Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி? - யதீந்திரா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில், சர்வதேச விசாரணை ஒன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நவிப்பிள்ளை, இலங்கை சர்வாதிகார ஆட்சியொன்றிற்கான வழிகாட்டல்களை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம். சர்வாதிகார வழிகாட்டலுக்குள் சிக்கிக்கிடக்கும் ஒரு நாட்டுக்குள் இடம்பெறும் எந்தவொரு விசாரணையும் நம்பத்தகுந்தவையாக இருக்க முடியாது என்னும் அடிப்படையில்தான், தற்போது நவிப்பிள்ளை சர்வதேச விசாரணையொன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். ஆனால் இது நவிப்பிளையின் பரிந்துரை மட்டுமே ஆகும். வழமை போலவே இலங்கை அரசாங்கம் பிள்ளையின் அறிக்கையை நிராகரித்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நாடு தொடர்பில் விசாரணை தேவையென்னும் வாதமானது இரண்டு அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. ஒன்று, குறிப்பிட்ட நாட்டில் வாழ்ந்துவரும் குறிப்பிட்ட மக்கள் பிரிவினருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது என்பது. இரண்டு, அவ்வாறு மறுக்கப்பட்ட நீதியை, குறிப்பிட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் ஒரு விசாரணை அவசியம் என்பது. இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கிருக்கும் உள்ளக பொறிமுறை எதிலும் நம்பிக்கை வைக்க முடியாதவொரு சூழலில், சர்வதேச விசாரணை ஒன்றைக் கோருவதில் தவறில்லை. நவநீதம் பிள்ளையின் அறிக்கை வெளியாவதற்கு முன்னரே, வடக்கு மாகாண சபையில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பிரேரணைக்கான வாதப்பிரதிவாதங்களின் போது, 'இனப்படுகொலை' என்னும் சொல் நீக்கப்பட்டே குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் றோம் நகரத்தை தளமாகக் கொண்டியங்கிவரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், (Permanent People's Tribunal - PPT) இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு இனப்படுகொலையாகும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இவ்வாறு தீர்ப்பு வழங்கிய குழுவிலும் பல சட்டமேதைகள் இருக்கின்றனர். மேற்படி தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பலர் சாட்சியமளித்திருக்கின்றனர். இதிலுள்ள வேடிக்கையான செய்தி என்னவென்றால், மேற்படி மக்கள் தீர்ப்பாயமானது, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அரச இனப்படுகொலைக்கு, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய சக்திவாய்ந்த நாடுகளும் உறுதுணையாக இருந்ததாக குறிப்பிட்டிருப்பதாகும்.

ஆனால் இன்று, அதே அமெரிக்காவின் தலைமையில்தான், இலங்கையில் நீதியை உறுதிப்படுத்துவதற்கான அழுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு பக்கபலமாக பிரித்தானியாவும் செயற்பட்டு வருகிறது. இலங்கை அரசாங்கம் முன்னேற்றங்களை நிரூபிக்கவில்லையாயின், தனது அரசாங்கம் சர்வதேச விசாரணை ஒன்றிக்கு பக்கபலமாக இருக்கும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் பொதுநலவரசு மாநாட்டின் போது பகிரங்கமாகவே எச்சரித்திருந்தார். ஆனால் மேற்படி இரண்டு நாடுகளும், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு உறுதுணையாக இருந்ததாக தற்போது மக்கள் தீர்ப்பாயம் குறிப்பிடுகின்றது.

மக்கள் தீர்ப்பாயம் இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணம் என்ன? பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவதா அல்லது ஆளும் மகிந்த அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் மேற்கொண்டு வரும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளுக்கு நெருக்கடியை கொடுப்பதா? இத்தீர்ப்பாயம் குறிப்பிடுவது போன்று ஒரு வாதத்திற்காக, இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்றும், அதில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கும் பங்கிருப்பதாகவும் எடுத்துக் கொண்டால், தாங்கள் உறுதுணையாக இருந்த இனப்படுகொலை ஒன்றிற்கான விசாரணையை, அவர்கள் ஏன் கோரப் போகிறார்கள்? இன்று அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டு வரும், பிரேரணைகளின் இறுதி இலக்கு, தாங்களும் சம்மந்தப்பட்ட இனப்படுகொலையிலிருந்து மகிந்த அரசாங்கத்தை பாதுகாப்பதா? அல்லது குறித்த தீர்ப்பாயம் பொறுப்பற்ற வகையில் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருக்கிறதா அல்லது இலங்கையின் மீதான அழுத்தங்களின் வீரியத்தை குறைக்கும் உள்நோக்கத்துடன் செயற்பட்டிருக்கிறதா?

இதற்கான பதிலைக் கண்டடைய வேண்டியது தமிழர் பொறுப்பு. ஏனெனில் மேற்படி தீர்ப்பாயத்தின் அறிக்கை வெளியான சந்தர்ப்பத்தில், சில தமிழ் ஆய்வாளர்கள், குறிப்பாக புலம்பெயர் சூழலில் இயங்குவோர் குதூகலித்திருந்தனர். தமிழ் அரசியல் ஆய்வுச் சூழலில் இருக்கும் அடிப்படையான பிரச்சனையே இதுதான். சில விடயங்கள் இடம்பெறும் போது, அதன் ஆழ அகலங்களை அறிந்துகொள்ள முயற்சிக்காமல் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிடுவது. பின்னர், ஒன்றுமில்லை என்றவுடன் சோர்வின் உச்சத்திற்குச் சென்று முடங்கிவிடுவது. விடயங்கள் ஒவ்வொன்றையும் கட்டவிழ்த்து, பின்னர் முடிவுக்கு வரும் அணுகுமுறையொன்றுதான் இப்போது தமிழர்களுக்குத் தேவையானதாகும்.

தமிழ் மக்களுக்கான தனிநாடு என்னும் இலக்கில் செயற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும், இலங்கை அரச படைகளுக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின் போது, பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாப்பதிலிருந்து, ஆளும் மகிந்த அரசாங்கம் தவறிவிட்டதென்பதே இன்றைய குற்றச்சாட்டு. இந்த அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில், இறுதி யுத்தத்தின் போது நாற்பதாயிரம் வரையிலான மக்கள் இறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு உயிரிழந்த மக்கள் இனப்படுகொலை ஒன்றிற்கு ஆளானதாக மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மேற்படி அறிக்கையின் அடிப்படையில்தான், கூட்டமைப்பும் தனது கருத்துக்களை வெளிப்படுதி வருகிறது. ஆனால், இல்லை, இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பது சிலரது வாதமாக இருக்கிறது. இந்தப் பின்புலத்தில், பலர் பலவிதமான சொற்களை கையாண்டு வருகின்றனர். சிலர் இலங்கையில் இன்படுகொலையொன்று இம்பெற்றுள்ளதாக வாதிடுகின்றனர். ஒரு சிலர் தற்போதும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு 'கட்டமைப்புசார் இனப்படுகொலை' (structural genocide) நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக வாதிட்டு வருகின்றனர்.

ஆனால், இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் 'இப்போதும் உடல்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன' (Still Counting the Dead: Survivors of Sri Lanka's Hidden War) என்னும் நூலின் ஆசிரியரும், பி.பி.சி உலக சேவையின் இலங்கைக்கான முன்னாள் தொடர்பாளரும் பத்திரிகையாளருமான பிராஸ்சிஸ் ஹரிசன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றதை ஒரு மென்-இனச்சுத்திகரிப்பு (Soft ethnic cleansing) என்று வர்ணிக்கின்றார். ஆனால் யாழ்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றிய நடவடிக்கை பற்றி குறிப்பிடும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அது ஒரு இனச்சுத்திகரிப்பு (ethnic cleansing) நடவடிக்கை என்று குறிப்பிட்டு வருகின்றார். இதனை சுமந்திரன் இலங்கையில் மட்டுமன்றி, புலம்பெயர் தமிழர்கள் முன்னிலையிலும் குறிப்பிட்டிருக்கின்றார். பிரான்சிஸ் ஹரிசன் குறிப்பிடுவது போன்று, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்தும், ஒரு மென்-இனச்சுத்திகரிப்பு என்னும் வகைப்படுத்தலுக்குள் உள்ளடக்கப்படுமாயின், யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை எவ்வாறு ஓர் இனச்சுத்திகரிப்பு என்று சொல்ல முடியும்? முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போது, அவர்கள் எவரும் கொல்லப்படவில்லை.

இங்கு பிறிதொரு விடயத்தையும் தருகிறேன்.

குறித்த பத்திரிகையாளர் ஹரிசனின் நூல், இலண்டனில் அறிமுகம் செய்யப்பட்ட போது, கூடவே, ஒரு நேரடி கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில் நோர்வேயின் முன்னாள் ராஜதந்திரி எரிக் சோல்கெய்ம், நிபுணர் குழுவில் ஒருவரான ஜஸ்மின் சொக்கா மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழுவின் (ICG) தலைவர் அலன் கீனன் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர். இதன் போது ஒருவர் இனப்படுகொலை தொடர்ப்பில் கேள்வி எழுப்பியிருந்தார். நீங்கள் மூவரும் இலங்கையில் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றது என்பதில் உடன்படுகின்றீர்களா? இதற்கு சோல்கெய்ம் பின்வருமாறு பதிலளித்திருந்தார். அது இனப்படுகொலையா அல்லது இல்லையா என்பதெல்லாம் ஒரு விடயமல்ல. அங்கு இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதுதான் விடயம். இதன்போது பதிலளித்த, அலன் கீனன், நான் இது தொடர்பான விடயத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவன் அல்ல. ஆனால் நான் நினைக்கிறேன், அரசியல் திட்டங்களுக்கு கூடுதல் அர்த்தத்தை வழங்கும் வகையில் இது போன்ற முத்திரை (label) குத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் இது பற்றிய பகிரங்க கேள்விகள் அவசியம்.

எங்களுடைய ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் இந்த உண்மையை எவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது நலன்சார் அரசியல் வேலைத்திட்டங்களுக்காகவும், தங்களின் பிரத்தியேக விருப்பங்களுக்காவும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டும் நோக்கிலேயே, நான் இங்கு சில விடயங்களை பதிவு செய்திருக்கிறேன். ஆளும் மகிந்த அரசாங்கத்தின் அதிகார நலன்கள், பிராந்திய அதிகார நலன்கள், உலக வல்லாதிக்க சக்திகளின் அதிகார நலன்கள், தமிழர்களுக்குள் இருக்கின்ற ஒரு சிலரது சொந்த நலன்கள் என்று அனைத்து வகை நலன்களுக்குள்ளும் சிக்குப்பட்டுக்கிடக்கிறது, தமிழர்களுக்கான நீதி. இந்த அடிப்படையில்தான், இப்பத்தி, தமிழர்களுக்கான நீதி ஊசலாடிக்கொண்டிருப்பதாக வாதிடுகின்றது. ஆனால் தமிழர்கள் இதுவரை கொடுத்த விலைக்கு, அவர்களுக்கு ஒரு நீதி கிடைத்துத்தான் ஆக வேண்டும். ஆனால் அதனை ஆளும் மகிந்த அரசாங்கம் ஒரு போதுமே விரும்பித் தரப்போவதில்லை.

http://ponguthamizh.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=2945b790-7042-4148-90b7-f7aadb8de63d

"தமிழர்களுக்குள் இருக்கின்ற ஒரு சிலரது சொந்த நலன்கள்" .

 

ஆப்பிறுக்கும் போது இந்த முறை தன்னும் அதில் தனது நலனும் ஒளிந்திருப்பத்தாக யத்தீந்திரா வெளிப்டையாக ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.

 

கூட்டமைப்பை யத்தீந்திரா தொடர்ந்து இழுத்துக் கிழிப்பது அவரின் தனிநபர் நலம் கருதியே என்பது எல்லோருக்கும் அறிந்தது. அதனால் கிடைத்த முதல் இடத்தில் சுமந்திரனை தாக்கிவிட்டார். சுமந்திரனை காப்பது நமக்கு தேவையில்லாதது.ஆனால் ethnic cleansing என்பதில் கொலை நிகழ்நதாக வேண்டும் என்பது யத்தீந்திராவின் வாதம். இதனால் நோக்கத்தை பற்றி அலசுவதை தவிர்த்து பிராஸ்ன்சிஸ் கரிசனின் உதாணரத்துக்கு போகிறார். அடிப்படையில் சுமந்திரனின் எடுகோளையும், பிரான்சிஸ் கரிசனின் எடுகோளையும் பற்றி விவாதிப்பதை தவிர்த்து விடுகிறார். இதானால் வெகு லாவகமாக இனச் சுத்திகரிப்பில் கொலை உண்டு என்று நிரூபித்துவிட்டு அப்பால் போகிறார்.  பிரான்சிஸ் கரிசன் தனது நலம் பாராமல் செயல் பட்டவர் எனறதை யத்தீந்திரா சொல்ல நாம் கேடகத்தான் வேண்டும்.

 

சுமந்திரனை ஒரு வெட்டில் வீழ்த்திய யத்தீந்திரா தனது அடுத்த இலக்காக புலம் தமிழ்ரையும் விழுத்தியிருக்கிறார்.

" மேற்படி தீர்ப்பாயத்தின் அறிக்கை வெளியான சந்தர்ப்பத்தில், சில தமிழ் ஆய்வாளர்கள், குறிப்பாக புலம்பெயர் சூழலில் இயங்குவோர் குதூகலித்திருந்தனர்."

 

வழமை போலவே யத்தீந்திரா ஆட்டைமாட்டும் கலந்து கேட்போரை திக்கு முக்காட பண்ணியிருக்கிறார்.  இல்லை என்ற பதில் மட்டும் வரத்தக்கத்தாக இப்படி ஒரு கேள்வி போடுகிறார். "அல்லது குறித்த தீர்ப்பாயம் பொறுப்பற்ற வகையில் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருக்கிறதா அல்லது இலங்கையின் மீதான அழுத்தங்களின் வீரியத்தை குறைக்கும் உள்நோக்கத்துடன் செயற்பட்டிருக்கிறதா?"

 

அதற்கு இல்லை என்று பதில் அளித்த தமிழர் இலகுவில் தப்பி போக முடியாதபடி பார்த்துக்கொள்கிறார்.  அமெரிக்காவுக்கு எதிரான இந்த தீர்ப்பு சரி என்று தமிழர்கள் ஒத்துகொள்ள வேண்டியிருப்பத்தால்  இந்த தீர்ப்பால் அமெரிக்கா முடக்கபட்டுவிட்டத்தாக தான் குதுகலிக்கிறார்.  யத்தீந்திராவின் ஒரே நோக்கம் தமிழ் மக்கள் ஆராய்ந்து அமெரிக்கா தமிழ் ஜெனோசயிட் குற்றவாளியே என்றதை தனக்கு சொல்ல் வேண்டும் என்கிறார். "இதற்கான பதிலைக் கண்டடைய வேண்டியது தமிழர் பொறுப்பு."

 

அவர் சுற்றி வளைப்பதெல்லாம் இந்த ஆப்புக்காக.  அது இதோ:

தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பிருத்தானியா போன்ற நாடுகள் செயல்பட்டிருந்தது என்றதை சேர்மனியின் மக்கள் தீர்ப்பாயத்தின் பின்னர் முதன் முதலாக கேள்விப்படிருக்கிறார் யத்தீந்திரா. அதை நீதி தேடித்திரியும் தமிழ் மக்கள் முன்னால் போட்டு தனக்கு முதல் பதிலை சொல்லி தனது அதிபுதிய கண்டுபிடிப்புக்கு   நீதி கேட்கிறார்.  தமிழ் மக்களுக்காக வரவிருக்கும் பிரேரணை இந்திய, பிருத்தானிய, அமெரிக்க அரசுகள் எப்போதாவது, எங்கோவாது, எதையோவாது செய்த்திருந்த்தால் அது போர்க்குற்றமா இல்லையா என்பதை ஆராய்வதற்கல்ல. தமது வாழ்விடத்தால் தவறான முறையால் அவர்கள் சிங்களவருடன் சேர்த்து பூட்டப்பட்டுவிட்டார்கள். இதனால் 65 வருடங்களாக சிங்களவர்களால் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். முதலில் அதிலிருந்து தப்ப ஒரு வழிமுறையாகத்தான் இந்த பிரேரணையை கேட்கிறார்கள். இதனுள் யத்தீந்திரா மக்கள் தீர்ப்பாயத்தை செருகவரும் போது தனது காலக்கணிப்பையும் வெளிப்படையாக சொல்லவும் மறக்கவில்லை. அதாவது அமெரிக்காவின் பிரேரணை மிக சொற்பம் சென்று பல தமிழர் குறைப்படுகிறார்கள். அது ஏன் சொற்பமாக இருக்கிறது என்று யத்தீந்திரா கண்டுபிடித்துவிட்டார். இதோ அது: "தாங்கள் உறுதுணையாக இருந்த இனப்படுகொலை ஒன்றிற்கான விசாரணையை, அவர்கள் ஏன் கோரப் போகிறார்கள்?"  அதாவது ம்க்கள் தீர்பாயம் அமெரிக்கா மீது விரலை சுட்டுவதால் அமெரிக்கா சோர்ந்துவிட்டது. இங்கே அவரின் காலகணிப்பையும் பாருங்கள். "தமிழ் அரசியல் ஆய்வுச் சூழலில் இருக்கும் அடிப்படையான பிரச்சனையே இதுதான். சில விடயங்கள் இடம்பெறும் போது, அதன் ஆழ அகலங்களை அறிந்துகொள்ள முயற்சிக்காமல் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிடுவது. பின்னர், ஒன்றுமில்லை என்றவுடன் சோர்வின் உச்சத்திற்குச் சென்று முடங்கிவிடுவது."  அதாவது அமெரிக்காவுக்கெதிரான அப்பிறுக்கலுக்காக தான் தெரிந்து கொண்ட காலமானது பலர் அமெரிக்கப் பிரேரணை உடனே விசாரணையை ஆரம்பிக்காமல் இன்னும் ஒருவருட காலம் இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுத்ததை இறுக்கிப் பிடிக்கிரார். ஒவ்வொரு கிழமையும் முதல் கிழமை எழுதியதை வாசிகர்கள் நினைவில் வைத்திருக்கார்கள் என்ற அனுமானத்துடன் எழுதிவரும்  யத்தீந்திரா, அடுத்தமுறை விசாரணை வந்து வந்துவிட்டால் அதை மாற்றி எழுத்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றதில் தைரியமாகவே இருக்கிறார்.  இதனால் கல்லை குத்தி அமெரிக்காவை கழித்துவிட இதுதான் நல்ல சந்தர்ப்பமாக காண்கிறார். 

தீர்ப்பாயம் பொது அபிப்பிராயத்தை வைத்து விசாரணை நடத்துவது. சர்வதேச விசாரணை நிறுவப்பட்ட சாட்சியங்களை வைத்து குற்றம் குற்றமினமையை கண்டுபிடித்து தண்டிப்பது, விடுதலை செய்வதை செய்ய போகும் அமைப்பு. இதனால் விசாரணைக்குழு எதை விசாரிக்கலாம் என்றது முதலிலேயே வரையறுக்கப்படும். உதாரணத்துக்கு பிரேரணையின் காலம் கடை 6 நாட்கள் என்றதுதான் இதுவரையில் வெளிவந்த விபரம். இதில் கடைசி ஆறு நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா களத்தில் இருக்கவில்லை. பிருத்தானியா நேரடியாக இனஅழிப்பில் அல்ல போர்குற்றத்தில் தன்னும் உள்ளடக்கப்பட்முடியாதது. போருக்கான அமெரிக்க உதவிகள் புஸ் காலத்தில், அதாவது நொவெம்பர் 2008 வரைக்கும்தான் இலங்கைக்கு கிடைத்தது. இந்தியா கடைசி மாதத்தில் தனது பங்களிப்பை குறைத்துக்கொண்டுவந்தது. இதனால் கடைசி நாட்களை விசாரிக்கும் போது விசாரணையை கொண்டுவர முயலும் நாடுகள் தங்களின் சம்பந்த பட்ட சொந்த அதிரிகாரிகளின் தலையீட்டால் பிரேரணை சீர்குலையாமல் இருக்கத்தக்க கவனத்தை ஏற்கனவே எடுத்திருக்கிறார்கள். இதில் அமெரிக்காவின் பிரேரணையில் இருக்கும் குறைபாடு, மக்கள் தீர்ப்பாயத்தை கண்டு அமெரிக்கா மிரண்டதால் என்று யத்தீந்திரா நடதிதியிருக்கும் கண்டுபிடிப்பு அவர் மாதிரியான "தமிழர்களுக்குள் இருக்கின்ற ஒரு சிலரது சொந்த நலன்களளை" . கவனிக்க மட்டும் என்று கண்டுபிடிக்கப்பட்டதே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.