Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

[Friday, 2014-06-20 21:22:05]
canada-130614-tamilpoonga-seithycom-200.

'தமிழ் படிப்போம்' 'வாசிப்போம் எழுதுவோம்' நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்...

"பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமென்றால் பெற்றோர்களும் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ் ஆசிரியர் ஒரு வாரத்தில் 2 மணித்தியாலம் தமிழ் சொல்லிக் கொடுப்பதாலேயே பிள்ளைகள் தமிழைக் கற்றுவிட முடியாது. பெற்றோர்களது ஒத்துழைப்பும் தேவை. பல பிள்ளைகள் வீட்டு வேலை கொடுத்தால் அவற்றைச் செய்யாமல் வகுப்புக்கு வருகிறார்கள்.

  

காரணம் பெற்றோர்கள் அது பற்றி அக்கறை செலுத்துவதில்லை. தமிழ்மொழிக்கு செம்மொழி தகைமை வழங்கப்பட்டுள்ளது. மொழி அழிந்தால் இனம் அழிந்துவிடும்" என 'தமிழ் படிப்போம்' 'வாசிப்போம் எழுதுவோம்' நூல்கள் வெளியீட்டு விழாவில் வெளியீட்டுரை ஆற்றிய எழுத்தாளர், ஆசிரியர் குரு. அரவிந்தன் குறிப்பிட்டார்.

'தமிழ் படிப்போம்' 'வாசிப்போம் எழுதுவோம்' நூல்கள் வெளியீட்டு விழா கடந்த யூன் 13 (வெள்ளிக்கிழமை) ஸ்காபரோ பொதுநகர அரங்கில் இடம்பெற்றது. வழக்கம் போல் மங்கள விளக்கேற்றல், தமிழ்மொழி வாழ்த்து, கனடா தேசியப் பண், அகவணக்கம் இடம்பெற்றன.

தமிழ்ப் பூங்கா மாணவர்கள் தமிழ்மொழி வாழ்த்து, கனடா தேசியப் பண் பாடினார்கள்.

இப்படியான விழாக்களில் அகவணக்கம் சொல்பவர்கள் ஒழுங்காகச் சொல்வதில்லை. தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சொல்லிவிடுகிறார்கள். அகவணக்கம் என்று சொல்வதற்குப் பதில் அஞ்சலி என்று சொல்லப்பட்டது. வி.புலிகள் இருந்த காலத்தில் அகவணக்கம் ஒழுங்காகச் சொல்லப்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

தமிழீழ விடுதலைப் போரில் தாய்மண்ணின் விடியலுக்காக தங்கள் இளைய இனிய உயிர்களை ஈகை செய்த மாவீரர்கள் மற்றும நாட்டுப்பற்றாளர்கள் நினைவாகவும் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின் போது கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்ட எங்கள் உறவுகள் நினைவாகவும் மொழிப் போராளிகள் நினைவாகவும் சிறிலங்கா - இந்திய அரச பயங்கரவாதத்துக்குப் பலியான பொதுமக்கள் நினைவாகவும் இரண்டு மணித்துளி அகவணக்கம் செலுத்துவோமாக! என்று சொல்ல வேண்டும்.

தொடக்க உரை ஆற்றிய இளைப்பாறிய விரிவுரையாளர், எழுத்தாளர் சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் நூலாசிரியர் சபா. அருள்சுப்பிரமணியத்தின் முயற்சியை பாராட்டினார். "நீண்ட காலம் ஆசிரியராகப் பணிபுரிந்த அருள்சுப்பிரமணியம் போன்றவர்களால்தான் இப்படியான நூல்களை எழுத முடியும். நேரத்தையும் காலத்தையும் செலவழித்து தமிழ்ப் பிள்ளைகள் தமிழை இலகுவாகப் படிக்கக் கூடிய பயனுள்ள இரண்டு நூல்களை எழுதியுள்ளார்" எனக் கூறினார்.

இந்த நூற்றாண்டுக்குள் மறைந்து விடும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று என அய்.நா. கல்வி, அறிவியல், பண்பாடு நிறுவனம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் அது உண்மையல்ல. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அழிந்துவிடும் மொழிகள் பற்றி 2009 இல் அ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் சுமார் 2,473 மொழிகள் அழிவின் எல்லையில் உள்ளன என்றும் 1950 க்குப் பின் இந்தியாவில் 5 மொழிகள் அழிந்துவிட்டன என்றும் கூறியது. மேலும், 42 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. உலகளாவிய அளவில், 63 மொழிகள் நிச்சயம் மறைந்துவிடும். 82 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்று பட்டியலிட்டுள்ளது. அதில் தமிழ் இல்லை. அடுத்த தலைமுறைக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் கடத்தப்படும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.

எஸ். பம்மநாதன் இளைப்பாறிய தமிழ் விரிவுரையாளர். அப்படியிருந்தும் அவர் பேசும் போது வடமொழிச் சொற்களை பயன்படுத்தினார். அஞ்சலி, நிமிஷம், அர்ப்பணிப்பு, ஆரம்பம், சேவை, தம்பதிகள், கஷ்டம், வருஷம், கரகோஷம் போன்ற வட சொற்களை தாராளமாகப் பயன்படுத்தினார். இந்த வடமொழிச் சொற்களுக்கு ஏற்ப தூய தமிழ்ச் சொற்கள் இருந்தும் அவற்றை ஏன் அவர் பயன்படுத்தவில்லை என்பது விளங்கவில்லை. ஏனைய பேச்சாளர்களும் தங்களது உரையில் சர்வதேசம், சந்தோஷம், நாசம், பாரியார் என்ற வடமொழிச் சொற்களைக் கையாண்டார்கள். சிலர் தூய தமிழ் தேவையில்லை என்றும் பேசினார்கள்.

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் தமிழ்மொழிக்குத் தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்ற பதினாறு பண்புகள் இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.

தூய தமிழ், கலப்புத் தமிழ் இந்த இரண்டில் எதைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது பற்றி விழாவில் பேசியவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்பட்டது. 'ஆசியுரை' வழங்கிய பேராசிரியர் அ.யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் பேசும் போது குழந்தைகளுக்கு தூய தமிழில் படிப்பிக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது - திணிக்கக் கூடாது - வழக்கத்தில் உள்ள மொழிநடையில் சொல்லிக் கொடுத்தல் நல்லதென்றார். விடா முயற்சியோடு தமிழ்மொழியை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆங்கிலத்தில் உள்ள குழந்தை இலக்கியம் போல் தமிழ்மொழியில் இல்லை. இது ஒரு குறைபாடு. அதனை நாம் சீர்செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களது குழந்தைகள் இப்போது பல மொழிகளைக் கற்கின்றன. ஆங்கிலம் மட்டுமல்லாமல் பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஒல்லாந்து என பல அய்ரோப்பிய மொழிகளை அவர்கள் கற்கிறார்கள். இதனை நாம் வரவேற்க வேண்டும். உலகில் 7,000 மொழிகள் இருக்கின்றது எனவும் இதில் 40 விழுக்காடு இந்த நூற்றாண்டின் முடிவில் மறைந்து விடும் எனவும் சொன்னார். யேசுநாதர் பேசிய எரேமியம் (Aramaic) இப்போது மறைந்து விட்டது என்றார்.

உண்மையில் உலகில் உள்ள வாழும் மொழிகளின் எண்ணிக்கை 7,105 என மொழியியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த 7105 வாழும் மொழிகளில், அமெரிக்க நாடுகளில் 1060, ஆப்பிரிக்கா நாடுகளில் 2146, ஐரோப்பிய நாடுகளில் 284, ஆசிய நாடுகளில் 2304, ஆஸ்திரேலிய/பசிஃபிக் நாடுகளில் 1311 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எழுதவும் பேசவும் வல்லமை கொண்ட மொழிகள் 700 க்கு உட்பட்டவையாகும். சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் 100 மட்டுமே. இவ்வாறு பல்வேறு தன்மைகளுடன் மொழிகள் இருந்தபோதும் இவற்றுக்கெல்லாம் தாயாகத் திகழும் மூலமொழிகள் ஆறு என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை ஈபுரு மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, சமற்கிருத மொழி, சீனமொழி, தமிழ்மொழி என்பனவாகும். இவற்றுள் யேசுநாதர் பேசிய எரேமிய மொழி, சோக்ரடீஸ் பேசிய (ஆதி) கிரேக்க மொழி, சீசர் பேசிய இலத்தின் மொழி, வால்மீகி பேசிய வடமொழி (சமற்கிருதம்) என்பன இன்று பேச்சு வழக்கில் இல்லாது இறந்துவிட்டன. ஆனால் கொன்பூசியஸ் பேசிய சீன மொழியும் தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகியோர் பேசிய தமிழ்மொழியும் இன்றும் சிறப்புடன் வாழ்கின்றன.

ஆடு, மாடுகள் நுழையாதிருக்கத் தோட்டத்துக்கு வேலி எவ்வளவு இன்றியமையாததோ அதேபோல் மொழிக்கும் இலக்கணக் கட்டுப்பாடு இன்றியமையாயது. தமிழ் ஆரியம்போல் உலகவழக்கழிந்து ஒழிந்து சிதையாது அன்று போல் இன்றும் சீரிளமையோடு எத்திசையும் புகழ்மணக்க இருப்பதற்கு ஒரே காரணம் அதன் இலக்கணக் கட்டமைப்பே. இலக்கணக் கட்டமைப்பில்லாது விட்டால் மொழி குலைந்துவிடும். தமிழை எப்படி எழுதினால் என்ன? பொருள் விளங்கினால் போதும் என்ற வாதம் பொருத்தமற்றது. தொல்காப்பியர் கண்ட மொழி இலக்கணத்தை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த கல்வியில் பெரிய கம்பன் அப்படியே பின்பற்றியிருக்கிறான்.

வடவெழுத்தை நீக்கியபின் எவ்வாறு தமிழ் எழுத்தில் எழுத வேண்டும் என்பதை எழுத்தொடு புணர்ந்த சொல் எனும் தொடரால் தொல்காப்பியர் விளக்குகிறார். அதனால் தக்ஷிணம் என்பதை தக்கணம் என எழுதுகிறோம். க்ஷ எழுத்து க்க எழுத்தோடு புணர்ந்து சொல்லாகிறது. விக்ரமன் என்பதில் க்ர என்பதுக்கு க்கிர என்பதொடு புணர்ந்து சொல்லாகிறது. எழுத்தோடு புணர்ந்து சொல்லாக மாற்றாவிட்டால் வடமொழிக்குரிய எழுத்துக்கள் சொற்களில் புகுந்துவிடும். தீங்குநேரும் ஒருமொழி வேற்றுமொழிச் சொற்களைக் கடன்பெற்றாலும் வேற்று மொழி எழுத்துக்களை எக்காரணத்தைக் கொண்டும் உள்ளே புகவிடலாகாது. இது தலையாய தமிழ்காப்பு முயற்சி என்பதை தொல்காப்பியர் தெளிவாக்கி இருக்கிறார்.

தொல்காப்பியருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய கம்பன் தொல்காப்பியரது சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் என்ற இலக்கணத்தைப் பின்பற்றியே லஷ்மணன் என்பதை இலக்குவன் என்றும் விபீஷணனை விபீடணன் என்றும் சீதாவை சீதை என்றும் ராமனை இராமன் என்றும் வடமொழி எழுத்துக்களைக் களைந்து தமிழ்ப்படுத்தி பாடியுள்ளார்.

இன்றைய தமிழில், ஸ, ஷ, ஜ, ஹ போன்றவற்றைப் பயன்படுத்துவது தொல்காப்பிய நெறிமுறைக்கு முற்றிலும் மாறானது. கல்லாத மக்களும் ராஜா என்பதை ராசா என்று எழுத்தொடு புணர்ந்த சொல்லாக்குகிறார்கள். கல்லாத மக்களுக்கு இருக்கும் தெளிவு கூட, படித்த தமிழர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கது.

மொழித் தூய்மை கெட்டதால்த்தான் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகள் பிறந்தது என்பது பலருக்குத் தெரிவதில்லை. வடமொழிக் கலப்பால் மலையாள மொழி ஓராயிரம் ஆண்டுகளுக்கு முந்தித்தான் தோற்றம் பெற்றது. கிபி 6 ஆம் நூற்றாண்டுகளில் கேரள நாட்டில் நம்பூதிரி பிராமண குழுமங்கள் குடியேறத் தொடங்கின. இவர்களிடம் இருந்து சமற்கிருதம் பொதுமக்களின் மொழியில் கலந்தது. இதனால் தமிழும் சமற்கிருதமும் கலந்து மலையாளம் என்ற புதுமொழி உருவம் பெற்றது. தமிழில் உள்ள சிறப்பு ழ எழுத்து மலையாள மொழியில் மட்டும் உண்டு. இன்றைய மலையாளிகள் சேரன் செங்குட்டுவன் வழி வந்தவர்கள். சேரன் தம்பி இளங்கோவின் சொந்தக்காரர்கள். ஆனால் அந்த வரலாற்று உண்மையை அவர்கள் மறுக்கிறாகள்.

நூல் வெளியாட்டு விழாவுக்கு தலைமை தாங்கிய தகைசார்வாழ்நாட் பேராசிரியர் அ. சண்முகதாஸ் "செர்மனி நாட்டில் 60,000 தமிழ்மக்கள்தான் வாழ்கிறார்கள். அங்கே 600 தமிழ்ப் பள்ளிக் கூடங்களை நிறுவி அதில் 50 க்கும் மேலான ஆசிரியர்கள் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள்" என்றார். இதே கருத்தை செல்வம் சிறிதாஸ் அவர்களும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

சிகாகோவிலே 1988 இல் தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் ஆசிரியை தமிழ் சொல்லிக் கொடுத்தார். இன்று 400 க்கும் மேற்பட்ட 7 பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. ஆசிரியர்கள் அன்போடும் ஆர்வத்தோடும் படிப்பிப்பதன் காரணமாக மழலைத் தமிழ் பேசிய நிலை மாறி இன்று அழகிய தமிழ் உச்சரிப்புடன் தமிழைப் பேசுகிறார்கள். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த 5 அகவை சிறுவன் 100 திருக்குறள்களை ஒப்புவிக்கின்றான். பல பிள்ளைகள் 200, 300, 700 என்று ஒப்புவிக்கின்றனர். இல்லினாய் மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் குழந்தைகள் தமிழ் படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரு நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் சனி, ஞாயிறு நாட்களில் நடக்கின்றன. கனடாவில் இதே பணியை தமிழ்ப் பூங்கா ஆற்றிவருகிறது.

ஆளாளுக்கு நூல்கள் எழுதாமல் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க ஒரே பாடத்திட்டம் இருந்தால் நல்லது என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டது.

அடுத்து 'ஆசியுரை' வழங்கிய கவிநாயகம் வி.கந்தவனம் "ஆசியுரை போன்று வாழ்த்துரையும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு? முன்னது வடமொழி பின்னது தமிழ். பேசுவதற்குப் பலருக்கு இடம் கொடுப்பதற்கு இது ஒரு உத்தியாக இருக்கலாம்" என்றார். இராமன் 14 ஆண்டு காட்டுவாழ்க்கையை முடித்தக் கொண்டு அயோத்தி திரும்பிய போது எல்லோரும் அவனை வாழ்த்தினார்கள். ஒருவர் மட்டும் வாழ்த்தவில்லை. அவர்தான் கூனி என்று அழைக்கப்பட்ட மந்தரை. சிறு வயதில் இராமன் கூனியின் முதுகில் அம்புவிட்டு அவளை அவமானப்படுத்தியவன். இராமனை மந்தரை வாழ்த்தாதற்கு அதுதான் காரணம். ஆனால் நான் ஆசிரியர் அருள்சுப்பிரமணியமும் அவரது பாரியாரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என வாழ்த்தினார்.

உதயன் ஆசிரியர் ஆர்.என். லோகேந்திரலிங்கம் தனது வாழ்த்துரையில் சமயத்தையும் மொழியையும் கலக்கக் கூடாது என்றார்.

பண்டிதர் சா.வே. பஞ்சாட்சரம் பேசும் போது வடமொழிக் கலப்புக் கூடாது என பேசுவோர்களை ஒரு பிடி பிடித்தார். தனக்கு மொழித் தூய்மையில் நம்பிக்கை இல்லை என்றார். தான் பண்டிதராக இருந்தாலும் ஆங்கிலமொழியில் பயிற்றப்பட்ட ஆசிரியர் என்றார். தமிழ்ப் பண்டிதர்கள்தான் தமிழைக் கெடுத்தார்கள் என்ற பழிச் சொல் இருக்கிறது. அவரது பேச்சை செவி மடுத்தவர்கள் அதனை வழிமொழிவார்கள்.

தமிழ்மொழி வரலாறு தெரியாதவர்களே தூய தமிழுக்கு எதிராக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழையும் வடமொழியையும் சமமாகக் கலந்து எழுதும் பழக்கம் இருந்தது. அதனை மணிப்பிரவாள நடை என்று அழைத்தார்கள். தமிழ்க் கடல் மறைமலை அடிகள், பரிதிமாக்கலைஞர் (சூரியநாராயண சாத்திரி) பாரதிதாசன், பாவலேறு பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் உணர்வாளர்கள்தான் 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்ப் பயிரோடு முளைத்த வடமொழிக் களையைக் களையெடுத்தனர். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமற்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின.

இந்த மாற்றத்தை ஈழவேந்தனும் சுட்டிக் காட்டினார். அக்கிராசனர் அகற்றப்பட்டு தலைவர் தலைமை தாங்குகிறார். காரியதரிசி காணாமல் போய்விட்டார் செயலாளர் செம்மையாக வீற்றிருக்கிறார். பொக்கிஷாரர் புதைக்கப்பட்டு பொருளாளர் பொலிவோடு விளங்குகிறார். போஷகர் போனயிடம் தெரியவில்லை. காப்பாளர் கனிவோடு வீற்றிருக்கிறார்.

தமிழ்ப் பள்ளியில் படிக்கும் போது 'நமஸ்காரம்" வாத்தியாரே என்றுதான் சொல்வோம். இன்று வணக்கம் வழக்கமாகிவிட்டது. அதேபோல் ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, ஸ்ரீமஸ்து, சுபமஸ்து திருவாக, திருத்திருவாக மாற்றப்பட்டு விட்டன. மேலும் 'ஸஷ்டியப்த பூர்த்தி' மணிவிழா என்றும், 'ருதுமங்கள ஸ்நானம்' பூப்பு நீராட்டு விழா என்றும் 'கிருஹப்பிரவேசம்' புதுமனை புகுவிழா என்றும் தூய தமிழாக மாற்றப்பட்டு விட்டன.

இன்று ஒரு 50 ஆண்டுகளுக்கு முந்தி அச்சிட்ட கல்யாண விஞ்ஞாபன பத்திரிகைக்கும் இன்று அச்சிடப்படும் திருமணை அழைப்பிதழையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தனித்தமிழ் இயக்கத்தின் அருஞ்செயல் தெரியும். திருமண அழைப்பிதழ் இன்று கொஞ்சு தமிழில் எழுதப்படுகின்றன. கல்யாணம் - திருமணம், வருஷம் - ஆண்டு, சிரேஷ்ட புத்திரன் - தலைமகன், சிரேஷ்ட புத்திரி - தலைமகள், கனிஷ்ட புத்திரன் - இளையமகன். கனிஷ்ட புத்திரி - இளையமகள். சிரஞ்சீவி - திருநிறைச்செல்வன், சௌபாக்கியவதி - திருநிறைச்செல்வி, இஷ்டமித்திர பந்துமித்திரர் - சுற்றமும் நட்பும். தம்பதியினரை ஆசீர்வதித்து - மணமக்களை வாழ்த்தியருளி என மாற்றம் அடைந்துள்ளன.

இப்படி எழுதுவதால் தவிர்க்க முடியாத இடங்களில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தக கூடாது எனப் பொருள் கொள்ளக் கூடாது. தமிழில் பொருத்தமான சொற்கள் இருக்க ஏன் இரவல் புடவை என்பதுதான் எமது கேள்வி.

அடுத்துப் பேசிய செல்வம் ஸ்ரீதாஸ் பிள்ளைகளுக்கு அகரத்தைத்தான் முதலில் கற்பிக்க வேண்டும் என்றார். அதாவது சுழி எழுத்துக்களை கற்பிக்க வேண்டும் என்றார். பிள்ளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பயிலும் ஆற்றல் உடையவர்கள். மொழிக்கலப்பு பிள்ளைகளைக் குழப்பிவிடும் என்றார்.

பேராசிரியர் இ. பாலசுந்தரம் பேசும் போது ரொறன்ரோ கல்விச் சபையை கடுமையாகச் சாடினார். அவர்கள் தமிழை நாசமாக்கி விட்டார்கள் எனக் குற்றம் சாட்டினார். ரொறன்ரோ கல்விச் சபை நாற்பதற்கும் மேற்பட்ட மொழி பேசும் பிள்ளைகளுக்கு ஒரே பாடத் திட்டத்தைத்தான் பயன்பாட்டிற்கு விட்டிருக்கிறது. இங்கேதான் சிக்கல் எழுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழி பேசுவோர் பண்பாட்டுக்கு ஏற்ப பாடநூல்களை ரொறன்ரோ கல்விச் சபை எழுதுமா? இது பெரிய கேள்வியாக உள்ளது.

நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் எழுத்துக்களைப் பிள்ளைகளுக்குச் சுழித்து எழுதக் கற்றுக் கொடுக்க வேண்டுமா அல்லது கோடு போட்டு எழுதக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்பதில் பேச்சாளர்கள் ஆளுக்காள் முரண்பட்டார்கள். தமிழ் அரிச்சுவடியில் அகரம் முதல் எழுத்து, அப்பா, அம்மா, அத்தை போன்ற சொற்கள் அகரத்தில்தான் தொடங்குகின்றன என்பது செல்வம் சிறிதாஸ் அவர்களுடைய வாதம். இல்லை அம்மா, அப்பா என்பதற்குப் பதில் படம், பப்படம், மடம் என்ற எழுத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதக் கற்பிப்பது எளிதானது என்பது வேறு சிலரது வாதம். நூலாசிரியர் 'தமிழ் படிப்போம்' என்ற நூலில் கோடு போட்டு எழுதும் முறையைக் கற்பிக்கிறார்.

தமிழ்த் தொலைக்காட்சி அரும்புகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி வாசுகி நகுலராசா தமிழ் படிப்பிப்பதை ஒரு தவமாக நினைத்து பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார்.

தமிழ் கற்றல், கற்பித்தல் பற்றி இளைய தலைமுறையைச் சேர்ந்த இருவர் பேசினார்கள். ஒருவர் ஆசிரியர் கு. இராஜ்குமார் மற்றவர் சயனிகா சுரேஸ். சயனிகா சுரேஸ் தனது இரண்டாம் அகவையில் தாயகத்தைவிட்டு பெற்றோருடன் வந்தவர். அவர் பேசும் போது "ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களே இருக்கின்றன. ஆனால் தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. எனவே தமிழ் மாணவர்கள் 247 எழுத்துக்கள் உள்ள தமிழைப் படிக்க விரும்புகிறார்கள் இல்லை. ஆனால் நூலாசிரியர் அருள்சுப்பிரமணியம் அவர்கள் இந்த நூலில் தமிழின் அடிப்படை எழுத்துக்கள் 12 உயிர், 18 மெய், 18 அகரமேற்றிய மெய் ஆக மொத்தம் 48 எழுத்துக்களையும் கற்றாலே மொழியின் அத்திவாரத்தை புரிந்து கொள்ளலாம்" என்கிறார். சயனியா ஆசிரியர் அருள்சுப்பிரமணியத்திடம் தமிழ் கற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நூலாசிரியர் அருள்சுப்பிரமணியம் விழாவைச் சிறப்பித்த எல்லோருக்கும் நன்றி கூறினார். தமிழ் மிறர் உட்பட பல செய்தித்தாள்களுக்கு நன்றி தெரிவித்தார். எல்லோருக்கும் மேலாக தனது துணைவியாரும் தமிழ்ப் பூங்கா அதிபருமான யோகா அருள்சுப்பிரமணியத்து நன்றி கூறினார். குறிப்பாக அறிவகத்துக்கு நன்றி கூறினார். அறிவகத்தில் இருந்து வெளியில் வந்த காரணத்தாலேயே இந்த நூல்களை எழுத நேரம் கிடைத்ததாகவும் அதற்காக அவர்களுக்குச் சிறப்பாக நன்றி கூறுவது தனது கடமை என்றும் கூறினார். நூலாசிரியரின் இந்தப் பேச்சு வஞ்சகப் புகழ்ச்சி என்பதை அவையோரில் பலர் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

இனப்பற்று, மொழிப்பற்று என்று வரும்போது நூலாசிரியர் அருள்சுப்பிரமணியத்தை விஞ்ச யாரும் இல்லை. தனது வீட்டுத் திருமணத்தை அய்யர் இல்லாமல் அருந்ததி பாராமல் தமிழில் நடத்தியவர். திருமணத்துக்கு வருகை தந்தவர்களுக்கு திருக்குறள் நூலைப் பரிசாகக் கொடுத்தவர்.

கனடா மண்ணில் தமிழ் மெல்லச் சாகும் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால் இப்படியான விழாக்களில் கலந்து கொள்ளும் போதுதான் தமிழ்மொழி நீடித்து வாழும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

திருமகள்

http://www.seithy.com/breifArticle.php?newsID=111704&category=Article&language=tamil

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.