Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I ராஜன் ஹூல்

Featured Replies

இனப் பிரச்சினைக்கு இன ரீதியான தீர்வு காண்பது ஆபத்தாக முடியும் என்றார் ஹாண்டி பேரின்பநாயகம். (செப்.18,1947)

இன அடையாளத்தைவிட நாமனைவரும் மனிதர்களே என்ற புரிதல் அவசியம் என்கிறார் லக்ஸ்ரீ ஃபெர்னாண்டோ அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில்.

சுயநிர்ணய உரிமை என்பது கருத்தியல் கோணத்தில் எழுப்பப்படக்கூடாது. ஆனால், அத்தகைய உரிமை பெறுவதால் சமூகம் முன்னேறமுடியும் என்ற சாத்தியக்கூறு இருக்குமாயின், அவ்வாறு செய்யலாம் எனவும் ஃபெர்னாண்டோ குறிப்பிடுகிறார்.

ஆனால், சுய நிர்ணய உரிமை வழியேதான் இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழமுடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

நாடு விடுதலை பெற்ற 1948லேயே மலையகத் தமிழர்கள் இனத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டார்கள். அந்த சோகம் தொடர்ந்திருக்கிறது. இந்த மோசமான வரலாறு முடிவுக்கு வர சுயநிர்ணய உரிமை அவசியம்.

நம் எல்லோருக்குமே பலவித அடையாளங்கள் உண்டுதான். இன, மொழி, மதம் என்று விரியும் அவை. ஆனால், அத்தகைய அடையாளங்களை எப்படி வரித்துக்கொள்கிறோம் என்பதையும் நோக்கவேண்டும்.

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் விரவியிருந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்டிருந்த அவர்கள் தேசத்திற்குச் செல்லாமல், மாறாக அவரவர் வாழ்ந்த நாடுகளிலேயே, ‘அந்நியர்’ மத்தியிலே தொடர்ந்து வசித்து, வளம் பெற்றனர்.

அதே போலவே 20ஆம் நூற்றாண்டிலும் கிழக்கு ஐரோப்பாவில் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாகிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்டிருந்த, பிரிட்டனின் பாதுகாப்பிலிருந்த காலனியில் குடியேற விரும்பவில்லை. மாறாக சோஷலிச ஐரோப்பாவையே அவர்கள் உருவாக்க முயன்றனர் என சுட்டிக்காட்டுகிறார் கார்ல் காட்ஸ்கி. தங்கள் எதிர்காலம் குறித்து அவர்கள் சுயமாக எடுத்த முடிவு அது. அவ்வாறாக தன்னெழுச்சியாக தீர்மானித்துக்கொள்வதே சுயநிர்ணய உரிமையாகும்.

இலங்கைத் தமிழர்கள்

1920களின் பிற்பகுதிவரையில் இலங்கைத் தமிழர்கள் சாதிகளால் பீடிக்கப்பட்ட ஒரு நிலவுடைமைச் சமுதாயமாகவே இருந்துவந்தனர். 1928 டொனமூர் ஆணையத்தின் சுயாட்சித் திட்டத்தின் விளைவாகவே தமிழர்களுக்கு அரசியல் அடையாளமும் உருவானது.

கூட்டுறவு இயக்கமும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸும் அத்தகைய அடையாளம் வலுப்பெறக் காரணமாயிருந்தன.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் காம்ப்பெல், வட, கிழக்கு மாகாணங்களுக்குப் பொறுப்பாக ரகுநாதனை நியமித்தார்.

ரகுநாதனின் முயற்சியில் அமெரிக்க பாதிரியார் வார்ட் யாழ்ப்பாண கூட்டுறவு வங்கியின் முதல் தலைவராக 1929இல் பொறுப்பேற்றார்.

வார்ட் தலைமையில் இயங்கிய கிறித்தவ சமய அமைப்பு, பள்ளிகள் பலவற்றை கிராமங்களில் நிறுவி, இலங்கையர்கள் ஆங்கிலம் கற்க உதவினர். அடித்தட்டு மக்களுக்கு இலவசக் கல்வி மட்டுமல்ல, இலவச உறைவிடமும் அளிக்கப்பட்டது

1924இல் தோன்றிய மாணவர் காங்கிரஸ் மீதும் அமெரிக்க மிஷனின் தாக்கம் இருந்தது. சமூக, பொருளாதார மேம்பாடு, பாரம்பரியக் கலைகள் மற்றும் இலக்கியத்தை மீட்டெடுத்தல் மற்றும் அரசியல் சுதந்திரம் உள்ளிட்டவையே அவ்வமைப்பின் முக்கிய நோக்கங்களாக பிரகடனம் செய்யப்பட்டது.

காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர் காங்கிரஸின் செயல்பாடுளை ஊக்குவித்தனர்.

(யாழ்ப்பாணக் கல்லூரி என்பது வட்டுக்கோட்டையில் ஒரு உயர்நிலைப் பள்ளிதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)

“நான் யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்தபோதுதான் ஹாண்டி மாஸ்டர் (பேரின்பநாயகம்) மாணவர்கள் மனங்களில் புரட்சிகர எண்ணங்களை விதைத்துக்கொண்டிருந்தார். பழமைவாத ஆசிரியர்களுக்கோ ஹாண்டியின் அணுகுமுறை சற்றும் பிடிக்கவில்லை.

Handy_Perinpanayagam“அவர் தனக்கு உணவு பரிமாற தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த ஒருவரை வைத்துக்கொண்டார். பள்ளியில் அச்சமூக மாணவர்களை பிக்நெல் பாதிரியார் சேர்த்தபோது மேல் சாதி ஆசிரியர்கள் கல்லூரியிலிருந்தே விலகினர். ஹாண்டி மட்டுமே அவருக்கு பக்கபலமாயிருந்தார். அம்மாணவர்களும் மற்றவர்களுடன் இணைந்து உண்ணும் உரிமையினையும் ஹாண்டி மாஸ்டர்தான் போராடி நிறுவினார். இவ்வாறு அவர் சமூக நீதிப் போராட்டத்தின் அடையாளமானார். அப்படித்தான் மாணவர் காங்கிரஸ் உருவானது. பின்னர் மாணவர் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸாகவும் ஆனது” என்கிறார் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சுப்பிரமணியன்.

டொனமூர் சுயாட்சித் திட்டம் அமுலானபோது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரும் மற்ற மாணவர்களுக்கு சமமாக அமரலாம் என்ற நிலை உருவானது. இதை எப்படி மேல் சாதியினர் ஏற்றுக்கொள்வார்கள்? மோதல்தான். மாணவர் காங்கிரஸ் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றது.

கிறித்தவர்கள் தூண்டுதலில் செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, விக்டோரியா கல்லூரி முதல்வர், பின்னாளில் சைவப் பெரியார் என அழைக்கப்பட்ட சிவபாதசுந்தரம், மாணவர் காங்கிரஸின் ஆறாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். அவரும் ஒத்துக்கொண்டார்.

மாநாட்டைக் குலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை முறியடிக்கப்பட்டன, சாதிரீதியான ஒடுக்குமுறைகளைக் களைவது தங்களது முக்கிய குறிக்கோள், சமூக நீதி இல்லாமல் அரசியல் விடுதலை வெறும் கானல் நீரே என காங்கிரஸ் தெளிவாக அறிவித்தது.

தமிழர்களும் கிறித்தவர்களும் தோளோடு தோள் நின்று செயல்படத்துவங்கினர், மதச் சார்பின்மை ஆழமாக வேரூன்றியது. அதன் பிறகு எவரும் பகிரங்கமாக சமய சார்பு நிலைப்பாடு எடுப்பதில்லை.

இதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸும், கூட்டுறவு இயக்கமும் இணைந்து அரசியல் விடுதலைக்கு அறைகூவல் விடுத்தன. ஒட்டு மொத்த தீவிற்கும் இவை முன்னோடியாகத் திகழ்ந்தன.

மேலே குறிப்பிட்ட ரகுநாதனின் முன்முயற்சியில் வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள மூலை எனும் சிற்றூரில் கூட்டுறவு மருத்துவமனை உருவானது. ஒரு மருத்துவரும் இரு கம்பண்டர்களும் இலவசமாகப் பணிபுரிந்தனர். அவர்கள் அர்ப்பணிப்பின் காரணமாக மருத்துவமனையின் புகழ் நாடெங்கும் பரவியது. மிகத் தொலைவிலிருந்த பருத்திமுனையிலிருந்து கூட பெண்கள் மகப்பேறுகாலத்தில் மூலைக்கே வந்தனர்.

இத்தகைய அமைப்புக்கள் வெறும் சமூகத் தொண்டோடு நின்றுவிடாமல் அரசியல் கல்வியையும் புகட்டின. சமூகத்தில் நெடுங்காலமாய் இருந்து வந்த அதிகார அமைப்புக்களைப் புறந்தள்ளி, புதிய அமைப்புகள்பால் தங்கள் கவனத்தைத் திருப்பவேண்டும், அவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

அரசியல் தீர்வு என்ற பெயரில் இணைந்து வாழ்ந்து வரும் இனங்கள் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கக்கூடாது, இன அடிப்படையில் தீர்வையும் கோரக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

எந்த ஒரு சமூகமும் ஒரு கூட்டமைப்பாக இயங்கவேண்டும். அரசு எந்த முடிவையும் சமூகத்தின் மீது திணிக்கக்கூடாது, பரந்து பட்ட மக்களைக் கலந்தாலோசித்த பின்னரே எந்த சட்டமும் இயற்றப்படவேண்டும் என்பார் ஹெரால்ட் லாஸ்கி. இந்தப் பின்னணியில் இலங்கை இனச்சிக்கலின் வரலாற்றை நாம் ஆராயலாம்.

ifl-5

தமிழர் அரசியலின் வரலாற்று ரீதியான வளர்ச்சி மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக பேராசிரியரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான ராஜன் ஹூல் எழுதிய தொடர் கட்டுரைகள் தி ஐலண்ட் பத்திரிகை மற்றும் கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் வெளியாகியிருந்தன. இந்த தொடர் கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் (கானகன்) செய்து முதலில் Patrikai.com வெளியிட்டிருந்தது. அந்த ஆறு பாகங்களைக் கொண்ட கட்டுரைகளில் முதல் பாகம் இங்கு தரப்பட்டுள்ளது.

 

http://maatram.org/?p=4456

  • தொடங்கியவர்

இலங்கை இனச்சிக்கல் – II

சுயாட்சிக்கு வழி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட டொனமூர் ஆணைய ஆலோசனைகளின் பின்னணியில் இளைஞர் காங்கிரஸின் தோற்றம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், சமூக நீதிக்கான முன்முயற்சிகள் இவை குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம்.

இந்தப் பின்னணியில்தான் இடதுசாரி அரசியலும் தமிழர் மத்தியில் செல்வாக்கு பெற்றது. ஆனால், அத்தகைய அரசியல், தீவிர இனவாதத்தின் விளைவாய் இன்று முற்றிலுமாக உருக்குலைந்து போயிருக்கிறது.

1927ஆம் ஆண்டில் ஆணையத்தை நியமித்தது பிரிட்டனின் குறிப்பிடத் தகுந்த சோஷலிஸ்ட் தலைவர் சிட்னி வெப். அப்போது அவர் காலனி நாடுகளுக்கான அமைச்சராயிருந்தார்.

அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் சம வாய்ப்புக்கள் என்பதே ஆணைய அறிக்கையின் தாரக மந்திரமாக இருந்தது. இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் ஒழிக்கப்படவேண்டும் எனவும் அது பரிந்துரைத்தது.

அன்றைய பிரபல தமிழர் தலைவர் பொன்னம்பலம் ராமநாதன் அப்போது 80 வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் அந்த தள்ளாத வயதிலும் ஆணையத்தின் முன் வந்து சாட்சியமளித்தார். என்னவென்று? இந்து வாழ்வியலுக்கு முரணானது அனைவருக்கும் வாக்குரிமை எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

அவர் மட்டுமல்ல ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தமிழர் தலைவர்களுமே பெண்களுக்கும், வேளாளர் அல்லாதோருக்கும் வாக்குரிமை அளிப்பது அராஜகத்திற்கு இட்டுச் செல்லும் என வாதிட்டனர்.

செப்டெம்பர் 27, 1928இல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்படுகிறது. அப்போதும் சில சட்ட மேலவை உறுப்பினர்கள் இது ஒருவகையில் சோஷலிசம், இதனால் நிதி நெருக்கடி உருவாகும் என்றனர்.

எழுத்தறிவு இருந்தால்தான் வாக்குரிமை கொடுக்கலாம் என ஆலோசனை கூறினார் ராமநாதன்.

Donoughmore means Tamils no more – அதாவது, டொனமூரின் பரிந்துரைகள் அமுலானால் தமிழர்களே அத்தீவில் வாழமுடியாது என்றும், வாக்குகளின் அடிப்படையிலான அரசு சிறுபான்மையினர் நலன்களை கடுமையாக பாதிக்கும், அவர்கள் இல்லாமலே போய்விடுவர் எனவும் ராமநாதன் எச்சரித்தார்.

nov1948

சட்ட மேலவை விவாதங்கள் குறித்து லண்டனுக்கு அறிக்கை அனுப்பிய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஸ்டான்லி வாக்குரிமை பெற எழுத்தறிவு அவசியம் என்றானால் கண்டித் தமிழர்கள் தகுதி பெற மாட்டார்கள் என்பதாலேயே அப்படி ஒரு யோசனையினை இராமநாதன் முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், இறுதியில் அனைவர்க்கும் வாக்குரிமை அளிக்கப்படலாம் என ஒத்துக்கொண்டார் அவர்,

சிங்களரைப் பொறுத்தவரை அவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்தகைய உரிமை அளிக்கும்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கவேண்டும் எனக் கோரியதாகவும் ஹெர்பர்ட் தெரிவிக்கிறார்.

இதனிடையே இலங்கை இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகள் 1928இல் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றனர். சைமன் ஆணையப் புறக்கணிப்பு, சுயராஜ்ஜியம் கோரும் தீர்மானம், இவ்வாறு இந்திய சுதந்திரப் போர் நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர, சுதந்திர வேட்கை இலங்கைத் தமிழ் இளைஞர்களையும் ஆட்கொண்டது.

யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பெரேரா, குலரத்ன, ஜயதிலக, குணசிங்க போன்ற சிங்கள அறிஞர்கள் பங்கேற்றனர். இன ரீதியில் தமிழ் இளைஞர்கள் அக்கட்டத்தில் சிந்திக்கவே இல்லை.

அனைவர்க்கும் வாக்குரிமை அளிக்கலாம் மற்றும் இன ரீதியான பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என 1928 ஜூலையில் வெளியான டொனமூர் கமிஷன் அறிக்கை பரிந்துரை செய்தது. அத்தகைய அம்சங்களை இளைஞர் காங்கிரஸ் வரவேற்றது, ஆனால், சுயாட்சி எதுவும் கூறப்படவில்லை எனவும் அது சுட்டிக்காட்டியது.

அறிக்கையின் விளைவாய் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையக்கூடும், பரவாயில்லை, இனங்களுக்கிடையே ஒற்றுமை அவசியம் என காங்கிரஸ் கருதியது.

வாரமிருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இந்து என்ற ஆங்கில -தமிழ் ஏடு, இளைஞர் காங்கிரஸ் நிலையினை ஆதரித்து எழுதும்போது, சிங்கள ஆதிக்கம் என்று பூச்சாண்டி காட்டுவது சில தமிழர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது எனக் குறை கூறியது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய வீரப் பெண்மணி கமலாதேவி சட்டோபாத்யாய் இளைஞர் காங்கிரஸ் அமர்வொன்றில் எழுச்சிமிகு உரையாற்ற, சுதந்திரக் கனல் இலங்கையிலும் பரவியது.

டொனமூர் கமிஷன் பரிந்துரைகள் சுயாட்சியை உறுதிசெய்யாத நிலையில், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1931ஆம் ஆண்டு தேர்தல்களை இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்தது.

ஃபிலிப் குணவர்த்தனே, இ.டபிள்யூ.பெரேரா, ஃபிரான்சிஸ் டி சொய்சா போன்ற சிங்கள அறிவுஜீவிகள் இளைஞர் காங்கிரஸை ஊக்குவித்தனர்,.

மேல்தட்டு தமிழர்கள் அனைவருக்கும், வாக்குரிமை அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்று அஞ்சினர் என்றால் சிங்களர் தரப்பிலோ தேர்தல்களை புறக்கணித்தால், ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படையில் பெரும்பான்மை சமூகத்திற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை இழக்கவேண்டி வருமே எனக் கவலை எழுந்தது.

இளைஞர் காங்கிரஸார் மத்தியில் தங்கள் புறக்கணிப்பு தவறான செய்திகளை மக்களுக்கு சொல்லக்கூடும் என்ற அச்சம் இருக்கத்தான் செய்தது. அனைவருக்கும் வாக்குரிமை என்பதை தாங்கள் மனதார வரவேற்றாலும் சுயாட்சி பற்றி பரிந்துரைகளில் ஏதுமில்லை என்பதாலேயே புறக்கணிப்பு என்பதை சரியாக மக்கள் புரிந்துகொள்வார்களா?

அந்த நேரத்தில் இலங்கைக்கு வந்திருந்த ஜவஹர்லால் நேரு கூட புறக்கணிப்பு சரியா என்ற கேள்வியை எழுப்பினார்.

ஆனால், தேர்தல் பக்கம் செல்வதில்லை என்றே முடிவானது. மகாத்மா காந்தி கூடத்தான் இமாலயத்தவறுகளை தான் செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறார், ஆனாலும் எல்லாம் நன்மைக்கே என்றானது, அதைப்போலத்தான் இந்தப் புறக்கணிப்பு முடிவும் என்கிறது இளைஞர் காங்கிரஸ் வெளியீடான ‘மதவாதமா இனவாதமா.’

அப்பிரசுரத்தின் முன்னுரையில் ஹாண்டி பேரின்பநாயகம் குறிப்பிடுகிறார்: “சர் பொன்னம்பலம் ராமநாதனை தமிழர்கள் நேசித்தனர், அதில் ஒன்றும் தவறில்லை, முதலில் இனவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தாலும் பின்னர் அவர் தன் நிலையை மாற்றிக்கொண்டார், சுயாட்சி வேண்டுமெனக் கோரினார், ஆனால், ஜி.ஜி. பொன்னம்பலம் அவரைத் தன் பக்கம் இழுத்து மீண்டும் இனரீதியான பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவைத்தார்.”

ஜி.ஜி. பொன்னம்பலம் தடாலடியாக தமிழர்களுக்கு 50 சத இட ஒதுக்கீடு வேண்டுமென்றார். அவருக்குப் பதிலடியாகவே இளைஞர் காங்கிரஸ் இனவாதம் குறித்த பிரசுரத்தை வெளியிட்டு, அவர் நாஜிகள் போலப் பேசுகிறார், மொஹஞ்சதாரோவையில்லாம் மேற்கோள் காட்டி கல்தோன்றி மண் தோன்றா என்ற பாணியில் முழங்கி, சிங்களர்களை ஏளனம் செய்கிறார், சிறுமைப்படுத்துகிறார் எனக் குற்றஞ்சாட்டியது.

சிங்களர்களின் நம்பிக்கையைப் பெறுவதே சரியான அணுகுமுறை. இனத் துவேஷத்தை கிளப்பிவிட்டுவிட்டால் அப்பிசாசை அப்புறம் அடக்கவே முடியாது என இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

பின்னர் இலங்கையில் இன மோதல் தீவிரமான நிலையில் எழுதப்பட்ட நூல்கள் உண்மைகளைத் திரித்து, ராமநாதன் அனைவருக்கும் வாக்குரிமையை ஆதரித்ததை மறைத்துவிட்டனர்

ராமநாதனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வைத்திலிங்கம், இளைஞர் காங்கிரஸ் தேவையில்லாமல் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கொடிபிடித்து அவர்கள் அதிருப்தியை சம்பாதித்தது, அவர்களை காந்திய நோய் பற்றிக்கொண்டதன் விளைவே அது, ஜின்னா போல் காலனீய அரசுக்கு அனுசரணையாக நடந்துகொண்டிருந்தால், அங்கே பாகிஸ்தான் போல் இங்கே ஈழமும் கிடைத்திருக்கக்கூடும் என்கிறார்.

சரி தாசானு தாசனாக நடந்துகொண்ட ஜி.ஜி. பொன்னம்பலம் கதி என்ன? தீவை விட்டு வெளியேறியபோது அவரைக் கண்டுகொண்டார்களா என்ன பிரிட்டிஷார்? துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினர். இலங்கை சுதந்திர நாடானது, இனி தமிழர்கள் கதி என்னாகுமோ என மிரண்டுபோய் டி.எஸ் சேனநாயகாவின் காலில் அல்லவா விழுந்தார் ஜிஜி!

விடுதலைப் புலிகள் என்ன செய்தனர்? இந்தியாவிற்குப் போய் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொண்ட பின், மேற்குலகத்தைக் காக்காய் பிடித்து ஈழம் பெற முயன்றது.

http://maatram.org/?p=4473

இறுதியில் எல்லாமே பஸ்பமானது. சரியான பாடங்களை நாம் கற்கவே இல்லை. இப்போது அனுபவிக்கிறோம்.

ஆனாலும் நம்மவர்கள் உணரவில்லையே கசப்பான உண்மைகளை. இன்னமும் வெளிநாட்டவர் எவரேனும் நம் உதவிக்கு வரமாட்டார்களா என்றல்லவா நாம் ஏங்குகிறோம்.

 

  • தொடங்கியவர்

இலங்கை இனச்சிக்கல் – III : உரசலின் துவக்கம்

 

சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929இல் நிறைவேறியது.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமுலில் இருந்த பிரதிநிதித்துவ முறையை படிப்படியாகக் மாற்றியிருக்கலாம், பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும், சட்ட மேலவையில் தங்களுக்கான இடங்கள் கணிசமாகக் குறையவிருந்ததென்றாலும், தமிழர்கள் அமைதியாகவே புதிய சட்டத்தினை ஏற்றுக்கொண்டார்கள்.

வைத்தியலிங்கம் துரைசாமி எனும் சட்ட அவை உறுப்பினர் குறிப்பிட்டார்: “இப்படிப்பட்ட பிரதிநிதித்துவத்தை உருவாக்கியது காலனீய ஆட்சியாளர்கள்தான். இப்போது அவர்களாகவே அதற்கு முடிவுகட்டுகின்றனர்… இதற்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பேதும் இல்லை……”

அந்த நேரத்தில் அவர் தமிழ்ச் சமூகத்தின் பொதுவான மன நிலையினை சரியாகவே கணித்திருந்தார் எனலாம்.

டொனமூர் அறிக்கையின்படி அமையவிருந்த புதிய சட்ட அவைக்கு 1931இல் தேர்தல்கள் நடைபெற்றன.

சுயாட்சி பற்றி பேசாத அவ்வறிக்கையின் ஆலோசனைகள் பேரில் நடைபெறும் தேர்தல்கள் புறக்கணிக்கப்படவேண்டும் என்ற இடையறா இளைஞர் காங்கிரஸ் பிரச்சாரத்தின் விளைவாய் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கைட்ஸ் மற்றும் பருத்திமுனை தொகுதிகளுக்கு எவரும் மனுச் செய்யவில்லை.

இன்னும் வேறு ஒன்பது தொகுதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க, அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்படி தமிழர் மத்தியில் சுயாட்சிக்கான எழுச்சியையும், இனரீதியான பார்வையினை நிராகரிக்கும் போக்கினையும் நாம் காணமுடிகிறது. ஆனால், அந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றபோது தமிழர், சிங்களர் இரு தரப்பாரிலுமே இன வெறிக்கூச்சல்கள் எழுந்தன.

இனவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் தமிழர்கள் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட, தமிழர்கள் இன ரீதியாக நம்முடன் மோதுகின்றனர் என சிங்களர் சிலர் முழங்க, பதிலுக்கு இதுதான் சிங்கள ஆதிக்கம் என தமிழ்த் தரப்பில் ஆத்திரப்பட, இன உறவுகள் மோசமடைந்தன.

மேலே குறிப்பிட்ட துரைசாமியைத் தவிர மற்ற அனைத்து தமிழ் சட்ட அவை உறுப்பினர்களும் துவேஷப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

ஜி.ஜி. பொன்னம்பலத்தார் அதி தீவிர நிலைப்பாடு எடுத்து நீண்டநேரம் ஆணைய அறிக்கையினை தாக்கிப்பேச மக்கள் இரையானார்கள்.

இளைஞர் காங்கிரஸ் அத்தகைய சிங்கள விரோதப் போக்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்தது.

“சிங்கள விவசாயிகள் நிலப்பற்றாக்குறையின் காரணமாக கடும் வறுமையில் வாடுகின்றனர். இந்நாட்டின் தொழில் துறையோ ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்கள் கட்டுப்பாட்டில். தேங்காய் தொழில் ஒன்றுதான் சிங்களர்களால் நடத்தப்படுகிறது. ஆனால், தென்னந்தோப்புக்களில் 75 சதவீதம் இந்திய முதலாளிகளிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களிலும் சரி மற்ற பல அறிவுசார் துறைகளிலும் சரி சிங்களர்கள் அடித்தட்டிலேயே இருக்கின்றனர்.

“தங்கள் பின் தங்கிய நிலையினை அவர்கள் உணரத்துவங்கிவிட்டனர், தங்களுக்கு உரிய அந்தஸ்துவேண்டுமெனவும் கோருகின்றனர், சற்று காரமாகவே, ஆவேசமாகவே.

“இத்தகைய சூழலில் தமிழர்கள் சரி சம பிரதிநிதித்துவம் என்று வலியுறுத்தினால் சிங்களர் தரப்பில் தீவிர இனவாதம் தலையெடுக்கும்.

“யதார்த்தம் என்னவெனில் 50:50 என விகிதாசாரம் அமுலில் இல்லையெனில் என்னாகுமோ என தமிழர்கள் மத்தியில் சில நியாயமான அச்சங்கள் ஏற்படலாம். ஆனால், அத்தகைய பிரதிநிதித்துவத்திற்கு முடிவு கட்டியிருப்பதால் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது.

“அதேநேரம், அவர்கள் பெரும்பான்மையினராய் இருந்தும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும்போது, அரசியல் பிரதிநிதித்துவத்தையும் சமமாக பங்கிட்டுக்கொள்ளச் சொல்வது, சிங்களர்களுக்கு மேலும் ஆத்திரமூட்டும்.  சிங்கள மஹா சபா போன்ற இன வெறி அமைப்புக்கள் அம்மக்களின் தலைமையைக் கைப்பற்றும். அது நாட்டுக்கு நல்லதல்ல… பாலஸ்தீனத்தில் கொண்டுபோய் யூதர்கள் காலனி ஒன்றை நிறுவியதன் விளைவாய், எப்படி அங்கே காலனீய ஆதிக்கத்திற்கெதிரான உணர்வுகள் சிறுபான்மை யூதர்களுக்கெதிரானதாகவும் உருப்பெற்றதோ, அதேபோன்ற மோசமான நிலை இங்கும் ஏற்படலாம்”

– என இளைஞர் காங்கிரஸின் ‘மதவாதமா, இனவாதமா’ என்ற பிரசுரம் தெளிவாகவே எச்சரித்தது.

ஆனால், நல்லதை யார் எப்போது கேட்டார்கள்? தோள் தட்டுவது, இனப் பெருமை பேசுவது தமிழர் மத்தியில் தொடர்ந்து அதிகரித்தது.

ஜி.ஜி. பொன்னம்பலம் 1939 மே மாதம் கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியவில் பேசும்போது, சிங்களர்களை பல இனக்கலப்பில் உருவானவர்கள் என ஏசினார்.

விளைவு அங்கே அடுத்த மாதமே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்கள மஹாசபையின் கிளை ஒன்றைத் துவக்கினார்.

13-banda-masses-for-sinhala-only

அப்போது அவர் பொன்னம்பலம் போன்றோர் நமக்கு எதிரிகளாவதால் நமக்கு நன்மையே என்றார் பூடகமாக.

பொன்னம்பலனார் எதிர்பார்த்திருக்கமுடியாத இன்னொரு திருப்பம், பிரிட்டிஷார் இலங்கையை விட்டு வெளியேறும்போது, இ.டபிள்யூ. பெரேரா போன்ற இடதுசாரிகள், முற்போக்காளர்கள், ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை.

ஜூன் 1915இல் சிங்களர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மோதல்களை கட்டுக்குள் கொண்டுவருவதாகச் சொல்லி, ஆட்சியாளர்கள் கடும் அடக்குமுறையில் இறங்கினர். மனித உரிமைகள் மீறப்பட்டன, இது நிற்கவேண்டும் என பிரித்தானிய அரசுக்கு மனுச் செய்து வெற்றியும் கண்டவர் பெரேரா.

அதுவோ முதலாம் உலகப்போர் துவங்கியிருந்த நேரம். அப்போது இலங்கையை நிர்வகித்து வந்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக மனுச் செய்வது ஆபத்தான செயல். பெரேராவுக்கு எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

அத்தகைய சூழலில் மக்கள் சார்பாக பிரிட்டிஷ் அரசரை அணுக அசாத்தியத் துணிச்சல் பெரேராவுக்கு இருந்திருக்கவேண்டும். இருந்தது, இறுதியில் நீதியையும் நிலை நாட்டினார். அது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பெரும் மூக்குடைப்பு.

மேலும், அவர் டொனமூர் அறிக்கையினை நிராகரித்து சுயாட்சி கோரினார். அப்படிப்பட்டவரை எப்படி ஆட்சியாளர்கள் சகித்துக்கொள்வார்கள்?

jayawardeneஅவர்கள் விரும்பியதைப் போலவே சிங்களர் மத்தியில் பிற்போக்குவாதிகள் வலுப்பெற்றனர். 1943இல் களனி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது பெரேராவை எதிர்த்து போட்டியிட்டவர் பின்னாளில் அதிபராகி, பெரும் கலவரத்தை மூட்டி, தமிழர் வாழ்வை நாசம் செய்த ஜே.ஆர். ஜெயவர்த்தனதான். பெரேரா கிறிஸ்தவர், அந்நியர் என சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, ஜே.ஆர். வெற்றி பெற்றார்.

ஜி.ஜி. பிரிட்டிஷாரிடம் அநியாயத்திற்கு குழைந்து பார்த்தார். ஆண்டனி பிரேஸ்கர்டில் எனும் தொழிற்சங்கவாதி நாடுகடத்தப்பதை சட்டமன்றமே கண்டித்து தீர்மானம் இயற்றியபோது, நம்மவர், ஆஹா இப்படித்தான் அரசு நடந்துகொள்ளவேண்டும், கலகம் செய்பவர்கள் வெளியேற்றப் படத்தான்வேண்டும் என்று வாழ்த்தினார். ஆனால், எதுவும் பலிக்கவில்லை.

50-50 கோரிக்கை நிறைவேறவில்லை. அந்தப் பக்கம் சிங்கள இனவாதம் வலுப்பெற்றது. பிரிட்டிஷார் எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழர் நிர்கதிதான்.

ஒரு கட்டத்தில் காலி (Galle) பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழர்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கலாம் என்ற அளவுக்கு இறங்கிவந்ததாகவும், ஆனால் 50:50தான் வேண்டும் என்று தான் பிடிவாதமாக இருந்ததாகவும் பொன்னம்பலம் கூறினார். பேசாமல் அந்த 40ஐயாவது ஏற்றுக்கொண்டிருக்கலாம், பிரச்சினைக்கு தீர்வு வந்திருக்கும். அவர் ரொம்ப முறுக்கிக் கொண்டது தமிழர்களுக்குத்தான் பின்னடைவானது.

நாடு விடுதலைக்குப்பின் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், மிக அதிக இடங்களில் வென்றதால், தமிழர்கள் உட்பட வேறு தரப்பினரின் ஆதரவு பெற்று, ஆட்சி அமைக்க முடிந்தது.

அவ்வரசின் முதல்வேலையே மலையகத் தொழிலாளர்களின் குடி உரிமையினைப் பறித்ததுதான்.

வேறொன்றுமில்லை. மலையகப் பகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்திற்கு எழுவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களும் தொழிற்சங்கவாதிகள். அங்கே மேலும், கம்யூனிசம் ஊடுருவக்கூடும் என்ற அச்சம்.

பிரிட்டிஷார் விட்டுச்சென்ற சோல்பரி சட்டமோ தோட்டத் தொழிலாளர் நிலை குறித்து கறாராக ஏதும் சொல்லவில்லை. அவர்கள் அந்நியர்கள், அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுத்தால் எங்கள் நிலை என்னாவது என்ற சிங்களரின் கவலைகள் புரிந்துகொள்ளக்கூடியதே என்று சோல்பரி ஆணையம் கூறியது.

இந்நிலையில்தான் தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வந்த மலையகத்தினர் குடி உரிமை பெற சில கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன, குறிப்பாக இரு தலைமுறையாக அங்கே வாழ்ந்ததாக நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆனால், பிறப்புப் பதிவேடெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்படாத அக்கால கட்டத்தில் தானும் தன் தந்தையும் அங்கேயேதான் பிறந்தவர்கள் என்று  நிரூபிக்கமுடியாமல் போய் 1948 சட்டத்தின் கீழ் ஒரே நாளில் லட்சக்கணக்கான மலையகத் தமிழர் நாடற்றோராயினர்.

பொன்னம்பலனார் இந்தக் கொடுமையான சட்டத்தை ஆதரித்தார். அமைச்சராகவும் ஆனார்.

சிங்கள இடதுசாரிகள் மலையகத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர். அவர்களும் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியிடம் விலைபோனார்கள்.

சரி இளைஞர் காங்கிரஸாவது அனைவருக்கும் வாக்குரிமையை உறுதிசெய்த டொனமூர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டு, 1931 தேர்தல்களிலும் பங்கேற்றிருந்தால் இரு இனங்களுக்கிடையேயான ஒற்றுமை வலுப்பெற்றிருக்குமே?

ஆனால், அவர்களோ காலனீய அரசின் மேற்பார்வையில், பரந்துபட்ட மக்கள் நலனைப் பேணாமல், வரி வசூலித்து, சட்டம் ஒழுங்கின் பெயரால், அடித்தட்டு மக்களை ஒடுக்கும் அரசு ஒன்று உருவாக, ஒத்துழைக்கப்போவதில்லை என்றனர்.

ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில் பிரிட்டிஷாரின் தலையீடு மட்டும் இல்லையென்றால், இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையிலான முரண்பாடுகளை எளிதில் தீர்க்கமுடியும் என்று கூறியிருப்பதையும் மதவாதமா, இனவாதமா என்ற வெளியீடு மேற்கோள் காட்டுகிறது.

உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அந்நியரின் உதவியை நாடினால் என்னாகும் என்பதை நாளடைவில் இலங்கை நன்றாகவே உணர்ந்தது.

http://maatram.org/?p=4487

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன தமிழர்கள்

டொனமூர் அறிக்கை கட்டத்தில் தமிழர் தலைமை இனவாரி பிரதிநிதித்துவத்தைக் கோரியதுதான் இலங்கையில் இனவாதம் தலையெடுக்க வழிசெய்தது. அதன் பின்னர் அரசியல் தொடர்ந்து சீரழிந்தது. இரு தரப்பிலும் இனவாதம் மேலோங்கியது.

பிரபல சிங்கள வழக்கறிஞர் ஃபிரான்சிஸ் டி சொய்சா ஒரு கூட்டத்தில் பேசுகையில், ”இலங்கை சிங்களருக்கே என்ற அணுகுமுறையினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தக் கூட்டம் சிங்கள மஹா சபையினரால் நடத்தப்படுகிறது என்று தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்கவே மாட்டேன். நானும் சபாவில் சேர்ந்து இனவாதம் பேசினால் சட்ட அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படக்கூடும். ஆனால், அதைவிட எனக்கு முக்கியமான கடமை வேறு இருக்கிறது. இந்த நாட்டின் நன்மைக்காக நான் பாடுபடவேண்டும்” என ஆணித்தரமாக, தனக்கு முன் பேசிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயகாவிற்கு கண்டனம் தெரிவித்தார்.

ஆனால், அத்தகைய நேர்மையான பக்கசார்பு எடுக்காத முன்னேற்றக் கருத்துக்களுடைய சிங்களரைக்கூட தமிழர் தரப்பு அங்கீகரிக்கத் தயாரில்லை.

மலையகத்தாரையும் சேர்த்து கணக்கில் காட்டி, தமிழர்களும் சிங்களர்களும் 50க்கு 50 என்ற விகிதாசாரத்தில் சட்ட அவை இடங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் என வாதாடிய ஜி.ஜி. பொன்னம்பலம் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை ஆதரித்தார் என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம். பிரதமர் சேனநாயகாவிற்குக் காட்டிய விசுவாசத்திற்கு பரிசாக ஜி.ஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அவரது துரோகச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர் காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், வன்னியசிங்கம் மற்றும் நாகநாதன் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறி, தமிழரசுக் கட்சி என அறியப்படும் ஃபெடரல் கட்சியைத் துவக்கினர்.

இளைஞர் காங்கிரஸ் இன ரீதியாக அல்லாமல் அரசியல் ரீதியாக தமிழர்களை அணி திரட்டினர். அந்த அணுகுமுறை தொடர்ந்திருந்தால் இனப்போர் மூண்டிருக்காது.

ஆனால், சிங்களரை எதிரிகளாகவே சித்தரித்து வந்த பொன்னம்பலனாரின் தாக்கம்தான் தமிழரசுக் கட்சித் தலைவர்களிடம் மேலோங்கியிருந்தது.

ட்ராட்ஸ்கிய சிந்தனையாளர் காராளசிங்கம் குறிப்பிடுகிறார்: “திடசித்தமுடைய ஃபெடரல் தலைமை, ஏகோபித்த மக்கள் ஆதரவு, எல்லாம் இருந்தும் இலட்சியங்களை அடையமுடியவில்லை. தொடர்ந்து தமிழர்கள் தோல்வியையும் அவமானத்தையுமே சந்தித்தனர். ஏன்? தனியாகவே போராடி உரிமைகளை, அதிகாரங்களை வென்றுவிடமுடியும் என ஃபெடரல் தலைமை தவறாகக் கணித்ததுதான்.

“சோஷலிசத்திற்கான தொழிலாளர் முன்முயற்சிகளும், தமிழர்களின் போராட்டங்களும் இணையவேண்டும். அப்போது மார்க்சிஸ்டுகள் தாங்களாகவே தமிழர் தரப்பு நியாயங்களை உணர்வார்கள்…”

ஆனால் என்ன நடந்தது? காராள சிங்கம் அவ்வாறு எழுதியதற்கு அடுத்த ஆண்டே, 1964இல், எட்மண்ட் சமரக்கொடி மற்றும் மெரில் ஃபெர்னாண்டோவை போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற இடதுசாரிகள் சிங்கள இனவாதக் கொள்கைகளுக்குத் துணை போயினர். இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்தனர்.

1940களில் மலையகத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த அவர்கள் இப்போது அம்மக்களை அம்போவென்று கைவிட்டனர். இதன் எதிர்வினையாகத்தான் தமிழர் மத்தியில் தீவிரவாதம் ஆழமாக ஊடுருவியது.

1970இல் இலங்கை சுதந்திரக் கட்சி தலைமயிலான கூட்டணி மிகப் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி அமைக்கவென புதிய பேரவையை உருவாக்கியபோது, பிரதமர் திருமதி சிரிமாவோ பண்டாரநாயகா கூட பாரதூர மாற்றங்களை செய்யவிரும்பவில்லை.

ஆனால், இடதுசாரி ட்ராஸ்கி கட்சியைச் சேர்ந்த டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா எல்லாவற்றையும் ஒரேயடியாக மாற்றிவிடுவது என்பதில் பிடிவாதமாக இருந்தார். பிரதமரையும் அவர் ஒத்துக்கொள்ளவைத்தார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் அதிகாரங்களை மேலும் மத்திய அரசின் கரங்களில் குவித்தது. அந்த அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க வழிசெய்யும் முன்னிருந்த ஷரத்துக்கள் நீக்கப்பட்டன. பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு ஒப்புக்காகவேனும் பாதுகாப்பு வழங்கும் பிரிவு 29 கூட குப்பைக்கூடைக்குப் போனது.

முற்போக்காளர், சமூக நீதிக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஹாண்டி பேரின்பநாயகம், புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டிருந்த பேரவைக்கு சமர்ப்பித்த மனுவில், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதென்பதை சுட்டிக்காட்டினார்:

“ஏற்கெனவே சிங்களம் மட்டுமே நாட்டின் அதிகார பூர்வமொழியாகும் என்ற சட்டம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியது. அதைத் தணிக்க அரசால் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அச்சட்டம் தீவினில் இன்னொரு பெரும் மொழிப் பிரிவு வாழ்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவே இல்லை. தாய்மொழிக்கு இழைக்கப்படும் அவமானம் தமிழ் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதியே… மக்களாட்சி என்பது ஆளப்படுவோரின் சம்மதத்துடன் நடத்தப்படும் அரசு என்ற புரிதலையே கேலிக்குள்ளாக்கியது அச்சட்டம்…”

“முன்பு ஐக்கிய தேசியக் கட்சி பிராந்திய சட்ட மன்றங்களை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தபோது, அது ஆளுங்கட்சியினரின் முன்முயற்சி என்பதாலேயே, இடதுசாரிகள் எதிர்த்தனர். இப்போதோ அவர்களே ஆட்சியிலிருக்கின்றனர்.”

“இந்நிலையில், பிராந்திய அவைகள் என்றல்ல, அனைத்து தளங்களிலும் கொள்ளும் அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலும் சட்டங்களை நிறைவேற்ற அவர்கள் முன்வரவேண்டும்…. குடிமக்கள் ஆளப்படுபவர்கள் மட்டுமே, அரசுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவ்வளவுதான் என்ற நிலை நீங்கி, குடிமக்கள் தங்கள் கருத்தைத் தயங்காமல் அரசிடம் சொல்லவும், அவர்கள் சொல்வதை அரசு செவிமடுக்கச் செய்யவும் உரிய சட்டங்கள் தேவை”

– என வலியுறுத்தினார்.

1955இல் இரு ஆட்சி மொழிகள் ஒரு நாடு, ஒரே ஆட்சி மொழி, இரு நாடுகள் என தீர்க்கதரிசனத்துடன் கடுமையாகவே எச்சரித்த அதே கொல்வின் ஆர்.டி. சில்வாதான், இப்போது ஒரு மொழி சட்டத்திற்கு அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்தை அளிக்கிறார் என வருந்துகிறார் டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன எனும் சிங்கள நூலாசிரியர்.

ஹாண்டியின் மனுவிற்கு முன்னரே தமிழரசுக் கட்சியின் செல்வநாயகம் அரசியல் அமைப்புச் சட்டப் பேரவையிலிருந்து விலகியிருந்தார். ஆனால், அப்போது கூட அவர், “எங்கள் கண்ணியம் காக்கவே நாங்கள் போராடுகிறோம், யாரையும் புண்படுத்தவேண்டுமென்பது எங்கள் நோக்கமல்ல” என்று மிக சாத்வீகமாகவே குறிப்பிட்டார்.

அதிகார மமதையில் இடதுசாரிகளும் சரி, அரசுத் தரப்பில் மற்றவர்களும் சரி, தமிழர் தரப்பு ஆட்சேபணைகளையோ ஹாண்டியின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையோ எதனையும் கண்டுகொள்ளவில்லை.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில் உருவான தமிழரசுக் கட்சி 1970இல் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது உண்மையே. நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோரே தோல்வியுற்றிருந்தனர்.

ஆனால், தமிழர் நலனுக்கெதிரான புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் பின் தமிழர்கள் மத்தியில் நிலை மாறியது.

சிறிமாவோ அரசோ தமிழ் அரசியல்வாதிகள் வேண்டுமானால் புதிய சட்டத்தினை எதிர்க்கலாம். ஆனால், பரந்துபட்ட அளவில் தமிழர்கள் அது நியாயமானதே என ஏற்றுக்கொள்கின்றனர் என்று சாதித்தது.

அதனுடைய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் நோக்குடன், செல்வநாயகம் நாடாளுமன்றத்திலிருந்து ராஜினாமா செய்து, இடைத்தேர்தல் கட்டாயத்தை உருவாக்கினார். 1970இல் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் அவரும் ஒருவர்.

அவருக்கு உடல்நிலை வேறு சரியில்லை. எனவே, உடனடியாகத் தேர்தல் நடத்துவதுதான் நியாயமாய் இருக்கும் என பலர் சுட்டிக்காட்டினர்.

ஆனால், தமிழ் மக்கள் மன நிலை என்ன என்பதை நன்கு உணர்ந்திருந்தது அரசு. தேர்தலை நடத்தினால் அவர் வென்றுவிடுவார், மானம் கப்பலேறும் என்பதாலேயே ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் இழுத்தடிக்க, தமிழர்கள் மேலும் மனம் கசந்தனர்.

அப்படி எத்தனை நாட்கள்தான் கடத்தமுடியும்? ஒருவழியாக பெப்ரவரி 1975இல் நடைபெற்றது தேர்தல். பெரும் வாக்குவித்தியாசத்தில் செல்வநாயகம் காங்கேசன்துறையில் வெற்றி பெறுகிறார்.

அப்போதுதான் அவர் இனி ஒரு நாடாக இருப்பதில் பொருளில்லை எனப் பிரகடனம் செய்தார். “இந்த வெற்றி தமிழர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கிறது. நமக்கென்று ஒரு நாடு வேண்டும். இனி நம் தலைவிதியை நாம்தான் நிர்ணயித்துக்கொள்ளவேண்டும், அந்நியரல்ல. நாம் விடுதலை பெறவேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

2b-chelva-hustings

அப்பின்னணியில்தான் தனி ஈழம் கோரும் வட்டுக்கோட்டை தீர்மானம் மே 1976இல் நிறைவேற்றப்படுகிறது. இலங்கையில் முக்கிய வரலாற்றுத் திருப்பம் அது.

ஹாண்டி பேரின்பநாயகமும் செல்வநாயகமும் சமகாலத்தவர்கள்தான். ஆனால், அவர்கள் அணுகுமுறைகளில், தார்மீகக் கரிசனங்களில் எத்தனை எத்தனை வேறுபாடுகள், முரண்பாடுகள்?

ஹாண்டி இப்படிச் செய்யாதீர்கள், அதர்மம், அநீதி என்றுதான் முறையிட்டு வந்தார், இன உணர்வுகளுக்கு தூபம் போடவில்லை.

சிங்களர்களின் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பமுடியும் என இறுதிவரை நம்பினார்.

“இடதுசாரிகளை நான் நன்கறிவேன். ஒரு மொழிக்கொள்கையினை அவர்கள் எதிர்த்தபோது அவர்கள் தாக்குதலுக்குள்ளாயினர். அப்போதும் உறுதியாய் நின்ற அவர்கள், இப்போது தேவைப்படும் அளவு மட்டும் தமிழைப் பயன்படுத்தலாம் என்கின்றனர். தமிழர்கள் வாழ்வை நிர்வகிக்க எவ்வளவு தமிழ் தேவை என்பதை யார் தீர்மானிப்பது? அப்படி வரையறை கூட இருக்கமுடியுமா என்ன?…” என வினவினார் அவர்.

அரசியல் அமைப்புச் சட்டப் பேரவைக்கு அவர் அனுப்பிய மனுவில், “சிங்கள மொழி மட்டுமே நிர்வாகத்திற்கு என்ற சட்டத்தினை தமிழர் பிரதிநிதி ஒருவர் கூட ஆதரிக்கவில்லை. மக்கள் சம்மதம் இல்லாமல் என்ன வேண்டிக்கிடக்கிறது மக்களாட்சி? நாம் ஆபத்தான திசையில் பயணிக்கத் துவங்கியிருக்கிறோம்… ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல் எனப் பேசப்படுகிறது, ஆனால், வெறுப்பும் நம்பிக்கையின்மையுமே தலைவிரித்தாடுகிறது… அடங்கிக்கிடந்த வெறுப்புணர்வுகள் 1958 இனக்கலவரத்தில் பொங்கி எழுந்து ஓய்ந்துவிட்டதா? உறுதியாகச் சொல்லமுடியவில்லை… ஆனால், எனக்கு இன்னமும் நம்பிக்கையிருக்கிறது…” என்றார்.

செல்வநாயகம் குடியுரிமைப் பறிப்பை வன்மையாகக் கண்டித்தபோதும் ஜனநாயக ரீதியில் அத்தகைய அத்துமீறல்களை எதிர்கொள்ள முடியும் என்று அப்போது நம்பினார்.

ஆனால், நீதிமன்றங்களும் அச்சட்டங்கள் சரியென்றபோது அவர் நொந்துபோனார். அதன் பிறகு அவர் சிங்களர்கள் மீதும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அமைப்புக்கள் மீதும் வைத்திருந்த நம்பிக்கையினை முற்றிலுமாக இழந்தார்.

இங்கே ஒரு சம்பவத்தை நாம் நினைவு கூறலாம். 1956இல் சிங்களம் மட்டுமே என்ற சட்டம் வந்தபோது, அரசிடம் வாதாடி சலித்துப்போன அவர், “இவர்களிடம் தர்க்கபூர்வமாக வாதாடிப் பயனில்லை… பண்டாரநாயக்க மீது சாணி எறிந்தால்தான் சரிப்படும்” என பிரதமர் இல்லத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோதே, தனது சகாக்களிடம் எரிச்சலுடன் குறிப்பிட்டார்.

வங்கதேசம் உருவானதும் பெரும் எழுச்சி தமிழர்கள் மத்தியில். காங்கேசன்துறை வெற்றிக்குப்பின் இனி இணைந்து வாழமுடியாது என்று செல்வநாயகம் பிரகடனப்படுத்தியதை இளைஞர் காங்கிரஸ் கண்டித்தது. ஆனால், நிலை கைநழுவிப் போய்க்கொண்டிருந்தது.

தமிழர்களுக்கெதிரான அரசியல் அமைப்புச் சட்டம், மிகக் காலம் தாழ்த்தி நடத்தப்பட்ட இடைத்தேர்தல், வட்டுக்கோட்டை தீர்மானம், இந்தப் பின்னணியில், 1970 தேர்தல்களில் வென்றவர்கள் தமிழர் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டனர், துரோகத்திற்கு தண்டனை மரணமே என்றெல்லாம் பேசப்பட்டது.

இலங்கை சுதந்திரக் கட்சியின் தமிழர் தலைவர்களில் ஒருவரான யாழ்ப்பாண மேயர் ஆல்ஃப்ரெட் துரையப்பாவும் அத்துரோகிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

“கொல்லுங்கடா அவங்களை” எனத் தெருமுனைகளில் இளைஞர்கள் குமுற, அவர்களை ஊக்குவித்தது சுதந்திரன் வார ஏடு. அது செல்வநாயகம் குடும்பத்தாரால் நடத்தப்பட்டு வந்ததாகும்.

ஆல்ஃப்ரெட் துரையப்பா ஜூலை 1975இல் கொலை செய்யப்படுகிறார். தன்னை காந்தியவாதி என்றும் வன்முறையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்த செல்வநாயகம் அக்கொலையினை கண்டிக்க முன்வரவில்லை.

1977இல் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், தார்மீகத் தளத்தில் அது தலைகுப்புற விழுந்தது.

 

http://maatram.org/?p=4508

  • தொடங்கியவர்

இலங்கை இனச்சிக்கல் – V : கொந்தளிப்பு, பேரழிவு, அடுத்து?

சிங்களர்கள் கல்வியில் பின் தங்கியிருக்கின்றனர் என்பதால் அவர்களுக்குக் கல்லூரிகளில் கூடுதல் இட ஒதுக்கீடு, பின்னர் 1972 புதிய அரசியல் அமைப்புச் சட்டம், செல்வநாயகம் ராஜினாமா செய்ததன் பின் காங்கேசன்துறைக்கு இடைத் தேர்தல் நடத்துவதில் இழுத்தடிப்பு என சிறிமாவோ அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து தமிழர்களை கொந்தளிக்கவைத்தன.

இளைஞர்கள் கூடுதலாகவே கொதித்தெழ, தமிழரசுக் கட்சி அதன் பங்கிற்கு எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டெறியச் செய்தது. தலைவர்கள் வீராவேசமாக முழங்கிவிட்டு அவரவர் வேலையை பார்க்கப் போய்விடலாம், ஆனால் இளைஞர்கள் வெற்றுச் சவடால்களுடன் நிற்பார்களா?

(சிங்களர் தரப்பிலும் 80களில்தான் அப்படித்தானே நடந்தது? இனவாதத்தை தலைவர்கள் தூண்டிவிட, ஜேவிபி கலவரம் அங்கே வெடித்தது.)

பங்களாதேஷ் உருவான நிலையில் தமிழர் தலைவர்களின் உசுப்பேற்று வேலையும் எல்லை மீறியது. பொதுக் கூட்டங்களில் விரல்களைக் கீறி வழியும் குருதியில் தலைவர்களுக்கு திலகமிடும் புரட்சிகர பழக்கம் தமிழர் பகுதிகளில் பரவியது.

கடையடைப்புக்கள், உடன் வன்முறை, 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்களை ஊதிப் பெரிதாக்கி மக்கள் உணர்வுகளைத் தூண்டியது, அரசின் காட்டுத்தனம், துரையப்பா கொலை என ஒன்றன் பின் ஒன்றாக சம்பவங்கள் நாட்டை பேரழிவுக்கு அழைத்துச் சென்றன.

1974 மாநாடு குறித்து நான் Arrogance of Power அதிகார மமதை என்ற நூலில் விவரமாக எழுதியிருக்கிறேன். மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரெஹ்மான்தான் மாநாட்டினை துவக்கிவைத்தார். வழக்கத்திற்கு மாறாக நாட்டுப் பிரதமரை அழைக்கவில்லை.

பிரிவினைக்கான குரல் எழுப்பப்படுமோ என்ற அச்சம் பொலிஸார் மத்தியில் இருந்தது, ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த இரா. ஜனார்த்தனத்தை அழைக்கக்கூடாது என்பதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் அவர்கள் விதிக்கவில்லை, கெடுபிடி ஏதுமில்லை.

ஜனவரி 3லிருந்து 9ஆம் நாள்வரை மாநாட்டு நிகழ்வுகள் பிரச்சினை ஏதுமில்லாமல் நடந்தேறின. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருந்ததால் மேலும் ஒரு நாள் அது நீட்டிக்கப்பட்டது.

வீரசிங்கம் அரங்கிலிருந்து திறந்த வெளிக்கு மாற்றப்பட்டது. இடத்தை மாற்ற மேயர் ஆல்ஃப்ரெட் துரையப்பாவும், ஒலிபெருக்கிகள் வைத்துக்கொள்ள பொலிஸாரும் அனுமதி அளித்தனர். ஆனால், மழை காரணமாக மீண்டும் மாநாடு வீரசிங்கம் அரங்கிற்கே மாற்றப்பட்டது. பெருங்கூட்டம். அரங்கில் நுழையும்போது ஏகப்பட்ட நெரிசல். வெளியே பலர் உட்காரவேண்டியிருந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போதும் பொலிஸார் நன்கு ஒத்துழைத்து வாகனங்களை வேறு வீதிகள் வழியே திருப்பிவிட்டனர்.

கூட்டம் துவங்கவிருந்த நேரத்தில் ஜனார்த்தனம் பலத்த ஆரவாரத்துக்கிடையே மேடையில் தோன்றினார். ஆனால் மற்ற மாநாட்டு அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் கீழிறங்கினார்.

இன்ஸ்பெக்டர் நாணாயக்கார அங்கு வந்து ஜனார்த்தனத்திடம் ஏதோ உத்தரவு அடங்கிய தாளைக் கொடுக்க, ஜனார்த்தனம் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அதன் பிறகு உயர் பொலிஸ் அதிகாரி சந்திரசேகர ஒரு பொலிஸ் படையுடன் அங்கு வந்தவர், ஜனார்த்தனத்தைத் தேடி கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினார். ஒரே தள்ளுமுள்ளு கூச்சல் குழப்பம். வானில் பொலிஸார் சுட்டனர். அலறிக்கொண்டு கூட்டம் கலையத் துவங்கியது. அந்த நேரம் பார்த்து ஒரு மின்சாரக் கம்பி அறுந்து விழ, அதனை மிதித்த ஏழு பேர் அங்கேயே மாண்டனர்.

பொலிஸார் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட நீதிபதி க்ரெட்சர் ஆணையம் கூறியது.

நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்வேல்பிள்ளை கண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டு தடியடியை நிறுத்துமாறு கோரியபோது ஏன் ஜனார்த்தனம் பேச அனுமதிக்கப்பட்டார் என திருப்பிக்கேட்டார். ஜனார்த்தனமோ பேசவே இல்லை. அவருக்கு அங்கு மாலை மட்டுமே அணிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் நாணாயக்கார ஜனார்த்தனத்திடம் வெளியேற்ற உத்தரவை கையளித்தபின், துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர அவரைத் தேடுவானேன், கைதுசெய்ய முயல்வானேன்?

அந்த நேரம்வரை அமைப்பாளர்களுடன் ஒத்துழைத்து வந்த பொலிஸார் திடீரென தடியடிப் பிரயோகத்தில் இறங்குவானேன்?

பொலிஸார் கண்ணில் பட்ட தமிழரையெல்லாம் இரண்டு நாட்களுக்கு தாக்கிக்கொண்டிருந்தனர் எவ்வித முகாந்திரமும் இல்லாமல்.

கொழும்பிலிருந்து அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் எவரேனும் யாழ்ப்பாண பொலிஸாரைத் தொடர்பு கொண்டு உத்தரவேதும் இட்டனரா என்பது சரியாகத் தெரியவில்லை.

எப்படியிருப்பினும், தாறுமாறாக, ஒழுங்காக ஒருங்கிணைக்கப்படாமல், பொலிஸாரும் அரசும் நடந்துகொண்டதன் விளைவே உயிரிழப்புக்கள்.

அதேநேரம், இதனை திட்டமிட்ட தமிழர் படுகொலை என சித்தரிப்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது. ஆனால், இப்படி ஒரு கதையைக் கட்டிவிட்டு தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தினர் தமிழர் தலைவர்கள். இப்போது கூட விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் அதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிவருகின்றனர்.

5 தமிழாராய்ச்சி மாநாட்டின்போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூர அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் | படம்: tamilguardian

இளைஞர் தலைவர் சிவகுமாரன் ஏழு பேர் மரணத்திற்கு பழிக்குப் பழிவாங்கும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரி சந்திரசேகரவையும் மேயர்  துரையப்பாவையும் கொல்லப்போவதாக சூளுரைத்தார்.

பெப்ரவரியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் திருமதி அமிர்தலிங்கம் துரையப்பாவை துரோகி என்றார், சந்திரசேகரதான் மரணங்களுக்குப் பொறுப்பென்றார்.

இப்போது ஆத்திரப்பட்ட இளைஞர்களுக்கும் தமிழர் தலைமையின் அணுகுமுறைகளுக்கும் இடையேயான தொடர்பு புரிகிறதல்லவா?

பெரும்பான்மையினருடன் பதற்றமானதொரு உறவிருக்கும் நிலையில், சிறுபான்மைத் தலைமை, இப்படி இளைஞர்களை சூடேற்றுவது அல்லது அதிகார மையங்களை வெறுப்பேற்றுவது போன்ற செயல்களில் இறங்குவது முட்டாள்தனம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

ஆனால், 50:50 ஒதுக்கீடு வலியுறுத்திய நாட்கள் தொடங்கி தமிழர் தலைவர்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கி, அரசை ஆத்திரமூட்டி, பொதுமக்களுக்குப் பெரும் நெருக்கடிகளை உண்டாக்கி அதில் குளிர்காய்ந்தனர்.

அதே தந்திரோபாயங்களைத்தான் விடுதலைப் புலிகளும் கையாண்டு, ஒரு கட்டத்தில் உலகமே தங்கள் காலடியில் என்பதுபோல நடந்துகொண்டனர். இறுதியில் அவர்கள் அழிந்தே போனார்கள், அவர்களுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி சிவிலியன்களும்.

யாழ்ப்பாண மேயர் ஆல்ஃப்ரெட் துரையப்பா கொலையினை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், செல்வநாயகமே அதனைக் கண்டிக்க முன்வரவில்லை என்பதைக் கடந்த பகுதியில் கண்டோம்.

அறத்திலிருந்து தமிழர் தலைமை வழுவியது. அந்தப் பின்னணியில் 1977 தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் பெரும் வெற்றி பொருளற்றதானது.

தமிழ் மக்கள் எங்கள் பின்னால் என்று பெருமையடித்துக் கொள்ளவேண்டுமானால் அவ்வெற்றி பயன்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ்ச் சமூகத்தை சரியானபடி வழிநடத்தும் திறனை கட்சி இழந்துவிட்டிருந்தது.

அப்படியொரு மகத்தான வெற்றி பெற்றும் தங்கள் மக்களை அவர்களால் 1983இல் காக்கமுடியவில்லையே. ஜெயவர்த்தனவைப் பொறுத்தவரை தமிழர் சவாலை முறியடிக்க எந்த அளவுக்கும் அவர் செல்லத் தயாராயிருந்தார். அதே கொடூர முகத்தைத்தான் ஜேவிபி கிளர்ச்சியின் போதும் நாம் பார்த்தோம்.

ஆனால், நாம் இங்கே பேசுவது தமிழர் தலைமை தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய எதையும் செய்யத் தயாராயிருந்ததைத்தான். 1958இல் தமிழர்கள் சிங்களக் காடையரால் கடுமையாக தாக்கப்பட்ட நேரத்தில், அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவின் செயலர் பிரட்மன் வீரகோன் கலவர விவரங்களைத் விவரித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்திற்கு மேல் பிரதமரால் கேட்கமுடியவில்லை. அவ்வளவு குரூரமாயிருந்தது வர்ணனை.

காதுகளைப் பொத்திக்கொண்டு ”போதும் போதும்,” என்றவர், கலவரத்தை அடக்கும் பொறுப்பை முழுவதுமாக ஆளுநர் நாயகம் சர் ஆலிவர் குணதிலக்கவிடம் விட்டுவிட்டார் என பிராட்மனே என்னிடம் கூறினார்.

அதாவது, அக்கட்டத்தில் சிங்கள மஹா சபையைத் துவக்கிய பண்டாரநாயகாவிற்கே அப்பாவித் தமிழர்கள் இப்படி வேட்டையாடப்படுவது அக்கிரமம் என உறுத்தியிருக்கிறது.

வன்முறைக்கு தமிழர்கள் எவ்விதத்திலும் பொறுப்பில்லை என அவர்கள் உணர்ந்திருந்ததால், அத்தகைய நிகழ்வுகளின்போது நாம் இன மோதலில் அதிக தூரம் சென்றுவிட்டோமோ, சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கிறோமோ என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், பிற்கால கட்டத்தில், அறத்தை அறவே தமிழர் தலைமை தவிர்த்த போது தமிழர்களின் துன்பங்களுக்காக வருந்துவோர் சிங்களர் தரப்பில் எவரும் இல்லாமல் போய்விட்டது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், பலராலும் மதிக்கப்படும் நாடகாசிரியர், யாழ்ப்பாணத்தில் ஒரு குறிப்பிட்ட தெருவில் மட்டும், 23 இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்து பின்னர் மரித்ததாகக் குறிப்பிட்டார்.

ஒரு நாள் அந்த நாடகாசிரியர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்த இரு சகோதரிகளைச் சந்திக்கிறார். நம் பகுதிக்கு வந்திருக்கிறார்களே என அவசர அவசரமாக அவர்களுக்காக உணவு மற்றும் தேநீருக்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால், அவர்கள் தின்பண்டங்களில் கைவைப்பதற்குள், அவசர அழைப்பு. எதையும் தொடாமலேயே எழுந்து ஓடுகின்றனர். அந்த இருவரும் பின்னர் இறந்த 23 பேரில் அடக்கம்.

அச்சகோதரிகளை அவர் சந்தித்த காலகட்டத்தில்தான் சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தத்துவங்கியிருந்தார். ஏற்கனவே, அவருக்கு தமிழர்கள் மத்தியில் ஓர் அளவு நல்ல பெயர் இருந்தது.

பேச்சுவார்த்தைக் குழு ஒன்று முதன் முதலில் யாழ்ப்பாணம் வந்தபோது அமோக வரவேற்பு மக்களிடமிருந்து. அவர்கள் வந்திறங்கிய ஹெலிகொப்டரைக் கூட கட்டித் தழுவி முத்தமிட்டனர் சிலர்.

அடுத்த முறை அக்குழு வந்தபோது எவரையும் ஹெலி பக்கம் வரவிடாமல் விடுதலைப் புலிகள் பார்த்துக்கொண்டனர்.

நம் நாடகாசிரியரும் விடுதலைப் புலிகளின் கட்டளையின் பேரில் தன் பங்களிப்பை நிறைவேற்ற வேண்டியிருந்தது. சந்திரிகா ஏமாற்றுப் பேர்வழி, அவரால் ஏதும் நல்லது ஆகப்போவதில்லை, தமிழர்களை நாசப்படுத்தப்போகிறார் இப்படியெல்லாம் மேடையேறிப் பேசுமாறு பணிக்கப்பட்டார். அவரது உரையைக் கூட மற்றவர்கள் எழுதிக்கொடுத்துவிடுவார்கள். அதைத் தான் அவர் பேசவேண்டும். சொந்த சரக்கெல்லாம் சேர்க்கக்கூடாது.

2007இல் அந்த எழுத்தாளரின் பேச்சு அடங்கிய ஒலிநாடா ஒன்று கிடைக்க அவர் கைது செய்யப்படுகிறார். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய இராணுவ அதிகாரி, “பிழைத்துப் போ… உன் கோபம் எனக்குப் புரிகிறது. எங்கள் மக்கள் மீது எனக்கிருக்கும் அக்கறை போல உனக்கும் தானே இருக்கும்… அதனால் இப்போது உன்னை விட்டுவிடுகிறேன்… ஆனால், இனியும் யாழ்ப்பாணத்தில் இருக்காதே… அடுத்த முறை சிக்கினால் என்ன ஆகும் என்று சொல்ல முடியாது” எனக் கூறி அவரை அனுப்பிவைத்தாராம்.

அதேநேரம், 2009இல் போரின் இறுதிக் கட்டங்களில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள்? தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் எவரையும் வெளியே விடவே இல்லையே.

இராணுவம் தாக்காது என உறுதியளித்திருந்த பகுதிகளில் வசித்த மக்களின் பின்னால் அல்லவோ ஒளிந்துகொண்டு, இராணுவ இலக்குக்களைத் தாக்கிய புலிகள், சிவிலியன்கள் எங்கும் செல்லக்கூடாது எனக் கடுமையாக உத்திரவிட்டனர் எனக் குறிப்பிடுகிறார் அதே நாடகாசிரியர்.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இனி அரசியல் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதே அபத்தம். வெட்டிப் பேச்சு.

நிறைய இழந்துவிட்டோம். ஏதோ ஒரு சிலவற்றையாவது மீட்டெடுக்கவேண்டும், நம் வாழ்வைப் புனரமைத்துக்கொள்ளவேண்டும்.

தரமான கல்வி வேண்டும், தாமதமின்றி நீதி கிடைக்கவேண்டும், இவை இரண்டும் உறுதிசெய்யப்பட்டால்தான் நாம் நாகரிகமடைந்த சமூகம் என சொல்லிக்கொள்ளமுடியும்.

ஆனால், அத்தளங்களில் தீவு பெரும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறது. இந்த அவல நிலையை எப்படி மாற்றுவது?

 

http://maatram.org/?p=4535

  • தொடங்கியவர்

இலங்கை இனச் சிக்கல் – VI : தரமான கல்வி – சமூக நீதி

இலங்கையில் உயர் கல்வியின் தரம் வீழ்ந்துவிட்டது. புதிய திசைகளில் சிந்திக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவே, அவர்களுக்கு சமூக அக்கறை இல்லை. நீதிக்காக, நல்லிணக்கதிற்காக போராடவேண்டும் என அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

முதற் பகுதியில் குறிப்பிட்டது போன்று, ஹாண்டி பேரின்பநாயகம் மற்றும் அவரது சகாக்களின் வழிகாட்டலில் மாணவர் காங்கிரஸ், பின்னர் இளைஞர் காங்கிரஸ் தமிழர்களை இன, மத எல்லைகளைக் கடந்து சிந்திக்கவைத்தது,

ஆனால், விரைவிலேயே இடதுசாரி அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டது. சோவியத் யூனியனிலும் சீனத்திலும் சோஷலிசத்திற்கேற்பட்ட பின்னடைவுகள் உலகெங்கும் எதிரொலித்தன.

இலங்கையிலும் இடதுசாரிகள் வழிதவறினர். கொச்சையான இன முழக்கங்கள் வழியே பிற்போக்கு இயக்கங்கள் செல்வாக்கு பெற்றன. அவர்களது வரம்பற்ற வன்முறை சமூகத்தினை தலைகீழாக புரட்டிப்போட்டது.

பெரும்பான்மையினரின் ஆட்சி நமது மனசாட்சியைக் கொன்றுவிடுவதில்லை எனும் அற்புதச் சொற்றொடர் ஹார்பர் லீயின் புகழ் பெற்ற ‘To kill a mockingbird’’ எனும் புதினத்தில் இடம்பெறும்.

தவறாகக் கொலைக்குற்றம் சாட்டப்படும் கறுப்பர் ஒருவருக்காக, தன் எதிர்காலம், புகழ், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீவிரமாகப் போராடும் ஒரு வெள்ளை வழக்கறிஞரே அந்நாவலில் நாயகன். அத்தகைய மனிதர்களை உருவாக்கும் களமாக பல்கலைக் கழகங்கள் செயல்படவேண்டும். ஆனால், யதார்த்தங்களோ நம்மை பதறவைக்கிறது.

மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் (UTHR(J) இரண்டாவது அறிக்கையில் தோழர் ராஜினி குறிப்பிட்டார்: “மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்திக்கொண்டிருந்த நேரத்திலேயே நாங்கள் சுயவிமர்சனத்திலும் இறங்கினோம். தொடர்ந்து விவாதித்தோம். நமது வரலாற்றை பாரபட்சமின்றி ஆராய்ந்து, நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என கணிக்க முயன்றோம். நீதி ஒன்றுதான் எங்களின் ஒரே அளவுகோலாகவிருந்தது. எனவே, நாங்கள் போராளிக்குழுக்களையும் விமர்சித்தோம், அவர்களது பயங்கரவாதத்தினால்  தேவையற்ற அழிவுகள், அவலங்கள் என நாங்கள் சுட்டிக்காட்டினோம்…”

ஏறத்தாழ ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமுமே போராளிகளின் பயங்கரவாதத்தின் முன் விக்கித்து நின்றபோது, நாங்கள் டாக்டர் ராஜினியுடன் இணைந்து செயல்பட்டு விவாதத்திற்கான, ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கான வெளியினை உருவாக்க முயன்றோம். வன்முறையால் மிரண்டுபோன பலருக்கு ராஜினியின் செயற்பாடுகள் புதிய உற்சாகத்தைக் கொடுத்தன. ஆனால், அவரது அரிய பணி துவங்கிய சில காலத்திலேயே அவர் கொலையுண்டார்.

விடுதலைப்புலிகள் அவரைக் கண்டு அஞ்சினர். விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டு, தங்களை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்களோ, தங்கள் ஆதிக்கம் தளர்ந்துவிடுமோ என்ற அச்சமே அது.

அவர் கொல்லப்பட்டார். கிடைக்கவிருந்த வெளியும் மூடப்பட்டது. முள்ளிவாய்க்காலை நோக்கிய அந்தக் கொடும் பயணத்தின் போது மக்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டனர்.

எப்படி இலங்கை அரசியல் தளம் இன மோதல் களமாக மாறியது என்பதை கடந்த பகுதிகளில் கண்டோம். அந்த சீரழிவே விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு வழிசெய்தது.

ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட இன்றைய நிலையிலும், வரலாற்றை மீளாய்வு செய்யும் முயற்சிகளுக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள். யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகமே டாக்டர் ராஜினி திரணகமவை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது, அவர் பாதையில் எவரும் சென்றுவிடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறது.

அவர் கொல்லப்பட்ட 25ஆவது ஆண்டில், செப்டம்பர் 21, 2014 அன்று, நினைவு அஞ்சலிக்கூட்டம் நடத்துவதைக் கூட இராணுவத்துடன் சேர்ந்து தடுக்கமுயன்றது நிர்வாகம்.

இப்படிச் செய்து நீதி, உண்மை, மனித உரிமைகள் உள்ளிட்ட மதிப்பீடுகளை நிலைநாட்டுவதற்கான வாயில்களை பல்கலைக்கழகம் அடைத்துவிடுகிறது. நமக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளும் வழி இல்லாமல் போகிறது.

2011இல் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு கண்காட்சியில், ஆறுமுக நாவலர் தமிழ் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர், கிறித்தவ பாதிரிமாருக்கு எதிராகப் போராடி இந்து மதத்தைக் காத்தவர் எனப் போற்றப்பட்டார். அவரது அரசியல் வாரிசாக பொன்னம்பலம் இராமநாதன் சித்தரிக்கப்பட்டார்.

இவ்வாறாக அடித்தட்டு மக்களை தமிழ்ச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் அணுகுமுறைக்கு பல்கலைக்கழகமே மறைமுக அங்கீகாரம் அளித்தது.

டொனமூர் ஆணையம் அனைவருக்கும் வாக்குரிமையை உறுதி செய்தது என்பது மறைக்கப்பட்டு தமிழர்களை சிறுமைப்படுத்தும் பரிந்துரைகள் அவை என இன்றளவும் தூற்றப்படுகிறது.

இராமநாதனைக் கொண்டாடுவோர் அவரது தம்பி அருணாச்சலம் பற்றி பேசுவதே இல்லை. ஏனெனில், அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றவர். இளைஞர் காங்கிரஸ், கூட்டுறவு இயக்கம் போன்றவை இன வேறுபாடுகளுக்கு அப்பால் சமத்துவம் வேண்டும், சமூக நீதி வேண்டும் என்பதற்காகப் போராடியதை மட்டும் தமிழினவாதிகள் பேசுகிறார்களா என்ன?

சமத்துவம், சமூகநீதியைப் புறந்தள்ளும் எவ்வித அதிகாரப் பகிர்வும் அராஜகக் கூட்டத்தின் ஆட்சிக்கே வழிவகுக்கும் என்பதை நாம் என்றுமே நினைவில் கொள்ளவேண்டும்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போர், விடுதலைப் புலிகளின் ஆட்சி இவற்றின் விளைவாய் சமூக அக்கறையுடையவர்கள் வெளியேறினர், பிற்போக்குவாதிகளின் கரங்கள் வலுப்பெற்றன.

ஆட்சியிலிருப்பது பிரிட்டிஷாராக இருந்தாலும் சரி, சிங்களர், விடுதலைப் புலிகள், டக்ளசின் ஆட்கள் எவராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு சாமரம் வீசி தங்கள் நலனை மேம்படுத்திக்கொள்வோரே இவர்கள்.

தமிழர் மத்தியில் உண்மையான மறுமலர்ச்சி ஏற்பட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் செம்மையாக செயல்படுவது அவசியம்.

சுயராஜ்ஜியம் வேண்டும் என 1930லேயே குரல் கொடுத்து ஒட்டு மொத்த நாட்டிற்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது இங்கே இயங்கிய இளைஞர் காங்கிரஸ்தான்.

இனச்சார்பின்மையினை போற்றி வளர்த்தது இங்கே துவங்கிய கூட்டுறவு இயக்கம். அவ்வியக்கத்தின் முயற்சிகளால்தான் அனைத்து தரப்பாருக்கும் பயன்படக்கூடிய பள்ளிகளும் மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டன.

சமூக நீதிக்காக எத்தனை குரல்கள் எத்தனை போராட்டங்கள் – ஆயின் என்ன, இன்னமும் சாதி ரீதியான ஒடுக்குமுறை தொடர்கிறது. கற்றறிந்தவர்கள் என்றாலும் கீழ்சாதியினர் என்பதாலேயே பலர் அவமானப்படுத்தப் படுகின்றனர்.

கோப்பாய் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக கீழ்சாதி மலர் சின்னையா செயல்பட்டதை மேல் சாதியினரால் ஜீரணிக்கமுடியவில்லை. அவரை அகற்றிவிட்டுத்தான் அவர்கள் அமைதியானார்கள். அவர்களது அந்தக் கேவலமான முயற்சிக்கு வட மாகாணமும் ஒத்துழைத்தது. இது நடந்தது 2010 மார்ச்சில்.

அதேபோல், பரம்சோதி தங்கேஸ் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் கலைமானிப் பட்டத்தையும் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் அகதிகள் கற்கையில் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்றவர். தற்பொழுது தனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வினை மானிடவியல் துறையில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றார்.

இவர் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டுவரை கொழும்புப் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில் உதவி விரிவுரையாளராகவும் கொழும்பிலுள்ள திட்டமிடல் சேவைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஆய்வாளராகவும் கடமையாற்றினார்.

இவர் சாதி, இடப்பெயர்வு, இனத்துவம் மற்றும் அடையாளங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றினை வெளியிட்டுவருகின்றார். பரவலான மதிப்பைப் பெற்றவர்.

ஐ.நாவில் பணியாற்றியபோது மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், தங்கேஸ் Casteless or Caste-blind: Dynamics of concealed caste discrimination, social exclusion and protest…”  – சாதி இல்லையா, அல்லது நாம் கண்களை மூடிக்கொள்கிறோமா, மறைக்கப்படும் சாதியம், எதிர்வினைகள் என ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை எழுதுகிறார். அவர் சமூகவியலில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராகத் திகழ்ந்தவர்.

அவரது துறையில் விரிவுரையாளர் நியமனத்திற்கான பேட்டியின் போது பேராதனை சமூகவியல் வல்லுநரான துணைவேந்தர், சாதி ஒடுக்குமுறை தொடர்கிறதா என்ற தங்கேசின் ஆராய்ச்சி முடிவுகள் தனக்கு உடன்பாடில்லை எனச் சொல்கிறார், வேலையும் மறுக்கப்படுகிறது.

பிரிட்டனில் தன்னுடைய பி.எச்.டியை முடித்தாலும் இனி அவருக்கு பேராதனையில் வேலை கிடைக்கும் எனத் தோன்றவில்லை.

எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற மாய்மாலத்திற்கு அவர் விடும் சவால்கள் நிர்வாகத்திற்கு உவப்பில்லையே.

இவை போல ஆயிரம் எடுத்துக்காட்டுக்களைக் கூறமுடியும். தமிழ்ச் சமூகம் இன்னமும் முற்றிலுமாக நாகரிகம் அடைந்துவிடவில்லை.

தமிழர் பகுதி மீண்டும் செழித்து வளர்ந்தால் நாடும் செழிக்கும், சீரழிந்தால் தீவும் பாதிக்கப்படும். எனவே, அப்பல்கலைக் கழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படவேண்டும்.

திறந்த மனதுடன் திறமையை எங்கு கண்டாலும் அதை ஏற்று, சம்பந்தப்பட்ட நபர்களை ஆசிரியர்களாக நியமித்து, அவர்களுக்குத் தேவையான சுதந்திரமும் கொடுத்தால், மேன்மேலும் சிறப்புடன் பல்கலைக் கழகங்கள் மிளிரும்.

எங்கே? எங்கும் பழமைவாதிகள் இனவாதிகள் குறுகியமனம் படைத்தோரின் ஆதிக்கம்தானே.

கொழும்பிலிருந்து உயர் அதிகாரிகள் அடிக்கடி வருவார்கள், நல்லவிருந்தோம்பல், பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு திரும்பிவிடுவார்கள்.

பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத, பொது நலனில் சற்றும் அக்கறை இல்லாத புள்ளிகளுடன் தான் அத்தகைய சந்திப்புக்கள், அதன் பிறகு அந்தத் துறைக்கு, இந்த ஆராய்ச்சிக்கு என கொழும்பிலிருந்து நிதி உதவி என அறிவிப்புக்கள் வெளியாகும். இதனால் யாருக்கு லாபம் என எவரும் சிந்திப்பதில்லை, தகுதி வாய்ந்தவர்கள் ஆசிரியப் பணிக்கு நியமிக்கப்படுகிறார்களா என்றும் ஆய்வு செய்வதில்லை. கொழும்பிலிருப்போருக்கு யாழ்ப்பாணம் எக்கேடு கெட்டால் என்ன,

சரி கொழும்பு ஆட்சியாளர்களுக்கு இங்கே என்ன நடக்கிறது என்பதில் அக்கறை ஏதுமில்லை, புரிந்துகொள்ளமுடியும், ஆனால் இங்கிருக்கும் அரசியல் தலைமை என்ன செய்கிறது? அவர்கள் கவலைப்படவேண்டாமா?

அனைவர்க்கும் வாக்குரிமையா என அதிச்சி அடைந்த பொன்னம்பலம் ராமநாதனின் தம்பி அருணாசலம் இனக் காழ்ப்புணர்ச்சிகள் அற்றவர், அடித்தட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

1901இல் அவர் தலைமையில் நடந்த மக்கள் கணக்கெடுப்பு அறிக்கையில், “சிங்கள ரோடியாக்களும் இந்தியப் பறையரினத்தாரும் ஒரே சமூகத் தட்டில்தான் இருக்கின்றனர். ஆனால் கிறித்தவ பாதிரிகளின் முயற்சியின் விளைவாய் பறையர் மத்தியில் கல்வித் தரம் உயர்ந்துகொண்டிருக்கிறது, கற்றுத் தேர்பவர்கள் சமூகத்தின் மதிப்பைப் பெறுகின்றனர்” எனக் குறிப்பிடுகிறார் அருணாச்சலம்.

ஏன் பொன்னம்பலம் ராமநாதன் கூட தமிழர்களின் கல்வித் தரம் உயர அரிய பங்களிப்பு செய்திருக்கிறார். அவரும் வைத்திலிங்கம் துரைசாமியும்தான் இந்து வாரியப் பள்ளிகள் பல உருவாகக் காரணமாயிருந்தவர்கள்.

அதேபோல இளைஞர் காங்கிரஸ் தலைவர்களும், கூட்டுறவு இயக்கத்தின் வீரசிங்கமும் ரகுநாதனும் அடித்தட்டு மக்கள் கல்வியில் மேலதிக கவனம் செலுத்தி அம்மக்கள் வாழ்வு மேம்படக் காரணமாயிருந்தனர்.

தொடர்ந்து அதிகாரப் பகிர்வு கோருகிறோம். அதிகாரம் கொழும்பில் குவிந்திருப்பதால் ஊழலும் அநீதியும் தலைவிரித்தாடுகின்றன, தமிழர்கள் கூடுதலாக பாதிக்கப்படுகிறோம், இந் நிலையிலிருந்து நாம் மீளவேண்டும் என்பதெல்லாம் சரி. ஆனால் ஒடுக்கப்படுவோருக்கு நீதியை மறுப்பதே இங்கே நியதியாய் இருக்கும்போது அவர்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் சமூகத் தலைவர்களாக இருக்கும்போது, அதிகாரம் கிடைத்தென்ன, கிடைக்காவிடின் என்ன?

அண்மையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ். மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 90 வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களுடன் கூடிய, தெரு ரவுடித்தனமும் சில கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
இதனையடுத்து, போதைப்பொருள் வழக்கொன்றில் மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின் போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்

நீதிமன்றமும் பொலிஸாரும் தெரு ரவுடித்தனத்தைக் கட்டுப்படுத்துவார்கள், அது அவர்களின் வேலை என கூறி சமூகப் பொறுப்புள்ளவர்களும் அரசியல்வாதிகளும் ஒதுங்கியிருக்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்களும், சமூகவிரோதச் செயற்பாடுகளினால் அச்சமடைந்துள்ள பொதுமக்களும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் சமூக சீர்கேடுகளைக் கவனிக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டுகின்ற அவர்கள், சமூகவிரோதச் செயற்பாடுகளினாலும் தெரு ரவுடித்தனத்தினாலும் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் அரசியல் செய்வதில் மாத்திரம் கரிசனையாக இருப்பது வருத்தத்திற்குரியது என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

குற்றச் செயல்களினால் சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக உரிய இடங்களில் உரிய வேளைகளில் குரல் கொடுத்துச் செயற்படுவதற்கு அரசியல்வாதிகள், சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் முன்வர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட மிக அவலமானதொரு சூழலில் கூட்டங்கள் போட்டு உள்நாட்டுப்போரின் இறுதிக் கட்டங்களில் உயிர்நீத்தோருக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்துவதால் ஆகப்போவது ஏதுமில்லை.

முள்ளிவாய்க்காலை நாம் சென்றடைந்ததற்கு நாமே எந்த அளவு பொறுப்பு என நாம் நம்மைக் கேள்வி கேட்டுக்கொள்வதே இல்லை. பொருளற்ற சடங்குகளில் காலம் ஓடுகிறது.

சமூகத் தலைமைக்கு எது குறித்தும் அக்கறை இருப்பதைப் போல் தெரியவில்லை. அவர்கள் வளமாய் இருந்தால் சரி.

மற்றவர்கள் தான் ஆழமாக சிந்திக்கவேண்டும். ஆத்ம பரிசோதனை செய்யவேண்டும். உண்மை சமூக விடுதலை வேண்டுமெனில் முதலில் சமூக நீதிக்காக நாம் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்.

(தொடர் முற்றுப் பெறுகிறது)

தமிழர் அரசியலின் வரலாற்று ரீதியான வளர்ச்சி மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக பேராசிரியரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ராஜன் ஹூல் எழுதிய தொடர் கட்டுரைகள் தி ஐலண்ட் பத்திரிகை மற்றும் கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் வெளியாகியிருந்தன. இந்த தொடர் கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் (கானகன்) செய்து முதலில் Patrikai.com வெளியிட்டிருந்தது. தொடர்ந்து நாம் வெளியிட்ட ஐந்து பாகங்களையும் ராஜன் ஹூல் எழுதியிருந்த அதேவேளை, ஆறாவதும் கடைசி பாகமுமான இந்தக் கட்டுரையை அவருடன் சேர்ந்து கோபாலசிங்கம் ஶ்ரீதரனும் எழுதியிருக்கிறார்.

http://maatram.org/?p=4547

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.