Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கை நடுக்கம் உடல் நடுக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கை நடுக்கம் உடல் நடுக்கம்

 

நடுக்கம் என்றால் என்ன?

பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம்.

அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும். இந்த வகை நடுக்கத்தை ஆங்கிலத்தில்  shivering என்பார்கள்..

பயத்தினால் நடுங்குவது மற்றொன்று.

இவற்றைத் தவிர மற்றொரு நடுக்கமும் உண்டு. விரல்களும் கைகளும் நடுங்குவது. கோப்பை பிடித்தால் கிடுகிடுவென நடுங்கி தேநீர் தரையில் சிந்தும், சேவ் செய்யும்போது கை நடுங்கி சொக்கையை ரணமாக்கிவிடும், சமையலறையில் பாட்டியின் கை நடுங்கி பாத்திரங்கள் பொத் பொத்தென விழுங்கி நொருங்கும்.

பொதுவாக வயதானவர்களில் கண்டிருப்பீர்கள். சில நோய்களாலும் வருவதுண்டு. மருத்துவத்தில் tremors என்பார்கள்.

e9506-hand-tremor.jpg?w=400&h=266

ஒருவரது விருப்பின்றி தாமாகவே உடலின் சில உறுப்புகள் நடுங்குவதை அவ்வாறு கூறலாம். பொதுவாக விரல்களில் ஏற்படும். வயதானவர்களிலும் நடுத்தர வயதினரிடையேயும் அதிகம் காணப்படும் என்றபோதிலும் எந்த வயதிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. விரல்களில் மாத்திரமின்றி கைகள், தலை முகம் உதடுகள் குரல்வளை உடல் என எங்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

ஒருவர் தான் அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணாத போது அதாவது சுயவிருப்பின்றி  அவரது முயற்சியும் இன்றி எதிர்பாராது ஏற்படுவதே இத்தகைய நடுக்கம் ஆகும். தசைகளின் அசைவியக்கத்தை கட்டுப்படுத்தும் மூளையும் நரம்பு மண்டலமும்தான் இதற்குக் காரணமாகும்.

பல வகைகள்

மூன்று முக்கிய வகைகள் உண்டு.

முதலாவது வகை ஒருவர் எதுவும் செய்யாது வாழாதிருக்கும்போது ஏற்படும் நடுக்கமாகும் இதை  resting tremors  என சொல்லுவார்கள். அத்தகைய நடுக்கம் அவர் ஏதாவது செய்ய முனையும்போது தற்காலிகமாகத் தணிவதுண்டு. சாதாரணமாக கை நடுக்கம் உள்ள ஒருவர் எழுத முனையும் போது அல்லது ஒரு பொருளைப் பற்ற முயலும்போது இத்தகைய நடுக்கம் தணியும். இதற்கு முக்கிய உதாரணம் பார்க்கின்சன் (Parkinson’s disease) நோயாகும்.

db47b-230px-paralysis_agitans_19072c_aft

இந்நோயின் போது அவரது இயக்கம் மெதுவாவதுடன் நடையும் தளும்பலாக இருக்கும். சில ஈரல் நோய்கள், நடுமூளையில் பக்கவாதம் போன்றவை ஏனைய காரணங்களாகும்.

வேறு சில நடுக்கங்கள் ஒருவர் ஏதாவது செய்ய முனையும் போது மோசமாகும். இதை Intention tremors என்பார்கள். உதாரணமாக ஒரு பொருளைப் பற்ற முனையும்போது அல்லது எழுத முனையும்போது நடுக்கம் மோசமாகும். மூளையின் செரிபல்லம் பகுதியில் ஏற்படும் நோய்களால் இவை ஏற்படும்.

இன்னும் சில நடுக்கங்கள் எந்நேரமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். Action tremors  என்பார்கள். இவற்றில் சில ஏதாவது ஒரு புறத்தில் மட்டும் இருப்பதுண்டு. உதாரணமாக இடது கை நடுங்கும் ஆனால் வலது பக்கத்தில் எதுவம் இருக்காது.

f3942-tremors1323244832255.jpg?w=320&h=4

நடுக்கங்களில் பல காரணம் சொல்ல முடியாதவை ஆகும்.

  • இவற்றில் பல பரம்பரை பரம்பரையாக வருவதுண்டு.
  • காரணம் சொல்ல முடியாத நடுக்கங்களில் பல 65 வயதிற்கு பின்னரே ஆரம்பிக்கும்.
  • ஆயினும் பரம்பரையில் தோன்றுபவை நடுத்தர வயதிலேயே தோன்றுவதுண்டு.
  • பெற்றோரில் ஒருவருக்கு இருந்தாலே பிள்ளைகளுக்கு வர வாய்ப்புண்டு.
  • ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் வரும் என்றில்லை.
  • கை நடுக்கம் மட்டுமின்றி தலை ஆடுவது குரல் நடுங்குவது போன்றவையும் பரம்பரையில் வரலாம்.

மருந்துகளால் நடுக்கம்

“எனக்கு நேற்றிலிருந்து கை நடுங்குகிறது” என ஒரு நோயாளி சொன்னார். திடீரென ஏன் ஏற்பட்டது?

“ஏதாவது மருந்துகள் புதிதாக உபயோகிக்க ஆரம்பத்தீர்களா” எனக் கேட்டபோது “எனக்கு ஒரு வருத்தமும் இல்லை” என்றவர் சற்று யோசித்துவிட்டு ‘இருமல் சிரப்’ ஒன்று குடித்தனான்’ என்றார்.

ஆம் பல மருந்துகள் நடுக்கங்களுக்கு காரணமாகி;னறன.

ஆஸ்த்மா நோய்க்கு உபயோகிக்கும் பல மருந்துகள் காரணமாகலாம்.

Terbutaline. Salbutamol, Theophylline, போன்றவை முக்கியமானவை. இம் மருந்துகள் சுவாசக் குழாயை விரிவுபடுத்தி சளி இலகுவாக வெளியேறுவதற்கு உதவுகின்றன. இதனால் பல இருமல் சிரப் மருந்துகளில் குறைந்த அளவில் கலந்துள்ளன.

ஸ்ரோயிட் வகை மருந்துகள் (eg Prednisolone, betamethasone)  பலவகையாகும். இவை பல வகை நோய்களுக்கும் உபயோகிக்கப்படுவதுண்டு. இவையும் நடுக்கத்தை ஏற்படுத்தலாம்

மருத்துவ ஆலோசனை இன்றி தானாகவே மருந்தை வாங்கிக் குடித்ததால் அவரைப் போல பலருக்கு நடுக்கம் ஏற்படுவதுண்டு.

வலிப்புநோய்க்குஊபயோககிக்கும் Valporate,  மனநோய்களுக்கு உபயோகிக்கும் lithium,  மனச்சோர்விற்கு உபயோகிக்கும் பல மருந்துகள், சில அன்ரிபயோடிக் மற்றும் அன்ரி வைரஜ் மருந்துகளும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. பார்க்கின்சன் நோய்ககு நடுக்கம் ஏற்படும் என்றேன். அதேபோல அந்நோய்க்கு உபயோகிக்கும்  Levodopa மருந்தாலும் ஏற்படலாம்

தைரொக்சின் மருந்தின் அளவு கூடினாலும் வரலாம். தைரொயிட் சுரப்பி அதிகமாக வேலை செய்யும் நோயிலும் நடுக்கம் வருதுண்டு.

இன்னும் பல மருந்துகளால் நடுக்கம் ஏற்படலாம் என்பதால் ஒருவர் தனக்கு புதிதாக நடுக்க நோய் ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் தான் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளின் பட்டியலை மருத்துவரிடம் கொடுத்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

போதையும் நடுக்கமும்

போதைப் பொருட்கள் நடுக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக மதுபானமும் புகைத்தலும் நடுக்கத்தை நடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதேபோல போதையில் மூழ்கியவர் அதைத் திடீரென நிறுத்தினாலும் நடுக்கம் ஏற்படலாம்.

56ccd-shake-296x300.jpg?w=394&h=400

நிறுத்தும்போது ஏற்படும் நடுக்கம் தற்காலிகமானது சில நாட்களில் தணிந்துவிடும்.

சிகிச்சை

நடுக்கம் ஏற்பட்டால் அதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிய வேண்டும். எனவே மருத்துவ ஆலாசனை பெறுவது அவசியம்.

பெரும்பாலான காரணங்களை விரிவாகவும் தெளிவாகவம் பேசுவதன் மூலம் கண்டறிய முடியும். இருந்தபோதும் இரத்தப் பரிசோதனைகள் மற்றும் CT scan MRI  போன்றவையும் தேவைப்படலாம்

சிகிச்சையின் அடிப்படை காரணத்தை துல்லியமாகக் கண்டறிவதே.

மருந்துகள் காரணமாயின் அவற்றை இனங்கண்டு மருத்துவ ஆலோசனையுடன் வேறு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

போதைப் பொருள்கள் காரணமாயின் அவற்றை நிறுத்த வேண்டும். மது சற்று அருந்தினால் சிலருக்கு நடுக்கம் குறையும். ஆயினும் அவ்வாறு குடிப்பது ஆபத்தானது. அவர்கள் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து போவது பெரும் பிரச்சனை ஆகும்.

நடுக்கம் உள்வர்கள் கோப்பி தேநீர் கொக்கோ போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்

மனப்பதற்றமும் காரணம் என்பதால் அதைத் தணிக்க முயலவேண்டும்.

அரிதாக சத்திர சிகிச்சையும் தேவைப்படலாம்.

எவ்வாறாயினும் பெரும்பாலான நடுக்கங்கள் ஆபத்தற்றவை என்பதால் அச்சமடையத் தேவையில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

https://hainalama.wordpress.com/2014/11/30/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.