Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'உளவு'ப்பிடியில் மடங்கிய லீடர்! - (இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்)

Featured Replies

'உளவு'ப்பிடியில் மடங்கிய லீடர்! - (இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்- 1)

 

ரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதை விட போலீஸ் நினைத்தால்தான் அதுவும் நடக்கும் என்பதே நடைமுறை சொல்லும் நிஜம்.  அவர்தான் டம்மியாக ஊர்க்காவல் படையில் இருக்கிறாரே அது ஊறுகாய் போன்ற இடம்தானே... ஏதோ லா அண்ட் ஆர்டரில் நல்ல போஸ்ட்டில் இருந்தால் கூட பரவாயில்லை என்று எந்த ஐபிஎஸ் -ஐயும் ஒதுக்கி வைத்துப் பார்க்க  முடியாது. எல்லாமே ஏதோ ஒரு காரண-காரியம் குறித்தவைதான் என்பதே, ஸ்மெல் பணிகள் குறித்த இந்த தேடல்  பயணத்தில் நான் அறிந்து கொண்டது.
 
விலைவாசி உயர்வு, வேலை இல்லை, சட்டம்- ஒழுங்கு சரியில்லை, பணப் புழக்கம் இல்லை...  இப்படி பல இல்லைகள் குறித்த கவலைகள் மக்களில் ஒரு சாராரிடமும், அதான் எல்லாம் இருக்கிறதே என்ற  திருப்தியான பதில் இன்னொரு சாராரிடமும் மாறுபட்ட  இருவேறு கருத்தாக வெளிப்படுவதை காணமுடிகிறது.

யார், யாருடன் கூட்டணி வைப்பார்கள், யாருக்கு எங்கே வெற்றி வாய்ப்பு, யாருக்கு கட்சியில் சீட் கிடைக்கும், கூட்டணிக்கு எந்தத் தொகுதி கை விட்டுப் போகும், கூட்டணி மந்திரி சபையா, தனித்தே ஆட்சியமைப்பா... இப்படி ஆயிரம் கேள்விகள். அடிமட்டத் தொண்டன் முதல் கட்சிக்கு தொடர்பே இல்லாத மக்கள் வரை இந்த கேள்விகள் கடந்த பத்து நாட்களாக ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது.

mobile_tower_152754f.jpg

நேரடியாக இதில் ஆதாயம் அடைய வாய்ப்பில்லாத மக்களுக்கே இப்படி என்றால், ஆட்சி அதிகாரம் என்கிற ராஜகிரீடத்தை இத்தனை ஆண்டுகாலம் மாற்றி, மாற்றி அனுபவித்தவர்களுக்கும், ஒருமுறையாவது அந்த  'அதிகாரத்தை' ருசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கும் தேர்தல் என்பது லேசுப்பட்ட விஷயமல்ல.  

ஒரு பேஷண்டை பிழைக்க வைக்கவே தேர்ந்த மருத்துவர்குழு தேவைப்படுகிற போது, இப்படி கட்சியைப் பிழைக்க வைக்கவும், ஆட்சியைக் கைப்பற்றவும் நடக்கும் ஆபரேசனுக்கு ஒவ்வொரு பார்ட்டியிலும் ஒவ்வொரு பெயரை வைத்திருக்கிறார்கள். அதில்தான் எத்தனை வண்ணங்கள்...

மகாபாரதமே தோற்கும் வியூகங்கள்

ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இன்னபிற காவியங்களிலும் வெளிப்படுகிற அரசியல் தன்மைகளை,  நிகழ்கால அரசியல் ஆபரேசனோடு ஒப்பிடுகையில்,  அந்த 'காவியங்கள்' கடுகளவே என்பது தெரிந்து விடும். அதில் சில காட்சிகள்தான் இங்கே....

காட்சி-1

சென்னையில் மிக உயரிய காவல் பொறுப்பில் இருக்கிறவர் அந்த அதிகாரி. (முதலில் இவரிடமிருந்தே ஆரம்பிப்போம்)  காவல் உயர் அதிகாரிகள் கூட அவரிடம் மரியாதையும், பயமுமாக நடந்து கொள்வார்கள். அந்த மரியாதைக்கு கொஞ்சமும் குந்தகம் விளைவிக்காதபடி அவரும் அதே மரியாதையை திரும்பக் கொடுக்கிறவர்தான்.

lens2.jpg

விஷயம் அதுவல்ல,  அனைவரும் மதிக்கும் அவரிடம் மட்டும்தான் குறிப்பிட்ட அந்த தலைவர் பேசுவார்... அவரை பேச வைக்க இவரால் மட்டுமே முடியும்.

 ஆம்... யார் பேசினாலும் முரண்டு பிடிக்கிறவர் என்ற முத்திரையுடன் வலம் வரும்  அந்த 'வடமாவட்ட 'ஃபவர்- லீடர்' , இந்த அதிகாரி  டி.எஸ்.பி.யாக  சர்வீசில் சேர்ந்தபோதே அறிமுகம் ஆனவர். இவருடைய நேர்மை, கண்ணியமான வார்த்தைகளால் ஈர்க்கப்பட்ட அந்த தலைவர்,  இவரிடம் மட்டும் 'ஊசி' யால் குத்தும் வார்த்தைகளை தவிர்த்து வந்தார்.  இன்றுவரை அந்த உறவு நீடிக்கிறது
                                                                                                                                                                                                                                                                               தலைவர்களை மடக்கும் டெக்னிக்:

பெயரளவில் வெறும் சங்கம்,  ஒரு அமைப்பு போல சமுதாயத்தை வழி நடத்திக் கொண்டு இருந்தவர், அதை அரசியல் கட்சியாக மாற்றும்போது இவரிடம்தான் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டம்-ஒழுங்கு போன்ற  ஆலோசனைகளை கேட்டு அதன்படியே அந்த சங்கத்தை கட்சியாக கொண்டு போனார் என்கிறார்கள்.

இவர்களின் மதிப்பான இந்த உறவை,  இந்த நெருக்கத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி, மாறி ஆட்சி புரிந்தோர் தங்களுக்கான கூட்டணி முடிவுக்கு பயன்படுத்தி  வந்துள்ளனர்.

அந்த அதிகாரியும் சம்பாதிக்கும் எண்ணத்தை விட்டு விலகி நிற்கிற கேரக்டர் என்பதால், மாவட்டத்தில் அதிகார பதவிகளுக்கு ஆசைப்படாமல் ஏதோ அமைதியாகப் போகிறதே என்று இந்த சீட்டை நாடி வந்து நின்றவர். அதனால்  இது போன்ற டீலிங்குகளை அவர் பேசியே தீரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப் பட்டு விட்டார் என்கிறார்கள்.

கூட்டணியைப் பொறுத்தவரை பல வியூகங்களை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. குறிப்பிட்ட காவல் அதிகாரியோ, நம்பகமான  சிறு, சிறு அரசியல் கட்சித் தலைவர்களோ,  சில தொழிலதிபர்களோ கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளில் தூதுவராக செயல்பட்டு வியூகம் அமைத்து  வந்துள்ளனர்.
 
இந்த வியூகத்திலும் ஒன் பிளஸ் த்ரீ என்ற பாதுகாப்பான அம்சமே இதுவரையில் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இவர் இல்லையென்றால் அவரை வைத்து முடிக்கலாம் என்ற ஆல்டர் நேட்டிவ் மூவ் எப்போதுமே கைவசம் "அதிகார" மையங்களை வைத்திருப்போர் கைகளில் இருந்திருக்கிறது.

தூதுவர்கள் மாறுவர்

உதாரணமாக சொல்வதென்றால், கடந்த முறை "கட்சியை உருவாக்க"  காரணமாய் இருந்தவர் பேச்சையே அந்த  ஊசிக்குத்து பேச்சுக்காரர் கேட்காமல் போய்விட்டாராம். ஆகவே அடுத்தகட்டமாக "ஆல்டர்நேட்டிவ்" மூவ் கையிலெடுக்கப் பட்டது. ஆல்டர்நேட்டிவ் டீமைப் பொறுத்தவரை எப்போதுமே வாழ்வா, சாவா என்கிற இறுதியான காலகட்டத்தில்  களத்தில் இறக்கி விடப்படுகிறது.

அப்படி அவர்கள்  கொடுத்த  ஒரு ரூட் தான்,   அந்த ஊசிக் குத்து தலைவரின் குடும்ப திருமணத்துக்கு போவதற்கு முன்பே கூட்டணி உறவுக்குள் போக வேண்டியதாயிற்று என்கிறார்கள். இதை சாதித்தவர் 'இந்த' கால கட்டத்தில் ஒதுக்குப்புறமாக கடலோரத்திலும், முகாமிலும் ஒதுங்கி இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். அந்த கதையை பின்னர் பார்ப்போம்.


இந்த தேர்தலிலும் அதே தலைவர், அதே அதிகாரி... சீன் ஒன்றுதான்... ஆனால் அதிகார மையம் வேறு.  அசைன் மென்ட் கைக்கு வந்ததும், எப்போதும் போல இந்த அதிகாரி பல மூவ்களை மேற்கொண்டும் அந்த ஊசிகுத்தல் பேச்சுக்காரர் இறங்கி வரவில்லை. வேறு வழியில்லாமல் விஷயத்தை அவர் மேலே கொண்டு போய் விட்டார். இதையடுத்து அந்த ஆல்டர்நேட்டிவ் ஸ்மெல் டீம் களம் இறங்கியது.

ட்விஸ்ட் : 1

ஊசிகுத்து பேச்சுக்காரரை ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து எதிர்ப்பதாக ஒரு சூழல் உருவாக்கப்பட்டது.   ஊசிக்குத்து பேச்சு தலைவரை எதிர்த்து,  சமுதாய தலைவர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டதாக ஒரு 'காரிய'  பிரஸ் மீட்டுக்கு ( பிப்ரவரி 1, 2016)  மீடியாக்களில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டது.
 
ட்விஸ்ட் :2

அதிகபட்சமாக  ஐநூறு  பேர் வரை  இந்த பிரஸ் மீட்டுக்குப் போகலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால்,  ஐம்பதாயிரம் பேர் வரை இந்த பிரஸ் மீட்டுக்கு வரும்படி தலைக்கு இன்ன ரேட் என்ற அடிப்படையில் கூட்டம் திரண்டிருக்கிறது.  "இரண்டு லட்சம் பேருக்கு மேலே வந்திருப்பாங்க போலிருக்கே" என்று உண்மையாக வியப்பது போல "ஸ்மெல் டீமினர்" அதிகமாக கூவிக் கூவி  வியந்து, அந்த வியப்பை ஊடகங்களிலும், யாருக்குப் போய் சேர வேண்டுமோ அவர்களிடமும் சரியாய்க் கொண்டுபோய் சேர்க்க ஆரம்பித்தனர்.
  
“சரியோ, தவறோ ஏற்றுக் கொண்ட கருத்தில், விஷயத்தில் இவர் காட்டும் உறுதியை எனக்கு நிரம்பவே பிடிக்கும்” என்று அந்த தலைவரின் ஊடக திறப்பு விழாவின் போது முரசொலித்து குறிப்பிட்டார், அந்த மூத்தத் தலைவர். அதில் ஒன்றுதான்  இப்போது நடந்து முடிந்த மாநாட்டில், இவரையும், இருக்கிற பெரும்பாலான லீடர்களையும் அந்த ஊசிக்குத்து பேச்சுத் தலைவர் போட்டுத் தாக்கியதும் கூட..

http://www.vikatan.com/news/coverstory/60688-the-politics-of-intelligence.art

  • தொடங்கியவர்

பட்டி முதல் பட்டணம் வரை... ஆளத் துடிக்கும் அரசியல் வாரிசுகள்! (மினி தொடர்- 2)

 

ந்தியா முழுவதுமே வாரிசு அரசியல் பிரபலம். அதிலும் தமிழ்நாடுதான் அல்டிமேட். கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி-கனிமொழி, எம்ஜிஆர்-ஜெயலலிதா, ராமதாஸ்-அன்புமணி, மூப்பனார்-ஜி.கே.வாசன், ப.சிதம்பரம்-கார்த்திக் சிதம்பரம், விஜயகாந்த்-பிரேமலதா-சுதீஷ்... என தொடர்கிறது வாரிசுகளின் பட்டியல்.

இப்படி தமிழகத்தில் நமக்காக சேவை (!) செய்ய காத்திருக்கும் வாரிசுகள் யார் யார் என்ற இரண்டாவது  பட்டியலில் இம்முறை தி.மு.க வாரிசுகள் மட்டும்...

Veerapandi+Arumugam.jpgசேலம்

சேலம் மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக வைத்திருந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மகேஸ்வரி, செழியன், நிர்மலா, ராஜா என்கின்ற ராஜேந்திரன் ஆகிய நான்கு வாரிசுகள். தன் அரசியல் வாரிசாக செழியனை கட்சிக்குக் கொண்டு வந்தார் வீரபாண்டி ஆறுமுகம். சேலம் மாநகர இளைஞரணி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் செழியன். அப்போது தன் அப்பாவுக்கு இணையாக அரசியல் செல்வாக்குக்கொண்டவராக திகழ்ந்தார். அந்த சமயத்தில் திடீரென செழியன் 2011-ல் நோய்வாய்பட்டு இறந்து போனார். அந்த தருணத்தில், வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் ராஜா என்கிற ராஜேந்திரன், கல்லூரி மாணவர். செழியன் இறந்த பிறகு, தனது அரசியல் வாரிசாக இளைய மகனை 2003-ல் கொண்டு வந்து,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி வாங்கிக் கொடுத்தார். இந்த நிலையில் 2014-ல் வீரபாண்டியார் இறந்து விட்டார். தற்போது வீரபாண்டி ராஜாதான் சேலம் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்.

Balani+Manickam.jpgதஞ்சாவூர்

முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பழனி மாணிக்கத்தின் தம்பி எஸ்.எஸ்.ராஜ்குமார். இவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால், தஞ்சை தி.மு.க.வின் ஆல் இன் ஆளாக இருந்தார். இவரால்தான் பழனி மாணிக்கத்துக்கு எதிராக கோஷ்டிகள் உருவாகின என்று தி.மு.க.வினரே பேசினர். அப்போது தலைமைக்கு இது புகாராகப் போக,  பழனி மாணிக்கம் மாவட்டச் செயலாளர் பொறுப்பை இழந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் தன் தம்பியை களம் இறக்க நினைக்கிறார். அவருக்காக தஞ்சை, ஒரத்தநாடு இரண்டில் ஒரு தொகுதியைக் கேட்டு பழனிமாணிக்கம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

நாகப்பட்டினம்

A_K_S_+Vijayan.jpgதிருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகேயுள்ள சித்தமல்லி கிராமம்தான் ஏ.கே.எஸ்.விஜயனின் சொந்த ஊர். இவரின் தந்தை ஏ.கே.சுப்பையா, கம்யூனிஸ்ட் கட்சியில் சீனியர். கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று கட்சியை வளர்த்தவர். தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். சுப்பையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டூர் தொகுதியில் நின்று தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அந்த சமயத்தில் திராவிட கட்சிகள் கோட்டூர் பகுதியில் நுழையவே முடியவில்லை.

அப்போது கம்யூனிஸ்ட் கட்சி,  விவசாய தொழிலாளர்கள் மாநாடு நடத்தியது. அதில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, ‘குடியிருப்போருக்கு நிலம் சொந்தம்’ என்று அறிவித்தார். ‘கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு பேனா மைத்துளியால் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியவர்’ என்று கருணாநிதியை பாராட்டினார் ஏ.கே.சுப்பையா. பிறகு சுப்பையாவின் பிறந்த நாளுக்கு அவரை கருணாநிதி சந்தித்து வாழ்த்தும் சொன்னார். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சுப்பையாவை நீக்கினார்கள். அதுவரை கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளாமல் இருந்த அவருடைய மகன் விஜயனை, குறிவைத்து அரசியலுக்கு தி.மு.க. இழுத்தது.  ஒன்றிய துணைச் செயலாளர், ஒன்றிய செயலாளர் என பதவிகள் விஜயனுக்கு வழங்கப்பட்டன. மெள்ள மெள்ள ஸ்டாலினுக்கு நெருக்கமாகி,  தி.மு.க சார்பில் நாகை நாடாளுமன்ற தனித் தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்றார். தி.மு.க.வில் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். இப்போது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியை குறிவைத்து சீட் கேட்டு இருக்கிறார்.

Poondi+Kalaivanan.jpgதிருவாரூர்

திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளராக இருந்தவர் பூண்டி கலைச்செல்வன். மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட, கட்சித் தலைமை கலைச்செல்வத்தின் விசுவாசத்துக்காக அவரின் சகோதரர் பூண்டி கலைவாணனை மாவட்டச் செயலாளராக்கியது. கருணாநிதிக்கு திருவாரூர் சொந்த ஊர் என்பதால் கடந்த தேர்தலில் அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தேர்தல் வேலையாக இருக்கட்டும், அதன்பிறகு தொகுதியை பார்த்துக்கொள்வதாக இருக்கட்டும் அனைத்தையும் கலைவாணன்தான் கவனிக்கிறார். இம்முறை அவருக்கு மாவட்டத்தில் சீட் வழங்கப்படலாம்.

தி.மு.க சீனியரான டி.ஆர்.பாலுவுக்கு சொந்த ஊர் திருவாரூர் மன்னார்குடிக்கு அருகில். டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா. எம்.பி.ஏ பட்டதாரி. இவர் கிங்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் குடும்பத் தொழில்களை கவனித்து வந்தார். 20011-ம் ஆண்டு தேர்தலில் ராஜாவை சொந்த ஊரான மன்னார்குடியில் களமிறக்கினார் பாலு. குறைந்த ஓட்டில் வெற்றியும் கண்டவர், எம்.எல்.ஏ ஆனார் ராஜா. இம்முறையும் மன்னார்குடி தொகுதிக்கு இவர்தான் வேட்பாளர் என்ற குரல் கேட்பதால், கட்சியின் சீனியர் நிர்வாகிகள் நொந்து போய் உள்ளனர்.

http://www.vikatan.com/news/politics/60761-heirs-of-dmk-leaders-in-fray-to-get-seats.art

  • தொடங்கியவர்

கூட்டணி முறியடிப்பும், 'தூது' டெக்னிக்குகளும்! ( இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்-3)

 

முதல் அத்தியாயத்தில், ஊசிக்குத்து தலைவர் மடங்கிய விதம்...இரண்டாவது அத்தியாத்தில், தேர்தல் நேரத்துப் போஸ்டிங்கின் பின்னணி குறித்து சொல்லியிருந்தோம்.

தலைநகரின் அதிகாரம் - இருவர்

சென்னை தலைநகராக இருப்பதால்,  இங்கிருந்துதான் முக்கிய ஆபரேஷன்களுக்கு கத்திகளும், கத்தியைப் பயன்படுத்தும் மீடியேட்டர்களும் அசைன்மென்ட்டை பெறுகிறார்கள். சென்னையில் கடந்த ஐந்தாண்டு காலமாக கீ போஸ்டிங்கில் தொடர்கிறவர்களில் பிரதானமானவர்கள் இருவர். ஒருவர் புன்னகை மாறாமல் ரிப்போர்ட்டைப் போட்டுவிட்டு படகை தள்ளிக் கொண்டு போகிறவர்.

ஆட்சிகள் மாறினாலும் இவருக்கான காட்சிகள் மாறுவதில்லை. நான் எப்போதுமே அரசு ஊழியன். ஆட்சியில் இருப்பவர்கள் சொல்வதையும், என்ன செய்தால் ஆட்சிக்கு நல்ல பெயர் வரும் என்பதையும் மட்டுமே எடுத்துச் சொல்லி உறுதியைக் கடைப்பிடிக்கிற கேரக்டர் என்று சொல்வதைப் போல இவருடைய அன்றாட செயல்பாடுகள் இருக்கும்.

Cellphone+tower600.jpg

இவருடைய அடிசனல் ரோல் என்னவென்றால், அரசுக்கு எதிராக எந்த தரப்பு கிளம்புகிறது என்பதை முன்னரே ஸ்மெல் செய்து அதை தொடக்கத்திலேயே தட்டி வைக்கும் வேலையை சிறப்பாக செய்வது இவருடைய பெஸ்ட் என்பார்கள். அந்த வகையில் தலைநகரின் 'ஆல் பார்ட்டி மூவ்'களை தனக்குக் கீழ் உள்ளவர்கள் மூலம் வாங்கி அதை 'கிராஸ் செக்' செய்வதோடு, அதை மேலதிகாரப் பார்வைக்கும் அனுப்பி விடுவார்.

இந்த விஷயத்தில் என்ன மாதிரியான ஸ்டெப் எடுக்கலாம், எதை செய்தால் சரியாக வரும் என்பதையும்  கூடவே, அடிசனல் நோட் ஆக போட்டு விடுவார்.

இன்னொருவர், ரோல் இதில் வராதது... இவருக்கான வொர்க் நேச்சரே வேறு. அதிகார மையத்துக்கு ஏற்றபடி 'கடமையாற்றக் கூடிய' நபர்கள் யார், யார் என்பதை மட்டும் சரியாக லிஸ்ட் எடுத்து தலைமைக்கு அதை அனுப்பி வைக்கும் வேலை மட்டுமே இவருடையது. ஆனால், இது சொல்லவும், கேட்கவும் எளிதானது போல் தோன்றும். ஆனால், இருப்பதிலேயே இந்த வேலையானது, கரணம் தப்பினால் மரணம் என்ற கதை போன்றது.

சிட்டியின் மூவ் மெண்ட்டை தீர்மானிக்கிற 'அந்த' ஒருவர் பிரதான தலையாக வெளியே தெரிந்தாலும், அந்த 'தலை'யே இவருடைய கண்ட்ரோலில் தான் இருந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதிகார மையத்துக்கும், ஆட்சி அதிகாரத்துக்கும் இணைப்புப் பாலமாக இருக்கின்ற சென்சிடிவ் 'அடிசனல்' போஸ்டிங் இதுதான். எல்லா ஆட்சி காலத்திலும் இந்த வகையிலான 'சீட்' ரொம்பவும் டிமாண்ட் ஆன சீட் என்பதால் தலைமையுடன் உற்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கே தேடிப்போய் வழங்கப்படுகிறது.

சிட்டியும், ஸ்டேட்டும்

சிட்டி லெவலில் ஒருவர் 'நோட்' போட... இன்னொருவர் நிர்வாகத்தை கவனிக்க.... அதே வேலையை ஸ்டேட் லெவலில் இருக்கிற மூலவர் போல் மதிக்கப்படுகிற மூவர் தனித்தனி கோப்புகளாக போட்டு  மேலிடத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில் எல்லாமும் இருக்கும். (இது தவிர 'கொக்கி ஏரியா' என்றும் ஒன்று இருக்கிறது).

இந்த கோப்புகள் அன்றாட செயல்பாடுகள் பற்றிய நடைமுறை  பதிவுகளாக மட்டுமே இருப்பவை. அதைத் தாண்டி கோப்பு - குறிப்புகளில் வராத பணிகள் நிறைய இருக்கும். அதில்தான் சுமைகள் அதிகம். அதில் கூட்டணி, சீட், வெற்றி வாய்ப்பு, சாதிய பலம், திடீர் குழப்பத்தை ஏற்படுத்துவது, சரியான மதிப்பீட்டை கணிப்பது,   எம்.எல்.ஏ.க்கள், இரண்டாம் நிலை லீடர்களை மடக்குவது என்று பல வெரைட்டிகள் அடங்கும்...

சாதி மாநாடுகளின் மறுமுகம்!

பலமான அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள் தவிர, சில சிறு கட்சிகள் தேர்தலை முன்னிறுத்தி எப்போதுமே அக்டோபரிலிருந்து பிப்ரவரி இறுதி வரை திடீர் மாநாடுகள் நடத்துவதை பார்க்கலாம். அந்த மாநாட்டின் நோக்கமும் பட்டவர்த்தனமாக வெளியில் தெரியும். ஆனால், சத்தமே இல்லாமல் இதே காலக்கட்டத்தில் அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட சாதிக்கட்சி மாநாடுகள் நடந்து விடுவதும் சற்று கூர்ந்து கவனித்தால் தெரியவரும்.

இதிலும் 'ஸ்மெல் ஏரியா' பணிதான் மேலோங்கி இருக்கிறது. குறிப்பிட்ட கட்சியின் தலைவரை அழைத்து, 'என்ன சார், உங்க சாதிக்காரர் கூட்டிய கூட்டத்தை பார்த்தீர்களா, ரெண்டு சீட்டு கொடுத்தா போதும்கறாரு... யோசிங்க' என்று 'அதிகமாய்' தொகுதிகள் கேட்டவரை அடக்கி அனுப்பி வைத்து விடுவார்கள். இது சரியாக க்ளிக் ஆனதும், சாதிக்கூட்டத்தை (போட்டியாக) கூட்டியவருக்கு வருங்கால 'வாரியம்' நீங்களே என்ற உறுதிமொழி கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டு விடும். ஒவ்வொரு ஐந்தாண்டின் இறுதியிலும் ஏதோ டைம் பாஸிங் போல இவைகள் நடப்பதைப் பார்க்க முடியும்.

Walky+Talky600.jpg

தூது ட்ரிக்:

மலையேறினாலும்... மச்சான் தயவு இருக்கணும்பா... அதுதான்பா என் வழி என்பதில் உறுதியாய் நிற்கும் தலைவர் அவர். அவருடைய ஏரியா ஸ்மெல் டீமுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் இதுதான். 'நான்கு பேரோடு ஐவராக அவர் போனால் போகட்டும், பிரச்னை ஏதுமில்லை. தேசிய கட்சியில் ஐக்கியமானாலும் ஆகட்டும். ஆனால், 'கிழக்கு வாசல்' பக்கம் மட்டும் அவரை தலை வைத்துப் படுக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்' என்பதே அது. அது மிக முக்கிய அசைன்மெண்ட்டாகவே ஸ்மெல் ஏரியாவினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்மெல் ஏரியாவினர், மாதக் கணக்கில் ரூட் போட்டு ஆட்களை கழற்றி, கழற்றி முடிந்தவரை அது தளர வைக்கப்பட்ட கட்சி என்றுதான் கோபக்காரத் தலைவரின் கட்சியை வெற்றிகரமாக மாற்றி வெற்றி பெற்றுள்ளது 'ஸ்மெல்' டீம். அப்படியே படகை இரண்டு பக்கமாக மாற்றி, மாற்றி ஓட்டிக்கொள்ளுங்கள். அது திசைமாறி 'கிழக்குவாசல்' பக்கம் மட்டும் வந்து விடக்கூடாது' என்று விவரமாக ஓதி அனுப்பியிருக்கிறார்கள்.

அடுத்த அசைன்மென்ட்: கோபக்கார மருத்துவர் எப்படியாவது போகட்டும். மனம் மாறி அவர் தேனாம்பேட்டைக்கு மட்டும் போய் விடக்கூடாது, அதில் எச்சரிக்கையாக இருங்கள்' என்பதுதான்.

முடிவு மக்கள் கைகளில்...

மாறி, மாறி ஆண்டு வந்தவர்களுக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்யும். அவர்கள் தரப்பும் இதற்கான 'தடுப்பாட்டம்' குறித்தும்  'அதிரடி மிரட்டல்' ஆட்டம் குறித்தும் ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு களத்தை தயாராக வைத்துள்ளனர். யாரிடம் இருக்கும் ஸ்மெல் மனிதர்கள் ஸ்ட்ராங் என்பதிலும், யாரிடம் இருக்கும் டீல் பேசும் வி.ஐ.பி.கள் ஸ்ட்ராங் என்பதிலும்தான் கடைசி சுற்று ஆட்டத்தின் முடிவு இருக்கிறது. மக்கள் வாக்களிப்பது என்பது கடைசி கட்ட எதிர்பார்ப்பே.

http://www.vikatan.com/news/coverstory/60881-the-politics-of-intelligence-mini-series.art

  • தொடங்கியவர்

'என்னைப் பத்தி நல்லதா ரிப்போர்ட் போடுங்கய்யா...!' (இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்-4)

 

சிக்குத்து தலைவர் மடங்கியது குறித்தும்... தேர்தல் நேரத்து போஸ்டிங் குறித்தும்... கூட்டணி முறியடிப்பும் - தூது டெக்னிக்குகள் பற்றியும் தொடர்ந்து மூன்று கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். இது நான்காவது கட்டுரை. இதில், போஸ்டர், சமூக வலைதளம் மூலம் செய்யும் அரசியல். 'சீட்' கேட்டு போடச் சொல்லும் ரிப்போர்ட்கள், ஆட்சி, யார் கைக்குப் போகும் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இருவர் ஒருவரான கதை

எங்கு போனாலும் அந்தத் தலைவரும், தலைவரோடு சமமாக பொறுப்பில் 'துணை'யாக  இருந்தவரும் தொண்டர்கள் மத்தியில் சமமாக மதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர், இனி நாம் நுழைவதற்கு ஏற்ற இடம் கிழக்கு வாசல்தான்தான் என்ற முடிவில் இருந்தவர். மற்றவர் அதைவிட ராயப்பேட்டையே என்ற முடிவில் இருப்பவர். அடுத்தடுத்த நாட்களில் இணை பிரியாத ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இந்த இரண்டு தலைவர்களுமே ஒருவர் மீது ஒருவர் தூற்றும் நிலை இயல்பாக நடப்பது போல் நடந்தது. இருதரப்பும் ஆதரவாளர்களை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒரு தரப்பு அலுவலகம், மறுதரப்பால் சூறையாடப்பட்டது. அதேநேரம் ஒரு தரப்புக்கு மட்டும் போலீசாரின் உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இரண்டாக உடைந்து நொறுங்கிய கட்சிக்கு இரண்டு தலைவர்கள் உருவாகினர். 'மேலே' என்ன ரிசல்ட் எதிர்பார்க்கப்பட்டதோ, அது கச்சிதமாக  நடந்து முடிந்தது. இதெல்லாம் ஸ்மெல் ஏரியாவின் ரொம்பவும் ரிலாக்ஸ்டான சின்ன வொர்க்தான்.

whatsap-facebook-twitter600.jpg

உடைந்து போன சங்கத் தலைவன்

"தனிப்பட்ட சாதிய பலம், அந்தத் தலைவருக்கு இருக்கிறதா என்று பாருங்கள்... நம்மை வைத்துதான் பலமே என்றால், அவரை டம்மி ஆக்கப் பாருங்கள். ஏற்கனவே அவர், சங்கத் தலைவர் என்று ரொம்பவே ஆட்டம் போட்டு விட்டார்" - இப்படியொரு வேலை ஸ்மெல் ஏரியாவினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொறுப்பு கைக்கு வந்ததுமே அது குறித்து கிராஸ் செக் செய்து விட்டனர் ஸ்மெல் டீமில். அந்த நடிகரின் பாதை 'கிழக்குத்திசை' நோக்கி இருப்பதாக  முதலில் ஸ்மெல் செய்தவர் தலைமையிடத்தில் இருக்கும் அந்த இளம் 'துணை' அதிகாரி. இப்படியான திறமைசாலிகளை எப்போதும் டிபார்ட்மென்ட் வெளியில் விடுவதேயில்லை. அடுத்தடுத்து இரண்டு பதவி உயர்வுகளை பெற்றும் கூட இவரை இதே ஏரியாவில் இழுத்துப் பிடித்து வைத்திருப்பது. இப்படியான விஷயஞானம் காரணமாகவே. அவரும் 'அந்த' சீட்டுக்குப் பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்.

 இந்த டுவிஸ்ட்டுக்குள் இன்னொரு டுவிஸ்ட் என்னவென்றால் நேற்று 'ஆண்ட' தரப்போடு இன்றும் விசுவாசம் வைத்திருக்கும் 'ஸ்லீப்பர் செல்' டீமுடன் இதே ஸ்மெல் டீமும் (இதில் மட்டும்) கைகோர்த்ததுதான். இப்படி பல நேரங்களில் சேம் சைடு கோல்களை  'அ(இ)வர்களும்' போட்டு மொத்தமாகக் கூடி கும்மி அடித்து விடுவார்கள். அதன் எதிரொலிதான் அவருக்கு கிழக்கு வாசலும் (தானே முன்வந்து) ஆதரவுக்கரம் நீட்டாமல் கைகழுவி விட்டதும்.

போஸ்டர், சமூக வலைதள அரசியல்

கட்சித் தலைமையின் கவனத்துக்கே வராமல்,  அடுத்தக்கட்ட தலைவர் ஆசையில் இருக்கும் 'ஒருவர்' சைலண்ட்டாக போட்ட ஆலோசனைக் கூட்டத்தை அம்பலப்படுத்தவும் எதிர்கோஷ்டியினர் ஒரு வழியைக் கையாள்கிறார்கள். கூட்டம் தொடர்பான 'ரெடிமேட் போஸ்டர்கள்' அடித்து முக்கிய பகுதிகளில் ஒட்டி விடுவார்கள். இதற்கான தலைமையின் ரியாக்‌ஷனை அப்படியே வாங்கி, அதை போஸ்டரே அடிக்காதவரின் கவனத்துக்கு கொண்டு போய், அதையும் இன்னொரு போஸ்டராக்கி ஒட்டத் தொடங்கி விடுவார்கள். அதேபோல்  ஆலோசனைக் கூட்டமே போடாதவரை போட்டது போல் ஒரு போஸ்டர் போட்டு ஊரெங்கும் ஒட்டுவார்கள். சில விருப்பு, சில வெறுப்பு, சில வேண்டுகோள்களின் அடிப்படையில் இவைகள் நடக்கும். (இந்த வேலைகளுக்கும் ஸ்மெல் ஏரியாவினர் பெரும்பாலான சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்)

வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக தொடர்பியல் சாதனங்கள் இதுபோன்ற ஆபரேஷன்களுக்கு வெகுவாகக் கை கொடுக்கிறது. கூர்ந்து கவனித்தால், இதுபோன்ற 'டுவிஸ்ட்டிங்' போஸ்டர்களில் பிரின்டர் முகவரி இருக்காது. இந்த டெக்னிக்கை 'லோக்கல் பாலிடிக்சுக்காக' பலரும் கையிலெடுக்க, சுதாரித்துக் கொண்ட 'ஸ்மெல்' ஏரியாவினர் பிரின்டர் முகவரி இல்லாமல் யாராவது போஸ்டர் அடித்துக் கொடுத்தால் அவர்களின் பிரின்டர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கத் தொடங்கினர். ஒரு உறையில் ஒரு கத்திதானே இருக்க வேண்டும் என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் அது.

காவல் நிலையங்களில் வரவேற்பு?

தமிழகத்தின் பிரமாண்ட அரசியல் நிலவரங்களைப் பார்த்தவர்களுக்கே சமீப காலங்களாக காணப்படும் ஒரு கிர்ர்ர் நிலை அவர்களையே குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அவர்களின் 'க்ளைமாக்ஸ்' கணிப்புகள் எப்போதுமே மிஸ் ஆவது இல்லை. ஆனால், இம்முறை அதில் கொஞ்சம் இடியாப்ப சிக்கல் நீடிக்கிறது. அரசுத்துறை வட்டாரங்களில், குறிப்பாய் காவல் நிலையங்களில் எந்த கரை வேட்டிகளுக்கு பிப்ரவரி- மார்ச்களில் அதிக வரவேற்பு கிடைக்கிறதோ, அவர்களே 'கோட்டை'யில் பரிவட்டம் கட்டிக் கொள்வார்கள்.

இந்த முறை, குறிப்பிட்ட இரண்டு முக்கிய கட்சிகளுக்குமே இந்த ஏரியாக்களில் 'சேம்' வரவேற்புதான் கிடைக்கிறதாம். சின்ன பர்சன்டேஜ் வித்தியாசத்தில் மற்றவருக்கு வழி விட்டு விடக்கூடாது என்பதில் இரு தரப்புமே அவரவர் ஆதரவு ஸ்மெல் டீமின் உதவியோடு உறுதியைக் கடைப்பிடிக்கின்றன.

இதுபோக, மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கும் நால்வர் டீமும்  தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. காந்தகத்தில் ஒட்டிக் கொள்வது போல் காத்திருக்கும் சிறு கட்சிகளின் ஆதரவால் கூட அடுத்தவருக்கு பர்சன்டேஜ் கூடிவிடக் கூடாது என்பதிலும் இரு தரப்பினரும் உறுதி காட்டுகின்றனர். அந்த வேலையையும் சேர்த்தே பார்க்க வேண்டிய பொறுப்பு ஸ்மெல் ஏரியாவில் பலருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Walky+Talky600.jpg

சீட்டுக்காகவும் ரிப்போர்ட்

"சார், தலைவா, அய்யா, என்னையப் பத்தி கொஞ்சம் நல்லதா ரிப்போர்ட்டைத் தட்டி விடுங்கள். நான் செய்த கட்சிப்பணி, என் செல்வாக்கு, பணபலம், சாதிய பலம், வெற்றி வாய்ப்பு அப்படி இப்படின்னு கொஞ்சம் நல்லதா தூக்கி எழுதி கை தூக்கி விடுங்கப்பா... நான் ஜெயித்து வந்ததும், உங்களை அதே மாதிரி கை தூக்கி விடுறேன்" என்று சீட்டுக்கு பணம் கட்டியிருக்கும் கனவு ஆசாமிகள், ஸ்மெல் ஏரியாவில் உள்ளவர்களைத் தேடித்தேடி கெஞ்சுவதும் இந்த கால கட்டத்தில் சாதாரணமாக பார்க்கக் கூடியவைகள். அவர்களின் ரிப்போர்ட் எப்படி இருக்கின்றது என்பது வேறு விஷயம்.

ஸ்மெல் குறித்த சகல மூவ்களும் கீழ்மட்டம் வரை எப்படி கொடிய வியாதியாக பரவி... அது ஊரறிந்த சினிமா ரகசியம் போல் ஆகி விட்டிருக்கிறது என்பதற்கான பல சாட்சிகளில் இதுவும் ஒன்று. இது மிகவும் ஆபத்தானதும் கூட. 'ஸ்மெல் ஏரியாவில் இருப்பவர்கள் மட்டும்தான் 'டிபார்ட்மெண்ட்', பிறர் ஒன்றுமே இல்லாதவர்கள்' என்ற நீர்த்துப் போன மனநிலைக்கு அவர்களை கொண்டு வந்து விட்டு விடும். அது நாளடைவில் சாமான்ய மக்களுக்குள்ளும் ஊடுருவ தொடங்கி விட்டால், 'காக்கி' என்ற பெயரை மக்கள் ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தின் கீழ் செயல்படும் 'வணிக' மையமாகவே கருத ஆரம்பித்து விடுவர். இந்த நிலைக்கு 'அந்த' துறையை மாற்றியதும் தவறு. அவர்கள் சூழ்நிலை காரணமாகவோ, தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காகவே இந்த சூழ்நிலைக்குள் வந்து விட்டதும் தவறு.

பார்ட்டி ஆபீஸ் ஸ்மெல்லர்கள்:

எழுபதுகள் வரையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தன. குறிப்பிட்ட அரசியல் கட்சியின் லீடர்கள் 'மூவ்' எப்படி என்பதைக் கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்ட ஸ்மெல் குழுவினர், ஏதாவது ஒரு டீக்கடையில் 'அஞ்சல்பெட்டி 520' என்ற படத்தில் வரும் நேபாளி ஸ்மெல் பார்ட்டி போல தலை கலைந்து, துணி கிழிந்து உட்கார்ந்து, வாரக் கணக்கில் காத்திருந்து சொன்ன வேலையை முடித்தனர். காலப்போக்கில் கட்சிகளும், சாதிய அமைப்புகளும் பெருகி நிற்கவே வேறு வழியில்லாமல் ஸ்மெல் டீம் எண்ணிக்கை கூடியது. சராசரி ஆட்கள் போல மாறியும், ஆடைகளில் வித்தியாசம் காட்டியும் வலம் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு கட்சி அலுவலகத்துக்கும், ஒவ்வொரு சாதி அலுவலகத்துக்கும் ஒரு ஸ்மெல் அதிகாரி பிரத்யேகமாக போடப்பட்டனர். அவர்களின் ரிப்போர்ட்டை பில்டர் செய்ய, ஒரு மேலதிகாரியை மண்டல வாரியாக நியமித்தனர். அந்த மண்டல அதிகாரியானவர், கீழ்மட்ட லெவலில் ஒருபோதும் பேச மாட்டார். அவருடைய தொடர்பின் விரிவாக்கமானது 'எந்த கூட்டணிக்கு போனால் சரியாக வரும்?' என்று தலைவர்களுக்கே ஆலோசனை சொல்லுமளவு வளர்ந்து விடும். அதே நேரம் கீழ்மட்ட ஆட்களிடம்  பேசிப்பழகிக் கொள்ளவும் ஒருவர் 'சைலண்ட்' ஆக போஸ்ட்டிங் செய்யப்பட்டிருப்பார். 

உதாரணமாக, 2015-ல் இப்படி கீழ்மட்ட ஆட்களிடம் பேசி பழக ஒருவரை போஸ்ட் செய்துள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அவர், தன்னுடைய சர்வீஸ் முடிகிற சில ஆண்டுகளுக்குள், அவர் லெவலில் (கீழ்மட்ட) இருந்த ஓரிருவர் பெரிய லீடராக வளர்ந்திருப்பார். அப்போது அவர் யார் சொன்னாலும் நம்ப மாட்டார், கேட்க மாட்டார். முப்பது வருடமாக பேசிப்பழகி வந்த இவரைத்தான் நம்புவார். இப்படி ஒரு லீடரையே தன் சொல்லுக்கு கட்டுப்பட வைத்திருக்கும் ஸ்மெல் பார்ட்டிகளை டிபார்ட்மென்ட்டும் உரிய காலத்தில் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதில்லை. உங்கள் சேவை இந்த நாட்டுக்குத் தேவை என்பது போல, அவரை பணி நீட்டிப்பு கொடுத்து தக்க வைத்துக் கொள்வார்கள். ஆக, இது காலந்தோறும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் ஒரு சங்கிலித் தொடர் என்றுதான் சொல்ல வேண்டும்.

http://www.vikatan.com/news/coverstory/60982-the-politics-of-intelligence.art

 

  • தொடங்கியவர்

அன்று ஒற்றர்கள்... இன்று ஸ்மெல்...! (இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்-5

 

சிக்குத்து தலைவர் கூட்டணிக்கு மடங்கிய கதை, தேர்தல் நேரத்து போஸ்டிங்குகள், கூட்டணி முறியடிப்புகளும், தூது டெக்னிக்குகளும் ஆகிய தலைப்புகளில் 'இன்டலிஜென்ஸ் அரசியல்' மினி தொடரை மூன்று பகுதிகளாக வெளியிட்டு வந்தோம். நான்காவது பகுதியில், போஸ்டர் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலையும், அரசியல் கட்சியில் சீட் கேட்டு போடச் சொல்லும் ரிப்போர்ட்கள் வரையில் சொல்லியிருந்தோம். இது, இறுதி (ஐந்தாவது) பகுதி.

'இன்ட்' - எனப்படும் உளவுப்பிரிவின் பணிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி அரசியலோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த என்னுடைய சேகரிப்பினை நானே குறுக்காய்வு (கிராஸ்-செக்) செய்த பின்னரே பதிவிட வேண்டும் என்ற முடிவுடன் பலரைச் சந்தித்தேன். அதில் ஒருவர், உச்சி முதல் பாதம் வரை என்பார்களே அது போல இன்ட் விவகாரத்திலேயே ஊறித் திளைத்தவர். அவரைப் பற்றியும், அவர் அனுபவத்தில் ஒன்றைப் பற்றியும் இங்கே பதிவிட்டு தற்போது இந்த மினி தொடரை முடிக்கிறேன்.

Cellphone+tower600.jpg

முப்பதாண்டு காலம், ஏழு முதல்வர்களை தன்னுடைய சர்வீசில் பார்த்தும், சர்வீஸ் முடிந்த நிலையிலும் இவருடைய பழுத்த அனுபவத்தை  டிபார்ட்மெண்ட் பல்லாண்டுகள் பயன்படுத்திக் கொள்ளும் அளவு இவரின் தேவை கவனிக்கப்பட்டிருக்கிறது. நாம் தொகுத்தளித்த பல விபரங்களை இவரிடம் 'க்ராஸ் செக்' செய்த போது 'டிபார்ட்மெண்ட் பாசம்' இன்னும் பட்டுப் போகாமல் இருப்பதை உணர முடிந்தது. ஆம், அந்த ஒற்றுப்புலி ஆம் என்றோ, இல்லை என்றோ நம்முடைய பயணக்குறிப்பை மறுதலிக்கவில்லை. மாறாக, மெல்லிதாய் ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்தது. கழுகின் கூர்மையைக் கொண்ட அவர், எண்பதைக் கடந்தவர். சென்னையில் பலருக்கு ஸ்மெல் என்றால் என்ன என்று வகுப்பெடுத்தவர். டெக்னாலஜி வளராத காலத்திலேயே பல விஷயங்களில் அசத்தியவர். அவருடைய நினைவுப் பதிவிலிருந்து வெளிப்பட்ட ஒரு சாம்பிள் இது.
 
''சமாதியாகி விட்ட வழிபாட்டுக்குரிய தலைவர் அவர். முதல்முறை முதல்வரான சமயம் அது. அவருடைய மூவ்மென்ட்டை பார்த்துச் சொல்ல அவருடைய தோட்டத்துக்கே நம்பகமான நால்வரை ஏதோ ஒரு ரூட்டில் வேலைக்கு அனுப்பி வைத்தார், இப்போதும் இருக்கின்ற அந்தத் தலைவர். ஆரம்பத்தில் அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் 'அவையில்' பொளந்து கட்டி வந்தார், ஆட்களை அனுப்பி வேவு பார்க்கச் சொன்ன அந்த எதிர்க்கட்சித் தலைவர்.

வேவு பார்க்கப் போனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஒவ்வொரு கூட்டத்திலும் எதிர்க்கட்சித் தலைவர், புள்ளி விபரங்களாய் போட்டுத்தாக்க, முதல்வர் சீட்டில் இருந்த அந்தத் தலைவர் பதில் சொல்ல திணறினார். எதிர்க்கட்சிதலைவர் இதை வெகுவாக ரசித்தார், வெற்றிப் புன்னகை புரிந்தார். முதல்வர் சீட்டுக்குச் சொந்தக்காரர் தலையைப் பிய்த்துக்கொண்டு, ஒவ்வொரு நாளையும் திணறலாகவே கழித்தார். ஒருநாள் முதல்வர் மிகவும் சோர்வுடன்  கார்டனில் இருந்ததைப் பார்த்த அன்றைய ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர், பதறிப் போயிருக்கிறார். ''தலைவரே உங்களுக்கு என்னாச்சு?'' என்று விசாரித்துத் தெரிந்து கொண்டுவிட்டு, "தலைவரே இன்னும் சில மணி நேரத்தில் உங்க பிரச்னையை சரி செஞ்சுடறேன்" என்று ஆறுதலைக் கொடுத்துவிட்டு எங்களை வந்து பார்த்தார். ''சீக்ரெட் எப்படி வெளியே போகுதுன்னு எனக்குத் தெரிஞ்சாகணும். உங்ககிட்டே வந்தால் எல்லாம் சரியாகிடும்ணு  தலைவர்கிட்டே சொல்லிட்டுதான் வந்திருக்கேன். உங்க பதிலைத்தான் தலைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்'' என்றார். இதைத் தொடர்ந்து, நாங்களும் அதில் தீவிரமாக கவனம் செலுத்தினோம். மொத்தக் கதையும் வெளியே வந்து விட்டது.

முதலில் தலைவரின் (முதல்வர்) ரூட், அவர் எங்கெங்கு போகிறார்? என்னவெல்லாம் சாப்பிடுவார்? யார், யாரை எப்போதெல்லாம் சந்திப்பார், அவருடைய உதவியாளர்கள், சமையல்காரர்கள் யார்? அவர்களின் வீடுகள் எங்கு இருக்கிறது? தலைவரோடு நெருக்கத்தில் இருக்கும் நண்பர்கள் யார்? தலைவர் பொதுவாக எந்த மாதிரியான இடங்களில் இயல்பாகப் பேசுவார். இப்படி அவருடைய ஒரு மூவ்மெண்ட்டையும் தனித்தனியாக 'நோட்' போட்டுக் கொண்டு வேலையில் இறங்கினோம்.

மொத்தம் ஏழு டீம். யார் கையில் என்ன வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இந்த டீமில் உள்ளவர்களுக்கே தெரியாதபடி கவனித்துக் கொண்டோம். அதுதான் முதலில் முக்கியமான விஷயம். இல்லையென்றால் வேலை நடக்காது, குழப்பங்கள்தான் மிஞ்சும். தலைவரிடம் நான்கு நாள் மட்டுமே அவகாசத்தைக் கேட்டு வாங்கினோம். இப்போது போல் அந்த காலத்தில் செல்போன் வசதிகள் இல்லை. எங்கள் டிபார்ட்மெண்ட்டிலேயே இன்ஸ்பெக்டர் லெவலுக்குத்தான் டேபிளில் லேண்ட் லைன் போன் இருக்கும். அதற்குக் கீழே உள்ளவர்கள் இன்ஸ்பெக்டர் இல்லாத நேரமாகப் பார்த்து அந்த அறையில் சென்று போன் பேசிவிட்டு வருவார்கள். சரி, இதைப் பேசுவோம். நாங்கள் செலக்ட் செய்த ஆறு டீமும் குறித்த நேரத்தில் சரியாக வந்து தங்களின் ரிப்போர்ட்டைக் கொடுத்து விட்டார்கள். ஏழாவது டீம் கொடுத்த ரிப்போர்ட்டை நானே ஸ்பாட்டுக்குப் போய் கிராஸ்- செக் செய்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

Walky+Talky600.jpg

பெரும்பாலும் தோட்டத்தில் கயிற்றுக் கட்டிலை போட்டு வைத்துக் கொண்டு இயற்கையான வெளிக்காற்றை திறந்த மார்போடு அனுபவித்தபடி தலைவர் இருப்பது வழக்கம். அங்கிருந்தபடியே பல விஷயங்களை முக்கியமான கட்சியினரிடம் விவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அங்கிருந்துதான் தகவல் 'லீக்' ஆகியிருக்கிறது. தலைவர் வீட்டுத் தோட்டக்காரர்களாய் வந்த அந்த நான்கு பேர்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதைக் கண்டு பிடித்தோம். வீட்டு வேலைக்கென்று தனி உதவியாளர் யாரையும் தலைவர் அப்போது வைத்துக் கொண்டிருக்கவில்லை. முக்கியமானவர்கள் யாராவது வீட்டுக்கு வந்து விட்டால், இளநீர் பறித்து வெட்டிக் கொடுக்கவும், சுக்கு காப்பி போட்டுத் தரவும் இந்த நான்கு பேர்தான் இருந்துள்ளனர். நான்கு பேருமே வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திடகாத்திரமான பட்டதாரி இளைஞர்கள். எங்களுடைய டிபார்ட்மெண்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யார் மூலமாக தலைவர் வீட்டுக்கு வேலையாட்களாக நுழைந்தார்கள் என்பது உள்பட அத்தனை தகவலையும் திரட்டி விட்டோம்.

அங்கிருந்த மரங்களிலும், முக்கிய இடங்களிலும் 'பொருத்தப்பட்டிருந்த' சமாச்சாரங்களையும் தலைவரிடம் காட்டினோம். (அதற்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்து நிற்கும் போதெல்லாம் தலைவரும் அப்படியே பிளேட்டை திருப்பி விடுவது போல் குழப்பமான விஷயங்களாக அள்ளி விட்டதும் மறுநாள் அது எதிர்முகாமில் அதைவிட குழப்பங்களை ஏற்படுத்தியதும் மறக்க முடியாத நினைவலைகள்)

கையும் களவுமாக சிக்கிக் கொண்ட அந்த இளைஞர்கள், "எங்களை மன்னிச்சுடுங்க ஐயா, ஏதோ ஒரு வேகத்தில் நடந்திடுச்சு. வேலையை விட்டு மட்டும் அனுப்பிடாதீங்க" என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டனர். அந்த இளைஞர்களைப் பார்த்து தலைவர் இப்படி சொன்னார், "தம்பீங்களா, அங்கே உங்களுக்கு என்ன கொடுக்கறாங்களோ அதை நீங்க எப்போதும்போல மறுக்காமல் வாங்கிடுங்க, அவங்களுக்கு எந்த சந்தேகமும் உங்க மேலே வந்திடாமல் பார்த்துக்கங்க. நான் உங்களுக்கு செய்ய வேண்டியதை நிறையவே செய்யறேன். இதில் ஏதாவது குளறுபடி ஆச்சுன்னா, நான் ஒரிஜினல் ஸ்டைலுக்கு மாறிடுவேன்" என்றார். அந்த இளைஞர்கள் இதற்குப்பின்னும் மாறுவார்களா, என்ன?

இதற்குப் பின் வந்த நாட்களில் அவையில் புள்ளி விபரங்களோடும், தலைவர் நாளைக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அதற்கு முதல்நாளே அச்சு அசலாக பேசிய அந்த எதிர்க்கட்சித் தலைவர், பின்னர் தவறான, ஆதாரமற்ற விஷயங்களை பேசி அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொண்டார். பிற்காலங்களில், அந்த எதிர்க் கட்சித்தலைவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று விசாரித்தேன். நெருக்கடி காலங்களில் தனிப்பட்ட கோபம் காரணமாக, தன்னையும், தன் பிள்ளையையும் தப்பிக்க முடியாதபடி சிக்க வைத்தவர் இந்த தலைவர்தான், ஆகவே அவரை பழி வாங்கவே இப்படி நடந்து கொண்டேன் என்று அந்த எதிர்க்கட்சி தலைவர் பலரிடமும் சொல்லியதாக அறிந்து கொண்டேன்.

ஆக, இந்த ஸ்மெல் விவகாரம் ஏதோ இன்று நேற்று புதிதாய் முளைத்தது அல்ல. மன்னர் காலத்தில் ஒற்றன் எப்படியெப்படி பயன் பட்டாரோ அப்படித்தான் இன்றும் நடைமுறை இருக்கிறது. இன்று மன்னர்கள் இல்லை, மந்திரிகள் இருக்கிறார்கள். ஒற்றர்களுக்குப் பதிலாக நாங்கள் இருக்கிறோம் அவ்வளவுதான் இதில் வித்தியாசம்" என்றார், சாதாரணமாக...!
http://www.vikatan.com/news/coverstory/61065-the-politics-of-intelligence.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.