Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமாங்கத் திருவிழா சூழலில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்திற்கான செயற்பாடு

Featured Replies

Mamankam_CI.png

இன்றைய காலகட்டத்தில் கோயில்கள் அனைத்தும் நவநாகரீகத் தன்மை மிக்கதாகவும் பொருளாதார ரீதியில் உயரிய வருமானங்களைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களையும் மாறியுள்ளதோடு வருமானத்தினைக் கொண்டு எவ்வாறு செலவு செய்வது எனத் தெரியாமல் ஆடம்பரமான செயற்பாடுகளுக்கு அதனை பயன்படுத்தும் வகையில் அமைவதோடு கோயில்சார் நிர்வாகக் குழுக்களுக்கு இடையேயான சுரண்டலும் அதன் காரணமான மனக்கசப்புக்களும் போட்டி மனப்பாங்குகளும்  மிகஅதிகமாகவே காணப்படுகின்றன.

ஆனால் இங்கு தெய்வங்களின் அருள்வாக்குகள் தெய்வங்கள் பேசுவது என்பது இவ்வகை கோயில்களில் மந்தகதியாகவே காணப்படுகிறன. ஆனாலும் பழமை வாய்ந்த ஆடம்பர, அலங்காரங்கள் இல்லாத எளிமையான கோயில்களில் காணப்படும் மனச்சந்தோஷம் மேற்குறித்த வகைக்கு உட்ப்பட்ட கோயில்களில்  கிடைப்பதில்லை. அதாவது மணல்கள் நிரம்பிய களி அல்லது சீமேந்து தரைகள், ஓட்டின் மூலமான கூரையமைப்புக்கள் அல்லது ஓலைகளினால் கட்டமைக்கப்பட்ட கூரையமைப்புக்கள் உள்ள கோயில்கள் ஒரு சுற்றுச் சுத்தமான சுவாத்தியத்தையே மக்களுக்கு அளிக்கும். இதுவே மன அமைதிக்கும் மன ஆசுவாசத்திற்கும் உகந்ததாக அமைகின்றது.

மேலும் சில வரலாற்றுப் பின்னனிகளைக்கொண்டமைந்த கோயில்கள் தற்போது உலக மயமாக்கற் பின்னனியில் வரலாறுகளை இழந்துவரும் நிலமையும் காணப்படுகின்றது. உதாரணமாக தொன்றுதொட்டு வந்த கதைகள் அல்லது தனித்துவங்களை இருட்டடிப்புச் செய்யும் முறையில் சமஸ்கிருத மயமாக்கம் பெறுவதும் நவீனம் என்ற பெயரில் இவ்வாறான வரலாற்று தன்மைகளை தகர்த்து எறிந்து உயரிய கட்டடங்களாகவும் பிரமாண்ட அலங்கரிப்புக் கொண்ட வடிவமைப்புக்களாகவும் மாற்றி வரலாற்றினையே ஒட்டுமொத்தமாக சிதைத்து விடுகின்றனர். இவ்வாறு காணப்படும் நிலை பல்வேறு வகையான செயற்பாட்டுத் தூண்டல்களுக்கு காரணமாக அமைகின்றது. அந்த வகையில் களவு, கொள்ளை, சூறையாடல் போன்ற ஈனச் செயல்கள் இடம்பெறுவதும் கண் கூடு.

ஆயினும் கோயில்களில் மாற்றப்பட வேண்டிய நவீன கருத்தியல் நிலைக்கு உட்பட்ட விடயங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதும் வருந்ததக்கது. அந்த வகையில் சாதியம் பற்றிய கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து தொன்று தொட்டு பழமையான முறையில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது ஆனால் கோயில்கள் பாரிய கட்டிடங்களாகவும் கண்ணைக் கவரும் வடிமைப்புக்களாகவும் இருக்க, கருத்தியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் பெற வேண்டியவை தவிர அடிப்படையாக இருக்கும் மாற்றம் பெற வேண்டிய சமகால தேவைக்கு ஏற்ற உகந்ததானவை மட்டும் மாற்றம் பெறாமல் இருப்பது என்பது அபத்தமானது. அதாவது சாதி, குலம், குடி பற்றின மதிப்பீடுகளும் தலைமைத்துவம் வகித்தல், நிர்வாக அமைப்புமுறைச் செயற்பாடுகளில் பால்நிலைச் சமத்துவம் இன்மை(தனியனே அனைத்துக் கோயில்களிலும் ஆண்கள் மட்டுமே தலைமைத்துவ அதிகாரத்தினைத் தக்க வைத்துக்கொள்ள முற்படல்) போன்றவைகள் கருத்தில் எடுக்கப்படாமலும் அவை பாரம்பரியமாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற ஓர்மவெறி நீடித்து தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு இருக்கும் நிலைப்பாடுகள் அபத்தமானது. 

 

மாமாங்கத் திருவிழாச் சூழலில் கடந்த நான்கு வருடங்களாக கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளும் காட்சிக்கூடமும் எனும் தொனிப்பொருளில் கடந்த வருடங்களில் பாரம்பரியத்தினை வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப்படுத்தல்கள் பாரம்பரியக் கலைகளின் ஆற்றுகை நிகழ்ச்சிகள் போன்றன இடம்பெற்று வருகின்றமை கவனத்திற்குரியவை.

காட்சிப்படுத்தல்களின் போது கூத்துக்கள் சார் ஆடை, ஆபரணங்கள் கூத்துப் பிரதிகள் போன்றவையும் சடங்கு சார் பொருட்கள் சடங்கில் பயன்படுத்தப்படும் இசை வாத்தியங்கள் போன்றவையும் எமது தமிழர் பன்பாட்டுச் சூழலில் காணப்படும் அருந்தலான பண்பாட்டு அடையாளங்களை பிரதிபலிக்கும் பண்பாட்டு பயன்பாட்டுப் பொருட்கள் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்படுவது நிகழ்ந்து வருகிறது.

பாரம்பரிய ஆற்றுகை நிகழ்வுகள் எனும் போது வடமோடி, தென்மோடி, வசந்தன், பறைமேளக் கூத்து, வேடர் சமுதாயச் சடங்குகள், புலிக்கூத்து, தப்பு ஆட்டம், சிறுவர் கூத்தரங்குகள், மீளுருவாக்க கூத்துக்கள் போன்றனவும் இடம்பெறுவதோடு கலைஞர்களை கௌரவித்தல், அண்ணாவிமார்களை கௌரவம் செய்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுவதோடு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் அரங்க ஆற்றுகைகள் பாரம்பரிய கூத்துக்கள் அளிக்கை செய்யப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டிய விடயமாகும். அதுமட்டுமின்றி முக்கியத்துவம் மிக்க புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுவதோடு எமது தமிழர் பண்பாட்டின் பாரம்பரியக் கட்டிடக்கலைகள் என நோக்கப்படும் தோரண அமைப்பு, களரி அமைப்பு போன்றன கட்டமைக்கப்பட்டு காட்சிப் படுத்தப்படுவதோடு அதனைக்கட்டமைக்கும், செயற்படுத்தும் சக்திகளாக கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை சார் விரிவுரையாளர்கள்;  மாணவர்கள் அமைந்துள்ளனர்.

இத்தகைய முனைப்பான முன்னெடுப்புக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த வருடம் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களாக கொம்புமுறி விளையாட்டுசார் உபகரணங்கள், பாரம்பரிய வாத்தியங்கள், காட்சிப்படுத்தலோடு  ஆற்றுகை நிகழ்வுகளும் வழமை போலவே இடம் பெற்றன.

 

இவை இவ்வாறு இருக்க மாமாங்கத் திருவிழாவின் போது 'பட்டு எடுத்து வரும் நிகழ்வு'இடம் பெறுவது வழமை. இந் நிகழ்வு கடந்த வருடங்களில் நாதஸ்வரம், தவில், மேளம் போன்ற தாள வாத்தியங்களுடனும் வட்ட வர்ண குடைபிடித்தும் சம்பிரதாயமான முறையில் எடுத்து வரப்பட்டு திருவிழா இடம் பெறுவது அனைவரும் அறிந்த விடயம். இவ்வாறே மூலநாயகர் சுவாமி வீதி உலா இடம் nறுவதும் வழமையான செயற்பாடுதான்.

ஆனால் 2014ம் ஆண்டு இடம் பெற்ற திருவிழாவின் போது ஆக்கபூர்வமான மாற்றம் நிகழ்ந்தமை வரவேற்கத்தக்கதும்  பெருமை கொள்ளத்தக்கதுமான  பாராட்டக்கூடிய சுய சிந்தனைப்போக்கை  தூண்டக்கூடியதுமான விடயமாகும்.

அந்த வகையில் 2014ம்ஆண்டு இடம் பெற்ற திருவிழாச் சூழலில் 'பட்டு எடுத்து வரும் நிகழ்வு'இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது நாதஸ்வரம், தவில், மேளம் போன்ற தாள வாத்தியங்களுடன் இணைந்து மூன்றாவது கண் நண்பர்களும் பாரம்பரியக் கலைஞர்களும்  இணைந்து பாரம்பரிய பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க மத்தளம், சல்லாரி, உடுக்கை, சவணிக்கை, பறை, தப்பு, கொம்பு, றபான், பிரம்மதாளம், போன்ற தாள ஓசை ஒலிகளை ஒலிக்கச் செய்து பட்டு எடுத்து வரும் நிகழ்வு இடம் பெற்றது. 

இங்கு முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டிய விடயம் என்னவெனில் மூன்றாவது கண் நண்பர்களும், பாரம்பரியக் கலைஞர்களும், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் விடுகை வருட மாணவர்களாலும், விரிவுரையாளர்களாலும் மட்டுமே இவ்வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன. இங்கு ஆண், பெண் சமத்துவக் கொள்கையுடனும், அமைந்;த பால்நிலை ரீதியான சமத்துவம் முக்கியத்துவம் படுத்தப்பட்டு கூட்டாக இணைந்து இவ் ஆற்றுகை இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது இடம்பெற்ற இரண்டு முக்கிய விடயங்களை முன்வைக்க விளைகின்றேன். ஓன்று பால்நிலை மற்றையது சாதியம் போன்றன ஆகும்.

இந்நிகழ்வின் போது பெண்கள் இணைந்து பறை, சவணிக்கை, கொம்பு, பிரம்ம தாளம் வாசித்தமையானது மாமாங்கச் சூழலில் வருகை தந்திருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி இருந்தது. இவை இவ்வாறு முதலாவது விடயமாக இருக்க இரண்டாவது விடயமாக பாரம்பரிய இசை வாத்தியங்கள் வெறுமனே தனிய இசைக்கப்படாமல் ஏனைய நாதஸ்வரம், தவில் போன்ற செந்நெறி வாத்தியங்கள் என ஒரு சாராரால் கருதப்படும் வாத்தியங்களுடன் இணைந்து ஒலித்தமையும், இங்கு கவனம் கொள்ளத்தக்கது.

அதாவது பால்நிலை சமத்துவத்தினை நிலைநாட்டி வரும் மூன்றாவது கண் நண்பர்கள்  வேறுபாடு இன்றி ஆண், பெண் சகலரும் ஒன்றினைந்து செய்த செயற்பாடானது மிக  முக்கியமானது. இங்கு பால்நிலை சமத்துவக் கொள்கை நிலை நாட்டப்பட்டு இருந்தாலும் புறத்தே பெரும்  வாதப்பிரதிவாதங்களும் கோள்விகளும் கேலிகளும் கிண்டல்களும் எய்தப்பட்டமையும் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம். ஆனாலும் அவர்கள் அசராது நிமிர்ந்து நின்றனர். பால்ரீதியக் கருத்தினையும் நிலைப்பாட்டையும் இங்கு எம்மால் நோக்க முடிகின்றது.

மேலும் அடுத்த கட்ட மாற்றம் ஆக 'சாதியம்' என்ற நிலைப்பாடு தகர்த்தெறியப்பட்டமையும் குறிப்பிட வேண்டிய விடயமே. அதாவது பாரம்பரிய பண்பாட்டு வாத்தியங்கள் எப்போதுமே குறித்த மனித சமூகங்களை அடையாளப்படுத்தும் அல்லது அவர்களது வாழ்வியலோடு இணைந்தாக அமையும் தன்மை மிக்கது. இவ்வாறே மேற்குறித்த வாத்தியங்களும் அமையப் பெற்று இருக்கையில் செந்நெறி வாத்தியங்களுடன் இணையப்பெற்று ஒருமித்த ஓசைகளுடன் சுவாமி வீதி உலாவின் போது இவை இரண்டும் இணைந்து கீறீட்டுக் கிழித்து வானவெடிகள், பட்டாசு ஒலிகளையும் விட மேல்நோக்கித் தாக்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுவாமி உலா வருவதைக் கவனிப்புற்ற  பக்தர் கூட்டம் அனைத்தும் எழுப்பிய ஓசைகளை விட வானப் பட்டாசு வெடிகளையும் தாண்டி வாத்தியங்களின் ஓசை மேலோங்கி பரவசம் அடையச் செய்தது. அது மட்டுமின்றி சுவாமி உலா வருவதை காண வந்த மக்கள் கூட்டத்தினரில் சுவாமி உலாவின் போது சுவாமியை பார்த்த கண்களை விட வாத்திய முழக்கங்களை கவனித்த கண்களே அதிகமாகக் காணப்பட்டது. இவ்வாத்திய முழக்கம் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று இருந்தது. 

ஆயின் இங்கு சமூகங்களுக்கு இடையே காணப்படும் சமூக ஒதுக்கல்கள், புறக்கணிப்பு, பிரித்துப் பார்த்தல், அடிமைப்படுத்தல், ஒதுக்கப்படல் போன்ற தன்மை நீங்கி ஒரே மக்கள் ஒரே மனிதர் சமூகம் என்ற தன்மையை சுட்டிநின்றது. இந்நிகழ்வின் போது பிரயோகப்படுத்தப்பட்ட வாத்தியங்கள் சாதி, வர்க்கம், குல ரீதியான வேறுபாடு இன்றி இணைப்புச் செய்து இருந்தது. வாத்தியக் கருவிகளால் தகர்த் தெறியப்பட்ட சாதியம் பற்றிய கருத்தூன்றல் மேலும் வலுப்படுத்தப்பட்டது. ஏனைய சமூக கலாசார விழாக்களில் ஓரப்பார்வை மூலம் பார்க்கப்பட்ட பார்வைகள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டு இத்திருவிழாவில் ஒரே பார்வை மூலம் நோக்கப்பட்டது. இப்புரட்சிகர செயற்பாடு மாமாங்க திருவிழா வரலாற்றில் இடம்பெற்ற ஒரு வரலாற்று குறிப்பு ஆகும். ஆனாலும் சில மதவாதிகளும் சில மிதவாதிகளும் இப்புரட்சிகர செயற்பாட்டினை விமர்சித்திருந்தனர்.

'ஒரு பெண் பிள்ளை எப்படி பறையடிக்கலாம் அதுவும் கோயிலில் சுவாமி உலாவில் இத்தகைய வாத்தியங்கள் பாவிக்க முடியாது.'ஆகாது'இது இறந்த வீடுகளில் அடிப்பது எப்படி கோயில் திருவிழாவில் வாசிக்க முடியும் அமங்கலமான செயற்பாடு இது' என கண்டித்து இருந்தனர்.

இங்கு ஓர் விடயம் நாம் கவனம் கொள்ளத்தக்க விடயம் யாதெனில் எப்போதுமே இசையை எழுப்பும் வாத்தியங்கள் யாவும் 'வாசித்தல்' எனும் பதப் பிரயோகத்தில் அழைப்பதுதான் வழமை. ஆனால் இங்கு மதவாதிகள் 'வாசித்தல்'எனும் நாகரீகமான பதப்பிரயோகத்தினை விடுத்து 'அடித்தல்' எனும் பிரயோகத்தினை மிகக் கோரமான ஒலியில் வாதித்தனர். இங்கு அவர்களது சிறுமைத்தன்மை புலப்பட்டு இருக்க பறை, தப்பு போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப் பட்டமையானது தெய்வக் குற்றமாகவே கருதினர். தெய்வங்கள் கூட இவ்வாறான வாத்தியங்களையே வாசிக்கின்றமையும், ஏந்தி இருப்பதையும், இவ்வாறான வாத்திய இசைகளுக்கு அடிமையானவர்கள் என்பதையும் இவ்வாத்தியங்களை வாசிக்கும் சமூகங்கள் இடத்தே தான் தெய்வங்கள் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்ற வரலாறுகளை இவர்கள் மறந்துவிட்டார்களா அல்லது மறுத்துவிட்டார்களா என்பதுதான்?

ஆனாலும் மேற்குறித்த எதிர்ப்புக்கள் மத்தியிலும் செயற்பாட்டுத்தூண்டல்கள் காரணமாக கருத்தியல் கொள்கைகள் பார்வைப் பரிமாற்றத்திற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் நடைமுறை மாற்றத்திற்கும் உந்தி இட்டுச் சென்றிருக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கது.  

நிலுஜா ஜெகநாதன் 

நுண்கலைத்துறை 

உதவி விரிவுரையாளர்

கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119213/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.