Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்டங்காக்கையின் ஆச்சரியத் தேடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • B824442241Z_1_2014_2099469g.jpg
     
  • B824442241Z_1_2014_2099468g.jpg
    வால் காக்கை
  • B824442241Z_1_2014_2099467g.jpg
    கட்டுரை ஆசிரியர் பார்த்த அண்டங் காக்கை

ஜூலை மாதம். ஒரு மழைக்கால மதிய வேளை. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான மலைப் பகுதி. லேசான தூறல். நான் நின்று கொண்டிருந்த பாறை மழையில் நனைந்து, அடர்ந்த மேகத்தைக் கிழித்துக்கொண்டு கீழிறங்கிய லேசான சூரிய ஒளி பட்டுப் பளபளத்தது. அந்தப் பாறை செங்குத்தாகக் கீழிறங்கியது.

பள்ளத்தாக்கில் பச்சை நிறத்தின் பல்வேறு அடர்த்திகளில் மழைக்காட்டின் கூரை வியாபித்திருந்தது. மெல்ல வீசிய குளிர் காற்று மழை சாரலைத் தள்ளிக்கொண்டே சென்றது. திடீரென மேகங்கள் விலகி, வானம் முற்றிலுமாக வெளுத்தது.

மறைந்திருந்த சூரியன் தலையை வெளியே நீட்டி, தோலை ஊடுருவிச் சுள்ளெனச் சுட்டது. தூரத்தில் மலை முகடுகளுக்கிடையே வெள்ளைவெளேரென்ற அருவி கொட்டிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

எல்லாமே ஓரிரு நிமிடங்களுக்கு மட்டும்தான். எங்கிருந்தோ வந்த வெண்பஞ்சு மேகக் கூட்டம் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் நிரப்பியது. எதிரே என்ன இருக்கிறதென்பது சட்டென்று தென்படாமல் போனது.

உச்சிமலையில்

தூரத்தில் ஏதோ ஒரு பறவை வெண்மேகங்களைக் கிழித்துக்கொண்டு சின்ன ராக்கெட்டைப் போலப் பறந்து வந்தது. அது ஓர் அண்டங்காக்கை. வெள்ளைப் பின்னணியில் கறுப்பு நிறக் காகத்தை எளிதில் இனங்காண முடிந்தது. கண்ணெதிரே இருந்த பாறையின் கீழே இறங்கியது. பிறகு மெல்ல மேலேறி அது நடந்து வந்தபோது, முதலில் தலை மட்டும்தான் தெரிந்தது.

மேகங்கள் லேசாக விலக ஆரம்பித்தன. காகம் மெல்லப் பாறைக்கு மேலே வந்து நின்றது. பிறகு பள்ளத்தாக்கை நோக்கித் திரும்பி நின்று கா...கா... என ஆங்காரக் குரலெடுத்துக் கரைந்தது.

மெல்லிய மேகங்களால் திரையிடப்பட்ட பச்சை நிற மழை காட்டுக் கூரையின் பின்னணியில், லேசான மழை தூறலின் ஊடே அந்தக் கரிய அண்டங்காக்கையைப் பார்க்க ரொம்பவே அழகாக இருந்தது.

மழையில் நனைந்துகொண்டே கரைந்து கொண்டிருந்த அந்தக் காகத்தைப் பார்த்ததும், சின்ன வயதில் காகத்தைப் பற்றி சொல்லி விளையாடும் விடுகதையொன்று சட்டென்று ஞாபக அடுக்குகளின் மேலேறி வந்தது. அந்தக் கரைதலின் ஒலியைக் கேட்டோ என்னவோ, சில நிமிடங்களில் இன்னொரு அண்டங்காக்கையும் அதனுடன் சேர்ந்துகொண்டது.

தலைப்பிரட்டைகள்

பாறையின் மேல் மெல்லிய படலமாக மழை நீர் தவழ்ந்து ஓடிக்கொண்டிருந்தது. பாசி படராத அந்தப் பாறையில் நீரோட்டம் இருப்பதே தெரியவில்லை.

பாறையின் மேல் ஆங்காங்கே சின்னச் சின்னக் கற்கள் சிதறிக் கிடந்தன. கொஞ்சம் உற்றுக் கவனித்தபோது பாறையின் சில இடங்களில் சிறிய அசைவுகளைக் காண முடிந்தது.

அசைவுகளை ஏற்படுத்தியவை தவளைக் குஞ்சுகள் (தலைப்பிரட்டை). பாறையின் மேல் வால் நீண்ட தவளைக் குஞ்சுகள் பல தென்பட்டன. அருகில் சென்று பார்த்தபோது முட்டை வடிவ உடலும் கீழே பின்னங்கால்கள் இரண்டும், நீண்ட வாலும் தெரிந்தன. முனை கூரான வால், உடலின் நீளத்தைவிட மூன்று மடங்கு நீண்டிருந்தது.

அவை அதிகம் நகர்வதில்லை. பாறையோடு பாறையாக ஒட்டிக்கொண்டிருந்தன. உருமறைத் தோற்றத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தத் தவளைக் குஞ்சு. தட்டையான உடலில், இரண்டு கண்கள் மட்டும் நீர் படலத்தின் மேலே துருத்திக்கொண்டு தெரிந்தன.

காகங்களின் வேட்டை

காகங்கள் இரண்டும் பாறையின் சமமான பகுதியில் தத்தித் தத்தி வந்தன. எதையோ தேடுவது போலிருந்தது. ஒரு காகம் அங்கிருந்த சிறிய சப்பட்டைக் கல்லைத் திருப்பியது. அக்கல்லின் ஓரமாக ஒதுங்கியிருந்த தவளைக் குஞ்சைத் தனது கூரிய அலகால் கொத்தி எடுத்து விழுங்கியது.

சுமார் கால் மணி நேரம் அவை மும்முரமாகத் தவளைக் குஞ்சைத் தேடி எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அவை தேடுவதில் ஒரு நேர்த்தியைக் காண முடிந்தது.

முதலில் அசையாமல் ஓரிடத்தில் இருந்தபடி நோட்டம்விட்டன. தவளைக் குஞ்சைக் கண்டால் அதனருகில் நடந்து சென்று தலையை ஒரு பக்கம் சாய்த்துத் தரையைப் பார்ப்பதும், பிறகு கொத்தித் தின்பதுமாக இருந்தன.

சட்டென அதில் ஒரு காகம் பள்ளத்தாக்கை நோக்கிப் பறந்து சென்றது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு முதலில் வந்த காகமும் அதை பின்தொடர்ந்தது.

சற்றே மேல்நோக்கி வளைந்த அதன் முதன்மைச் சிறகுகள் மனிதக் கை விரல்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தன. இது போன்ற அமைப்பைக் கழுகு வகைப் பறவைகளில் காணலாம்.

திட்டுத் திட்டாகக் கலைந்து செல்லும் பால் போன்ற மேகத்தினூடே கம்பீரமாக அது பறந்து சென்றது. அண்டங்காக்கையைப் பல முறை பார்த்திருந்தாலும் கானகப் பின்னணியில், தவழும் மேகங்களுக்கிடையில் பறந்து சென்ற அந்த எழிலார்ந்த காட்சி அதன் அழகை மேலும் கூட்டியது.

புத்திசாலிப் பறவைகள்

காகங்கள் புத்திக் கூர்மையுடைய பறவைகள். தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் (Tool using ability) திறன் வாய்ந்தவை. நாம் தெருவில் வீசியெறியும் மாமிசக் கழிவுகள், மீந்து போன உணவு முதல் பழங்கள், பூச்சிகள், தவளைகள், மற்றப் பறவைகளின் குஞ்சு, முட்டை எனப் பல வகையான உணவை உட்கொள்பவை.

இறந்து போன உயிரினங்களை உட்கொண்டு நமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதனாலேயே இவை இயற்கைத் துப்புரவாளர்களாக (Natural scavengers) கருதப்படுகின்றன. இந்தத் தகவமைப்பினாலேயே இவை மனித அடர்த்தி மிகுந்த நகரங்கள், காட்டுப் பகுதி எனப் பல இடங்களில் பரவிக் காணப்படுகின்றன.

நம்மில் கலந்தவை

காகங்கள் நம் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்த ஒரு பறவையினம். நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. இதை "விருந்து வரக் கரைந்த காக்கை" எனும் குறுந்தொகை பாடலின் மூலமும் அறியலாம்.

இப்பாடலை இயற்றியது சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கை பாடினியார் நச்செள்ளையார். காகத்தைப் பற்றி பாடியதாலேயே அவர் இப்பெயரைப் பெற்றார். காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கு உண்டு.

வால் காக்கையும் வீட்டுக் காக்கையும்

காகங்கள் கோர்விடே (Corvidae Family) குடும்பத்தைச் சார்ந்தவை. இக்குடும்பத்தில் கோர்வஸ் பேரினத்தை (Corvus Genus) சேர்ந்த 12 வகை காகங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் அண்டங்காக்கை (Large-billed Crow), காக்கை (House Crow) என இரண்டு வகைக் காகங்களைக் காணலாம்.

காகங்கள் இனத்தைச் சார்ந்த வால்காக்கையை (Rufous Treepie) மரங்கள் அடர்ந்த தமிழக நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் காணலாம்.

வெண்வால் காக்கை (White-bellied Treepie) மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்கு மலைத் தொடரின் சில காட்டுப் பகுதிகளிலும் மட்டுமே தென்படும் ஓரிட வாழ்வி (Endemic species).

இமயமலைப் பகுதிகளில் தென்படும் காக்கை குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பறவைகள் சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டவை. Red-billed Chough எனும் செம்மூக்குக் காக்கையின் அலகும், காலும் சிவப்பு நிறத்திலிருக்கும், அல்பைன் காக்கையின் (Alpine or Yellow-billed Chough) அலகு மஞ்சள் நிறமாகவும், கால்கள் இளஞ்சிவப்பாகவும் இருக்கும்.

காகங்களை அவதானித்து அவற்றைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை 1905ல் டக்ளஸ் திவர் (Douglas Dewar) எனும் புகழ்பெற்ற பறவையியலாளர் ‘The Indian Crow’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலை இலவசமாகக் கீழ்க்கண்ட உரலியிருந்து பெறலாம்: <https://archive.org/details/indiancrowhisboo00dewa>

- கட்டுரையாளர், 

காட்டுயிர் ஆராய்ச்சியாளர் 

தொடர்புக்கு: jegan@ncf-india.org

http://tamil.thehindu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.