Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்?  உள்ளக ஆக்கிரமிப்பைத் தடுக்க யார் உளர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்?  உள்ளக ஆக்கிரமிப்பைத் தடுக்க யார் உளர்?

தயாளன்

யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்?  உள்ளக ஆக்கிரமிப்பைத் தடுக்க யார் உளர்?
 

 

கடந்த 30 ஆம் திகதி மாற்றம் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் 'நிலமும் நாங்களும்' எனும் தலைப்பிலான ஆய்வறிக்கையின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் வடக்கு முதல்வரும் கலந்து கொண்டிருந்தார். மீள்குடியேற்றத்துக்கு தடையாகவுள்ள விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் பிரித்தானிய மனித உரிமைகள் குழு 'ஐயமின்றி எம்மால் ஒன்று கூறமுடியும். அரசாங்கமானது தமிழ் மக்களின் வாழ்விடங்களில் சிங்கள மக்களைக் குடியிருத்த முனைந்துள்ளது' எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டதாக முதல்வர் கூறினார்.

அத்துடன் '1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இலங்கையில் அரசியல் வன்முறை என்ற நூலில் பேராசிரியர் காமினி சமரநாயக்கா என்பவர் வடமாகாணத்தைச் சுற்றி 2 இலட்சம் குடியானவர்களைக் குடியேற்றுவது என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட முடிவு. அதனால் வடக்கைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வலயத்தை உண்டாக்க வேண்டும் என்றே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்' என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

'காணிகளை இராணுவம் கைப்பற்றி வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாக கரவாகக் கடையப்பட்ட கருத்துகளின் கடை நிலையாகவே நான் அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கிறேன். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரச குடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன' எனக் குறிப்பிட்ட முதல்வர் திருமலை அம்பாறை மாவட்டங்களில் இன விகிதாசாரம் 1911இற்குப் பின் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதையும் விளக்கினார்.

சிங்களக் குடியேற்றம் அம்பாறையில் ஆரம்பித்த போது அதனை நடைமுறைப்படுத்திய அப்போதைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா அங்கு ஓர் அரச மரத்தை நாட்டினார். தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில் 'இங்கு நடப்படும் இந்தக் கன்று பெரு விருட்சமாகும் போது உங்களைத் தவிர வேறு யாரும் இங்கு இருக்கக் கூடாது' என்றார். அவரது கருத்து - வேண்டுகோள் - உத்தரவு 100 வீதம் அமுல்படுத்தப்பட்டது. தீகவாவி விகாரையின் மணியொலி கேட்கும் இடம் முழுவதும் புனித பூமியே. அப்பகுதியில் வேறு யாரும் குடியிருக்க முடியாது என்ற எழுத்து மூலமல்லாத கொள்கை அமுல்படுத்தப்பட்டது. சிங்கள மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது கிங்கினியாகல சீனித் தொழிற்சாலையில் பணியாற்றும் 150 தமிழர்கள் அடித்தும் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டனர். காலப் போக்கில் உயர்பாதுகாப்பு வலயம் மகாவலித்திட்டம் என்றும் அபிவிருத்தித் திட்டங்கள் எனவும் பல்வேறு வகையில் தமிழரின் நிலங்கள் பறிக்கப்பட்டன. இதற்குச் சமாந்தரமாக இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் உள்ளக ஆக்கிரமிப்பு நடைபெற்று வருவதை கவனத்திற்கு கொண்டு வந்தேயாக வேண்டியுள்ளது. இதுவும் தமிழரின் சோகம்.

அடுத்தவனுடைய இழப்பு, சோகம், வலி என்பதைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் இந்த உள்ளக ஆக்கிரமிப்பு பெரும்பாலும் ஆக்கிரமிப்பாளரின் துணையுடன் தான் மேற்கொள்ளப்படுகிறது. சில அரச உத்தியோகத்தர்கள் நேரடியாகவும் ஆட்சி மாற்றத்துக்கு முன்பிருந்த அரசியல்வாதிகள் மறைமுகமாகவும் இந்த ஆக்கிரமிப்புக்குத் துணைபோயுள்ளனர். இவர்களின் பிரதான இலக்காக மாவீரர்கள் முன்னாள் போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் தான் இருந்து வருகின்றனர். எதிர்த்துக் குரலெழுப்ப முடியாத நிலை இவர்களுக்கு இருப்பதால் 'தட்டிக் கேட்க ஆளில்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்' என்றவாறு நிலைமை போகிறது. இவர்கள் தமது குடும்பத்தினருக்காகக் கொள்வனவு செய்த காணிகள் முதல் இலக்காக உள்ளன. இவர்களின் பரம்பரைக் காணிகளும் இவ்வாறான வேட்டைக்குத் தப்ப முடியாது போயுள்ளன. இவ் வேட்டையின் போது ஒரு உயிரும் பலியாகியமை பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

(1). கிளிநொச்சி கணேசபுரம் வீதியில் தினேஷ் மாஸ்டர் அல்லது வெடி தினேஷ் என்றழைக்கப்படும் போராளி ஒரு காணியை வாங்கினார். 1983 ஆம் ஆண்டு காலத்தில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர் இப் போராளி. தனது சகோதரர் நண்பர்களின் உதவியுடன் 12 இலட்சம் ரூபாவுக்கு இக் காணியை வாங்கினார். இதனை விற்றவர் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மச்சேந்திரராசா. இக் காணியில் ஒரு மாடிவீட்டைக் கட்டினார் தினேஷ் மாஸ்டர். அவர் இறுதிப் போரில் மாவீரர் ஆனார். மீள்குடியமர்வின் போது தினேஷ் மாஸ்டரின் மாமி இவ் வீட்டில் குடியேறினார். பொலிஸாரின் துணையுடன் சென்ற மச்சேந்திரராசா தினேஷின் மாமியாரை விரட்டிவிட்டு வீட்டை அபகரித்துள்ளார்.

'நான் தினேஷ் மாஸ்டருக்கு இந்தக் காணியை விற்கவேயில்லை வீடு கட்டியதும் எனது சொந்தக் காசில் தான்' என்கிறார் மச்சேந்திரராசா. இயல்பிலேயே மகா கருமியான இவர் இந்த வீட்டை இவ்வளவு காசு செலவு செய்து கட்டினாரா? என்று உண்மை தெரிந்த கணேசபுரம் வாசிகள் கேட்கிறார்கள். இந்த மண்ணுக்காக மடிந்த தினேஷ் மாஸ்டரின் மனைவி ஜானகியின் நிலையைக் கண்டும் மனமிறங்காத இவர் செய்த பாவம் தீர கோயில் கோயிலாக அலைந்து திரிகிறார்.

'மனிதர்களுக்கு அன்பு செய்யத்தான் தெரியவில்லை பக்தி செய்வது ரொம்ப சௌகரியமாக இருக்கிறது. சுயநலமுடையவர்களுக்கு அன்பு என்றால் என்னவென்று தெரிய முடியாது. அவர்கள் அன்பையும் அன்புடையவர்களையும் அலட்சியப்படுத்தி விடுகிறார்கள் அதன் விளைவுகள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களால் உள்ளுறுத்தலை ஏற்படுத்திவிடுகிறது. அந்த குற்ற உணர்வை மறைத்துக் கொள்ளத்தான் இவர்களுக்குப் பக்தி தலைவிரித்து ஆடுகிறது.' இவ்வாறு கல்யாணமாலை எனும் நூலில் இடம்பெற்றுள்ள 'நம்ப மாட்டயெலெ' என்று கதையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்?  உள்ளக ஆக்கிரமிப்பைத் தடுக்க யார் உளர்?

இந்தக் காணியை தினேஷ் மாஸ்டர் வாங்கும் போது கூட இருந்தவரும் தற்போது மாகாண சபை உறுப்பினராக விளங்குபவருமான சு.பசுபதிப்பிள்ளையிடமும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்தனர். பரிமாறுபவர் தன் ஆளாக இருந்தால் அடிப்பந்தி என்ன நுனிப்பந்தி என்ன என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் மச்சேந்திரராசா.

(2). நிதர்சனப் பொறுப்பாளராக விளங்கிய சேரலாதன் கிளிநொச்சி திருநகரில் ஒரு காணி வாங்கினார். சமாதான காலகட்டத்தில் இக்காணி வாங்கப்பட்டது. இக்காணியில் இறுதிப் போரின் பின் சேரலாதனின் அன்னை சிறிய வீடு அமைத்தார். காணி விற்றவரின் அடியாட்கள் வந்து அதைப் பிடுங்கி எறிந்தனர். யாரிடம் நோவது? தினேஷ் மாஸ்டரின் மனைவியின் நிலைதான் சேரலாதன் மனைவிக்கும்.

(3). கிளிநொச்சி சந்தையில் மீன் விற்பனை செய்யும் 'ஆவி' என்றழைக்கப்படும் செல்வம் என்பவரிடம் 2002 ஆம் ஆண்டு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு காணியை வாங்கினார் ஈழப்பிரியன் எனப்படும் மாணவர் அமைப்புப் போராளி. புனர்வாழ்வு முடித்து அவர் வரும் போது அவரது காணியில் செல்வத்தின் மகள் குடியிருப்பதைக் கண்டார். சசிகரன் என்ற தனது சொந்தப் பெயரில் இக் காணியை வாங்கியதற்கான ஆவணங்களை ஈழப்பிரியன் வைத்துள்ளார். இருந்தும் என்ன?

(4). பிரதீப் மாஸ்டர் என்பவர் திருநகரில் ஒரு காணியை வாங்கினார். தடுப்பிலிருந்து வந்த பின்னர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். காணியை விற்றவர் தனது காணியில் இவர் அடாத்தாக குடியிருப்பதாக வழக்குத் தொடர்ந்துள்ளார். இதனால் நீதிமன்றுக்கு அலைய வேண்டியவராக உள்ளார் பிரதீப் மாஸ்டர்.

(5). யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு இராஜேஸ்வரி இராமநாதன் வீதிகள் சந்திக்கும் இடத்தில் திருமதி சிவகௌரி கிருஷ்ணானந்தலால் என்பவருக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்ட வீடு ஒன்று உள்ளது. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானின் (சண்முகநாதன் சிவசங்கர்) மூத்த சகோதரி தான் சிவகௌரி. இந்த வீட்டின் ஒரு அறையில் பொட்டம்மானின் இரண்டாவது அண்ணன் ஜேர்மனியிலிருந்து இலங்கை வரும் சமயத்தில் தங்குவதுண்டு.

இந்த வீட்டை படையினரின் ஆசீர்வாதத்துடன் ஒரு குடும்பம் கைப்பற்றியுள்ளது. படையினரின் துணை இவர்களுக்கு இருப்பதால் அப் பகுதியே இவர்களுக்கு அஞ்சுகிறது. காணியின் சொந்தக்காரரின் அனுமதியின்றியே மின்சார சபை மின் இணைப்புக் கொடுத்துள்ளது. சுன்னாகத்தில் தண்ணீருக்குள் கழிவு ஓயிலைக் கலந்ததாக குற்றஞ்சாட்டப்படும் இந்த அமைச்சுக்கு சட்டவிரோதமாக மின்இணைப்பு கொடுப்பதா பெரிய விடயம்.

வீட்டை ஆக்கிரமித்தவர்களுக்கு அதன் ஒரு அறையில் வீட்டு உரிமையாளரின் சகோதரன் சிவஞானகுமார் வந்து தங்குவது பிடிக்கவில்லை. அதன் விளைவாக இறுதியாக இலங்கைக்கு வந்த சமயம் படையினரால் அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் சிவஞானகுமார். ஒரு சமயம் இவ்வாறான சம்பிரதாயமான சடங்குகளைப் பூர்த்தி செய்து விட்டு வருகையில் வீதியில் விழுந்து மயக்கமுற்றார். அப்போது அவர் உயிர் அங்கு பிரிந்தது. மனைவி பிள்ளைகள் ஜேர்மனியில். எனவே சடலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வீட்டில் இறுதிச் சடங்கு செய்ய முனைந்திருந்தால் விளைவு எவ்வாறிருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

எப்படியோ சிவஞானகுமாரின் மரணத்தைக் கண்ட அவரது உறவினர்கள் எவரும் இனித் தலையிட வரமாட்டார்கள்தானே என்ற திமிரில் வீட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர் படையினரின் விசுவாசிகள். அண்மையில் சிறிய கால இடைவெளியில் இரு சுபகாரிய நிகழ்வுகள் இடம்பெற்றன. சோடனை பாட்டு கும்மாளம் என வீடே அமர்க்களப்பட்டது. ஞானனைக் கொல்ல வழி வகுத்து விட்டு கொண்டாடி மகிழ்கின்றனர் என அந்தக் கிராமத்தவரால் வேதனைப்படத்தான் முடிந்தது.

பொட்டம்மான் குடும்பத்தினருக்குச் சொந்தமான பூர்வீகக் காணியொன்று கனகரத்தினம் வீதியிலும் உள்ளது. இதனையும் படையினரின் இன்னொரு விசுவாசி ஆக்கிரமித்துள்ளார். படையினர் தான் தன்னை இங்கு இருக்கச் சொன்னதாகவும் காணியைவிட்டு தான் வெளியேறப் போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

(6). சந்தோஷம் என்ற போராளி குடியிருப்பதற்காக அவரது தந்தை பரமநாதன் விசுவமடு உடையார்கட்டில் ஒரு காணியை வாங்கினார். ஒரு தசாப்த காலத்துக்கு மேல் ஐரோப்பிய நாடொன்றில் உழைத்துச் சேமித்த பணத்திலேயே வாங்கிய இக்காணியில் அழகான வீடொன்றையும் பரமநாதன் கட்டினார். சந்தோஷம் புனர்வாழ்வு முடித்துத் திரும்பிய போது காணியும் வீடும் ஏற்கெனவே காணியை விற்றவர்களால் அபகரிக்கப்பட்டிருந்தன. காணியை தாம் விற்கவேயில்லை என அவர்கள் கூறுகின்றனர். பரமநாதனும் காலமாகிவிட்டார். மாவட்டச் செயலகத்தினர் இது சம்பந்தமாக விசாரித்தனர். 'இவர்கள் புலிகளின் ஆட்கள்' என்று ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்பாளர் பரமநாதன் குடும்பத்தினரை சுட்டிக்காட்டினர். தீர்ப்பு தமக்கு சாதகமாக வரவேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் இவ்வாறு கூறினர். எனினும் காணியில் வீடு அமைந்திருந்த பகுதி பரமநாதன் குடும்பத்தினருக்கும் மறுபகுதி காணியை விற்றவர்களுக்கும் என காணியை இரண்டாகப் பிரித்து தீர்ப்பு வழங்கினர் மாவட்டச் செயலகத்தினர். ஏனைய சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதை ஓரளவுக்கு ஏற்கலாம். மிரட்டும் அதிகாரம் உள்ளவர்களிடம் நாங்கள் புலிகளின் குடும்பத்தினருக்குச் சாதகமாக நடக்கவில்லை என்று காட்ட அதிகாரிகள் இவ்வாறு நடந்திருக்கலாம்.

(7). திருமுறிகண்டி கண்டிவீதியிலும் இதே போல ஒரு சம்பவம் நடந்தது. கிருஷ்ணன் சண்முகம் என்பவர் தான் விற்ற அரை ஏக்கர் காணியை மீண்டும் அபகரித்துள்ளார். இக் காணியின் பின்புறம் வாய்க்கால் அமைந்துள்ளது. காணி மண்ணரிப்பால் பாதிக்கப்படக் கூடாது எனக் கருதி காணியை வாங்கியவர்கள் ஏற்கெனவே பலமான சிமெந்து கட்டு கட்டியுள்ளனர். சம்பந்தப்பட்டவர் தடுப்பிலிருந்து வந்து காணிக்கு சென்றார். இவருடன் இன்னொருவரும் சென்றார். அவரிடம் 'நான் இவர்களுக்கு காணி விற்றது உண்மைதான். அதில் ரைக்டர் (உழவு இயந்திரம்) வாங்கியதும் உண்மைதான். ஆனால் இவர்களால் தான் முள்ளிவாய்க்காலில் ரைக்டரை விட்டுவிட்டு வந்தேன். எனக்கு இப்போதிருப்பது இக் காணிதான்' என்று கூட வந்தவரிடம் கூறினார் சண்முகம். காணி ஏற்கெனவே விற்றாயிற்று. எல்லைகளைப் பிடுங்கிவிட்டு இந்தக் காணி தான் இப்போது எனக்கிருப்பது என்று எப்படிக் கூறமுடியும்? இதைவிட இன்னொரு விடயம் திருமுறிகண்டியிலிருந்து இடம்பெயர முன்னரே சண்முகம் ரைக்டரை விற்றுவிட்டார். ஏற்கெனவே விற்றுவிட்ட ரைக்டரை முள்ளிவாய்க்காலில் விட்டதாகவும் புலிகளால் தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் காணி அபகரிப்புக்கு நியாயம் கூறுகின்றார் சண்முகம்.

(8). இச் சம்பவம் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு நாவற்கேணியில் இளங்கோ (இத்தூஸ்பிள்ளை மேரிதாசன்) என்ற போராளி 1984 ஆம் ஆண்டு ஒரு காணியை வாங்கினார். இவரது மனைவி மூன்றாவது பிரசவத்தை எதிர்நோக்கியிருந்த வேளையிலேயே இக் காணியை வாங்கினார். எனினும் கடமையின் நிமித்தம் தவிர்க்க முடியாமல் திருமலைக்கு அவர் சென்று தங்கவேண்டியிருந்தது. அங்கு திருமலை –மட்டக்களப்பு எல்லையான வெருகல் ஆற்றங்கரையில் பதுங்கியிருந்த படையினர் இவர் மீதும் இவருடன் கூடச் சென்ற கஜேந்திரன் என்ற போராளி மீதும் தாக்குதல் நடத்தினர். தனது கையில் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியின் ரவைகள் தீரும் வரை போராடினார் இளங்கோ. சட்டைப் பையில் வைத்திருந்த பணநோட்டுகளை கிழித்தெறிந்தார். தனது இயந்திரத் துப்பாக்கியை பாகம் பாகமாகக் கழற்றி ஆற்றில் வீசினார். இறுதியில் தனது ஆயுதம் படையினரின் கையில் சிக்காது என்ற நம்பிக்கையுடன் சயனைட் அருந்தி வீரச்சாவெய்தினர். இந்தச் சமரின் போது கஜேந்திரன் ஒருவாறு தப்பிவிட்டார். இச்சம்பவம் 1985 மே 12 ஆம் நாள் நடைபெற்றது. அன்று அவரது மூன்றாவது குழந்தை தேன்மொழி பிறந்து 16 நாள். அக்குழந்தையை அவர் கண்ணால் கண்டதில்லை. இத்தகைய வரலாற்றைக் கொண்டவர் இளங்கோ என்று நன்றாகத் தெரிந்தும் ஏதோ ஒரு ஆவணத்தைத் தயார் செய்து பல இலட்சம் ரூபாவுக்கு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளார் சின்னவன் என்றழைக்கப்படும் தியாகராஜா.

'நான் செத்தா என்ர பிள்ளைகளை இயக்கம் கவனிக்கும் தானே?' என ஏக்கத்துடன் இளங்கோ கேட்பதுண்டு. இது சின்னவனுக்கும் தெரியும். இதில் அவர் தனது காணியை அடக்கவில்லைத் தானே என்று கருதி இத் துரோகத்தைப் புரிந்துள்ளார்.

இக் காணியை வாங்கும் போது பனை பிரம்புப் பற்றைகள் என காடு போல இருந்தது நாவற்கேணி. இன்று சகல வசதிகளுடன் இப் பகுதி காணப்படுகிறது. இளங்கோவின் மூன்றாவது பிள்ளை தேன்மொழி இளமகள் என்ற பெயரில் கடற்புலியானார். இறுதிப் போரின் பின் புனர்வாழ்வு முடித்து வந்த இவர் சொந்தக் காணி வீடு இல்லாமல் அலைந்து திரிகின்றார். இக்காணி விடயம் பிரதேச செயலகத்துக்கும் மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கைதான் இல்லை.

கெவிளியாமடு பிரதேசத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்ற வாசிகளுக்கு காணி உரிமை உட்பட சகல வளங்களுக்கும் ஏற்பாடு செய்யும் அரச செயலகம் இளங்கோவின் மகளின் விடயத்தில் மெத்தனமாக உள்ளது.

இப்படி ஏராளமான காணி அபகரிப்புகள் நடைபெற்றுள்ளன. இனியொரு விசாரணை நீதிமன்றம் என்று அலைய முடியாது என முன்னாள் போராளிகள் தரப்பில் உணரப்பட்டுள்ளது. அந்தளவுக்கு நொந்து போயுள்ளனர். இதைச் சாட்டாக வைத்தே இவ்வாறான செயல்கள் நடைபெறுகின்றன. மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் எட்டும் உதாரணங்களே. இதைப் போல ஏராளமான சம்பவங்கள் உள்ளன.

விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைப்பதற்கென கொள்வனவு செய்யப்பட்ட காணிகள் என்றால் பரவாயில்லை. திருமணமான உறுப்பினர்களினதும் அவர்களின் பரம்பரைக் காணிகளும் இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுவதுதான் நியாயத்துக்கு மாறான செயல். இதேவேளை யாழ் மேல் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காக ஒரு வீட்டைச் சுவீகரிக்க முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார். நமது ஈழநாடு பத்திரிகை யாழ் நாவலர் வீதியில் இயங்கி வந்தது. அந்த வீட்டை சுவீகரித்துள்ளனர் படையினர். நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இந்த வீடு உரிமையாளர் கையில் செல்லவுள்ளது. தற்போது பயன்படுத்துவோர் அதற்கான வாடகையை உரிமையாளரிடம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வீடுகள் கடைகள் படையினராலும் ஈ.பி.டி.பி.யினராலும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான ஆக்கிரமிப்புகள் பற்றிய தகவல்களைத் தமக்குத் தந்துதவுமாறு வடமாகாண சபை அறிவித்தால் நம்பிக்கையூட்டுவதாக இருக்கும். 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=262b94a2-7d42-4a07-96de-b3fe3c9604b9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.