Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனம்

பிரபு கே பாலா

ஜோனாதன் ஜேம்ஸ் ஆகிய ஜே.ஜே., ஆல்பெர் காம்யு இறந்த நாளுக்கு மறுநாள் இறந்து போகும் எழவுச் செய்தியுடன் தொடங்குகிறது நாவல். மலையாள எழுத்தாளனான ஜே.ஜேவைப் பற்றி தமிழில் ஏன் எழுத வேண்டுமென்று பாலு என்ற கதைசொல்லியின் வியாக்கியானத்தை முன் வைத்து கதையைத் துவக்குகிறார் சுந்தர ராமசாமி. உலகெங்கும் தன் உள்ளொளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ, தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத்தையோ எவனெவனெல்லாம் தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டானோ, அவனெல்லாம் நம்மைச் சார்ந்தவன் என நம் மொழிக்கு மாற்றப்பட்டுவிட வேண்டும் என்கிறார். ’சிந்திக்கும் மனிதனுக்கு பாஷை உண்டு. உண்மையின் பாஷை இது. ஜே.ஜே அதைத் தேடியவன்’ என்கிறார் கதைசொல்லி.

JJ_Sila_Kurippugal_Sundara_Ramasamy_Kala

ஜே.ஜே. சில குறிப்புகள், இதுவரை நான் படித்த எந்த நாவல்களைப் போலும் கிடையாது. இது நாவலா அல்லவா என ஒரு கணம் திகைக்கச் செய்யும் கட்டமைப்பைக் கொண்ட புத்தகம். நாவலென்றால் தொடர்ச்சியான சம்பவங்களினாலான, ஒரு முடிவை நோக்கி பயணிக்கும் கதையெனவே கருதப்படும் வேளையில், இதுவும் நாவல்தான் ஆனால் கதையென தெளிவாக எதுவும் கிடையாது என்று உணரத்துகிறது. ஒரு கதாபாத்திரம், அக்கதாபாத்திரம் குறித்த சில மனிதர்களின் கோணங்களில் கருத்துக்கள், பின் அக்கதாபாத்திரத்தின் சொந்த எண்ணக் கீற்றுகளின் சில துளிகள், அவ்வளவே இந்த நாவல்; ஆனால் ஒரு நாவலுக்குரிய ஒருங்கிணைப்புடன். நாவல் என்றால் என்ற என்ன என்பதான விளக்கத்தையே நம்மை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் கட்டமைப்பு.

சிறிது ஜே.ஜே பற்றிய தத்துவ விசாரணையுடன் தொடங்குகிற நாவல், பாலு என்ற எழுத்தாளனின் ஆதர்சமாக ஜே.ஜேவை அறிமுகப்படுத்தும்போதுதான் நாம் முதன்முதலாக ஜே.ஜே வைப் பார்க்கிறோம். ஜே.ஜேவைப் பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கும் பாலுவின் மூலம் நாம் ஜே.ஜே ஒரு பெர்பெக்‌ஷனிஸ்ட் என்ற பிம்பமாகவே அறிந்து கொள்கிறோம். போகப்போக இது அத்துணை உண்மையில்லையென்றானாலும், அவன் ‘உண்மையைத் தேடியவன்’ என்றதில் மாற்றமில்லை.

ப்ளாக் எழுத வந்த புதிதில் ’பின்நவீனத்துவம் என்றால் கட்டுடைப்பு இருக்க வேண்டும்’ என்பது பரவலான நகைச்சுவை. ஆனால், பின்நவீனத்துவம் என்றால் என்னவாக இருக்க இயலும் என்று என் நாவு லேசாக சுவை கண்டது இந்த நாவலில்தான். பாலு என்ற fanboy ஜே.ஜே பற்றி எழுதத் தேடி அலைவதாக தொடங்கும் நாவல், அங்கங்கு அவன் சந்திக்கும் சில நபர்கள் அளிக்கும் தகவல்கள் மூலமாக ஜே.ஜே வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் விவரணையாக பரவி, புத்தகத்தின் இரண்டாவது பாகம் முழுக்க அவனது டைரி குறிப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாக முடிகிறது. இன்னுமே நான், ’கதையில் இது நடந்தது’, ’கதையின் முடிவு’ என்றல்லாமல் நாவல், புத்தகம் எனக் கூறுவதிலேயே தெரியும், இது நாவலேயன்றி கதையல்ல. கதைசொல்லி ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறாரே தவிர, ஒரு கட்டத்தில் நாவலை மெல்ல பாலுவிடமிருந்து எடுத்து பத்திரமாக வாசகனின் கையில் கொடுத்துவிடுகிறார். ஒரு வகையில் நாம் நாவலின் நடை, ஜேஜேவின் குணாதிசயங்களுக்கு பழக்கப்பட்டபின் கதைசொல்லி அதிகம் அவசியப்படவில்லையென்பதாலோ என்னவோ, பாலுவின் விவரணைகள் பெரும்பாலுமாக குறைந்து ஜே.ஜேவின் வாழ்க்கை நிகழ்வுகளின் மூலம் நாம் ஜேஜேவை நேரடியாக அறிகிறோம், பாலுவின் ரசனைகளின் இடையூறுகள் இல்லாமல்.

Sundara_Ramasami_Tamil_Writers_Famous_Au

உண்மையில் மலையாள எழுத்தாளன் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி தமிழ் கலாச்சாரத்தையே கலாய்க்கிறார் சு.ரா. சரித்திர கதைகள் கொண்டு மக்களை titillate செய்து பிழைப்பு நடத்தும் சரித்தர நாவலாசிரியர்களைப் பார்த்து மலையாள எழுத்தாளர்கள் கேட்பது போல ’என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?’ என்று கேட்டு அப்பட்டமாக கலாய்த்துவிடுகிறார். இது மட்டுமல்லாது அரசியல்வாதி, எழுத்தாளர்கள், சக சாதாரண மனிதன், வாசகன், ரசிகன், ஆத்திகன், நாத்திகன் என எல்லாருக்கும் ஒரு ஊசி வைத்திருக்கிறான் ஜே.ஜே; ஊசியின் தடிமன்தான் வேறு; மருந்து ஒன்றுதான்- உண்மை. இதில் சுவாரசியமான விஷயமென்னவென்றால் இல்லாத ஒரு எழுத்தாளனும் எழுத்தாளக்கூட்டமும் நிஜத்தில் இருப்பதான தோற்றத்தை நாம் நம்பும் வகையில் அங்கங்கே குறிப்புகளைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் சு.ரா

இவ்வகையில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதைச் சுற்றி ஒரு சுற்றுச்சூழலே உருவாக்கி, அதைப் பயன்படுத்தி, தமிழகத்தின் அரசியல், எழுத்துலகம், அறிவுச்சூழல் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார் சு.ரா.. கதையின் நோக்கம் விமர்சனம் செய்வதோ நொட்டை சொல்வதோ என்பதையும் தாண்டி நம்மை அது குறித்து சிந்திக்க வைப்பதாகவே தோன்றுகிறது.

தொடக்கத்தில் ஒரு தியரடிக்கல் அப்ரோச்சாக வெறுமனே தத்துவ வியாக்கியானம் போல இருந்தாலும் 50 பக்கத்தைத் தாண்டிய பிறகு புத்தகம் கீழே வைக்க முடியாத அளவு சுவாரஸ்யம். என்றுமில்லாத பழக்கமாக பென்சிலும் கையுமாக உட்கார்ந்து அடிக்கோடிட்டபடி படித்துக் கொண்டிருந்தேன். இந்த அறிமுகமே ஒரு வகையில் கிட்டத்தட்ட, சில மதில் பூனைகளாக கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு, படிக்கலாமா என கேட்கும் நண்பர்களுக்கு ஊக்கமூட்டவே. ஒரு கட்டத்தில் புத்தகத்தில் வரும் பாலு சொல்வது போல, ”புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக்கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜேஜே இரண்டாவது வகையைச் சார்ந்தவன்”. இந்த நாவலோ ஒரு கட்டம் தாண்டியதும் தினமும் வேக்ஸ் செய்யப்பட்ட மால் பாத்ரூம் கண்ணாடி போல ஒரு தெளிவு பெற்று விடுகிறது. பின்னுரையில் சுகுமாரன் சொன்னது போல நமக்குத் தோதான கருத்துக்களைப் பிடித்துக் கொண்டுவிடுகிறோம். வரும் வருடங்களில் இந்தப் புத்தகம் மென்மேலும் வெவ்வேறு ஒளிகளின் கீழ் வெவ்வேறு நிறங்களில் எனக்கு வெளிப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது.

பாலுவால் ஆதர்ச மனிதனாக பிசிறில்லாது அறிமுகமாகிறான் ஜேஜே. அடுத்தவர் கூறும் சம்பவங்கள் மூலம் அவனுடைய குணங்களும் எண்ண ஓட்டங்களும் விளக்கப்படும்போது வழவழப்பான ஓட்டினைக் கொண்ட அவித்த முட்டையை உடைத்து எடுக்கப்படும் முட்டையின் வெள்ளைக் கருவின் மேற்பரப்பினைப் போன்று சில இடங்களில் உடைந்து பிய்ந்தே இருக்கின்றது அந்த ஆதர்ச பிம்பம். ஆனாலும் மஞ்சள் கருவினைப் போன்று உண்மையின் ஒளி உள்ளே பத்திரமாக இருக்கிறது. ஜேஜே: சில குறிப்புகள், உண்மையை நோக்கிய ஒரு ஓய்வில்லா பயணம். ஒருவாறாக ஆதர்ச மனிதனாக தோன்றிய ஜேஜேவின் பிம்பம் மெல்லத் திரிந்து நாவலின் கடைசியில் அவனது பலவீனமான தருணங்களையும் காண்கிறோம், துருத்திய எலும்பாக. ஆனால் அவை அவனைத் தடைகளைத் தாண்டி இலக்கை நோக்கி ஓடும் தடைஓட்டப்பந்தய வீரனாகக் காட்டுகிறதேயொழிய, தரையில் நீச்சலடிக்கும் இயலாமையாக வெளிப்படவில்லை.

உண்மை, உண்மை எனக் கூவுவது ‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு’ என்பது போலான பட்டவர்த்தனமான உண்மைகள் மாத்திரமல்ல. நம் உள்மனத்தில் உள்ள நாமே ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மைகளும் உண்டு. மனப்பூர்வமாக கூறாத பிறந்தநாள் வாழ்த்து, ஊருக்காக பின்தொடரும் முற்போக்குத்தனம், புரட்சிக்குக் காத்திருக்கும் மத்தியதர குடும்பஸ்தன், தன் மகனுக்கு கல்யாணம் செய்தால் பொறுப்பு வருமெனும் தந்தை, பங்களா உள்ள கம்யூனிஸ்ட், பக்தியுள்ள நாத்திகன் என பெரும், சிறு உண்மையில்லாத் தன்மைகள் நமக்கு எவ்வளவு புளித்த பாலென்றால், நமக்கு அது இப்பொழுது தப்பாகப்படுவதில்லை. ஹிட்லரின் அமைச்சர்களில் ஒருவரான கோயபல்ஸ் ஒரு மிகப்பெரிய பொய்யைச் சொல்லிவிட்டுத் அதையே தொடந்து சாதித்தால் உண்மையாக்கிவிடலாம் என்று சொன்னதாக கேள்விப்பட்டதுண்டு

’Breaking Bad’ என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நாடகத்தில் வரும் வால்டர் வொயிட் ஒரு வேதியியல் ஆசிரியனிலிருந்து ஒரு போதைப் பொருள் கடத்தல் மன்னனாக ஆகிறான். ஆன பின், பல கொலைகள் செய்த பின், கடைசியில் குட்டு வெளிப்பட்டு, மறைந்து வாழ்ந்து கஷ்டப்படுகிறான். அந்த சமயத்தில்தான் இத்தனை காலம் தனக்கு இருப்பதாகக் கருதும் moral sense என்பது உண்மையில் சமூகத்துக்காக, தன் சுயநலத்துக்காக தானாக இட்டுக் கொண்டதாக உணர்கிறான். அவன் அதை உடைத்து தனக்கு moral senseஓ, நியாய தர்மமோ பொருட்டல்ல, சுயநலமும், குடும்ப நலமுமே முக்கியம் என உணரும் அந்தத் தருணம், அந்த தொலைக்காட்சி தொடரின் காவிய உச்சத்துக்கு இட்டுச் செல்கிறது. (பார்க்கவில்லையென்றால் பார்க்க வேண்டிய தொலைக்காட்சித்தொடர்) நல்லதோ கெட்டதோ உள்ளிருக்கும் உண்மையை உணர்வது இலக்கை அடைய உதவும். அல்லது வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டு தவறான பாதையில் போவது போன்றே. நம் கையில் முடிவிருப்பதில்லை. உண்மையை, ஜேஜேவைப் போன்று, ஒரு சர்வ ரோக நிவாரணியாகக் காண்பதைத் தவிர்த்தாலும் அது பல variableகளை நீக்கி வாழ்வை எளிமையாக்குவது உண்மை; கடினமாக்கி விடவும் செய்யலாமெனினும், சிக்கல் குறையும்.

இந்தப் புத்தகம் பற்றிய முக்கியமான விமரிசனங்களில் பெருமாள் முருகனின் இந்தக் கட்டுரையும் ஒன்று - இவர் சொல்வது போல்தான் இந்தக் கதை முழுக்க விமர்சனமாக ஒரு எள்ளல் கலந்தே எழுதியிருக்கிறார் சு.ரா. ஜே.ஜேவை விடுத்து கதையைப் பார்க்க நினைத்தாலும் அது இயலும். பாலுவைப் போல அவனையும் ஒரு கருவியாகக் காண இயலும். பெருமாள் முருகன் கொடுத்த அத்தனை மேற்கோள்களும் கொடுக்க நினைத்தேன் நானும். ஆனால், இங்கு அப்படி கொடுத்தால் வளவளவென்று போய்விடுமெனத் தோன்றியது என் எழுத்து நடையில் – மேற்கோளிட்டு ஓயாது இந்த புத்தகமெனக்கு. இவர் சொன்ன எல்லா விமர்சனங்களையும் உணர்ந்திருந்தாலும் எனக்கு இவையனைத்துக்கும் அடியில் உள்ள சரடு, ‘உண்மை’ என்றே தோன்றுகிறது. ‘உண்மையைத் தேடியவன்’ ஜேஜே என்பதுதான் நாவலின் திறவுகோல் என எனக்குப் படுகிறது.

முல்லைக்கல் நாயர் ஒரு சமயத்தில் உடைந்து விடுகிறான். ’ஜேஜே என்னை வெறுத்துவிடுவானோ? நான் என்ன செய்வேன், எனக்கு நான் தொடரும் கொள்கைகளில் ஜே.ஜேவைப் போல சந்தேகம் உண்டு. ஆனால் நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? அதற்கெல்லாம் என் எதிரிகள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா?’ என்ற தொனி வரும் வகையில் அவன் வருந்திப் பேசுவதை கம்யூனிஸத்தை தாக்கியிருப்பதாகக் கருதி பிரச்சினை பண்ண இடமிருக்கிறது. ஆனால் இதற்கும் அடிநாதம், ‘உண்மையைக் காண தைரியமில்லாதவன் X உண்மையைத் தேடுபவன்’ என்ற எதிர்மறைகளைப் பொருத்த முடியும். ஒவ்வொருத்தனுக்கு தோதான கருத்துக்களை எடுத்துக் கொள்கிறோம் என்று சுகுமாரனின் பின்னுரையிலிருந்து இக்கட்டுரையில் மேற்கொளிட்டிருப்பதை கவனிக்க வேண்டும். வாசிப்பிலும் விவாதத்திலும் முக்கியமான சமாச்சாரமே, அவனவன் பார்வையில் அர்த்தம் செய்துகொள்ள முடியும் என்பதை முதற்கட்டம் அங்கீகரிப்பதுதானே!

ஆனால் இப்படி ஒவ்வொன்றையும் பலமாதிரி புரிந்து கொள்ளலாம் என்றாலும், எல்லாரும் ஒப்புக்கொள்ளக்கூடியது, அரவிந்தாட்ச மேனன் போல ‘செவனே’ன்னு இருப்பதுதான் சொர்க்கமென்கிறார் சு.ரா என்பதுதான். அது சரியென்றே நினைக்கிறேன்.

ஜே.ஜேவின் டைரிக் குறிப்புகளின் தொகுப்பு பின் வருமாறு முடிகிறது:

“அரவிந்தாட்ச மேனன் பேனாவுக்கு மை ஊற்றுவதைப் பார்த்திருக்கிறேன். சவரம் செய்துகொள்வதை, நகம் வெட்டிக் கொள்வதை, வேட்டியைச் சரிவரக் கட்டிக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன். தாளத்திற்கும் லயத்திற்கும் உள்ள இசைவையே அவரிடம் பார்த்திருக்கிறேன். இவரை ஒத்தவர்களே உண்மையான கலைஞர்கள்”.

.- See more at: http://solvanam.com/?p=30880#sthash.RqpHCBb3.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.ஜே. சில குறிப்புகள்: போலி கம்யூனிசத்தின் போலி அவஸ்தைகளைப் பேசும் போலியான நாவல்! சுந்தர ராமசாமி ஜே.ஜே. சில குறிப்புகள் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்‘ எனும் சு.ரா.வின் இரண்டாவது நாவல் அவரது எழுத்து வாழ்வில் மிகவும் ஹிட்டான ஒரு படைப்பு. சு.ரா. எனும் இலக்கிய விக்கிரகத்தை சிற்றிலக்கியக் கோவிலில் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் குடமுழுக்கு நடத்துமளவுக்கு மிகவும் பேசப்பட்ட படைப்பு இந்த நாவல். கம்யூனிசத்தைக் கட்டோடு வெறுப்பதே ஒரு இலக்கியவாதியின் முதலும் முக்கியமுமான தகுதி என்பதைச் சிறுபத்திரிக்கையுலகில் அழுத்தமாக நிலைநாட்டிய நாவலும் கூட. தான் ஒரு மாபெரும் உலக எழுத்தாளர் என்பதையும், மானுடப் பிரச்சினைகளுக்கு விடை தேடும் பொறுப்பினை காலம் தன்மீதுதான் சுமத்தியிருக்கிறது என்ற மாயையும் சு.ரா.வுக்கே கூட இந்த நாவல் கற்பித்திருக்கக்கூடும். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கெதிரான உலக மக்கள் மனநிலையில் இந்த நாவலை வாசிக்கும் போது மிகச் சாதாரணத் தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றாலும், இந்த நாவல் வெளிவந்த நேரத்தில் சிற்றிலக்கியவாதிகளின் இதயத்தைக் கவ்விக் கவர்ந்திழுத்தது என்கிறார்கள். இந்த நாவலை ஒரு வாக்கியத்தில் சுருக்குவதென்றால் — போலி கம்யூனிஸ்டுகளை, அதிலும் குறிப்பாக போலி கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியவாதிகளை வெறுக்கும் ஒரு போலியான இலக்கியவாதியின் போலியான ஆன்மீகப் பிரச்சினைகளை, நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட வார்த்தைகளின் உதவி கொண்டு பேசக்கூடிய ஒரு போலியான நாவல் என்று சொல்லலாம். ஒரு நாவலுக்குள் இத்தனைப் போலிகள் இருப்பதால் அதை இலேசாக எடுத்துக் கொண்டுவிடலாம் என்பதல்ல. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்போது போலிகள் அசலைப் போலத் தோற்றம் கொண்டு விடுகின்றன. உண்மைகள் சமாதியாக்கப்பட்ட மயானத்தில் பொய்கள் மட்டும் ஆனந்தக்கூத்தாடுவதால், நிழல் நிஜமாகிவிடுகிறது. நாவலின் நாயகன் ஜே.ஜே., சு.ரா.வின் இலட்சிய நாயகன். சு.ரா. என்ற உன்னதத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே சலித்துப் புடைத்துப் பிழிந்து உருவாக்கப்பட்ட கதாநாயகன். அவன், உலகின் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தன் மூலமே அறியப்படவேண்டும் என்பதால், தன்னைத்தானே அறிவாளியாகவும், உலகின் அசிங்கங்கள் அருவெறுப்புக்கள் தன் கண்ணில் தென்படக்கூடாது என்பதால், தன்னை ஒரு தூய்மையான அழகியல்வாதியாகவும், சிறுநீர் கழிக்கும் நேரத்தில்கூட அவன் வாய் இலக்கியத்தின் உன்னதத்தைப் பேசும் என்பதால் தன்னை ஒரு இலக்கியவாதியாகவும், அச்சிலேற்றப்படும் தாள்கள் அவனது எழுத்தைத் தரிசனம் செய்வதற்காகவே காலந்தோறும் காத்திருந்து ஏங்கித் தவித்துத் தவம் செய்து வருகின்றன என்பதால், தன்னை ஒரு எழுத்தாளனாகவும், எழுதவரும் இளைஞர்கள் அவனது உரையாடலை மட்டும் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், தான்மட்டுமே ஒரு ஆசிரியனாகவும் மனிதவாழ்வு குறித்த பெரும் புதிரை அவன் மட்டுமே தீர்க்கவேண்டும் என்று தத்துவ உலகம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருப்பதால், தன்னை ஒரு தத்துவவாதியாகவும், பன்றிகளின் மந்தைகளாய் வாழும் மக்கள் மத்தியில் அவன் உடல் மட்டும் எப்போதும் அணையாத விளக்காய் ஒளி வீசிக் கொண்டிருப்பதால் தன்னை ஒரு மாமனிதனாகவும் கருதிக் கொள்கிறான், வெளிப்படுத்துகிறான், அறைகூவுகிறான். இதை சு.ரா.வின் உதவியுடன் நவரசங்களிலும் பதிவு செய்கிறான். இதுவரை யாரும் கண்டு கேட்டிராத ஒரு மகத்தான மனிதனைப் படைத்ததாக சு.ரா.வும் அவரது அபிமானிகளும் புல்லரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய வரலாறு அவர்களைப் பார்த்துச் சிரித்தவாறு, “”இவன்தானா இவனை நான் நீண்டகாலமாக பார்த்து வருகிறேனே” என்று ஒரு வரியில் முடித்துக் கொள்கிறது. ஆம். இந்தப் பண்புகளைக் கொண்டவர்கள் கேரள வரலாற்றில் நம்பூதிரிகள் என்றும் இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தின் தலைமைச் சித்தாந்தவாதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எனவே ஜே.ஜே. சில குறிப்புகளை கம்யூனிச வெறுப்பு நாவல் என்பதைவிட காலந்தோறும் அவதரிக்கும் பார்ப்பனியத்தின் மேட்டிமைத்தனம் கொண்ட நாவல் என்று சொல்லலாம். சு.ரா.வின் மொழியில் சொன்னால், ஜே.ஜே என்பவன் யார்? அவன், “உலகமே குரங்குகளின் வாத்திய இசை போல் இருக்கிறது. அவை எழுப்பும் கர்ண கடூரமான அபசுரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கத்திக் கொண்டிருந்தான்.” பார்ப்பனியத்தின் மேலாண்மையை நெஞ்சிலேந்தி முனகிக் கொண்டிருந்தவர்கள், உபநிடதக் காலம் தொட்டு “உன்னால் முடியும் தம்பி’ ஜெமினி கணேசன் வரையிலும் இப்படித்தான் கத்திக் கொண்டிருந்தார்கள். குரங்குகளின் கர்ண கடூர அபஸ்வரத்தில் உழைக்கும் மக்கள் வாழ்வின் அவலக்குரலும், அந்த அவலத்தைத் தாங்கிக் கொள்ள மறுக்கும்போது போராட்டத்திற்கான உயிர்ப்புக் குரலும், பல சமயங்களில் அந்த உயிர்ப்பு நசுக்கப்படும் போது கேட்கக் கிடைக்கும் மயானக்குரலும், இத்தகைய குரல்கள் கேட்காத தூரத்தில் அரியாசனங்களில் வசதியாக அமர்ந்து கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்பவர்களின் அதிகாரக்குரலும், அதிகார நேரம் போக அவர்கள் சுருதி சுத்தமாகப் பாடும் கேளிக்கைக் குரலும் கலந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இவை குரல்களின் பிரச்சினையல்ல, வாழ்வை உள்ளது உள்ளபடி உணரமறுத்து, கீழே வாழ்ந்து கொண்டு மேலே பளிச்சிடும் வாழ்வை இதயத்தில் பொதிந்து கனவு காணும் நடுத்தர வர்க்கக் காதுகளின் பிரச்சினை. ஜோசப் ஜேம்ஸ் எனப்படும் ஜே.ஜே. தனது நாவலில் வெற்று இலக்கிய நயத்துடன் கூறும் இந்தப் படிமத்தின் அன்றாட மொழிபெயர்ப்பினை ஹிந்து பேப்பரில் வரும் வாசகர் கடிதங்களில் — தொழிலாளர்களின் ஊர்வலம் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறது, கூவம் குடிசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, மக்கள் மழை நிவாரணத்திற்காக அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்று — விதவிதமாகப் பார்க்கலாம். அவ்வகையில் இந்த நாவல் ஹிந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் இதயங்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறலாம். நாவலின் கதைதான் என்ன? சு.ரா. தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். தமிழ் இலக்கியச் சூழலை வெறுக்கும் பாலு என்ற தமிழ் எழுத்தாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது மற்றொரு பாதியான ஜே.ஜே. எனும் இலட்சிய கேரள எழுத்தாளரை தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக கேரளாவிற்குப் பயணம் செய்து அவனுடன் பழகியவர்களைச் சந்தித்து ஜே.ஜே.வைப் பற்றிய குறிப்புக்களைச் சேகரிக்கிறார். பாலு சந்தித்தவர்களில் சூப்பர்மென் குவாலிட்டி கொண்டவர்களும் சு.ரா.வின் மறு பிறவிகள்தான். அவ்வகையில் சிவாஜி கணேசனின் நவராத்திரியைப் போன்று சு.ரா. பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நாவலென்றும் சொல்லலாம். நாவலில் சு.ரா.வின் புகழ் பெற்ற கருத்துக்கள் சுற்றிச் சுற்றி வரும் சொற்றொடர்களின் மூலமும், உப்ப வைக்கப்பட்ட படிமங்களின் வழியாகவும் முன் அட்டை முதல் பின் அட்டை வரை வழக்கம் போல வருகின்றன. தனது உலகை வடிவாக உருவாக்க விரும்பும் ஜே.ஜே.வின் அழகுணர்ச்சிக்கு அளவே இல்லை. அவன்வசிக்கும் நகரில் இருக்கும் மைதானம் ஒன்றை தான் அரசனானால் எப்படி மாபெரும் பூங்காவாக, வெட்டுவதற்கு மனம் வராத மரங்களையும், குழந்தைகள் சுற்றுச்சூழலை அறியும் வண்ணமும் அமைக்கப் போவதாக வரைபட விளக்கத்துடன் தன் டயரியில் குறித்து வைத்திருக்கிறான். (இந்த வேலைகளைச் செய்ய கவுன்சிலர் ஆனால் போதும் என்ற விசயம் அந்த மாபெரும் அறிவாளிக்குத் தெரியவில்லை.) அவன் நகரில் ஏழைகளும், குடிசைகளும் நிச்சயம் இருந்திருக்கக் கூடும். அவர்களுக்கு ஏதோ மழை ஒழுகாத கூரையாவது மாற்றித் தரலாம் என்பதற்கெல்லாம் அவன் அழகுணர்ச்சியில் இடம் இல்லை போலும். ஒருவேளை இவன் இந்தியாவின் அரசனாகியிருந்தால் நகர்ப்புறச்சேரிகள் அனைத்தும் அழகின்மை காரணமாக ஒரே நாளில் துடைத்தெறியப்பட்டிருக்கக் கூடும். அவன் காதலி ஓமனக்குட்டி எழுதிய வாரமலர் தரத்திலான கவிதைகளை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இலக்கியத்தில் அவனால் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதால் அந்தக் கவிதை நோட்டுக்களை அவள் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிகிறான். அத்துடன் காதலியை விட்டுப் பிரியவும் செய்கிறான். இது ஜே.ஜேயின் திமிரான இலக்கிய மேட்டிமைத்தனம். கதையும், கவிதையும் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் சாதாரணமாகத்தான் எழுத முடியும். ஏன் சு.ரா.வும், ஜே.ஜேயும் அப்படித்தானே ஆரம்பித்திருக்க முடியும். ஒருவேளை அவன் ஆசிரியராகியிருந்தால் தப்பும் தவறுமாக எழுதும் முதல் தலைமுறை ஏழைக் குழந்தைகளின் கைகளை ஒடித்திருப்பானோ? சிற்றிலக்கியவாதிகள் பொழுதுபோக்காய் இலக்கியம் பக்கம் திரும்பியது ஒருவகையில் நல்லதுதான். இவர்கள் சற்றே அரசியல் பக்கம் வந்திருந்தால் மக்களின் கதி என்ன? நம்மைப் பொறுத்தவரை ஓமனக்குட்டியின் கவிதைகள் சு.ரா.வின் கவிதைகளை விடப் பரவாயில்லை என்றே கருதுகிறோம். அவரது நினைவுச்சின்ன கவிதையின் சின்னத்தனத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். அவரது மற்ற கவிதைகள் என்ன சொல்கின்றன? சு.ரா. தனது அசட்டுத்தனத்தையே ஆழமான சமாதிநிலையாக உணர்வது, அவர் சிந்திக்கும் போது லாரியின் இரைச்சல் வந்து கெடுத்த பிரச்சினைகள், அப்புறம் ஜன்னல் எப்போதும் வானத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றதாகவும், மின் விசிறிக்கு அந்தப் பேறு இல்லை என்பதான துயரமான தருணங்கள்… இந்த பினாத்தல்களை செம்பதிப்பாக வெளியிட்டதற்காக காலச்சுவடு ஆபீசை குண்டு வைத்தா தகர்க்க முடியும்? இதுதான் அவருடைய கவிதை உலகம். இது அவருடைய உலகம் மட்டுமல்ல, இன்றைய சிறு பத்திரிக்கைகளின் அனைத்துக் கவிஞர்களின் உலகமும் கூட. நீர்த்துப்போன தங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கி நோக்கி புதிதாக எதையும் காண இயலாத நிலையில், “வாட் இஸ் நியூ?’ (புதிதாய் என்ன) என்ற கேள்விக்கு விடையாக சொற்களிலும், மோஸ்தர்களிலும் சரணடைபவைதான் அவர்களது கவிதைகள். நாவலின் ஓர் இடத்தில் மாட்டின் முதுகில் ஒருவன் வெற்றிலை எச்சிலைக் குறி பார்த்துத் துப்புவதை ஜே.ஜே. பார்ப்பதாக ஒரு காட்சி வருகிறது. இதை ஸ்கேன் செய்த ஜே.ஜேயின் அழகுணர்ச்சி உடனே மனிதனின் கீழ்மை அல்லது விலங்குணர்ச்சி குறித்து ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறது. அவன் காலத்தில் பெண் குழந்தைகள் கற்பழிக்கப்படுவது குறித்தோ, தலித்துக்கள் எரிக்கப்படுவது குறித்தோ, வரதட்சணைக்காகப் பெண்கள் எரிக்கப்படுவது குறித்தோ அவன் கேள்விப்பட்டதே இல்லை போலும்! அவனுடைய அழகுணர்ச்சிதான் கொடூரமான எதையும் பார்க்காதே. மனிதனின் விலங்குணர்ச்சியை ஆய்வு செய்யுமாறு அவனை எது தூண்டுகிறது பாருங்கள்! இந்த எச்சில் பிரச்சினையை வைத்து மனிதன் விலங்காக வாழ்வதற்கே பணிக்கப்பட்டவன், மரபும் பண்பாடும் அவனைத் தடை செய்கின்றன என்று அவன் ஆய்வு பயங்கரமாக எங்கோ போகிறது. இறுதியில் மனிதன் விலங்குணர்ச்சிக்கும், மனித உணர்ச்சிக்கும் இடையில் தத்தளிப்பதாக ஒரு புதிய விசயத்தை ஜே.ஜே. கண்டுபிக்கிறானாம். உண்மையில் இந்த எச்சில் பிரச்சினையில் தத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு வெங்காயமும் இல்லை. மனிதனின் விலங்குணர்ச்சி எனப்படுவது, ஏற்றத்தாழ்வாய்ப் பிரிந்திருக்கும் இந்தச் சமூகத்தின் வர்க்க முரண்பாட்டின் வழியாக வெளிப்படுகிறதேயன்றி மாட்டின் முதுகில் எச்சில் துப்பும் அற்ப விசயத்தில் அல்ல. இதே எச்சிலை பன்றியின் மீது துப்புவதாக சு.ரா. எழுதவில்லை. எச்சில் துப்பும் எல்லாவகைகளையும் அவர் பார்த்திருந்தாலும், மாடு புனிதம் என்ற கருத்து, மரபில் இருப்பதால் வாசகருக்குக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்து தன் தத்துவப் பாடத்தை விளக்க அவர் நினைத்திருக்கலாம். இந்த நாவலின் போலியான ஆன்மீக அவஸ்தைக்கு வேறு சான்று தேவையில்லை. மற்றொரு இடத்தில் ஒரு தொழுநோயாளியைப் பார்த்த ஜே.ஜே., அவனுக்கு காசு போடலாமா வேண்டாமா என்று ஒரு ஓட்டலில் உட்கார்ந்து மூன்று மணி நேரம் யோசிக்கிறான். இதுவரையிலான மனிதகுல வரலாற்றின் வள்ளல் குணம், தானம், அறம், மனிதாபிமானம் மற்றும் இன்னபிற “ம்…’களைக் குறித்து ஆய்வு செய்கிறான். இறுதியில் ஒரு ஐம்பது காசைப் போடலாம் என்று முடிவெடுத்து வெளியே வருகிறான். தொழுநோயாளியைக் காணவில்லை. சில மணிநேரம் அலைந்து திரிந்து அவனைக் கண்டுபிடித்துக் காசைக் கீழே வீசுகிறான். காசைப் போடும் போதுதான் கை மழுங்கிய தொழுநோயாளி அதை எப்படி எடுக்க முடியும் என்பது அவனுக்கு உறைக்கிறது. உடனே அவனது மனிதாபிமான அழகுணர்ச்சி ஒரு புதிய விசயத்தைக் கண்டுபிடிக்கிறது. அதன்படி மனிதன் இதுவரை உருவாக்கிய தானம் தர்மம் தத்துவம் அனைத்தும் தன்னை மட்டும் மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டதே ஒழிய, எதிரிலிருக்கும் மனிதனது பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு அறியப்பட்டவையல்லவாம். அப்படிக் கணக்கில் கொண்டிருந்தால் ஜே.ஜே. அந்தக் காசை தொழுநோயாளியின் கையில் கொடுத்திருப்பானாம். இப்படி தன் மனிதாபிமானத்தைத் தள்ளாட வைத்த மனித குலத்தின் மீது கோபம் கொண்டு ஜே,ஜே. தனக்குள்ளேயே துன்புறுகிறான். வரலாற்றையும், தத்துவத்தையும் அடிமுதல் நுனி வரை எவ்வளவு கேவலப்படுத்தமுடியுமோ அவ்வளவு படுத்தி எடுத்து விட்டு நம்மையும் அதற்கு விளக்கம் எழுதுமாறு துன்புறுத்துகிறார் சு.ரா. விசயம் மிகவும் எளிமையானது. சு.ரா. எங்கேயோ ஒரு தொழுநோயாளிக்கு காசை விட்டெறிந்திருக்கிறார். காசைக் கையில் கொடுக்காமல் இருந்ததற்குக் காரணம் மழுங்கிய கைகளைத் தொட்டால் வரும் அருவெறுப்புதான். அதற்கு ஏதோ கொஞ்சம் குற்ற உணர்வு அடைந்திருப்பார் போலும். அதனால் தான் பெற்ற குற்றவுணர்வைப் பெறுக இவ்வயைகம் என்று முழு உலகத்தையும் தன் நாவலில் தண்டித்துவிட்டார். எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கும் போது இவற்றையெல்லாம் எழுத வேண்டியிருப்பது சு.ரா. நமக்கு அளித்திருக்கும் தண்டனை போலும்! நாவலில் ஜே.ஜேவை சினிமாக் கதாநாயகன் போலச் சித்தரிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட நம்பியார் போன்ற வில்லன் பாத்திரம் முல்லைக்கல் மாதவன் நாயர். இந்த முல்லைக்கல்லை ஜெயகாந்தன் என்றும் சொல்லுகிறார்கள். இருக்கலாம். நாவலில் சித்தரிப்பு அப்படித்தான் வருகிறது. முல்லைக்கல் நம்மூர் த.மு.எ.ச. போன்ற கேரளத்தில் இருக்கும் போலி கம்யூனிச கலை இலக்கிய அமைப்பில் இருப்பவன். இந்த வில்லன் பசி, பட்டினி, வேலையின்மை, வறுமை இன்னபிற சமூகப் பிரச்சினைகளை அந்த மக்கள் வாழ்க்கை மற்றும் மொழியில் எழுதிப் பெயரெடுத்து, புகழ், பணம் சம்பாதித்து செட்டிலாகிறான். இதற்குத் தோதாக கம்யூனிசக் கட்சியும் முதலாளிகளைப் போல வாழ்ந்து கொண்டே தொழிலாளி வர்க்கத்திற்காகப் போராடுவதாக நடிக்கும் தலைவர்களைக் கொண்டதாக மாறிவிடுகிறது. ஆனால் ஜே.ஜே.யின் விமர்சனம் கட்சியின் அரசியல், திட்டம், நடைமுறையின் மீதெல்லாம் இல்லை. கட்சியின் கலைஞர்கள் மீதுதான் அவனுக்குக் கோபம். அந்தக் கோபமும் உலகில் சோசலிசமும், சமதர்மமும் வரவேண்டும் என்ற குறைந்தபட்ச அற உணர்விலிருந்து வரவில்லை. “தன்னைப்போன்ற அறிவாளிகளுக்கு இந்த உலகில் மதிப்பு இல்லையே’ என்ற பச்சையான சுயநலத்திலிருந்தே ஆவேசமாக வருகிறது. போலிகளின் சாயம் வெளுத்துவிட்ட சாதகமான நிலையில் “”நான்தான் உன்னதமானவன்” என்று காட்டிக் கொள்ளும் நோக்கத்திற்காகவே அவனுக்கு கம்யூனிசத்தின் மீதான விமரிசனம் தேவைப்படுகிறது. அந்த உன்னதமும் பொதுவில் சமூகத்தையும் மனிதகுலத்தின் முன்னேற்றத்தையும் கேலி செய்யும் திண்ணைப்பேச்சு வேதாந்திகளின் தனிமனித அரட்டைதான். நாவலில் நோயால் இளம் வயதில் இறந்து போன ஜே.ஜேவின் நினைவுகளைத் தேடித்தான் எழுத்தாளர் பாலு கேரளம் செல்கிறான். நாயகன் ஜே.ஜே., எம்.ஜி.ஆரைப் போன்று சித்தரிக்கப்பட்டாலும் முடிவில் சிவாஜி படங்களைப் போல செத்துப்போவதற்கு வாசகர்களின் சென்டிமெண்டைப் போட்டுத்தாக்கும் நோக்கம்தான் காரணம். மற்றபடி நாவலை வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி விளக்குவதற்கு அல்வா போல ஏகப்பட்ட ஐயிட்டங்கள் இருந்தாலும் இத்துடன் முடித்துக் கொள்வோம். சு.ரா.விற்கும் கம்யூனிசத்திற்கும் பொதுவில் உள்ள உறவு என்ன? இதனைப் புரிந்து கொள்ள ஜெயமோகனது ஆவணத்தில் உள்ள தகவல்கள் உதவுகின்றன. ------------------------- நன்றிகள் வினவு.கொம்http://www.vinavu.com/2010/09/28/sundara-ramasami/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.