Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜனாதிபதியின் வடமாகாண விஜயம் - சாந்தி சச்சிதானந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜனாதிபதியின் வடமாகாண விஜயம் - சாந்தி சச்சிதானந்தம்:-

18 அக்டோபர் 2014

mahinda%20rajapaksa%20smiling_CI.jpg

கிளிநொச்சிக்கு வரலாற்றுச் சிறப்புக்கள் மிகவுண்டு. விவசாயத்துக்கான பல பாரிய குளங்கள் அமைத்து வன்னியர்கள் ஆண்ட பூமி அது. நவீன வரலாற்றிலும் அதற்கு இடம் உண்டு. 1998ம் ஆண்டு கண்டி தலதா மாளிகையில் ஸ்ரீலங்காவின் ஐம்பதாவது சுதந்திர தின நிகழ்வை அன்றைய சந்திரிகா அரசு ஏற்பாடு செய்திருந்தது. அடுத்த சுதந்திர தின நிகழ்வினை கிளிநொச்சியில் நடத்துவோம் என பகிரங்க சவால் விட்டார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தை. இதற்குப் பதிலடியாக குண்டு பொருத்தப்பட்ட வாகனத்தை தலதா மாளிகைக்கு அனுப்பி விட்டனர் விடுதலைப்புலிகள். அந்த வருடம் சுதந்திர நிகழ்வுகள் ரத்துச் செய்யப்பட்டன.

பின்வரும் காலங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டபொழுது கிளிநொச்சியே புலிகளின் ஆட்சியின் தலைநகரமாக செயற்பட்டது. 2008ம் ஆண்டு யுத்தத்தில் அது புலிகளினால் கைவிடப்பட்டபொழுதே தோல்வி நிச்சயம் என்பது தமிழ் தேசத்துக்கு புரிய ஆரம்பித்தது. இன்று 2014ம் ஆண்டிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகும் தனது வேட்கையைப் பூர்த்தி செய்யும் முதல் தேர்தல் பிரசாரம் கிளிநொச்சி நகரிலேயே அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.

ஒக்டோபர் 12ந்திகதி கிளிநொச்சியில் 20,000 காணிப்பத்திரங்கள் கையளிக்கும்போதும் அதன் பின்பு வேறு பல அபிவிருத்தி நிகழ்வுகளில் பங்குகொண்டபோதும் ஜனாதிபதி ஆற்றிய உரைகள் பற்றி சிரிக்கலாம், சிந்திக்கவும் செய்யலாம்.

இராணுவப் படைகளின் கெடிபிடிகளில் சிக்குண்டு தவிப்பது இன்று அன்றாட நிகழ்வாகப் போன மாவட்டங்கள்தாம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள். ஐந்து பேர்களுக்கு மேல் ஒருவரும் எங்கும் சந்திக்க முடியாது. அப்படிச் சந்தித்தால் அது பற்றிய சகல தகவல்களும் இராணுவத்துக்கு அறிவித்து அவர்கள் அனுமதி தந்தால் மட்டுமே அதனை எற்பாடு செய்யலாம். மக்கள் உபயோகிக்கும் உழவு இயந்திரம் தொடக்கம் எந்த கருவியுபகரணத்தையும் இராணுவம் வந்து கேட்டால் அவர்கள் பாவனைக்குக் கொடுத்து விடவேண்டும். இல்லாவிட்டால், அங்கு ஒரு கல்லுடைக்கின்ற இயந்திரம் வைத்து இராணுவத்துக்குக் கொடுக்க முடியாது என்று கூறிய ஒரு விவசாயி பட்ட பாடுதான் படவேண்டும். ஒரு தடியை (துப்பாக்கியாய்) வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளிடம் இராணுவப் பயிற்சி பெற்ற படம் இணையத்தளத்தில் வந்திருக்கின்றதென்று கூறி அவரைக் கைது செய்து கொண்டு போய் அச்சுறுத்தினார்கள்.

இந்த வருடம் சர்வதேச இளைஞர்கள் மாநாடு இலங்கையில் நடந்தபோது அதனை ஏற்பாடு செய்தது ஸ்ரீலங்கா அரசு. அதில் பங்குபற்றும் இளைய பிரதிநிதிகளுக்கு பயிற்சியாளராக வந்தவர் வேறு யாருமல்ல, எமது இராணுவத் தளபதி தயா ரத்நாயகவாகும். 'வடக்கில் எந்த வீட்டில் யார் இருக்கின்றார்கள், அங்கு யார் வந்து போகின்றார்கள் என்பது போன்ற முழுத் தகவல்களையும் நாம் வைத்திருக்கின்றோம். இந்த ஒரு வழி மூலமே அங்கு திரும்ப ஒரு பிரிவினைவாதம் உருவாகாமல் பாதுகாத்து வைத்திருக்கின்றோம். இது அப்பிரதேசங்களின் யதார்த்தம்..' என இராணுவத்தினது 'சமாதானம் உருவாக்கும்' நடவடிக்கைகள் பற்றி அங்குள்ளோர்களுக்கு விளக்கியிருக்கின்றார்.

பின்னே ஜனாதிபதி கிளிநொச்சியில் 'நான் உங்களை நம்புகிறேன். நீங்களும் என்னை நம்பலாம்..' என்று கூறினால் நாம் சிரிக்கத்தானே முடியும்? ' என்னுடன் வந்து (இந்நிகழ்வுகளில்) பங்கேற்றால் உங்கள் மனம் மாறிவிடும் என்று அவர் (முதலமைச்சர்) நினைக்கிறார். நான் எத்தனை தடவை வந்தாலும் எதனைத்தான் பேசினாலும் உங்கள் மனம் மாறாது என்பது எனக்குத் தெரியும். தமிழ் மக்களை அவர்களின் மனங்களை உணர்வுகளை நான் புரிந்து கொண்டளவுக்கு முதலமைச்சர் புரிந்து கொள்ளவில்லையே' என விசனப்படுகின்றார் அவர். உண்மைதான், தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் பாதிப்புக்களை நன்றாகப் புரிந்து கொண்டும் அதனை மாற்ற முயற்சிக்கின்றார் இல்லை என்பது எமக்கு முன்னால் இனி எதிர்காலத்தில் உள்ள தெரிவுகள் என்ன என்று தமிழ் மக்களைச் சிந்திக்க வைக்கின்றது. அதுதான், சிரிக்கலாம், சிந்திக்கவும் செய்யலாம்.

வடக்கில் எந்தவொரு சிறிய அரசு சாரா நிறுவனமும் மாகாணசபையுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டுமென்றாலும் ஆளுனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். மாகாணசபை அதற்குரிய 'நடைமுறைகளை' சரிவரக் கையாளாததை தாம் அவதானித்ததனால் இந்த நிபந்தனையைக் கொண்டு வந்திருப்பதாக ஆளுனர் அலுவலகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றது. எமக்குத் தெரிந்தவரை இன்றுவரை வட மாகாணத்திற்கான பாதீடு இன்னமும் விபரமாக அதன் முதலமைச்சருக்கக் காட்டப்படவில்லை. சகல நிதிகளும் ஆளுனர் அலுவலகம் மூலமாகவும் அமைச்சர் தேவானந்தா மூலமாகவுமே அம்மாகாணத்துக்கு வருகின்றது. இந்தத் தடவை 20,000 பேருக்கான காணியுத்தரவுப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை யார் யாருக்கு வழங்கப்படுகின்றன எந்த அடிப்படையில் அப்பெயர்கள் தெரிவு செய்யப்பட்டன என மாகாணசபைக்குத் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த முப்பத்தைந்து வருடங்களாக வெளியேற்றப்பட்டு இப்பொழுது நாவற்குழியிலாவது சொந்தக் காணியில் குடியிருப்போமென காத்திருக்கும் வலி வடக்கு மக்கள், மாகாணசபை அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கக்கூடிய சிறிய உதவிகளைக்கூட நிராகரித்திருக்கின்றார்கள். இதனால் தங்களுக்கு காணியுத்தரவுப் பத்திரங்கள் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்கின்ற பயம். தமது சனசமூகநிலையத்தைப் பெருப்பிக்க கூட்டமைப்பினர் உதவி தந்தால் அதனை வேண்டாமென்கின்றனர் அங்குள்ள இளைஞர் சங்கத்தினர். அதனால் தங்களுக்கு பல வருடங்களுக்குப் பின் கிடைக்கவிருக்கும் பாதைகள் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்கின்ற பயம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியாளர்கள் மிகத் தெளிவாக மக்களுக்கு இதனைப் பற்றி விளக்கியிருக்கின்றனர். கூட்டமைப்பு அரசியல்வாதிகளிடம் உதவி பெற்றால் அவர்கள் அரசாங்கத்திலிருந்து கொண்டு கொட்டும் ஒரு உதவியும் கிடையாது. '364 நாட்களும் எங்களுடன் இருந்து உதவிகள் பெற்று விட்டு 365வது நாள் போய் அவர்களுக்கு வாக்குகளைப் போடுவதற்கு படிப்பிக்கின்றோம் பாடம்..' என்கின்றனர். அப்போ 'வடமாகாணசபை வைக்கோற்பட்டறை நாய் போல நடக்கின்றது.. தாங்களும் செய்கின்றார்கள் இல்லை எங்களையும் செய்ய விடுகின்றார்கள் இல்லை..' என்று ஜனாதிபதி கூறும்போது நாம் சிரிக்கத்தானே வேண்டும்?

அதே சமயத்தில், மக்களுக்கு வாக்குரிமைச் சுதந்திரம் இருக்கின்றதே, அபிவிருத்தித் திட்டம் மக்களின் பொதுப்பணத்தில் செய்யப்படுவது அது அவர்களின் அடிப்படை உரிமையல்லவா, வட மாகாணத்தில் இன்று நடப்பது என்ன என்று எங்களை இது சிந்திக்கவும் வைக்கின்றது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஜனாதிபதி அடித்தார் இன்னொரு சிக்ஸர். 'தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் புலம் பெயர் தமிழரும் இணைந்து ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க நினைக்கின்றனர். பிரிவினைவாத சிந்தனையை இவர்கள் கைவிட்டால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்..' என்று போட்டாரே ஒரு போடு. தமிழ் மக்கள் தனக்கென வேறு அரசியல் பாதை வகுத்த முதல் கட்டம் 1933ம் ஆண்டு நடந்த அரச சபைத் தேர்தலாகும். தமக்கு நியாயபூர்வமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லையென அதனை அவர்கள் பகிஷ்கரித்தனர். அதன்பின்னர் வளர்ந்த முரண்பாடுகள் எத்தனையோ. 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கத்தில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த எந்த சிபாரிசுகளும் சிறிமாவோ அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவை வெளிநடப்புச் செய்தன. அந்த சிங்கள அரசியல் தலைவர்களின் கபடத்தன்மையைத் தாங்க மாட்டாமல் 1976ம் ஆண்டு முதல்முறையாக ஈழக் கோரிக்கையை அவை முன்வைத்தன. இந்த வருடங்களின்போது ஜனாதிபதி ஆட்சி முறைமை இங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை. அது தாபிக்கப்பட பல பல வருடங்களுக்கு முன்னமேயே தமிழருக்குப் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. இனப்பிரச்சினைக்கான தீர்வு ஜனாதிபதி முறைமையின் முடிவல்ல என்பது தமிழ் மக்கள் யாவருக்கும் நன்றாகத் தெரிந்த உண்மையே. அப்படியிருக்க அவர்கள் ஜனாதிபதி ஆட்சிமுறையை அகற்ற வேலை செய்கின்றார்கள் என ஜனாதிபதி சொல்லும்போது நாம் சிரிக்காமல் என்ன செய்வது? ஆனால் அதே சமயம், ஜனாதிபதி ஆட்சி முறைமை ஈழக்கோரிக்கைக்கெதிராக சிங்கள மக்களைப் பாதுகாக்கும் ஓர் அரசியல் கட்டமைப்பாகும் என இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருப்பது, எம்மை அவர் ஆடும் அரசியல் நாடகத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றது.

இப்பொழுது நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கெதிராக தெற்கில் பல குரல்கள் எழுந்திருக்கின்றன. அதற்குப் பல காரணங்கள். நாட்டின் சொத்துக்களை அப்பட்டமாக அபகரிக்கும் அல்லது அவற்றை சுதந்திரமாக அனுபவிக்கும் போக்குகள். சிறு பிள்ளைகளைக் கடத்துதல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுதல், பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி அவர்களைக்கொலை செய்தல் போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாவரும் தமது அரசியல் தொடர்புகளின் காரணத்தினால் தண்டனைக்குத் தப்பி வாழுதல். எந்த முறைப்பாட்டைக்கொண்டும் நீதிமன்றை நாட முடியாத நிலைமையில் அரசியல் கைப்பொம்மையாகி விட்ட நீதித்துறை. இந்த அனுபவங்களெல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் ஜனாதிபதி முறைமை பற்றிய பெரும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றன. அரசாங்கத்துடன் ஒன்றாகக் கூடி மாங்காய் நண்பர்களாக இருந்த ஜாதிக ஹெல உறுமய தலைவர் அத்துரரேலிய ரத்ன தேரர்கூட ஜனாதிபதி முறைமையை எதிர்த்துக் களத்தில் இறங்கியிருக்கின்றார் என்றால் இந்தக் கோரிக்கை சிங்கள மக்கள் மனதில் எவ்வளவு வலுப்பெற்றுக்கொண்டு வருகின்றது என அறிந்து கொள்ளலாம். இந்தப் பின்புலத்தினை வைத்துக்கொண்டே ஜனாதிபதியின் கூற்றினை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இனவாதத்தினைத் தூண்டிவிட்டு அதனுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைத் தொடுத்துவிடப் பார்த்திருக்கின்றார். இதனையும் தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் தத்தா பித்தாவென்றுதான் கையாளப் போகின்றன. இது பற்றி அவற்றின் முதல் அறிக்கைகள் பச்சைத் தண்ணீராய் இருப்பதைக்கொண்டு நாம் நம்பிக்கையுடன் எதிர்வு கூறலாம்.

இதிலெல்லாம் முக்கியமாய் ஒரு விடயத்தை நாம் உணரவேண்டும். மக்களுக்கு கடினமான தெரிவுகளை மட்டும் முன்வைத்தால் அதனைத்தான் அவர்கள் பற்றிக்கொள்ள வேண்டி நேரிடும். தமிழ் மக்களும் தமது இருப்புக்காக போராட வேண்டி அந்தத் தெரிவுகளை மேற்கொண்டால் அரசாங்கத்தினர் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளும் காலம் கடந்திருக்கும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112652/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.