Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஒன்றுபட்ட இலங்கை' என்ற கட்டமைப்புக்குள் தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே பயணிக்கின்றோம்: சம்பந்தன்

Featured Replies

தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே பயணிக்கின்றோம்: சம்பந்தன்

 

'ஒன்றுபட்ட இலங்கை' என்ற கட்டமைப்புக்குள்ளேயே தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே, மிகவும் கடினமான ஒரு பாதை வழியாக - தமிழ் பேசும் மக்களும் அவர்களது அரசியல் தலைமைத்துவமும் பயணித்து வருகின்றார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

இலங்கை இனப் பிரச்சினையின் தொடக்க காலத்திலேயே - 1957 இல், இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கும் தமிழர் தலைவர் தந்தை செல்வநாயகத்திற்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தமும், பின்னர், 1965 இல், அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்காவுக்கும் தந்தை செல்வநாயகத்துக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் என்பன - இந்த நாட்டினுடைய தேசியத் தகைமையுடைய தலைவர்களால், 'ஒன்றுபட்ட நாடு' என்ற கட்டமைப்புக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உள்நாட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்ட நேர்மையான முயற்சிகளாகும்.

இலங்கை இனப்பிரச்சினையின் முக்கியமான அம்சங்களைப் பொறுத்தவரையில் - அந்த உடன்படிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் இந்த நாள் வரையில் பொருத்தப்பாடானதாகவே இருக்கின்றன.

1948 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில், அடுத்தடுத்து ஆட்சி அமைத்த அரசாங்கங்களின் கீழ், ஏற்றுக்கொள்ளத்தக்கதான ஓர் அரசியல் தீர்வை உருவாக்கி எடுப்பதற்கான உள்நாட்டு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு கட்டங்களாக அந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

சர்வதேசமயப்பட்டது

இருந்தாலும், இலங்கை இனப்பிரச்சினை சர்வதேசமயப்பட்டது. அதற்குப் பிரதான காரணமாக அமைந்தது, 1983ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரம் ஆகும்.

அன்று ஆட்சியில் இருந்த அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதே அந்த தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை என்றுதான் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால்  செயற்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு எதிரான அந்த இனக்கலவரத்தின் விளைவாகவே, சக்திமிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தோற்றம் கண்டது.

புலிகளின் உருவாக்கமும் அமைந்தது

1956 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் அடுத்தடுத்து ஆட்சி அமைத்த அரசாங்கங்கள் - தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டதும், மிதவாதத் தமிழ்த் தலைமைகளுடன் இணைந்து தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தவறிவிட்டதினதும் தவிர்க்கமுடியாத நேரடி விளைவாகத்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கமும் வளர்ச்சியும் அமைந்தது.

சனத்தொகை சமமாக உள்ளது

இந்தக் காலகட்டத்தில்தான், தமிழ் மக்கள் இந்த நாட்டை விட்டுத் தப்பி ஓடத் தொடங்கினார்கள். அவர்களில் பலர் அறிஞர்களும் துறைசார் வல்லுனர்களுமாவர். இந்த வேளையில்தான் - உலகின் பல பகுதிகளிலும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் வேர்விட்டு வளரத் தொடங்கியது. இன்று - புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் சனத்தொகை, இலங்கையில் வாழும் தமிழர்களது சனத்தொகைக்குச் சமனானதாக உள்ளது.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுதப் போர் பல கட்டங்களைக் கடந்து, 25 ஆண்டு காலமாக நீண்டு சென்றது. தம்மைத் திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் நிரூபித்திருந்தனர்.

தடைசெய்யப்பட்டனர்

ஆனாலும், ஜனநாயகப் பண்புகளையும் மனித உரிமைகளையும் அவர்கள் அப்பட்டமாகவே மீறிச் செயற்பட்டதன் விளைவாக உலக சமூகத்தில் வேண்டப்படாதவர்களாகி, உலக இயக்கத்தில் தாக்கங்களை ஏற்படுத்தவல்ல ஒவ்வொரு நாட்டினாலும் தடைசெய்யப்பட்டனர்.

இந்த ஒவ்வாரு நாட்டிலுமே விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்றிறன் அற்றதாக்கப்பட்டு, அதன் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டன. அந்த இயக்கத்திற்கு உதவிகள் வழங்கியமைக்காகப் பலர் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அரசாங்கத்துக்கு உதவின

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றிவந்த கப்பல்களின் பயணப்பாதை தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பல முக்கியமான நாடுகள் இலங்கை அரசுக்கு வழங்கின. அந்தத் தகவல்களின் அடிப்படையில் அந்தக் கப்பல்களை இலங்கை அரசு தகர்த்து மூழ்கடித்தது.

ஏராளமான நாடுகள், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்குத் தமக்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவின.இவையெல்லாம், யாராலும் மறுக்க முடியாத, எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள்.

இத்தகைய பின்னணியில் - விடுதலைப் புலிகளை அழித்தமைக்காகவே இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சர்வதேசச் சதிவலை பின்னப்படுவதாக இலங்கை அரசாங்கம் சொல்லுவது நகைப்புக்கிடமானது. இவ்வாறான ஒரு தவறான கருத்தைப் பரப்ப முயல்வது - இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நீண்ட கால நலனிற்கு உகந்ததாக அமையாது.

வாக்குறுதிகள் வழங்கப்பட்டன

தமிழர் பிரச்சினைக்கு, ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வினைக் காண்பது தொடர்பான பல வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கியிருக்கின்றது. போர் நடந்த காலத்திலும், போர் முடிந்ததற்குப் பிற்பாடும் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது, இலங்கை அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை மீறுகின்றது.

போர் முடிவுக்கு வந்தவுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்த போதும், திட்டவட்டமான வாக்குறுதிகைளை இலங்கை அரசாங்கம் அவரிடம் வழங்கியிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளுக்கு அமைவாகச் செயற்படுவதிலிருந்தும் அது தவறிவிட்டது.

இலங்கை உச்சநீதிமன்றத்திற்கும் இலங்கை நாடாளுமன்றத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளையும் கூட இலங்கை அரசாங்கம் மீறுகின்றது. இந்தக் காரியங்கள் ஆயுதப் படைகளின் உதவியுடன் கூடச் செய்யப்படுகின்றன. அந்த நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இனப்பரம்பல் வடிவத்தை மாற்றியமைக்கின்றன் அந்தப் பிரதேசங்களின்  கலாசார மற்றும் மொழி அடையாளங்களிலும் மாற்றங்களைச் செய்கின்றன.

தடையாக அமைந்துவிட்டன

இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் இந்த நாட்டில் இயல்புநிலை திரும்புவதற்கும் நேர்மையான நல்லிணக்கம் நிகழ்வதற்கும் தடையாக அமைந்துவிட்டன.

அத்தோடு - தான் வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றி - போர் காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்தும் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது.

இனப்பிரச்சினை விவகாரம் மேலும் மேலும் சர்வதேச மயப்படுவதற்கு இந்த விடயங்களே காரணமாக அமைந்தன. இன்று தனக்குத் தோன்றியுள்ள இந்த நெருக்கடியான நிலைக்கு இலங்கை அரசாங்கம் தன்னையே தான் குற்றம்சாட்ட வேண்டும்.

புத்திசலித்தனமானது அல்ல

உள்நாட்டில் தான் வழங்கிய வாக்குறுதிகளை மீறிப் பழகிவிட்டதைப் போல, உலக சமூகத்திற்குத் தான் வழங்கிய வாக்குறுதிகளையும் மீறுவதுடன், தனக்கான கடமைப்பாட்டிலிருந்தும் விலகி விடலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுவது புத்திசலித்தனமானது அல்ல.

உலக மட்டத்தில் ஏற்கப்பட்டிருக்கும் நியாயக் கோட்பாடுகளுக்கு அமைவாகவும், உயர் தரத்துடனும் தனது வாக்குறுதிகளையும் தனது கடமைப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.நீதியானதும், சமத்துவமானதும், ஏற்கத்தக்கதுமான வழிமுறைகளுக்கு ஊடாக அதனைச் செய்ய வேண்டும்.

இன்றைய நெருக்கடி நிலையிலிருந்து வெளியில் வருவதற்கு  இலங்கை அரசாங்கத்துக்கு வேறு மார்க்கங்கள் எதுவும் கிடையாது. சாதுரியமான ஏமாற்றங்களைச் செய்வதற்கு இனி இடமும் இல்லை.

இத்தகைய பின்னணியில் - பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய காரியங்களில் இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றது.

வன்முறைப் பாதைக்கு மீண்டும் செல்வதைத் தாங்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதைத் தமிழ் பேசும் மக்கள் வெளிப்படுத்திவிட்டார்கள்.

ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாடு என்ற கட்டமைப்பிற்குள் - ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான ஓர் அரசியல் தீர்வை உருவாக்கி எடுப்பதில் தாம் உறுதியாக இருப்பதையும் அவர்கள் வெளிப்படுத்திவிட்டார்கள்.

நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது

தமிழ் மக்களின் இந்த நிலைப்பாடானது, கடந்த நான்கு ஆண்டுகளில், ஜனநாயக ஆணைகள் மூலமாகத் தெளிவாக நிறுவப்பட்டுவிட்டது. 2010 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல், 2012 ஆம் ஆண்டின் கிழக்கு மாகாண சபைத் தேர்தல், 2013 ஆம் ஆண்டின் வடக்கு மாகாண சபைத் தேர்தல், கடந்த ஆண்டுகளில் நடந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் என்பவற்றில் அவர்கள் வழங்கிய ஜனநாயக ஆணைகள் மூலம் தமிழ் மக்களின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

இலங்கைக்கு உள்ளே - குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலும், புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் மத்தியிலும் - தமிழ் மக்களின் இந்த நிலைப்பாட்டைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாகவும் தெளிவாகவும் வலியுறுத்திவிட்டது. இந்த நிலைப்பாட்டுக்குத் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த நிலையிலேயே - புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திலுள்ள பல அமைப்புக்களையும் பல தனி மனிதர்களையும் இலங்கை அரசாங்கம் அண்மையில் தடை செய்தது. உள்நாட்டிலும் அது சில நடவடிக்கைகளை எடுத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள இயங்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக் கூறியே இந்த நடவடிக்கைகளை அது எடுத்தது.

நியாயமான காரணங்கள் இருப்பின், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஓர் அரசாங்கத்துக்கு இருக்கும் உரிமைகள் ஏற்கப்படவேண்டும் என்கிற அதேவேளையில், பக்கச்சார்பு இல்லாத அவதானிப்பாளர்களின் கருத்துப்படி - அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள்  பேரவையின் ஜெனீவா அமர்வுகளில் நடந்த நிகழ்வுகளால் உந்தப்பட்டே அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அத்தோடு, இலங்கையில் நடைபெறும் அங்கீகாரமுடைய மனித உரிமைச் செயற்பாடுகளில் தலையீடுகளைச் செய்ததாக அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் குற்றஞ்சாட்டப்படுகின்றார்கள்.

அண்மையில், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காலப்பகுதியிலும், அதன் பின்னர், ஜெனீவாவில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலுமே இத்தகைய தலையீடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

தருணம் வந்துவிட்டது

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய இந்த நடவடிக்கைகள் - போர் கால நிகழ்வுகளின் மீது நடைபெறக்கூடிய சுதந்திரமான விசாரணைகளின் போது, ஆணித்தரமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்கவல்ல தமிழ் மக்களைப் பயமுறுத்தி அமைதிப்படுத்திவிடம் நோக்கத்துடனேயே செய்யப்படுகின்றது என்றே கருதப்படுகின்றது.

இந்த நாட்டில் பரிசுத்தமான ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனின் - உலக அரங்கில் மேலும் தனிமைப்படுத்தப்படக்கூடிய விதமான கொள்கைகளைக் கைக்கொள்ளாமல், நெருக்கமான கூட்டிணைவுகளுக்கு வழிகோலக்கூடிய கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுவதே நற்பலன்களைத் தரவல்லதாக அமையும்.

நிரந்தரமான அமைதியையும் அர்த்தமுள்ள இணக்கப்பாட்டையும் இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்கின்றது எனின் - அதற்கு ஏற்ப, ஆக்கபூர்வமான சமரச முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தருணம் நிச்சயமாக இப்போது வந்துவிட்டது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108290-2014-04-26-12-13-47.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.