Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு சிறிசேன உறுதியளித்தது உண்மையா? - குமாரவடிவேல் குருபரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு சிறிசேன உறுதியளித்தது உண்மையா? -  குமாரவடிவேல் குருபரன்

ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு சிறிசேன உறுதியளித்தது உண்மையா? -  குமாரவடிவேல் குருபரன்

 

15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் திரு. சுமந்திரன் அவர்கள் முன்னர் பகிரங்கமாக அறியப்படாத செய்தி ஒன்றை வெளியிட்டார்.

மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒற்றையாட்சி அரசை மைத்ரிபால விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட இருந்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வார்த்தைப் பிரயோகம் கைவிடப்பட்டது என்றும் திரு. சுமந்திரன் அந்த விவாதத்தின்போது குறிப்பிட்டார். அவ்வாறாக நீக்காவிடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டி வரும் என்று தான் எச்சரித்திருந்ததாகவும் கூறினார். இதன் அடிப்படையில் கூட்டமைப்பிற்கும் சிறிசேனவுக்கும் இடையில ஒற்றையாட்சி அல்லாத ஒரு தீர்வை கண்டடைவதற்கான எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உருவானதாக கொள்ளப்படலாம் என திரு. சுமந்திரன் அவ்விவாதத்தில் தெரிவித்தார். சனாதிபதி சிறிசேன யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வந்தபோது இந்த விடயம் தொட்டே மாவை சேனாதிராஜா, தமக்கிடையில் இதயங்களின் சங்கமம் ஒன்று இருப்பதாக சுட்டிக் காட்டினார் என்றும் திரு சுமந்திரன் அந்த விவாதத்தில் தெரிவித்தார். (ஒற்றையாட்சி என்றோ சமஷ்டி என்றோ வெளிப்படையாக குறிப்பிடாத, ஆனால் சமஷ்டியை தனது உள்ளடக்கத்தில் கொண்டுள்ள அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளலாம் என சுமந்திரன் மேலும் அந்த விவாதத்தில் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் அலசுவோம்)

திரு. சுமந்திரன் மைத்ரிபால சிறிசேன ஒற்றையாட்சியைத் தாண்டி வருவார் என்று கூறுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அவர் சொல்வதில் உள்ள உண்மைத் தன்மையை அறிய சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கம் பெற்ற செயன்முறை தொடர்பாக நாம் சற்று விரிவாக அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஜனவரி 8, 2015 அன்று சிறிசேன வெற்றி பெறுவதை உறுதிப்படுத்திய முக்கிய தரப்புக்களில் ஒன்று ஜாதிக ஹெல உறுமய என்ற உண்மையைப் பலர் ஒத்துக்கொள்ள தயங்குகின்றனர். வடக்குக் கிழக்கில் சிறிசேனவுக்கு கிடைத்த தமிழ், முஸ்லிம் வாக்குகளை விட, மகிந்த ராஜபக்ச சிறிசேனவை விடக் கூடுதலாகப் பெற்றுக்கொண்ட சிங்கள பௌத்த வாக்குகள் ஒப்பீட்டளவில் குறைவானதாக இருந்திருக்காவிட்டால் சிறிசேன வெற்றி பெற்றிருக்க முடியாது. சிறிசேனவின் சிங்கள பௌத்த அடையாளத்தை சிங்கள பௌத்த வாக்காளர்களிடம் உறுதிப்படுத்துவதற்கு ஜாதிக ஹெல உறுமய மிகவும் அவசியமாக இருந்தது. சிறிசேனவின் ஊடகப் பிரிவுக்கு ஹெல உறுமயவினரே பொறுப்பாக இருந்தனர் என்பதனை தென்னிலங்கை ஊடகவியலாளர்களைக் கேட்டால் தெரியும்.

ஜாதிக ஹெல உறுமய சார்பில் சிறிசேனவின் அணியில் இருந்தவர்களில் முக்கியமானவர்  அசோக அபயகுணவர்த்தன. அசோகா ஒரு மொறட்டுவப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம், ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றில் முக்கிய செயற்பாட்டாளர். கடந்த அரசாங்கத்தில் சம்பிக்க ரணவக்க மின் சக்தி அமைச்சராக இருந்த போது அவரது சிரேஷ்ட ஆலோசகராக இருந்தவர். அசோக அபயகுணவர்த்தனவும் சட்டத்தரணி சிரால் லக்திலக்கவும் (மேல் மாகாண சபை உறுப்பினர், ஐ.தே.க சஜித் பிரேமதாச அணி) தான் ஹெல உறுமயவின் அத்துரேலிய ரத்னா தேரரையும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை சேர்ந்த (நிறைவேற்று அதிகார சனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரி வந்த) சோபித தேரரையும் ஒன்றிணைத்து பிவித்ரு ஹெடக் ஜாதிக சபாவ எனும் அமைப்பை உருவாக்கியவர்கள். பொது வேட்பாளர் ஒருவரை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்தியதில் இவ்வமைப்பு பெரும் பங்காற்றியது.

அபயகுணவர்த்தன சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதிய குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர். தற்போது அபயகுணவர்த்தன சனாதிபதி சிறிசேனவின் கீழ் நேரடியாக இயங்கும் Starategic Enterprise Management Agencyயினுடைய தற்போதைய தலைவராவார். சிரால் லக்திலக்க சனாதிபதி சிறிசேனவின் ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றுகிறார்.

அபயகுணவர்த்தன எவ்வாறு சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது பற்றி சிங்களத்தில் 'யுக பெரலிய' ('யுகத்தின் புரட்சி') என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது (‘Revolution of the Era’). அந்தப் புத்தகத்தில் திரு. சுமந்திரன் அவர்கள், திரு கஜேந்திரகுமாருடனான விவாதத்தில் கூறியிருந்த விடயம் தொடர்பாகவும் அசோக அபயகுணவர்த்தன பதிவு செய்துள்ளார்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த திரு. சுமந்திரன், 'ஒற்றையாட்சி' என்ற வார்த்தை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்தால் தமிழ்மக்களை ஒட்டுமொத்தமாக சிறிசேனவுக்கு வாக்களிக்க வைப்பது சிரமமாக இருக்கும் என்று எம்மிடம் எடுத்துக் கூறினார். அதன் காரணமாக பொது வாக்கெடுப்பு தேவைப்படுத்தும் எந்தவொரு அரசியலமைப்புப் பிரிவையும் சிறிசேன மாற்றமாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட்டது. இதன் மூலமாக 'ஒற்றையாட்சி' என்ற வாசகத்தை எம்மால் தந்திரோபாயமாக தேர்தல் விஞ்ஞாபனத்திற்குள் மறைத்து வைக்க முடிந்தது. தமிழ் மக்கள் சிறிசேனவுக்கு வாக்களிப்பது தொடர்பில் தொடர்ந்து எந்த பிரச்சனையும் தோன்றவில்லை. (பக்கம் 153, 154).

ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு சிறிசேன உறுதியளித்தது உண்மையா? -  குமாரவடிவேல் குருபரன்

பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை மட்டுமல்லாது பொதுசன வாக்கெடுப்பில் 50% மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால் மட்டுமே திருத்தப்படக்கூடிய பிரிவுகள் என்று சில அரசியலமைப்பில் உண்டு. அப்படியான பிரிவுகளில் அரசியலமைப்பின் பிரிவு 2ம் ஒன்று. (ஒற்றையாட்சியைப் பற்றியது). ஒற்றையாட்சி உட்பட இத்தகைய பொதுசன வாக்கெடுப்பு தேவைப்படக் கூடிய அரசியலமைப்புப் பிரிவுகள் எவற்றையும் மைத்திரிபால திருத்த மாட்டார் என்ற உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிறிசேன ஒற்றையாட்சி என்பதில் மாற்றம் கொண்டு வர மாட்டார் என்பதே அசோக அபயகுணவர்த்தனவின் வாதத்தின் சாரம். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒற்றையாட்சி வெளிப்படையாகக் குறிப்பிடப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய விமல் வீரவன்சவிடம் சம்பிக்க ரணவக்க இந்த மறைமுக ஏற்பாட்டை பற்றி எடுத்து விளக்கி அவரின் வாயை அடைத்ததாக அசோக அபயகுணவர்த்தன தனது நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே ஒற்றையாட்சியைப் பற்றி நேரடியாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பு இல்லாமை சிறிசேன ஒற்றையாட்சியை கைவிட்டு வரத் தயார் என்பதற்கு எடுத்துக்காட்டு என்று பொருள் கூறப்படுவதில் உண்மையில்லை.

மேலும் சிறிசேன தேர்தலுக்கு முன்னர் ஹெல உறுமயவோடு தனியாகப் போட்ட ஒப்பந்தத்தில் ஒற்றையாட்சியை மாற்ற மாட்டேன் என்று உறுதியளித்திருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். ஹெல உறுமய தேர்தலுக்கு பின்னும் சிறிசேனவுக்கு நெருக்கமாக இருக்கின்றது என்ற தகவலும் முக்கியமானது. உதாரணமாக அசோகா அபயகுணவர்த்தன தேர்தல் மறுசீரமைப்பு பற்றிய 20ஆவது திருத்தத்தை எழுதும் வரைவுக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். தமிழ், முஸ்லிம், மலையாக மக்களின் அரசியலுக்கு 20வது திருத்தம் சவாலாக உள்ளமை வியப்புக்குரியதல்ல. 20வது திருத்தம் இப்படித்தான் இருக்கும் என்பதை தேர்தலுக்கு முன்னரே திட்டமிட்டு விட்டார்கள் என்பது அசோகாவின் புத்தகத்தை வாசித்தால் தெரியும். 19ஆவது திருத்ததின் இறுதி வடிவத்தில் ஐ.தே.கவின் உள்ளீட்டைவிட ஹெல உறுமயவின் உள்ளீடுகளே கூடுதலானவை என்பதை தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெளிவாகக் கூறுகின்றனர். 19ஆவது திருத்தம் மூலம் மீள கொண்டுவரப்பட்டுள்ள அரசியலமைப்பு பேரவையில் சனாதிபதி சிறிசேனவின் பிரதிநிதியாக அவரை தனிப்பட்ட ரீதியில் தெரிந்தெடுத்தது சம்பிக்க ரணவக்கவே. இவை எல்லாம் சனாதிபதி சிறிசேன ஒற்றையாட்சியைத் தாண்டி வருவார் என்ற வாதத்திற்கு உரம் சேர்ப்பவையாக இல்லை. நிச்சயமாக ஜாதிக ஹெல உறுமயவிற்குத் தெரியாமல் கூட்டமைப்போடு சிறிசேன இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார் என்பதை மேற்கூறியவை நம்ப முடியாததாக ஆக்குகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒற்றையாட்சியை தாண்டி வருமா என்பதில் சந்தேகம் உண்டு. 2013இல் அக்கட்சி வைத்த நகல் அரசியலமைப்பு வரைபில் ஒற்றையாட்சியே தமது நிலைப்பாடு என தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு வாதத்திற்காக ரணில் சார்பு ஐ தே க இணங்குகிறது என்று வைத்துக் கொண்டாலும், சஜித் பிரேமதாச அணி ஒற்றையாட்சியைத் தாண்டி வருவதற்கு சாத்தியமில்லை. ஒற்றையாட்சியைத் தக்கவைப்பது சிங்கள பௌத்த அரசியல் கருத்து நிலைக்கு ஆதாரமானது. அதை அவர்கள் எளிதில் விட்டுக் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பது பட்டறிவிற்கு முரணானது.

இல்லாததை இருப்பதாகக் கூறி எதிர்ப்பர்ப்புக்களை உருவாக்குவது நேர்மையான அரசியல் அல்ல. அரசியலில் நேர்மையை எதிர்பார்க்கக் கூடாது என்ற தெருஞானத்தை கேள்விக்குட்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலமிது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவன் குறளை இறுகப் பற்றி இந்த தேர்தலை நாம் கடந்து வர வேண்டும்.

****

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=33469f8e-de83-40e4-a899-3abec74759aa

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.