Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.பி.எம். – ஒரு யானை எலி ஆகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது 1787ஆம் ஆண்டு. ருஷியாவின் ராணியாக இருந்த பேரரசி காதரின், போர் நடந்திருந்த பிரச்சினை பூமிகளைப் பார்வையிடச் சென்றார். கிரைமியாவில் அப்பொழுதுதான் சண்டை முடிந்து சமாதானம் அரும்ப ஆரம்பித்திருந்தது. தன்னுடைய தூதர்களுடனும் அமைச்சர்களுடனும் புடை சூழ இரண்டாம் காதரின் திக்விஜயம் துவங்கினார். கிரைமியாவில் ருஷியர்களை குடியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிவது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம். அமைதி தவழ்ந்து எல்லாம் சொர்க்கமாக மாறுகிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவது உப நோக்கம்.

பேரரசியாருடன் கிரெகரி பொட்டம்கின் என்பவரும் உடன் உறுதுணையாக வந்திருந்தார். இந்தப் பகுதியின் அறிவிக்கப்படாத ராஜாவாக இருந்த பொட்டம்கினுக்கு சில சிக்கல்கள் இருந்தன. போர் முடிந்தவுடன் எந்தவித ஆதாரமும் இல்லாத பகுதியில் புதிதாக குடிபுக ருஷியர்கள் தயாராக இல்லை. அந்தப் பகுதிகள் பாலைவனம் போல் காட்சி தந்தன. ஆனால், அரசியாருக்கோ புறக்காட்சி முக்கியம். அரசி பவனி வரும்போது அந்தப் பகுதிகள் மினுக்க வேண்டும். மக்கள் நிறைந்து புழங்க வேண்டும். குட்டி நகரங்கள் வேண்டும்.

என்ன செய்வது?

தன்னுடைய ஆட்களை அழைத்து அடுத்து செல்ல இருக்கும் இடத்தை முன்பே ஓதி விடுவார். அவர்களும் அந்தப் பகுதிக்கு சென்று காலனி அமைத்து, நல்லதொரு கண்கவர் காட்சியை காதரின் அரசியாருக்கு தந்து விடுவார்கள். இரவில் பொட்டம்கின் உடன் அரசியார் சல்லாபிக்கும்போது அவர்கள் போக இருக்கும் அடுத்த ஊருக்கு அதே குழுவினர் மாறுவேடம் தரித்து, தங்களின் குடிசைகளையும் குடில்களையும் போட்டு ஏமாற்றும் வித்தையைத் தொடர்ந்தார்கள்.

பொட்டம்கின் மீது அரசியாருக்கு பெருமகிழ்ச்சி உண்டானது. செல்லும் இடமெல்லாம் கிராமங்களும் உள்கட்டமைப்புகளும் நிறைந்திருப்பதை செய்து காட்டிய பொட்டம்கின் கல்லா நிரம்பி வழிந்தது. ஆனால், ரஷியாவின் வீழ்ச்சி இங்கேதான் துவங்கியது.

Oil-on-canvas-portrait-of-Empress-Cather

ஐ.பி.எம் நிறுவனமும் கடந்த பல்லாண்டுகளாக இலாபத்தை தங்களுடைய கணக்குப் புத்தகத்தில் காட்டி வருகிறது.

பங்குச்சந்தையில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு நான்கு முறை தங்களுடைய வரவு-செலவு பொதுமக்கள் முன்னும், முதலீட்டாளர்கள் முன்னும் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறே ஐ.பி.எம்.மும் வெளிப்படையாக தங்களுடைய இலாபம் ஈட்டும் பிரிவுகளையும், அதிக வளர்ச்சி அடைந்த துறைகளையும் விரிவாக சொல்லி வருகிறார்கள்.

150 பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்படும் கம்பெனி, அதில் 25 பில்லியனை தன்னுடைய பங்குகளை வாங்கவோ, ஈவுத்தொகை (டிவிடெண்ட்) விநியோகிக்கவோ செலவழிக்கிறது. இருபதாண்டுகளுக்கு மேலாக இதே வித்தையை பயன்படுத்தி தன்னுடைய பங்கு மதிப்பீட்டை, ஒவ்வொரு காலாண்டு அறிக்கையின்போதும் உயர்த்திக் காட்டி வருகிறது.

IBM_Shares_Buyback_Stocks_Markets_Wall_S

எடுத்துக்காட்டாக ஒரு சிறிய கணக்கைப் பார்க்கலாம்.

ஐ.பி.எம்.மின் பங்குகள் 1,100 பங்குகள் சந்தையில் உலவுகின்றன. இந்தக் காலாண்டில் 55 டாலர்களை நிகர இலாபமாக ஈட்டி இருக்கிறார்கள். அதன்படி, ஒரு பங்கிற்கு ஐந்து பைசா இலாபம் என கணக்கிடலாம்.

அதாவது, 55 / 1100 = 0.05

ஆனால், ஐந்து பைசாவிற்கு பதில், ஆறு பைசா இலாபல் காட்ட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இருநூறு பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு விடுவார்கள். இப்பொழுது 1,100 பங்குகளுக்குப் பதிலாக 900 பங்குகளே சந்தையில் இருக்கும்.

அதாவது 1,100 – 200 = 900

இப்பொழுது அதே 55 இலாபம் ஈட்டினால் ஒவ்வொரு பங்கிற்கும் அதிக இலாபத்தைக் கணக்காக காட்டலாம்: 55 / 900 = 0.061 = 6.1 பைசா.

இலாபம் அதிகரிக்கவில்லை. ஆனால், வெளியே உலவும் பங்குகளின் படி பார்த்தால், ஒவ்வொரு பங்கிற்கும் அதிக மதிப்பு என கணக்கு வித்தை மூலம் காட்டலாம். இதே நுட்பத்தை 1994 முதல் ஐ.பி.எம். செய்கிறது.

கூகுள் நிறுவனம் தன்னுடைய பங்கு உரிமையாளருக்கு நயா பைசா கூட ஈவுத்தொகையாக விநியோகிப்பதில்லை. டிவிட்டர் போல், அமேசான்.காம் போல் நஷடத்தில் இயங்காவிட்டாலும், தன்னுடைய இலாபம் அனைத்தையும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் முதலீடாக தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறது.

பங்குதாரரிடம் கொடுத்து, அவர் செலவழிப்பதை விட, தாங்களே சேமிப்பில் வைத்திருந்து, தானியங்கியாக ஓட்டும் கூகிள் கார் போன்ற நவீன கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதால், அதே பணம் பன்மடங்காகப் பல்கிப் பெருகும் என்பது இதன் தாத்பர்யம். ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கூட வெகு சமீபம் வரை ஈவுத்தொகையை எப்பொழுதும் தன்னுடைய பங்குதாரர்களுக்கு விநியோகித்ததில்லை. அடுத்த தலைமுறை எக்ஸ்-பாக்ஸ், புத்தம் புதிய ஐ-வாட்ச் போன்றவை உருவாக்கி, தங்களைத் தாங்களே உருமாற்றிக் கொள்வதால், அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை.

தன் மீது தனக்கே நம்பிக்கை இல்லாத நிறுவனங்களும், பங்குதாரரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியாக பணத்தைத் தூண்டில் போடும் நிறுவனங்களும், பாரம்பரியமான அந்தக் கால பழக்கவழக்கங்களைக் கொண்ட வட்டி போடும் நிதி நிறுவனங்களும் காலாண்டு தோறும் ஈவுத்தொகை கொடுக்கிறது. அந்த வர்க்கத்தில், தொழில் நுட்பம் போன்ற நொடிக்கு நொடிக்கு புது அரிதாரம் கோரும் துறையில் இயங்கும் ஐ.பி.எம். அங்கம் வகிப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.

ஆண்டுக்கணக்காக, இவ்வாறு கணக்குப்பதிவில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி மந்தையில் போட்டு ஒருவாறாக இலாபக் கணக்கைப் பதிந்தாலும், தொலைநோக்கில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த செய்முறைகள் அவநம்பிக்கையை உருவாக்கியது. அவர்கள் மெல்ல ஐ.பி.எம். பங்குகளை விற்றுவிட்டு, புதிய தலைமுறையான ஃபேஸ்புக், சேல்ஸ்ஃபோர்ஸ் என மாறத் துவங்கினர்.

Bloomberg_Business_Week_IBM_Blue_Bloods_

இப்பொழுது கத்திரி போடும் தருணம். பட்ஜெட்டில் மட்டும் அல்ல. அளவுக்கதிமாக விஞ்சி குவிந்து நிற்கும் ஐபிஎம் பணியார்களையும் கத்திரி போட்டுக் குறைக்கும் படலம். இந்தியாவில் டி.சி.எஸ். செய்தது போல், மிகப் பெரிய அளவில் ஆள்குறைப்பு துவங்கி இருக்கிறது. நாலே கால் இலட்சம் ஊழியர்களைக் கொண்ட உலகளாவிய படையில் இருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோரை துரத்துகிறார்கள். நால்வரில் ஒருவர் நீக்கப்படுகிறார்.

இது ஐ.பி.எம் ஊழியர், அவர்களுடைய அரட்டைத் தளத்தில் எழுதிய பதிவு:

பதினான்கு வருடமாக ஐ.பி.எம்.மில் வேலை பார்க்கிறேன். என்னுடைய கடைசி நாள் ஃபெப்ரவரி 27. என் வயது 58. சட்டப் பிரிவில் இருக்கிறேன். தலைசிறந்தவர் என்னும் மதிப்பீட்டில் இருந்து கடுமையாக உழைப்பவர் என்று கடந்த சுற்றில்தான் முதல் தரத்தில் இருந்து இரண்டாம் தரத்திற்குக் கீழிறக்கப்பட்டேன். கடந்த காலாண்டில் மட்டும் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்தேன். இறுதியாக பைசல் பண்ணி அனுப்புவதில் ஒரே ஒரு பட்டுவாடா கொடுக்கிறார்கள். ஆறு மாதம் பணியில் இருந்தால், அதற்கு ஒப்பாக ஒரு வார சம்பளம் தந்து அனுப்புகிறார்கள். அதிகபட்சமாக 26 வார சம்பளம்தான் தருகிறார்கள். வேலையில் இருந்து துரத்தப்பட்ட நாள் முதலாக ஆறு மாதம் வரை உடல்நல காப்பீடு கொடுக்கிறார்கள்.

இவருக்குக் கிட்டத்தட்ட ஆறு மாத/அரை வருட சம்பளம் கிடைத்திருக்கும். அதாவது, அடுத்த ஆறு மாதத்திற்கு அவர் எந்தப் பணியும் செய்யவேண்டாம். வெறுமனே, புதிய வேலையைத் தேடிக் கொண்டால் போதுமானது.

திருமலை படத்தில் விஜய் பேசும் “வாழ்க்கை ஒரு வட்டம்டா! இங்க ஜெயிக்கிறவன் தோப்பான்; தோக்கிறவன் ஜெயிப்பான்!” பன்ச் வசனம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அமெரிக்காவில் ஐந்தாண்டிற்கு ஒரு சுழற்சி எப்பொழுதும் இருக்கிறது. அது சிறிய புயல் மட்டுமே. பத்தாண்டிற்கு ஒரு முறை சுனாமிப் பேரலையே அடிக்கிறது. அந்த சமயத்தில் கணக்குப் புத்தகங்களில் பெரும் நஷ்டங்களைப் போட்டு, நிறுவனத்தையே புரட்டிப் போட்டு, அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி, மொத்தமாக சாதாரணர் முதல் பெருந்தலைகள் வரை மாற்றங்களை உணர வைத்து போகி கொண்டாடுகிறார்கள்.

ஆனால், இது மட்டுமா இப்போதைய இந்த ஐ.பி.எம். வீழ்ச்சிக்கு மூலகாரணம்?

அது 2012ஆம் ஆண்டு. அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் எக்கச்சக்கமாக தகவல்கள் குவிந்த சமயம். எட்வர்ட் ஸ்னோடென் சொல்லிய மாதிரி இணையத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லா விஷயங்களையும் துருவிய சமயம் அது. மத்திய புலனாய்வுத் துறையின் கணினிகளில் இடம் போதவில்லை. தேவைக்கேற்ப கூட்ட வேண்டும்; அலசி ஆராய்ந்து கடாசிய பிறகு கணினிகளைக் குறைக்க வேண்டும். உங்களில் யாரல் செய்ய முடியும் என எல்லோரிடமும் கேட்டார்கள். எல்லா விஷயங்களும் தன்னந்தனியாக இருக்க வேண்டும். கடுமையான பாதுகாப்பு வேண்டும். எதுவும் பொதுவில் இருக்கக் கூடாது என்றார்கள்.

முதல் சுற்றில் ஐந்து பேர் தேர்வானார்கள். இன்றளவிலும் கூகுள் நிறுவனத்திடம் சொல்லிக் கொள்ளும்படியான, நம்பகமான, ஸ்திரமான மேகக் கணி அமைப்பு கிடையாது. அவர்கள் நிராகரிக்கப் பட்டார்கள். இறுதிச் சுற்றில் இரண்டே நிறுவனங்கள். ஒன்று பழம் பெருச்சாளியான அமேசான். இன்னொன்று நேற்றைய 2011 மழையில் 2012ஆம் ஆண்டில் முளைத்திருந்த ஐ.பி.எம். அப்படித்தான் சிஐஏ அவர்களை நோக்கியது. ஐந்தாண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் பல்வேறு கணினிகளை திறம்பட மேய்க்கும் அமேசானா? அல்லது இப்பொழுதுதான் களத்தில் குதித்திருக்கும் அனுபவமில்லாத ஐ.பி.எம்.மா?

Cloud_Bluemix_CIA_AWS_EC2_Azure_SForce_S

பத்தாண்டுகளுக்கான காண்டிராக்ட். அறுநூறு மில்லியன் டாலர்கள் பெறுமான ஒப்பந்தம் அமேசானுக்குக் கிடைத்தது. ஏற்கனவே நோக்கியாவும் ஃபைஸர் (Pfizer) மருந்து நிறுவனமும் உபயோகிக்கும் அமேசான்.காம் மேகக்கணினியத்திற்கும் எவருமே பயன்படுத்தி நிரூபிக்காத ஐ.பி.எம்மின் மேகக் கணினியத்திற்கும் நடந்த போட்டியில், ஐ.பி.எம். சல்லிசான விலையில் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தப்புள்ளி கொடுத்திருந்தும், அதிக விலை கேட்ட அமேசான்.காம் வென்றது.

பாதி விலைக்கு தாங்கள் கொடுத்த டெண்டரை சி.ஐ.ஏ. நிராகரித்ததை எதிர்த்து, ஐ.பி.எம். வழக்குத் தொடுத்தது. எழுபதுகளில் ஒரு முதுமொழி உலவியது: “என்னவாக இருந்தாலும் ஐ.பி.எம் நிறுவனத்தின் கணினியை வாங்கு. உன்னை முதலாளிகள் வாழ்த்துவார்கள். காரியம் கைகூடும்!” அந்தப் பழமொழி இப்போது ஐ.பி.எம். நிறுவனத்திடம் கொடுத்தால் காரியம் குட்டிச்சுவராகும் என்று மாறிப் போய் இருக்கிறது.

ஏன்?

– எங்கே சிக்கனமாக இருக்க வேண்டும் என்று ஆராயாமல் எல்லாவற்றிலும் கஞ்சத்தனம் பார்த்தது

– வேலை பார்ப்பவர்களிடம் உண்டாக்க வேண்டிய உத்வேகத்தை ஊட்டாத நிலை

– எவரை எதற்காக நீக்குகிறோம் என்று தெரியாமல், அரசியல் காரணங்களால் பணிநீக்கம்

– தொழில் நுட்ப வளர்ச்சியில் அக்கறையின்மை

– பூதாகரமான நிறுவனம்

– பிற புகழடையும் கண்டுபிடிப்புகளையும் நிறுவனங்களையும் வாங்குவதன் மூலமே வளர்ச்சி காண்பிப்போம் என்னும் கொள்கை

– கணக்கு காட்டி, பணத்தை சேமிப்பதன் மூலம் தாற்காலிக இலாபம் காண்பிக்கும் நோக்கம்

இவையெல்லாம் உண்மைதானா என ஆறு பேரிடம் கேட்டோம். அவர்கள் உரையாடல் இங்கே இருக்கிறது.

- See more at: http://solvanam.com/?p=38041&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+feedburner%2FuRqXY+%28%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29#sthash.duKQlrfi.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.