Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா?

யதீந்திரா

இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா? 
 

 

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துருவாக்குனர்களில் (Political Opinion maker) ஒருவரும் இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருபவரும், இந்திய படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அதன் இராணுவ புலனாய்வு கட்டமைப்பிற்கு பொறுப்பாக இருந்தவருமான கேணல் ஹரிகரன், 'இந்தியாவால் மட்டும்தான் இலங்கையை காப்பாற்ற முடியும்' என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் மீதான போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, இலங்கை தொடர்பில் மீண்டும் சர்வதேச கவனம் குவிந்திருக்கிறது. மேலும் மேற்படி விசாரணை அறிக்கையை தொடர்ந்து, அது தொடர்ப்பில் உரையாற்றிய ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹூசையின் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு கலப்பு நீதிமன்ற (Hybrid) முறைமையை சிபார்சு செய்திருந்தமை இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில்தான் ஹரிகரன் இலங்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளிலிருந்து விடுபட வேண்டுமாயின் அதற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்னும் தொனியில் எழுதியிருக்கிறார்.

இந்தியாவால், இலங்கையை காப்பாற்ற முடியுமா? - இப்படியொரு கேள்விக்கே அவசியமில்லை. ஏனெனில் அது இந்தியாவால் நிச்சயம் முடியும். ஆனால் சிந்திக்கும் ஈழத் தமிழர் தரப்பின் கேள்வியோ வேறு - இந்தியாவினால், இலங்கையை காப்பாற்ற முடியும், ஆனால் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை இந்தியாவால் காப்பாற்ற முடியுமா? அதற்காக இந்தியா முயற்சிக்குமா? உண்மையில் இப்படியான கேள்விகளை இப்பத்தியாளர் கேட்கவில்லை. மாறாக தமிழ் புத்திஜீவிகள், அபிப்பிராய உருவாக்குனர்கள் போன்றோர் மத்தியில் இப்படியொரு கேள்வி உறைந்து கிடப்பதை நானறிவேன். தமிழ்த் தேசியவாதிகள் என்போர், இந்தியா தொடர்பில் எப்போதுமே நிதானமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும், இந்திய நலன்களுக்கு மாறாக தமிழர் தரப்பினர் சிந்திக்க முற்படக் கூடாது என்பதை அழுத்தி நீண்டகாலமாக வாதிட்டுவரும் என்போன்ற அபிப்பிராய உருவாக்குனர்களை நோக்கி இப்படியான கேள்விகள் எழும்போது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சங்கடங்களை சுமக்க நேரிடுகின்றது.

ஹரிகரன் எழுதிய கட்டுரை வெளிவந்து இரு தினங்களுக்கு பின்னர், நாடாளுமன்றத்தில் விசாரணை அறிக்கை தொடர்பில் விசேட உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கரமசிங்க, உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலம்தான் இந்த விடயங்கள் கையாளப்படுமென்றும், இதில் சர்வதேச தலையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அழுத்திக் குறிப்பிட்டிருந்தார். ரணில் இவ்வாறு குறிப்பிட்ட வேளையில் இது தொடர்பில் எதிர்கட்சித் தலைவரான சம்பந்தன் மௌனமாக இருந்தமை தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு உரையை ஆற்றுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி சென்று மோடியை சந்தித்திருந்தார் என்பதும் இந்த இடத்தில் அடிக்கோடிட்டு நோக்கத்தக்கது. மோடியுடனான சந்திப்பின் போதும் ரணில் ஒரு விடயத்தை அழுத்திக் குறிப்பிட்டதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதாவது, பிரேரணை இலங்கையை கட்டுப்படுத்தும் நோக்கிலானதாக இருக்கக் கூடாதென்று அவர் கூறியிருக்கின்றார். எனவே நிலைமைகளை உற்றுநோக்கும் போது தேசிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பிரேரணைக்குத்தான் இந்தியா ஆதரவு வழங்கவுள்ளது. ஆனால் அவ்வாறானதொரு பிரரேரணையின் வழியாக பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான நீதி உறுதிப்படுத்த வேண்டுமென்பதில் இந்தியா அக்கறை காண்பிக்குமா என்னும் கேள்விதான் துருத்திக் கொண்டு மேலெழுகின்றது.

இந்த இடத்தில் இந்தியாவின் கவலைகளை புறம்தள்ள முடியாதென்பதையும் இப்பத்தி விளங்கிக் கொள்கின்றது. இலங்கை தொடர்பான பிரேரணையின் வரைவானது, மனித உரிமைகள் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற சூழலில், வரைவின் நான்காவது பந்தி தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த பந்தியில்தான் பேரவையின் ஆணையாளர் பரிந்துரைத்திருக்கும் சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை விசாரணையில் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமென்னும் பரிந்துரை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் போது குறித்த பந்தி உள்ளடங்கலாக 14 பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கின்றது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம், விவாதத்தின் போது சீனா, ரஸ்யா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாதிட்டு உள்ளன. இவ்வாறானதொரு நிலையில் இந்தியா எவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பதே அனைவரது கரிசனையாகவும் இருக்கின்றது. அமெரிக்கா ஏற்கனவே உள்ளக பொறிமுறையொன்றிற்கு ஆதரவாக பேசியிருக்கின்ற நிலையில் இந்தியாவும் அதனோடு ஒத்துப்போவதற்கான வாய்ப்பே அதிகமாக காணப்படுகிறது.

இலங்கையின் இறுதி யுத்தத்தின் விளைவுகளை முன்வைத்து அமெரிக்கா இலங்கையின் மீது மென் அழுத்தங்களை பிரயோகிக்க முற்பட்ட போது, அப்போது அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்திருந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பிக்கு ஆதரவாக அபிப்பிராயங்களை உருவாக்க வல்லவர்கள், காங்கிரசின் இலங்கை தொடர்பான அணுகுமுறையை கடுமையாக விமர்சித்திருந்தனர். கொள்கைரீதியாக காங்கிரஸ் தவறிழைத்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இவ்வாறானதொரு சூழலில்தான் இந்தியாவில் ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ஆட்சிமாற்றம் ஒன்று நிகழவுள்ள சூழலில்தான் அமெரிக்காவின் மூன்றாவது பிரேரணை ஜெனிவாவில் விவாதத்திற்கு வந்தது. இதன் போது இந்தியா தன்னுடைய முன்னைய ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி பிரேரணைக்கான வாக்கெடுப்பில் பங்குகொள்ளாது தவிர்த்திருந்தது. இந்தியா இவ்வாறானதொரு முடிவை எடுத்திருந்த போது காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. இங்கு அடிக்கோடிட வேண்டிய விடயமோ வேறு. அதாவது, அமெரிக்காவின் மூன்றாவது பிரேரணையில்தான் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் விசாரணைக்கான பரிந்துரையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்தியா மேற்படி பிரேரணைக்கான வாக்கெடுப்பில் பங்குகொள்வதை தவிர்த்ததன் வாயிலாக குறித்த விசாரணைக்கான ஆதரவை வழங்கியிருக்கவில்லை. இந்த நிலையில் வெளிவந்திருக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலான பரிந்துரைகளில், பெரியளவில் ஆர்வம் காண்பிக்க வேண்டிய பொறுப்பும் இந்தியாவிற்கில்லாது போகிறது. இவ்வாறு பலவாறான விடயங்களை கருத்தில் கொண்டு இந்தியாவின் ஈடுபாடு தொடர்பில் விவாதிக்க முடியும்.

ஆனால், இவ்வாறான பல்வேறு விடயங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் உண்மையான கரிசனை என்ன என்னும் கேள்வி ஒன்றுதான் எஞ்சிக் கிடக்கின்றது. கேணல் ஹரிகரனின் கட்டுரையில் அவர் பிறிதொரு விடயத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது இந்தியாவால் ஆதரவளிக்கப்படும் 13வது திருத்தச் சட்டத்திற்கு ஏற்ப தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இத்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளிடம் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களைக் கையளிப்பதானது சிறிலங்காவின் அரசியலைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமான ஒன்றாகும். இதுதான் இலங்கையின் அரசியல் நிலைமை என்றால், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு கோரப்படும் வேண்டுகோள்களின் பொருள் என்ன? இந்த இடத்தில் பிறிதொரு கேள்வியை தவிர்த்துச் செல்ல முடியவில்லை. ஒருவேளை இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தால் இலங்கை தொடர்பான இந்திய அணுகுமுறை எவ்வாறிருந்திருக்கும்? தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் பார்வை எவ்வாறிருந்திருக்கும்? கேணல் ஹரிகரன் போன்றவர்கள் மகிந்தவின் இலங்கையை சர்வதேச அழுத்தத்திலிருந்து காப்பாற்றுவது தொடர்பில் பேசத் தலைப்பட்டிருப்பார்களா?

2004இல் இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தமை தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இந்தியாவின் மேற்படி முடிவு தமக்கு ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தாக குறிப்பிட்ட போதிலும், எவ்வாறிருந்த போதும் இந்தியா இப்படியொரு முடிவை எடுப்பதற்கு கட்டாயமாக ஒரு நல்ல காரணம் இருந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்போது சம்பந்தன் இது தொடர்பில் இந்தியாவுடன் தாம் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் இது பற்றி கலந்துரையாடினாரா, இல்லையா, என்பதற்கான பதிலை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா? 

தற்போது ஜெனிவாவை மையப்படுத்தி மிக முக்கியமான விவாதமொன்று இடம்பெற்று வருகிறது. தேர்தல் மேடைகளில் சர்வதேச விசாரணை தொடர்பில் பேசிய சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்க உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் பேசுகின்ற போது மௌனம் சாதிப்பதன் பொருள் என்ன? சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன், தமிழ் மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டிருந்தார். சம்பந்தன் மக்களுக்கு முன்னால் கூறுவது உண்மையாயின், இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கமை எதிர்க்க முடியாமல் அவரை தடுக்கும் காரணங்கள் என்ன? ஏற்கனவே கூட்டமைப்பில் அங்கம் வகித்துவரும் தமிழரசு கட்சியல்லாத ஏனைய மூன்று கட்சிகளும் உள்ளகபொறிமுறை ஒன்றில் நம்பிக்கை வைக்க முடியாதென்று அறிவித்திருக்கிற நிலையில், சம்பந்தன் அது தொடர்பில் தன்னுடைய தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துவதற்கு ஏன் தயங்குகின்றார்? இப்படியான பல கேள்விகள் சிந்திக்கும் தமிழ்த்தரப்பினர் மத்தியில் கேட்கப்படுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் நெருங்கிய உறவினைப் பேணிக் கொள்ளும் ஒருவராகவே இருக்கப் போகின்றார். அவ்வாறானதொரு பார்வையே புதுடில்லி வட்டாரத்திலும் காணப்படுகிறது. அதேவேளை ரணில் அமெரிக்காவினது நம்பிக்கையையும் பெற்ற ஒரு தலைவர். இந்த நிலையில் அவரது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவேண்டிய எந்தவொரு தேவையும் மேற்படி பிராந்திய மற்றும் உளகளாவிய சக்திகளுக்கு இல்லை. எனவே சர்வதேச அழுத்தங்கள் தீவிரப்படக்கூடிய புறச் சூழல் இல்லை. அது காலப்போக்கில் மெதுவாக இல்லாமலும் போய்விடலாம். ஆனால் அது மெதுவாக குறைந்து கொண்டு செல்கின்ற போது தமிழ் மக்களுக்கான நீதி என்பதும் பேசாப் பொருளாகிவிடும் ஆபத்து நிகழலாம்.

இந்த ஆபத்தை சம்பந்தன் விளங்கிக் கொண்டிருக்கிறாரா அல்லது தன்னால் இது தொடர்பில் எதனையும் செய்ய முடியாதென்று கருதுகிறாரா? அல்லது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல சம்பந்தனின் அரசியல் அணுகுமுறையிலுள்ள குறைபாடுகளின் விளைவுகளின் விளைவுகளா இவை? அல்லது சம்பந்தன் தன்னுடைய பிரதிநிதிகளாக சர்வதேச அரங்கிற்கு அனுப்பியவர்கள் சம்பந்தன் எதிர்பார்த்தது போன்று செயற்படவில்லையா? அல்லது சம்பந்தன், அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இழந்துவிட்டாரா? அல்லது கயிறை அதிகம் விட்டுவிட்டு தற்போது அவர்களை இழுத்துப்பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றாரா? அல்லது அனைத்தையும் சம்பந்தன் தீர்மானிக்க அதற்கான பழிகளை ஏனையவர்கள் சுமக்கின்றனரா? இப்படி பல கேள்விகள் இன்றை சூழலை முன்னிறுத்தி எழுப்பப்படுகின்றன.

ஜெனிவாவிற்கும் அமெரிக்காவிற்கும் செல்லும் கூட்டமைப்பின் தலைவர்கள் அருகில் இருக்கும் இந்தியாவிற்கு இன்னும் செல்லவில்லை. இது கூட நிலைமைகள் சம்பந்தனின் கட்டுக்குள் இல்லை என்பதற்கான உதாரணமா? இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் இலங்கையின் உள்ளக நிலைமைகளோடு பெரிதும் தொடர்புபட்டிருக்கிறது. இதற்கு இலங்கையின் அமைவிடமே காரணம். எனவே இலங்கைக்குள்ளும், இலங்கையை மையப்படுத்தியும் நிகழ்கின்ற விடயங்கள் அனைத்தையும் இந்தியா உன்னிப்பாக அவதானிக்கும். பொருத்தமான சந்தர்ப்பத்தில் தன்னுடைய தலையீட்டைச் செய்யும். இது தெற்காசிய அரசியலில் தவிர்த்துச் செல்ல முடியாதவொரு அரசியல் யதார்த்தமாகும். எனவே அருகில் இருக்கும் இந்தியாவை விட்டுவிட்டு ஜெனிவாவில் மட்டும் முகாமிடுவதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. கிடைக்கும் தகவல்களின்படி இந்தியா இறுதி தருணத்தில்தான் பிரேரணை தொடர்பில் தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்தும். ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச தலையீடுகளை நிராகரித்திருக்கின்ற நிலையில் அவ்வாறானதொரு முடிவைத்தான் இந்தியாவும் ஆதரிக்கக் கூடிய நிலைமை காணப்படுகிறது. கலப்பு நீதிமன்ற முறைமைக்கான கோரிக்கை நீக்கப்பட்ட, ஓர் உள்ளக பொறிமுறை ஒன்றுதான் இறுதிப் பிரேரணையாக ஏற்றுக் கொள்ளப்படுமாக இருந்தால், சம்பந்தன் அதனை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வாரா அல்லது நிராகரித்து செயற்படுவாரா? ஒருவேளை சம்பந்தன் அனைத்திற்கும் உடன்பட்டுச் செல்லும் முடிவை எடுப்பாராயின் அதன் இறுதி அறுவடையாக அவர் எதனை அடைய முற்படுகின்றார்?

சம்பந்தன் தேர்தல் காலத்தில் ஒரு விடயத்தை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். அதாவது, 2016இல் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அப்படியொரு நல்ல தீர்விற்காகத்தான் அவர் ரணில் விக்கரமசிங்கவின் முன்னால் அமைதி காக்கின்றாரா? ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள், பிரச்சனைகளை கையாளும் வகையிலான தீர்வு ஒன்றிக்காகவே தன்னுடைய அரசாங்கம் முயற்சிப்பதாக ரணில் குறிப்பிட்டிருக்கின்றார். அதனையும் புதுடில்லியில் வைத்துத்தான் அவர் கூறியிருக்கின்றார். ஆனால் இன்றுவரை புதுடில்லியில் வைத்து நாங்கள் தமிழ் மக்களின் சார்பில் எதனை எதிர்பார்க்கிறோம், இந்தியாவிடமிருந்து எதனை எதிர்பார்க்கிறோம் என்பதை ஆணித்தரமான சொல்லும் ஆற்றல் இன்னும் தமிழ் மிதவாத தலைமைகளுக்கு வரவில்லை.

இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய ராஜதந்திரிகளை சந்தித்த அனுபவம் பற்றி ஒருவர் குறிப்பிடும் போது,  எங்களுடைய மிதவாத தலைவர்களின் ஆளுமை தொடர்பில் இவ்வாறு கூறினாராம்: எங்களுடன் பேசுகின்ற போது, உங்களின் தலைவர்கள் தங்களின் தேவை என்ன என்பதை எங்களிடம் சொல்வதை விட்டுவிட்டு, ‘ஏதாவது பாத்துச் செய்யுங்கள்’ (Do something) என்கின்றனர். அப்படியல்ல நீங்கள் எங்களிடம் எதனை எதிர்பார்க்கின்றீர்கள் என்று தெளிவாக குறிப்பிட்டால்தான், நாங்கள் எங்களின் எல்லையை உங்களுக்குச் சொல்லலாம் என்று நாங்கள் திருப்பிச் சொன்னாலோ, உங்களின் தலைவர்களோ மீண்டும், ‘நீங்கள் ஏதாவது பார்த்துச் செய்யுங்கள்’ என்றே கூறுவர். இந்த ஏதாவது பார்த்துச் செய்யுங்கள் என்பதுதான் இனியும் தொடரப்போகின்றது என்றால், இறுதியாக இந்தியாவும், அமெரிக்காவும் ஏதாவது பார்த்துச் செய்யும் (Do something). அவர்கள் செய்யும்போது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வும் நிச்சயமாக கிடைக்கும். ஓருவேளை அந்தத் தீர்வு 2016 இற்குள்ளேயே கிடைக்கலாம். 

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=9d53dffe-0a8b-4f9d-ae5f-e1b4f9934fbc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.