Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தின் அதிகாரம்: ஓலைச்சுவடி, புத்தகம் முதல் டிவிட்டர் வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தின் அதிகாரம்: ஓலைச்சுவடி, புத்தகம் முதல் டிவிட்டர் வரை

அபிலாஷ் சந்திரன்

printing_press.jpg

எழுத்தாளர்களை விட வாசகர்கள் அதிக அறிவாளிகள் என்பது என் அனுமானம். எழுத்தாளர்களுக்கு தம் அறிவை இன்னும் புத்திசாலித்தனமாக, தர்க்கபூர்வமாக, கூர்மையாக வெளிப்படுத்த தெரிகிறது. அவர்களிடத்து இந்த மொழி தரும் ஒரு தன்னம்பிக்கை இயல்பாக இயங்குகிறது. ஆயிரமாண்டு அறிவையும் நுண்ணுணர்வையும் தன்னிடத்து கொண்டுள்ள மொழியில் புழங்கும் போது இயல்பாய் அவற்றை கடன் பெறும் எழுத்தாளன், ஒவ்வொரு சொல்லின் பின்னும் தான் எதிர்கொண்ட ஐரோப்பிய கல்வியின் செறிவை கண்டுள்ள எழுத்தாளன் தன் எதிரில் தேரும் கவச குண்டலமும் அற்று நிற்கும் வாசகனை விட மேலானவனாக தன்னை காட்டி விட இயலும். அது உண்மையில் எழுத்தின் வன்மை. எழுத்தாளனின் மேன்மை அல்ல.

ஒரு எளிய அரட்டையில் கூறப்படும் விசயத்தை ஒரு கட்டுரையாக எழுதினால் மிக எளிதில் அதற்கொரு அறிவார்ந்த மதிப்பு ஏற்பட்டு விடும். முகநூல் நிலைதகவல்களை ஏன் இவ்வளவு முக்கியமாய் மதித்து சண்டை போடுகிறோம் என்றால் அது எழுத்து மொழி தரும் மதிப்பினால் தான். எழுதப்படுகிற எதுவும் மேலானது என நம் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. எனக்கு இது சம்மந்தமாய் இரண்டு அனுபவங்கள் உண்டு.

பல சமயங்களில் என்னுடைய வாசகர்களிடம் உரையாடும் போது அவர்கள் என்னை விட பல மடங்கு அதிகமாய் வாசித்துள்ளதை கவனித்துள்ளேன். நான் அவர்களை விட அறிவில் பல மடங்கு குறைந்தவன் தான். அவர்களுடைய வாழ்வனுபவம், உணர்வு நிலை, அக்கறை சார்ந்து ஒரு உரையாடலை இந்த வலுவான மொழித்தளத்தில் உருவாக்குகிறேன் எனும் ஒரே காரணத்தினாலே அவர்கள் என்னை படிக்கிறார்கள். ஒரு எழுத்தாளனாக என்னை கோரிக் கொள்வதில் எனக்குள்ள முக்கிய பிரச்சனை எழுத்தாளன் தான் எழுதும் விசயங்களுக்கு இணையாக வைத்துப் பார்க்கும் சிக்கல் உள்ளது என்பதாலே.

என்னுடைய “புரூஸ்லீ: சண்டையிடாத சண்டைவீரன்” நூலை வாசித்து விட்டு ராஜா எனும் வாசகர் அலைபேசியில் அழைத்தார். தனது மனைவியை சமீபத்தில் இழந்திருந்த அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார். அவருக்கு அந்த நூலில் மரணம் பற்றி வரும் வாக்கியங்கள் பெரும் நிம்மதியை தந்ததாகவும், சகஜ வாழ்வுக்கு மீள அந்நூல் உதவியதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மிகுந்த நெகிழ்ச்சியுடன் என்னிடம் உரையாடினார். எனக்கு அப்போது அவரது வயதோ பின்னணியோ தெரியாது. ஒருவரது வாழ்க்கையின் ஆகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள அந்நூல் உதவும் என நான் சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை. அப்படியான நோக்கத்துடன் நான் அந்நூலை எழுதவும் இல்லை. ஏனென்றால் உற்றவரின் மரணத்தை எதிர்கொண்ட அதை வென்று கடந்த அனுபவ அறிவோ வாழ்க்கை ஞானமோ ஒன்றும் எனக்கில்லை. மரணம் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை எனது வாசிப்பின் பின்னணியில் எழுதியிருந்தேன், அவ்வளவே. நாங்கள் ஒருநாள் சந்திக்க திட்டமிட்டோம். என்னை பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு நாற்பதுக்கு மேல் வயதிருக்கும் என எதிர்பார்த்திருந்தார். அவருக்கு என் வயதிருக்கும் என நான் நினைத்தேன். எனக்கு அவரிடம் ஒரு எழுத்தாளன் நிலையில் இருந்து அவரை வாசகராக பார்க்க சங்கடமாக இருந்தது. அவர் என்னை விட பத்து மடங்கு அதிக அனுபவம் மிக்கவர். வாழ்க்கையை எதிர்கொண்டு அறிந்தவர். என்னைப் போன்ற ஒரு இளைஞனிடம் இருந்து அவர் வாழ்க்கை பாடத்தை அறிந்து கொண்டதாக கூறும் போது எனக்கு மிகுந்த கூச்சம் ஏற்பட்டது. பிறகு அவர் அவர் எனக்கு அளிக்கும் மரியாதை இம்மொழியில் இத்தனை வருடங்களாய் இயங்கியுள்ள சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அளிக்கும் அங்கீகாரம் என விளங்கிக் கொண்டேன். அவருக்கும் மொழிக்கும் இடையிலான பாலம் மட்டுமே நான். என் மூலம் நமது பண்பாட்டில் உருவான கருத்தாக்கங்கள், அவதானிப்புகள், பார்வைகளை அவர் மனம் தொட்டுணர்ந்திருக்கிறது. தேவதச்சன் ஒருமுறை சொன்னார் கவிதை என்பது “குண்டு பல்பை ஹோல்டரில் பொருத்துவது” போன்றது என. என் வேலை பொருத்துவதுடன் முடிகிறது; அவ்வெளிச்சத்திற்கான பெருமை எனதில்லை. ஆனால் தெரியாத்தனமாக நம் சமூகத்தில் எழுத்திற்கான பெருமையும் அவப்பெயரும் எழுத்தாளனுக்கு வந்து சேர்கிறது.

நீங்கள் இருப்பின் நெருக்கடி பற்றி தீவிரமாய் தத்துவார்த்த தொனியுடன் விவாதித்தால் வாழ்க்கையின் ஆழ அகலங்களை அலசிப் பார்த்த ஒரு சிந்தனையாளன் என உங்களை அவர்கள் நினைத்து விடக் கூடும். ஆனால் அது உண்மை அல்ல. சில மண்ணில் காய்க்கிற கனிகளுக்கு தனி சுவையிருக்கும். அது மண்ணின் சிறப்பு. கனிக்கு எந்த பெருமையும் இல்லை. இந்த மொழியில் ஆழமாய் இறங்கி பயணிக்க துணிந்தால் “தங்கமீன்கள்” படத்தில் வெள்ளி முலாம் பூசும் வேலை செய்கிற கல்யாணி தன் மகளுக்கு சில்வர்மேனாக தெரிவது போல் நீங்கள் உங்கள் வாசகனுக்கு தெரிவீர்கள். ஆனால் உள்ளுக்குள் நீங்கள் சாதாரண அப்பாவி அசட்டு ஆள் தான். நாம் மீண்டும் இணைய பதிவுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பார்ப்போம். நீங்கள் ஒரு அரசியல்வாதி அல்லது பிரபலத்தை முகநூலில் கிண்டல் செய்து எழுதினால் கைது செய்து தண்டிப்பார்கள். ஆனால் அதையே தெருவில் நின்று யாரிடமாவது பேசினாலோ செல்போனில் நண்பரிடம் சொன்னாலோ கைது செய்ய மாட்டார்கள். ஏன் ஒரு கரித்துண்டால் சுவற்றில் கிறுக்கினால் கூட பொருட்படுத்த மாட்டார்கள். ஒரு வாக்கியத்துக்கு சொன்னால் இல்லாத ஆபத்து எழுதினால் ஏன் ஏற்படுகிறது? ஒரே டீக்கடை அரட்டை முகநூலின் டைம்லைனில் நிகழும் போது ஏன் சட்டபூர்வ மதிப்பும் தண்டனைக்குரிய கவனமும் பெறுகிறது? தண்டனைக்குரிய எதுவுமே அதிகாரம் சம்மந்தப்பட்டதாய் இருக்கும். ஆக, பேச்சில் அதிகாரம் இல்லை. ஆனால் எழுத்தில் அதிகாரம் இருக்கிறது. இது ஏன்?

சமீபமாக ஷாமி விட்னஸ் எனும் டிவிட்டர் தலைப்பில் செயல்பட்ட பெங்களூர் பொறியியல் பட்டதாரி மெஹ்தி தீவிரவாதி எனும் பெயரில் வேட்டையாடப்பட்டு கைது செய்யப்பட்டார். அவ்வாறு அவர் வேட்டையாடப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தீவிர மத கருத்துநிலை கொண்ட இணைய செயல்பாட்டாளராக மட்டுமே இருந்தார். இஸ்லாமிக் ஸ்டேட் எனும் தீவிரவாத குழுவை அவர் ஆதரித்தார். இக்குழு சம்மந்தமான தகவல்களை இணையத்தில் பரப்பினார். விவாதங்களில் ஈடுபட்டார். இது குற்றமா என்றால் குற்றமென்றும் இல்லையென்றும் கூறலாம். ஏனென்றால் பொருண்மையான குற்றம் எதிலும் அவர் ஈடுபடவில்லை. எந்த தீவிரவாதியுடனும் அவர் நேரடியாக உரையாடவில்லை. தீவிரவாத குழுக்களுக்கு பொருளுதவி செய்யவில்லை. தீவிரவாத பயிற்சிக்காக வெளிநாடு செல்லவில்லை. தீவிரவாதத்தை அவர் தூண்டி அதனால் யாரும் தீவிரவாதி ஆனதாக ஆதாரமும் இல்லை. மெஹதி இதையே பேச்சு வழி செல்போனில் நண்பர்கள் இடத்து செய்திருந்தால் அவரை கைது செய்ய இயலாது. ஆனால் எழுத்துக்கு ஒரு சட்டபூர்வ மதிப்பு வந்து விடுகிறது. மெஹதி சிரியா சம்மந்தப்பட்ட ஒரு அரசியல் வல்லுநர் என சில பிரித்தானிய ஊடகவியலாளர்கள் கருதுகிறார்கள். அவரது கருத்துக்களுக்கு காத்திரமான மதிப்பளித்து அவற்றை மேற்கத்திய ஆங்கில பத்திரிகைகளில் முன்னர் மேற்கோள் காட்டி உள்ளனர். இன்று உளவுத்துறை அவரை தீவிரவாதியாக அறிவித்ததன் மூலம் ஒரு அரசியல் ஆய்வாளர், மத ஆர்வலர் மற்றும் தீவிரவாத ஆதரவாளர் இவற்றிற்கு இடையிலான கோட்டை அழித்து விட்டது எனலாம். தமிழில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக எவ்வளவோ எழுதப்பட்டுள்ளது. புலிகள் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். தமிழகத்தில் ஓரளவு ஈழ ஆதரவு சூழல் இருந்து வருவதால் புலி ஆதரவு இணைய எழுத்தாளர்கள் இதுவரை சட்டரீதியாக ஒடுக்கப்பட்டதில்லை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை ஆதரிப்பது அப்படி சாதகமாக பார்க்கப்படாது. இங்கு எப்படி புலிகளை ஆதரித்து ஒருவர் எழுதுவதால் எப்படி புலிகள் இயக்கம் மிகப்பெரிய எழுச்சியை தமிழகத்தில் அடையவில்லையோ அது போன்றே மெஹ்தியும் புது தீவிரவாதிகளை உருவாக்கவோ தாக்குதல்களுக்கு காரணமாகவோ இல்லை. மேலும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாடு கொண்டவராக இருக்கலாம். தனிப்பட்ட முறையில் அதை ஆதரிக்கும் முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. உங்கள் ஆதரவை நண்பர்களிடத்தோ வகுப்பில் மாணவர்கள் அல்லது அலுவலகத்தில் சகபணியாளர்களிடத்தோ டீக்கடையில் சகவாடிக்கையாளர்களிடத்தோ பேச்சு மூலம் தெரிவிக்கலாம். அதுவும் குற்றமல்ல. ஆனால் அதையே இணையத்தில் எழுதும் போது குற்றநடவடிக்கையாக பார்க்கப்படும். இந்த முரண் ஏன் ஏற்படுகிறது? எழுத்திற்கு உள்ள ஒரு அதிகார பூர்வ மதிப்பு சார்ந்து ஒரு மயக்கம் தான் இதற்கு காரணம் எனலாம். இந்த மதிப்பு ஒரு வரலாற்று கட்டமைப்பும் தான். இந்த கட்டமைப்பு எப்படி தோன்றியிருக்கலாம்?

இதற்கான காரணத்தை நாம் எழுத்தின் துவக்க காலத்தில் தான் தேட வேண்டும். முன்பு அறிவு துறைசார் நிபுணர்களாலோ அல்லது துறவிகளாலோ ஓலைச்சுவடிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இச்சுவடிகளை படிக்கும் உரிமையோ வாய்ப்போ எளிய மக்களுக்கு இருக்கவில்லை. இந்தியாவில் நீண்ட காலம் பிராமணர்கள் வசமே கல்வி அதிகாரம் இருந்தது. பின்னர் பௌத்தர்கள் தம் பள்ளிகளில் கல்வியை மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்றனர். அப்போதும் கூட ஒரு சில சமூக அடுக்குகளை கடந்து கல்வி போகவில்லை. இக்காலகட்டத்தில் தான் “குருவுக்கு அடுத்தபடியே தெய்வம்”, “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” போன்ற நம்பிக்கைகள் தோன்றியிருக்க வேண்டும். எழுத்துடன் தொடர்புடைய எவரும் தேவ அறிவு கொண்டவர்கள், மேலானவர்கள் என நம்பப்பட்டார்கள். கல்வியறிவுள்ளவர்கள் மட்டுமே எழுத முடியும் என்பதால் ஏற்பட்ட நம்பிக்கை இது. இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட எதுவும் அறிவானது என கருதப்பட்டது.

பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டென்பெர்கின் அச்சு எந்திர கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் கல்வியை பரவலாக்க உதவியது. புத்தகங்கள் மூலம் அறிவு மடாலயங்களை கடந்து தெருவுக்கு வந்தது. பத்தொன்பதாம நூற்றாண்டில் எந்திரமயமாக்கலின் விளைவாக ஒரு புதிய மத்திய வர்க்கம் தோன்றியது. அவர்களுக்கு வாசிப்பதற்காக நிறைய பத்திரிகைகள் உருவாகின. அதில் எழுத தொடர்கதை எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் தோன்றினர். அவர்கள் சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்றிருந்தனர். இங்கிலாந்தில் கீழ்மத்திய வர்க்கத்தில் இருந்து தோன்றிய சார்லஸ் டிக்கன்ஸ் போன்றோர் தம்மை சமூக தீவினைகளூக்கு எதிரான எழுத்து போராளிகளாக கற்பித்து செயல்படவும் செய்தனர். இக்காலகட்டத்தில் நாவல் ஒரு தனிமுக்கியத்துவம் பெற்ற எழுத்து வடிவமாக தோன்றியது. வாசிப்பு என்பது மேற்தட்டினருக்கு மட்டுமல்லாமல் மத்தியவர்க்கத்துக்கும் அணுக்கமானதாக ஆகியது.

இந்தியாவில் காலனிய ஆட்சியின் போது இங்கு நிறுவப்பட்ட கிறித்துவ கல்வி நிறுவனங்கள் கீழ்த்தட்டினரிடம் இருந்து புது மத்திய வர்க்கத்தையும், மேல்மத்திய வர்க்கத்தையும் தோன்றுவித்தன. இக்காலகட்டத்திலும் பின்னர் சுதந்திரத்துக்கு பின்னரும் கல்வி ஓரளவு ஜனநாயகப்பட்டாலும் எழுத்து என்பது சிலர் மட்டும் புழங்கக் கூடிய பிராந்தியமாகவே இருந்தது. “படித்தவன் சூதும் வாதும் செய்தால் அம்போ எனப் போவான்” என பாரதி கூறியதன் பொருள் எழுத்தாளன் தனக்கான சமூகப்பொறுப்பை உணர்ந்திருக்க வேண்டும் என்பதே. அவன் இச்சமூகத்துக்கு ஆசானான, வழிகாட்டியாக இருக்க வேண்டும். அறிவும் தெளிவும் வாய்த்தவர்கள் மட்டுமே எழுத வேண்டும், கல்வி படைத்ததனால் யார் வேண்டுமானாலும் எழுதக் கூடாது என அவர் கருதியிருக்க கூடும். அன்றாட வாழ்வில் சூதும் வாதும் செய்கிறவன் இருக்கலாம். ஆனால் எழுத்துலகில் அப்படி ஒருவன் இருக்கக் கூடாது என பாரதி கோருகிறார். ஆனால் எழுத்து முழுக்க மக்கள் வசம் ஆன கட்டத்தில் எழுத்தாளன் யாராகவும் எப்படியும் இருக்கலாம் என நினைக்க தொடங்கினோம். எழுத்து ஒரு பண்டம் ஆனது. அதை யாரும் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம் எனும் நிலை தோன்றியது. இந்த நிலைப்பாட்டு மாற்றம் முக்கியமானது.

உண்மையில் மக்களை வழிநடத்துவதாக கருதப்படுகிற ஒரு சில தொழில்களுக்கு மட்டுமே இன்றும் ஒழுக்கமும் அறமும் தேவை என இன்றும் எதிர்பார்க்கிறார்கள்: ஆசிரியர், அரசியல்வாதி, எழுத்தாளன். எண்பதுகளுடன் அரசியல் முழுக்க ஜனநாயகப்பட்ட பின் இப்போது அரசியல்வாதி சூதும் வாதுமற்றவனாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில்லை. அது அனைவருக்குமான ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ரெண்டாயிரத்துக்கு பிறகு இணைய பரவலாக்கம் தான் எழுத்தை அதன் சரியான பொருளில் ஜனநாயகப்படுத்தியதாக கூறலாம். இதனால் அனைத்து சமூக நிலையினருக்கும் இணைய வாய்ப்பு சாத்தியப்பட்டுள்ளதாய் நான் கூறவில்லை. இணையம் மற்றொரு பிரதான மாற்றத்தை நம் அணுகுமுறையில், சிந்தனை அமைப்பில் கொண்டு வந்தது. இதுவரை அறிவார்ந்த, உயர்ந்த, சமூக மேம்பாட்டுக்கானதை மட்டுமே எழுத வேண்டும், எழுதப்படுவது அனைத்தும் உயர்வானது, அதிகாரபூர்வமானது, கவனிக்கத்தக்கது என இருந்த நம்பிக்கையை உடைத்தது. எழுத்து என்பது அறிவு பரவலாக்கத்துக்கான கருவி எனும் நிலையில் இருந்து சமூக உறவாடலுக்கான பாலமாக மாறியது. அரசு அதிகாரத்தின் தரப்பாக இருந்த எழுத்து எளிய மக்களின் அரட்டையாக, சுயவெளிப்பாடுகளின் வெளியாக மாறியது. அறிவின் அதிகாரமுள்ளவர்களே கருத்து சொல்லலாம் எனும் நிலை மாறி எழுதத் தெரிந்த யாரும் கருத்து சொல்லலாம் எனும் நிலையை உண்டாக்கியது.

இலக்கிய பரப்பில் இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பேஸ்புக்கில், பிளாகில், டிவிட்டரில் எழுதுபவர்கள் தம்மை எழுத்தாளராக கருத தயங்குகிறார்கள். தம்மை பதிவர்கள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இணையத்தில் எழுதின பக்கங்களை அச்சில் கொண்டு வந்து விட்டால் அடுத்த நொடியில் இருந்து தம்மை தயங்காமல் எழுத்தாளன் என அழைத்துக் கொள்கிறார்கள். முன்பு அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் தான் எழுதிய வரிகளை பத்திரிகைக்கு அனுப்புவதற்கு மிகுந்த தயக்கம் கொண்டிருந்ததாக, அந்த “எழுத்துக் கூச்சம்” எழுத்தாளனுக்கு இயல்பில் வேண்டும் என கூறியிருந்தார். அவர் குறிப்பிட்ட சுயதணிக்கை இன்று சரோஜா தேவியின் அன்னநடை போல் காலாவதியாகி விட்டது. அதே போல் முன்பு எழுத்தாளர்கள் க.நா.சு, சுந்தரராமசாமி போன்ற அதிகார மையங்கள் தம்மைப் பற்றி கண்டித்து கூறி விடுவார்களோ என வெகுவாக அஞ்சினர். சு.ரா வண்ணதாசனை கிண்டலடித்து சொன்ன ஒரு வாக்கியம் பல வருடங்களாய் ஒரு மறுக்கமுடியாத மதிப்பீடாக இலக்கிய வட்டங்களில் புழங்கியது. ஆனால் இன்று மூத்த எழுத்தாளர்கள் புது எழுத்தளர்களுக்கு அறிவுரை சொன்னாலோ விமர்சித்தாலோ அது பொருட்படுத்தப்படுவதில்லை என்றும் மட்டுமல்லாமல் கடுமையான கண்டனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகிறார்கள். இன்று மூத்த எழுத்தாளர்கள் இணைய எழுத்தாளர்களை நோக்கி ஒருவித அச்சத்துடன் தான் நடந்து கொள்கிறார்கள். பேஸ்புக் போன்ற தளங்களில் இயங்கும் எழுத்தாளர்களும் பொதுப்புத்திக்கு பாதகம் வராதது போல் எழுதவே கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். தெருவில் அலைந்த ஒரு லும்பன் கும்பல் இன்று இணையத்துக்குள் வந்து விட்டது என நாம் இதை பார்க்க முடியாது. ஏனென்றால் முன்னர் இதே கும்பல் தெருவில் இருந்த போது கூட எழுத்தறிவுள்ளவனை தன்னை விட மேலானவனாக, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவனாக பார்த்தது. ஆனால் இன்று அவர்கள் எழுத்தாளனை தமக்கு அப்பாற்பட்டவனாக பார்ப்பதில்லை. ஏனென்றால் அவர்களும் ஒருவிதத்தில் எழுத்தின் “அதிகாரத்தை” கைப்பற்றி விட்டார்கள். அதற்கான தன்னம்பிக்கையும் பதிவர்களுக்கு எழுத்தில் இருந்து தான் வருகிறது.

கிரேக்க புராணத்தில் அகிலெஸ் எனும் வீரன் பிறந்த மதலையாய் இருக்கையில் அவன் தாய் அவனை ஒரு நதியில் முக்கி எடுப்பார். அதனால் யாராலும் அழிக்க முடியாத உருக்கு போன்றதாக அவன் உடல் உருமாறும். எழுத்தும் அப்படி ஒரு நதி தான். ஒரே வித்தியாசம் இன்று இந்நதியில் முழுக்கு போடுவது அனைவருக்குமான உரிமையாகி உள்ளது. பொதுவான எதுவும் அதிகாரம் அற்றதாகும் எனும் பொருளில் எழுத்து தன் அசலான சமூக அதிகாரத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. இன்று எழுத்துக்குள்ள “அதிகாரம்” பெயரளவிலான ஒன்று தான்.

எழுத்து இன்று உன்னதத்திற்கும் குற்றத்திற்கும் அனுபூதிக்கும் கலகத்துக்கும் அப்பாற்பட்ட வேறொன்றாக மாறி வருகிறது. இப்போது அரசு மற்றும் அதிகார சமூகத்தின் முன்னுள்ள கேள்வி இந்த கருத்துக்கள், சிந்தனைகளில் எவையெல்லாம் முக்கியமானவை, அதிகாரபூர்வமானவை என்பது. இந்த சுதந்திரமான, மையமற்ற, இலக்கற்ற கருத்துக்களால் சமூகம் தாக்கத்திற்கு உள்ளாவதாய் அரசு அஞ்சுகிறது. எழுத்துக்கும் அதிகாரத்துக்குமான தொடர்புக் கண்ணி அறுந்து விட்டது என நம்ப சமூகமோ அரசோ தயாராக இல்லை. இணைய எழுத்தின் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள், கைதுகள் இதன் வெளிப்பாடுகள் தாம். உண்மையில் அரசு அவ்வாறு அஞ்சத் தேவையில்லை. அறிவும் கருத்துக்களும் இன்று வெறும் துய்ப்புக்கான பண்டங்களே! எழுத்துக்கும் எழுதுபவனுக்கும் மதிப்பு உள்ளதாய் எண்ணுவது வெறும் பார்வை மயக்கம் தான்.

நன்றி: அம்ருதா, பெப்ரவரி 2015

http://thiruttusavi.blogspot.in/2015/02/blog-post_27.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.