Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பர்மா: சிறுபான்மை ரொகிங்யா மக்கள் மீது பாயும் பவுத்த பயங்கரவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பர்மா: சிறுபான்மை ரொகிங்யா மக்கள் மீது பாயும் பவுத்த பயங்கரவாதம்

ரூபன் சிவராஜா

ab89688a-85d8-4c74-a8ea-2790c1b78f2c1.jp

பர்மாவின் பெரும்பான்மை பவுத்த கடும்போக்கு சக்திகளால் அந்நாட்டின் வட பிராந்தியமான Rakhine மாநிலத்தில் வாழ்ந்துவரும் Rohingya (ரொகிங்யா) இன சிறுபான்மை மக்கள் மீது பாரிய படுகொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ரொகிங்யர்கள் தமக்கெனத் தனியான மொழியைக் கொண்டுள்ள இஸ்லாமியப் பின்னணியுடைய மக்கள் குழுமம் ஆவர்.

கிட்டத்தட்ட 55 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்டுள்ள பர்மாவில் 800 000 வரையான ரொகிங்யா இன மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் மொத்த மக்கட்தெகையில் 90 வீதமானவர்கள் பவுத்த மதப் பின்னணியுடையவர்கள். 2 வீதமானவர்கள் ரொகின்யர்கள். ஏனையோர் கிறிஸ்தவ மற்றும் இந்துமதப் பின்னணியுடையவர்களாவர்.

இம்மக்கள் மீதானதொரு இன அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று கூறுமளவிற்கு இன்றைய நாட்களில் இவ்விவகாரம் கவனக்குவிப்பினைப் பெற்றுள்ளது. அனைத்துலக ஊடகங்கள் இம்மக்கள் மீதான படுகொலைகளை வெளிப்படுத்துவதைத் திட்டமிட்டுத் தவிர்க்கின்ற போதும், சமூக ஊடகங்கள் மூலம் அவை தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

அண்மைய காலங்களில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகவுள்ள தென் கிழக்காசிய நாடுகளில், அம்மக்கள் மீதான வெறுப்புணர்வும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதென்ற அவதானிப்பு உள்ளது. இலங்கைத் தீவு மற்றும் பர்மா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கெதிரான பவுத்த பெருந்தேசியவாதத்தின் அணுகுமுறைகள் இந்த அவதானிப்பினை உறுதிப்படுத்தப் போதுமானவை.

சிறிலங்காவின் பவுத்த சிங்கள மேலாதிக்கம் எவ்வாறு தமிழர்கள் மீதான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டதோ, எத்தகு அணுகுமுறைகளைக் கையாண்டதோ அதனையொத்த வழிவகைகளில் பர்மாவின் பவுத்த மேலாதிக்கமும் ரொகிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளைக் கையாண்டு வந்துள்ளது.

1982ஆம் ஆண்டிலிருந்து இம்மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு வாக்குரிமையும் மறுக்கப்பட்ட நிலையில் பல்வேறு அடக்குமுறைகளுக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர். 1948 இல் பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறிய பின்னர் மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை நாடாளுமன்ற சட்டமூலம் ஒன்றின் மூலம் சிறிலங்கா அரச இயந்திரத்தினால் பறிக்கப்பட்டு, நாடற்ற மக்களாக மலையக தமிழர் ஆக்கப்பட்டமையை ஒத்த நிலைமையே ரொகிங்யா மக்களுக்கு 1982இல் நிகழ்ந்தது. 1962இல் பர்மாவில் இராணுவச் சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்ட காலத்திலிருந்து இம்மக்கள் குழுமத்தின் மீதான அடக்குமுறைகள் தொடங்கப்பட்டுவிட்டன.

பர்மாவின் அரசியலமைப்பில் இதுவரை இம்மக்களுக்கான அதிகாரபூர்வ அங்கீகரம் வழங்கப்படவில்லை. இவர்களின் மொழிக்கான அங்கீகாரமும் இல்லை. பர்மாவில் 135 வரையான வெவ்வேறு இனத்துவப் பின்னணியைக்கொண்ட மக்கள் குழுமங்களுக்கு (பவுத்தப் பின்னணியையுடைய இனக்குழுமங்கள்) அதிகாரபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரொகிங்ய இன மக்கள் தம்மை பர்மாவின் குடிகளாகக் கருதுகின்றனர், உணருகின்றனர். அந்நாட்டின் குடிமக்களாகவே தம்மை அடையாளப்படுத்த விரும்புகின்றனர். ஆனால் அவர்களை வந்தேறுகுடிகளாகச் சித்தரிப்பதிலேயே நாட்டின் ஆளும் வர்க்கமும், அரசியல் கட்சிகளும், பவுத்த மதவாத கடும்போக்கு சக்திகளும் (பவுத்த பிக்குகள் உட்பட) முனைப்புக்காட்டி வந்துள்ளன. பிரித்தானியக் கொலனித்துவக் காலப்பகுதியில் பங்களாதேசிலிருந்து பெருமெண்ணிக்கையிலான ரொகிங்யர்கள் அழைத்துவரப்பட்டதான பிரச்சாரம் பர்மாவில் வலுப்பெற்றுக் காணப்படுகின்றது. அவ்வாறான கருத்து பெரும்பான்மை மக்களிடத்திலும் வேரூன்றியுள்ளது.

ab89688a-85d8-4c74-a8ea-2790c1b78f2c4.jp

இவர்கள் மீதான அத்துமீறிய வன்முறைகளுக்கும், படுகொலைகளுக்கும் முதன்மையான காரணம் பவுத்த கடும்போக்கு தேசியத்தினால் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு மனநிலை. இஸ்லாமியப் பின்னணியைக் கொண்ட இம்மக்கள் குழுமம் மக்கட்தொகையில் துரிதமான வளர்ச்சியடைந்து, பர்மாவின் பெரும்பான்மை பவுத்த மதத்திற்கு அச்சுறுத்தலாக உருப்பெற்றுவிடும் என்ற பவுத்த தேசியவாதச் சிந்தனையின் அச்சத்திலிருந்து இவர்கள் மீதான வன்முறைகள் ஏவப்படுகின்றன. காலப்போக்கில் நாட்டின் ஆட்சியதிகாரத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிவிடுவார்களென்ற அச்சத்தின் விளைவு இதுவாகும். அவ்வாறான சூழலைத் தடுப்பதற்கு அவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவது என்ற மோசமானதும் பவுத்த மேலாதிக்கத்தின் இன அழிப்புச் சிந்தனையின் ஒரு வடிவமாகவுமே இதனைப் பார்க்க முடிகிறது.

இலங்கைத் தீவில் பவுத்த சிங்கள மேலாதிக்கம் எவ்வாறு ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் அண்மைக் காலமாக முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்தியதோ அதனையொத்த நிலைமைகளையும் அணுகுமுறைகளையும் பர்மாவின் பவுத்த மேலாதிக்க சிந்தனையிலும் அணுகுமுறைகளிலும் காண முடியும். திட்டமிட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட அடக்குமுறை ரொகிங்யா மக்கள் மீதும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்வது கடினமல்ல.

தற்போது கூர்மையடைந்துள்ள ரொகிங்ய மக்கள் மீதான வன்முறைகளும் படுகொலை நடவடிக்கைகளும், 2012இல் அங்கு வெடித்த வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாகும். 2012 ஜூன் மாதம் பவுத்த இளம்பெண் ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னணியில் 3 ரொகிங்ய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து ரொகிங்யர்களுக்கும் பவுத்த கடும்போக்காளர்களுக்குமிடையில் வன்முறைகள் வெடித்தன. உயிர்கள் பலியாகின. ரொகிங்ய மக்கள் பல்லாயிரக்கணக்கில் அவர்களது சொந்த வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர். அவர்களின் வீடுகள், சொத்துகள் பெருமளவில் எரியூட்டி நாசம் விளைவிக்கப்பட்டன.

140 000 வரையான மக்கள் சேறும் சகதியுமான அடிப்படை வசதிகளற்ற தற்காலிக அகதிமுகாம்களில் இன்றும் வாழ்ந்து வருவதான செய்திகள் வெளிவந்துள்ளன. இறுதி ஆண்டுகளில் 53 000 வரையானவர்கள் ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு நாட்டிலிருந்து வெளியேறி மலேசியா போன்ற அயல்நாடுகளில் தஞ்சம்புக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கடற் பயணங்களின் போது 200 பேர்வரை கடலில் மாண்டு போயினர் என்று ஐ.நாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'969' என்ற பெயரில் 2001ஆம் ஆண்டு, உருவாக்கம் பெற்ற பவுத்த கடும்போக்குவாத அரசியல் அமைப்பு ஒன்று இஸ்லாமிய எதிர்ப்பினைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. ரொகிங்ய மக்கள் மீது ஏவப்பட்டுள்ள வன்முறைப் படுகொலைகளுக்கு இந்த அமைப்பே தலைமை தாங்குகின்றது. சிறிலங்காவின் 'ஜாதிக ஹெல உறுமய' மற்றும் 2012இல் தோற்றம் பெற்ற 'பொதுபல சேனா' ஆகிய பவுத்த கடும்போக்கு இனவாத அமைப்புகளை ஒத்ததே பர்மாவின் '969' அமைப்பு.

இந்தக் கடும்போக்கு மதவாத அமைப்புகள், பவுத்த பெருந்தேசியவாதத்தை ஊட்டிவளர்க்கின்ற, அதற்குத் தீனிபோடுகின்ற பணியைச் செய்யும் அதேவேளை, பேரினவாத அரசினைத் தாங்கிப்பிடிக்கின்ற சக்திகளாகவும் விளங்குகின்றன. இரு நாட்டின் கடந்தகால வரலாற்றிலிருந்தும் சமகாலத்திலிருந்தும் இலகுவாக நாம் இதைப்புரிந்து கொள்ள முடியும். பவுத்த மதத்தினை அமைதியின், சமாதானத்தின், அன்புநெறியின் அடையாளமாக உலகம் தரிசிக்கிறது. ஆனால் அமைதியையும் அன்பினையும் போதித்த புத்தரின் பெயரால் பயங்கரவாதத்தையும், இன அழிப்பினையும் கட்டவிழ்த்துவிட்ட தென்கிழக்கு ஆசியாவின் இரு தேசங்களாக சிறிலங்காவும், பர்மாவும் உள்ளன.

அரசியல், பொருளாதார, சமூக, கல்வி நிலைகளில் மிகவும் பின்தங்கியுள்ள ரொங்கிய மக்கள் தமது இருப்பினை உறுதிசெய்வதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் வலுவற்றுள்ளனர். உலகத்தின் மிக மோசமான அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் முகம் கொடுக்கும் மக்களினங்களில் ரொகிங்யர்கள் உள்ளனர் என ஐ.நா கூறியுள்ளது.

வன்முறைகளைத் தடுப்பதற்கு பர்மிய அரசாங்கமோ, அதன் காவல்துறையோ முனைப்புக் காட்டவில்லை. பர்மாவின் ரொகிங்ய இன மக்களைப் பலவந்ததாக பங்களாதேஸ் நாட்டிற்கு அனுப்புவதில் முனைப்புக் கொண்டுள்ளது பர்மா. ஆனால் பங்களாதேஸ் அரசாங்கம் அம்மக்களைத் தனது குடிமக்களாக ஏற்றுத் திருப்பி அழைப்பதற்குத் தயாராக இல்லை.

மொழி- இனம்- நிலம் சார்ந்து தமிழர்களுக்கெதிரான பவுத்த சிங்கள மேலாதிக்க சிந்தனைக்குத் தீனிபோட்டு வந்த சிங்களம், 2009இல் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போரினை நடாத்தியதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததையடுத்து தமிழர் தரப்பிலிருந்து தமக்குச் சவாலான அச்சுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டதாகக் கருதுகிறது. மீண்டும் தமிழர் தரப்பினை எழுச்சி பெறாது வைத்திருக்கும் வகையில் செயற்படுகின்றது என்பதற்கு அப்பால், இலங்கை வாழ் முஸ்லிம்களின் மக்கட்தொகையின் துரிதப் பெருக்கம், அரசியல், பொருளாதார வளர்ச்சியைக் கண்டு அச்சமடைந்ததன் வெளிப்பாடே அவர்கள் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும். பொதுபல சேனாவின் வழிநடத்தலில், மகிந்த அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் 2013- 2014 காலப்பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் முடுக்கிவிடப்பட்டன.

பர்மாவில், முஸ்லிம் மக்கட்தொகை அதிகரிப்பு சார்ந்த அச்சம் காரணமாக, புத்த மதத்தையும் அம்மதத்தைப் பின்பற்றும் இனங்களையும் பாதுகாக்கும் நோக்குடனான அடிப்படைவாத புத்தபிக்குகளால் முன்மொழியப்பட்டு, நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் புதிய சட்டங்கள் உருவாக்கம் பெற்றுள்ளன. பவுத்த மதத்தினை அதிகாரபூர்வ அரச மதமாகவும், தனிச்சிங்களச் சட்டத்தினை மொழிக் கொள்கையாக சிறிலங்கா அரச இயந்திரம் அமுலாக்கம் செய்தமையை ஒத்த சட்டங்களாக பர்மாவின் இச்சட்டங்களைப் பார்க்க முடியும்.

பவுத்த மதப் பெண்கள், பவுத்தம் அல்லாத மதப் பின்னணியைக் கொண்ட ஆண்களைத் திருமணம் செய்வதைத் தடுக்கின்ற வகையிலான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மதமாற்றத்தினைச் சிக்கலுக்குள்ளாக்கும் வகையிலான இறுக்கமான சட்டங்களும் உள்ளன. மதத் தெரிவுச் சுதந்திரம், வாழ்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றை அப்பட்டமாக மீறும் இச்சட்டங்களுக்கெதிரான கடுமையான விமர்சனங்கள் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் மற்றும் இராஜதந்திரிகளிடம் 'ரொகிங்யர்' எனும் பதத்தினைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், மாறாக அம்மக்களைச் சுட்டுவதற்கு 'பெங்காலி' எனும் பதத்தினைப் பயன்படுத்துமாறு பர்மிய அரச தரப்பு பல சந்தர்ப்பங்களில் கோரியுள்ளது. அம்மக்களை அடையாளமிழக்கச் செய்யும் நோக்கத்தின் வெளிப்பாடாகவே இதனைப் புரிந்து கொள்ள முடியும். அத்தோடு அவ்வாறு அம்மக்களை அடையாளமற்ற, நாடற்ற மக்களாக ஆக்கும் கைங்கரியம் திட்டமிட்ட முறையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட அடக்குமுறை அவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது என்பதும் வெளிப்படையாகும்.

ஜனநாயகத்தின் குறியீடாக ஆக்கப்பட்டவரும், சமாதானத்திற்கான நோபல் விருது (1991) பெற்றவரும் பர்மாவின் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான Aung San Suu Kyi கூட, ரொகிங்யா மக்கள் மீதான வன்முறைக் கொடுமைகளுக்கெதிராகத் துணிந்து குரல் கொடுக்க முன்வரவில்லை. அதற்கான ஒரே காரணம் தேர்தல் அரசியல். இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தனக்கான வாக்கு வங்கி பாதித்துவிடுமென்பதே அவரின் மவுனத்திற்குரிய மூலகாரணி.

பவுத்த - இஸ்லாமிய முரண்பாடுகளைக் கூர்மை நிலையில் வைத்திருப்பதென்பது, அரசியல் பொருளாதார நலன்களைப் பெரும்பான்மை இனத்திற்குச் சாதகமான முறையில் பேணும் நோக்கினைக் கொண்டுள்ளது. அரசியல் நலன்களென்று நோக்குமிடத்து அவை தேசியவாதத்திற்குத் தீனிபோடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலை வளர்க்கப்படுகின்றது. இனவாத சிந்தனை மேலெழும் சூழல் வாக்குவங்கியை உறுதிப்படுத்த உதவுகின்றது. பொருளாதார நலன்களென்று நோக்குமிடத்து, வணிக முயற்சிகளில் மேலோங்கி நிற்கும் இஸ்லாமிய சமூகத்தினைப் பலவீனப்படுத்துவதன் மூலம் வணிகத்தைப் போட்டிநீக்கம் செய்தலும், அதனைத் தமது செழிப்பிற்கு சாதகமாக்குதலுமாகும்.

இராணுவச் சர்வாதிகார ஆட்சிக்கு முழுக்குப்போட்டு 'அசல் ஜனநாயகத்தை' நோக்கி பர்மா நகர்ந்து வருகின்றதென்ற பூரிப்பில் அனைத்துலக சமூகம் திளைத்திருக்கின்றது. 'ஜனநாயகத்திற்குத்' திரும்பியுள்ள பர்மிய ஆட்சியாளர்களை அனைத்துலக சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடிவரும் இன்றைய காலகட்டத்தில்தான், ரொகிங்ய மக்களைக் கருவறுக்கும் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டியது. ஜனநாயகம், நல்லாட்சி, கருத்துச்சுதந்திரம் என்பன அவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தினை இழந்து நீண்ட காலமாகிவிட்டது. இவை கவர்ச்சிமிக்க சொல்லாடல்களாக, சக்திமிக்க நாடுகளின் நலன்சார் அரசியல் மூலோபாயங்களுக்கு ஏற்றாற்போல் கையாளப்படும் சொல்லாடல்களாகி விட்டன என்பது கசப்பான யதார்த்தமென்றாகிவிட்டது.

ரொகிங்ய மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பாக பர்மாவின் 'ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய' அரசாங்கம் பாராமுகம் காட்டுகின்றது. அனைத்துலக நாடுகளும், அவற்றின் பலம்மிக்க ஊடகங்களும் அம்மக்கள் மீதான படுகொலைகளை இருட்டடிப்புச் செய்கின்றன.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=ab89688a-85d8-4c74-a8ea-2790c1b78f2c

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.