Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாப்பெருங்கலக் காரிகை

Featured Replies

இலக்கணம் - யாப்பெருங்கலக் காரிகை

யாப்பருங்கலக்காரிகை - ஒரு அறிமுகம்

 

நெறிபடுத்தப்பட்ட மொழியாகிய தமிழில் இலக்கிய வளர்ச்சியுடன் இலக்கண வளர்ச்சியும் இணைந்தே நடந்து வந்திருக்கிறது. உலகின் தொன்மையான இலக்கண நூல்களில் தொல்காப்பியமும் ஒன்று. இதின் இலக்கண விதிகள் இன்றைக்கும் பொருந்திவருவது உலகில் வேறேந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாகும். இந்த நெடிய இலக்கண மரபில் முக்கிய இடம் வகிக்கும் ஆக்கம் யாப்பருங்கலக்காரிகை; இது செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது.

இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பாவின் அடிப்படை உறுப்புகளாகிய, எழுத்து, அசை, சீர், தளை முதலியனவற்றை முதல் பகுதியாகிய உறுப்பியல் விளக்குகின்றது. இது தொடர்ந்து செய்யுளியலில் பாவிற்குரிய அடியளவுகள், பாக்கள், பாவினங்களின் வகைகளும் அவற்றின் இலக்கணங்களும், ஓசையும் வரையறுக்கப் படுகின்றன. இறுதியாக உறுப்பியலிலும் செய்யுளியலும் கூறப்படாதனவற்றுக்கு ஒழிபியல் இலக்கணங் கூறுகின்றது.

இந்நூலாசிரியர் அமிதசாகரர் என்பவராவார், இவர் காலம் பதினோறாம் நூற்றாண்டின் தொடக்கமென வரலாற்றாசிரியர்களால் வரையறுக்கப் படுகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் நீடுர் எனும் சிற்றூரில் காணப்படும் கல்வெட்டொன்றில்

தண்டமிழ் அமித சாகர முனியைச்

சயங்கொண்ட சோழ மண்டலத்துத்

தண்சிறு குன்ற நாட்டகத் திருத்தி

என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தது. இவன் காலம் கி.பி. 1070-1120 என அறுதியிடப்பட்டுள்ளது. செயங்கொண்டான் என்பான் முதலாம் இராசராசனாவான், இவன் காலம் கி.பி. 985-1014. இராசராசன் தொண்டை மண்டலத்தை வென்றைமையின் செயங்கொண்டான் எனப் பெயர் பெற்றான். தொண்டை மண்டலத்திருந்த அமிதசாகரரின் ஊரினை சோழநாட்டொடு இணைத்ததை இக்கல்வெட்டு கூறுகின்றது. இன்னொரு கல்வெட்டில்

அமுதசாகரன் நெடுந்தமிழ் தொகுத்த

காரிகைக் குளத்தூர் மன்னவன்

எனக் காணப்படுகின்றது. (அமுதசாகரர் என்பதும் அமிதசாகரர் என்பதும் ஒருவரையே குறிக்கும்). இவ்விரண்டு கல்வெட்டுக்களாலும் அமிதசாகரரின் காலம் அறுதியிடப்படுகின்றது. இவர் இக்காரிகைக்கு முன் செய்த நூல் யாப்பருங்கலமாகும். இதன் நூற்பாயிரத்தில்

அளப்பருங் கடற்பெயர் அருந்தவத் தோனே

எனப் பயிலுகின்றது. இதில் அளப்பருங்கடல் என்பது அமிதசாகரம் என்பதற்கு இணையானதாகும். இதனால் கலத்தையும் காரிகையையும் செய்தவர் ஒருவரே எனப் புலப்படும். இதுவிடுத்து, "மாஞ்சீர்க் கலியுட் புகா" எனும் தொடர் கலத்தினும் காரிகையினும் பயின்று வருகின்றது. காரிகையின் பாயிரமாகிய

கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்

எந்த மடிகள் இணையடி ஏத்தி

எனும் தொடரின் மூலம் இவர் சமண சமயத்தவராக அறுதியிடப்படுகின்றார். (கேடில்லாத நறுமணம் பரப்பும் பூக்கள் செரிக்கும் அசோக மரத்தினடியில் இருக்கும் எம்முடைய சுவாமிகளின் பாதங்க்ளைப் புகழ்ந்து - என்பது இதன் விளக்கம்). இவரது ஊர் தொண்டைநாட்டிலிருந்த காரிகைக் குளத்தூர் எனும் சிற்றூராகும்.

யாப்பருங்கலச் சிறப்புப் பாயிரத்தில்

குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத்

துளக்கறு வேள்வித் துகடீர் காட்சி

அளப்பருங் கடற்பெய ரருந்தவத் தோனே

எனக் காணப்படுகின்றது. இதன் வாயிலாக அமிதசாகரரின் ஆசிரியர் பெயர் குணசாகரர் (குணக்கடற் பெயரோன்) என உணரப்படுகின்றது.

இந்நூல் கட்டளைக் கலித்துறை எனும் பாவகையால் யாக்கப்பட்டது. எனினும் கட்டளைப் பாக்களுக்கு இதில் இலக்கணங் கூறப்படவில்லை. எழுத்தெண்ணிப் பாடப்படும் இப்பா பிற்காலத்தே பயின்று வழங்கத் தொடங்கியது. செவ்விய இலக்கண மரபையட்டி, இலக்கியத்தால் நெறிப்படா கட்டளைப் பாக்களுக்கு அமிதசாகரர் இலக்கணமுரைக்கவில்லை எனத் தெரிகின்றது. சூத்திரமாக உரைக்கப்பட்ட இந்நூலுக்கு கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் பெரிதும் உதவுகின்றது. அடிவரையறையாலும் எழுத்தெண்ணிக்கையாலும் பாக்களை மனதில் நிறுத்துவது எளிதாகின்றது. மகடூஉ (பெண்பால்) முன்னிலையாகப் பாடபெற்றது இந்நூல், இது மாணவரை முன்னிறுத்தி அறிவுறுத்தும் தன்மையை இந்நூலுக்களிக்கிறது. இம்மகடூஉ முன்னிலை அக்காலத்தில் பெண்கள் இலக்கணப் பயிற்சி பெற்றதைக் காட்டுகின்றது.

யாப்பாகிய கடலைக் கடக்கக் கலமாகச் செய்யப்பட்டது யாப்பருங்கலம். இதற்கு உரைகூறும் வகையான் அமைந்தமையால் இந்நூலுக்கு யாப்பருங்கலக்காரிகை எனப் பெயர் உண்டானது என்பர். காரிகையருவளை முன்னிறுத்திப் பாடியமையான் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. இது தவிர கட்டளைக் கலித்துறைக்குக் காரிகை எனும் பெயரும் உண்டு, குறளால் யாக்கப் பட்டது திருக்குறளென வழங்கப் படுவதுபோல், இந்நூற்பெயர் ஏற்பட்டதென்பாரும் உள்ளனர்.

இந்நூலுக்குப் பலர் உரையெழுதியுள்ளனர். இவற்றுள் குணசாகரர் (கலத்தின் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டவர் இவர் அல்லர்) என்பவரது உரை தொன்மையானது. சென்ற நூற்றாண்டில் யாழ்பாணதில் இருந்துவந்த சுன்னாகம் அ. குமாரசுவாமிப் பிள்ளை என்பவரது உரையை அடியட்டியே தற்கால விளக்கங்கள்

யாப்பருங்கலக்காரிகை

 

அமிதசாகரர் செய்தது

தற்சிறப்புப் பாயிரம்

கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்

எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்தசைசீர்

பந்தம் அடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்

சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே (1)

அவையடக்கம்

தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்

கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்

யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்

ஆனா அறிவின் அவர்கட்கென் னாங்கொலென் ஆதரவே (2)

சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான்மொழிந்த

பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப்

பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்

இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே (3)

உறுப்பியல்

எழுத்து

குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே

மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்

சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்

அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே (4)

அசை

குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே

நெறியே வரினும் நிறைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று

அறிவேய் புரையுமென் தோளி உதாரணம் ஆழிவெள்வேல்

வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே (5)

சீர்

ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம்

நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யாலிறுப

வாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்

ஓரசை யேநின்றுஞ் சீராம் பொதுவொரு நாலசையே (6)

வாய்பாடு

தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்

காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா

வாமாண் கலையல்குல் மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்

நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே (7)

தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால்

எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகும் இனியவற்றுட்

கண்ணிய பூவினங் காய்ச்சீ ரனைய கனியடொக்கும்

ஒண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கும் ஒண்தளைக்கே (8)

உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்

குன்றக் குறவன் அகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக்

கொன்று முதாரணம் பூந்தா மரையென்ப ஓரசைச்சீர்

நன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க்

கன்றதென் னாரள்ளற் பள்ளத்தி னோடங்கண் வானத்துமே (9)

தளை

தண்சீர் தனதொன்றில் தன்தளை யாந்தண வாதவஞ்சி

வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்துவல் லோர்வகுத்த

வெண்சீர் விகற்பங் கலித்தளை யாய்விடும் வெண்தளையாம்

ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் ஒண்ணுதலே (10)

உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்

திருமழை உள்ளார் அகவல் சிலைவிலங் காகும்வெள்ளை

மருளறு வஞ்சிமந் தாநிலம் வந்துமை தீர்கலியின்

தெரிவுறு பந்தநல் லாய்செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப

துரிமையின் கண்ணின்மை ஓரசைச் சீருக் குதாரணமே (11)

அடி

குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர்

அறைதரு காலை அளவொடு நேரடி ஐயருசீர்

நிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பணைத்தோள்

கறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே (12)

உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்

திரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து

விரிக்கு நெடிலடி வேனெடுங் கண்ணிவென் றான்வினையின்

இரைக்குங் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்குமற்றும்

கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் கழிநெடிலே (13)

நான்கு பாக்களுக்கும் அடியின் சிறுமையும் பெருமையும்.

வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற்

கெள்ளப் படாகலிக் கீரிரண் டாகும் இழிபுரைப்போர்

உள்ளக் கருத்தின் அளவே பெருமையண் போதலைத்த

கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே (14)

உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்

அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு

குறித்தங் குரைப்பின் முதுகுறைந் தாங்குறை யாக்கலியின்

திறத்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை

புறத்தாழ் கருமென் குழல்திரு வேயன்ன பூங்கொடியே (15)

தொடை

எழுவா யெழுத்தொன்றின் மோனை இறுதி இயைபிரண்டாம்

வழுவா எழுத்தொன்றின் மாதே எதுகை மறுதலைத்த

மொழியான் வரினு முரணடி தோறு முதன்மொழிக்கண்

அழியா தளபெடுத் தொன்றுவ தாகும் அளபெடையே (16)

அந்த முதலாத் தொடுப்பதந் தாதி அடிமுழுதும்

வந்த மொழியே வருவ திரட்டை வரன்முறையான்

முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால்

செந்தொடை நாமம் பெறுநறு மென்குழல் தேமொழியே (17)

உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்

மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்

கேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய

ஓவிலந் தாதி உலகுட னாமொக்கு மேயிரட்டை

பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே (18)

இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்

இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்

வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்

வருசீர் முழுவதும் ஒன்றின்முற் றாமென்ப மற்றவையே (19)

உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்

மோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற்

கேனை யெதுகைக் கினம்பொன்னி னன்ன இனிமுரனிற்

கான விகற்பமுஞ் சீறடிப்பேர தளபெடையின்

தான விகற்பமுந் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே (20)

உறுப்பியல் செய்யுட்களின் முதனினைப்புச் செய்யுள்

கந்தமுந் தேனுஞ் சுருக்கமுங் காதற் குறில்குறிலே

சந்தமுந் தீரசை தேமாத்தண் குன்றந்தண் சீர்திருவுங்

கொந்தவிழ் கோதாய் குறளடி வெள்ளைக் கறத்தெழுவாய்

அந்தமு மாவும் இருசீரு மோனையு மாமுறுப்பே (21)

செய்யுளியல்

பாவுக்குரிய அடியும் ஓசையும்

வெண்பா அகவல் கலிப்பா அளவடி வஞ்சியென்னும்

ஒண்பா அடிகுறள் சிந்தென் றுரைப்ப ஒலிமுறையே

திண்பா மலிசெப்பல் சீர்சால் அகவல்சென் றேங்குதுள்ளல்

நண்பா அமைந்த நலமிகு தூங்கல் நறுநுதலே (22)

உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்

வளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங்

களம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோல்

துளங்கிடை மாதே சுறமறி தென்னலத் தின்புலம்பென்

றுளங்கொடு நாவலர் ஓதினர் வஞ்சிக் குதாரணமே (23)

வெண்பாவும் அதன் இனமும்

குறள்வெண்பா நேரிசை வெண்பா

ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்

சீரிய வான்றனிச் சொல்லடி முய்ச்செப்ப லோசைகுன்றா

தோரிரண்டாயும் ஒருவிகற் பாயும் வருவதுண்டேல்

நேரிசை யாகு நெறிசுரி பூங்குழல் நேரிழையே (24)

இன்னிசை வெண்பா, ப·றொடை வெண்பா

ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்

இன்றி நடப்பின· தின்னிசை துன்னும் அடிபலவாய்ச்

சென்று நிகழ்வ ப·றொடை யாஞ்சிறை வண்டினங்கள்

துன்றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே (25)

சிந்தியல் வெண்பா, வெண்பாவின் இறுதியடி

நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்

நேரிசை யின்னிசைச் சிந்திய லாகு நிகரில்வெள்ளைக்

கோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற

சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே (26)

குறள் வெண்செந்துறை, குறட்டாழிசை

அந்தமில் பாத மளவிரண் டொத்து முடியின்வெள்ளைச்

செந்துறை யாகுந் திருவே யதன்பெயர் சீர்பலவாய்

அந்தங் குறைநவுஞ் செந்துறைப் பாட்டி னிழிபுமங்கேழ்

சந்தஞ் சிதைத்த குறளுங் குறளினத் தாழிசையே (27)

வெண்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம்

மூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத்

தான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண் டாழிசையே

மூன்றடி யாய்வெள்ளை போன்று மூன்றிழி பேழுயர்வாய்

ஆன்றடி தாஞ்சில அந்தங் குறைந்திறும் வெண்டுறையே (28)

ஆசிரியப்பாவும் அதன் இனமும்

நான்குவகை ஆசிரியப்பா

கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர்

இடைபல குன்றின் இணைக்குற ளெல்லா அடியுமொத்து

நடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத்

தடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே (29)

ஆசிரியத் தாழிசை, துறை, விருத்தம்

தருக்கியல் தாழிசை மூன்றடி யப்பன நான்கடியாய்

எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே

சுருக்கடி யாயுந் துறையாங் குறைவில்தொல் சீரகவல்

விருத்தங் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே (30)

கலிப்பாவும் அதன் இனமும்

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்

நிரலொன்றி னேரிசை யத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோல்

மரபொன்று நேரடி முச்சீர் குறணடு வேமடுப்பின்

அரவொன்று மல்கு லதம்போ தரங்கவொத் தாழிசையே (31)

வண்னக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா

அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல்

வசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட்

டிசைதன தாகியும் வெண்பா இயந்துமின் பான்மொழியாய்

விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே (32)

கொச்சகக் கலிப்பாவின் வகை

தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய்

மரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைந்தோள்

அரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்

குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே (33)

கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம்

அடிவரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்

கடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே

நெடிலடி நான்காய் நிகழ்வது நேரடி யிரண்டாய்

விடினது வாகும் விருத்தந் திருத்தகு மெல்லியலே (34)

வஞ்சிபாவினமும், வஞ்சிப்பாவிற் கீறாமாறும்

வஞ்சித் தாழிசை, துறை, விருத்தம் அதன் ஈறு

குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்

துறையரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான்

கறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து

மறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே (35)

மருட்பா

பண்பார் புறநிலை பாங்குடை கைக்கிளை வாயுறைவாழ்த்

தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா

வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்

வண்பால் மொழிமட வாய்மருட் பாவெனும் வையகமே (36)

செய்யுளியற் செய்யுட்களின் முதல்நினைப்புக் காரிகை

வெண்பா வளம்பட வீரடி யன்றுட னேரிசையும்

கண்பானல் போன்மயி லந்தமின் மூன்றுங் கடைதருக்கி

நண்பார் தரவொன் றசைதர வேயடி யோடுகுறள்

பண்பார் புறநிலை செய்யு ளியலென்ப பாவலரே (37)

ஒழிபியல்

எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன

சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉஅளபோ

டாகு மறிவ ரலகு பெறாமை ஐ காரநைவேல்

ஓருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம்

வாரும் வடமுந் திகழு முகிழ்முலை வாணுதலே (38)

விட்டிசைத் தல்லான் முதற்கண் தனிக்குறில் நேரசையென்

றாட்டப் படாததற் குண்ணா னுதாரணம் ஓசைகுன்றா

நெட்டள பாய்விரி னேர்நேர் நிரையடு நேரசையாம்

இட்டதி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே (39)

மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந்

தாஞ்சீ ரடையா வகவ லகத்துமல் லாதவெல்லாந்

தாஞ்சீர் மயங்குந் தளையு மதேவெள்ளைத் தன்மைகுன்றிப்

போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே (40)

இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான்

மயக்கப்படா வல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல்

கயற்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான்

முயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே (41)

அருகிக் கலியோ டகவல் மருங்கினைஞ் சீரடியும்

வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர் மற்றொருசார்

கருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென்

றிரணத் தொடைக்கு மொழிவர் இடைப்புணர் வென்பதுவே (42)

வருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மோனையுமென்

றொருக்கப் பெயரா னுரைக்கப் படுமுயி ராசிடையிட்

டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்றா மெழுத்துமொன்றி

நிரக்கு மெதுகையென் றாலுஞ் சிறப்பில நேரிழையே (43)

சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு மூன்றடியே

தரங்கக்கும் வண்ணகத் குந்தர வாவது தாழிசைப்பா

சுருங்கிற் றிரண்டடி யோக்க மிரட்டி சுரும்பிமிருந்

தரங்கக் குழலாய் சுருங்குந் தரவினிற் றாழிசையே (44)

பொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருந்தி

இருள்சேர் விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியழிந்த

மருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப்

பொருள்கோள் குறிப்பிசை யப்புங் குறிக்கொள் பொலங்கொடியே (45)

எழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந

திழுக்கி லடிதொடை நாற்பதின் மூன்றைந்து பாவினமுன்

றொழுக்கிய வண்ணங்க ணூறென்ப தொண்பொருள் கோளிருமூ

வழுக்கில் விகாரம் வனப்பெட் டியாப்புள் வகுத்தனவே (46)

ஒழிபியல் செய்யுட்களின் முதனினைப்புக் காரிகை

சீரொடு விட்டிசை மாஞ்சீர் ரியற்றளை சேர்ந்தருகி

வாரடர் கொங்கை வருக்கஞ் சுருங்கிற்று வான்பொருளுஞ்

சீரிய தூங்கேந் தடுக்குச் சிறந்த வெழுத்துமன்றே

ஆரும் ஒழிபியற் பாட்டின் முதல்நினைப் பாகுமன்றே (47)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.