Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவாதம்: இனஅழிப்பும் இனச்சுத்திகரிப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விவாதம்: இனஅழிப்பும் இனச்சுத்திகரிப்பும்

ராகவன்

இலங்கையில் 2009 இறுதி யுத்தத்தின்போது நிகழ்ந்தது இனஅழிப்பா அல்லது யுத்தக் குற்றமா என்று வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. சமீபத்தில் சுமந்திரன் பா.உ., சர்வதேசச் சட்ட வரைவிலக்கணத்தின்படி இனப்படுகொலையை நிரூபிப்பது கடினம் எனக் கூறியதைத் தொடர்ந்து, அவரைத் துரோகியென்றும் இனப்படுகொலையை நிராகரிப்பவர் என்றும் இலங்கை அரசின் ஏவலாள் என்றும் புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் பரப்புரை மேற்கொள்கின்றனர். அதன் உச்சகட்டமாக லண்டனில் அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் கூச்சலிட்டுக் கூட்டத்தைக் குழப்ப முயன்றனர். இவ்வாறு பாரிஸிலும் சுவிஸிலும்கூட நடந்தது.

MA-Sumanthiran.jpg

அத்துடன் சமீபத்தில் முஸ்லிம் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர், அதற் காகத் தமிழர்கள் தலைகுனிய வேண்டும் என்பதைச் சுமந்திரன் துணிந்து கூறியதற்காக அவர்மேல் அவதூறுப் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

சுமந்திரனின் கருத்துகளில் உடன்படாத பட்சத்தில் தமது வாதங்களை முன்வைப்பதை விடுத்து ஆரோக்கியமற்ற முறையில் நிந்தனைசெய்ய மட்டும் தெரிந்தவர்களே இவர்கள். இந்த வங்குரோத்து அரசியல் புலம் பெயர் நாடுகளில் தற்போது அருகி வருகினும் அது ஆபத்தானது.

இந்த அவதூறாளர்களுக்கு இனச்சுத்தி கரிப்பு பற்றிய விளக்கமில்லாதது மட்டுமல்ல, முஸ்லிம் வெறுப்பும் தொக்கி நிற்கிறது என்பதையே அவர்களது வியாக்கி யானங்கள் வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கவே அவர்கள் வெளி யேற்றப்பட்டனர் என்றும், புலிகள் பின்னாளில் அதற்காக வருந்தினர் என்றும், எனவே சுமந்திரனின் கூற்று மோசமானதென்றும், முஸ்லிம்களும் தமிழர்கள்மேல் தாக்குதல் தொடுத்தனர் என்றும் பல்வேறு வியாக்கி யானங்கள் சொல்லப்படுகின்றன. காலம் கடந்தாவது சுமந்திரனின் அங்கீகரிப்பு தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்தும் என எண்ணும் அரசியல் ஞானம் இவர்களிடம் இல்லை.

இனச்சுத்திகரிப்பின் வரைவிலக்கணம்:

ஒரு தனி இனத்தைத் தமது பகுதியில் உருவாக்கும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட இன மக்களை முற்றுமுழுதாக வெளியேற்றுதல் அல்லது கொல்லுதல் அல்லது சிறைப்பிடித்தல்.

இவ்வகையில் அக்டோபர் 1990இல் யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது இனச் சுத்திகரிப்பு வரைவிலக்கணத்தில் அடங்குகிறது. இதற்குமேல் வேறு ஆய்வுகளோ வியாக்கியானங்களோ பொருந்தப் போவதில்லை. ஏனெனில் 1990க்குப் பின் யாழ் மாவட்டம் முஸ்லிம்கள் அற்ற பிரதேசமாக உருமாற்றப்பட்டது. அத்துடன் சரியோ தவறோ பெரும்பான்மையான தமிழர்கள் புலிகளுக்கு விரும்பி - அல்லது குறிப்பிட்டவர்கள் வலுக்கட்டாயத்தின் பேரிலோ பயத்திலோ - ஆதரவு கொடுத்தது யதார்த்தம். இந்நிலையில் குறிப்பிட்ட தமிழர்கள், முஸ்லிம்களின் வெளியேற்றத்தைக் கண்டு மனம் வருந்தியபோதும் நிகழ்ந்தது இனச்சுத்திகரிப்பே. சமாதான காலத்தில் புலிகள் மனவருத்தம் தெரிவித்தபோதும் நடைமுறையில் முஸ்லிம்களைத் திரும்ப அழைக்கும் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபடவில்லை. மாறாக, இந்த வார்த்தையைக் கேட்டு ஒரு சில முஸ்லிம்கள் மீளக்

குடியேற வந்தபோது புலிகள் பல தடைகளை ஏற்படுத்தினர். முஸ்லிம் மக்களின் பாதுகாப்பைக் கருதி அவர்களைப் புலிகள் வெளியேற்றினர் என்று சொல்வது போன்ற அபத்தம் வேறொன்றுமில்லை. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒருவராவது தமது பாதுகாப்புக்குப் பிரச்சனை என புலிகளிடம் போய் தம்மை வெளியேற்றக் கேட்டார்களா? யாழ் நூலகம் எரிந்தபோது அதை எதிர்த்து முதல் கவி சமைத்த பேராசிரியர் நுஹ்மான் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென புலிகளிடம் முறையிட்டு யாழ் மண்ணிலிருந்து வெளியேற்றச் சொன்னாரா? பெரும்பான்மைச் சிங்கள சமூகம் தமிழர்மேல் ஆதிக்கம் செலுத்துகின்றதெனப் போருக்குப் போனவர்கள், தம்மைவிட எண்ணிக்கையில் குறைந்த முஸ்லிம் மக்களைப் பலவந்தமாக அவர்களது பாரம்பரிய பூமியில் இருந்து அப்புறப்படுத்துவது என்ன தர்மம்? முஸ்லிம் மக்களில் ஒரு சாரார் அரச படைகளுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மேல் வன்முறையைப் பயன்படுத்தினார்கள். எனவே முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது தவறெனின், தமிழர் மேலான முஸ்லிம்களில் ஒரு தரப்பினரின் வன்முறைக்கு முஸ்லிம் தலைமைகள் மன்னிப்புக் கேட்கவில்லைதானே என்றொரு வாதமும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. தமிழர் தரப்பில் அரசுடன் சேர்ந்து பல அமைப்புகள் இயங்கிய காரணத்துக்காகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் புலிகள் நாடு கடத்தவில்லை. இதற்குமேலாக யாழ் மாவட்ட முஸ்லிம்கள் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதற்கான ஆதாரங்கள் இல்லை. முக்கியமாக அனைத்து இயக்கங்களிலும் பல முஸ்லிம் இளைஞர்கள் ஆரம்ப காலகட்டத்தில் சேர்ந்து இயங்கியதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இந்திய ராணுவக் காலகட்டத்தில் புலிகளுக்குப் பல முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தனர் என்பது இன்னொரு யதார்த்தம். விடுதலைப்புலிகளில் இணைந்திருந்த முஸ்லிம் அங்கத்தவர்கள், 1990ஆம் ஆண்டுகள் இனச்சுத்திகரிப்புக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்திலிருந்த ஒரு குறிப்பிட்ட சாரார் தமிழ் மக்கள்மேல் வன்முறையை மேற்கொண்ட காரணத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை நாடுகடத்தியது இனச்சுத்திகரிப்பே. முஸ்லிம் மக்களில் ஒரு சாரார் தமிழ்மக்கள் மேல் செலுத்திய வன்முறை கண்டிக்கப்பட வேண்டியது; ஆனால், அதனை விடுதலைப்புலிகளின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையுடன் ஒப்பிடுவது அபத்தம்.

இப்போக்கை மறுதலிக்கும் வகையில் முஸ்லிம் மக்கள் சம்பந்தமான சுமந்திரனின் கருத்து இன்றைய சூழலில் வரவேற்கப்பட வேண்டியதே. இவ்வாறான கருத்துகள் பரவுவது தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையான நல்லுறவை மீண்டும் கொண்டுவருவதற்கான முதற்படி.

July_1983.jpg

இனி இன அழிப்புச் சம்பந்தமாக சுமந்திரன் சொல்ல வந்தது. இன அழிப்பு என்பதைச் சட்டரீதியாக நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லையென்பதாகும். அதற்காக அவர் இன அழிப்பு நிகழவில்லை எனச் சொன்னார் என்பதல்ல அர்த்தம். இதனை ஊதிப்பெருப்பித்து சுமந்திரன் மேல் பொய்க்குற்றச் சாட்டுகளும் துரோகப்பட்டமும் அவதூறுகளும் மேற்கொள்ளப்படுகின்றன .

இங்கு மூன்று விடயங்களை நோக்குதல் அவசியம்.

1. இன அழிப்பு என்பதன் சர்வதேசச் சட்ட விழுமியங்கள்

2. இன அழிப்பு என்பதை - நிறுவுவதற்கான சர்வதேசப் பொறிமுறையும் ஐ.நாவின் அரசியலும்

3. பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்த பார்வை

இன அழிப்புக் குற்றமானது இரட்டை உளக்கூறுகளைக் கொண்டது (Double mental element). இன அழிப்புக்கான பொதுவான நோக்கம் (General intent), சூக்குமமான நோக்கம் (Ulterior intent) ஆகியவை தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. இந்தப் பார்வை பற்றிய விமர்சனங்களுக்கப்பால் இன அழிப்புச் சம்பந்தமான சர்வதேசச் சட்ட வழக்குகளின் தீர்வு அடிப்படை இதுவே.

இன அழிப்பு நடவடிக்கையெனச் சட்டரீதியாக நிறுவ இந்த இரண்டு அம்சங்களும் பார்க்கப்பட வேண்டும். இவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை.

அக்கயேசு என்ற ருவன்டா இனஅழிப்பு வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இன அழிப்பு நோக்கம் என்ற குற்றத்தின் அடிப்படைக் கூறு இன அழிப்பாளனின் மனநிலைக்கும் (விமீஸீtணீறீ ஷிtணீtமீ) அவன் புரிந்த குற்றத்தால் விளைந்த திண்ணமான விளைவுகளுக்கும் (Physical results) உள்ள உளவியல் உறவு (Psychological relationship) எனத் தீர்மானித்தது.

இன அழிப்புக்கான நோக்கம் இருந்தது என நிறுவுதல் போதுமானதல்ல, இன அழிப்பாளனுக்கு இன அழிப்பை மேற்கொள்ளும் விசேட நோக்கம் இருந்ததென நிறுவப்பட வேண்டும்.

எனவே, அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் பற்றிய சாட்சியங்கள் இலங்கை இராணுவம் சம்பந்தமாக இருப்பினும் இனப்படுகொலையை நிறுவ இவை மட்டும் போதாது. 2009 காலப்பகுதியில் இலங்கை அரசு கனரக ஆயுதங்களையும் விமானக் குண்டுகளையும் பயன்படுத்திக் கண்மூடித்தனமாகப் பொதுமக்கள்மேல் தாக்குதல் தொடுத்திருந்தது. விடுதலைப் புலிகளை அழித்து மக்களைக் காப்பாற்றுகின்றோம் என்று பரப்புரை மேற் கொண்டு அரசு மக்கள்மேல் தாக்குதலைத் திட்டமிட்டு நிகழ்த்தியதற்குப் போதிய சாட்சியங்கள் உண்டு.

அரசு மக்களைப்பற்றிய எவ்விதப் பொறுப்புணர்வு மின்றி விடுதலைப்புலிகள் மேல் யுத்தம் புரிகின்றோம் என்ற போர்வையில் மக்களைக் கொன்றது; சரணடைந் தவர்களைக் கொன்றது. பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். வைத்தியசாலைகள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. ஒரு லட்சம் மக்கள் இறுதி யுத்த காலப்பகுதியில் கொல்லப்பட்டிருக்கின்றனர் என மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் (ஹிஜிபிஸி) தெரிவித்திருந்தனர். விடுதலைப்புலிகள் பல மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு மக்களைக் கேடயமாக வைத்திருந்தபோதும் தமிழ் மக்கள் மேலான பாரிய திட்டமிட்ட தாக்குதல்களுக்குப் பெரும் பொறுப்பு இலங்கை அரசே.

ஆனால் இனஅழிப்பு என்பது எங்கு சிக்கலாகின்ற தெனில், இலங்கை அரசு தனது இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கப் பலம் பொருந்திய இராணுவக்கட்டமைப்பைக் கொண்ட புலிகளுக்கெதிரான ராணுவ நடவடிக்கை எடுத்தது என்ற அம்சம். எனவே தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் விசேட நோக்கம் அரசிடம் அல்லது யுத்தத்தை மேற்கொண்ட ராணுவத்திடம் இருந்ததா என நிறுவுதலில் சிக்கல்கள் உள்ளன. விடுதலைப்புலிகள் மரபுவழி ராணுவமாகத் தம்மை உருவாக்கி இலங்கை அரசுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசு இந்த யுத்தத்தைப் பயங்கரவாதத்திற்கு எதிரான மீட்பு யுத்தமாகப் பரப்புரை மேற்கொண்டது. சர்வதேசமும் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றும் ஆதரவு வழங்கியது. தமிழ் மக்கள்மேல் மேற்கொள்ளப்பட்டது. இனஅழிப்பு என நிறுவத் தமிழருக்கெதிரான பரப்புரைகள், தமிழரை அழிப்பதற்கான கொள்கைகள், திட்டமிட்ட செயல்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்கள் பார்க்கப்பட வேண்டும்.

இன அழிப்பு (Genocide) பற்றி அக்கருத்தியலை உருவாக்கிய லெம்கின் சொல்கிறார்: இனஅழிப்பு என்பதன் குறியீடு. ஒரு இனக்குழுவின் அடிப்படைக் கட்டமைப்பை அழிக்கும் நோக்குடன் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டத்துடன் பல்வேறு நடவடிக்கைகளுக்கூடாக அவ்வினக்குழுவை அழித் தொழிக்கும் நோக்கு. இவ்வாறான திட்டத்தின் அடிப்படை ஒரு இனக்குழுவின் அரசியல் சமூக நிறுவனங்களைச் சிதைப்பதும் மொழி, கலாச்சாரம், தேசிய உணர்வு, பொருளியல் நிலை, மதம் போன்றவற்றை மழுங்கடிப்பதும், அவ்வினக்குழுவின் பாதுகாப்பு, சுதந்திரம், ஆரோக்கியம், சுயமரியாதை ஆகியவற்றை அழித்து அக்குழுவைச் சார்ந்த தனி நபர்களையும் அழித்தல் என்பதாகும்.

இது ஒருபுறம் இருக்க, இலங்கை அரசுக்கோ தாக்குதல்களை மேற்கொண்ட ராணுவத்திற்கோ இனஅழிப்புக்கான விசேட நோக்கு இருந்ததென்பதை நிறுவுதல் பற்றிய சிக்கல்கள் உள்ளன. விடுதலைப்புலிகள் என்ற இராணுவ அமைப்பிற்கெதிரான யுத்தத்தில் நிகழ்ந்த மோசமான மனித உரிமை மீறல்கள் இனஅழிப்புக் கோட்பாட்டுக்குள் அடங்குமா என்ற ஒரு பிரச்சனையும் இருக்கிறது. அதைத் தவிர யுத்தத்திற்குப் பின் இலங்கை அரசு யுத்தத்தால் இடம் பெயர்ந்தவர்களைப் படிப்படியாகத் தமது பிரதேசங்களுக்குச் செல்ல அனுமதித்தல், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி விடுவித்தல், மற்றும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், வட கிழக்கில் வீதி புனரமைத்தல், திருவிழாக்கள் கொண்டாடுதல், விசாரணைக்குழு அமைத்தல் போன்ற மேம்போக்கான அரசின் நடவடிக்கைகள் இன அழிப்புக்கான விசேட நோக்கத்தை நிறுவுவதற்கான தடைக்கற்களாக இருக்கின்றன.

ஆனால் இனஅழிப்பு சம்பந்தமான விசேட நோக்கத்திற்கான ஆதாரங்கள் மட்டும் தேவையென்பது அவசியமற்றது. நிகழ்ந்த தொடர்ச்சியான சம்பவங்களின் போக்கைக் கணக்கிட்டு உய்த்தறிதலின் மூலமாக இனஅழிப்பை நிறுவ முடியும். உதாரணமாகப் போர் நிகழ்ந்த காலப்பகுதியில் கோதபாய, விடுதலைப்புலிகளுடன் நின்ற மக்களும் விடுதலைப் புலிகளென வர்ணித்தது அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியது. யுத்தமற்ற பகுதியென (No fire zone) அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மக்களை வரச்செய்து அங்கு தாக்குதலை மேற்கொண்டது, கைது செய்யப்பட்ட பல இளைஞர் யுவதிகளைப் படுகொலை செய்தது, தமிழ்ப் பெண்கள்மேல் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டது போன்ற கொடுஞ்செயல்கள் இனஅழிப்பு என்று நிரூபிப்பதற்கான சான்றுகள் இருந்தபோதும், சட்ட ரீதியாக விசேட நோக்கத்தை நிறுவுவதற்கான தரவுகள் போதாமல் இருக்கின்றன.

இவ்வகையில் சுமந்திரன் 2007 யுத்தத்தில் நிகழ்ந்த பாரிய கொலைகள், அத்துமீறல்களை இனஅழிப்பு வரையறைக்குள் அடக்குவதற்கான சட்டரீதியான காரணிகள் போதாதென்பதைச் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஐ.நா தீர்மானம் குறிப்பாக இறுதி யுத்த காலங்களில் நிகழ்ந்த அத்துமீறல்களையே ஆய்ந்துள்ளது என்பதும் முக்கியமான விடயம்.

1983இல் தமிழர்களுக்கெதிரான வன்முறையின் போது அரசு திட்டமிட்டு தமிழ் மக்கள்மேல் வன்முறையை ஏவிவிட்டதற்கான ஆதாரங்கள் ஓரளவுக்கு இருக்கின்றன. அக்காலகட்டத்தில் பொதுமக்களை நோக்கி வன்முறை ஏவப்பட்டது. சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். இயக்கங்கள் வளர்ந்திருக்கவுமில்லை. இயக்கங்களைக் குறிவைத்துப் போர் நிகழவுமில்லை. எனவே 1983 வன்முறையில் இனஅழிப்புக் கூறுகள் உண்டென நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் 2007 யுத்த நிகழ்வுகளைவிட அதிகம். ஆனால் அதற்கான தயாரிப்புகள் மற்றும் வாய்ப்புகள் தற்போது சாத்தியமா என்பது கேள்விக்குறியே.

அத்துடன் 1983இன் தொடர்ச்சியே 2007இன் முடிவுகள் என நிறுவுவதற்கான காரணிகள் போதாது. புலிகளின் இராணுவ வளர்ச்சி, அரசுடனான நேரடி யுத்தம், இலங்கை அரசுடனான ஒப்பந்தங்கள், போர்நிறுத்த உடன்பாடுகள் மற்றும் 13ஆம் திருத்தச்சட்டம், தமிழ் தேசியமொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது, சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தால் குடியுரிமை இழந்த மலையகத்தமிழர்கள் குடியுரிமை பெற்றது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரசிடம் தமிழர்களைத் தொடர்ந்து அழித்தொழிக்கும் விசேட நோக்கு இருந்ததா என நிறுவ எதிர்கொள்ளும் பிரச்சனைகள். சமீப காலங்களில் பொஸ்னியா மற்றும் ருவாண்டாவில் நிகழ்ந்த இன அழிப்பைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட இன மக்களை அழித்தொழிப்பதற்கான அரசின் திட்டமிட்ட பிரச்சாரம், அதற்கான தயாரிப்பு போன்றவை வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டன. இன அழிப்புக்கான விசேட நோக்கை நிறுவ இவை பங்களித்தன. உதாரணமாக, ருவாண்டாவில் ருட்சி இன மக்கள் கொல்லப்பட வேண்டியவர்கள், ஆபத்தானவர்கள், கரப்பான் பூச்சிகள் போன்ற இனவெறிப் பிரசாரம் வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டன. ஒருகையில் வானொலியும் மறுகையில் அரிவாளும் கொண்டு கொலைஞர்கள் வெறியுடன் திரிந்தனர். இலங்கை அரசு இனவாத அரசாக இருந்தபோதும் யுத்தகாலங்களில் இவ்வாறான பிரச்சாரங்களை நேரடியாக மேற்கொண்டதற்கு ஆதாரங்கள் இல்லை எனலாம்.

இதற்கு மேலாக இலங்கையில் நிகழ்ந்தது இன அழிப்பு என நிறுவுவதற்கான சான்றுகள் இருப்பினும் எங்கு, எப்படி அதனைச் சட்டபூர்வமாக நிறுவுதல் என்பது பிரச்சனையே. முக்கியமாக, இலங்கை ரோமன் சாசனத்தில் கையொப்பம் இடாத பட்சத்தில் சர்வதேசக் குற்ற நீதிமன்றில் இனஅழிப்பு சம்பந்தமான வழக்கைத் தொடர முடியாத நிலை. ஐநா மனித உரிமை கவுன்சில் இனஅழிப்பு எனத் தீர்மானம் கொண்டுவர முடியும். ஆனால் மனித உரிமைக் கவுன்சிலுக்குச் சட்ட

ரீதியான கட்டமைப்பு கிடையாது. தீர்மானத்தை ஐநாவின் பாதுகாப்புச் சபை அங்கீகரித்ததன் பின்னர் சர்வதேசக் குற்றவியல் ரைபுனல் உருவாகும் நிலையிலேயே இனஅழிப்புக் குற்றம் விசாரிக்கப்பட முடியும்.

ஐநா சபை என்பது அரசுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை. அரசுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடுதல் அரசுகளின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்கும், அது உலக சமாதானத்துக்குக் கேடு விளைவிக்கும் என்ற மேலோட்டமான வரைமுறையைக் கொண்டே ஐநா இயங்குகிறது. அத்துடன் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தரமாக இருப்பதும் ஐநாவின் முடிவுகளை இவ்வல்லரசுகள் தமக்குச் சார்பாக மாற்ற அரசியல் அழுத்தம் கொடுப்பதும் வரலாறு. இலங்கை அரசு மக்கள்மேல் கண்மூடித்தனமாக திட்டமிட்ட தாக்குதல்களை மேற்கொள்கிறது என்று சர்வதேசத்திற்குத் தெரிந்திருந்தும் விடுதலைப் புலிகளை என்ன விலை கொடுத்தும் அழிக்கவேண்டும் என்ற நோக்கில் சர்வதேசம் பாராமுகமாக இருந்தது. ‘சர்வதேசப் பயங்கரவாதம்’ என்ற கருத்தியல் இதற்கு துணை போனது.

எனவே இனஅழிப்பு என நிறுவ சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்கும் போக முடியாது. ஐநா சபையும் இனஅழிப்பு என முடிவெடுத்துப் பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றி விசேட நீதிமன்றை அமைக்கப் போவதில்லை.

இதுவே சர்வதேச நிலை. இந்த அடிப்படையிலேயே மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானம் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் நிறைவேறியிருக்கிறது. இலங்கை அரசுக்கு இத்தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற சட்டரீதியான நிர்ப்பந்தம் இல்லாதபோதும் ஒரு தார்மீக நிர்ப்பந்தம் உண்டு.

மனித உரிமைக் கவுன்சில் தீர்மானமானது, ராஜபக்ஸ தோற்கடிக்கப்பட்டபின் வந்த மைத்திரி தலைமையிலான புதிய அரசின் வெளியுறவுக்கொள்கைகள் மற்றும் உள்நாட்டு அரசியல் சமூகப் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்து வெளிவந்த தீர்மானமே. இலங்கை அரசுக்கான அழுத்தமானது இலங்கையின் நவதாராளக் கொள்கை, மேற்கு நாடுகள் சம்பந்தமான இலங்கையின் கொள்கை வகுப்பு போன்ற விடயங்களையும் தாங்கியிருக்கிறது. இவ்வகையில் புதிய அரசு இந்தியா மற்றும் மேற்கத்திய அரசுகள் சார்பான வெளியுறவுக்கொள்கையை வகுத்துக் கொண்டதும் இத்தீர்மானத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.

முதலில் விசாரணைக்குக் கலப்பு நீதிமன்றம் சிபாரிசு செய்யப்பட்டிருப்பினும் இறுதித் தீர்மானம் கலப்பு நீதிமன்றைக் கைவிட்டு இலங்கையின் நியாயாதிக்கத்துக்குட்பட்ட நீதிமன்றை நிறுவி அதில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளும் பங்குபற்ற அது வழிவகுத்திருக்கிறது. கலப்பு நீதிமன்றம் தேச, சர்வதேசச் சட்ட விழுமியங்களைக் கொண்டதாய் இருக்கும். அதில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர் போன்றவர்கள் அடங்குவர். இலங்கையின் நியாயாதிக்கத்துக்குட்பட்ட நீதிமன்றில் அவர்களுக்கு இடமில்லை.

அது ஒரு புறம் இருக்க, இனப்படுகொலை அல்லது யுத்தக்குற்றம் என்பதைச் சர்வதேசத்திற்கு நிரூபிப்பதற்காக நிகழும் புலம்பெயர்ந்த ஒரு சாராரின் அரசியல் மிக மோசமானது. அது மக்கள் சார்ந்ததல்ல. யுத்த காலகட்டத்தில் புலிகளின் வெளிநாட்டு முகவர்கள் மக்கள் மேலான அரசின் தாக்குதல்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பிரச்சாரம், பணப்பறிப்பு, ஊர்வலம் ஆகியவற்றை மேற்கொண்டனர். ஒருபுறம் இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் இயக்க உறுப்பினர்களின் அழிவையும் மறுபுறம் அந்த அழிவால் மனச்சஞ்சலத்துக்குள்ளான புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உணர்வையும் இப்பிரமுகர்கள் தமது சுயலாபத்துக்காக வெற்றிகரமாகப் பயன்படுத்தினர். ஒருமுறை என்னை ஒரு புலிப்பிரமுகர் பார்த்து ‘ஊர்வலத்துக்கு வரவில்லையா’ எனக் கேட்டார். யுத்தத்தை நிறுத்தி விடுதலைப் புலிகளைச் சமாதானத்திற்குப் போகுமாறு கோசம் எழுப்பின் நானும் வருகிறேன், இந்த யுத்தம் எம்மைப் பேரழிவை நோக்கி நகர்த்துகிறது என்றேன். அதற்கு மக்கள் இறக்கின்ற அளவு அதிகமாகஅதிகமாக எமக்குச் சர்வதேசம் தீர்வு தரும் வாய்ப்பு அதிகம்; எனவே மக்கள் அழிவது தேவையானது என்றார். யுத்தம் என்றால் மக்கள் அழிவது நியதி என்ற மோசமான கருத்தை முன்வைத்தார். அவருடன் நின்ற சிலர் அதனை ஆமோதித்தனர். .

தமிழ்நாட்டில் சீமான், நெடுமாறன் போன்றவர்களும் எமது மக்களின் அழிவில் குளிர் காய்ந்து வீரப்பேச்சுகளை எவ்விதப் பொறுப்புணர்வுமின்றி மேற்கொண்டனர்.

என்ன முரண்நகை எனின், மக்களின் அழிவை வைத்துப் பிழைப்பு நிகழ்த்தின அதேகூட்டம்தான் இன்று சர்வதேசத்தை நோக்கி இனஅழிப்பு என்ற சுலோகத்தை முன்னெடுக்கிறது.

புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டு முகவர்களின் நோக்கம் மக்கள் சார்ந்ததல்ல. அவ்வாறாயின் அவர்கள் போர் நிகழும் காலகட்டத்தில் சமாதானத்திற்கான அழுத்தத்தைப் புலிகளிடமும் அரசிடமும் ஏற்படுத்தியிருப்பர். மாறாக, அவர்களது குறிக்கோள் மக்களின் அழிவை வைத்து அரசியல் செய்வதே.

இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என மனப்பூர்வமாக நம்புபவர்கள் பலர் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்களது பார்வையில் நேர்மை இருக்கிறது; அது மதிக்கப்பட வேண்டியது. ஆனால் இனப்படுகொலை என்ற கருத்தியலைத் தமது அரசியல் லாபத்திற்காக முன்வைத்துப் பிழைப்பவர்கள் பற்றிய அவதானம் தேவை. விடுதலைப்புலிகளை வைத்துப் பிழைத்த புலம்பெயர் புலிகளின் தோல்விக்குப் பிறகு எடுத்திருக்கும் ஆயுதமே எவ்விதத் தயாரிப்புமற்ற இன அழிப்பு அரசியல்.

புலம்பெயர் தமிழ் அரசியலானது நீண்டகாலமாக யுத்தத்தைக் கொண்டாடிய அரசியலாகவும் இலங்கையில் வாழும் மக்களிலிருந்து அந்நியப்பட்ட அரசியலாகவுமே இருந்தது. விடுதலைப் புலிகள் இருக்கும்வரை அவர்களை எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொண்டிருந்த அரசியல் இன்று இனப்படுகொலை என்ற

பதாகையுடன் சர்வதேசத்தை நோக்கித் திரும்பியிருக்கிறது. விடுதலைப்புலிகளின் அழிவுக்கு விமர்சனமற்ற மாற்றுக்கருத்துகளை மதிக்காத புலம்பெயர் தமிழ் அரசியல் ஒரு அடிப்படைக் காரணம். இந்த அரசியல் நீண்ட நாளுக்கு நிற்கப்போவதில்லை. இதனைக் கணக்கில் எடுக்கவும் தேவையில்லை.

அத்துடன் இந்தப் பிரச்சனையை வெறும் சட்ட வரம்புக்குள் போட்டு இனஅழிப்பா அல்லது யுத்தக் குற்றமா என்ற நுணுக்கங்களில் காலத்தைக் கடத்துவது எமக்கு எந்தத் தீர்வையும் தராது.

அதற்காக நாம் வாளாவிருக்க வேண்டியதில்லை. முடிவாக, கூட்டமைப்பினர் ஐநா தீர்மானத்தை வரவேற்றதுடன் சொந்த இனத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட பாரிய குற்றச்செயல்களை நாம் ஆத்ம தேடலுக்கு உட்படுத்துவது அவசியம் எனப் பகர்ந்தது வரவேற்கத்தக்கதே. விடுதலையின் பெயரால் அனைத்து இயக்கங்களாலும் இழைக்கப்பட்ட பாரிய மனிதஉரிமை மீறல்களை நாம் ஏற்றுக்கொள்வதும் அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைத் தேடுதலும் அவசியமானது. அத்துடன் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளக் கூட்டமைப்பு மட்டுமல்ல சகல தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஒன்று சேர்வதன் மூலமே இது ஓரளவு சாத்தியம். அதற்கும் மேலாக சிங்கள மக்களின் ஆதரவும் இதற்குத் தேவை. அத்துடன் விசாரணைகள் தண்டிப்பதற்கான நோக்கில் நிகழின் அதற்கான ஆதாரங்கள் மறைக்கப்படலாம். இனி இப்படி ஒரு அழிவு வராமல் தடுக்கும் பாடமாகவும் இனங்களுக்கிடையான புரிந்துணர்வை வலுப்படுத்தும் பாலமாகவும் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும் முறையில் நீதி வழங்கும் அமைப்பாகவுமே இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென்பதை அனைத்துத் தரப்பினரும் வற்புறுத்துவதே இன்றைய தேவை.

இலங்கை அரசு எவ்வளவு தூரம் ஒத்துழைக்கும் என்பது பிரச்சனையே. அரசு தனது அதே ராணுவத்தையும் காவல் படையையும் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனாலும் புதிய அரசு பதவிக்கு வந்தபின் ராஜபக்ஷ ஆட்சியின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்த இனவாதக் கருத்தியல் அலை சற்று ஓய்ந்துள்ளது. இது தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சார்பான ஒரு அரசியல் தளத்தைத் தற்காலிகமாகக் கொண்டிருக்கிறது எனலாம். எனவே இந்த அரசியல் பரப்பைத் தமிழ் முஸ்லிம் அரசியல் சமூகம் தமது அரசியல் உரிமைகளுக்காகப் பயன்படுத்த வேண்டிய காலகட்டம் இது.

இதற்கான காத்திரமான பங்களிப்பை நல்குவதை விடுத்து புலம்பெயர் மக்களில் ஒரு சாரார் அவதூறுப் பிரச்சாரங்களிலும் ஜனநாயக மறுப்பிலும் தம்மை ஈடுபடுத்துவது மிக அசிங்கமான கீழ்த்தரமான வங்கு ரோத்து அரசியல். இதற்கான கண்டனக்குரல்கள் புலம் பெயர் தேசங்களிலும் இலங்கையிலும் எழ வேண்டும்.

http://www.kalachuvadu.com/issue-193/page61.asp

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.