Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தகப்பண்பாடு அருகி வருகிறதா? இன்று உலக புத்தக தினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகப்பண்பாடு அருகி வருகிறதா? இன்று உலக புத்தக தினம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்


நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்றும் நல்ல புத்தகங்களே சிறந்த வழிகாட்டிகள் என்றும் வாசிப்பே மனிதனைப் பூரணப்படுத்துகின்றது என்றும் பேசப்பட்ட கால கட்டம் மெல்ல மெல்ல நழுவிச் செல்வதைப் போல இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் புத்தகங்களை பதிப்பிப்பதும் புத்தகங்களைப் பெறுவதும் மிகவும் அரிதாக இருந்தது. அப்போது வாசிப்பும் புத்தக தேடலும் புத்தக பாதுகாப்பும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தொடர்பாடலில், பதிப்புத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளும் பாய்ச்சல்களும் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் புத்தக வாசிப்பு மிகவும் கவலைக்கிடமாகவல்லவா இருக்கிறது? 

இன்று உலக புத்தக தினமாகும். இதனை பதிப்புரிமை நாள் என்றும் அழைக்கிறார்கள். வாசித்தல் மற்றும் பதிப்பித்தல் ஊடாக பதிப்புரிமை சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த நாளை யுனஸ்கோ அறிவித்தது. பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் "அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்" என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.    

புத்தகங்கள் கால கட்டங்களின் சரித்திரமாகவும் எதிர்வரும் கால கட்டங்களின் வழிகாட்டியாகவும் முக்கியம் பெறுகின்றன. அவை அறிவுச் சொத்துக்கள். இன்னொரு சந்ததிக்குரியவை. புத்தகங்களை பாதுகாத்து நம்முடைய தலைமுறைகளுக்கு வழங்க வேண்டிய பிரக்ஞையை எத்தனை பேர் கொண்டிருக்கிறோம். இதனால் வரலாறு, பண்பாடு, வாழ்வியல் அறியாத தலைமுறைகளுக்கு வித்திடுகிறோம். எனவே புத்தகங்களை பதிப்பிப்பதும், வாசிப்பதும், பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானவை. 

இன்றைக்கு ஒரு புத்தகத்தை பதிப்பிப்பது மிகவும் சுலபமாகிவிட்டது. அந்தளவுக்கு அச்சியந்திரங்கள் பெருகிவிட்டன. வசதிகள் பரவலாகிவிட்டன. அதனால் இக் காலத்தில் நல்ல புத்தகங்களும் முக்கியமான புத்தகங்களும் பதிப்பிக்கப்படுகின்றனவா என்பதும் அவை உரிய வித்தில் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதைக் குறித்து சிந்திப்பதும் அவசிமானது. ஒரு காலத்தில் தமிழில் புத்தகங்களை பதிப்பிக்க நம்முடைய முன்னோர்கள் என்ன பாடுபட்டார்கள்? 

ஈழத்து நூல்களை, தமிழ் நூல்களை பதிப்பிற்க ஆறுமுகநாவலர் பெரும் முயற்சிகளை எடுத்தார். சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்ற ஆறுமுக நாவலர் அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். அத்துடன் சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.

தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

நீண்டநெடிய பயணத்தின் ஊடாகவே, இத்தகைய முயற்சிகளின் ஊடாகவே ஈழத்து பதிப்பு முயற்சிகள் முனைப்புப் பெற்றன. ஒரு கால கட்டத்தில் ஈழத்துப் பதிப்பில் இருந்த நேர்த்தி இன்று இல்லாமல் போய்விட்டது என்றும் குறிப்பிடப்படுகிறது. போர்க்கால கட்டங்களில் கூட நேர்த்தி மிக்க புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தேசங்களில் உள்ள படைப்பாளிகள் தமிழகம் செல்லாமல், தாயகத்தில் வந்து புத்தகங்களை பதிப்பித்த சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. 

புத்தகப்பாண்பாடு என்பதன் மிக முக்கியமான இன்னொரு விடயம் வாசித்தலாகும். இன்றைய நவீன ஊடகங்களின் புழக்கத்தால் புத்தக வாசிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடியா என்பது புத்தகங்களையே அதிகமும் பாதித்திருக்கிறது. ஒரு விடயம் குறித்து கவர்ச்சியான முறையில் டிஜிட்டல் ஊடகம் வெளிப்படுத்தினாலும் புத்தகம் ஒன்றின் நேர்தியை, ஆயுட்காலத்தை, நிலையான தன்மையை, வாசிப்பு சுலபத்தை டிஜிட்டல் ஊடகங்களால் வழங்க முடியாதுள்ளது. 

டிஜிட்டல் ஊடகங்களில் வெளிவரும் விடயங்கள் ஒரு கட்டத்தில் புத்தகங்களாகின்றன. காரணம் அவற்றை புத்தகங்கள் ஊடாகவே பாதுகாக்க இயலும் என்பதை அவை ஏற்றுக் கொள்கின்றன. ஈ.புக் எனப்படும் மின்நூல் வடிவமும் புத்தக பதிப்புடன் தொடர்புடையது. இதனாலும் பதிப்பிக்கப்பட்ட புத்தகம் போன்றதொரு திருப்தியை ஏற்படுத்த முடியாதுள்ளது. ஆனால் புத்தக பதிப்பும் ஒரு டிஜிட்டல் வடிமாக இதன் ஊடே அடையாளம் பெறுகின்றது. 

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமாக இருந்தால் அவர்களின் அறிவை சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்று இன அழிப்பாளர்கள் திட்டமிடுகிறார்கள். அப்படித்தான் ஈழத்தில் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரும் நூலமாகமான யாழ் நூலகம் கிடைத்தற்கரிய புத்தகங்கள், பண்டைய ஓலைகளுடன் எரியூட்டப்பட்டது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மாபெரும் அறிவழிப்பு அல்லது அறிவிழப்பு ஆகும். அப்படியான மாபெரும் அனர்தத்தை சந்தித்தவர்கள் புத்தகங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்தவர்களாக வாழவேண்டும். 

இணையங்கள், சமூக வலைத்தளங்கள், இணைய இதழ்கள், இணைய விளையாட்டுக்கள், நவீன வாழ்க்கை போன்றவை புத்தக வாசிப்பிலும் புத்தக பதிப்பிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளன. இதுதான் இன்றைய காலத்தின் புத்தக பதிப்புத்துறையின் நெருக்கடியாகும். இதைக் குறித்து இன்றைய நாளில் அனைவரும் சிந்திப்பது அவசியமானது. ஒரு சமூகம் குறித்த வரலாற்று, மானுட சரித்திரமாக அமைவதுடன் ஒரு சமூகத்தை நல் வழிப்படுத்துவதில், அறிவை புகட்டுவதில் புத்தகங்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. நம்முடைய வாழ்வை செப்பனிடுவதில் புத்தகப் பாண்பாடு அவசியமானது என்பதை இந்த நாளில் உணர்ந்துகொள்வோம். 

குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131370/language/ta-IN/article.aspx

மொழிபெயர்ப்புகளைக் கொண்டாடுவோம்!

library1_2825499f.jpg
 

இன்று உலக புத்தக தினம்

 

 

*

உலகளாவிய அறிவுப் பகிர்தலுக்குப் பெரும்பாலும் நாம் மொழிபெயர்ப்புகளையே நம்பியிருக்கிறோம். அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகளை இந்த உலக புத்தக தினத்தன்று கொண்டாடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். இன்றைய தினத்தோடு உலகின் மகத்தான படைப்பாளிகளான ஷேக்ஸ்பியர், மிகைல் செர்வாண்டீஸ் இருவரும் இறந்துபோய் 400 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்தத் தருணத்தில் உலக மொழிகளிலிருந்தும் இந்திய மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வந்த முக்கியமான நூல்களை வாசகர்களுடன் இங்கே கொண்டாடுகிறோம்!

உலகம் ஒரே கிராமமாக ஆனதற்குத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, மொழிபெயர்ப்புகளும் காரணம். “ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். மொழிபெயர்ப்பு என்ற விஷயம் இல்லையென்றால் மவுனத்தை எல்லைகளாகக் கொண்ட வட்டாரங்களில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்’’ என்றார் ஜார்ஜ் ஸ்டெய்னர். மூல மொழிப் புத்தகங்களுக்குச் செய்யப்பட்ட துரோகங்களாகவே மொழிபெயர்ப்புகளை அறிவுஜீவிகள் கருதினாலும் எளிய மக்களோ நுட்பங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. மூல நூலின் ஆன்மா வந்து சேர்ந்தாலே ஒரு மொழிபெயர்ப்பின் நோக்கம் பெருமளவு வெற்றியடைந்துவிடுகிறது.

ராமாயணம் தொடங்கி…

மொழிபெயர்ப்பு என்ற வழிமுறைக்கு முன்பு மூல நூலிலிருந்து வழிநூல் உருவாக்குவதுதான் முன்னோடி. கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளுள் சில. மொழிபெயர்ப்பு என்பது ஓரளவு முறையான செயல்பாடாகத் தொடங்கியது கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகைக்குப் பின்புதான். 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழுக்கு அதிகம் மொழிபெயர்க்கப்பட்டவை மதங்கள் சார்ந்த நூல்களே. இதில் பாரதியாரின் பகவத் கீதை போன்றவையும் அடங்கும். எனினும் தாகூரின் படைப்புகள் போன்றவற்றின் மொழிபெயர்ப்புகள் மூலம் நவீனத் தமிழ் மொழிபெயர்ப்புகளின் முன்னோடிகளில் ஒருவராகவும் பாரதி ஆகிறார். தொடர்ந்து புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளும் உலக இலக்கியத்தைத் தமிழுக்கு முனைப்புடன் கொண்டுவருகிறார்கள்.

பொற்காலத் தொடக்கம்

மொழிபெயர்ப்புகளின் பொற்காலம் வங்க, ரஷ்ய மொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளிலிருந்தே இங்கு தொடங்குகிறது. இங்கே த.நா.குமாரசாமி, ஆர். சண்முகசுந்தரம் போன்றோர் குறிப்பிட வேண்டியவர்கள். தமிழ்ப் பதிப்புலகின் முன்னோடிகளுள் ஒருவரான சக்தி வை.கோவிந்தனும் தரமான இந்திய இலக்கியங்களையும் உலக இலக்கியங்களையும் தமிழில் வெளியிட்டார். ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் போன்றவை மலிவு விலையில் ரஷ்ய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு அறிவுப் புரட்சிக்கு வித்திட்டன.

எழுத்தாளரும் விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். மொழிபெயர்த்த புத்தகங்களால் இரண்டு மூன்று தலைமுறைகள் உலக இலக்கிய அறிவைப் பெற்றன. இதற்கிடையே நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாடெமி ஆகியவற்றின் மூலமாக இந்திய இலக்கியங்கள் தமிழ் வாசகர்களின் கைகளுக்கு வந்துசேர்ந்தன. வாசகர் வட்டமும் சில முக்கியமான புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறது.

தொடரும் பணிகள்…

1970-களில் க்ரியா பதிப்பகத்தின் வரவு மொழிபெயர்ப் புகளைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. ஆங்கிலம் அல்லாத மொழிகளிலிருந்து நேரடி மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்துவது போன்றவற்றில் க்ரியா முன்னோடியாக அமைந்தது. தொடர்ந்து காலச்சுவடு பதிப்பகம் மலையாளம், கன்னடம் போன்ற இந்திய மொழிகளிலிருந்தும் உலக மொழிகளிலிருந்தும் முக்கியமான மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. அடையாளம் பதிப்பகத்தால் தமிழில் வெளியிடப்படும் ஆக்ஸ்போர்டின் ‘சுருக்கமான

‘அறிமுகம்'

நூல் வரிசை, மருத்துவ நூல் மொழிபெயர்ப்புகள் முக்கியமான பங்களிப்புகள். கிழக்கு பதிப்பகம் வரலாறு தொடர்பான நூல்களை மூல நூல்கள் வெளிவந்த உடன் விரைவாக மொழிபெயர்த்து வெளியிடுகிறது. மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்கள், செவ்வியல் இலக்கியங்கள் போன்றவற்றை எதிர் வெளியீடு, சந்தியா பதிப்பகம் போன்றவை வெளியிடுகின்றன. இடதுசாரி சித்தாந்தம் தொடர்பான நூல்களின் மொழிபெயர்ப்புகளை சவுத் விஷன் புக்ஸ், விடியல் பதிப்பகம், அலைகள் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் போன்றவை வெளியிடுகின்றன. மதம், தத்துவம் தொடர்பான மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுவதில்

ஸ்ரீராமகிருஷ்ண மடம், நர்மதா பதிப்பகம் முன்னிலை வகிக்கின்றன.

மகாத்மா காந்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களின் தொகுதி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களின் தொகுதி போன்ற பெருந்தொகுதிகளின் சமூக முக்கியத்துவம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

சிறார் இலக்கியத்தைப் பொறுத்தவரை நேஷனல் புக் டிரஸ்ட்டுக்கு அடுத்ததாகத் தற்போது பாரதி புத்தகாலயத்தின் ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’ வெளியீடு, என்.சி.பி.எச்., தூலிகா பதிப்பகம், தாரா பதிப்பகம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

உலக / இந்திய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளில் தமிழ்ச் சிற்றிதழ்களின் பங்கு மிகவும் முக்கியமானது. கசடதபற, நடை, மீட்சி போன்றவற்றில் தொடங்கி இன்று காலச்சுவடு, உயிர்மை, புதுஎழுத்து போன்றவை வரை கணிசமாகப் பங்காற்றியிருக்கின்றன. மொழிபெயர்ப்புக்காகவே தமிழில் வெளிவரும் ‘திசை எட்டும்’ இதழும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.

எண்ணிக்கையும் தரமும்

தற்போது வெளியாகும் மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கையைப் பார்த்து நமக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவற்றின் தரத்தை உற்றுநோக்கும்போது பெரிதும் ஏமாற்றமே ஏற்படுகிறது. பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் காப்புரிமை பெற்றுச் செய்யப்படுகின்றனவா என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரிய ஊதியம் பெரும்பாலும் வழங்கப்படுவதும் கிடையாது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. எல்லாவற்றையும் விட மோசமானது, மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்துவதில் பல மொழிபெயர்ப்பாளர்களும் பதிப்பகங்களும் காட்டும் அசிரத்தைதான். இதனால் நம்பகத்தன்மையை இழந்து, விற்பனையாகாமல் பல நூல்கள் முடங்கிப்போகின்றன. உடனுக்குடன் கொண்டுவர வேண்டும் என்பதைவிட பொறுப்பாகக் கொண்டுவருவது முக்கியமல்லவா?

கடந்த ஒரு நூற்றாண்டுத் தமிழ் இலக்கியப் போக்கை உற்றுநோக்கினால் உலக இலக்கியத்துக்கு அது பட்டிருக்கும் நன்றிக்கடன் எவ்வளவு என்பது தெரியும். அதுதான் நம் மொழிபெயர்ப்பாளர்களின் வரலாற்றுப் பங்கு.

பெரிய வருமானமே புகழோ மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைப்பதில்லை என்றாலும் தங்களுக்குக் கிடைத்த உலக இலக்கியச் சுவையை நம் மக்கள் அனைவருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற பகிர்தல் தாகமே அவர்களை இயக்குகிறது. இந்த தாகத்துடன் திறமையும் செம்மையும் சேர்ந்தால் உலக இலக்கியம் ஆழமும் நயமும் குறையாமல் நம் மொழியில் கிடைப்பது உறுதி!

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.