Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண மொழி தமிழின் வட்டார வழக்கா? தனி மொழியா? - 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாண மொழி தமிழின் வட்டார வழக்கா? தனி மொழியா? - 1
Monday, December 29, 2014
 
dravidian.gif
கி.மு 500 முதலே இலங்கையில் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் ஆகிய இருசாராருமே குடியேறத் தொடங்கி இருப்பதை தொல்லியல் சான்றுகள், இலக்கியங்கள் ஆகியவை உறுதி செய்கின்றன. கி.மு. 500-களில் இந்தியாவில் பல மொழிகள் பேச்சு மொழியாக இருந்த போதும், பிராகிருதமும், தமிழுமே எழுத்து மொழியாகவும் வளர்ச்சியடைந்த மொழியாகவும் இருந்து வந்துள்ளது. ஆகவே இலங்கையில் கூட இந்த இரு மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் பலவும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த கல்வெட்டுக்கள் யாவுமே பௌத்த துறவிகள், அரசர்கள், வணிகர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்கள் தருகின்றன. இலங்கையின் அரசர்கள் தமது சமய மொழியாக பிராகிருதத்தையும், வணிக மொழியாக தமிழையும் ஏற்றுக் கொண்டு வந்துள்ளனர். ஏனெனில் பண்டைய காலங்களில் தென் கிழக்காசியாவின் வணிக வளையத்தை தமிழர்களே வைத்திருந்தனர். ஆகையால் தமிழகத்தில் இருந்து இலங்கையில் குடியேறிய பல்வேறு வணிகர்கள் தமது வாழ்விடங்களில் தமிழ் சாசனங்களை விட்டுச் சென்றுள்ளனர். இது வட கிழக்கு இலங்கையில் மட்டுமின்றி இலங்கை முழுவதுமே காணப்படுகின்றன. அதே சமயம் இலங்கையில் காணப்படும் சமயம் சார்ந்த, வேளாண்மை சார்ந்த கல்வெட்டுக்கள் அனைத்துமே பிராகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. 
 
ஆனால் அந்தக் காலக் கட்டங்களில் மக்கள் எந்த மொழி பேசினார்கள், முக்கியமாக யாழ்ப்பாணத்து மக்கள் எந்த மொழி பேசினார்கள் என்பதை சான்றுகளோடு உறுதி செய்ய இயலவில்லை. இலங்கையில் எழுதப்பட்ட மகாவம்சம், தீபவம்சம் போன்ற பாளி - பிராகிருத நூல்கள் மற்றும் தமிழகத்தில் எழுதப்பட்ட பாடல்கள், காப்பியங்கள் போன்றவையும் இந்த விடயத்தில் எந்தவொரு தெளிவான தகவல்களையும் தரவில்லை. இன்றையக் காலக்கட்டத்தில் பலரும் பண்டைய இலங்கையில் எளு என்ற ஒரு மொழி இருந்ததாகவும், அந்த மொழி இலக்கியத் தரம் பெறாமையால் இலங்கையர்கள் பிராகிருதம், தமிழ் போன்ற மொழிகளை ஏற்றுக் கொண்டு அவற்றோடு கலந்து பேசியதால் காலப் போக்கில் எளு என்ற மொழி சிங்கள மொழியாக உருவானதாக பரவலாக நம்ப படுகின்றன. இது உண்மையாக இருந்தாலும் கூட இலங்கை முழுவதும் ஒரே மொழி தான் உருவானது என்பதற்கான எந்தவொரு முகாந்திரமும் கிடையாது. 
 
வட இந்தியாவில் பிராகிருத மொழி செயல் மொழியாக இருந்த போதும், எண்ணற்ற பல பேச்சு மொழிகள் இருந்துள்ளதை காளிதாசரது நாடகங்கள் உட்பட பல்வேறு குறிப்புக்கள் தெளிவாக்கின்றன. அதே போல, பிராகிருத மொழியை ஆட்சி மொழியாக கொண்டிருந்தாலும் தக்காணத்தில் தெலுங்கு, கன்னடம் ஆகியவை பேச்சு மொழியாக திகழ்ந்துள்ளது. செந்தமிழ் ஆட்சி செயல் மொழியாக இருந்த போதும், பன்னிரண்டு கொடுந்தமிழ் மொழிகள் தமிழகத்தில் ( தமிழ்நாடு, கேரளா ) இருந்துள்ளதை தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. பிற்காலங்களில் இவ்வாறான பல பேச்சு மொழிகள் தனி மொழிகளாக வளர்ச்சி கண்டன. முக்கியமாக 10 - 13 நூற்றாண்டளவில் பக்தி இலக்கியங்கள் பலவும் மக்களின் பேச்சு மொழியில் பக்தி இலக்கியங்கள் படைக்கத் தொடங்கிய பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒதியா, மயிதிளி, அவாதி, பஞ்சாபி என பல்வேறு பேச்சு மொழிகள் எழுத்து வடிவம் பெற்று இலக்கிய வளமிக்க மொழிகளாக மாறின. இதேக் காலக் கட்டத்தில் இலங்கையில் சிங்கள மொழியும் எழுத்து வடிவம் பெற்று இலக்கிய மொழியாக மாறியது. பிராகிருத மொழி என்பது வெறும் சமய சம்பிரதாய மொழியாக புறந்தள்ளப்பட்டது. 
 
யாழ்ப்பாணத்தில் 10-ம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சோழர்கள் ஆட்சி, பின்னர் ஏற்பட்ட பாண்டியர்களது ஆட்சி, பாண்டியர்கள் வலிமை குன்றியதும், அவர்களது கட்டளை தளபதிகளாக ஆட்சி செய்த ஆர்ய சக்கரவர்த்திக்களின் சுதந்திரமான் யாழ்ப்பாணத்து அரசாட்சி என தொடர்ந்து தமிழ் ஆட்சிகள் நடைபெற்றாலும், கி.பி. 1600-கள் வரை யாழ்ப்பாணத்தில் தமிழ் இலக்கியங்கள் என எதுவும் எழவில்லை. காரணம், மக்களின் ஆட்சி மொழியாக கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை பிராகிருதமே இருந்து வந்தமையாலும், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த திராவிட மக்கள் தென்னிந்தியாவில் இருந்து கடலால் பிளவடைந்து தனித்து வாழ்ந்திருந்தமையாலும் அங்கே ஒருவித தனிமொழியே உருவாகி இருந்தது. கி.மு. 6000-யில் தெனிந்தியாவில் இருந்து இலங்கைத் தீவை கடல் பிளவடையச் செய்தது, அதன் பின்னர் இலங்கைத் தீவில் வாழ்ந்த மக்கள் தனித்து வாழ்ந்தமையால் தனியான மொழிகள் அங்கே உருவாகின. கி.மு. 500-களில் பிராகிருத மொழியும், கி.மு. 300-களில் பௌத்த மதமும், பாளி மொழியும் இலங்கையில் அறிமுகமானது, ஏறக்குறையே இதே காலக் கட்டத்தில் தமிழ்நாட்டு வணிகர்களின் வரவால் அங்கே தமிழும் அறிமுகமானது. தமிழும் - பிராகிருதமும் கலந்து மணிப்பிராவள மொழிகள் இலங்கையில் தோன்றின. பிராகிருத அஸ்திவாரத்தில் தமிழ் மொழி தூவலாக பழஞ்சிங்கள மொழியும், தமிழ் அஸ்திவாரத்தில் பிராகிருத தூவலாக பழம் யாழ்ப்பாண மொழியும் தோன்றின. இந்த மொழிகளில் இலங்கையின் ஆதிவாசி சமூகங்களின் மொழிகளும் கலந்தன. 
 
கி.பி 13-ம் நூற்றாண்டு வரையும் இலங்கையில் இந்த இரு மொழிகளும் பேச்சு மொழிகளாக திகழ்ந்தன. 13-ம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் புதிய இலக்கணம் படைக்கப்பட்டு இடைக்காலத் தமிழ் என்பது தற்காலத் தமிழாக வளர்ந்தது. அதே சமயத்தில் லீலாவதி போன்ற நூல்களின் வரவால் மலையாள மொழி தனி மொழியாக உருவானது. ஆனால் யாழ்ப்பாண மொழியோ அடுத்த மூன்று நூற்றாண்டுகள் என்ன செய்வது என தெரியாமல் இருந்திருக்கின்றது. பின்னர் 16-ம் நூற்றாண்டளவில் தமிழகத்தின் சாயலில் சிற்சில இலக்கியங்கள் படைக்கத் தொடங்கியது. ஆனால் பேச்சு மொழியாக யாழ்ப்பாண மொழி தனித்துவமாகே விளங்கியது. அதே சமயம் யாழ்ப்பாண பேச்சு மொழியில் இருந்து மெல்ல மெல்ல பிராகிருதச் சொற்களும், பூர்விக ஈழத்துச் சொற்களும் மறையத் தொடங்கின. ஆன போதும் யாழ்ப்பாணத்தின் பறையர் உட்பட சில பாமரச் சாதி சமூகங்களில் இந்த பிராகிருதச் சொற்கள், பூர்விக யாழ்ப்பாணத்துச் சொற்கள் மிகுந்து காணப்பட்டுள்ளதை மொழியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, யாழ்ப்பாணத்தின் பேச்சு மொழி ஏன் இலக்கிய வளமிக்க மொழியாக மாறவில்லை என்பது தான். இடைக்காலத் தமிழ் மொழியில் இருந்து 13-ம் நூற்றாண்டளவில் மலையாளம் தனி மொழியாக மாறியது. ஆனால் அதேக் காலக் கட்டத்தில் யாழ்ப்பாணத்து மொழி இலக்கிய மொழியாக மாறுவதில் இருந்து தயங்கி நின்றிருக்கின்றது. தம்பதேனியா சிங்கள மன்னர் 3-ஆம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு போசராச பண்டிதர் என்பவர் சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை அரங்கேற்றினார். 15-ம் நூற்றாண்டின் பின்னர் இலங்கையின் வடக்கே சில இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன, இவை யாவும் தமிழ்  மொழியிலேயே அமைந்திருந்தாலும், இவற்றில் பலவற்றிலும் தமிழகத்து நடையில் இருந்து தனித்துவமான பாங்கு தென்படவும் செய்துள்ளது. ஆனாலும் மக்களின்  மொழியில் இலக்கியங்கள் படைக்க யாழ்ப்பாணத்து மக்கள் தயங்கியுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடையும் வரையில் யாழ்ப்பாணத்து பேச்சு மொழியை  இலக்கியத்துக்குள் கொண்டு வருவதில் மிகுந்த தயக்கம் காட்டியுள்ளனர். 
 
13-ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதி தனிராச்சியமாக விளங்கியதென்பதும் தமிழ் மன்னர்கள் அப்பகுதியை அரசுபுரிந்தனர் என்பதும் வரலாற்றுண்மை. இக்காலத்திலிருந்துதான் தமிழிலக்கியங்கள் பலவும் தோன்றியுள்ளன. இக்காலத்திலே இயற்றப் பட்டவையாக கிடைக்கும் நூல்களை சிங்கைச் செகராசசேகரன் காலத்தவை (1380 - 1414) எனவும் நல்லூர்ப் பரராசசேகரன் காலத்தவை (1478-1519) எனவும் இவற்றுக்குப் பிந்தியவை எனவும் பேராசிரியர் ஆ. சதாசிவம் தான் தொகுத்த ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலில் வகுத்துள்ளார். இந்லூல்களைப்பற்றி இங்கு குறிப்பிடுதல் இக்கால இலக்கியப் போக்கினை அறிந்துகொள்ள உதவும்.
 
செகராசசேகரம் (இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை இயற்றுவித்தவர் செகராசசேகர மன்னன் என அறியப்படுகிறது) சோமசன்மாவின் செகராசசேகரமாலை, பரராச சேகரம் (பரராச சேகர மன்னன் பன்னிரு வைத்தியர்களைக் கொண்டு இந்லூலை இயற்றுவித்தான என்பர்), பண்டிதராசர் இயற்றிய தக்கிணகைலாச புராணம், சகவீரர் இயற்றிய கண்ணகி வழக்குரை, கரசைப்புலவர் இயற்றிய திருக்கரசைப் புராணம், கதிரைமலைப்பள்ளு (இந்நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை). அரசகேசரியின் இரகுவம்சம், வையாபுரி ஐயர் இயற்றிய வையாபாடல், வைத்தியநாத முனிவர் இயற்றிய வியாக்கிரபாத புராணம், முத்துராச கவிராயரின் கைலாய மாலை முதலியவை 13ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் எழுந்த நூல்களாகும். இந்நூல்களை, சமய சம்பந்தமான நூல்கள், யாழ்பாணத்தரசர்களின் வரலாற்று வரன்முறை கூறும் இலக்கியங்கள், சோதிடம், வைத்தியம் ஆகிய துறைகள் சார்ந்த நூல்கள் என வகைப்படுத்தலாம். முதலாவது பிரிவில் தக்கிணகைலாசபுராணம், திருக்கரசைப்புராணம், கதிரை மலைப்பள்ளு, வியாக்கிரபாதபுராணம், கண்ணகி வழக்குரை என்பன அடங்கும். இரண்டாம் பிரிவில் வையா பாடல், கைலாய மாலை என்பன அடங்கும். இவற்றுடன் பரராச சேகரன் உலா என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாழ்ப்பாண வைபவம் என்ற நூல் பரராசசேகரன் உலாவைத் தனது முதனூலாகக் குறிப்பிடுகிறது. இந்நூல் தற்போது கிடைக்கவில்லையாயினும் பரராசசேகரன் பேரில் எழுந்ததாகையால் அம்மன்னன்காலத்ததாய் இருக்கலாமெனக் கருதப்படுகிறது. மூன்றாவது பிரிவில் செகராசசேகரமாலை, செகராசசேகரம், பரராசசேகரம் ஆகியவை அடங்குகின்றன. இவற்றில் செகராசசேகர மாலை சோதிட நூல்; ஏனையன இரண்டும் வைத்திய சம்பந்தமான நூல்களாகும். மேற்கண்டவாறு பல நூல்கள் எழுந்திருப்பினும் சமய சம்பந்தமான இலக்கியங்களே அவற்றுள் பெரும்பான்மையன. நிலவுடமைச் சமூகங்களிற் சமயம் பெறும் முக்கியத்துவத்தையே இது காட்டுகிறது. இந்நிலைமை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எமது இலக்கியங்களில் தொடர்ந்து காணப்படுகிறது. 
 
அதாவது ஈழத்து மக்கள் தமது மொழியில் நூல்கள் இயற்றுவதை விட தமிழ்நாட்டு மொழியில் நூல்கள் இயற்றுவதையே பெருமையாக கருதி உள்ளனர். இதனால் ஈழத்து மொழியானது பின்னுக்குத் தள்ளப்பட்டு தமிழகத்தை ஒத்த நடையிலேயே தொடர்ந்து இலக்கியங்கள் படைத்துள்ளனர் ஈழத்து மக்கள் பலரும். ஒரு மொழியானது பேச்சு மொழியாகவே தொடர்ந்து இருந்தால் காலப் போக்கில் அதன் தனித் தன்மை அழிந்து விடும் என்பதில் ஐயமில்லை. 13-ம் நூற்றாண்டளவிலேயே இடைக்காலத் தமிழ் என்பது தற்காலத் தமிழ், மலையாளம், யாழ்ப்பாணத் தமிழ் என பிரிந்து விட்ட போதும், மலையாளம் போன்றில்லாமல் யாழ்ப்பாணத்து மொழியினை எழுத்துக்குள் கொண்டு வரும் முயற்சிகள் பெருமளவில் நடைபெறவே இல்லை. இது கருநாடகத்தில் துளு மொழியை விடவும் மிகவும் பின் தங்கிய நிலையை யாழ்ப்பாண மொழி பெற்றது. 
 
கடந்த நூற்றாண்டு வரை இவ்வாறான நிலை இந்தியாவின் பல மொழிகளுக்கு காணப்பட்டுள்ளது. பெரும்பாலான சமயங்களில் அவை அண்மித்த பெருமொழியின் வட்டார வழக்கு என்றே பலரும் கருதி வந்துள்ளனர், ஏன் அந்த மொழி பேசும் மக்களே அவ்வாறே நம்பியும் நம்ப வைக்கப்பட்டும் வந்துள்ளனர். உதாரணத்துக்கு கருநாடகத்தின் குடகு, தமிழகத்தின் படகா ஆகியவையும் கூட கன்னடத்தின் வட்டார வழக்கு என சொல்லப்பட்டு வந்தன. கோவாவின் கொங்கணி மொழியும் கூட மராத்தியத்தின் வட்டார வழக்கு என சொல்லப்பட்டு வந்தது. ஏன் தனியான எழுத்து முறை, சில இலக்கியங்கள் படைத்திருந்தும், துளு மொழியானது கன்னடத்தின் வட்டார வழக்கு என்றே இந்திய அரசாங்கம் கருதியது. 
 
யாழ்ப்பாணத்து மொழியும் அவ்வாறே தமிழின் ஒரு வட்டார வழக்கு என்ற நிலையிலேயே இன்றளவும் வைக்கப்பட்டு வருகின்றதோடு, தொடர்ந்து தமிழகத்தின் கலை, இலக்கிய, சினிமாவின் தாக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தனித்தன்மையும் இழக்கப்பட்டு வருகின்றது வேதனையான உண்மையாகும். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.