். நாம் போராடியது ஜனநாயக உரிமை என்று நீங்கள் குறிப்பிடும் தேர்தலுக்காகவோ அல்லது பாதையைத் திறந்து போக்குவரத்து உரிமை என்று பெயரிடும் அபிருத்திக்காகவோ அல்ல. என்ற அரசிற்கான தமிழரின் செய்தி தெளிவானது.

இலங்கை அரசிற்கு தமிழர்கள் தந்த செய்தியின் அதிர்வை அரசு புரிந்து கொண்டதாகவே தெரிகிறது. வடக்கு மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் குறித்து அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன பேசுவது இவ்வாறான ஒரு மீள்புரிதலின் ஒரு அடையாளமே.

அரசின் அத்தனை ஆசை வார்த்தைகளையும், தடுமாற வைக்கும் தந்திரங்களையும் புறந்தள்ளி தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டுக்கு முன் ஒரு ஆணையை எப்படித் தந்தார்களோ அதைவிட இரட்டிப்புத் தன்மையான பலத்தையும் மக்கள் எழுச்சியையும் காட்ட வேண்டிய காலத்தின் நியதியைக் கருத்தில் கொண்டு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு அவர்கள் கேட்ட வெற்றியை கையளித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல சில செய்திகளையும் வழங்கியிருக்கிறார்கள்.

30 ஆசனங்கள் என்பது உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கூட எதிர்பாராத வெற்றி. அது மேடைகளில் அவர்கள் பேசிய அதிக பட்சக் கனவு மட்டுமே. விடுதலைக்காகவும், சுயகௌரவத்துடன் வாழும் கனவுக்காகவும். அந்த ஏக்கத்துடன், கனவுடன் இறந்துபோன லட்சம் பேர் புதைக்கப்பட்ட மண்ணில் நின்று கொண்டிருக்கும் மக்கள் அதை நனவாக்கியிருக்கிறார்கள். வெற்றியாளர்கள் அந்த மக்களின் கனவுகளைப் புரிந்து கொள்வதும், அதன்வழி மக்களையும் தேசிய விடுதலைப்போரையும் வழிநடத்திச் செல்வதும் மட்டுமே மக்களுக்கு வழங்கத்தக்க ஒரே கைமாறு.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் மிகச்சிறந்த தெரிவு அல்ல, ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலும் பார்க்க மிகச்சிறந்த தெரிவு தமிழர்களுக்கு இல்லை என்பதே யதார்த்தம். தேர்தலுக்கு முன்னும், அதன் பின்னும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது விரக்தி கொள்ளவும், வெறுப்படையவும் தமிழர்களுக்கு பல அரசியல், நிர்வாகக் காரணங்கள் இருக்கின்றன. அது போலவே தேர்தலில் போட்டியிட்ட அனைவருமே தமிழத்தேசியத்திற்காக தமது வாழ்வினை அர்ப்பணித்தவர்களோ, தியாகிகளோ அல்ல. இவர்களில் பலர்மீது கடுமையான விமர்சனங்களும் இருந்தாலும் கூட. இதைப்பற்றிப் பேசுவது, விமர்சிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் தமிழர்கள் அத்தனையையும் மறந்து மன்னித்து வரலாற்று வெற்றியைப் பரிசளித்திருக்கிறார்கள்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் அரசியல் தலைமைத்துவத்தின் - சாணக்கியத்தின் மீதான கவர்ச்சியாலோ விக்னேஸ்வரன் அவர்களின் அறிவு சட்டப்புலமை மீதான அசையாத நம்பிக்கையாலோ, தேர்தல் விஞ்ஞாபனத்தின் கொள்கைகளால் கவரப்பட்டோ மட்டும் தமிழ் மக்கள் கூட்டமைப்பை தெரிவுசெய்து வெல்ல வைக்கவில்லை, தேசிய விடுதலைப்போருக்காக கொடுக்கப்பட்ட விலைகளும், தியாகமும் வீணாகி விடக்கூடாது என்பதற்காகவும் தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் கொடுத்த ஆணைக்கு மாறான அரசியல் தடத்தில் நகர்ந்து தமிழினத்தை மீண்டும் ஏமாற்றி விடாமல் இருக்க மக்கள் இவர்களை இறைஞ்சுகிறார்கள்.

ஒரு காலத்தில் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்குக் காரணம், சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல. தமிழ் மிதவாதத் தலைவர்களுமே. இவர்கள் செய்த ஜனநாயக அரசியலின் தோல்வியே ஆயுதம் ஏந்த வைத்தது. தமிழீழம் பெற்றுத்தருவோம் என்று தேர்தலில் வென்ற அன்றைய அரசியல் தலைவர்கள் பின்னர் வேறு கனவுகளில் மூழ்கியமையால் தமிழினம் இத்தனை அழிவுகளையும் கண்டதை மறந்துவிடக்கூடாது.

1977இல் தமிழீழம் கேட்டவர்கள், 1981 இல் மாவட்டசபையை ஏற்றுக்கொண்டமையால் 1983 மே 18 இல் நடந்த உள்ளுராட்சித்தேர்தலில் தமிழ் மக்கள் மிதவாத அரசியல் தலைமைகளை அரசியல் அரங்கிலிருந்து தூக்கித் தூரவீசிவிட்டு தீவிரவாதத்தலைமையின் பின்னால் அணிதிரண்டமையும், ஏறத்தாள இரு தசாப்தத்தின் பின்னர் தீவிரவாதத்தலைமையின் அங்கீகாரத்துடனும் ஆசீர்வாதத்துடனும் மீண்டும் அரசியல் அரங்கில் அங்கீகாரம் பெறவேண்டியிருந்தமையும் கடந்த கால வரலாறு. மீண்டும் ஒரு மே 18 இல் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில் மிதவாத அரசியல் தலைவர்களிடம் போராட்டம் முழுமையாகக் கையளிக்கப்பட்டிருக்கிறது. கடந்தகாலத் தவறுகளின் வரலாற்றுத் தண்டனையை இன்றைய தலைமைகள் நினைவில் கொண்டு தமிழர்களை வழிநடத்திச் செல்வது காலச்சக்கரம் மீண்டும் பழைய ஒழுங்கில் சுழன்று விடாமல் தடுக்கும்.

இலங்கை அரசும் ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு செய்த எல்லா நடவடிக்கைகளையும் முதலில் இருந்து இப்போது தொடங்கியுள்ளது. அத்துமீறல்களும், அடாவடிகளும், அபகரிப்புக்களும் தொடர்கின்றன. தேர்தல் தந்த தோல்வியின் விரக்தியால் எதிர்காலத்தில் இவை மேலும் அதிகரிக்கலாம். யாழ்.மாவட்டத்தில் மேலும் பல இராணுவமுகாம்களை அமைக்க வேண்டும் என்ற ஹத்துருசிங்கவின் ஆதங்கம் இவ்வகையானதே. இவ்வேளையில் மக்கள் ஆணையை மீறி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டால் தமிழ் இளையோர் தீவிரவாத அரசியல் அடிப்படையில் அந்த மக்களாணைக்குச் செயல்வடிவம் கொடுக்கவும் மிதவாத அரசியலைப் புறக்கணிக்கவும் விழையும் ஆபத்திருத்தலை புரிதல் தமிழினத்திற்கு செய்யும் வரலாற்று உதவி. ' கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்' 'தமிழீழம் கேட்டவர்களுக்கு தமிழகத்தில் தனி வீடு கிடைத்தது' போன்ற பழைய கோசங்கள் மீண்டும் நினைவு படுத்தப்படுமானால் - அவ்வாறு நடந்தால், இன்றைய தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசியவர்களுக்கு நடந்ததே நாளை தமிழ்க்கூட்டமைப்பிற்கும் நடக்கும். மீண்டுமொருமுறை அவ்வாறு நிகழுமானால் இந்த தேர்தல் வெற்றி மீண்டுமொரு மீளமுடியாத ஜனநாயகத் தோல்விக்குள் தமிழினத்தைத் தள்ளிவிடும்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபின் சர்வதேச சக்திகள் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சொல்ல இனிமேல் வாய்ப்பில்லை. அரசு பாரிய மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு புரிந்ததாக உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. உலகின் அனுதாபம் தமிழர்கள் மீது திரும்பியுள்ள இந்த வேளையில், தமிழ் வாக்காளர்களிடமிருந்து அமோகமான ஆணையைப் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெறுமனே பதவிப்போட்டிகளிலும் உள்வீட்டுச் சர்ச்சைகளிலும் அமைச்சுக்கான அடிபிடிகளிலும் போனஸ் ஆசன ஒதுக்கீட்டிலும் காலத்தை வீணாக்காது, தமிழ் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயல்திட்டமொன்றை தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டும். தமிழர்கள் மீதான உலக அனுதாபத்தினை எங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் தீர்வாக வடிவமாற்றம் செய்வதற்கான இராஜதந்திரப் பயணத்தை காலத்தின் அவசர தேவை உணர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்பதே தமிழர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆணை.

- வளவன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96932/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.