Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி நாவல் பற்றிய என்பார்வை - எம். ஜெயராமசர்மா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி நாவல் பற்றிய என்பார்வை - எம். ஜெயராமசர்மா … அவுஸ்த்திரேலியா

 

Book Photo 1(1)

 

வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையானது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்றுவிடும்.பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால்” வன்னி ‘ நாவல் அப்படியானதன்று.தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும்.


மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் புகுத்தப் பட்டிருக் கின்றன. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் ஒருபக்கச் சார்பானதாகும்.


வன்னி நாவலையும் தமிழரின் மஹாவம்சமாகவே நான் பார்க்கின்றேன். ஆனால் பழைய மஹாவம்சத்துக்கும் இதற்கும் பாரியவேறுபாடு.வன்னி நாவல் உண்மையை சொல்லி நிற்கிறது.ஊத்தைகளையும் காட்டுகிறது.உலுத்தர்களை யும் காட்டுகிறது.எல்லாவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறது.இது இந்த நாவ லின் சிறப்பு எனலாம்.


நாவலின் முக்கிய பாத்திரம் மேஜர் சிவகாமி.அந்தச் சிவகாமியே எம்மை எல்லாம் காடு, மேடு, போர்க்களம் , கொழும்பு , என்று கூட்டிச்செல்வதோடு … குடும்பம் , மகிழ்ச்சி , இன்பம் , துன்பம் , பிரிவு , வஞ்சகம் , சூழ்ச்சி , நட்பு , நம்பிக்கைத் துரோகம் , மிருகத்தனம் , மனிதத்தன்மை , இவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லுகின்றார்.


ஆயிலடிக் கிராமம் அடிமனத்தில் தங்கியே விட்டது.அந்தக்கிராமம் இருந்த செழுமையும் , சிறப்பும் , சீரழிந்துபோனதைச் சிவகாமியின் வாயிலாக அறி கின்ற பொழுது போர்க்காலச் சூழலில் வாழ்ந்த ஒவ்வொரு தமிழனுக்கும் இது விளங்கும்.அவர்கள் வாழ்விடங்களும் பட்டபாடுகளும் நினைவுக்கு வந்தே தீரும்.


தொடர்ந்து தமிழீழ மண்ணில் வாழ்ந்தவர்களுக்கு .. இந்த நாவல் சொல்லுவது அத்தனையும் உண்மையென்று நிச்சயம் தெரியும். மற்றவர் களுக்கு இது ஒரு மர்ம நாவல் போன்று தோன்றலாம்.


எத்தனயோ கருக்கள் இருக்க இந்தக்கருவை ஏன் இதை எழுதிய ஆசிரியர் தேர்ந்தெடுத்தார் என்பதை நோக்குதலும் முக்கியமானதல்லவா ? எழுதியவர் புகழ்பூத்த கல்லூரியன் ஆசியராக, அதிபராக , விளங்கியவர். அதேவேளை சாத்வீகவழியிலும் தன்னை இணைத்துக்கொண்டவர்.அப்படிப்பட்டவர் இப்படி ஒரு நாவலை ஏன் எழுதினார்? அங்குதான் காலத்தின் தேவை முன்வந்து நிற்கிறது எனலாம்.


சாம, பேத , தான , தண்டம் என்று மூன்று வழிகள் இருப்பதாகச் சொல்லிக்கொள்வோம்.இதில் கடைசியாகவே தண்டத்தை நாடவேண்டும் என்றும் கருத்துண்டு.முடியாத கட்டத்தில் எடுப்பதுதான் தண்டம் என்பது புரிகிறதல்லவா? அந்தத் தண்டம் ஏந்திய கதைதான் ஈழப் போராட்டம். சாத்வீக நிலையையும் பார்த்தவர் ஆசிரியர். ஆசிரியராக இருக்கும் பொழுதே அவரும் மாணவர்களை நல்ல நிலைக்குக் கொண்டுவர இந்தவழிகளையெல்லாம் பிர யோகித்துப் பார்த்திருக்கலாம்தானே! திருந்த முடியாத மாணவர்களை வழிப் படுத்த அவரும் கடைசியில் தண்டத்தையே நாடியும் இருக்கலாம் அல்லவா?
அதே போலத்தான் போராட்டங்களும் என்றகருத்து அவர் மனத்தில் ஏற் பட்டிருக்கலாம். அதன் காரணத்தால் வன்னி நாவல் கரு அவர்மனத்தில் குடி கொண்டிருக்கும் என்று எண்ணுவதற்குமிடமுண்டுதானே!


தமிழீழ மண்ணில் இருந்த இயக்கங்கள் பலவற்றையும் அக்குவேறு ஆணிவேறாக காட்டுவது முக்கியமாகும்.எந்தவொரு இயக்கம் சார்பாகவும் நிற்காமல் சரியான நிலையில் யார் போகிறார்கள் என்பதை அச்சொட்டாக இந்த நாவலில் காட்டியிருப்பது நயத்தகு நாகரிகத்தையே காட்டி நிற்கிறது.


சிங்களவர்கள் என்றால் அவர்களில் நலவர்களே கிடையாது.யாவருமே வன்முறையாளர்களே.தயவு , தாட்சண்யம் , ஈவு , இரக்கம் , என்பன அவர்க ளிடத்து கடுகளவேனும் கிடையாது என்றுதான் எங்களில் பெரும்பாலானவர் கள் இன்னமும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.ஆனால் அவர்களும் உணர்ச்சி உள்ளவர்கள்.அன்புள்ளம் மிக்கவர்கள்.இரக்ககுணம் கொண்டவர்கள் என்பதை யாவரும் அறிய வேண்டும் என்னும் பரந்த எண்ணம் வன்னி நாவல் ஆசிரியரிடம் வியாபித்தே நிற்கிறது.


1983 ஆடிக்கலவரத்தில் அகப்பட்ட சிவகாமியின் சித்தப்பா குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஆரியரத்னா என்னும் சிங்கள அதிகாரி பட்ட அல்ல ல்களும், அவரின் மனிதாபிமானமும் நாவலில் காட்டப்படும் விதம் மிகவும் குறிப்பிடப் படவேண்டிய அம்சம் எனலாம்.


மேஜர் சிவகாமி காயம்பட்டு வைத்தியசாலை யில் இருக்கும்பொழுது அவளை சந்திக்கும் கேணல் செனவிரத்னவும் மனிதாபிமானம் மிக்க சிங்களவராக இந்த நாவலில் காட்டி சிங்களவர்களின் நல்ல பக்கங்களையும் ஆசிரியர் காட்டமுனைகின்றார்.


அதே நேரம் தமிழின அழிப்பில் ஈவு இரக்கம் இன்றிச் செயற்பட்ட .. சிங்கள அரசியல் வாதிகளையும் , இராணுவ அதிகாரிகளையும் , சுட்டிக் காட்ட மறக்கவில்லை. அவர்களது கபட எண்ணங்களையெல்லாம் தோலு ரித்துக் காட்டி இருக்கின்றார் நாவலின் ஆசிரியர்.


இயக்கம் போராட்டம் பற்றியெல்லாம் எல்லோரும் ஆதரித்தார்களோ என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது.இது தொடர்ந்து காணப்படும் நிலைபோலவே தென்படுகிறது.தங்களது பிள்ளைகளை விருப்பத்துடன் இயக் கத்துக்கு விட எவருமே முன்வரவில்லை.சூழ்நிலை காரணமாகச் சிலபெற் றோர் மனத்தில் விருப்பமின்றி வாய்மூடி இருந்தார்கள் என்பது இந்த நாவலின் வாயிலாக வெளிப்படுத்தபடும் செய்தியாகும்.இதுதான் யதார்த்தமான யாழ் பெற்றோரின் நிலையாக இருந்தது என்பதை நாவலில் காட்டும் துணிவு இந்த ஆசிரியருக்கு வந்தமைக்கு அவரைக் கட்டாயம் பாராட்டவே வேண்டும்.


யாழ் மண்ணிலே வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத பல சேதிகளை இந்த நாவல் தெரிவித்து நிற்கிறது.இயக்கங்கள் சண்டை பிடிக் கின்றன என்பது மட்டுமே தெரியும். அந்தச் சண்டைகளின் பின்னால் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் வன்னி நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரும் போருக்குள் பொதிந்திருக்கும் பொறிமுறைகளைப் பார்த்து பிரமித்தே விடுவார்கள். எங்கள் தமிழ்ப் பிள்ளைகளா இப்படியெல்லாம் செய்தார்கள் என்று திகைத்து நிற்பார்கள்.அந்த அளவுக்கு போர்பற்றிய ஒவ்வொரு நடவடிக்கைகளையும்
உன்னிப்பாகக் கவனித்து அதைப்பற்றிய அத்தனை விபரங்களையும் புள்ளி விபரமாகத் தந்திருக்கிறது வன்னிநாவல்.


இயக்கங்களின் முரண்பாடுகள் , இயக்கங்களில் காணப்பட்ட பதவி ஆசைகள் , தலைமைக்கு எதிரான சதிராட்டங்கள் , காட்டிக்கொடுப்புகள் , இப்படிபல விஷயங்களையெல்லாம் தாராளமாக வன்னி நாவல் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.


யாழ்மண்ணில் குறிப்பாக வன்னியில் வாழ்ந்த மக்களை மையமாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டதாக இருந்தாலும் கூட இந்த நாவலில் சொல்லப்படும் … இடப்பெயர்வு , இராணுவக்கெடுபிடி , இராணுவத்தினரின் அரக்கத்தனம் , மக்களின் இரத்தக்கண்ணீர், யாவும் எல்லோருக்கும் பொருத்த மானதேயாகும்.கதையின் களம் மாறினாலும் கதையின் கருக்கள் மக்களைப் பற்றியதே.


வீரம் செறிந்த வன்னி மண்ணில் விவேகம் செறிந்த மேஜர் சிவகாமியை த்தேர்ந்தெடுத்து கதையின் நாயகியாக்கிய உத்தி மிகவும் அற்புதம்.போரின் உக்கிரம் வெளிப்பட்டதும் வன்னியில்த்தான்.போரின் முடிவு அல்ல அழிவு ஏற்பட்டதும் அதே வன்னியில்த்தான்.எனவே நாவலுக்கு ” வன்னி ” எனப் பெயரிட்டதும் மிகப் பொருத்தம் என்று கருதுகின்றேன்.


சிவகாமி என்னும் பாத்திரமே கதையை நகர்த்திச் செல்வதாக நாவல் புனையப்பட்டதும் சிறப்பாக இருக்கிறது.சிவகாமியிடம் வருகின்ற பிள்ளை களுக்குக் கதைசொல்லுவதுபோல எங்களுக்கே கதையைக் காட்டியிருப்பதும் நல்லதோர் உத்தியாகும்.


சம்பவங்களை அடுக்கிக் கொண்டு போகும் வேளை அலுப்புத் தட்டிவிடாமல் இருப்பதற்காக கதை நடைபெறும் இடங்களின் இயற்கைக் காட்சிகளையும், காட்டுப்பகுதிகளில் ஏற்படும் விலங்குகளின் தன்மைகளையும் , இணைத்துக் காட்டியிருக்கும் விதம் அருமையாகவிருக்கிறது.


கல்கியின் அலையோசை நாவலில் தாரணி என்றொரு பாத்திரம் வரும். அந்த நாவலை வாசித்து ஏறக்குறைய நாற்பது வருடங்கள் இருக்கும். ஆனால் இன்னும் அந்தத் தாரணி பாத்திரம் மனத்தில் ஒட்டியே இருக்கிறது.


” வன்னி ” நாவலும் அதே நினைப்பில்த்தான் இருக்கிறது. இதில் வரும் மேஜர் சிவகாமியும் என் நெஞ்சில் புகுந்துவிட்டாள்.தாரணியின் பக்கத்தில் சிவகாமியும் இருக்கப் போகிறாள்.சிவகாமி என்னும் பாத்திரம் காலத்தால் பேசப்படும் என்பது நிச்சயமே. அந்தப்பாத்திரத்தை உருவாக்கிய ஆசியருக்கு
தமிழ் மக்கள் பெரும்பரிசினை அளிக்கவேண்டும் என்பது எனது பேரவா ஆகும்.வெற்றிக்குரிய பாத்திரத்தை அமைத்த திரு கதிர் பாலசுந்தரம் அவர் களை ” வன்னிதந்த வெற்றி வீரன் ” என்று அழைப்பதே பொருத்தம் என்று எண்ணுகின்றேன்.


வன்னி ராச நாச்சியார் பரம்பரையைச் சிவகாமி காப்பாற்றுவாளோ ? அல்லது களுபண்டாவைத் திருமணம் செய்து .. தமிழ்த்துரோகியாகி விடு வாளோ என்னும் ஏக்கம் எல்லோர்மனத்திலும் இருந்தது. ஒவ்வொருகணமும் இதோ திருமணம் இதோ திருமணம் என்று எல்லோரையும் ஏங்கவைத்து விட்டு இறுதியில் யாருமே எதிர்பார்க்காத முடிவை அதாவாது காமுகனான கேணல் ரணவீராவைத் துவம்சம் செய்து தன்னையும் மாய்த்து வீரப்பரம்பரை யை வெளிச்சம் போட்டுக்காட்டவைத்த சிவகாமியை எமக்கு முன்னிறுத்தும் பொழுதுதான் ” வன்னி ” நாவலின் உச்சம் வெளிப்பட்டு நிற்கிறது எனலாம்.


இந்த நாவலை வாசித்துவிட்டு என்னால் நித்திரைக்கே போகமுடியவில்லை. படுக்கப் போனால் சிவகாமிதான் கண்முன்னே வந்து நிற்கிறாள்.அவளின் அப்பா, அம்மா, சகோதரர்கள், வெள்ளவத்தையில் காரோடு எரிக்கப்பட்டகாட்சி இவைதான் வந்து நிற்கின்றன.


இதற்கெல்லாம் காரணகர்த்தா யார் தெரியுமா ? அவர்தான் ” வன்னி ” நாவலைத் தந்த திரு கதிர் பாலசுந்தரம் அவர்கள்.இந்த நாவலைப் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் இந்த நாவலின் பெறுமதி யாவருக்கும் தெரியவரும்.


புலம்பெயர்ந்தாலும் புலனெல்லாம் தமிழாயும் தமிழீழமாயும் வாழுகின்ற பெரியவர் திரு கதிர் பாலசுந்தரம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.


அவரின் தணியாத எழுத்தார்வத்தால் சாகாவரம்மிக்க பல நூல்களை ஆக்கி எமக்கெல்லாம் அளிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசையாகும். அவரின் மிகச்சிறந்த படைப்பான ” வன்னி ” நாவலை ஒவ்வொரு தமிழனும் வாங்கி வாசித்துப் பக்குவப் படுதுவதே நமது தலையாய் கடமை என எண்ணு கின்றேன்.

http://puthu.thinnai.com/?p=31079

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.