Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? செல்வரட்னம் சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? செல்வரட்னம் சிறிதரன்:-

01 மார்ச் 2014

இரணைமடு குளத்து நீர் தொடர்பாகவும், ஜனாதிபதி ஆணக்குழு தொடர்பாகவும் இரண்டு முக்கிய தீர்மானங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கூடி நிறைவேற்றியிருக்கின்றது. இரண்டுமே மிகவும் முக்கியமான தீர்மானங்கள். கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் இரண்டு தீர்மானங்களும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரணைமடு குளத்து நீர் தொடர்பாக விரிவாக விவாதித்திருக்கின்றார்கள். மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக வாதிட்டதன் பின்னர், ஏகமனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்கும் திட்டம்

பல மில்லியன் ரூபா செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் இரணைமடு குளத்தைப் புனரமைத்து, அதன் அணைக்கட்டை உயர்த்தி குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரித்து, விவசாயிகளுக்கு நீர் வழங்குகின்ற அதேநேரம் யாழ்ப்பாணத்திற்கான குடிநீரைக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், காலபோகத்திலேயே ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் காணிகளுக்கு குளத்தில் இருந்து நீர் கிடைக்கவில்லை. சிறுபோகத்தின்போது குளத்தில் தண்ணீர் இருந்தாலும்கூட, குறைந்த அளவிலான நிலப்பரப்பிலேயே வேளாண்மை செய்யப்படுகின்றது. ஆகவே, சிறுபோகத்தின் செய்கை நிலப்பரப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் கொள்ளளவைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

ஆனால், தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலும், தங்களுக்குத் தேவையான நீர் குளத்தில் பேணப்படும் என்பதற்கு உத்தரவாதமற்ற நிலையிலும் யாழ்ப்பாணத்திற்கு இந்தக் குளத்தில் இருந்து நீரைக் கொண்டு சென்றால், தங்களுடைய விவசாயம் பாதிக்கப்படும் என்பது அவர்களுடைய தீர்க்கப்படாத அச்சமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே இரணைமடு கமக்காரர் அமைப்பினர் யாழ்ப்பாணத்திற்கு, இரணைமடு குளத்;தில் இருந்து குடிநீர் வழங்குவதை முழுமையாக எதிர்த்து வருகின்றார்கள்.

விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படமாட்டாது என்று இரணைமடு குளத்து நீர் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவாதமளித்துள்ள போதிலும், அதனை நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதனால்தான் இரணைமடு குளத்து குடிநீர்த் திட்டம் இழுபறி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தத் திட்டத்தின் உண்மையான நிலை என்ன என்பதை ஆராய்ந்தறிவதற்காகவும், இதில் தொடர்ந்து என்ன செய்வது என்பதைத் தீர்மானிப்பதற்காகவும், வடமாகாண முதலமைச்சரினால் 15 பேர் கொண்ட அறிஞர் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. கள ஆய்வுகளை மேற்கொண்ட, அந்தக் குழுவினால் முதலமைச்சருக்குக் கையளிக்கப்பட்டிருந்த அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்த உயர் மட்ட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விரிவாக ஆராயப்பட்டதன் பின்பே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் ஐந்து பேர் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீ;ர் வழங்குவதற்கு சாதகமாகவும், பத்துப் பேர் பாதகமாகவும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கருத்துக்களையும், அறிக்கைக்கு வெளியில் இருந்து விவசாயிகள் தரப்பிலும், ஏனைய ஆர்வமுள்ளவர்களின் தரப்புக்களில் இருந்தும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் உள்வாங்கிய இந்த உயர் மட்ட கூட்டம் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் முடிவெடுக்க முனைந்திருந்தது.

விவசாயிகளுக்கு எற்பட்டுள்ள சந்தேகம், அச்சம் என்பவற்றைப் போக்கும் வகையில், விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமலும், அதேநேரம் இந்தத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியைத் திரும்பிச் செல்லவிடாமல் தடுத்து, அதனை நன்மையான முறையில் பயன்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் இந்தத் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று இது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்றும், அதேநேரம், யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்கக் கூடிய ஏனைய நீர் நிலைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்ட கூட்டத்தில் இப்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நிலைமையில் சிறிய மாற்றத்தை உண்டுபண்ணியிருப்பதைக் காண முடிகின்றது. ஆயினும், விவசாயிகள் இந்தத் தீர்மானத்தில் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை.

விவசாயிகளின் நிலைப்பாடு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு முதல் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய போது சம்பந்தரிடம் அவர்கள் தமது நிலைப்பாடுகளைத் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார்கள். அத்துடன், இரணைமடு பிரச்சினையை முதன்மைப்படுத்தி கிளிநொச்சிக்கு மகாவலி நீரைக் கொண்டு வருவதற்கான ஒப்புதலை இந்தப் பிரதேசத்து விவசாயிகளிடமிருந்து பெறுகின்ற நோக்கத்தில் அரச தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தங்களுடன் பேச்சுக்கள் நடத்தியிருந்ததையும், அதற்குத் தாங்கள் எந்தவிதமான பதிலையோ உறுதிமொழியையோ கொடுக்கவில்லை என்பதையும் அவர்கள் சம்பந்தருக்குக் கூறியிருந்தார்கள்.

அதேநேரம், தமிழ் மக்களின் தலைவர்களாகிய கூட்டமைப்பினரும் தமது விடயத்தில் போதிய அக்கறை செலுத்திச் செயற்படுவதாகத் தெரியவில்லை என்றும், அவர்களும் தங்களைக் கைவிடப் போகின்றார்களோ என்று தங்களுக்குச் சந்தேகமாக இருக்கின்றது என்பதையும் இரணைமடு விவசாயிகள் அவரிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தனர்.

ஆயினும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக இரணைமடு குளம் தொடர்பக நடைபெற்ற விவாதத்தின்போது, விவசாயிகளினுடைய பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அத்துடன், விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும், இரணைமடு குளம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை பற்றியும், அது தொடர்பில் தனது கருத்தையும் சுமார் அரை மணித்தியாலம் முதலமைச்சர் செய்த சமர்ப்பணத்தையும், பிரச்சினையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்ற வகையில் விவசாயிகள் கேட்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, யாழ்ப்பாணத்திற்கு அழைத்திருந்த விவசாயப் பிரதிநிதிகளிடம் தலைவர் சம்பந்தன் நேரடியாகத் தகவல் தெரிவித்திருக்கின்றார். அத்துடன், விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்டமாட்டாது அவ்வாறான ஒரு முடிவை தாங்கள் எடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழியையும் அவர் விவசாய பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தார். நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் மேலும் ஒரு குழு அமைத்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுக்கள் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தங்களிடம் சம்பந்தர் கூறியதாக இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

'கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட தீர்மானத்தைத் நாங்கள் கேட்டுக் கொண்டோம். எனினும், எங்களுக்கு அதில் பூரண திருப்தி ஏற்படவில்லை. வெறும் உறுதிமொழிகளை நம்பி நாங்கள் எந்த ஆவணத்திலும் இந்தத் திட்டம் தொடர்பில் கையெழுத்து வைக்கப் போவதில்லை. இரணைமடு குளத்தைப் புனரமைத்து, எங்களுடைய வயல் நிலங்களுக்குத் தேவையான நீரைத் தருவதற்கான நடவடிக்கைகளை முதலில் எடுங்கள். அடுத்த கட்டமாக ஏனைய விடயங்கள் பற்றி தீர்மானிப்போம். அதுவரையில் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குளத்திலோ அல்லது கிளிநொச்சி மாவட்டதிற்குள்ளேயோ மேற்கொள்ளக் கூடாது என்று நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்துவிட்டு வந்திருக்கின்றோம்' என இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கருத்து

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்கின்ற திட்டமானது பல தீமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று தொடக்கத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தார். எதிர்கால பாதிப்பு குறித்து அவர் பல இடங்களிலும் தனது கருத்தை வலியுறுத்தியிருந்தார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது ஒரு நீண்ட விளக்கத்தை அளித்திருந்தார்.

யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதற்கு எத்தனையோ மாற்றுத் திட்டங்கள் இக்கின்ற போதிலும், இரணைமடு குளத்தில் இருந்து, அரசியல் உள்நோக்கத்திற்காகவே குடிநீரைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தியிருந்தார். இரணைமடு குடி நீர்த் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது போன்று வருடந்தோறும் இரணைமடு குளத்தில் 30 அடிக்கு மேற்பட்ட நீரைச் சேமிக்க முடியாது என்பது அவருடைய வாதம். ஐந்து அல்லது ஆறு வருடத்திற்கு ஒரு தடவைதான் இரணைமடு குளம் நிறைந்து வான் பாய்வது வழக்கம். ஆகவே, யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்கினால் இந்த வருடத்தைப் போன்று குளம் தண்ணீரின்றி வரண்டு கிடப்பதைக் காரணம் காட்டி, யாழ்ப்பாணத்தி;ற்குக் குடிநீர் வழங்க வேண்டிய அத்தியாவசிய தேவையை வலியுறுத்தி சுட்டிக்காட்டி, மகாவலி நீரை இரணைமடு குளத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும், அதன் ஊடாக வன்னிப்பிரதேசத்திற்கும் யாழ் குடாநாட்டுக்கும் சிங்களக் குடியேற்றங்களையும் சாதாரணமாக அரசாங்கம் கொண்டு வந்து சேர்க்கும் என்று அவர் எடுத்துக் கூறி, இதன் காரணமாக இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்கும் நடவடிககையை அனுமதிக்கப் போவதில்லை என அவர் உறுதிபட தெரிவித்திருந்தார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படாவிட்டால், அவசியமானால், எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக தனது பதவியை இராஜிநாமா செய்யயும் தயங்கப்போவதில்லை என்று நாடாளுனம்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.

ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தி;ல் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், இந்தத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிப் போகாமல் தடுக்கும் வகையிலும், இரணைமடுவுடன் ஏனைய குடிநீர்த்திட்டங்கள் பற்றியும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதை அவரும் ஏற்றுக்கொண்டு செய்தியாளர்களிடம் இந்தத் தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

கூட்டமைப்பின் தீர்மானம் குறித்து இரணைமடு விவசாயிகள் திருப்தி அடையவில்லையே என்று அவரிடம் கேட்டதற்கு திருப்தி, அதிருப்தி என்பதற்கு அப்பால், சில விடயங்களில் விட்டுக் கொடுப்புக்களுடன் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

'விவசாயிகளுடைய கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டு, அதனுடைய அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அந்த அறிக்கை எல்லோர் முன்னிலையிலும் இன்று ஆராயப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அத்துடன், விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படமாட்டாது என்று கட்சியில் உள்ள எல்லோராலும் ஏகமனதாக உறுதி மொழி முன்வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இதற்கு மாறாக அல்லது விவசாயிகளுக்கு எதிராக எந்த காரியங்களும் ஏற்படமாட்டாது என்று தான் நான் நம்புகிறேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்

'அத்துடன் வெளிப்படையாக எல்லா விடயங்களையும் வெளியில் சொல்ல முடியாத ஒரு நிலை கட்சி அங்கத்தவர்களுக்கு இருக்கின்றது. அதன் காரணமாக ஓர் அரசியல் ரீதியாக - இராஜதந்திர ரீதியாக சில சொற்பதங்கள் அதிலே (தீர்மானத்திலே) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் இரணைமடு திட்டம் தொடர்பில் இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இவ்வளவு காலமும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முகவர்களான அதிகாரிகளிடமே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான இணைப்பதிகாரியுடனோ அல்லது அது சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடனோ பேச்சுக்கள் நடத்தப்படவில்லை. இனிமேல்தான் அவர்கள் பேசப் போகின்றார்கள். அதுவும் முதலமைச்சர் தலைமையில் பேசப் போகின்றார்கள். ஆகவே, இப்போதைக்கு முடிவு ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்' என்றார் சிறிதரன்.

ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லை

இரணைமடு குளத்து நீர் தொடர்பான நிலைமை இப்படியிருக்க, காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை என்று மற்றுமொரு தீர்மானமும் கூட்டமைப்பின் யாழ்ப்பாண கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கை குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது பலத்த ஏமாற்றத்தையும் வெளியிட்டிருக்கின்றது.

'இந்த ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பகிரங்க விசாரணைக்காக வந்திருந்தபோது, அருகாமையில் இன்னுமொரு கூட்டத்தை நடாத்தி, ஆணைக்குழு முன்னால் முறைப்பாடு செய்ய வந்தவர்களைத் தடுத்து, மற்ற கூட்டத்தில் பணம் கொடுத்து, மரண சான்றிதழ்கள் வழங்கிய சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த விடயம் இந்த ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோதும்கூட, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேண்டுமென்றே, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் கொடுக்கப்படாமல் தடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த அரச சட்ட உரைஞர் சமிந்த அத்துக்கோறள என்பவர்தான், காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கிலும், அதுபற்றி எழுந்துள்ள விசாரணையிலும் இராணுவத்தின் சார்பில் ஆஜராகி, சரணடைவு என்ற ஒன்று இடம்பெறவே இல்லை என்று வாதாடுகின்றவர். இது சட்டத்தின் கீழ் பாரிய நோக்கத்தின் முரண்பாடு ஆகும். ஆகையினாலே, தற்போதைக்கு இந்த இரண்டு காரணங்களின் நிமித்தமாக, இந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டில் நம்பகத்தன்மை இல்லையென்று நாங்கள் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றியிருக்கின்றோம்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக உள்ளுர் பொறிமுறை என்ற பெயரில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக, விசாரணைகளை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் மெக்ஸ்வெல் பரணகமவின் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆணைக்குழுவுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் எழுத்து மூலமாகச் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தெரிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான சாட்சியங்களை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த ஆணைக்குழு பதிவு செய்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ள அரச சட்டத்தரணி சமிந்த அத்துக்கோறள என்பவரே, இந்த விசாரணைகளின்போது அரச தரப்பின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றி வருகின்றார். இந்த முரண்பட்ட நிலைப்பாடானது, ஜனாதிபதி ஆணைக்குழுவின் நேர்மையான செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது.

அத்துடன் இந்த ஆணைக்குழுவின் விசாரணை முறைகளும், ஆணைக்குழுவினர் எழுப்புகின்ற கேள்விகளும், சாட்சியமளிப்பதற்கு முன்வந்தவர்களின் மனங்களைக் காயப்படுத்தியிருப்பதாகவும், அதனால் அவர்களில் பலர் ஆவேசமடைந்ததாகவும் அவர்களே தெரிவித்திருக்கின்றனர்.

எனவே, இரணைமடு குடிநீர்த் திட்டமும்சரி, ஜனாதிபதி ஆணைக்குழுவும்சரி இன்றைய நிலைமையில் முக்கிய விடயங்களாகவே இருக்கின்றன. இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது உயர் மட்ட கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதுவும் சரியெனவே படுகின்றது.

இருந்தாலும், இன்னும் இரண்டு தினங்களில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இந்த முறையும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவுள்ள சூழலில், கூடடமைப்பின் இந்தக் கூட்டத்தில் எதுவுமே ஆராயப்படவில்லை என்பது வியப்பாக இருக்கின்றது.

சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இந்தப் பிரேரணை தொடர்பாக மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தத் தீர்மானத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக, அவர்களின் அரசியல் தலைவர்களாக இருக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அதுபற்றி ஆர்வமற்றிருப்பதாகத் தோற்றமளிப்பது நல்லதாகப் படவில்லை.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன, அவர்கள் ஐநா மாநாட்டு நேரம் என்ன செய்யப் போகின்றார்கள், என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு மக்கள் இன்று மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள். அதேநேரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நேச சக்திகளும், அரசியல் உறவுகளும், சர்வதேசமும்கூட, கூட்டமைப்பு என்ன செய்கின்றது, என்ன சொல்லப் போகின்து என்பதை அறிவதற்கு ஆர்வமாக இருக்கின்றன.

இத்தகைய மிகவும் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்த விடயத்தில் கவனம் செலுத்தாததுபோன்று நடந்து கொள்வதும், தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பதுவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், பொருத்தமானதாகவும் தெரியவில்லை. சரியானதாகவும்படவில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103665/language/ta-IN/article.aspx

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண முதலமைச்சரினால் 15 பேர் கொண்ட அறிஞர் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. கள ஆய்வுகளை மேற்கொண்ட, அந்தக் குழுவினால் முதலமைச்சருக்குக் கையளிக்கப்பட்டிருந்த அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்த உயர் மட்ட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விரிவாக ஆராயப்பட்டதன் பின்பே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.//அந்தக் குழுவில் ஐந்து பேர் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீ;ர் வழங்குவதற்கு சாதகமாகவும், பத்துப் பேர் பாதகமாகவும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. //

 

இதுக்குமேலேயே இதைபற்றி கதைப்பது tna தலைமையின் அரசியல் வறட்ச்சிதனம்.tna தலைமையின் பிழைப்புக்கு தமிழ் ஏழை விவசாயிகள் பலிகடா  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.